செவ்வாய், 26 நவம்பர், 2013


 

      வில்லாளனின் வீட்டுக் காதணி விழாவும்  

முப்பத்தி ஆறாம் இலக்கியச் சந்திப்பும்-24.11.2013

 

               பால்ய நண்பன் வில்லாளன் தனது குழந்தைகளுக்குக் காதணிவிழா வைத்திருந்தான். வெகுவிமரிசையான விழா. அவனுடனான ஞாபகங்கள் பெருமரத்தின் கிளைகளைப் போல ஆகாயம் பார்த்து விரிந்து பறந்து தள்ளாடுகிறது. விடுபூக்கள் கூடைகளிலிருந்து கொட்டியது போலிருக்கிறது. தனக்கு நேர்ந்த அவமதிப்பு களையும் நிராகரிப்புகளையும் தாண்டி வாழ்வில் சாதித்தவன். வில்லாளனின் தந்தை ஒரு பழங்கால கம்யுனிஸ்ட். மூத்த தோழர். கட்சியின் மறுசீரமைப்புக்குப் பாடுபட்ட மகராசன். தன்னுடைய ஆசைகளின் ஒன்றான தான் இறந்த பிறகு தன் உடலில் கட்சியின் கொடி போர்த்தி எடுத்துச் செல்லவேண்டினார். அது போலவே அவர் காலமானபோது கட்சிக் கொடிகள் தாலுக்கா முழுவதும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பெரிய அளவில் அவர் உடல் முழுக்கவும் செங்கொடி போர்த்தப்பட்டது. கட்சியின் சார்பில் இரங்கல் கூட்டத்தில் அவருடைய பணிகள் குறித்து கட்டுரை வாசிக்கப்பட்டது.

 

           அவர் கடிகாரப் பழுது பார்ப்பதில் வல்லவர். அவருக்குப்பெயரே கடிகாரக்கார ராமசாமி என்பதுதான். இயக்கச் செயல்பாடுகளின்பொழுது அவருடன் முந்தைய கட்சிப் பணிகள் தோழர்களுடனான உறவு, விவாதம் என்றெல்லாம் உரையாடுவோ. அழகான கம்பீரமான குரல். இயக்கப்பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் அதிகம். தனது குழந்தைகளுக்கு கரிகாலன்,வில்லாளன், டிட்டோ, துர்கா என்று பெயரிட்டார். திராவிட இயக்க அரசியல் பேச்சாளர்களின் குறிப்பாக மாவே லெனினியக் கட்சியின் விமர்சனங்களை மிக எளிதில் சமாளிப்பார். ருஷ்ய இலக்கியங்களிலும் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளிலும் நாட்டம் அவருக்கு இருந்தது. அவர் குறித்த விரிவான பதிவுகள் இருகூராற்றுப்படை என்னும் நூல் எழுதியிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.

             உடலிலிருந்து துருத்தி வரும் வேர்களைக் களைந்தாகவேண்டும். காதணி விழாவைத் தவிர்க்க விரும்பவில்லை. பழைய நண்பர்கள் கூட்டம் கூடும் இடம். இன்று ஞாயிற்றுக் கிழமை வேறு. மதிய விருந்து அமர்க்களமாக இருக்கும். பேசாமல் இலக்கியச் சந்திப்பிற்கு முதல் முறையாக விடுமுறை எடுத்தால் என்ன. சாத்தியமில்லை. அரங்க ஏற்பாடுகளுக்கு நான்கு பேர் உறுதியாக வேண்டும். ஆனாலும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வும் நடக்க வேண்டும். பார்க்கலாம். வில்லாளன் தனது வெகுளித்தனத்தை தாண்டி வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறான். எங்கள் நண்பர்கள் குழாமில் படுபாதாளத்தில் இருந்தவர்கள் நாங்கள் இருவர்தான். பொருளாதார ரீதியில் வறுமை குடிகொண்டதில் நாங்கள் கோடிஸவரர்கள். என்னை அவன் ராம் என்றுதான் அழைப்பான். இந்தப்பெயரை எனக்குச் சூட்டியவர் ராஜண்ணன். இந்து என்.ராம் போன்ற அறிவு எனக்கு இருக்கிறதாம். அவரைப் போலவே நானும் பத்திரிக்கைத் துறையில் சாதிப்பேனாம். அப்படித்தான் ஆசைப்பட்டார். என் வாழ்வு எத்திசையில் போய்க்கொண்டிருக்கிற நிலையை நீங்கள் அறிவீர்கள். இரவு முழுக்க யோசனை. தோழர் சா.சிதம்பரம் வீட்டிற்குச் சென்று அவருடைய உடல் நலம் விசாரித்து விட்டு  அவர் வருவதற்கு வாய்ப்புள்ளதா எனக் கேட்டேன். அவருக்கு சங்கடம். தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்கிறார். நேரத்தை அளவீடு செய்த போது ஒன்பது மணி அரங்கிற்கு வந்திடலாம் எனத் தோன்றியது. அவருக்கு எல்லாமே சாதாரணம். வெகு இயல்பாக எடுத்துக் கொள்வார். அப்துல் கலாமை அழைத்து விழா நடத்தலாமா என்றாலும் சரியென்பார். விஸ்வநாதன் ஆனந்தை அழைத்து சதுங்கப்போட்டி நடத்தலாம் என்றாலும் சரியென்பார். பிறகு அவர் பணியில் பிசியாகிவிடுவார். நாம்தான் அலையவேண்டியதிருக்கும். இன்று அவருக்கு மிகவும் ஓய்வு தேவைப்படுகிற நிலை. ஊட்டிக்குத் தனியாகத்தான் போக வேண்டியதாயிற்று. இளவேனிலை அழைக்கலாம் ஆனால் அவராவது இங்கு இருந்தால்தான் பாதி வேலையாவது நடக்கும். நேற்றிரவு எத்தனை மணிக்கு பணியிலிருந்து வீடு திரும்பினார். காலையில் கூட வேலைகள் இருக்கும். யாழி காலையில் நேரமே அரங்கிற்கு வந்திடுவதாகச் சொன்னார்.

       

      இதற்கு முன்பாக ஒரு வாரத்திற்கு முன்பே அதாவது சென்ற ஞாயிறன்றுதான் விழா என்று நினைத்து மண்டபத்திற்கு வருவதற்கு வழிகேட்டேன் டிட்டோவிடம். உன் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி. விழா அடுத்த வாரம் என்று பால் வார்த்தார். அப்பாடா என்றிருந்தது. காரணம் அன்றைய தினம் களம் அமைப்பு இலக்கியச் சந்திப்பில் ஜெயமோகன் நாவலான பின்தொடரும் நிழலின் குரல் குறித்து நான் பேசுவதாக இருந்தது. இந்த நாவலில்  வருகிற அருணாசலம், வீரபத்திரப் பிள்ளை கதபாத்திரங்களுடன் கடிகாரக்கார ராமசாமி இயைந்து வருவதை யோசித்துக் கொண்டே உறங்கிப் போகிறேன்.

          

      கனவுகளில் வில்லாளனின் களப்பதிவுகள் நினைவுக்கு வருகிறது. அவனின் கிரிக்கெட் ஆட்டம். சதுரங்கத்திலும் கேரம் போர்டிலும் பெரும்புலி அவன். அவனை வெகு எளிதாக யாரும் வெல்லமுடியாது. கார்களில், பைக்கில், தங்கள் பணபலத்தைக் காட்டுகிற அளவில் பல ஆட்டக்காரர்களை வெகு இயல்பாகத் தோற்கடித்திருக்கிறான். அவனுக்கு அவன் தந்தை தந்த கம்யுனிச வறுமை இந்திய  அளவில் புகழ்பெறவேண்டிய ஆட்டக்காரன் ஒரு சாதாரண பனியன் கம்பெனியில் பணிபுரிகிறான். வாசிப்பு அனுபவமோ இலக்கிய அனுபவமோ இல்லையென்றாலும் நுட்பமான ஆட்டக்காரன், அளவான பேச்சு, சுறுசுறுப்பான செயல்பாடு. தளர்வடையாத வேகம். எனக்கு பல விசயங்களில் ஆதர்சமாக இருந்திருக்கிறான். அவன் பசியைத்தாங்கிக் கொண்டதை ஆச்சர்யமாகப் பார்த்திருக்கிறேன்.

         

       ஏற்கெனவே சொன்னபடி வாகராயம்பாளையம் வந்து அங்கிருந்த கருப்பராயன் கோவிலுக்குப் போனேன். யாருமில்லை. பிரமாண்டமான குதிரைகளை அதன் பொலிவான வண்ணங்களைப்பார்த்துக் கொண்டிருக்கப் பிறகு விசாரித்தால் அந்தக் கோயிலில் விழா இல்லை. வில்லாளனுக்குப் போன் செய்தேன். தான் சவரம் செய்து கொண்டிருக்கிறேன். பிரதான சாலைக்கு வாருங்கள் என்றான். வண்டியைத்திருப்பிக் கொண்டு கருப்பராயனைப் பார்த்தேன். அவர் கறிச் சோறு சுவைத்துக் கொண்டிருக்கிறார்.“யோவ் போய்யா நீயில்லயாமா..“ பிரதானசாலைக்கு வந்தபோது வில்லாளன் காத்துக் கொண்டிருந்தான்.ஸ்பௌண்டர் வண்டியில். ஆச்சர்யமாக இருந்தது. நீ பைக் ஓட்டுகிறாயா..நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்..வில்லாளன் முன் செல்ல நான் பின்தொடர்ந்தேன். சமீபத்திய குளிர் மழைக்கும் இளவெயிலுக்கும் அன்னூர் சாலையின் இருபுறங்களிலும் பச்சயம் வீசுகிறது. அழகான தார்சாலை.லாரிகள் போகாத சாலைகள் மிகமிக அழகாகவே இருக்கும். சில இடங்கள் மேடாகவும் வளவுகளாகவும் ஏதோ ஆஸ்திரேலிய வனத்திற்குள் போவது போன்றிருக்கிறது. கச்சிபாளையம்.சுண்டமேடு தாண்டி ஒரு வளைவில் பிரிந்து சாலையில் தனித்து எங்களிருவரும் வண்டிகள் பறக்கிறது.

    

         வில்லாளன் பைக் ரேசில் பறப்பது போன்று பறந்தான். அவன் காலையிலிருந்து இப்படியாக ஒவ்வொருவரையும் பிரதான சாலைக்கு வண்டியில் வந்து அழைத்துப் போவதாகச் சொன்னான். மண்டபம் வந்தது. அந்தக் காட்டுப்பகுதியில் அவ்வளவு பெரியதான மண்டபத்தை எதிர்பார்க்க வில்லை நான். திட்டமிடப்பட்டு ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் சுகாதாரத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. ஆங்காங்கு கோயில்கள். சிற்சில நேர்த்திக்கடன் உருவாரங்கள். பிரமாண்டமான குதிரைகள். என்னுடைய இந்த நாற்பது மைல் பயணத்தில் இருநூறு குதிரைகள் வரைக்கும் பார்த்திருப்பேன். ஆனால் உயிருடன் ஒரு குதிரையைக் கூட என்னால் பார்க்க முடியாத விசித்திரம் மனதை நோகடித்தது. ஒரு வேளை தோப்புகளுக்குள் குதிரைகள் இருக்கலாம். கலைநயமிக்க குதிரைகளை கொங்குப் பகுதிகளில் சின்னங்களாக வைத்திருப்பது சிந்தனையை எங்கோ கொண்டுசெல்கிறது.

       

      கருப்பராயன் கோயில் மண்டபத்தை ஒட்டி வீற்றிருக்கிறது. மிக அழகான தெய்வீக களையுடன் மருத மரத்தின் அடியில் இருக்கிறது. பராமரிக்கவர்களையும் நாம் சேர்த்து வணங்கலாம். மரத்தில் சிறு ஊஞ்சல் பெட்டிகள்.நேர்த்திக்கடன் உருவாரங்கள். பாதஅடிகள். நாய்,தவழும்பிள்ளைகள் பாம்பு உருவாரங்கள். எனக்கும் குலதெய்வம் கருப்பராயன் தான். ஊஞ்சல் ஆட்டி கன்னிமார்கள் சாமிகளை வணங்கினேன். வில்லாளன் சகோதரிகள் சின்னம்மை பெரியம்மை அத்தைமார்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொங்கியது. நல்ல திசையில் சூலம் உள்ள திசையில் பொங்கி வழிந்தமை நல்ல சகுணம் என்று வாழ்த்துகிறார்கள். மதியம் வெட்டப்படும் இரண்டு வெள்ளாடுகள் சிறுவர் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. நான் வில்லாளனை எங்கே உன் வாரிசுகள் என்றேன். நான் முதல் முதலாகப் பார்க்கிறேன். ஏன் தவறவிட்டேன். நினைவுக்கு வரவில்லை. பெயர் சொல்லி அழைத்ததும் குழந்தைகள் ஓடிவருகிறது. பெண் குழந்தை மூன்று வயது. தனுஸ்ரீ. நவநாகரீக உடையில் நேர்த்தியான ஒப்பனையில் மிளர்கிறது குழந்தை. அடுத்து பையன். அஞ்சலி படத்தில் வருகிற பேபியைப் போன்று நீன்ட கேசம் புரள துர்கா எடுத்துவந்து காட்டுகிறார்.

         

        குழந்தைகளுக்குக் கைகொடுத்தேன். என்ன படிக்கிறாய் என்றபோது யுகேஜி என்றது. நல்லாப் படிக்கணும் என்றேன். பிறகு விளையாட்டில் கவனம் வந்து ஓடினார்கள். வில்லாளன் டிட்டோவிற்குப் போன் செய்து நான் வந்திருப்பதால் உடனே வா என்றான். மண்டபம், உணவுப் பணிகள், உறவினர்கள் வருகை. விழா ஏற்பாடுகள் என்ற உத்தரவுகள் வருகிறது. நான் தனியே அழைத்து இலக்கியச் சந்திப்பின் நிலையைச் சொல்லிவிட்டு கிளம்புகிறேன் என்றேன். இருங்க அண்ணன் டிட்டோ வராப்பல பார்த்துட்டுப் போங்க...இல்லை நான் போன்ல பேசிக்கறன்.. பார்த்தா விடமாட்டாப்பல..

       

       வண்டியைக் கிளப்பினேன். பின்னால் கருப்பராயனும் இருநூறு குதிரைகளும் என் அருள் பார்க்காமல் போகிறாயா என்றவாறு துரத்துவது போலிருக்கிறது. ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்குக் கடந்து போவதற்குள் எத்தனை ஆண்டுகள் தீர்ந்து விடுகிறது. இருபுறங்களிலும் காலை எட்டரை மணி வெயிலின் மெல்லக் கிள்ளுவது போன்ற சூடு. கிராம மக்கள் சாலைகளின் ஓரங்களில் வேடிக்கை பார்க்கிறார்கள். என் வண்டியின் தாறுமாறான வேகத்தை. தென்னம்பாளையம் வந்து அவிநாசி பைபாஸ் சாலையில் ஏறிய வண்டி காட்டுத்தனமாக பறக்கிறது. நான் அத்தனை வேகமாக ஓட்டுபவனில்லை. நீலாம்புர் வந்தபோது யோசனை. யாழியும் இளவேனிலும் அரங்கத்தில் இருவராக சிரமப்படுவார்கள். சீக்கரம் போனால் கொஞ்ச நஞ்சப்பணிகளை செய்யலாம்.  போன் செய்தேன். அவர் தான் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பிடுவேன் என்றார். பசியிலும் வண்டியில் வேகமாக வந்ததிலும் கிரக்கம் வருகிறது. சற்று ஆசுவாசப்படுத்தினேன். அவரிடம் கேட்காமல் என்ன இன்னும் நீங்கள் கிளம்பவில்லையா.. அப்படியென்றால் நான் நீலம்புர் வந்துவிட்டேன். ஒன்றாகவே போகலாம். என்றேன். வண்டியை உதைத்தேன்.

           

        புகழ்பெற்ற சாலைவிபத்துகளுக்குப் பெயர் போன நீலாம்புர்-மதுக்கரை பைபாசில் முன்னை விடவேகத்தில் வண்டியைக் கிளப்பினேன். புதுக்கவிதை படத்தில் ரஜினியின் பைக் ஓட்டுவதைப் போன்று வளவில் வெறும் கைகளையே ஹாண்டில் பாராக்கி உடலையே வண்டியாக்கி ஓட்டிப்பார்த்த நான் வண்டியெல்லாம் ஓட்டுவேன் என்று எதிர்பாக்கவில்லை. என்னைவிடவும் வில்லாளன் நேர்த்தியாக ஓட்டினான்.  அந்தக்காலத்தில் சோத்துக்கே சிங்கி அடித்த காலம். அட்லஸ், டி.ஜ.ஹீரோ சைக்கிள்களே கனவுதான். செத்தா இன்னக்கி நல்ல நாள்தான். சேலம் தமிழ்நாடன் போன்ற மகத்தான ஆளுமைகளே போய்விட்டார்கள் எதிர்பாராத விதமாக நாம் என்ன செய்துவிடப் போகிறோம். எல்லாம் போய்ச் சேகரிக்க வேண்டும்.

      “இப்புடுச் சூடு“ வண்டி நாய்ப்பற பறந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்தேன். வண்டி சைலன்சர் என் மனசு போல்  கொதிக்கிறது. இளவேனிலுக்குப் போன் செய்தேன். மீண்டும் ஒரு பத்துநிமிடம் என்றார். சின்னவன் பேனர்கள் எடுத்து அடுக்குவதற்கு உதவினான். காமிரா,பேனர், மேசைவிரிப்பு, மினிட் நோட், கத்தி, பிளேடு, வையர், பணம், புத்தகங்கள் அடுத்த அமர்வில் பேவ்வேண்டிய புதியமாதவி அவர்களின் புத்தகங்கள் இப்படியாக சேகரிப்புகள். வில்லாளன் கூட மண்டபத்திற்கு இத்தனைப் பொருட்கள் சேகரிக்கிறானா தெரியவில்லை.

        

     என் வண்டிக்கு ஒய்வளித்தேன். இளவேனிலுடன் ஒரே வண்டியில் போய்விடலாம். கியரை மாற்றியதில் கால்களும் தோள் சப்பைகளும் வலிக்கிறது. விஜி சுவராசியமாக அலைபேசியில் பதினைந்து நிமிடமாகப் பேசிக் கொண்டு உப்புமா கிளறினாள். உப்புமா இன்னும் வேக பத்து நாள் ஆகும் போலிருக்கிறது. வெயில் சுட்டது. மூட்டைகளை எடுத்துக் கொள்ள இளவேனில் வண்டி வர சரியாக இருந்தது. வண்டி கிளம்பி கேட் போடாத நிலையில் வேகமாகப் பறக்கிறது. சிங்காநல்லூரில் யாழி காத்திருக்கிறார் என்றார். சூப்பரப்பு..பிறகு நாங்கள் மூவரும் வரதராஜபுரம் மூலையில் காமிராவை வாங்கிக்கொண்டு ரேஸ்கோர்ஸ் வழியாக அரங்கம் வந்தபோது பத்துமணியாகியிருந்தது. அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் கிராபிக்ஸ் போன்று அரங்கம் பொலிவுறத் துவங்கியது. நான் உடனடியாகத் தேநீர் சாப்பிட்டாக வேண்டும். நான் வேறு ம.நடராசன் அவர்களின் நூல் குறித்துப் பேசுகிறேன். இந்த நேரத்தில் நான் நூறு மைல் பயணம் வேறு செய்திருக்கிறேன். தலை சுற்றுகிறது. என்றேன். தேநீரும் பன்னும் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் முகங்கள் தெளிவாகத் தெரியத்துவங்கியது. இளவேனில் அவருடைய சிரமங்களைச் சொன்னார். யாழிக்கும் உள்ள பணிகள் மருத்துவமனை, அலுவல் என்பதாக இருந்தது. நிகழ்ச்சி நிரல்களை ஒத்திகை பார்த்துக் கொண்டோம்.

 

             அரங்கத்தில் பங்கேற்பாளர்கள் மற்றும் வருகையாளர் சற்றுக் குறைவாகவே இருந்தமை கொஞ்சம் சங்கடம்தான். இருந்தாலும் நேரம் ஆக ஆக வருகை அதிகமானது. சுப்ரபாரதி மணியன் நிகழ்வின் சாரத்தினைப் பற்றிய குறிப்புகள் தருகிறார். மின்சாரம் இல்லை. அருகில் மைதானத்தில் விளையாட்டு வீரர்களின் ஆவேசமான கூச்சலும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. வரவேற்புரையை யாழி வாசித்தார். முதல் நிகழ்வாக நாவல் அனுபவம் தலைப்பில் “நந்தியா வட்டம்“ நாவல் எழுதிய கொங்கு வட்டாரப் படைப்பாளியும் மூத்த ஆளுமையுமான திரு.பழமன் உரையாற்றினார்.

 

         எங்கள் பகுதியானது அன்னூர் பகுதி கோவை மேற்கு மாவட்டத்தைச் சார்ந்த பகுதி. விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இன்று யுரியா, உரங்கள் விலையேற்றத்தைத் தொடர்ந்து விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் விவசாயம் கடுமையான நெருக்கடியைக் கொண்டிருக்கிறது. பால் விலை உள்பட எதுவும் கட்டுப்படியாகாத சூழ்நிலை. அரசின் பல்வேறு சலுகைகள் என்று அறிவித்தாலும் எங்களுக்கு எதுவும் வநது சேர்வதில்லை. விவசாயிகளுக்கு நேரடியாக்கிடைக்கிற சலுகை இலவச மின்சாரம்தான். அதுவும் எப்பொழுது துண்டாகும் எனத்தெரியவில்லை. கோவையில் நடை பெற்ற புகழ்பெற்ற “வண்டிப் போராட்டம்தான் என்னுடைய நாவலின் மையம். இந்தப் போராட்டம்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்றுத்தந்தது.

இந்தப் போராட்டத்திற்காக அளித்த உயிர்ப்பலி,சிறைவாசம்,வழக்குகள் என்று பட்ட சிரமங்களை எடுத்துரைத்தார். அவருடைய உரையில் இலக்கியத்தின் பச்சயம் உணர முடிந்தது. நாவல் எழுதப்படுகிற பொழுது நிலமும் களமும் முக்கியமான கதாபாத்திரம்தான் என்றார். தனது எழுத்தில் இப்படியான உணர்வுகளையே எழுத நினைக்கிறேன். என்றார்.

 

        அதனையடுத்து நாவலாசிரியர் ம.நடராசன் புதிய சிறுகதைத் தொகுப்பான “அப்பத்தாளும் ஒரு கல்யாணமும்குறித்து நான் பேசினேன். இந்த வாய்ப்பு அமைந்தமை ஆச்சர்யமானது. களம் சந்திப்பில் சந்தித்து நிகழ்வுகள் குறித்துப் பேசிய பிறகு அவரை நாங்கள் நாவல் அனுபவம் குறித்து நீங்கள் பேசி வேண்டும் என்ற போது அவர் இலக்கியச் சந்திப்பில் பேசியதை நினைவு கூர்ந்தார். அப்படியானால் நெடுநாள் காலதாமதாகித் தள்ளிப் போய்க்கொண்டிருந்த தங்கள் சிறுகதை நூல் பற்றிப் பேசலாமா சார் என்றோம். அவரும் அனுமதி தந்தார். மகிழ்ச்சி. யார் பேசுவது. ஒரு வார கால அவகாசத்தில் யாரிடம் தந்தாலும் பேசிட சரியாக வருமா என்றபோது பாருங்கள் அப்படியில்லையென்றால் நீங்களே பேசிடுங்கள் என்றார்.

 

      பதினான்கு சிறுகதைகள் அடங்கியது.நியு சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள தொகுப்பில் உள்ள முக்கியமான கதைகள் பற்றிப் பேசினேன். இந்த நூலுக்கு நெருஞ்சி இலக்கிய முற்றம் பா.மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் பெரியவர் ம.ரா.போ குருசாமி, முன்னுரை எழுதியிருந்தார்கள். விரதல், அப்பத்தாளும் ஒரு கல்யாணமும், வெண்டைக்காய் வினை ஆன கதை, உயிர் இன்பம், போன்ற கதைகள் சிறப்பான அம்சங்கள் கொண்டது. இந்தக் கதைகள் யாவும் கொங்கு வேளாளர் சமூகமான கவுண்டர் இனமக்களின் சுக துக்கங்களைப் பற்றிப் பேசுகிறது. அவர்களின் விவசாய முறை, கால் நடைகளின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு. நிலம் சார்நத பிரச்சனைகளை,வழக்குகள்,சிறைவாசம் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பேசுகிறது. கொங்கு மொழியின் வட்டார வழக்கில் அவர் எழுதியதோடு அதற்குரிய சொல்லகராதியையும் அவர் பின்னிணைப்பாகத் தந்து மற்ற மாவட்டத்து மக்களும் அறிந்து கொள்கிற வாய்ப்பைத்தந்திருக்கிறார்.

         கல்வி, வேலைவாய்ப்பு, நவ நாகரீக சமூக வளர்ச்சியின் காரணமாக அந்த சமூக மக்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளையும் எழுதியிருக்கிறார். குறிப்பாகத் திருமணம், சொத்து பற்றிய தகராறுகள், குடும்பச் சிதைவுகள், தனிக்குடித்தனம், என்று இலக்கியப்பதிவுகளில் இடம் பெறாத பல காட்சிகளை அவர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக வயோதிக காலங்களில் அவர்களுக்கு நேரும் உறவுச் சிக்கல்கள். தனிமை குறித்து சிறுகதைகளில் பேசுகிறார்.என்பதாக உரையில் குறிப்பிட்டேன்.

     

     இந்தச் சந்திப்பிலிருந்து கவிதை வாசித்தல் நிகழ்வு சேர்த்தோம். பங்கேற்பாளர்கள் நண்பர்கள் கவிதைகள் வாசிக்கப்பட்டால் நன்றாக இருக்கும். ஆர்வமுள்ள நண்பர்களுக்கு சமீபத்திய கவிதைகளின் தன்மை குறித்து அறிய வசதியாகவும் இருக்கும். கேட்டுக் கொண்டதின்படி கவிதை வாசிப்பு நடந்தது. தனது இரு கவிதைகளை முதல் கவிதை வாசித்தலில் வாசித்து சிறப்பாக்கினார். மயுரா ரத்தினசாமி. இரண்டு கவிதைகளும் நவீனத்துவ அமைப்பில் இருந்தது. நேற்றின் சாம்பல் கவிதை மிகவும் பங்கேற்பாளர்களை ஈர்த்த ஒன்று.

 

         ஏற்புரையாற்றிய ம.நடராசன் தாம் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த விதம் பற்றி சுவராசியமான உரையாடலுடன் துவக்கினார். பள்ளிப்பருவத்தில் தனது குடும்பத்தாரின் சிரமம். விவசாய இயக்கங்கள் மூலமாக நடந்த போராட்டங்கள், தன்னை மிகவும் பாதிக்கிறது.பிறகு கல்லூரிக்காலங்களில் பாடம் கற்பித்த தங்கவேலனார். ம.ரா.போ. குருசாமி, முல்லை ஆதவன் போன்ற ஆளுமைகள் இலக்கிய ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள். விவசாய இயக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைசென்ற அனுபவமுன்டு. வெறும் புத்தகப் பாடங்களிலிருந்து வேறுவகையான புதின வாசிப்புக்கு இந்த ஆசிரியர்கள் கொண்டு சென்றார்கள். ஜெயகாந்தனிலிருந்து அகிலன்,நா.பா, கல்கி, போன்ற படைப்பாளிகளின் படைப்புகளில் ஆர்வம் ஏற்பட்டது. தான் படித்த கல்லூரி ஆண்டுவிழாவில் என்னுடைய கதை முதலாக வருகிறது. அப்பொழுது வானம்பாடி இயக்கம் தன்னுடைய தீவிரமான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. நான் நித்திலன், முல்லை ஆதவன் போன்றோர் சிதம்பரம் பார்க்கில் சந்தித்து உரையாடுவோம்.அப்பொழுதுதான் மிக எளிமையான தோற்றத்துடன் இருந்த ஞானியைச் சந்தித்தேன். அவருடன் இருந்தவர் கொங்கு வட்டாரப் படைப்பாளி ஆர். சண்முகசுந்தரம். அவருடன்  ஏற்பட்ட உறவும் வாசிப்பும் எழுத தூண்டியது. பிறகு மார்க்சீய இலக்கிய ஈடுபாடுகள் தொடர்கிறது.

         அப்பொழுதுதான் ஏன் நம் மக்களின் வாழ்வையொட்டிய கதைகள் எழுதக் கூடாது என்று எழுதலானேன். என் கதைகள் தொடர்ந்து வெளிவர தாமரை, ஓம்சக்தி, ஜனசக்தி இதழ்களில் வெளியானது. எனது படைப்பிலக்கியம் சார்ந்து சில படைப்புகளை நான் எழுதியிப்பதாக உணர்கிறேன். என் காலத்தில் எழுத்துப் பயணத்தில் பயணித்த சூரியகாந்தன், சி.ஆர்.ரவீந்திரன், அக்னி புத்திரன், பழமன் போன்ற படைப்பாளர்களுடனான நட்பும் எனக்கு ஆதர்சமாகவே இருந்தவை என்பதையும் சொல்லவேண்டும்.

 

             அடுத்து ஸ்டாலின் எழுத்தாளர் குமரி எஸ்.நீலகண்டன் அவர்கள் குறித்து அறிமுக உரையாற்றினார். பேசும் போது கடந்து இருபத்தியைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். அவர் பௌதீகம் படித்திருந்தாலும் அவர் தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில் இலக்கியங்களைக் கற்று எழுதி வருகிறார். தொலைக்காட்சி நாடகங்கள்,கதைகள், மற்றும் நாவல்கள் என்று ஐந்து புதினங்களை எழுதியிருக்கிறார். என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் குறித்து அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இன்று பிரிண்ட் மீடியா மற்றும் ஊடிக மீடியா இரண்டிலும் அவருக்கு ஆழ்ந்த அனுபவம் உள்ளது.

 

          பொன் இளவேனில் ஒரு கவிதை வாசித்தார். குறுக்கும் நெடுக்குமான சம்பவ இழைகளை பொருத்தும் வடிவம் அவருடையது சிறப்பாக இருந்தது.

 

             நீலகண்டனின் நாவலான “ஆகஸ்ட் 15குறித்து கவிஞர் சக்தி செல்வி உரையாற்றினார். இந்திய சுதந்திரம் பெற்ற நாளன்று பிறந்த இரண்டு கதாபாத்திரங்களின் ஊடாக காந்தியத்தைப் பேசுகிற நாவலாக உள்ளது. காந்தியின் உதவியாளர் கல்யாண சுந்தரத்துடனான நேர்காணலும் அதே நாளில் பிறந்த சத்யா என்னும் பதிமூன்று வயது  சிறுமியான சத்யாவும் சாட்டில் உரையாடிக் கொள்வது போன்றும் பிற்பாடு அந்த அத்தியாயத்தின் முடிவில் பின்னூட்டம் பதிவது போன்றும் நாவலை வித்யாசமாக எழுதியிருக்கிறார். நாவல் சத்யா டாட் காமில் எழுதப்படுவது போன்றும் வலைப்புவில் எழுதப்படுகிற கட்டுரை போன்றும் எழுதியிருக்கிறார். காந்தி சுதந்திரமடையும் செய்தி அவருக்குத் தெரியாமல் இருந்தது என்றும் அப்பொழுது அவர் பாகிஸ்தான் பிரிவினை காரணமாக கவலையாக இருந்தார் என்பதும் உதவியாளர் மூலமாக நேர்காணலில் அறிந்தவற்றையும் சில அபுர்வமான செய்திகளை இணைத்திருக்கிறார். காந்தி வலியுறுத்திய அஹிம்சை, வறுமை ஒழிப்பு, சுதேசியியக்கம் பற்றிய தற்போதையை நிலையை சத்யா டாட் காம் வழியாகவும் கல்யாணசுந்தரமும் சிறுமி சத்யாவும் விவாதித்துக் கொள்வதாக நாவல் செல்கிறது என்றார். இந்திய பாகிஸ்தான் பிரிவினை, அதனையொட்டிய நாடெங்கிலும் நிகழ்ந்த மதக்கலவரங்கள் காந்தியை எப்படி பாதித்தது. அவர் மகாத்மா எப்படியானார் என்பதையும் நாவலில் விவரித்தமையை சக்தி செல்வி சிறப்பாக சுட்டிக்காட்டினார்.

            நீலகண்டன் ஏற்கெனவே இந்த நாவலின் பாகங்களை வலைப்புவில் எழுதிய போது பின்னூட்டங்களை நானும் எழுதியிருக்கிறேன். அதை அவர் நினைவில் வைத்திருக்கிறாரா எனக் கேட்டார். சத்யா டாக் காம் வழியாக இந்தக் காலப் பிரச்சனைகளும் காந்தியின் நினைவுகள் காந்தியின் உதவியாளரின் அனுபவங்கள் என்பதாக கோணங்களில் நகரும் நாவல் வாசிப்பதற்கும் சுவராசியமாக எழுதியிருக்கிறார்.

        மிக விரிவாகவும் நாவல் பயணிக்கும் தளம், உத்தி, எழுத்து வடிவம் இப்படியான சகலமான அம்சங்களையும் கவிஞர் சக்திசெல்வி குறிப்பிட்டுப் பேசினார்.

            அடுத்து ஏற்புரைக்கும் முன்பாக கவிஞர் நித்திலன் நிகழ்வின் முத்தாய்ப்பான விசயங்களைப் பாராட்டினார். கவிதைகளின் உள்ள தேக்கநிலையைக் குறிப்பிட்டார். மற்ற மாவட்டங்களில் உள்ள கவிதை நிலை போல் கோவையில் இல்லையென்ற போது தென்பாண்டியன், வே.மு.பொதிய வெற்பன்,குடியாத்தம் குமணன் விவாதித்தார்கள். வானம்பாடியின் தொடர்ச்சியில் நீண்டு செல்லவில்லை என்றார். தேவமகள் அறக்கட்டளை விருதுகளில் கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. அது போலவே வளரும் கவிஞர்களுக்கு விருது தந்து ஊக்கம் தந்தோம் என்றார். இலக்கியச் சந்திப்பின் நிகழ்வுகளில் கவிதைகளுக்கு குறிப்பாக சங்க காலக் கவிதைகளிலிருந்து தற்காலம் வரை விரிவான கவிதை ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்றார். நித்திலன் சில சந்திப்புகளில் சங்க கவிதை எளிய அறிமுகம் செய்து வந்தார்.  அது மேற்கொண்டு தொடரலாம் எனவும் தோன்றியது அவருடைய பேச்சு.. எழுபதுகளின் முதற்கொண்டு கோவையில் நிகழந்த கவிதையியக்கம் பற்றிய விரிவான நினைவுட்டலாக இருந்தது. அவருடைய பௌர்ணமி கவிதை நூல் எங்களுக்கு மிகுந்த பாதிப்பைத் தந்தவையாக இருந்த காலம் அது என்றார் ம.நடராசன்.

 

          வே.மு.பொதிய வெற்பன் தனது தமிழிசையால் அனைவரையும் கவர்ந்தார். இரண்டு பாடல்களை கணீர் குரலில் நாகூர் அனீபா பாடுவது போன்ற சாயல். காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயர் கொண்ட தமிழருவி மணியன் கூட இன்று மோடிக்கு ஆதரவாகப் பேசி வருவதை நினைவு கூர்ந்தார். பாடலின் சந்தமும் உணர்ச்சி பொங்க குடந்தை மு. சுந்தரேசனார், முத்துத் தாண்டவர் போன்ற தமிழிசை ஆளுமைகளை நினைவுப் படுத்தியது அவருடைய பாடல். சித்தர் மரபின் ஆழ்ந்த நாட்டத்தை தனது கொள்கையாகப் பாடி கவர்ந்தார். முதல் பாடலில் மோடியின் வளர்ச்சியையும் மத தீவிரத்தை பகடி செய்வதாகவும் அமைந்தது.

 

         சுப்ரபாரதி மணியன் தனது உரையில் ஆகஸ்ட் 15 நாவல் பற்றிய திறனாய்வை முன்வைத்தார். வே.மு.பொதிய வெற்பன் கூட குமரப்பாவும் பின்னை காந்தியமும் என சிறப்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இன்று நாடெங்கும் காந்திய சிந்தனை குறித்து படைப்புகள் வருகிறது. அது போலவே நாவல்களும் சிறுகதைகளும் வந்து கொண்டிருக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் டாக்குமெண்ட்ரி நாவல் எனும் டாக் நாவல் ஆகிறது. டாக் நாவல் மற்றும இது போன்று எண்களை முன்வைத்த நாவல்களின் பட்டியலை வாசித்தார். 1928 ஆம் ஆண்டில்தான் முதல் டாக் நாவல் வந்தது. பிறகு சமீபத்தில் 6728 என்றும் நாவல் வந்துள்ளது. 37 என்னும் பெயரில் நாவல் வந்துள்ளது. வரலாற்று சம்பவங்களை நாட்குறிப்புகளை வைத்து நாவல்கள் படைப்புகள் தமிழில் வெளிவந்திருக்கிறது. பிரபஞ்சன் அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகளை வைத்து வானம வசப்படும் எழுதினார். இந்த நாவலும ஒரு காந்திய சிந்தனையை முன்நிறுத்துகிற நாவல். சுதந்திரம் பெற்ற அன்று நாட்டின் நிலமை மிகவும் கவலைக்குரியதாக இருந்த்தும் அது போன்ற செய்தியை மக்கள் அறியாத வண்ணமே இருந்தார்கள் என்பது கல்யாண சுந்தரம் போன்றவர்கள் சொல்லும்போது நமக்கு அதிசயமாகவும் ஆச்சர்மாகவும் இருக்கிறது. தற்கால இணைய செயல்பாடுகளையும் காந்திய சிந்தனையும் இணைத்து ஒரு நாவலை உருவாக்கியிருப்பதற்காக நாம் அவரைப் பாராட்டலாம்.

        இப்படித்தான் பொன்னீலனின் நாவல் குறித்து நான் டாக் நாவல் என்று சொன்னபோது கோபித்துக் கொண்டார். இப்படியான நாவல் வடிவத்திலும் நாவல்கள் வரவேண்டும். சக்தி செல்வி மிகச்சிறப்பாக திறனாய்வு செய்திருக்கிறார்.

 

             ஏற்புரையில் குமரி எஸ் நீலகண்டன் தனக்கே உரிய கன்யாகுமரி தமிழில் அழகுறப் பேசினார். தனது பால்ய காலத்தில் இலக்கிய ஆளுமைகளுடனான நட்பு ஏற்பட்டது. பிறகு மாணவப் பருவத்திலிருந்தே வானொலி நிகழ்ச்சிகளில் ஆர்வம். கல்லூரிக்காலங்களில் ஜெயகாந்தன் படைப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு தன்னை எழுத்தாளராக மாற்றியது. தான் எழுதிய கதையொன்று வலம்புரிஜான் அவர்களுக்கு பிடித்துப் போக அவர் தன் விரல்களுக்கு முத்தமிட்டு வாழ்த்தியது எனக்கு மறக்க முடியாது பாராட்டு என்றார். பிறகு கன்யாகுமரி என்பதால் சுந்தர ராமசாமி அவர்களுடனான நட்பும் பாராட்டும் தன் எழுத்திற்கு ஊக்கமளித்தது. நான் படித்தவை பௌதீகமாக இருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தில் தொடர்ந்து வாசிக்கவும் எழுத ஆரம்பித்தேன். வானொலியில் பணியாற்றியதால் நான் நிறைய நேர்காணல்களை செய்தேன். அப்படியாக ஒரு பார்வையற்ற சிறுமியை நேர்காணல் செய்த சம்பவம் அந்தச் சிறுமியும் பிறந்த நாள்தான் ஆகஸ்ட் 15. என்னை மேலும் எழுத தூண்டியது என்றார்.

       காந்தியின் உதவியாளராக இருந்த கல்யாண சுந்தரம் அவர்களை நேர்காணல் செய்த போதுதான் இந்த நாவலை எழுத வைத்த சம்பவம். ஆகஸ்ட் பதினைந்து அன்றுதான் அவரும் பிறந்திருக்கிறார். இந்த அபுர்வமான ஒற்றுமை எனக்கு ஆச்சர்யம் தர நான் இந்த அடிப்படையில் நாவலை எழுத ஆரம்பித்தேன். நாவலின் தன்மையில் கல்யாணசுந்தரமும் சத்யா என்னும் சிறுமியும் வலைத்தளத்தின் வழியாக உரையாடிக் கொள்வதுதான் சாரம். இதற்குப் பின்னூட்டங்களையும் நானே எழுதினேன். வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்தபோதே நல்ல எதிர்வினை கிடைத்தது. பிறகு அதை நூலாக்கமும் செய்தேன்.

         

           அடுத்து சி.ஆர்.இரவீந்திரன் நாவலான “ஓடைப்புல்குறித்து சு.வேணுகோபால் பேசினார். தனக்கு மிகவும் நெருக்கடியான சூழலில் பேச வந்திருக்கிறேன். நூல்கள் பதிப்புப்பணி மற்றும் சில வேலைகள். ஆனால் இந்தநாவல் குறித்தும் பேசியாக வேண்டும் என்று வந்திருக்கிறேன். இந்த நாவலை நான் மதுரையில் பேசினேன். விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். திடிரென்று நண்பர்கள் இந்த நாவலைக் கையில் தந்து இன்று மாலை நீங்கள் பேச வேண்டும் என்றார்கள். இடையில் நான்கு மணிநேரம் கைவசம் இருக்கிறது. அந்த அறையில் தள்ளி அடைத்துவிட்டார்கள். வாசித்து விட்டுப் பேசினேன். பிறகு அந்த நாவல் அன்றே நண்பர்களுக்குத் தேவையென்பதால் அளித்துவிட்டேன். அன்று வாசித்தளவில் நினைவில் உள்ளதை நான் பேசுகிறேன். சு.வேணுகோபால் எப்பொழுதும் உணர்வுப் புர்வமாகப் பேசுகிறவர்.

         

       பேச்சில் எழுத்து காலத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். வாணம்பாடியைப் போன்ற காலத்திற்கு முன்பில் மூன்று ஜாம்பவான்கள் இருந்தார்கள். ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. சி.சு. செல்லப்பா. புதுமைப்பித்தன் எழுதிய கதையை அப்படி விதந்து போற்றுகிறார்கள். இருபத்தியெட்டு வயசில் என்னமாய் எழுதுகிறான் இந்தப்பையன் என்று பாராட்டுகிறார்கள். நான் சமீபத்தில் வாசித்தபோது சி.சு.செல்லப்பா எழுதுகிறார். எழுத்தாளர்கள் கற்போடு எழுதவேண்டும் என்கிறார் நான திடுக்கிட்டேன். பிறகு யோசித்தபோதுதான் புதுமைப்பித்தனின் எழுத்து நினைவுக்கு வந்தது. அப்படி கற்போடு எழுதிய எழுத்துதான் சி.ஆர் இரவீந்திரனின் ஓடைப்புல் நாவல். முதல் நான்கு அத்தியாயங்களில் அவருடைய இயற்கை வர்னணைகள் அற்புதமாக இருக்கிறது. தான் வாழ்ந்த நிலங்கள் குறித்தும் அதனுடனான உறவு குறித்தும் அற்புதமாக எழுதியிருக்கிறார். நாம் இப்பொழுது தாஸ்தாவெஸ்கி,தால்ஸ்தாய் குறித்தும் ரஷ்ய இலக்கியங்களையும் வாசிக்கிறோம். துல்லியமான விவரங்கள் இருக்கும். நமக்கு மேப் அதாவது வரைபடங்கள் தேவையேயில்லை. படைப்பாளி அத்துணை விதமான காட்சிவிவரிப்புகளின் மூலமாக நமக்கு உணர்த்திவிடுகிற எழுத்து அம்சம் இருக்கும் அப்படியான காட்சி சித்தரிப்புகள் உள்ளது அவர் நாவலில். பிறகு நாவல் மிக வேகமாக குடும்ப நிகழவுகளில் ஆழந்து பயணித்து விடுகிறது.

       

         ஓடைப்புல் நாவல் மட்டுமல்ல இன்று நான் வந்து பேச முற்பட்டது எதற்காகவென்றால் மேலும் ஒரு நாவலை அவர் எழுதவேண்டும் எழுத வைக்கவேண்டும் என்பதற்காகத்தான். நாவல் வடிவங்களுக்குள் ஒரு சாதாரணமான விசயம் எனக்குப் பிரமாண்டமானதாகத் தோன்றும்.படைப்பாளி பிரமாண்டமாகத்தான் கருதிக் கொண்டிருப்பது எனக்குச் சாதாரணமாகத் தோன்றும். நமக்குச்  சின்னச்சின்ன விசயங்கள் மிகவும் முக்கியம். அது போலவே வாழ்வில் நமக்கு எளிமையான விசயங்கள் அற்புதமான அனுபவம் தருபவை. என்றார்.

      

        நிகழ்வுக்கு வருகை தந்த அரங்கு அளித்து உதவிய சே.ப நரசிம்மலு நாயுடு பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார் அண்ணன் கவிஞர் அவைநாயகன். இன்று பேசிய விவாதிக்கப்பட்டவைகள் மிகவும் பயணுள்ளதாக அமைந்தது. அன்றைய வானொலியின் அறிவிப்பாளர்கள் பற்றிய ஞாபகங்களை நினைவு கூர்ந்தார். கிரிக்கெட் கமெண்ட்ரி மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் எல்லாம் நமக்கு மனதை விட்டு அகலாதவர்கள் அந்த வானொலி குடும்பத்திலிருந்து படைப்பிலக்கியத்திற்கு வந்திருக்கிற நண்பர்களுக்கு நன்றி..மிக கம்பீரமான குரலில் பாடி நமக்கு ஆச்சர்மளித்த வே,மு.பொதி வெற்பன்.மற்றும் கவிதை வாசித்த மயுரா ரத்தினசாமி, உரையாற்றிய கவிஞர்கள் சக்தி செல்வி, பழமன், ம.நடராசன், சி.ஆர்.இரவீந்திரன் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அண்ணன் அவைநாயகன் இன்று மாலையே சிற்பி அவர்களின் சமீபத்திய நூலான “மகஜெ“ குறித்த அறிமுக உரையை ஓசை சூழல் சந்திப்பில்  உரையாற்ற வேண்டிய பணியிருந்தாலும் நிகழ்விற்கு வந்திருந்து நன்றி உரையாற்றினார்.          ஏறக்குறைய நான்கு மணி நேரம் நடைபெற்ற அமர்வில் நாவல், கவிதை, வாணம்பாடி, எழுத்து, இந்திய சுதந்திர காலம், கொங்கு வட்டார இலக்கியம் என்று பல நினைவுகளை இந்த சந்திப்பு பகிர்ந்து கொண்டது.

 

         பங்கு கொண்டவர்களில் நா.கலைமதி ராஜன், எச்.நாசிர் அலி, எம்.செல்வராஜ், மகேந்திரன், அழகுதாசன், ஜி.சௌந்திர்ராஜன், வெ.தமிழ்மாணிக்கம், ப.தி.சுப்பையன், ஆர்.ஜோதிமீனா, தென்பாண்டியன். மருத்துவர் கோவி, குடியாத்தம் குமணன், கவிஞர் அன்பு சிவா, எம்.கே.தியாகராஜன், குரு. பழனிச்சாமி, சோ.இரவீந்திரன், யோகா செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

 

             கடந்த முன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒரு மாதம் கூட இடைவெளியில்லாமல் நடந்தேறியிருக்கிறது. இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகள் இதில் ஐந்து முழுநாள் நிகழ்வுகள் வேறு. இந்த நினைவுகளை அசைபோட்டபடியே நானும் இளவேனிலும் வண்டியில் வருகிறோம். அடுத்த சந்திப்பில் அல்லது 2014 ல் மேலும் சில கருத்தரங்குகளில் விடுபட்ட சில பணிகள் செய்யவேண்டும் என நினைத்திருக்கிறோம். கோவை தனக்கேகுரிய நம்பிக்கையையும் ஆதரவுகளையும் படைப்பாளர்கள் பங்கேற்பாளர்கள் மூலமாக அளித்துவருகிறதை உள்ளன்போடு நினைத்துக் கொள்கிறோம். இருந்தாலும் நீலாம்புர்-மதுக்கரை புறவழிச்சாலைகள் போன்று செய்ய வேண்டிய பணிகள் நீண்டு பறந்து விரிந்து கொண்டுதான் இருக்கிறது.

 

பார்க்கலாம்..சந்திக்கலாம் நண்பர்களே..

அடுத்த முப்பத்தி ஏழாம் சந்திப்பில்

 

முயற்சி திருவினையாக்கும்..வில்லாளன் துணையிருப்பான்...

 

                

 

திங்கள், 11 நவம்பர், 2013


கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் சந்திப்பு- சில நினைவலைகள்

கோவையில் பிரதிமாதம் முதல் செவ்வாய் அன்று ஊஞ்சல் இலக்கிய அமர்வு கூடும். இரவு ஏழுமணிக்குத் துவங்கும் நிகழ்வில் முக்கியமாக கவிதை வாசித்தல், வாசிக்கப்பட்டக் கவிதைகளின் மீது உரையாடல் நடக்கும். பிறகு நூல் அறிமுகம். நூலாசிரியரின் ஏற்புரை, விவாதம் என நீளும் உரையாடல் எட்டரை மணிக்கு முடியும். சென்ற செவ்வாய் அன்று நடைபெற்ற  அமர்வில் இளங்கவி, மீனாசிவம், இளங்கோவன், அகிலா, கவிதைகள் வாசித்தார்கள்.

       நூல் விமர்சனம் தரவேண்டிய நண்பர் வரமுடியாத சூழல். வாசித்த கவிதைகள் மீதான கலந்துரையாடல் சிறப்பாக நடந்தது. சிறந்த பேச்சாளரான அகிலாவின் பெண்ணியம் சார்ந்த கவிதையும் மீனாசிவம் வாசித்த இரு கவிதைகளும் முக்கியமானவை. இளங்கோவன் மரபுக் கவிதையை அவருக்கே உரிய அழகான தமிழ் உச்சரிப்புடன் வாசித்தார். அவர் கருத்துருவாக்க நிலையிலிருந்து அழகிய காட்சி சித்தரிப்புகளுக்குள் தனது கவிதையின் மொழியை மாற்றியிருந்தார். இளங்கவியின் கவிதை புதுக்கவிதையின் சொல் வகையில் இருந்தாலும் கருத்தும் சிறு வெளிச்சம் தருபவையாக உள்ளடக்கம் இருந்தவை. மீனாவின் குரல் கவிதை குறித்த விமர்சனத்தில் மரபின் மைந்தன் முத்தையா சங்க கவிதையின் சாயல் உள்ளதாக சொன்னார்.

        மூத்த தமிழறிஞர் அ.சா. ஞானசம்பந்தன் அவர்கள் அவருக்குப் பார்வை குறைந்திருந்தாலும் குரல்களை வைத்து உடனே அவர்களுடைய பெயரைச் சொல்லி அழைப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவரிடம் எப்பொழுதும் டிரான்சிஸ்டர் வைத்திருப்பார். செய்திகளின் மூலமாகத்தான் அனைத்தும் தெரிந்து கொள்வார். இப்பொழுது அலைபேசியின் செயல்பாடு வந்தபிறகு குரல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வந்துள்ளதை இந்தக் கவிதை நமக்கு உணர்த்துகிறது என்றார். குரல்கள் அதிகமாக ஒலிக்கத்துவங்கியருக்கிற காலம் இது என்றார்.

      இந்த சந்திப்பின் மூலமாக புதியதாக ஒரு நிகழ்வு அறிமுகம் செய்திருந்தோம். ஒர் அனுபவம்-ஒரு வாசிப்பு- ஒரு சந்திப்பு என்னும் வகைமையில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதில் தென்றல் ராஜேந்திரன் தான் வாசித்த ஜெயமோகன் எழுத்துரு சார்ந்த கட்டுரையின் மீது சில விமர்சனங்களை முன்வைத்தார்.

     கவிஞர் இளங்கவி பேசும் போது, மாணவர்கள் தங்கள் தமிழறிவு சார்ந்த செயல்பாடுகளின் மீது கொண்டவர்களுக்கு நாம் எதாவது ஒரு அமைப்பு அல்லது பயிலரங்கம் ஏற்பாடு செய்யவேண்டும் அதன் மூலம் தமிழிலக்கியத்தின் மீது பற்றுள்ள மாணவ மாணவிகள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் என்றார். இதற்கு பேராசிரியர்கள் கந்த சுப்பிரமணியம், து.இளங்கோவன் சில யோசனைகளை முன்வைத்தார்கள்.

          வாசிக்கப்பட்ட கவிதைகள் மீது உரையாடலில் தென்றல் ராஜேந்திரன், இளையநிலா ஜான்சுந்தர்,கந்த சுப்பிரமணியம், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வு நூல் விமர்சனத்திற்குச் சென்றபோது நண்பர் வரவில்லை. மௌனம் சூழ்ந்த இரவின் குளிர் இறுகத் துவங்கியது. அப்பொழுது நான் “ஒரு சிறுகதை சொல்லலாமா“ என்ற பொழுது ஊஞ்சல் அமர்வில் பங்கேற்ற நண்பர்கள் வரவேற்று கதை சொல்ல அனுமதியளித்தார்கள். நான் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கிற கதையின் சுருக்கத்தை அல்லது முழுமையான கதையைச் சொல்கிறேன்.

 “நேந்து கிடா“ கதையின் தலைப்பு.

ஊரில் ஒரு வளவு என்று சொல்லப்படும் இனக்குழு ஒன்று சேர வாழும் பகுதி. தங்கள் குல தெய்வத்திற்கு ஒரு ஆட்டுக்கிடாவை நேர்ந்து விடுகிறார்கள். அந்தக் கிடாவுக்குத் தோதாக மற்ற குலக்குடும்பம் மேலும் ஒரிரு கிடாய்களை நேர்ந்து விட கிடாக்குட்டிகள் அந்த வளவின் சிறுவர் சிறுமிகளுடன் ஒன்றாக வளர்கிறது. குழு தெய்வத்தின் நோன்பு சமயம் யாராவது ஒரு குலத்தின் பெரியவர் காலமாகிவிட அந்த நோன்புப் பண்டிகை நின்று போய் கிடாவெட்டு தடங்கலாகிறது. இப்படியாகவே மூன்று வருடங்கள் தங்கள் குலதெய்வத்திற்கு நோன்பும் கொடையும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அந்தக் கிடாய்கள் நன்கு வளர்ந்து சிறுவர் சிறுமிகள் வாழ்வின் உடன்பிறந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. நேர்ந்த கிடாக்கள் இந்த வளவின் சிறுவர் சிறுமிகள் என்ன சொன்னாலும் கேட்கும். ஏவும் சில வேலைகளைச் செய்யும். நேராக நடக்கும். மரத்தில் ஏறி காய்கள் பறித்துப் போடும். தண்ணீர்க்குடங்கள் சுமக்கும். குதிரைகள் போல் நிற்கும். கிடாய்கள் சொன்னபடி சண்டைகள் போட்டுக்கொள்ளும்.

           ஒரு சூழலில் குலப் பெரியவர் இந்த ஆண்டு எந்தக் காரணம் முன்னிட்டும் நோன்பு கொடை விழாவைத் தள்ளிப்போடுவதில்லை. என்ற முடிவுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேளதாளம் வானவேடிக்கை ஆட்டம் பாட்டம் என்று ஊர் மெச்ச மற்ற குலங்கள் மெச்ச திருவிழா நடந்து முடிகிறது. அந்த நேந்த கிடாய்கள் வெட்டப்படுகிறது. திருவிழா நடக்காது நம் தோழர்களான கிடாய்கள் வெட்டப்படாது என்று நம்பிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளுக்கு இந்தச் சம்பவங்கள் பெரிய அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் சோகமயமாகிறார்கள். தங்கள் கிடாய்கள் உள்பட பல கிடாய்கள் வெட்டுப்பட்டிருப்பதும் ஆட்டின் வாயில் ஒரு கால் கவ்வக் கொடுத்து கண்கள் திறந்திருக்கிற நிலையில் தங்கள் தெய்வத்தைக்காண்பதாக பலிபீடத்தில் இருக்கிறது ஆட்டின் தலைகள். ரத்தம் தொட்டுக் குலப் பெண்கள் ஆண்கள் பொட்டிட்டுக் கொள்கிற போது அந்தச் சிறுவர் சிறுமிகள் பொட்டிடவில்லை.

             ஆடுகள் பெரும் மைதானத்தில் கூறு போட்டு குல மக்களுக்குக் கறி பகிர்ந்தளிக்கப்படுகிறது. பிறகு இரவு விழுகிறது. ஆங்காங்கு அடுப்புகள் பற்றவைக்கப்பட்டு வளவு எங்கும் புகைகளும் மசாலா அரைக்கிற மணமும் ஊரையே தூக்குகிறது. உறவுப் பெண்களின் பேச்சொலி, சாராயமருந்திய சில குடிகார ர்களின் சத்தம், ஆட்டம். ஆங்காங்கு ஒலிக்கிற தப்பட்டைகளின் ஒலி..கிடாய் வேக ஆரம்பிக்கிறது. வேகத் துவங்குகிறது. நேரம் போகிறது. போகிறது. கறி வேகவே இல்லை. கறிவேகாமல் நீரும் மசாலாத் துவையலும் சுண்டி சுண்டிப் போக மீண்டும் மக்கள் வேகவைப்பதற்காக பல பொருட்களை உள்ளே போடுகிறார்கள்.  செருப்புத் தோல் துண்டு. இரும்புத்துண்டு, சாராயம். வாழைப்பழத்தோல் போடுகிறார்கள். இருந்தும் கறிவேகவில்லை.

        வளவு மக்கள் கறிவேகாததால் ஏதே தெய்வக்குத்தம் என்னவோ என பயம் கொள்கிறார்கள். பசியால் துடிக்கிறார்கள். பண்டிகைக்கு அழைக்கப்பட்ட உறவினர்கள் பசியால் துடிக்கிறார்கள். மது அருந்தியவர்கள் உணவு கேட்டு சமைக்கும் பெண்களை திட்டுகிறார்கள்.

சிறுவர் சிறுமிகள் மகிழ்வு கொள்கிறார்கள். ஒருவழியாக இரவு நீண்டு பசி உயிரைக் கொல்வதால் ஆனவரைக்கும் வெந்த ஆட்டுக்கறியைச் சாப்பிடத் துவங்குகிறார்கள். இரண்டுநாள் பண்டிகை அலைச்சல். ஆடியாடிக் களைத்த களைப்பு. மக்கள் தூங்கிக் கழிக்கிறார்கள். வளவில் எங்கும் மக்கள் தூங்கி தங்கள் உடல் சோர்வைப் போக்குகிறார்கள்.

          மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு. சந்தனக் காப்பும் கட்டிய கங்கணமும் கழட்டப்பட்டு கிணற்றில் போடப்படும். அன்று தங்கள் மாமன்மார்களுக்கு மரியாதை செய்யும்நாள். மணமுடித்துக் கொள்கிற பந்தம் உள்ள குல மக்களுக்குச் சீர் செய்து பரிபாலனங்கள் செய்து அவர்கள் வயிறாற சோறு பொங்கும் சடங்கு. தங்கள் அழைப்பின் பேரில் வந்து கலந்து கொண்டு சீரும்சிறப்பும் செய்து  தங்களின் திருவிழாவில் பங்கு கொண்டு பெருமை சேர்த்த மாமன் மச்சான் முறையினருடன் மஞ்சள் நீராடி தங்கள் அன்பைத் தெரிவிக்கிற முறைமை சடங்கு.. பல்லாண்டுகளாகத் தொடர்கிற மனித உறவின் இனிய அம்சம்.

           வளவு மக்கள் மஞ்சள் நீராடிக் கொண்டு தங்கள் வளவு முழுக்க கோயிலுக்குப் போகிறார்கள். தங்கள் கோவில் திருவாபரணப் பொருட்களை சரியாகச் சேகரித்து தங்கள் குலப் பெரியவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இந்தப் பணிகள் நடைபெறுகிற சமயங்களில் கோவில் பீடத்திலிருந்த தங்கள் சாமிகள் பீடத்திலிருந்து எடுக்கப்பட்டு களவு போயிருப்பதை அறிகிறார்கள்.

அதிர்ச்சியடைகிறார்கள். தங்கள் சாமிகள் எங்கே போனது. என்று தேடுகிறார்கள். பலர் இது தெய்வக்குற்றம். நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம். அதுதான் சாமி கோபம் கொண்டு எப்படியோ வெளியேறிப் போய்விட்டது. அதனால்தான் என்னவோ கறியே வேகவில்லை என்பதாக வளவு பெரியவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் துயரம் கொள்கிறார்கள். மனம் வெதும்பி கவலையில் ஆழ்ந்தார்கள். அப்பொழுது சிறிய சிறிய காலடித்தடங்கள். பார்ப்பதற்கு சிறுவர் சிறுமிகளின் காலடிகள் போன்றே பதிந்திருக்க்கிறது. அது போகிற வழியாக களவு போனதை அறிகிறார்கள். அந்தக் காலடித்தடங்களைப் பின்பற்றிப் போகும் போது அந்தக் காலடிகள் கோவிலின் பிரமாண்டமான கிணற்றடிக்குச் செல்கிறது. சனம் ஆச்சர்யமும் பீதியும் கொண்டு உள் இறங்கி கவனிக்கச் சொல்கிறார்கள்.

          கிணற்றிற்குள் இறங்கியவர்கள் அதன் ஆழத்திலிருந்து பலபல சாமிசிலைகளை, நாய் உருவாரங்களை, பாம்பு உருவாரங்களை,  சின்னஞ்சிறிய காவல் தெய்வ கற்சிலைகளை எடுக்க எடுக்க அவை வந்து கொண்டேயிருக்கிறது.

            இந்தக்கதையைச் சொல்லி முடித்தபொழுது உணர்வில் மூழ்கியிருந்த அரங்கு அமைதிவிலகி பாராட்டும் வாழ்த்தும் பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைத்தது. கார்த்திகேயன் அவர்கள் பேசும் போது கறிவேகவைப்பதற்கு இப்பொழுது பப்பாளி போடப்படுகிறது என்றார். கி.ராஜநாராயணன் கதை ஒன்று இது போன்ற உணர்வு தருகிற கதையின் சம்பவங்களை ஞாபகப்படுத்தினார். ஜான் சுந்தர் பேசும் போது நிறைய சிலைகள் கிணற்றுக்குள் இருந்து எடுக்கப்படுகிறது. அது எப்படி என்றார். அந்த வளவு மக்களின் சிறார்கள் தங்கள் ஒவ்வொரு தலைமுறைகளிலிலும் யாராவது பால்ய வயது சிறுவர் சிறுமிகள் இந்த பலிகளில் நம்பிக்கையில்லாத சாமிகளுக்கான படையல் என்பதாக தங்கள் நேசத்திற்குரிய ஆடுகளைப் பலியிடுவதற்கான ஒரு சிறிய எதிர்ப்பை அவர்கள் காலங்காலமாக காட்டிக் கொண்டிருப்பதான குறியீடு என்றேன். கதையின் சம்பவங்கள் சிறப்பாக உள்ளதாகச் சொன்னார்கள்.

               மேற்சொன்ன கதையை திரு.முத்தையா திரு. வைரமுத்து அவர்களிடமும் அவருடைய நெருங்கிய நண்பர்களிடமும் கோவை பயணங்களின் பொழுது பகிர்ந்து கொண்டிருக்கிறார். என்னுடைய பிற நூல்களான “எஸ்பிபி குட்டி “நீர்மங்களின் மூன்றடுக்கு” “என்.எச். அவிநாசி திருச்சி சாலைச் சித்திரங்கள்பற்றியும் தெரிவித்து இருக்கிறார். கதையையும் எழுத்துக்களையும் அவர் பாராட்டியதாக திரு.முத்தையா என்னிடம் பேசினார். மகிழ்ச்சியாக இருந்தது. நாளை மதியம் அவருடனான ஒரு சந்திப்பு நிகழ வாய்ப்பிருக்கிறது. எதற்கும் நான் உங்களுக்குக் காலையில் அவருடைய நிகழ்ச்சிகள் விபரம் அறிந்ததும் தகவல் சொல்லி உறுதிப்படுத்துகிறேன். என்றார். நீங்கள் நாளை மதியம் கோவையில் அவருடனான சந்திப்பிற்கு தயாராக இருங்கள். மற்றும் உங்கள் நூல்களைக் கையில் வைத்திருங்கள் என்றார்.

        வீட்டில் தேடினால் எந்த நூல்களும் கைவசம் இல்லை. நல்லவேளையாக  பொன் இளவேனில் நீர்மங்களின் மூன்றடுக்கு என்எச் அவிநாசி திருச்சி சாலை சித்திரங்கள் வைத்திருந்தார். பள்ளித் தோழரும் நண்பருமான டிட்டோவை அழைத்தேன். அவர் தன்னுடைய மார்க்சிய நூல் கிடங்கிலிருந்து தேட ஆரம்பித்த்போது வீட்டில் நுழைந்தேன். அவருக்கு மகிழ்ச்சி. கவிஞரை சந்திக்கப் போகிறான். இல்லை யென்று சொல்ல முடியாது என்று பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். தேநீர் வந்தது. குடித்தேன்.பதற்றமாக இருந் தது. எஸ்பிபி குட்டி கிடைத்த பிறகு அப்பாடா என மூச்சு விட்டேன்.

        “நீங்கள் மதியம் பணிரெண்டரை வாக்கில் ஓட்டலுக்கு வந்து விடுங்கள்..“என்றார் திரு.மரபின் மைந்தன் முத்தையா

ஜான்சுந்தரும் பொன் இளவேனிலும் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறொம் அங்கு சந்திக்கலாம் என்றார்கள்.

             ஓட்டல் வரவேற்பறையில் கவிஞரின் நெருங்கிய நண்பர் திரு.ஜெகதீசன் அவர்களைச்சந்தித்து விபரம் சொன்ன பிறகு அறிமுகம் செய்து கொண்டோம். அப்பொழுது அவர்களின் வருகையை யொட்டி பலர் சால்வைகளுடன் காத்திருந்தார்கள். ஓட்டலில் திருமண வரவேற்புக்கு போகிற புறப்படுகிறவர்களுக்கான கார்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. கவிஞரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் ஓட்டல் நிர்வாகிகளும் தயாரானார்கள். கார் வந்தபோது எனக்குப் பதற்றமும் என்ன பேசுவது என்கிற தடுமாற்றமும் ஏற்படுகிறது.

           கவிஞர் காரிலிலிருந்து இறங்கியதும் மாணவர்கள் நண்பர்கள் வரவேற்கிறார்கள். வரவேற்பு வாயிலில் திருமண அரங்கின் நறுமணம். ஜவ்வாது சுகந்தம் வீசும் பட்டு வேட்டிகளின் மணமும் வீசுகிறது. என் முறை வந்த பிறகு அவருக்கு நான் வணக்கம் சொன்னதும் திரு. முத்தையா அவர்கள் “இவர்தான் இளஞ்சேரல்..“என அறிமுகம் செய்தார். கைலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். லிப்டிக்கு வந்த போது அவர் பங்கு கொள்ளவிருக்கிற திருமணவரவேற்பு மணமக்கள் அவரிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். நண்பர்கள் தங்கள் அன்பைத் தெரிவிக்கிறார்கள். புகைப்படங்கள் எடுக்கப்படுகிறது. அவருடன் லிப்டில் பயணிக்கிறோம்.நீங்கள் சொன்ன கிடா கதை அருமை. அது என் ஞாபகத்திலேயே இருக்கிறது என்றார். திருவிழாவும் சிறப்பு. என் ஊர்> பணி> எழுத்து ஆர்வம் குறித்து விசாரிக்கிறார். அறைக்குள் நுழைகிறோம். 

         அவருக்கு என்று பிரத்யேகமாக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தோம்பல்.  மதிய உணவு நேரமானதால் எங்களையும் உணவருந்த அழைத்தார். கதையை அறிந்திருந்த நண்பர்களுக்கு திரு.முத்தையா இவர்தான் கதையை எழுதியவர் என்று அறிமுகப்படுத்தினார். நண்பர்கள் பாராட்டினார்கள். கதையில் கிடா விருந்து என்பதாக இருந்த காரணத்தினால் உரையாடலில் உணவு குறித்துப் பேசினோம். அவர் சமீபத்தில் கலந்து கொண்ட மலேசிய இலக்கிய நிகழ்வு குறித்தும் மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக விழா பற்றிய நினைவலைகளை மரபின்மைந்தன் முத்தையா பகிர்ந்து கொண்டார். இங்கு  இலக்கிய நிகழ்வுகளில் பேசப்படுகிற விசயம் குறித்துக் கேட்டார். உணவரங்கமும் இலக்கிய அரங்கமாக மாறியது. நிகழ்த்தப்படும் இலக்கிய நிகழ்வுகளில் கவிதை வாசித்தல், நூல் அறிமுகம், படைப்பாளர்களுடன் உரையாடல் இந்த அடிப்படையில் நிகழ்வுகள் உள்ளது என்றோம்.

         உணவு முடிந்து அவருடைய அறையில் தற்கால அரசியல் நிலவரங்கள், மக்களின் எதிர்பார்ப்பு, அரசியல் இயக்கங்கள் கொண்டிருக்கும் தீவிரமான கொள்கைகள் எப்படி ஒரு சூழலில் அவர்களால் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படமுடியாத நிலை ஏற்படுகிற காலச்சூழலை கவிஞர் நினைவு கூர்ந்தார். நண்பர்களுடன் இயல்பாக உரையாடினார். ஓய்வுக்குப்பிறகு அவரிடம் என்னுடைய மூன்று நூல்களான எஸ்பிபி குட்டி, என்.எச். அவிநாசி,திருச்சி சாலை சித்திரங்கள், நீர்மங்களின் மூன்றடுக்கு நூல்களை அவருக்கு அளித்தேன். அவர் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்.

            சில நிமிடங்கள் நூல்களில் சில வரிகள் வாசித்தார். அவருடனான சந்திப்பு நினைவு கூறத்தக்க வகையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அவருடனான இனிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்து ஆச்சயமும் மகிழ்ச்சியுமளித்த திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் புகைப்படம் எடுத்து உதவினார்.   

            கவிஞர் தன் ஆத்ம நண்பர்களுடன் மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டார். நண்பர்களுடன் அவர் வழியனுப்பி வைக்கப்பட்டபோது ஒவ்வொருவரிடமும் சில வார்த்தைகள் பேசினார். “வாசித்துப் பார்த்தேன்  சில பக்கங்களில்..நடையும் எழுத்தும் வித்தியாசமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.. நூல்களை வாசித்து விட்டு உங்களுடன் பேசுகிறேன். இளஞ்சேரல்.. தொடர்ந்து எழுதுங்கள் சந்திக்கலாம்...என்று விடைபெற்றுக் கொண்டார்.

             நான் வண்டியை அலுவலகம் நோக்கிச் செலுத்தினேன். பதின் பருவங்களில் மீள்வாசிப்பு கொண்ட காலத்தில் இருகூரில் ஓய்ந்து களைத்து  உழைப்பு நேரம் போக இலக்கியமும் கவிதையும் பேசிய நாட்கள் நினைவுக்கு வந்து போகிறது. நேரெதிரான இலக்கிய இயக்கம், கவிதை இயக்கம், கவிதைகளின் படைப்புகளின் பரிணாமம், குறிப்பாக புதுக்கவிதையியக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்த விவாதங்களை நண்பர்கள் தொடர்ந்து நிகழ்த்தியிருக்கிறோம். பெரியாரியச் சிந்தனாயாளர்கள். பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகள், திரைப்படங்களின் வரலாறுகளை நுனிநாக்கில் வைத்துக் கொண்டு வாதங்களால் மோதுகிற நண்பர்கள். தீந்தமிழ்ச்சுவை கொண்ட பக்தி இலக்கியங்களில் தோய்ந்த தமிழ்ப்புலவர்கள் என்று வாதிடாத நாளுமில்லை யென்று சொல்லலாம்.

சிதம்பரம், பெருமாள், காளிதாஸ்,பொன் இளவேனில்,சத்தி, கோபால்ராஜ், செல்வராஜ், கணேசன். டிட்டோ, ராஜ் உள்ளிட்ட நண்பர்களின் உரையாடலில் கவிதைகள் பிரதானமாகவே இடம் பெறும். கவிதைகளின் வடிவங்கள் குறித்தும் பேசியிருக்கிறோம். சங்க காலம் முதல் தொழிற்சங்க காலக் கவிதைகள் பற்றிய உரையாடல்களை எங்கள் நண்பர்கள் விவாதித்த இரவுகள் ஞாபகங்களில் வந்து போகிறது.

            கட்சிகளுக்காக, கொண்ட கொள்கைகளுக்காக இலக்கியத்திற்காக வெறித்தனமாகத் தன் வாழ்வு, குடும்பம், எதிர்காலம், எல்லாவற்றையும் மறந்து உழைத்த இருகூர் வாழ்கிற நண்பர்கள் பலர் உதவியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு ஒரு எளிய சொல்லுக்குக் கிடைத்த வெகுமதி.

கலை உணர்ச்சியாலான சொல். அது  ஒன்றும் திடப்பொருளோ திண்மப் பொருளோ. திரவப்பொருளோ அல்ல அவை  ஓர் உயிர்ச்சொல் என்று உணர்த்தியது இந்த அபூர்வமான சந்திப்பு.. எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் சுமந்து கொண்டு இந்தச் சொல் தள்ளாடியபடிதான் இருக்கிறது.

நன்றி.. நன்றி...கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் ஊஞ்சல் இலக்கிய அமர்வின் நண்பர்களுக்கும்...