திங்கள், 17 டிசம்பர், 2012

மார்கழியும் தேவதேவனும்


தேவதேவனும் மார்கழியும்- இளஞ்சேரல்

 

               விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் மூத்த படைப்பாளுமை கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்..தேவதேவன் கவிதைகள் பற்றியும் அவருடைய கவிதையின் ஆழமான தரிசனங்களை தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிற ஜெயமோகன் தன்னுடைய எழுத்துகளிலும் தேவதேவனின் கவியாழத்தைப் பயண்படுத்தி வருவது அவருடைய கவிதைகளுக்கு அவர் தரும் அதிகபட்சமான மரியாதை எனலாம்.

           

          தேவதேவன் கவிதைகளை பரவலான இலக்கிய உலகிற்குக் கொண்டு வந்தவர் அவர் தான்.கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட நவீனத்துவத்திற்கு ப்பின் கவிதைதேவதேவனை முன் வைத்து என்கிற நூல் வழியாக தமிழ் நவீன கவிதையின் வளர்ச்சிப் போக்குகள் மற்றும் அவை இன்னும் உலகத்தரத்திற்கு எட்ட வேண்டிய தூரம் பற்றியெல்லாம் விவாதித்திருப்பார். அந்த நூலும் தேவதேவனின் கவிதைகளும் என்னை வெகுவாக பாதிக்க பிற்பாடு முற்போக்கு மற்றும் இடது சாரி மற்றும் புரட்சிகர கவிதை வடிவங்களிலிருந்து மருவி இயற்கையான அழகியல் வடிவங்களுக்கு மாறினேன்.கண்ணதாசன்.பாரதி தாசன் சுப்புரத்தின தாசன் எனும் சுரதா போலவே நானும் இரண்டாம் தேவவேன் எனும் புனைப் பெயரில் எழுத ஆரம்பித்தேன்.

                காலப்போக்கில் அந்த வடிவம் அவருக்கானது.அவருக்குரியது ரசனையின் அடிப்படையில் அனுபவித்துக் கொள்ளலாமே தவிர உரிமையுடன் கொட்டகை போட்டு கொடி நட்டி வேலிபோடுவது சரியாகாது என்று மறுபடியும் இளஞ்சேரலுக்கே மாறினேன். அந்த மயக்கம் தந்த தேவதேவனின் கவிதை காலம் மறக்கமுடியாதது இன்றும் அதே மயக்கம்.இளையதலைமுறையினர் தன் காரியத்திற்காக ஒரு படைப்பாளியை அவர் படைப்பினை விரும்புவதாக நடித்துக் கொண்டு காரியம் ஆனதும் அந்தப் படைப்பாளியின் படைப்பை பலவீனத்தை வைத்துத் தகர்த்து பிற்பாடு தாம் பெரும்புகழை அடைவதாக எண்ணி காலரைத் தூக்கிக் கொண்டு (காலரைத் தூக்கினால் பட்டன் கழண்டுடும்-உபயம் சிவாஜி கணேசன்-ரஜினி வாயிலாக) பிறகு அந்த ஆளுமையே உனக்கென்ன மயிரா தெரியும் என்று கேட்கும் இளையதலைமுறை நவீன இலக்கியத்தின் ஒரு பிரிவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.என்றும் தனது இயற்கை பற்றிய மனித ஆழ்மனம் பற்றிய அவதானிப்பு கொண்டிருப்பவர் தேவதேவன்.

            

          ஆரம்ப காலத்தில் தன் சொந்தக் கை ஊன்றி கரணம் போட்டு நவீன கவிதைக்கு வளம் சேர்த்த மகான். நமது தேசத்தில் வெறும் ஆன்மீகம் பேசிய மகான்களை நடு வீட்டின் விட்டத்தில் தொங்க விட்டு வணங்கிப் போற்றும் நாம் தேவதேவன் கூடவே கவிதையும் செய்திருப்பதால் நாம் அவரை கேளரத்தில் கே.ஜே யேசுதாசைக் கொண்டாடுவது போலக் கொண்டாடியிருக்க வேண்டும். அநேகமாக அவர் சாதி கொஞ்சம் வலுவாக இல்லாமல் இருப்பாரோ என்னவோ..

            தேவதேவனுக்கும் அவருடைய கவிதைகளுக்குமாக எதாவது பரிபாலனம் செய்து நம் கவியால் வேகும் மனதை ஆற்றலாம் என்று அவருடன் பேசினோம்.நொய்யல் இலக்கிய வட்டம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கவிதை விருது அவருக்கு வழங்க முடிவு செய்து அவரிடம் பேசிய போது கடுமையாக மறுத்தார். தற்போது எழுதிவரும் சிறந்த கவிஞர்களுக்குத்தான் தரவேண்டும் என்று மறுத்துக் கொண்டே இருந்தார். அப்போது அவருடைய மார்கழிதொகுப்பு வந்திருந்தது. ஐயா மூத்த ஆளுமை என்கிற வகையில் விருது ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினோம். சம்மதம் வாங்குவதற்குள் போதும் என்றாகி விட்டது. அவர் இருகூர் வருவதற்கு ஏற்பாடுகளும் நடந்தது. சில எதிர்பாரத பணிகளால் அவரால் வரமுடியாமல் போனது.பிற்பாடு நாங்கள் விருது படத்தை அவருக்கு அனுப்பிவைத்தோம். பல ஆண்டுகளில் வெம்மை கொஞ்சம் தளர்ந்ததாக உணர்ந்தோம்.பிற்பாடு அவையே நல்ல தொடக்கமாக பல விருதுகளும் அவருக்கு வந்து சேர்ந்தது. தேவதேவன் கவிதைகளில் ஒரு சதவிகிதமும் இணை பெறாத பல கவிஞர்களுக்கு தமிழும் தமிழ்க்கவிதையும் அள்ளித்தந்திருக்கிறது. புகழும் கோடானுகோடி செல்வங்களையும் தமிழ் அள்ளித் தந்துகொண்டிருக்கிறது. அவர்களை விடவும் தமிழ் நவீன கவிதைக்கும் தமிழ் மொழிக்கும் பாங்கு செய்து கொண்டிருப்பவர் தேவதேவன். அவருடைய பிறந்த நாளின் பொழுது தமிழ் நவீன கவிஞர்கள் ஒன்று கூடி கவிதைகளை அவருக்கு அளிக்க வேண்டும். திருவையாற்றில் தியாக பிரம்மம் தியாராஜருக்கு சங்கீத பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை உலகின் பல திசைகளிலிருந்து வந்து பாடி அஞ்சலி செலுத்துவது போல நாம் தேவதேவனுக்கு கவிதைகளை வாசித்து அன்பு செலுத்தவேண்டும்.

               இந்த மார்கழி அவருக்கு உகந்த மாதம் அவருக்கு மட்டுமல்ல. உலகமே சங்கீத மயக்கத்தில் திளைக்கும் ஒருவேளை கடவுளர்கள் நன்கு உறங்கும் மாதமோ.அவர்களை துயில் நீக்க வைக்கத்தான் இந்த உற்சவங்கள் நடக்கிறதோ. இசையின் தாளத்தின் சுருதியின் ஓங்காரம் போலவே வாகனங்களும் வந்து போகிறது. மார்கழி மாதத்தின் பனி வெல்வெட் துணிபோன்ற மிருதுவான இரவில் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்குவது அது அவருக்கு வழங்கப்படுவது அல்ல தமிழ் நவீன் கவிதையின் வளர்ச்சிக்கு நாம் எடுக்கும் விழா.

                 

                  இசை ஞானி இளையராஜா வழங்குவதை விடவும் அழகான செய்தி வேறெதுவுமில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களை நான் அறிவேன். நட்பும் உறவும் இருக்கிறது. கவிஞர் ஒருவரின் இல்லத்திருமண விழாவில் சந்தித்த நண்பர்கள் முன்னமோ விருது ஒரு மூத்த கவிஞருக்கு என்று மட்டும் கோடிட்டு சொன்னார்கள்.முறையான அறிவிப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்தார்கள்..கடவுளே அவர் தேவதேவனாக இருக்க வேண்டும் என்று தியாக பிரம்மம் தியாராஜசுவாமிகளையே வேண்டிக் கொண்டதின் பலன் கிட்டியது.

               மார்கழி மாதம் கோவை மாநகரமே சங்கீத உற்சவங்களை உலகின் தலைசிறந்த பாடகர்களை இசைக்கலைஞர்கள் வந்து கோவையை கிறங்கவைத்துக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் நவீன கவிதையின் மகத்தான கவிஞனைக் கொண்டாட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் தேர்வுக்குழுவினர்கள். விழாக்குழுவினர்கள் ஆகியோரையும் விழா மிகபிரமாண்டமான முறையில் நடத்த உதவுவதின் வாயிலாக நவீன தமிழ் கவிதைக்கு கொஞ்சம் தேர் தந்து பொருள் ஈந்த வள்ளல்கள் ஆகியோருக்கும் கவிதையே வராத ஒரு பரதேசி கவிஞனின் எளிய சிரம் தாழந்த வணக்கங்கள்...இன்று முதல் அவரை நான் மார்கழி தேவதேவன் என்று அழைக்கப் போகிறேன்..

              இலக்கியமும் சினிமாவும் இணைந்து கொண்டிருக்கும் சூழலை உருவாக்கும் ஜெயமோகன். நாஞ்சில்நாடன்,க.மோகனரங்கன்,எஸ்.ராமகிருஷ்ணன். பிரான்சிஸ்கிருபா, மரபின் மைந்தன் முத்தையா. மகேந்திரன், பாலுமகேந்திரா,பாலா எம்.கோபாலகிருஷ்ணன். மணிரத்னம். ஓவியர் ஜீவா. போன்ற உள்ளங்கள் இசையையும் செவ்வியல் இசையான தமிழிசை மற்றும் கர்நாடக இசையையும் உடன் இணைக்கவும் முற்படுங்கள் என்று ஒரு வேண்டு கோளை இலக்கியக் களப்பணியாளனாக உங்கள் முன்வைக்கிறேன்..

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக