வியாழன், 25 அக்டோபர், 2012

அவை நாயகன் கவிதை நூல் அறிமுகம்


கவிதை உறையும் இடம்

காடுறை உலகம்

கவிதை நூல் குறித்த பதிவு------ இளஞ்சேரல்

 

சூரியச் செதில்கள்கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு அவைநாயகன் அவர்களுடைய கவிதைத் தொகுப்பு இது. காட்டுயிர்களின் வாழ்வுப் பின்னணியில் உயிர்த்துவமிக்க சொற்களால் எழுதப்பட்ட கவிதைகளாக இருக்கிறது.  கவிஞன் முதல் தொகுப்பிற்கும் அடுத்த தொகுப்பிற்கும் எடுத்துக்கொள்ளும் கால் இடைவெளி யாராலும் இட்டு நிரப்ப முடியாத துயரமான வெற்றிடமே. சூரியச் செதில்கள் தொகுப்பு மிகுந்த கவனமும் பெரும் புகழையும் அவருக்குத் தேடிக்கொடுத்திருந்தது.ஹைகூ கவிதைகள் மக்கள் தொகை அளவு எழுதப்பட்ட காலம் அது.மாம்பழக் கீற்று விற்பவர்கள் கூட ஹைகூ கவிதைகளால் கூவி விற்ற காலம் அது. அன்றைய சூழலில் மிகச் சிலரே ஞாபகத்தில் இருக்கும் அடிகளை எழுதினார்கள். அவர்களில் அவைநாயகனும் ஒருவர்.

அந்தத் தொகுப்பு பல மேலைநாடுகளில் ஹைகூ கவிதை ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்து. கவிஞர் நிர்மலா சுரேஷ்  அமெரிக்காவில் தன்னுடைய ஹைக்கூ கவிதைகள் குறித்த ஆய்வுப்பட்டத்திற்கு எடுத்துக் கொண்ட நூல்களில் சூரியச் செதில்களும் ஒன்று. அவருடைய இரண்டாவது கவிதை நூல் மிகுந்த எதிர்பார்ப்பை விதைத்திருந்தது என்றும் சொல்லலாம். தொகுப்பிலிருந்து ஒரு கவிதை..

 

அலைந்தலைந்துவிலங்குகள் ---உப்புமண் தேட---யானையின் பின்---

பறந்த தொடரும்---பட்டாம்புச்சிக் கூட்டம்...

 

குறைந்த சொற்களை வைத்து இயற்கையையும் காட்டுயிர்களின் வாழ்வையும் இணைத்துள்ளார்..அற்புதமான கானுயிர் புகைப்பட வல்லுநர்களின் புகைப்படங்களைத் தொகுப்பில் இணைத்து வெளியிட்டிருப்பது புதுமை..காட்டையும் வனத்தையும் நாம் உணவிற்காகவும் மொழியை மேம்படுத்துவதற்கும் வனத்தில் ஒலிகளை நாம்  எப்படிப் பயண்படுத்தியிருக்கிறோம்.. பாருங்கள் இக் கவிதைகளை நாம் வாசிக்கும் போது சொல்லும் ஓசையும்  பிறந்த காலமும் ஞாபகம் வருகிறது.

 

உந்தி முதலா முந்து வெளி தோன்றித்

தலையினும் மிடற்றிலும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்பற்றமைய நெறிப்பட நாடி...

 

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில்(83) தொப்புளிலிருந்து மேலே கிளர்கின்ற ஒலிக்காற்று

நெஞ்சு, மிடறு, தலை, ஆகிய இடங்களில் நிலை கொண்டு பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் எனும் உறுப்புகள் வழியான் வரும் ஒலியால் வெவ்வேறு வகையான சொற்களும் எழுத்தும் பிறக்கும் எனப்பேசுகிறது...அது போலவே இந்நூலில் அவைநாயகன் இயற்கையின் ஓசையில் உருவான சொற்களால் கவிதைகளாக் கியிருக்கிறார்..

 

             கோவையில் தன் இளமைக் காலத்தை தமிழும் இலக்கியமுமாகக் கழித்தவர் நண்பர்களுடன் இணைந்து இளமை இலக்கியக் கழகம் என்றும் கிழக்கு என்னும்  சிற்றிதழ் மூலமாகவும் தனது இலக்கியத்தையும் படைப்பையும் இயக்க செயல்பாடுகளையும் தொடர்ந்து நிகழ்த்திவருபவர். எனினும் அவருடைய இரண்டாவது தொகுப்பு எடுத்துக் கொண்ட அதிக காலம் ஏன் என்ற கேள்விக்கான பதில் வேறொன்று மில்லை. அவருடைய சிந்தனை இலக்கியத்திலிருந்து இயற்கைக்கு மாறியதுதான்.

            இலக்கியத்தின் மீதான நேசம் இயற்கையாக மாறியதில் வியப்பொன்று மில்லை. சூழல் பற்றிய தொடந்த செயல்பாடு. அதற்கான தொடர் பயணங்கள். இயக்கங்கள். காட்சி அரங்குகள் என்று தன்னுடைய செயல்பாடு்களை நிகழ்த்தியதால் புதினம் என்பதிலிருந்து விலகியிருந்தார். சூழலியல் பற்றிய சிறந்த உரையாளராகவும் மாறி இயங்க வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

            எனினும் கவிதைகளின் மீதும் இலக்கியங்களின் மீதான நாட்டம் அவருக்கு குறையவில்லை என்பது -காடுறை உலகம்- மூலம் மீண்டும் கவிதையைப் பற்றியிருக் கிறார். ஒரு முறை சிதம்பரம் புங்காவில் உரையாடிக்கொண்டிருக்கும் போது அவரிடம் வெகுநாளாக கேட்காமல் விட்ட கேள்வி ஒன்றைக் கேட்டேன். நெற்றியிலிருக்கும் தழும்பு பற்றி. அப்போதெல்லாம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் கலவரங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அங்கங்கு ரகசியமாகக் கூடி நகரில் ஒவ்வொரு போராட்டமாக நடத்துவோம். ஒவ்வொரு முறையும் காவலர்கள் வரும் முன்பு துண்டறிக்கைகள் உள்பட பலவற்றை வீசிவிட்டு போய்விடுவோம். ஏனெனில் மறுநாள் கல்லூரி வகுப்புகள் இருக்கும். இப்படி எங்களை பின்தொடர்ந்த காவலர்களிடம் சரியாக மாட்டிக் கொண்டோம். அவர்கள் அளித்த தழும்பு இது என்றார்.

                                 தமிழ்க் கவிதையின் ஆதி அந்தமும் அறிந்தவர் மட்டுமின்றி நுட்பமான தொடர்ந்த வாசிப்பும் கொண்டிருந்ததால் இயற்கையை நோக்கி தன்னுடைய கவிதானுப வத்தைத் திருப்பியிருக்கிறார்.

 

          ஹைக்கூ வடிவங்களை தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையும் தண்ணீராய் செலவழித்த காலங்களில் மிகுந்த அழகியல் தன்மையுடனும்

சொற்கட்டுடனும் வெளியிட்டு சலனத்தை ஏற்பட்டுத்திய அவைநாயகன் பிற்பாடு புதுக் கவிதைளையும் எழுதினார். அவையும் ஒரு காலத்தில் தொகுப்பாய் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

                  காடுறை உலகம் நூல் வெளியாகிறது என்பதை அறிந்ததிலிருந்து எப்போது சொல்லுங்கள் என ஓயாமல் நச்சரிப்போம்.ஏனெனில் அவ்வளவு காலதாமதம் ஆனது. பிறகு ஒரு நாள் அவரிடம் வற்புறுத்திய பிறகு எடுத்துக் கொள்ளும் கால அளவிற்கு நூலின் தரம் இருக்கும் பாருங்கள் என்றார். மேலும் ஆர்வம் அதிகமானது.

அப்படியாகவே நூலும் இருந்தது.

 

       உங்களைப் போன்ற படைப்பாளர்கள் சுற்றுச்சூழல் பற்றியும் எழுத முன் வாருங்கள்என்று தனது முன்னோடி சுற்றுச்சூழலிய முன்னோடி அமரர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பக்கமே ஒரு கவிதையாக  இருக்கிறது. தலைசிறந்த காட்டுயிர்-இயற்கை புகைப்படக் கலைஞர்களின்

உயிர்த்துவமிக்க புகைப்படங்கள் அதற்கான கவிதை என ஒவ்வொரு பக்கமும் உயர்ந்த வண்ண தொழில் நுட்பத்திறனுடன் நூலின் அமைப்பு வசீகரிக்கிறது.

       நூலைப் பதிப்பித்த ஓசைசுற்றுச்சூழல் அமைப்பு முக்கியமாக ஒரு பதிவை செய்திருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளை தமிழில் தொடங்கி வைத்த மாதவையா கிருஷ்ணனும், பி.எல் சாமி, ச.முகமது அலியும் நினைவு கூறத்தக்கவர்கள்என்கிறது.

நூலுக்கான முன்னுரையை சு.தியடோர் பாஸ்கரன்,வண்ணதாசன், இந்திரன் போன்ற தமிழின் முக்கியமான ஆளுமைகள் முன்னுரை எழுதியிருப்பது மகிழ்ச்சியான செய்தி.

வண்ணதாசன் முன்னுரை அவருக்கும் இயற்கை-காட்டுயிர்கள் மீது கொண்ட பிரியம் பற்றியதாக இருக்கிறது.

          வண்ணதாசன் எடுத்த எடுப்பில் நான் தியடோர் பாஸ்கரனில்லை.காடும் ஊமைச்செந்நாயும் மத்தகமும் எழுதுகிற ஜெயமோகனும் இல்லை.எப்போதொ சின்ன வயதில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலகத்தில் வாசித்த ஜிம் கார்பெட்டின் குமாவுன் புலிகள் நினைவில் உறுமிக்கொண்டு இருக்கின்றன..எனத்துவங்கி கனிந்த சொற்களை வைத்து அவருக்கு உரிய நெகிழச்சியாக எழுதியிருக்கிறார்..

 

மத்திமரப் பொந்திடை- சகதிச் சன்னலுடன்- இருவாய்ச்சியின் பிரசவ வீடு...

நாவல் கிளையில்-- மலை அணிலுக்கு விடுதி...

 

எனும் கவிதையில் பறவையினங்களின் வீடுகள் பற்றிப் பேசுகிறார். அதற்கான படம் ஒன்று மொத்தென பெரிய தேங்காய் அளவில் சிறுகுச்சிகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட கூடின்மேல் சிறு குஞ்சொன்று தன் பெற்றோரைத் தேடுவதான கல்யாண் வர்மாவின் புகைப்படம். நம் சிறுவயசில் பெரிசுகள் வீட்டுத்தாழ்வாரத்தில் ஏதேனும் பறவை கூடுகட்டியிருந்தாலோ புனை நாய் குட்டிகள் ஈன்றிருந்தாலோ போதும் எச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.. அது பாவம் எதுவும் செய்துவிடாதீர்கள்..என்பார்கள். ஆயினும் தற்காலத்தில் புறவழிச்சாலைகள் அமைப்பு என்கிற பெயரில் நடக்கும் அழித்தொழிப்புகள் சொல்லி மாளாது. ஆயினும் அவைநாயகன் மற்றும் அவருடைய இயற்கை நண்பர்கள் நேரடியாகத் தலையிட்டு எத்தனையோ மரங்களை காட்டுயிரிகளைத் தற்காலிகமாகப் பாதுகாத்திருக்கிறார்கள்..

             வனப்பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாகப் பிடித்து வைத்து விற்றுவருகிற அரிய வகை காட்டுயிர்களைப் பாதுகாத்து திரும்பவும் வனப்பகுதிகளுக்குக் கொண்டு விடுகிற பணியையும் மேற்கொள்கிறார்கள்..

 

-காட்டுக்கோழியைத் துரத்தி வந்தபுனை திகைக்கவழித்தடம் மறிபட்டுயானை ஒதுங்கவலசை கிளம்பியகதிர்க்குருவி தடுமாற---காட்டின் நெஞ்சைக் கீறிக்கீறி---எழுகிறது ஒரு தார்ச்சாலை...---எனும் கவிதை

 

சாலைகளை அமைக்கும் போது பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச ஏற்பாடுகளைக் கூட செய்யாத துறைகளில் ஒன்றுதான் சாலைத்துறை..

நாம் ஏதாவது நலன் கருதி அப்பகுதி மக்களோ..தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அல்லது குறைந்த பட்ச மனிதாபிமானம் உள்ளவர்களோ அதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பக்கத்தில் போவது மாதிரியா நடந்து கொள்கிறார்கள்..அழித்தொழிப்புப் பணிகளில் ஈடுபடுகிறவர்கள் நல்ல சரக்கில் வேறு இருக்கிறார்கள்..வகுந்துருவேன்..

மூட்டு போய்யா.. என்கிறதைப் பார்த்திருக்கிறேன். பிற்பாடு சாலைமறியல்.. பேச்சுவார்த்தை.. நடத்துவது.. சமூகத்தில் அப்படிக் கேட்பவனுக்குப் பெயர் நியுசென்ஸ் விளம்பரப் பிரியர்கள்.. என்பதுதான்..

 

        இந்த மக்களுக்கு மத்தியில் தான் அவைநாயகன் போன்ற சூழலியல் படைப்பாளர்களின் இலக்கியமும்  கவிதையும் வாழ்வும் சுழல்கிறது என்பதையும் சேர்த்து வாசிக்கவேண்டும். வாலி வைரமுத்து மு.மேத்தா அப்துல்ரகுமான் மீரா. சி.மணி காலத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. டாஸ்மாக் பொது வணிகத்திற்குப்பிறகு தமிழச் சமூகம் மற்றும் சூழலியல் பற்றிய விழிப்புணர்வு செய்திகளையும் அரசியல்வாதிகள் வினோதமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

கழுதைப்புலியின் வெண்கழிவில்எலும்புத் துகள்கள்---காட்டின் தூய்மை...

 

இந்தக் கவிதையின்- இடத்தில் அவைநாயகன் காட்டுயிர்கள் தனது வனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறது என்கிறார்.. உண்மையில் அது அதிசயமான செய்தியும் கூட வனத்தை காட்டுயிர்கள் அழகாக வைத்துக்கொண்டிருக்கிறது என்பது கவிதையில் புதிய செய்தி

 

உடனே என்ற ஊட்ல புனை பண்ற ஆடியாளத்தம் என்று ஆரம்பிக்கக் கூடாது.. ஒரு முறை வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு ஒரு நாளிதழில் நாளைய வனத்தின் பாதுகாப்பு என்கிற பொருளில் வரையப்பட்டிருந்த கார்ட்டுன்தான் நினைவுக்கு வருகிறது. வனத்திற்குச் செல்வோர் பின்பற்ற வேண்டிய குறித்து ஏராளமான விவரங்களை ஒவ்வொரு வன சுற்றுலா சமயங்களில் ஓசை குடும்பத்தினர்கள் சுற்றறிக்கை விநியோகிக்கின்றனர். முடிந்த வரை வனங்களில் பிளாஸ்டிக் தேங்காமல் பாதுகாக்கிறார்கள்.. ஓசை மற்றும் சுற்றுப்புற ஆர்வலர்களின் இடையறாத போரட்டங்களால் நீலகிரி குன்னூர் பகுதிகளில் பாலிதீன் பைகள் தடை செய்யப்பட்டி ருக்கிறது. இனியொரு கவிதை..

 

கூடிவரும்---கூட்டத்தின் துணையுடன்---இறந்த குட்டியின்அருகிருந்து---கண்ணீர் உகுக்கும்தாய் யானை---கொலை வேண்டி வைத்த வேலிக்கருகே..

          

          இப்போதும் எப்படியோ பொருந்தா உறவுக் கொலைகள்- சொத்து பத்து கொலைகள் அரசியல் கொலைகள்செய்திகளின்பால் நமக்கு எரிச்சல் வந்து தொலையும் போது யானைகளோ..மான்களோ..புலிகளோ கொல்லப்படும்போது நம்மை அறியாமல் துயரம் ஏற்படுகிறது. நமது நிருபர்களுக்கு எப்படியோ தகவல் வந்து விடுகிறது. அதுபோலவே காப்பாற்றுவதற்கான தகவல்கள் வந்து சேர்கிறதா எனத் தெரியவில்லை. தேசியப் பறவையான மயில்களை பல்லடம் உடுமலைப் பேட்டை போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களைப் பாழாக்குகிறது என விஷம் வைத்துக் கொன்ற செய்திகள் வேதனை தரவைத்தவை.. சூழலியல் காட்டுயிர் ஆதரவாளர்கள் நிலமை அறியப் போனபோது கிடைத்த மரியாதையை இங்கு சொல்ல முடியாது சொன்னால் கொஞ்சம்  நல்லவர்களும் கெட்டுப்போவார்கள்..

         இனி ஒரு கவிதை

எதிரி சூழ் புல் பரப்பில்---பிறந்த தரையில்---விழுந்த கணத்திலேயே---எழுந்து நடந்து

ஓடத் துவங்கும்-- புள்ளிமான் குட்டி..

 

         இயற்கை தன்னுடைய உயிர்களுக்குப் பாதுகாப்பாகவே அதன் உடல் கூறுகளை அளித்துள்ளது. நத்தையின் ஓடும் பன்றியின் மூக்கும் காண்டாமிருகத்தின் மூக்கு நுகமே சாட்சி. அதுபோலவே மானின் உயிர்ப்பாதுகாப்பிற்காக பிறந்ததும் நடக்கும் அதிசயத்தின் பின்னணியை கவிதையாக்குகிறார்..

                   பெருகி வந்த கிராமப் புற மக்கட்தொகைக்குத் தேவையான சாகுபடிக்குக் காடுகள் திருத்தப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டபின், காடுகளின் பரப்பு குறைய ஆரம்பித்தது. வேறுசில சமூகரீதியான நிர்ப்பந்தங்களும் இருந்தது. தொழில் சார்ந்த துறைகள் வேகமாக வளராத நிலையில் நிலம் சார்ந்த பணிகளையே மக்கள் நம்பியதால் காடுகள் மீதான தாக்குதல் தொடர்ந்தது. தொடர்கிறது. அரசியல் ரீதியாகப் பார்த்தால்  விளைநிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு சமதர்ம அடிப்படையில் பகிர்ந்தளிக்க நாம் தவறிவிட்டதால் வேளாண்மையே முக்கியத் தொழிலாகியது.

 

உண்ணவும்வாழவும்மரம் ஒன்று போதும்----பழ வவ்வாலுக்கு....பக்-79

 

பழ வவ்வால் பெயரே புதிதாக இருக்கிறது. புகைப்படத்தி்ல் எலி முக அமைப்பில் பழம் போலவே தொங்கிக் கொண்டிருக்கிறது வவ்வால்..

மக்கட்பெருக்கமும் உணவு போதாமையும் கூடுதலான விளைச்சலை விரும்பினர் நம் மூதாதையர்கள். ஒரு கணம் காட்டினைத் திருத்தி நிலத்தினை உழுவதற்கும் கருவிகள் இல்லாததால் புதர் மண்டிய வனங்களை ஆதிமனிதர்கள் தீயிட்டுக் கொழுத்தினர்

நிலத்தை சாகுபடிக்கு எளிதாக்கினர். அந்நிலத்தில் வரகும் திணையும் விதைத்தனர் இதைக் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களில் காணலாம்.

கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கட் கொல்லை

ஐவனம் வித்தி மையுறக் கவினி

ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்

கருவி வானம் தலைஇ ( புறம்-159)

 

         எனப் பெருஞ்சித்திரனார் கூறுவார். இப்போது மக்களுக்கு சாகுபடியும் சேமிப்பும்  கட்டாயமாகிட்டது. முதன் முதலில் இக் காட்டளிப்பு வேளாண்மையைத் துவக்கியவர்கள் கானவர்கள் தான்..அவர்களுக்கு கானக்குறவர், கான் உழு குறவர், குன்றக் குறவர் புனக்குறவின் ஏனன் காவலர்,கானவர்,நாடன் எனத் தொகை நூல்களும் குறிக்கின்றன..

         அந்த நாட்களில் மக்கள் தனது பசிக்குத் தான் கொஞ்சம் வனத்தைத் தனதாக்கினார்கள். இன்றைய காலம் அப்படியா..ஏற்கெனவே பசும் புங்காவனமாக இருக்கும் காடுகளை அழித்து செயற்கைப் புங்காக்களை உருவாக்குகிறார்கள். இயற்கை அழகை அழித்தொழித்து செயற்கை அழகை உருவாக்கும் பொருட்டு எண்ணிலடங்கா அரிய வகை உயிரினங்களை அழிக்கிறார்கள்.. நவீன மனிதன் தனது உயர் தொழில் நுட்பக் கருவிகளுடன் காடுகளைக் கைப்பற்றி அழித்துக் கொண்டு வருகிற செயலுக்கு அவைநாயகன் போன்ற சூழலியல் ஆன்மாக்கள் கவிஞர்கள் கொஞ்சம் கவிதையால் இயற்கையின் எதிரிகளுக்கும் லாப நோக்குடன் மட்டுமே இயற்கையை அணுக நினைப்பவர்களுக்கும்  உணர வைக்க முயற்சித்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். பாமரத்தனமாகவும்  நடப்பதை எதுவும் யாராலும் தடுக்கமுடியாது எனும் தட்டையான வாதத்தை மேலும் நாம் நீட்டிக்காமல் சூழலியலைக் கணக்கில் கொண்டு படைப்பாளர்களும்  நண்பர்களும் அவர்களின் பணிகளை ஆதரிப்போம்..

 

இலைகள் துளைத்துக்

கூடமைக்க

புல்லின் தாள் தேடிச்

சதுப்பில் அலையும்

தையல் சிட்டு...-------பக்-63-

 

மொத்தம் 89 கவிதைகள் அரியவகை காட்டுயிர் வண்ணப்புகைப் படங்களுடன் கவிதைகளை வாசிக்கும் போது ஏதேனும் ஒரு பறவையோ உயிரியோ சத்தமிட்டால் அது என்ன வகையான உயிரினம் எனத் தெரிந்து கொள்கிற ஆவலை இந்நூல் ஏற்படுத்தியிருக்கிறது..

 

             மேலும் இந்தக் கவிதைத் தொகுப்பு வாசிக்க மட்டுமல்ல அன்பின் நினைவாக நட்பின் நினைவாக உறவின் நினைவாக பரிசளிக்கக் கூடிய அளவில் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு..

 

காடுறை உலகம்-கவிதை அவைநாயகன்- 98420 47855

 

வெளியீடு-ஓசை-

விலை ரூ 120-

ஓசை பதிப்பகம்

70. ஏ ராஜீ நாயுடு வீதி

சிவானந்தா காலனி

கோயமுத்தூர்-641012

பேச-0422 4372457

 

 

1 கருத்து:

  1. ஆரம்பமே அமர்க்களமாயிருக்கிறது சேரல்! BLOG ஒன்று நிறுவ உங்களுக்கு உதவ இயலாமல் போனதன் குற்றவுணர்வு இப்போது நீங்கியிருக்கிறது என்னில். நன்றாக வந்திருக்கிறது வலைப்பூ. உங்களின் எழுத்துக்களை உங்களின் வலைப்பூவாக பத்திரப்படுத்த வசதிப்பட்டதில் நிரம்பவும் மகிழ்கிறேன். வாழ்த்துக்களும் அன்பும்!

    பதிலளிநீக்கு