வியாழன், 6 பிப்ரவரி, 2014

நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை” கவிதை நுல் குறித்து



நிலாரசிகனின் புதிய கவிதை நூல்
“கடலில் வசிக்கும் பறவை“
இளஞ்சேரல்
          

நவீன கவிதையில் குறுங்கவிதை வடிவங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறவை. ஒரு வகையில் புதுக்கவிதை வடிவத்தை நினைவு தந்தாலும் இந்த வடிவம் நமக்கு எளிதில் கைக் கொள்ளாது. கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த வடிவங்களே கையாளப்படுகிறது.ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த வடிவம் பிரசித்தம்.சி.மணி, அபி, எஸ்.வைத்தீஸ்வரன்.அழகிய சிங்கர், ஞானக் கூத்தன்,பிரமிள், நித்திலன், சுகந்தி சுப்பிரமணியம், மேத்தா, அப்துல் ரகுமான் போன்றவர்கள் எழுதிப்பார்த்திருக்கிறார்கள்.ஷாஅ, ரிஷி, தென்றல்,அம்சப்ரியா, மு.சத்யா, யாழி உள்ளிட்ட கவிஞர்கள் சமகாலத்தில் எழுதுகிறார்கள். நீள் கவிதைகளுக்குள் இதுபோன்ற கவிதைச் சொற்கள் படிந்திருக்கும். பிற்பாடு நாம அந்தச் சொற்கள் தான் கவிதைக்குரியது என்போம். மற்ற வாக்கியங்கள் கவிதைகளாகவில்லை என்றிருக்கிறோம். நீள் கவிதைகளுக்குள்ளாக நாம் விவரிக்கிற காட்சிப் படிமங்கள் எங்கோ ஒரு தொலைவின் புள்ளியில் கவித்துவம் மிளிர்ந்துவிடும் இயல்புடையது. கவிதைகளின் காட்சிகள் நமக்கு அன்றாடம் தென்படுகிறது. மனிதர்களின் இயல்பான ஓட்டம். எல்லையற்று விரிந்து கொண்டே போகும் இயற்கையின் நீட்சி. இன்னும் நமக்கு புரியாமல் போய்விடுகிற சொல்லின் பொருள். தொலைவில் கைக்கு அகப்படாமல் போகிற நட்பின் எல்லை இப்படியாக பொருள் விளங்காத உணர்வுகள் அதிகம். இந்தக் காட்சிகளையும் துயரத்தையும் நீள் கவிதைகளை விடவும் குறுங்கவிதைகள் சொல்லிவிடுகிற தன்மையை நான் பார்க்கிறேன். யாழியும் இப்படியான காட்சிகளைத்தன் கவிதைகளில் வைக்கிறார். குறுங்கவிதை வடிவங்களில் உணர்ச்சி மேலிடும். நூலில் பக்கங்களில் உள்ளிட அதிகமான வெற்றிடம் வாசிக்கிற மனதின் இறுக்கம் கலைந்து தூய்மையான கலைச்சுவராக மாறுவதை உணர்கிறோம்.
        
இந்த இடத்தில் நண்பர் கவிஞர் ராணிதிலக் அரைமணி நேரத்தில் நூலை வாசித்துவிட்ட தருணத்தையும் நினைத்துக் கொள்கிறேன். கவிதைகள் வாசிப்பிற்கான காலநேரம் குறைவதோ கூடுவதோ அல்லது சொற்களும் காட்சிகளும் முடிந்துபோவதோ முக்கியம் இல்லை. உணர்வும் கவிதானுபவமுமே சாரம். நாம் எந்தப் புதிய நூலையும் முதல்வாசிப்பில் உணர்ந்து கொள்ளுதலில் உள்ள இன்பம் அலாதியானது. நாம் தவிர்க்க முடியாதவையுமாகும். எதிர்பார்ப்பு நிச்சயம் கூட குறைய ஏற்படுவது நமது ரசனை மனோபாவத்தின் வெளிப்பாடு. இப்பொழுது ஒரு கவிதை

இடை சாய்த்துச் சுவற்றில்
பதிந்திருக்கும் சிலையின்
கல்முலையில்
ஒரு துளி மழை
அருந்திக் கொண்டிருக்கின்றன
ஓராயிரம் திருட்டுக் கண்கள்- பக்-51
         
 திடுக்கிட வைத்த கவிதையாக இந்தக் கவிதை பதிவாகியிருக்கிறது. நமக்குக் காமம் அவசியம். காலங்காலமாகவே அவை ஒரு ஒழுக்கவியலின் விதியாகவே உள்ளது. ஒருசார்பாளர்கள் மோசமான சித்தரிப்புகளாகவும் ஒரு சார்பாளர்கள் சமூக அக்கறையான வேதாந்தமாகவும் போதிக்கிறார்கள். நவீன கவிதைகளில் காமம் குறித்து மிகவெளிப்படையாகப் பேசுகிறவர்களும், அழகியல்தன்மையுடன் விவரணைகளுடன் எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். செவ்வியல் இலக்கியப் பிரதிகளில் எழுதப்பட்டதை நாம் வாசிக்கின்ற போது பிரமிப்பாகவே இருக்கிறது. சமூக இறுக்கங்களைத் தருகிற பதவி, படிப்பு, பணி, உறவு, அங்கதம் கொண்டிருக்கிற நடுத்தர இளைஞர்கள் காமம் பற்றிய எழுத்துகளை ஒழுக்கவியல் கூறுகளோடுதான் எழுதுகிறார்கள். அந்த வகை எழுத்து போதுமானதுதான். பருவகாலங்களோ பதின்பருவ காலங்களிலோ கூட அதீதமான காமம் பற்றிய எழுத்துகள் எழுதுவதைத் தவிர்க்கிறார்கள். வழக்கம் போலவே இங்கு செவ்வியல் கவிதையை நாம் வாசிக்கலாம்.
           
 இன்று நமக்குக் கிடைத்துள்ள பண்பட்ட முதல் வகை இலக்கியங்களில் முருகு என்பது காமவெறி என்னும் பொருளில் குறிப்பிடப்படுகிறது. முருகு என்பது அழகு என்பதும் கடவுளின் பெயர் என்பதாகவும் உள்ள இருந்து அறியப்பட்ட சொல்லில் கூட காமம் என்பது அறியமுடிகிறது. பைந்தமிழ் இலக்கியக் கவிதைகளில் பதிவாகியிருக்கிறது.

பெய்ம்மணல் வரைப்பில் கழங்குபடுத் தன்னைக்கு
முருகுஎன மொழியும் வேலன்; மற்றவன்
வாலிய இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியா தோனே..”- ஐங்குறுநூறு-249
          
 இங்கு முருகு என்பது காமவெறி என்பதாக பதிவாகியிருக்கிறது. அம்முருகு மலைநாடன் ஆகிய காதலனால் வந்தது என்பதை அவ்வேலன் அறியான் எனக் காதலி தோழியிடம் சொல்கின்றான். மேலும் இந்தப் பாடலில் உள்ள பத்துப்பாடலுக்கு “வெறிப்பத்து“ எனத் தலைப்பே தந்து எழுதியிருப்பது ஆச்சர்யம் தருகிறது. மேலும் 362 ஆம் பாடலில் வருகிற
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேலன் என்பதில் வெறி என்னும் பொருளில் வருகிறது. காலங்காலமாக நாம் அறிந்த முருகன் அழகன் முருகு என்பது அழகு என்பது இந்தச் சொல் பொருள் மாறுவதை அறிகிறோம். ஒர் குறுஞ்சொல் சமூகத்தில் அர்த்தப் படுத்தப்படுகிற வழக்கு காணலாம்.

மேலும் நற்றிணையில்-31 ஆம் பாடலில்
அருவி இன்னியத்து ஆடும் நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்னணங்கன்மை யறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்நோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே- என்கிறது
  
வெறியாடலைப் பற்றிச் செவ்வனே தெளிந்து சொல்வதாவது பெண்ணுள் இருக்கும் முருகே! இவளுள் இருக்கம் முருகு என்னும் நோய் நாடனாகிய இவளது காதலனுடைய மார்பு தர வந்த துன்பம் மிகும் காமநோய் என்பதையும் நினது வருத்தம் அன்றென்பதையும் செவ்வனே அறிந்திருந்தும் வாயைத்திறந்து கொண்டு கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனைக்கு வந்திருக்கின்றாய் ! நீ கடவுள் ஆயினும் ஆக! ஆனால் ஓ முருகே! நீ மிகவும் அறியாமையை உடையவ என்பதால் இங்கு காமம் என்பது கடவுள் என்பதாக நாம் அறியமுடிகிறது. நிலாரசிகனின் இந்தக் குறுங்கவிதை ஒரு செவ்வியல் பிரதியை நினைவு கூர்கிறது.
இனியொரு கவிதை தொகுப்பிலிருந்து....

அம்மாவிடமிருந்து வழிந்து கொண்டிருக்கும்
பேரன்பை
ஒரு போத்தலில் அடைத்து
என்னுடன் எடுத்துச் செல்லத்
திட்டமிட்டிருக்கிறேன்
ஒரு போத்தலும் கிடைக்கவில்லை
அதையும்
அம்மாதான் தேடிக் கொடுத்தாள்.- பக்- 38
           
இங்கு பிரிதல் நிமித்தம் அடையும் துன்பங்களுக்கு அளவேயில்லை. நம் தற்காலச் சமூகத்தில் ஒருவன் அல்லது ஒருவள் தான் கல்வி கற்று முடிந்த பிறகு முதலில் இழக்க நேரிடுவது தாய்மையைத்தான் என்கிறது இந்தக்கவிதை. இந்தக் கவிதையை என்னால் வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. தாய்மையின் இழப்பில் வெளிமாநிலங்களில் வெளிநாடுகளில் வெளி நகரங்களில் வாழ நேர்ந்து விட்ட இளைஞர்கள் இளைஞிகள் இழந்து தவிக்கிற தாய் அன்பை இந்தக் கவிதை பேசுகிறது. தவிர்க்க முடியாத இந்த இழப்பை யார்தான் பேசியிருக்கிறார்கள். கல்வி கற்று முடிந்த தருவாயில் இளைஞன் தன் தாயிடமிருந்து இழக்க கூடாத அனுக்கத்தை இழப்பதை யாரும் பேசுவது இல்லை. பெண்கள் இயல்பாகவே தன் தாயிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் ஒரு ஆண்மகன் அத்தனை எளிதில் மறக்க முடியாத முற்றிலும் தவிர்க்க முடியாத அன்பாக கருதுவது தாயன்பைத்தான். பெரு நகரங்களில் தாயிடமிருந்து விலகியிருக்கிற இளைஞர்கள் வணிகமும் வேலையும் பதவியும் தன் தாயைப் பிரித்துவிட்டிருக்கிறது என்பதை அறியாமலா இருப்பார். படிக்கும் காலத்திலும் படிப்பில் கவனமும் மதிப்பெண்களின் மீது குறியாகவே படித்துப் பட்டம் பெறும் வரையிலுமே தாய்மை தள்ளியே தூரமாகவே இருக்கும். ஒரு வகையில் தாய்மையையும் நாம் காமத்திற்கு இணையாகவே கடவுளாகவே பாவிக்கிற செவ்வியலும் நமக்கு இருக்கிறது. தாய்மை,காதல், கடவுள், காமம் இப்படியாக நாம் எல்லாச்சொற்களின் வழியாக அறிந்து கொள்வது நுங்கின் இழைபோன்ற உணர்வுதான். பொருள் வறியப் பிரிதல் பிரிதல் நிமித்தம் என்பது நம் சங்க காலத்திலிருந்தே புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.
           
நம் காலத்திலிருந்தே மாலைப்பொழுது இனிமையானது. மாலைப் பொழுது வந்தாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது அம்மாவும் வீடும்தான். நெடுநேரம் நாம் வீடு திரும்பவில்லையென்றால் உடனே தேடுவது அம்மாதான். என்னதான் நகரத்தில் வாழ்ந்தால் கூட இந்த மாலைநேரம் தாய்மையை நினைவுப்படுத்துகிறவை. தாயுடன்வாழந்த நாட்களை நினைவு கூர்பவை. இந்த நூலில் கடல் குறித்தும் பறவைகள் குறித்தும் கடற்பிரதேசங்கள் பற்றிய நுணுக்கமும் அதிகமாக வருகிறது.
        
 கலித்தொகையின் நெய்தற் கலியிலிருந்து ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. கபிலரின் இந்தப் பாடல் மாலைப் பொழுதின் துயரத்தையும் இழப்பையும் நினைவு கூர்கிறது. கடல் சார்ந்த பகுதிகளின் மாலைப் பொழுதுகளை நிலாரசிகன் அறிந்திருப்பார்.

அந்தியும் அணங்கும்- எனும் தலைப்பில் கபிலர் பாடுகிறார்
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல்சேர,
இகல் மிகு நேகியோன் நிறம் போல இருள் இவர
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தா,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,
தன்புகழ் கேட்டார்போல் தலை சாய்ந்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகைஅவிழ்பு புதல் தந்த
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,
பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்
என்று அவர் விருப்பொடு மன்று நிறை புகுதா,
மா வதி சேர,மாலை வான் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள்ள, அயர்ந்து
செந் நீச் செல் அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்.
மாலை என்மனார், மயங்கியோரே.
         
 “பார்! பார் மாலை வந்துவிட்டது பார்! ஆயிரங் கிரணங்களைப் பரப்பினான் கதிரவன் மீண்டும் ஆயிரம் வாய் கொண்டு விழுங்கியது போல் பகலை விழுங்கிவிட்டான். இருள் படர்கிறது. பகைவனை ஓட்டிப் புறங்காண்பவன் போல்  வருகிறான் சந்திரன் யாரை ஓட்ட? இருளை ஓட்ட.. அதோ பார் தாமரை மலர்கள் குவிகின்றன. கணவனைத் தழுவிய மகளிர் தன துயில்வது போல மரங்கள் எல்லாம் தலை சாய்ந்து நின்று விட்டன பார். தன் புகழ் கேட்ட சான்றோர் போல முல்லை மலர்கிறது பார், பிரிந்த மகளிரைக் கண்டு நகைப்பது போல! வண்டுகள் பாடுகின்றன பார்! வேய்குழல் ஊதுவது போல! பறவைகள் எல்லாம் தன் கூடு நோக்கிப் போகின்றன பார்! பசுக்கள் எல்லாம் ஓடுகின்றன பார்!. தன் கன்றுகளை நினைத்து! மகளிர் விளக்கேற்று கின்றனர் பார்!
“என் உயிர் கொள்ள வருகிறது பார்..! இதற்குப் பெயர் மாலையாம்!
          
பெரு நகரங்களின் கடற்கரைகளில் நாம் இப்பொது இந்தக் காட்சிளை நாம் காண நேர்கிற போது நமக்கு தாயோ காதலியோ நிச்சயம் நினைவுக்கு வருவார்கள். இங்கணம் இயற்கையின் வினோதம் கூட சிலசமயம் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.
           
 நிலாரசிகன் கடலைத் தாய்மையாக உருவகப்படுத்துகிற தொனியும் துயர் கொள்ள வைக்கிறது. கடலில் கொட்டப்படுகிற எண்ணைக் கழிவுகள்,மீந்த உணவுதானியங்கள் பழுதடைந்த இயந்திரக் கொப்பறைகள், உடைக்கப்படுகிற கப்பல்களின் உதிரி மரக்கலங்கள் கடல் நீரின் இயல்புத் தன்மையை அழிக்கிறது. கடல் நீர் இப்பொழுது உப்புக் கரிப்பதற்குப் பதிலாக எண்ணைச் சிக்கு வாசம் வீசுகிறது. எண்ணையைப் போலவே கெட்டித்தன்மை யுடன் அலையலையாக வீசுவதற்குக் கூட முடியாதவையாக நெளிந்து தள்ளாடுவதை நாம் பார்க்கிறோம். மூன்றாம் உலக நாடுகளின் கடல்கள் முன்னேறிய நாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவருவதை நாம் கண்டும் காணாமல்தான் இருக்கிறோம். கடல்சார்ச் சுற்றுச் சூழல் அமைப்புகள் என்னதான் போராடினாலும் இந்தச் சூறையாடல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நிலாரசிகனின் கவிதை நமக்கு இந்த நிலையை நினைவுட்டுகிறது.

கழிவுகள் தின்று மிதக்கின்றன
மீன்பிள்ளைகள்
கடைசி மீன்குஞ்சு கழிவை நோக்கி
நீந்துகிறது மிக வேகமாய்
தன் தளர்ந்த மடுவைப் பார்த்தபடி
அமைதியாய்ப் படுத்திருக்கிறாள்
கடல்-         பக்-59
         
தமிழக அரசு உள்பட பல மாநிலங்கள் சில காலம் மீன்குஞ்சுகள் வளர்வதற்கு மீன்பிடித்தல் தொழில் தடைசெய்து வைக்கும். அது வரவேற்கப் படவேண்டிய ஒன்று. மீன்குஞ்சுகளின் இனப் பெருக்கத்திற்காகவும் கடல் தாய் ஓய்வெடுக்கவுமாக. இயற்கை வளங்களுக்கு ஆதரவாக எந்தக் கவிமனம் பாடினாலும் எழுதினாலும் நாம் வரவேற்கிற கட்டாயத்தின் காலத்தில் நீந்துகிறோம். பறவையும் கடலும் கட்டுமரங்களும் மீன்களுமாகவே மனிதர்கள் கடலோரங்களில் வாழ்கிறார்கள். கடலோரம் சில கவிதைகள் நம் கடலோர மாவட்டங்கள் மிகவும் நீளமானவை. உலகின் மிக நீளமான கடற்கரையையும் நாம் கொண்டிருக்கிறோம் என்பது எத்தனைபேர் உணர்கிறார்கள். கடற்கரை நாகரீகங்களின் வழியாக நம் மூதாதையர்கள் வென்று கொண்டாடிய நிலங்கள் இப்பொழுது நம்மிடம் மிஞசியிருப்பது எவ்வளவுதான் உள்ளது. என்பதாக நிலாரசிகனின் இந்தக் கடலில் வசிக்கும் பறவைகளுடன் நாமும் கடலின் வானத்தில் பறந்தும்  அலைகளின் மீது கால்கள் உரசவும் பின் மேலெழும்பியும் வாழலாம்..

நிலாரசிகனுக்கு வாழ்த்துகள்..

வெளியீடு
புது எழுத்து
2-205 அண்ணாநகர்
காவேரிப்பட்டினம்-635 112
கிருஷ்ணகிரி மாவட்டம்
90421 58667
pudhuezuthu@ gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக