புதன், 31 அக்டோபர், 2012


அரிசி உப்புமா

 

10 மணி அலுவலகத்திற்கு 9 மணிக்கு

வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும்..

8.40க்கு கடாயை அடுப்பில் வைக்க வேண்டியதாகிறது..

எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பரும்பு

வெங்காயம், கறிவேப்பலை, வரமிளகாய் வற்றல்

கொஞ்சம் பிசிறு முந்திரி...

கலந்து நன்கு வதங்கவேண்டும்..

 

பிறகு தண்ணீரை முக்கால் கடாய்க்கு ஊற்றி

கொதிக்க விடவேண்டும்..

அப்போதுதான் உறவினர்கள் அழைப்பிதழ்கள் கொண்டு வருவார்கள்

முகநூலில் எழுதிய கவிதைக்கு விளக்கம்

கேட்டு தோழி அலைபேசுவாள்..

தண்ணீர் வற்றி தீயும் வாசனை..வரும்..

ஓடிப்போய் மறுபடியும் தண்ணீர் ஊற்றி வைக்க

மறுபடியும் கொதிக்க நேரமில்லை மணி 8.55

அரிசி குருணையைக் கொட்டிக் கிளறுகிறேன்..

 

இன்னும் பின்ன முடியாது குதிரைவால் கொண்டைதான்..

டப்பர்வேரில் அடைத்துக் கொண்டு

வாழைப்பழங்களை பிய்த்துக் கொண்டு வாசலில் பாய்கிறேன்..

ஸ்கூட்டியை நாயைத்தரதரவென இழுப்பது மாதிரி இழுத்து

செல்ஃப் எடுக்காது..

கொடுமைக்கார மேலதிகாரியை மனதில் நினைத்து

உதைத்தால் போதும் உறுமிக் கொள்ளும்

 

மணி 9.15 இரயில்வே கேட் அடைத்திருக்கிறது..

இரண்டு ரயில்களை வெறிக்கப்பார்க்கவேண்டும்.

இரயிலில் படிக்கட்டில் பயணிக்கும்

தம்பி சாடையில் இருப்பவன் பறக்கும் முத்தங்களைத் தருகிறான்

அதெல்லாம் ஓகே...பாத்துப்பா விழுந்தறாத...

 

 

அலுவலகத்தில் வண்டியை நிறுத்தும் போது மணி 9.20

வருகைப்பதிவேடு எம்டியிடம் போயிருக்கும்

தாமத வருகைப்பதிவேடு தேடி எடுத்து கையெழுத்திடும் போது

சில அரிசிக்குருணைகள் விழுகிறது...

 

மதிய உணவு இடைவேளையின் போது

உடன் உணவருந்தும் பணியக தோழிகள் கேட்கிறார்கள்

எப்படிடி உண்ணால மட்டும் அரிசி உப்புமா..ரவா உப்புமா..

சேமியா..ரவாகிச்சடி..வெண்பொங்கல்.. சம்பா ரவை உப்புமா

சூப்ப்பபராப் பண்ண முடியுது...

அதத்தான் கொஞசம் எங்களுக்கு சொல்லலாமேடி...

 

செவ்வாய், 30 அக்டோபர், 2012


நேசித்த கவிதையின்

கவிஞனை நேசிப்பது

நேசித்த கவிஞனின்

கவிதையை நேசிப்பது

கவிஞனின் கவிதையை நேசிப்பது

கவிதையின் கவிஞனை நேசிப்பது

சுலபமான காரியங்களில் ஒன்று..

 

சுயவிருப்பத்தை

ஒருதலைக்காதல் போலவும்

கல்கண்டை மெல்லுவது போலவும்

விருப்பத்தை

மறைக்க முயல்வதை

யாரோ அறிந்து கொண்டுவிட்டார்கள்

கவிஞரே…

 

ஒரு சிறுவன்

எளிய ஒரு மண் சக்கரம் வரைந்து

பம்பரங்களை மையத்தில்

சேகரித்து வைத்திருக்கிறான்

 

ஒரு சிறுவன்

சைக்கிள் டயரைப் பற்றவைத்து

நம்மை அணைத்தபடி

நெருப்பைச் சுற்றுகிறான்..

 

நாமிருவரும்

சொற்களைச் சுற்றுவதில்

என்ன தயக்கம் கவிஞரே..

உன் பம்பரத்தின் ஆணி மையத்திற்கு

கோதுமை நாகம் தீண்டிய நஞ்சு எச்சில்

தொட்டு பத்ம வியுகத்தைத் தகர் கவிஞரே…

உன்மைதான் நீ சொன்னது போல

என்னால் மதுக்குவளைகளில்

மதுவை ஊற்றத் தெரிவதில்லை

எப்படியும் இரண்டு சிமிழ்களை சிந்திவிடுகிறேன்…

 

அதனால் வெட்கத்தை விட்டு சொல்கிறேன்…

நேசித்த கவிதையின்

கவிஞனை நேசிப்பது

நேசித்த கவிஞனின்

கவிதையை நேசிப்பது

கவிஞனின் கவிதையை நேசிப்பது

கவிதையின் கவிஞனை நேசிப்பது

சுலபமான காரியங்களில் ஒன்று..

நேசிக்கிறேன்..நேசிப்பேன்….

சனி, 27 அக்டோபர், 2012

பத்தாயத்தில் மீந்த தானியம்- தூரன் குணாவின்-கடல் நினைவு- கவிதை நூல் குறித்து


பத்தாயத்தில் மீந்த தானியம்----------------
இளஞ்சேரல்
( தூரன் குணாவின் ”கடல் நினைவு” கவிதை நூல் குறித்து )
 
 
தூரன் குணாவின் இரண்டாவது கவிதை நூல் அண்மையில் வாசிக்க நேர்ந்தது நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு உவப்பான நவீன கவிதைகளை எழுதுபவர்களில் குணாவும் ஒருவர். அவரை ஒரு முறை ஹரிகிருஷணன் நடத்தும் நிகழ்வில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியது இல்லை. முகநூலில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதோடு சரி.கோவை இலக்கியச் சந்திப்பில் அவருடைய நூல் அறிமுக-விமர்சன நிகழ்விற்கு அழைத்திருந்தோம் அவரால் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள முடியாமையைத் தெரிவித்தார். பிறகு தொகுப்பை முழுமையாக வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்நூல் பற்றி எழுதுவதும் எனக்கு உவப்பானதே..
                அவருடைய கவிதைகளில் எனக்கு நல்ல ரசானுபவத்தை அளித்த கவிதையிலிருந்து தொடங்குவது சௌகரியமாக இருக்கும்.முழுமையும் கவித்துவமும் கலையமைதியும் நிறைந்த கவிதைகளில் ஒன்றான (படுகளம்) பக்-43 கவிதையிலிருந்து சில வரிகள்.
திருடர்கள்  ஊருக்குள் இறங்க –
இன்னும் நேரமிருக்க----
உலர்ந்து விட்ட பியர் பாட்டிலை
இரவின் மீது வீசுகிறேன்---
தெறித்த தன் ரத்தத்துளியை----
நான் விரும்பிச் சுவைப்பது கண்டு---
வன்மத்தில் பாய்ந்து ---
வேட்டை நாயைப் போல்---
குதறிக் குற்றுயிராக்கி வி்ட்டது---
துயரார்ந்தவர்களே….
யாரும் இரவின் மீது
பியர் பாட்டிலை வீச வேண்டாம்….
   
          நவீன கவிதைகளின் பலமே தற்காலத்தின் சித்திரங்களும் முற்றுப்பெறாமல் சிதைவடைந்து காணாமல் போய் பிற்பாடு மீண்டும் நமக்குள் துருப்பிடித்து கரையான் போல அரிக்கத் தொடங்கி கெட்டுப்போய் மணம் வீசியோ துர்நாற்றம் வீசியோ நம்மைக் காட்டிக்கொடுக்கின்ற காலத்தை எழுதுவதுதான். காலம் எப்போதும் ஒரு கலைஞனை கவிஞனை காவு கேட்டு நச்சரிக்கிறதை நாம் பார்த்திருக்கிறோம்.
நாம் அல்லது படைப்பாளிகள் அக்கு வேறு ஆணிவேறாக அதை எழுதி எழுதியெழுதித் தீர்ப்பதுதான் தலையாய பணியாகிறது .. கவிஞன் சில சொற்களிலேயே சுட்டு எடுத்து ஆட்டின் நாக்கைத்தின்பது போல மொறு மொறுவென தின்று விடக்கூடியவனாக இருக்கிறான். படுகளம் கவிதையில் பிற காட்சிகளும் நிறைவு தருபவை. சமூகத்தை ஒரு விலைப்பண்டமாகக் கருதியும் அவை தரும் துன்பியலை சகிக்க முடியாது ஆணையிடுபவனாகவும் இருக்கிறது. நாம் ஆணைகள் பிறப்பிக்கும் பீடத்திலோ தலைமையிலோ இருந்தால் எத்தனை குற்றங்களை நாம் தவிர்க்கலாம் என்கிறார். களைப்புற்றவர்கள் அவளாக இருந்தால் என்ன அவனாக இருந்தால் என்ன..
                     கவிதைகளில் பெரும்பாலானவற்றில் காலத்தின் பதிவுகளும் நிலவியலும் குறைந்தே காணப்படுகிறது. சில கவிதைகளில் ஏற்கெனவே அவரால் கையாளப்பட்ட வேறுபடாத வாக்கியப் பிரயோகங்களும் சொற்றொடர்களும் திரும்பத்திரும்ப வருவதை அவர் கவனித்திருக்கலாம்.
ஒரே நிலவியலில் அதே காட்சியமைப்புகளில் அரூபமான மொழியில் பிரதிநிதித் துவப்படுத்தப் பட்ட சமன் நிலை சித்திரங்களும் ஊடாடி வருகிறது. அவை அவருடைய செறிவுமிக்க காட்சிப்புலனாக வடிவம் பெற்றதால் யாரும் எளிதில் கவனிக்க முடியாத வண்ணம் கவிதைக் கலையாகியுள்ளது..
 
           டேட்டு மிருக புஜம்-பக் (35) தற்காலத்தின் உடற்சித்திரங்கள் மனப்பதிவுகளில் தரும் இம்சைகளையும் அதற்கு பிரியப்படும் மனிதமனம் பற்றியும் எழுதயிருப்பது புதுமை. தற்காலத்தின் பிறப்பு இறப்பு விகிதத்தை விடவும் எக்ஸ் படங்கள் பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்..
                அற்புதமான கவிதையாக பழுப்பு நிற நெல்மணி-பக்(7) கவிதையில் அம்மணம் என்கிற சொற்றொடர் கவிதையை மறைத்துவிட்டது கவனிக்கலாம்..
          ஏற்கெனவே நிலை அச்சு (பேட்டர்ன்) வடிவ உத்திகளை வரும் காலத்தில் தவிர்க்க வேண்டும்.நவீன உலகின் அரசியலும் உளவியலும் அவை சார்ந்த பின்னணி பாதிப்புகள் பற்றிய குரூரங்கள் இல்லை.கவிஞனும் அவன் வாழந்த நிகழ்காலமும் படைப்புகளுக்குள் பொருந்த வேண்டும. அக மனதின் ஆழ் சிக்கல்களும் புறவயப்படு த்தப்பட்டு விட்ட நெறிகெட்ட அரசியல் கட்டமைப்புகளின் மீதான் விமர்சனமும் நிறுவன மயத்தின் மீதான தார்மீக கோபமும் சுயத்தின் நிலைமையும் கவிஞன் நவீன காலத்தை அணுகவேண்டியதாக இருக்கிறது.சுந்தரராமசாமி (பசுவய்யா) ந.பிச்சமூர்த்தி-சி.மணி-ஞானக்கூத்தன்- ஆத்மாநாம் போன்ற ஆளுமைகள் தத்தம் காலத்தின் அரசியலை நுட்பமாக விமர்சித்து இருக்கிறார்கள்.நவீன கவிதையின் கவிஞனுக்கு அவை மிகவும் அவசியமாக வேண்டியிருக்கிறது. மாயா எதார்த்தவாதத்தின் வழியாக நாம் விரும்பும் அறம் பற்றிய கேள்விஞானம் படைப்பாளிக்கு தேவையாக இருக்கிறது.
கொக்கரக்கோ..(பக்64) குணாவின் அநாயசமான செவ்வியல் கவிதை..இக்கவிதையில்
”கோழிகள் முட்டையிடாத நகரங்களில்
மாறிமாறி
வசிக்கத் தொடங்குகையில்-முட்டைகள் கோழிகளிடமிருந்துதான் வருகின்றன
என்பதையே மறந்து விட்டேன்..ஒரு நகரம் ஒரு கிராமம் எப்படியெல்லாம் துண்டு துண்டாக மாறியிருக்கிறது என்பதை கவிஞன் பேசுகிறான்..
என்னை வசப்படுத்திய கவிதை-தாஸ்தாவெஸ்கியின் நண்பர்கள் (பக் 53)
ஒரு அற்புதமான தீபாராதணை..—
கண்ணோரங்களில் துளிர்ப்பது—
அறத்தின் நீர்முகம்—
மலரைப்போல் நோய்மை—
இதயத்தில் பூத்திருக்கையில்—முடிவும் நிறைவாக இருக்கிறதைக் கண்டேன்..
       
               கவிதைகளில் ஒவ்வொரு சம்பவச் சித்திரங்களை கவிஞன் பேசிக்கொண்டு போகும் போது ஊடாடிவரும் சந்த ஓசை நயமிக்க இசைக் கோர்வைகள் வாசகமனம் மகிழ்ச்சி கொள்வதற்கு இதமாக அமைகிறது. பல கவிதைகளில் மிகுநுகர் மனநிலையை ஊக்கப்படுத்துகிறது. புத்தனின் 30 வயது ஆண்குறி கிடாராவது புதுமையான பதிவு. மைதுனமோ சுயமைதுனமோ தற்காலச் சூழலில் நுகர்வு கலாச்சாரம் புது வெடிப்பு கலை என்கிற வடிவில் ஒரு மொழியின் மரபை அவர்தம் குலத்தை அவர்தம் பெண்களையும் ஆண்களையும் பாலுணர்ச்சியை மையப்படுத்தி தான் அவர்களை சிதைக்க முடியும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
                     திரைப்பாடல்களுக்குரிய வடிவில் சில கவிதைகள் உள்ளது பழமொழிக் கூற்றும் வழக்கு சொலவடைகளும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.
நவீன கவிதைகளுக்கு முக்கியமாக மூன்று நிலைகளை மையப்படுத்தி எழுதப்பட்டால்
அவை முழுமைபெற்ற கவிதைகளாகிறது. கவிதைக்கான சுதந்திரத்திற்காக ஒரு வெளியும்  கவிஞனுக்காக ஒருவெளியும் வாசகனுக்காக ஒருவெளியும் இந்த மூன்று நிலைகளின் அம்சம். தூரண் குணா இம்மூன்று நிலைகளையும் பெரும்பாலான கவிதைகளில் வைத்திருப்பதும் சில கவிதைகளில் அவரே தம்மை மையப்படுத்தி இயங்கியிருப்பதைக் காணவும் வாசிக்கமுடிகிறது.
             ஆத்மாநாம் இருந்த மருத்துவனை பக் (45) முக்கியமான கவிதை. காலம் காவு வாங்கிய கவிஞர்களில் ஒருவர்.நவீன காலத்தை எழுதுகிற ஒவ்வொருவரும் கொஞ்சம் மையில் கண்ணீரோடு சேர்த்து எழுத நினைப்பவர்களில் ஆத்மா நாமுமாக இருக்கிறோம் அல்லவா தூரன் குணா …எனினும் இறுதி வரியில் ஆத்மாநாம் அழுவது என்பதை உங்களால் நிஜமாகவே ஏற்க முடிகிறதா… சும்மா கேட்கிறேன்…தவறாக எண்ண வேண்டாம்…             
           நவீன கவிதைக்கான மிக முக்கியமாக தேவைப்படுவது ஒழுங்கும்
கலை மையப்படுத்தப்பட்ட பேரொழுங்கும் நேர்த்தியான (சிக்கலானாலும் சிக்கலற்ற தாகவும்) வடிவக் கச்சிதமும் அவசியமாக்கப்படவேண்டும் என்பதை எஸ்.வைத்தீஸ்வரன், அபி. தேவதேவன், தேவதச்சன்.எம்.யுவன் வலியுறுத்துகிறார்கள்.
குணாவின் பல கவிதைகள் உட்சிதைவுகளால் கசக்கப்பட்ட காகிதம மெல்ல தம்மை தாமே நேராக்கிக் கொள்ள முயலுமே அதுபோல கவிஞனின் பிடியிலிருந்து வெளியேற நினைத்து ஏங்குவதை வாசிக்க முடிகிறது சில கவிதைகளில்..
           புத்தனின் முப்பது வயது ஆண்குறி- கவிதையில் இறுதி தருணம் சிறப்பு.
இந்த உலகில் உடல்கள் (பக் 42)
தசைகளால் படைக்கப் படவேயில்லை------என்பதே என் ஞானமாக இருந்தது…
கலைஞனின் சுயம் தெளிவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்..            
               
             குணாவின் முந்தைய தொகுப்பை நான் வாசிக்க வில்லை எனினும் அவருடைய கவிதைகளை எப்படியும் வாசிக்கிற வாய்ப்பு நேர்ந்திருக்கிறது. இரு தொகுப்புகளின் தொடர்ச்சியாகவே கவிதையின் உள்கட்டமைப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏக்கப்புலி- கவிதையில் நவீன கவிதையியல் வடிவம் ஆங்காங்கு தன்னைச் சிதைத்துக்கொள்கிறது. இறுதி வரிகளில் பரிபூரணம் என்பது முடிவற்ற நிலையாமையை பொருந்திக் கொள்ளாத கற்பிதமாகவும் மாறிவிட்டது.
”கண்ணீரை மட்டும் அருந்தும் சாதக பட்சியாகவே இருக்கிறது” இவ்வரிகளுடன் கவிதை முடிந்து  தீர்க்க தரிசனத்தைத் தருகிறது..
மதில் –அயக்கம்-கவிதைகள் நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகளை ஞாபகப் படுத்துகிறது. இக்கவிதைகளை வாசகனாக உணர்ந்து அனுபவிக்க முடிந்தது.
நாணயச் சுண்டலில் நம் தலை தெறித்து விழுவது படிமமாகவும்  வடிவ உத்தியும் சிறப்பான கவிதை. நவீன வாழ்வில் இரண்டிலொன்று மனோபாவத்தை நாமும் சமூகமும் தெரியாத்தனமாக வளர்த்துக் கொண்டுவிட்டோம். நம் –என் தலை உருள்கிறது என்கிற சொற்றொடரை வாக்கியப்பிரயோகத்தை நம்மில் பலர் உபயோகிப்பதைக் காண்கிறோம். உணர்கிறோம். அவையே ஒரு நவீன கவிஞனின் பார்வையில் எப்படியிருக்கும் என்பது தான் கவிதையின் கலையமைதி.
வாழ்வில் நாம் எதற்காகவோ ஒரு விதியைத் தேர்வு செய்து கொள்கிறோம்..பிற்பாடு மதியால் வெல்வதற்கு வாழ்நாள் முழுக்கவும் போராடுகிறோம்.தோற்றுப்போகிறோம்.
பொய்யாய்த் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். பிறகு மறுபடியும் களத்திற்கு திரும்புகிறோம்.
            
              ஆண்மகன் வசிக்கும் வீடு- கவிதையில் அபாரமான படிமமும் சித்திர அழகும் நிறைந்த கவிதையாக உள்ளது..(பக்-17) கடைசியாய் சாணம் ---மொழுகியது நேற்றாயினும்---என்றோ ஈசானிய மூலையில்---சிந்திய உதிரத்தின் தாரையிலிருந்து
அடர்வண்ணத்தில் சீறியெழுகிறது---செந்நிற ஊற்று… குணாவிற்குள் தூங்கும் புகைப்படக் கலைஞனின் ஓவியங்கள் இக்கவிதைகள்..
மகாகாதலன்- கவிதை மேலும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய கவிதை.
உள் முரண் பிறழ்வுகளும் படிமங்களும் காட்சிகளும் நிழல்களுக்கும் வெயிலுக்குமாக மாற மாற யுவதிகளின் அழகுகள்  கூடிப் போவதும் யுவதியை கண்ட கணத்தில் பல நூறு காட்சிகள் ஷணத்தில் எடிட் ஆகி (அழகாக வெட்டித் தொகுக்கப்பட்ட சித்திரங்களாக)கண்களிலும் மன ஒழுங்கு வரிசையிலும் விழுந்து மோதி சிதறுவதைக் காட்டுகிறார். எனினும் கவிதை மேலும் செவ்வியல் தன்மைவாய்ந்த கவிதையாக மாறியிருக்க வேண்டியது ஆனால் இறுதி வரிகளில் பாட்டரி சார்ஜ் தீர்ந்து ஊஊம் என்று அதிர்ந்தும் விழும் பொம்மையாக மாறிவிட்டது. கட்டிளங்காளைகளா இருக்கின்ற இளவரசர்களுக்கு சக்கரைப்பாகு போன்ற விந்து நிறைக்கும் யுவனின் துடிப்பாக முடிந்திருக்கவேண்டிய கவிதை குழந்தையாக மாறி ஒரு வாசகனையும் ஆர்வம் கொள்கிற வாசகிகளையும் ஏமாற்றிவிடுவது போலவே மாறிவிட்டது.
அங்கே அணைகிறது ரத்தம்- பக்(59) கவிதையென்று சொல்ல முடியாத அளவு
சிறுமி சிறுவர்களனுடனான உரையாடலின் வழியாக ரத்தம் பற்றிய விவரணைகள் பச்சயம் பற்றிய விவரணை நெடுநேரம் வாசகமனதை யோசிக்கவே வைக்கிறது..
தொகுப்பில் உள்ள கவிதையில் துன்ப மயக்கம் தருகிற கவிதை…
        கவிஞன் தனது பாவனைகளின் வழியாகவும் பாவனையின் திருத்தமாக நிகழத்தும் படைப்பின் வழியாகவும் தனக்கான முழு சுதந்திரத்தை எடுத்துக் கையாள்வதற்கு நவீன கவிதையியல் அனுமதித்து இருக்கிறது. அதுபோலவே
கவிதைக் கெனவே குறிப்பாக தற்கால அதிநவீன காலத்தின் கவிதைக்கும் சில கட்டட்ற சுதந்திரம் இருக்கிறது. தூரன் குணா கவிஞனின் சுதந்திரத்தை முழுமையாகவும் கவிதையின் சுதந்திரத்தை பாதியும் அளித்துள்ளார்.
கலைஞனின் கவிஞனின் அனுபவத்தை அழித்தோ எரித்தோ குழிதோண்டி புதைத்தோ கூட மூடிவிட யாரும் முயலலாம். அழுத்தமான அனுபவத்தின் கறைகளை எந்த எப்படிப்பட்ட சோப்பு வில்லைகளாலும் முடியாது. அது காலத்தால் எங்கும் தயாரிக்கப் படவில்லை. எந்தக்காலத்திலும் தயாரிக்கமுடியாது என்பதை சில செவ்வியல் தன்மை வாய்ந்த கவிதைகளால் நிரூபித்துள்ளார்.
                  அகஒழுங்கின்மை நமது சமூகத்தில் நிலவும் கொடிய நோய். பிறகு சமூக ஒழுங்கின்மையும் அதனுடன் உடன் காரணிகளாகவும் சேர்ந்து புணர்ந்தபடியே இருக்கிறதை கவிஞனும் கலைஞனும் எதிர்கொள்வது தான் நவீன கவிதையியலின் முக்கியமான அறுவைசிகிச்சை.. மாயப்புகை அரசியல்-சிதைவாக்கம்- தடுப்பாட்ட மனோபாவம்- தீவிரத்தன்மை இன்மை- மறைமுக சதி ஆகியவையால் ஒரு படைப்பாளி அதிகம் பாதிக்கப்படுகிறான்..
                
 தூரன் குணாவின் செவ்வியல் வடிவம் பெற்ற கவிதைகளில் விரல்களில் துவங்கும் வானவில் அற்புதமான கவிதை-குறும்பாடு-கிழவர்- சீருடை களையாத சிறுவன்-வான வில் தூரன் குணா பலநாள் காத்திருந்து படம்பிடித்த புகைப்படக் கலைஞன் போல பதிவு செய்திருக்கிறார். கவிஞனின் உயிர் எப்படித்துடிக்கும் எனக் காண விரும்புகிற வர்களை இந்தக் கவிதையை வாசிக்கச் சொல்லலாம். கூகுள் எர்த் (பக்-52) தான் பிறந்த நந்தவனத்தை- பூங்காவை- மாட்டுத்தொழுவத்தை-காங்கிரீட் உச்சிக் கூரைகளை- ஆஸ்பத்திரியை –வரப்புகளை- மலங்கழித்த ஒதுங்குகளை—கண்டெடுக்கிறார். ஒரு ரயில் தான் நிற்கவேண்டிய பிளாட்பாரத்தை நோக்கி மெல்லிய தளர்வுறலில் துயருடனும் தளர்வுடனும் நிற்பது முயல யத்தினிக்கிற சோகம் தெரிகிறது. காலம் நிரம்ப படித்த ஒரு இளைஞனை அவனுடைய கிராமத்தில் தங்கிடாதவாறு ஏன் பார்த்துக் கொள்கிறது எனத்தெரியவில்லை. அவன் அல்லது கலைஞன் படித்துவிடுவதாலேயெ அவன் தனது கிராமத்தைப் பிரிந்துதான் வாழவேண்டுமா என்ன..என்பதுதான் குணாவின் உணர்வு..
           ”அபத்தத்தின் சிறுதானியம்” ”யோனியின் தாய்மை” கன்னிமையின் கருமைச் சுகந்தம்”  அபுர்வமான நவீன வாழ்வின் விமர்சனங்களான சொற்றொடர்கள். இது பதிவாக கவிதைகளில் வடிவமும் காட்சியும் மேலும் அற்புதமாக வந்திருக்க வேண்டியவை. அங்கங்கு சம்பவ அடுக்குகளால் வெட்டுண்டு துயர்கொண்டு அலறுவதாக இருக்கிறது..
              இறுதியாக பகற்கனவுக் கலை –உரைநடைக் கவிதையில் உபதேசியாகி கவிஞனும் கலைஞனும் உரையாடிக் கொண்டால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்வதாகவும் கற்பனாவாதம் மித வாழ்க்கைக்கு அவசியம் என்கிறது கவிதை.
பகற்கனவு சாத்தியமாக்குகிறதைக் கூட நமது நடவடிக்கைகள் சாதிப்பதில்லை. கனவுகளின் மீதும் நிறைவேறாத செயல்கள் முற்றுப்பெறாத விதிகள் மீது நாமும் நமது நவீன கலையும் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கும் என்கிறது.
அதில் ஒரு வரி---மிக புராதன வாதைகளான பசி மற்றும் வலி இல்லை—என்கிறார்
இப்படியே இருந்து விட்டால் எத்தனை மகிழ்வு—எத்தனை இன்பம் அடடா…..
 
கடல் நினைவு—ஆசிரியர் – தூரன் குணா-
கவிதை நூல்
வெளியீடு- தக்கைப் பதிப்பகம்..
விலை ரூ 70-
முகவரி---தக்கைப் பதிப்பகம்
15.திரு.வி.க சாலை
அம்மாபேட்டை.சேலம்-3

வெள்ளி, 26 அக்டோபர், 2012


அதிகாலையை வீட்டின் தோட்டத்திற்கு அழைத்துவருகிற

சிட்டுக்குருவிகளையும் மைனாக்களையும் காகங்களையும்

போர்வையை உதறிவிடாமல் கழுத்தோடு பற்றிக்கொண்டு

நலம் விசாரிக்கிறேன்..

ஒவ்வொரு தினத்தின் விடியலையும்

காலத்தின் நிகழ்ச்சி நிரல்களையும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது பறவைகள்..

 

நேற்று வந்த கரும்பச்சையில் பொரி சிதறல்கள் வண்ணத்தில்

உடையணிந்து வந்திருந்த செங்குருவியைக் காணோம்..

கிணற்று சங்கிலிப்புறாக்கள் முற்றத்தின் கொடியில் காயும்

உடைகளை ஒவ்வொன்றாய் கவனித்து

சாயம் போன உடைகளி்ல் தன் அலகுகளை தீட்டுகிறது..

 

கேவ் கேவ் துயிலுக்கு இதமாய் பல்லவி பாடும்

 மரங்கொத்திகள் சற்று நேரத்தில் வந்துவிடும்..

தேன்சிட்டுகள் மருதமலை மாமணியே முருகையா

பாடும் போதெல்லாம்  அவை வரும்

பாடும் கூம்பு ஆரன்களில் அமர்ந்த படியே உள்ளே

மதுரைசோமு இருக்கிறாரா என்று பார்க்கும்

 

இன்னும் பெயரியா பறவைகள் வந்து போகிறது..

ஒவ்வொரு பறவையைப் பார்க்கும் போதும் காமிராவால் படம்பிடித்து

பறவை அகராதியில் அது என்ன பறவை என அறிய

தேடித் தேடி அலுத்துப் போகிறேன்..

அவைநாயகன் அண்ணனிடம் பகிரங்கமாகக் கேட்க வெட்கம் தான்.

”இதுகூடத் தெரியாதா ” எனக் கேட்பாரோ என்னும் பயம்...

பறவைகள் மின்சாரக் கம்பிகளில் உட்காரும் போது

திக்திக் என்று அடிக்கும்..

 

நல்லவேளை எங்கள் இருகூர் சிறுவர்கள் கவன் வில் பழகவில்லை..

அதற்காக கிரிக்கெட்டுக்கு நன்றி சொல்கிறோம்..

நம் உலகத்தில் பறவைகள் வாழவில்லை..

பறவைகள் காட்டுயிர்கள் புழு புச்சியினங்களின் உலகில் நாம் வாழ்கிறோம்.

மன்னிக்கவும்.. ஆக்ரமித்து இருக்கிறோம்…

பிடியைத்தளர்த்தி இயற்கையோடு இணைவோம்..

                                

வியாழன், 25 அக்டோபர், 2012

ராமநாதபுரம் சிக்னலில் குழிதோண்டி கூடாரம் அமைத்தோம்
நானும் ராதாராணியும்..
இரவு உணவுக்காக நஞ்சுண்டாபுரம் சாலையில்
ஒரு சிற்றுண்டி விடுதியில் பிச்சை கேட்டு நிற்கிறோம்..
வீண்போகாத புரோட்டா இட்லிகள் கிடைத்தது
காத்திருந்தது வீண்போகவில்லை..
 
ராதாராணியிடம் நான்கு சாலைகளையும் ஒப்படைத்தேன்..
இந்த சிக்னலைத் தேர்வு செய்ததின் காரணம்
120 செகண்ட்கள் இங்குதான் மினுக்குகிறது..
ராதா மேலும் சில ஆடைகளை அணிந்து கொள்ளத் துவங்குகிறாள்..
அடப் பைத்தியமே எங்கு கண்டெடுத்தாய் இவ்வளவு
எனத் திட்டுறேன்..
அவளுக்குக் கதராடைகள் என்றால் கொள்ளைப் பிரியம்
 
இன்று என்ன பாட்டுப் பாடுவது..
இப்பொழுது நவராத்திரி சீசன்
எல்லோரும் 80 வருடத்திற்கு திரும்புகிறார்கள்
நாமும் திரும்புவோம் ராதா..
அப்போது நீ கதர் நெசவுகளில் ஈடுபட்டிருந்தாய்
நான் குதிரை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்..
நாமிருவரும் இணைந்தபின் ஜவுளிக் கடை வைத்தோம்..
எல்லாவற்றையும் இழந்தோம்..
நமது சாலைகளும் நாம் செழிப்பாக வாழ்ந்த வீதிகளிலேயே
நம்மை தெரிந்தவர்களிடமே பிச்சை கேட்டு வாழ்கிறோம்..
 
ஆதலால் நீ” ராதையின் நெஞ்சமே கண்ணணுக்கு சொந்தமே” பாடு
நான் ”சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை” பாடுகிறேன்..
அவள் கோவை சாலையினை சேகரிக்கிறாள்..
எனக்கு கை மேல் பலன்
தங்க முலாம் பூசிய ஐந்து ருபாய் நாணயம் விழுந்தது
யாரோ புண்ணியவான் பாலமுரளிகிருஷ்ணாவின் ரசிகனாக இருக்கலாம்..
அல்லது பாலமுரளிகிருஷ்ணாவாகவும் இருக்கலாம்...