செவ்வாய், 20 ஜூன், 2017

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் தொகுப்பிலிருந்து

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் தொகுப்பிலிருந்து

தடாகங்கள்


இயங்குவதன் முன் இயலாத ராகங்கள்
கீர்த்தனைகள் போதனைகள்
மௌனச் சிறகசைப்பில் தாடகங்களின்
நீர்த்தேக்கங்கள்
சின்னச்சிறு குமிழிக்குள் ஓர் இதய
மௌன காந்தம்
சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும்
அறிவுடன் படைத்துவிட்டாய்
இத்தாலிய தவிப்பிற்குள் தேகங்கள்
சித்ரா புஜங்கள்
சிதைவசைப்பின் காந்தத் துணுக்குகள்
வெளியேறும் மௌனச் சிதறல்கள்
ஒருங்கிணைந்த அநாமதேய
புத்தகாலய தெய்வீகக் காதல்கள்
புரிந்தேன் நமதே வழி
-          சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் தொகுப்பிலிருந்து

தமிழ்க் கவிதையில் பெண்களின் உலகமும் வாழ்வும் மொழிவடிவச் சிந்தனை உருவான காலத்திலிருந்து பதிவாகிவருகிறது. சமகாலத்தின் கல்வியில் இருந்தும் ஆதிப் பொதுவுடமைச் சமூகத்திலிருந்தும் பெண் கல்வியையும் கலைகளையும் விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக் கொள்கிற மனோபாவமும் உறுதியும் கொண்டவளாகவே இருந்தாள். இருக்கிறார்கள்.சொத்துரிமைச் சமூகத்தின் பலநிலைகளிலும் பெண் படைப்பாக்கங்களும் கலைச் செயல்பாடுகளும் உன்னதமான நிலைகளைக் கொண்டிருந்திருக்கிறது. இந்த நெடிய கலை இலக்கியப்பண்பாடு இன்றளவும் நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறவும் தொழில் படவும் பெண் நிலைப் படைப்பாக்க முயற்சிகள் சிறப்பான அளவில் முன்னேற்றம் காண்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் பெண்ணியக்கச் செயல்பாடுகளும் நேர்த்திமிக்கதாகவும் அசலாகவும் தொடர்கிறது என்பதை  சுகந்தி சுப்பிரமணியன் கவிதைகளிலிருந்து காணமுடியும்.
உயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கூடச் சரியாக முடிக்க முடியாத குடும்பச் சூழலில் குடும்பத்தின் பொறுப்பை ஏற்கிற சூழல் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய காலம் அது. 

பெரியவளாகிவிட்டால் போதும் ஒருத்தன் கையில் ஒப்படைத்து விடுவதே வாழ்நாளின் கடமை என்பதாக பெற்றோர்களுக்குள்ள நிலமை. அல்லது பொருளாதார நிலை. அன்றியும் குடும்பத்தில் அதிக சகோதர சகோதரிகள். சுகந்தி ஒரு பெண் நிலை வாழ்க்கையின் பொதுமைப்பண்பு. பெரியவளாகி விடுகிற சிறுமிகளைத் தகுந்த பாதுகாப்பான ஒரு குடும்பத்திலிருந்து வந்து பெண் கேட்டுவிட்டாலே பெரும் சந்தோசம் குடிகொண்டு விடும். அந்தக் காலத்தில் பெண் கேட்டு வருகிறவர்கள் கேட்கிற ஒரே ஒரு கேள்வி..“புள்ள நல்ல வெட்டு வெடுக்குன்னு ஊட்டு வேலை செய்வாளா..என்பதுதான்.
 அன்றைய நாளில் வீடுகளில் மாடு கன்று ஆடு கோழி என்று கட்டாயமாக மாட்டுக் கட்டுத்தறியைச் சுத்தம் செய்வதும் தண்ணீருக்காக ஊரு ஊரு அலைந்து திரிகிற வாழ்க்கையை சுகமாக ஏற்றுக் கொள்ள முன் வருகிற சிறுமிகளுக்கு விரைவில் புருசன் அமைந்து விடுவது வழக்கு. சுகந்திக்கு ஏற்பட்ட வாழ்க்கை என்பது அந்த நாட்களின் சிறுமிகளுக்கும் ஏற்பட்ட வாழ்க்கை. சுகந்தியின் சொற்களிலிருந்து அந்த நாளைய கிராமங்களும் சிறுமிகளும் அவர்களின் பருவங்களும் நினைவிலிருந்து பிறக்கிறது.

சுகந்தியை எந்த இடத்திலும் சாதாரண மனுசியிலிருந்து வேறுபட்டவர் என்பதை இந்தப் படைப்புகளை வாசித்த பொழுது ஏற்க முடியவில்லை. காரணம் இந்தப் பொதுமை உலகம் அப்பத்தான் அவரைப் போலத்தான் இருந்து வருகிறது. அவர் காலத்திற்குப் பிறகு இப்பொழுதும் நிறைய நோய்கள் புதிய புதிய நோய்களை உருவாக்கி உருவாக்கி குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மருத்து வனைகளும் புதிய புதிய காவல் நிலையங்களும் அந்தக் காவல் நிலையங்களுக்கு புதிய புதிய வாகனங்கள். நவீன கருவிகள் காமிராக்கள். புதிய நவீன வசதி கொண்ட காவல் நிலையங்கள் நீதிமன்றங்கள் பாதுகாப்புக் கருவிகள் அதற்கான அளவில் புதிய அளவில் குற்றங்களையும் நாம் செய்து நம் சமூகத்தினரும் செய்து நமது நீதிமான்களின் மாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பும் நம் பொதுமைப் பண்புகளுக்குக் கடமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தை நேர் செய்ய கலையால்தான் முடியும். கவிதைக் கலையின் பிடியற்ற பிடியில் கவிதையைக் கைப்பற்ற முனைபவர்களில் முக்கியமானவராக சுகந்தி அறியப்பட்டவர். 

தனது நாட்குறிப்பில் ஒரு நாள் எழுதியிருப்பது. இந்த மனித உடலே நோய்மையின் கூறுகளால் ஆனது. ஏதோ மருத்துவமனையில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருகிறவர்கள் மட்டும் தான் நோயாளிகள் மற்றவர்கள் மிக நலமாக இருக்கிறார்கள் என்பதான பாவனைகள் இங்கு நிகழ்கிறது. அப்படியல்ல. மனிதனின் இருப்பே நோய்மைக்கூறுகளின் செயல்பாடுகள்தான். நோய்மை இல்லாத இருதயம் துடிப்பதேயில்லை. நோய்மையின் வெளிப்பாட்டு அளவில்தான் ரத்தம் பாய்கிறது. இயற்கை வளங்களை உணவைச் சார்ந்திருக்கிற எல்லா உயிரிகளும் நோய்மைக் கூறுகள் கொண்டதுதான்.

இங்கு சுகந்தி சுப்ரமணியன் அறியப்பட்டது நோய்மையின் காரணங்களால் தான் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. அவர் மட்டுமல்ல இன்னபிற பல தமிழ்ப்படைப்பாளர்கள் சிலர் அவர்களின் நோய்மையை அறிந்து அவரை அறிந்து கொள்கிறார்கள் என்பதே எரிச்சலும் சங்கடமும் தருவதாகவே உள்ளது. அவர்களின் எழுத்தும் படைப்புகளும் முன்வரிசையில் வந்து பிற்பாடு அவர்களின் நோய்மை பின்னுக்கு வந்தால் தேவலை. ஆனால் நம் விமர்சகர்களோ திறனாய்வாளர்களோ அவர்கள் வசதிக்கு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வையும் உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆண் படைப்பாளர்களை எளிதில் குடிகாரர்கள் என்பதும் பெண் படைப்பாளர்களை மனப்பிரழ்வு கொண்டவர்கள் என்பதும் இன்றளவும் தொடர்கிறது.

“நான் எழுதுன கவிதை புத்தகத்தை பலர்கிட்ட காமிச்சா உங்க வீட்டுக்காரரா எழுதுனார்னு சிலர் கேட்கறாங்க இதுக்கு அடிப்படையென்ன.. பொறாமையா ? தெரியலை அதனால நீங்க திருத்திக் கொடுக்கறது மாத்தச்  சொல்றது கூட புடிக்காமே போகுது.எஸ் லட்சுமிபாட்டி ஆர் லட்சுமிப்பாட்டி பத்தின கவிதை எனக்கும் புடுச்சது. ரெண்டு பாட்டிகளும் இப்பொ இல்லை. இண்டியா டுடேல கவிதைக்கு ஆயிரம் வந்ததும் எங்க எஸ் லெட்சுமிபாட்டிக்கு நெகமம் புடவை ஒண்ணு எடுத்துக் கொடுத்தேன் அவங்க கவிதை எழுதி காசு வந்ததுங்கறதை நம்பவேயில்லை..“  என்பதாக நாட்குறிப்பொன்றின் சிறு பகுதி. இந்தப் பதிவில் கவிதை சார்ந்த மிக இயல்பான கூறுகளையும் சேர்த்தே எழுதியிருக்கிறார் எனலாம்.
      
இந்தச் சமூகத்தில் தான் சுகந்தி, ஆர்.சூடாமணி,தமயந்தி. சந்திரா. லீனாமணிமேகலை, குட்டி ரேவதி உள்ளிட்ட படைப்பாளர்கள் இந்தச் சமூகத்தைப் பதம் செய்ய நல்ல கூரானக் கத்திகளை உருவாக்குகிட முனைகிறார்கள்.

மூலை
.
மூலை சேர்ந்தாயிற்று
எல்லாம் ஒதுங்கியபின்
தேவையானவற்றைத் தேடி
அலுப்பாயிற்று
கிடைப்பவையெல்லாம் எதுவோ ஆக
வராதவை,வந்தவை
எல்லாம் பட்டியலில் இடம் பெற
பெயர்ந்தானது மனசை
உனக்குள் வைத்திருப்பவற்றை
கொடுக்க மனசில்லையென்றும்
தவிர்க்க எத்தனையோ இருக்க
விலகியிருக்கிறேன் எனக்குள்
வருபவையெல்லாம் விலகிப்போக
வராதவையெல்லாம் தூரத்திலிருக்கிறது
என்றாலும்
எல்லாமே வானத்தின் கீழ்
சகஜமாயிருக்கிறது---------பக்..194

மேற்குறிப்பிட்ட கவிதையிலேயே அவருடைய மன இருப்பு நிலையை அறியமுடியும். கொங்கு நாட்டில் வயது மூப்படைந்தவர்களைப் பற்றிப் பேசுகிறவர்கள் “அது கெடை சேர்ந்துகிட்டது“ என்பார்கள் மேலும் “மூலை சேர்ந்துடுச்சு..என்பது வழக்கு. அவர்களுடைய படுக்கை, சாப்பாட்டுத் தட்டு, எச்சில் சட்டி உள்பட எல்லாம் அருகாமைக்கு வந்துவிடும். அவர்கள் இனி அங்கேயே கிடந்து பிராணனை விடவேண்டியதுதான். உடலுக்கு கிடைக்கிற அதிகபட்ச மரியாதையை அவ்விடத்துதான் காணமுடியும். சுகந்தியின் இந்தக் கவிதை தமிழில் எழுதப்பட்ட கடைசிகால உயிர்நிலையை அற்புதமாகக் காட்டியிருக்கிறது. வாழ்வின் அந்திம நாட்கள் பற்றியும் நோய்மை குறித்தும் வயோதிக இருப்பு பற்றியும் இலக்கியங்கள் பேசியிருக்கிறது. ஆனால் இந்த மூலை சேர்தல் என்கிற கெடை  சேர்தல் பற்றிய இந்தக் கவிதை புதிய தொணி. தான் அங்கு பறந்து இங்கு பறந்து ஓரிடத்தில் நிலைகொண்டாயிற்று. இனி இங்கிருந்து நேரே தன் மூதாதை யர்களின் கூட்டுக்குள் நுழைய வேண்டியதுதான் என்பதான கூற்று. ஆனால் மூலை சேர்கிற வயசா அவருக்கு. 

சுகந்தியின் கவிதைகளில் எங்கினும் காணப்படாதது என்னவெனில் எந்த நிலையிலும் தன் இயலாமை குறித்த வருத்தம் எங்குமில்லை. இந்தப் பொருளியல் சமூகத்தில் பெண் இருப்பு வசம் பற்றிய எளிய விமர்சனங்களாகவே கவிதைகள் உள்ளது. அவர் உடல்நலம் பற்றிய செய்திகளை இந்த நூலிலிருந்து எடுத்துவிட்டு வாசித்தால் அல்லது தவிர்த்த நூலாக இருந்திருக்குமானால் இந்தக் கவிதைகள் முழுக்க பெண்ணியக்கத்திற்கான புரட்சிகரமான கவிதைகளாக அறியப்படும். பெண் புற உலகின் மீது வெளிப்படுத்துகிற அன்பு எத்தகைய கருணைமிக்கதாக இருக்கும் என்பதை உணர்வு வெளிப்பாட்டுடன் அறிந்து கொள்ள சுகந்தியின் கவிதைகள் உதவும். உளச்சிக்கலும் மனச்சிக்கலும் கவிதை,சிறுகதைகளுக்குள் நுழையாத வண்ணம் கலையின் அளவில் சிறப்பாகவும் நேரடியாகவும் வெளிப்பட்டுள்ளது. அவருடைய எல்லையற்ற தீவிர இலக்கிய வாசிப்பின் வழியாக இன்ன பிற படைப்பாளர்களின் படைப்புகளில் பெண்மையின் இருப்பைத் தேடியபடியே இருந்திருக்கிறார்
தன் கணவரின் சமகாலத்தின் படைப்பாளர்களின் எழுத்துகளில் பெண் நிலைவாதம் பற்றியும் பெண் இருப்பு பற்றியும் அவருக்குள் கேள்விகள் எழுந்துகொண்டே இருந்திருப்பதை தன் நினைவுக்குறிப்புகளில் எழுதி வைத்து இருந்த பதிவுகளையும் சுப்ரபாரதி மணியன் இணைத்துள்ளது நூலுக்கு பெரிய பலமாக இருக்கிறது. தன் நட்பும் உறவும் தமிழிலக்கியப் படைப்பாளர்களுடனும் இருப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் அவர் எழுதுகிறார்

“அசோகமித்ரன் வீட்டுக்கு வந்தப்போ வாங்க தாத்தான்னு கூப்புட்டேன். என்ன நெனைச்சாரோ,வருத்தமோ என்னவோ. பிலிம் பெஸ்டிவலுக்கு வந்திருந்தார். கேசரி பண்ணினேன் சாப்பிடவேயில்லை. பொட்டலமா குடுத்துரு வாங்கிட்டுப் போறேன்னார்.அவர் வீட்டுக்கு போனப்ப்போ ஸ்ரீமுகி சின்ன பொண்ணு.அழுதிட்டே இருந்தா.என்னமோ சிரமம் குழந்தைக்கு அதுதான் அழுகுதுன்னார். ஒண்ணும் புரியலை.தி நகர் பஸ் ஸ்டேண்ட் போயி பஸ் ஏர்றப்போ பாத்தா ஜட்டி ஈரமாயிருக்கு அதுதா அழுதிருக்கா. அவருக்குக் கோபமே வராது போலிருக்கு..“
படைப்பிலக்கியவாதிகளின் குடும்பம் கூட சமூகத்தில் மிகமிக சிறுபான்மை கூட்டம்ந்தான். வாழ்வில் தரிசிக்கும் ஒவ்வொரு கணங்களிலும் மேன்மையான உணர்வினையே கண்டடையும் தருணமாகப் பார்ப்பது அவருக்கு இயல்பானதாகவே உள்ளது. சுகந்தியின் நாட்குறிப்பு பதிவுகள் மேன்மையான சிந்தனைகளாக அல்லாமல் புனிதம் நிரம்பிய அன்றாட வாழ்வின் காட்சிகளைப் பேசுகிறது. 

மேலும் ஒரு குறிப்பில்
“ஹாலோபெரிடால் எனக்குப் புடுச்ச மருந்து.குடுத்த உடனே தூக்கம்  வந்திரும்.நாள் ஆக ஆக கைகால் விரச்சு ஒரு மாதிரி ஆயிருச்சு. ரோபா மாதிரி ஆயிட்டன். ஒரு மாதிரி நடை. ரோபா மாதிரியே நடந்தேன். சுஜாதாவோட ஜீனோ மாதிரி ரோபா.அது குலைக்கும். லொள்...லொள் ன்னு.நானும் அது மாதிரி உங்களைக் கவ்விக் கவ்வி குதறியிருக்கன்ல....“ எனும் நாட்குறிப்பில்தான் எத்தனை செய்திகள். இச்சிறு குறிப்பை சாதரணமாக எழுதிவிடமுடியுமா. அவர் சமகாலத்தின் வாசிப்பின் பிடியில் தீவிரமாக இருந்த பொறுப்புணர்வு அறியமுடிகிறது.

சுகந்தியின் சிறுகதைகள்,கவிதைகள்,நாட்குறிப்புகளில் காணப்படுகிற படைப்புமொழி சிறப்பானது. அலங்காரமோ வசீகரிக்க அமைக்கிற பெரும் சுவராசியமிக்க சொற்றொடர்களோ எதுவுமில்லை. இந்த மூன்று படைப் பிலும் பொதுவான மொழியே அமைந்திருக்கிறது. அவர் எழுத்தின் வழியாக படைப்பிற்காக எந்தத் திட்டமிடலையும் முன்வைக்கவில்லை. குடும்ப உலகம் இலக்கிய உலகம் தன் சுயம் தன் எழுத்து தன் மன இருப்பு தன் எதிர்காலம் இவற்றிற்கு இடையே ஒரு எளிய மனுசியின் ரசனைகளாக இந்தக் குறிப்புகளும் கவிதைகளும் படைப்பும் உள்ளது. இந்த நூலுக்கு ஜெயமோகன் எழுதியுள்ள ஏற்கெனவே எழுதியிருந்த சுகந்திக்கான இரங்கல் கட்டுரை மற்றும் அவர் கவிதைகள் பற்றிய மதிப்பீடுகள் நூலுக்குள் நுழைய வாசகர்களுக்கு சௌகரியமானவை.
சுகந்தியின் பால்யகால வாழ்வு கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமமாக இருந்தபடியாலும் அவருக்குக் கொங்கு வழக்காறு மொழி இயல்பாகவே வந்து பேசுகிறது. 

மேற்கு மலையடிவார கிராமங்கள் மிகவும் இயற்கையும் பேரழகு வாய்ந்த அழகிய சூழல்கள் வாசிக்கும் பொழுது நமக்கு ஏற்படுகிறது. இவருடைய பதிவுகளில் வரும் பாத்திரங்கள் முழுக்கவும் ஆலாந்துறை கிராமத்து மாந்தர்கள் போலவே மாறிவிடுகிறார்கள். சுகந்தியைப் பொருத்தவரை அசோகமித்ரன், ஜெயமோகன்,அருண்மொழிநங்கை,திலகவதி,லதா ராமகிருஷ்ணன்,சுஜாதா இப்படியாக தன் இலக்கிய நண்பர்கள் கணவரின் இலக்கிய நண்பர்கள் அனைவருமே தன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்னும் நினைப்பு அவருக்கும் மனதிற்கும் ஏற்பட்டுவிட்டதை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.
    
அவருடைய நாட்குறிப்புகள் மிகவும் இலக்கிய நேர்மை வாய்ந்தவை. ஆங்காங்கு பிதற்றலும் உளறலுமாக எழுதிவைத்திருப்பதாகத் தோன்றுவது எல்லாமே தனி மனித இருப்பின் வலி. அகத்தின் அழகு முகத்திலும் அகத்தின் கலை எழுத்திலும் தென்படும் போல. சுகந்தியின் குறிப்புகள் பூச்சிதறல்களாக அமைந்திருக்கிறது. ஒரு பாரா ஒரு சிறுகதையின் கச்சிதம். அவர் குறிப்பிடாத தத்துவ வெளிப்பாடே இல்லை. அவருக்குத் திட்டமிடப்பட்டுவிட்ட தத்துவ ஏற்பாடு அவர் சிந்தனையில் நின்று விட்டது. உதாரணத்திற்கு சில குறிப்புகள்.

“தன்னம்பிக்கை இருந்தா மார்க்சியம்
தன்னம்பிக்கை போய்ட்டா ஆன்மீகம்
சுதந்திரம் வேணுமுன்னா பைத்யம் ஆகணும்.“
---
ஒண்ணாவதிலிருந்து பத்தாவது வரைக்கும் கண்ணைத் தொறந்ததில்லை. ஸ்கூல்ல.(கல்யாண மேடையிலதா கண்ணைத் தொறந்தேன்)பசங்களை பாத்த்தேயில்லை. என்.எஸ்.எஸ்ன்னு பச்சியப்பன்னு ஒரு வாத்தியார் சொல்லிட்டே இருப்பார்.லீலாவதின்னு ஒரு டீச்சர் அழகாதா இருப்பாங்க. அழகா பொடவ வுடுத்துவாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் லவ். நாந்தா காதல் கடிதம் கொடு போயி குடுப்பன். குடுக்காட்டி ஸ்கூல வுட்டு துரத்திடுவன்னு சொல்வாங்க  ஒரு நாள் தலைமையாசிரியர் கவனிச்சார் லீலாவதியோட அழகைப் பாத்து கார் வாங்கிக் குடுத்தார். அப்புறம் பச்சியப்பனும் லீலாவதியும் கார்ல பறந்துட்டே இருப்பாங்க.ஒரு கொழந்த பொறந்ததும் கார் பஸ் ஆயிடுச்சு. லீலாவதி ஒரு சாக்கை தூக்கிப் போட்டுட்டு அங்கெயும் இங்கயும்னு அலைவாங்க.இங்க கூட வந்தாங்க. நான் கண்டுக்கவேயில்லை. ஆனா குடும்பம் நடத்தறாங்க சாக்கோடவே
--
 காத்திருப்பதே வாழ்க்கையாய்ப் போய் விட்டதுன்னு வாழ்க்கையாப் போச்சுன்னு புவியரசு சொன்னாரில்லை ஒரு பொண்டாட்டிக்காக ஒரு ஞாயித்துக் கிழமைக்காக ஒரு மட்டன் துண்டுக்காகன்னு சேத்துக்கலாம்.

--சுமார் 350 பக்கங்கள் பெருந்தொகுப்பாக சுகந்தி சுப்பிரமணியம் படைப்புகள் வெளிவந்திருக்கிறது. அவருடைய படைப்புகள் மேலும் சில நூறு பக்கங்கள் இருக்கலாம். தமிழுக்கு ஒரு முக்கியமான வரவு. தொகுத்த கனவு இதழாசிரியர் நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கும்  வெளியிட்டு சிறப்பு செய்திருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மௌனத்தில் முயங்கி
மெய் ஞானத்தில் மவுனம் தாங்கி
அலை தோய்ந்த ஆறுகரையோரம்
அம்மனதை தேடிய அலைபாய்தல்.
சின்னச் சிறை முல்லைப்பூவின் இதழ்கள்
சின்னக் குருத்தாய் சிரித்து மலரும் முல்லைப்பூ----பக் 86


வெளியீடு-டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே.நகர் மேற்கு. சென்னை-600 078
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
போன்-044 65157525-87545 07070
விலை ரூ 330-











ஞாயிறு, 11 ஜூன், 2017

களையெடுப்பின் இசைக்குறிப்பு-செங்கவின் கவிதைகள்.. -- இளஞ்சேரல்


களையெடுப்பின் இசைக்குறிப்பு

செங்கவின் கவிதைகள்..  --     இளஞ்சேரல்

 

விடுதலை

அதன் மீது அவர்கள்

காதல் கொண்டிருந்தார்கள்

அது உண்மைதான் என்று

அவர்கள்  ஒப்புக்கொண்டார்கள்

மேலும் அது மறுக்க முடியாத

உண்மையென்றும் உறுதிப்படுத்தினார்கள்

அது அவர்களின் இதயத்தின்

ஆழ ஆழங்களில் உறைந்திருக்கும்

பெருநதியென்றார்கள்

அவர்கள் காணவிரும்பும் கனவும்

அதுதான் என்றார்கள்

அவர்கள் உலவித் திரிய விரும்பும்

பொன்னுலகம் அதுதானென்றார்கள்

அவர்கள் அதை

விரும்புவதாகத்தான்  சொன்னார்கள்

அதிலிருந்து ஒரு சிறு கீற்றை

நானவர்களுக்குக் கையளித்தேன்

பதறி விலகிவிட்டார்கள்

அவர்கள் அதனிடமிருந்தும்

பிறகு என்னிடமிருந்தும். – பக் 45

அடுத்த கவிதை

 

பரிசு

மகளுக்குப் பரிசளிப்பதற்காய்

ஓர் ஓவியம் வரைந்தேன்

குஞ்சுப் பறவைக்கு ஊட்ட

உணவினைப் பற்றியிருக்கும்

தாய்ப்பறவையின் அலகினை

வரையவே விரும்பினேன்……. பக் 34

     விடுதலை என்பதான நம் மக்களின் புரிதல் என்னவென்ன அறிந்துகொண்ட கவிதையாக இந்தக் கவிதை முக்கியமானது. சமீப காலத்தில் நம் சமூகமும் நாடும் நாட்டு மக்களும் எப்படிப்பட்ட விடுதலையை எதிர்பார்க்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ் வொரு செயல்பாட்டாளனும் தனக்குள்ளே கேட்டுக் கொண்டே இருக்கிறான். இந்திய நாட்டின் விடுதலையை எடுத்துக் கொள்வோம். அது பெயரளவான விடுதலைதான் என்பதை இந்தக் கவிதை பேசுகிறது. வெள்ளையர்களிடமிருந்து மீட்டு கொள்ளையர்களிடம் கொடுத்துவிட்டோம். இரவில் வாங்கினோம் விடியவே இல்லை. என்னும் மேற்கோள் கவிதையல்ல இக் கவிதை. மாறாக விடுதலை என்பதின் பொருள் உணர்ந்து உள்ளோமா என யோசிக்க வைக்கிற கவிதை. விடுதலையில் இரண்டு நிலைகள் உண்டு ஒன்று விடுதலை எனும் சுதந்திரச் செயல்பாடு அடுத்து கட்டற்ற சுதந்திரம். நம் சமூகம் இன்றும் சுதந்திரம் எனும் கருத்தியலுக்குள் வரவேயில்லை.

முன்னூறு ஆண்டுகள் மட்டுமல்ல..ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே அடிமைச் சிறுமதியுடன்தான் வாழந்தோம். அச்சமே அவனுடைய விடுதலைக்குத் தடையாக இருந்தபடியால் பாரதி முதலில் அச்சம் தவிர் என்றார். மகாகவி பாரதிதான் தமிழுக்குரிய இரண்டு முக்கியமான சொற்களை அறிமுகம் செய்தான். விடுதலைää சுதந்திரம். இந்த சொர்க்கத்தை அடையத் தடையாக இருப்பது அச்சம். அவருக்குப் பிறகு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அச்சத்தைப் போக்குவதற்கு செயல்பாட்டார்கள் போராடுகிறோம். பல்லாயிரம் போராட்டக் குழுக்களாகப் போராடுவதன் பொருளே அச்சத்தை விலக்குவதற்காகத்தான். செங்கவின் கவிதையில் உணர்த்தும் அச்சம் அதுதான்

நானவர்களுக்குக் கையளித்தேன்

பதறி விலகிவிட்டார்கள்---

இந்த வரிகளில் உணர்த்தப்படுகிற அச்சநிலை அதுவே. இந்த நவயுகத்திலும் அச்சத்தின் பிடியிலிருந்து அவர்களை மீட்கும் போராட்டத்தில் நாம் இணைந்து உழைக்கிறோம். அந்தக் கொடிய ஆவிகளிடமிருந்தும் அரக்கர்களிடமிருந்தும் பிசாசுகளிடமிருந்தும் மீட்கப் போராடுகிறோம்.

குஞ்சுப் பறவைகளுக்கு தாய்ப்பறவை உணவு கொடுக்கும் போது அதன் பெரிய அலகுகளால் பசியில் வேகத்தில் உணவு கிடைத்த மகிழ்வில் கர் கர்கர் எனக் கூவியபடியே அலகுகளை வானம் பார்த்தபடி திறக்கும் அத்துனை குஞ்சுகளுக்கும் சரிசமமாக உணவைப் பங்கிடுகிற பொதுமைப் பண்பையும் பொதுவுடமைக் கலையின் தத்துவத்தையும் இந்தக்கவிதையில் செயல்படுத்தியிருக்கிறார்;. ‘உண்டி கொடுத்தோர்எனும் மணிமேகலை காப்பியம் நினைவுக்கு வருகிறது.

கலை இலக்கியச் செயல்பாடுகளே புரட்சிகரமான செயல்பாடுகள்தான். கலையின் வலிமையை உணர்ந்து விடுகிற கலைஞர்கள் புகழின் உச்சிக்குச் சென்றுவிடுவார். ஏளிய சாமானிய மக்கள் புகழ் கொண்ட மனிதர்களை விரும்புகிற வழக்கு சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்றவர்கள்தான் மனிதர்கள் மற்றவர்கள் மனிதர்கள் அல்ல எனும் புரிதல் நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணமாவை ஊடகவியல் துறையாகும். பெரும் செல்வந்தர்களுக்கு தாங்கள் இன்னாரென்று அறியப்படவேண்டும் என்பதில் அக்கறை. அதன் காரணமாக ஊடக வெளிச்சம் தங்களின் மீது விழுந்து கொண்டேயிருக்கவேண்டும் எனும் வெறியைக் கொண்டிருக்கிறார்கள். பெருமுதலாளித்துவ அமைப்பில் ஊடகங்களின் வழியாக எளிய மக்களின் மகத்தான உழைப்பைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும் என்பது அவர்களின் கருத்தாகும். இந்த இடத்தில்தான் புரட்சிகரமான மாற்றங்கள் நோக்கி நகர்கிற கலைஞர்கள் தங்களின் ஊடகச் செயல்பாட்டை அதிகமாக்கிக் கொண்டு அதே எதிர் திசையில் எளிய மக்களைத் திரட்டும் பணியினை மேற் கொள்கிறார்கள். மக்களைத் திரட்டுவது என்பதே கலையைக் கைக்கொள்வது என்பதாகும். உலகின் மகத்தான மாற்றங்களுக்கான கலையின் செயல்பாடுகள் தான ; முதன்மையானது. அந்த வகையில் கவிதை கலையின் உயித்துவமான அங்கம். இன்று கவிதையியக்கம் பல்கிப் பலவாறாகி புத்தம் புதிய ஊற்றுக்கண் களின் வெளிச்சம் மின்ன மின்ன வந்து கொண்டிருக்கிறது.

       ஊடக வெளியின் பரந்து பட்ட சுதந்திரத்தின் காத்திரம் கவிதையை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. செங்கவினின்களையெடுப்பின் இசைக்குறிப்புகவிதைத் தொகுப்பின் வரவு என்பது அவசியமானதாகும். நவீன கவிதையில் பால் பேதமில்லை. நவீன காலத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு அதிகமாகப் பயண்படுத்தப் படுகிறவர்கள் பெண்கள். புராண காலத்தில் கூட சரிபாதி பெண்மைக்குத் தந்த மரபு நம்முடையது. தற்காலத்தில் இன்றும் மூன்றில் ஒரு பங்குக்காக பெண்மை போராடிக் கொண்டிருக்கிறது. செங்கவின் கவிதைகளில் உள்ள சமூக வெளிப்பாடும் தர்க்கமனோபாவமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

    ஒரு களச் செயல்பாட்டாளருக்கு தர்க்க மனோபாவம் அவசியம். மிகச் சிறுபான்மையினர் அவர்கள்தான். தமிழிலக்கியத்தில் இலக்கியம் படிப்பவர்கள் குறைவு அதிலும் நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பி வருபவர்கள் அதினும்  குறைவு. இவர்கள்தான் அத்துனை விதமான கலாச்சாரத் தாக்குதல்களையும் எதிர்க் கொள்கிறார்கள்.  

மக்கள் கலைஇலக்கியங்களின் பங்களிப்பு என்பது சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேகம் தருவதாகும். மக்களின் பிரச்சனைகளை பாடல்களின் வழியாக மக்களின் சிந்தனைக்குள் கொண்டு செல்வது என்பதும் புரட்சிகரமான நடவடிக்கைகள்தான். பாடல்களில் இருக்கிற மக்களின் வலி சுமந்த வரிகளை  அவர்கள் ஏற்றுக் கொண்டு அந்தப் பாடகனக் கொண்டாடுகிறார்கள். அந்தப்பாடல்களில் மூலம் பெற்ற சிந்தனைகளை தங்கள் போராட்டத்திற்கு உரமாக்கிக் கொள்கிறார்கள். பாடல்களில் இசைத்தன்மை இருப்பதால் மக்களால் மனதில் பதிந்து பாடலைப்  பாடிக் கொள்ள ஏதுவாகிறது. ஆனால் கவிதைகளில் இசைத்தன்மை குறைந்து உணர்ச்சி மேலோங்குவதால் வாசிப்புக்கும் கருத்தியலுக்கும் உடன்படுகிறது. கவிதையில் உள்ள கலைத்தன்மையே வாசகனை எளிதில் கவிதைக்கு வசப்பட வைத்துவிடுகிறது. கவிதை ரசனை அனுபவம் உள்ள வாசகன் உடனடியாக கவிஞனாகிவிடுகிறான். கலையின் விதி வலியது.

தித்திக்கிறது சர்க்கரைக் கிண்ணம்- தலைப்புக் கவிதையில் செங்கவினின் சர்வதேச அரசியல் களம் பற்றிய புரிதல் தெரிகிறது. ஃபிடல் காஸ்ட்ரோவுடன் அவர் தேநீர் அருந்த விரும்பி அழைக்கிற உணர்ச்சிகரமான கவிதை. பொதுவாக மனத்தான மனிதர்களின் உடல்களைத்தான் இழந்து விடுகிறொமே தவிர அவர்கள் நம்முடன் தான் இருப்பார்கள்.சிந்தனைகளில் செயலாக்கங்களில் கூடவே இருக்கிறவர்கள் அவர்கள்.ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவிற்கு மட்டுமா சொந்தமானவர். புரட்சிகர செயல்பாடுகள் எங்கனில்லாம் நடைமுறைப்பாட்டுக்கு உள்ளதோ அங்கெல்லாம் இருப்பவர். தோழர்களுக்கு உண்வூட்டுகிறவராக  என்றும் இருப்பவர். அவருடன் தேநீர் அருந்துகிற பொழுதுகள் நிச்சயம் வாய்க்கத்தானே செய்யும். அப்படியான சம்பவத்தை நினைவு கூர்கிற கவிதை..அந்த வரிகளில் சில..

வஞ்சகத்தின் வாசலிலும்

அறத்திற்காய் வெஞ்சினம் கொள்வது

பற்றிக் கூறுங்கள்…..

…………….

நேர்மையற்ற எதிரிகளை

நேர்மையான நம் லட்சியங்களால்

வெல்லும் கலையைச் சொல்லுங்கள் ஃபிடல்-----பக்.44

      

செங்கவின் கவிதைகளில் மேற்சொன்ன இரண்டு நிலைக் கவிதைகளும் பாடல்களும் இசைத்தன்மை கொண்ட பாக்களும் உள்ளது.  மக்கள் கள அரசியல் போராட்டக் களத்தில் மிகத் தீவிரமாக இயங்குகிற  படைப்பாளியின் படைப்பு எப்படிப்பட்ட காத்திரம் கொண்டிருக்கும் என்பதை செங்கவின் கவிதைகளில் அறியலாம். சமகாலத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளிலிருந்தும் சமூக வாழ்வியலிலிருந்தும் எப்படி வேறுபடுகிறது இவரது கவிதைகள் என்பதை உரையாடலாம்.

     கவிதையின் அரசியலுக்குள் நாம் நுழைந்தால் நமக்கு மிஞ்சுவது  சுயத்தைக் கொலை செய்து தற்கொலை செய்து கொள்வதுதான். புனிதப் படுத்தப் படுகிற எந்தவொரு கலையும் இறுதியில் அது மதபீடங்களுக்குத் தான் போய்ச் சேரும். கலையைப்  புனிதப்படுத்தி எந்த ஒரு சாமானியனும் நெருங்க முடியாத மாயவலையை வீசிக்n காண்டே இருக்கிற கவிதையின் அரசியலைத் தாண்டி மக்கள் கலை இலக்கியப் போராளிகள்  படைப்புத் தளத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதற்கு செங்கவினின் முதல் நூல் களையெடுப்பின் இசைக்குறிப்பு ஆகும்.

         கோவை பொள்ளாச்சி சாலையின் விரிவாக்கத்திற்காக  மரங்கள் வெட்டி வீழ்த்திக் குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற கொடுரக் காட்சியைக் காண நேர்கிறது. நாற்பது கிலோமீட்டர் இருபுறமும் உள்ள பல நூறாண்டு வயதுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகிறது. நாம் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்கள் அச்சத்தின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் அமைதிகாத்தார்கள்.  சாலைகளை விரிவாக்கம் செய்து நவீனப்படுத்துகிற புத்தி நம் மக்களின் அறிவை விசாலப்படுத்தி வாழ்வை நவீனப்படுத்துவதற்கு புத்தி வேலை செய்வதில்லை என்னும் கருத்தியலை  செங்கவின் கவிதைகள் முன்வைக்கிறது.

அடிப்படைக் கட்டமைப்பு. சாலை மேம்பாடு நகர வளர்ச்சி என்பதைக் காரணம் காட்டி  வனங்களை மரங்களை அழிக்கிற வேலையை அரசுகளே செய்கிறது. மக்களை இப்படித்தான் இதைச் சொல்லித்தான் காலங்காலமாக ஏமாற்றி வருகிறார்கள். இதோ  சொர்க்கம் பாருங்கள் அனைத்தும் கிட்டிவிட்டது. 2020 ல் உலகின் வல்லரசாவோம். என்ற பைத்தியகாரத்தனமான வெற்று கோஷத்தை பரப்பியவர்கள் யார். அவர்கள் எங்கே. கோவையின் பல மைல்கள் விரிவாக்கத்திற்கு பல்;லாயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. மூன்றாவது உலகப் போர் நடந்து முடிந்த களம் போல அந்த நிலங்கள் கிடந்தது. பறவைகளின் ஓலம். சிறுவர் சிறுமிகளின் குழந்தைகளின் ஏக்கமிக்க பரிதாபமான பார்வை. பள்ளிக்காலங்களில் வெயிலுக்குத் தங்கிய மரங்கள். பெருநகரத்திற்கு சாபத்தீட்டாக இந்த மரங்கள் வாய்த்து விட்டதை செங்கவின் ஒரு கவிதையில் காட்டுகிறார். இது நரபலி சமூகத்தின் வெளிப்பாடு. நாம் எதாவது ஒன்றை நரபலி கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது விதிபோலும்.

வளர்ச்சியின் பெயரால்     

நிறைமாத பிள்ளைத்தாய்ச்சியை

காவு கொடுப்பார்கள்

எனும் பழங்கதையை

நான் நம்பவேயில்லை.

சூல் கொண்ட பெருமரத்தை

அவர்கள் வெட்டிச்சாய்க்கும்

வரையிலும்….

 

தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் பறவைகளும் மரங்களும் திரும்பத்திரும்ப வருகிறது. விடுதலையின் குறியீடு பறவை. மரம் வாழ்வின் குறியீடு. விடுதலை பெற்று வாழ்தல் என்பதாகவே செங்கவின் கவிதைகள் உணர்த்துகிறது. மேலும் களையெடுப்பின் இசைக்குறிப்பு நூலின் சிறப்பியல்புகளாக நான் கருதியது அறம் பற்றியும் கலை பற்றியும் சில கவிதைகள் அமைந்திருப்பது ஆச்சர்யம் கொடுத்தவையாகும். ஏனெனில் புரட்சிகரமான செயல்பாட்டாளர்கள் இவ்விரு கருத்துகளையும் புறந்தள்ளி வந்த காலம் கடந்தகாலம். பற்பல விதமான புரட்சிகர குழுக்கள் உடைந்து உடைந்து சிதறிச் சிதறிப் போய் போராட்ட குணங்கள் மறத்துப் போனது இதனாலே ஆகும். செங்கவின் மிகக் கச்சிதமாகத் தன் கவிதைகளின் வழியாக இன்ன பிற சகோதரப் போரட்டத் தோழர்களுக்கு தோழமை மிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த ஒற்றுமை காலத்தின் அவசியம் என்பதை செங்கவின் உள்ளிட்ட தோழர்களுக்கு ஆழந்த பொருள் அறிவர்.

கலையும் கவிதையும் நிச்சயம் மனித குலத்தை மேம்படுத்தும்.

மனித குலத்தை மேம்படுத்த கலைகளிலும் கவிதைகளிலும் ஆழந்திடுவோமாக.. தொடந்து இயங்குவோம் ..முன்னேறுவோம்..

வாழ்த்துக்களுடன்

களையெடுப்பின்  இசைக்குறிப்பு

ஆசிரியர்- செங்கவின்-99421 46605-

வெளியீடு-பொதுமைப் பதிப்பகம்

எண்-5 நான்காம் தளம்

சுங்குராமன் தெரு

பாரிமுனை- சென்னை 600001

விலை ரூ 60-