செவ்வாய், 7 ஜனவரி, 2014

பா.தியாகுவின் “எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை” கவிதை நூல் குறித்து

பா.
எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை...
ப.தியாகுவின் கவிதை நூல் குறித்து- 

இளஞ்சேரல்
           
 இந்த மூன்றாண்டுகளில் தமிழகம் அல்லாது மற்ற கடல்களுக்கு அப்பால் வாழ்ந்து வருகிற கவிஞர்கள் தங்கள் கவிதை நூல்களை அதிக அளவில் கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பக இந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் சினிமாக்கள் சினிமா தொழில் உச்சமாக இருந்த காலத்தில் வெளிவந்த படங்களை விடவும் அதிகமான படங்கள் வெளியாகியிருக்கிறது. அச்சிட்ட நூல்கள் தேக்கம். புத்தக விற்பனை சரிவு. படைப்புகளுக்கான சரியான மரியாதை இல்லை. மிகச்சிறந்த படைப்புகளுக்கான அங்கீகாரம் இல்லாவிட்டாலும் கூட தியாகு போன்ற படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை  வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பதிப்பகங்களின் அழைப்பிற்குக் காத்திருக்காமல் தாங்களே வெளியிடுகிற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக குடும்பக் கவிஞனுக்கு குழந்தைகள் இருக்கிற கவிஞனுக்கு பணம் என்பது மிகமிக முக்கியமானது. தன் குடும்பம் தன் குழந்தை தன் எதிர்காலம் போன்றவற்றிற்கு தந்த மரியாதையை கவிதைக்குத் தந்தமைக்காக அவரை நாம பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
        நம் சமூகத்தில் வாழ்கிற ஒருவன் அல்லது ஒருவள் தன் வாழ்நாளில் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்வதுதான் தாம் ஆற்றும் மகத்தான கர்மம் என்பது வழக்கில் இருக்கிறது. ஆனால் நவீன காலத்தில் மொழிக்கும் படைப்பிலக் கியத்திற்குமாக நாம் செய்யும் நூல் வெளியீடு என்பதே கும்பாபிசேகம்தான். இந்த விழாக்கள் என்பதெல்லாம் நாற்பத்தியெட்டு நாள் மண்டல பூஜைமாதிரிதான். பா.தியாகுவின் இந்த முதலாம் மண்டல பூஜைக்கு வந்திருக்கிற உங்கள் அனைவரையும் முதற்கண் வணங்கி வரவேற்கிறேன்.
         கவிதை நவீன கவிதைகளின் ஆக்கம் பல்கிப்பெறுக வேண்டிய காலம் இது. இந்தக் கட்டுரையை எழுதும் முன்பாக நான் இரண்டு மணிநேரம் பொதிகைத் தொலைக்காட்சியில் கம்பன் விழாவின் தொகுப்பைக் காண்கிறேன். கம்பனின் கவிதைகளில் மேன்மையாகத் தெரிவது வீழ்ச்சியே வெற்றியே என்னும் தலைப்பில் கவிச்சக்கரவர்த்தியின் கவிதைகள் குறித்த ஆழமான உரைகள். பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் அறிஞர்கள் தா.கு.சுப்பிரமணியன், தா.ராமலிங்கம்,ஜெயராஜ், சுமதி, உள்ளிட்ட பத்து அறிஞர்கள்களின் உரைத்தொகுப்பின் மூலம் கம்பனின் கவிதை ஆழத்தை அறிய முடிந்தது. தமிழ் கூறும் நல்லுலகம் பல நுற்றாண்டுகளாக அறிந்த வந்த தமிழச்சுவையானாலும் கேட்க கேட்க புத்துணர்வு ஏற்படுகிறது.
  அந்த உரைகள் தீந்தமிழச்சுவையளித்த ஒன்று. சொற்களின் ஆழம் சொற்களைப் பயண்படுத்துதல். எளிய ஓர் சொல் எப்படி உய்வு கொள்கிறது. அறம் பாடுகிற தன்மை பற்றியெல்லாம் அறிய முடிகிறது. வால்மீகி கூட அழுத்தம் தந்து பேசாத இடங்களில் கம்பன் தமிழால் விளையாடிய இடங்ளை பேச்சாளர்கள் சுட்டிய போது நம்மையும் அறியாமல் கவிதைகளின் மேன்மையை அறிந்து கண்ணீர் வருகிறது. குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களுக்கு கம்பன் பயன்படுத்திய சொற்களில் நயமும் உணர்ச்சியும் மேம்பட்டிருக்கிற இடங்களை விவிரித்த வதம் அபாரம் அபாரம். கவிச்சக்கரவர்த்தியின் புகழ் பல நூற்றாண்டுகளாக மேன்மேலும் பல்லாயிரம் ஆண்டுகள்  பேசிப் பேசித்தீர்த்தாலும் அதோடு முடிந்து விடாத தாகத்தையும் சுகத்தையும் ஆயுளையும் தருகிற கவிதைகளாகப் பாடல்களாக வந்து கொண்டேயிருக்கிறது. நான் சமீபத்தில் வாசித்த கம்பன் சொல் ஆய்வுத் தொகையான மரியாதைக்குரிய நாஞ்சில்நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணிவாசிக்க நேந்த அனுபவமும் இந்த தொலைக்காட்சி நிகழ்வுகளும் ஊடாடி வருவதைத்தவிர்க்க முடியவில்லை. ஏறைக்குறைய கம்பனின் பாடல்கள் அல்லது கவிதைகள் யாவும் அதி நவீன கவிதை வடிவங்கள் என்றே சொல்லவேண்டும்.
          கம்பனின் சொற்கள் காலந்தோறும் பேசுவதற்கான காரணங்களை பட்டிமன்றப் பேச்சாளர்கள் மட்டுமல்ல பிற துறையின் தமிழாட்சி வல்லுநர் போற்றுகிற காரணம் சொற்களுக்குள் வைத்த நுட்பமான உணர்ச்சிகளும் மொழியின் தேர்ந்த நயமிக்க வடிவங்களும் ஆகும். இந்தநிலையில் ஒரு கவிதை நுட்பம், சொல்,கலையழகு, உணர்ச்சி, சூழலுக்குத் தகுந்த உச்ச உணர்வின் வெளிப்பாடுகளை வாசகனுக்கு உணர்த்துதல் என்னும் பயண்பாடு என்னும் பகுதிகளில் ஆழக் கவனிக்கவைக்கிறது.
          கவிதை வாசகனுக்கு அளிக்க வேண்டிய எல்லாவிதமான சுதந்திரங்களையும் அளிப்பதே ஒரு கவிஞனுக்கும் கவிதைகளுக்கும் இருக்கும் கடமை. மொழியை வாசிக்க அறிந்தவன் குறைந்த பட்ச வாசிப்பு உள்ள வாசகன் கூட ஒரு கவிதையை வாசித்து விட்டு அடுத்தாற்போல அவன் எங்காவது கவிதையைப் பார்க்க கவனிக்க நேரும்போது மென் மேலும் வாசிக்க முற்பட வைப்பதும் கவிதையின் பணியாக நாம் உணர்கிறோம்.
ஒரு சார்பாளர்கள் பிரச்சாரம் செய்வது என்னவென்றால் கவிதையை யாரும் வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி உணர்த்துவதும் தேவையில்லாத ஒன்று. பாடம் எடுக்கவேண்டியதில்லை. நல்ல கவிதை காலத்திற்கும் நிற்கும். அறிமுகம் தேவையில்லை. என்றெல்லாம் சொல்லி கவிஞனை அவன் விரல்களை உடைத்து ஊருக்குள் பலசரக்குக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்.  அச்சுறுத்தி திருவிழா மேடைகளுக்கும் திருமண வாழ்த்துகளுக்கும் அஞ்சலி போஸ்டர் தயாரிப்புக்குமாக வைத்துக் கொள்கிற பணிகளும் நடக்கத்தான் செய்கிறது. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற கவிஞர்கள் இல்லை.
              மொழிப் போராட்டம் நடந்த போது மொழியைக் குறித்த கவிதைகள் எழுதாதவர்களே கிடையாது. அப்படியானால் அன்று கவிதை எழுதவேண்டிய நிலை ஏன் வந்தது. கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள். மேடைப் பேச்சாளர்கள். ஏன் காங்கிரஸ்கார மொழியுணர் வாளர்கள் கூட கவிதைகளை எழுதித்தள்ளினார்கள். அப்படியானால் கவிதை மிகப்பிரமாண்டமான பிரச்சனைகளின் பொழுது எழும். மக்களை எழுதவைக்கும் என்பது புலனாகிறது. இலக்கிய வடிவங்களில் பிரச்சனைகளின் பொழுது தீர்க்கப் பயண்படுகிற மகத்தான கருவியாக கவிதையே காலந்தோறும் இருந்து வருகிறது. பிறகு நாடகங்கள். அந்த நாடகங்களிலும் பேசும் வாக்கியங்கள் கவிதை நடையிலும் வசன கவிதை நடையிலும் இருந்தால் கருத்து செறிவாக இருக்கும். காரணம் கவிதையில் உணர்ச்சியைக் கொண்டு வந்துவிடமுடியும் என்பதும், பிரிதொரு உணர்ச்சி கொண்ட உள்ளத்தைக் கண்டு கொள்ள முடியும் என்பதும் உணர்த்த வேண்டிய காலநிலையை தேவையை,விடுதலையை அறிந்து கொள்ளத் தூண்டுகிறது என்பதையும் கவிதையின் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.
       நவீன கவிதை உற்பத்தியை வெறுக்கிறது. சர்வ நிச்சயமாக கவிதையை எழுதித்தள்ள முடியாது. ஒரு காலத்திலும கவிதையை உற்பத்தி செய்யவே முடியாது. தற்காலத்தில் இன்றைய நிலையில் மொழியுணர்வாளர்களின் கவிதைகள் எந்த நிலையில் வைத்துப் பார்க்கப் படுகிறது என்பதை நாம் அறியலாம். ஒரு ஐம்பதாண்டுகளுக்குள்ளாக ஒரு வடிவத்திற்கான மரியாதையும் இப்பொழுது அந்தக் கவிதைகளை வாசிக்கும் போது நமக்கு ஏற்படும் சலிப்பை எப்படி நாம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.
        நடந்து முடிந்த காலம் பொய்யா. எழுதிய கவிதைகள் பொய்யா. பல்லாயிரம் புத்தகங்கள் ஆய்வுக் கோவைகள், கட்டுரைகள் இப்பொழுது எடுத்து வாசிக்கிறார்களா. அந்த நடையை ஏற்க முடிகிறதா. ஏன் சோர்வு வருகிறது. இந்த மொழி மேம்பாட்டை நவீன இலக்கியம் கொண்டு வ்நதிருக்கிறது. அதே திராவிட இலக்கியக் குடும்பத்தைச் சார்நத மாணவ மாணவிகளால் ஏன் இலக்கியப் பல்துறை ஆய்வுகளைச் செய்ய முடிவதில்லை. இந்தக் காரணங்களை நாம் ஆராயவாவது திராவிட இலக்கிய ஆளுமைகள் முயன்றிருக்கிறாரா என்பதெல்லாம் நாம்  கேட்டுக் கொள்ள வேண்டிய காலம். திராவிட இலக்கியத்தின் இலக்கியக் கோட்பாடுகளின் மறு ஆக்கம் குறித்த ஆய்வுகள் தேவை..
இருந்தாலும் நாம் கேட்க மாட்டோம் ஏனெனில் மொழி நமக்கு வசதியைத் தந்திருக்கிறது. வாழ்வைத் தந்திருக்கிறது. கவிதையால் சில சீரும் சிறப்பும் பெற்றிருக்கிறோம். கடலோடியும் புகழ் பெற்றிருக்கிறோம். போதுமே கொஞ்சம் சொல், கொஞ்சம் நளினம், கொஞ்சம் பித்துநிலை, இறுதியில் வெளிப்படும் ஆச்சர்யம் இதை வைத்து மேலும் ஒரு ஐம்பதாண்டுகள் ஓட்டிவிடலாமே. நாம் அடைந்த வசதியை பெற்ற வெற்றியை நாம் அதிகம் வெளியில் சொல்லிக் கொள்வோமா இல்லை.
           சமகாலத்தில் உலகமயமாக்கல் என்று நாம் ஏன் சொல்கிறோம் என்றால் எந்த நாடும் ஒரு நாட்டிற்குள் நுழைந்து தொழில்கள் நடத்திக்கொள்ளலாம். ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம். நாணயப்பரிவர்த்தனை செய்யலாம் என்றாகிவிட்டது. நிலங்களை வாங்கிக்குவிக்கலாம்.
இதன் வழியாக நாமும் நம் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதற்கு  நம் படைப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயண்படுத்தி செய்யவேண்டும் அல்லவா. அது நடக்கவில்லை என்பதுதான் நம் விமர்சனம். உலகமயமாக்கலைப் பயண்படுத்தி நம் படைப்புகள் உலகத்தின் ஆதிக்க மொழிகளான பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய, ஆங்கிலத்தின் மொழி வடிவம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது அந்தந்த மொழிகளில் நம் படைப்புகள் செல்ல வேண்டும் அது நடந்திருக்கிறதாவென நாம் காண வேண்டும். ஒரு சில மிகப் பெரும் அரசியல் செல்வாக்குள்ளவர்களின் படைப்புகள்தான் மற்ற உலக மொழிகளுக்குச் சென்றிருக்கிறது. நல்ல வேளையாக சுந்தர ராமசாமி, சல்மா, சுப்ரபாரதிமணியன்,
பி,ஏ.கிருஷ்ணன், இந்திராபார்த்தசாரதி,  வாசந்தி, இரா.மீனாட்சி போன்ற மிகச் சிலரின் படைப்புகளே உலக மொழிகளுக்குச் சென்றிருக்கிறது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட படைப்புகள் மற்ற இந்திய மொழிகளுக்குச் செல்வதே அரிதாக இருக்கிறது. இன்னும்  மொழிபெயர்ப்பு என்பது ஆங்கிலத்திலிருந்து நடப்பதுதான் தொண்ணூறு சதவிகிதம் நடக்கிறது. காரணம் அது சுலபம். அகராதிகள் உள்ள மொழி. நமக்குத்தெரிந்த மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்து செய்து கொள்வதுதான். இந்தப்பத்தாண்டு களில் மொழியை கற்காதவர்கள் அதிகம். பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளை சாதாரணமாக கற்றிருக்கிற தமிழர்கள் அதிமாகியிருக்கிறார்கள். அவர்கள் சிலர் இலக்கியக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாவும் இருக்கிறார்கள்.
              இங்கு நாம் காண இருப்பது ப.தியாகுவின் கவிதைகள் குறித்து. இனியொரு குறிப்பு. நம் கவிதைகளில் இந்தப்பத்தாண்டுகளில் ஜெர்மன், ருஷ்யா, இலத்தீன், ரோமன் ஆங்கிலம், கத்தோலிக்க ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எழுதப்பட்ட கவிதைகளின் வழியாக நாம் கண்டங்களின் இலக்கியவகைமைகளை நாம் உட்செலுத்திக் கொள்கிறோம் என்றால் மிகையில்லை. ஆச்சர்யம் என்னவெனில் இந்திய மொழிகளின் ஆதிக்கம் இல்லவேயில்லை என்பது அதிசயம். அது நன்மையாக வேதனையா எனத் தெரியவில்லை. நவீன கவிதை இதன் மூலம் ஒரு உலகத்தின் பொது வாசிப்புத்தன்மையைத் தந்து விடுகிறது என நாம் கொள்ளலாம்.
           ப.தியாகுவின் கவிதைகளில் இதே பொதுமை இருக்கிறது. ஒரு முதல் தொகுப்பில் ஒரு கவிஞனின் கவிதைகள் எப்படியிருக்கவேண்டுமோ அது போலவே இருக்கிறது. முதல்தொகுப்பு என்பது முதல் தொகுப்பு மாதிரியே இருக்கவேண்டும். அந்த தொகுப்பில் மிகையாக இருக்கும் காட்சிகள் தொடர்கிறவை. அந்த தொகுப்போடு நின்று விடுகிற ஒருசில கவிதைகள் மறு அவதாரம் எடுப்பதுதான் அந்தக் கவிஞனின் வாழ்வும் எழுத்தும் எனலாம். ஒரு கவிஞர் அறியப்பட்ட பின் அவருடைய முதல் நூலை வாசிக்கற வாசகன் அறியும் உணர்வு நிச்சயமாகவே மற்ற நுல்களை விடவும் ஆச்சர்யத்தில் மூழ்குவான். நாம் எழுதிய முந்தைய எழுத்தை எழுத முனையும் வாழ்வுதான் சமகாலத்தின் இலக்கிய வாழ்வு. கழிந்த வாழ்வின் சித்திரங்களை நாம் கவிதைகளாக மாற்ற முனைவதில் ஆசுவாசம் கிடைக்கிறது.

இந்த நூலில் அடைந்த புதுமையான வாசக உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உணர்ச்சி, காட்சிப் படிமம், தன்வயம், பிரமித்தல், இப்படியாக ஐந்து கவிதைகள் உண்டு. இறுதி மிடறு, இறுதி கைகுலுக்கல், பொழுதிறக்கம் இப்படியாக தினமும் காணும் காட்சியும் உணர்வும் கொண்ட கவிதைகள்.
கண்ணாடியினுள்ளிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று கொத்திக் கொள்கின்றன
ஒரு குருவிகள்- பக்-23

இந்தக் கவிதை மிகச்சிறந்த கவிதையாக இருக்கிறது. கண்ணாடிகளைப் பற்றி பூமா ஈஸ்வரமூர்த்தி நிறைய எழுதுவார். கண்ணாடிகள் எத்தனை வகை. உயிரினங்களுக்கு தண்ணீர்தான் முதல் கண்ணாடி. நீருடன் மிகுந்தப் பழக்கம் உடையவை பறவைகள்தான். அதுதான் நம்மைவிடவும் கண்ணாடி பார்க்கிற பழக்கம் கொண்டவை. இதில் தியாகு ஒப்பனை யென்று சொல்லாமல் கொத்திக்கொள்கிறது எனும் படிமத்தில் தன்னையே காதலித்துக் கொள்கிறது என்கிறார். இதற்குத் தலைப்புதான் பொருந்தவேயில்லை. சில பொருந்தாத தலைப்புகள் வாசகனுக்குப் பாடம் நடத்துவது போலாகிவிடுகிறது.

ஸ்நேகம் எனும் தலைப்பில் பக்-43
தினம் ஒரு பிடி தானியம் எடுத்து
வாசலில் இறைப்பேன்
வானத்திலிருந்து இறங்கி வந்து
கொத்தித்தின்று பசியாறி
பறந்து போகும் குருவிகள்
தினம் வாசலில் வந்து இறையும்
ஒரு பிடி தானியம் போலும்
என் மனத்தின்
முல்லை மொக்கையொத்த
மென் அலகால்
வலிக்காமல் தம்மை
கொத்தித்தின்று விட்டு
ரசனையின் பசியாற்றி
பறந்து போகும் குருவிகள்
       
இந்தக் கவிதையில் ரசனை என்கிற பதம் வருகிறது. ரசனை மேம்பாடு குறித்த ஆழமான குழப்பங்கள் நிலவுகிறது. சில சமயம் துல்லியமாக ஒன்று சொல்லிவைத்தால் போல ரசித்து வைத்துப் பேசிக் கொள்கிற ஆச்சர்யங்கள் நம் வாழ்வில் நடப்பதுதான். எனினும் ரசனை மேம்பாடு மேற்கொண்டு நீள்வதேயில்லை. அந்தக் கவிஞன் அப்படித்தான் சொல்வார் என்று நாம் ரசனைக்கு முடிவு செய்து கொள்கிற அபத்தம் இருக்கிறது. ரசனையை படைப்பிலக்கியத்திற்கான மகத்தான கருவியாக மாற்றிக் கொள்கிறபோது நம்மால் மேம்பட்ட இலக்கியங்களைத் தரமுடியும் என்று கருதுகிறேன்.

என் வரவேற்பறையில்.
இருபது லிட்டர் கொள்ள ளவில் ஒரு கடல்
கொஞ்சம் மணல்
கொஞ்சம் கூழாங்கற்கள்
கொஞ்சம் கிளிஞ்சல்கள்
சிறு சிறு மீன்கள் என
எல்லாவற்றையும்
உள்ளடக்கியதாய்த் திகழ்கிறது
என் வரவேற்பறையில்
இருபது லிட்டர் கொள்ளளவில்
ஒரு கடல்
அடுக்குமாடிக் குடியிருப்பில்
என் வீடு
முதல் தளத்தில் என்பதால்
கடல் மட்டத்திலிருந்து
பூமியின் உயரம்
சுமார் மைனஸ் 5.88 மீட்டர்- 17 பக்
       
இந்தக் கவிதை சிறந்த தன்வயக் கவிதை என்பேன். இருப்பதை வைத்துக் கைக் கொள்வது என்பது. பெரும்பாலும் இந்தக் கவிதை எல்லா வாசகர்களுக்கும் பிடித்துப் போக காரணம் என்னவாக இருக்கும் என யோசித்த போது “கடல் மட்டத்திலிருந்து“ என்கிற பிரமிப்பும் தொலைவும் காரணமாகிறது. நவீன கவிதையின் சொற்கள் எளிமையானவை. உணர்த்தும் சித்திரங்கள் பிரமாண்டமானவை. அடங்காத ஒன்று. நாமும் நீருக்கு மேல்தாள் தழும்பிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கவிதையில் ஒரு நவநாகரீக வாழ்வின் வீடு ஒன்று கற்பனையில் உதிக்கிறது. கண்ணாடித் தொட்டியை நீரை கடலின் ஞாபகார்த்தமாக வைத்திருப்பது மாதிரியாக நாம் நாகரீகமான வீட்டில் என்னவெல்லாம் வைத்திருக்கிறோம் என்பதை யோசிக்க வைக்கிற கவிதையாக இருப்பதால் நமக்கு இக்கவிதை பிடிக்கிறது.

ஜி.பிரியா எனும் தேவதை- பக்..70

குடும்ப வாழ்வில் நம்பிக்கையில்லாத முன்னேறி நாடுகளில் வாழ்கிற வெள்ளையர்கள் கூட கரைந்து போகிற உணர்வுகளைத்தருகிற மனசைத் தருவது குழந்தைகள். அவர்கள் தங்கள் பல புணர்ச்சி வாழ்வை தனது குழந்தைகளைப் பார்த்த பிறகு நிறுத்திக் கொண்டு குழந்தைகளுக்காகத் தங்கள் மீதி வாழ்வை வாழ்கிற வலிமையைக் குழந்தைகள் தருகிறார்கள். மூன்றாம் உலகப் போர்கள் வராதமைக்குக் காரணம் குழந்தைகள்தான். அது சோமாலியா நாட்டின் எலும்புக் கூடுள்ள குழந்தைகளாக இருந்தாலும் பிஜி,பிலிப்பைன்ஸ் தீவுகளில் மாமிசம் தின்னும் குழந்தைகளானாலும் நமக்கு தன்னுணர்ச்சியை ஊட்டுகிறவை குழந்தைமை.

நெய்யில் தோயும்
திரிப் புழு
நெளிகிறது சுடரில்

இந்தக்கவிதையுடன் நிறைவு செய்கிறேன். இறுதி வரியைச் சற்று மாற்றினால் பிரமாண்டம் விரியும் சுடரில் என்பதற்கு பதிலாக கடல் என்று. இந்தச் சொற்பிரயோகம் சொற்களின் பங்கு கவிதையை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிற நுட்பத்தை கம்பனின் சொல் குறித்து நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்.
       பாலகாண்டத்தில், தாடகை வதைப்படலம், பாடல்-388 தாடகையின் உரம் உருவி உயிர் பருகிப்போன இராமனின் அம்புக்கு,கம்பன் உவமை சொல்வது சொல்லை. அந்தச் சொல் கடிய வேகச் சுடு சரம், சரம் எனில் அம்பு

சொல் ஒக்கும் கடிய வேகச்
     சுடுசரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
   விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தாங்காது,
  அப்புறம் கழன்று,கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
  பொருள் என, போயிற்று அன்றே!
         கடிய வேகம் என்றால் மிகுந்த வேகம்.கரிய செம்மல் என்பது இராமனை அல் ஒக்கும் நிறத்தினாள் என்றது இரவு போன்ற நிறம் உடைய தாடகையை அவள் நெஞ்சு வயிரக் குன்று போன்ற கல்லை ஒத்த து. ஆனால் இராமனின் சொல் ஒத்த சுடுசரம் அவள் நெஞ்சில் தங்காது கழன்று அப்புறம் போய்விழுந்த து அது அல்லத புன்மையானவர்களுக்கு நல்லோர் சொன்ன நல்ல பொருளைப் போல இந்தக் காதில் புகுந்து அந்தக் காது வழியாக வெளியேறிற்று..சொல்லும் ஒரு ஆயுதம். எரி என்றால் எரிக்கும் என்பதை கம்பன் அறிவான்
       பக்.-53 நன்றி. (கம்பனின் அம்பறாத் தூணி- நாஞ்சில் நாடன்)
     
ப.தியாகுவின் சின்னஞ்சிறிய கவிதைகளில் அவரின் ஆற்றல் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. தொகுப்பில் புழங்கும் ஆங்கிலம் சரியான இடத்தில் தேவைக்கேற்ப பயண்பட்டிருக்கிறது. குழந்தைகள் குறித்த கவிதைகள் நவீன கவிதை தொகுப்புகளில் தவிர்க்க முடியாதவை. ஆங்காங்கு தென்படுகிற குருவிகள், மீன், கண்ணாடி, கடல், வண்ணம், கிண்ணம் இப்படியான படிமங்கள் சரியாக பதிவாகியிருக்கிறது. குறுஞ்செய்தி கவிதைகளிலிருந்தும் நவீன வாழ்வின் கவிதைகளைத் தரமுடியும் என்பதை ப.தியாகு நம்பிக்கை அளித்திருக்கிறார். சமீபத்தில் வாசித்த அவருடைய கவிதைகள் வரையிலும் சுருங்கச் சொல்லி உணர்த்துகிற வடிவம் அவருடையது. இந்தப் பாணியை மிகவும் சிறப்பாக்கியவர்கள் சி.மணியும் அழகிய சிங்கரும். அபி உள்பட எல்லாவற்றிற்கும் வழித்தோன்றல் வேண்டும்தானே...
வெளியீடு
வெயில் நதி
எண்1-டி சந்தை மேடு
சிறுகடம்புர், செஞ்சி-604202
80123 30511
மின்னஞ்சல். Pa.thiyagu@yahoo.in
Blogspot- pa-thiyagu.blogspot.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக