ஞாயிறு, 19 ஜனவரி, 2014

ஜான் சுந்தரின் “சொந்த ரயில்காரி” கவிதை நூல் குறித்து- பாகம்- ஒன்று




சொந்த ரயில்காரி-
ஜான் சுந்தரின் முதல் கவிதை நூல் குறித்து...
இளஞ்சேரல்
          அறிக்கை
கைகால் அலம்பி வருவது
யார் பார்க்கலாம் என்று
அம்மா சொன்னதும்
ஜெயித்தான் அண்ணன்

சிந்தாமல் சீக்கிரம்
சாப்பிடப் போவது யாரு போட்டியில்
வென்றாள் சித்தி மகள்

பின்னர் எதுவும் சொல்லும் முன்பே
ஓடிக் கம்பளி புகுந்து
குட்டிப்பாப்பா சொன்னாள்
“நான் தான் முதலில் தூங்கினேன்என்று- பக்-72

          முதன் முதலில் அவருடனான சந்திப்பு எப்பொழுது நிகழ்ந்தது என யோசிக்கிறேன். பெரும்பாலும் மழைக்காலங்கள் நினைக்கும் போதெல்லாம் மழை வரும். சன்னமான மழை. சூட்டிங்  மழைமாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். சூட்டிங் மழையென்பது எத்தனை மகிழ்ச்சியானது. நனைந்து கொள்கிற அளவு உடல் அனுமதிக்குமே அதுதான் சூட்டிங்க் மழை. அப்படியும் நனைந்தபடியே நடக்கிறவர்கள் இருக்கிறார்கள். மங்கைகள் அப்படியா மழையா பெய்கிறது. அட ஆமாம் என்பது போல வெகு சாதாரணமாக கடந்து போவார்கள். ஒரு முறை நான் காந்திபுரம் அசோகா பிளாசாவில் நிற்கிறேன். அருகில் முனியப்பசாமி கோவில். மழை பின்னியெடுக்கிறது. துளிகள் வெளிர்பச்சை திராட்சை போல விழுந்து தளதளவென கொதிப்பது போல ஊர்கிறது.பத்து அடி தொலைவில் மழையில்லை. ஆச்சர்யமோ ஆச்சர்யம். நம்ப முடியவில்லை. மழைக்கு ஒதுங்கியது போய் மழையில்லாமல் மழையை ரசித்துக் கொண்டிருக்க ஒதுங்கியதாகவே இருந்தது. அசோகா பிளாசாவில் நின்று கொண்டிருக்கிற மக்கள் பேசிக்கொள்கிறார்கள். சத்தியமாக நாம் இந்தக் காட்சியை மற்றவர்களிடம் சொன்னால் நம்ப போவதில்லை என்றார்கள். ஆமாம்.
         அந்தக் கூட்டத்திலிருந்த யுவதிகள் இதுதான் சூட்டிங் மழையென்றார்கள். நாகரீகமான உடையணிந்திருந்தவர்களின் கண்களில் பரவசம் ஆச்சர்யம். சில யுவதிகள் தாழ்வாரத்தில் வெள்ளிக்கம்பியாய் உருகி வழியும் மழையைக் கத்தியால் வெட்டி விளையாடுவோம் அல்லவா அப்படியாக சீத் சீத் என்று வெட்டி விளையாடுகிறார்கள். மழைக்காற்றின் சிலுசிலுப்பு மக்களுக்கு வீசுகிறது. தங்கள் கண்களுக்கு அருகில் மேலும் வந்து நின்று ஒதுங்கி அதிசயிக்கிறவர்களுடன் சேர்ந்து கொண்டு வானம் பார்க்கிறார்கள். வானத்தில் நடுவட்டமாக ஒரு வானவில். மேலும் ஒரு அதிசயம். மக்கள் மழைபொழியாத இடத்தில் நின்று கொண்டு வட்டமான வானவில் கண்டு அதிசயிக்கிறார்கள். சில நிமிடங்களில் இப்படியான வட்ட வானவில் அல்லது மேகவளையம் குறித்த அதிசயம் நிகழ்ந்த பதிவுகளை வெளியிடுகிறார்கள். வானியல் வல்லுநர்கள் இதற்கு முன்பு நிகழ்ந்த வானியல் அதிசயங்களைப் பட்டியலிடுகிறார்கள். இவ்விரண்டு அதிசயங்களைப் போலத்தான் இருக்கிறது எனக்கு அவருடனான சந்திப்பு.. ஒரு முறை உரையாடிக் கொண்டிருந்த போது நாம் இருபது வருடங்களுக்கு முன்பு சந்தித்திருக்க வேண்டும்..எப்படி ஒரு ஊரில் ஒரே நகரத்தில் இருந்து கொண்டு நமது சந்திப்பு நிகழாமல் போனது என்றார். நானும் அப்படியே ஆமாம் சரிதான்..எப்படி தவறியது என யோசிக்கிற போது அந்த முதல் சந்திப்பை நினைத்துப் பார்க்கிறேன். நான் எழுதிய முதல் கவிதையை யோசிப்பதைப் போன்று..
       இவ்வளவு பீடிகை வேண்டுமா என்றால் வேண்டும்தான். ஒரு பாடலை இசைக்குழு பாடத்துவங்கும் முன்பாக சில பாடல்களுக்கான வாத்தியக்குறிப்புகளை வாசிப்பார்கள் அல்லவா. அப்படி அவர்கள் வாசிக்கும் போது பார்வையாளர்கள் வரிசையில் நின்று கொண்டு “யேய் அடுத்த பாட்டு என்ன தெரியுமா..ஆசை நூறு வகை..தான்..என்போம் தீடிரென்று புல்லாங்குழலில் கலைஞர் வாசிப்பதை வைத்து குறுக்குச் சிறுத்தவளேதான்..“ என்ன பெட்..“போடா போ..மாரியம்மா மாரியம்மா..திரிசூலியம்மா...தான் பாரு.. என்று விவாதித்துக் கொண்டே கருவிகள் பல பாடல்களை தாறுமாறாக ஆனால் ஆர்வம் மிகுதியில் கலைஞர்கள் சுதந்திரமாக வாசிப்பார்கள். நிச்சயமாக பாடல்கள் ஒலிக்கும் போது இந்த வாத்தியங்கள் தங்களின் சுயமான ஒலியைக் கொண்டிருக்கப் போவதில்லை. மற்ற வாத்தியங்களுக்கான ஒலி வாங்கியின் அளவு அதிகரிக்கப்பட்டு இந்த வாத்தியக் கருவிகளின் ஒலி குறைக்கப்படலாம். அதனால் இந்தக் கருவிகள் இடைப்பட்ட நேரத்தில் பாருங்கள்  ஆபத் பாந்தவர்களே நீங்கள் பாட்டுக் கேட்கிற பொழுது கேட்க முடியாமல் போனாலும் இதோ என் வாசிப்பு..என் சுருதி. என் வேகம். என் அட்சரம்..என் சங்கதி என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்வதாகவே உணர்கிறேன்..அல்லது நாம் உணர்வோம். ஆனால் என்ன நடக்கும் அறிவிப்பாளர் தன் வித்தியாசமான குரலில். அடுத்த பாடல்ல்ல்ல்ல்ல்... இளைய தளபதி விஜய் நடித்த்த்த்த்த்த.. சில நொடி இடை வெளிவிட..அங்கு ஆடுங்கடா என்ன சுத்தி...என்பதற்கான டிரம்பெட்டும் பேங்கோஸ் சில நொடி அதிரும்.. சில பார்வையாளர் கூச்சலிடுவார்கள்.
         இடையிடையே இசைக்கருவிகள் தங்களின் பிரத்யேக ஒத்திகைகளைச் செய்து பார்த்துக் கொள்வது போலத்தான் தன் இசைப் பாடல்களுக்கும் பயிற்சிகளுக்கும் இடையிடையே கவிதைகளை வாசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. ஜான் ஞாபகம் வருகிற போது இனியொரு நண்பர் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர் ராஜ்குமார் ஸ்தபதி..புகழ்பெற்ற அற்புதமான வாட்டர் கலர் பாணி ஓவியங்களில் அசத்துபவர் அவருடைய கவிதைத் தொகுதியும் நினைவுக்கு வருகிறது.
         நாம் எழுத்துக்கு கொஞ்சம் ஓய்வெடுத்தால் லொகீகப் பணிகளுக்குள் செல்வோம். அவர் பாடவோ. இசைக்கருவிகளை இயக்கவோ செல்வார் என்பது எத்தனை உன்னதமான வாழ்வு..கீபோர்ட். பேஸ்கிடார், மொராஸ்,தபலா,பேங்கோஸ்,டிரம்ஸ்,பல வயிலின்கள். டிரம்பெட்,ஜால்ரா, தட்டு, ஸ்டிரிங்கஸ் உள்பட எத்தனை வாத்தியங்கள்..கலைஞர்களின் முகம் விரல்கள் மறந்து அவை பேசுகிற மொழியைக் கேட்டுக் கொண்டே யிருக்கிறோம். நாம் விழித்திருக்கிற சமயங்களில் எப்படியும் வயிலின்களைக் கேட்கிறோம். நாயணங்களை சீட்டிகளை கீபோர்டில் பதிவு செய்யப்பட்ட விதவிதமான சுருதிகளின் ஓங்காரத்தை ஹம்மிங்க் கேட்காமல் இருக்கிறோமா..சில ஒலிக்கட்டுகளை வைத்தே நாம் உணர்வுகளை அறிந்து கொள்ளப் பழகியிருக்கிறோம்.
       ஜான் சுந்தரை ஊஞ்சல் இலக்கிய அமர்வுகளில் சந்தித்து வணக்கம் சொல்வதோடு உறவு இருந்தது. அவர் புகழ்பெற்ற இசைக்குழுவை நடத்துபவர்.நல்ல பாடகர் என்பதாகவும் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் நண்பர். ஊஞ்சல் அமர்விற்கு வருபவர்கள் அனைவருமே அவர் வந்திருந்தால் பாடவைக்கவும் அவர் பாடியபிறகு நிகழ்வுகள் தொடங்குவதுமாக அமைந்தது. வணக்கத்துடன் இருந்த உறவு வலுவான சமயம் பிறக்கிறது. மலேசியா வாசுதேவன் காலமான சூழல் அது. அவர் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் வாழவேண்டியவர். அந்த மதுரமான மயக்கும் குரலுக்கு நான் அடிமையாகியிருந்தேன். அவர் பாடிய கன்னி ராசி படத்தில் ஜனகராஜுக்குப் பாடியிருப்பாரே சுகராகமே என் சுகபோகமே என்னும பாடல் இப்பொழுது கேட்டாலும் சங்கடமாக இருக்கும். அவருக்குப் புகழ்தராத பாடல்களில் அவர் மெனக் கெட்டுப் பாடிய பல பாடல்களை அறிவோம். மறந்திருக்க நினைத்த பொழுதை பார்வையாளர்கள் வற்புறுத்தலை முன்னிட்டு புதுக்கவிதை படத்திலிருந்து வா வா வசந்தமே பாடினார்.
           குரல் அச்சாக மலேசியா வாசுதேவன் போன்றே தொண்டையைச் சரிசெய்து பாடினார். ஒரு சமயம் “அந்தக் காலம் மறந்ததா.. வலியும் தீர்ந்ததா..என்று மேல்ஸ்தாயில் எடுத்துப் பாடியபோது என் முதுகுத்தண்டு சிலிர்த்தது. அரங்கில் ஏசியின் ஊர் என்ற ஒலி அவருக்கு சுருதியாகிறது. நாங்கள் விடும் பெருமூச்சின் இயல்பு சீராகிறது. ராகத்திற்கு ஏற்றவாறு ஏறியிறங்குகிறது. நான் அவருக்கு எதிர் வரிசையில் அருகில் அமர்ந்திருக்கிறேன். பாட்டு முடிந்த பிறகு அமைதி..சிலருக்கு உருக்கம்..யாரும் மலேசியா வாசுதேவன் மரணம் குறித்து அறிந்திருந்தாலும் சூழல் மீண்டும் சோகமான நிலைக்குப் போகிறது. அவரும் உணர்ச்சிப் பிழம்பான நிலைக்குப் போனார். சில நொடிகள் மௌனம். அவருக்கு சுதாரிப்பு தேவைப்படுவதை அறிந்தோம். மலேசியா வாசுதேவனின் முப்பதாண்டு கால இசைவாழ்வு அங்கு மௌனத்தில் உருகியது. நான் அவரைப் பார்த்து அற்புதம் என்றேன் அவர் தன் நெஞ்சுக்கு கைவைத்து அன்பிற்கு நன்றி என்பதாக மலர்ந்தார். பிறகு நிகழ்வுகள் தொடர்ந்தாலும் அந்தப்பாடல் உருக்கியது.
        இரவு சிற்றுண்டி அருந்தும் போது எளிய உரையாடல்கள் நடக்கும். அவருடன் பேசினேன். விசிட்டிங்க் கார்டு கொடுத்தார். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.து.இளங்கோவன். கந்த.சுப்பிரமணியம்,கே.ஆர்.பாபு,மகேஸ்வரி சற்குரு போன்ற ஆளுமைகள் அவரைப்பற்றிய கூடுதலாக தகவல்கள் தருகிறார்கள். என்னுள் தகித்துக் கொண்டிருந்த மெல்லிசை வெறியைத் தணிப்பதற்குச் சரியான ஆளுமையைத்தான் சந்தித்து இருக்கிறோம் என ஆறுதல் பட்டுக் கொள்கிறேன். அமர்வு முடிந்து வெளியில் அந்த நிலாவெளிச்சத்தினடியில் குளிர் காய்கிற அசோக மரத்தின் ராத்திரி இலைகளின் பிடியில் சில மணி நேரம் கூட்டம் நடக்கும். அண்ணன் அவைநாயகன்.கே.ஆர்.பாபு.தென்பாண்டியன்,முத்தையா,இளங்கோவன். உள்ளிட்ட நண்பர்கள் மிகவும் சுவராசியமாக எண்பதுகளின் காலங்களைக் குறித்த இரவு உரையாடல்கள் தொடரும். ஒரு நீட்சியாக சங்க இலக்கியங்கள் வரையும் சில நீட்சியாக பாகவதர் வரையிலும். அரசியலில் நால்வர் அணி, குமரி அனந்தனின் கா.கா.தே.க.க. கட்சி வரையிலும் உரையாடல் தொடரும். மணி சாதாரணமாக இரண்டு ஆகலாம். செவ்வாய் இரவு கழிந்து புதன் பிறக்கும் வரை இலக்கியம் அரசியல் சினிமா தாண்டவமாடும். ஜான் சுந்தரின் இசையறிவும் நுட்பமான அவதானிப்பும் குறிப்பாக அவர் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் கவுண்டமணிக்கும் தருகிற மதிப்பும் மரியாதையும் என்னைக் கவர ஆரம்பித்தது. ஒரு சூழலில் அவருடைய ஹூயுமர் சென்ஸ்தான் இசைக்குள் லயித்துப் போக வைத்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. நண்பர்கள் பட்டாளத்தில் நிலவும் அதிரடியான நகைச்சுவை உரையாடால்களின் மூலமாக உறவும் நட்பும் இறுகிப் போய் யாவருமே ஒன்றுபட்ட உடலாக மாறுவதை உணரத்துவங்கினோம்.
இந்தக்காலம் தந்த மகத்துவமிக்க செவ்வாக்கிழமைகள் கொடுத்து உதவிய  இடத்தில்தான் அவரும் சில கவிதைகளை வாசிக்கத் துவங்கினார். தன் வாழ்நாளில் சங்க இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் முதல் கவியரசு கண்ணதாசன், தற்கால திரையிசைப்பாடல்கள் வரையிலும் அறிந்து வைத்திருந்தாலும் கவிதைகளின் மீது ஆர்வமில்லாமல் போக வாய்ப்பில்லை. பல நூறு பாடல்களின் வரிகளை அதன் ராகங்களை ஞாபகம் வைத்துப் பாடுகிற மனதிற்கு அந்த வரிகளிலிருக்கும் சொற்களின் மீது காதல் இல்லாமல் போகாது. பாடல்களில் மெல்லிசைப் பாடல்களில், கிருத்தவ கீதங்களில் படிந்திருக்கும் ஆழ்ந்த துயரமும் சோகமும் அவருக்கான சொற்களைத் தந்திருக்கலாம்.  ஊஞ்சல் அமர்வுகளில் வாசிக்கப்படுகிற கவிதைகளில் பக்தி இலக்கிய ரசமும் ஆன்மீகச் சிந்தனைக ளிலும் கவரப்பட்டிருந்தார். பல நூறு மேடைகளில் மக்களின் ரசனை முகங்களைப் பார்த்துப் பாடிப் பாடி முகபாவங்களை ரசிப்பைக் கவனிக்கிற மேடையிசைக் கலைஞரின் சொற்களில் கவிதையும் கவித்துவமும் அமையாமல் போகுமா..
             உள்ளக்கிளர்ச்சிக்கான வடிவங்களாக இயல் இசை நாடகங்கள் உருவாக்கப்படுவதுமுண்டு. உடல்வலிமைக்கும் உடல் உழைப்பிற்கும் அசைவம் தேவைப்படவே செய்கிறது. உடலுழைப்பு அவசியமற்றவர்களுக்கு சைவமும் அசைவத்திற்கெதிரான கருத்துருவாக்கமும் ஏற்படுத்தலாம். ரசனை சார்ந்த அனுபவம் இவர் தொகுப்பில் அதிகமாகவே பயண்படுத்தப்பட்டிருக்கிறது.
புதிய வார்ப்புகள் தலைப்பிலான கவிதையொன்றை நாம் வாசிக்கலாம்.
அவனது மேஜையில் அணிவகுத்து நிற்கின்றன
வெள்ளை ரோஜாக்கள்
இன்னும் சில நொடிகளில் அவை
பரோட்டாக்களாக உருமாறும்
கண்களால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் உண்மையைத் தீவிரமாக விசாரித்து அறிவதே மெய் என்பதாக நமக்கு சமூகத்தில் சில சொற்கள் விநியோகப்படுத்தப் பட்டிருக்கிறது. விநியோகப் படுத்தப்பட்ட சொற்கள் அதிகம் அதில் நாம் விரயம் செய்த சொற்கள் அதிகம். கொஞ்சம் சில சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு திரையிசை மெல்லிசை உலகம் கடந்த முக்கால் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. பல்லாயிரம் பாடல்களில் உபயோகப்படுத்திய சொற்களே திரும்பத்திரும்ப வந்தாலும் பாடுகிற பாடகர் பாடகிகள் ராகம் இசைக்கலைஞர்களின் உழைப்பு இப்படியாக பழஞ்சொற்களுக்கு புத்துயிர் அளித்து மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். ஜான் நயம் மைதா மாவு உருண்டைகள் ரோஜா மலர்கள் போலிருக்கிறது என்கிற உவமை நயம் அற்புதம். சத்தியமாகவே அப்படித்தான் இருக்கிறது. உண்மையில் யோசித்தால் இந்த ரோஜா மலரின் வடிவத்தை தேர்வு செய்த உணவுக்கலைஞனும் மகத்தான கவிஞன்தானே.
        ஒரு ஊஞ்சல் அமர்வில் மைனஸ்  டிராக் பாடினார். மொத்தம் பத்துப்பாடல்கள். ஒரு பாடல் பனிவிழும் மலர்வனம். அந்தப் பத்துப்பாடல்களில் டிஎம்எஸ், பிபி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம் ராஜா எஸ்பிபி சிதம்பரம் ஜெயராமன். மலேசியா வாசுதேவன் குரல்களில் பாடினார். அவரிடம் நெருங்குவதற்கு அந்த நிகழ்ச்சி ஆழமான உறவை ஏற்படுத்தியது. குளிருட்டப்பட்ட அரங்கின் மஞ்சள் வெளிச்சம். புராதனமான மரவேலைப்பாடுகள், சித்திர வகைகளின் நுட்பமான பிரமாண்டமான கதவுகள். அறைக்குள்ளிருந்து அந்தப் பாடல் தப்பித்து மெல்லமாக பந்தய சாலை முழுக்கவும் அலைகிறது. மைனஸ் டிராக் என்பது ஒரு பாடலுக்குரிய முழுமையான இசையிருக்கும். பாடலின் குரல் எடுக்கப்பட்டிருக்கும். அதன் சரியான இடத்தில் சரியான சந்தங்களில் சுருதியுடன் ஒட்டிப் பாடுதல். மயக்கமா கலக்கமா பாடல், இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே..பாடலும் துல்லியமாகப் பொருந்தியது. ஒலியமைப்பாளராக, சவுண்ட் என்ஜினியராக, மெல்லிசைக்குரிய இசைக்கருவிகளின் நாதம் பற்றிய நுட்பமான அறிதல்களும் கொண்டிருந்தால் மட்டுமே இவை சாத்தியப்படும்.
          பிறகு நிகழ்வு முடிந்து வழக்கம் போலவே சினிமா உரையாடல்கள் சுவராசியமாக நீடிக்கும். பந்தய சாலையில் ராணுவ ஜவான்கள் தங்கள் குதிரைகளை நடைபயிற்சிக்கு அழைத்துவருகிற இரவும் வந்துவிடும். மரங்களடர்ந்த அந்தச் சாலையில் வண்ண வெளிச்சங்கள் மாறி மாறிப் பொழிகிற இரவில் பிரமாண்டமான குதிரைகள் நடந்து போவதை ஆச்சர்யத்துடன் பார்ப்போம். சாலைகள் காலியாகி தீராத சொற்களை அள்ளி மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்ப ஆயத்தமாகும் பொழுது “அப்ப நான் கிளம்பட்டுமா..“என்றதும் அவர் அப்படியே நடித்துக் காட்டுவார். ஐய..ஆரம்பிச்சிட்டார் போய் என்ன சார் பண்ணப் போறீங்க என்பார். இன்றும் நானும் அவரும் சார் என்றுதான் அழைத்துக் கொள்கிறோம். சார் என்பது என்னைப் பொருத்தவரை வாடா போடா நண்பர்கள் உப்போகப்படுத்துவதை விடவும் கலோக்கியலான லோக்கல் வார்த்தை என்று கருதுகிறேன். அந்நியோன்யம் நிறைந்த சொல் அது. வெள்ளைக்காரன் ஞாபகமாக வைத்திருக்கிறோம். அந்தக் காலத்தில் சர். பட்டங்களை அவர்கள் தந்து கொண்டிருந்தான். நமக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த சர் பட்டங்களுக்காக நம் பெருந்தகைகள் தங்கள் நிலக்குவியல்களைக் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவன் விடுதலையளித்த பிறகு இந்த சர் பட்டங்களுக்கும் விடுதலையளித்தான். பிறகு நாம் எல்லாருக்குமாகவே இந்த சர் பட்டங்களைச் சூடிக்கொள்ள ஆரம்பித்தோம். டியர் சார் என்றும் பதம். நெடிலாக ஒரு கால் போட்டு சார் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். சர் சார் எல்லாமே பிரியத்தின் வெளிப்பாடு. கொங்கு மொழியின் ங்க என்பது போன்றது. மறுபடியும் சில நிமிடங்கள் பேசிவிட்டு நான் அப்ப என்பேன்..நண்பர்கள் கூட்டமே சிரிக்கும். ஒவ்வொருவராகப் பிரிவார்கள். நாங்கள் சார் நாங்க பதினஞ்சு கிலோ மீட்டர் போகவேண்டும்..விடைகொடுங்கள் எனப் புறப்படுவோம்.
           பிரிதொரு ஊஞ்சல் அமர்வில் “டைடல்பார்க்கில் வாட்ச்மேனாக வேலைபார்த்துவந்தார் கம்பர்“ என்றும் முதல் வரிகொண்ட கவிதையை நான் வாசித்தபிறகு ஜான் மிகவும் கவரப்பட்டு திரும்பத்திரும்ப பாராட்டிக் கொண்டேயிருந்தார். அப்பொழுது எஸ்பிபி குட்டி வெளிவந்த சமயம். ஏற்கெனவே அந்த தொகுப்பில் இருந்த சிவாஜி கே.ஆர் விஜயா கதைகள் பற்றியும் சிலாகித்துப் பேசியிருந்தவர் இந்தக் கம்பர் கவிதைக்குப் பிறகு அவர் கவிதைகள் குறித்த உரையாடல்களும் இடம்பெற ஆரம்பிக்கிறது. அந்த நிலையில்தான் நீங்க ஆனந்த விகடன் பார்க்கறீங்களா என்றார் தொடர் வாசிப்புக்கு வாய்ப்பில்லாத இதழாக ஆனந்த விகடன் எனக்கு வாய்த்திருக்கிறது என் உலகம் சிறுபத்திரிக்கை உலகம் என்றேன். அதில் சில கவிதைகள் பிரசுரமானதைப் பற்றிக் கூறியபோது ஆச்சர்ப்பட்டேன். ஆனந்த விகடன்ல எல்லாம் கவிதைகள் வருகிறது என்றால் நீங்கள் பெரியாளா இருப்பீங்க போலிருக்கே..என வாழ்த்தியபடியே வாசித்தேன். குழந்தைகளின் புதிய உலகத்தை அறிமுகம் செய்வதைக் காண முடிந்தது. நவீன கவிதைகள் குறித்துப் பேசும் போது குழந்தைகளின் உலகம் பற்றிய பதிவுகளை நினைவு கூறும்போது தவிர்க்க முடியாமல் முகுந்த் நாகராஜன் வருவார். முகுந்த் நாகராஜனின் குழந்தைகள் மேட்டுக்குடி வகையறாக்கள். யாராக இருந்தாலும் குழந்தை குழந்தைதான் உணர்வு உணர்வுதான் என்றாலும் கூட சாலைகளில் திரியும் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமிகளுக்குமான உணர்வுகளில் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது. முகுந்தின் குழந்தைகள் தனிமைவிரும்பிகள். இயந்திரங்களுடன் பிளாஸ்டிக் உணர்வுகளுடன் உறவு வைத்திருப்பவை. ஜான் சுந்தரின் குழந்தைகள் சாலையோரங்களில்  பார்க்கிறவை. மக்களை ரசிக்கிறவை. இந்தக்குழந்தைகள் தங்கள் தாயாருடன் பலசரக்குக் கடைகளுக்கு வரும். தின்பண்டம் கேட்டு அடம்பிடிக்கிறவை. முதுகில் நான்கு அடி வாங்குபவை. ந.முத்துவின் புகழ்பெற்ற கவிதை ஒன்று.
பங்களா வீட்டுச் சிறுமிக்கு
உயிருடன் பொம்மை
வேலைக்காரச் சிறுமி- என்பதான கவிதை நினைவுக்கு வருகிறது.
              ஜான் சுந்தர் இசைக்கூடத்திற்குப் போகும் போது ஒலிப்பதிவில் இருப்பார். இசைக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பார்.அல்லது குழந்தைகளுக்கான மாதிரித்திட்ட வடிவங்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருப்பார். மரக்கூழில் மெழுகில், மரக்குச்சிகளில். உபயோகித்து வீசப்பட்ட பொருட்களிலிருந்து ஏதாவது ஒரு வடிவத்தைச் செய்து கொண்டிருப்பார். இந்த மனம் சிறந்த கவிதைகளை ஏன் எழுதாது என்பதுதான் கேள்வி. விரல்களில் தாளங்களின் குறிப்புகளும் தொண்டையில் ராகங்களின் சாரீர சுத்தமும் துடிக்கிற நெஞ்சுருதியில் தாளபாவங்களின் ஏற்ற இறக்கங்களும் கொண்ட கலைஞனின் உச்சரிப்பில் கவிதைகளுக்கான சொற்கள் பிறந்தே தீரும். இங்கு ஒரு கவிதையை வாசிக்கலாம்..
சிறகடிக்கும் மயிலிறகு
ராஜேந்திரன் மகள்
அம்புலியை மந்திரிக்க
தர்காவிற்கு
கூட்டிப் போனால் அங்கே
தோப்புக்கரணம் போட்டு
விழுந்து கும்பிடுகிறாள்
யா..அல்லாஹ்
இத்தனை வருசமாய்
முட்புதருக்குள்
ஹக்கீம் பாய்
ஒளித்து வைத்திருந்த
மந்தகாசத்தை
ஒளிரச் செய்துவிட்டதே
குட்டிக்கழுதை
(சோழநிலா மகள் விழிகளுக்கு)     
                குழந்தைகளுக்கு மந்திரித்துத்தருகிற இசுலாமிய பாய்களின் மீது அலாதிபிரியம் இருக்கும். அவர்களின் வெள்ளைத்தொப்பி. கையில் மயிலிறகு. சாம்பிராணி புகை இந்தியும் தமிழும் இடையிடையே கலந்து பேசுவதை குழந்தைகள் மாறிமாறி பெற்றோர்களையும் பாய் வைத்தியரையும் பார்க்கும். புகழ்பெற்ற கோவை பெரிய கடைவீதி தர்காவில் மந்திரித்துக் கொள்ளாத குழந்தைகள் இருக்கவே வாய்ப்பில்லை. மசூதிகளில் குழந்தைகளக்கு மந்திரித்து தருகிறதாலும் அதனால்தான் வாந்தி பேதி காய்ச்சல், அச்சம் அழுகை குழந்தைகளுக்குத் தீர்ந்து போனது என்று நம்புகிற அல்லது கொண்டாடுகிற சமூக வழக்கு இருந்து வருகிறது என்பதை நினைவு படுத்துகிறார்.
கவிஞர் சோழநிலாவின் மகள் ஓவியா என்னிடம் இப்பொழுதும் தங்க மீன்கள் இயக்குநர் ராமிற்கு நினைவுப் பரிசு அளித்த புகைப் படத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறாள் நான் இன்னும் அந்தப புகைப்படத்தைத்தந்த பாடில்லை. அவளுக்கு இசைப்பிரியா என்னும்பெயர் கொண்ட தங்கை கூடப்பிறந்து விட்டாள். காமிராவில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இருக்கிறது. அந்தப் புகைப்படம் இல்லை. எப்படி ஓவியாவைத்தேற்றுவேன் எனத்தெரியவில்லை....இந்தக் கவிதை எத்தனை காலத்தை உறவு குழந்தைமையின் நேர்மையைக் காட்டி விடுகிறது..சுட்டிக் காட்டிப்பாராட்டமல் இருக்க முடியுமா. இந்தக் கவிதைகளைப் பாராட்டுவதற்கு பாட்டில் வாங்கித்தான் பாராட்ட வேண்டுமா..கவனப்படுத்த வேண்டுமா..
                            

தொடரும் ......
எப்பொழுது முடியும் என்பதை அறிதியிட்டுச் சொல்ல முடியாது. ழான் ஜீனேவின் புத்தகம் ஒன்றிற்கு பால் சார்த்தர் எழுநூறு பக்கம் மதிப்புரை எழுதினாராம். அப்படியாக சில நூறு பக்கம் கூடப் போகலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக