செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மனுஷ்ய புத்திரன் கவிதை நூல் “இதற்கு முன்பும் இதற்குப் பின்பும்“ குறித்து


மனுஷ்ய புத்திரன் எட்டாவது கவிதை நூல்
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்“

எப்போதும் வாழும் நவீன வாழ்வின் கவிதைகள்

இளஞ்சேரல்


A poison tree

I was angry with my friend;
I told my wrath, my wrath did end
I was angry with my foe;
I told it not, my wrath did grow.

And  I watered it  in fears,
Night morning with my tears;
And I sunned it with smiles,
And with soft deceitful wiles.

And it grew both day and night
Till it bore an apple bright
And my foe beheld it shine
And he knew that it was mine,

And into my garden stole
When the night had veiled the pole:
In the morning glad I see
My foe outstretched beneath the tree.
   -by William Blake –from
Songs of innocence and of experience
   



நினைவூட்டல்களின் காலம்

உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது

ஒருவருக்கும்
திரும்பிப் பார்க்க
ஒன்றுமில்லாத
ஒரு காலத்தில்

உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது

கொடுத்ததைப்
பெற்றுக் கொண்டதை

அர்ப்பணித்துக் கொண்டதை
இழந்து வருவதை

கண் துஞ்சாமல் இருந்ததை
கணக்குகள் பாரக்காதிருந்ததை
சிதறியதைக் கோர்த்துத் தந்ததை
உடைந்தவற்றை ஒட்டியதை---பக்-29

          இப்படியாக தன் கவிதைத் தொகுப்பின் வழியாக ரத்த வாடையுடன் நீண்டு போகும் நீள் கவிதையின் வரிகள் கீழ்காணும் வகையில் முடிந்து போய் மீண்டும் முதலிலிருந்து வாசிக்க வைக்கிறது.
இறுதியி்ல் முடியும் போது

நினைத்துப் பார்ப்பதன் விலையை
யாரும் செலுத்த தயாரில்லாத
ஒரு காலத்தில்
அல்லது
மறதி மிக மிக மலிவாகக் கிடைக்கும்
ஒரு காலத்தில்

உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது..          

            சமீப காலமாக மனுஷ்ய புத்திரனின் மீது முந்தைய கால நண்பர்கள் கவிஞர்கள் புதிய நண்பர்கள்,  கவிஞர்கள், விமர்சகர்கள் அவருடைய சமகால சிந்தனையாளர்கள் யாவரும் திட்டித் தீர்த்தும் சகட்டு மேனிக்கு புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. விமர்சனத்தைத் தான் வாழும் காலத்திலேயே தன் கைப்படவே சம்பாதித்தவர்களில் மனுஷ்ய புத்திரனும் முக்கியமானவர். நவீன பொருளாதாரக் கொள்கைகளின் பாதிப்புகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் கலை அறிவியல் வளர்ச்சியில் நவீன அறிவின் பங்கும் மார்க்சிய திறனாய்வுகளும் மிகப் பெரும் பாதிப்புகளைத் துவக்கத்தில் தந்தவர்.
    தன் இதழியக்க நண்பர்களுடன் கடுமையாக உழைத்து பதித்தவர்களில் அவரும் ஒருவர். அந்த உழைப்பும் பணியும் தற்காலத்தில் கடுமையான விமர்சனங்களால் மறைக்கப்படுகிறது.
        ஒரு கலைஞன் தன் மீது சரிமாரியாக தொடுக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்து வருகிற அவகாசத்தில் ஒரு சமூகத்திற்கு எதிரான கலாச்சார நடவடிக்கை யாரும் கவனிக்கப்படாமல் கடந்து போய்விடுகிறது.
       அவரும் சளைக்காமல் ஊடகங்கள் வாயிலாக விமர்சித்து எழுதியும் இயக்கங்களை நிகழ்ச்சிகளை பங்கு கொண்டு நடத்தியும் வருகிறார்.அப்படியான செயல்பாடுகளை காலனிய முதலாளித்துவம் தன் ஊடகங்கள் மூலமாக நவீன படைப்பு இதழியக்கம் போன்றவற்றை விமர்சிப்பதை ஊக்கு விக்கிறது.
       நவீன அச்சு ஊடகம் இணைதள செயல்பாடுகள் உடனடி பதிவேற்றம் சார்ந்த செயல்பாடுகள் பொது சந்திக்கு வந்து வெகுசன ஊடகங்களால் ஏளனம் செய்யப்பட்டு வருகிறது. மேற் கண்ட கவிதையின் வாயிலாக நாம்  மறந்த நினைவுகளின் அடுக்குகளிலிருந்து சில வெளிச்ச சதுரங்கள். இன்னும் முழு கவிதையின் வாசிப்பில் நமக்குக் கிடைப்பது விசாரம். உணர்ச்சிப் பிழம்பான காலம். பிரிதலும் பிரிதல் நிமித்தமும் மனித மனங்களுக்குள் நிகழும் கொடுக்கல் வாங்கல்
தவிப்புப் பற்றி நீளும் கவிதை. தினசித்திரங்களின் எளிய தமிழ் வாக்கியங்கள். ஒவ்வொரு கவிதையின் விசாலமான கருத்துருவாக்கமும் செய்திகளும்  வாசிக்கும் மனதையும் உலுக்குவதாக இருக்கிறது. உபயோகத்திலிருக்கும் பொருள்களின் படிமங்கள்தான் மனுஷ்ய புத்திரனின் பலம்.

எங்கள் படுக்கையறைக்குள்
நீ நுழையும் போது
கதவுகளைத் தட்ட வேண்டும்
என்பதில்லை

ஒரு நூலகத்திற்குள்
நுழையும் சுவாதீனத்துடன்
நீ தயக்கமின்றி
உள்ளே வரலாம்

நாங்கள் முத்தமிட்டுக் கொள்ளும் போது
நீ ஜன்னலுக்கு வெளியே
பார்க்க வேண்டும் என்பதில்லை

ஒரு முத்தம் எவ்வளவு
வாதையுடன் இடப்படமுடியும்
என்பதை நீ பார்ப்பதற்கு
இதுதான் சந்தர்ப்பம்

நாங்கள் அணைத்துக் கொள்ளும்போது
நீ யாரையோ அணைத்துக் கொண்டதை
நினைக்க வேண்டியதில்லை.

என்று நீளும் நெடுங்கவிதையினுள் சில வரிகள்..

எங்கள் திறந்த உடல்களின்
காயம்பட்ட நிழல்கள்
அந்தச் சுவர்களில்
நிம்மதியற்று அலைவதை
நீ பார்க்கலாம்..  பக்-98

           ரகசிய கண்காணிப்பின் வாயிலாகவே நம் சமூகம் இருந்து வருகிறது. சாமானிய உழைப்பின் வழி தினக்கடப்பாட்டைக் கடந்து சாகும் மனிதர்களின் அபிலாசைகளை ரோந்து போகும் காவல் வாகனங்கள் சராசரி மனிதர்களின் இருப்பைக் கூட சந்தேகிக்கும். அவனிடம் இருக்கும் தொழிற் கருவிகள் சில பீடி கொஞ்சம் கசிந்த புகையிலைத் தூள். கொஞ்சம் பழைய சினிமா டிக்கெட்டுகள். அவகாசத்திற்கு ஒரு சில ஆணுறைகள் இருக்கும். அகப்படுவதற்கான காரணம் போதாதா. பிறகு அவன் காவல் நிலையத்திற்குள் விளக்கம் தந்து வெளியே  வருவதற்குள் சில ஆயிரங்களும் உடலின் சில பாகங்களையும் இழந்திருப்பான். துயரநிழல் படிந்து பழுப்பு ஏறிய வாழ்வைக் கொண்டிருக்கும் சமூக வாழ்விலும் வறிய மனிதர்கள் தத்தம் கலைரசனையுடன் வாழ்கிறவர்களைப் பற்றிய கவிதைகளையும் இத் தொகுப்பில் எழுதியிருக்கிறார்.
தன் பரவலான இணைய தள ஊடகங்களின் கவனிப்பின் வாயிலாக விவாதங்களிலும் கருத்துப் பரவலிலும் நவீன இசத்திற்கும் தன் பங்களிப்பை தீர்க்கமான உரையாடல்களிலும் நிகழ்த்தி வருவதை அறிவோம்.
        வெகு சன ஊடகங்களும் நிகழ்காலச் சூழலுக்குத் தகுந்த மாதிரி  அவரைப் பயண்படுத்திக் கொள்கிறது. மாலன்,மதன், சுஜாதா, ரபி பெர்னாட், கோபிநாத் போன்ற மித நிலை சுகம் தரும் வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் தீவிரமான நுட்பமான விவரணைகள் மூலமாக கவனப்படுத்துபவராகவும் இருப்பதற்கு இந்தத் தொகுப்புக் கவிதைகளின் சாரம் அவருக்கு உதவியிருக்கிறது.
            நம் காலத்தின் நவீன இலக்கியத் துறைகள் தற்காலத்தின் பல்கலைக்கழகக் கோட்பாடுகளுக்கு உதவாதது போன்று பிரதிநிதித் துவம் செய்யப்படுகிறது. ஏதோ நவீன படைப்பியக்கச் செயல்பாடுகள் யாவும் அடிமாட்டு சந்தைக் களம் போன்று சித்தரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகிறது.  வெகு சன இதழ்களுக்கு ரசனையின்மையை ஈடுகட்டுவதற்கு அதி நுட்பமும் அழகும் விசாரமும் தத்துவமும் உயர்தரமிக்க எழுத்து தேவைப் படுமென்றாலும் ரசனைத்தீனிக்கு வேண்டுமென்றால் அந்தப்படைப்பாளிகளை பயண்படுத்திக் கொள்வதும் நாம் வேண்டுமானால் சாதனையென்று மனம் ஒப்புக் கொள்ளலாம்.
      பிறகு விமர்சனம் என்று வரும் போது அதே வெகுசன ஊடகங்கள் நவீன படைப்பாளிகளை பழைய குற்றவாளி ரேஞ்சில் வைத்து பேசுவதும் எழுதுவதுமான பதிவுகளை வெளியிடுகிறது. மனுஷ்ய புத்திரன் தம் கவிதைகளில் சில இட்ஙகளில் இவ்வாழ்வு குறித்த விமர்சனங்களை முன்வைக்கிறார்.  அவர்கள் சித்தரிப்பதற்கு ஏற்றது போன்று நம் இலக்கியப் படைப்பாளிக்குள் நிகழும் ஒருசில  குலச்சண்டைகள் கூட  காரணமாகி விடுகிறது.
           தன் தின இருப்புகளின் வழி எழுதப்பட்ட நாட்குறிப்புக் கவிதைகளின் வாயிலாக நிகழ்த்திக் கொள்ளும் கேள்விகளும் தன் எதிர்ப்பு விசாரணைகளும் முக்கியமானவை. சோர்வு ஏற்படுத்தாத தளர்வற்ற பழைய முந்தய நடையையே அவர் தேர்வு செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த வடிவமே காலங்காலமாகக் கைகொடுக்கிறது. அவர் தன் கவிமொழியை எந்த விமர்சன காலத்திலும் மாற்ற முன்வரவில்லை. நாள் குறிக்காமல் இழுத்தடிக்கப்படுகிற வாழ்வின் குற்ற விசாரணை நாளை இறுதி தீர்வற்ற வழக்கு விசாரணை நாட்களை நினைவு கூரும் சித்திரங்களும் தொகுப்பு முழுக்க இருக்கிறது.
            தேசம் முழுக்கவும் நடந்து வரும் அரசியல் கலாச்சார வழக்கு விசாரணைகள் தாமதங்கள் திருத்தித் திருத்தி சார்பின் அடிப்டையில் எழுதப்படும் தீர்ப்பின் வாசகங்கள் போன்ற கவிதையின் வரிகள். சாமானியனுக்குள் இருக்கும் நீதி பற்றிய அச்சம், அதிகாரத்தின் இயல்பின் குணாம்சங்கள் எத்தகையதுதான் என அறிய விளையும் குடிமகனின் அச்சமும் கவிதையில் பதிவாயிருக்கிறது.
       ஒரு நவீன காலத்தின் கவிஞன் இவையெல்லாம் பேசியிருக்கிறானா என்றால் சந்தேகம்தான். தன்னை நகர்த்திக் கொள்கிற சிக்கல் மேலோங்கியிருப்பதால் அவனுக்குள் ஒரு வடிவத்தைத் தெரிவு செய்யவே அவகாசம் இன்றி போய்விடுகிறது.
          கவிதைகளுக்குள் நிலவும் பொதுமையான மொழியின் தன்மை இந்திய மொழிகளின் வடிவத்தில் இருப்பதுதான் மனுஷ்யபுத்திரனின் பலமே. எந்த மொழிகளிலும் சுலபமாக மொழிபெயர்க்கக் கூடிய அளவிலும் பொருள் உணர்த்தும் கவிதைகளாக இருக்கிறது. தமிழ் மொழின் அழகுக் கட்டுமானம் மிக்க சொல்லாடல்கள் சர்வதேசிய மொழிகளின் இணக்கத்திற்கு ஈடாக எழுதுவதும் பலமிக்கதாக இருக்கிறது. அவை நவீன தமிழ் மொழியின் கச்சிதமான அளவியலைக் கொண்டிருக்கும் கவிதைகளாக இருக்கிற படியால் தான் அவருடைய நடையும் வடிவமும் 80 களின் சாயலைத் தருகிறது.
நம்  தொழிலின் அடிப்படை போராட்டமே 80 களின் சாயலுக்குத் திரும்புதல்தான்.
          
          ஒரு நவீன கவிஞன் எந்தக் காலத்திலும் குடிகாரனாக குடும்பத்தைக் கவனிக்காதவனாக கடன்காரனாக இலக்கியக் கூட்டங்களில் ரகளைகள் செய்து தம்மை முன்னிறுத்திக் கொள்கிறனாகவே வாழக் கடமைப்பட்டவன். அல்லது அப்படித்தான் அக்கவிஞன் இருக்க வேண்டும் இருப்பான் என்று யார் கடடமைத்தார்கள் எனத்தெரியவில்லை.
      ஒரு இந்துஸ்தானி இசைக்கலைஞனாக கையில் கோப்பையுடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத் தெரியவில்லை. நமது காலத்தின் நண்பர்களால். நல்ல வேளை அதற்குப் பிறகு வெளியான “பசித்த பொழுது” “அருந்தப் படாத கோப்பை“ போன்ற தொகுப்புகளில் அப்படிப் பட்ட போஸ் இல்லை. இந்த போஸ் நிறைய சமகாலத்தின் விமர்சகர்களக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. ஒரு நவீன கவிஞன் படைப்பாளி தன் வாழ் நாளில் எப்படி உயர்ந்து செல்ல வேண்டும் என்று உதாரணமாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பவர் மனுஷ்ய புத்திரன்.
 நல்லவேளை அவர் “மனு“ஷ்ய புத்திரனாக இல்லாமல் விட்டார். இருந்திருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள்.
என் சமீபத்திய வாழ்நாளில் சந்தித்த கவிஞர்களில் முக்கியமானவர்கள் 100 சதவிகிதமும் மனுஷ்ய புத்திரனை விமர்சிப்பவர்களாக இருந்த காரணமே இக்கட்டுரையை எழுத வைத்தது. திராவிடக் கட்சிகளின் மேடை வழக்குகளை நமது நவீன பரப்பிற்குள் எப்படி நுழைய வைக்கிறார்கள் என்று புரியவில்லை.
      பெரு முதலாளித்துவத்தின் நெடிய காலப்பரப்பில் ஊடக சாம்ராஜ்யத்தையெல்லாம் ஒரே கொடியின் கீழ் தன்னகத்தே உருக்கொள்கிற வளையத்தை உடைப்பது பெரும் சாதனைதான்.
     ஒரு நவீன படைப்பாளி தன் உடலையும் தன் வாழ் நாளையும் பொருளை தன் தேசத்தை தன் இனத்தை முன் வைத்து சூது வைத்து விளையாடுகிற கலைஞனுக்கு எழுத்தாளனுக்கு எல்லாமே பந்தயக்களம் தான் .
       சூதுக்கும் சூது விருந்துக்கு அழைப்பவன் சூதில் ஆடுகிறவர்கள் எல்லாம் நிராகரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அந்த சமரை எல்லோரும் நிகழ்த்தியே ஆகவேண்டும். முன் கள ஆட்டம் நடுக்கள ஆட்டம் இறுதி ஆட்டம் என்று நீளும் இந்த வாழ்வை அவரும் கடந்துதான் வருகிறார்.
      எளிய சொற்களால் இந்தத் தமிழில் நவீன இச்சையை எழுதிய கவிஞனை விலக்கம் செய்து வருகிறது என்பதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
           காலத்தின் நவீன கவிதையின் வளர்ச்சியைப் பேசும் போதும் எழுதும் போதும் குறிப்பிடப் படும் மனுஷ்ய புத்திரனை சம காலம் என்கிற போது விலக்கும் அரசியல் என்னவென்று தெரியவில்லை. நவீன கவிதை உலகம் ஒன்றும் தி.மு.க நவீனம் அ.தி.மு.க நவீனம் என்று ஒன்று மில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கவிஞனைக் காலம் ஒரு கலைஞனாக ஏற்றுக் கொள்வதன் பின்ணியே அவனின் சமூகக் கலாச்சார அரசியல் நடவடிக்கைகள் தான் தீர்மானிக்கிறது. அரசியல் பிரச்சனைகளைத் தவிர்த்தும் தம்முடைய பிரதிபலன்கள் நிலுவையிலிருக்கும் வழக்குகள் நிலுவையிலிருக்கும் அன்பு, நிலுவையிலிருக்கும் எஞ்சிய குற்றம், எஞ்சியிருக்கும் தண்டனைக்காலம் எஞ்சியிருக்கும் காதல், எஞ்சியிருக்கும் கருணை, எஞ்சியிருக்கும் பழி, எஞ்சியிருக்கும் நெருப்பு, புகை, எஞ்சியிருக்கும் பழுப்பேறிய கட்டளைகள்,   எஞ்சியிருக்கும் காமம், கவிஞனை வாழவைத்துக் கொண்டிருப்பவை. அவனுக்கு சீர்செனத்தியாகச் செய்யப்படும் துரோகம் அவனுக்கு சொற்களாகிறது.
                வாழ்வின் கொடைகள் யாவையும் அவன் சொற்களாக்கி அவனே எஞ்சியது போக சமூகத்தின் பழிவாங்கலுக்குத்தந்து கொண்டிருக்கிறான்.
      

மழைக்கால முன் குறிப்பு-2

இந்த வருடம் நமக்கு
நிறைய மழைகள்
வந்தன
மழைக்காலம்
என்று ஒன்று
வரவே இல்லை பக்-203-
   
     இக் கவிதையே மேற்கண்ட விவரணைகளுக்கு உட்படுகிறது.

          மனுஷ்ய புத்திரனைப் போல் நண்பர்களால் விமர்சிக்கப் படுகிற படைப்பாளி கவிஞன் உலகத்தில் ஒருசிலர்தான் இருப்பார்கள். அவருடைய எழுத்து என் பால்யத்தின் வாசிப்பு மணம் என்றும் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் உயிர்மை பதிப்பகத்திற்குள் நுழையாமல் இருக்கிறேன்.
        கவிஞன் ஒரு நிலைக்காலத்தின் அருகாமையிலேயே இருந்தும் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது அவன் அரைவயிறு சோறும் கால்வயிறு தண்ணீரும் கால் வயிற்றை காலியாகவும் வைத்திருப்பவன்.
அவனுக்கு ஒரு நிரந்தர நாற்காலியோ நிரந்தர வைப்போ நிரந்தர இன்பமோ கொள்ளாதவன். அவன் ரியல் எஸ்டேட் அதிபர் அல்ல. புண்ணாக்கு விற்பவனோ புடலங்காய் விற்பவனோ அல்ல.ஒரு தொழிலதிபரை நடத்துவது மாதிரியோ மரக்கன்று நட்டு சாதனை புரிந்தவரைப் பாராட்டுவது மாதிரியோ ரத்ததானம் அதிகமாகத்தந்து அவருக்குப் பாராட்டு விழா நடத்துவது மாதிரியெல்லாம் கவிஞனுக்கு நடத்த முடியாது.
      அவனின் உலகத்தை அல்லது அவன் சிருஷ்டி செய்து கொண்டிருக்கும் உலகத்தில் அவனை வாழவிடுவதே அவனுக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம். மனுஷ்ய புத்திரன் கவிதைகளை மிகத் தீவரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தின் அதே தீவிரத்துடன் இன்னும் வாசிக்கிறேன். இருபதாண்டுகளாக ஒரு கவிஞனின் கவிதையை அதே விருப்பத்துடன் வாசிக்கிற ஆர்வத்தைத் தருபவராக இருக்கிறார்.விமர்சகர்களுக்காக எழுதாத படைப்பாளியாக இருப்பதுதான் பலம்
          வாசிக்க ஆரம்பித்த காலத்தில் எங்கள் ஊர்களில் வீதி விளக்குகள் இல்லை. அந்த நாட்களில் மழை இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லை. வருமானமற்ற நாட்களில் நூலகத்தில் வருவதற்கு வாய்ப்பு கொண்ட சிறு பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறோம். அன்றைய சித்திரங்களில் மனிதர்கள் கால் நடையாக ஊர்களுக்கும் சில தொலைவுகளுக்கும் நடக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்து கொண்டிருந்த காலம். மக்கள் அதிகமாக இசைப்பாட ல்களை விரும்பிக் கேட்டு சலித்த காலத்தில் கவிதைகளை தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்த போது மனுஷ்ய புத்திரனும் கந்தர்வனும் தணிகை செல்வனும் தேவதேவனும் தேவதச்சனும் அழகிய சிங்கரும் ஆத்மா நாமும் பிரம்மராஜனும் ஞானக் கூத்தனும் பசுவய்யாவும் நாஞ்சில் நாடனும் பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக எங்களுக்கு புரட்சிக்குழுக்களின் பாடல்களையும் தேடித்தேடி அலைந்து கொண்டிருந்த நாட்களுமாக இருந்தது. மக்கள் கலை இலக்கிய புரட்சிகர இளைஞர்களின் அவ்வப்போது மக்கள் சந்திப்புப் பாடல்களின் அற்புதமான கவியெழுச்சியும் உரத்த குரலும் பிரச்சனைகளைப் பேசும் தொனியும் எங்களைக் கவர்ந்தது.
       மக்களுக்கு நன்மை தரும் சுவை கசப்புதான். கசப்பை எவ்வளவு தூரம் தங்கள் உணவில சேர்த்துக் கொள்கிறார்கள். உடலை இனிப்பாக்கிக் கொள்வதில் அதீத ஆர்வம் கொள்வர்.அவர்கள் என்று நவீனத்தன்மையின் ஆதி நன்மையைத் தீண்டியிருக்கிறார்கள். நவ காலனிய அடிமை மக்களின் ரசனையும் உடலுழைப்பின் களைப்பாலும் சுவராசித்தன்மை வாய்ந்த சொற்களுக்கு அடிமையானார்கள். எல்லா வர்க்கங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதும் இவ்விடத்தில்தான்                  உங்கள், எங்கள் உடலும் 14 மணி நேரம் உழைக்கும் உடலாக இருந்ததால் எங்களுக்கு நவீனம் தேவைப்பட்டது. இன்று போலிருக்கும் நவீனம் அன்றைக்கு இல்லை. அன்றிலிருந்து இன்று வரை மனுஷ்ய புத்திரன் கவிதைகளை அவர் எழுதுவதும் நாங்கள் வாசிப்பது என்பதும் ஒரே மாதிரிதான்  மனநிலையைக் கொண்டிருக்கிறேன்.
       நானும் சில வளங்களுடன் இருக்கிறேன். அவரும் சில வளங்களைப் பெற்று இருக்கிறார். இந்த வளம் யாரும் வந்து சாக்கில் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போய் வழித்துக் கொண்டு வந்தது அல்ல. சொற்கள் தந்த வளம். சொற்கள் தீரத்தீர ஊற்று உய்யும் அனுபவம் தம்மைக் கீர் கீர் எனக் கீறி எடுத்து மண் குழைத்து அப்பியது. ஒரு அம்மை விழுந்தவனுக்கு களி மண்ணையும் சேறும் பூசிப் பூசி அவன் நோயைக் குணப்படுத்துவது மாதிரி சொற்கள் கொண்டு பூசி அரசியல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் சொற்கள். மனுஷ்ய புத்திரனின் இலக்கியச் செயல்பாடுகளுடன் கவிதைகளை இணைத்துப் பார்ப்பது அபத்தம் எனத் தோன்றுகிறது. ஒரு வகையில் எல்லா நண்பர்களும் கைவிட்டு விட்டதை உணர்த்தும் படியாகத்தான் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்த மாஸ் பாப்புலாரிட்டி தன்மை. இந்த நிலைக்கு அவரை விரட்டிக் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் அவருடைய நண்பர்களும்தான். சுஜாதாவின் அரசவைக் கவிஞராக இருந்தது அவருக்குக் கிடைத்தத முதல் எதிர் நடவடிக்கை. பிறகு அவருடைய இயக்கமும் பதிப்புப் பணிகளும் அவரை சிறுபத்திரிக்கை குழுவிலிருந்து விமர்சன நிலைக்குக் கொண்டு சென்றது. ஒருவன் அளவுக்கு அதிமாக விமர்சிக்கப் படும் போது வெகுசன கண்காணிப்புகளுக்கு சென்ற டையும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
 அனுமதி

உனக்குத் தெரியும்
ஒரு ஜன்னலின்
ஒரு கதவை
ஒரு கணமே திறந்து மூடினாலும்போதும்
குளிர்
முழுமையாக வந்து விடும் என்று

அவ்வளவு பயப்படுகிறாய்
கைகளை இறுகக் கட்டிக் கொள்கிறாய்
முகம் வரை போர்த்திக் கொள்கிறாய்
எப்போதும் ஒரு தழலை எரியவிடுகிறாய்
எதையோ பத்திரப்படுத்துகிறாய்
உன் கவனத்தை வேறு பக்கம் திருப்புகிறாய்
அதை நீ விரும்ப வில்லை என
சமாதானப் படுத்திக் கொள்கிறாய்
அது எப்படியும் போய்விடும் என்று
வீணே நம்புகிறாய்

உனக்குத் தெரியும்
குளிர்
உன் நுரையீரலைத் தொடுமென்று
உன் குரலை மாற்றிவிடுமென்று
உன் படுக்கையில் உன்னை அமரவிடாதென்று
உன் பொழுதுகளை மிக நீண்டதாக்கிவிடுமென்று
உன்னை எதையும் முடிக்க விடாதென்று
உன்னை எந்த முடிவும் எடுக்க விடாதென்று
உனது கண்களை அது கட்டி விடுமென்று
உன்னை வெறுமனே ஏங்கி அழச்செய்யும் என்று

உனக்குத் தெரியும்
ஒரு கண்ணின்
ஒரு இமையினால்
ஒரு இதயத்தின்
ஒரு பலவீனத்தினால்
ஒரு கணம் அனுமதித்தால் போதும்

முழுமையாக
உள்ளே வந்து விடுவேன் என்று பக்-255

          கவிஞன் முழுமையடைந்த கவிஞன் என முழுமையாக பரிணமிக்கத் துவங்குவது அவனுடைய சமகாலத்தின் அரசியல் களத்தை விமர்சிப்பதுதான். சமகாலத்தின் கவிஞர்கள் அரசியலை விமர்சிப்பதிலிருந்து விலகுகிறார்கள். அரசியல் நடவடிக்கைகளை எழுதும் போது கவித்துவமும் தன் மேல் விழும் சார்பு நிலையைத் தவிர்க்கவே அவர்கள் எழுத முன்வருவதில்லை. அரசியலைத் தொட்டு எழுதுவதின் காரணமாகவே கவிஞன் கவிதையின் விசாரத்தை அடைய முடியும் என்பதை 25 ஆண்டுகாலத்தின் சமூக நிகழ்வுகளை எழுதுகிற மனம் நன்கு அறியும்.
             காலச்சுவடு இதழ் நூறு கடந்த போது கண்ணன் மனுஷ்ய புத்திரனின் முந்தைய காலத்தின்  பணியை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டிய அந்த நற்பண்பின் உணர்வின் பாதிப்பில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. பிறகு என்னுடைய நூல்கள் எதுவும் உயிர்மையில் வெளிவரவில்லை. என்பதும் இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது என்பதையும் தெரிவிக்கிறேன். மனுஷ்ய புத்திரனின் எப்போதும் வாழும் கவிதைகளின் எல்லாக் காலத்திற்குமான வாசகன் அவ்வளவுதான் வேறொன்றுமில்லை. நல்ல வேளையாக நான் கவிஞனுமில்லையென்பதாதலால்
         ஒவ்வொரு காலத்திலும் நவீன கவிஞன் ஒவ்வொரு விடுதலையைப் பாடியபடியே இருக்கிறான். சுதந்திரத்திற்கு முன்பாக 20 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி நவீனமான “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்றதை“ நினைவு கூர்ந்து கொள்ளலாம்.
      ஐந்தாண்டு காபந்து  ஆதிக்க நிர்வாகங்களின் சார்பாக ஒவ்வொரு புதிய புதிய ஆணைகள் வெளியிடப்படும் போதும் சில கட்புலனாகாத வளையங்கள் சாமனிய மக்களை நெருங்குவதை கவிஞன் மட்டுமே அறிகிறான். காலத்தின் ஓட்டத்தைத் தவிர்த்து சுகவாசிகளின் கண்டுபிடிப்புகளுக்கு துணைநிற்கும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக் கூடங்களிலிருந்து வெளியே வருவதில்லை. பிற துறை வல்லுநர்கள் உணவருந்தி முடித்து விட்டு பல் குத்திக் கொண்டு இருப்பார்கள். கவிஞன் தான் இமைக்காத கண்களால் கருணையின் சீரழிவைப் பார்த்து எழுதிக் கொண்டிருப்பான்.
        அவன் விவாதிப்பதே கூட  மேலும் கற்களாகி ஓய்விலிருக்கும் கடவுள்களிடம் கோரிக்களைப் பற்றி பரிசீலனை செய்பவனாகவும் இருப்பவன். ஒரு முழுகவிதையை இங்கு பதிவிடும் போது மனுஷ்ய புத்திரனின் கவிமனத்தை அறிய முடியலாம்.
           மட்டுமின்றி 320 பக்கம் கொண்ட 126 நெடுங்கவிதைகளின் பாவ முடியாத ஆழத்தை உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவருடய அதிகமான கவிதைகள் கொண்ட தொகுப்பும் பல நிலைகளில் உணர்வுகளில் ஒரு மனித மனம் அலைவுறுவதையும் நீதி மற்றும் சடங்கு சாங்கியங் களில் நிராகரிப்புகளில் சுழலும் எளிய மனிதனின் உணர்ச்சிகளையும் வாசிக்க முடிகிறது.

சில எளிய கோரிக்கைகள்

பறவை என்பது
விடுதலையின் சின்னம் எனில்
நாங்கள்
கேட்கவேயில்லை
ஒரு முழு பறவையை

ஒரு கிளையிலிருந்து
மறுகிளைக்குத் தாவும்
ஒரு பறத்தலின்
விடுபடலையே
நாங்கள் கேட்டோம்

மலர் என்பது
அன்பின் சின்னம் எனில்
ஒரு மலரைப் பறித்துக் கொள்ள
நாங்கள் முயற்சிக்கவேயில்லை

அது மலர்ந்த கணத்தின்
நறுமணம் இன்னும் கொஞ்ச நேரம்
இந்த அறையில் இருக்கட்டுமே
என்றுதான் முயற்சித்தோம்.

தண்ணீர் என்பது
கருணையின் சின்னம் எனில்
நாங்கள் ஒரு நதியில் இறங்க
எண்ணவே இல்லை

அப்போதுதான் பிறந்த சிசுவின்
தொண்டையை நனைக்கும்
முதல் சொட்டு நீரையே
நாங்கள் வேண்டினோம்

வெளிச்சம் என்பது
நம்பிக்கையின் சின்னம் எனில்
நாங்கள் சூரியோதயத்திற்காக
காத்திருக்க வில்லை


எல்லா இரவுகளிலும்
மின்மினிகள் காட்டும் பாதையைத்தான்
தொடர்ந்து போனோம்.

முத்தம் என்பது
காதலின் சின்னம் எனில்
நாங்கள் அணைத்துக் கொள்ள
ஆசைப்படவே இல்லை

எதிரெதிர் திசையில் விரையும்
இரண்டு எறும்புகளின்
கணநேர  முத்தம்போலாவது
அது இருக்கட்டும் என்றுதான் நினைத்தேன்.

கடிகாரம் என்பது
காலத்தின் சின்னம் எனில்
எவ்வளவு நேரம் வீணாகிவிட்டது என்று
நாங்கள் வருத்தப்படவே இல்லை

அந்தக் கடிகாரம் வெறுமனே
இன்னும் எவ்வளவு நேரம்
ஓடிக்கொண்டிருக்கும்
என்பதை அறியவே
நாங்கள் விரும்பினோம்..    பக்-133
        எளிய விருப்பமிக்க கவிஞனை அணைப்பதற்கு யோசிப்பதில் இருக்கும் காலத்தில் கொஞ்சமேனும் அவகாசமிருந்து இத்தொகுப்பை வாசிக்க நேரும் கணம் எல்லா அற்புதங்களையும் அவர் விடுவிக்கிறார். இன்னும் விடுதலை கொள்ளாத தேசங்களை நாம் வரைபடங்களில் பார்த்து கவலையுறுவதை மேற்கொண்டு தொடர்வோம். நம்மிடமிருக்கும் அதிகபட்ச அகிம்சை அணிந்த சுதந்திரம் அதுதானே..


வெளியீடு
உயிர்மை பதிப்பகம்
பக்-320- விலை -190
சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-18
044-24993448
மின் அஞ்சல்
94443  66704