புதன், 1 ஜனவரி, 2014


கோவை இலக்கியச் சந்திப்பின்

37ஆம் நிகழ்வு  பதிவுகள்

இளஞ்சேரல்

       

 

       வண்டிகளை நிலை நிறுத்திக் கழற்றி விட்டோம். அனுப்பர்பாளையம் வந்தாகியது. வெயில் கம்பிகளை மிதித்து நடந்த எருதுகள் மூச்சிறைக்கிறது. தாம்புக்கயிறுகளை நன்கு உருவாஞ்சுறுக்கிட்டு கட்டினோம். மக்களின் குடும்பக் கூட்டங்கள் தங்கள் கால்நடைகளுடன் தங்கள் உறவினர் குடில்களுக்கு நடைபயணம் போகிறார்கள். ஒரு வழியாகத் தீர்ந்து போய் முடிந்த பதினாலு மைல். புகைபோன்று ஏரியின் மையத்தின் தளிர் பொசும்புகிறது. தீர்ந்த தடத்தின் வாதை அதன் கண்களில் தெரிகிறது. இலக்கியச் சந்திப்பு இருப்பதால் இரட்டை எருது வண்டிதான் சரியென்று ஓட்டி வந்தோம். வண்டிகளில் சந்திப்பிற்குத் தேவையான தளவாட சாமான்கள். இறக்கி வைத்தோம். சே.ப நரசிம்மலுநாயுடு பள்ளியின் வளாகம் பனியால் சூழ்ந்திருக்கிறது. அசோக மரங்களின் சூடுகளிலிருந்து பறவைக்குஞ்சுகளின் சுருதி. உண்ணிப்பாக கேட்டால் அறியலாம். மில் சாலையின் இருபுறமும் வண்டிகள் அவிழ்த்து விடப்பட்டு எருதுகள் ஓய்வெடுக்கிறது. வண்டிக்கார ர்கள் இரவு முழுக்க பல ஊர்களிலிருந்து இலக்கியச் சந்திப்பிற்கு வந்திருக்கும் களைப்பில் வண்டியிலேயே உறங்குகிறார்கள். உரம். புண்ணாக்கு தவிட்டுக்கடைகளுக்கு இன்று விடுமுறைகள். கரித்துண்டு, உயர்தர மரக்கடைகளுக்கு இன்று விடுமுறையெல்லாம் கிடையாது. மரக்கடைகள் சிலவை திறந்து இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் முத்தண்ணன் குளம் தெரிகிறது. நீளிக்கும் பாதைகளில் சரளை மண்ணும் வண்டிப் பட்டா நுகர்ந்து நுகர்ந்து பெரும் பள்ளம் ஓடியிருக்கிறது. மண்பாதைகள் எங்கும் முடியலாம். வயதான குதிரைகள் ஆங்காங்கு மேய்கிறது. வண்டிப்பட்டா வரைந்த நீளமான இரண்டு வரிகள். நடுவில் மண்மேடு. அதில் நடைபாதைவாசிகள் தலைச்சுமையாவாரிகள் நடந்து போகிறார்கள். தடம் போவது போனால் கடைசி தொண்டாமுத்தூர் நரசீபுரம் வரைபோகும். மலையடிவாரங்கள் தெரிகிறது. பனியிற்கிடையிலும் ஆங்காங்கு கருப்பட்டி மாதிரி மலைகள் தெரிகிறது.

     மில் பகல் பொழுது பணிக்கு தொழிலாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் இருக்கும். குறியாட்டு மந்தை போல. கால்கள் வள்ளை பாய்ந்து ஆணிகள் கட்டி எருதுகள் குந்துவது போலவே குந்தி நடக்கிறார்கள். வெள்ளை வேட்டி சட்டைகள்தான் பெரும்பாலும். தலையில் நிச்சயமாக ஒரு துண்டு. மில் கேட் வாயிலிருந்து தொழிலாளர்கள் இலக்கியச் சந்திப்பின் பதாகைகளைக் காண்கிறார்கள். வெள்ளைய நிர்வாகம் மில் பணியாளர்களுக்காக டிராம்மில் சாப்பாடு,தேநீர், கருப்பட்டி, நிலக்கடலை, தேங்காய், செல்கிறது. மில் இயந்திரங்கள் ஓடும் சத்தம் கடலைகளுக்குள் நகரம் மிதந்து கொண்டிருப்பதான உணர்வு தருகிறது நமக்கு. மில் கேட் வாயிலில் கட்சிகளின் கொடிக்கம்பங்கள். அறிவிப்புப் பலகைகள். சிறிய சிறிய அளவில் கேட் கூட்டங்கள். அதைக் கவனிக்க நாட்டு ரகத்துப்பாக்கியுடன் போலீஸ்.

எல்லா நேரமும் நடக்கும் கேட் கூட்டங்கள். மில்லின் முன்பாக நிறையக் கடைகள்.வெத்திலை பாக்குக்கடைகள் தான் அதிகம். மாட்டு ஆஸ்பத்திரிகள். வண்டி சரிசெய்கிற இடங்கள். எருதுகளுக்கு லாடம் கட்டுகிற ஆட்கள். மில் வாயிலிலிருந்து மிக நீளமாக ஏரி போகிறது. அந்த ஏரி வடகோவை வரை போயி முடிகிறது. அதே ஏரி தெற்கில் வாலாங்குளத்தில் கலக்கிறது. இரண்டு புறங்களிலும் மக்கள் வசிக்கிறார்கள். ஏரியைக் கடக்கவும் தாண்டி அனுப்பர்பாளையம், காட்டுர் பகுதிகள் போக மரங்களில் நடைபாதை போட்டிருக்கிறார்கள். நிறைய குடிசைகள், சில வீடுகள் ஓட்டுக் கூரை வேய்ந்திருக்கிறது. சிறுமிகள் தான் அதிகம். பால் வாங்க, எருதுகளின் சாணம் எடுத்தல், இட்லிகள் விற்றல், மலர்ச்சரம் விற்பது. பழங்கள் விற்பது, தண்ணீர் எடுத்தல், இருபுறங்களிலும் பாசம் பிடித்து பாசான வாசம் வீசாத நீர்த்துறைகளில் ஏரிகளில் தேங்கிய நல்ல தண்ணீர்ப் பகுதிகளில் துணி துவைத்தல் இப்படியாக எங்கு பார்த்தாலும சிறுமிகள், பெண்கள் என்று மில் ரோடு மரக்கடைப் பகுதிகள் எங்கும் தீவன வாடைகள்.

எருதுகளுக்குத் தங்கள் வண்டியிலிருக்கிற தீவனத்தட்டுகளை அவிழ்த்துப் போட அது இலக்கிய நிகழ்வு எப்பொழுது முடியும் என்று எங்களைப் பார்க்கிறது. பள்ளியில் வளாகத்திற்குள்ளாக இளநீர்க் குலைகள்,நுங்கு, வாழைப்பழங்கள், மாம்பழங்கள்,பலா என்று வருகையாளர்களுக்கு வந்திறங்குகிறது. யாழியும் சோ. இரவீந்திரனும் அளிக்கிறார்கள். பனங்கருப்பட்டியாலானா இனிப்பும் சூடான ஆட்டுக்கால் சூப்பும் வழங்கப்படுகிறது. வளாகத்தின் இடப்புறத்தில் பெரும் சமையல் கட்டுத்தறி உருவாக்கப்பட்டு உணவு ஏற்பாடுகள் நடக்கிறது. வெண்கல உருளிகள், பெரிய பெரிய இரும்பு அண்டா தாழிகள், சட்டுகம் வடகம், தட்டுகள் என்பதாக பணிகள் வேகமாக இயங்குகிறது. மில்லின் சுற்றுச் சுவர்கள் வானுயற எழுப்ப பட்டிருப்பதால் உள்ளுக்கு என்ன நடக்கிறது என்பதே அறியமுடியவில்லை. பச்சைக்காய்கறிகள் வாசம். எண்ணை தாழிக்கும மணம். சமையல்கலைஞர்கள் எல்லாரும் தலைப்பாகை வைத்திருக்கிறார்கள். அதன் மத்தியில் மயிற்பீலி. காதுகளில் குண்டலங்கள், கால்களில் இரும்பு பூண். கருத்த உடலில் வழியும் வியர்வை கூட எண்ணைப்பிசுக்கு வாசம் வீசுகிறது. இடுப்பு வேட்டி மட்டும் கட்டியிருக்கிறார்கள். அவர்களின் வயிறே ஒரு தாழிபோல் இருக்கிறது. எடுப்பான மூக்கும் முறுக்கிய மீசைகள் தோள்வரை தொங்கும் கேசம். பயில்வான்கள் போலிருந்தாலும் சமையலில் மகத்தான கலைஞர்கள். சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரைவாலி இப்படியாக எல்லா விதமான உணவு வகைகள் செய்வதற்கான தண்ணீர் கொதிக்கிறது. சுமார் நூறு பேர் இருக்கலாம். பெண்களின் உடையலங்காரங்களே ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. நெகமம் சேலைகளும் சுங்கிடிச் சேலைகளும் கட்டியிருக்க இனியொரு தலைபோல கொண்டைகளும் அதன் மீது சம்பங்கி மலர்கள் சூடி நெய் எண்ணைய் வாசத்தை விடவும் அவர்களின் கூந்தல் மலர் வாசம் வளாகத்தையே சுகவனமாக்குகிறது. காய்கறிகள் அரியும் போதும் பாத்திரங்கள் கழுவும் போது தண்ணீருக்காக ஏரிகளுக்குப் போகும் போது அவர்களின் தண்டைஒலியும் வளையல் ஒலியும் திரண்ட வண்டிக்கார ஆட்களை ஆச்சர்யப்படவைக்கிறது. அலுப்பு தெரியமால் இருக்கப் பாடல்களைப்பாடுகிறார்கள். இருபொருள் பொதிந்த பாடல்களை அவர்கள் பாட ஆண் சமையல் கலைஞர்கள் பதிலுக்குப் பாடவோ அவர்கள் உங்களை கொதிக்கும் எண்ணையில் கடவுள் தள்ளிவிடுவார் என எச்சரிக்கை செய்தபடியே ஏரிக்கு நீர் இறைக்கப் போகிறார்கள்.

         தொலைவில் ஓரிரு டிராம் லாரிகளில்  ஏரிகளுக்கு இடையில் உள்ள நிலப்பகுதியில் மடிந்து கிடக்கும் புதர்களை ஊர் ஆட்கள் சூழந்திருக்கிறார்கள். நிலத்தைச் சுத்தம் செய்யத் துவங்கிடும்போது குடிசைப்பெண்கள் கூட்டமாகச் சென்று என்ன பண்ணறீங்க என விசாரித்த போது இங்கண ரயில் தண்டவாளம போடப் போறாங்களாம் என்றார்கள். பெரிய பெரிய டிராம் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்க எருதுகள் மிரண்டு போய் எழுந்து சாணம் போடத்துவங்கியது. சிறுமிகள் தங்கள் பாவாடைகளைத் தூக்கிச் சொருகிக் கொண்டு சாணம் வழிக்கப் பறந்தார்கள்.  டிராம் வண்டிகளிலிருக்கும் வெள்ளைக்காரர்கள் கீழே குதித்து சிறுமிகளைக் கைப்பற்ற முயலும் போது பாய்ந்து தங்கள் சேரிகளுக்கு ஓடினார்கள் முறங்களை அப்படியே வீசிவிட்டு.

டிராம் வண்டிகள் கடந்து போகிற வரை தங்களின் கரைகளில் நின்று பார்த்துவிட்டுப்பிறகு மில் சாலைக்கு வந்தார்கள். சிறுமிகளைப் பதம் பார்த்த வெள்ளைக்காரர்களின் டிராம் வண்டிகளை சாணத்தைக் கையில் அள்ளிக்கொண்டு பின்னால் துரத்தி வெகுதூரம் ஓடிவந்து சாணத்தை எறிந்து விட்டுத்திரும்பி வருகிறார்கள் இளைஞர்களும் சிறுவர்களும்.

            காலை உணவிற்கு புளித்த தயிரும் சோளக்களி, மிளகுத்தொவையல். பலவகைக் காய்கறிகள் மசியலுமாக ஏற்பாடு. மில்லில் இருந்து ஒலிக்கும் ஒன்பது மணியின் ஓசை. பிரதேசத்தையே அலறவைக்கும் ஓசை. இரட்டை நாயணங்கள் கதருகிற ஓசை. காற்றில் பறந்த பறவைகள் வலசை மறந்து தவறித் தள்ளாடுகிறது. மரங்களிலிருந்து பறவைகள் தறதறவென அள்ளை வயிறு பிடுங்கி கொத்தாக மலங்கழித்துப் பறக்கிறது. மில் சங்கு கதறிய கதறலில் எருதுகள் வண்டி வண்டியாய் சிறுநீர் கழிக்கிறது. சிறுநீர்களின் நீரோட்டம் அந்த ஏரிகளுக்குள் கலக்கிறது. பெண்கள் தங்கள் கருப்பையை அணைத்துக் கொள்கிறார்கள். காதுகளைப் பொத்திக் கொள்கிறார்கள். மில் சங்கு சத்தம் நிற்கும் வரைக்கும் மக்கள் அதே இடத்தில் அதே நேரத்தில் போட்டது போட்டபடியே அப்படியே நிற்கிறார்கள். இரவு சிப்ட் முடிந்து வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்வுடன் எழுந்து தங்கள் வீதிகளுக்கு வந்து என்ன நடந்து முடிந்தது என அறிந்து கொண்டு திரும்பவும் உறங்கப் போகிறார்கள். இப்படியாக ஒரே நேரத்தில் பல மில்களிலிருந்து ஒலிகள் நகரத்தையே சுடுகாடு ஆக்குகிறது. பாலருந்திக் கொண்டிருந்த குழந்தைகள் காம்புகளைக் கடித்துகுதறியது.

              நான், இளவேனில்,யாழி. இரவீந்திரன் நால்வரும் காதுகளிலிருந்து கைகளை விடுவித்தோம். வெளிச்சத்திலி ருக்கிற அரங்கை மீண்டும் அலறல் இருளாக்கியிருக்கிறது. நாற்காலிகள், மேசைகள், ஒலிபெருக்கி,தண்ணீர், தேநீருக்கான ஏற்பாடுகளைத் துவக்கினோம். விளையாட்டு மைதானத்தை ஒட்டியிருக்கிற குளத்தில் இந்த மார்கழி உற்சவத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் பல நூறு பறவைகள் வந்திருக்கிறது. மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து கிரிக்கெட் கோகோ. களரிப்பயிற்சி என்று உற்சாகமான கூச்சல்களுடன் விளையாடிக் கொண்டிருக்க விழா அரங்கத்திற்கருகில் சில முன்னாள் மாணவர்கள் கோலிக்குண்டுகள் விளையாடு கிறார்கள். யாழியும் இளவேனிலும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அரங்கு தயாராகியது. உணவு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டோம். களி தயாராகி மிகப் பெரும் உருளிகளில் உருட்டி உருண்டைகள் ஆகிறது. நெய்த்து வரம்பருப்பிலிருந்து வெள்ளிரிப்பிஞ்சு கலந்த துவையல் மணம்.

          புதிய மாதவி அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள்இளவேனில் என்னைப்பிடித்து உலுக்கியபோது வௌவால்கள் குதறியிருந்த வெட்டிக்காய்களுக்கிடையில் உறங்கிக் கொண்டிருந்த நான் எழுந்தேன். என்னய்யா பராந்து பராந்து முழிக்கற என்னாச்சு..என்றார்கள்..ஒண்ணுமில்லை போலாம் அறைக்கு..நாம் போய் அழைத்து வந்து விடலாம்..என்று கிளம்பினேன். வெங்கல உருளிகள், சட்டுவங்கள்,தாழிகள், சமையல்கலைஞர்கள் இருந்த இடத்தில் அணில்களும் வெட்டுக்கிளிகளும் துள்ளிக் கொண்டிருக்கிறது. வயதான காகங்கள் செத்த பெருக்கானுக்கு அடித்துக் கொண்டிருக்கிற சத்தம் மில் கேட்டுக்கு வெளியிலிருந்து கேட்கிறது.

           பதினொரு மணிக்குச் சரியாக  நிகழ்வின் மூன்றாண்டு சாதனைகளை வேதனைகளைக் குறிப்பிட்டுத் துவக்கினேன். இந்த நீண்ட பயணத்திற்குள் எங்களை நம்பிக்கையுடன் அடைத்துப் போன படைப்பாளர்கள் பலருக்கும் கோவையில் வாழ்ந்து வருகிற இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு நிகழ்வுகள் தொடங்கியது. வரவேற்புரையை மூத்த படைப்பாளி சி.ஆர்.இரவீந்திரன் வழங்கினார். பாரதிய பரிஷத் விருது பெற்ற படைப்பாளி. இன்றளவும் நாவல், மொழிபெயர்ப்பு,சிறுகதைகள், கட்டுரைகள், வரலற்றுப் பதிவுகள் என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற ஆளுமை. அவர் தன்னுரையில் மூன்றாண்டுகள் நிறைவு செய்யும் இலக்கியச் சந்திப்பின் முயற்சிகள் பிரமாண்டமானது என்று வாழ்த்தினார்.

     இன்று நகரில் பல்வேறு இடங்களில் நிறைய நிகழ்வுகள் இருந்தும் பங்கேற்பு சிறப்பாகவே இருக்கிறது. இலக்கியச் சந்திப்பிற்கென்று வந்திருக்கிற பார்வையாளர்கள், பங்கேற்பாளர், ஆளுமைகள் ஆர்வலர்களை வரவேற்றுப் பேசினேன். பதினொரு மணிக்குத் துவங்கியபோது மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் தங்கள் சத்தங்களைக் குறைத்துக் கொள்ளத்துவங்கினார்கள்.

மேடையில் பேராசிரியர் கனல் மைந்தன், இன்றைய சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்,கவிஞர்,பெண்ணிய செயல்பாட்டாளர். பத்திரிக்கையாளர் இப்படியாகப் பண்முகத்தன்மைவாய்ந்த படைப்பாளி, மும்பையில் வாழந்து கொண்டு மொத்த உலகின் பெண்ணியத்திற்கும் எழுதிக் கொண்டிருக்கிற புதியமாதவி, முனைவர் எம்.ஏ.சுசீலா, சமீபத்தில் என்ஆர் எம் யுனிவர்சிடியில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற ஆளுமை. தமிழின் முக்கியமான திறனாய்வாளர், சிறுகதையாளர், அவர்கள் கலந்து கொண்டு பேசுவது உண்மையிலேயே தவம் என்றே சொல்ல வேண்டும். பிறகு கனவு இலக்கிய இதழின் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன், ஏறைக்குறைய நாற்பது நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள். கவிதை என்று தன்னுடைய நெடிய பங்களிப்பை இலக்கியச் சந்திப்புகளுக்கும் திறனாய்வு அரங்குகள், உலகத்திரைப்பட விழாக்கள். பயணங்கள். என்று தன் வாழ்வை முழுக்க படைப்பியக்கத்திற்குச் செலவிடுகிற உன்னதமான படைப்பாளி, பிறகு மருத்துவர் கோவி, நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். எண்பத்தியேழு வயது.மூத்த இடது சாரி எழுத்தாளர், எஸ்என்.நாகராசன் அவர்களே என் குருநாதர் என்று போற்றியவர். சமீபத்திய தனது நூலில் பெண்ணினம் தலைமையேற்காமல் சமத்துவம் சமுதாயம மலராது என்றும் தலைப்பு. அவர் தலைமையில் இன்றைய 37 ஆவது சந்திப்பின் திறனாய்வு அரங்கு தொடங்கியது.

            கோவை ஞானி அவர்கள் தன்னால் வரமுடியாத சூழ்நிலையிலும் இரண்டு கட்டுரைகளைத்தந்து அனுப்பி யிருக்கிறார். துவக்கத்தில் கவிஞர் யாழி புதிய மாதவியின் “ஐந்தினை“ கவிதைத் தொகுப்பு பற்றிய கட்டுரை வாசித்தார். இன்றைய சமூக அவலங்களை ஐந்து திணைகளுக்குள் கொண்டு வந்த சிறப்பான கட்டுரையை வாசித்தார்.  ஐந்து பக்கங்களில் எழுதிய கட்டுரை அவருடைய கவிமொழியை அடையாளப்படுத்தியது. பெண்ணிய நோக்கில் எழுதப்படுகிற கவிதைகளுக்கே உரிய கோபமும் வெடிப்பும் கொண்ட கவிதைகள் சிலவை வாசித்தார். அரங்கின் வெளியே நிகழும் புற சத்தங்களிலிருந்து பார்வையாளர்கள் கவிதைகளுக்குள் ஆழ்ந்திருக்கிறார்கள். சூடு பரவாத வெளிச்சத்தின் பிஞ்சுக்கால்க ளின் தடங்கள் இலைகளின் வடிவங்களில் படர்ந்து கொண்டிருக்கிறது.

நான் வெளியே தேநீர்க்கார நண்பருக்கு அலைபேசி பேசுவதற்கு வந்தபோது உருளிகளில் பாணகம் எனும் நீராகாரமும் எலுமிச்சை பழச்சாறுகள் பலாப்பழங்கள் அடுக்கிய தட்டுகளில் சமையல்கலைஞர்கள் கொண்டு வந்து உள்ளே அனைவருக்கும் தரலாமா எனக் கேட்கவும்...எனக்குத் தலை கிர் ரென சுத்திவர நான் அப்படியே வெட்டிக்காய் மரத்தினடியில் தளர்வாகி உட்கார்கிறேன். நண்பர்கள் சொன்னது போலவே நான் பைத்தியகாரனாகிவிட்டேனா..நிறைய எழுதாதே படிக்காதே இந்த வயதிற்கு ஆகாது. மெண்ட்டல் ஆகிடுவே என்று தலையாலடித்துச் சொன்னதை நான் கேட்காதமையால் நான் உண்மையிலேயே பைத்திகாரனாகிவிட்டேனோ...

      பலாச்சுளைகளை எடுத்துக்கொண்டேன். காவலரும் எடுத்துக் கொள்கிறார். மில் இயந்திரங்களின் சத்தம் தெளிவாகவும் உச்சமாகவும் கேட்கிறது. காதுகளுக்குள் மீண்டும் மில் சங்கு ஊதி உருமுகிற சத்தம். என் காதுகளிலிருந்து ரத்தம் வடிகிறது. சிறுமிகள் வளாகத்திற்குள் வந்து வெள்ளரிப்பிஞ்சுகள் விற்கிறார்கள். சாலைக்கு வெளியே கோலாட்டம் ஆடிக்கொண்டு போகிற சிறுமிகள். எழுந்து கொள்ள முடியாமல் தலைகவிழ்த்து அமர்ந்திருக்க யாரோ ஒரு வயதானவர் என்னைத் தட்டி கூட்டம் எங்கு நடக்கிறது எனக் கேட்கிறார். அவரை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். வயதான தோற்றம். அவர் அணிந்திருக்கிற ஓவர் கோட் நைந்திருக்கிறது. கண்களில் ஒலிப் பாய்ச்சல், செம்பழுப்பு நிறம் உடலெங்கும் ஆங்காங்கு சிவந்த பழுப்பு மச்சங்கள். முகங்களில் வயதானதால் தொங்கும் சிறு சதைகள். நெற்றியில் கீறிவிட்டிருப்பது போன்ற வரிகள். பிய்ந்த காலணிகள். கையில் சில பழுப்புக் காகிதங்களாலான புத்தகங்கள். எழுந்திருக்க முடியாத எனக்கு எழுந்து கொள்ள உதவுகிறார். அவருடைய ஆங்கிலம் புரியவில்லை. இலக்கியச் சந்திப்பு பதாகையைக் காட்டி எங்கு நடக்கிறது என சைகை செய்ய நான் அழைத்துப் போகிறேன். அவர் சுவரில் வரைந்திருக்கிற எஸ்பி நரசிம்மலு நாயுடுவிற்கு சல்யுட் அடித்துவிட்டு உள்ளே வருகிறார். அவருக்கு இருக்கை அளித்து அமர்ந்த பிறகு மருத்துவர் கோவியைப் பார்த்த பிறகு உற்சாகமாகி என்னிடம் யு சீ தேர் தட் ஹோசிமின் என்றார்.. நான் அவரை மறுபடியும் அதிர்ச்சியுடன் கவனிக்க அவர் மேடையை நோக்கிப் போய் கைகொடுத்துவிட்டு வந்து அமர்கிறார். பிறகு தன்னுடைய ஓவர் கோட்டிலிருந்து சில காகிதங்களை எடுத்து வலமிருந்து இடமாக ருஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் சரளமாக எழுதத் துவங்கினார். நான் மறுபடிம் மூளை நரம்புகள் சூடாக சுதாரித்துக் கொண்டு அவரைக் கேட்டேன்.. ஐயா நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா என்றேன். அவரோ..ஓ..சாரி சாரி டியர்..ஏம் தல்ஸ்த்தோய்.. கிளாட் யு மீட் யு....என்கிறார்.

      இளவேனிலை ஞானியின் கட்டுரையை வாசிக்க அழைத்தேன். புதிய மாதவியின் கட்டுரைகள் மட்டுமல்ல நவீன பெண் கவிதை மொழி பற்றிய தீர்மானமான திறனாய்வாகவும் அமைந்திருக்கிறது கட்டுரை. அவருடைய ஆழமான புரிதல்களும் வாசிப்பும் புதியமாதவியின் கவிதைளை திறனாய்வு செய்வதற்கு மட்டுமல்ல ஏனைய பெண்மொழி கவிதைகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது. புதிய மாதவியின் ஒட்டுமொத்த படைப்பியக்கியத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார் ஞானி அவர்கள். நான் இளவேனில் வாசிக்கிற நேரத்தில் தேநீர் சொல்லிவிடலாம் என்று வெளியே வந்தேன். எனக்கு வெளியே வரவே பயமாக இருக்கிறது. வரும்முன்பாக அவரைப்பார்த்தேன். தல்ஸ்த்தோய் மும்மரமாக எழுதிக் கொணடிருக்கிறார். வாயிலில் டிராம் வண்டியொன்று நின்று கொண்டிருக்கிறது. வளாகம் முழுக்க பனியால் சூழந்திருக்கிறது. முன்பு பார்த்த இடம் மாறியிருக்கிறது. சாலைகள் முழுக்கப் பனி. மக்கள் ஸ்வெட்டர்களுடன் நடக்கிறார்கள். டிராம் வண்டிகள், மோட்டார் கார்கள். ஆகாயம் தெரியாத அளவு பனி. பனியைச் சுத்தம் செய்து சாலையோரங்களில் தள்ளி ஒதுக்குகிற பனி நடக்கிறது. எல்லா மக்களும் நைந்த கோட் அணிந்திருக்கிறார்கள். ஆங்காங்கு குளிருக்குச் சூடு காய்கிறார்கள். புகை படந்து கொண்டிருக்க மக்கள் தங்கள் வீடுகளில் பனியை அகற்கும் பணியிருக்கிறார்கள். சிறுவர் சிறுமிகள் தங்கள் கண்களை மட்டும் விட்டுவிட்டு ஜெர்கின்களால் மூடியிருக்கிறார்கள். பனி மூட்டம் காரணமாக செல்ல வேண்டிய விமானங்கள் ரயில்கள் ஆங்காங்கு நின்று கொண்டிருக்கிறது எனும் அறிவிப்பு பனிக் கூட்டத்திற்குள்ளிருந்து. நடந்து செல்கிறவர்கள் பத்திரமாகச் செல்லுங்கள் எனும் அறிவிப்புகளை புரட்சிக்காரர்களின் சொற்களைச் செவி மடுக்காமல் நாட்டின் ஒற்றுமைக்கு ஆதரவு தாருங்கள்.ராணுவ வண்டிகள் ஒளிபரப்புகிறது. அவர்களுக்கு அடைக்கலம் தருவதும் அவர்களின் கூட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும் தேச துரோக குற்றமாகும்..

          ஞானி அவர்களின் கட்டுரை வாசித்துவிட்டு வந்த பொன் இளவேனில் ஆஸ்பத்திரி போகலாமாய்யா என்றார் நான் வேண்டாம் என்றேன். தல்ஸ்த்தோய் என்னை அழைக்கிறார் என்றேன் அவர் குழப்பமாகப் பார்த்தார். அந்த டிராம்மிலிருந்து உங்களுக்கு ஸ்வெட்டர்கள் ஜெர்கின் கொண்டு வந்திருக்கிறேன். எடுத்து அணிந்து கொள்ளுங்கள். நான் பேசாமல் எடுத்து வந்து எல்லாரையும் அணியச்சொல்கிறேன். குளிருக்கு இதமாக கனல் தீர்ந்த அடுப்பிற்கருகில் சென்றார். கரித்துண்டுகளை அள்ளிப்போட்டு கனலை ஊதி ஊதி நெருப்பிட்டார். அறை சூடாக ஆரம்பிக்கிறது. தன் ஓவர் கோட்டிலிருந்து சில ரூபிள்களை எடுத்து இந்தாருங்கள் தேநீர் வாங்கி வாருங்கள் என்றார். தேநீர் காகிதக் குவளையில் தந்து கொண்டிருக்கிற போது டிராம் வண்டி வந்து நிற்கிறது. கரும்பச்சை வண்ணத்திலிருக்கிற வண்டியிலிருந்து அவரைப் போலவே கொஞ்சம் ஒல்லியாக ஆனால் உயரமாக தளர்ந்த நடையுடன் ஒருவர் இறங்குகிறார். நான் பேசாமல் உள்ளே போய் அமர்ந்து கொள்ளலாமா என நினைக்கிற போதோ என்னருகில் அவர் இருந்தார். என்னை விசாரிக்கிறார். தல்ஸ்த்தோய் ஈஸ் ஹியர் என்றார். ஆகா..தப்பிச்சாச்சு ஆமாம் சார் உள்ளதான் இருக்கால் கூட்டிட்டுப் போங்க சாமி..தன் ஓவர் கோட்டுக்குள் கைவிட்டுக் கொண்டு பள்ளியின் வளாகத்தை தன்னைக் கடந்து போகும கால்பந்தாட்டக்கார இளைஞர்களைக் கைகுலுக்கி வாழ்த்தி விட்டு அரங்கினுள்ளே நுழைகிறார். அரங்கம் அதுபாட்டுக்கு நிகழ்வில் ஊன்றியிருக்கிறது. பார்வையாளர்கள் இளவேனிலின் கட்டுரையில் இறுக்கமான மொழியில் மெதுவான உச்சரிப்பில் குழப்பத்தை எப்படியாவது அறிந்து தீர்த்துக் கொள்வது என்கிற முடிவில் கவனம் சிதறாமல் கவனிக்க அந்தப் பெரியவர் உள் நுழைவதைக் கவனிக்க மறக்கிறார்கள். தேநீரும் பிஸ்கட்டுகளையும் தருகிற பொழுது இரண்டு பேரும் உரையாடிக் கொண்டு ஆழமான விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். நான் அருகில் சென்று அமைதியாகப் பேசுங்கள் என்றேன். தல்ஸ்த்தோய் என்னை அவருக்கு அறிமுகம் செய்து ஹி ஈஸ்த தாஸ்த்தாவெஸ்கி என்றான். நான் அப்படியே நாற்காலியில் அமர்ந்தேன். அவர் கரித்துண்டுகளை எடுத்து அடுப்பில் போட்டபடியே தனது ஓவர் கோட்டிலிருந்து பைப் எடுத்துப் புகைக்க முற்பட நான் வாருங்கள் வெளியே பிடிக்கலாம் என அழைத்துவருகிறேன். கொஞ்சம் இருட்டும் வெளிச்சமும் வந்திருக்கிறது. வளாகத்திற்குள்ள கழிவறைக்குச் சென்ற போது என்னுடைய நூல்களுக்கு இங்குதான் எங்கோ நிகழ்வு நடந்தது என்றார்களே அது எந்த அரங்கு என்றார். இந்த அரங்குதான் ஐயா. கரமசோவ் பிரதர்ஸ் பற்றி நடந்த இடம் அதன் முன்பு நின்று நெஞ்சில் சிலுவையிட்டு வணங்குகிறார். இரண்டு பேரும் அவர்களுக் குள்ளாகவே ஆங்கிலம் ருஷ்ய மொழிகளில் உரையாடிக் கொள்வது புரியவில்லை. புரியாமல் போனது நல்லதாகவும் போயிற்று. என்னை தாஸ்த்தாவெஸ்கி அழைக்க நான் ஓடினேன். இளைஞர் விளையாட்டை நிறுத்திவிட்டு அவரை வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த அரங்கின் இடம் மட்டும் கருப்பு வெள்ளையில் படிந்திருக்கிற அதிசயம் பார்த்து ஆச்சர்யம் கொள்கிறார்கள்.

டிராம் வண்டிக்குள்ளிருந்த ரொட்டிகள்.பிளம்ஸ் பழங்கள்,வைன் பாட்டில்கள் எடுத்துத் தருகிறார். எல்லாருக்கும் கொடு என்கிறார். நான் சைகையால் மறுக்க போ போ என்கிறார். நிகழ்வில் பங்குகொண்டிருக்கிற ஒவ்வொருவர் பற்றியும் சொல்லச் சொல்ல ஐ சீ..ஐசீ.. என்கிறார். அவ்வப்பொழுது ராணுவ மிடுக்குடனும் கண்கள் கூர்மையாக பார்வை யாளர்களுக்கு வணக்கம் சொல்கிறார். வி. என்கிற விக்டரி சைகை செய்கிறார். மினிட் நோட்டை எடுத்துக் கொண்டு இருவரும் குறிப்புகள் எழுதினார்கள். இளவேனிலை அழைத்துவந்து அந்தக் காட்சியைக் காட்டி விபரம் சொல்கிறேன்.

அவரோ இப்பவும் ஒண்ணும் பிரச்சனையில்லையா அரை மணிநேரத்தில டாக்டர் கிட்டப் போய்ட்டு வந்தர்லாம்யா. இப்படியே விட்டா பிரெய்னுக்கு டேன்ஞ்ர் ஆயிரும் என்றார்.

நான் போய்யா நீ வேற சிரியஸ் தெரியாம விளையாடிட்டு என்றபடி இருவரிமும் செல்கிறேன். அவர்கள் தர்ட்டி செவன் ஈவண்ட்ஸ் வாவ் என்று அணைத்துக் கொள்ள அங்கிருந்த யாழி தியாகு என்று கத்தினேன். தல்ஸ்த்தோய் நம்பமுடியாமல் திகைத்துக் கொண்டு முதுகில் தட்டினார். தன் ஓவர் கோட்டிலிருந்து பைப் எடுக்கிறார். தேயிலைத் தூள் புகையிலைத்தூள் அடைத்துக் கொள்ள அடுப்பு நெருப்பின் கங்கெடுத்துப் பற்றவைத்துக் கொண்டு வர இவரும் இதமான சூட்டுக்குள் மயங்கினார்கள். டிராம் வண்டிகளின் சத்தங்களைக் கேட்கிறார்கள். ஆலைச்சங்குகளின் சத்தம். சில மிடருகள் வைன் குடிக்கிறார்கள். என்னிடம் விடைபெற்றுக் கொள்கிறார்கள்.. ஐயா அடுத்த மாதமும் நீங்கள் வரவேண்டும் வருவீர்களா என்றேன். அவர்களோ நாங்கள் மாதாமாதம் வந்து கொண்டிருக்கிறோம். நீங்கள்தான் பார்க்கவில்லை. அப்படியா மன்னிக்கவும். என்றேன். பரவாயில்லை..அடுத்தமாதம் உங்கள் படைப்புகளை அதாவது சுசீலா அம்மா மொழிபெயர்த்தவைதான் பேச இருக்கிறோம் நீங்கள் அவசியம் வரவேண்டும்..என்றதும் தங்கள் கோட்டைக் கழற்றிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு பின்னால் சற்று சாய்ந்து கைகுலுக்கினார்கள். நாங்கள் கிளம்புகிறோம்  நண்பரே.. அந்த வண்டியில் நிறைய புத்தகங்கள், ஸ்வெட்டர்கள், ரொட்டி, வைன், காலணிகள் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன உதவி எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம். நீங்கள் சிரமப்படவேண்டாம். நாங்கள் இருவரும் எழுதியதைவிடவும் பல வரலாறுகளைக் கொண்ட பதிவுகள் இந்த நோட்டில் பதிவாகியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாங்களும் எங்கள் கையெழுத்திட்டிருக்கிறோம். அதை இங்கே காணோம் என்கிறார்கள். அப்படியா இருங்கள் காட்டுகிறேன்..எனத்தேடிட அவர்களின் கையெழுத்துகளைக் காணமுடியவில்லை. அப்படியானால் இப்பொழுது இட்டுச் செல்லுங்கள்.ஒவ்வொரு சந்திப்பின் நிகழ்விலும் கையெழுத்திடுகிறார்கள்.

  பனித்தூவலை வழித்து வழித்து சாலையை நேர் செய்திருக்கிறார்கள். பணியாளர்கள். சைக்கிள்களும்.டிராம் வண்டிகளும் மோட்டார்கார்களும்  ஒடத்துவங்கியிருக்கிறது. குதிரைவண்டிகளும் ஓர்க் வண்டிகளும், மக்களை சிறுவர் சிறுமிகளை ஏற்றிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு மக்கள் கூட்டப் பயணத்திற்குப் பின்னால் டிராம் வண்டியில் காவலர்கள் பின் தொடர்கிறார்கள். மேற்குப் புறத்தின் மேடான மலைகளுக்குருகில் பனி பஞ்சு மிட்டாய்த் துணிபோல பறக்க மக்கள் திரண்டு ஆங்காங்கு வெளிச்சத்திற்கான மகிழ்ச்சியை மக்கள் கொண்டாடுகிறார்கள். சதுக்கங்களிலிருந்து பியானோ இசை வழிந்து வருகிறது. நான் அவர்களை வாயில் வரை வழியனுப்பினேன்.

 அடுத்து யார் பேசுகிறார்கள் என்றார் யாழி..மருத்துவர் கோவி என்றேன். அவர் தனது வாழ்த்துரையை புதியமாதவிக்கு வழங்கினார்கள். அவருடைய பயணங்கள்,எழுத்தியக்கம் தொடர்ந்து சமுதாய முன்னேற்றத்திற்கும் பெண்ணிய விடுதலைக்கும் நிச்சயம் உதவும் என்றார்.

        அடுத்து புதிய மாதவியின் சிறுகதைகள் குறித்த கட்டுரை மற்றும் உரையை கவிஞர் எழுத்தாளர் அச்சிலக்கியம் ஆகிய பணிகளில் இயங்கும் மயுரா ரத்தினசாமி பேசினார். நுட்பமான திறனாய்வும் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியப் பதிவுகளில் காணப்படுகிற தாயகம் சார்ந்த ஏக்கம், பெரு நகர வாழ்வியலில் பெண்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். புலம் பெயர் தமிழ் மக்கள் வாழ்வும் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு கதையில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கிற மூத்த சகோதரருக்கு அந்த நிலத்தைக் காரணம் காட்டி திருமணம நடக்கிறது. பிறகு அடுத்தடுத்த சகோதரர்களுக்கும் அந்தப் பெண்ணே மனைவியாக மாறுகிற நிலை. இப்படியான நிலைகள் இன்றும்  மட்டுமல்ல மகாபாரத காலத்திலிருந்து தொடர்கிற கதைகளையும் வாழ்க்கையையும் காண்கிறோம். இனியொரு கதைகள் திறந்திருக்கிற முதுகுகள். ஓட்டலில் பாரில் நடனமாடுகிற பெண்கள் பற்றிய கதை. ஒரு முறை அரசின் சட்டத்தால் பார் நடனங்கள் தடைசெய்யப்பட்ட போது வேலையிழக்கிற பெண்களைப் பற்றியது. தொகுப்பில் உள்ள மற்ற கதைகளும் வாசிப்பளவில் பெருநகரத்தைப் பற்றிய சித்திரங்களைத் தருகிறது.

         மயுரா ரத்தினசாமி தனது கட்டுரையில் அ.வெண்ணிலாவின் கவிதையொன்று நினைவுப்படுத்திப் பேசினார். அதுமட்டுமின்றி பெருநகரங்களில் ஒரே அறையில் மிகவும் குறுகிய அறையில் வாழநேர்கிற மக்கள் குறிப்பாக பெண்களின் பிரச்சனைகளை அவர் எழுதியிருக்கிறார். அந்த அறையை தம்பதிகள் பயண்படுத்திக் கொள்கிற தருணத்தில் வெளியேற்றப்படுபவர்கள் முதலில் பெற்றோர்கள் தான் என்றார். பிறகு வெண்ணிலாவின் கவிதையில் தம்பதிகள் ஒரு கட்டில் தேவை என்று வாங்குகிறார்கள். அந்தக் கட்டிலிலும் சில பொருட்கள் அடைத்துக் கொள்கிறது. பிறகு கட்டிலுக்கடியில் சில சாமான்கள் இதுபோலவே கட்டிலின் மேல் உடைகள் என்பதாக. பிறகு இப்பொழுதெல்லாம் கட்டில் ஒருநாளும் துஞ்சவேயில்லை என்று முடியும். மும்பை வாழ்க்கை இடநெருக்கடியில் வாழ்கிற அனைவரையும் கண்முன் கொண்டு வருகிற சிறுகதைகளாக உள்ளது என்றார். அவர் கட்டுரை பெண்ணியச் சிறுகதைகள் குறித்த மதிப்பீடாக வும் அமைந்திருக்கிறது.

          அடுத்து கவிஞர் சக்தி செல்வி புதியமாதவியின் கவிதை நூலான ஹேராம் பற்றிய கட்டுரையை வாசித்தார். இந்த தொகுப்பின் மொழியில் புதுக்கவிதையின் சாயலும் கவியரங்க கவிதைகளின் அமைப்புமாக உள்ளது. இன்று நாட்டில் மேலோங்கியிருக்கிற மத அடிப்படைவாத கருத்துகளைச் சாடுவதாகவே இருக்கிறது. மதங்களைச் சார்ந்து நடைபெறுகிற கலவரங்கள் மக்களிடையே ஏற்படுத்துகிற பிரிவனைகள் குறித்தும் பேசுகிறது. மதவாதக் கருத்துகளை பெண்ணியக் கவிதைமொழியின் வாயிலாக அவர் வெளிப்படுத் தியிருக்கிறார். கடந்த இரண்டாயிரத்திற்குப் பிறகான பெண்கவிதை மொழி பரவலாக வளர்ந்திருக்கிறது. சங்க காலப் பெண்கவிஞர்களுக்குப்பிறகான வளர்ச்சி ஒரு நிலையில் பின் தங்கி தடைபட்டிருந்தாலும் தொண்ணூறுகளுக்குப்பிறகு பெண் கவிதையின் வளர்ச்சி முக்கியமானதாகவே இருக்கிறது. இந்தப் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு புதியமாதவியின் கவிதைகளும் எழுத்துகளும் உதவியிருக்கிறது. கவிதையின் வடிவங்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. அந்த மாற்றங்களை பெண் கவிதைமொழியும் ஏற்றுக் கொண்டு எழுதுகிற கவிஞர்கள் படைப்பாளர்கள் எழுதுகிறார்கள். இந்த முயற்சிகளுக்கு எல்லாம் தொடர்ந்து இயங்கியவர்களில் புதியமாதவி அவர்களும் இருப்பது பெருமையாகவே இருக்கிறது. என்றார். அவருடைய கட்டுரையில் நவீன கவிதை வடிவம். புதுக்கவிதை வடிவம்,கவியரங்க கவிதை வடிவம். பற்றிய விரிவான ஆய்வாகவே அமைந்திருந்தது. இலக்கியச் சந்திப்பின் நிகழ்வுகளில் அவர் வாசிக்கிற கட்டுரைகள், அறிமுக உரைகள் மிகச்சரியான மதிப்பீடுகளாக அமைகிறது. அவருடைய கவிதை நூலான சிநேகத்தின் வாசனைவர உள்ளதற்கு நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். கவிஞர் சக்திசெல்வி மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் உள்ளவர். சர்வதேசிய சிறந்த பெண்ணிய கவிதைகள் சிலவற்றை மொழியாக்கமும் செய்திருக்கிறார்.

          என்னை மறுபடியும் இருவரும் அழைத்தார்கள். நான் அருகில் போகத்தயங்கினேன். தல்ஸ்த்தோய் சற்றுக் கோபத்துடன் அழைக்கவே நான் ஓடினேன். பேசிக்கொண்டே சாம்பலைத்தள்ளிவிட்டு கொஞ்சம் கரித்துண்டுகளை உள்ளே போட்டார். அவர்கள் சிறப்பாகவே பேசினார்கள். நீங்கள் என் தேவையில்லாம் இணைப்புரையில் உளறுகிறீர்கள். அதாவது மதம் இலக்கியப் படைப்புகளை எப்படி உள்வாஙகிக்கொள்கிறது. ஐரோப்பாவில் கம்யுனிஸ்ட் அறிக்கை வெளியானபோது புகழ்பெற்ற வாசகம் உண்டு இந்தஅறிக்கையால் பைபிளின் பக்கங்களை கரையாள்  அரிக்கத்துவங்கிவிட்டது என்று. இந்து மத இலக்கியங்கள் வேதங்கள் இதிகாசங்களை அசைத்துப் பார்ப்பது சாதாரண காரியமல்ல. ஆனால் ஐரோப்பாவில் நடந்த கதை என்ன தெரியுமா. ஒவ்வொரு தேவாலயமும் நவீன சிந்தனை உருவாக்கங்களுக்கு ஏற்பது போலவே மதகுருமார்களும் புதிய ஏற்பாடுகளை புதிய பைபிள்களை அதற்குப்பிறகு உருவாக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கொன்றும் ஒன்றும் தொடர்பில்லை. அவர் சொல்லிக் கொண்டிருக்க நான் அடுத்த அறிவிப்பிற்குப் போனேன்.

            ஊடகங்களில் ஏற்படுகிற அதிர்வலைகள் எனும் தலைப்பிலான புதியமாதவியின் கட்டுரைத் தொகுப்பு பற்றி பேசினார். சுப்ரபாரதிமணியன். இருட்டு விழுகிறது. மழைக்கு முந்தைய இருள் போல. அறைக்குத்தேவையான இதமான சூடு இருக்கிறது. நிலத்தின் ஈரத் தேடலுக்குப் பறக்கும் பூச்சி வகைகள் வயலின்கள் இசைக்கிறது. நிகழ்வரங்க வாயிலில் கூட்டமாக வந்திருக்கிறது. மெழுகுவர்த்திகள் போதவில்லை. பகலென்றாலும் வெளிச்சம் அவசியம். அருகில் ஏரிகளில் குதித்துக் குளிக்கிற சிறுவர் சிறுமிகளின் கூச்சல். மைதானங்களில் விளையாடுகிற கால்பந்தாட்டக்கார இளைஞர்களின் பெருங்கூச்சல்.

அவர்பேசியதிலிருந்து..

       சமீபத்தில் மும்பையில் கட்டப்படுகிற இருபத்தியேழு மாடி கட்டிடம் பற்றிய தகவல் வருகிறது. அதைக்கட்டுபவர் அம்பானி. அவர் மும்பையிலிருந்து ஒளிபரப்பாகிற ஊடகங்களில் தொண்ணூறு சதவிகித பங்குகளை வைத்தி ருக்கிறார். அவரை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது. ஸ்கூப் ரைட்டிங்க் என்பதை அவர்கள் தான் கொண்டு வருகிறார்கள். அதாவது அதிர்ச்சியுடன் செய்தி தலைப்புகளைப் போடுவது உதாரணத்திற்கு பிரபலமானவர்களுக்கு எய்ட்ஸ் என்பது. கிசுகிசு எழுதுவது போல எழுதி பரபரப்புட்டி செய்திப்பத்திரிக்கை களை விற்பது. இதற்குப் பெயர் ஸ்கூப் அடிப்பது என்பார்கள். இதுபோலத்தான் அவர் எழுதிய சமீபத்திய கட்டுரை. சச்சினுக்கு பாரதரத்னா அளித்தபோது இவர் எழுதிய கட்டுரை. சச்சின் என்று நாட்டுமக்களுக்காக ஆடினார் என்று கேட்டார். இலக்கிய வாதிகள் பத்திரிக்கைகள் ஆரம்பித்து நடத்தியபிறகுதான் இது போன்ற ஸ்கூப் எழுத்துகள் நின்றது. குறிப்பாக கேப்ரியேல் மார்க்வெஸ் முக்கியமான பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். அவர் தான் வாங்கிய நோபெல் பரிசுத்தொகையைவைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமால் வெகுநாட்கள் வெறுமனே இருந்தார். பிறகு தன் மனைவி இந்தப்பணத்தை வைத்துக் கொண்டு இருப்பதற்கு ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என்றார். பிறகு அவர் ஒரு பத்திரிக்கை தொடங்கி அதில் பத்திகள் எழுத ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் பத்திகள் செய்திகள் கட்டுரைகள எப்படி வரவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் கட்டுரைகளும் எழுத்தும் திகழந்தது. இப்பொழுது ஊடகங்களில் சிறப்பான கட்டுரைகளும் பத்திகளும் எழுத்தும் வருகிறது. நிறைய பத்திரிக்கையாளர்கள் நல்ல இலக்கியவாதிகள் ஆகியிருக்கிறார்கள். ஆனால் நல்ல இலக்கியவாதிகள் பத்திரிக்கைத்துறைக்குச் சென்று படைப்புகளில் காணாமல் போய்விட்டார்கள். உதாரணம் மாலன், கு.அழகிரிசாமி, போன்ற பலர் எழுத்தை விட்டுவிட்டார்கள் வண்ணநிலவன் உள்பட. புதியமாதவியின் எழுத்தை வாசிக்கிறபோது அவர்கள் சொன்னார்கள் தற்பொழுது பத்திரிக்கையொன்றில் பணியாற்றுவதாக. உண்மையில் ஆச்சர்யமாக உள்ளது. பத்திரிக்கை எழுத்திலும் இலக்கியப் படைப்புகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதுபோலவே ஒரு கட்டுரை மும்பையில் பிரபரலமான டப்பாவாலா எனும் சாப்பாட்டுக்  கூடைக்காரர்கள் மும்பையில் அதிகம். அவர்களின் வாழ்க்கை பற்றிய அழகான கட்டுரையொன்று எழுதியிருக்கிறார்கள். இனிமேலும்  அவருடைய படைப்பு முயற்சிகள் தொடரவேண்டும் இலக்கியப் படைப்புகளிலும் அவர் கவனம் செலுத்தவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

           அடுத்தாற்போல் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள் பேச வந்தார்கள். சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் எனும கட்டுரைத்தொகுப்பு பற்றிய தனது ஆழமான உரையை முன்வைத்தார். அவர் பேசும் போது தல்ஸ்தோயும் தாஸ்தாவெஸ்கியும் கைதட்டிப்பாராட்டினார்கள். தலித் எழுத்து பற்றிய கட்டுரைகள் சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார். பகத்சிங் பற்றிய எத்தனையோ கட்டுரைகள் வந்திருந்தாலும் இவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அதாவது பகத்சிங் தன் கடைசி ஆசையாக கேட்ட விசயங்களில் முக்கியமானது என்னவென்றால் அந்தச் சிறைவளாகத்தில் கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பெண்ணின் கையால் தான் உணவருந்தவேண்டும் என்பதுதான் அது. சிறைக்கூடங்களில் எல்லாம் மலம் அள்ளி அள்ளி தன் கைகள் தொற்று நோய் பீடித்துச் சாகக் கிடக்கிற அந்தப் பெண் கையால் தான் உணவருந்தவேண்டும் என்று பகத்சிங் கேட்டுக்கொண்டதாக ஒரு கட்டுரையில் முக்கியமானதைப் பதிவு செய்திருக்கிறார். விழி.பா.இதயவேந்தன் படைப்புகள் குறித்த கட்டுரை அது. தலித் எழுத்தை தலித்தான் எழுதவேண்டும் அவர்கள் எழுதினால் தான் சிறப்பாக எழுத முடியும். நாமெல்லாம் மலம் அள்ளினால் தான் அவர்களின் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மும்பையில் தமிழர்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர் லஷ்மிதான் சிறந்த எழுத்தாளர். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. புதிய மாதவி போன்றவர்கள் மும்பையில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் இதுபோன்ற இலக்கியச் சந்திப்புகளை நடத்திவருகிறார்கள். முக்கியமான படைப்பாளர்களை அழைத்து பல்வேறு கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். ஆதரவற்ற பெண்கள், அமைப்புசாரா பெண்கள் இலக்கிய ஆர்வமுள்ள எழுதுகிற பெண்கள் இப்படியாக பலரை இணைத்துக் கொண்டு இயங்கிவருகிறார். இதன் மூலம் இலக்கியங்களில் தமிழ்ப்படைப்புகளில் நடந்து வருகிற மாற்றங்களைத் தெரியப்படுத்துகிறார்கள்.

        ஒரு முறை எஸ்.ராமகிருஷணன் குறித்து அறிமுகம் செய்த போது ரஜினியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர் என்றுதான் சொன்னார்களே தவிர் அவர்படைப்புகளால் அறிந்து சொல்லவில்லை. தமிழகத்தில் நடைபெறுகிற இலக்கிய மாற்றங்கள் குறித்து எதையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. குறிப்பாக எதிர்வினையாற்றுதல் குறித்த பல்வேறுகட்டுரைகள் வருகிறது. சமீபத்தில் வெளிவந்த ஜெயமோகனின் வெள்ளையானை குறித்துப் பேசப்பட்டது. அவர் தர்மபுரி கலவரம் குறித்து தன்னுடைய பதிவுகளில இணையத்தில் ஒருவார்த்தை கூட எழுதவில்லை. நாவலில் தலித் மக்கள் பற்றிய தவறான சித்தரிப்புகள் ஏற்புடையதாக இல்லையென்று சொல்கிறார்கள். ஜெயமோகன் தன்னுடைய பதிவுகளில் நான் நாட்டில் நடைபெறும் சம்பவங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டேன். நான் நிச்சயம் எதிர்வினையாற்றுவேன். என்படைப்புகளில் சரியானநேரத்தில்  அந்த எதிர்ப்புகளைப் படைப்பின் வழியாகவே காட்டுவேன் என்றிருக்க்கிறார். அடுத்தாற்போல மும்பையில் நடைபெறுகிற விநாயகர் ஊர்வலம்,வழிபாடுகள் பற்றியெழுதுகிறார்.

             அங்கு இவர்களைப் போலவே செயல்படுகிற பிற பெண்ணிய எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் இருக்கிறது. அவர் பேசிமுடித்தபோது அரங்கம் ஒரு தீவிரமான பெண்ணியச்சிந்தனையின் வளர்மாற்றத்தின் காலப்பதிவுகளை அறிந்து கொள்ளமுடிந்தது. இன்று மேநாட்டுப்பெண்ணியச் சிந்தனைகளுக்கும் இந்திய வேத மரபின் பெண்ணியச் சிந்தனைகளுக்குமான இடைவெளியின் தொலைவை அறிய முடிந்தது.

மதிய மஞ்சள் மைதானத்தில் பரவியிருக்கிறது. மேற்கொண்டு ஆடமுடியாத விளையாட்டு வீரர்கள் வெயிலுக்கு அஞ்சித் திரும்புகிறார்கள். அதிசயமாக கால்பந்து ஆடிவிட்டுத்திரும்பிய இளைஞர்களை தல்ஸ்தோயும் தாஸ்தாவெஸ்கியும் கைகுலுக்கி விடைதருகிறார். நண்பர்களே நீஙகள் விரும்பினால் ஐரோப்பிய கால்பந்துப் போட்டியிலும் உலக கோப்பைப் போட்டிகளிலும் விளையாட ஏற்பாடு செய்கிறேன் என்கிறார். அவருடைய உருவத்தைப் பார்த்து அவர்கள் ஆச்சர்யம் கொள்கிறார்கள்.

          இளவேனில்  தந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்கிறேன். தண்ணீர் குடித்தேன். ஆலைச் சங்கு ஊதியது. காதுகளைப் பொத்திக் கொள்கிறேன். கவிஞர் பட்டணம் பழனிச்சாமியை ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் புதியமாதவி குறித்தபாடலை இந்த மூன்று மணிநேரத்தில் புனைந்திருக்கிறார்.அம்சத்வனி ராகம் அந்தப் பாடல். நீண்ட கட்டுக் கோப்புடன் அமைந்தபாடல் தழுதழுத்த குரலில் மிகச்சரியான தாளக்கட்டுக் கோப்புடன் பாடிய போது இருவரும் எழுந்தே நின்று கொண்டனர். தனது கோட்டிலிருந்து கைக்குட்டை எடுத்துக் கண்களைத்துடைத்துக் கொண்டனர்.

         புதியமாதவி ஏற்புரையாற்ற அழைத்தோம். தனது படைப்புகளுக்கு ஞானி அவர்களின் ஏற்பாட்டில் நடந்த திறனாய்வு கூட்டம் தனக்கு மிகுந்த மகிழச்சியளித்தது. இங்கு பேசியவர்கள் மிகச்சிறப்பாகவே பேசினார்கள்.நான் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கு இல்லை. இருந்தாலும் முதுகுகள் கதை உண்மையிலேயே நடந்த கதை. இரண்டு லட்சம் பெண்கள் வேலையிழந்தார்கள். பார்களில் நடனமாடுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டபோது அவர்கள் தாங்கள் மேற்கொண்டு செய்வதறியாமால் பதற்றமானார்கள். போராடினார்கள். பல தொண்டு நிறுவனங்களிடம் போராடி அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு இயக்கம் நடத்தினோம். பிறகு இங்கிருந்து மும்பை வந்து பேசும் போது வீராவேசமாகப் பேசிச் சென்றுவிடுகிறார்கள். அதனால் எந்தப்பயணும் இல்லை. இங்கு பேசிய கட்டுரை வாசித்தவர்கள் என் படைப்புகள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி.. பொன் இளவேனில், யாழி, சுப்ரபாரதிமணியன். எம்.ஏ.சுசீலா, மயுரா ரத்தினசாமி, சக்தி செல்வி உள்ளிட்ட நண்பர்கள் பேசியது எல்லாம ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. நான் பார்க்கிற பத்திரிக்கைத் துறை உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டிய நிலையிலிருக்கிறேன் பணிகளுக்கிடையில் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நாமும் சில பிரச்சனைகளைக் கண்டும் காணதது போலிருந்தால் யார் தான் எழுதுவது. நீங்கள் கேட்டுக் கொண்டபடி நாவல்கள் சிறுகதைகள் எழுத ஆசைதான். அதற்கான மனநிலையை ஒன்று போலவே வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்கான சாத்தியம் இல்லை. இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கு நன்றியைப் பதிவுசெய்தார். அவருக்கு முனைவர் எம்ஏ சுசீலா மரியாதை செய்து நினைவுப்பரிசு வழங்கினார்கள். இறுதியில் பேராசிரியர் கனல் மைந்தன்  வாழ்த்துரையும் நன்றியுரையும் வழங்கினார். புதியமாதவியின் முயற்சிகள் வெல்லட்டும். அதுபோலவே புரியாமல் எழுதுகிற பெண்ணியப் படைப்பாளர்கள் சமூகத்திற்கு ஏற்றவகையில் எழுதிடவேண்டும் என்றார். குறிப்பாக மாலதி மைத்ரியின் புரியாதை கவிதைகள் ஏன் இன்னும் தொடர்கிறது என்றார். அரங்கம் அதிர்வு கொண்டது. பிறகு அவர் சுதாரித்துக் கொண்டு நிறைவு செய்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி...நன்றி..

           நிகழ்வுகள் முடிந்த பிறகு அவர்கள் இருவரும் என்னைத்தனியே அழைத்துப் போய் டிராம் வண்டியின் பெட்டியிலிருந்து புத்தகங்கள் தருகிறார்கள். வெளிச்சம் வருகிறது. ஆகாயம் அங்கங்கு திட்டு திட்டாய் தெரிகிறது. அதுவரையிலும் டிராம் வண்டியில் ஏறிவிளையாடிக் கொண்டிருநத சிறுவர்சிறுமிகள் குதித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

           இளவேனில் ஏன் இப்ப தலைவலி சரியாயிருச்சா என்றார். ம் என்றேன். பிரிவுச் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பங்கேற்பாளர்கள் தங்கள் நண்பர்களுடன் இனி அடுத்தமாதம்தான் சந்திக்க முடியும் வேறெதாவது நிகழ்வுக்கு வருகிறீர்களா என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். நான் மதிய உணவுக்கான ஏற்பாட்டிற்கு வளாகத்தின் இடதுபக்கம் உருளிகளில் உணவு தயாராகிவிட்டதா எனக் கவனிக்க ஓடினேன். ஒன்றுமில்லை. வேப்பமரத்தின் குளுமையான நிழலில் ஈசல்கள் பறந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொள்கிறார்கள். வரும் ஞாயிறன்று நடைபெறும் ப.தியாகுவின் “எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லைகவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பு விடுக்கிறார். நான் சற்று முன் பார்த்துக் கொண்டிருநத தல்ஸ்தோயும் தாஸ்த்தா வெஸ்கியையும் காணாமல் தவித்தேன். மினிட் நோட்டுப்புத்தகத்தில் அவர்கள் முந்தைய எல்லாப்பதிவுகளுக்கு மான கையெழுத்திட்டதைத்தேடி அவை இல்லாத ஏமாற்றத்தைத் தாள முடியமால் தவித்தேன். யாழி ஏன் என்னாச்சு என்றார் இளவேனில் அந்தாளுக்கு என்னமோ ஆயிருச்சு சொல்ல மாட்டேங்குது என்றார். பேனர்கள், ஒலிபெருக்கி, நூல்கள், நாற்காலிகள் மேசைகள் சரியான இடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்திவிட்டோம். வண்டிகள் புறப்பட்டது.

   பகுதி-2      

          கவிஞர், சிறுகதையாளர், பத்திரிக்கையாளர் புதிய மாதவி வெள்ளி இரவு கோவை வந்து சேர்ந்தார். ஐயா ஞானி அளித்த யோசனைகளின் படி அவர்களுக்கான தங்கும் ஏற்பாடுகளுக்காகப் பேசிய போது அவர்கள் மறுத்தார்கள். உங்கள் அன்பிற்கு நன்றி.. நீங்கள் விழாவின் பணிகளை கவனியுங்கள் என்றார்கள். அவர்கள் கணவரும் உடன் வந்ததால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்குச் சிரமம் எதற்கு என்றார்கள்.  எங்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் பணியின் பொருட்டு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிவிடக்கூடாது என்று கேட்டோம். அவர்களுக்குக் காலையில் நிகழ்ச்சியிருப்பதை ஞாபகப்படுத்திவிட்டு இலக்கியச் சந்திப்பின் அலைபேசி, குறுஞ்செய்தி தகவல்கள் பங்கேற்பாளர்களுக்கு அளிக்கத் துவங்கினோம்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பேரவையின் 247 வது திங்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் நாங்களும் பங்கெடுத்தோம். கோவையின் இனியோரு மையப்பகுதியாக விளங்கும் ராமநாதபுரம் கணேசபுரம் நடராசா வாசக சாலையில் நடைபெறுகிறது. பழம்பெரும் இலக்கியப் பதிவுகள் கொண்ட இடம். பேரூர் ஆதீனம் போன்ற மகத்தான அறிஞர்கள், தமிழ்ப் பண்டிதர்கள் ஆசிபெற்ற இடம்.

நிகழ்வின் ஏற்பாட்டாளர் பெரும் புலவர் ஆதி அவர்களிடம்  நிகழ்ச்சி நேரம் பற்றிக் கேட்கத் தொடர்பு கொண்டபோது அவர் பத்தரை மணிக்கு வருவது போன்று நீங்கள் அவர்களை அழைத்து வந்தால் போதுமானது என்றார்கள். என நம்பிக்கையளித்தார். நான் ஏற்கெனவே அவர்களின் நிகழ்விற்குப் புறப்படுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிகழ்ச்சி அவர்களுடையது எந்தப்பணியானாலும் கேட்டுச் செய்து கொள்ளலாம் என்றபோது நாமே முதலில் புறப்பட்டுச் செல்வோம் என்றார். பொன் இளவேனில் ஒண்பது மணிக்குத் தயாராகி வந்தார்.

           நேற்றிரவு சரியான உரக்கம் இல்லை. நிகழ்வுக்கு முந்தின நாள் எப்பொழுதும் பதற்றம் இருக்கும். இரவெல்லாம் நடந்து சலித்தேன். ஒத்திகைகள் பற்றியும் பங்கேற்பாளர்கள் எத்தனைபேர் வருவார்கள் என்னவெல்லாம் நிலுவையி லிருக்கிறது என யோசிக்கிறேன்.

பனி ஊர் முழுக்க பஞ்சு கட்டியிருக்கிறது. குருவிகள், மைனாகள், காகங்கள் வெண் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறது. கால்களிலும் பஞ்சுப்பொதி. ஆகாயமே தெரியவில்லை. நடைபயிற்சிக்குச் செல்பவர்கள் முகம் மறைத்திருக்கிறார்கள். நான்கு மணிக்கே ஊரில் பல திக்குகளில் சீர்காழி கோவிந்தராஜனும் டிஎம்எஸ்சும் வீரமணியும் எல்ஆர் ஈஸ்வரி இடைவிடாமல் பாடிக்கொண்டி ருக்கிறார்கள். ஆதலால் நான்கு மணிக்குப் பறவைகள் விழித்துக் கொண்டு தங்கள் திக்கு பஞ்சாகியிருப்பதையும் தங்கள் இனத்தின் குரல்கள் தான் ஆரன்களில் பாடிக்கொண்டிருக்கிறது என்பதாக பெருமை பேசுகிறது தனது வேறொரு பறவையினங்களிடம்.

       மார்கழி காலைத் துளிர் இரவின் நிழலை தன் விழி ரப்பர் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிற சிறுமிகள் பாவாடைகள் சரசரக்க வீதி கூட்டிப் போகிறார்கள். தங்கள் தூக்கு வாளியில் தேங்காய்பழத்தட்டுகளில் நடுங்கிக் கொண்டிருக்கிற மல்லிகையை கனகாம்பரத்தை சம்பங்கியை துலுக்கு மல்லியை கூடை முழுக்க கொண்டு செல்கிறார்கள். எப்பொழுது கடவுளின் அனுக்கிரகம் முடிந்து சூடிக் கொள்ளப் போகிறோம் எனும் ஆர்வத்தில் என் வீட்டைக் கடக்கிறார்கள்.  தென்பழனித் தேவர் வீதியின் பஜனைக் கோயில் மார்கழி பஜனைக்குழுவினர் தேவாரமும் திருவாசகமும் ஆண்டாள் பாசுரங்களும் பாடிக் கொண்டும் குளிருக்குச் சோகம் கொண்ட மிருதங்கத்தின் ஒலியுடன் கடக்கிறார்கள்.

நேற்றிரவு முழுக்க புத்தாண்டு வாழ்த்துகளை நித்யமும் ஜீவனுமாயிருக்கிற சகோதர சகோதரிகள் தெரிவித்துப் போனார்கள். அல்லது வீதிகளின் சாலையோரங்களில் மலர்ந்திருக்கிற மலர் மொக்குகளுக்குச் சொல்லிவிட்டுப் போகிறார்கள். கிருத்துத்தாத்தாவின் புத்தாண்டு செய்திகள். பாண்ட் வாத்தியமும் டிரம்ப்பெட் ஜாஸ் என்பதாக அவர்கள் வாசித்த வாழ்த்துச் சொற்கள் எல்லாம்தான் இந்தச் செம்மண் நிலம். இந்தப் பொய்க் குளிருக்கு மலர்ந்த மலர்த்தோட்டங்களில் ஊம் என இறைஞ்சும் கொண்டை ஈக்களும் வண்டுகளும் கண்களில் தெறிக்கிறது

       அதிகாலை உறக்கம் வாய்ப்பில்லை. நெளிந்த புழுவின் உடலைத் தூக்கி சட்டைக் காலர் ஸ்டாண்டில் மாட்டிவிட்டு கதவு நீக்கியபோது அலைபேசியிலிருந்து இளவேனில் பேசினார். கையடக்க குரலில் நிகழ்வின் செய்திகளை வாசித்தார். அச்சத்திலிருந்து விடுவித்துக் கொள்கிற தினத்தின் நாளிகைக் கண்ணிகள் உடலில் கொப்பளிக்கிறது. கவலை தோய்ந்த நெருப்புக்குள் காய்கிற தேங்காய்சிரட்டை போல வீட்டின் நெருக்கடிகளுக்கான பொய்கள் தயாரிக்க வேண்டும். பொய்கள் தயாரிப்பது மிகவும் சிரமமான பணி. குழந்தைகளிடம் பொய் சொல்வதற்கு நமக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது. ஆனாலும் நம்மைப் போன்ற இலக்கிய சிகாமணிகள் சிலர் வாழும் போது நமக்கு நரகம் அளித்து உதவுகிறார்கள். பொய்கள் மிகச்சரியாகவே தயாரித்தேன். அது உள்ளங்கைகளை எல்லாவிடங்களிலும் குத்தியது கிழிக்கிறது. விதவிதமான பொய்களைச் செய்து பார்த்தேன். சகோதரனுக்குச் சில பொய்கள் செய்தேன். அவனுக்குச் செய்த பொய்யில் கொஞ்சம் தித்திப்பு கலந்தேன். அவன் நம்பிவிட்டான். பிறகு அவனால் நான் கண்ணீராகப் பொழிய ஆரம்பித்திருக்கிறேன். அவன் எனக்கு போய் வா உடன் இந்தா பணிக்கு என் உடலும் எடுத்துப் போ என்றான். ஆமாம் பொய் சொன்ன வாய்க்கு  உடல். பேசாமல் உண்மையைச் சொல்லியிருக்கலாம். பிறகும் எப்பொழுது வருவாய் என்றான். நானும் எங்கே நான் போனேன் உன்னிடம் தான் இருக்கிறேன் என்றேன் சமயோசிதமாக அவனோ அதைச் சொல்லவில்லை. தொலைவு அதிகமாகிறது. இடைவெளியை நிரப்பு என்றான். இடைவெளி தொலைவு என்பதெல்லாம் சொற்கள். சொற்களைக் கண்டு பயம் கொள்ளாதே. எனப் பொய்கள் சொல்கிறேன்.

மதிய உணவிற்கு  வந்து விடுகிறேன். மார்கழி என்பதால் கவுச்சி இல்லை. உடனடியாக ஒரு அசைவ மார்கழியை உருவாக்க வேண்டும். பொங்கல் கொஞ்சம் வறுத்த முந்திரி, காய்ந்த ஏலக்காய். கெட்டித்த பாலாடை. காய்ந்த திராட்சை, ஊறும் பலா என்பதாக நமது எங்கள் ஊர்க் கோவில்களில் கிடைக்கும் வாங்கி வை என்றேன். சரி வாங்கி வைக்கிறேன். என்றான். பொய் சொல்கிற வாய்க்குப் பொங்கல்..

         சகோதரிகளை சுலபமாகப் பொய் சொல்லி ஏமாற்றிவிடலாம். சகோதரிகள் ஏமாறுவது யுகம் யுகமாக நடப்பதுதானே. நமக்கு நாள் யுகம்.நாளும் யுகம். விடுமுறை வீட்டில் இருப்பான் என்று கொஞ்சம் அசந்து உறங்குகிறார்கள். நாளும் கிழமையும் நலிந்தோருக்கும் நூலாய்பவனுக்கும் ஏது. எந்த வாசலிலும்  நாய்கள் இல்லை. குரைப்பு இல்லை. வெளிச்சம் இல்லை. தீய்ந்த சருகுகள் இல்லை. தாழ்வாரத்தில் ஓடிக் கொண்டிருந்த வெட்டுக்கிளிகள் நீக்கிய கதவின் வழியாக உள்ளே துள்ளியது. அலைபேசியின் சங்கீதமும் வண்டின் ரீங்காரம். இளவேனில் நான் வருவதற்கு முன்பாக புதிய மாதவி அவர்களின் நூலின் கட்டுரையைப் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்..தயாராக இருக்கவும் என்றார்.

          அடுப்பும் வயிறும் எரிகிறது. பால்காரரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கிறேன். போன பொங்கலுக்குப் பார்த்த ஞாபகம். ஆறுபடை முருக பக்தர்கள் சிலர் நண்கொடை கேட்டு வந்தார்கள். அவர்களில் சிலர் நல்ல வசதியானவர்கள். நீங்கள் ஏன் வசூல் செய்துதான் கோவிலுக்குப் போகவேண்டுமா நண்பா என்றேன். அவர்களோ எங்கள் யாத்திரையில் உங்களையும் இணைத்துக்கொள்ளவே உங்கள் பரிகாரங்களை பாவ புண்ணியங்களையும் நாணயங்களாக்கித்தாருங்கள் நாங்கள் இவையெல்லாவற்றையும் டெபாசிட் செய்துவிட்டு உங்களுக்கு சாம்பல் நன்மைகள் கொண்டு தருகிறோம் என்றார்கள். விலை மலிவான நாணயங்களை அளித்தேன். அவர்கள் என்னிடம் வருகிறேன் சாமி என்றர்கள்.

          முகச்சவரம் செய்து கொள்கிறேன். இதெல்லாம் இலக்கியப் பதிவா என்ன. பெண்கள் போலவே நாமும் சிறுவர்களாக இருந்தபோதே மஞ்சள் தீட்டிப்பழக்கம் கொண்டிருக்கலாம். அதுதான் மன்னர் மான்யம் ஒழித்து விட்டோமே பிறகெதற்கு முகத்தில் கேசம். விதவிதமான மீசைகளும் வைத்துக் கொள்வதில்லை தோள்களில் புரளும் கேசமும் வைத்துக் கொள்வதில்லை. அலங்காரத்தின் அகம்பாவத்தின் வெளிப்பாடாக ஒழுங்கு படுத்தாத கேசம் இருக்கிறது. சொற்களை ஒழுங்கு செய்வது போல கேசம் ஒழுங்கு படுத்துவதில் ஆர்வம் கொள்வதில்லை. நானும் சிலரைக் கவனித்து இருக்கிறேன். வெளியில் சில ஒப்பனைகளை அல்லது அவர்களின் பிரத்யேக ஒப்பனைகளுடன் வருகிறார்கள். தனது ஆளுமைகளுக்கான பிரத்யேக ஒப்பனைகள் சலிப்பு கொள்ளாமல் செய்கிறார்கள். புத்தம் புதிய கருத்து சிந்தனை ஒப்பனைகள் இல்லாமல் நமது சமூகம் புறத்தைத் தீண்டுவதில்லை. அப்படித்தான் நீங்கள் சமூகத்தை எதிர்கொள்ள முடியும். புதியன வேண்டும். புதியன செயல், புதிய என்னும் சொற்கள் தருகிற விடுவிடுவிப்பு அது.

அகத்திலிருந்து நாம் புதியதான தயாரிப்புகளின்றி நம்மால் புறத்திற்கு வெளியே வருவதேயில்லை. புதிய முகத்திற்கான சொல், புதிய அலங்காரத்திற்கான சொல், பசியில்லாத உடலுக்கான சொல், பசியாறியபின் பேசிடும் சொல், வெளிறிய அறுவருப்பின் சொல் என்பதாக எத்தனை சொற்களை எடுத்துக் கொள்ளவேண்டுமோ எல்லாவற்றையும் எடுத்துச் செல்லுங்கள் என்றாள் விஜி. அவளின் சாபம்தான் எனக்கு சொல். அவளுக்கு மட்டும் பொய்கள் கொடுப்பதில்லை. பொய்கள் சொல்லும் போது அவை கர்ணனுக்கு விட்ட அம்புகள் மலர்மாலையாக மாறுவது போலவே பொய்கள் உண்மை யாகிவிடும்.

நேற்றிரவு கர்ணனின் கடைசிக்கால உடல் பற்றி இளவேனிலிடம் பேசிக் கொண்டிருந்த போது போர்க்களத்தில் அர்ச்சுனனில் அம்பால் கர்ணனின் உயிர்போகாமல் துடிக்கிறது. தேரோட்டி கண்ணனின் திட்டம் பாதிதான் பலித்திருக்கிறது. அவன் செய்த புண்ணியம் அந்த உயிரைக் காத்துக் கொண்டிருக்கிறது. உயிர் வாதையுடன் ஒரு உயிர் வாடுவது கண்டு தேவர்கள் வருந்துகிறார்கள். இது பாவமல்லவா. உயிர் தர்மத்தின்படி முறையற்ற செயல் அல்லவா அந்த உயிரை சீக்கிரம் விடுவித்து விடவேண்டும். உயிர் வாதையிலிலுந்து கர்ணனை விடுவிடுத்து அவனை சொர்க்கம் அனுப்பவேண்டும் என்பதற்காக திருமால் அந்தணர் உருவில் வருகிறார். வந்திருப்பது பகவான் என்பது தெரியும். கர்ணனுக்கு..

இந்த நேரத்தில் வந்து யாசிக்கிறான் கடவுள்.“நீ எப்படியும் மரணத்தைத் தழுவப் போகிறாய். ஆனாலும் உன்னோடு நீ செய்த புண்ணியங்களும் அழிந்துவிடவேண்டுமா அதனால் அந்தப்புண்ணியங்களை எனக்குத் தாரை வார்த்துக் கொடு என்கிறார்..என்கிறார். கர்ணனுக்குத் தெரிகிறது. அவரின் வானளாவிய உருவம். தகதகத்துப் பொலியும் வான் முட்டி நிற்கிற கடவுள். அவனும் அவன் காலத்தில் நவீன இலக்கியவாதிகளுடன் பழகியவனாயிற்றே. கர்ணன் தன் புண்ணியங்களைத் தாரைவார்த்துத் தருகிறான். ஆச்சர்யம் என்ன..வாதை தொடர்கிறது.

பிறகும் தனது உயிர் போகாமல் சுயநினைவு இருப்பதறிந்து திடுக்கிடுகிறான். ஆமாம் இப்பொழுது அளித்த புண்ணியத்தின் மூலம் மேலும் புண்ணியம் சேர்ந்திருக்கிறது. அப்படியானால் தான் அளிக்கிற ஒவ்வொரு புண்ணியத்திற்கும் புண்ணியம சேர்ந்து கொண்டேயிருக்கும். இந்தக் காட்சியின்  மூலம் மகாபாரதம் வழியாக வியாசர் கடவுளையும் கையேந்த வைத்தவன் கர்ணன் என்கிற மகத்தான புனைவை உருவாக்குகிறார். அல்லது தர்மகீர்த்தி எங்கிருப்பினும் கடவுள் தானே வருவார் என்பது மட்டுமில்லாமல் கௌரவம் பார்க்காமல் தன்னிடம் வந்து யாசகம் சேர்த்த கடவுளை தர்மத்தால் நோக்குகிறான். துடித்துக் கொண்டிருக்கிற உயிரின் வாதையுடன் பேசுகிறான். நானும் நீயும் ஒன்றுதான். ஆனால் உன் தர்மங்களுக்கு என்னைப் பலியாக்கினாய். கொடுக்கும் இன்பத்தைத் தவிர எனக்கொன்றும் நீ தரவில்லை. மேலும் கர்ணன் பேசுகிறான். அந்தணரே நான் இதுவரை பெற்ற புண்ணியங்களையெல்லாம் அளித்தமையால் மேலும் புண்ணியம் சேர்ந்து விட்டது. ஆதலால் இதுமேற்கொண்டு வருகிற எல்லாப்புண்ணியங்களையும் உனக்கு அளிக்கிறேன். என்று கடவுள் எதிர்பார்க்காத புண்ணியத்தையும் அளிக்க அவன் உயிர் பிரிந்து சொர்க்கலோகம் போகிறது.

செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சகன் ஆனாயடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்பது காதில் விழுகிறது. எங்கள் ஊரின் மிகப்பிரபலமான பாடல் நம் சமூகத்தில் புண்ணியம் விளைகிற இடங்களுக்குக் கடவுள் அழைக்காமலே வந்துவிடுவார்கள் என்பது பாரதம் சொல்கிற கதை. இது எங்களுக்கும் பொருந்தும். அரவிந்த கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும்

ஆகவே ஆளும் அரசுகள் எல்லாம் அந்தணர் வடிவங்கள்தான். நம் சமூகத்தில் கர்ண பரம்பரைக்கதைகளுக்குப் பஞ்சமில்லை. அந்தக் கர்ணனுக்குப் பிறகு கர்ணன் தோன்றவுமில்லை. சத்ரியன் சூத்திரன் வைசியன் பிராமணன் சொற்களுக்குள் வைத்திருக்கும் பதினான்கு நூற்றாண்டு சதகத்தின் வலிமையை பாரதமும் பாவிகளுக்குமாகப் புண்ணியமாக மாறிக் கொண்டிருக்கிறது.

            மதிய உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு உங்கள் வேலைகளுக்குப் போங்கள் உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும் என்றாள் விஜி.

           

பகுதி -3

      வண்டிகள் தங்கள் திசைகளைப் பற்றியது. வெயில் நன்றாக கழுத்துப்பட்டையில் முதுகின் வரியில் கால் மடிப்புகளில் கவ்வியிருக்கிறது. நீர்மம் உப்பாகி நாக்கு வரண்டு பசியானது.  நான் ஞாயிற்றுக்கிழமையின் வெறிச்சோடிய சாலையைப் பார்க்கிறேன். இரும்புக்கடைகள்,வங்கிகள், வலைகள்,கட்டிடங்கள். தொலைவில் மலைகள் தெரியவில்லை காவலர்களின் இருப்பும் அவர்களின் நிழற்குடையும் மட்டுமே தெரிகிறது. சாலையில் வாகனங்கள் வீறிட்டுப் போகிறது பறக்கிறது. சிறுமிகளைப் பெண்களைக் காணவில்லை. மரங்கள் இல்லை. பறவைகள் இல்லை. சாலைகள் கெட்டித்துச் சவனாக இருக்கிறது. அங்குமிங்கும் ஒடிச்சென்று பார்க்கிறேன். மில் கேட் சிதைந்திருக்கிறது. அதன் உயர்ந்த கட்டிடங்கள் உள்ளிருந்து டிராம் சத்தம் போல் பஞ்சுப் பொதியின் வாசம் நான் என் சட்டையை முகர்ந்து பார்த்தேன். மில் சங்கின் ஒலி. நெஞ்சுக்குள் தடதடக்கிறது. கொடிக்கம்பங்கள், அறிவிப்புப் பலகைகள் இல்லை. ஒரு சுழியம் போல ஒரு பாலமும் அதனடியில் சில ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலத்தினடியில் சிறு சிறு வழிகளிலிருந்து எறும்புகள் போல இரு நான்கு சக்கரவாகனங்கள் வெளியே வருகிறது. மேம்பாலத்தின் முனையில் மேல் காவலர்கள் நின்று கொண்டு ஒரு சரக்கு வாகன ஒட்டியை மிரட்டிக்கொண்டிருக்கிறார். அவரும் அறுபடை முருகனுக்கு மாலை போட்டிருக்கிறார். காவலரும் மாலைபோட்டிருக்கிறார்.

இளவேனில் இப்ப உடம்புக்கு எப்படியிருக்கு..என்றார். நான் பரவாயில்லை என்றேன். உன்னால முடியலைன்னு சொல்லியிருந்தா வீட்ல ரெஸ்ட் எடுத்திருக்கலாம்ல..என்றார் வண்டி மேம்பாலத்தின் அடியில் இறங்கியது. பாலத்தின் சுற்றுப்புற ஓவியங்கள் சிதிலமடைந்துள்ளது. உலகத்தமிழ் மாநாட்டின் போது எழுதிய ஓவியங்கள். நான் சுற்றிலும் தேடியதை நிறுத்திய பாடில்லை. என்னுடன் ஆழமாகப் படிந்து போயிருந்த கருப்பு வெள்ளைக் காட்சிகளைத் தேடுகிறேன். ஒரு விரிப்பின் தூசியில் நூறு இருநூறாண்டுகள் காணாமல் போயிருக்கிறது. இளவேனில் மிகப் பெரிய மகிழ்ச்சிக் கடலுடன் நடந்த நிகழ்வின் முத்தாய்ப்புகளை சொல்லியபடியே வருகிறார்.

          நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ம.நடராசன், ஓசை.காளிதாசன்,கவிஞர் அவைநாயகன். ஆட்டனத்தி, கோ. ஆறுமுகம், அறிவன், தென்பாண்டியன்.பா.மீனாட்சி சுந்தரம், க.வை பழனிச்சாமி, யோகா செந்தில்குமார்,நாசிர் அலி, அழகுதாசன், எம்.செல்வராசு, இரா.அரங்கசாமி, சுப்பு ரத்தினம் சூ.மி காளிமுத்து. அன்புசிவா.பா.சங்கர நாயனார், க.தியாகராசன் சோழநிலா உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள் பார்த்தாயா என்றார். இன்று எத்தனை விழாக்கள் இருந்தும் பங்கெடுத்தவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்ட எனச் சொல்லிக் கொண்டே வண்டியை நகர்த்துகிறார்.

என் காதுகள் கேட்வில்லை. தலைக்கும் மேல் ரயில்பாதையின் இரும்புப் பாலம். மக்கள் ரயில்கள் போவதற்கு வழிவிடுவது போன்று நிற்கிறார்கள். காரணம் ரயில்களிலிருந்து வடியும் கழிவு நீர் தங்கள் உடல் மீது விழும் என்பதால். இளவேனிலையும் நிறுத்தச் சொன்னேன். பெட்ரோல் டீசல் புகை படிகிறது. காற்றில் குளிர்ப் பதத்தில் மூச்சிறைக்கிறது. மெல்லமாக பிளாட்பாரங்களுக்காக ஊர்ந்து போகிற ரயில்களை எரிச்சலுடன் நோக்குகிறார்கள். சிலர் அதற்குக் காத்திருக்காமல் விருட்டென வண்டியை நகர்த்துகிறார்கள்.

இடமிருந்து வலம் போகும் ரயிலின் கடைசிபெட்டியான கார்டு பெட்டியில் தல்ஸ்த்தோய் கையில் பச்சை சிவப்பு விளக்கு லாந்தர் காட்டிப் போகிறார். நான் முகம் மலர்ந்தேன். மகிழச்சியால் துள்ளினேன். அவர் தன் வலதுகையால் வி. என்பதாக விக்டரி அல்லது வெற்றி எனும் சைகைகாட்டிப் புன்னகைத்தார். அப்படியாகவே வலமிருந்து இடம் போன ரயிலில் கடைசிப் பெட்டி கார்டாக தாஸ்தாவெஸ்கியும் வி என்று வெற்றிச்சின்னத்தைக்காட்டிப் போகிறார். வண்டி விருட்டென்று மேடேறி சாலையின் மையத்தில் பறக்கத்துவங்கியது.

           

 

 

 

 

    

 

 

    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக