வெள்ளி, 26 அக்டோபர், 2012


அதிகாலையை வீட்டின் தோட்டத்திற்கு அழைத்துவருகிற

சிட்டுக்குருவிகளையும் மைனாக்களையும் காகங்களையும்

போர்வையை உதறிவிடாமல் கழுத்தோடு பற்றிக்கொண்டு

நலம் விசாரிக்கிறேன்..

ஒவ்வொரு தினத்தின் விடியலையும்

காலத்தின் நிகழ்ச்சி நிரல்களையும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது பறவைகள்..

 

நேற்று வந்த கரும்பச்சையில் பொரி சிதறல்கள் வண்ணத்தில்

உடையணிந்து வந்திருந்த செங்குருவியைக் காணோம்..

கிணற்று சங்கிலிப்புறாக்கள் முற்றத்தின் கொடியில் காயும்

உடைகளை ஒவ்வொன்றாய் கவனித்து

சாயம் போன உடைகளி்ல் தன் அலகுகளை தீட்டுகிறது..

 

கேவ் கேவ் துயிலுக்கு இதமாய் பல்லவி பாடும்

 மரங்கொத்திகள் சற்று நேரத்தில் வந்துவிடும்..

தேன்சிட்டுகள் மருதமலை மாமணியே முருகையா

பாடும் போதெல்லாம்  அவை வரும்

பாடும் கூம்பு ஆரன்களில் அமர்ந்த படியே உள்ளே

மதுரைசோமு இருக்கிறாரா என்று பார்க்கும்

 

இன்னும் பெயரியா பறவைகள் வந்து போகிறது..

ஒவ்வொரு பறவையைப் பார்க்கும் போதும் காமிராவால் படம்பிடித்து

பறவை அகராதியில் அது என்ன பறவை என அறிய

தேடித் தேடி அலுத்துப் போகிறேன்..

அவைநாயகன் அண்ணனிடம் பகிரங்கமாகக் கேட்க வெட்கம் தான்.

”இதுகூடத் தெரியாதா ” எனக் கேட்பாரோ என்னும் பயம்...

பறவைகள் மின்சாரக் கம்பிகளில் உட்காரும் போது

திக்திக் என்று அடிக்கும்..

 

நல்லவேளை எங்கள் இருகூர் சிறுவர்கள் கவன் வில் பழகவில்லை..

அதற்காக கிரிக்கெட்டுக்கு நன்றி சொல்கிறோம்..

நம் உலகத்தில் பறவைகள் வாழவில்லை..

பறவைகள் காட்டுயிர்கள் புழு புச்சியினங்களின் உலகில் நாம் வாழ்கிறோம்.

மன்னிக்கவும்.. ஆக்ரமித்து இருக்கிறோம்…

பிடியைத்தளர்த்தி இயற்கையோடு இணைவோம்..

                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக