நான் ராணிதிலக் பேசுகிறேன்-
நான் ஆத்மாநாம் பேசுகிறேன்
ராணிதிலக் புதிய கவிதை நூல் குறித்து...
இளஞ்சேரல்
மதிய சாலை
இன்று
காலை முதல்
என் எல்லா வெற்றிகளையும்
யார் யாருக்கோ
கையளித்து விட்டு
சந்தோஷத்தில்
நிழலற்ற மதிய சாலையில்
தன்னந்தனியாக
நடந்து செல்கிறேன்
என் தலைக்கு மேல்
மிதந்த படி
வரும்
இந்தக் காகிதக் கப்பலுக்கு
என்ன
செய்வேன் ? பக்-71
ராணிதிலக் புதிய கவிதை நூலான “நான் ஆத்மாநாம் பேசுகிறேன். வாசிக்க நேர்ந்த போது நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவு கூர்ந்தால் கவிதைகளின் பரப்பை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
கமல் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை பற்றிய அரசின் விளக்கத்தை முதல்வர் செல்வி ஜெயலலிதா அளித்துக் கொண்டிருக்கிறார். இளைய மகன் தன்னுடன் கிரிக்கெட் விளையாட வற்புறுத்துகிறான். உப்புத்தண்ணீர் வந்து விட்டிருக்கிறது. என் கணணி தன் பலத்தை இழந்து என்னிடம் போதுமான கொள்ளவு நீர்த்துவிட்டது என்பதை அறிவித்தபடியே இருக்கிறது. உன்னை நீ காப்பாற்றிக் கொள் என்கிறது.எதிர்வீட்டு ஆளுயர நாய் உறங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் ஷேர் ஆட்டோ வந்து விட்டிருக்கிறது. பழ வியாபாரி அழைக்கிறார்.பறவைகள் உறங்குகிறது. பார்த்தீர்கள் குழந்தைகள் வந்ததும் உறங்கப் போய்விட்டது. வெயில் தங்கத்திருவாபரணம் அணிந்து கொள்கிறது. மகாகவி விளையாட்டு மைதானம் சீருடைகள் களையும் சிறுவர் சிறுமிகளை விரைவாக வாவென்று அழைக்கிறது.
இந்தத் தொகுப்பினை சில இடங்களிலிருந்து வாசிக்கக் கூடாது என்றும் சில இடங்களிலிருந்து வாசிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தேன். அதன்படி வாசிக்கக் கூடாத இடங்கள் பின் வருவன
- நவ நாகரீக யுவதிகள் வந்து நடமாடிப் போகும் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி. ரிலைன்ஸ் ஷாப்பிங்க் மால். அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி, நிர்மலா மனையியல் கல்லூரி, பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் அதன் சுற்று வட்டார முடிதிருத்தும் நிலையங்கள் தேநீர்க் குழம்பியகங்கள்.
- அரசு மருத்துவ மனை பிண பாதுகாப்பு அறை மற்று சவக்கூராய்வு அறை. மற்றும் அதன் சுற்று வட்டார முடிதிருத்தும் நிலையங்கள் மற்றும் தேநீர்க் குழம்பியகங்கள்.
- ஐந்து மற்றும் ஆறுமுனை தரை களங்கரை விளக்க விளக்கு அமைவிடங்களும் அதன் சுற்றுப்புற மலர் அங்காடிகள், பாணி பேல் பூரி வண்டிகள் நிற்குமிட
அமர்விருக்கைகள்.
4 ரயில் நிலைய ஆட்டோ கார் ஸ்டேண்ட் தொழிற் சங்கக் கட்டிடங்கள். அவர்களுடைய சிற்றுண்டி அரங்குகள்.
5 உயர் தர தொழிற்நுட்பத்துடன் குளிருட்டப்பட்ட கர்நாட சங்கீதம் மற்றும் நாட்டிய நிகழ்வுகள் மற்றும் பட்டமளிப்பு விழா அரங்கு மற்றும் அதன் பார்க்கிங் ஏரியாக்கள்..
இந்தத் தொகுப்பு வாசிக்க வேண்டிய இடங்கள் கீழ்க் கண்டவாறு பின்வருவன.
1. மக்கள் கூடும் தினசரி மாலை நேர கடைவீதி காய்கறிகடைகள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்களுக்கு அருகில் இருக்கும் சிமெண்ட் பலகைகள்
2. ரயிலடி தாணியங்கள் சேகரிக்கும் கூட் செட்
போர்ட்டர்களின் சயன அறை, ரிசர்வேசன் கவுண்ட்டர் வரிசைகள்
3 சிறார்கள் வார்த்தை பழகும் ஆயாவின் சத்துணவுக் கூடங்கள்,மற்றும் லேஅவுட் சிறுவர் பூங்காக்கள் குறிப்பாக அறிஞர் அண்ணா நினைவுப் பூங்காக் கள். அதன் சுற்றுப்புற தேநீர் அகம்
4 ஆண்கள் தையல் கடைகள் பின்னணியில் கட்டாயம் ஜெமினி, சிவகுமார், ஜெயசங்கருக்குப் பாடிய எஸ்பிபி அவசியம்
5 யுவதிகள் இரவு ஷிப்ட்டிற்குப் போகும் பஞ்சாலை, பின்னலாடை தொழிற்சங்கப் பேரவை கருத்தரங்கு வளாகங்கள் மற்றும் அவர்களுக்கான இ எஸ் ஐ மருத்துவமனை வாளாக சைக்கிள் ஸ்டேண்ட்கள்.
நான்காவது கவிதை நூலும் ஐந்தாவது அவருடைய நூலுமான இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஆத்மா நாமை எந்த விதத்திலும் ஞாபகப் படுத்தவே இல்லை என்பது பலமானதா அல்லது குறிக்கோள் நிறைவேற வில்லையா என அறியமுடியவில்லை. அவர் கவிதைகளின் உயர்ச்சி, விரவி வளையும் மௌன ஊர்ண்
வியப்புத் தருபவை. எல்லாச் சொல்லும் பொருளுக்கு உரியனவே என்னும் தொல்காப்பியம் அவருக்கு பாடிகார் டாக நிற்கிறது. கவிதையை எழுதி பிறகு நான்கு ஆணிகள் எடுத்து ஒவ்வொரு வாசகனின் முதுகு நெஞ்சுப் பகுதிகளி்ல் கையோடு உள்ளடித்துப் பதியவைத்துப் போகிறார். அப்படியான அவசியமான அழுத்தங்கள் வாசிப்பவனுக்கு ஏற்படுத்தலாமா என்பது கூட ஐயம்தான்.
வாசகனின் நிலை நம் சமூகத்தில் வேறு வேறாகப் பிரிந்து இருக்கிறது. சோதிட சூத்திரத்திலும் ஒன்பது கிரகங்கள் இருபத்திஏழு ராசிகளின் வைப்பாட்டிகள் பற்றித்துல்லியமாக அறிந்திருக்கும் சோசியனுக்கு ஒரு நவீன கவிதையின் தாமரை மலர் பற்றி அறிந்து கொள்ள முடியவொ முயற்சியோ எடுத்துக் கொள்வதில்லை.
ராணிதிலக் யாருக்காகவும் எழுதவில்லை என்பதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.நீங்கள் அதுபோலவே இனி மேலும் எந்த சமூகத்திற்காகவும் எழுதவேண்டாம் ராணிதிலக். நவீன கவிதையின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் தாத்பரியத்திற்காக அவை உருவாக்கி விரவிப் பரப்பிடும் சோலைவன வசந்தத்திற்காகவும் மகரந்த நறுமணத்திற்காகவும் ஆளற்றுப் பேசும் சிமெண்ட் பலகைகளுக்காகவும் எழுதுங்கள்.
ஒரு கவிதை எனப்படும் பளிங்குக் கல்வெட்டு
பிரிட்டிஷ் பிராந்தியை அருந்திய கவிஞன் **
அவன் தந்தை இறந்து
சில பகல்கள் இரவுகள் கடந்து விட்டன
அவன் தெரியாத ஊரில் இறங்கி விட்டான்
அங்கே அவனைப் போல நதி பாய்ந்து கொண்டிருக்கிறது
தந்தை சவமாக் கிடந்தபோது
அவன் பார்த்த பறவைகள் தற்போது
நதியின் மீது பறப்பதாக நினைத்துக் கொண்டான்
யாவரும் விரும்பும்
பிரிட்டிஷ் பிராந்தியை வாங்கிக் கொண்டான்
மதுவை அருந்தத்தொடங்கியபோது அந்தியாக இருந்தது
படித்துறையில் அமர்ந்த படி தன் கால்களைத் தொங்கவிட்டான்
அந்நதி அவன் கால்களை அணைக்கும்படி
பிறகு அடர்ந்த குகை போன்ற மூங்கில் தோப்பிற்குள்
நுழைந்த நதியின் படுகையில் அமர்ந்து குடித்தான்
கடும் போதைக்குப் பின் சொன்னான்.
இன்னும் சில கணங்களில்
அந்தப் பாம்பு கோரைப் புற்களைக் கடக்கும்
அந்தப் பெண்கள் தன் உடலை அந்நதியில்
புனிதப்படுத்துவர்
ஒரு தொழிலாளி தன் தோலை உரித்து அழுக்கைத் தேய்ப்பான்
ஆனால் இது பொய்
ஆனால் இது கனவு அல்ல
அந்தப்பாம்பு கோரைப்புற்களைக் கடந்தது
அந்தப்பெண்கள் நதியில் நீந்திக் கொண்டிருந்தனர்
தொழிலாளி தன் தோலைக் கழற்றிக் கொண்டிருந்தான்
ஆனால்
அந்தக் கவிஞன் இப்போது அங்கில்லை
அடர்ந்த மூங்கில் மரத்தின்
அடியில்
ஒரு புட்டியில் பாதி மது மிச்சமிருந்தது
அதன் மேல் கோப்பை கவிழ்க்கப்பட்டிருந்தது
(கவிஞன் **வியாகுலன்) பக்-53
இறப்பு வீட்டினுடைய ஆண்மகனின் தவிப்பு நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம்.எனிலும் பார்த்தி ருப்போம். ஆத்மாவிற்கு தேவை கொஞ்சம் துக்க இருப்பு. எடுத்து கீழே கொஞ்சம் பந்தல் காலோரமாகச் சாய்ந்து வைக்க வாய்ப்பில்லாத துயரம்.கொஞ்சம் கருநீல மது.நண்பன் பக்கத்தில் அவனின் துயரில் 90 சதவிகிதம் ஈரிழைத்துண்டுக்குள்ளாக அவனுக்காகப் பற்றிக் கொண்டிருக்கும் சோகம். அதுவே பெருஞ்சோகம். கொஞசம் கொஞ்சம் பழைய அணைப்பின் மீதமிருக்கும் சூட்டையும் கலந்து குடித்தால் தீரவா போகிறது வியர்த்துக் கருத்த தகப்பன் உடலின் நறுமணம்.
எளிமை. கொள்ளிக் கட்டையை விடவும் எளிமையான சொற்கள். மூன்று கொள்ளிக் கட்டைகள் பிணத்தின் வாசல் கதவின் நடவைக் காலருகில் செம்பூத்து எழுதிக் கொண்டிருக்கும் அவன் கதையையும் மூதாதையர்களின் வழி காப்பியத்தையும்.
ராணிதிலக் அசந்தர்ப்பமாகப் பார்த்து மொழியின் சிலேட்டை உடைப்பதில்லை. சமயம் பார்த்து மொழின் பென்சில் கூர்மையை உடைப்பதில்லை. ஏழைச்சிறுவனின் சட்டையில் பின் புறம் நீலத்தைப் பீய்ச்சுவதில்லை. அவனின் வீட்டுப்பாடக் குறிப்பேடுகளைக் கிழித்துத் துவம்சம் செய்வதில்லை.
எனக்கு இந்தத் தொகுப்பை வாசித்த போது அரவிந்தரின் புகழ்பெற்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. உணர்ச்சிப் பிரழ்வாமல் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தருகிறேன்..
The cosmic spirit
I am a single self all nature fills
Immeasurable, Unmoved the witness sits
He is the silence brooding on her hills
The circling motion of her cosmic mights.
I have broken the limits of embodied mind
And am no more the figure of a soul
The burning galaxies are in me outlined;
The universe in my stupendous whole.
My life is the life village and continent,
I am earth’s agnoy and her throts of bliss;
I share all creatures’ sorrow and content
And feel the passage of every stab and kiss.
Impassive, I bear each act and thought and mood
Time traverses my hushed infinitude
அது போலவே ராணிதிலக் கவிதையைப் பார்க்கலாம். தலைமுறை இடைவெளியின் இடைமறிப்பை விசாரணை செய்யும் ஈடு பெறாத மிச்ச மீதியின் வாழ்வின் பொருளை யார் சொன்னால் என்ன? சந்திரபாபு சொன்னால் என்ன? ஜேம்ஸ் வசந்தன் பாடினால் என்ன? எஸ்.எஸ் ராஜேந்திரன் தமிழ் வசனத்தில் சொன்னால் என்ன ?
என் கவிதையைப் பற்றிய ஒரு சிறு வரையறை
கறுத்துத் துயரார்ந்து வறண்டு இறுகி அந்த மலை
வாழ்கிறது தனியாக
அந்தப் பறவை அவ்வப் போது தன் உதிர்ந்த
இறகுகளை நினைத்து வருத்தப்படுகிறது
ஆழமான அந்த ஈரமற்ற குளம் தன் கனவிலிருந்து
இன்னும்விடுபடவில்லை
அந்தப் பசுமையான மரம் எப்போதும் பழுக்கும்
இலையை மட்டும் விரும்பும்
அதோ ஒரே காலத்தில் சந்திரனும் சூரியனும் சஞ்சரிப்பது
உன் பிரதேசத்தில்தான். -பக்-15
தொகுப்பில் உள்ள அனைத்துக்கவிதைகள் பற்றியும் எழுதத்தான் விருப்பம். அது புத்தகம் பற்றிய அவதானிப்பை எழுதும் தர்மத்தை மீறுவதாகும். ஒரு கவிதை பற்றி எழுதியபடியே செல்லலாம். வலிய விதி பயணப்படுவது போல. எளிய தர்க்கம் கூடவே பயணப்படுமே அப்படியாக. தர்க்கமும் மோன நிலையும் உடையாத தனிமையின் ஊடலும் நவீன வாழ்வின் விசாரம். திரும்பத்திரும்ப பொழுதின் வெளிச்சப் படிமத்தை உருப்போடுதல் சுகமே.
தர்க்கத்தை போத மனமோ அபோதமனமோ நீட்டித்துச் செல்தலும் கூட ஒரு அயர்ச்சியற்ற காமம்தான். ஒரு நிலையில் முடித்துக்கொடுத்து ஆள் அரவமற்ற பேருந்தை அந்த அதற்குரிய பொந்தில் நுழைக்கும் போது உறங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையத்திற்குச் சொந்தக் காரர்களான துறவிகளைக் கேட்டுக்கொண்டா நாம் நிறுத்தி வைக்கிறோம். சில நாய்களைத் துரத்துகிறோம். யாரையும் தொந்தரவு செய்யாமல் அழுக்குத் துணிப் பிரதிகளை படியெடுத்துக் கொண்டிருக்கும் அவளையும் அல்லவா வெளியேற்றுகிறோம். அவளுக்கு என்ன போக்கிடமாக இல்லை. புகழ் பெற்ற வில்லியம் பிளேக் கவிதையோடு முடிக்க விரும்புகிறேன். அவருடைய
songs of innocence and of experience தொகுப்பிலிருந்து
The blossom
Merry, merry sparrow!
Under leaves so green;
A happy blossom
Sees you, swift as arrow,
Seek your cradle narrow
Near my blossom
Pretty, pretty robin!
Under leaves so green;
A happy blossom
Hears you sobbing, sobbing
Pretty, pretty robin,
Near my bosom
இந்தத் தொகுப்பில் உள்ள 52 கவிதைகளுக்கும் தலா பத்துப் பக்கம் என சில நூறு பக்கங்கள் எழுதலாம். அது நூல் அறிமுக கண்ணியத்திற்குப் புறம்பானது. ஒவ்வொரு கவிதையும் கடலுக்குள் மிகச் சரியான அளவிலான கலைவையுடன் துரித கதியில் இறுகிக் கொள்கிற காங்கிரீட் தூண்களை உள் இறக்கி நிறுத்துவது போன்று நிறுத்தியிருக்கிறார்.
அநேகமாக இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு ஆத்மாநாம் சொர்க்கத்திலிருந்து சொக்கநாதன் வாயிலாக வந்து போக வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பு அமையும் பட்சத்தில் அவரை வாசிக்கச் சொல்லி சொக்கிப் போக வைக்கலாம். ஒரு தொகுப்பில் ஒரு கவிதையில் மொத்தக் கவிதையின் பிரமாண்டத்தை எழுப்புவதும் மொத்த கவிதைகளின் பிரமாண்டத்தை தன் வாழ்நாள் இருப்பை அறிவிப்பதும் நவீன கவிதையின் அடர்த்தி.
ஆத்மாநாமின் ரோஜாபதியன்களும் ராணிதிலக்கின் தாமரைகளும் வேறு வேறு. ராணிதிலக் அறிமுகம் செய்யும் கவிஞன் சமகாலத்தின் பளு தூக்கி. அவரின் மயில்கள் யாவும் நம் குடில்களில் மேய்கின்றது. இனி எந்த ஜவுளிக் கடைக்காரனும் மயில்களைக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேசிய கற்பிதத்தின் மொழியில் ஒரு பறவை மழைக்காலத்தை சிறகு விரித்துக் கொண்டாடுகிறது.
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
பக்-71 ரூ.60-
கவிஞர். ராணிதிலக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக