அருவி நிகழ்வு-16-12-2012 ஞாயிறு
சு.தியடோர் பாஸ்கரன்-பங்கேற்பு-உரை
எது நல்ல சினிமா- பதிவுகள்-
இளஞ்சேரல்
சினிமா பற்றி அவதானிப்பும் அவை பற்றி
அறிந்நு கொள்ள விழையும் மனங்கள் அதிகம். சினிமா பற்றி நாள் கிழமை பொழுது என்றின்றி
பேசிக்கொண்டே இருக்கலாம். ஒரு பொழுதும் சுவராசியம் குறையாதது. அருவியின் சினிமா
பற்றிய நிகழ்வு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை இந்தியத் தொழில்
வர்த்தக சபையின் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒரு கட்டமைப்புடன் நேர்த்தியாக
நடைபெற்ற நிகழ்வு என்று சொல்லலாம். நல்ல செய்திகளை,தரமான படைப்புகளைக் கொண்டு
சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் குறைந்த பட்சம் ஒரு அறிதல் அளவாகவாவது
வேண்டும். ஒரு கொலையையோ ஊழலையோ, கள்ளக் காதலையோ, போலீஸ் செய்திகளையோ கிரைம் செய்திகளையோ மிகக் கோர்வையாக தெள்ளத்தெளிவாக
உள்வாங்கிக் கொள்கிற வாசிப்பு மனம் தரமான செய்திகளை மனதில் வைத்துக் கொள்ள
விரும்புவதில்லை. தரமானவை மிக இலவசமாகக கிடைக்கும் பட்சத்தில் கூட ஊதாசீன மனோபாவமே
எல்லா மொழிகளிலும் ஏற்படுகிறது.
இந்த வகையில் மேற்கத்திய நாடுகள்
பின்பற்றும் தரக்கொள்கைகள் ஏன் படைப்பு மனம் சார்ந்த நிலைகளுக்கு நாம் உபயோகப்
படுத்தக் கூடாது எனத்தோன்றியது. தியடோர் தொகுத்தளித்த நேர்த்தியான உரை
கச்சிதமானது. மிகையில்லாதது. தன் வாழ்நாளை இயற்கை உயிர்களுக்காகவும்
கலைகளுக்காகவும் பயண்படுத்தி வருகிறார். வெளிப்படையாகவே அவர் கருத்துப் போராட்டம்
நடத்துகிறார். அவர் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதும் பத்திகள்
உலகத்தரம் வாய்ந்த எழுத்து. தமிழில் சலனமின்றி நேர்த்தியான உரைநடையில் எழுதும்
ஒருசிலரில் தியடோர் பாஸ்கரனும் ஒருவர். அவருடைய இந்திய உலக சுற்றுப்பயணங்களை தனது
ஆய்வுக்குட்படுத்திக்கொள்கிறார். உலக சினிமா,காட்டுயிர்கள், அரியவகை நிலங்கள்.
பறவைகள் ஆய்வுகளும் முக்கியம். அதுமட்டுமின்றி சிறப்புப் பொருளாதார
மண்டலங்களுக்காக அழிக்கப்படும் அற்புதமான இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் அவர்
குரல் கொடுத்து வருகிறார். அருவிகள் சுனைகள், காட்டுயிர்களின் வாழிடங்கள் மீதான
அவருடய ஆழமான அக்கறை பிரமிக்க வைக்கிற ஒன்று. அருவி அவருக்கான ஒரு மகத்தான விழாவை
நடத்தியதற்காகப் பாராட்டவும் வேண்டும். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும்
கருத்தரங்கிற்கும் கடுமையாக உழைத்து பேசுவதற்கும் மக்களுக்காக அவர் தெரிவு
செய்யும் குறிப்புகள் முக்கியமானவை.
அவர்
உரையிலிருந்து சில முக்கியமானவை..
50 களில் எடிட்டிங் பற்றிய எந்த
அனுமானமும் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோர்
தங்களுடைய நேரங்களை அதிகமாக எடிட்டிங் அறையில் செலவு செய்திருக்கின்றனர். ஒரு
படத்தில் ஜெமினி சாவித்திரி பங்கு கொள்ளும் காட்சியில் அவர் காருக்கு சக்கரம்
மாட்டுவார் ஒரு கணம் டை கட்டியிருப்பார் பிறகு டை இல்லாமல் இருப்பார் இது போன்ற பல
படங்களில் என்னற்ற சம்பவங்களைக் குறிப்படலாம். நல்ல சொல் பதங்களை கலைக்களஞ்சியங்களை உருவாக்க வேண்டும். சினிமா,காஸ்டிங்,
ஸ்டாரிங் போன்ற சொற்களுக்குக் கூட பதங்கள் இல்லை அதுபோலவே மற்ற தொழில்
நுட்பப்பிரிவுகளுக்குமாக கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். ஆங்கிலப் படங்களுக்குப்
பிரச்சனையில்லை. ஜெர்மனி பிரஞ்ச் பதங்களை அப்படியே மாற்றி தங்களுக்கு
உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.
ஹிட்ச்காக் படங்கள் தான் முன்னோடி என்று
சொல்லலாம் அவர் தன்படத்தின் முன்பே சொல்லிவிடுவார் யார் கொலை
செய்யப்படவிருக்கிறார்கள் எப்படி என்பதை காட்டிவிட்டு அதற்கான ஸ்டோரி லைனை
டெவலப்செய்து படம் நகரும். இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் எதிரொளித்தது. சத்யஜித்
ரே கூட தன்னுடைய படங்களில் அதிகமாக எடிட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
படங்களில் பிம்பங்கள் தான்
பேசப்படவேண்டும். அதற்காக வசனம் பேசும் படங்களை தவிர்க்கவேண்டும் என்பதல்ல பொருள்.
திரைமொழி என்பது காட்சிகளும் கதாபாத்திரங்களும் அதன் பிம்பங்களும் தான் கதையை
நகர்த்த வேண்டுமே தவிர வசனங்களால் படத்தை நகர்த்தக் கூடாது. தற்பொழுது வந்த
படங்களில் சுப்பிரமணியபுரம், வழக்கு எண். 18-9 படங்கள் முக்கியமானவை. படங்களில்
எடிட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய முக்கியமான ஆளுமை பீ.லெனின். அவர்
தன்னுடைய சிறப்பான படங்களையும் தந்தவர். றெக்கை ஒரு அற்புதமான படம்.
காதல் படத்தில் எல்லாக்
கதாபாத்திரங்களும் அற்புதமாக பிம்பங்களால் கட்டமைக்கப்பட்டு நேர்த்தியாக
வடிவமைக்கப் பட்டியருக்கும் பாலாஜி சக்திவேல் திரைமொழியை சிறப்பாகக்
கையாண்டிருப்பார். பாலு மகேந்திரா ஒரு அற்புதமான இயக்குநர் மட்டுமின்றி
பிம்பங்களின் ஒலி ஒளியை மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அழியாத கோலங்கள்
படத்தில் நான்கைந்து சிறுவர்கள் ஆற்றில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு
சிறுவன் திடிரெனக் காணாமல் போவான். எல்லோரும் ஊருக்குள் ஓடிப்போய் மக்களை
அழைத்துவருவார்கள்.பிறகு அந்த சிறுவனின் சடலம் மீட்கப் படும். இந்த இறுதி
சம்பவங்கள் வரையிலும் உரையாடலே இருக்காது.
பிம்பங்களும் ஒலி ஓளியும் சரியான அளவில்
சேர்க்கப்பட்டு மனதில் அப்படியே ஆழமாகப்பதிந்து போகின்ற விதத்தில்
படமாக்கப்பட்டிருக்கும்.இதுதான் நல்ல சினிமாவிற்கும் கலைக்கும். உதாரணம்.அதுபோலவே
சுப்பிரமணிய புரம் படத்தில் வரும் கோர்ட்,காவல் நிலையம்,
சிறை,போலீஸ்வாகனம்,பேருந்து இப்படியாக நகரும் காட்சிகள் மனதில் அறைந்து இரவெல்லாம்
தூக்கம் வராமல் செய்யும் அற்புதமான காட்சிகள்.வீடு படத்தில் ஒரு நடுத்தரக்
குடும்பம் படும் துன்பங்களை அற்புதமாக வடித்திருப்பார் பாலுமகேந்திரா.
திரைமொழியும் பிம்பங்களும் முழுமையாகப் பதிவாகியிருப்பதை நாம் உணரமுடியும்.
அதுபோலவே கருத்தம்மா படத்தில் பாரதிராஜா சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கும்
சமயத்தில் ஒரு டுயட் காட்சியை இணைத் து படத்தையே ரசிக்க முடியாதவாறு
செய்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒரு முறை நான் சிவாஜி கணேசன் பற்றி
ஆங்கிலப் புத்தகம் எழுதியிருந்தேன். அது பற்றி விசாரித்த நண்பர் ஒருவர் ”என்ன சிவாஜி பற்றியா எழுதியிருக்கிறீர்கள்” என இளக்காரமாகக் கேட்டார். நம் நாட்டில் சினிமா பற்றி பேசுவதும் எழுதுவதையும்
இளக்காரமாகப் பார்ப்பது சகஜமாகிவிட்டது. மேல் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில்
இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு விழித்துக் கொண்டார்கள் சினிமா பற்றிய அறிவு
அவசியம் என்று சினிமா பற்றி இளைய சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர்.
அதன் விளைவாகவெ அவர்களின் முயற்சியில் கலை நேர்த்தி மிக்க படைப்புகளை கொண்டு வர
முடிந்தது.
எத்தனை பேர் சினிமா பார்ப்பதையும்
சினிமா பற்றி பேசுவதையும் ஊக்கு விக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கல்லூரிகளில்
நான் தேர்வுக்குழுவில் இது பற்றி பேசும் போது அதெல்லாம் எதுக்குங்க..என்றார்கள்.
ஒரு சினிமாவைத் திரையிடுவதற்கும் அது பற்றி பேசுவதற்கும் யாரும் விரும்புவதில்லை.
அப்படியிருக்கும் போது நல்ல சினிமா எப்படி வரும். தமிழ்சினிமாவின் முக்கியமான
இயக்குநர்களில் ருத்ரையாவும் ஒருவர். தற்போதைய சிறந்த இயக்குநர்களில் பாலாஜி சக்தி
வேல் சசிகுமார் என்றார். அவருடைய உரையில் கதைக்குத் தகுந்தமாதிரியான கதாபாத்திர
தேர்வு. குறைந்த உரையாடல்கள் கொண்ட முகங்கள் தத்தம் உணர்வுகளுடன் பேசும் காட்சிகள்
ஒலிகளுக்கான முக்கியத்துவம், ஒளியின் தன்மையைக் கொண்டு ஒளிப்பதிவு செய்யவேண்டிய
அவசியம்.இசைக்கோர்வைகளின் அளவு காட்சிகளுக்குத் தகுந்த அளவிற்கு சரியான பின்னணி
இசை.
பார்வையாளனே கதையை
உணர்ந்து கொள்கிறவாறு காட்சிகளின் இயல்பு. அழுத்தம் தரவேண்டிய காட்சிகளில்
அழுத்தம் உள்ளிட்ட பல முக்கியமான திரைமொழியின் நுட்பங்களை அழகாக எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில்
கலந்து கொண்டு அதிசயக்க வைத்த உயர்ந்த நடுத்தர மக்கள் பலர் சினிமா பற்றி
வெளிப்படையாக தியடோர் பாஸ்கரனுடன் உரையாடி அளவளாவிய ஆச்சர்யமாக இருந்தது. வங்கி
அதிகாரி ஒருவர் தன்னுடைய சினிமா ஆர்வமும் சினிமா பார்ப்பது சம்பந்த மான
நிகழ்வுகளால் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படுகிறேன் என்பதைப் பற்றிப் பேசினார்.
தற்கால ஆங்கிலப் படங்கள் ஒரு மணி நேரத்தில் பார்வையாளனைக் கிளப்பி விடுவதும் ஆனால்
தியாகராஜ பாகவதர் படங்களை இன்றும் நான்கு மணி நேரம் உட்காந்து நம்மால் பார்க்க
முடிகிறது என்றார். உரையாடல்களின் பொழுது சினிமா பற்றியதாக இருந்ததால்
கேள்விகளுக்குப் பஞ்சமில்லை. அதுபோலவே எதிர்பாராத அது போலவே மக்குத் தனமான
கேள்விகளுக்கும் பஞ்சமில்லை. வழக்கொழிந்து போன கேள்விகளைக் கேட்ட மாத்திரத்திலேயே
அவருடைய உரையையும் அவர் முன்வைத்த விசயங்களை உள்வாங்கவே இல்லை என்று தெரியவந்தது. பொறுமையுடனும்
பதில்களைத் தந்தவர்
நிகழ்வு முடிந்து தியடோர் பாஸ்கரன் அவர்களை
சந்தித்து கைகுலுக்கி விட்டு சிறுகதை நூலைத் தந்தேன். அற்றைத் திங்கள் நிகழ்வுகளை மாதந்தோறும் காலச்சுவடில் எழுதியதை
நினைவு கூர்ந்த அவர் நலம் விசாரித்தார்.நானும் பிறகு அவர் எழுதுகிற பத்திகள் பற்றி
பேசினோம்.
அரங்கில் ஒரு பிரகஸ்பதியுடன்
பேசினேன். அவர் கோவையில் பல்லாண்டுகளாகக் குடியிருந்து வருகிறார். அவர் ஒரு
இலக்கிய அமைப்பும் வைத்து வார இதழ் கடைசி பக்கக் கவிதைகள் போன்றவைகளை ஆதரிப்பவர்
போலிருந்தது. அவரிடம் 25 ஆம் நிகழ்வின் அழைப்பிதழைத் தந்தேன். அவரோ ”அப்படியா எங்கு நடக்கிறது” எஸ்பிஎன் நரசிம்மலு நாயுடு பள்ளி
என்றேன். அது எங்கிருக்கிறது என்றார் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொல்லி
விட்டு வந்தேன்.
கோவையில் பல்லாண்டுகளாக அவர் கோவையின் மைய வாசி. அவருக்கு இலக்கியச்
சந்திப்பின் எந்த நிகழ்வு பற்றியும் தெரியவில்லை. இடையே தியடோர் பாஸ்கரன் அவர்களை
யார் அவர் என்றார். என்ன மீட்டிங் என்றார். பிறகு அவர் நடத்தும் இலக்கிய அமைப்பு
மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொண்டேன். அதற்காக அந்த மனிதனின் பரம்பரையே மன்னித்து
விட்டு நொறுங்கி நெஞ்சைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.
வரும் வழியில் வெயில் நதி இதழைத் தந்தார். ப.தியாகு. அவருக்குப்
பக்கதி்லிருந்த ஒரு பெரிய பேராசிரியர் தனக்கும் ஒரு இதழ் வாங்கிக் கொண்டார்.அந்த
ஆள் அது வரை சிறுபத்திரிக்கையே பார்த்ததில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இது
எந்த மாதிரிப் பத்திரிக்கை என்ன இருக்கிறது என்று கேட்டார். அண்ணன் அவைநாயகன்
பொறுமையாக பதில் சொன்னார். அவர் மரமண்டைக்கு எதுவும் ஏறவில்லை. மறுபடியும் அந்த
மரமண்டை இல்ல இது மாதிரியான புத்தகங்கள் எல்லாம் கம்யுனிசமா இருக்கும்
அதுக்காகத்தான் கேட்டேன். என்றதும் எனக்குக் கோபம் தாளவில்லை. ஏற்கெனவே தியடோர்
பாஸ்கரனை யார் என்று கேட்ட கேள்விக்கு பொங்கிக் கொண்டிருந்த கோபம் எரிந்து
கொண்டிருந்தது. பிறகு அவரிடம் ”தைரியமாப் படிக்கலாம்
பயப்படாதீங்க..ஒண்ணும் பண்ணாது” என்று இரண்டு முறைக்கும் மேலாக
வலியுறுத்தினேன். இரண்டு கைகளிலும் பிரேஸ்லெட் தங்க முலாம் வேய்ந்த உடல் சபாரி
சகிதம். அந்த ஆள் தினத்தந்தியையே படித்ததில்லை போலிருக்கிறது. எண்பதாயிரம் சம்பளம்
தந்தால் யாருக்குத் தான் படிக்கும் ஆசை வரும்
இதழை ஏதோ பீயை ஏந்திக் கொண்டிருப்பதான
அசூசை அவரிடம் இருந்தது. கம்யுனிச எதிர்ப்பை மட்டும் அழகாக பால்
வார்த்திருக்கிறார்கள் அதற்கு மட்டும் ஒனத்தி வந்திருக்கிறது. அப்படியான ரசனை
ஒனத்திக்கு மட்டும் ஒன்றும் குறைச்சலில்லை. அருவி போன்ற அமைப்புகள் என்னதான்
மாய்ந்து மாய்ந்து ரத்தக்கண்ணீர் வடித்து கலைப் படைப்புகளைக் கொண்டு சேர்த்தாலும்
இது போன்ற ஒரு அரைவேக்காடு போதும் எல்லாவற்றையும் பாழுஞ்சுவர் செய்வதற்கு..வெளியில்
வந்து அந்த ஆளைத் தேடினேன்..
காணோம்..தப்பித்தான்..எது நல்ல சினிமா
என்ற தலைப்பைப் பார்த்து குட்டைப்பாவாடையுடன் ஆடுவார்கள் என்று நம்பி வந்து ஏமாந்த
வேதனை அந்த ஆள் முகத்தில் தெரிந்தது.
தியடோர் பாஸ்கரன் மனம் இரும்புத்திடம்
வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். கேள்விகளில் இளைய தலைமுறையினர் கேட்டவை கொஞ்சம்
நம்பிக்கை வந்தது. கல்லூரி மாணவ மாணவிகள் பலருக்கு இந்த நிகழ்வு பயனுள்ளதாக
இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.
பிறகு ஒன்பது நிமிட குறும்படம் ஒன்று
திரையிடப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் ஒலியைக் கையாண்ட விதமும் கதாபாத்திரங்கள்
மற்றும் பிம்பங்களின் மையக் கருத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான
காட்சியமைப்புகளாலும் இருந்தது. பார்வையாளர்களை பிரமிக்க வைத்த வசனமற்ற
உணர்வுகளும் காட்சிகளும் வெகுவாக பாதித்தது. எனக்கு முன்கூட்டியே அதன் காட்சி
நகர்த்தல்கள் தெரிந்து விட்டாலும் படமாக்கிய விதம் அற்புதமாக இருந்தது. முதலில்
ஒரு வயதான ஒல்லியான தேகம் கொண்டவர் வருகிறார் பிறகு அவர் தன்னுடைய மெஸ் யுனிபார்ம்
அணிந்து கொண்டு நெடுஞ்சாலை பைபாஸ் சாலை அது. வாகனங்கள் உச்ச வேகத்திலும் ஒலி்
எழுப்பியும் பறக்கும் காட்சிகள் ஒலியின் துல்லியமும் டிஜிட்டல் கேமிரா
விளையாடியிருக்கிறது. அந்த பெரியவர் தன்னுடைய கையில்
Meals
ready எனும் அட்டையைத்
தாங்கியபடி வாடிக்கையாளர்களை அழைக்கிறார். வாடிக்கையாளர்கள் வந்து உணவருந்திப்
போகிறார்கள்.
தண்ணீர் குடிக்க
வழியின்றி (உரிமையாளர் தண்ணீர் கூட குடிப்பதைத் தடுக்கிறார்) மற்ற
வாடிக்கையாளர்கள் தண்ணீரை தங்கள் வேக்காட்டிற்கு முகத்தில் தெளித்து வெப்பம்
போக்குகிறார்கள். இவருக்கோ தண்ணீர் இல்லை. தொண்டை தண்ணீருக்கு ஏங்குகிறது. அவர்கள் வீசிய பெட் பாட்டிலிலிருந்து சில
சொட்டுகளைக் குடித்து தாகம் போக்கிடுகிறார். காணாத கொடும் வெயிலில் தன் வாடிக்கை யாளர்களை பறக்கும் வாகன ஓட்டிகளுக்கு தனது அட்டையைக்
காட்டுகிறார்.
பிறகு அங்கு வரும் குடும்பம் தாங்கள் உணவருந்தும் போது அவர்கள் அழைத்து வந்த
குழந்தை இவருடைய உடையில் லயித்துப் போய் அவருடன் சிரித்து கண்களால் தொலைவிலிருந்தே
உரையாடுகிறது. இவருக்கு அக்குழந்தை யுடன் மிகமகிழ்வுடன் தன் வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறார். குழந்தை தனது குடும்பத்தாருடன் கிளம்பிப் போகும் முன்பாக ஒரு சாக்லெட்டை அவருக்குத் தந்துவிட்டுப் போகிறது.
பிறகு உடைமாற்றி தனது வீட்டுக்குப் புறப்படும் முன்பு முதலாளி ஒரு
சாப்பாட்டுப் பொட்டலம் தருகிறார். அந்தப் பொட்டலத்துடன் வரும் அவர் தன் மனைவியுடன்
அதைப்பிரித்து சாப்பிடுகிறார்கள். அவர்கள் குழந்தையில்லா வயதான தம்பதிகள் என்று
அறிய முடிகிறது.
உணவருந்தும் சில பிம்பங்கள். ஒரு சாதாரண ஆஸ்பெஸ்டாஸ் செட்டில் அவருடைய வீடு. கடைசியில் அந்தக் குழந்தை
அளித்த சாக்லெட் பிரித்து இருவரும் பாதிபாதியை ஊட்டிக்கொண்டு மகிழ்கிறார்கள். படம் முடிவடைகிறது. பலத்த கைதட்டல். இந்தப்படத்தில் ஒலியும் பிம்பங்களும் காட்சிகளும் உணர்வுகளும் தத்ரூபமாக
படமாக்கப்பட்டிருக்கிறது. வசனங்களோ திடிர்
திருப்பங்களோ மிகையோ செயற்கையோ ஏதுமின்றி கச்சிதமான எடிட்டிங் மூலமாக
படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் தன்மையைப் பார்க்கும் போது அப்படம் கேரள பாணி பிம்பங்களின் போக்கும்
மலையாளக் குறும்படம் போலிருந்தது. காவலர் வேடத்தில் நடித்த பெரியவரின் தேர்வு
அவருடைய முகபாவம் சரியாகப் பொருந்தியிருக்கிறது. அவர் வெயிலில் நின்று
கொண்டிருப்பதும் சுடும் வெம்மையில் அவர் தன் கால்களை மாற்றி மாற்றி நிற்பதும்
காட்சிப் படுத்தலில் செயற்கையாக இருந்தது. ஒரு
செருப்பணிந்து கொள்வதற்கோ கொஞ்சம் தண்ணீர் இடையில் குடித்துக் கொள்வதற்குக்கூட தடை என்று இயக்குநர் சொல்கிறார். அப்படியான கொடுமையான முதலாளி என்று பிம்பப்படுத்துவது படு
செயற்கை. ஒரு வேளை அவை கேரளத்தில் சாத்தியமாக
இருக்கலாம். தியடோர் அவதானித்த விசயம் என்ன எனத்தெரியவில்லை. குறிப்பாக அந்த வயதான
பெண்மணி ஒரு உணர்வே இல்லாமல் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
சில குளோசப் ஷாட்களில் பெரியவர் நன்றாக நடிக்கிறார் என்று பேசும் படியாக
இருந்ததும் செயற்கைதான். அநேகமாக இந்தப்படம் எடுத்து பத்துவருடம் ஆகியிருக்கலாம்.
இதற்குப் பதிலாக சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தைக் காட்டியிருக்கலாம். ஒரு வகையில் பிம்பம் சார்ந்த குறியீடுகளுக்கு வேண்டுமானால்
சிறப்பு என ஏற்றுக் கொள்ளலாம்.
ஒலியும் படமாக்கப்பட்ட இடம் செய்தி காட்சி நடிப்பு எடிட்டிங் கதாபாத்திரத்தேர்வு
சரியாக இருந்திருக்கிறது.
பிற்பாடு நடந்த உரையாடலில்,பிரச்சாரப் படம் சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்த
தியடோர் பாஸ்கரன் பிரச்சாரப் படங்கள் வருவதில் தவறில்லை. அவை காலங்காலமாக வந்துகொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக
நாட்டில் மிகக்
கொடுமையான சூழல் என்று வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் மிகுந்த துன்பத்தில்
இருக்கிறார்கள். ஒரு கலைஞர்களாக ஒரு படைப்பாளியாக திரைப்பட இயக்குநராக இருக்கும்
பட்சத்தில் இந்தப்பிரச்சனை தீர ஒரு படம் எடுப்பார்கள் அந்தப்படம் மக்கள்
அபிமானத்தைப் பெறும் பிறகு அந்தப் படம் பிற்காலத்தில் பிரச்சாரப்படம் என்று
பேசப்படும். இதற்காகவும் தான் சினிமா. பொதுமக்கள் பயண்படுத்தும் அவர்களுக்கு இருக்கும்
ஒரு ஒரு வலிமையான பகிர்தல் சினிமா மட்டுமே..
சினிமாவால் மட்டுமே தங்கள்
பிரச்சனைகளை மறக்கிறார்கள் அதுமட்டுமின்றி ஒரு பொதுவான இடத்தில் சகமனிதனாக கொஞ்சம்
மக்களுடன் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்கி றார்கள். அவர்கள் மேலும் நல்ல சினிமாவைக்
காண வேண்டும். அல்லது நல்ல சினிமா இருக்கிறது என்பதை உணர்த்துவதும் தான் நம் கடமை.
50 களில் 16 எம் எம் புரொஜக்டர்
சிஸ்டம் வந்தது அவை இந்திய கிராமங்கள் தோறும் சென்று படங்களைக் காண்பித்தது. ஒரு
வரலாற்று நிகழ்வு அது. அந்த அரிய வகை முயற்சியை வளர விடாமல் தடுத்தவர்கள் பாம்பே
ஸ்டுடியோ முதலாளிகள். பிறகு அரசும் சில காலம் டாக்கு மெண்ட்ரிகளை எடுத்தது.
இப்போது அதுவும் நின்று போய்விட்டது..
நான் டெல்லியில் இருந்த போது
குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்வோம் அங்கு உலகப் பிரசித்த பெற்ற சினிமாக்களை ஒரு
காட்சி இரு காட்சி என்று திரையிடுவார்கள். நாங்கள் பார்க்கிற வழக்கத்தை
ஏற்படுத்திக் கொள்வோம். அதுபோலத்தான் நீங்களும் சினிமாவைப் பார்ப்பதற்கு நேரம்
ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.
வெறுமனே எனக்கு நேரம் இல்லை
என்பதும் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்பதும் நம்மை நாமே
ஏமாற்றிக்கொள்வதாகும். இப்பொழுது டிவிடிகள் மற்றும் ஹொம் தியேட்டர்கள் வசதி
இருக்கிறது நல்ல படங்களை நீங்கள் வாங்கிப் பார்க்கலாம். நான் சில கல்லூரிகளில்
திரைப்படங்களின் சிடிகளுக்கான லைப்ரரி வையுங்கள் என்றேன். அவர்கள் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நமது சமூகத்தில் சினிமா பார்ப்பதும்
அது பற்றிப் பேசுவதும் ஒழுக்க க்கேடாக விமர்சிக்கப் படுகிறது. நம் சமூகத்திலும் நாம் நல்ல சினிமா பார்ப்பதற்கும்
பேசுவதற்கும் கற்றுத்தரவில்லை. நான் எந்த சினிமாவும் பார்க்காமலேயே என்
கல்லூரிபருவத்தை முடித்திருந்தேன் என்பது எவ்வளவு இழப்பு.
அது போலவே தற்காலத்திலும் தாமே
தனக்கு ரசனைகேற்ப சினிமாவைத் தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொள்கிறன்றனர்.
பாடத்திட்டங்களில் சினிமாவை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்று நான் உள்பட பலர்
தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். தற்காலத்தில் சிறந்த படங்களை உருவாக்குகிற
வாய்ப்பும் தொழில்நுட்பங்களும் சாத்தியமாகியிருப்பதால் நல்ல சினிமா வரும்..
கலந்துரையாடல் நிகழ்வில் கல்லூரி
மாணவ-மாணவிகள் மற்றும் சினிமா ஆர்வலர்கள்,பத்திரிக்கையாளர்
கள் பல்வேறு
இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஊடகவியலாளர்கள் என சுமார் 150 பேர்களுக்கும்
மேல் கலந்து கொண்டது அதிசயமாக இருந்தது. சினிமா என்கிற தலைப்பிற்காக
வந்திருந்தாலும் அருவியின் நிகழ்வுகள் தனித்துவம் மிக்கதாகவும் அமைவதும் ஒரு
காரணம். முதலில் சால்வடார் டாலியின் ஓவியங்கள் பற்றிய டாக்கு மெண்ட்ரி திரையிடப்பட்ட
போது அரங்கிற்கு நான் போயிருக்க வில்லை. என்பது வருத்தமான விசயம்.
நிகழ்வுகளை திரு
சீனிவாசன், திரு.சூரிய நாராயணன், நை.ச.சுரேஷ்குமார் ஒருங்கிணைத்திருந்தனர்.
கோணங்கள் ஆனந்த்.பொன்.சந்திரன் உள்ளிட்ட முக்கியமான திரைமொழி ஊடகவியலாளர்கள்
குறும்பட,திரைப்படக் கல்வி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டது நிச்சயமாக
அவர்களுக்கு உதவிகரமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கும்.
முந்தைய பதிவான சமணப் படுகைகள்
சொல்லும் கதைகள் பற்றி குறிப்புகள் ஏட்டளவில் இருந்ததை இப்போதும் எழுத முடியாமல்
இருக்கிற குற்றவுணர்வால் விரைவாக இந்தப் பதிவை எழுத வேண்டும். விரைவில சமணப்
படுகைகள் பதிவையும் எழுதுவேன். அதுபோலவே மகத்தான நிகழ்வுகள் நடைபெறும் போது கோவை
மாநகர் ஒட்டியிருக்கும் கல்லூரி நிர்வாகங்கள் தத்தம் ஆய்வு மாணவர்களை அனுப்பி
ஊக்குவிக்க வேண்டும். முகநூல் நண்பர்கள் கூட வந்து கலந்து கொள்ளலாம். இங்கே எந்தப்
பொருளும் கட்டாயமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்க
மாட்டார்கள்..சத்தியமாக நுழைவுக்கட்டணம், ஆய்வுக்கட்டணம் சேவை வரி, வாட்,எசுகேசன்
செஸ் எதுவும் இல்லை.
நிறைகள் அருவியின் உழைப்பில் உள்ளது. பதிவில் ஏதேனும் குறைகள் பிழைகள் தவறுகள்
இருந்தால் அவை என் கேள்விஞானம் சார்ந்தவை. அதற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்.. மகத்தான
பல துறையின் ஆளுமை மதிப்பிற்குரிய தியடோர் பாஸ்கரன் நிகழ்வு மறக்க முடியாதது.
நன்றி..
உங்களின் விமர்சனம் அங்கு நடந்த அனேக விசயங்களை விவரிப்பதாய் அமைந்தது. எனது போட்டோ ஒரு படத்தை போட்டதற்கும் நன்றி :-)
பதிலளிநீக்கு