சனி, 31 ஜனவரி, 2015

அவைநாயகன் மொழிபெயர்ப்பு நூல் “மாயா ஏஞ்சலோ“ கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது ?



கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது ?
மாயா ஏஞ்சலோ
தமிழில்- அவைநாயகன்
வெளியீடு- எதிர் வெளியீடு
நியு ஸ்கீம் ரோடு-பொள்ளாச்சி

நமது இந்திய-தமிழ் மற்றும் இன்னபிற மொழியியல் ஊடகங்களில் கருப்பினங்கள் மற்றும் செவ்விந்தியப் பழங்குடிகளும் அந்த இனவகைகளும் பொதுமையான தன்மைக்கு உடன்படாதவர்கள். போதை மருந்து கடத்து பவர்கள், கடத்தல்காரர்கள்,கொடுரமான அடியாட்கள், நர மாமிசம் உண்பவர்கள். உலகின் எல்லாத் தீங்குகளுக்கும் அவர்கள்தான் காரணமானவர்கள். கறுப்பின ஆண்கள் பெண்கள் மிருகங்களுக்கு இணையான கர்ணகொடுரமான இனப்புணர்ச்சியாளர்கள். விளையாட்டு வீரர்கள், முறையற்ற பாலுணர்வாளர்கள். அல்லது வெள்ளை இனத்துப் பெண்களுக்குரிய இச்சையாளர்கள். ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவிற்கும் மற்ற கருப்பின நாடுகளுக்குப் பதக்கங்கள் அள்ளித்தருகிறவர்கள். போலியான பாஸ்போர்ட் மற்றும் முறையற்ற வகையில் பிற நாடுகளுக்குள் ஊடுருவியிருப்பவர்கள். திருட்டு மற்றும் குற்ற வகைகளால் மட்டுமே தங்கள் வாழ்க்கை யை நடத்தி வருகிறவர்கள். இப்படியாகச சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் நம் ஊடகங்களில்  வருகிற செய்திகளில் உலகச் செய்திகளில் காட்டப்படுகிற காணூடகங்களில் இவையே முக்கியமாக்கப்படுகிறது.
      கருப்பினத்தவரான ஒபாமா வந்துவிட்டார் இனி அவர்களின் வாழ்வு உயர்ந்து விடும் என்று கனவு சொல்லப்பட்டது. அவரும் தான் அமெரிக்க அதிபராகவே காட்டிக் கொண்டார். கோபி அனான் போன்ற கருப்பினத்த வர்கள் ஐ நாவின் பதவிகளுக்கு வந்தபிறகும் அவர்களுக் கான மரியாதை இல்லை.
      சமீபத்தில் எதிர் வெளியீடாக வந்துள்ள “கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது“ மாயா ஏஞ்சலோவின் சுயசரிதை முக்கியமானது. தமிழில் கவிஞர் அவைநாயகன் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல் ஏற்கெனவே 1969ல் வெளியாகி உலகத்தின் கவனத்தை ஈர்த்து இருந்தாலும் தமிழில் ஆங்காங்கு குறிப்புகளாக கட்டுரைகளாக காணொளிப் பதிவுகளாவே வந்திருக்கிறது. தீவிரமான இலக்கிய வாசிப்பாளர்களுக்கு இந்த சுயசரிதை அறிமுகம் உண்டு. அவருடைய கவிதைகளின் அறிமுகங்களும் உண்டு. இணையங்களிலும் வலைத்தளங்களிலும் அவர் பெயர்கொண்ட விக்கிபீடியாவிலும் செய்திகள் உள்ளது.
ஆனால் மிகப்பரவலான வாசிப்பு தளத்தில் மாயா ஏஞ்சலோவின் சுயசரிதை அறியப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. நமது ஊரில் இலவசமாக கந்த சஷ்டி கவசம் கொடுத்தாலே கூட கூட ஒரு தேங்காய் மூடி இலவசமாக கேட்கிற ஈனத்தனம் கொண்டது நம் தமிழ் இலக்கிய உலகம். அப்படியே வாங்கிக் கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள் அல்லது பேருந்திலோ தேநீர்க் கடையிலோ “மறதி“யாக வைத்துவிட்டு அடுத்த முறை அந்தப் படைப்பாளியைப் பார்த்தால் இந்த ஜார்ஸ் லூயி போர்ஹே, பியாதெர் தாஸ்தா வெஸ்கி வந்து என்பார்கள்.
    ஒரு வரப்பீடியோ பாதி டவரா தேநீர் சூட ஒரு படைப்பாளிக்குத் தன்வாழ்நாளில் வாங்கித்தராத மகத்தான இலக்கியவாதிகள் உலவும் சுடுகாடுதான் நம் தமிழ்கூறும் நல்லுலகம். நம் உலகிற்கு என்னதான் நீங்கள் மாங்கு மாங்கு என்று உழைத்தாலும் “அப்படிங்க ளா“ வென்று கேட்டு அந்த ஷணமே கொன்று எரித்து விடுகிற சங்கல்பம் கொண்டவர்களின் ரத்தபூமி இது.
மாயா ஏஞ்சலோ எழுத்தாளர், கவிஞர்,சமூகச் செயல்பாட் டாளர், பாடகி, பத்திரிக்கையாளர், திரைப்படைப்பாளர் எனப்பன் முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சலோ.கறுப்பு எழுத்தின் முன்னோடி. மார்ட்டின் லூதர்கிங்,மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர் அமெரிக்கத் தென்பகுதி புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர்.கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு வறுமையை அனுபவித்தபோதினும் நம்பிக்கையை, சாதனையைக் கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்
ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள் தனது ஆற்றலையும் மீட்டெழுச்சி யையும் சுயசரிதையாக எழுதியிருக்கிறார். தமிழுக்கு ஒரு சில கவிதைகள் அறிமுகமாகியுள்ள நிலையில் மாயா ஏஞ்ச்லோவின் சுயசரிதை ஒரு முழுநூலாக வெளிவருவது இதுவே முதல்முறை
      இது மூன்று முதல் பதினேழு வயது  வரையிலான அவரது வாழ்க்கைப் பதிவு ‘I Know why the caged bird sings’  என்ற பெயரில்1969-ல் வெளியாகிப் புகழடைந்தது. உயிர்ப் பொருளின் பண்புக்கூறுகளை வெளிப்படையாய் உலகின் கண்களுக்கு முன்வைத்த அங்கக ஒருமை (organic unity) என இப்படைப்பு அறியப்பட்டது.
தமிழ்நாவல்களுக்கும் இன்று புகழ்பெற்று விளங்குகிற பல படைப்பாளர்களுக்கு பற்பல நடைஉத்திகளைத் தந்த சுயசரிதை. ஒவ்வொரு அத்தியாயமும் தருகிற வாசிப்பு அனுபவங்கள் நமக்கு அமெரிக்க கருப்பின வாழிடங்களுக் குள்ளாக கொண்டு செல்கிறது.
மொழிபெயர்ப்பாளரும் நூலின் தமிழாசிரியரும் கூற முற்படுவது என்னவெனில் தலித் படைப்பியக்கச செயல்பாட்டிற்கும் பெண்ணியக் கோட்பாடுகளின் வழியாக நாம் மாயா ஏஞ்சலோவின் வாழ்க்கைப் பதிவுகளை விவாதிக்கலாம் என்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அளவில் அதிக கோஷ்டிகள் கொண்டவையாக இருப்பது தலித் இயக்கங்கள்தான். யார் எந்தப்பிரிவில் யாருடன் செயல்படுகிறார்கள். யாருடைய தலைமையில் தற்போது இயங்குகிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. தலித் இயக்கங்கள் சிதறிக் கொண்டிருப்பது பற்றிய அறிதல்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
தேவாலயங்கள் அவ்வப்பொழுது அவர்களுக்குள்ளாக குழு மனப்பான்மையைக் குழப்பத்தை ஏற்படுத்தப்படுகிறது
பருத்தி எடுக்கிற உழைக்கிற மக்களுக்கு உபதேசங்களும் பிரசங்கங்களும் அதன் பாதிரியார்களின் நடவடிக்கைகளும் வேதவசனங்களுக்கு சம்பந்தமில்லாத வாழ்க்கை வேத வசனங்களுக்குள்ளாக அவர்களின் கேள்விகள் பற்றியதாகவே உள்ளது.
வாழ்க்கைப் பின்னணி சம்பவங்கள்
புறநகர்ப் பகுதிகளில் ஊடுருவுகிற பிற இனமக்களுடன் கடைகள் வைத்துப்பிழைக்கிற குடும்பம்
கருப்பினக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள் அவர்களின் உணவு வகைகள். வீட்டின் அம்சங்கள் உறவுகளைப் பேணுகிற விதம். மதங்களின் கட்டுப்பாட்டுக் குள்  வந்து விடுதல். முதல் உலகப் போர் முடிந்த சமயம். மத அமைப்புகள் சுதந்திரம் தருதல்.
மிகப்பெரிய அளவில் அவர் புரட்சிக்கான நடவடிக்கைகள் எதுவும் செய்யவில்லை.நிறபேதங்களுக்கு அப்பால் பட்ட நடவடிக்கைகள்.
தனக்குப்பிடித்தமான இளைஞனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளுதல்.
ஆதித்தாய் சமூகத்தை நினைவு படுத்துகிற வாழ்க்கை முறை.  இன்று நாற்பதாண்டுகள் கழித்து மீண்டும் அவருடைய சுயசரிதையை தற்காலத்தின் இலக்கியமாக அறியக் கூடிய அளவில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு.
ரேடியோ பெட்டிகள் வந்த காலத்தில் நடக்கிற குத்துச் சண்டையில் ஜோ லுயிஸ் உலக சாம்பியன் ஆகிற கொண்டாட்டம் முக்கியமானது. கறுப்பினத்தின் முதல் சாம்பியனாகிற சரிதம் இங்கு மாயா ஏஞ்ச்சோவால் பதிவு செய்யப்படுகிறது. இன்றைய தினம் ஒரு கருப்பினத்தைச் சார்ந்த ஒருவர் அமெரிக்க அதிபராகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். ஐநாவின் உயர்பதவிகளில் அமர்ந்திருக் கிறார்கள். கறுப்பின மக்களின் அயராத வலிமை மிக்க உழைப்பின் பலன்கள் இவை. மாயா ஏஞ்சலோவின் காலத்தின் ரேடியோ பெட்டிகள் வளர்ச்சியைக் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்கள் தங்கள் நாடுகளில் அறிமுகப்படுத்திய எல்லாத் தொழில் நுட்பங்களையும் இந்திய மண்ணிற்குள்ளும் கொண்டு வந்தார்கள். அதன் விளைவே ரேடியோ. எல்லா ஸ்டேசன்களையும் ஆசை தீரத்திருப்பித்திருப்பி இந்திய மொழிகள் அத்தனையும் பேசுகிற ஒரு பெட்டிக்கு முன்னால் இந்திய மக்கள் மொழிகளை நேசித்த காலமது. ரேடியோவை அணைக்காமல் கொஞ்சம் கொஞ்சம் பேட்டரி செல்கள் வந்தகாலத்தில் குழுவாகச் செயல்பட்டு அது தீரும் வரையிலும் கேட்பதில் இருந்த ஆர்வம்.
ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கிற மக்களுக்குப் போர்ச் செய்திகளையும் அதன் பயங்கரத்தை யும் ஒலிபரப்பி அச்சுறுத்தியும் கொண்டிருந்தார்கள். அந்த நகரம் பிடிபட்டது. அந்தக கொடுங்கோல் மன்னர்களை அழித்தாயிற்று என்பதான அறிவிக்கைகள் அடிமை மக்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களை அச்சத்தின் பிடி யில் வைத்திருக்க அவர்களுக்கு இந்த ரேடியோ சௌகரி யமாக அமைந்த ஒன்று. விஞ்ஞானம் எந்தக் காலத்திலும் அடிமைகளுக்கு உதவிய சரித்திரம் இல்லையென்பதை மாயாவும் காட்டுகிறார்.
      இன்றைய தென் அமெரிக்க வட அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க மக்கள் விளையாட்டுத் துறைகளில் தங்கப்பதங்கங்களை தங்கள் நாட்டிற்கு தனிநபர் விளை யாட்டுகளிலும் குழுவிளையாட்டுகளிலும் சாதிப்பதற்கு இந்தக் கறுப்பின இளைஞனின் வெற்றி முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
   மாயாவின் கவித்துமிக்க விவரணைகள் இரண்டாம் மறுமலர்ச்சி சீர்திருத்த இயக்க எழுத்தாளர்களின் உத்திகளுக்குப் பயண்பட்டிருக்கிறது.
அன்றைய நாளின் உணவு முறைகள், கறுப்பின மக்களின் உறவு முறைகள், அவர்களின் விளையாட்டுகள் அவர்கள் பயின்ற கல்வி முறைகள் அரசியல் அணுகுமுறைகள்
நெருக்கடிகள் தேவாலயங்களின் நடவடிக்கைகள்
விடுமுறைக்கு முந்தைய நாள்ஞாயிற்றுக்கிழமை தேவலாயச் சூழல்கள் கடவுளுக்கும் இயேசுவுக்கும் உள்ள வேறுபாடுகள் இயேசு ஏன் கறுப்பினத்தைச் சார்ந்தவராக இல்லை கடவுள் ஏன் தங்களை அடிமைகளாக அவதரிக்க வைத்திருக்கிறார். தேவாலயப்பிரிவிலிருந்து வேறொரு தேவாலயத்தின் கூடுகைகளுக்குச் சென்று கொள்வதற்கான அனுமதிகள். அமெரிக்க வரலாற்றில் ஏழை எளியவர்கள் தங்கள்
பைபிளின் வசனங்கள்
“சனிக்கிழமைகளில் சலூன் கடைக்காரர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களை இந்தக்கடையின் முன்புறம் அமரவைத்துக் கொண்டார்கள் அதன் நீள பெஞ்சுகளில் தெற்கின் நாடோடிப் பாடல்கள் தளர் நடை போடும்.சிறு யாழும்,கிடாரும் பிராஸோவின் சோகப் பாடலை இசைத்துக் கொண்டிருக்கும்..“ என்று மொழிபெயத்தும்
மற்றும்
“வெட்டுக்கிளியின் பசுமை நிறத்தையும் மெல்ல மெல்ல மாறி உறைபனி வெண்மை அடைவதையும் நான் கவனிப்பேன்..அதிகாலையில் பெரிய வாகனங்கள் வந்து பருத்தி எடுப்பவர்களை ஏற்றி அடிமைகள் வேலை செய்யும் பண்ணைக்கு அழைத்துச் செல்லும்.“ அன்று மட்டுமல்ல இன்றும் கூட புறநகர்ப் பகுதிகளிலிருந்து கனரக வாகனங்களில் மக்கள் கொத்து கொத்தாக கட்டிடப் பணிகளுக்கு ஏற்றிச் செல்கிற நிலையைக் காண்கிறோம். தற்காலத்தில் நிறுவனங்கள் சொந்த பேருந்துகளை வைத்து அழைத்துப் போகிறதையும் நாம் காண்கிறோம். நம் சமூகத்திற்கும் வேறுவழியில்லை.
மாயாவின் கண்களில் நிழலாடிய அமெரிக்கத் தெற்கு மாகாணத்தின் காலம் அது.ஸ்டாம்ஸ் ஆர்கன்சாஸ் பகுதியின் நிலவியல் சித்திரங்களும் அதன் பனிப் புகை மூட்டங்களும் மாயாவின் மொழியிலும் அவைநாயகன் தமிழிலும் நம் மனதில் எழுகிறது.
கிளான் அமைப்பு என்பது வெள்ளை அமெரிக்கர்களின் நிறவெறி அமைப்பின் முக்கயப் பணியே இனத்தூய்மை வாதம் எனும் வகையில் செயல்படுவது இதன் பணி.1860 களில் துவங்கி இன்றளவும் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த கறுப்பினர் மீது  வன்முறையை ஏவிவிட்டு அவர்களைத் தொடர் அச்சத்தில் வைப்பதுதான் இவர்களுடைய செயல்பாடு.
-கறுப்பு-வெள்ளையர் பிரிவினையைக் கருப்பினக் குழந்தைகள் அறிந்திராவிட்டாலும் வெள்ளையர்கள் நம்மை எப்படி நடத்துவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். வெள்ளையர்கள் வேறுபட்டவர்கள் மட்டுமல்ல அஞ்சத்தக்கவர்கள் அந்த அச்சமே வெறுப்பைத் தந்தது. அதிகாரங்களுக்கு முன் எளியவர்கள். செல்வர்களுக்கு முன்னால் ஏழைகள். முதலளாளிகளுக்கு முன்னால் உழைப்பாளர்கள். ஆடம்பர  உடைகளுக்கு முன்னால் கந்தலாடைகள். வெள்ளையர்கள் நல்லவர்களாக எப்பொழுதும் இருந்த தில்லை என்கிறார் மாயா. அவர் நமக்குச் சொல்ல வேண்டியதில்லை. நாம் மூன்னூறு ஆண்டுகளில் இழந்த வலியும் களவு போன வளங்களும் செல்வங்களும் நமது நாட்டினுடையதுதான் அதிகம்.
மாயாவின் சரிதையை வாசிக்கும் போது அமெரிக்க சுதந்திரதேவியின் சாயல் எனக்கு வெள்ளைக்காரியாகத் தெரிகிறாளா கறுப்பினப் பெண்ணாகத் தெரிகிறாளா புரியவில்லை
அமெரிக்க விடுதலை நாளும் அதற்கு முந்தைய துதிப் பாடல்களும் வசனங்களும் கறுப்பினத்தின் துயருக்கு மருந்திடுவதைப் போலவேதான் உள்ளது. இன்றாவது தேவன் வருகையும் மகிமையும் நிகழுமா என்று சபையோர் இறைஞ்சுவது நமக்குப் புரிகிறது. அவர் இரண்டாயிரத்திற்கும் முன்பு மாதவிடாய் போல வந்து போனதோடு சரி எந்தக்காலத்தில்தான் வந்தார்.
அருட்தந்தை ஹொவார்ட்ஸ் தாமஸ் பற்றி மாயா வேடிக்கையாகச் சொல்லும் போது “அவர் மேற்குத் திசையிலுள்ள சொர்க்கத்திற்குத்தான் போகிறார் என்று நினைத்துக் கொள்வேன் ஆனால் அப்படியில் லையாம்..அவர் டெக்சாஸ் வரைதான் போவதாய்ப் பாட்டி சொன்னதாகப் பதிவு செய்கிறார். தன் வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்ட அம்மாவின் அம்மாவான பாட்டி ஒரு வகையில் ஜெர்மானிய வெள்ளைக்காரியாம். சற்று வெள்ளை நிறம் தென்படுகிறவர்களுக்கான நிறத்தின் பெயர் நீக்ராய்டுகள். தன் கதைகளின் மூலமாக நிறவெறியின் கோரங்களை அறிந்துள்ளார். அமெரிக்க விடுதலை நாளைத் தவிர்த்து ஒரு கருப்பனும் ஜஸ்கிரீம் கூட வாங்க லாயக்கற்றவர் களாகவே வெள்ளையர்கள் கருதியிருக்கிறார்கள்.
“வெள்ளையர்கள் இப்படி ஊதாரித்தனமாகச் செலவழிக்க என்ன காரணமென்று தெரியவில்லை.கடவுள் ஒரு வெள்ளையர் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு சார்பானவர் என்று எவராலும் சொல்லித்தரப்பட வில்லை.“ என்கிறார் மாயா..
1930 பகுதி செயின்ட்லூயிஸ் பகுதி தங்கவேட்டை நகரம். இந்த நகரத்தில் வசித்த காலத்தில் தன் அம்மாவின் நண்பருடன் ஏற்படுகிற விசித்திரமான கலவி பற்றிய சூழல்கள் பரிதாபகரமானவை. சிறுமிகளுக்கு அந்த நகரில் நிகழ்கிற பாலியல் வன்முறைகள் சிறிதும் அதுபற்றிய அறிதலின்றி “நடந்துவிடுகிற“ சம்பவங்கள் கிறிஸ்துவை சபிக்க வைக்கிறது. சமீபத்தில் போப் ஆண்டவரைச் சந்தித்த சிறுமிகள் கூட தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளைக் கண்டு ஏன் கிறிஸ்து மீண்டு உயிர்தெழுந்து வரவில்லையென்கிற கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அவரைக் கூட மாயா திரு.ப்ரீமன் என்றும் அவருடைய அன்பிற்காகவும் வருகைக்காக ஏங்கினேன் என்று பதிவு செய்வது துயர்மிகு காதலின் வார்த்தைகள் அவை.
அவைநாயகன் மொழிபெயர்ப்பில் “புலனுணர்வுகள் கிழிந்து விசிறியடிக்கப்பட்டன ஏதோ உடைந்தது. என்னவோ நுழைந்தது. எட்டுவயதுச் சிறுமியின் உடல் மீது நிகழ்த்தப்படும் வல்லுறவு என்பது ஒரு ஊசி தோற்றுப் போவதுப் போல. ஓட்டகம் தோற்பதில்லை. குழந்தை தோற்றுவிடும்..“
பிற்பாடு மாயா தனக்கேற்பட்ட அன்பும் காதலுமான உறவு குறித்த காலம் பள்ளியில் படிக்கிற போது ஏற்படுகிறது.கி.பி 270 ல் ரோம் நகரில் வாழ்ந்த புனித தியாகி வாலெண்டின். அவர் பிறந்த தினம் காதலர் தினமாகக் கருதப்படுகிறது. அன்று வகுப்பறையில் அளிக்கப்பட்ட பொருட்களை வைத்து பரிசுப்பொருட்களும் கடிதங்களும் பரிமாறுகி பொழுது டாமியின் கடிதம் பற்றிச் சிலாகிக்கிறார்.
பட்டமளிப்பு விழாக்களில் கடைப்பிடிக்கப்படுகிற  கோலாகலநிகழ்வுகளில் கறுப்பின மாணவ மாணவிகளுக்கு இழைக்கப்படுகிற வேற்றுமைகள் வேதனை தருபவை. ஒவ்வொரு பருவங்களுக்கும் பட்டங்களை அளிக்கிற மாணவர்களை உற்சாகப்படுத்துகிற பள்ளிகள் அன்று இருந்துள்ளது.
“நாங்களெல்லாம் வெறும் பணிப்பெண்கள். விவசாயிகள்,குற்றேவலர்கள்,துணிவெளுப்பவர்கள் இதற்குமேல் கிடையாது. எதையாவது நாங்கள் விரும்பினால் அது கேளிக்கூத்தானது. மிதப்பானது.“
“பிறகு நான் சிலரை வாழ்த்தத் தொடங்கினேன். எல்லா முரட்டு வெள்ளையர்களையும் படுக்கையறையில் வைத்துக் கொன்று குவித்த காப்ரியேல் பிராசரையும் நாட்டர்னரையும் விடுதலைப்பிரகடனத்தில் கையெழுத்திடும் முன்பாகவே கொல்லப்பட்ட ஆபிரகாம் லிங்கனை,எழுபது அடிமைகளை விடுதலை பெறச்செய்து மண்டையில் அடிபட்டு மாய்ந்த பெண்மணி ஹெரியேட் டப்மனை, சாண்டா மரியா கப்பலில் மூழ்கிய கிறிஸ் டோபர் கொலம்பஸை.“ என்கிறார்.
மாயா சொல்கிறார் “பாட்டியை என்னால் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை. அவளுடைய ஆப்பிரிக்கப் புதிர்,இரகசிய சந்தேகத்தன்மை என்பது அடிமைத்தனத் தாலும் நூற்றாண்டுகளாகத் தரப்பட்ட மற்றும் மீறப்பட்ட உறுதி மொழிகளின் சேர்க்கையாகும் அவளின் இந்த எச்சரிக்கை நடவடிக்கை பற்றி கறுப்பு அமெரிக்கப் பழமொழி ஒன்றும் உண்டு.“நீக்ரோவை நீ எங்கே போயிருந்தாய் என்று கேட்டால் அவன் எங்கே போய்க் கொண்டிருக்கிறானோ அந்த இடத்தைச் சொல்வான்..“
          தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தெருக்களிலிருந்து மக்கள் கூவினார்களாம் “நாம் போரிடப் போகிறோம். ஜப்பானுக்கு எதிராகப் போரை அறிவித்துவிட்டோம்..“ குண்டுகளின் சத்தம் அச்சம் கொண்டு தன் சகோதரன் பெய்லியுடன் வீட்டுக்கு வருகிறார்கள். அப்பொழுது தன் தாய் திருமணம் செய்து கொண்டதை மிக இயல்பாகச் சொல்கிறார் மாயா.
ஜப்பானியர்களின் வெளியேறத்துவங்கிய இடங்களில் நீக்ரோக்களின் ஆதிக்கம் பரவியது. நாடோடி இசைப்பாடல்கள் ஒலிக்கிறது. ஜப்பானியர்கள் மீதான அணுகுமுறை மென்மையாகவே இருந்துள்ளது. ஏனெனில் அவர்கள் முரட்டு வெள்ளையர்கள் அல்ல என்கிறார்.
ஜப்பானியப் போருக்குப்பிறகான சான்பிரான்சிஸ்கோ மற்றும் நிலநடுக்க நிகழ்வுகள் என்று தன் பால்ய வாழ்வின் அடுக்கு அடுக்கான நிகழ்ச்சிகள். கறுப்பினத்தவர்களின் விடுதிகள் ஓட்டல்கள் சூதாட்டங்களில் உள்ள ஆர்வங்கள். நிலபேரங்கள் என்று அந்த நாளின் சித்திரங்கள் நமக்கு வந்து போகிறது. குடியேற்றப்பகுதிகளில் நீக்ரோக்கள்.முரட்டு வெள்ளையர் கள்,ஜப்பானியர்கள் என வாழக்கிற மக்கள்களுக்கிடையி லான உறவுகளும் வியாபாரங்கள் வீடுகள் பொருட்கள் தேவாலயங்கள் பின்னணியில் காலம் செல்கிறது. தன் பாட்டி வாயிலாகவும் அம்மாவின் வாயிலாகவும் தனது ஆசிரியர்கள் மதபோதகர்கள் வாயிலாகவும் அவர் தன் இருப்பை அறிந்து கொள்ள முயல்கிற நாட்கள் தமிழ்ச் சூழல் வாழ்க்கைக்குப் புதியது.
        மாயா தன் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் சந்தித்த மனிதர்களின் இயல்புகளைப பிரதிபலிக்கிறார். ஒருகட்டத்தில் அவர் எதிர்கொண்ட சூழல்களைக் குறித்துப் பேசும் போது “இரண்டாம் உலகப் போரில் சுவிட்சர்லாந்து இருந்த நிலைதான் எனக்கு. என்னைச் சுற்றிலும் குண்டுகள் வெடித்துச் சிதறுகின்றன. ஆன்மாக்கள் சித்தரவதைக்குள்ளாகின்றன. என்மீது திணிக்கப்பட்ட நடுநிலையின் கட்டுப்பாடு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை..“என்கிறார்.
       தன் வாழ்வில் தன்னை பாதித்த எழுத்தாளர்கள் கவிஞர்கள் நாடோடிப்பாடல்கள் பற்றிய குறிப்புகளையும் சில கவிதை வரிகளையும் கொண்டாடும் மாயா தன் உணர்ச்சி மிகுந்த நாட்களையும் குறிப்பிட மறக்கவில்லை. இங்கிலாந்தின்  ராட்கிளிப்ஹால் எழுதிய “த வெல் ஆப் லோன்லினெஸ்“ என்கிற புத்தகம் அவரை வெகுவாக பாதிக்கிறது. லெஸ்பியனிசம் குறித்த அறிதல் களின் மீதான கவனம். அந்தக் கருத்தாக்கம் மற்றும் அப்படியான பெண்கள் சிறுவர்கள் ஆண்கள் குறித்த மாற்றுப்பாலினத்தவர்களின் மீது கவனமும் துயரமும் அவரை வெகுவாக பாதிக்கிறது. தன் உணர்வைத் தனித்துக் கொள்ள எடுக்கிற இயல்பான செய்கைகளை பகிரங்கமாக்குகிறார். தனக்குப்பிடித்த ஒருவனுடன் கூடிக் கொள்கிறாள். கர்ப்பமடைகிறாள் மாயா அமெரிக்க விடுதலைநாளுக்குப் பிறகு சான்பிரான்சிஸ்கோ கோடைகால வகுப்பில் பட்டம் பெற்றுக்கொள்கிறார்.
அப்பா சொன்னாராம்
“ஏவாள் அந்த ஆப்பிளைச் சாப்பிட்ட போதே பெண்கள் பிரசவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.“
இறுதிவரிகள் மேலும் கவிதையாக முடிகிறது
அம்மா முணுமுணுத்தாள் “இதோ பார், நல்லதைச் செய்ய யோசிக்காதே.நன்மை செய்ய வேண்டுமானால், யோசனையேதும் செய்யாமல் உடனே செய்.“ விளக்கை அணைத்து, என் மகனை மெதுவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு அவள் தூங்கப் போனாள்..
         மாயா ஏஞ்சலோ பற்றிய தகவல்கள் கவிதைகள் இணைய இதழ்களில் குறிப்புகள் மலிந்து கிடக்கிறது. அவருடைய நேர்காணல்கள் களப்பணி விவரங்கள் காணக்கிடைக்கிறது. நாம் கூகுளில் நுழைந்த எந்த மொழியிலும் அவரைப்பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். அவருடைய மற்ற சுயசரிதைகளும் சிறு சிறு கட்டுரைகள் கிடைக்கிறது. தகவலுக்குள் தகவல் சுட்டிகள் பிறகு சுட்டிகளுக்குள் போகவேண்டிய வெப்சைட்கள் என்று நாம் நுழைந்து நுழைந்து செல்கிற பொறுமை சமகாலத்தின் வாசிப்பியக்கத்திற்கு வாய்த்திருக்கிறதா வென்று தெரியவில்லை. ஒரு சில கவிதைகள் மூலமாக அறிமுகமாகியுள்ள நிலையில் சுயசரிதை என்கிற வடிவில் நாவலாகவும் கருதலாம். சிறுகதைகளாகவும் வாசிக்கலாம், பத்திகளாக, கட்டுரைகளாகவும் அறிய முடிகிறது.
        முறையான குடும்ப அமைப்பு முறைகள் அற்ற சமூகமாக அவர்களின் சுதந்திரமான உணர்வுகள் வெளிபட்டிருக்கிறது. ஒழுக்கவியலை மீறிய பாலுறவுகள், கட்டற்ற சுதந்திரம் பேணுகிற வாழ்க்கை. வெகு விரைவில் குடும்பக் குழுவிலிருந்து பிரிந்து போய்க் கொள்கிற வாழ்க்கை. ஒரு அரசியல் அமைப்பு ஏற்படுத்திக் கொள்வது பற்றியோ அல்லது ஒரு அமைப்பிற்குள்ளாக அதன் கட்டுகளுக்குள் தங்களைப் பொருத்திக் கொள்கிற நிலைகள் குறித்தோ அவர்கள் என்றுமே யோசிக்காதவர்கள் என்றுதான் தோன்றுகிறது. இந்தியப் பெருநகரங்களில் அவர்களின் இருப்பும் அப்படித்தான் உள்ளது. குறிப்பாக சிறுவர் சிறுமிகள் மீது அவர்கள் ஏற்படுத்திக் கொள்கிற பாலியல் பிரச்சனைகளை அந்தக் காலத்தில் மாயா ஏஞ்சலோ வெளிப்படையாகத் துணிந்து எழுதியிருக்கிறார்.
        தொழில் புரட்சியின் வாயிலாக நாடுகள் அடிமையாகிற சூழலில் எதிர்க்கிற நாடுகள் மீது போர்கள் தொடுக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் செழிக்கிற நாடுகளின் மக்களை லட்சக்கணக்கில் கொன்றது. அனுகுண்டுகளை வீசியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான சமூக சீர்திருத்தம் அரசியலைமைப்புகள், ஐ நா மன்றம் உதமானது. மாயாவின் வாழ்க்கை இந்த பரிமாணங்களுக் குள்ளாகவே பயணித்திருக்கிறது என்பதுதான் அதிசயம்.மார்கம் எக்ஸ்,மார்ட்டின் லூதர் போன்ற ஆளுமைகளுடனான இயக்கங்களில் பங்கேற்றி ருக்கிறார். இந்த நெடிய நீண்ட பரப்பில் அவருடைய காலம் மறைக்க முடியாத பதிவாக மாறியதின் பால்யம் இந்த நூலில் பொதிந்துள்ளது.
      நூல் அறிமுக உரையில் நூலிலுள்ள அத்துனை அம்சங்களையும் சுத்தமாக எடுத்துக் கூறி “அட இவ்வளவுதான் இருக்கும் போலிருக்கிறது..“ என்று வாசகர்கள் தவிர்க்கும் படியாகத்தான் அறிமுக உரைகள் உள்ளது. ஆனால் சான்பிராசிஸ்கோ நகரம், இரண்டாம் உலகப் போர். புதிய குடியெற்றங்கள், அவர்களின் கடைகள், வீதிகள், மக்கள், தேவாலயங்கள். உணவு முறைகள், வாழ்க்கை, குடும்ப நிகழ்வுகள்,பள்ளிகள். வீதிகள், அவர்களின் சமையலறைகள், படுக்கையறைகள். மற்ற உடன் வாழ்கிற இன மக்கள் பற்றிய சித்திரங்களை மாயா ஏஞ்சலோவும் தமிழிலில் அவைநாயகனும் ஆழமாகவும் ரசித்தும் அனுபவித்தும் சுதந்திரமான ஆற்றலுடன் எழுதியிருக்கிறார்கள். ஆப்ரோ- அமெரிக்க இலக்கிய வகைமைகளில் இந்த வெளியீடும் முக்கியமாக அறிந்து கொள்ளப்படவேண்டியது. இந்த நாற்பதாண்டு இலக்கியப் படைப்பு நீட்சிக்கு இந்த சுயசரிதையின் முறைகள் பல பிரபலமான எழுத்தாளர்களால் கையாளப்பட்டிருக்கிறதை அறியமுடிகிறது. மாயா ஏஞ்சலோவின் பாதிப்பில்லாத லத்தின் அமெரிக்கப் படைப்புகளோ கருப்பினப் படைப்பாளர்களின் படைப்புகள் இருக்க முடியாது. தங்கள் நிலங்களில் நாடற்றவர்க ளாகவும் தங்கள் அரசியல் இறையாண்மையில் பாதுகாப்பற்றவர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழல்களை மாயா நினைவுட்டுகிறார்.
      தன் சமர்ப்பணத்தில் மாயாஏஞ்சலோ  எழுதுகிறார் என் மகன் கய் ஜான்சன் மற்றும் எல்லாவித ஏற்றத்தாழ் வுகளுக்கும் கடவுளுக்கும் எதிராக அறைகூவல் விடுத்துத் தங்களின் பாடல்களை உரக்கப்பாடி உறுதியான நம்பிக்கையைத் தந்த  அனைத்துப் கறுப்புப் பறவைகளுக்கும்...ஏறக்குறை அவர் நம்மைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்..
     பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழிலே பெயர்க்கவேண்டும் என்கிற பாரதியின் கோட்பாட்டின் படி இந்த நூல் அமைந்திருக்கிறது. தமிழுக்கு பெண்ணிய இயக்கவியல் கோட்பாடுகளுக்கும் விடுதலையுணர்வின் குறியீடுகளுக்குமாக இந்த நூலின் தன்மை உள்ளது. என்னதான் நாம் இணையத்தில் அமர்ந்து தேடி வாசிக்கிற பொறுமையான வாசகமன நிலை உள்ளதா எனும் கேள்விக்கு இந்த நூல் நம் நூலக அலமாரிகளில் இருக்கும் பொழுது நம் மூதாதையர்களின் இனக்கலவை சிறுமியின் சரிதம் கைவசம் இருக்கிற தெம்பை நெகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு இதுவரையிலும் கறுப்பின மற்றும் வெள்ளையர்களின் ஆதிக்கநிலைகள் ராணுவ நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகள். வதை முகாம்கள்.சித்ர வதைகள் இன அழித்தொழிப்புகள் பற்றிய பின்னணியான நூல்கள்தான் நினைவுக்கு வருகிறது.
மாயா ஏஞ்சலோவின் சரிதம் வெளியாகிய இந்த நாற்பதாண்டு பல்துறை நாவல்கள்,பயணக்குறிப்புகள், எழுச்சிமிக்க படைப்பாக்க வகைகளுக்கு இவருடைய இந்த கதை சொல்லல் முறை வசீகரிக்கிறது. அவைநாயகன் ஏற்கெனவே தமிழியக்கம் மற்றும் தமிழ்க் கவிதையியலில் முறையான தேர்ச்சியைப் பெற்றிருப்பதால் மிகவும் நுட்பமான இடங்களில் சரியான வாக்கியங்களை அமைத்திருப்பது வாசிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது.
தமிழ் இலக்கிய நூல் அறிமுக- விமர்சன மரபின்-உலகின் கள்ளமௌனத்தின் செவிப்பறையை மாயா ஏஞ்சலோ நிச்சயம் திறப்பார். இந்த உலகின் துண்டு துண்டான தேசங்களின் செவ்வியல் இலக்கியப் படைப்புகளின் தாய்மை மாறாமல் மொழிபெயர்த்து தங்கள் மொழிக்கு இந்த மகத்தான படைப்பு வெளியாக வேண்டும். என் வாசகர்கள் வாசித்து இன்புற வேண்டும் என மொழிபெயர்ப்பாளர்கள் தங்களையும் வருத்திக்கொண்டு பல்வகை அகராதிகளுடனே வாழ்கிறார்கள். அகராதிகளில் அல்லாத சொற்களுக்காகத் தேடுகிறார்கள். சொற்களின் மூலங்களுக்காக தங்களை வறுத்திக் கொள்கிறார்கள். ஆப்ரிக்க- அமெரிக்க ஆங்கில எழுத்து வடிவங்களின் இலக்கணப் பிரயோக வாக்கியங்களுக்காகப் பல்லாண்டுகள் தனது இடையறாத தேடுதல் மூலமாக சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
வழக்கமாக இயல்பு மொழியின் ஆன்மாவை முழுமையாக கொண்டுவந்திருக்கிறார். மொழி பெயர்ப்புகளின் மூலமாக உலக இலக்கிய வகைமைகளை அறிய விரும்புகிற வாசகர்களுக்கு நல்ல நூலாக அமைந்திருக் கிறது என்பதில் சந்தேகமேயில்லை..
வாழ்த்துக்கள்..
  பொள்ளாச்சி எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது. தமிழில் மிகச் சிறந்த அயல் மொழி இலக்கியங்களைத் தொடர்ந்து சிறப்பான முறையில் வெளியிடுகிற பதிப்பகம்.வாழ்த்துக்களுடன்
கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது?
வெளியீடு- எதிர் வெளியீடு- 96 நியு ஸ்கீம் சாலைபொள்ளாச்சி-642002
தொலைபேசி-04259-226012-98650 05084



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக