புதன், 18 டிசம்பர், 2013

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்- எட்டாம் நிகழ்வு பதிவுகள்...


 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நிகழ்வு-8  பதிவுகள்

சகோதர இலக்கியத்தின் அடுத்த கட்டம்..-

இளஞ்சேரல்

         

      கடந்த ஞாயிறு 15.02.2013 அன்று பொள்ளாச்சியில் இலக்கியச் சந்திப்பிற்காக நண்பர்கள் கூடினோம். இலக்கிய மனம் அறிந்து பழகிய முகங்கள்.நகர் மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் எட்டாம் நிகழ்வு சிறப்பாகத் துவங்கியது. நிகழ்வுக்குக் கிளம்பும் முன்பாக ஒரே வண்டியில் கிளம்பினோம். நானும் இளவேனிலும். யாழி வழியில் வந்து இணைந்து கொள்கிறேன் என்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொள்ளாச்சி-கோவை தனியார் பேருந்தில் பாடல்களைக் கேட்டுக் கொண்டு பயணிக்கலாம் என நினைத்திருந்தேன். அது ஒரு சொர்க்க உபவாசம். பாடல்கள் நின்று கொண்டிருப்பவர்களையும் உறங்கச் செய்து விடும். உயிர்பயம் தீர்ப்பது பாடல்கள்தான். பிசிறில்லாத டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்  வயலிகள் கீ போர்ட் புல்லாங்குழல் நோட்கள் அற்புதமாக இருக்கும்.

குறிப்பாக நாற்பது கிலோமீட்டர் பாதைகளுக்கு நகரத்திற்கும் கிராமங்களுக்குமாக விடப்படுகிற தனியார் லைசென்ஸ் பேருந்துகளின் நவீன வசதிகள். பேருந்து உடலெங்கும் டிஜிட்டல் ஓவியங்கள் நம்மை கவர்ந்திழுக்கும். பெயிண்டிங்க் நவீனத்துடன் வடிவமைக்கப்பட்ட பேருந்துகளின் சௌகரியம் மக்களை கவர்கிறது. மாணவ மாணவிகள் யுவன், யுவதிகளை, சகல வயது வித்தியாசக்கார மனிதர்களை வசீகரிக்கிறவை இந்தப் பேருந்துகள். எப்படியான அசுரத்தனமான வேகத்தில் போனாலும் அலுக்காத பயணம். உட்கார்ந்த மறுகணம் உறங்க வைத்துவிடுகிற பொள்ளாச்சி தென்னந்தோப்புகளின் காற்று. வளைந்து மேடும் பள்ளமுமாகப் போகும் பயணங்கள் அலாதியானது.

       மிக நெருக்கமான இருக்கை வசதிகள். புளி மூட்டைகள் ஏற்றுவது போல கிடைக்கும் சவாரிகளைகயெல்லாம் ஏற்றிக் கொள்வார்கள். டயர்களின் சத்தத்தை இளையராஜா மெட்டுகள் ஸ்வாகா செய்கிறது. பிறகு முன் பின் இரண்டு நடத்துனர்களும் உள்ள வா உள்றவா என்பார்கள். உடல்களை அந்த டப்பாவிற்குள் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போலவே திணறுவார்கள். மனிதர்களின் விதவிதமான ஊர்வாசம். மண்வாசம், ஒவ்வாரு மனிதர்களுடன் இயைந்து இயைந்து நகரும் அந்தப் பயணம் பாடல்களால் சாத்தியமாகிறது. மனித மனம் இந்த உடன்பாட்டை நவீன கால்தில் விரும்புகிறது.  நடத்துநர்கள் அவரும் இவருமாக நகரு நகரு எனச் சொல்லி நிற்பவர்களை ஒரு பாடலைக்கூட ஒழுங்காக கேட்கமுடியாமல் செய்வதுதான் நடத்துநர்களின் பணி.

ஆனாலும் இளையராஜாவின் இசை இந்த நெருக்கடிகளைப் பழக்கி வைத்திருக்கிறது. ஒரு மயிலறகு விசிறிதான் என்றால் மிகையில்லை. சுரேஷ், மோகன், ராஜ்கிரண், ராமராஜன் சிவகுமார் படங்களுக்கு இசையமைத்த விதம்தான் அவரை மகத்தான கலைஞனாக மாற்றியிருக்கிறது. சிறிய பட்ஜெட்,பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் அவர் இசைக்கும் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கோர்ப்புக்கும் அளித்த அர்ப்பணிப்புதான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்திருக்கிறது. இளையராஜாவைத்தவிர எந்த இசையமைப்பாளரும் பொதுமையுடன் இசையை அமைக்க வில்லை. பொதுவாக அவர் பொள்ளாச்சி சுச்சுவேசனுக்குப் போட்டிருந்த பல கிராமிய ராகங்கள் உலகின் மகத்தான இடங்களில் பாடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பேருந்துகளில் தற்பொழுது பாடல்களுக்குப் பதிலாகப் படம் ஒளிபரப்ப பட்டாலும் பின்னணியிசையில் ராஜாங்கம் நடத்திவருகிறார். பின்னணியிசையில் ருத்ரதாண்டவம் ஆடியதில் சேது, அமைதிப்படை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் முக்கியமானவை. மிகவும் அதிவேகத்துடன் பறக்கிற பேருந்துகளுக்கு வசதியாக சாலையின் இருபுறங்களிலும் வீசும் பச்சயம். மேடு பள்ளங்களிலும் பசேலென்ற தோப்புகள். பேருந்தின் சன்னலோரங்களில் காணும் போது பொள்ளாச்சி சாலையின் ஓரங்களில் இருக்கிற கிராமங்களின் அழகைக் கண்டு செல்வதில் ஒவ்வொரு பயணிக்கும் மகிழச்சிதான். பொதுவாக பொள்ளாச்சியில் நடக்கிற விசேசங்களுக்கு யாரும் செல்லத்தயங்கி நான் கேள்விபட்டதில்லை. தவிர்க்கவே முடியாத நிலை ஏற்படும் போது தான் தவிர்ப்பார்கள். கிராமியத்தின் ஆன்மாவாக இருக்கிற கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் கிரிக்கெட் விளையாடும் நவநாகரிக உடைகளில் இளைஞர்கள். சில இடங்களில் யுவதிகளையும் காணமுடிகிறது.

          பேருந்தில் செல்லப்போகிற ஆசையில்தான் மேற்கொண்டு நிகழ்வு பயணக் குறிப்புகளுடன் யாழி, இளவேனிலிடம் பேசினேன். வண்டியிலேயே போகலாம் அதுதான் சௌகரியம். என்றார்கள். நானும் முகவாட்டத்துடன் சரியென்று ஒப்புக் கொண்டேன். இளையராஜாவின் இசை கனவுகளிலிருந்து சன்னமாகி அமைதியாகிறது. மார்கழிப்பனியின் மூட்டம் மனதில் குடிகொள்கிறது. காலையில் அம்சப்ரியா அழைத்திருந்தார். பேருந்து நிலையம் வந்தபிறகு சொல்லுங்கள். என்றார். நானோ வண்டியில்தான் வருகிறோம் நாங்கள் அரங்கிற்கு வந்துவிடுகிறோம் என்றேன். ஆகா அம்சப்ரியா பேசிவிட்டார். அவர் குரலில் குளிர்ச்சி.

         வழக்கம் போலவே கூட்டத்தில் பேசப் போகிற பதட்டம் வரத்துவங்கியது. எப்பொழுதும் வரும். என்னதான் தைரியம் இருந்தாலும் மேடையில் அமர்வது,பிறகு மைக்கில் பேசுவதும் எப்படிப்பட்டவர்களுக்கும் கூச்சம் வருவதைப் பார்த்திருக்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கிற எத்தனையோ மனிதர்களின் உடலசைவுகளைக் கண்டிருக்கிறேன். உயர் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் கூட ஒரு பயந்த பாவனையுடன் காமிராக்கார ஆசாமிகளை நோக்குவார்கள். அவர்களையும அறியாமல் அச்சத்துடனும் வெட்கத்துடனும் கூச்ச சுபாவத்துடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். மகா நடிகனும் தன் உணர்வுகளுக்குள்ளாக கூச்சத்தையும் வெட்கத்தையும் மறைக்க மறைக்க முயல்வதுதான் நடிப்பில் முதன்மையானதாக இருப்பதை அறிவேன். எழுதிய சிறுகதைகளை ரீவைண்டிங் செய்து கொள்கிறேன். விமர்சனங்கள் கேள்விகள் சந்தேகங்கள் கேட்டால் எப்படி சமாளிப்பது என்றெல்லாம் ஒத்திகை செய்யாமலில்லை. இளவேனில் சாதாரணமா சொல்வார். நான் மிரண்டு கொண்டிருப்பதை கண்டிப்பார். “நீ தேவையில்லாம சுத்தி சுத்தி வௌக்கம் கொடுக்கற.. என்னக் கேட்டா ஒரு வார்த்தயில சொல்லுருவேன் அப்படித்தான்யா..எங்க நீங்க எழுதுங்க பார்க்கலாம்.னு சொல்லுயா ஏன் பயந்துக்கற “ என்பார். என்னால் அப்படிச்சொல்ல முடியவில்லையென்பது என் பலவீனம் என்பார். அதுவும் சரிதான். சரி எப்படியாவது சமாளிப்போம். இதற்குப் பெயர்தான் எழுதிச்சுமப்பது...

           இளவேனிலின் வண்டியில் புறப்பட்டோம். இருகூர் இரயில்வே கேட் போடாமல் இருப்பது ஆச்சர்யம். ஞாயிறு காலையின்  சோம்பேறித்தனம் காணாமல் போய் விட்டது. கதைகளில் வருகிற நந்தவனம், நொய்யல் ஆறு, சுடுகாடு, இருகூர் பிரிவு தொட்டபோது ஆச்சர்யமாக இருக்கிறது. போ கண்ணு உங்கூட நாங்க பேச வர்றோம் என்பது போல உணர்வு வருகிறது. இந்த நிலம் பற்றித்தான் அம்சப்ரியாவும் பேசுகிறார்.

     மேம்பாலம் ஏற வாய்ப்பில்லை. புறவழிச்சாலையில் பெட்ரோல் போட்டோம். வண்டி பாயத்தயாரனபோது யாழியிடமிருந்து தகவல். அவர் ஒத்தக்கால் மண்டபத்தில் காத்திருக்கிறேன் வாருங்கள் என்றார். வேகம் பிடித்தோம். மார்கழிப் பனியின் குளிர் இதமாக இருக்கிறது. மோதிச்செல்லும் காற்றில் கொஞ்சம் கெட்டித்தன்மை சுவாசிக்கிற பொழுது நுரையீரலுக்குச் சிரமம் தருகிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் பேசமுடியாது என்பதால் தவிர்த்திருந்தேன். மிக நீளமான எல்அண்டி பைபாஸ் இங்கிருந்து பார்த்தாலே மதுக்கரை தெரிகிறது. சவுரி முடியைப் போல ஆங்காங்கு சாலைகளில் செயற்கையாய் மின்னுகிற இண்டிகேட்டர்கள் மிளர நடுவில் கிழிக்கப்பட்டிருக்கிற வெண்கோடு இருபுறமும் செல்கிற லாரிகளை,கண்டெய்னர் லாரிகளை, சரக்கு வாகனங்களை பிரித்து ஒழுங்கு படுத்துகிறது. உங்களால் இந்தச் சாலையில்தான் முப்பத்தியிரண்டு மகாமாக டயர்கள் கொண்ட லாரிகளைப் பார்க்க முடியும். இதன் டிரைவர்கள் உண்மையிலேயே ஓமக்குச்சி நரசிம்மன் போலத்தான் இருப்பார்கள். லாரிகள் ஒரு ரயில் பூச்சி போல அத்தனை சமத்தாகப் போய்க் கொண்டுருக்கும்.

    இந்திய மாநிலங்களின் லாரிகளைக்காண்கிற அபுர்வமான பாக்கியம். உண்மையில் தேசிய ஒருமைப்பாட்டை வலுயுறுத்துவது பேணுவது லாரி டிரைவர்களும் லாரிகளும்தான். லாரி டிரைவர்களும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறார்கள். அவர்கள் இந்தியப்பெண்கள் குறித்து மிக விபரமாக அறிவார்கள். நியாயமாகப் பார்த்தால் லாரி,கண்டெய்னர் டிரைவர்கள் தான் தேசிய அரசியலுக்குத் தோதானவர்கள். அவர்களால் இந்தியாவைச் சிறப்பாக வழிநடத்த முடியும். முடிந்தால் மூன்றாம் அணி அமைப்பதற்குப் பதிலாக லாரி டிரைவர்களை வைத்து தேசிய அரசியல் கட்சியை பிரகாஷ் காரட், முலாயம் சிங், நிதிஷ்குமார் ஆகியோர் முயற்சி செய்யலாம். இந்தக் கருத்து அவர்களின் காதுகளுக்கு உடனடியாக எட்டவேண்டும்.

          லாரிகளை இளவேனில் ஓவர் டேக் செய்கிறார். லாரிகளின் டயர்களுக்கு அருகில் மிக அருகில் எங்கள் வண்டி போகிறது. அந்த சத்தம் இளையராஜாவின் பின்னணி இசைக் கோர்ப்பு போல் கேட்கிறது. லாரிகளின் சத்தங்களை நான் துல்லியமாக கேட்டிருக்கிறேன். இதைப் பலகுரலிசையில் கொண்டு வருவேன். எங்கள் வீடு லாரி சத்தங்களால்தான் உறங்கப்பழகியிருக்கிறது. இந்த ஒலி நுறு பேஸ் கிடாரின் ஒலியை ஒத்திருக்கும். லாரியின் சக்கரங்களுக்கு அருகில் போவதும் திரும்புவதுமாக சுவராசியமாக இலக்கியம் பேசிக்கொண்டே செல்கிறோம். பயம் என்பதே அறியாத அசுரவேகம். அந்த நிலையிலும் லாரியின் ஸ்க்ரேகப்ட்சர் குதித்து ஏறியிறங்குவதைக் காண்கிறேன். டிரைவர்கள் நாங்கள் எங்கே உள்ளுக்குள் சென்றுவிடுவோமே எனப் பயம் கொள்கிறார்கள்.

எழுபது மைல் வேகம். பாவம் யாழி முன்னமே வந்து காத்திருக்கிறார். பேரூர் செட்டி பாளையம் பைக் ரேசில் பறக்கிறவன் கூட இந்த வேகத்தில் சென்றிருக்கமாட்டான். பற்த்தலினூடாக தம்பான் தோது குறித்து ஐயா ஞானி பேசிய பாராட்டுரைகள் மற்றும் சில விமர்சனங்கள் குறித்தும் பேசிக் கொண்டே செல்கிறோம். வழக்கமாக நாங்கள் பேசினால் நாலு ஊர் கேட்கும். லாரி டிரைவர்கள் மற்ற எதிர் கார்கார ஓட்டிகள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் விவாதம் வேறு. வண்டி பெண்ட் ஆகி ஆடி பிறகு நேராகிப் போகிறது. மற்ற கனரக வண்டிக்காரர்கள் மெதுவாகப் போனார்கள். ஒரு வேளை  வண்டி ஈச்சனாரி தாண்டிவிட்டதோ என்று இளவேனில் சந்தேகப்பட்டார். நான் இல்லையென்றேன். கற்பகம் யுனிர்வர்சிடி வருகிறது. அடையாளம் காட்டி பிறகு பொள்ளாச்சி சாலையில் கலந்தோம். அடிவயிறு கிள்ளியது. பசியாகிறது சாப்பிடவில்லை. முதலில் சாப்பிட வேண்டும் என்றார். என்னடா இது அவர் பேசவேண்டிய வசனம் இன்னும் வரவில்லையே என யோசித்தது சரிதான்.

சரி முதலில் கால்கடுக்க காத்திருக்கிற யாழியைச் சந்திப்போம். யாழியின் அலைபேசியில் பிடித்தோம். அவர் எந்தச் சூழ்நிலையிலும் அழைப்பைத் துண்டித்து விட்டு அவர்தான் அழைப்பார். எங்கள் அவசரம் புரியாமல் கட் செய்து பிறகு அழைத்தார். எங்கிருக்கீறீர்கள் என்றார் நாங்கள் கற்பகம் வந்தாயிற்று..பேசியபடியே வண்டி ஒத்தக்கால் மண்டபத்தைத் தாண்டினோம். யாழி ஒளிப்பதிவாளர் காமிராவுடன் பின்தொடர்வது போல எங்களைக் கிராஸ் செய்ய ஆச்சர்யமாக கவனிக்க அவரோ நீங்க ஒத்தக்கால் மண்டபம் தாண்டிட்டிங்க என்றார். அருகில் காத்திருந்து பார்த்திருக்கிறார். நாங்கள் நிற்காமல் போவதைப் பார்த்து அவரே பின்தொடர்ந்து வந்து அதிசயம் நிகழ்ந்த மாதிரியிருக்கிறது.

          திருச்சியிலிருந்து இரவு பணிரெண்டு மணிக்கு வந்த யாழி மறுபடியும் காலையில் பொள்ளாச்சி வருகிறார். சாப்பிட்டிர்களா..இல்லையென்றார். வண்டி சைவ உணவு விடுதியில் நிற்கிறது. எதிரில் ஜைன மதக் கோயில் ஒன்று. காக்க வைத்தது மட்டுமின்றி அவரைத் தவிர்த்தும் பயணிக்க நிணைத்த போது சிரிப்பாக இருந்தது. இட்லி சொன்னோம். நான் ஆம்லெட் சொன்னேன். நான் வெங்காயம் அதிகமாக என்பது வழக்கம். சொன்னேன். அது போலவே உப்பும் அதிமாகப் போட்டு வந்தது. சுவரில் வண்ணக்காகிதங்களில் பறவைகள், குத்துவிளக்கு, விநாயகர், மயில், உட்புறமாக அழகழகாக வெட்டி ஒட்டியிருப்பதை ரசிக்கிறேன். ஐயப்பசாமிகள் அங்கும் நிறைந்திருக்கிறார்கள். யாழி தன்னுடைய தோள்பையை பேருந்தில் யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் அதில் சில நூல்கள் சில உடைகள் எல்லாம் தவறியிருந்த செய்தியைச் சொன்னபோது அதிர்ச்சியானது. அது லேப்டாப் பேக் போன்று இருப்பதால் யாராவது எடுத்துச் சென்றிருக்கலாம் என்றார். சோகம் சூழ்கிறது. உணவு ருசிக்கவில்லை. வாசலில் வநது மறுபடியும் நாங்கள் சென்றிருக்க வேண்டிய நவீன வண்ணப்பேருந்துகள் பறக்கிறது. சில பாடல்கள் சிந்திப்போகிறது.

வெயில் சுள்ளென்று அடிப்பது உணர்கிறோம். மணி ஒன்பதரையைத் தாண்டியிருக்கிறது. இரு வண்டிகளும் அவசரசிகிச்சைப் பிரிவில் இருப்பவர்க்கு  உயிர்காக்கும் மருந்து கொண்டு செல்வது போல பறக்கிறது. யாழியும் வேகமாக ஓட்டுபவர். சரியாக பத்தே காலுக்கு நகர் மன்ற ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் வளாகத்தினுள் நுழைந்தோம். பொள்ளாச்சி இலக்கிய நண்பர்கள், நெடுநாளைய நண்பர்களின் மகிழ்ச்சியான வரவேற்பு. அந்தப்பிரமாண்டமான பள்ளியின் முகப்பை பல தமிழ்த் திரைப்படங்களில் கண்டிருக்கிறேன். கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மேடான பகுதி. சுற்றுச்சூழல் பேணப்படுகிற பள்ளியாகத் தன்னை அறிவிக்கிறது. அமைதியான சூழல். மழைக்காதலன், வைகறை, சோழநிலா, இரவீந்திரன், அம்சப்ரியா, பூபாலன் உள்ளிட்ட நண்பர்கள் நலம் விசாரிப்பு. பயணம். சிற்றுண்டி சாப்பிடலாமா என்றார்கள்.

     அரங்கு தயாரானது. செங்காந்தள் சிற்றிதழின் ஆசிரியரும் கவிஞருமான  பூர்ணாவும் யாழியும் நானும் மேடைக்கு அழைக்கப்பட்டோம்.

           அம்சப்ரியாவின் வரவேற்புரையுடன் துவங்கியது. பொள்ளாச்சி நசன் அறிமுகவுரை நிகழ்த்தினார். சோலை மாயவன் உள்பட நண்பர்கள் ஒருங்கிணைப்புடன் நிகழ்வு துவங்கியது. நிகழ்வில் புதியதாய் படித்ததில் பிடித்ததுஎன்கிற தலைப்பில் பங்கு கொண்டவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் வாசித்த புத்தகம் கேட்ட செய்திகள் தன்னை பாதித்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிற நிகழ்வு. இதில் பலர் தங்கள் அனுபவங்களைப் பேசினார்கள். பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். வழக்கறிஞர் ஒருவர் மிகச்சிறப்பாகப் பேசினார். வானொலியில் கேட்டதில் பிடித்த நிகழ்ச்சி பற்றிக் கூறினார். அந்த நிகழ்வு நிறுத்தப்பட்ட சோகத்தைப பகிர்ந்து கொண்டார்.

தன்னால் நிகழ்விற்கு வரமுடியாத கவிஞர் இசை தனது கட்டுரையை அனுப்பியிருக்கிறார். கட்டுரையை வாசித்தவர் அம்சப்ரியா. அந்தக் கட்டுரை சூடாக பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செய்திமடலில் வெளியாகியிருக்கிறது. தனது கவிதையாக்கம் குறித்த வாசக அனுபவத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அந்தக்கட்டுரை இருக்கிறது. தேவதச்சனுடனான உரையாடலின் பொழுது அவர் கூறியதாக ஒரு வாசகம் வருகிறது. நூறு கவிதைகள் எழுதிய ஒருவருக்கு அடுத்த கவிதை எழுதும் போது அந்த நுறு கவிதைகளின் அனுபவம் உதவப்போவதில்லை. என்பதுதான் அது. நெருடலான ஒன்று. கட்டுரை உணர்வின் அடிப்படையில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

    அடுத்த நிகழ்வாக கவிஞர் பூர்ணாவின் மூன்றாவது கவிதை நூலான முளை கட்டிய சொற்கள்“ குறித்த உரையை யாழி வழங்கினார். இந்த நூலுக்கு கவிஞர் சக்திஜோதி முன்னுரை வழங்கியருந்தார். கையடக்க ஐபேட் அளவிலான தொகுப்பு. அதே சமயம் அந்த விஞ்ஞானம் தருகிற பிரமிப்பு அந்தக்கவிதைகளில் மொழியாக்கத்தில் சிறப்பாக இருப்பதை ஞாபகப்படுத்துகிறார். இது அவருடைய மூன்றாவது தொகுப்பு. எளிமையான சொற்களின் சித்திரங்கள். காட்சிகளாகவும் இளம் கவிஞர் ஒருவரால் கவனிக்கப்படுகிற உலகமாகவும் கவிதைகள் இருப்பதைச் சுட்டினார். தனக்கு உவப்பான இரண்டு கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார் யாழி. அவர் அதிக காலத்தை எடுத்துக் கொள்வதில்லை. ரத்தினச்சுருக்கமாக குறிப்பிட்டார்.

        பிற்பாடு ஏற்புரையாற்றிய பூர்ணா தன் கவிதைகள் மூலமாக தான் அடையும் உணர்வுகளின் வெளிப்பாடாகவே என் மொழி இருக்கிறது என்றார். இது வரையிலும் இந்த நிகழ்வில் உள்ள நண்பர்களை சந்தித்ததே இல்லை. இருப்பினும் என் நூலுக்கு அறிமுகம் தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பேச வேண்டிய செய்திகளை எழுதுகிறேன் என்றார். தான் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிற செங்காந்தள் இதழ் குறித்து சில செய்திகள் பகிரந்து கொண்டார். இந்த இதழ் நடத்துவதே நமது செவ்விலக்கியங்களில் உள்ள மலர்கள் குறித்த பதிவுகளை முழுமையாக அறிந்து கொள்ளும் விதமாகவும் அந்தப் பதிவுகள் சமகாலத்தின் இலக்கிய உலகிற்கேற்ப  கட்டுரைகள் எழுதப்படுகிறது என்றார்.

           அடுத்த நிகழ்வில் க.அம்சப்ரியா “தம்பான் தோதுசிறுகதை நூல் பற்றிய அறிமுகம்  செய்தார். எளிய மக்களின் கதைகளாக இந்தக்கதைகள் இருக்கிறது. பொதுவாக சிறுகதைகள் என்றால் ஐந்துபக்கம் நிரப்புதல் மட்டுமின்றி கடைசிநேரத்தில் பக்கங்கள் மிச்சமிருந்தால் ஒரு கதையை நுழைக்கிற பணி நடக்கிறது. பெரும்பாலும் கதைகளில் ஒரு ஆரம்பம், இடையில் சிறு திருப்பம்,முடிவில் சுபம் கொஞ்சம் சுவராசியம் என்பதாகவே இருக்கும். ஆனால் இந்தக் கதைகளில் வாசகர்கள் அது போன்ற எதிர்பார்ப்புடன் நுழைபவர்களுக்கு ஏமாற்றம் தரும். மிக இயல்பாக காட்சிகளும் உரையாடல்களும் வந்து போகிறது. ஒரு கதையில் போகிற போக்கில் ஒரு சிறுகதைக்கான காட்சியை ஒரு வரியில் சொல்லிக் கொண்டு போகிறார். பறந்து போகிற விமானத்தைக் கல் எடுத்து எறிந்து விட்டு “இந்தச் சனியனுக்குத்தான் எங்கள் காடு பறிக்கப்பட்டது..“ என்கிற ஒரு வரியே கதையாக மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுபோன்ற பல இடங்களில் பல கதைகளில் ஒரு வரி சாதாரணமாக கடந்து போகிறது. சிறுவர்களின் பால்ய கால விளையாட்டுகள், திருடுதல், அவர்கள் செய்கிற சேட்டைகள் எல்லாம் நமது பால்யகாலத்தை நினைவுட்டுகிறது. நாமும் அது போல நடந்திருக்கிற வாய்ப்புகள் இருக்கும். நாற்பது வயது கடந்தவர்களுக்கு இது நிச்சயமாக சாத்தியம். குறிப்பாக வண்டிகளில் போகும் சர்க்கரை.நிலக்கடலை மூட்டைகளை குத்தி ஓட்டையிட்டு அதிலிருந்து ஒழுகும் பொருட்களைக் களவு செய்வதும் பிறகு அவர் சாட்டையால் வீசுவதும் கண்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் பல காட்சிகள் வருகிறது.

           குறிப்பாக சினிமாத் தியேட்டர் களமாக இருக்கிற தனசீலி குணசீலி கதை முக்கியமானது. சினிமா திரையரங்குகள் இன்று இடிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியை அலசுகிறது. இப்பொழுதும் செயல்படாத தியேட்டர்களைக் காண்கிற பொழுது நம் கழிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. சாதி மத சமூக வித்யாசம் காணாமல் சமரசம் உலாவிய இடமாக தியேட்டர்கள் இருந்த காலம் அது. சினிமாவிற்கு செல்கிற பயணங்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக டிக்கட் எடுக்க நண்பர்களுடன் நாம் மேற்கொள்கிற யத்தனங்கள் அலாதியானவை. இந்தக் கதையை வாசிக்கிற பொழுது நமக்கு பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. சினிமாத் தியேட்டர்களை மையமாக வைத்து பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம் வெயில் போன்ற படங்கள் இருந்தாலும் இந்தக் கதை தருகிற அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது. இப்படியாக பல கதைகளும் பல உணர்வுகளை அனுபவத்தைத் தருகிறது. முழுமையான எல்லாக் கதைகளைப பற்றிக் கூறிவிடுவது சரியானதல்ல ஆகையால் நீங்கள் தொகுப்பை வாசிக்கும் பொழுது நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். நானும் நூறு சிறுகதைகளுக்கும் மேல் எழுதியிருந்தாலும் இந்த நூல் சிறுகதைகளின் தன்மையிலிருந்து விலகி குறுநாவல் வடிவம் போலிருக்கிறது.

வாசிப்பனுபவத்திலிருந்தும் கதைகளுக்குள் நிலவும் ஏராளமான விபரங்களின் அடிப்படையில்  சில விளக்கங்களை அவர் ஏற்புரையின் போது கூறவேண்டும் என்று கேள்விகளை முன்வைத்தார். நிறைய சம்பவங்களைச் சேர்க்க வேண்டும் என்று கதைகளுக்குள் திணிக்கப்பட்டது போன்ற காட்சிகள் உள்ளது. கொங்கு மொழியை மிகவும் இயல்பாகவும லாவகமாகவும் பயண்படுத்தியிருக்கிறார்.

மேலும் இதில் இருபது நாவல்களுக்குரிய சம்பவங்கள் பொதிந்துள்ளது. இந்த நூல் வந்த பொழுது கனகராஜன் தினமும் வாசித்துவிட்டீர்களா என்று கேட்பார். நான் பேசியதை விடவும் அவர் பேசியிருந்தால் நன்றாக இருக்கும். அவர்தான் ஒவ்வொரு கதைகளை வாசித்துவிட்டு மிகவும் ஆர்வத்துடன் என்னை சீக்கரம் படியுங்கள் என்றார். அவரே வெளியிட்டிருக்கிறார். எப்படி பொருளாதாரம் மற்றும் விற்பனையை மனதில் வைத்து செய்தார் எனத்தெரியவில்லை. இன்னும் பரவலாக செல்ல வேண்டிய தொகுப்பு ஏன் பதிப்பகம் மூலமாக வெளியிடவில்லை. இந்த நூலில் உள்ள மீன் வாகு கதையில் உடலிலிருந்து வெளிவரும் வாசம் என்பது அது குறிப்பிட்ட சாதி மக்களின் உடல் வாசனையைக் குறிக்கிறதா என்பதை அவர் கூறவேண்டும் என்றார்.

         அம்சப்ரியாவின் உரை ஒரு படைப்பை நாகரீகமிக்க சொற்களால் பாராட்டப்பட்டதாகவே உணர்ந்தேன். கதைகளுக்குள் ஓடும் ஜீவ உணர்வுகளை அவர் குறிப்பிட்டுப் பேசியது படைப்பாளிக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. என் சிறுகதைகள் குறித்துப் பொதுவில் பேசியவர்கள் சுரேஷ்மான்யா இப்பொழுது க.அம்சப்ரியா இரண்டு பேரும் சிற்றிதழ் ஆசிரியர்கள். சிற்றிதழ் மனோபாவம் உள்ள மனதிற்கு என் கதைகள் உளப்புர்வமாக மகிழ்வு தந்திருக்கிறது என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அடுத்து நான் ஏற்புரைக்கு முன்பாக கவிதைகள் வாசிப்பு நிகழ்வு. எனக்கு அவர் பேசியதற்கு பதில் சொல்லவும் பிறகு நான் பேசுவதே இறுதியாகவும் அமையப்போகிறது என்பதை யோசிக்கும் போது மறுபடியும் அச்சம் சூழ்கிறது. இரா. பூபாலன், தலைமையில் கவிதைகள் வாசிக்கப்பட்டது.

கவிதை வாசித்தல்- சோலை மாயவன், தனபாலன், செந்தில் பாலாஜி,இரா. பூபாலன், சோ. இரவீந்திரன், யாழி, மணிமேகலை, உள்பட மேலும் பலர் கவிதைகள் வாசித்தார்கள். இந்த நிகழ்வில் அருள்நிதி ஐயா வாசித்த கவிதை மரபுக் கவிதையைச் சார்கிறது. மற்ற கவிதைகள் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. சமகாலத்தில் பொதுவாக கவியரங்கங்களில் எப்படியும் நவீன கவிதைகள் இடம்பெற்றுவிடுகிறது. உணர்வெழுச்சி கவிதைகள் தன்னளவில் ஏற்படுத்தும் கிளர்ச்சியை அரங்கம் முற்றிலுமாக நிராகரிக்கத் துவங்கியிருக்கிறது. திமுக கவிஞர்கள் எல்லாருக்கும் வயது எழுபதுக்கும் மேல் ஆகிவிட்டதாலும் போதிய அளவு தலைமையை தலைவரைப் பாடிவிட்டதாலும் கவியரங்க கவிதைகள் தனது மின்னலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை உணர்வு தமிழ் உணர்வு சார்ந்த கவிதைகளில் இயல்பாகவே உணர்ச்சி அதிகமாகவே தலைப்படும். அது அவசியமும் கூட அந்த உணர்ச்சி மேலோங்க மேலோங்கத்தான் அவர்கள் நவீன காலத்தின் மொழிக்குத் திரும்புவார்கள் என்பதை இந்த கவிதை வாசிப்பு உணர்த்தியது. குறிப்பாக யாழி ,செந்தில் பாலாஜி, சோலை மாயவன், யாழி, இரா. பூபாலன், வாழைகுமார் கவிதைகளில் அவர்களின் அனுபவம் சிறப்பாக வெளிப்படுகிறது.  கேட்டவர்களின் ஆழ்மனம் நிச்சயம் கைதட்டி வரவேற்றுக் கொண்டிருக்கும்.

         ஏற்புரையில் தொடக்கத்தில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகளுக்கு கோவையில் நடந்து வரும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகள் தான் முன்னோடி என்று அம்சப்ரியா தெரிவித்து இருந்தார். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னோடியாகவே பொள்ளாச்சி திகழ்கிறது. புன்னகை கவிஞர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் எந்த தயாரிப்பும் இல்லாமல் வந்திருக்கிறேன். என் கதைகள் குறித்து என்ன பேசுகிறார்கள் என்பதை ஆர்வத்துடன் கேட்க வந்திருக்கிறேன். புன்னகையின் வசீகரமிக்க கவிதைச்செயல்பாடு எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கி யிருக்கிறது. அதில் நானும் நண்பர்கள் பலரும் எழுதியிருக்கிறோம். அதன் பிறகு கறுக்கல், கருந்துளை, உள்பட பல சிற்றிதழ்களைத் தொடர்ந்து தருகிற களமாக பொள்ளாச்சி இலக்கிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தன்னாலான பணிகளை தமிழ் இலக்கியத்திற்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சி நசன் போன்றவர்களின் பணி மகத்தானது. அவருடைய சிற்றிதழ் சேகரிப்புப் பணி மற்றும் அவர் சிறந்த இலக்கியக் கலைக்களஞ்சியத் தொகுப்பு ஆய்வாளராகவும் உள்ளார்.

         பொள்ளாச்சிக்கு கோவையில் சினிமாவிற்கு டிக்கட் கிடைக்கவில்லை யென்றால் இங்கு வந்தால் கிடைக்கும் என்று வந்த காலம் உண்டு. இங்கும் கிடைக்காமல் நண்பர் வீட்டில் தங்கி இரவுக்காட்சி பார்த்துவிட்டு காலையில் ஊர் போனதுமுண்டு. அந்த சினிமா நாட்கள் நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் ரோஜா படம் பார்த்தேன். அந்தப்படம் ஓடத்துவங்கியதிலிருந்து பிரமிப்பு ஏற்பட்டது. ஏ.ஆர் ரகுமான் இசை, ஒளிப்பதிவு. காட்சிகள். ஆனால் மக்கள் அரங்கிலிருந்து வெளியேறிக் கொண்டேயிருக்கிறார்கள். மக்கள் ரசனைக்கு எதிராகவே இருக்கிறது. அந்த ரசனை நம் தேசிய ரசனையைக் கேள்வி கேட்ட காலம். முழுமையாக யாரும் படம் பார்த்தபாடில்லை.

திருட்டுக்கும் குறிப்பாக திருட்டுத்தொழிலைக் கொண்டிருக்கிற சமூகம் பற்றிய விபரங்கள் காவல் கோட்டம் நாவலில் பிறகு அரவான் படத்திலும் நாம் பார்க்கலாம். துப்புக்கூலி என்கிற வழக்கு நம் சமூகத்திலிருந்த ஒன்று. திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுக்குச் செலவான உழைப்பிற்கு கூலியைப் பெற்றுக்கொண்டு திரும்பத்தருதல் இருந்தது. இந்த சமூக வழக்கு எம்ஜிஆர் ஆட்சி வரை நீடித்த ஒன்று. பிறகு டிஜிபி ஜாங்கிட் போன்றவர்கள் அந்த மக்களிடம் உத்தரவு எழுதி வாங்கி அவர்களை  யதார்த்தமான வாழ்விற்கும் சமூகப்பணிக்குத் திருப்பிவிட்டது நிகழ்ந்தது. தங்கள் விவசாயம் பொய்த்த காலத்தில் குன்றுகளிலிருந்து கீழிறங்கிய மனதின் விவசாயத்தையும் திருட்டையும் கற்றுக்கொள்கிறான். எஸ்.ராமகிருஷ்ணன் தனக்கு இருந்த புத்தக ஆர்வம் காரணமாக துவக்கத்தில் சிறு நூலையாவது எடுத்துவருவது வழக்கமாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த கட்டுரை ஒன்று உள்ளது. சமூகத்தில் திருட்டுக்கு இன்றும் இருக்கிற சரிசமமான நடவடிக்கைகள் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது. திருடப்படுகிற உணவுப்பொருட்களின் ருசி பற்றிய தகவல்கள் நம் இலக்கியங்களில் உள்ளது.

சற்று முன்பு உங்களிடம் அளிக்கப்பட்ட பொன் இளவேனில் கட்டுரையாக எழுதி நோட்டிசாக விநியோகிக்கப்பட்டது. தம்பான்தோதுசிறுகதை நூல் பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரை அது. இதுநாள்வரையிலும் தமிழ் விமர்சன உலகம் கொண்டிருக்கும் ஒருசார்பான ரகசியமான ஒரவஞ்சனையைக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழின் மூத்த படைப்பாளர்கள் என்று சொல்லப்படுகிற பலர் தங்களின் அடுத்த தலைமுறை யினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் இழைத்து வருகிற பிரச்சனைகளைப் பேசுகிறது. தங்கள் உருவாக்கிப் பத்தரமாகப் பேணிவரும் பீடங்களைப் பற்றியது. அறிவுதளத்தில் செயல்படுகிறவர்களுக்கு மத்தியிலும் நிலவும் அதிகார பீடம் பற்றிய நிலைகளைப் பேசுகிறது. இன்றளவும் நிகழ்ந்து வரும் இலக்கிய நேர்மைக்கு அளிக்கப்படுகிற தீங்கு குறித்து பேசுகிறது. நீங்கள் வெறும் அறிவிப்பு நோட்டிஸாகப் பார்க்காமல் அதில் உள்ள ஆதங்கத்திற்கு நமது தமிழ்ச்சூழலில் கிடைத்துக் கொண்டிருக்கிற மரியாதைகளையும் கவனிக்கலாம்.

என் கதைகளை பங்கேற்பாளர்கள் பலரும்  நீங்களும்  வாசித்திருக்க வாய்ப்பில்லை யென்பதால் இரண்டு கதைகள் வழியாக என் கதை உலகம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முதல் கதை

 மாமன் மச்சினன் இருவருக்கும் இருக்கும் பகையை மறந்து வாழ்கிறார்கள். கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் விபரீதம் அவர்களுக்குள்ளாக பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறது. தங்கள் குலமும் சாதிக்காக தங்கை திருமணத்தில் கலந்து கொள்கிறார் மச்சினன். ஒரு வார ஏற்பாடுகளில் சிறப்பாக தன் பங்களிப்பை முடித்து விட்டு தன் ஊருக்குப் போகிறான். ஒரு வார திருமண சடங்குகள், விருந்து, பந்தி, பதில் மரியாதை, விருந்து, கறிவிருந்து இப்படியாக நடந்து முடிந்த களைப்போடு ஒய்விலிருக்கிறார்கள். தன் கணவனான  மாமனுடன் இரவு உரையாடலில் தன் அண்ணன் குறித்து மனைவி பேசுகிறாள். என் அண்ணன் ஒரு வாய் கூட திருமணத்தில் சாப்பிடவில்லை மட்டுமின்றி நம் வீட்டில்  ஒருவாராமாகச் சாப்பிடவில்லை என்கிறாள். அவன் அவளை உதைத்துத் தள்ளுகிறான் ஆவேசப்படுகிறான். தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்கிறான். எனக்கே இப்பொழுதுதான் தெரியவருகிறது என்கிறாள். காரணம் கேட்டபோது வீட்டிற்கு வந்தபோது தன்னை நீங்கள்  வரவேற்காமைதான் காரணம் என்கிறாள். அந்த நிலையை யோசிக்கிற போது பிடிபடவில்லை. நாம் எதாவது வேலையிலிருந்திருப்பொம். அவனுக்கு அது தவறென்று படுகிறது. உடனடியாக யோசனை தோன்ற காரியத்தில் சடுதியில் ஈடுபடுகிறான்.

இந்த ஒருவாரத்தில் செய்யப்பட்ட விருந்து வகைகளைத்திரும்பவும் செய்யச் சொல்கிறான். வகைவகையான விருந்துச் சாப்பாடு. பலகாரங்கள், பட்சணங்கள் தயாராகிறது.  மறுபடியும் அந்தக் கல்யாண வீட்டில் செய்யப்படுகிறது. தனது மச்சினன் குடும்பத்திற்கென்று  மட்டும் தனியாக.  அவன் ஊருக்க வண்டிகள் கட்டிக் கொண்டு புறப்படுகிறான். என்பதாக கதை முடிகிறது. இந்தக் கதை தற்போது பதினைந்து நிமிட திருமணங்களை விமர்சனம் செய்கிறது. இன்றைய நவீன உலகில் தனது தங்கை, சகோதரன் திருமணங்களுக்குக் கூட வராமல் நடக்கிற திருமண குடும்ப வைபவங்களைப் பார்க்கிறோம். அந்த முறையை நடுத்தர மக்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

             இந்தியக் குடும்ப முறைகளும் சொத்துப் பாதுகாப்பு முறைகளும் மேலைநாடுகளுக்கு ஆச்சர்யத்தை தருகிறது.  சில நாடுகள் பின்பற்றவும் முயற்சிக்கிறார்கள். சிலர் விநோதமாக குடும்ப அமைப்பே சுரண்டல் முறைதான் என்று அதிர்ச்சயளிக்கிறார்கள். இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை  விதித்தபோது நம் பொருளாதாரம் வீழ்ந்துவிடவில்லை. காரணம் சொத்துப்பாதுகாப்பு மற்றும் சேமிப்பு. நீண்ட கால சேமிப்பு முறைகளில நாம் கொண்டிருக்கிற அக்கறை. அமெரிக்கா,ஐரோப்பிய யுனியன்கள் தள்ளாடியிருக்கிறது. தற்போது கூட பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நினைவிருக்கலாம். சம்பளம் தரக்கூடப் பணமில்லை. நாம் கூட தந்து உதவியிருக்கிறோம். இந்த அதிசயம் மீது ஏகாதிபத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தக்குடும்ப அமைப்பு முறையை சிதைக்க வேண்டும். சொத்து நகைகள் மீது கொண்டிருக்கிற ஆர்வத்தைக் குறைப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. மொழிச்சிதைவை ஊக்கப்படுத்துகிறது.

            மற்றொரு சிறுகதையின் வடிவம்.

காலையில் ஒரு துக்கநிகழ்வுக்குப் போயிருந்தேன். கழகத்தொண்டர் அவர். அவர் தனது எழுபத்திஏழாவது வயதில் காலமாகிவிட்டார். அவர் குறித்த நினைவுகளை இனியோரு தொண்டர் பகிர்கிறார். அவருக்கு அவர் காலமானது இன்று காலையில்தான் தெரிகிறது. ஊரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை தன் நடைப்பயிற்சியின் போது காண்கிறார் அவர். சிறுவயதில் அண்ணாவின் கருத்துகளை நாடகங்களாக்கி நடித்தும் பாடியும் ஆடியும் நடித்து கட்சி வளர்க்கப்பாடுபட்டவர் அவர். அவரைப்போன்ற பலரை ஞாபகப் படுத்துகிறார். குறிப்பாக அங்காளம்மன் திருவிழா ஒரு வாரம் நடக்கும். நாங்கள்  மூன்றுமாதங்களுக்கு முன்பே நாங்கள் காட்சிகள் எழுதுதல். ஒப்பனை, உடையலங்காரம், நடிப்பு வசனப் பயிற்சி, அரங்க அமைப்பு சீன் செட்டிங்க் போன்றவற்றில் ஈடுபட்டு  செயல்படுவோம். சமூக முற்போக்குக் கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள் பொதிந்த வசனங்களைச் சேர்த்து நடிப்பதில் காலமான நண்பர் திறமைசாலி என்றார். இந்த நினைவலைகளைப் பகிர்ந்து கொணடிருந்த போது நடப்பு நகர செயலாளர் தன் பரிவாரங்களுடன் வருகிறார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் சொத்துகள் வண்டி வாகன வசதிகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த நண்பர் அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே எழுந்து விடைபெற்றுக் கொண்டு தனது நடைபயிற்சியைத் துவங்குகிறார். நண்பரின் உடலைக் காணாத ஏக்கத்தில் ஆங்காங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வணங்கிக் கொண்டே போகிறார் அவர். இந்தக் கதையில் முன்பு வந்த தொண்டர் தன் ஐந்து நிமிட உரையாடலில் ஒரு வாக்கியத்திலேயே திராவிட இயக்க வரலாற்றை அழகாகச் சொல்லி சென்றுவிட்டதை நாம கவனிக்க முடியும்.

          இதில் அதிகமான சம்பவங்களைத் திணிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அதன் காரணம் அம்சப்ரியா  கேட்டார். ஆற்றங்கரை மணலின் ஒரு குருணையைத்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் கோடாணுகோடி மக்களின் லட்சக்கணக்கான வாழ்வியல் கதைகள் அந்தக் கரைகளில் புதைந்து கிடக்கிறது. எழுத எழுத தீராத கதைகள். இதன் தொடர்ச்சியாகவே நான் தற்பொழுது மூன்று நாவல்களை எழுதிவருகிறேன். இந்தப் புதிய ஆண்டில் வெளியாகும். உங்கள் முன்பாக தெரிவிப்பதால் நிச்சயம் வெளியாகும். பதிப்பகங்களின் நெருக்கடிகள் என்னால் சமாளிக்க முடியாது. மறைமுகமாக அவர்களின் நிபந்தனைகளை எதிர்கொள்வதற்கு நாமே வெளியிட்டுக் கொள்ளலாம் என்பதால் வெளியிடுகிறேன். இங்கு வைகறை, மழைக்காதலன், பூர்ணா போன்ற நண்பர்கள் தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்து வந்திருந்து பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்கள். இப்படியான நண்பர்கள் இலக்கியத்திற்குள்ளாக பிரதிபலனின்றி உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்பு போற்றப்பட வேண்டும். தங்கள் அதிகார பீடங்களிலிருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கிற மூத்த ஆளுமைகள் இப்படியான நிகழ்வுகள் குறித்தும் இளைய தலை முறை இலக்கிய முயற்சிகள் பற்றியெழுத வேண்டும்..

            தமிழ்நாட்டில் நல்ல விசயங்களுக்கு ஸ்பான்சர் கிடைக்காது. ஆன்மீகம், தியானம், மதவழிபாடுகள், கருத்தரங்க கூட்டங்கள், கோவில் கொடைகள் போன்றவற்றிற்குக் கொட்டப்பட்ட கோடாணு கோடி ரூபாய்கள் நல்ல விசயங்களுக்குத் தருவதில்லை. தெளிவு நிலை அறிவுசார் நிகழ்வுகளை எளிதில் மதயாணைகள் கண்டு பிடித்து விடுவார்கள். மாறாக அது போன்ற செய்திகள் நடப்பதையும் பரப்பாமலும் இருப்பார்கள். நன்மையான விசயங்களை நாம் போராடிப் போராடித்தான் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. சிலர் தவிர்ப்பார்கள். சிலர் குழப்புவார்கள். இப்படியெல்லாம் பேசலாமா என்பார்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் சில நல்ல காரியங்களை நண்பர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் நீங்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். இது நிச்சயம் சாத்தியமாகிற ஒன்றுதான். காந்தியுகம் துவங்கும் முன்பே நம் முன்னோர்கள் நீதிக்கட்சி அமைச்சரவைகள் தமிழகத்தில் நடத்தி ஆட்சி செய்தவர்கள். வெள்ளயர்கள் ஆட்சிக்காலத்திலேயே அது சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் தமிழர்கள். இந்த அமைச்சரவையில் தமிழாய்ந்த முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள். முன்பு ஒதுக்கப்பட்ட ராச்ய சபா எம்பி பதவிகளைக் கூட கிரிக்கெட் காரர்களுக்குத் தாரை வார்த்துவிட்டார்கள்.

              நிகழ்வை ஒருங்கிணைத்து தம்பான் தோது நூலுக்கான அறிமுகமும் பூர்ணாவின் கவிதை நூலுக்கும் அறிமுகம் செய்தமைக்கு நன்றியைத் தெரிவித்து விடைபெற்றேன். பல ஆண்டுகளாக இலக்கியம், பதிப்பு, நூல் வெளியீடுகள், தொடர்ந்து பல்வேறு சிற்றிதழ்கள், என்பதாக இயங்கி வருகிற நண்பர்களுக்கு  தோள் கொடுப்பதின் மூலம் மொழிக்கும் படைப்பிலக்கியத்திற்கும் உதவி செய்கிறோம்.

         நிகழ்வின் பேசியது எதிரொலியாக நண்பர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். மூத்த ஆளுமையும் இலக்கிய ஆவணக் காப்பாளருமான பொள்ளாச்சி நசன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். நீங்க பேசப் பேச நான் பலப்பல நினைவுகளில் போய் மீண்டு வந்தேன் என்றார். அவர் செய்து வருகிற டிஜிட்டல் நூலாக்கப்பணிகளில் தமிழ் ஓலைச் சுவடிகளையும் அவர் பதிந்து வருகிறார். இதற்காக தனது சொந்த செலவில் பல கருவிகளை வாங்கி பயண்படுத்துவதை பகிர்ந்து கொண்டார். தம்பான் தோது நூலைத் தந்தால் உங்களுக்கு  பத்து நிமிடத்தில் டிஜிட்டல் புத்தகமாக்கித் தந்துவிடுவேன். நீங்கள் யாருக்கும் அனுப்பிக்கொள்ளலாம். என்றார். பிறகு ஒவ்வொரு நண்பர்களும் தங்கள் பாராட்டைத் தெரிவித்தார்கள். க.அம்சப்ரியாவிடம் “நான் ஏதாவது ஓவராகப் பேசி விட்டேனாஎன்றேன்.. இல்லை நீங்கள் சிறப்பாகவே பேசினீர்கள் என்றார். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சி நடத்தும் துக்கம் எனக்குத்தெரியும். சன்னலுக்கு அருகில் காவல் நிலையம் வேறு இருக்கிறது. நாம் வந்து விடுவோம் பிறகுதான் பிரச்சனை வரும். ஒரு தமிழ் உணர்வாளர் நீங்கள் பேசியதெல்லாம் சரிதான் ஆனால் அதிகமான ஆங்கில உச்சரிப்புகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். நல்லவேளையாக அவர் நூலின் அட்டையில் இந்திவாசகம் வேறு இருந்தது. அதற்கு எதாவது சொல்வாரோ என்கிற பயம் வந்தது. முன்னாள் தலைமை யாசிரியர் ஒருவர் ஏன் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்துவது தவிர்த்தீர்கள் என்றார். அம்சப்ரியா அஞ்சலி செலுத்துவது தவறில்லை. ஒரு நிமிடம என்கிறபோது தான் நமக்குப் பிரச்சனை. அவருடைய கருத்துக்களை நாம் ஒரு நிகழ்வு முழுவதுமாகப் பேசலாம் என்றார். பிற்பாடும் அவர் தன் கருத்தில் உறுதியாக நிற்க மண்டெலாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி முடிந்த பிறகு அந்த ஆசிரியர் தான் வேறொரு முக்கியமான பணிக்கு செல்லவேண்டுமென்று மேற் கொண்ட நிகழ்விலிருந்து வெளியேறினார். அவரைப் பொருத்தவரை நெல்சன் மண்டேலா ஒரு பாவபட்ட ஜீவன். அந்த தினங்களில் தமிழகத்திலும் இந்திய அளவிலும் தேவாலயங்களில் அஞ்சலி செலுத்தினார்களா தெரியவில்லை.

         சோழநிலா  மீண்டும் புதிய செம்பதிப்பாக “வேரில் விழுந்த துளிகள்தொகுப்பை மீண்டும் கொண்டுவரவிருப்பதாகச் சொன்னார். மேலும் சில புதிய இளம் கவிஞர்களின் கவிதைகளுடன் பதிப்பதாகப் பேசினார். தோழர் மணிமுத்து அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர் உழைக்கும் மக்கள் தமிழகம் எனும் கலாச்சார இதழை அளித்தார். அதில் அவர் இசைபிரியாவின் கொலையும் பெண்களின் போரட்டமும் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி சில முக்கியமான கட்டுரைகள் அதில் அடங்கியிருக்கிறது. எனக்கு இந்த தொகுப்பில் உள்ள மாநில தவம் கதை நினைவுக்கு வருகிறது.

சிறு கவிதை நூல்களுக்கு அச்சாரம் போட்டவர் தேவதேவன். தன் சொந்தப் பதிப்பில் அவர் பதித்த நூல்கள் தமிழ்க் கவிதைப் பதிப்புகளுக்கு நம்பிக்கை அளித்த காலம். அழகிய பெரியவன், குட்டி ரேவதி, சே.பிருந்தா.அ.வெண்ணிலா, சல்மா, தேவதேவன் தொகுப்புகள் கையடக்க அளவில் வெளிவந்து பெயர் பெற்ற காலத்தில் வந்த எளிய சிறிய நூல். நீண்ட வருடங்களுக்குப்பிறகு அவர் கைகளில் நான் பார்த்தேன். அது போலவே இன்று பேசப்பட்ட முளை கட்டிய சொற்கள் தொகுப்பும். நியு சென்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோழநிலா அவர் சகோதரர்கள் கோ. பாரதி மோகன் போன்ற நண்பர்கள் சகோதர சமேதமாக இலக்கியத்திற்கு உழைக்கிறார்கள். அரங்கில் இரா. பூபாலன் சகோதரர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். பொள்ளாச்சி எத்தனை உவமானங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. நண்பர்கள் சகோதரர்களை இலக்கியத்திற்குள் அனுமதிக்கிற பெற்றோர்கள் வணங்க கடமைப்பட்டவர்கள். விளையாட்டுகளில் இன்ன பிற துறைகளில் சகோதரர்கள் பணி ஆச்சர்யப்பட வைக்கும். என் எழுத்திற்குக் கடன் பட்டு உழைக்கிற சகோதரர்களையும் நன்றி பாராட்டுகிறேன்..

          மதிய விருந்து என்றுதான் சொல்ல வேண்டும். இலக்கியக் குடும்பமாக சாப்பிட்டோம். வெயில் சுள்ளென்று அடிக்கிறது. பிரத்யேகமான குளுருட்டப்பட்ட அரங்கில் சாப்பிடச்சொன்னார்கள். விருந்தோம்பல் முடிந்து நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டபோது மறக்காமல் அடுத்த நிகழ்வு பற்றிக் கேட்டோம். வைகறையும் யாழியும் புறப்பட்டார்கள். இளவேனில் வண்டி வேகமெடுக்கிறது. மறுபடியும் நிகழ்ச்சியின் சம்பவங்கள் காலையிலிருந்து ஒவ்வொரு காட்சிகளாக ரீவைண்ட் ஆகிறது. நான் என்னைத் தவிர்த்துப் போகிற வண்ணப் பேருந்துகளைக் கவனிக்கிறேன். கற்பகம் வந்து பைபாஸ் சாலையில் சரியான வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறபோது அலைபேசியிலிருந்து அழைப்பு. பதிவு செய்யப்படாத புதிய எண். மறுமுனையில் பொள்ளாச்சி நசன் அவர்கள் “ உங்க புத்தகத்த நான் டிஜிட்டல் புத்தகமாக்கிட்டேன் உங்களுக்கு இமெயில் அனுப்பியிருக்கிறேன்.. நீங்க எங்க யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிக்கலாம்“ நான் நம்பிக்கையின் வழியைப் பிடித்து நிறுத்தி நம்பமுடியாமல் விக்கித்து நிற்கிறேன். இளவேனில் விபரம் கேட்டார். சொன்ன போது அவரும் நம்ப முடியவில்லை.“பரவாயில்லயே நமக்கும் நல்லது செய்யறதுக்கு மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க...“ என்றார். அது போலவே மழைக்காதலன் என்கிற நண்பர் சம்பத்குமார் இதெல்லாம் பெரிய அரங்குல பல நூறு பேர் மத்தியில பேசவேண்டியது. இங்க சாதாரணமா பேசிட்டிங்க நண்பா என்று தழுவினார். இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிற பொறுப்பு என் எதிர் வருகிற எழுத்தியக்கதிற்கு இருக்கிறது.

      இரயில்வே கேட் போட்டிருக்கிறது. கோவில் சுற்றுச்சுவர்களுக்கு அடிக்கிற காவிக்கலரும் கோபிக்கலரும் சிவப்புக்கலரையும் தண்டவாளப்பட்டைகளுக்கும் பாதுகாப்பு சிமெண்ட்தடுப்புகளுக்கும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலை விலிருந்த பார்த்தால் கோவில் பிரகாரம் போலத்தெரிகிறது கேட். புத்தாண்டு மற்றும் பொங்கல் கிருஸ்துமஸ் விழாக்களுக்காக அடிக்கிறார்களா அல்லது அடுத்த பிரதமர் யார் என்பதை தென்னக ரயில்வே முடிவு செய்துவிட்டதா என்றும் யோசித்தபடியே வண்டி பொன்னூரம்மன் கோவில் வழியாக ஊருக்குள் நுழைகிறது.

       

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அற்புதம். உங்கள் ஞாபகத்திறனையும், பதிவிட்ட வேகத்தையும், மொழி நடையும் வியக்கிறேன். உங்கள் சிறுகதையைப் போலவே
    நீளமான, ஆழமான பதிவு. வண்டியைக் கிளப்பியது முதல் அனைத்தையுமே பதிந்து விட்டீர்கள். ஒரே ஒரு சிறு திருத்தம். இசையின் கட்டுரையை வாசித்தது நான். அம்சப்ரியா அல்லர். பிரதானச் சாலை தாண்டி சந்துகளுக்குள் நுழைந்து விட்டுப் பின் மீண்டு வந்தாலும், உங்கள் எழுத்து ஒருவகையில் வசீகரிக்கிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்.நன்றி உங்கள் எழுத்துக்கும் அதையும் தாண்டிய அன்புக்கும் .

    பதிலளிநீக்கு