புதன், 20 பிப்ரவரி, 2013

சி.மோகன் இரண்டாவது கவிதை நூல் ”எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை” குறித்து


நண்பர்களின் அறையும் சி.மோகனின் குடிலும்.

 

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை

சி.மோகன் இரண்டாவது கவிதை நூல் மற்றும் அவருடைய 12 வது நூல் குறித்து..

 

இளஞ்சேரல்

 

காப்பிய காலம் முதலாக நவீன செவ்வியல் பிரதிகள் வழியாகவும் இணைய நுலறிதல் வாயிலாகவும் உடலியற் காமத்தைக் கொண்டாடும் பேரிலக்கிய வடிவங்களையும் புராதன தோற் செவ்வியல் வடிவங்களைக் கூட நாம் சிற்றிலக்கியம் என்று தான் பேசுவதுண்டு.

      பிற்பாடு அச்சு சமய உயர்வு காலத்தின் உரை நடைகளிலும் பத்திகளிலும் காமத்தின் உயர்வுகளை எழுதப்பட்டது. ஊருக்கு நல்லது என்று உயர்த்தி உயர்த்திக் கட்டப்பட்ட கோபுரங்களின் பிரகாரங்களிலும் தூண்களிலும் சுவர்களிலும் காமத்தின் அவசியம் அழகு நுட்பம் பற்றியெல்லாம் தொடர்ச்சியாக மனிதன் தன் சமூகத்திற்குக் கற்றுக் கொடுத்தான். உயர்சாதி மற்றும் உயர் குடி அரசியல் நிலவுடைமைதார்களுக்குத் தான் காமம் அவசியம் என்று நிறுவிய வழக்காறுகளையும் மனிதன் இந்தக் காரியங்கள் மூலமாக காமத்தை விரிவாகப் பரவச் செய்தான். இலக்கியத்தினூடாகவும் எழுதவும் மறைமுகமாக இருந்த விசயங்களை தற்காலத்தின் ஆளுமைகளான கரிச்சான் குஞ்சுவும், தி.ஜானகி ராமனும், நாட்டார் வழக்காற்றியலில் கி.ராஜநாரா யணன் காமத்தின் நுட்பங்களைப் பற்றிப் பேசியிருக் கிறார்கள்.

         நவீன படைப்புகளில் காமத்தைப் பற்றிப் பேசுவதோ எழுதுவதோ கூட புனைவிலக்கியமாகத் தான் இணைத்துக் கொள்கிறார்கள். சி.மோகன் கவிதைத்  தொகுப்பு கற் சிற்பங்கள் பேசும் வார்த்தை களையும் மௌனங்களையும் மொழி பெயர்ப்பது போன்ற தொனியில் எழுதியி ருக்கிறார். உலகியற் பொழுதுகளிலும் காலத்தின் நிலையற்ற பறத்தலையும் பேசும் தத்ருபமான கவிதைகளை இவரிடம் நான் எதிர்பார்க் கவில்லை. தன்னுடைய அருபது வயதைக் கடந்த ஒரு ஆத்மாவின் உடல் வெப்பம் பற்றிய கவிதை ஆறு கண்டங்களின் உயிரினங்களின் உயிர்விருத்தி பற்றிய காப்பியமாக இருக்கிறது.

காம வண்ணங்கள்

பேச்சில் படர் பச்சை

எழுத்தில் சுடர் மஞ்சள்

காட்சியில் ஒளிர் நீலம்

படுக்கையில் கனல் சிவப்பு

அங்கீகார உறவில் வெள்ளை

மறுக்கப்பட்ட உறவில் கருப்பு

வகை வகையாய்

வகுக்கிறது சமூகம்

வண்ண வண்ணமாய்

வாழ்கிறது காமம்..

 

       மலிரினும் மெல்லியது காமம் என உணர்ந்தும் வாசித்துமிருக்கிறேன். அது ஒரு வண்ணம் என்கிற மோகன் கவிதை காமத்தின் அழியாப் புனிதத்தை அவர் கட்டமைக்கிறார். இயற்கையில் அவர் ஓவியராகவும் சிற்ப வடிப்பு அறிந்தவராகவும் இருந்ததால் தான் இக்கவிதை சாத்தியமாயிருக்கிறது எனலாம். காளமேகப்புலவர் இயற்றிய பல கொச்சையான ஆபாசமான பாடல்களை விடவும் இந்தக் கவிதையின் சித்திரம் உவப்பானதாகிறது. உடலின் இயல் வெப்பம் பற்றி எழுதாத கவியும் சொல்லும் உண்டோ. அறம் பொருள் இன்பம் எனப் பேசும் கூற்றுகளில் முக்கியப் படுத்துவது ஒரு நிலைக்காமம் குறித்த சொலவடைகளே. கம்பனிடம் சில உயர்வு நவிற்சியான சித்திரங்களை நாம் வாசித்திருக்கிறோம்.

 

ஏற்ற வளை வரி சிலையோன்

இயம்பா முன் இகல் அரக்கி

சேற்ற வளை தன் கணவன் அருகு

இருப்ப சினம் திருகி

சூல் தவளை நீர் உழக்கு துறை

கெழுநீர் வள நாட!

மாற்றவளைக் கண்டக்கால்

அழலாதோ மனம் என்றாள்!“

       ஒர். நீர்த்துறை.அங்கே ஒரு ஆண் தவளை. கருமுற்றிய நிலையில் ஒரு பெண் தவளையும் இருக்கிறது. இதைப் பார்த்த பெண் தவளைக்கு கோபம்.தனக்குப் போட்டியாக கணவனுடன் சங்கு இணைய வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த நீர்த்துறையைக் கலக்குகிறது. கரு முற்றிய  நிலை என்பதால் ஆண் தவளையுடன் கூட முடியாத ஆற்றாமை பெண் தவளைக்கு? இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சங்கு சேர்ந்து விட்டால்?சங்கு தன் இனம் சார்ந்ததல்ல என்பது தவளைக்குத் தெரியும் இருந்தாலும்  தன் கணவன் அருகில் சங்கு இருப்பதைக் காண பெண் தவளைக்குப் பொறுக்க இயலவில்லையாம். அதனால் நீர்த்துறையில் கலகம் செய்து கலக்குகிறதாம். இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடிய நாட்டைச் சேர்ந்தவனே இராமா ஆற்றலறிவு இல்லாத உயிர்களுக்கே இத்தைகய இயல்பு இருக்கிறது என்பது உன் தம்பிக்குத் தெரியாதா என்று சூர்ப்பனகை கேட்பதாக வரும் இக்கவிதையை சி.மோகன் காமம் கவிதை நினைவுட்டுகிறது.

         இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்

காமக்கூட்டம்..,       களவி1

      எனத்தொல்காப்பியர் களவியல் முதல் சூத்திரமாகச் முன்வைக்கிறார்.நவீன கவிதைகளின் வாயிலாக மட்டுமின்றி உலகியப் போக்கில் காமத்தினுடைய இயல்புகள் பற்றிய புதினங்களும் காட்சிகளும் மலினப் படுத்தப்பட்டுவிட்டதின் விளைவே இங்கணம் நாட்டில் சீரழிந்து வரும் பாலியல் கொடுமைகளும் வழக்குகளையும் நாம் கண்டும் காணாததமுமாக வாழ்கிறோம். அரசியல் திறம் எப்படித் தனித்த ஒரு வகை அவை சில மேட்டுக்குடிகளின் இன்ப நுகரலுக்கான வழிவகை என சில குடிமக்கள் கருதி அவ்விடத்து நுழையாமல் இருக்கிறதாலேயே அம் மேட்டுக்குடிகள் அரசியலை துவம்சம் செய்து அரசுப்பரிபாலனைகளை கட்டளைகளை யெல்லாம் தங்கள் விருப்பத்திற்கு இயற்றியும் சட்ட நிருமங்களையும் செய்து வைத்து விட்டனர். தற்போது ஒரு குடிமகன் எளிதி்ல் ஒரு காரியம் ஈட்ட முடியாது. அவனை அவன் நிருவிக்கொள்வதற்கு குறைந்த பட்சம் ஒரு குறு நிலப் போரோ சிலுவைப்போரோ செய்துதான் ஆகவேண்டும்.

       இது போன்றே காமத்தையும் சமூகத்தின் உளப்பாங்கிலிருந்து விடுவித்து அவை கூட மேட்டு சமூகத்தின் இன்பத்திற்கானது.அவை பாட்டாளி வர்க்கத்தின் இன்புறைக்கானது அல்ல.உன் பணி பாடுபடுவது பின் குடிப்பதும் வீழ்ந்து சாவதும் தான் உனக்குப் புணர்வதற்கான வாய்ப்பு இல்லை.ஆக உன் குடி யுயர குடி..உன் குடிகளை பெண்டாளை நாம் கவனித்துக் கொள்வோம் என்பதான திட்டமே தான் இம்மதுக்கடைகளின் ஆதிக்கம்.

       சி.மோகன் கொண்டாடும் விதம் அற்புதமானது. அவரைப் போலவே கம்பனும் பாடியதும் நினைவுக்கு வருகிறது.

 

நேர்இறை முன்கைபற்றிச்

சூர் அறமகளிரொடு உற்றசூளே..

“இம்மை மாறி மறுமை எய்தினும்

நீயா கியர் எங்கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே...

 

       உச்சகட்ட உச்சாடனம் எனும் தலைப்பிலான கவிதையில் சி.மோகனின் அசாத்தியமான மொழிப் பிரவாகமும் மையலின் ஆதிபரவசம் கொள்ளும் உச்சம் பதிந்த சொற்கள்.

எக்களிப்பின் உச்சகட்டத்தில்

உலகமீட்சிக்கான உச்சாடனமாக

தன் பரவசத்தை

ஓங்காரமாய் அறிவித்துவிட்டு

பிறிதோர் கனவுப் பிரதேசத்தின்

அழப்பினை ஏற்று

குதிரை மீது தாவியேறி

அதைக் கட்டியணைத்துப் பறக்கிறாள்

அலாதியாய் அவன்

 

என் கனவுப் பிரதேசத்தில்

திளைத்தும் களைத்தும்

மறையும் குளம்பொலியை

ஏக்கத்துடன் கேட்டபடியே

அயர்ந்திருக்கிறேன் நான்-   பக்-63

 

          2007 ல் வெளியான தண்ணீர் சிற்பம்கவிதை நூலுக்கு மிகச்சிறந்த வரவேற்பும் தமிழ்க் கவிதைக்கு முக்கியமான பங்களிப்பையும் செய்திருந்த சி.மோகன் தம்முடைய இரண்டாவது தொகுப்பை இப்போது தான் வெளியிடுகிறார். சக படைப்பாளர்கள் மற்றும் கவிதை விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்கள் கிடைத்திருந்தும் தமது கவிதை நூலை சற்றேறக்குறைய ஐந்தாண்டுகள் இடைவெளியெடுத்துக் கொண்டு வெளியிட்டிருப்பது

அவர் கவிதையின் மீது வைத்துள்ள ஆழ்ந்த ஈடுபாடு இத் தொகுப்பின் கவிதைகளினூடே நிகழ்த்திக் கொள்ளும் பயணத்தின் போது அறிந்து கொள்ள முடிகிறது.அருபது வயதைக் கடந்த மனிதனின் எளிய உணர்வுகள் குழந்தமைமிக்கவை யாகவே இருக்கும் என அறிந்திருக்கிறோம். ஒவ் வொரு வயதின் பதின்பருவங்களிலும் மனித எண்ணங்களின் குணாதிசயங்கள் நிலத்திற்கு நிலம் மனதிற்கு மனம் மாறுபடுகின்றன. எனினும் கவிஞனின் குணாதிசயம் குழந்தைமையிலிருந்து மேலும் குழந்தைமைக்குப் போகும் என்பதை வாழ்வின் ஈடு இழப்புகளை சந்தித்து முக்கால் தலைமுறையைக் கடக்கும் கவிஞனின் வாழ்வில் பார்க்கலாம். செழுமை மிக்க வளம் மிக்க மண் தானே செழித்தோங்கும்.அதற்கு யார் தயவும் தேவையில்லை. நாம் போய் அதற்கு உதவுகிறேன் பேர்வழி என்று எதுவும் செய்யாமல் இருந்தால் சரி.

       ஒரு வகையில் மண்வளம் மாதிரிதான் ஒரு வாழ்ந்து கெடுகிற குடும்பத்தின் கலாச்சார வளமும். சில தாத்பரியமிக்க சொற்களை வைத்திருக்கும் கவிஞனின் மொழி வளம் அவனைத் தொடர்ந்து வரும் கவி சந்ததிகளுக்கும் கவிச்சக்கரவர்த்திகளுக்குமாக ஊற்றையும் பாலையும் வார்த்துத் தருவதாகி வருகிறது. சைவ வைணவ இலக்கியங்கள், சித்தர் பாடல்கள்,சிவனடியார்கள், தமிழ் மருத்துவக்குறிப்புப்பாடல்கள், சோதிடக் குறிப்புகள், வானியல் சாசுத்தரக் குறிப்புகளில் எல்லாவற்றிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது யாவும் உடலுய்வதும் எல்லா வற்றிலும்  தம்மை அற்றுக் கொண்டு போய் ஏதோ ஒரு கூட்டின் கர்ப்பக் கிரகத்திற்குள் வைத்துக் கொள்ள விழைவதுதான். எளிய பற்றின் மீது எவ்வித பற்றும் இல்லா திருப்பதுதான் இறை நம்பிக் கைக்கும் முக்கியமாகிறது. மோகன் ஏற்கெனவே சிற்பங்கள் பற்றி துல்லியமாக அறிந்த கவிஞன் என்பதால் என்னவோ அவருடைய கவிதைகளில் சிற்பங்கள் பேசுகிறது. நம்மால் பேசுகிற சிற்பங்களைத் தவிர்த்தோ நாம் அழிந்தாலும் அழியாமல் பல நூற்றாண்டு களுக்கு வாழவிருக்கிற சிற்பங்களை நாம் பார்த்து வருகிறோம். அவைகள் ஒவ்வொன்றும் ஊரும் உலகமும் சயனத்தில் மிதக்கும் போது சர்வ நிச்சயமாக உறவாடியும் உரையாடியும் கொள்ளும் என்பதை ஒரு சிற்பி நிச்சயம் அறிவான்.அதுவும் கவிஞனுக்கு அவர்கள் உரையாடும் மொழியையும் அறிவான்.மோகன் சிற்பம் உயிர்ப்பவர். தண்ணீர் சிற்பம் வடித்தவர்.

 

காலாதீதமாய் புனையப்பட்ட

என் வேட்கையின் உருவென

பொலிவுற்றிருந்தது சிற்பம்

 

குருதியோடி நீர் விலக

உயிர்த்தது சிற்பம்

உயிர்ப்புற்றது வேட்கையின் மொழி

உயிர்த்தெழுந்தது மொழியின் வேட்கை

 

தனிமையின் மாயப்பிரதேசத்தில்

என் வேட்கையின் கோவில் நிர்மாணிக்கப்பட்டு

வீற்றிருக்கிறது சிற்பம்

மொழியின் குருதியால் வழிபட்டு

வியாபித்திருக்கிறேன் நான்-      பக்-45

 

        கவிஞனுக்கும் மாயத்திற்குமான உறவு இறுக்கமானது. அது போன்றே கடவுளுடான உறவும் அப்படியே. இன்மையின் மீது எப்போதும் காலமும் துரோகமும் பரம்பரையாக வரும் நம்பிக்கையின்மை யும் இப்படியாக பின் ஒட்டாக வரும் காமத்தின் ஊடுபாவும் எழுத்தாக மாறுகிறது. பாறையில் வெட்டி வெட்டி கீறிக் கீறி எழுதிய சித்திரங்களிலும் எங்காவது கொஞ்சமாவது ஓரத்தில் காமத்தின் ஈரம் நிச்சயம் இருக்கும். அரவிந்தர் தன் இளமைப் பருவத்தில் பாலபருவத்தில் காமம் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது.

Kamadeva

What is the heart of the valleys and hid by the roses

The sweet love lies

Has he wings to rise to his heavens or in the closes

Lives and dies?

 

On the peaks of the radiant mountains of we should meet him

        Proud and free

Will he not frown on the valleys? Would it befit him

        Chained to be?

 

Will you then spark of the one as a slave and a wanton

             The other too bare?

But god is the only slave and the only monarch

              We declare

 

It is god who is love and a boy and slave for our passion

             He was made to serve;

It is god who is free and proud and the limitless tyrant

             Our souls deserve.

    தொகுப்பில் மற்ற கவிதைகளின் நறுமணம் களைத்துக் கரையொதுங்கிய உடலின் அயற்சி.

வாழ்வினூடாக இன்பமொப்பியதால் சிதைவுறு

கிற இறந்த காலத்தின் வாய்மொழியாகவும் பதிவாகியிருக்கிறது.பெருநகரங்களின் தார்ச் சாலைகளை நாம் பற்றிக்கொள்வதும் அதனூடாக நம்மை உட்செலுத்தி இறுக்கங்

களில் சமைந்து பின் நம்மை நாமே தின்று அருந்தி உயிர்வாழக் கடவாயிருப்பதை மோகன் தன் அபாரமான கவித்திறத்தில் பேசுகிறார்.

பிரமிளின் பறவைகள் ஞாபகத்தில் வந்தாலும் இவருடைய கவிதையில் பறவையின் றெக்கை விசிர்ப்புக் காதில் விழுகிறது. நீங்கள் ஒரு முறை வாசியுங்கள்..

 

பெருநகரத் தார்ச்சாலையில்

சட்டென வீழ்ந்து

சல்லென நீந்தி

நீண்டதோர் கட்டிடத்தில் மோதி

சிறு விபத்துமின்றி மறைந்தது

ஒரு பறவையின் நிழல்   –பக்- 94

          கொத்து கொத்தாக உறவின் அடிப்படையின்றி உரசி நகர்ந்து தன் உயிரின் பிடியை இறுகப்பற்றியபடியே முகச்சலனமின்றி தன் கூடு நோக்கிப் போகிற பறக்கிற மனிதர்கள் ஞாபகம் வருகிறார்கள். கவிதையினுள் பாறைச் சிற்பமாக உருவாகும் இடமே நெருக்கமும் அதீத நெருக்கடியும்தான்.

        

அப்படியாகவே மேலும் ஒரு கவிதை

 

காற்றில் விழுந்த இலை

               சருகானது

குளத்தில் விழுந்த இலை

                 மீனானது

காற்றில் மிதந்த இலை

             பறவையானது-பக்-94

          காற்றில் மிதக்கும் வாழ்வை மனிதர்கள் அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. எனினும் மிதப்பதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் தருணங்கள் மாய வேட்டை என்றே சொல்லலாம். கவிஞனுக்கு தோன்றும் கற்பனையின் வெளியை அதிருபமாக வாசகன் கண்டடைய முயலும் போது கிடைப்பதென்னவோ ஏமாற்றம் தான். பல கவிதைகளில் சுயத்தின் அழகு மிளிர்வதை உணர முடியும். பல் துறைகளில் அனுபவமிக்க கலைஞனால் ரசிக்கப்படும் சித்திரங்களும் ஒப்பனைகளும் சொற்களாகும் போது அவை தருகிற ரசனையின்பமே தனி.சி.மோகன் தன் கவிதைகள் கொண்டு சிற்பங்களை வடித்தபடி யே நகர்கிறார். அனுபவமும் வயதும் சொற்களுக்கு வலிமையும் தருபவை. அவருடைய கவிதையொன்றை வைத்தே இக் கட்டுரையை முடிக்க நினைக்கிறேன். சுமார்  எழுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளில் மூழ்கும் போது நமக்கு வாய்க்கும் ரசனை முழுவதும் சிற்பங்களையும் ஒவியங்களையும் தரிசிப்பதாக வே அமைந்திருப்பது தான் மோகனின் கவித்துவம்.

 

மாயக் கவித்துவம்

 

மலைப்பிரதேசக் கனவுக்குடிலொன்றின்

வெளியில் கிடக்கும் கட்டிலின் மீது

அமர்ந்திருக்கும் என்னை நோக்கி

மரத்தடியில் நிற்கும் நீ

ஒரு கவிதை சொல்கிறாய்

ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்

உன்னைப் பார்க்காது

மரம் பார்த்திருக்கும்

என் அலட்சியத்திற்காக ஆதங்கப்படுகிறாய்

 

நானோ

உன் ஒவ்வாரு வரிக்கும்

மரக்கிளையின் ஒரு கொப் (ம்)பு

அசைந்தாடும் அற்புதத்தை

அதிசயமாகய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

 

             நாமும் அவருடைய கவிதைகளின் அற்புதத்தை வாசித்துப் பார்த்து உணர்ந்து கொண்டிருக்கலாம்.

வெளியீடு

நற்றிணைப் பதிப்பகம்

ப.எண் 123 ஏ. பு.எண்.243 ஏ

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

திருவல்லிக்கேணி

சென்னை-600005

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக