ஞாயிறு, 23 டிசம்பர், 2012

விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கு விழா பதிவுகள் முதல்பாகம்


தங்கமயில் தேவ தேவனின் மயில் வாகனம்

 

-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்-விருது வழங்கும் விழா

பதிவுகள்-22-12-2012. கோவை மாலை-6.00 மணி

-------இளஞ்சேரல்

 

         மார்கழி அல்லாத மாதங்களி்ல் மசூதிகளில் இருந்து ஒலிக்கும் து ஆ தொழுகை ராகம் துல்லியமாக ஐந்து மணிக்கு துல்லியமாக காலையைத் துலக்கித்தருவார்கள். கும்பகோணத்திற்குப் பிறகு அதிக கோவில் கொண்ட இருகூரில் அதிகாலையில் பக்தி பாடல்களுக்குக் குறைவில்லை. மசூதி ராகத்தினால் உறக்கம் கலைந்தவர்கள் பதிலுக்கு இந்த மார்கழியில் 4.30 மணிக்கு விநாயகனேஎன்று சீர்காழியின் தொடர்ச்சியாக ஆறு பாடல்களும் மற்ற கோவில்களில் கீர்த்தனைகளைத் துவக்கி வைக்கிறது. பிற்பாடு தங்கமயில் முருகனின் மயில்வாகனம் பாட்டைக் கேட்டுவிட்டுதான் சிந்தனை கலையும். எல்லாப் பாடல்களும் கடவுளை எங்கிருக்கிறாய் நான் கேட்பது உன் காதில் விழுகிறதா..இல்லையா,.என்பதாக இருக்கும்.இந்தப்பாடல் மட்டும் குழந்தையை அழைத்துக் கொண்டு ஓவியக்காரன் தெருக்குள் நுழைவது போன்ற அழகியல் இருக்கும்.

           முகநூலில் இந்த விழா பற்றி தேவதேவனும் மார்கழியும் முன்கூட்டி எழுதப்பட்ட கட்டுரை குறித்து விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டும் தெரிவித்தமைக்கு நன்றி. விழாவின் முக்கிய விருந்தினர் இசைஞானி இளையராஜா வந்த பிறகு அவரைப்பார்த்ததும் என் நெருங்கிய நண்பர்கள் அரங்கை விட்டுக் கிளம்பினார்கள். இருங்கள் ஒன்றாகப் போகலாம் என்றேன் அவர்களோ நீ்ங்க வந்திருக்கீங்க எப்படியும் விரிவா எழுதியிருவீங்க..நிறைய எழுத்து வேலையிருக்கு நான் எழுத வாய்ப்பில்ல..என்றேன் மறுபடியும் நீங்க அப்படித்தான் சொல்வீங்க. 20 பக்கம் எழுதுவீங்க..வர்றோம்.ஐந்தாறு பேர் கிளம்பினார்கள். கடைசி அஸ்திரமாக இருங்க உஜாலா பார்த்திட்டுப் போலாம் என்று கூட சொல்லிப்பார்த்தேன். அசைய வில்லை ஏற்கனவே ரெண்டு சொட்டு கலந்திருந்தார்கள். அவர்களின் நம்பிக்கையை வீணாக்காமல் எழுத முனைந்தேன்.

             முதலில் மாநகராட்சிக் கலையரங்கம் என்றதும் வெறுக்கென்றது.என்ன இசைஞானிக்கு வந்த சோதனை. ஆர்.எஸ்.புரம் ஆடியன்ஸ் கொஞ்சம் வித்யாசமானவர்கள். போதாதற்கு அரங்கம் கொஞ்சம் பழமை வாடை யடிக்கும் உயர்ரக ரசனையாளர்கள் மாநகராட்சிக் கலையரங்கமா என்று சேரி பாவ மனோபாவத்துடன் அணுகுவார்கள். சுத்தக்குறைச்சல் வேறு என்கிற சிந்தனை. ஆனாலும் கலையரங்கம் போய்ப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அற்புதமான பராமரிப்பில் அழகாக நேர்த்தியாக இருந்தது. அந்தப்பணியாளர்கள் நிர்வகிக்கும் அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன். இந்தத் தூய்மைப் பணியைத் துவக்கிய அசத்திய ஆணையர் மற்றும் முன்னாள் மேயர் தா.மலரவன் மற்றும் நிரஞ்சன் மார்டி. அன்சுல் மிஸ்ரா ஆகியோரின் தொடக்கம் தான் கோவையின் மையத்தின் அழகுக்குக் காரணம். குறிப்பாக இருக்கைகளின் அமைப்பினைப் பாராட்டிட வேண்டும்.ஒருவருக்கொருவர் உரசியே ஆக வேண்டும்.அப்படியான நெருக்கம். மனதோடும் உடலோடும் ஸ்பரிசமின்மையே மனித மனங்களின் அழுத்தங்களுக்கான காரணம் என்று பேசிய ஜெயமோகனுக்கு மாநகராட்சி கலையரங்க இருக்கைகளே பதில் சொன்னது அதிசயம் தான்.(யாராவது அம்மா காதில் போட்டு விடாதீர்கள்..அப்படியே இருக்கட்டும் அந்த இருக்கைகள்). ஒரு புறம் சிவாஜி கணேசன் திறந்து வைத்ததாகக் கூறப்படும் கல்வெட்டு இன்னொரு புறம் தத்ருபமான புலி. நல்ல ஒற்றுமை.ஒருவேளை சிவாஜியும் வேட்டைகாரன் புதூர் ஜமீன்தாரும் வேட்டியாடிய புலியோ என்னவோ. அவ்வளவு உறுமல் தோற்றம். இளவேனிலிடம் சொன்னேன். பார்த்தாயா நாட்டில் புலிகளின் இருப்பு அளவுதான் நவீன இலக்கிய வாதிகளின் அளவும். நாடு புலிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பாடுபடுவது போலத்தான் நாமும் நவீன இலக்கிய வாதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குப் போராடுகிறோம்.என்றேன். ஒரு புறம் புலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறேன் என்று சொல்லி்க்கொண்டு ஒரு புறம் புலிகளைத் தீர்த்துக்கட்டியதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும். பிற்பாடு நான் இந்த முரணைத் தான் நவீன இலக்கியம் பேசுகிறது பிறகு ஏன் புரியவில்லை என்கிறார்கள் என்றேன்.

அட போய்யா நவீன இலக்கியவாதிகள் பலருக்கே புரிவில்லை. நவீன இலக்கியத்தில் ஓரளவு சாதித்தவர்களுக்கே கூட ஐயா நீங்கள் வலியுறுத்துவது எழுதுவதுதான் நவீன இலக்கியம் என்றால். அப்படிங்களா..என்று

       சொல்லிவிட்டு மேடையிலிருந்த இளையராஜாவை யாருங்க அது என்றார் ஒருவர். அதாவது அந்த ஆள். பக்கத்திலிருந்தவர் நானோ அவர்தான் இளையராஜா என்றேன். ஆமா உங்ளை நம்ப முடியாது. குற்றப்பத்திரிக்கைப் படம் என்னாச்சு ராஜீவ் இருக்காருங்கறீங்க.. பிரபாகரன் இருக்காருங்கீறீங்க எம்ஜி ஆர் இருக்காருங்கறீங்க.. எதை நம்பச் சொல்றீங்க.. அப்படித்தான் நாம் நம்பரதா இல்லை. நானும் இப்படிச் சொல்வீங்கணுதான் ரெண்டு இளையராஜா பாருங்க.. என்றேன். அவரோ பார்த்தீங்களா அது தேவதேவன் இல்லைன்னு ஒத்துக்கறீங்க என்றார். பொன் இளவேனிலைப் பார்த்தேன் அவரோ காதோடு காதாக இங்க வெச்சு ஒதைக்கலாமா வெளியில வெச்சு ஒதைக்கலாமா என்றார். நான் பேசாமல் விழா எப்போது முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். வேறு இருக்கை பார்க்கலாமா என்றால் அரங்கம் வேறு நிரம்பி விட்டது. அந்த ஆளின் வினோதமான பேச்சை மடக்க நாங்கள் இருவரும் ஐடி கார்டைக் காட்டினோம். அவர் சீமான் பாருங்க கண்ணாடி போட்டிருக்காரு..என்றார்.

       

        அவருக்குப் பதில் சொல்வதற்கு கடலூர் சீனுதான் சரியானவர் என்று அவரை அவர் இருக்கும் இடம் காட்டி அவரிடம் கேளுங்கள் என்றேன்.

        இறைவணக்கமும் தமிழ்த்தாய் வாழ்த்துமாக இரண்டு பாடகிகள் மாசறு பொன்னே வருகஎன மது சந்தக வசீகர ஆலாபனையிலேயே மயக்கி அரங்கத்தை நூறடி உயரம் தூக்கி அப்படியே ஊஞ்சலை மெள்ள ஆட்டுவது போலாக்கினார்கள். நாங்கள் சீட்டோடு தூக்கி நின்று பெல்ட் போட்டிருக்கலாமோ என்றான உணர்வு.

            அப்பொழுது உயர்ந்த அரங்கம் இளையராஜாவின் டியுனுக்கு ஒத்துழைப்பது போல அசைந்து கொண்டிருந்நது.

பிறகு அரங்கத்தை மோகனரங்கன் கட்டுரை வாசித்துதான் கீழிரக்கி வைத்தார். அவர் இல்லையெனில் திண்டாட்டம் தான்.                     

      வரவேற்புரை வாசித்த அரங்கசாமி இரண்டு முக்கியமான ஆளுமைகள் வலைப்பூவில் 18 ஆயிரம் கட்டுரைகளை எழுதியவரையும் அது போலவே கிட்டதட்ட 1000 நூல்கள் எழுதிய துளசி நாராயணசாமி சில நாட்கள் முன்பு மறைந்த அன்று ஒரிரு வரிகள் கூட அஞ்சலி தெரிவித்து யாரும் எழுதவில்லை எனும் ஆதங்கத்தைத் தெரிவித்தார். அனைவரையும் வரவேற்றார். ரசிகர் மன்றம் என்று கேலி பேசியவர்கள் கூட இந்த விழாவையும் விருது வழங்கும் நிகழ்வையும் வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

                 விருதுகள் வெல்லும் காலத்தில் இருக்கும் தலைமையேற்ற நாஞ்சில் நாடன் தன்னுடைய உரையாற்றியவர்

                தேவதேவனுக்கும் தனக்குமான இலக்கிய உறவைப் போற்றியவர் இந்த விருது தேர்ந்தெடுக்கப்படும் வரை இவருக்கு விருது என்பது தெரியாது. எனினும் நான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுடன் நெருங்கிப் பழகுகிறவன் இருந்தாலும் விருது  அவருக்கு வழங்கப்பட்டதில் மகிழச்சியே. என் காலத்தின் மகத்தான கவிஞர்களில் தேவவேனும் ஒருவர். தருமுசிவராமு, ம.இலெ.தங்கப்பா, சி.மணி,பசுவய்யா, போன்ற ஆளுமைகளைச சொல்லலாம் சிலர் விடுபட்டிருக்கலாம்.

       சமீபத்தில் கவிதை அமர்வு ஊட்டி நாராயண குருகுலத்தில் நடந்த போது நானும் தேவதேவனும் கலந்து கொண்டு நிறையப் பேசினோம்.அவர் ஒரு பக்கம் போனால் நான் ஒரு பக்கம் போனேன்.அவருடைய சிந்தனை ஒரு மாதிரியாக இல்லாமல் இப்பொழுதும் புதிதாக எழுதுபவர் மாதிரி யோசிப்பவர் எழுதுபவராக இருக்கிறார். ஊட்டியில் ஐந்தாறு காட்டெருமைகள் சூழ்ந்து விட்டது. அவர் பயப்படவில்லை.பிறகு அவை தனித்து வேறு பாதையில் போய்விட்டது. இவர்கள் பாவம் கவிஞர்கள் இவர்களைத்தாக்கி என்ன பயன் என்று வி்ட்டு விட்டதோ என்னவோ. இசைஞானி யைப்பற்றிச் சொல்ல வேண்டும். அவர் படத்தில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் முறையாக அவருடைய பிரசாத் ஸ்டுடியோவிற்கு நுழைகிறேன். அவ்விடம் கோவிலுக்குள் நுழைவது போன்ற உணர்வு நான் உடனே அவரிடம் கோவில் மாதிரியே இருக்குஎன்றேன்..அவரோ மாதிரின்னா பிறகு நான் கோவில்தான் என்றார். நான் எழுதிய பாடல் வரிகளைப் பார்த்துத் தேர்வு செய்தவரிகள் நான்கைந்து சொற்கள்தான் பாடலானது. நீங்கள் மெட்டுக்கு எழுதியதுபோல எழுதியிருக்கிறிர்கள் என்றார்.

            மகிழ்ச்சியாக இருந்தது. என் பாடலுக்கு அவர் ஆர்மோனியம் வாசித்தது பெறும் பேறு என்று தான் சொல்லவேண்டும். தேவதேவன் கவிதைகள் வாசிக்கும் போது நகுலன் நினைவும் வரும் அவருடைய கவிதையின் தலைப்பை நாவலுக்கு வைக்க விரும்பி அவரிடம் சம்மதம் கேட்டு எழுதிய கடிதத்திற்கு அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.. தேவதேவன் ஒரு கவிதையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குத் துணையாக மரத்தையும் மரத்தின் நிழலை பாதுகாப்பாக ஒப்படைப்பது மாதிரி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார்

         அற்புதமான கவிதை அது. தற்போது என்மகள் பிரசவத்திற்காக வீடு வந்திருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணை அவள் தாய் எப்படி யெல்லாம் பாதுகாக்கிறாள் என்பதை இப்போது கூடவே இருந்து பார்க்கும் போதுதான் சிரமம் புரிகிறது தேவதேவனின் கவிதை பல்லாண்டுகளுக்கு முன்பு அந்த உணர்வுகளை அவர் எழுதியவையின் ஆத்மாவை உணர்கிறேன். தமிழ் எழுத்தாளர்களின் அதிமான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர்தான் ஜெயமோகன்.அவரளவிற்கு எதிர்ப்பு இருப்பவர்கள் யாருமில்லை என்றார்.

           எனக்கு என்னவோ எதிர்ப்பு நவீன இலக்கியப் படைப்பாளர்கள் அவரைவிடவும் பயங்கரவாத எதிர்ப்பு மனோபாவத்துடன்தான் கையாளப்படுகிறார்கள் என்பதை அவருக்கு சிரம் தாழ்ந்து கூறிக்கொள்ள விழைகிறேன்.

        சுகா ஒரு அற்புதமான எழுத்தாளர்.அவருடைய தாயார் சன்னதி நூல் வெளிவந்து கொஞ்ச காலத்திலேயே மூன்று பதிப்புகள் கண்டவர். அவருடைய ஆனந்த விகடன் தொடர் மிகவும் பிரசித்த பெற்றது. இசைக்குடும் பத்திலிருந்து சினிமாவிற்குள் வந்த அவர் பல இலக்கிய வாதிகளின் படைப்பு களையும் படைப்பாளர் களையும் சினிமாவுடன் இணைத்துக் கொள்பவர். கல்பற்றா நாராயணன் நெருங்கிய நண்பர். என்று மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு உரையாற்றியவர் கடைசியாக விருது தொகை அடுத்த ஆண்டு ஒரு லட்ச ருபாயாக அளிக்கப் படவேண்டும் என கோரிக்கையை வைத்து விடைபெற்றார்.

         அடுத்து உரையாற்றிய ராஜகோபாலன் முதலில் கொஞ்சம் தடுமாற்றம் அச்சம் காரணமாக குரல் தழுதழுத்தது.பிறகு கவிதைகளுக்குள் நுழைந்ததும் இயல்பாகப் பேச ஆரம்பித்தவர் தேவதேவன் கவிதைகள் பற்றிய விரிவாக ஆழமாக விவரித்துப் பேசினார்.அவருடை கவிதைகளுக்கு இருக்கும் விமரிசன போக்குகளுக்குப் பதி்ல் அளிக்கும் விதமாகவும் தேவதேவனின் கவியாழத்திற்கு அணுசரணையாக வும் பேசினார். சமூக அவலங்களைப் பாடுவதில்லை. வெறும் அழகியல் கூறுகளை மட்டுமே எழுதுவதும் இயற்கையான சொல்லாடல்கள் மட்டுமே கவிதையாகாது என்பதற்கான விமர்சனங்களுக்குப்பதில் அளித்தார்.

             உரையின் ஆக்கத்தில் ராஜகோபாலனின் உள்ளார்ந்த விமர்சனமாக இது உள்ளதா அல்லது ஜெயமோகன் அறிவுறுத்தலில் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

         அவருடைய உரையின் பெரும்பகுதியை ஏற்கெனவே அறிந்த ஒன்றாகவும் எழுதப்பட்டு திரும்பத்திரும்ப வாசிக்கப்பட்டதாகவும் இருந்ததையே ஒப்பிப்பதாக இருந்ததை நிலையை அவர் அரங்கின் அமைதியை உணர்ந்ததும் கொஞ்சம் மாற்றுவதை நான் உணர்ந்தேன். தன்னுடைய தாழ்வு மனப்பாண்மை கொண்ட நண்பன் மன அழுத்தம் காரணமாக தன்னைச் சந்திக்க வந்ததாகவும் பிற்பாடு தன் பிரச்சனைகளைச் சொல்லி அழுததாகவும் அப்பொழுது சூரியன் அஸ்தமனமாகி பிறகு மறையும் வரைப் பார்த்த அவர் அதற்கு முன்பு எதுவும் நிகழாத வண்ணம் எழுந்து இயல்பாக தன்னுடன் வந்ததும் ஆச்சர்யமாக இருந்தது. அதற்கும் அவர் எந்த இலக்கியப் பிரதியும் வாசிக்காதவர்.அவரை இயற்கை மாற்றியிருக்கிறது. பிற்பாடு அவர் நல்ல தொழிலதிபராக நல்ல குடும்பஸ்தராக மாறி இப்பொழுதும் சிறப்பாக வாழ்கிறார். இதை நான் சொல்வதற்குக் காரணம் எந்தத் தத்துவமும் இசங்களும் போராட்டங்களால் மாறுவதை விடவும் மனித மனம் இயற்கையின் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு விடுதலை யுணர்வை அடைகிறான்.

                 தேவதேவன் முன்வைக்கும் கவிதைக் கோட்பாடுகளும் அதைத்தான் போதிக்கின்றன. மனிதனின் ஆரம்ப கால முயற்சிகளில் முதலில் மொழி பிறந்த பிறகுதான் இலக்கியம் பிறந்தது.அந்த கவிதை மொழியை நன்கு பயண்படுத்தியவர் தேவதேவன். பிறகுதான் எல்லா கட்டமைப்புகளும் தோன்றியன.மொழியின் அழகியல் செயல்பாடாக கவிதையாக முதல் முதலில் மலர்ந்தது. அவரும் முற்போக்குக் கவிதைகள் ஆரம்பத்தில் எழுதியிக்கிறார். ஆனால் அவர் அறியப்படுவது அந்தக் கவிதைகளால் அல்ல.நாம் அறியும் தேவதேவன் அழகியல் கூறுகளுடன் இயற்கையின் தரிசனங் களுடன் எழுதிய தேவதேவன் இன்றும் நிற்கிறார். அவர் தொடர்ந்து ஓசையும் சந்த நயமுமிக்க முற்போக்கு மட்டும் உணர்ச்சிமயமான கவிதைகளை அவர் எழுதியிருந்தால் காலத்தால் கரைந்திருப்பார். சூழலியல் அழகியல் கூறுகளுடன் ஒருவர் தொடர்ந்து எழுதுவதே ஒரு மகத்தான கவிஅனுப வங்கள்தான் என்றார். அவருடைய கவிதைகள் சிலவற்றை வாசித்துக் காட்டியவைகள் ஏற்கெனவே அறிந்த கவிதைகளாகவே இருந்தது ஏமாற்றம்தான் அல்லது ரசனை மனோபாவத்திற்காக எடுத்தாண்டு இருந்தால் பரவாயில்லை.

         அவருடைய புகழ்பெற்ற கவிதைகளைத் தவிர்த்து மேலும் ஆழமான கவிதைகளை எடுத்துப் பேசியிருக்கலாம். ஆனாலும் ராஜகோபாலனின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் விவரித்த அழகான உவமைகள் இளையராஜாவிற்காக வந்த ரசிகர்களுக்கு விருந்தாகவே இருந்திருக்கும். பிரான்சிஸ்கிருபாவின் கன்னி நாவலில் தேவதேவன் ஒரு கதாபாத்திரமாகவே வருவார். அவரைப் பார்ப்பதற்கு வீட்டிற்குப போயிருந்த போது வாசலில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தவரிடம் தேவதேவனைப் பார்க்க வேண்டும் என்றபோது நான் தான் தேவதேவன் என்றது நினைவிருக்கிறது என்றார்.

               

         எனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டது.கொஞ்சம் வெளிக்காற்று சுவாசித்து விட்டு வரலாம் என்று இறங்கி வெளியே வந்தேன். அந்த இருக்கை ஆள் என்னை நோக்கி வந்தார்.நான் கடலூர் சீனியைத் தேடினேன்.அவரோ மேடையினருகே பத்திரமாக இருப்பதைப் பார்த்ததும் கலவரமானது. என்னை நோக்கி அவர் வருகிறார். என்னிடம் பாத்ரும் எங்கே என்க..நானோ இடம் காட்டினேன். சீமான் வந்திருக்காராட்டருக்கு. என்றார் நானோ மேடையைப் பார்க்க சுகாவைத்தான் சொல்கிறாரோ என நினைத்து அவர் இல்லங்க. அவரு பெரிய டைரக்டரு..என்றேன். பிற்பாடு இளையராஜாவின் கட்வுட் பார்த்து விட்டு அங்கு 85 களின் கால ராஜாவின் படம் பார்த்து ஏன் சீமான் போட்டோவை புலி போடாம அடிச்சிருங்கீங்க. என்றார்.நான் பேசாமல் இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். பிறகு பொன் இளவேனில் காற்று வாங்கப் போனார்.

கல்பற்றா நாராயணன் பேச வந்தார். அழகான மலையாளம், ஒரு சாஸ்திரிய சங்கீதக்குரல். ராஜாவின் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு என்று தன் பேச்சைத்துவங்கி தேவதேவன் கவிதைகள் மற்றும் கேளர நவீன கவிஞர்கள் கடம்னிட்ட ராமகிருஷ்ணன்.ராஜீவன். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்பட பல கவிஞர்களுடன் நமது தேவதேவன் கவிதைகளையும் இணைத்து உரையாற்றினார்.அவருடைய உரையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர் மொழிபெயர்த்தது ஒரு தத்ருமான வெளிப்பாடு எனலாம்.நிகழ்விலேயே செவ்வியல் தன்மையான நிகழ்வு அதுதான். கோவை மக்களுக்கு மலையாளத்தை மொழிபெயர்க்க முற்பட்டது அபத்தம் தான் .அப்படியே அவரைப் பேசச் சொல்லியிருந்தால் சங்கத்தமிழின் அழகை முழுமையாக உள்வாங்கியிருக்கலாம். வாய்ப்புக் கிடைக்கவில்லை. மொழிபெயர்த்தவரோ பாறையைப் பெயர்த்து எடுப்பது மாதிரியும் கல்குவாரியில் வெடிவைத்து தகர்ப்பதைப் போன்றும் இருந்தது. ஆயினும் அவர் சமாளித்த விதமும் கல்பற்றாவின் தெளிவு படுத்தியதும் சிறப்பாக இருந்தது.

          ஒரு எளிமையான மனிதர்களின் எந்த ஒத்திகையும் அற்ற நேர்மையான நிகழ்வாக இருந்தது. இதே ஆர் எஸ் புரம் கலையரங்கில் 80 களில் நாடகங்கள் கொடிகட்டிப்பறந்த காலங்களில் நாடகங்கள் பார்த்து பழகிய நிகழ்வுகள் இந்தச் சூழலில் வந்துபோனது. இதே அரங்கில் எத்தனை சமூக நவீன- ஓரங்க-காமெடி-சரித்திர நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த நாட்கள் நினைவில் ஓடியது. ஒரு கணத்தில் நிகழ்வு முழுக்கவும் அவர்கள் இருவரும் பேசியிருந்தாலே போதும் என்றிருந்தது. ஆனால் மொழிபெயர்த்த நண்பரை எல்லோரும் சூழ்ந்து சங்கடம் கொண்டதுதான் சினிமாத்தனம். அவரோ தமக்கு அவர் பேசியது கேட்க வி்ல்லை அவருடைய உதட்டு அசைவை வைத்துதான் பேசினேன் என்றதும் மார்வெலஸ் கிளாசிக் பிரண்ட் என்றேன் அவரிடம். எனினும் ஜெயன் கூட நெளிந்தது அதிர்ச்சியாக இருந்தது. அவர் ரசித்திருக்க வேண்டுமே. தேவதேவனின் கவிதைகளின் ஆத்மார்த் தமான இடமே இவர்களின் உரையாடல்கள் தானே..சரி..பிறகு நிகழ்வை ஒருங்கிணைக்கும் நண்பர் வந்து அவரை மலையாளத் திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கச் சொன்னால் மலையாளத்தி லிருந்து இன்னொரு மலையாளத்திற்கு மொழிபெயர்த்து விட்டார். என்று அரங்கத்தை மேலும் கலகலப்பாக்கினார்.

         பக்கத்து இருக்கையைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன் அதே ஆள். எனக்கும் இளவேனிலுக்கும் மத்தியில். அவர் சுவராசியமாக கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார். நான் அவர் பக்கமே திரும்ப வில்லை. இளவேனிலிடம் பக்கவாட்டாக சாய்ந்து என்னய்யா இப்படிப் பண்ணிட்டே..என்ன காரியம் பண்ணியிருக்க தெரியுமா..

நீ சும்மா இரு இந்தாள விட்டா ஒவ்வொருத்தரையும் டென்சன் பண்ணிட்டு இருப்பார்.நாமளே வெச்சுக்கலாம்.என்கிறார். மறுபடியும் என்னிடம் அவர் படம் எப்ப விடுவாங்க..இங்கிலிஸ் படம் தான் சரிங்க..ஒரு மணிநேரத்தில விட்ருவாங்க..ரெண்டரை மணிநேரமா ஓடிட்டு இருக்கு..சீமான் எப்ப பேசுவார் என்றார் கொஞ்ச நேரத்துல“ மேடையைப் பார்த்தேன்.

                க.மோகனரங்கன் பேச வந்தார். அவருடைய கட்டுரையிலேயே கொஞ்சம் பலமற்ற கட்டுரை இதுதான்.கட்டுரையின் துவக்கத்தில் முதல் இரண்டு உலகப் போர்கள் மற்றும் தத்துவங்களின் மீதான பிடிப்புகள் தோல்வி.நம்பியிருந்த கற்பனைகளும் சித்தாந்தங்களின் தோல்வி அவை கவிதைகளை பாதித்தது. பிறகு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மணிக்கொடி கால கவிதை வானம்பாடி நவீன காலம் மற்றும் தொழில் நுட்பப்புரட்சி காலச் சூழல்கள் பற்றிய தவறான அவதானிப்புகள் பற்றியே இருந்தது கட்டுரை.அவர் நவீன கவிதை இயக்கம் பற்றி எப்பொழுது தொடப்போகிறார்.என்று ஆவலாக இருந்து ஏமாந்தேன்.சிந்தாந்தங்களின் தோல்வி என்பது அதிர்ச்சியாக இருந்தது.சித்தாந்தங்கள் என்றும் தோற்காது. அது போலவே தத்துவங்களின் வீழ்ச்சி அதுவும் வீழாது.நடைமுறைப் படுத்துவதில் கையாள்பவர்களின் பலவீனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். பிறகு தேவதேவன் கவிதைகளில் இருக்கும் கவித்துவம் மற்றும் கவிதையியக்கம் பாடுபொருள் உணர்த்தும் கலை பற்றி சிறப்பாக எழுதியிருந்தார். அரங்கம் கொஞசம் உரக்க நிலைக்குப் போனது. மக்கள் அரங்கில் ஒரு சாதாரண அரங்கில் வாசிக்கப் பயண்படுத்தும் வடிவத்தையும் அவர் சற்று தளர்வாகவும் வாசித்தது முழு தயாரிப்பில் அவர் வரவில்லையோ என்று நினைக்க வைத்தது. தேவ தேவன் கவிதையும் வாழ்வும் அவர் நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள் இப்போதும் எப்போதும் இருந்ததில்லை.அவர் மக்கள் எப்போதும மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கான மருந்து உணவு இருப்பிடம் எல்லாம் கிடைத்து சுகமாகவும் அற்புதமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். என்கிற யோகி சிந்தனையில் எழுதுபவரை காலக்கிரமப்படி வரிசைப்படுத்தியது அதிர்ச்சியாக இருந்தது.கட்டுரையில் ஏற்கெனவே தேவதேவன் பற்றி பயண்படுத்தப்பட்ட சொற்றொடர்கள்,அவதானிப்புகளே இருந்தது. ராஜகோபாலன் வாசிப்பின் அடுத்த தொடர்ச்சியாகவே இருந்ததே ஒழிய அதில் மோகனரங்கன் பார்வை உணர்வு இல்லாமல் இருந்ததால் கவிதை ஆர்வலர்கள் வெளியே சிடி வாங்க யுரின் போக செல் பேச போனார்கள். அவருடைய வடிவம் ஒரு அரங்க ஆய்வு பரிமாற்றத்திற்கான தயாரிப்பு.மக்கள் அரங்கிற்கான மொழியில் தெரிவு செய்யப்படவில்லை. கோவை போன்ற திராவிடம், கம்யுனிசம், ஆன்மிக மரபு, வெறிபிடித்த வாசிப்பா ளர்கள் குழுமிய அரங்கில் 2000க்கு முன்பே வழக்கொழிந்து போன கவிதையியல் கட்டுரை வடிவத்தை கையாண்டது அதிர்ச்சியாக இருந்தது. நான் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்மையை சொல்வதின் மூலம் சங்கடத்தை நான் எதிர்கொள்ளலாம் ஆனாலும் அவர் இன்னும் நவீன கவிதையியலுக்கும் மொழியின் ஆழத்தின் பணியாற்றப் போகிற முக்கியமான ஆளுமை மோகன ரங்கன்.

        பிற்பாடு பலத்த கரகோசம் மற்றும் பிளாஷ் மின்ன ராகதேவன் அழைக்கப்பட்டார்.அவருடைய பேச்சைக் கேட்கக் கூடியிருந்த ரசிகர்கள் முன்வாயில்களை அடைத்து நின்று கொண்டு கூர்மையானார்கள். நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விசயத்தைப் பேசிய பிறகு தேவதேவன் கவிதைகளை சற்று முன்பு சிலவற்றை வாசித்தேன் உண்மையிலேயே அற்புதமான கவிதைகளாகவும் விருது அளிக்கும் விழாவில் கலந்து கொள்வதிலும் மகிழச்சியடைவதாகத் தெரிவித்தவர் ராஜகோபாலன் பேசியபோது உண்ணிப்பாகக் கவனித்த விதத்தை அரங்கம் அறிந்து அதிரத்தான் செய்தது.

          அதாவது மனிதனுக்கு முதலில் மொழி பிறகு சொல் பிறகு எழுத்து கவிதை அப்புறம் தான் மற்ற இலக்கிய வடிவங்கள் என்று சொன்னார். அதில் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி காரணம் முதலில் தோன்றியது இசைதான் என்றார் பலத்த கைதட்டல். அவர் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தது புரியவந்தது. ஆமாம் ஐயா முதலில் இசைதான் வந்தது.ஆ ஓ ஏ, ஓ என்று கத்தியிருப்பான் அல்லவா அதுவும் இசைதான்,உலக பிரபஞ்சத்தின் ஒலிகள் இசைதான்.நான் நீங்கள் பேசுவது இந்த ஓசை எல்லாமே இசைதான்.அதனால் தான் சொல்கிறேன்.இசைதான் முதலில் தேன்றிது.அப்புறம் இசைதான் தோன்றியது. பிறகு அப்புறமும் இசைதான் தோன்றியது என்று சொல்லவும் அரங்கம் மறுபடியும் அந்தரத்தி ற்குப் போனது. கோவிலுக்குப் போகிறீர்கள் வேண்டாம் நீ்ங்கள் வெறுமனே நீங்கள் ஜனம் நீ ஜனனி யைப் பாடுங்கள். நீங்கள் பாடவும் வேண்டாம் அதை நினையுங்கள் உங்களுக்கு ஒரு விடுதலை உணர்வு வருகிறது அல்லவா அதுதான் இசை. தேவ தேவன் கவிதைகளில் உள்ள ஆன்மீகம் அவருடைய எளிமையான தோற்றம் என்னைக் கவர்ந்ததால் நிகழ்விற்கு வரு வதற்கு விரும்பினேன்.என்னை சந்திக்கிறவர்கள் கேட்பார்கள்.. அந்தப்பாடலை, வேறொருவரின் பாடலைப் பற்றியும் நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல்களையும் கேட்பார்கள். உங்களுக்கு நான் கொடுத்துக் கொண்டேதானே இருக்கிறேன் மற்ற விசயங்களைப் பற்றிக் கேட்காதீர்கள். நீங்கள் யாரிடம் கேட்க நினைக்கிறீர்களோ அவரிடம் கேளுங்கள் என்றார்.மிகச்சுருக்கமாக கம்போசிங்க் முடிக்கும் நேரத்தில் அழகான உரையாக இருந்தது.

        

        சுகா பேசவந்த போது தாம் இப்போதுதான்  தேவதேவனைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனாலும் தனது நண்பர் ஜெயமோகன் அவருடைய கவிதைகளைப் பற்றி நாள் முழுக்கப் பேசியதை நினைவு கூர்ந்தார்.ஜெயமோகன் ஆரம்பத்தில் கவிதைகள் எழுதியதை நினைவு கூர்ந்து சில கவிதைகளை அவர் சொன்னார். தாம் ஜெயகாந்தனின் தீவிரமான ரசிகன். பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக கண்ணதாசன், கல்யாண்ஜி நகுலன் என்று துவங்கிய இலக்கியப் பயணம் பிறகு சினிமாவில் நின்றது.என்றார். தாம் எல்லாமே பாரதியிடம் தேடுவதாகவும் தன்னால் தீவிரமான நவீன இலக்கியத்திடம் வந்து சேரமுடியாமைக்கு இங்குள்ள ஈகோவும் குழு மனப்பான்மையும் காரணம் என்றார். யாரை எடுத்தாலும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்காமல் விமர்சனம் செய்து கொள்வதும் பிரச்சனை செய்து கொள்வதும் விமர்சனம் செய்வதும் நிகழ்ந்து வருவதை வெளிப்படையாகப் பேசியது அட்டகாசம். வெடிகுண்டாக ஒன்றைத் தூக்கிப்போட்டார்.அதாவது இலக்கியவாதிகள் சினிமாக் காரர்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையே அற்றவர்கள் என்றார். அரங்கில் ஞானி இருந்ததும் அவர் போலவே பல இலக்கிய வாதிகள் இருந்த போதும் அமைதியே காத்தது நெளிய வைத்தது. சுகாவின் பட்டவர்த்தனமான ஸ்டேட் மெண்ட் அபாரமானது. அப்படியாக பொது விமர்சனம் வந்தால் தான் கொஞ்சமாச்சும் யோசிப்பார்கள்.தான் மட்டுமல்லாது மற்ற இயக்குநர்களான பாலாஜி சக்திவேல் பாலா,சீனுராமசாமி, வசந்தபாலன் போன்றவர்கள் இலக்கிய வாதிகளின் படைப்புகளை மற்றும் அவர்களை சினிமாவில் இணைத்துக்கொள்கிறோம். தேவதேவன் பற்றிப் பேசும் போது எல்லோரும் சொன்னது போலவே இசைஞானிக்கும் அவருக்கும் ஒற்றுமை அதிகம். பாருங்கள் இப்போது கூட இந்த விழா யாருக்கோ நடப்பதுமாதிரிதான் உட்காந்து இருக்கிறார். அநேகமாக நான் போகும் போது தேவதேவனுடன் சென்றாலும் சென்று விட வாய்ப்புள்ளது. எங்கள் பக்கத்து ஊர்க்காரர் அவருக்கான விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன் என்றார்.

     சுகாவை சீமானாக வரித்துக் கொண்டிருந்த அந்த ஆள் கைதட்டிக் கொண்டே ரசித்தார். விக்கெட் எடுத்த வீரனைப் போல கைகளை உயர்த்தி காற்றில் கைதட்டி வெளிப்படுத்தினார். அமர்ந்ததும் அவர் என்னிடம் சார் நான் கௌம்பறேன்..டெம்போ பிடிச்சிட்டு வந்திருக்கொம்.. எழுந்து கொண்டார். நானும் அப்பாடா என்று சமாதானமானேன்.. அந்த இருக்கையைக் காலியாகவே வைத்துக் கொண்டோம் மீண்டும் அவர் வருவதற்கு சான்ஸ் இருக்கிறது. ஆட்டத்தின் போக்கே வேறுவிதமாக மாறி இலக்கிய வாதிகளின் விக்கெட்டுகளை சுகாவும் வீழ்த்தியதால் ஒரு கட்டத்தில் எட்டு விக்கெட் இழந்து தள்ளாடிக்கொண்டிருந்ததால் கேப்டனைக் களமிறக்க ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்தார். அரங்கம் கடைசி ஓவர்களை ஜெயமோகன் எப்படி ஆடப் போகிறார் அல்லது தோனியைப் போல தோற்றுவிட்டு பிட்ச் செரியில்லை என்று சொல்லப் போகிறாரா என்று ஆவலுடன் கவனித்தது. அரங்கம் சுகாவின் பவுன்சர்களை எதிர்பார்க்காத இலக்கியவாதிகளின்  விக்கெட்டுகள் சரிந்த நிலையி்ல் ஜெ தான் பதில் சொல்லியாக வேண்டும்.

           அந்த ஆள் மறுபடியும் வந்து அமர்ந்தார். கையில் சில புத்தகங்கள். சொல் புதிது வெளியிட்ட நூல்கள் சில வைத்திருந்தார். இன்னக்கி இருக்காங்களா நைட்டே கிளம்ப றாங்களா என்றார்... நான் யாரு என்றேன்..தேவதேவன் என்றார். நான் இளவேனிலைப் பார்த்தேன் அவர் மூச் விடாதே சைகை காட்டினார். திருவனந்தபுரத்திற்கு நைட் ட்ரெய்ன் இருக்கா என்றார். அந்த ஆள். நான் தெரியலை என்றேன். ஒ..ராஜா சார் கிளம்பரார் போலிருக்கே நைட் கம்போசிங்க் இருக்கு..எழுந்து கொண்டார். பார்த்தீங்களா ராஜா சாரோடு பெருந்தன்மை நாடகத்திற்குக் கூட இசையமைக்கிறார்.. நாம நம்மள எளிமையா எந்தளவிற்கு சுருக்கிக்கறமோ அந்த அளவு நாம உயரத்திற்குப் போகிறோம் அர்த்தம். பாவம் நீங்கள் ஏதோ சாப்பிட்டுருக்கீங்க எனக்கும் கொஞ்சம் தரமுடியுமா என்றார். வறுகடலை,முள் முறுக்கு மீதியிருநதது. ஐயோ எனக்குப் பல் இல்லையே..என்று தன் தோள் பையிலிருந்து சில நான்கு வாழைப்பழங்கள் தந்தார்.

          நாங்கள் தந்ததை இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டார். எனக்கு ஜெயமோகன் பேசுவதைக் கவனிக்க வேண்டும் என்பதில் நாட்டம். சரி கிளம்புங்கள் ஐயா.தொடரும்..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக