அகத்திணை அமைதி
கவிஞர் சக்தி செல்வியின் கவிதை நூல்
“சிநேகத்தின் வாசனை“- அறிமுகம்..
இளஞ்சேரல்
அரவம் தீர்ந்த பின்னரவில்
அழிக்க நீளும் கரங்களுடன்
எனக்குள் எழும் இம்மிருகம்- பக்-3
முன்னுரையில் நேசமித்ரன் குறிப்பிட்டுள்ளது போலவே பெரும்பாலான கவிதைகள் சங்க
சாயலுள்ளவை. நவீன கவிதைகள் தற்காலத்தின் நிலவியல் மாறுபாடுகளை, சமூக உறவு
மாறுபாடுகளை மொழியின் மாறுபாட்டுச் சிந்தனைகளை எழுதிச் செல்பவை. கருத்தாக்கத்தை
மீறிய அழகியல் உருவாக்கமும் செழிப்பும் பெண் எழுதும் கவிதைகளில் இயல்பிலேயே
தோன்றுகிறவை. சங்கம் இதையே பேசுகிறது. தொகுக்கப்பட்ட சங்கப் பெண்கவிஞர்களான
முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் எழுதிப்பார்த்தவை யெல்லாலம் உடலும் உள்ளமுமாக நிலமும் கூட்டு வாழ்வியலையும் எழுதிச்
சென்றார்கள். நவீன காலத்தின் வாழ்வு இயந்திரங்களால் உருவாக்கப்பட்டதை
எழுதுகிறார்கள். இயந்திரங்கள் நம்மைச் சுற்றுகிறது. இயந்திரங்களுடனான உறவு
நமக்குப் பிடித்தமாகவே இருக்கிறது. நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு ஈடு
தரும் விதமாகவே நமது உடலும் பழகியிருக்கிறது.
சக்தி செல்வியின் கவிதைகளை
முகநூலில் வாசித்திருக்கிறேன். பிற்பாடு சிறுபத்திரிக்கைகளில் வெளியான கவிதைகள்.
புதினங்களின் மீது கட்டுரைகளும் சிறப்பாக எழுதுகிறார். இலக்கியப் பிரதிகள் மீது
அவருடைய உரைகளும் கேட்கப்படுவதாகவே அமைகிறது. சமகாலத்தில் வெளியாகிற முக்கியமான
புதினங்களின் வாசிப்பாளராக இருக்கிறார். ஒரு கவிஞர் இப்படியாக தன்னை உருவகத்தைக்
கொண்டிருப்பது மிகப்பெரும் பேறு.. அவருடைய கணவரும் குழந்தைகளும் இலக்கியப்
பயண்பாட்டிற்கு அவருடைய உழைப்பை அனுமதிக்கிறார்கள் என்பதும் கொண்டாடப்பட வேண்டிய
ஒன்று. யாருக்கும் வாய்க்கும். தமிழுக்கு வாய்த்திருக்கிறது. பெண் கல்வியை அரசுகள்
ஊக்குவிக்கிறது. பெண்ணுக்கான சொத்துரிமைகள், உள்ளாட்சி அதிகாரங்கள், சமூகத்தில்
பாதி மக்கள் தொகையில் இருப்பவர்களின் எழுத்தும் படைப்பியக்கமும் எந்தளவு வரவேற்கப்
படுகிறது என்பதும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
நவீன தமிழிலக்கியம்
பரந்து பட்ட கல்வியின் சாதனையாக பெண்கள் சிறப்பாக பயில்கிறார்கள். உலகளாவிய
நிறுவனங்களை வழி நடத்துகிறார்கள். ஆட்சிப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
அலைக்கழிக்கப்படும் புதுமை வாதம் பழமை வாத்த்திற்க் கெதிராக எழுதுகிறார்கள். கருத்துகளைப்
பதிவிடுகிறார்கள். பெண் கல்வி வளர்முக நாடுகளில் வேலைவாய்ப்பிற்காக
கற்றுக்கொண்டாலும் சமூக விழுமியங்களுக்காகவும் தங்கள் கருத்துகளைப் பதிவிடுகிறார்கள்.
தகவல் தொழில் நுட்ப வசதியும் முகநூல், வலைத்தளங்கள், வலைப்பூ-சாதனங்களில்
எழுதுகிறார்கள். பெண்களுக்குத் தெரிபவை எம்ப்ராய்டரி, கோலம், சமையல் குறிப்புகள்,
டெய்லரிங், போன்றவைதான் வாய்த்தவை என்பதை மாற்றி வைத்திருக்கிறது இணையம்.
இலக்கியம், புதினம், பதிப்பு,
படைப்பியக்கத்திலும் பங்கேற்பு வரவேற்கத் தக்க வகையில் அமைந்து வருகிறது.
சமீபத்தில் வெளியாகியிருக்கிற பெண் படைப்பாளர்களின் தொகுப்புகள் அதிகரித்திருப்
பதே அதன் சான்றாகும். பொதுச் சமூகத்தின் குழாயடி விமர்சனங்களை இந்தப் பேரியக்கம்
தகர்த்திருக்கிறது. புது எழுத்து மனோன்மணி இந்த ஆண்டும் சிறந்த படைப்புகளை
வெளியிட்டு பங்காற்றியிருக்கிறார்.
சக்தி செல்வி கவிதைகளில் குடும்ப
அமைப்புகளால் பாதிக்கப் படுகிற பெண் அக மனம் குறித்த கவிதைகள் அதிகமாகவே பதிவாகி யிருக்கிறது. தற்காலத்தின் குடும்ப அமைப்புகளில் பொறுப்புணர்ச்சி போதனைகளுக்கு
ஆளாகிறவர்களாக இன்றைய பெண் சமூகம் இல்லை. கல்வியும் வேலைவாய்ப்பும் ஆண்பெண்
உறவுகளுக்குள் மிக எளிதில் ஏற்படுகிற விரிசல்கள் குறித்தும் பேசுகிறது. புறத்தின்
தனக்கு நேர்ந்த அருகாமையில் வசிக்கிற பெண்களின் அகமனதின் குரலாகவும் பேசுகிறார்.
தன் அனுபவம் அவர்களுடைய அனுபவத்துடன் ஒத்துப் போவதை ஆச்சர்யப்படுகிறார்.
கவிஞரின் உள்ளுணர்விற்குள் வரும் புகார்கள் அதிகமானது. தனது சொந்த வாழ்வில் அவருக்கான
அகச் சிக்கல்கள் இல்லை. தன் சக மனுஷிகளின் உணர்வுகளுக்கு வடிவம் தந்திருக்கிறார். பொதுவாக மிருகம் எனும் படிமமும் குறியீட்டு வழக்கும் தன்னையும் குறித்ததே.
பொது வழக்கில் மிருகவதை எனும் ஆபாசமான சொல் ஒன்று உண்டு. மிருகங்கள் அரிதாகி
கானகம் தனிமையாகி விட்ட பிறகுதான் நமக்கு மிருகங்களின் அருமை தெரிகிறது. கவிஞர்
தன்னுணர் வின் வழியாக மிருகமாகவே உணர்வு கொண்டு விடுவது சரிதான்.
மஞ்சள் சரட்டின் சுகந்தத்துடனும்
நெற்றி வகிட்டில் நிறைந்த குங்குமத்துடனும்
அவன் மார்பில் சாய்ந்திருக்கும் வேளையில்
என் சுவாசத்தில் சங்கமிக்கும்
அவனுக்கேயுரிய பிரத்யேக வாசனை-----பக்-9
நவீன கவிதையின் காலத்தில் கணவன் மனைவி உறவு பற்றி எழுதப்பட்டிருக்கிறது. பல
கவிதைகளில் அடுக்குச் சம்பவங்கள் இயல்பாக பதிவாகியிருக்கிறது. அணிகலன்கள் மூலமாக
உறவுகள் மேம்படுத்தப் படுவது சங்க காலத்தின் சாட்சி. இனக்குழுக்களின்
அடையாளமாகவும் போற்றப்படுகிறது. உயிரினப் பரிணாம வளர்ச்சியின் தோற்றத்தின் காரணமாக
மக்கள் பெருகினார்கள், இனக்குழுக்களின் உணவு தேடல்கள் துவங்கியது. காடுகள் மலைகள்
குன்றுகள் ஏரிகள் வறண்ட ஏரிகள் போகுமிடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக
அலைந்தார்கள். இருப்பிடங்களுக்கான போராட்டங்கள் தொடர்ந்த காலம். இனக்குழுக்களின்
வேறுபாடுகளை அறிந்து கொள்ள தங்கள் அணிகலன்களை அணியத்துவங்கியதின் இருப்புதான்
பலவண்ணங்களில் நாம் தீற்றுகள் தீட்டுவதும் அணிகலன்கள் அணிந்து கொள்வதும்.
சக்திசெல்வியின் கவிதைகளில் ஆங்காங்கு இனக்குழுச் சடங்குகளை நினைவு கூர்கிறார்.
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிக; எனச்
சொல்லின் எவனோ தோழி ! வென்வேல்
மையற விளங்கிய கழல்அடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே---
ஐங்குறு நூறு-390
திருமணமாகித்தமது ஊருக்குச் செல்கின்ற காதலரைக்
கண்டவர் இவ்வாண்மகன் கால்களில் கழல்கள் உள்ளன. இப்பெண்களில் கால்களில் சிலம்புகள்
உள்ளன இவர் யாரோ? அளிக்கத்தக்கவர்கள் என்பதால் திருமணம் செய்து கொண்டதற்கடையாளமாக
ஆண்மகன் கால்களில் கழல்களும் பெண்மகள் சிலம்புகளும் அணிந்து சொள்ளல் சடங்குகளில்
ஒன்றாக இனக்குழு மக்கள் தங்கள் அடையாளங்களை நிறுவத் துவங்கினார்கள்.
இனக்குழுக்கள் தங்கள் உறவுப் பெருக்கம் தங்களின் விவசாய நிலங்களை விருத்தி
செய்தலுக்காகத் தங்கள் உறவு பந்தங்களை சங்க காலத்தில் தொடங்கத் துவங்கினார்கள்.
அந்த ஆதி பந்தமாக இன்றும் துவங்குவதும் நீடித்திருக்கிற வழக்கமான திருமண உறவுகள்
வாழ்வின் மிக ஆதாரமாக விளங்குவதை நாம் அறியமுடிகிறது.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவ நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வோடு திரு என
முறை உறக் கிளந்த ஒப்பினது வகையே-
மெய்ப்-27
எனத் தொல்காப்பியம்
பேசுகிறது. திருமணம் செய்து கொள்ளும் ஆண் மகனுக்கும் பெண் மகளுக்குமான
பொருத்தங்களை வடித்து வைத்திருக்கிறார். இனக்குழுக்களின் சடங்குகள்,
பழக்கவழக்கங்கள், போர்த்தொழில்,வேட்டையாடுதல், ஆநிரைகள் பாதுகாப்பு,விவசாயம், நில
பாதுகாப்பு, அரண்,மருத்துவம் உள்ளிட்ட சாங்கியப்பணிகளின் பாதுகாப்பு கருதி
இனக்குழுத்தலைவர்கள் ஆண்பெண் உறவுகளுக்கான வழிவகைகளை ஏற்படுத்துகிறார்கள். மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்படுத்தி வைத்த பந்தமாக உள்ளது. பிறப்பு-ஒழுக்கம்- ஆளும்
தன்மை-வயது- வடிவம்- காமக்காதல்-நிறைவு-அருள்-அறிவு-திரு-என்பதுதான் பத்துப்
பொருத்தம் என்பது. பிற்பாடு வந்த தலைமுறையினர் தங்கள் இனக்குழுக்களின் நில மீட்பு
ஆசைக்குத் தகுந்த வாறு மாற்றியெழுதி வைத்தார்கள். தொல்காப்பியம் கூறுகிற பத்துப்
பொருத்தம் என்பதுதான் சரியானது. ஆயினும் இந்தப் பொருத்தங்களில் பலது ஒத்துப் போகிறது
என்பது ஆச்சர்யமாகவே உள்ளது. மேலும் திருமணச் சடங்கின் முதல் சீர் என்பதே வாழுகிற
வாழ்க்கை செழிப்பதினாலேதான் உள்ளது. என்கிறார்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே-
என்கிறார்.
கம்பன் காலத்திலும் இந்த திருமணச்
சடங்குகள் குறித்தும் வாழ்வு குறித்தும் பேசாமலா இருப்பார்
நேர்இறை முன்கைப் பற்றிச்
சூர் அறமகளிரோடு உற்றசூளே..,
“இம்மை மாறி மறுமை எய்தினும்
நீயா கியர் எங்கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே..
என்பதாம் அந்தப் பாடல்..கம்பர் இராமபிரான் சொல்லியதாக நாகப் பிராட்டியின்
வாய் மொழியாகச் சொல்கிறார். நாம் இனக்குழுவின் அடையாளங்களை நிராகரிப்பதும் பகடி
செய்வதும் கீழ்மையாக கருதுவதும் முறையாகாது. அடிமைப்படுத்தப் பட்ட முறைகள் என
சடங்குகளையும் வாழ்வு முறைகளையும் ஒதுக்குவது அடையாள மரபுகளைத் தகர்க்க முனைவதாகவே
இருக்கிறது. இந்தச் சமூகம் முன்னேறும் வரையிலும் தாக்குதல்கள் தொடரும் வரையிலும்
அடையாளச்சிக்கல்கள் இருக்கவே செய்யும். அடையாளங்களை முற்றாக அழித்துக் கொள்ள எந்த
இனக்குழுவின் சடங்குகளும் சம்பிராதாயங்கள் இடம்கொடுக்காது. ஆரியமு றைகள் அழிந்து
வருவதற்குக் காரணம் இனக்குழுவின் அடையாளங்கள் வளர்முகத்தில் இருப்பதுதான். அவை
மென்மேலும் கொண்டாடப்படு வதாகவே இருக்கும்.
வந்து எனக்கரம்பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இருமாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்தவார்த்தை செவியுறச் சாற்றுவாய்- என்பதாக கம்பன்
தமிழர் திருமண மந்திரப்பொருளை உறுதி செய்கிறார்.
சக்திசெல்வியின் ஒரு கவிதை பக்-36 காதலெனும்
போழ்தினிலே..தலைப்பு
ஒளிக் கற்றையைக்
கையில் அள்ள
விரும்பும் சிறு
மழலையாய்..
முகமலர்கையில்
இதழினிடை தோன்றிய
குறுநகைக்கு அர்த்தம்
கேட்போர்க்கு
எப்படிச் சொல்வேன்
உயிர்கள் தழைக்க
உதவும் உன்னதமான
காதலைப்பற்றி
உணரவொண்ணாததாகவும்
எவர்க்கும் உணர்த்த
வொண்ணாததாகவும்
இந்தக் கவிதையில் வரும் உயிர்கள் தழைக்க
உதவும் உன்னதமான காதலைப்பற்றி- சொற்கள் கூறும் உறவு குறித்து கம்பன் பாடியது
நினைவு கூறத்தக்கதாகும். கோவலனும் கண்ணகியும் இல்லறம் நடத்தும் பொழுது பேசினவற்றை
மனையறம்படுத்தக் காதையில் காண்போம். கோவலனும் கண்ணகியும் மேன்மாடத்து நிலா முற்றத்தில்
மணிக்கால் அமளிமிசை வீற்றிருக்கின்றனர் சுற்றிலும் உள்ள மலர்களின் மணத்துடன்
தென்றல் உலாவுகின்றது அப்பொழுது கோவலன் கண்ணகியின் உடலழகை பாடுகிறார். இராமன்
அனுமானைத் தனியே அழைத்துச் சீதையின் ஒவ் வோர் உறுப்பையும் பாராட்டி, நாடவிட்டப்
படலத்தில் கம்பர் கூறியதைப் போலப் புகழ்கின்றான்.
மாசறு பொன்னே!
வலம்புரி முத்தே!
காசறு விரையே!
கரும்பே தேனே!
அரும்பெறல் பாவாய்!
ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன்
பெருமடமகளே!
மலையிடைப் பிறவா
மணியே என்கோ!
அலையிடைப் பிறவா
அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே
என்கோ!
தாழ்இருங் கூந்தல்
தையால் நின்னை
மேற்கண்ட பாடலுக்குரிய வகையில் நவீன
காலத்தின் கவிதைகள் அமைந்து வருவது சிறப்பு. மரபின் தொடர்ச்சியில் கவிதைகள்
அமைவதும் மொழிக்கும் சிறப்பாகிறது. இந்த நிலத்தின் மூதாதையர்களின் வாழ்வும் அறம்
பொருள் இன்பம் வீடு பேறு குறித்த கவிதைகள் பல இந்த நூலில் உள்ளது.
திணைக்கோட்பாடுகளுக்கு ஏற்பவும் எழுதியிருக்கிறார். மருத நிலங்களின் திணைக்
கோட்பாடுகளுக்குரிய வழக்குகள் நாம் அறிந்த ஒன்றுதான். மேற்கு மலைத்தொடர்ச்சி
மலைகளின் அடிவாரங்களில் நாம் வாழ நேர்ந்தவர்கள். நிலங்களுக்கான அகத்திணைப் பூக்கள்
குறித்த கவிதைகளும் இந்த தொகுப்பில் காணக்கிடைக்கிறது.
தீராப் பெருவெளி-
பக்-14 கவிதை மிகச் சிறந்த அகப்பாடலாக உள்ளது
நெடியதொரு தனிமை
வெளியில்
நான் நதியின் ஊடாக
அலைவு கொண்டிருந்தேன்
சலனமற்ற நீர்
பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை
வீதியின் சறுக்குப்
பாதை
தந்த கசப்பை
தினமும் விழுங்கி
வன்மம் படிந்த
அம்பெனப் பாய்ந்து
பொழுது தோறும்
குருதியைப்
பெருக்கும்
சிலரின் சொற்கள்
இந்தக் கவிதையின் உள்ளார்ந்தமாகப் பொதிந்த சொற்கள் பெண்
மனதின் கவிதைகள் மட்டுமல்ல உலக மாந்தரின் சொற்கள். புறம் பேசும் வன்குரல்களின்
அறிவிப்புகள். ஆனாலும் அமைதிகாப்பதுதான் சாலச் சிறப்பானது. குரலுயர்த்த
வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அகத்தின் சிக்கல்களைப் பேசுவதில் பல காப்பியங்களும்
பாடல்களும் நமக்கு உள்ளது. திருவள்ளுவர் காவியம் அமைதி காண்டத்தில் உள்ள கவிதைகள்
நமக்கு மேற்கண்ட கவிதைகளுடன் பொருந்திப்போகிறது. அகத்தின் அமைதியை நாடிகொள்கிற
போர்க்குணம் நமக்கு வாய்த்துக் கொள்ளுமானால் இந்த உலகத்தின் வல்லாங்குகளை சமாளிக்க
முடியும். அமைதி காத்து புலி பதுங்குவது பாயத்தான்..என்பது அதிகாரங்களுக்குத்
தெரியும் நமக்குத்தான் புரியமாட்டேன் என்கிறது. இப்பொழுது திருவள்ளுவர்
காவியத்திலிருந்து சில பாடல்கள்..
வைகறை யாமம்
மகிழ்ந்து துயிலெழுந்து
கைகளைக் கூப்பிரு
கண்முகிழ்த்து-வைகஎன்
உள்ளத் தமைதிஎன உன்னி
உன்னி ஒன்றுவர்
வள்ளுவர் பாதமலர்- சமதருமவாழ்வுப் படலம்-202
வீட்டுத் தொழுமையன்றி
வேண்டும் அமைதிபெறக்
கூட்டுத்
தொழுகைக்குக் கூடியே-ஊட்டுகுளம்
மன்றில்முன்வேம்பு
மரம் சூழ் பெது ம்பரில்
ஒன்றுவர் உள்ளமைதி
ஓர்ந்து - 208
மண்மகள் உள்ள்ம்
மகிழ்ந்து தழைத்தல் போல்
பண்மகவுப் புல்லின்
பசுந்தரையில்- கண்மருவும்
உள்ளம் குவிந்தே
உடலம் நிமிர்ந்தே
கொள்ளுவர் ஒருருவம்
கூர்ந்து- 209
கண்ணார் சிலைவரம்
ஈந்த்தெனல் கற்பனையாம்
எண்ணார்
இயற்கைக்கஃதேலாதாம்-உண்ணேரும்
சார்ந்த அமைதியில்
சார்ந்துதேர் உண்மையே
மாந்தர்க்கு மாவரமாம்
மன்- 212
செறிந்த அறிவுலுறு
சிந்தையி லானந்தம்
நிறைந்த அமைதியுளம்
நேர்ந்தே-உறைந்துதினம்
பல்கலையின் புறும்
பண்பார் பொதுவுடைமை
ஒல்கலில்பே ரின்ப
உலகு- 74
சக்திசெல்வியின் முதல் தொகுப்பில்
உள்ள கவிதைகள் சமகாலத்தின் உயர்திணைகளையும் அஃறிணைகளையும் பேசுகிறது. புறம்
பேசுதல் அன்றி அகத்தின் சீற்றங்களை அமைதியான சொற்களின் குரலாகப் பேசுகிறார்.
தார்மீக கோபம் வாசிக்கறவர்களுக்கு வரட்டும். உலகம் உய்யக் கொள்ள ஏதுவாக இலக்கியம்
பேசும் அக மனது கொண்ட கவிஞர்களைப் போற்றுவோமாக...புது எழுத்து மணோன்மணி
அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்..
வெளியீடு- புது
எழுத்து 2-205-
அண்ணா நகர்
காவேரிப்பட்டிணம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்
90421 58667
விலை-ரூ-60-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக