ஞாயிறு, 16 டிசம்பர், 2012

Yazhi -Po.manivannan books review


போ.மணிவண்ணனின் நீ நான் நிலா

கவிதை நூல் பற்றி

     

       உனக்குபிறந்த நாள் வாழ்த்து சொல்ல---நித்தமும் புரட்டிப்புரட்டி-- அகராதிகள் பலவும் ---கலைக்களஞ்சியங்கள் சிலவும்---கிழிந்தே போயின.--- இப்போது--- வான் வழி பயணிக்கும்---தூதர்கள் தவறவிடும்--- தேவ வார்த்தைகளுக்காய்---- காத்திருக்கிறேன்.. பக்-43

              

           காதல் கவிதைகளில் திரும்பத்திரும்ப ஒலிக்கும் ஒரே காலநிலைகள் வாசகனைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காதல் உணர்வுகளை எழுத முற்படும் கவிஞன் அதி கவனத்தில் இருக்கவேண்டும். முதலில் அவன் காதலன் அல்ல கவிஞன். காதலன் எனும் மனோபாவம் கொண்டிருந்தால் மொழியில் மிகுந்த சிக்கலைத்தரும். இதை ஒரு வாசகனாகப் புரிந்து கொள்ளும் போதுதான் கவிதையை சிறப்பாகச் செய்யமுடியும். தான் எழுதிய காதல் கவிதையை பிற்பாடு ஒரு மாதம் கழித்து வாசித்துப் பார்க்கையில் அந்தக் கவிஞனுக்கு ஏற்படும் உணர்வு பற்றி முன்பே யோசிக்க வேண்டும். பிறகு அது புத்தகமாகப் பதியும் போது மிகுந்த கவனத்தை  கொள்ள வேண்டும் பெரும்பாலான காதல் கவிஞர்களின் நூல்கள் முழுக்கவம் திரைப்படப் பாடலாசிரியர் கனவிலேயே எழுதப்படுகிறதால் எழுகிற சிக்கல்தான் இது..

          

          அந்த வகையில் மணிவண்ணன் சிக்கல் அற்றவராக இருக்கிறார். அவருடைய கவிதைகளில் நிகழும் சம்பவங்கள் வெறும் புகாராக இல்லாமல் அறியும் சந்தர்ப்பங்களாக இருக்கின்றன.. தைரியம் கொண்டவர்களால் தான் காதல் கவிதைகளை எழுதமுடியும் அதிலும் அதிக தைரியம் கொண்டவர்களால்தான் தொகுப்பாகவும் கொண்டுவரவும முடியும்.

என் --பக்கங்களை புரட்டி --உன் முகம் பார்த்து போகும் உனக்கு--- தெரிகிறதா---- நான் பார்க்கத்துடிக்கும் --கண்ணாடி குறித்த கவலை- பக்--53

               

             ஒரு வகையில் பிதற்றல் மனோபாவத்தில் இருக்கும் ஓருவனின் குரலாக ஒலிக்கிறது என்றால் எந்த இடம் எந்தக் காலம் எந்த சூழல் என்னமாதிரியான மன நிலை.வெற்றி பெற்ற காதலா தோல்வியடைந்த காதலா பிரிதல் நிமித்தமா துயர காலமா மகிழ்வான காலமா என்பதெல்லாம் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. கவிதைகளில் பிளைன் பொயட்ரி எனப்படும் நேரடியான சொற்களாலான கவிதைகள் என்பதில் உள்ள சாதாரணம் மிகுந்த அசாதாரணமானவையாகவும் இருக்கும் என்பதைக் காணலாம்.

         கே. பாலசந்தர் ஒரு நேர்காணலில் 40 வயதைக் கடந்தவர்களால் தான் காதல் பற்றியும் அந்த உணர்வு பற்றியும் முழுமையாக அறியமுடியும் என்று இளமைப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு ஆதரவாகப் பேசினார். அது போலவே மனுஷ்யபுத்திரன் பேசும் போது என்னை இப்போது இளங்கவிஞர் என்றும் சொல்ல முடியாது முதுமையான கவிஞன் என்றும் சொல்லமுடியாது அதற்கு நான் இன்னும் கொஞ்சம் வருடங்கள் காத்திருக்க வேண்டும் அது போலவே இந்த மத்திய வயதைக் கடப்பதும் கூட சவாலான காலம் தான் என்னை நான் எந்த வகைமையில் அழைப்பது அல்லது அழைக்கச் சொல்வது எனப் பேசியிருந்தார்.

 ஆயினும் ஒரு மனிதனுக்கு வயதும் காலமும் உணர்வும் தடையில்லாதது. அவன் உணர்வும் சிந்தனையும் நித்யமும் நிந்தை கொள்ளும் ஆற்றலும் தான் அவனுக்கான வயதின் வழிகாட்டி.

        

       மழைஎன்னை வீட்டிற்குள்--- சிறை வைத்திருந்தகார் காலமொன்றில்---சன்னல் கம் பிகளை---பிடித்துக் கொண்டு என்---- பார்வைகளை மட்டும் ---நனைய அனுமதிக்கிறேன்..என்னையும்நனைக்கத்தொடங்குகின்றன---உன் நினைவுகள்... பக்-42

      

         இசைப்பாட்டின் தன்மைகளைக் குறித்தும் அல்லது ஒரு ஏக்கப் பெருமூச்சின் சங்கதிகளையும் பாடுவதாக அமையலாம். சந்தித்த வேளை..மனம் விரும்பிய ஒரு இதயத்தைப் பற்றிட அல்லது அந்த மனதில் இடம் பிடிக்க எடுக்கும முயற்சிகள் பற்றிய விவரணைகள் எல்லாம் மேலும் கவித்துவமாக செய்ய முடியும். விருப்பத்தைத் தெரிவிக்க அவன் முயல்கையில் நிகழும் எதிர்வினைகளை அவன் எதிர் கொள்ளும் சூழலையும் எழுதலாம். மணிவண்ணன் நிலையை வாசகன் அறிந்து கொள்வதற்குக் குழப்பம் அடைவான்.

            பார்த்த பின்- பார்வைகள் பரிமாறிய பின்- பேசிய பின்-இருவரும் பழகிய பின்- இருபுறம் எதிர்ப்பு அல்லது ஒரு புறம் எதிர்ப்பு- அல்லது இருபுறமும் ஆதரவு-காலமும் சூழலும் ஒன்றுசேரமுடியாத துயரம் இடைச்சிக்கல் மேற்கண்ட நிலைகளில் அவனின் குரல் எப்படியாக ஒலிக்கிறது. என்பதை இதுவரையிலும் எந்தக் காதல் கவிஞரும் பதிவு செய்யவில்லை முழுமையாகத் தன்னந்தனியான சுயநலமிக்க புலம்பல்களாக புலம்புதற்கு  ஒரு மொழியைப் போட்டுத்திருகுவது எந்தளவிற்கு சரியாக இருக்கும் எனத்தெரியவில்லை. ஆயினும மணிவண்ணன் கவனமாகத்தான் கையாண்டிருக்கிறார்.

 

              உன்--- நினைவின் விரல்கள் ---வருடிக் கொண்டே இருப்பதால்---என் தம்புராவில் ஆதாரசுதி --வழிந்து கொண்டே இருக்கிறது--உன் மீட்டலும்--- மீட்டல் நிமித்தங்களால்--- துளிகளாக இருந்தவன் --நதியாகிறேன்.. பக்-15

             தமிழக்கவிதையின் எதிர்காலம் பற்றிய அக்கறைகளும் இந்த நவீன நூற்றாண்டில் கவிதை அடைந்திருக்கும் மகத்தான நிலை உலக கவிதைகளுக்கு இணையான கவிதையின் மொழி பற்றிய பிரக்ஞை இல்லாத ஸ்டீரேயோ டைப் புலம்பல் ஒப்பாரிக் கவிதைகளைத் தந்து கொண்டிருக்கும் பலாயிரம் ஜனரஞ்சகக் கவிஞர்களின் பாதிப்பு வந்திடாமல் தனக்கென தனித்த முத்திரையைப் பதிக்க நினைக்கும் மணிவண்ணன் முயற்சிகள் வெல்லும். கவிதையின் வளம் கவிதை சென்றடைந்து  வசீகரித்திரும் உச்சத்தையும் அவர் அறிந்திருக்கிறார்.

                

            சமகாலத்தின் சம்பவங்களைப் பிறழ்வு மனோதிடமற்ற சுயபுலம்பல், கையறு நிலையில் தாழ்வு மனப்பான்மையுடன் பரதேசியாகச் சுற்றித்திரிந்து தன்னை வருத்திக் கொண்டு தனது குடும்பதினரையும் வருத்தம் கொள்ள வைத்தல் போன்ற நிலைகளால் பிறழும் இளைய சமுதாயம் பற்றிய அக்கறையும் கொண்டவர் மணிவண்ணன். அவருக்கு எதிர்காலம் பற்றியும் தனது கவிதையின் எதிர்காலம் பற்றியும் அறிவார். தனது கவிதைகளை இப்போது அவர் வாசித்துப் பார்த்தால் அவருக்கு என்னதோன்றுகிறதோ அதுவே தற்காகல வாசகனுக்கும் தோன்றும் அப்படித் தோன்றினால் அதுவே அவரின் சாதனையும் ஆகும்...

 

வெளியீடு---தகிதா பதிப்பகம்- கே.வடமதுரை- கோவை .17

 
காதலுணர்வின் அந்தர நடனம்
 
          யாழியின் ”முத்த தாண்டவம்” கவிதை நூல் பற்றி..
 
        கவிதைத் தொகுப்புகள் மிக அதிகமாக இந்த பொருள் நுகர்வு உலக காலத்திலும் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய ரசா அனுபவங்கள். நவீன காலத்தின் இயந்திர சத்தங்கள் புத்தம் புதிய நறுமணங்கள் எலக்ட்ரான் சிப்ஸ் மற்றும் டிகோட் டிமேட் ஆர்டிஜிஎஸ் என்பதான வடிவங்களில் ஒலிகளும் டிஜிட்டல் காமிராக் களின் மூலமாக நமக்கு அளிக்கப்படுகிற ஒளிப்பதிவுளும் காட்சிகளும் அதன் அழகு மிளிரிய காட்சிகளும் இந்த் நவ நாகரிக உலகத்தின் கொடைகளா அல்லது இம்சைகளா என வாசகர்களும் தமிழ்ப் பெருங்குடிகளும் தான் சொல்லவேண்டும். இந்த நிலையில் இலக்கியத்தின் பொருள் எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது என அறியவும் விளைகிறோம்..அதிலும் காதல் பற்றிய அவதானிப்பும் விகசிப்பும் எப்படியாக போற்றப்படுகிறது...
             கவனமாய் இருப்பேன் --எண்ணெய் வார்த்தலிலும் -----திரி தூண்டலிலும்--- உன் வார்த்தைகளால்---விளக்கேற்றிவை---உன் மௌனத்தால்-- இருளடைந்த ---என் வீட்டில்-----பக் 6-
 
    யாழியின் முதல் தொகுப்பான என் கைரேகை படிந்த கல்கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு வந்திருக்கும் இரண்டாவது தொகுப்பு முழுக்கக் காதல் கவிதைகளாக இருக்கிறது. அந்தத் தொகுப்பு பற்றி அகத்துறவு இதழி்ல் எழுதியிருந்தேன்.
          கோவை நஞ்சப்பா சாலையோர காம்பவுண்ட் சுவர்கள் எல்லாம் சமீபத்தில் திராவிடர் கழக தோழர்கள் காதல் செய்வீர்சாதி மதங்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்றால் காதலைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற வாசகங்கள் கருப்பு வெள்ளையில் மிகப்பிரமாண்டமான சுவர் விளம்பரங்களைச் செய்திருந்தனர். அவ்விடத்தினில் தான் உயிரியல் பூங்காவும் பொதுமக்கள் பூங்காவும் அமைந்திருக்கிறது. அங்கு காதலர்கள் வந்து போக தடை இன்னும் நீடிக்கிறது.
உன் உதட்டுச் சுழிப்பில்நிலவாகிப் போன---என் சூரியன்---ஆழ்கடலின் நிச்சலனம் உடைக்கிறான்.. பக்-48
 
           முதலில் காதலன் வந்து டிக்கெட் எடுப்பதும்பிறகு காதலி வந்து டிக்கெட் எடுப்பதும் பிறகு அவர்கள் கூடிக் குலவிக்கொண்டிருக்கும் போது வந்து காவலர்கள் அவர்களை வெளியேற்றுவதும் இன்றளவும் நீடிக்கும் செய்தியாகும். மருதமலை அடிவாரமும் முருகன் கோவிலும் காதலர்களுக்கு மிகவும் பிரசித்தி புனித ஸ்தலமாகும். பல மாவட்டங்களிலிருந்து வந்து வசித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குக் காதலும் காதல் திருமணமும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறியிருக்கிறது.
           ஒரு மொட்டவிழ்வது போல---நிகழ்ந்தது---நமக்குள்---வாசனையைப் போல்
பரவத்தொடங்கிவிட்டது---இப்பெரு வெளியெங்கும்..பக்-24
 
              தனியான காதலர் கண்காணிப்புப் பிரிவுகளெல்லாம் போட்டு காதலர்களின் தொல்லைகளைக் கண்காணித்த நகரமாகவும் இருந்து வருவதை நாம் அறியலாம். காதலர் தினத்தன்று அனுமன் சேனாவும் இந்து மக்கள் கட்சியும் காதலர்தினத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் காதலர்தின வாழ்த்து அட்டைகளை எரித்து தங்களுடைய எதிர்ப்பைக் காட்டினார்கள். பிற்பாடு அதற்கு எதிராக கம்யுனிஸ்ட் கட்சியின் இலக்கியப்பிரிவுகளும் திராவிடர்கழகம் உள்ளிட்ட கலைஇலக்கிய வாதிகள் காதலர்தினத்தை ஆதரித்தும் போரட்டங்களை நடத்தி காதலுக்காக வரிந்து கட்டியும் எதிர்த்தும் நடக்கும் சமூக நிகழ்வுகள் எந்த விசயத்தைக்குறிக்கிறது என்பதை அறியாத வண்ணம் சமூகத்தை காதலுக்குக் கூட இருபிரிவுகள் என்பதாக தோற்றத்தை நிறுவியிருக்கிறது.
        
        ஏற்கெனவே சினிமா காதலை வைத்தே 75 ஆண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. அதன் பின்னணியில் இருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களின் மீதான ஞாபகமும் வருகிறது. கிராமத்தி்ல் ஒரு சொலவடை கூட இருந்தது. என்ன படம் எனக்கேட்கும் போது ஆம்பிளையும் பொம்பளையும் நடிச்ச படம் என்பர். மேலும் காதல்கதைகளைத்தான் மையப்படுத்தியே காட்சிகளை வடிவமைக்கிறது என்பதையும் நாம் யாழியின் தொகுப்பை வாசிக்கும் போதும் ஏனைய தொகுப்புகளை வாசிக்கும் போதும் உணர்ந்து கொண்டோமெனில்
 
உன் பிரியத்தின் பொழிவால்உறைந்து கொண்டிருக்கும்----எனக்குத் தேவையாய் இருக்கிறதுசூரியக்குளியல்---கொஞ்சம் கோபப்படேன்...பக்-34
 
         நாம் காதல் கவிதைத் தொகுப்புகளை அணுகுவதற்கு ஏதுவாக இருக்கும் இல்லையேல் வெறும் நகைச்சுவைத் துணுக்குகளை வாசிக்கும் உணர்வுதான் மேலிடும்.
         ஒரு காதல் கவிதைத் தொகுப்பை வாசிக்கிறவர்களிலிருந்துதான் இலக்கிய வாசிப்புக்குள் நுழைகிற வாய்ப்பும் ஒரு சில வாசகர்களுக்கு இருப்பதால் புதிய வாசகர்களின் வரவை முன்யோசனையுடன் வரவேற்பதுமாக இந்த விமர்சனம்.தன் வாழ்நாள் முழுக்கக் காதல் கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்களையும் நம் சமூகம் கொண்டிருக்கிறது. அவைகளுக்கான தேவையிருக்கிறதா அல்லது யார்தான் அவர்களை ஊக்குவிக்கிறார்கள் என்பதும் ஆய்வு கொள்ள வேண்டிய அவசியம்..அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காதல் கவிதைகளின் வளர்ச்சி முகநூல் வசதி வந்தபின் மிக அதிகமான கவிதைகள் எழுதிக்குவிக்கப்படுகிறது.
உன் மௌக்குளத்தின் நடுவேசுடரெனஉன் உயித்தீ---
உன் உதட்டில்---ஊறும் நத்தையைமான் ஆக்குபக்-60
 
          காதல் கவிதைகள் எழுதுவதற்கும் மிகு தைரியமும் வேண்டும். கவிஞர்களில் முக்கியமானவராக யாழியும் ஒருவர். அவருடைய ஐந்தாறு வரிகளுக்குள் முடிந்து விடுகிற காட்சிகள் சப் பென்று முடிந்து விட்டாலும் நமக்குள்ளாகவே நமட்டுச் சிரிப்பு ஒன்று வராமலில்லை.
 
என் தீண்டலில் ---மெல்ல அதிர்கிறது-உன் வீணையின் தந்திகள் ---உன் வெட்கம் பார்த்து விரிகிறது தொட்டாச்சிணுங்கி---பக் 75
         
        இடையிடையே வாசித்த கவிதைகள் இந்தத் தொகுப்பில் நாம் பெற்ற காதல் அனுபவத்தை அல்லது பெறத்தவறிய காதல் அனுபவத்தை உணர வைக்கிறது. கவிதைகளுக்குள் காதல் கவிதைகள் எழுதப்படும் போது காதல் கவிதைகளு்ககுள்ளாக கொஞ்சம் சமூக அக்கறையான கவிதைகளும் வைத்தால் என்ன என யோசிக்கிறேன். காதல் கவிஞர்களின் வாக்குப்படியே காதல் எப்படி தீண்டத்தகாதது இல்லையோ அது போலவே சமூகமும் தீண்டத்தகாதது இல்லையென்று கொள்வதானால் நாம் காதல் கவிதைகளை ஏற்றுக் கொள்ளலாம்.
வெளியீடு- தகிதா பதிப்பகம்-4---833 தீபம் புங்கா.. கே.வடமதுரை-கோவை-17-94437 51641
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக