சனி, 9 ஜூலை, 2016

லெமூரியக் கண்டத்து மீன்கள்-ஆன்மன் கவிதைகள்

லெமூரியக் கண்டத்து மீன்கள்
ஆன்மன் கவிதைகள்
       கள இலக்கியப் பணியில் ஆன்மனின் பங்களிப்புகள் நண்பர்கள் அறிந்த ஒன்று. நண்பர்களின் குடும்ப,இலக்கிய, நட்பு விழாக்களில் அவரை நிச்சயம் பார்க்கமுடியும். அதிகப்படியான கவிதை வாசகர்களைக் கொண்ட எழுத்துக்காரர்.மிகப்பரவலாக நண்பர்கள் குழாமில் அறியப்பட்டவர். அவருடைய கவிதைகள் அதிக விருப்பங்களின் கட்டுகளுக்குள் கொண்டாடப்படுபவை. புதுக்கவிதையின் அழகும் கருத்துச் செறிவுமிக்க இயல்பான மொழியில் அமைந்தவையாக இருப்பதாகும். பொதுவாக சமூக அரசியல் பிரச்சனைகளைக் கவனித்துவிட்டால் கவிதை வந்துவிடும். தார்மீக கோபங்கள் அதிகமாக அதிகமாக கவிதைகள் வலிமைபெறும். அணையாத கோபத்தைக் கொண்டிருப்பவர்களால் நிச்சயமாக தமிழுக்கு நல்ல கவிதைகளைத் தந்துவிடமுடியும். ஆன்மன் கவிதைகள் கோபத்தின் பால்யத்தில் துவழ்கிறவையாக இருப்பது. முதல் தொகுப்புக்குரிய வசீகரம் அட்டையிலிருந்து சொற்கள் வரை ஈர்க்கிறது.
         இந்த தொகுப்பு குறித்து வெளியிட்ட தோழர் பாமரன் பேசிய உரை நினைவில் தள்ளாடுகிறது. அப்படியே தோழர் அகரமுதல்வன் பேசியதும் மருத்துவ மானிட்டரில் கீக் கீக் என்று வந்து போகிறது. இந்த நூலுக்கு அவர்கள் பேசிய பிறகான அறிமுகம் அவசியமற்றதாகிறது. எனினும் ஆன்மனின் கவிதைகள் குறித்து எழுதுவதும் கூட அவசியம் என்று கருதினேன். காரணம் ஆன்மன் இலக்கியக் களத்திலும் இயங்குகிறவர்.
        பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்ட எட்டு நூல்களில் இதுவும் ஒன்று.ஆன்மன் நினைத்திருந்தால் பிரபலமான பதிப்பகத்தில் கொண்டுவந்து தனக்கு இருக்கும் நட்பு வட்டத்தை வைத்து சென்னையில் பிரமாண்டமான விழாவை நடத்தி கவன ஈர்ப்பு செய்திருக்கலாம் (பொள்ளாச்சியில் நடந்த விழாவும் பிரமாண்டமான விழாதான்) ஆனாலும் சக கவிஞர்களின் படைப்புகளுடன் தன் நூலையும் வைத்துக் கொண்டு வெளியிடச் செய்த பெருந்தன்மை ஒரு கவிஞனுக்கே உரியது.
      முகநூல் வழியே அறிமுகம் ஆகியிருந்தாலும் நானும் எல்லாரும் போலவே அவருடைய எளிமையைப் பார்த்து நம்பமுடியாமல் ஒரு முறை அவரிடமே “நீங்க நண்பரே..“ என்றபோது “நான்தான் ஆன்மன்“ அது கவிஞர் அகிலாவின் நூல் வெளியீட்டு விழாவின் பொழுது. கவிஞர்கள் மனிதர்களாக இருப்பதைக் காண்கிற பொழுது வருகிற ஆச்சர்யம் அது. பிறகு சென்னையில் உயிர்மை விழாவில் சந்தித்தோம். அவர் முகம் நினைவுக்கு வரும் போது அவருடைய குரல் முதலில் காற்றில் ஒலிக்கும். அக்குரல் ஒரு தேர்ந்த கர்நாடக இசைப் பாடகர்களின் குரல் அது. இயற்கையாகவே சிலருக்கு அமைவது. சுருதியின் நாதமுமான குரல் அது. அவர் மேடையில் பேசும் போது யதார்த்தமாக சிரித்தபடியே பேசுவதைக் கவனித்திருக்கிறேன். கொஞம் சுயம் சார்த்த பிரச்சனைகள் அவதானிப்புகள் இருந்தாலும் அப்படி வெளிப்படையாகப் பேசுவதும் தேவையானது.
எந்திரப்பறவை
உமிழ்ந்த நச்சில்
தகர்ந்த பனைமரத்தில்
குடியிழந்த கிளிகள்
தாழப் பறந்து
இறங்கித்தேடின
தம் குஞ்சுகளை
பதுங்கு குழிகளில்       பக்-21
      
தமிழ்நாட்டின் தமிழ்க்கவிதையில் ஈழம்தான் கவித்துவத்திற்கு உயிர் கொடுப்பவை. இயலாமைக் குரூரமனங்களின் அடியாழம் முழுக்க ஏதும் ஆற்றமுடியா வெகுளிப்பைச் சொல்பவை. தமிழ் ஈழம் அமைந்தே தீரும் அமைத்தே தீருவோம் என்னும் பொருட்பொதிந்த சொற்கள் மீன்கள் மிதப்பதுபோல மிதக்கும் கவிதைகளில். இறுதிப் போர். பதுங்கு குழிகள், முள்வேலி முகாம்கள், அகதிமுகாம்கள்,மறுசீரமைப்பு,தேர்தல்,குறைந்த பட்ச அதிகாரம்,மீட்டெடுப்பு,மறு குடியமர்த்தல்கள்,பறிக்கப்பட்ட சொத்துகள் திரும்பத்தருதல். உடமைகள்,உடமைக்குரிய ஆவணங்கள். என்று இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிற இனத்தின் உறவினர்களாக நாம் குறைந்த பட்சம் எழுத்துக்களில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய நாற்பதாண்டுகளாக ஒரு இனம் தொடர்ந்து போர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த இனத்திற்காக தொடர்ந்து எழுதப்படுகிற கவிதைகள் புதினங்கள் கட்டுரைகள் கள இலக்கிய இயக்கங்கள். யாவும் யுத்த நீதியை, மனித உரிமையை, சுய அடையாளத்தை மீட்டுவதற்காக எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை உணர்வது முக்கியம்.
      ஆன்மனின் கவிதைகள் பல ஈழ நிலத்தையும் உறவுகளையும் பேசுகிறது. மிக நேரடியாகவும் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் கவிதைகள் பேசுகிறது. ஒவ்வொரு கவிஞனின் மனதின் ஈவு இரக்க சுபாவங்களுக்குட்பட்ட வகையில் அனுபவங்களின் வழியாக சொற்கள் சிறு சலனத்தை உண்டுபண்ணுகிறது. தர்க்கத்திற்கு அப்பால் சமநோக்கின் அதிகாரம் எழுப்பப்படுகிறது. கவிதையின் இடங்களும் அதுவே. தர்க்கமும் சமாதானமும் சமநோக்கும் தீர்வுகளும் நீதியையும் அறத்தைப் பேசும்.
மலைச்சரிவில்
ஆடு மேய்ப்பவள்
தாலிக்குத் தங்கம் வாங்கச்
சான்றிதழ் கேட்டுப்
பள்ளிக்குச் சென்ற பொழுதில்தான்
தெரிந்தது
(தான்) தேறிய
தேர்வு முடிவு-         பக்-43

           தேர்வு முடிவுகள் உளவியல் ரீதியாக ஏற்பத்தும் அதிர்வுகள் முக்கியமானவை. இக்கவிதை மூன்று கூறுகளை, முக்கியமான பிரச்சனைகளை நினைவு படுத்திவிடுகிறது. சாதி அடைப்படையிலான கல்வி, இலவசங்களால் சீரழிக்கப்படும் கல்வி, பின் தங்கிய பொருளாதார நிலை மலைவாழ் மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி. பள்ளிக்கல்விகளின் தரம், அதன் பீதியளிக்கிற தேர்வுமுறைகள், அளிக்கப்படுகிற கல்விகளின் தரம் பற்றியெல்லாம் இச்சிறுகவிதை மாபெரும் ஓவியக்கித்தானில் ஒரு நாவலுக்குரிய அழுத்தத்தைக் கொடுத்துவிடுகிறது. இவ் வகை கவிதைகளை நம் விமர்சகர்கள் இது எப்படி கவிதையாகும் என்று பேசுகிற பீடைகள் உள்ளது பெருங்கொண்ட கஷ்டம்தான்.
        நம் சமூகத்தில் பெண்கள் வழியாக அளிக்கப்படுகிற இலவசங்கள் மிகவும் உளவியல் ரீதியாக பெருஞ்சிக்கல்களை உண்டுசெய்பவை. குடும்பமுறைகளைச் சிதைக்க முயல்பவை. ஆண்கள் குடிக்கு அடிமையாகிவிடுவார்கள்( அதற்காகத்தான் கடைகள் திறந்திருக்கிறோம்) ஆகவே பெண்களே உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இலவசங்களைத் தந்து விடுகிறோம்.நீங்கள் காலமெல்லாம் குடும்ப முறை அடிமைச்சடங்குகளிலும் பிறருக்கு உழைத்து ஓடாகத்தேய்ந்து அறிவு வளராமல் நமக்கு எதனால் இந்த துயரம் என்று அறியாமலே செத்துப் போங்கள் என்பதுதான் இந்த குடும்பவரை இலவச முறைகள். குறிப்பாக மலையக மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் கூட தராமல் இழுத்தடிக்கிற நிலை இன்றும் நீடிக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. சில குழந்தைகள் தேர்வுகள் முடிவுகளில் வெற்றிபெற்றது அறியாமலே தேர்வு முடிவுகளின் மீது ஐயமும் பீதியுமடைந்து தற்கொலைகளில் ஈடுபட்டதையும் அறிவோம். தேர்வு முறைகளும் முடிவுகள் அறிவிக்கும் முறைகளையும் போர்தொடுக்கப்படுவதைப் போன்ற அச்சத்தை நம் சமூகம் பழக்கி வைத்திருக்கிறது. ஆன்மனின் பல கவிதைகள் நிகழ்கால சமூகத்தைப் பேசுகிறது.
கத்தயின்றி
ரத்தமின்றி
யுத்தஞ் செய்றான்
கார்ப்பரேட்டு
அட
கம்முனு கெட
கத்துனா
நீ நக்சலைட்டு---பக் 58

      அநேகமாக என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் நக்ஸலைட் குறித்து எழுதப்பட்ட முக்கியமானதாக கருதுகிறேன். இன்றும் முக்கிமாக சமூத்தில் நடைபெறுகிற முக்கியமான உரிமைப்போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களில் முன்னணி வகிக்கின்ற பலருக்கு சூட்டப்படுகிற பெயர்கள் இந்த நக்சலைட்.அப்படியே சமூக  ஊழியர்கள் மக்களைத் திரட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஆட்சியாளர்கள் சொல்லும் பெயர்களே இந்த நக்சலைட்.“ அவன் சொல்றானு அவங்க கூட சேராதீங்க உங்களக் கொண்டு போய் நக்சலைட்டுல சேர்த்தீருவானுகய்யா என்று திரட்டபடும் மக்களிடம் உளறிக்கொட்டி மக்களை மக்கள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த உபயோகிப்படும் சொல் இது. ஆட்சியாளர்களின் கருத்துப்படியும் கணக்குப்படியும் பொதுப்பிரச்சனையில் நீங்கள் போய் சம்பந்தப்பட்டவர்களிடம் நியாயம் கேட்டால் அதிகாரிகள் கேட்பார்கள் யோவ் நீ நக்ஸலைட்தான..சொல்லிருக்காங்கயா ..பாத்துக்கறம் சமயம் வரட்டும் என்று மிரட்டுகிற நிலை நம் அதிகார வர்க்கத்திடம் இருக்கவே செய்கிறது. குறிப்பாக கார்ப்பரேட்களால் தான் நம் அரசுகள் நகர்கிற நிலை வந்தாயிற்று. அவர்களின் முடிவுகளை அறியாமல் நம் அரசுகள் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில்லை. கார்ப்பரேட்டுகளைப் பகைத்துக் கொள்ள எந்த அரசும் முன்வருவதில்லை. கார்ப்பரேட்டுகள்தான் தேர்தல் செலவுகளுக்குப்பணம் தருகிறார்கள் நாமா தருகிறோம். தேர்தல் முறைகளின் வழியாக நாம் தொடர்ந்து சுதந்திரம் பெற்ற பிறகும் ஏமாற்றப்பட்டு  வந்து கொண்டிருக்கிறோம். இயந்திர முறைகள் சரிதானா நியாயம்தானா உண்மைதானா..வாக்குகள் சரியாகத்தான் பதிவாகிறதா அல்லது வேறு ஒரு சின்னத்திற்காக மாறிப்போகிறதாவென்று பைத்தியம் பிடித்த நிலையில்தான் மக்களின் நக்ஸ்லைட்கள் அதாவது பொதுமக்கள் அழுத்துகிறார்கன் பொத்தான்களை..
நீங்கள்
எங்களுக்கானவர்கள் அல்ல (கார்ப்பரேட்டுக்கானவர்கள்)
நாங்கள்
உங்களுக்கானவர்கள் அல்ல
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அறிந்தே அழுத்துகிறோம்
பொத்தான்களை      பக்-26   
         சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்படுகிற கவிதைகளுக்கு நம் இலக்கிய விமர்சன உலகில் என்றுமே மதிப்பில்லை. கவிதைகளின் தரம் மற்றும் எழுதப்படும் ஆள்,குழு,ஏரியா,சாதி,மதம்,இடம்,வலம். குருபீடம். இவையெல்லாம் பார்க்கிற சூழல் உள்ளது. சில கம்மானாட்டி படவா நாய்கள் உலவுகிறது. மொழியைத் திருகி கெண்டைக்கால்களுக்கு பேச்சூடு போட்டு தன் வாழ்க்கைக்கு இளங்கவிஞர்களை நரபலி கொடுத்து வாழ்ந்து வந்த பெரும்பாலான நாய்களை விரட்டிவிட்டுவிட்டோம். சொல்விளங்காத முண்டங்கள் சிலதுகள் நல்லபடியாக இயங்குபவர்களைக் குற்றம் கொண்டே பேசும். இது எல்லாக் காலகட்டங்களிலும் இவ்வகை கிருமிகள் இருக்கவே செய்யும். அவையெற்றைல்லாம் நாம் உணர்ந்தே செயலபடவேண்டும். இந்த தரித்திரம் பிடித்த இலவசத்திற்கு நாயாய்ப் பறக்கும் இந்த நாட்டில் சுத்தம் சுகாதாரம்,அறம் நீதி தர்மம் வடிவக் கோட்பாடு குறித்தெல்லாம் எழுப்பபடுகிற கேள்விகளுக்குரியவர்கள் சமூக இயக்கத்திற்கு சல்லி பைசா அளவு கூட உதவாதவர்கள். கவிஞனின் கவனம் தன் சொற்களின் மேம்பாட்டிற்கு மட்டுமிருக்கக் கூடாது. சமூகத்தின் சுற்றியியல்புகளின் மீதும் கவனம் தேவையாகிறது. கவிதைக்கு உண்மையாக இருப்போமாயின் புல்லுருவிகள் தானாக கரைந்து போய்விடுவார்கள் அல்லது வேறுவழியின்றி திருந்தி விடுவார்கள். ஆன்மன் முதல் தொகுப்புக்காரர் என்பதால் பொது வெளியில் நிகழும் நிலவுடைமைவாதிகளால் நிகழ்த்தப்படும் இலக்கிய அரசியலையும் சேர்த்தே பழகவேண்டும். கீழ்க்கண்ட கவிதைக்கான பொழிப்புரைதான்இந்த நெடிய விளக்கம்.
கிணற்றில் வீழ்த்தியும்
கயிற்றில் ஏற்றியும்
நெருப்பில் வாட்டியும்
கொல்வதை விடுத்து
உங்கள் மனுநீதி வெல்ல மொத்தமாக
தேர்க்காலில் இட்டிருப்பீர்கள்
தேர்வரும் தெருக்கள் எம்மை விடாது
எம் தெரு வழியே தேர் வராது
உரக்கச் சொல்வோம்
பாரத் மாதா கீ ஜே....           பக் 27

           கவிஞர் ஆன்மனுக்கு வாழ்த்துக்களும் கூடவே ஒரு ஜே...ஜே..
வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம்-பில் சின்னாம்பாளையம்
சமத்தூர் அஞ்சல் பொள்ளாச்சி-9095507547-98422 75662






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக