ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கோவை ஞானியின் புதிய நூல் ”தமிழ் நாகரீகத்திற்கு என்ன எதிர்காலம்” ? குறித்து...



தமிழ் நாகரீகத்திற்கு என்ன எதிர்காலம்?

வெளியீடு-புதுப்புனல்- ஆசிரியர் கோவை ஞானி
இளஞ்சேரல்

     உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடிகளை வல்லரசுகளேச் சந்தித்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் தமிழ் நாகரீகத்திற்கு என்ன எதிர்காலம் என்று யோசிப்பது சரிதான். இயந்திரங்களின் வழியாகவே மனிதன் தன் தேவைகளைச் சரிசெய்து கொள்ளமுடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற காலம் இது. தற்காலத்தில் போர் குறித்த ஐயம் பேய் பிசாசு குறித்த ஐயம் போன்று மாறியிருக்கிறது. ஆனால் ஒரு மொழியை, அதன் நாகரீகத்தை மட்டும் சிதைத்தால் கூட போதுமானது. போர் எதுவும் தேவையில்லை என்று உச்சி நாடுகள் முடிவு செய்திருக்கிறது. ஒரு எளிய நாட்டைத் தாக்குவதற்குக் கூட வல்லரசு நாடுகள் தனிப்படை ஒன்றைத்திரட்டி அல்லது புதிய ஏற்பாடுகளின் மூலமாக தயாரித்து அந்த நாட்டின் பொருளாதார வலிமையைத் தகர்க்கிறார்கள். அப்படித்தான் ஒரு மொழியை நாகரீகத்தை கலப்பு நாகரீகங்களை உருவாக்கியும் முதன்மைப் படுத்தி சிதைக்க முயற்சி செய்கிறார்கள்.
                 
இந்த நூலில் தமிழ் நாகரீகத்தின் தோற்றுவாய் முதற்கொண்டு தற்காலம் சீரழிவிற்கு உட்படுத்தப் படும் அமெரிக்க கலாச்சாரம், அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிபணிவது போன்றவற்றை அலசுகிறது. இந்தக் காலத்திலும் இந்திய அரசின் பட்ஜெட் பேப்பர்கள் அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் வெளியாகிறது என்பதையும் நாம் கவனம் கொள்ளவேண்டும்.

தமிழ் நாகரீகத்திற்கு என்ன எதிர்காலம்? இந்த தலைப்பில் ஞானி தமிழ் நேயம் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக பல ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாகியுள்ளது.
      
இந்த நூலில் எழுதியுள்ள ஆளுமைகள்.

ம.இலெ. தங்கப்பா- இனவுணர்வு பெற்றால் மட்டுமே தமிழன் தன் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

முனைவர் இரா.திருமுருகன்- என்றேனும் எழும் ஒரு சூறாவளி நிச்சயம் எழும் வீசும் என்கிறார்

தமிழ் நாகரீகத்தின் எதிர்காலத்திற்குத் தமிழ்த் தொண்டர் அணி தேவை-   
என்கிறார்.சங்கமித்ரா.

நம்பிக்கையோடு உழைத்தால் தமிழ் நாகரீகத்திற்கு எதிர்காலம் உண்டு- சோ.க. அறிவுடை நம்பி

மருத்துவர் கோவி- நூலக மொழியாக தமிழ் இடம்பெறவேண்டும்.
கு.முத்துக்குமார். –(தமிழோசை)- மண்ணையும் மக்களையும் விடுத்து தமிழ் நாகரீகத்தை வளர்த்தெடுக்க முடியாது.

இன்று எதிர்ப்படும் வினாக்கள்- கவிஞர் தமிழன்பன்

தமிழ்நாகரீகத்தின் மாட்சியும் வீழ்ச்சியும்-க.அறிவன்

தமிழ்ச் சமூகத்திற்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்- அருட்திரு.பிலிப்.சுதாகர்.

தமிழ்நாகரிகத்தின் பண்பாட்டு வறுமை- தமிழ்நாடன்

உழவர்கள் தமிழ்த் தேசியத்தின் ஆணிவேர். மு.குமரவேல்

தமிழ் நாகரீகம் நிலைபெற- சாத்தூர் சேகரன் எழுதியிருக்கிற கட்டுரை இந்த நூலில் முக்கியமானது. இவர்கள் பல்லாண்டுகளாக பல முயற்சிகளை எடுத்துவருகிறவர். தொன்மையான தமிழினம் புகழ்பெற்ற வரலாறுகளைத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறவரான சாத்தூர் சேகரன் சில வழிகளையும் முன்வைக்கிறார்.

தமிழ்நாகரீகத்திற்கு- யார் தடை- என்ன விடை?- ஜனகப்ரியா

தமிழ்நாகரீத்தின் தளர்ச்சியும் எழுச்சியும்- நாராயணசாமி

தமிழ்நாகரிகத்தின் தகர்வும் மீட்சியும்- முனைவர் வே. சுகுமாரன்

தமிழ்நாகரீகத்திற்கு எதிர்காலம் உண்டு.- மு. தனராசு

தமிழ்நாகரீகத்தில் தலித் மக்களுக்கு என்ன இடம்- முனைவர் மு.ஜீவா

தமிழன் உள் முகமாகத் தன்னை மீட்டுக் கொள்ளவேண்டும்
இரா.மோகன் ராசு

தமிழ் நாகரீகத்திற்கு என்ன எதிர்காலம்- முனைவர் சு.வேணுகோபால்

தமிழ் நாகரீகம் கிராமியமே- பேராசிரியர்-ம.நடராசன்

என்னவெல்லாம் செய்தால் தமிழ்நாகரீகத்தைத் தக்கவைக்க முடியும் இ.ஜே.சுந்தர் ( எழில்)

உலக நாகரீகத்தை முதலில் காப்பாற்றுங்கள் பிறகு தமிழ் நாகரீகம் பற்றிப் பார்க்கலாம்-பேரா.க.புரணச் சந்திரன்

ஒரு நம்பிக்கை நட்சத்திரத்திற்காக நானும் காத்திருக்கிறேன். புதியமாதவி.
        
 இப்படியாக 24 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. பொதுப்படையில் உயர்வாக சில கட்டுரைகளும் அவநம்பிக்கையுடன் சில கட்டுரைகள் இருக்கிறது.  ஒரு கட்டுரையில் ஒருவர் நம்பிக்கை நட்சத்திரமாக ஒருவர் வரவேண்டும் என்று கடவுள் போல ஒருவர் வருவார் என்கிறார்.  புரணச் சந்திரன் ஒரு படி மேலே போய் உலக நாகரீகமே சீரழிகிறது. தமிழ் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறது என்பதாகப் பேசுகிறார்.
             
இந்த ஆளுமைகளின் கட்டுரைகளின் வாயிலாக அறிந்து கொள்வது போன்றே நாமும் ஒரு கணம் யோசித்துப் பார்க்கலாம். தமிழ் நாகரீகம் என்பதை எந்தக காலத்திலிருந்து வரையறை செய்து கொள்வது என்பதிலே நமக்குக் கருத்து வேறுபாடுகள் உள்ளது. சில பதிவுகளை நாம் சமணம் என்றும் பௌத்தம் என்றும் வரையறை செய்கிறோம். பத்தாம் நூற்றாண்டிலிருந்தும் தமிழ் பதிக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தும் நாகரீகத்தை நாம் வரையறை செய்வதுதான் சரியாக இருக்கும். வேளிர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசுகள், பாளையங்கள். பட்டிகள். போன்ற சிறு சிறு மக்கள் குழுக்கள் தங்கள் வயிற்றுப் பாட்டிற்காகவும் தங்கள் இனக்குழுவைக் காப்பாற்றியும் தங்கள் நாகரீகத்தையும் காத்து வந்திருக்கிறார்கள்.
         
 தமிழ் நாகரீகம் என்னும் பதம் பயண்படுத்தப் பட்டிருக்கிறது. தமிழர் நாகரீகம் அல்ல என்பதைப் புரியாமல் கட்டுரைகள் எழுதியவர்களும் உண்டு. தமிழ் என்பதற்கும் தமிழர் என்பதற்குமான உள்ள வித்தியாசம் அறியாமல் சிலர் புரிந்து கொண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழ் நாகரீகம் என்பதே தமிழர் தமிழ்தேசியம், தமிழ் உணர்வு என்பதுதான் என்று ஞானி அவர்க்ள் விளக்குகிறார்கள்

    தமிழ் நாகரீகத்தின் எதிர்காலம் பற்றிய ஆய்வுகள் வரவேற்கப்படவேண்டியது. அறிவியல் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகம் ஒரு நாகரீகத்தைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தகவல் தொடர்பு, நகரிய விரிவாக்கம் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. இன்று உலகச் சந்தையை நிர்ணயிக்கின்றவர்களான ஜி.7 நாடுகள் தான் ஒரு பாரம்பரிய மிக்க கலாச்சாரத்தை மொழியை அழிக்க நினைக்கிறது. ஆதிபழங்குடி மக்களின் கலாச்சாரங்களை இப்படியே அழித்தது.
        
சமீபத்தில் சென்ற ஆண்டின் சிறந்த புராதனச் சின்னமாக விஜய் தொலைக்காட்சி புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தா மலை யென்னும் பழமைவாய்ந்த சமணப் படுகைகள் கோவில்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. யாரும் பாராமிக்காமல் கிடக்கிறது என்பதற்காக அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற ஆய்வாளர்கள் தனித்த அமைப்பாக ஒன்றை ஏற்படுத்தி பசுமை நடை என்னும் பெயரில் புராதன சின்னங்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இது ஒரு புதிய முயற்சி. நமது தமிழர்கள்தான் பௌத்த சமண மதங்களை வளர்த்தார்கள். நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற செவ்வியல் இலக்கிய வடிவங்களில் முக்கால்வாசி பௌத்த சமண இலக்கியங்களே..
             
 தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு ஏற்பட்டிருக்கிற நிலை மட்டுமல்ல மற்ற இந்திய மாநில மொழிகளான பதிணெட்டு மொழிகளுக்கும் இதே நிலைதான் ஆங்கிலத்தால் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலக் கலப்பு பிறமொழிகளிலும் கலாச்சாரத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவு கூறவேண்டும். எல்லா மொழிக்கார ஆய்வாளர்கள் தங்கள் மொழி ஆங்கில மோகத்தால் அழிந்து போகுமோ என்று அச்சப்படுகிறார்கள். ஆனாலும் நம்பிக்கையோடு தங்கள் மொழியைத் தன் கலாச்சாரத்தை பேணவே முயற்சிக்கிறார்கள். இந்திய மொழிகள் ஆணையம் சில ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்து மொழிகளின் கலாச்சார விழாக்களை நடத்தியது. மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு வளர்ச்சியடைந்த காரணத்தால் அந்த விழாக்களை நிறுத்தியது. சுதந்திரதினம் குடியரசுதினம் இந்த நாட்களில் நடக்கும் விழாக்களோடு சரி. வேறெந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
           
நம் தமிழ்நாட்டில் மொழியை முக்கியப் படுத்தித் தான் ஆட்சியதிகாரத்திற்கு வந்த கட்சிகள் பிறகு மொழியின் பரவலான வளர்ச்சிக்கு வித்திடவில்லை. இன்று நம் தலை நகருக்கு தமிழில் முகவரி யெழுதினால் போகாது. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிவிடுவது நல்லது என்று கொரியர் கம்பெனிகள் ஏன் சிலசமயம் தபால்துறை அலுவலர்கள் கூட எச்சரித்து ஆச்சயப் படுத்துகிறார்கள்.  முந்தைய ஆட்சிக்குப் பிறகு தற்பொழுது நடைபெறும் தற்போதைய ஆட்சியில்

தமிழில் விளம்பரப்பலகைகள் வைக்க எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. சமச்சீர் கல்விக்கு எதிரான முயற்சி என்ன நடந்தது என்பது தெரியும்.
         
இந்தக் கட்டுரை நூலில் ஆய்வாளர் அனைத்தும் ஒரே கருத்தாக வலியுறுத்துவது கல்வியில் தமிழைக் கட்டாயமாக்கு வதும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதும் தமிழில் படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும் பட்சத்தில்தான் தமிழும் தமிழ்நாகரீகமும் வளரும் என்பது முடிவாகிறது. இங்கு நம் தமிழ்நாட்டில் பத்தாவது பணிரண்டாவதில் எடுக்கும் மார்க் முக்கியமாகப் படுகிறது. இந்த மார்க் அளிப்பதில் தமிழுக்கு இன்னும் நூறு மதிப்பெண் வழங்குவதில் தமிழ்த்துறையும் ஆசிரியர்களும் காட்டும் தயக்கமே புதிராகவும் உள்ளது. மற்ற மொழிகளில் பாடங்களில் நூறு மதிப்பெண்கள் வழங்குகிற ஆசிரியர்கள் தமிழுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்க ஏதுவாக உத்தரவுகள் அளிக்கும் போது அந்த மதிப்பெண் கூடுதல் மேலும் நுழைவுத்தேர்வுகளுக்கு உதவிடக்கூடும்.
                  
 அழிந்து வருகின்ற தமிழ் நாகரீகத்தின் புராதன கலைகளைப் பாதுகாக்கும் விதமாக எந்த முயற்சிகளையும் மேற் கொள்வதில்லை. அரசு அருங்காட்சியக ங்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.தமிழ் நாகரீகம் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிற பொறுப்பும் அதிகமான வாய்ப்புகள் இருக்கிற இடமே கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசாங்க நடமுறைகள்தான். பெரும்பாலும் இவையணைத்துமே முக்கால் பங்கு ஆங்கிலத்தில் தான் நடைமுறையில் இருக்கிறது. இவற்றுக்காக பெரிய அளவில் இயக்கங்கள் நடத்துவதின் மூலமாக சில முயற்சிகள் எடுக்கலாம். தமிழுக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் நடத்தப் படுகிற நிகழ்வுகளுக்கு மக்களின் ஆதரவும் பங்களிப்பும் மிக குறைவாக கிடைக்கிறது என்பது அவலமான செய்தி. குழுக்குழுவாக அரசியல் அடைப்படையில் தனித்தனியாகப் போராட்டங்கள் நடத்தப்படுவதே தமிழ் நாகரிக வளர்ச்சிக்கு யாருக்கும் அக்கறையில்லை என்பது புலனாகிறது. நமது இந்திய சட்டப்படியாக எந்தச் செயலும் நடவடிக்கைகளும் சட்டமாக மாறினால் மட்டுமே ஓரளவிற்கு மாற்ற முடியும்.
            
சட்டமாக இயற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். தனித்த தமிழ் இயக்கங்கள் தனித்தமிழ் இயக்கங்கள் மூத்த தலைமுறை ஆளுமைகளுக்குப் பிறகு தோன்றவேயில்லை. குறிப்பாக ம.பொ.சி, மறைமலையடிகள், பெருஞ்ச்சித்திரனார், தேவநேயப் பாவாணர் போன்ற தமிழியக்க ஆளுமைகளுக்குப் பிறகானப் போராட்ட ஆளுமைகள் உருவாக வில்லை. சில ஆளுமைகள் தங்கள் சொந்த லாபங்களுக்காக இரண்டு திராவிட அரசியல் அணிகளுடன் இணைந்து கொண்டதுதான் வேதனை. இன்றைய சூழலில் தமிழ் நாகரீகம் என்ற சொற்றொடரே ஆபாசமாகப் பார்க்கப் படுகிற கவனிக்கப்படுகிற நிலைதான் தொடர்கிறது. வெளிமாநிலத் தமிழர்கள், வெளி நாட்டின் தமிழர்கள் போன்றவர்களுக்கு இருக்கிற உணர்வுகளை யாவது சொந்த நாட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்துகிற பொழுதுதான் மேலும் நாம் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கலாம். இன்று நாம் இந்திய அரசின் மொழிக்கொள்கை களுக்குட்பட்டும் நாம் போராட வேண்டியிருக்கிறது. நாடாளுமன்ற இருஅவைகளிலும் உரைகள் தமிழில் கேட்க விரும்புவர்களுக்கு இருந்த வசதியும் தடைசெய்யப் பட்டிருக்கிறது. அதற்கான தொழில் நுட்பம் பழுதாகியிருப்பதைக் கூட சரிசெய்யச் சொல்லி யாரும் கேட்கவில்லை. சில காலம் முன்பு தமிழில் தந்தி அளிக்கும் முறையிருந்த காலமுன்டு. போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது. தமிழ் வெறும் வீட்டு மொழியாக உரையாடுவதற்கான மொழியாக மட்டும் மாறிக் கொண்டிருக்கிறது. மொழி நாகரீகத்திற்கான இயக்கங்கள் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படியான பொதுவான இயக்கங்களை நடத்துகிறவர்கள் யார் என்று பார்த்தால் ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி இவர்களுடன் ஆதரவுடன் நடத்தினால்தான் ஏதாவது ஒரு காரியம் நடக்கும் என்று நடத்துகிறார்கள். இவ்விரு இயக்கச் சார்பற்ற இயக்கங்கள் நடந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டது தமிழ் இனி 2000 என்று ஒரு அரங்கு மட்டும் நடந்த தாக ஞாபகம்...
          
ஞானி அவர்களின் இந்த முயற்சி தொடரவேண்டும். மறுபடியும் சோம்பலாக மாறியிருக்கும் தமிழ் நாகரிகம் மீதான ஆர்வமும் இயக்கங்களும் தொடரவேண்டும் என்று விரும்புகிறோம். ஞானி அவர்கள் தொடுத்திருக்கிற இந்தக் கேள்வி மிக அவசியமானது...

வெளியீடு
புதுப்புனல்
பாத்திமா டவர் முதல் மாடி
117 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
ரத்னா கபே எதிரில்
சென்னை 600005
அலைபேசி.. 9884427997


2 கருத்துகள்:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு