பாலு மகேந்திராவும்
வேல் கண்ணனும்
வேல் கண்ண்னின் “இசைக்காத
இசைக்குறிப்பு” கவிதை நூல் குறித்து-
இளஞ்சேரல்
சமீபத்தில் தொடர்ச்சியாக கவிதைகளாகவே
வாசித்து வருவதும் அதற்கான குறிப்புகள் மையக் கருத்துகளுடன் பொருந்திப் போகிற
கவித்துவங்களுடன் உரையாடுதல் என்பதாகவே சிந்தை நகர்ந்து கொண்டிருக்க, நண்பர்
கவிஞர் வேல் கண்ணனின் கவிதைகளுக்குள் வாசித்தும் வசித்தும் வந்தேன். முதல் தொகுப்பின் சொற்கள் வெட்கத்திலிருப்பதை
உணர்ந்தேன். ரசனை யெனும் கரையின் எந்த மையத்திலிருந்து துவங்குவது? ஒரு
கட்டுரைக்காக ”இடைக்காலத்தில் நாவல் எழுச்சி“ எனும் கட்டுரைக்காக காவல்
கோட்டம், அஞ்ஞாடி, கொற்கை, உப பாண்டவம்,பஞ்சும் பசியும், கபாடபுரம், காதுகள். மணல் கடிகை, சங்கம்
போன்ற நாவல்களுடனான மறுவாசிப்பு என்று பொழுது தீர்ந்து கொண்டிருக்கிறது. எழுத எழுத
பிரச்சனைகளும் கையிருப்புகளும் தீர்ந்து போகும் என நான் நினைத்தது
முட்டாள்தனம்தான். (கட்டுரை எத்தனை பக்கம் எனக் கேட்கக் கூடாது)
எழுதுவதற்கு முன்பாக அகம் பிடிபடாத
குழப்பம் மேலிடுகிறது. எழுதி வருகிற பல ஆக்கங்களின் களங்களும் கதாபாத்திரங்களும்
உரையாடல்களின் தொந்தரவு வேறு. இடைவிடாத அலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளுமாக
பொழுது கழிய யாவற்றையும் புறந்தள்ளி வைத்துவிட்டு ஐந்து முக விளக்குப் பொருத்தி
இருட்டறையில் தியானத்திற்குள் நுழைவதைப் போன்று வேல்கண்ணனின் தொகுப்பின் வழியாக
கவிதைகளுக்குள் பயணித்தேன். இதுவும் ஒரு விடுவித்தல். குளுகோஸ் ஏற்றுவதற்காக ஊசி
பொருத்தப்பட்ட கைகளுடன் வாழ்வது போலத்தான் இருக்கிறது எழுத்து வாழ்வு.. வலித்தால்
எடுத்து மூக்கில் பொருத்திக்கொள்ளலாம்.. வேறு வழியில்லை.. வாயிலில் மகாசிவராத்திரி
பள்ளயம் எடுக்க படிவிளையாட்டு ஆடிவருகிற பெரியதனம் கருப்பண முதலியார் வம்சத்தின்
பங்காளிகள் திருவாபரண கூடைகளுடன் மக்களை இந்த ராத்திரிகளில் சந்தித்து
வருகிறார்கள். நான் ஓர் ஆட்டம் பார்த்துவிட்டு விரல்களிலிருந்த ஊசிகளைக்
கழட்டினேன்..பிரிட்ஜிலிருந்து வேல்கண்ணனின் கவிதைகளை எடுத்தேன்..
கவிதைகள் உள்ளுக்குள் விரும்பி
அருந்தும் தேநீர் போல மென் சூட்டில் இறங்குகிறது. விரும்பி நீண்ட நாள் அணிகிற
புதுத் துணி போல படிந்து கொள்கிறது. பிடித்த பலகாரங்கள் தீரத்தீர அருந்தி விட்டு
காலியான பாத்திரத்தைப் பார்ப்பது போல நம் அகத்தைப் பார்க்கிறோம். நம் இறைச்சல்
சமூகத்தில் நாம் அமைதியாக வாழ முடியாது. ஒரு வகையில் நாம் அந்த இறைச்சல் எல்லாம்
இசை என்பதாக இசைஞானியைப் போன்று கருதிக் கொள்கிற பட்சத்தில்தான் வாழமுடியும். உறவு
கொள்ள முடியும்.
வேல் கண்ணனின் ஒரு
கவிதையுடன் பாலுமகேந்திராவின் நினைவுகளுக்குள் நுழைவோம். பாலுமகேந்திரா பற்றிய
குறிப்புகளும் செய்திகளும் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் தலைமுறை
வண்ணப்பட ரசிகர்களிலிருந்து டால்பி ஸ்டிரியோ ரசிகர்கள் வரையிலும் பாதித்த ஒரே
கலைஞனாக பாலுமகேந்திரா மாறியிருக்கிறார். இந்த தலைமுறை இடைவெளி நமக்கு நிரந்தரம் என்பதை
பாலு நிருபித்திருக்கிறார். பாலு அளித்துப் போன பிலிம்ரோல்களை முக்கால்வாசி
தூர்ந்து போய்விட்டது. அந்த வண்ணங்கள் மஞ்சக்கரி பிடித்தாகி விட்டது. ஒரு நேர்
காணலில் தனது புகழ்பெற்ற படத்தின் பிலிம் ரோல்கள் அநாதியாக அழிந்து போய்க்
கொண்டிருக்கிறது என்றார்.
சில நாட்களுக்கு முன்பு அவருடைய சமீபத்திய படமான “தலைமுறைகள்“ பாக்ஸ்
திரையரங்குகளில் ஆயிரம் ருபாய் டிக்கட் என்பதாக சில காட்சிகள் ஓடியது. சில
மனிதர்களும் நாற்காலிகளும் பார்த்து மகிழ்ந்தது. மெதுவாக ஊறும் படங்களை எடுப்பவர்
என்னும் பெயர் பெற்றவர். இருதயம் மெதுவாக ஓடினால்தான் நாம் உயிர் வாழமுடியும். நம்
ரசனானுபவத்திற்கு எது மெதுவானது. எது சத்தமானது என்பது தெரியாது.
இந்தக் கவிதை காதலர்
தினத்தின் காதலிக்காகவும் இசைஞானிக்காகவும் பாலுமகேந்திராவிற்காகவும் நமக்காகவும்
வாசகர்களுக்குரிய சமநிலை அக மனதிற்குமாக நின்று அருள்பாலிக்கிற கவிதையாக உள்ளது
நீங்கள் வாசிக்கலாம். ஒரு சந்தப்பாடலுக்கும் மோன லயத்திற்குமாக எழுதப்படுகிற
தன்ணுணர்வு மிக்க ஒளிபொருந்திய கவிதை.. வேல்கண்ணனின் கவிதைகளில் இந்த மெதுவான
தன்மை இருக்கிறது. ஒலி மெதுவான சந்தம். கண்ணின் கருவிழியின் உட்படலத்தின்
தன்மைதான் குவி ஆடிகள் உருவாகவும் காமிராக்கள் உருவாகவும் வித்திட்டது என்பதை நாம்
மறப்போமா. மனிதனின் குரல்தான் மிகச்சிறந்த இசைக்கருவி என்றார் இசை மேதை
செம்மங்குடி சீனிவாசய்யர். மிகச்சிறந்த காமிரா கண்கள்தான். வேல் கண்ணனின் கவிதைகள்
சிலவற்றைக் குறித்து பேசுவது அவசியம் காதுகள் கொண்ட கண்கள் உலகில் வசிக்கிறது.
கேட்கட்டும் பார்க்கட்டும்..
நிதர்சன ஒளி
உன் வாசல் நெளி
கோலங்களிலிருந்து
வண்ணங்களாக
பட்டாம்பூச்சிகள்
பறக்கின்றன
அவைகளிலிருந்து
மீறியெழும் வாசனையொன்று
மகரந்தகளை
மலரவைக்கிறது
உன் கைகளில் உருளும்
தாயக்கட்டைகளிலிருந்து
தொடர்ச்சியாக
தாயங்கள் விழுகின்றன
தாயங்களிலிருந்து
மீறியெழும் புள்ளியொன்று
ஒளிச் சுழலை
உறையவைக்கிறது
உன் கேசத்திலிருந்து
உதிரும்
இழையொன்று இரவைக்
கவிழ்கிறது
இரவிலிருந்து
மீறியெழும் கனவொன்று
நினைவுகளை நிலைக்க
வைக்கிறது
உன் தூரிகையிலிருந்து
வடியும்
ரகசியமொன்று கதையாக
உலவுகிறது
கதையிலிருந்து
மீறியெழும்
சொல்லொன்று
புதிரொன்றை விடுவிக்க வைக்கிறது- பக்-29
பாலுமகேந்திராவின் வாழ்வு கூட இந்தக்
கவிதையில் வருகிறது. இழப்பு ஈடு செய்ய முடியாத முக்கால் நூற்றாண்டு வாழ்வை எண்ணற்ற
மனித உணர்வுகளை பிலிம் சுருள்களில் வைத்த மாதிரிதான் இந்தக் கவிதையும்
பதிவாகியிருக்கிறது. எழுத்தில் வடியும்
சோகம் ஏன் பேசப்படுகிறது. ஒரு நாள் கழிந்தது என்பார் புதுமைப் பித்தன்.
அந்த நாள் வெறுமனேவா கழிந்து போகிறது. எத்தனை சித்திரங்கள் எத்தனை காட்சிகள்
எத்தனை மனிதர்கள் எத்தனை வெளிச்சத்தில். எத்தனை புகை. எத்தனை ஓலம், எத்தனை பொலிவு.
இந்தக் கண் பிலிம் ரோல்களில் உருண்டு படிந்து போகிற காட்சிகள்தான் எத்தனை. நம்மை
விட்டு கழிந்து போகிற நாளை ஒரு எளிய காகித த்தைக் கிழித்து எறிவது போல எறிந்து
விடுகிறோம். அதன் சோகம்தான் எழுத்து. கலைஞர்களின் வாழ்வும் அப்படித்தான். கலைஞனின்
காதலும் கலைஞனின் காதலியின் வாழ்வும் மிகவும் துயரமானது. எப்படி கவிதை அகத்தின்
ஆழத்தில் மிதக்கின்ற உணர்வைப் பேசுகிறதோ அப்படியாக பாலுமகேந்திரா ஒளியின் வழியாக
உணர்வுகளை வெளிப்படுத்தியவர். நடுத்தரக் குடும்பங்களின் முகங்களாக அவர் மாந்தர்கள்
உலவினார்கள். குறிப்பாக பெண்கள் நமது
ஊர்க்காரப் பெண்களைப் போன்ற நிறத்திலிருந் தார்கள். எண்ணைச்சிக்குத் தலையும்
காட்டன் மிக்ஸிங்க் புடவையில் நகம் கடித்தார்கள். ஏமாற்றுகிறவர்களுக்குத் துணையாக
வாழ்ந்தார்கள். உலகம் அவர்களுக்கு எதிராகவே சுழன்றது. தோல்வி வெற்றி சமகால
வாழ்க்கையில் உழல்தல் என்பதாக அல்லாமல் ஒரு செடியாக மலராக ஒரு கிணறாக ஒரு குண்டு
குழியுமான சாலைகளாக உடைந்த சைக்கிளாக பழைய பஜாஜ் ஸ்கூட்டராக வாழ்வார்கள். ஒரு சமூக
உயிரிக்கான அந்தஸ்த்தை பாலுமகேந்திரா தன் கதை மாந்தர்களுக்கு அளித்தார். ஏறக்குறைய
மகத்தான நவீன கவிஞனின் தலையாய பணியாகவே அமைந்தது. மிக வெளிப்படையான வாழ்க்கை.
வேல்கண்ணனின் கவிதைகளும் அது போன்ற உணர்வைத்தான் தந்து கொண்டிருக்கிறது எனலாம்.
நவீன கவிதைகளில் இந்த
மூன்றாண்டுகளுக்குள்ளாக இறைநிலைக கவதை வடிவங்கள் உருவாகியிருப்பதைக் காணலாம்.
இறைஞ்சுதல் மனோபாவம் என்பது ஏறக்குறைய தன்னைக் கண்டடைதல் என்பதுதான் தம் அகத்தைப்
பரிசோதிப்பது போன்றதுதான். நவீன கவிதைகளில் சுயமும் அகமும் பிரழ்வு நிலையில்
உரையாடுதல் என்பதும் கூட இறைநிலையின் வடிவம்தான். கண்ணுக்குத்தெரியாத பலம்
கொண்டமட்டில் சுத்தும் ஒரு சக்தி அது வேறொன்றுமில்லை அகம்தான். அகம் குறித்து நவீன
கவிதை மட்டுமே பேசும். கவியரங்க கவிதைகள் பேசாது. புறம் பேசுகிற கவிதையில்
இறைநிலையைக் காணமுடியாது. வேல்கண்ணனின் உருவகங்கள் உயிர்ச் சொட்டாய் அகக்
குளத்தில் சொட்டி இறைநிலை வளையங்களை கரு செய்கிறது.
தலைப்பில் வாசிக்க நேர்ந்த அனுபவங்ளை நாம் பேசும் போது இசைக்காத
இசைக்குறிப்பின் கவிதையிலிருந்து சில வரிகள்
மாமழையையே அள்ளிப்
பருகிய பின்னும்
அடங்காத தாகம்
மரணத்திற்கு இறைஞ்சி
நிற்கும் சிரஞ்சீவி
தனிச் சொர்க்கத்தை
உதறித்தள்ளும் திரிசங்கு- பக்-7
இந்தக் கவிதை நமக்கு
இசை சம்பந்தமான பழம்பெரும் காவிய நிலைகளை நினைவுட்டிச் செல்கிறது.
சில ஆத்மார்த்தமான
செய்திகளை நாம் பார்க்கலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் இசை சம்பந்தமான இறைநிலை
செய்திகள் உள்ளது. இசைத்தமிழ் பயில்தல் என்பது அரியதாய் மாறியிருக்கிறது.
இசைக்குறிப்புகளுடன் இசைக்கருவிகளை இசைத்துக் கொள்ளுதல் என்பது சுலபம். அல்லது
அதுவே போதுமானது என நினைத்துக் கொண்டதும் காரணமாகிறது. அதுவும்
இறைநிலையின்பம்தான். இந்த தொகுப்பில் இசைக்குறிப்புகள் இசைக்காத காலத்தைப்
பேசுகிறது. திருவையாற்றில் ஒரு கணம் தியாகராஜ சுவாமிகள் தோடி ராகத்தை மட்டுமே
நாற்பத்தியெட்டு நாள் ஆலாபனை செய்து பாடி இறைவனுக்கு நேர்த்தி செய்திருப்பதாகச்
சொல்வார்கள். ராக தாள லய சுத்தம் எல்லாம் தொலைக்காட்சிகளில் ஒரு பாட்டுக்கும்
நான்கு நீதிபதிகளுக்கு மட்டும் பாடினால் போதும் என்றாகி யிருக்கிறது.
அளபிறந்
துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய
என்மனார் புலவர்- என்று நுன்மரபு நூலும்- 33 இசையின் அகத்தைப் பேசுகிறது.
துவைத்தலும்
சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப் பொருள் கிளவி
என்மனார் புலவர்- உயிரியல்-62
துறையமை நல்யாழ்த்
துணைமையேர் இயல்பு- களவியல்-1
மறங்கடை கூட்டிய
துடிநிலை- என்று –புறத்திணையும்
வாள்மலைந் தெழுந்தோனை
மகிழ்ந்து பறை தூங்க- புறத்திணையும் பாடிக் களித்திருக்கிறது.
இசையொடு சிவணிய நரம்பு என்பது யாழ் எனும்
இசைக்கருவியாகும் நரம்பின் மறை என்பது நரம்பிசைக் கலைகளைப் பற்றிச் சொல்லும்
நூல்களாகும். “மறைய“ எனப்பன்மையில் விளித்திருப்பதால் அந்தக் காலங்களில் நரம்பிசை
சம்பந்தமான பல நூல்கள் இருந்திருப்பதாக அறிய நேர்கிறது. மறை என்பது மறைத்தல். மறை முதனிலைத் தொழிலாகு
பெயராய் நூலுக்கு ஆயிற்று. ஒரு இயற்றமிழ் நூலைத் தாமே பயின்று பொருள்
கொண்டு அந்நூலின் பொருளை வழக்கத்திற்குக் கொண்டு வருதல் போல இசைத்தமிழ் நூலைத்
தாமே பயின்று வழக்கத்திற்குக் கொண்டு வரவே முடியாது. இசையிலக்கண நூல்களையும் நாம
அப்படியே பயில முடியாது. ஆசிரியரொருவர் பயிற்றுத் தர நாம் பயில முடியும் என்பதை
இசைத்தமிழ் நூல் இலக்கண வகைகள் கூறுகிறது. இசைத்தமிழ் நூல்களான
பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம் முதலான தொன்னூல்களை நாம் பெற்றிருக்கிறொம்.
நாம் சில செய்திகளைத் தெரியாது ஒப்புக் கொள்வதின் மூலமாக நமக்கு நாதே சாபவிமோசனம்
அளித்துக் கொள்கிறோம்.
சீரியாழ் செல்வழி
பண்ணி யாழ் நின்
காரெதிர் கானம்
பாடினேம் ஆக- என்று புறநானூறு 144 பாடல் பேசுகிறது.
மேலும் மறை நூல் ஒன்று அன்பில் கோடல்
அந்தணர் மறைந்து- பிறப்பியல்-20 பேசுகிறது. இங்கு மறை என்பது எழுத்துக்களின்
பிறப்பிலக்கணத்தையும் வாழ்நிலை நூலான ஐந்திறம் இலக்கணங்கள் முழுவதையும்
குறிக்கும். எவை எவை நுண் மரபு இலக்கியங்கள் செவ்வியல் பிரதிகள் நம்மால் பயின்று
கொள்ளமுடியாமல் பிரிதொரு ஆசிரியர்களால்
பயிற்று வித்து பயின்று கொள்கிற நுண்கலை மரபுகள் யாவும் மறை நூல்கள்
என்கிறது தொல்காப்பியமும் ஐந்திறமும்.
துவைத்தல், சிலைத்தல்,இயம்பல், இரங்கல்
என்பனயாவும் இசைகளோடு சொல்வதற்கும் பேசுவுதற்குமான பொதுமொழிகள். இசைக்குறிப்புகள்
இதன் வடிவே உருவாகிறது. பண், பாட்டு. பாணன், பறவை என்பதன் அடையாளக் குறியீடுகளை
பழம்பெரும் பாணர்கள் உருவாக்கினார்கள். நம் தலைமுறைக்கு தெரியுமா..தெரியவில்லை.
துவைத்தல், சிலைத்தல், இயம்பலும் இரங்கலும் முறையே ஒலித்தல், சொல்ல்ல், இரங்கல்
என்னும் பொருளில் வருகின்றன. இம்மொழிகளை வழக்கமாகப் பேசுவது போலன்றி இசையோடு
பேசுவதில்லை. துவைத்தல், சிலைத்தல் முதலியன ஐந்திறம் தொல்காப்பிய காலத்தில்
இசையோடுதான் பேசியிருக்கிறார்கள். வழக்குப் பேச்சே இசைமொழிகளோடுதான்
நடந்திருக்கிறது. பாராயண வகைகளை தமிழ்ப் பண்டிதர்கள் உருவாக்கினார். சைவ, வைணவ
வேளாண் குடிகளில் இலக்கிய மரபுகள் இந்த இசைமொழிகளுடன்தான் தோன்றுகிறது. இதை நாம்
சொல்கிற போது நம்மைப் பைத்தியகாரன் என்கிறார்கள்..
வேல் கண்ணனின் இனி
ஓர் அற்புதமான கவிதையை வாசிக்கலாம்.
நிம்மி
இரவுப்பாடலில்
நிலைத்தேயிருக்கும்
துயரமாய்
மதியப் பொழுது
நிராகரிப்பு என்னும்
ஆயுதம் ஒன்றுதான்
கையாளும் முறைகள்
தான் வெவ்வெறானவை
நிம்மி
தூக்கிக்கிட்டுக்
கொண்டதிலும்
இன்றைய என் ஆடையிலும்
மயில்கண் இருப்பது
தற்செயலானது
அக வெளிச்சத்தின் வழியாக வாசித்து உணரக்
கிடைத்த கவிதையிது. வேல்கண்ணனின் இந்தக் கவிதையை வாசித்த பொழுது அதிர்ச்சியில்
தள்ளப்பட்டேன் எனலாம். சார்லஸ் ப்யுவோவ்ஸ்கியின் கவிதை
ஞாபகம் வருகிறது.
Long walks at night
That’s what good
for the soul;
Peeking into windows
Watching tired housewives
Trying to fight off
Their beer- maddened husbands. இதையொட்டிய இனியொரு கவிதையை நாம் வாசிக்கலாம்.
சுடர் வெம்மை
அப்பொழுது நான்
மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையைக்
கடந்ததால்
அப்பொழுது நான்
கடலுடன் பேசினேன்
இறுதியாக நீ கடலில்
கலந்ததால்- பக்-24
எனக்கு இந்தக் கவிதை
மாண்டி டக்ராக்-கின் புகழ்பெற்ற கவிதையை நினைவு படுத்தியது.
Just because someone says they love you
today
Does not mean they will love you forever
Feeling have ways of changing
Promises have ways of breaking
Just because someone kisses you passionately
Does not mean they wont kiss someone else
Kisses are not contracts of forever and ever
Caresses do not mean always together
Just because…………….
………………….
அகவெளிச்சத்தின் வழியாக
வாசிக்கப்படுகிற கவிதைகளாக வேல்கண்ணனின் கவிதைகள் உள்ளது. முதல் தொகுப்பின்
கவிதைகளுக்குரிய இளமைப்பருவம் வசிக்கிறது. அகம் பற்றிப் பேசுகிற போது அகமாமணி
திருமூலரை நினைக்காமல் இருக்க முடியாது.
அகலிடைத் தார்மெய்யை
அண்டத்து வித்தைப்
புகலிடைத்
தெம்மெய்யைப் போத விட்டானைப்
பகலிடத் தும் இர வும்
பணிந்தேத்தி
இரவிடத் தேஇருள்
நீங்கிநின் றேனே- திருமந்திரம்-141
இசைக்காத
இசைக்குறிப்பு ஒரு சிறந்த பாடலுக்குரிய சங்கதிகள் உள்ளத்தில் பதிகிறது. பெரு நகர
வாசிகளின் கல்வி மனமும் சமகாலத்தின் இலக்கிய மனமுமாக எழுதி வருகிற கவிஞர்களில்
வேல்கண்ணனும் இணைந்திருக்கிறார். நம் பணியைக் கொஞ்சம் சிரமமேற்கொண்டு பகிர்ந்து
கொள்ள முன் வந்தமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..
வெளியீடு
ஆசிரியர்-
வேல்கண்ணன்- அலைபேசி-9865887280
வம்சி பதிப்பகம்
டி.எம். சாரோண்
திருவண்ணாமலை-606 601
9445870995-04175-251468
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக