காற்றில்
மிதக்கும் நீலம்
சக்தி ஜோதியின்
நான்காவது கவிதை நூல் குறித்து.
நீர்,நிலம்,காற்று,நெருப்பு,
ஆகாயத்தில்
மிதக்கும் நீலம்.
இளஞ்சேரல்
இந்த நூலுக்கான குறிப்புகளை
எழுதத் துவங்கும் போது அவர் புதுதில்லியில் சாகித்ய அகாடமியின் விழாவில் கவிதை
வாசிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் எழுதும் எந்த விதமான, வடிவச் சிக்கல்கள் இல்லாத கவிதைகளையும் பிரசுரம் ஆகும் பாக்கியம் பெற்ற
கவிகளில் அவரும் ஒருவர். எளிதில் இலகுவான பாராட்டுகளும் தமிழ்நிலத்தின்
திசைகளிலிருந்து வாழ்த்துகளும் வாய்ப்புகளும் கிடைக்கும் பாக்கியமும்
பெற்றவராகவும் இருக்கும் கவி. அவருடை கவிதைகள் கடந்த
ஆண்டுகளிலிருந்து சமீபத்தில் எழுதப்பட்ட கவிதைகள் வரையிலும் வாசிக்கவும் புரிந்து
கொள்ளவும் ஆண் பெண் ஜனரஞ்சக வாசகர்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவும் நெருக்கடி
தராத கவிதைகள் அவருடையது.
கரையொதுங்கி காத்திருக்கிறேன்
இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும்
சிதைகளின் மத்தியில்
பூக்களைச் சூடியபடி
என்னைக் கடக்கிறாள்
கங்கை
அந்தப் பெண் துறவி
கங்கையில் மூழ்கி
மேலெழும்போது
நானாகத் தோன்றுகிறாள்.
மேற் சொன்ன கவிதை “என்னைக் கடக்கும் கங்கை“ எனும் நெடுங்கவிதையின் சில வரிகள்.
எளிய சொல் அடுக்கும்
வாக்கியங்கள் யாவும் ஒன்றின் ஒன்றின் பின் தொடர்ச்சியான சித்திரங்களாகவே பயணத்தின் நிழல் போலவே
அருகருகே வந்து கொண்டிருப்பவை. இருப்பினும் அவர் கவிமொழியின் வசீகரம் ஏதோ ஒரு வகையில் தற்கால கவிதை
மற்றும் நவீன கவிதை வாசகியர்-வாசகர்களுக்கு
திருப்தி தரக்கூடியவையாகவும் இருக்கிறது. சார்புத் தன்மையற்ற துள்ளல் மனோபாவத்தின்
அறத்தைப் பேசுகிற கவிதைகளாகவும் பதிவா கியிருக்கிறது இந்தத் தொகுப்பிலும்..
வருடம் தோறும் ஒரு தொகுப்பாக
வெளியிடுகிற கவிஞராக சக்தி ஜோதி
தமிழுக்குக் கிடைத்திருக்கிறார். பெண் படைப்பாளர்களுக்கு யாவும் மிக எளிதில்
சாத்திய மாகி விடுகிற வாய்ப்பை நம் தமிழ்ப் பெருங்குடிகள் வாழையடி வாழையாக அம்
மரபைக் காத்து வருகிறார்கள்.
முன்னுரைகளை அவருக்கு மூத்த
தலைமுறை கவிஞர்கள் அளித்து ஊக்கப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. முன்னுரை
வாங்கிப் பெறுவதற்காகக் காத்திருந்து காத்திருந்து தன் கவிதைகளின் நெருப்புச் சிகை
தாளாமல் திரும்பவும் தன் குலத்தொழிலுக்கே போய்ச் சேர்ந்த கவிஞர்கள் ஏராளம் ஏராளம்.
ஆனாலும் தாரளமாக தற்காலத்தில் முன்னுரை அளித்து உதவுகிற கவிஞர்களை சாலத்தொழுதல்
ஞாலமும் நன்று..
மரபு பிரழ்வு இன்றி எழுதும் முறை முற்றிலும் வரவேற்கப் படவேண்டியதே. 100க்கு நூறு இருந்த பெண் விகிதாச்சாரம்
78 சதவிகிதமாகக் குறைந்து வருகிறது. கடந்து போன இரண்டு நூற்றாண்டு களுக்கு முன்பு
ஆண் இருப்பு சதவிகித்திற்கு மேல் பெண்கள் இருந்தார்கள். இருநூறுகளில் பெண்களை 30
சதவிகிதத்திற்குக் கீழாக வேட்டையாடிக் கொண்றிருக்கிறார்கள். அந்தத் துயரம் பற்றிய
சிற்றிலக்கியங்களோ பேரிலக்கியங்களோ பதிவு செய்யவில்லை. உலகளாவிய அரசுகள் தங்கள்
தொழிற்புரட்சியை விரிவு படுத்து முதலில் பலியிட்டது பெண்களைத்தான். அதிகாமாகக்
கொண்று குவித்த துறை விவசாயம். அவள் பட்டினியாக இருந்து பெருங்கூட்டத்தைப்பெற்றுப்
போட்டுவிட்டு பட்டினியாகவே செத்த கதைகளும் நம்மிடம் இருக்கிறது. அந்தத் துயரம்
பற்றி வரலாற்றில் எந்தளவிற்கு எழுத்தாகப் பதிவாகியிருக்கிறது எனத்தெரியவில்லை. ஒரு
தீபா மேத்தாவிற்கோ அருந்ததி ராய்க்கு மேதா பட்கருக்கும் இந்தக் குதி குதி
குதிக்கிறார்கள் போலி ஆணாதிக்க வாதிகள். பெண் விகிதாச்சார இழப்பு பற்றிய பதிவுகள் பெண்களாவது
எழுதியிருக்கிறார்களா அல்லது அந்த விகிதாச்சாரத்தை உயர்த்துவதற்கு என்னென்ன
திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதாவது அறிந்திருக்கிறார்களா.
இந்த துறவி கவிதை மூலமாக
சக்தி ஜோதி யோசிக்க வைக்கிறார். இக்கவிதையை சக்தி ஜென் கவிதை என்று கூட அழைக்கலாம்
தவறில்லை.
இனியொரு ஆச்சர்யம் என்ன
வென்றால் அதிகமாக வாசிப்பவர்கள் பட்டியலில் பெண்கள்தான் இந்த நூற்றாண்டு
காலத்தில் அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படிக்கிறார்கள். எனினும் குறைவாக எழுதுகிறார்கள்..
பெண் எழுத்து தலித் படைப்புகளில்
வீரியமும் உண்மையும் பெரு வெடிப்பும் இருப்பது போன்று மற்ற இடை சாதி சமூக பெண்களி டத்திலிருந்தும்
நடுத்தர வேளாண் குடி சமூக பெண் மக்களிடமிருந்தும் இன்னும் காத்திரமான எழுத்துக்கள்
வந்து சேர வில்லை.மாதாந்திர சஞ்சிகைகளில் ஒரு வகையான பெண் எழுத்தும்
சிறுபத்திரிக்கைகளில் ஒரு வகையான பெண்
எழுத்தும். தீவிர இலக்கியப் பத்திரிக்கைகளில் ஒரு வகையான பெண் எழுத்தும் பிரசுரமாகிறது.
அது போலவே கவிதைகளும் எழுதப்படுகிறது. இயக்கம் கட்சி
பின்னணி கொண்ட பெண் எழுத்தில் மிகுந்த முன்னேற்றம் காணப்படுகிறது. பெண்ணிய
இயக்கங்கள். பெண்ணிய சமூக அமைப்புகளில் ஈடுபடும் பெண்களின் எழுத்துக்களில்
முன்னேற்றமும் ஆழமும் காணப்படுவதை தொடர்ந்து வாசிப்பவர்களால் உணரமுடியும்.
நம் சமூக மேலாண்மை பசி கொண்டலையும் ஆட்களுக்கு இயக்கம் என்றால் வாயிலும் வயிற்றிலும் போக ஆரம்பித்து விடும்.
உலகமகா கோடிஸ்வரர்களே சங்கம் வைத்து தரையில் இறங்கி போராடும் காலம் தற்காலம்.
எல்லா பெருமுதலாளி களிலிருந்து உள்ளுர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்காரர் வரை சங்கம்
வைத்து பேரணி ஊர்வலம் கண்டனப் பொதுக்கூட்டம் போட்டு கோஷங்கள் போடுவதை மாநகரங்களில்
பார்த்துவருகிறோம். இந்த பிரகஸ்பதிகள் எல்லாம் 70 80 களில் தொழிலாளர்கள்
விவசாயிகள் போராடிய போது என்ன நக்கல் செய்தார்கள் நையாண்டி என்ன அடக்கு முறை என்ன.
எப்படியெல்லாம் போராடுகளை மக்களைப்பிரித்து தூண்டிவிட்டு
குலசம் வைத்தெல்லாம் பிரித்தார்கள். அதிலும் பெண்கள் எந்த ரகசியத்தையும் காப்பாற்ற
மாட்டார்கள் என்கிற போதனை வேறு..
இக் கவிதையில்
உரத்து அழும் குரல்களை
தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிற சுவரில்
வேண்டுதலை எழுதி
சுவரின் இடுக்கில் வைத்து
மன்றாட்டுதலை நிறைவேற்ற
தாவீது வரவேண்டுமென கண்ணீர் வடிக்கின்றேன். பக்-20
மேற்குச் சுவர் என்னும்
நெடுங்கவிதையின் சிலவரிகள்
உலகத்தின் பெருஞ்செல்வம்
கொழித்த நாடுகளில் எல்லாம் பேராட்டங்கள் நடக்காமலா இருக்கிறது. நம்ம ஆட்கள்
கேட்காமல் அள்ளிக் கொடுத்த அல்லது கிள்ளியாவது கொடுத்த சரித்திரம் இருக்கிறதா
என்ன. ஆனால் சம்பளக்காரனோ கூலிக்காரனோ எதுவும் கேட்டு விடக்கூடாது அதுவும் பெண்கள்
மூச்சே விடக்கூடாது.குறிப்பாக தொகுப்புதியம் என்கிற பெயரில் பணியமர்த்தப் படும்
நவீன காலத்தின் நெருக்கடியில் மாதச் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் இன்கிரி
மெண்ட் என்பதை யெல்லாம் மறந்து விடவேண்டும். இங்கு ஒவ்வொருவரின் பிரச்சனைகளை
அவரவர் களாகவே சந்தித்துக் கொள்ளவேண்டியதுதான். இங்கு தொழிலாளர் நலச்சட்டங்களோ, உரிமைகளோ,
அடிப்படை வசதிகளோ குறித்து எதுவும் கேட்க முடியாது. அதிலும் பெண் என்பவள்
இருக்கும் இடமே தெரியாமல் பணியாற்ற வேண்டும். எதற்கும் வசதியாக ஒரு மாதத்தின்
சம்பளம் அவர்களிடம் ஜாமீனா இருக்கவேண்டும் என்பதெல்லாம் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்
பட்டுவிட்ட கட்டளை.
மாத சம்பளம்
ஒவ்வொரு மாதமும்
மூன்று நாட்களுக்குள்
ஊதியத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்
தவறாமல் கிடைத்துவிடும்
சிலபோது
ஐந்தாறு நாட்கள் தள்ளியும் போகும்
பதற்றமடைவேன்
பதினைந்து நாட்களுக்கு மேல் எனில்
பதற்றமடைவோம்
பதினைந்து நாட்களுக்கு மேல் எனில்
பதற்றமடைவோம்
எவ்வாறு சமாளிப்பதென
இதனை
நாங்கள்
ஒருபோதும் விரும்பியதேயில்லை
இவ்வாறு நகர்கிறது காலம்
மூன்று நாட்களை அகற்ற விரும்பியபடி
அந்த நாளுக்காய் காத்திருக்கத் துவங்குகிறேன்.- பக்-49
மாத சம்பளம் போன்றது அந்த மூன்று
நாட்கள் என்கிற படிமம் புதுமையானது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு வாழ்வாதாரத் திற்காக உருவாக்கப்பட்டது தான்
சம்பளம் எனும் வடிவம். அதைப் பெறுவதற்கு பெண்கள் நடத்திய போர்கள் எத்தனையெத்தனை. பெண் குரலின் வழியே பேசப்படும் போது இங்கு நாம் வாங்கிக் கொள்கிற சம்பளம் கூட
யாருடையதோ என யோசிக்க வைக்கிறது. சம்பளம் என்கிற சொல் இங்கு வாழ்க்கையின் முழு பொருளாக மாறியது. குமாரமங்கலம், ஈரோடு,
நாமக்கல்,கோபி பகுதிகளில் இருக்கின்ற பஞ்சாலைகளில் சின்னஞ்சிறு சிறுமிகள் சிறுவர்கள்
பணியில மர்த்தப்பட்டு வேலைவாங்கப் படுகிறார்கள். அதுமட்டுமின்றி கோவை உடுமலை,
பொள்ளாச்சி, திருப்புர். பகுதிகளில் சுமங்கலி திட்டம் பெயரில் இளம் பெண்கள்
மூன்று வருட நான்கு வருட குத்தகைகளுக்கும் சம்பள விகிதா சாரம் சார்ந்து அனுப்பப்
பட்டு வருகிறார்கள். அவர்களை அவர்களுடைய இடத்திற்கே சென்று அழைத்து வருவதற்கு
பேருந்து வசதிகளும் செய்திருக்கிறார்கள்.அவர்களுடைய வறுமையைப் பயண்படுத்தி
பெற்றோர்களுக்கு குறைந்த வட்டிக்குப் பணமும் குழந்தை உழைப்பிற்கான முன்பணமும்
தந்து அழைத்து வருகிறார்கள் என்பதும் பின்னணியில் இருக்கும் உண்மை. இந்தக் கவிதை
அச் சிறுமிகளின் வாழ்வையும் இயற்கை தந்த தீட்டு நிகழ்வையும் இணைத்துப் பேசுகிறது.
நாட்கள் நகர்ந்து போனால் வந்து தொலைக்கிற அச்சமும் பிரச்சனைகளும்
பரபரப்பும் தாங்க முடியாத இம்சை.
மாதவம்
வானிலும் மிதக்கும்
நீரிலும் மிதக்கும் இரகசியங்கள் கொண்டது
கண்களுக்கு புலப்படுவது போல் இருக்கும்
நாற்பத் தொன்பது ஜென்மங்களும்
பெண்ணாகவே பிறக்க வேண்டும்.—பக்-61
பரிபுரணமான பெண்ணாகவே தாம்
இவ்வுலகின் லௌகீக சம்பத்துகளுடன் வாழ்வினுள் திளைத்துவிட்டதாகவே உணர்ந்து கொள்கிற
இடம். பிறப்பின் தற்காலிகம் என்று நீங்கும்.அல்லது நீங்காமலும் போகலாம். இந்தக்
கவிதையின் தொடர்ச்சியாகவே நீளும் இனி ஒரு கவிதை. உண்டு. தொகுப்பில் சமச்சீரான தொனியில்
ஒவ்வொரு கவிதைகளும் இனி யொரு கவிதையின் படியாகவே இருப்பது வாசிப்பின் அயற்சியாக
தென்படுகிறது. அவரின் இந்த ஐந்தாண்டு கவிதை இயக்கம் முழுவதுமாகவே அதே தொனியில்
தான் ஒலிக்கவும் செய்கிறது. வடிவத்தில் அவர் எந்த மாறுதலும் செய்து கொள்ள
விரும்பவும் இல்லை விருப்பப்படவுமில்லை. தனக்கான கவிமொழியை
அதுவே எனத் தீர்மானித்திருப்பின் அவை அவரவர் சுதந்திரம், அவரவர் அறம், கருத்து
சுதந்திரம்.
பறவையின் விருட்சம் எனும் நெடுங்கவிதை தொகுப்பில் இருக்கும் சில வரிகள்
உயிர் கசிந்து
பேரார்வத்துடன் விண்ணில் பறக்கும் தருணம்
விருட்சங்களில் பூக்கள் மலர்கிறதை
நீ அறிந்திருப்பாயா
இல்லையேல்
நான் ஒரு பறவை என்பதையாவது- பக்-45
அற்புதமான இயற்கையிலைப் பற்றிப்
பேசும் இக்கவிதை உயிர்கள் தோன்றியதை நினைவுட்டுகிறது. நீர் நிலம் காற்று ஆகாயம்
என்னும் ஐந்தும் கலந்து மயங்கிய உலகத்தில் இருதிணை ஐம்பால் இயற்கை நெறி வழுவாமல் தோன்றும் என்பது இயற்கைக்
கொள்கை. இக்கொள்கையின் கூர்தலறக் கொள்கை முறைப்படி இவ்வுலகம் எவ்வாறு முறைப் படி
தோன்றியிருக்கும் என்பதைப் பற்றித் தொல்காப்பியல் மரபினர் கீரந்தையார்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்,
முந்துவளி கிளந்த ஊழுழ் ஊழியும்,
செந்நீர்ச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்,அவையிற்று
உண்முறை வெள்ளம் மூழ்கி யார்தருபு
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத்து ஊழியும் –
--பரிபாடல்-
சக்தி ஜோதியின் பல கவிதைகளில்
இப்பொழுது வந்துள்ள தொகுப்பிலும் எழுதி வருகிற கவிதைகளிலும் இயற்கைக் கொள்கையை
முன்நிறுத்தி எழுதப்படுகிறது.
அதனுடன் இயற்கையின் முதன்மை கொள்கையான சார்பியலை முன்நிறுத்திக் கொண்டாடும்
கவிதைகளும் உள்ளது. அவரின் காதல் மற்றும் கணவர் குழந்தைகள் சார்பு கவிதைகள் அதிகம்
இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட கவிதைகள் தன் கணவருக்கு எழுதிய கடிதங்களாகவே
பதிவாகியிருக்கிறது. சங்க மகளிர் மட்டுமல்ல. நிலமுள்ளோர் நிலம் சார் அரசியல் வகுத்தோர்.
நிலஅரசியல் வகுத்தோரின் நீர் நிலை எல்லைகள்,நீர் எல்லைகளின் காவற் திணைகள்,காவற்
திணைகளின் மிகு போர்கள், மிகுபோர்களின் சட்டங்கள். சட்டங்களின் அளவீடுகள்,
அளவீடுகளின் துயர்கள்,துயர்களில் பெண்கள், பெண்களின் இழப்புகள்,இழப்புகளில்
பெண்கள், பெண்களில் யுவதிகள்,யுவதிகளிலும் சிறியர் சிறுமிகள்.சிறுமிகளில்,பால்
சிறார்கள். பிற்பாடு அவர்களின் இயற்கை கொள்கைகள் இப்படியாகவே தொடர்ச்சியாக நீளும்
பெண் இயற்கை பாடு பொருள் மொழி வழக்கு எழுத்து வழக்கு வந்த நாட்களிலிருந்து
தொடர்கிறது. அந்த இயற்கை மரபின் நீட்சியாக சக்தி ஜோதி கவிதைகள் தொடர்வது மகிழ்ச்சியும் நம்பிக்கையும்
அளிக்கிறது. தமிழின் கவிதையையும் நவீன கவிதைகளின் தத்துவ விசாரத்தையும் அதி
நுட்பமான செவ்வியலின் செழுமையையும், புராதன கலை நேர்த்தியை இந்த நூற்றாண்டின்
கவிகள் யார் தூக்கிச் சுமந்தாலும்
போற்றத்தான் வேண்டும். நாமென்ன அத்தனை பெரிய பிசியான மனிதர்களா என்ன.அல்லது தண்டலா, மணியமா, ஜில்லா, பிர்க்கா கலெக்டரா, இல்லை தண்டோரா திடுமனா, போதிய
நேரமும் அவகாசமும் இல்லை யென்று எத்தனை நாளுக்குத்தான் சாக்கு போக்கு சொல்லிக்
கொண்டிருக்க முடியும்.. அநேகமா சமீபத்தில் வந்த தொகுப்பைப் பற்றி எழுத நேரும் போது மேலும் சில
தொகுப்புகள் அவர் கொண்டு வந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
நன்றியும் வாழ்த்துக்களும்..
வெளியீடு
உயிர் எழுத்து
விலை-ரு75-
பக்-104
முகவரி
9-முதல் தளம்
தீபம் வணிக வளாகம்
கரு மண்டபம்
திருச்சி-
91-0431-6523099-99427 64229
Nice Review. Thanks
பதிலளிநீக்குvery good evaluation,her poems are well analysed by you,your critics will induce more peoples to read this book
பதிலளிநீக்கு