புதன், 31 அக்டோபர், 2012


அரிசி உப்புமா

 

10 மணி அலுவலகத்திற்கு 9 மணிக்கு

வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும்..

8.40க்கு கடாயை அடுப்பில் வைக்க வேண்டியதாகிறது..

எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பரும்பு

வெங்காயம், கறிவேப்பலை, வரமிளகாய் வற்றல்

கொஞ்சம் பிசிறு முந்திரி...

கலந்து நன்கு வதங்கவேண்டும்..

 

பிறகு தண்ணீரை முக்கால் கடாய்க்கு ஊற்றி

கொதிக்க விடவேண்டும்..

அப்போதுதான் உறவினர்கள் அழைப்பிதழ்கள் கொண்டு வருவார்கள்

முகநூலில் எழுதிய கவிதைக்கு விளக்கம்

கேட்டு தோழி அலைபேசுவாள்..

தண்ணீர் வற்றி தீயும் வாசனை..வரும்..

ஓடிப்போய் மறுபடியும் தண்ணீர் ஊற்றி வைக்க

மறுபடியும் கொதிக்க நேரமில்லை மணி 8.55

அரிசி குருணையைக் கொட்டிக் கிளறுகிறேன்..

 

இன்னும் பின்ன முடியாது குதிரைவால் கொண்டைதான்..

டப்பர்வேரில் அடைத்துக் கொண்டு

வாழைப்பழங்களை பிய்த்துக் கொண்டு வாசலில் பாய்கிறேன்..

ஸ்கூட்டியை நாயைத்தரதரவென இழுப்பது மாதிரி இழுத்து

செல்ஃப் எடுக்காது..

கொடுமைக்கார மேலதிகாரியை மனதில் நினைத்து

உதைத்தால் போதும் உறுமிக் கொள்ளும்

 

மணி 9.15 இரயில்வே கேட் அடைத்திருக்கிறது..

இரண்டு ரயில்களை வெறிக்கப்பார்க்கவேண்டும்.

இரயிலில் படிக்கட்டில் பயணிக்கும்

தம்பி சாடையில் இருப்பவன் பறக்கும் முத்தங்களைத் தருகிறான்

அதெல்லாம் ஓகே...பாத்துப்பா விழுந்தறாத...

 

 

அலுவலகத்தில் வண்டியை நிறுத்தும் போது மணி 9.20

வருகைப்பதிவேடு எம்டியிடம் போயிருக்கும்

தாமத வருகைப்பதிவேடு தேடி எடுத்து கையெழுத்திடும் போது

சில அரிசிக்குருணைகள் விழுகிறது...

 

மதிய உணவு இடைவேளையின் போது

உடன் உணவருந்தும் பணியக தோழிகள் கேட்கிறார்கள்

எப்படிடி உண்ணால மட்டும் அரிசி உப்புமா..ரவா உப்புமா..

சேமியா..ரவாகிச்சடி..வெண்பொங்கல்.. சம்பா ரவை உப்புமா

சூப்ப்பபராப் பண்ண முடியுது...

அதத்தான் கொஞசம் எங்களுக்கு சொல்லலாமேடி...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக