நிலத்துடனும் நீரினுடனும் பேசுகிறேன்
நிலத்தோடு பேசுகிறேன்.
ஏ.ஏ.பைசால் கவிதைகள் குறித்து
இளஞ்சேரல்
வரவேற்பு
முருங்கை மரம்
பூச்சூடியிருக்கிறது
அணில்கள்
கிளைவிட்டு கிளை தாவ
உதிர்நது
விழுகின்றன என் தலையில் பூக்கள்
பிரசவிக்காத
புழுக்களும்
சில பூக்களின் கருவறைக்குள்
ஆடு மாடுகள்
வந்தனவா
உன் கூந்தலைக்
கடித்துக் குதற
இல்லை
நீ இட்ட வேலி நல்ல
பாதுகாப்பு
அணில் மட்டும்
வரட்டும்
அணில் என் கூந்தலை
வருடும் போது
என்ன சுகம்
தெரியுமா முருங்கைத் தோப்பு ராசாவே
என்று என்னை
வரவேற்கும்
முருங்கைப்
பூக்கள் நிறைந்த தோப்பில்
இப்போது முகாம்கள்
கவிதைகளில்தான் காலமும் வரலாறும் எத்தனை
விதமான கவிதைகளை உருப்போட்டு உருப்போட்டுத் தம்மைத்திருத்தி எழுதியபடியே மொழியாக
உருவாக்கி எழுதிக் கொண்டு வருகிறது. வியப்பதா அல்லது மேலும் தீவிரமாக ஆழமாக
எழுதுவதா..காலப்பதிவுகளில் தான் எத்தனை
கட்டளைகள். அதற்கான தீர்வுகள். தீர்வுகளைப் பின்பற்றிடாவிடில் நிகழும்
நெருக்கடிகள்.நெருக்கடிகள் மூலமாக வரும் தாக்குதல்கள். தாக்குதல்கள் பிற்பாடு
குழுத் தாக்குதல்கள். அதுவே வளர்ச்சி பெற்று போராக மாறுதல். போர்கள் பிற்பாடு
ஆயுதங்கள். ரசாயன ஆயுதங்கள். யாவும் தீர்ந்த பிறகோ அல்லது எஞ்சியிருந்தோ இருப்பினும்
பிறகோ அன்றி முனை மழுங்கிய பிறகோ அன்றி வெறியாய்க் கொல்வதற்கான உடல்கள்
இன்றியோ யாவும் முடிந்த பிற்பாடு மனிதன் சமாதானத்திற்கு வருதல். இதுதானே மனிதனின்
தொழிற் நுட்பப் புரட்சியின் இலட்சணம்.
பெரும்பாலான சமாதான உடன்படிக்கைகள்
யாவும் மயானத்தில் அல்லது கல்லறைத் தோட்டங்களில் தான் நிகழ்த்தப் படுகிறது.
அவ்விடத்து எல்லாம் எலும்புக்கூடுகளை நடுமையாக வைத்துதான் பேச்சு வார்த்தை
நடத்துகிறார்கள்.
இந்த நூற்றாண்டின் மிக நவீனத்துவமிக்க
கண்டு பிடிப்புகளில் ஒன்று முகாம்கள். முகாம்களைச் சமைப்பதில் மேற்கத்திய
நாடுகளுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு கிழக்காசிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகள்
அறிவியல் வளர்ச்சி எனும் மாயையைக் கொண்டு வசியப்படுத்தி,சில வசதிகளைத்தந்து அடிமைப்படுத்தப் படுகிறார்கள். கவிஞர்
ஏ.ஏ.பைசாலின் மேற்கண்ட கவிதை இந்த முகாம்களுக்கு முந்தைய முருங்கை மரத்தோப்பை
நினைவு படுத்துகிறது.
தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுக்கவும்
அனாதையாக வானம் பார்த்துக் கிடக்கும் நிலத்தையும் மிச்சம் மீதி மக்கள் உதிரியாக
வாழ்ந்து கொண்டிருக்கும் எதிர்காலம் பற்றி பேசுவதாகவே இருக்கிறது.
இக் கவிதைகளில் பயண்படுத்தப்பட்ட கவி
மொழியானது. நிறுவனங்களுக்கு வாக்கப்பட்டுப் போய்ப் பிறகு ஈடு பெறாக் கடன்களின் செஞ்சோற்றுக் கடனுக்கு
எழுதும் வழக்கொழிந்த ரொமாண்டிசிசக் கவிஞர்களின் மொழியை விடவும் அற்புதமான மொழி. கவிதை
எது இது என்ன வடிவம் என்றறியாத தன் முனைப்பும் சுய அவதானிப்புமாக அழுக்கு மூடிய
வர்க்க முரண் தொடை இலக்கிய கவிஞர்களின் கவித்துவத்தை விடவும் அழகான கவித்துவம் அனைத்துக்
கவிதைகளிலும் மிளிர்ந்து காணப்படுகிறது.
அங்கே ஒரு கிழவர்
உடல் நனையாமல்
குடை பிடித்துச் செல்கிறார்
இந்தச்
சிறுமழையின் கற்களால் எறிந்தால்
என் குடை உடையுமோ
என்று ஒரு கிண்டல்
சிரிப்பு
பொக்கை வாய்க்குள்
ஒரு பூகம்பம்
நிலமெங்கிலும்
தேங்கி நிற்கும்
நீரின் மேல்
மழை துளிகளாக
விழுகின்றன
நீர் முழுவதும்-
பக்-27 (நீர் முலை
எனும் நெடுங்கவிதையில் ஒரு பகுதி)
இந்தத் தொகுப்பு
முழுக்க பதிவாகியுள்ள கவிதைகள் பல இலங்கைப் பற்றி பேசுகிறதா அல்லது பிரான்ஸ்,
கொரியா, ஜப்பான், இங்கிலாந்து பற்றி பேசுகிறதா என்கிற ஐயம் ஏற்பட்டது. காரணம்
அவ்வளவும் நேர்த்தியான அற்புதமான அழகியல் படிமங்கள். இலகுவாக இலங்கைத் தமிழ் அன்றி
முழுக்கவும் தமிழகத்தின் அரசியல் தமிழ்
நிலத்தின் அரசியல் வரைபடத்தின் வழக்கு மொழியில் எழுதப்பட்டி ருப்பது வியப்பாக
இருக்கிறது.
நிலத்தை இழப்பவர்கள் அல்லது
விற்பவர்களுக்காகவே மூன்று நூற்றாண்டுகளாக ஆண்ட அரசுகள் அதற்கென துறைகளை உருவாக்கி
விற்பது வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோது நாமும் விழித்திருக்கவேண்டும்.
அதுவும் நல்ல வயல்கள். எண்ணைப் படுகைகள் வைத்திருக்கும் தீவுக்காரன்,
நாட்டுக்காரன் பாடு திண்டாட்டம்தான்.கண்களை உறுத்தும். இன்றும் கூட நம்மில் பழகும்
மனிதர்கள் நாம் ஒரு புத்தாடை உடுத்தி அவன் முன்னால் சென்று பாருங்கள். அவனால் அந்த புத்தம் புதியதை ஜீரணிக்கவே
முடியாது.
கீழ்க் காணும் கவிதையில்,அதிலும் காலியான
பானை தன் நிலம் மாறியதை ஒரு படிமமாகவும் அப்பானை சோறுகாய்ச்சித் தந்து வெகுநாட்களா
விட்டதையும் அற்புதமாகப் பேசுகிறார்.இந்தக் கவிதையாக்கம் கூட இக்கவிதை இந்தத்
தொகுப்பில் மகுடமாக சொலிக்கிறது.
பானை
வாயைத் தேய்த்துக்
கழுவுகிறாள்
தேய்த்த
வாயிலிருந்து ஒளி தெறிக்கிறது
முதுகைத்
தேய்த்துக் கழுவுகிறாள்
பால நாளாக
தேக்கிவைத்த ஊத்தை உறுண்டு வருகிறது
வயிற்றுக்குள்
கையை இட்டுக் கழுவுகிறாள்
உள்ளே
குடலுமில்லை,சதையுமில்லை
பார்க்க என்ன
அழகாய் இருக்கிறது
அவள் கழுவிய
சோறாக்கும் பானை-பக்-16
பெரும்பான்மையான கவிதைகள் முழுக்கவும்
அதிகமாக உணவு சார்ந்த பிரயோகம். உணவின் ருசி,உணவு சமைப்பதன் அழகு, அதன் கருவிகள்
எல்லாம் வந்து போவது புதுமையாக இருக்கிறது. அல்லது போருக்கு முந்தைய காலத்திலும்
முப்போகம் விளைந்த காலத்திலும் இலங்கை தமிழ் மக்கள் இப்படியாக சமைத்து உண்டு
வாழ்ந்த பெருங்குடிகள் இருந்திருப்பார்கள் என்கிற உணர்வைத்தருகிறது.
தற்காலத்தில் எல்லாம் அழிந்து
சின்னாபின்னமாகி அருகிப் போய்விட்ட வாழ்க்கையும் இந்த உணவு படிமம் மூலமாக பைசால்
குறிப் புணர்த்துகிறார் என்றே தோன்றுகிறது. உணவு சார்ந்த கவிதைகள் யாவும் எளிமையான
சொல்லாட்சியில் எழுதப்பட்டியிருக்கிறது.
நிலத்தோடு பேசுகிறேன் என்பதுடன் நிலத்தோடும் நீருடன்
பேசுகிறேன் என்று தலைப்பிட்டிருக்கலாம். நிலம் வடிநிலங்களாக மட்டும் இருக்கவில்லை
வேளாண் தொழிலுக்கு நீரும் நிலமும் எவ்வளவு இன்றியமையாதது. நீர் வாழ்க்கை
ஆதாரங்களுக்கு எல்லாம் அடிப்படையானது. இலங்கைத் தீவின் நீர்வளமும் நீர்ப்பிடிப்பு
மற்றும் கடற்கரைப் பகுதிகளின் வளமும் சிறப்புக்குரியது.
சங்க காலத்தில்
தமிழ்நிலத்தின் வியாபார கலாசார பண்பாட்டு முறைகளுடன் நேரடித்தொடர்பு
கொண்டிருந்தது. கடற்கரைத் துறைமுகங்களில் நிலவிய வர்த்தகமும் பண்டமாற்று முறைகளும்
சமூக இணக்கத் தையும் நமக்கு உணர்த்துகிறது.
உணவு எனப்படுவது
நிலத்தொடு நீரே
நீரும் நிலனும்
புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும்
படைத்திசிணோரே புறம்.18.21-23
காலமும் அரசுகளும் மேற்கத்திய வளர்ந்த நாடுகளின்
பேராசையும் அதுதான் .பச்சைப் பசேல் என்று ஒரு ஏழை நாட்டின் மண் செழித்த்துவிடக்
கூடவே கூடாது அது அவனுக்கும் அவனுடைய ஏவலர்கள் அடிவருடி களுக்குப் பிடிக்கவே
பிடிக்காது. வளரவே கூடாது. அப்படியாக கண்கள் உறுத்தப்பட்டு ஆதிக்க மேலாண்மையால்
கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிட்டு களவாடப்பட்டு சூறையாடப் பட்டதுதான் இலங்கைத் தீவு.
இலங்கையின் கடைசி நாற்பது ஆண்டுகள் சந்தித்த சமூக அரசியல் நெருக்கடிகளை வேறு எந்த
தீவாவது சந்தித்திருக்குமா தெரியவில்லை. அல்லது ஒரு நாட்டின் மாகாணமாவது பாதிக்கப்பட்டிருக்குமா
தெரியவில்லை. வாய்ப்பும் இல்லை. இரண்டாம் உலகப் போர்களுக்குப் பிறகு பெரும்
போர்களை வளர்ந்த நாடுகள் விரும்புவதில்லை.
மாறாக அவர்கள் சில சின்னஞ்சிறிய நாடுகளை
அவர்களின் வளங்களைக் குறிவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடன் வலையை விரித்து அவர்களின்
நிர்வாணக் கலாச்சாரத்தின் வசமாக்கிக் கொள்கிற நுகர்வு வலையில் இலங்கையும்
வீழ்த்தப்பட்டது. அதற்கு சொல்லப்படும் எழுதப்படும் காரணங்கள் யாவும் பத்திரிகா
தர்மப்படி எழுதி வாசிக்கப்படுகிறது.
அவர்கள்
எண்ணப்படியும் இந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கை போன்ற பல சின்னஞ்சிறிய நாடுகள்
வீழ்ந்திருக்கிறது.
இந்தியத் துணைக்கண்டத்தைச் சுற்றியயுள்ள
நிலைப்பகுதிகளில் மிகுந்த அழகிய தீவாகவும் சத்துள்ள விவசாய நிலங்களையும்
சுகாதாரமான கடல் பகுதிகளையும் சுற்றுலாவிற்கு உகந்த இடமாகவும் இருந்த தீவை பல
நாடுகளை உற்றுப் பார்த்தபடியும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு
மிக ஏதுவான வாய்ப்பாக அமைந்தது தமிழ்-சிங்கள இனக்கலவரங்கள். எல்லா புகலிடங்களிலும்
நான்கு பேர் பாதிக்கப்பட்டால் நாலாதிசைக்கும் உதவி உதவி என்று ஓடிப்போகத்தானே
செய்வார்கள். எல்லா உதவிகளும் காரண காரியங்களுடனே செய்யப்பட்டது. இதன் பின்னணியை
இலங்கை படைப்பாளிகள் மட்டுமே அறிவார்கள்.கவிஞர்கள் அறிவார்கள். போர் நிலத்தின் இழப்பின் மிச்சமாக
கொஞ்சம் உயிரை வைத்திருப்பவர்கள் அவர்கள்தானே. அவர்கள்தான் உலகின் மூலையில்
மனிதாபிமானம் மிக்கவர்களுக்கு தந்திகள் போன்ற இலக்கிய வகைமைகளை எழுதி எழுதி
நிலமையை விளக்கினார்கள்.
குடும்ப அட்டையில் உள்ள குடும்ப
அங்கத்தினர்களின் பெயர்களை நீக்க வைக்கும் அரசாங்கம் நம்முடைய அரசாங்கம். ஏன்
இருந்து கொண்டு போனால் என்ன அவர்கள் இவர்கள் தின்று தீர்ப்பது மாதிரியா தின்று
விடப் போகிறார்கள்.தாயும் தகப்பனும். இதை ஞாபகம் கொள்ள வைக்கிற மாதிரி ஒரு கவிதை
நீரின்றி,வலையின்றி
மீன் பிடிக்கிறது
ஒரு நாய்
வெறும்
கோப்பையுடன் வந்திருக்கிறாள்
பக்கத்து
வீட்டுக்காரி
சுடுபோறு மட்டும்
இருக்கிறதாம்
கறி சமைக்கவில்லையாம்
வேலைக்குப் போனவர்
இன்னும் வீடு வரவில்லையாம்
கறி கொஞ்சம்
கோப்பைக்குள் வைத்துக் கொடுங்க
உம்மா
சட்டிக்குள்
இருக்கிற கறி
பக்கத்து
வீட்டுக்காரியின் கோப்பைக்குள்
இறங்கிடக் கனவு
கண்டிருக்கும்
சட்டியைத்
துடைத்து அள்ளிக் கோப்பைக்குள்
கொட்டுகிறாள் உம்மா
பாதிப்பசி
பறந்திட்ட சந்தோசத்தில் போகிறாள்
பக்கத்து வீட்டுக்
காரி
போகும் வழியில்
இரண்டாவது பூமியில் கால்
வைத்தவள் போல்
இடறுகிறாள்
வீதியில் இறங்கி
விட்டன கறியுள் இருந்த மீன்கள்
நீரின்றி,வலையின்றி
மீன் பிடிக்கிறது நாய்.-பக்-42
நம் தமிழ்ச் சமூகத்தின் உணவுப் பழக்க வழக்கமே
ஒன்று இருந்து ஒன்று இல்லாமல் மற்ற பக்கத்துக் குடித்தனக்காரர்களிடம் மாற்றுப்
பெற்று இணக்கமுடன் வாழ்வதை அவர் குறிப்பிட்டிருப்பது அற்புதமான சமூக இணக்க உறவுக்
கவிதை.நவீன வாழ்வில் மிக மிக அருகிப் போன சமூகத்திற்கும் தற்கால இளைய
தலைமுறைக்கும் இவையெல்லாம் அறிந்திருப்பார்களாக தெரியவில்லை.
உணவு முறைகளின் பண்டமாற்று பழக்கத்தின்
வாயிலாக நடந்த அன்பும் இணக்கமும் குறித்த கவிதைகளை பைசாலின் கவிதைகளின்
வாயிலாகத்தான் அபுர்வமாகக் காண்கிறேன். தொகுப்பு முழுக்கவும் கவிதைகள் பசியாறுதல்
பற்றிய அவதானிப்பு மிகையாக இருப்பது அந்த நிலத்தின் மக்கள் உணவை எந்தளவிற்கு
இழந்திருப்பார்கள் என்பதையும் உணர முடிகிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
என்பது தெரியும் இங்கு ஒரு தேசமும் இனமும் பறந்துபோயிருக்கிறது.
ஓங்குநிலை ஒட்டகம்
துயில் மடிந்தன்ன
வீங்கு திரை
கொணர்ந்த விரை மர விறகின்
கரும்புகைச்
செந்தீமாட்டி பெருந்தோள்
மதிஏக்காறூஉம்
மாசறு திருமுகத்து
நுதிவேல் நோக்கின்
நுழைமகள் அரித்த
பழம்படு தேறல்
பரதவர் மடுப்ப
(சிறுபாணாற்றுப்படை-154-159)
மீன்,கருவாடு,உப்பு,நெய்
ஆகியவை நெய்தல் நிலத்தின்
முதன்மையான உணவு
உற்பத்தியாகி பிற நிலத்து மக்களுக்கும் கொண்டு சென்று பண்டமாற்றிக் கொண்ட வாழ்வும்
இருந்துள்ளது. அதுபோலவே இலங்கையின் நில விளைச்சலும் மீன்களும் தமிழக கடலோர மாவட்ட
எல்லை சந்தைகளில் மாற்று பரிமாற்றம் நடந்துள்ளது. இக்கவிதையில் சோறு பொங்கியவள்
தனக்குக் குழம்பு கேட்டு அலைபவள் பரம்பரை மேற்கண்ட கவிதையில் எப்படி வாழ்வாங்கு
வாழ்ந்திருக்கிறாள் என்பதை நினைவுட்டுகிறது பைசாலின் கவிதை.
நிலம் பறிகொடுத்து இனிந்து பேசிய சொற்கள்
பறிகொடுத்து, உறவு கருவி வெளிச்சம் இரவின் கடல் வெப்பத்தின் ராக்குளிர். கவிச்ச
உறை உப்பின் வீச்சம் மறந்து உலகின் எல்லாத்திசைகளிலும் வெற்று உடலுடன் வாழ்ந்து
கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் ஆதி பசியைப் போக்குவதற்கு பைசால்
போன்ற கவிஞர்கள் தங்கள் எல்லாவிதமான ஆத்துமாவையும் திரட்டி எழுதுகிறார்கள்.
எழுதுவதால் பசி தீர்ந்து விடப் போவதி்ல்லை என்பது தெரியாமாலா எழுதுவார்கள்.
பசியைக் கருவிகளாலும் துப்பாக்கி
ரவைகளாலும் பதுங்கு குழிகளாலும் முள்வேலிகளாலும் தீர்க்க முடியாது என்பது
தெரியும். பசி தீர நிலம் விளைய வேண்டும். தானியக்குதிர்கள் வேண்டும். உழவாரக்
கருவிகள் வேண்டும்.கால் நடைகள் வேண்டும். எல்லாவற்றிக்கும் நிலம் வேண்டும். தீவு
இருக்கிறது நிலம் இருக்கிறது. அவை எங்கேயும் போய் விடவில்லை. அது எங்கேயும்
போகாது. எங்கே போய்விடப்போகிறது.
நிலத்தோடு
பேசுகிறவர்கள் நிலத்திடம் போய்ப் பேசும் காலம் இலக்கியங்களாக வருகிறது. குற்றம்
நிகழும் இடத்தில் ஒரு தடயம் கிடைக்கும் என்றால் குற்றப் போர் நிகழும் நாட்டில்
மக்கள் பற்றிக் கொண்டு மேடேற ஒரு மிதவை இல்லமாலா போகும்.
சக்கரம் சுழலும் இயல்புடையது. அது ஒன்றும்
செவ்வகமோ சதுரமோ அல்ல. புத்தகங்கள் காலத்தின் வழியாக அவைகளும் ஒரு நாள்
சக்கரங்களாக மாறும்.
அதி அழகான
ஓவியமொன்றின் கதை-
நெடுங் கவிதையிலிருந்து
சில வரிகளின் மூலமாக அற்புதமான சித்திரங்களும் படிமங்களுமான ஏ.ஏ.பைசாலின்
முழுமையான ஆளுமையின் ஒரு கவிதையுடன் முடிக்கிறேன்.
நான்
ஆவலாகயிருந்தேன்
நிலாவைக் கையால்
பிடிக்க
அருகில் வந்த நிலா
அச்சிறு கடலின்
மோகன நளினத்தில்
கைகள் தட்டிக்
கொண்டாடி
எட்டாத நீரின்
தொலைவுக்குள் போய்விழுகிறது
குதிரைப்பந்தயத்தில்
தோற்றவனைப் போன்று
மனவேதனையடைகிறேன்.
மணலைக் கைகளால்
அள்ளி வீசுகிறேன்
இப்போதெல்லாம்
பௌர்ணமி இரவில்
என்மனம்
உறங்குவதில்லை
என்று ஒரு கதையைச்
சொல்லி முடிக்கின்றார்
கடற்கரைக்குப்
பக்கத்து வீட்டில் வசிக்கும் முதிவயர்
பேச்சுத்துணைக்கு
வந்து வாய்த்தார்
ஒரு பழங் கவி –பக்-15
அருபது கவிதைகளுக்கும் மேலாகப்
பதிவாகியிருக்கும் கவிதைகளின் உளப்பாங்கும் நேர்த்தியான வரிசை ஒழுங்கும்
திரும்பத்திரும்ப இலங்கையின் விவசாய நிலத்தையும் கடற்கரைகளையும் நினைவு படுத்துகிறது.
அவர் கவிதைகள் யாவும் எதையும் இறைஞ்ச வில்லை. யார்மீதும் புகார் தெரிவிக்கவில்லை.
இந்த நிலம் இப்படி இருந்தது. இது போலவே நிலத்தை மீண்டும் கால்பாவி நடக்க முடியுமா
என்று யோசித்துப் பார்க்கிறது. இந்த நிலச் சித்திரங்கள் மூலமாக பழங்காலத்தின் சமூக
அறுவடையை கற்பனை செய்கிறது பைசாலின் கவிதைகள். குறிப்பிட்ட கவிதைகளை விடவும்
இன்னபிற கவிதைகள் காட்டும் நிலவியல் அழகுகள் உச்சம் பெற்றவை.
நூலக்கு கவிஞரும் தமிழின் முக்கியமான
விமர்சகராக திகழ்கிற வா.மணிகண்டன் நல்லதொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.
என்பதும் ஏ.ஏ.பைசாலின் கவிதை நூலை வெளியிட்டு சிறப்பு செய்த புது எழுத்து
மனோண்மணியும் பாராட்டுக்குரியவர்கள். கவிதை வாசகர்கள் தங்களின் ஆதரவை
வழங்கவேண்டும்.
நிலத்தோடு
பேசுகிறேன்
கவிதைகள் –கவிஞர் ஏ.ஏ.பைசால்
வெளியீடு
புது எழுத்து
2-205 அண்ணா நகர்
காவேரிப்பட்டிணம்
-635 112
கிருஷ்ணகிரி
மாவட்டம்
90421 58667
விலை-ரூ.60-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக