ஞாயிறு, 2 ஜூன், 2013

வஞ்சியர் காண்டம்- நவீன நாடகம் குறித்த பதிவு


வஞ்சியர் காண்டம்-

நவீன நாடகம்-

நிகழ்வு-31.05.2013 வெள்ளி மாலை 6.00 மணி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிக் கலையரங்கம்-

கோவை- பதிவுகள்-

-

இளஞ்சேரல்

   

                 சமீபத்தில் பிரளயன் எழுதியும் பேராசிரியர்.ராஜூ இயக்கிய “வஞ்சியர் காண்டம்நாடகத்தைக் காண நேர்ந்தது. ஆர்.எஸ்.புரம் அரங்கம் நிரம்பியது . டிக்கெட் பெற்று நாடகம் பார்த்த முந்தைய காலத்தை நினைவுட்டியது. இந்த அரங்கில் சமூக நாடகங்கள் ஓரங்க நாடகம். காதல் நாடகம் போன்றவை வருடா வருடம் நாடக விழாக்களில் கலந்து கொண்டு போட்டி போட்ட நாடகங்களும் கண்ட நாட்களுண்டு.

ஆனால் நவீன நாடகம் காணும் வாய்ப்பு கிட்டியதில்லை காரணம் அவையெல்லாம் மக்கள் கூடும் இடங்களிலேயே காணும் வாய்ப்பை அந்தக் கலைஞர்கள் தந்து விடுகிறார்கள். முதல் முறையாக கோவையில் நவீன தொழில் நுட்ப ஒலி ஒளி அமைப்புடன் நடந்ததால் நாடக ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருந்தது எனலாம்.

        

             பொன் இளவேனில் நாடகம் துவங்கிற்று எங்கிருக்கிறாய் என்ற போது அரங்கினுள் நுழைந்தேன். மாத கடைசிநாள். வெள்ளிக்கிழமை. நேர நெருக்கடி பயண நெருக்கடியைத் தாண்டி வந்து சேர்ந்தேன். மேல் வரிசையில் அமர இடம் கிடைத்தது. இருட்டின் வழியில் நாடகம் பார்த்த போது கர்ப்பக்கிரகத்திற்குள் கடவுள் சிலைகள் நடித்துக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன். ஒளியமைப்பும் ஒலியும் இசையும் அடடே. கண்டேன் சீதையை என்பதாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். இளவேனில் இசையமைப்பும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது கவனி என்றார்கள். பக்கத்தில ரவீந்திரன். பழக்கப்பட்ட அரங்கம் ஆனால் நிரம்பியதை ஆச்சர்யமும் அதிசயமுமாகப் பார்த்தேன்.இளையராஜா வந்தபோது கூட காலியாக இருந்த பகுதிகளைக் காண முடிந்தது. அன்று அனுமதி இலவசம் வேறு.  ஆனால் நாடகத்திற்கு வந்திருக்கும் மக்களைப் பார்த்தபோது ரசனையின் மீது சந்தேகம் வலுக்கத்துவங்கிற்று. ஏனெனில் ரசனை சார்ந்த உச்ச நடிப்பில் நமது மக்கள் சாமானியர்கள் அல்ல. இன்று நுழைவுக்கட்டணம் இருந்தும் மக்கள் வந்திருப்பதை இதுதான் கோவை எனப் பேசவைத்தது.

 

           நாடகவிழாக்கள் நவீன நாடக வடிவங்களுக்கான முயற்சிகளை தொடர்ச்சியாக இடது சாரி இயக்கங்கள் நடத்தி வருகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி இயக்கங்களில் நாடக வடிவங்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கமாக கடந்த அருபது ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர்களின் மாநாடுகள் இயக்க நிகழ்வுகள் பேரணி ஆர்பாட்டம் தேர்தல் பிரச்சாரம். அரங்க மாநாடுகள் போன்ற இயக்கங்களின் போது நிச்சயமாக நாடகவடிவத்திற்கு வாய்ப்பளிப்பதோடு அந்தக் கலையை உயிருடன் தமிழகத்தில் காப்பாற்றி வருகிற இயக்கமாகவும் உள்ளது எனக் கூற கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக வீதி நாடக வடிவங்களை கிராமியக் கலைவடிவங்கள் அழிந்து கொண்டிருக்கும் கலைகளுக்கும் கலைஞர்களுக்குமாக வாய்ப்புகளை வழங்கி பரவலாக மற்ற இயக்கம் கட்சிக்காரர்களையும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிற கட்சியாகவும் சமூக இயக்கமாகவும் இடது சாரிகள் இருந்து வருகிறார்கள்.

(மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதை வைத்து நாம் ஊகிக்கலாம் அவர்கள் மக்களுக்கான பணிகளைச் செய்கிறார்கள் என்பதை)

          மக்கள் எனப்படுபவர்கள் சமூக மந்தைகள். மக்களின் சமூக வாழ்வு பசி பற்றியதாகவே இருக்கவேண்டும் அவர்தம் சிந்தனையில் சமூகவளர்ச்சி  என்னும் நஞ்சு விழுந்து விடக்ககூடாது என்பதை ஆழமாகப் போற்றி வளர்ப்பவர்கள் ஆதிக்கவாதிகள். மக்கள் கலைகளின் பக்கம் எந்த யுகத்திலும் திரும்பாமல் பார்த்துக் கொள்வதே ஆதிக்கவாத சொகுசு கலைகளின் பிதாமகர்களின் தலையாய பணி.

         செவ்விலக்கியப் படைப்புகளை நாடகமாக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக இடது சாரி சிந்தனையாளர்கள் உலகெங்கிலும் நிகழ்த்தி வருகிறார்கள். இன்குலாப். மங்கை. பிரளயன்,மு.இராமசாமி.பேரா.திலீப் குமார் வெளி ரங்கராஜன் சண்முக ராஜா போன்ற நாடக ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். நிகழ்த்தியும்  வருகிறார்கள். நவீன நாடக வடிவத்தை கேலிக்கூத்தாக்கும்  முயற்சிகளும் நடக்காமல் இல்லை. அந்த முயற்சிகளை மக்களே நிராகரிப்பார்கள். பிரளயன் தன்னுடைய படைப்புகளின் வழியாக மறுவாசிப்பு. புத்தாக்க வெளிக்கு வாய்ப்புகளை வழங்குகிற படைப்பாளியாகவும் கள இயக்குநராகவும் இருக்கிறார்.

         சபாக்களை உறவினர்களை ஒரு சேரக் காணும் வாய்ப்பாகவும் குடும்ப விசயங்களை காபி டீ செலவில்லாமல் பேசுவதற்கான இடம் என்று நடுத்த மக்கள் விரும்பும் இடங்களில் நகைச்சுவைத்துணுக்குகளை சீரியலாகப் பேசி சிரிக்கவைக்க வும் நோயாளிகளுக்கு அமைதி தருவதற்கும் சபாக்கள் நாடகத்தைப் பயண்படுத்துகிறது. சபாக்களின் இன்றைய நிலை குறித்து மௌலி போன்றவர்கள் மிகுந்த வருத்தப்படுகிற அளவு நிலை மாறியிருக்கிறது. சங்கீத சபாக்கள் இதற்கு விதிவிலக்கு.

          சபா எனும் வடிவத்திற்கு மாற்றாக நாடகத்தை நவீனமாக்கியதில் பிரளயனுக்கு மகத்தான பங்கு இருக்கிறது. நாடகத்தை ஒரு மகத்தான கலையாக செவ்வியல் வடிவமாக ஆதிமனிதனின் புழுங்கு கலையாக பாவித்து சில புதுமையான நவீன முயற்சிகளில் ஈடுபடுகிற கலைஞர்களின் வளர்ச்சியும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

        நாடகக்கலையின் இலக்கணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாகவும் வலிமையுடனும் தற்கால நவீன தொழில் நுட்பத்தின் வழியாகக் கலையின் உச்சமாகவும் கண்ட நாடகம் தான் “வஞ்சியர் காண்டம்

        நடித்த கலைஞர்களின் தேர்ந்த உடல் மொழி, அசைவுகள்,குரல் வளம், உடையலங்காரம். ஒப்பனை. நேர்த்தியான நடிப்பும் குழுநடிப்பின் போது வழுவாத நெறிமிக்க  இணை நடிப்பாகவும் இருந்ததைச்  சொல்லவேண்டும். அனைத்து நடிப்புக் கலைஞர்களும் பேராசிரியர்கள். ஆய்வுப் பட்டயம் நாடகத் துறையில் பயில்பவர்களாக இருந்ததும் சிறப்பியல்பிற்கு ஒரு காரணம். நாட்டிய நாடகவடிவிலும் காட்சிகளை ஒருங்கிணைத்தது புதுமை. நாடகத்தில் பயண்படுத்தப் பட்ட அரங்கப் பொருட்கள் கலைநேர்த்தியையும் சங்ககாலத்தின் நிலத்தைக் கண்டுணர வாய்ப்பாக அமைந்தது. நிகழ்த்து மேடையும் காட்சிகளுக்கு முன்பாக கலைஞர்களின் நடன ஒத்திசைவு கொண்ட இசை நடனம் ஒளிவண்ணத்திற்கேற்ப தத்ருபமாக இருந்தது.

      நாடகம் காவிய வடிவில் நிகழ்த்தப்பட்ட வரலாற்று நாடகவடிவமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகார காப்பியத்தின் வரிகளும் கதாபாத்திரங்கள் பேசும் நவீன வாழ்வின் வசனங்களும் வடிவத்தின் உச்சம் எனலாம். பின்னணி இசையும் பாடல்களும் இனியதாக சுகமாக இருந்தது. அரங்கின் பின்னால் கட்டப்பட்டிருந்த திரைச்சீலையின் அமைப்பு ஒரு பெருமலையின் அடிவாரம் போன்றும் சில சமயம் கருநீல வெளிச்சத்தின் வழியாக அருவியொன்று கொட்டும் வடிவாகவும் அமைந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் காட்சியின் துவக்கத்தின் பொழுது பாடப்பட்ட கீர்த்தனைகளும் இசைப்பாடல்களும் இனிமையாக இருந்தது. காவிய நாடகத்தின் தன்மையினின்று விலகாமல் அற்புதமாக இருந்தது. நாம் கல்மேடைகளில் தீப்பந்தங்களுக்கு நடுவில் அமர்ந்து அந்தக் காப்பிய காலத்திலேயே நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பார்வையாளர்கள் ஒலி ஒளி அமைப்பின் வழியாக ஒரு நவீனநாடகம் செவ்வியல் பிரதியின் ஆக்கம் இப்படித்தான் இருக்குமா என ஆச்சர்யம் மிகுந்து ரசித்தார்கள்.

       குறிப்பாக கண்ணகி தன் கணவனை வழியனுப்பிவைத்து விட்டு அவன் போன பாதையையே காண்கிற வடிவம் ஒரு எழிலான ஓவியமாக இருக்கிறது என தோழி பேசும் போது அரங்கின் வெளிச்சம் லைட்டிங் அழகின் உச்சத்தின் வடிவமாக இருந்தது. விளக்குகளின் அமைப்பு வெளிச்சத்தின் அழகைக் கையாண்ட விதம் அருமை. இசைக் கோர்வை உடையலங்காரம். நடிகர்களின் உடல் மொழி அரங்கின் தரை அமைப்பு கூட நிலப்பகுதியின் வடிவத்திற்கும் நிலவொளியின் வெளிச்சத்திற்குமாக வடிவமைக்கப்பட்டிருப்பதை கூறவேண்டும்.

       கணவர்கள் பொருள் தேடவோ வாழ்வின் நிலைகுறித்தோ துணையாளை விட்டு்ப் பிரிகிற வாழ்வை சங்ககாலத்தில் இருந்து வந்திருக்கிறது. அதுவே இனியொரு கூடல் வாழ்வாகவும் பெண்சேரலாகவும் மாறிவிடுகிற நிலையையும் எடுத்துக் காட்டுகிறது. அப்படியாகப் பிரிந்து சென்ற கணவர் திரும்ப வரும்வரை அந்தப் பெண் நிலைகுறித்த காட்சிகளும் வசனங்களும் அவர்களைத் தேற்றுவதற்கு தோழிகள் எடுக்கும் முயற்சிகளும் எதார்த்தமாகப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.                           

            தற்காலத்தில் கூட வெளிநாடுகளில் தங்கள் கணவர்களை அனுப்பிவிட்டு டாலர்களுடன் குடும்பம் நடத்தும் பெண்களின் மனநிலையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். வருடம் அன்றி பல வருடங்கள் கணவர்களைப் பிரிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நவீன காலத்தில் கணவருக்காக ஏங்கும் பெண்களின் வாழ்வு சங்ககாலத்தில் இருந்ததை நினைவுட்டுவது சரியான காலப்பொருத்தமே. இப்பொழுதெல்லாம் கணவன் தொலைந்தால் மட்டும்போதும் உங்களுக்கு முழு நிம்மதி கிடைக்கும் என்கிற வடிவில் தொலைக்காட்சித் தொடர்களின் தரம் இருக்கிறது. குடும்ப வாழ்வில் கணவன் என்பன் வெறுமனே பொருளீட்டித்தருகிற இயந்திரம்தான் எனத்திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படுவதும் அப்படி ஈட்டித்தராதவன் ஆண்மகனுமல்ல கணவனாகத்தகுதியுடையவனுமல்ல என்கிறார்கள்.ஆணாதிக்க வகைமையில் கூட ஆணாதிக்கத்திற்கு சாதியப்பிரிவுகள் சூடப்படுகிறது.

         காட்சிகளில் நடித்த நடிக நடிகைகள் கொடுத்த கலை உழைப்பு மரியாதை தரத்தக்கவை. குறிப்பாக கதாபாத்திரமாகவே மாறி பொறுமையுடனும் நிதானத்துடனும் பேசிய வசனங்கள் யாவும் சமணகாலத்தின் கடவுள் மறுப்புக் கொள்கைகளை நினைவுட்டியது.

        உரையாடல்களில் அந்தக்கால யதார்த்தமான பெண்களின் இயற்கையோடு இணைந்த உணவு முறைகள் அவர்களின் உடையலங்காரம் அணிகலன்கள் பற்றியும் அவர்கள் உபயோகித்த பொருட்கள் அரங்கில் பயண்படுத்தியது பார்வையாளர்களுக்கு பழங்காலத்தின் அம்சங்களை நினைவு கூர்வதற்கு ஏதுவாக இருந்தது.  நாட்டியமாந்தர்களின் உடலசைவு கர்நாடக சங்கீதம் தமிழிசையின் பாங்கு உரையாடல்களின் மேலோங்கிய கச்சிதமான தன்மையும் புதுமையான கேள்விகளும் சிறப்பானது. குறிப்பாக கண்ணகி கதையை பாடுகிற இடத்தில் இரண்டு கலைஞர்களின் நடனமும் இசையும் பாரம்பரிய கலைகளான கூத்துக் கலையின் அம்சங்களும் இணைந்திருந்ததை வரவேற்க வேண்டும். நாடகம் பிரமாண்டமாக அமைந்து காணப்பட்டதற்கு முக்கியமாக லைட்டிங் அமைப்பும் சரியான இடத்தில் விளக்கொளியைக் கதாபாத்திரங்களின் மீது கவிய விட்டுப் பின் மெல்லமெல்ல இருள் தன்மைக்குக் கொண்டு வந்ததும் ஆகும்.

        நாடகத்தில் இருள் கூட ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது என்று சொல்லவேண்டும். இருளையும் வெளிச்சத்தையும் கச்சிதமாகப் பயண்படுத்தியதுதான் நாடகம் வெற்றியடைந்ததற்கான காரணம் என்று சொல்லமுடியும்.

       வடிவத்தைப் போலவே இந்த நாடகத்தின் உள்ளுறையும் கச்சிதமானது. அபலைகளின் கைவிடப்பட்ட வஞ்சியர்களின் நிலையைக்குறித்த நிலையினைப் பேசுவதாகவும் வஞ்சியர்கள் இருந்தும் தம்பதியர்கள் அனைவரையும் ஒரு அரசு கைவிடுகிற நிலையையும் பேசுகிறது. இராஜாக்களின் காலத்தில் நடந்த காப்பிய இடைச்செருகல்களை தற்காலத்தின் பெண்ணிய பார்வைக்கு ஏற்ப விடுதலை சம உரிமை இடஒதுக்கீடு வண்கொடுமைகளுக்கு எதிராக மறுவாசிப்பு செய்யப்ட்டதாகவே இந்த நாடகப்பிரதி உள்ளது.

        சிலப்பதிகாரத்தின் செவ்வியல் தன்மையை மாற்றாமல் மையத்தை அப்படியே பயண்படுத்தியிருப்பதால் சுவை மாறவில்லை. அதன் இயல்பான கூறுகளைப் பேசியும் அதிகமாகக் கவனிக்கப்படாத உதிரி பாத்திரங்கள் வழியாக வசனங்கள் எழுதியது புதிய வடிவம். கண்ணகியைக் கடவுளாகப் பாவித்துப் பாடப்படும் பாடல் உயர்ந்த தரம். அற்புதமான இசைவடிவம். பாடியவரும் கர்ப்பக் கிரகத்தில் ஓதுவார்கள் பாடுகிற அளவில் தொனியில் அழகான இசைநயத்துடன் ஓசையுடனும் பாடித் தொழுவது தத்ருபமாக நடிக்கப்பட்டது.

       பிற்பட்டகாலத்தில் கடவுளாகப் பாவித்தது அடிமைவம்ச காலத்தின் செருகல். காவிய நோக்கில் பார்த்தால் ஆணாதிக்க சமூகத்தில் அலைக்கழிக்கப்பட்ட அபலையின் குரல். காவியத்தின் மூலமான கண்ணகி என்றாலும் நாடகத்தில் வரும் துணைப்பாத்திரங்கள் யாவும் சங்ககாலத்தின் அடித்தட்டு மக்களின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். நடித்த கலைஞர்கள் அவர்களின் அங்க அசைவுகள் பாவனைகள் எல்லாம் நமக்கு சங்கத்தை நினைவுட்டியது. அவை யாவும் செவ்வியல் நாடக அழகின் உச்சம். கலைகளின் ஆதி ஒழுங்கியல் கூறுகளுடன் அவர்களின் வாழ்வு கழிந்திருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியதே.

         தற்கால வாழ்வை நாம் வஞ்சியர் காண்டத்துடன் பொருத்திப்பார்க்கும் போது கலையம்சங்களை வெகுசன ஊடகம் மற்றும் நுகர்வு கலாச்காரச் சாக்கடைக்குள் கலக்கி பிறகு அதையெடுத்துப் பயண்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்

அதுவே தூயமான கலையென. சுவராசியமான ரசனை என்பது கலையம்சத்திற்கு எதிரான செயல்பாடு எனும் மூடநம்பிக்கையை வளர்ப்பதும் அவர்களுடைய செயல்.

           தற்காலத்தில் கலையென்ன என்பதும் செவ்வியல் வடிவம் என்ன என்பதையறியாத மரமண்டைகளை வைத்துதான் நாம் கட்டியழுதுகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். மகத்தான செவ்வியல் பல்கலைக்கழகங்களை உருவாக்கி உலகத்திற்கே கலையைக் கற்றுக்கொடுத்த மரபு இன்று கல்லூரிகளில் பல்கலைக் கழக வளாகங்களில ரிக்கார்ட் டான்ஸ் ஆட்டம் போடுகிறதை நினைக்கலாம்.               

           அந்தக் கல்லூரிகளுக்கு ஐஎஸ் ஒ தரச்சான்றிதழ் வழங்கும் செய்கிற கலைநுட்பம் நம்முடையது. பெற்றோர்கள் கூட தங்கள் பெண்களை காட்சியுணர்வுக்குப் பயண்படுத்தலாம் தவறில்லை என்கிற சிந்தை மனோபாவத்தை வளர்த்தியிருப்பதற்கு யார் காரணம் என யோசிக்கலாம். இப்பொழுது கூட பன்னாட்டு வணி்கத்தலங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்து வருகிற தமிழ்க் குடும்பங்களை பார்க்கும் வாய்ப்பிருப்பவர்கள் கவனிக்கலாம்.

         சிலப்பதிகாரம்,திருக்குறள், எல்லாம் சமண நூல்கள். அவற்றைச் சமயச் சார்பற்றவையாகச் சித்தரித்துக் காட்டியது திராவிட இலக்கியமும் இயக்கத்தவர்களும்.  தாம் செய்த பணிகளில் தலையானது. கடவுள் மறுப்புக் கொள்கைகளைக் கையிலெடுத்துதான். பிறகு ஒருவனே தெய்வம் ஒன்றே குலம் என்று மாறியபோது திராவிடம் சங்கஇலக்கியங்களை கீழே போட்டுப் புதைத்துவிட்டு பாரதி தாசனைத்தூக்கிக்கொண்டு ஆடிடத் துவங்கியதை நாம் மறக்கக் கூடாது. சங்கப் பாடல்களை மேற்கோள் காட்டினால் ஆட்சியதிகாரத்தில் கொள்ளையடிக்க முடியாது. உள்ளாட்சிகளில் திருடமுடியாது என்பதால் சங்கப்பாடல்களை திராவிட ஆட்சியாளர்கள் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு வசதிக்கு பாரதிதாசனை உடுமலை நாராயணகவியைத் தூக்கிக்கொண்டாட ஆரம்பித்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிராமிணிய எதிர்ப்பு அரசியலுக்கும் உகந்ததாக இருந்தது. சைவ-வைணவ தமிழாசிரியர்களின் பழமைவாதப் போக்கிற்கும் ஏதுவாக அமைந்தது இத்தகைய சூழல். ஆகவே தமிழர்கள் தங்களை முன்னாள் சமணர்கள் எனச் சொல்லிக்கொள்வதற்கு தயக்கம் கொள்வதும் அதன் காரணமே.

        வரலாற்று உண்மைககள் இலக்கிய ஆய்வுகள் உரைகள் யாவும் அவை சமண நூல்கள் என்றே வரையறுத்துவருவதை அறியலாம்.

         அந்தக் காலத்தில் நிலவியல் முறையில் கடைப்பிடிக்கப்பட்ட பொதுமகளிர் முறையைத் திருக்குறள் நேரடியாகத்தாக்கியதும் சிலப்பதிகாரத்தில் அது மறைமுகமாக விமர்சிக்கப் பட்டிருப்பதும் காட்சிப்படுத்தியும் பெண்ணடிமை முறையின் காட்சி விவரிப்புகளையும் அறியமுடியும். இந்த நாடகம் கோவலனும் கண்ணகியும் சமண மதத்தவர்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லிக்காட்டியுள்ளது. சமண முனிவர்கள் நாடகத்தில் பயண்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் தன் வாழ்விற்காக கடவுளைத் தொழப்போகும் தோழியிடம் உன் கணவன் உன்னைச் சேர்வதற்கு என்ன உதவியை கடவுள் உனக்குப் புரிந்திருக்கிறார் பிறகு எனக்குத்தனிப்பட்ட முறையில் எப்படி உதவுவார் எனக் கண்ணகி கேட்பதும் துறைகளில் நீராடுவதும் தெய்வங்களைத் தொழுவதும் எங்கள் இயல்பில் இல்லை என கண்ணகியே பேசுவது போன்ற காட்சிகள் மரபு சார்ந்த நவீனத்துவம் மிக்கவை. இவைகளை பிராமணிய எதிர்ப்புக் கருத்துகள் எனக்கருத முடியாது. பக்தி மார்க்கம். ஆன்மீக. பக்தி இலக்கிய மரபுகள் யாவும் பிராமணர்களுடையதே என்று பேசும் வழக்கும் ஆபத்தானவையே. ஒருவகையில் விவாதத்திற்காக இத்தகைய பிராமணீய எதிர்ப்பு சமணக்கருத்துகளை இளங்கோவடிகள் கவுந்தியடிகள் மூலம் சொல்லியிருப்பது இதற்கு வலுவான காவிய ஆதாரமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

      

         நவீன நாடக மரபில் இயங்கும் இடது சாரி மனோபாவ நாடக ஆசிரியர்களுக்கு இருக்கும் பெருங்கோபம் என்னவெனில் காவியங்களில் காணப்பட்ட பாத்திரங்களுக்கும் கோவில் கட்டி தெய்வமாக்கியது போன்று கண்ணகியையும் தெய்வமாக்கி வழிபடத்துவங்கிவிட்டார்களே என்பதுதான். இதன் மூலமாக அந்தக் காலத்தில் பெண்களின் அவல நிலையை இளங்கோவடிகள் சித்தரிக்க முயன்ற எதார்த்த வாழ்வை கவனமாகவும் இடைச்செருகல் மூலமாகவும் மறைத்துவிட்ட சம்பவங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்து நாடகமாக்கியிருப்பது தான் முக்கிய மையம். தங்கள் குறைகளையும் வேதனைகளையும் பேசும் போது

“தெய்வமெனத் தொழுதால் கூப்பிய கரங்கள் திரையாகிவிடுகின்றனஎன்று கண்ணகியின் தோழி தேவந்தி வருத்தப்படுகிற காட்சியின் பின்னணியும் நடித்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் சிறப்பாக இருக்கிறது. இந்தக் காட்சிகளின் வழியாகக் காலந்தோறும் பெண் உணர்வுகள் கடவுளாலும் எதிர்பார்ப்புகளாலும் சிதைக்கப்பட்டதை உணரமுடிகிறது.

       உயர்குடிப் பெண்ணாகக் கண்ணகி வரும் காட்சிகளில் பேசும் வசனங்கள் முக்கியமானவை. நவீன காலத்தின் பெண் மனதோடு ஒப்பும் காட்சிகள். மாதவியிடம் இருக்கம் கலைரசனை தன்னிடம் இல்லாதது பற்றி தனது ஒப்புமையை அழகாக ஒப்புக்கொள்ளும் காட்சியும் உதாரணம்.“இன்னொரு பெண்ணிடம் மயங்க ஆண்களுக்குக் காரணம் தேவையா என்ன? என்று கண்ணகி வெளிப்படையாக உடல்சார்ந்த வழக்காறு பேசும் போது ஆணாதிக்கவாதிகள் கூசத்தான் வேண்டும். ஒரு பெண்ணின் மிகப்பெரும் தாழ்வு அவள் ஒர் ஆணுக்காக இன்னொரு பெண்ணுடன் போராடுவதுதான். பெண்ணிற்கு பெண்ணே கொடுமையாக மாறுவதன் காரணங்களும் அலசப்பட்டிருக்கிறது. அறிவுப்புர்வமாக தன் வாழ்காலத்தை அறிந்து வைத்திருத்ததால்தான் கண்ணகி தனது செவிலித்தாய் காவற்பெண்ணோடு நடத்தும் வாதப் பிரதிவாதம் சிறப்பாக உள்ளது. கோவலனின் பிரிவால் தனக்கு நேர்ந்துள்ள அவமானத்தை தனது செவிலித்தாயால் உணர முடியாது என்றே அந்தப் பெருங்குடி வணிக மகளுக்குத்தோன்றியது. அந்தச் செவிலித்தாய் ஒரு கட்டத்தில் துயருற்றிருந்த கண்ணகியை “இப்படியே இடிந்துபோய் உட்கார்ந்திருந்தால் என்ன ஆகப்போகிறது. நீ எழுந்து நீராடு. மலர்களைப்பறித்து சூடிக்கொள் தலைக்கு நெய்தடவி உன்னை ஆற்றுப்படுத்திக்கொள் என தைரியம் சொல்லும் போது அப்படியெல்லாம் என்னை சீர்படுத்திக்கொள்ளும் போது கணவனுடன் நான் வாழ்ந்த சிறந்த நாட்கள் நினைவுக்கு வந்து மென்மேலும் என்னை வாட்டுகிறது. நான் இப்படியே இருந்து கொள்கிறேன் என்கிறாள். செவிலித்தாய் உரிமைமகளிர் வகையைச் சேர்ந்தவள் அடிமை என்பதன் மறைமுகமான பொருள். அடிமைக்கும் காதலுக்கும் உள்ள சம்பந்தம் பற்றிய உரையாடலும் வருகிறது.

        இளங்கோவடிகளும் சொல்லாத சொல்லத்துணியாத அந்த அடிமை செவிலித்தாயின் உள்ளத்து உணர்வுகளை பிரளயன்தான் சொல்லியிருக்கிறார். தனது எஜமானின் பிள்ளைக்குப் பால் கொடுக்கவே தான் கருவுற்றிருக்கிறேன் என்ற வசனம் பேசும் போது அரங்கம் துயரத்தைக் கண்டு நெகிழந்தது. நடித்த பெண் கலைஞரின் குரல் உண்மையாக ஒலித்தது. மனித குலம் அடிமைத்தனங்களின் வழியாகவும் இடையறாத போர்களின் வழியாகவும் குறிப்பாக பெண்களின் மீதான ஆதிக்க மனோபாவத்தின் வழியாகவுமேக் கடந்து வந்திருக்கிறது.

      இதற்குப்பிறகும் நாம் எப்படி வெற்றிகரமான மனித குலம் என்று பீற்றிக்கொள்வது. பெண்களை ரகசியமாகப் படம் பிடித்துக் கொள்ள விதவிதமாகக் காமிராக்களைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறோம் அல்லவா. அடிமைத் தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன எனக் கேட்கும் வசனமும் உண்டு.

     செவிலித்தாய் மகள் நாகமணி புத்த சங்கத்தில் சேருகிறாள்.அதற்கும் அவளது எஜமானன் அனுமதி கோர வேண்டிய நிலை.தனது கடைசி காலத்தில் கண்ணகியின் காற்சிலம்புகள் மட்டுமல்ல காவற்பெண்ணான நாகமணியும் கூட  அவர்களின் சொத்துகளாக இருந்தது அவை மட்டுமே. ஒரு காட்சியில் கோவலன் தன்னை நினைத்து வருந்தாதே நான் திரும்பி வருவேன் என்று புறப்பட்டுப்போகும் போது அந்த விடுதலையை அவன் தர காவற்பெண் நான் இனி யாருக்கும் உணவாக இருக்க விரும்பவில்லை என்று நாகமணியும் கண்ணகியும் பேசுகிறார்கள்.

       இறுதிக்காட்சியில் கண்ணகி துயரக்கோலத்திலிருந்து எழுந்து நின்று சிலை போன்று செம்மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிர நின்று கொள்வதும் அவளை மலர்கள் சூடியும் அபிடேகம் செய்தும் வழிபடுகிறார்கள். தலைமைப் புரோகிதர் பாடல்கள் பாடுவதுமாக பத்துநிமிடத்திற்கும் மேலாக கண்ணகியாக நடித்த பெண்கலைஞரின் அசையாத சிலை போன்ற நடிப்பு அம்சம் உயரிய விருதுகளுக்கு ஒப்பானது. ஒளியின் மிளிரலில் அரங்க மையத்தில் நிகழ்ந்த இறுதிக்காட்சி கண்ணகியை நாம் தெய்வமெனப் போற்றுவதில் தவறொன்றுமில்லையென்றே பிரளயன் சொல்லி முடிந்ததாகக் கொள்ளலாம் .

          இருக்கட்டும். இருக்கும் லட்சக்கணக்கான தெய்வத்தில் கண்ணகிக்கு என்று இடமில்லாமல் போக வேண்டிய அளவிற்கு அவள் மீது கடவுள் எனும் தீண்டாமையை நுழைக்க வேண்டாமே.

         நாடகம் முடிவுற்றதும் கலைஞர்கள் வரிசையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். திருப்பத்தூர் மற்றும் பாண்டிச்சேரியைச்சார்ந்த கலைஞர்கள் மட்டுமல்ல. பேராசிரியர்கள். முனைவர்கள். நாடகத்தில் நிகழ்த்துக் கலையின் நிபுணர்கள். பல்லாண்டுகள் பயிற்சி பெற்ற கலைஞர்கள் .

         ஒரு நாடகக் கலைஞனின் வாழ்வு கூட கண்ணகியின் வாழ்வு போன்றதுதான். அவனின் ஈடுசெய்ய முடியாத உழைப்பு ரசிக மனோபாவத்தை விடவும் மேலானது. அவன் விரும்புவது கைதட்டல்களோ பாராட்டுகளோ அல்ல. ஒரு காப்பியம் பேசும் உன்னதமான வாழ்வைச் சற்றேனும் பின்பற்றும் போதுதான் அவன் நடிப்பும் வசனமும் உண்மையாகிறது. நடித்த நெறியாள்கை செய்த தொழிற்நுட்பக்கலைஞர்களின் சிரத்தை. சவுண்ட் என்ஜினியர்கள். உடையலங்காரம் பின்னணி இசை. பாடகர்கள் பயிற்சி அளித்தவர்கள் “வஞ்சியர் காண்டம்“ என்னும் காப்பிய வடிவில் கண்ணகிக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர்களே. கண்ணகியின் கதை கண்ணகியோடு முடியட்டும். நவீன கண்ணகி உருவாகமல் பாதுகாப்பதுதான் ஆணாதிக்கத்தின் குறைந்த பட்ச வேலை. நமக்குத்தான் வேலை செய்வது என்றால் வேம்பாகக் கசக்கும் செயலாயிற்றே..

         வாழ்க பிரளயன் உழைப்பு..நாடகக் கலைஞர்களின்  அர்ப்பணிப்பு உணர்வும் வாழ்க.. பேரா.ராஜூ மற்றும் கலைஞர்கள் வாழ்க வாய்ப்பளித்த தமுஎக சங்கம் மற்றும் உதவிய கோவை மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தோழமை அமைப்புகள். கோவை மாவட்ட நாடகக் கலா ரசிகர்கள் வாழ்த்தக் கடமைப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

             

         கோவையில் நாடகவிழாக்கள் நடந்து நெடுநாள் ஆகிவிட்டிருந்தது. சமீபத்தில் எஸ்வி சேகர் கிரேசி மோகன் போன்றவர்கள் சில நாடகங்களை கோவையில் நடத்திவிட்டுப்போயிருந்தார்கள். அந்த நாடகங்களுக்கு உயர்தர நடுத்தர மக்கள் எதிர்பார்த்த அளவு பங்கேற்பு இல்லை. ரசனை சார்ந்து அல்லாமல் இருந்ததும் ரசனையின் அளவுகள் சென்னை போன்ற இடங்களில் அடியோடு மாறிவிட்ட சூழல்கள் கோவை போன்ற நகர்களுக்கு எஸ்வி சேகர் போன்றவர்களைத் திரும்ப வைத்திருக்கிறது. அந்த நாடகங்களுக்கு உடல்மொழி பாவனை போன்ற எந்த மண்ணாங்கட்டியும் தேவையில்லை. ஜனரஞ்ச பத்திரிக்கைகளில் இருந்து ஜோக்குகளைத் திருடும் நுட்பம் இருந்தால் மட்டும் போதுமானது.

   நாடகம் என்கிற வடிவத்திற்காக சேகர் போன்றவர்களை வரவேற்கத்தான் வேண்டும். உயர்குடி சமூக மக்களின் பகடி சமூகநிகழ்வுகளின் மீது அவர்களுக்கு இருக்கும் எதிர்மறையான சிந்தனை அவர்களின் இருப்புக்கு வேட்டு வைக்கிற அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குசும்பான வசனங்களின் மூலமாகக் கிண்டல் செய்வதாகவே காட்சிகளை அமைத்து தங்கள் சமூகத்தின் எரிச்சலைத் தணித்துக் கொள்கிறார்கள். அதில் வெற்று வாய்ச்சொல்லுக்கு மட்டுமே உழைப்பு. அவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள் தமது குடும்ப உறவினர்களுடன் உரையாடுவதையே நாடக ரசிகர்கள் கேட்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்தி ரசிக்க வைப்பதாகவே இருக்கும். உயர்குடியின் கலைகள் ரசிக்க வைக்கக் கட்டாயப்படுத்துவதாக இருக்கக் காரணம் அவர்களால் அரசாங்கக் கட்டமைப்புகளை எதிர்த்து ஒரு சொல்லும் உருவாக்கத்தெரியாது என்பது மட்டுமல்ல அதை அவர்கள் விரும்புவதில்லை. அரசாங்கம் எனப்படுவது நம்முடைய அரசு. நாம்தான் நிருவகிக்கிறோம் என அதிமேதாவித் தனமாக விரும்புவதும் ஒரு காரணம்.

     

        காலமும் பொழுதும் அமைந்தால் மா.கம்யு கட்சியே மாவட்டந்தோறும் இந்த நவீன நாடகத்தை நிகழ்த்த முன்வரவேண்டும். மற்றவர்களிடம் உதவி கேட்டால் மஞ்சள் பச்சை பிரச்சனைகள் வரும். உதவும் மந்திரியும் மா.செவும் மாற்றப்படுவார். பாவம் நாம் ஏன் அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டும்.

       பிரளயன் போன்ற கலைஞர்களை குறைந்த பட்சம் சிறுபான்மையினராக இருக்கும் உன்னத கலா ரசிகர்களிடத்திலாவது கொண்டு சேர்க்க வேண்டும். நாடகக் கலையையும் கூலிக்காரன்தான் கோவணத்தில் முடிந்து கொண்டு ஊர்ஊராய்த்திரிய வேண்டும் எனும் விதி புழக்கத்தில் சங்கம் முதற்கொண்டு இருப்பதால் தமுஎக சங்கமாவது நாடகக்காரனின் வலியைக்குறைக்க முயற்சிக்கலாம். அந்தத் திறம் அமைப்பு சார்ந்த ஒவ்வொரு இயக்கங்களுக்கும் இருக்கிறது. அவை கம்பெனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தாது. கம்பெனிகளுக்கு வேலை செய்பவர்களிடம் கலை சிறுத்துப்போய்க்கொண்டிருக்கும் காரணமும் அதுதான்.

          இதற்கு ஒரே வழி நிறுவனங்கள் கலைகளின் மீது குறைந்த பட்சம் உறுதி மொழியையாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் முதலீடுகளை நம்புவதோடு கலையை நம்பினால் ஒரு கலைஞன் உண்மையிலேயே சமூகத்தின் தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவான் என்பதற்கு வஞ்சியர் காண்டத்தின் வழியாக நமக்குத் தோன்றும் சிந்தனையாகும்.