வியாழன், 16 ஜனவரி, 2014

சாத்தான்களின் அநதப்புறம்- நறுமுகை தேவியின் கவிதை நூல் குறித்து



நறுமுகை தேவியின் கவிதை நூல் குறித்து
“சாத்தான்களின் அந்தப்புறம்
இளஞ்சேரல்
         
தமிழ்ச்சூழலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வு அரங்கு கட்டுரைகள், உரைகள் என்று இயங்கிக் கொண்டிருக்கிற நறுமுகை தேவியின் முதல் கவிதை நூல். முகநூலில் தொடர்ந்து எழுதிய கவிதைகளின் வாயிலாகவும் பரவலாக அறியப்பட்டவர். இலக்கியம் உள்பட அவருடைய சமூக களப்பணியும் இதனூடே ஞாபகம் வரத்தான் செய்கிறது. நம் சமூகம் அதுவும் தூயமான இலக்கியம் போற்றுகிற இலக்கியச் சூழல் களப்பணியை விரும்பாது. களப்பணி என்பது எப்பொழுதுமே தாழ்த்தப்பட்ட செயல்தான். காரணம் அது மற்றவர்களை ஒருவகையில் நேரடியாக விமர்சிக்கிறது. குறிப்பாக பொதுப் பண்பில் பெண் இயங்குதல், சமூக நடவடிக்கைகளை விமர்சித்தல் என்பதே யாராலும் சகிக்க முடியாத ஒன்றுதான். மிக எளிதில் ஒரு சொல்லில் ஒட்டு மொத்த உழைப்பை ஊதாசீனம் செய்து விடலாம். குடும்பத்தைக்கடந்து. சொந்த வாழ்வைக் கடந்து. தன் சக எழுத்தைக் கடந்து, தன் பின்னல் வலைகளைப் பிரித்துக் கொண்டு வருகிற பெண் எழுத்தை சமகாலத்தின் பெண் படைப்பாளிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் அச்சம்தான். பெருநகரத்தின் பெண் இருப்பு என்பதே வேறு. அது வேறு யுகம் வேறு கிரகம். அவர்களுக்குத் தமிழில் எழுதுவதும் வாசிப்பதுமே அருவருப்பு ஊட்டும் செயல்தான்.
         முகநூல் கவிதை பாணி இந்தக் காலத்தில் தவிர்க்க முடியாமல் ஆகியிருக்கிறது. திரும்பத்திரும்ப பேசுகிற சொற்கள் படியும் போது நாம் நிறுத்தி விடுகிறோம். ஒரே அனுபவம் ஒரே காலம் ஓரே கால நிலை இந்தச் சூழல்களை கவிஞர் பொருள்படுத்திக் கொள்வதும் வாசகனுக்கு உணர்த்துவதுமாக சில கவிதைகள் எல்லாருக்கும் வாய்க்கும் அப்படியாக தேவிக்கும் வாய்த்திருக்கிறது. தொகுப்பில் பெரும்பாலும் தன்னை விடுவித்துக் கொள்ள முனைகிற கவிதைகளையும் காட்சிகளையும் முன்நிலைப் படுத்துகிறார். சுயம் சார்ந்த கவிதைகள் அதிகமாக இருப்பதாலேயே நாம் எளிதில் முதல் தொகுப்பு என்னும் சிறப்புப் பிரிவில் அனுமதித்துக் கொண்டு மேல் நகர்கிறோம். அநேகமாக இவர் பிரசுரம் செய்யாமல் தனித்து வைத்திருக்கும் பற்பல கவிதைகளில் மேன்மையான கவிதைகள் நிச்சயம் இருக்கும் என்பதற்கு சாட்சியாக தொகுப்பில் பிரசுரமான ஒரு கவிதை


தூக்குக் கயிற்றைப் பரிசளிக்கும் முத்தம்

மென் வாதையை ஏந்தித் திரியும்
இந்தக்குளிர் இலகுவாக கடந்துவிட
இயலாததாக இருக்கிறது
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கே போடாதே பகல் வேஷம் தான்
இளையராஜாவின் குரல் மேலும்
போதையேற்றுவதாய் இருக்கிறது
          இக்கவிதையில் பதிவாகியிருக்கிற பாடல் பூவிலங்கு படத்தில் வருவது. சுமார் இருபத்தியைந்து வருடகாலத்தின் அன்பின் வலியை உணர்த்துகிறது. உண்மையில் இந்தப் படம் பற்றிப் பேசினால் இக்கவிதையை மேலும் அறிந்து கொள்ளலாம். இந்தப் படத்தில் இந்தப் பாடலுக்கு நடித்த குயிலி இன்று ஒரு தொலைக்காட்சித்தொடரில் நடிக்கிறார். மிக அழகாகத் தமிழ் பேசுகிற நடிகை. பாடி நடித்த முரளி இன்று உயிருடன் இல்லை. இயக்கிய அமீர்ஜான் உயிருடன் இல்லை. முரளி போன்ற நடிகர்கள்தான் தைரியமாக இடது சாரி கருத்துகளுக்கு நடிக்க முன் வந்தவர்கள். இன்றைய வறட்சியான நிலைக்குக் காரணம் நவீன கம்யுனிச சிந்தனைகளைக் கற்பதற்கான ஏற்பாடுகளை இடதுசாரி தலைமை முயலாததுதான் காரணம். இப்பொழுது ரஷ்ய இலக்கியங்களை முதலாளிமார்கள் பாடம் எடுக்க நாம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலத்திற்று  நமக்குச் சாட்சியாக இளையராஜா இருக்கிறார். அவர் குரல் கேட்கிறது. அவரும் இடதுசாரி மேடைகளில்  முற்போக்கு நாட்டுப்புறப்பாடல்களை இசைத்துவந்தவர்தான். அவர் பாட வந்த காலத்தில் அவர் பாடுவது கழுதையின் குரல் என்று கேலி செய்த சனாதனம் பிற்பாடு திருவாசகத்திற்கு கம் போசிங் செய்யச் சொல்கிறது. இந்தக் காலத்தை இடைப்பட்ட காலத்தின் பதிவுகளை மாற்றங்களை அதன் காரணிகளை எழுதுவதுதான் கவிதை. இலக்கியம்.
          இந்தப் பாடல் அன்றைய நாள் ஒலிக்காத இடமே கிடையாது. ஒரு பாடலை ரசிக்க வைக்க பின்னணி இசை அந்த இசைக்கு உழைக்கிற இசைக்கலைஞர்கள் நமக்காக மீட்டுகிறார்கள். ஆனால் கவிதையை ரசிக்க வைப்பதற்கு கவிஞர்களே இசையமைப்பாளர்களாக இசைக்கருவிகளையும் வாசிக்க வேண்டியிருக்கிறது. அல்லது அது போன்ற இசைக் குறிப்புகளுடனான கவிதையை எழுதவேண்டியிருக்கிறது.
       இந்த தொகுப்பில் தன் உணர்வுமிக்க கவிதைகளில் தேவி சிறப்பான கவிதைகளைத் தந்து இருக்கிறார். தன் சமகால இயக்கங்களில் எழுதுகிற பெண் கவிஞர்கள் எழுத சோர்வுகொள்கிற கவிதைகளை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் அது என்ன சோர்வு கொள்கிற கவிதை. முன்னணி பிரபல கவிஞர்கள் தங்கள் ஆளுமைக்குப் பாதிப்பு எனக் கருதுகிற முற்போக்குக் கவிதைகளை தைரியமாக எழுதுகிறார். உண்மையிலேயே முற்போக்கு கவிதைகளை எழுத நவீனப் படைப்பாளிக்கு ஆண்மை அவசியம். வெடிகுண்டு வெடிப்பு, இயற்கை சீற்றம். முக்கியத் தலைவர்கள் கொல்லப்படுகிறபோது. இலங்கை நிலவரங்கள் குறித்துதான் எழுதுவார்கள். தமிழ்நாட்டில் புரட்சி என்கிற சொல் சாக்கடையாகிப் போனதால் அது பற்றி யாரும் துண்டு பீடியளவும் கூட எழுதுவதில்லை. சில இடங்களில் சிலர் முற்போக்குக் கவிதைகளைப் பற்றிய உரையாடல் வந்தால் அந்தக் கவிதைகளை ஒதுக்கிவிடலாம் நண்பா. அது ஒரு மாதிரியான சத்தமாக இருக்கிறது என அறியக் கேட்டிருக்கிறேன்.
நீங்கள் சமீபத்தில் கோவில்களில் பார்த்திருப்பீர்கள். மங்கல வாத்தியம் என்று ஒன்று பொருத்தியிருப்பார்கள். முக்கிய வழிபாடுகளின் பொழுது ஒலிக்க விடுவார்கள். மோட்டார் பொருத்தப்பட்டு திடுமம், சங்கிலி, ஜால்ரா தட்டு. போன்றவைகளின் கலவை ஒலியாக கேட்கும். ஒரே இசை ஓரே தாளம். அந்த திடுமம் சூடு செய்யப்படாமல் மாடுபோலவே கத்தும். கடவுள் காணாமல் போகத் துவங்குவது இது ஒலிக்கிற போதுதான். ஆபாசமான வாத்தியம் இந்த மங்கல வாத்தியம்.
      இந்த மங்கல வாத்தியம் போலவே நம் நவீன கவிஞர்கள் சிலர் எழுப்புகிறார்கள். கலையும் நுட்பமும் தலைதெரிக்க ஓடுகிறது. குறிப்பாக பெரு நகரத்தில் வசிக்கிற கவிஞர்களுக்கு நுண்கவிதைகளின் ஆப்பு ருப்பு தெரிவதேயில்லை.
 மக்களுடன் நேரடியான தொடர்புடைய சமூக இயக்கங்களில் பங்கு கொள்வது என்பது கடவுள் அருளிய செயல். மக்கள் நெருக்கடியான இடங்களில் வாழ நேர்வது என்பது மிகச்சில சௌகரியங்களுக்காகத்தான். அரசியல், சமூக கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகிற பெண் படைப்பாளர்களின் படைப்புகளில் கலை அம்சம் இருக்காது. கருத்தும் உரையாடலும் அதிகமாக இருக்கும். கற்பனை வரட்சியில் அனுபவம் தீய்ந்து வெளிப்பாடு சுவராசியமற்றதாக இருக்கும் என்பதுதான் விமர்சகர்கள் கருத்தாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் இப்படியாகத்தான் அவர்கள் பிரச்சாரம் இருக்கும். அந்த இடங்களிலிருந்து பிரச்சாரம் என்பது மலிவான செயல் என்பதாகிறது. பிரச்சாரம் மலிவானது என்கிற கருத்துருவாக்கமே ஆபாசமான ஒன்று. அப்படியாகவே நவீன கவிதைகள் மீதும் வைக்கப்பட்டிருக்கிறது. பிரசாரத்திற்கு எதிரான பிரகஸ்பதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரங்கள், சில சலுகைகள் எல்லாம் அவர்களின் பாட்டன் முப்பாட்டன் எல்லாரும் அழகியலாகவும் சுவராசியமாகவும் பிரச்சாரமாகவும் எழுதியதால் கிடைக்கவில்லை என்பது அந்த ஞானசூனியங்கள் அறியாதவை. வேதமயமான குரலுக்கு அடங்கிய வாத்தியக் கருவிகளைத் தான் அவர்கள் ஆதரித்தார்கள். தங்கள் சனாதனக்குரலுக்குள் அடங்கிக் கொள்ளும் கருவிகளை மட்டும் இசைத்தார்கள். இந்த மரபுகளை மீறுகிற நவீனத்துவத்தை ஆதரிப்பதில்லை. அப்படியான குரல்களோ வாத்தியக் கருவிகளே கவிதையோ நடனமோ எப்படியானாலும் அது கலையம்சம் எனும் அலகால் சீர்தூக்கி ஒதுக்கப்படும்.
இலக்கு
குறிவைப்பதில் தொடங்குகிறது எல்லாம்
அதிகாரத்தின் குறிப்பேடுகளில்
காலம் நாட்குறிப்பெழுதிச் செல்கிறது
குறிக்கோள்கள் விவாதிக்கப் படுகின்றன
பொருள் விளங்கா விவாதங்களின் முடிவு
பொருளே என்று அறியப்படுகிறது
ஒரு கொள்ளை நோய் போல-பக்-40
 இடதுசாரி நவீனத்துவத்தின் அசலான எழுத்தாக நறுமுகை தேவியின் எழுத்துகள் அமையப் பெற்று வருகிறது. கட்டுரைகள் விமர்சம், மதிப்புரைகள், அறிக்கைகள் இப்படியாக அவரின் எழுத்து பக்குவமிக்க சொல்லாடல்களாக அமைகிறது. பெரு நகரத்தில் இயங்கும் கம்யுனிச இயங்களிலிருந்து இப்படியான ஒரு குரல் வெடித்து எழுவது ஆச்சர்யம்தான். தமிழச் சொற்களில் அருவருக்கத்தக்க சொல் கம்யுனிசம். கம்ப்யுட்டர் வந்து குவிந்த போது இப்படித்தான் அவர்கள் மலத்தைக் கவனிப்பது போல் கவனித்தார்கள். பிறகு தங்கள் கழிப்பறையை உபயோகிப்பதற்குக் கூட கம்ப்யுட்டரைப் பயண்படுத்துகிறார்கள். ஒரு நாள் இப்படியாக கம்யுனிசத்தையும் உபயோகம் செய்யும் காலம் வரும். அல்லது நறுமுகை தேவி போன்ற படைப்பாளர்கள் கொண்டு வருவார்கள்.
இந்தச் சொல்லைப் பேசுகிறபோது நீங்கள் கூர்ந்து கவனித்தால் போதும் அவர்களின் உலக இயல்பை அறிந்து கொள்ளலாம்.
தற்காலத்தில் நவீன தீண்டப்படாத இலக்கியம் என்பதாக உருவாக்கம் விளைந்து கொண்டிருக்கிறது. இந்தப் படைப்பு அச்சுறுத்தல், பேய் பிசாசு போன்ற அதிகார அச்சுறுத்தல்களைத் தாண்டியும் எழுத வருகிற எழுத்தை வரவேற்பதற்குக் கூட பெரும் பேரியக்கம் நடத்தவேண்டியிருக்கிறது. முதலில் அப்படியா..ஓகோ. ம்...எப்ப என்பார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளக்க வேண்டும். நாம் பரிந்துரைசெய்து வாதிட வேண்டும். பிறகு அப்பொழுது அவர்களுக்கு அலைபேசி அழைப்புகள் வரும். மறுமுனையிலிருப்பவர்களிடம் இலக்கியப் பரிமாண வளர்ச்சிகள், உலகளாவிய அரசியல் பிரச்சனைகள், தற்காலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அணு உலை, செயற்கை கோள் என்றெல்லாம் பேசுவார்.
இடையிடையே நம்மிடம் ம்..சொல்லுங்க..என்பார். அவர் பார்வைக்கு நாம் “பாவம் நல்லாத்தான் இருந்தார்கள்.. கடவுள் படைப்பில் எத்தனை விதமான மனிதர்கள்..உணர்வுகள்.. சாந்தி நிலவட்டும்..வாழ்க வளமுடன்“ என்று அவர்களின் மைண்ட் வாய்ஸ் நமக்குக் கேட்கும்.. நிலம் வசதி பணம் அடியாட்கள் நிர்வாகம் அதிகாரம் எல்லாம் அமைந்து விடும் பட்சத்தில் அவர்கள் கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்கள் என்றும் மற்றவர்கள் முன் ஜென்மத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதுமாக கருதுகிறவர்கள்தான் பெரும்பாலும் படைப்புகளில் அதிர்வுகளை விரும்பாதவர்கள். அவர்களைப் பொருத்தவரை எழுத்திலும் படைப்பிலும் சத்தமே இருக்க கூடாது. எல்லாமே ஐந்து கட்டைக்குள் முழங்கால்களை மடித்து வைத்துக் கொண்டு சத்தமிடாமல் குலுங்கி அழவேண்டும் (சத்தமில்லாமல்) அவர்கள் பார்த்து நமக்கு சில சலுகைகளை வெளியிடுவார்கள். சில சுதந்திரங்களை அனுபவிக்க வாய்ப்புத் தருவார்கள். அதையும் நீங்கள் சத்தமில்லாமல் அனுபவிக்க வேண்டும். அதற்கு உதாரணமாக தமிழ் நாட்டின் சில மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளைக் காட்டுவார்கள்.
         நீங்கள் ஓருநாள் இரவு முடிவாக  உங்கள் சனாதனியைச் சந்தித்து உங்கள் வாழ்வின் நெருக்கடிகள் தீர வழி கேட்பீர்கள். அப்பொழுது அவர் புராணத்திலிருந்து ஒரு கிளைக் கதையைக் கூறுவார். முடிவில் கருத்து என்னவாக இருக்கும். இந்த உடல் கடவுள் படைப்பு. பசித்தால் அவன் உணவு தருவான். உணர்வு எழும்போது அதற்கான சுயத்தைத் தருவான். சுயத்தைப் போற்றும் போது அதாவது சனாதனிகளுக்கு அடங்கி. புகழைத்தருவான். புகழ் உங்களுக்கு போதை தரும். அதன்  வழியாக சில பேதைகள் கிடைக்கும். பேதைகளுடன் போதையை அளவுடன் கழிக்கத துவங்கினால் உங்கள் உடல் சொர்க்கம் போய்ச் சேரும். இதெல்லாம் அனுபவிக்க நீங்கள் ஐஎஸ்ஓ பிராமணராக இருக்க வேண்டும். அல்லது முற்போக்கு சாதியாக மன்னிக்கவும் பார்வாட் கம்மினிட்டியாக இருக்க வேண்டும். நீங்க பார்வாட்தானே.. இல்லையா.. அடடே ஒரு கிளைக்கதை வீணாகிவிட்டதே. சரி கொடுத்துவிட்டுப் போங்கள் பார்க்கலாம். நரகம் கம்பார்ம்.. இருந்தாலும் ஒரு வாய்ப்பு..நீங்கள் வெயிட்டிங் லிஸ்ட்.
நவீன படைப்பாளிகள் சிலர் பதிப்பக அதிபர்கள் கார்களில் வரும் போது நீங்கள் ஸ்டண்ட் நடிகர்கள் மாதிரி கதவுகளைத்திறந்து கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை யென்றாலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் சொற்களில் பவ்யத்தையும் காட்டவேண்டும். விமர்சகர்களுக்கு மேற்சொன்ன விதங்களை விடவும் பலமடங்கு உழைப்பை நீங்கள் தரவேண்டும். ஒவ்வொரு வைகுண்ட ஏகாதேசிக்கும் சில விமர்சகர்களை நாம் இழந்து விடுகிறோம். மார்கழியில் மரணித்தால் மோட்சம் என்பதால் சில விமர்சகர்கள் மார்கழியில் முத்துக்குளித்து இறக்கிறார்கள்.
சில நாவலாசிரியர்கள் எழுத்தாளர்கள் வில்லனுக்கும் வசனம் எழுதி கதாநாயகனுக்கும் எழுதி காமெடியனுக்கும் எழுதிட வேண்டியிருப்பதால் அவர்களின் குணமும் மசாலா கலவையாகிவிட்டது. சுவராசியம், வாசிப்பு மனோபாவம் குறித்த அறிவுரைகளை அவர்கள் வழங்கும் போது நமக்கு சிரித்துக் கொள்ள இடைவேளை அளிக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளவேண்டும்.
காட்சிப் பிழை
கானல் வரிகளின் மேலாகப்
பறந்து பறந்து
தனக்கான கவிதை ஒன்றைப்
படைத்துக் கொண்டிருக்கிறது
மென்சிறகின் தும்பி
காட்சிப் பிழை நேரிட
கானலையும் காணோம்
தும்பியையும் காணோம்
மடிக்கப்ட்ட கவிதையொன்று
கீழே கிடந்தது
             இப்படியாக மிகச்சிறந்த கவிதைகள் நிரம்ப உண்டு. ஒரு காலத்தில் எம்எல் ஏ சீட் தருவதற்கு முன்பாக ஒரு அரசியல் கட்சியில் சாதகம்.சாதிச் சான்றிதழ், பயோ டேட்டா போன்றவற்றை வாங்கிக் கொண்டுதான் சீட் தருவார்கள். சாதகம் கணித்த பிறகும் சாதிச் சான்றிதழ் சரிபார்த்த பின்பும் தான் எம் எல் ஏ சீட் கிடைக்கும். தற்பொழுதும் இவ்வழக்கு நடைமுறையில் உள்ளது. இந்தப் பாணியைத் தான் நமது இலக்கிய விமர்சக மேதைகள் உபயோகிக்கிறார்கள். ஒரு படைப்பு நன்றாக இருந்தாலும் சந்தேகம், நன்றாக இல்லாவிட்டாலும் சந்தேகம். சொல்லுலாமா வேண்டாமா சொல்லிடலாமா வேண்டாமா யேய் நான் சொல்லிடலாம்னு இருக்கறன்.. ஐயோ நான் சொல்லறதுக்கு பயமாக இருக்கு யேய் நீ ஏண்டா சொன்ன.. சொல்றதுக்கு முன்னாடி என் கிட்ட பேசியிருக்கலாம்ல.. டேய் பாத்துடா.. என்று கூட்டணி உரையாடல்கள் செய்வதற்குப் பதிலாக அவர்களின் படைப்புகளுக்கு நேரம் ஒதுக்கலாம். சொம்பு தூக்கிகளின் படைப்புகளுக்கு அங்கீகாரம் நிச்சயம் உண்டு. முச்சங்கம் வைத்து இலக்கியம் பேணிய காலம் மருவி சொம்பு இலக்கியம் பேணுகிற காலம் இது.
பொதுவாக முன்னுரைகள் எழுதி நம்மை அறிமுகம் செய்து கொள்வதற்குப் பதிலாக நாம் சாதகம் உள்ளிட்ட ரெசியும் resume வைத்துவிடுவது நல்லது என்றே கருதுகிறேன். சமீபத்தில் நான் சில நூல்களுக்கு அறிமுகம் மற்றும் சில நல்ல விசயங்களை எழுதியதைப் படிக்காமல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்த நண்பர்கள்
என்னங்க இதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இந்த நேரத்த நீங்க நெட் லயிருந்து ப்யுவோஸ்கி, சார்த்தர், டெரிடா, துர்கனேவ். பால்சாக், ஹெமிங்க் வே, ஹாருகி முரகாமி, இஸபெல் ஆலண்டைன், சில்வியா பிளாத், இப்படி எடுத்து சில கட்டுரைகள் எழுதலாமே..இப்படி எல்லாத்துக்கும் எழுதினா உங்க படைப்பு எனர்ஜி வேஸ்ட் ஆயிடும். பவர் போயிரும் உங்க கெமிஸ்ட்ரி லெவல் எறங்கிடும். எப்பவுமே மிகச்சிறந்த படைப்புகளுக்கு எழுதறப்பதான் நம் எழுத்தும் வடிவமும் சிறக்கும் என்கிறார்கள்.
சரி என்றபடியே நானும் நீங்க  மேற்சொன்னவங்களுக்கு எழுதியிருக்கீங்களா என்றால் அவர் ஹி ஹி என்றார். அவர்கள் பார்வைக்கு நாம் எப்பொழுதும் பாவம் தான்..நம் படைப்புகளும் பாவம்தான். பாவிகளின் படைப்புகளில்தான் தொன்ம அடுக்குகள் இருக்கும்.
         நறுமுகை தேவியின் கவிதைகளில் தொடர் அடுக்குப் படிமங்கள் அதிகமாக உபயோகித்திருக்கிறார். ஒரு கவிதைக்கு ஒரு படிமம் போதும். தன்ணுணர்ச்சி சார்ந்த கவிதைகளில் வெளிப்படுகிற சுய கழிவிரக்கம் போத நிலையைத் தருகிறது. நிலத்தின் இயல்புகளைப் பேசுகிறபொழுது அதிகமான படிமங்களையும் காட்சிகளையும் தரலாம்.
வீடு வரை வந்த நதி    
நான் அந்த நதியை நெடு நேரமாக
உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தேன்
ஏதோதோ கதைத்த வண்ணம்
நதியோடு சேர்ந்து நடந்தேன்
அது புனல் விவாதங்களின்
புள்ளி விபரம் சொல்லியது
பின் கோவலன் மாதவியின்
கானல் வரிகளை யாழ் மீட்டிப் பாடியது
என்னால் ஒரு எல்லைக்குப் பின்
அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து
நடக்க  இயலவில்லை
நதி வேறொரு பேச்சுத்துணையைக் கைக் கொண்டது
நான் பாதி வழியில் திரும்பி விட்டேன்
வீடு எட்டியவுடன்
என் கண்களில் இருந்து
குதித்தோடத் துவங்கியது அந்த நதி-  பக்-47
          சிலம்பு அதிகாரத்தின் சமகாலத்தின் காட்சியை இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். முப் பெட்டகப் படிமங்கள் அதிகமாக யாரும் பயண்படுத்துவதில்லை. வாழ்வனுபவம் வாய்த்தவர்களுக்கு அவை எளிதில் கைக்கொள்ளும். அது மிகவும் சிக்கலை உண்டு செய்பவை. தேவி தனது முதல் தொகுப்பில் அதிகமான கவிதைகளின் காட்சிகளில் பயண்படுத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள்.. வெளியிட்ட புது எழுத்து மனோன்மணி அவர்களுக்கும்..
வெளியீடு
புது எழுத்து
2-205 அண்ணா நகர்
காவேரிப்பட்டிணம் 635112
கிருஷ்ணகிரி மாவட்டம்
விலை-ரு.60-90421 58667

1 கருத்து:

  1. ஒரு சில கவிதையும்,கருத்தும் புரிந்துகொள்ள கொஞ்சமாவது இலக்கிய அறிவும்,படிப்பினையும் வேண்டும். எமக்கு கொஞ்சம் குறைவுதான். செய்யுள் வடிவத்தில் வந்த பாடலின்போது,பாரதியாரின் கவிதை காப்பாற்றியதுபோல, கர்நாடக சங்கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும்போது பாடறியேன்..படிப்பறியேன் கேட்க்கும் சந்தோசம்போல ஒவ்வொரு கவிதை ஈரமாக்கி விட்டுப்போகும் இதயத்தை மட்டுமல்ல...நம் வாழ்வினையும்.

    பதிலளிநீக்கு