கனக தூரிகாவின் இரண்டாவது நாவல் “கால் புழுதி”
முன்னம் காலத்தில்
கைகளாக
இருந்த கால்களின்
புழுதி....
இளஞ்சேரல்
காவல் கோட்டம் நாவல் வெளிவந்த
போது தமிழ் நாவல்ச்சூழலி்ல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எஸ்.ராமகிருஷணனும்
ஜெயமோகன் முக்கியமான விவாத்தைத் துவக்கி வைத்தார்கள். சு.வெங்கடேசனின்
ஒன்பதாண்டுகளின் கடுமையான உழைப்பின் காரணமாக வெளிவந்த அந்த நாவல் வெறும் தகவல்கள்
மற்றும் வரலாற்றுக்குறிப்புகள் தான் இடம்பெற்றுள்ளது. நாவலுக்குரிய எந்த அம்சமும்
நுட்பமும் விவரணையும் இல்லை என்பது எஸ்.ரா வின் வாதம்.பிற்பாடு ஜெயமோகன் அந்த
நாவல் முழுமையடைந்த நாவல் என்றார். காரணம் அந்த நாவலில் வரும் மனிதர்கள்
உபயோகப்படுத்திய போர் உத்திகளும் அவர்களின் புலன் அறிதல் நுட்பமும் தாக்குவதற்கு
முன்பாக அவர்கள் எடுத்துக் கொள்ளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வெறும் தகவல்கள்
என்று கொள்ள முடியாது என்றார். பிறகு வழக்கம் போல விவாத மேடை சார்பில் நாவலுக்கு
தகவல்கள் அவசியமா அவசியமில்லையா. என்பது பல மூத்த தலைமுறையினர்களின் நாவலை வைத்து
விமர்சனம் செய்யப்பட்டது. பிற்பாடு இருவரும் உறுதியாக தத்தம் கருத்துக்களில்
இருந்தார்கள். பிற்பாடு சாகித்ய அகாடமி விருது சு.வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டதும்
அமைதியான சூழல் ஏற்பட்டது. நடுவர் குழுவில் இருந்த
தமிழ்நாடன்.சு.செல்லப்பன்,குறிஞ்சிவேலன் ஆகியோர் இந்த நாவலின் பிரமாண்டமான
தன்மையைப்போற்றாமலோ கொண்டாடமலோ இருக்க முடியாது என்றார்கள்.
அது போலவே இருபத்தியோரம் நூற்றாண்டின்
தமிழ் நாவல்களின் பெரும்பரப்பில் பெண்கள் எழுதிய நாவல்கள் ஏற்படுத்திய பாதிப்பு
மிக அதிகம். குறிப்பாக சிறுபான்மை சமூகத்திடமிருந்து வந்த நாவல்கள் மற்றும் தலித்
படைப்பாளர்களின் நாவல்கள்,கடலோர மக்களின் வாழ்க்கை,அரசியல் சமூக மேம்பாட்டு
நாவல்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம்.
மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம்
பெற்றுக் கொண்ட அரிய கலை வடிவம் நாவல். மனித சமூக கலாச்சார வாழ்வின் ஒரு சாரத்தின்
தொகுப்பு.நிலம் வாழ்வு உயிர் தேய்ந்த கழிந்த காலத்தின் ஈரமான அனுபவங்களைத்
திரும்பத் திரும்ப நினைவுகளில் திளைத்துக் கொள்கிற அனுபவங்கள் ஒரு மெலடியான
மெல்லிசைப் பாடல் ஒரு நாள் முழுக்க நம்மை கொஞ்சம் அசை போட வைக்கிறது எனில்
பத்தாண்டுகளின் நாட்குறிப்புகள் எத்தனை உணர்வுகளைத்தரும் அதுவே நாவலாகிறது.
நாவல் வடிவம் இந்திய
சுதந்திரப் போராட்ட காலத்தில் தோன்றியது. கருத்து சுதந்திரம் நெருக்கடியில் இருந்த
பொழுது மறைமுகமாக நாட்குறிப்புகள் எழுதப்பட்டது. பெருநாவல் வடிவத்தில் எழுதப்பட்ட
அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் பிற்பாடு பிரபஞ்னால் வானம் வசப்படும்
என்னும் அற்புதமான நாவல் ஆனது.
நம் வாழ்வில் தினசரியும்
அனுபவிக்கும் இன்பங்களையும் துன்பங்களையும் அகர வரிசையோ ஆரோகணம் அவுரோகணமாகவோ
எழுதி வைத்தால் அதுவே பிற்காலத்தின் நினைவோலையாகிறது. புதிய
தொடர்பு,இழப்பு,வருவாய், கை நழுவிப் போனைவை எல்லாவற்றையும் பதிவாக்கி
நாட்குறிப்புகளை எழுதி வந்தால் அவ்வெழுத்தின் வழியாக நாம் அனுபவித்த சித்திரங்களின்
நீட்சியை நீர்க்குமிழிகளை சில வருடங்கள்
கழித்து வாசித்தால் கிடைக்கும் பேரனுபவமே நாவல் என்பதாகிறது. கழிந்த வாழ்வின்
திரும்பப் பெற முடியாத நேரத்தையும் காலத்தையும் நம் எழுத்தின் மூலமாகவே
திரும்பவும் நினைத்துநினைத்து இன்புறமுடியும் வாய்ப்பை நாவல் தருகிறது. அந்த
வகையில் கனக தூரிகாவின் நாவல் சில காட்சிகளை நம் முன் நிறுத்துகிறது.
கசப்புகளை பதிவு செய்வதற்கு
யாரும் விரும்பு வதில்லை. அந்த மறக்கக் கூடிய நினைவுகளை மறுபடியும் உரு போட்டுப்
பார்ப்பதின் ஆக்கமே நாவலுமாகிறது. சுவராசியமான தமிழ் நாவல் வடிவங்களில் பெரும்
மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தவர்களில் முக்கிய மானவர்களாக கல்கி, நா. பார்த்த
சாரதி,அகிலன், ஜெயகாந்தன், ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். பெண் எழுத்தின்
புரட்சியாக எழுதியவர்களில் ராஜம் கிருஷ்ணன்,திலகவதி, சிவகாமி, சல்மா ஆகியோர்
ஒவ்வொரு காலகட்டத்தின் வளர்ச்சிப் போக்குகளின் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை
அனுபவங்களை எழுதி னார்கள். நாவல்
உருவாவதின் களங்கள் யாவும் நில மதிப்பீடுகளால் உயர்ந்த மனித உணர்வுகளும் அவை
தத்தம் ரத்த உறவுகளுடன் சொத்துத் தகராறு நிலத்தகராறு செய்து கொள்ளும் சச்சரவுகளே
நாவலாகப் பேசப்பட்டது.
அதன் இழப்புகளுமே அதிகமாக திரும்பத்திரும்ப வெகு சன பத்திரிக்கைகளில் பிரசுரம்
செய்யப்பட்டது. நடுத்தரமக்கள் இப்படியாக சொத்து சேர்ப்பதில் தான் குறியாக
இருப்பார்கள் என்று மனச் சித்திரத்தை உருவாக்கினார்கள்.
கனக தூரிகா இயல்பிலேயே அந்த மாயைகளிலிருந்து இரண்டு நாவல்களிலிருந்தும்
விடுபட்டுள்ளார்.
இந்தியாவின் கலாச்சார அரசியல்
அதிகார நெருக்கடிகள் மூலமாக சரிந்த பல தலைமுறைக் குடும்பங்களின் சிதைவுகள்
குறித்து நாவல்கள் பேசிய களத்தையே கனகாவும் தேர்ந்தெடுக்கிறார்.
பொருள் தேடியும் பொருளை
விளைவிக்கவும் சந்தைப் படுத்தவும் மனிதன் அலைந்தலைந்தான். கலை நுட்பமற்ற பொருள்கள்
காலத்தால் இயல்பாகவே காலாவதியாகிப் போனதை கனக துரிகா குறிப்பிடுகிறார். மனிதன் தன்
தேடலின் விதி கட்டளைப்படியாக புதிய புதிய கலாச்சாரங்களை சட்டதிட்டங்களை அவன்
உருவாக்கினான். ஒன்றுக்கு ஒன்று நேரெதிர் என்னும் சார்பியல் கொள்கையின் படி மனிதனை
இயக்கும் அறிவு வெளி அது போலவே புதிய அணுகுமுறையும் நெருக்கடிகளும் ரத்த
சம்பத்துடன் ஏற்பட்டது அவனுக்கு.
கனக தூரிகாவின் நாவலில்
குண்டு வெடிப்பின் மையம் பற்றிய நாட் சித்திரங்கள் வந்து போகிறது.
இந்திய மதசார்பின்மை மற்றும் சகிப்புதன்மை கலாச்சாரத்திற்கு ஊறு விளைந்ததோ
அல்லது நல்லது விளைந்ததோ தெரியாது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு நிகழ்ந்த
வன்முறைகள் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியதை யாரும் மறக்க முடியாது. சிறுபான்
மையினர் வாழ்வும் குடும்பச் சிதைவுகளும் 90 களுக்குப் பிறகு முக்கியமான தவிர்க்க
முடியாத சம்பவங்கள். இந்தக் காலங்களில் தான் நாடும் உலகம் முழுவதும் குண்டு
வெடிப்புகளும் நிகழ்ந்தது. தமிழகமும் கோவையும் அமைதி பூமி பூங்கா என்றெல்லாம்
பேசியது காற்றில் கரைந்து இங்கும் நிகழ்ந்தது வன்முறை.
துயரமான நடந்திருக்க வேண்டிய
அவசியமே இல்லாத சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்கள் அப்பாவிகள். அவர்களில்
குழந்தைகள் பெண்கள் அதிகம். சாதாரண கூலி தொழிலாளர்கள். சம்பவங்களுக்குப் பிறகு
இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் நிரந்தரப் பிரிவினை ஆனது. பணிகளிலிருந்தும்
இணக்கமான உறவுகளிலிருந்து இரு மதத்தவர்களும் தம்மைத் தவிர்க்கத் துவங்கினார்கள்.
கோவையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இசுலாமியர்களின் வர்த்தகம்
தடைபட்டது. கேரளத்து டனான வியாபாரம் விழுந்தது. இந்தப்பின்னணியில் தான்
தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு மொழிகளில் பெரும்பாலான படைப்புகள் மத நல்லிணக்கத்தை
வலியுறு த்தி எழுதினார்கள். பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலும் ஆதிக்கவாதிகளின்
எண்ணம் நிறைவேறாதவர்கள் சார்பிலும் எண்ணம் நிறைவேறியவர்கள் சார்பிலும்
படைப்பிலக்கியம் வளர்ந்தது. கனக தூரிகாவும் தனது நாவலில் நினைவுட்டுகிறார்.
100 சதவிகிதம் மத சார்பின்மையை
வலியுறுத்தியும் சிறுபாண்மையினரின் கோபமும் தார்மீக அடிப்படையில் நியாயம்தான்
என்றும் எழுதப்பட்டது.
கனக தூரிகா அதே சம்பவத்தை
வைத்து 15 வருடங்களுக்குப் பிறகு “கால் புழுதி” நாவலை எழுதியிருக்கிறார். கீரை விற்கும் பாட்டிகளை நான் இப்போதும் தினமும்
ஐந்தாறு பேரைச் சந்திக்கிறேன். ஆண்களும் விற்கிறார்கள். சமூகத்தின் இளப்பமான
சொலவடை அது. கீரை விக்கத்தான் போகணும் என்பார்க்ள. தன் நிலைமையைச் சொல்லும் போது
உபயோகிக்கும் சொலவடை அது. அந்தவ் வார்த்தையையே நாவலின் பின் களமாகத் தேர்வு
செய்தது
அற்புதமான விசயம் எனக் குறிப்பிடத் தோன்றுகிறது.
காலத்தின் மறக்க முடியாத பதிவுகள்
ஊடாக வந்து போகிறது. ராஜா காலத்துக் கீரை. கண்ணிக்கானம் என்னும் வரிகட்டித்தான்
விளைவிக்க வேண்டும். இன்று ஏழு ரூபாய்க்கு ஒரு கத்தை கிடைக்கிறது. அதில் பேரம்
பேசாமல் வாங்க வேண்டும்.
அபார்ட்மெண்ட்டில் வாழ்வு,
நிறுவனங்களின் பணி சார்ந்த மக்கள் சந்திப்புகள், பயணங்கள்,உயர்வு பிரச்சனைகளும்
சந்தித்து ஒரு பெண் உயரத்திற்குச் செல் வதோ அல்லது வாழ்வை வெற்றி கொள்வதோ சாதாரண
மானது அல்ல. நாவலில் கீரை என்பதின் குறியீடு இவ்விடம் மனித வாழ்வின் ஏற்ற
இறக்கத்தைப் பதிவு செய்கிற படிவமாக இருக்கிறது. வரி கட்டி விளைவித்த கீரை இங்கு
தெருவெல்லாம் கூவி விற்கக் கிடைப்பது போலவே பல சுதந்திரங்களை நாம்
பெற்றிருக்கிறோம்.
சிறுமியின் தன் வாழ்வில்
அதிசயித்துப் பார்க்கும் முதல் திருமண நிகழ்ச்சியின் சித்திரங்கள் அனுபவித்து எழுதப்பட்டிருக்கிறது.
தன்னுடைய உறவுகளின் குணாதி சயங்கள், மனப் போராட்டங்கள் என்று ஒவ்வொரு அத்தி
யாயங்களாக செல்லும் காட்சிகளில் மனிதர்களின் இயல்பான குணத்தை அப்படியே பதிவு
செய்திருக்கிறார்.
குண்டு வெடிப்பிற்குப் பிறகு
தங்க நகைப் பட்டறைகளில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அந்த சமயத்தைப் பயண்படுத்தி
நிகழ்ந்த கொள்ளை. ஆபரணங்கள் செய்வதற்கு பெறப்பட்ட தங்கத்தை குண்டு வெடிப்பு
சம்பவத்தைப் பயண்படுத்திக் கொண்டு போய்விடுதல் போன்ற தவறுகளையும் அவர்
குறிப்பிடாமல் இல்லை.
தமிழ்க்குடும்பங்கள்
ஒவ்வொன்றும் தேசம் தழுவிய பிரச்சனைகளில் சிக்குண்டு பிற்பாடு தாக்குப்பிடித்து
எப்படியெல்லாம் மேல் நோக்கி எழுந்து வருகிறது என்பதை சிறு சிறு அத்தியாயங்கள்
மூலமாகவும் சம்பவங்கள் மூலமாகவும் உணர்த்தியிருக்கிறார்.
நாவலை விமர்சனமோ அறிமுகமோ
செய்திடும்போது நாம் முழு அளவிலான கதையின் மையத்தையோ, அந்நாவலின் முக்கிய
இடங்களையோ முழுவதும் தெரிவித்து விட முடியாது.
நாவல்களில் இந்தியத் தன்மை
வாய்ந்த நாவல்களை எழுதியவர்களாக அறியப்படுபவர்களும் அதுபோலவே அவர்களின் போற்றப்
படும் படைப்புகளும் முக்கியமானவை. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பி.ஏ.கிருஷ்ணன்,
சா.கந்தசாமி,நாஞ்சில் நாடன்,சுப்ரபாரதி மணியன், போன்ற முக்கியமான ஆளுமைகளின்
நாவல்கள் பதிவு செய்யும் இடங்களை கனக தூரிகாவின் நாவலும் செய்கிறது.
சமீபத்தில் இளையதலைமுறை
நாவலாசிரியர்கள் குறைவாகவே வெளிப்படுகிறார்கள். கனக தூரிகா அந்த இடத்தை தேர்வு
செய்ததிற்குப் பாராட்டலாம்.2000 த்திற்குப் பிறகான தமிழ்நாவல்களின் வளர்ச்சி அபாரமான இடத்தை
அடைந்திருக்கிறது. தமிழின் எல்லா திசைகளிலிருந்தும் நாவல்கள் வந்துவிட்டது. கடலோர
மாவட்டங்களின் வாழ்வு பற்றிய நாவல்கள் வந்திருக்கிறது. வேளாண்குடி மக்கள் வாழ்வின்
பின்னணியைப் பேசுகின்ற நாவல்கள் வந்திருக்கிறது. வரலாற்றின் அழுத்தங்களை பதிவு
செய்யும் நாவல்கள். குறிப்பாக மிக கனமான தொகுப்புகளாகவும் நாவல்கள் வந்து
கொண்டிருக்கிறது.
கனக தூரிகாவின் இந்த நாவல்
முக்கியமாக தங்க நகைப் பட்டறைகளின் பின்னணியையும் எழுபது ஆண்டுகால வாழ்வுப்பின்னணி
கொண்ட குடும்பத்தின் ஏற்றத்தாழ்வுகளை அலசுகிற நாவலாகவும் இருக்கிறது.
தங்க நகைப் பட்டறைத்தொழில்கள் நசிவதற்கும் அதன் முக்கியத்துவங்கள் இழந்ததை
முன்னிட்டு மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல ஏற்பாடுகளை செய்து வந்தது.
அப்படியான திட்டம் ஒன்று தான் “கிளஸ்டர்“எனப்படும் கூட்டுறவு முறை. அதாவது
ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் கூட்டுறவு சங்க உற்பத்தி முறைமையை அடியொற்றும் அந்த
அமைப்பின் மூலமாக வேலைவாய்ப்பு,பணி உறுதி,காப்பீடு.அவர்களின் குழந்தைகளின் கல்வி,
குடியிருப்பு, சுகாதாரம்,சுலபமான வங்கிக் கடன் போன்றவற்றை உறுதி செய்யும் விதமாக
பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியதுதான் கிளஸ்டர் முறை. இந்தத்திட்டத்தை ஏற்றுக்
கொள்கிற அளவில் சில தங்க நகைப்பட்டறை தொழிலாளர் சங்கங்களும் ஏற்க முடியாது என்கிற
அளவில் சில சங்கங்களும் செயல்படுவதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
தங்க நகைப் பட்டறைத்
தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது இது பற்றிய பேச்சு வார்த்தையை இரு
சாரர்களும் துவக்குவார்கள் பிறகு அது ஒருமாதம் இருமாதம் போய்க்
கொண்டிருக்கும்.பிறகு வேறொரு பெரிய பிரச்சனை வெடிக்கும். பிற்பாடு அரசியல் மாற்றம்
வரும் கிளஸ்டர் திட்டத்தை அப்படியே குப்பைக் கூடையில் போட்டு விட்டு போய்விடுவார்கள்.
நாவலில் பாதிக்கப்பட்ட அல்லது
கதாபாத்தி ரங்களின் இரண்டு குடும்பங்களைப் போன்ற குடும்பங்களை கோவையில் வாழ்ந்த
யாரும் அறிவார்கள்.
எல்லாமே பரிச்சயமான மனிதர்களாக இருக்கிறார்கள்.
நான் அறிந்த குடும்பம் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மூன்று
குழந்தைகள் அதில் இரண்டு பெண்குழந்தைகள்.கடைசியாகப் பிறந்த குழந்தை தங்க விக்ரம்
மாதிரியான ஆண்குழந்தை. எந்த நெருக்கடியும் தராத வாழ்வு.நல்ல நகைப் பொன் கலைஞன்
அவர். ஒரு சமயம் தான் நகை செய்வதற்காக வாங்கி வைத்த நகை எப்படியோ தொலைந்து
போய்விடுகிறது. அதிர்ச்சி தாள முடியவில்லை. மனமெல்லாம் அச்சம். பதற்றம். ஒரு வித
அவமானம்.நாளை எப்படி நகை செய்யக் கொடுத்த கடை முதலாளியின் முகத்தில் விழிப்பது.
எப்படி இந்த இழப்பை ஈடுகட்டுவது புரியவில்லை. வழக்கம் போலவே நகை செய்யப்
பயண்படுத்தும் இரசாயனத்தை அருந்தி உயிர் விடுகிறான். அந்த மூன்று குழந்தைகளை
வைத்துக் கொண்டு அவள் என்ன செய்வாள் பாவம் என்று அந்தப் பாவி நினைக்கவேயில்லை.
அவனுக்கு முன்னால் இருந்த அச்சம். அந்தத் தொழிலுக்கே இருக்கும் அவசர நெருக்கடி.
பிறகு ஆவதென்ன. அந்தப் பெண்மணி
தன் குழந்தைகளுக்காக வாழ முடிவெடுக்கிறாள். அந்த அபலையின் நிலையறிந்த அப்பகுதி
மக்கள் தைரியம் சொல்கிறார்கள். தன் இருபெண்களையும் மகனையும் வளர்க்கிறாள். அவ்விரு
பெண்களுக்கும் காலத்திற்கு திருமணம் செய்து வைக்கிறாள். மகனுக்கு இப்போது பெண்
பார்த்து வருகிறாள். வணிக வளாகத்தில் துப்புறவு பணியாளர் பணி. அப்பெண் நிலை கண்டு
வழங்கப்பட்ட பணியை வைத்து தனது குழந்தைகளை ஓரளவிற்குப் படிக்க வைக்கிறாள்.
அப்பெண்ணுக்குக் கிடைத்த முதல் கூலியின் அளவு இருபது ருபாய். வாடகையில்லாத சிறு
அறையை அப்பகுதி மக்கள் அவளுக்கு அளித்து உதவிட
இந்தப் பதினெட்டு ஆண்டுகளை ஒரு காகிதத்தைக் கிழித்து எறிவது போல எறிந்து
வீசிவிட்டு இன்றும் தன் பேத்திகளை சீராட்டி விட்டு இப்பொழுதும் அதே துப்புறவு
பணியை செய்கிறாள்.தற்போதைய சம்பளம் 150 ரூபாய். இந்த இருபது ருபாயில் துவங்கிய
வாழ்வை 150 ருபாய் வரும்போது அவள் வெற்றிகரமான தாயாக வாழ்ந்து காட்டியிருக்கிறாள்.
அதே சமூகம் அதே நாடு அதே ஊர். அதே மக்கள். அதே. வைசியாள் வீதி.
அது போக அப்பெண் விடுமுறை
நாட்களில் உயர் அலுவலர்களின் வீடுகளுக்குச் சென்று துப்புறவு மற்றும் துணிமணிகள்
துவைப்பது போன்ற வேலைகள் செய்வதின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை வைத்து “நகை சீட்டுகள்” போட்டு தம் பெண் குழந்தைகளுக்கு நல்ல
படியாக திருமணம் செய்து வைத்தை அந்தப் பகுதி மக்களே உறுதியைப் பாராட்டுவார்கள்.
இப்போது கேட்டாலும் அந்தத்
தாய் சொல்வாள். அவரு ஒரு நிமிசமும் யோசிக்கலை நகை காணும்னதுமே
பயந்துட்டாரு..இப்படியொது காரியத்தைப் பண்ணிட்டார். ஒரு கெடுதலும் யாருக்கும்
நெனைக்காத மனுசம்.என்பார்.
பிறகு அந்த நகைக் கடை முதலாளி பெருந்தன்மையாக “அவனே போய்ட்டான் விட்டுரும்மா
அந்த நகையப்பத்திப் பேசாதஅவனக் கொன்ன நகை போனாப் போகுதுன்னு” என்று விட்டுவிட்டதாகவும் சொல்வார்.
அப்போதும் கூட இந்தப்பெண் அந்த
நகைக் கான தொகையை தாம் தந்து விடத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்பெண்
உடலுக்கு வழக்கம் போல ஆங்காங்கு இருக்கும் வெறும் ஆண்கள் முயற்சி செய்து பாவ்லா
காட்டியபோதும் “அண்ணா பாருங்க.. எங்கொழந்தகளுக்குத்தான் இந்த வேலைக்கும் வர்றேன்னே
தவிர இதுக்காக இல்லை..என் வீட்டுக்காரரு என் மேல எத்தன நம்பிக்க இருந்திருந்தா
சட்டு னு செத்திருப்பாரு. இவ எப்படியும் குழந்தகளைக் காப்பாத்திருவான்னு தான
செத்திருப்பாரு. என்பிள்ளைகளை நான் என்ன நெனச்சிருந்தன்னோ அப்படி
வளர்த்துவேன்..இந்த மாதிரி பொழப்புக்கு மட்டும் போகமாட்டன்“என்றார் உறுதியாக.
நாவல் பேச வேண்டிய முக்கிய
இடமே அரசியல் தான். நாவலில் நாவலாசிரியரின் சுயம் சார்ந்த விமர்சனம் இல்லை. சமூக
விமர்சனம் ஒரு களம் சார் நாவலுக்கு மிக முக்கியம். கால் புழுதி நாவல் களம்
சார்ந்து உழைத்த பெண்ணின் எல்லா உணர்வுகளையும் பேசும் நாவல்
நம்முயை எதிர் நிலை இருப்பு அரசியல்
காரணங்களுக்கு நாம் வாழ்வை பலிகொடுத்து வருகிறொம்.
அரசியல் சூழ்ச்சிகளை நாம் அம்பலப் படுத்துவதின் வாயிலாகவே ஒரு கலை தன்னை மேலும்
வளர்த்துக் கொண்டு செல்லும். நாவலுக்கு முக்கியமானது தர்க்க புர்வமான அணுகு முறை
குறைவாகவே இருக்கிறது. சம்பவங்களின் மீதான எதிர்வினைகள் இல்லை. புராதனமாகவே மனிதன்
எதிர் கேள்விகளுடன் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கேட்டு வருபவன். அவை நாவலில்
குறைவாகவே வெளிப்பட்டுள்ளதை குறிப்பிடுவது கனக தூரிகாவின் அடுத்த எழுதப் போகும்
மூன்றாவது நாவலில் மேலும் ஆழமாக செல்வதற்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக
தெரிவிக்க வேண்டியது ஒரு வாசகனாக எளிய எதிர்பார்ப்பு..
புனைவு வெளியை அதிக அளவு
நம்பாமல் எதார்த்த பாணி நாவல் எழுதியமைக்கு அவரைப் பாராட்டலாம். புனைவும் மீள்
புனைவும் எழுதுவதற்கு எந்த வாழ்க்கை நிகழ்ச்சியும் தேவையில்லையென்பதையும்
உணர்ந்திருக்கி றார். அவை மேலதிகமான கட்டு உரையாடல்களையே நிகழ்த்தும் வடிவம்
கொண்டது. தற்கால நவீன நாவல் எழுதுபவர்கள் விரும்பும் வடிவம் அதுவாக இருப்பதின்
காரணம் அவர்களுக்கு இந்த வாழ்வின் மீதும் அக்கறையில்லாதது மட்டுமல்ல நவீன வாழ்வின்
பாதிப்பு களின் மீதும் அக்கறையில்லையென்பதையும் கொள்ளலாம். காலம் திரும்பவும்
உண்மையான அறத்தை நோக்கியும் தீவிரமான இருப்பு குறித்து பரிசீலனை செய்தும்
வருகிறதின் வெளிப்பாடுதான் கனக தூரிகாவின் கால் புழுதி நாவலும். நாவல் முடியும்
இடம். மிக எளிமையாக ஒரு சாதாரண சம்பவம் மற்றும் உரையாடலுடன் முடிந்து மறுபடியும்
நாவலின் முதல் பத்தியை வாசிக்கச் சொல்கிறது. இங்கு கீரை மட்டுமல்ல நாமும் நம் சந்ததிகளும்
மிளகுக் காக மூன்னூறு ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்தவர்கள் நமக்குத் தெரியாதா கிள்ளுக்
கீரையின் அருமை..
ஆசிரியர்
கனக தூரிகா
வெளியீடு
சந்தியா பதிப்பகம்
பக்கம்-120
புதிய எண் 77
53 வது தெரு
9 வது அவென்யு
அசோக் நகர்
சென்னை 600 083
044.24896979
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக