திங்கள், 1 டிசம்பர், 2014

வெ.மாதவன் அதிகனின் “சக்கரைக்கடல்“ கவிதை நூல் குறித்து...



வெ.மாதவன் அதிகனின்
“சர்க்கரைக்கடல்” கவிதை நூல் குறித்த அறிமுகம்
Poetry is not a turning loose of emotion, but an escape from emotion; it is not the expression of personality, but an escape from personality, but, of course, only those who have personality and emotions know what it means to want to escape from these things.”    T.S.Eliot
முன்னுரையில் பதிப்பட்டிருப்பது

ஆங்கிலத்தில் டிசம்பரும் தமிழில் மார்கழியும் தரிசனங்களுக்கு உகந்த காலங்கள். கோவை நல்லகாலத்திலேயே குளிரும். பாலக்காட்டுக் கணவாய் சேரநாட்டில் பொள்ளாச்சியிலும் ஆனைமலையிலும் வால்பாறையிலும் துவங்குகிற பொழிகிற குளிரும் ஈரமும் சடுதியில் கோவை நகர் முழுக்கவும் பெரிய வெண்கல அண்டாவிற்குள் நாம் நீநதிக் கொண்டிருக்கிற உணர்ச்சியைத் தந்துவிடும். பாராயணங்களும் தோத்திரப்பாடல்களும் மக்கள் பெருவாரியாகப் பாடுகிற காலம் இது. எப்படியும் காதுகளில் பாடல்களுடன் எழுகிற நாட்கள் இவை. அப்படித்தான் கவிதைகளும் வாசிக்கப் படவேண்டும். அல்லது வாசிக்கத் தூண்டவேண்டும்.
அன்றைய பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. பள்ளியின் வளாகத்தைப் பெருக்குகிற சமயத்திலே சென்று விட்டேன். இப்படித்தான் சமீபத்தில் நண்பர் ஒருவரின் குழந்தை பிறப்பைக் காண்பதற்காக அரசு மருத்துவமனை சென்றேன். கட்டிடங்களும் கட்டிடப் பொருட்களும் மலைகளைப் போல் உயர்ந்து கொண்டிருக்கிறது. இருநூறு பேர் கொள்கிற இடத்தில் ஆயிரம் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் உட்கார இடம் இல்லாமல் தங்கள் ஒரு நாள் இருநாள் பச்சிழங்குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒரிரு நாட்களான மனிதனின் குரல்களின் கேவல்களில் கவிதைகள் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. பாலூட்டிகள் காப்பியங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறைகளுக்குள்ளாக ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள்தான் காரணகர்த்தாக்கள். கவிஞனுக்கு எழுநிமிடத்தில் ஒரு கவிதை பிறப்பது போல அந்த மருத்துவமனையில் ஏழு நிமிடத்தில் குழந்தை பிறந்து கொண்டிருக்கிறது.
ஒரே கத்தியில் நூறு குழந்தைகள் வரை அறுத்து வெளியே எடுக்கிற சாசகம் நிகழ்கிற இடம்.
அப்படித்தான் கவிஞனும் அவன் நூலும் அதைப் பதிப்பித்தவனுடைய வாழ்க்கையும். இதுபற்றியெல்லாம் எழுத நமது விமர்சகர்களுக்கு நேரமிருக்காது. அறம் பற்றி யெழுதமாட்டார்கள். அறம் பாடியே கொல்வேன் என்ற புலவர்கள் வாழந்த நிலமிது. ஆனால் ஐரோப்பிய நாடுகளின் சிறைகள். கொட்டடிகள், சட்டங்கள், நீதிகள். வரலாற்றுப் பழமைகள். நிலவியல் கண்டுபிடிப்புகள் இலக்கிய அழகுணர்ச்சிகள் என்று எழுதி டாலர்களைக் கறப்பார்கள். இப்படியாக டாலர் மொழிகள் உலவும் நம் சமகாலத்தில் புது எழுத்து கவிதைகளைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.
அப்படியான வெளியீடுகளை நாம் வரவேற்பது அவசியம். என்னுடைய ஆதங்கம் கவிஞர்கள் நம் விமர்சகர்கள் தருகிற சோதனைகளைத் தாங்கமுடியாமல் சோசியம் பார்க்கப் போய்விட்ட பழைய கவிஞர்களின் நிலையை தற்காலத்திய கவிஞர்கள் அடைந்து விடக்கூடாது என்பதுதான். ஒரு தொகுப்பு இரண்டு தொகுப்பு என்று பெரிய பெரிய பதிப்பகங்கள் போட்ட கவிஞர்களே தலை தெரிக்க ஓடிவிட்ட பொழுது அதிகன் போன்ற கவிஞர்களை கட்டாயம் வரவேற்று எழுத வேண்டும்.
நீடித்த உழைப்பினைக் கண்டபிறகு வாங்குவதற்கும் விற்பதற்கும் கவிதை ஒன்றும் திடப் பொருள் அல்ல
அது உயிரின் சுகசீவனத் தீவனம்.
பல்லாயிரம் மக்கள் பரமஏழைகளும் தாங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழெதான் வசிக்கிறோம் என்று இன்றும் கூறிக்கொள்கிற கணவான்களும் நிறைந்த பகுதி. இந்த மருத்துவ வசதிக்காக  மட்டுமல்ல மனிதனின் சாயங்கால வாழக்கையும் அந்தி மழையும் காலமும் நிகழ்கிற நிழற்சாலை மருத்துவமனை. மருத்துவமனைகளுக்குச செல்வதை நான் தவிர்ப்பது இல்லை. குறிப்பாக அரசு மருத்துவமனைகளை நான் கோவிலாகத்தான் கருதுகிறேன். கோவை அரசு மருத்துவ மனையில்தான் மரத்தடியில் நடைபாதையில் ஓடுதளங்களில் சந்து பொந்துகளில் கழிவரைகளிலும் கூட நோயாளிகள் இருப்பார்கள். இந்த மருத்துவ மனைக்காட்சிகள் இருந்தால்தான் படங்கள் வெற்றி பெறுவதற்கு நல்ல சென்டிமெட் எனக் கருதுகிற சினிமா உலகத்தின் பாதிப்புகளை இவ்விடம் சொல்லியாக வேண்டும்.
கவிதைக்கும் மருத்துவமனைகளுக்கும் என்ன தொடர்பு. கவிதைகளில் தொகுப்புக்கு முந்தைய வாழ்நாளின் ரசனையனுபவம் படைப்பாளியின் படைப்புகளுக்குள் வைக்கப்படுவது போன்றே மருத்துமனைகளுக்குள் நாம் இருக்கிற சமயத்தில் நம் வாழ்நாளின் அனைத்து உணர்வுகளும் ட்ரெய்லர் போல ஓடிக் கொண்டிருக்கும் என உணர்கிறோம்
நம் வாழ்நாளின் ரசனையை மறுபரிசீலனை செய்து கொள்வதற்காகத்தான் கவிதைகளை அதிகமாக எழுதி முயற்சிக்கிறோம். எழுதப்பட்ட கவிதைகள் கவிஞனின் ரசனையனுபவம்தான் முதன்மையாக அறியப்படும். சமகாலத்தில் கவிதை விமர்சகர்கள் அகதிகளாக எந்த நாட்டிற்கு வைத்தியம் பார்க்கப் போனார்களோ தெரியவில்லை. விமர்சகர்களைத் தேடிக் கொள்வதற்கும் அல்லது அவர்கள் எழுதிய கவிதை விமர்சனங்களைக் கையில் வைத்துக கொண்டு அவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காகவும் “இதற்கு என்னடா பொருள் சொல்ல வருகிறாய்..சொல்...“என நேரடியாக கேட்டு அறிந்து கொள்வதற்குமாக சமகாலத்தின் கவிஞன் இந்த உலகத்தையே மருத்துவமனையாக்கி அதில் அவனையும் அவன் கவிதைகளை நோயாளியாக்கி அவன் கவிதையின் விமர்சகனை மருத்துவனாக்கி பல கட்ட விசாரணைகளைத் துவக்குகிறான். ஒருவகையில் மொழிக்கும் வாழிடத்திற்குமான பற்றுகளையும் வரவுகளையும் எழுதிப்பார்க்கிறவைதான் இலக்கியம்.
போர் வாழிடங்களில் கவிதை என்னவாக அறிய முடிகிறது. அமைதியும் சுவாசமும் அறிய முடிகிறது. உறைபனி நாடுகளில் கவிதை என்னவாக அறிய முடிகிறது. ஒரு சூடும் வெம்மையும் வேண்டுவனாக அறியமுடிகிறது. நம் வாழிடத்தில் கவிதை உணர்ச்சியின் பிடிகளில் தங்கிவிட எத்தனிக்கிறது. கவிதை உணர்ச்சியின் பிரசங்கம். அறம் பேசுதலும் தர்மத்தை நீதியை நிலைநாட்டுதலும் அதன் பணி.
இரவு
முழுக்க
நிழல் கூடத் தீண்டாமல்
தனியறையில் இருந்து
வெளியேறுகிறோம்
பக் 46
கவிதையின் சொற்களைப் பாடுதல் அல்லது குறுக்கம் மிகுந்த சொற்களுக்குள் அப்பால் தென்படுகிற வெற்றிடங்களில் வாசகன்,கவிஞன் இருவரின் வீடுபேறு அங்குதான் அமைந்திருக்கிறது. நீண்ட வெள்ளைக் காகிதம் எதற்கோ ஏதோ சில தீயிலிட்ட மௌனங்களை திரும்பத்திரும்ப கவனிக்கச் சொல்கிறது. அந்தக் கவிதை மேலும் நீளமாக பக்கம் முழுக்கவும் நிரம்பியிருக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது.கவிதை பற்றிய விசாரணை களும் வாக்குமூலங்களும் சுயமதிப்பீடுகளை அறிய முயற்சிக்கிறதாகவும் அமைகிறது. விளையாட்டு வீர ர்களை நிறுவனங்கள் வாடகைகளுக்கோ குத்தகைகளுக் கோ எடுத்துக் கொள்ளும். அந்த வீரன் தன் வாழ்நாளில் அந்த நிறுவனத்தின் குறிகளை தன்நெஞ்செங்கும் பொருத்திக் கொண்டு அலைவது போலத்தான் ஒரு படைப்பாளி தன்  சுயபடைப்புகளைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. நிலவுடைமையாக்குதல் என்பதில் இந்த நூற்றாண்டில் அதிக பிரியத்தை ஏற்படுத்திய தாக்கம். புதிய புதிய தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இனக்கலப்பு ஏற்பட்டது. பழங்குடிகள் விரட்டியடிக்கப் பட்டார்கள். காடுகள் நமக்கு வழிகளானாது. மலைகள் குடையப்படுகிறது. நாம் விரும்பிதை விடவும் பிரமாண்டமான உலகம் வந்து கொண்டிருக்கிறது. கவிஞனும் அவன் வாசகனும் வாழ்கிறார்கள்.
எப்படி சித்ரவதைக் கூடத்தில் தனக்கு என்ன நேர்ந்தது. என்பதைச் சொல்லக் கூசுகிறானோ ஒரு வீரன் அப்படித்தான் தன் சொற்களின் வழியாக சொல்ல நேராத கவிஞனின் சம்பவங்களை வாசகமனதுடன் அறிய வேண்டும். இங்கு ஊடகதர்மப்படியாக கவிதைகளுக்கு ஒதுக்கப்படுகிற பக்கங்கள் குறைவாகி அதில் பல கவிதைகள் பதிகிறது. கவிதைகள் வாசகன் தன் வாழ்நாளில் எளிதில் அறிந்த சம்பவங்களைத்தான் சொல்லவருகிறது. சில சமயம் நீச்சல் தெரியாதவன் நீச்சலின் அனுபவங்களை எழுதியிப்பதை மீனவ கவிஞன் வாசிக்கிற போது என்ன உணர்வான் அப்படித்தான் பல கவிதைகள் பல கவிஞர்களின் வாழ்வு எளிதில் புல்ப்படுகிறது. அனுபவமற்ற கவிஞன் புகழை விலை கொடுத்து வாங்கி விடக்கூடிய கவிஞனின் அனுபவம் பிதற்றலாகவும் பிரசங்கமாகவும் புதிய பைத்தியகாரன் அவனுடைய பைத்தியத்திய உலகத்தை எப்படி வசீகரிக்கி முனைகிறான் என்பதைப் போலத்தான் இருக்கும். புகழுக்காக சொற்களை உற்பத்தி செய்து விற்கிற கவிஞனும் அவனின் கவிதைகளும் அவன் வாழும் காலத்தில் அவனுக்கு முன்னால் சாம்பலாவதை நிச்சயமாகப் பார்ப்பான். தன் கவிதையின் சாம்பலைத் தூவுவதற்காக வசதியான இடங்கள்தான் நிறுவனங்கள்.
         சுற்றுலா வழிகாட்டியின் சொற்கள் இனிமையாக அமையும். ஏன் அந்த சுற்றுலாத் தளங்களின் ஞாபகங்களை விடவும் அவன் சொல்லிவிட்டுச் சென்ற சொற்களும் அவன் உருவாக்கிய பழஞ்சித்திரங்களும் ஞாபகத்திற்குள் நின்று விடுவதை விடவும் அவனுடைய மொழி நமக்கு ஞாபகத்தில் நிற்பதற்குக் காரணம் அவன் அனுபவம். “நல்ல” என்பதற்காக ஒரு வாசகன் அளிக்கி விலை மிகமிக அதிகம். துவக்க நிலைக் கவிஞர்களை அனுபவமிக்க வாசகர்கள் அனுகுவதும் தலைமுறை இடைவெளியை உருவாக்கிவருகிறது. கவிதை தீண்டப்படாதவையாக மாறுகிறது. கவிதையின் உலகத்தில் தீணடப்படாதவையின் உத்தரவுகளை பதிப்பக நிறுவனங்கள் உருவாக்குகிறது. ஒரு கடைவிதியில் ஒரேயொரு கடையில் மட்டும் கூட்டம் நிரம்பி வழியும் அதைவிடவும் ரகங்களும் தரமும் உள்ள கடைகளில் கடைக்காரச் சிப்பந்திகளும் முதலாளிகளும் ஈ விரட்டிக் கொண்டிருப்பார்கள். மக்கள் அந்த இடத்தை எளிதில் கடந்து போவார்கள். அந்த கடைக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்தான் மற்ற நூறு கடைகளிலிலும் இருக்கும்.
ஆனால் என்ன ஈர்ப்பு. என்ன கவனம் செய்தல், அந்தக் கடைக்காரன் அதிகமான நீளமான நிலப்பரப்புகளில் தன் நிறுவனத்தின் இலட்சினைகளைக் கொண்டு சென்றிருக்கிறான் என்று பொருள். அதற்காகத் தன் நாற்பது சதவிகித வருமானத்தை இழக்க முன்வருகிறான். இதுவே அவனுடைய கடையின் நிரம்புகிற கூட்டத்தின் பின்னணியாகிறது. கவிதை குறித்த உரையாடலுக்கும் அறிமுக உரைக்கும் எதற்காக இந்த வியாக்கியானம். இலக்கியப் பரப்பில் பண்டங்களும் விலையும் விற்பனையும் சமூகப் பண்பாட்டுச் செயல்பாடுகளே. கவிதை நூல்கள் விசிட்டிங்க் கார்டு அல்ல. அச்சான கவிதை நூல்கள் கவிதைகள் வாசிப்பவர்களுக்கு மட்டுமல்ல மொழியை வாசித்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் தற்காலத்தின் எல்லாவகையான கவிதைகளும் போய்ச்சேரவேண்டும். இங்கு நூலகங்களின் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறது. கவிஞன்- பதிப்பகம்- வெளியீடு- விற்பனை-ரசனை இந்தப்படிமங்களுக்குள்ளாக நிகழ்நது வருகிற பனிப்போர்களில் அரவை இயந்திரத்திற்குள் சிக்கிப் போகிறவனாக கவிதையின் வாழ்வும் கவிஞனின் வாழ்வும் அமைந்திருக்கிறது.
வெறும்
ஈரம் நிறைந்த
மழைச்சாரலென
அலட்சியத்தோடு கடக்கிறாய்
ஒருநாள்
பெருங்கடலென
நிமிர்ந்து நிற்கும்
என்ன செய்வாய்?
-பக்-24
கவிஞன் எதற்கும் தன்சொற்களைக் கொண்டுபோய் வாங்குகிறவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது குறைபிரசவப் பிண்டங்களாவிட்ட கவிதை விமர்சகர்களை அண்டி வாழவும் முடியாது. ஆனால் கவிஞனுக்காகவும் கவிதைகளுக்காகவும் யாராவது ஒருவர் கன்னிவெடிகளைக் கண்டறிவதற்கு கானகத்திற்குள்ளாக நடந்து ஆகவேண்டும். கன்னிவெடி நிலங்களில் நடப்பவனுக்கு ரோசம் வரும்.கோபம் வரும். களத்தில் நிற்பவனுக்கு எல்லா உணர்ச்சியும் ஏற்படும். அடிப்படைத் தேவைகள் முழுமையடைந்தவனால் எழுதப்படுகிற கவிதைகளுக்கும் சமூகத்தால் புறக்கணிக்கப்ப்படுகிற கவிதைகளும் வேறு வேறு. கவிதைகளை வாசிப்பு இன்பத்திற்காகவும் நுகர்வுப் பண்டமாகவும் சுவரொட்டிகளின் இனிய வாசகங்களாக வும் கருதுகிற சமூகத்திற்கு நல்ல கவிதைகள் இதோ இங்கே வசப்பட்டிருக்கிறது இந்த வாழ்வின் அசல் பிரதிகளை இந்தக்கவிஞன் எழுதியிருக்கிறான். இதோ கவனியுங்கள் என்று இறைச்சல் மிகுந்த சாலைகளில் கூவிக்கொண்டு திரியக் கூட நாம் தயாராக வேண்டும்.
அகராதிகளைத் தூக்கிக் கொண்டு தங்கள் ஓய்வு நேரத்தில் நகரெங்கும் திரிகிற மாணவர் மாணவிகளைப் போலவே. இங்கு அகராதிகளை உருவாக்குவதற்கு அத்தனை மெனக் கெடவேண்டுமா என்ன. ஒருவன் ஒரு பெருநகரத்திற்கு அந்த நகரின் மொழியறியாமல் வருகிறான் ஐந்து வருடத்தில் அந்த நகரில் வீடும் காரும் மனைவிகளும் வெப்பாட்டிகளும் சம்பாரித்து விடுகிறான். அவனுக்கு அகராதி பற்றி என்ன வெங்காயத்திற்கு அறிவு தெரியவேண்டும். அதற்குப் பதிலாக இலக்கிய நூல்களைச் சுமந்து திரியுங்கள் மாணவர்களே.
வெ.மாதவன் அதிகனின் கவிதை நூலுக்கு ஒரு ஓரத்தில் அமர்ந்து மோர்சிங் வாசிக்க விரும்பவில்லை. அந்த நூலை முன்னிருத்தி சில செய்திகள் பேச வேண்டும். அந்த நூலிலிருக்கிற சொற்களை விடவும் அதிகமான சொற்கள் ஒரு கவிதை நூலுக்கு எழுதப்படவேண்டும்.  இலக்கியப் பரப்பை விரிவு செய்யவேண்டும். அல்லது குறைந்த பட்சம் நம் கைக் கொண்டிருக்கிற நிலங்களை யாவது தக்கவைக்கவேண்டும். நாவலை வைத்து அதிகம் பேசமுடியாது. சிறுகதைகளை வைத்து அதிகம் பேச முடியாது. அந்தப் படைப்புகளே தன் நிலையை வலியுறுத்திவிடும். குறுநாவல்களின் கதையை நாம் முடித்துவிட்டோம். நாடகங்கள் கதை முடிந்தது. நேர்காணல்கள் நேர்காணல்களுக்கான பதில்களுக்குக் கேள்விகள் எழுதிக் கொள்கிறார்கள். சமீப காலங்களில் விருந்துகளில் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவுகிற இடங்களில் அந்த உணவுவகைகளை சமையல்காரர்கள் பட்டியல் போட்டு எழுதி வைப்பது போலத்தான் நேர்காணல்கள் அமைகிறது. நகைச்சுவை தோரணங்களாக அமைகிறது.
சீரியஸ் லிட்டரேச்சர் பேசுகிற சமயத்திற்கு அதுமாதிரியான டைமிங் ரைமிங்க் சென்ஸ் “விட்“ அவசியம்தான். நேர்காணல்கள் என்பது சுபமங்களாவோடு அஸ்தமனமாகிப் போனது. கவிதை எனும் போர்க்கருவியோடுதான் நம் ரசனையையும் மொழியைத் துருவிக் கொள்ள வேண்டும்.. நடனமாடிக் கொண்டிருப்பவன் நடனத்திற்குச் சம்பந்தமில்லாமல் திடீரென்று தலையில் நடப்பது போலவும் அங்குமிங்கும் ஸ்பிரிங் போலத் துள்ளுவதையும் ரசித்துக் கொள்வதைப் போல இந்த அறிமுக உரையையும் பெரிது படுத்தாமல் தமிழ் கூறும் நல்லுகம் என்னைத் தவிர்த்து இந்தக் கவிஞனின் கவிதைகளை வாசித்து ஆதரியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்..
சக்கரைக் கடல்

குளிர்ச்சி மிகுந்த நீர்
கொஞ்சம் கூழாங்கற்கள்
சில மீன் குஞ்சுகளைச் சுமந்து கொண்டு
இச்சூனியத்தை விட்டுக் கடக்கிறேன்
ஆம்
நானொரு நதியாகவேண்டும்
இவ்வூழி முடிவில்
நானொரு சர்க்கரைக் கடலாயிருப்பேன்
அப்போது
வாள்களென் கரையில்
துருப்பிடித்துக் கிடக்கும்.
--பக் -13

வாழ்த்துகள் வெ.மாதவன் அதிகன்...

வெளியீடு-புதுஎழுத்து
ஆசிரியர் வெ.மாதவன் அதிகன்
96004 65592

புதுஎழுத்து
2-205 அண்ணாநகர்
காவேரிப்பட்டினம்-635112
90421 58667
















சனி, 22 நவம்பர், 2014

ஆழி.வீரமணியின் கவிதை நூல் குறித்து



ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை
ஆழி. வீரமணியின் கவிதை நூல் குறித்து.

கனல்
எதிரே வரும்போதெல்லாம்
ஒதுங்கிப்போகச் சொன்ன
ஊர்வெட்டியானிடம்
செமத்த அடி வாங்குகிறார்
கட்டையில் எரியும்
பெரிய குடும்பத்து ஆண்டை
-பக்-16
 ஆழி.வீரமணியின் கவிதைகள் வாசிக்க நேர்ந்த அனுபவத்தில் கிடைத்த முக்கியமான கவிதையாக மேற்கண்ட கவிதை அமைந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ மின்கல எரிவாயு மயானத்தை வளம் பெற்றவர்கள் ஆண்டவர்கள் உருவாக்கிக் கொண்டார்களோ எனத்தோன்றுகிறது.
கவிதைகளில் தனிச்சாதிகள் குறித்த புழக்கங்கள் மறைகிற காலம் தற்காலம். உணர்ச்சிகளுக்கு அடிகோலுகிற கவிதைகள் மிக விரைவில் பொது தளத்தில் நீர்மையாகிவிடுவதையும் உணர்கிறோம். சாதிய இயக்கங்கள் சிதறிப்போவதும் இதன் அடிப்படையே. சாதிகளுக்குள் சுழல்கிற குலமேம்பாடுகள் சாதிய இனவரையைத் துண்டித்து விடுகிறது. நவீன காலத்தின் கவிதையில் சாதிகளின் ஆதிக்கம் குறையவில்லை மென் மேலும் இந்த நவீன தொழிற்நுட்பம் இணைய காலத்திலும் எந்தளவிலும் இம்மியளவும் அதன் கூர் நகங்களை மழுங்கடிக்க முடியவில்லையென்பதைத் தோல்வியுடன் தலை தொங்கப் போட்டு ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
          தொகுப்பிலுள்ள குறுங்கவிதைகள் முழுக்கவும் உணர்ச்சிகள் கொப்பளிக்கிற தொனியில் அமைந்திருக்கிறது. கணத்தில் வாசிக்கிற நமக்கு தழும்பு களை நீவிப்பார்க்கச் சொல்கிறது. கவிதைகளில் உணர்ச்சி வகையறாக்களை குறைத்துக் கொள்ளக் கொள்ளத்தான் கவிதையின் அடுத்த நிலையை நாம அடைய முடியும்
ஆவேசம் குறையாத அடைமழை

கம்மஞ்செடிகள் பூவைத்திருப்பதையும்
மணலாவில் சங்கு பிடித்திருப்பதையும்
வருத்தம் தோய்ந்த குரலில் பேசிக் கொண்டிருப்பார்கள்
அப்பாவும் சித்தப்பாவும்
பரணில் விறகு காலியானதையும்
பழையசோறு நொசநொசத்துவிட்டதையும்
பகர்ந்து கொண்டிருப்பார்கள்
அம்மாவும் சின்னம்மாவும்
மூலைவாய்க்காலில் முந்திரித்தோப்பில்
கார்காலக் காய்ப்புகள் களவு போவதால்
நனைந்து கொண்டே காவலுக்கிருப்பார்
கைப்புள்ள தாத்தா
எந்தக் கவலையுமின்றி
ஏரியின் கரைகளை உடைக்கும் முயற்சியில்
இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும்
ஐப்பசிமாத அடைமழை
-பக்-40

இந்தக் கவிதை மனம்தான் அவரை சிறுபத்திரிக்கை நடத்தச் சொல்லியிருக்கிறது. இந்த மனம்தான் தனியாக நூல் போடச் சொல்லியிருக்கிறது. நகரம் பெயர்கிற ஒவ்வொரு படைப்பாளியின் ரத்த அனுக்களில் சொற்கள் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் அவர்களின் ரத்த உறவுகள் இருப்பார்கள். துடிக்கிற இருதய ஒலியை அவர்கள்தான் இசைக்கிறார்கள். தன் ஊரை வெட்டெனத் துண்டித்து விட்ட வீசிவிட்டு வரச் சொல்கிற வாழ்க்கை யை கவி நண்பர்கள் வாயிலாக நான் அறிவேன்.
கவிதை நூல்களின் வருகை நிகழ்வது என்பது உணர்ச்சிகளை மென்மேலும் பட்டை தீட்டிக் கொள்வதாகவே அமையும். கவிதைகளை மிக எளிதில் எழுதிவிட முடிகிற தற்காலம் மிகப்பரந்து பட்டிருக்கிறது. நூலாக்கப் பணிகளுக்கான சிரமங்கள் ஏதுமிருப்பதில்லை. நவீன தொழிற்நுட்பம், தகவல் தொடர்பு வசதிகள். பதிப்பிலும் அச்சிலும் முகநூல் பதிவுகளிலும் நம் கவிதையை எளிதில் கண்டுணர்ந்து கொள்ள ஏதுவான காலமாகத் தற்காலம் அமைந்திருக்கிறது. ஆங்கிலம் உள்பட அனைத்து சர்வதேசப் பயண்பாட்டு மொழிகளில் கவிதைகளை இன்றைய கவிதை என்னும் தலைப்பில் கவிதைகளை பதிகிற இணையங்கள் அதிகமாகி வருகிறது. இலக்கியத்தின் அனைத்துத் துறை சார் வல்லுநர்கள் கவிதைகளை எழுதுகிறார்கள். அல்லது அவர்களுக்குள் இயங்குகிற கவிமனம் கவிதைகளை எழுத வைத்துவிடுகிறது.
தமிழ்மொழி தொழில் படுகிற அளவிற்குக் கவிஞர்களும் கவிதைகளும் குறைவு என்று நான் ஏற்கெனவே பல பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். கவிதைகளை வாசிக்கத்துவங்குகிற மனதின் இருப்பும் செயலும் வேறு வேறான காலங்களைத் தருகிறது. புதிய பொழுதின் அன்றைய தினத்தில் மலர்கிற மலர்களைக் காண்பதைப் போன்ற உணர்வுகளைத் தருகிறது. கவிதை நூல்களைக் கொண்டு வரவேணடாம் என்று ஒரு முன்னணி புத்தக கடை உரிமையாளர் ஒரு கவிஞரிடம் சொல்லிவிட்டு அவரிடமிருந்து இரு பிரதிகள் மட்டும் கொடுத்துவிட்டுப் போங்கள் என்று அவருடைய மற்ற எட்டுப்பிரதிகளை அவரிடம் திருப்பித் தந்த செய்தியின் துயரக் கேவலோடுதான் இந்த நூலுக்கான அறிமுகத்தை எழுதுகிறேன்.
கவிதை நூலை முதலில் பதிப்பகத்தார்கள் துவங்கி இப்பொழுது கடைக்காரர்கள் நிராகரிக்கிற காலம் இது. ஆயினும் கவிதைகளும் கவிஞர்களும் சோர்வடையப் போவதில்லை. விமர்சகத்தொண்டைமான்கள் பல கவிஞர்களைக் காட்டிக் கொடுத்து தமிழ் வளர்த்துத் வளர்தமிழ். வயிற்றுத் தமிழ் வளர்க்கிறார்கள். நாம் யார் வாயிலும் வயிற்றிலும் மண்போட நமக்கு உரிமையில்லை. கவிதைகளுக்கு வாய்க்கரிசி போட முயல்கிற சமயத்தில்தான் நம் சொரணையைக் காட்ட வேணடியிருக்கிறது. கஞ்சிக்கூலிகளும் கைக்கூலிகளும் கூலிப்படைகளும் கவிதைப் பயண்பாட்டில் செழிக்கிற காலம். கவிஞனை ஒரு டாஸ்மார்க் சப்ளையர் பையனாகவும் அவன் எழுதுகிற சிகரெட் அட்டைக்குத் தருகிற மரியாதையைக் கூட அந்தக் கவிஞனுக்குத் தருவதற்கு முன்வருவதில்லை. நான் அறிந்தளவு பதிப்பக முதலாளி முன்பாக அந்தப் பதிப்பகத்தில் புத்தகம் போட்ட படைப்பாளிகள் உட்காருவதற்குக் கூட தடை நீடிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்கிற கீறல் விழுந்த ரிக்கார்டாக மறுபடியும் கீறுகிறோம்.
பூங்கா கவிஞனும்..டாஸ்மாக் கவிஞனும்...

பூங்காவில் நுழைந்த
ஜிப்பாக் கவி
மஞ்சள் பூக்கள் உதிரும்
மரத்தடியில்
வார்த்தை பிடிபடாமல்
நெடுநேரமாய்
பேனாவால் தலைசொறிகிறான்
பூங்காவை ஒட்டிய
மதுக்கடையில்
மிடறுக்கொரு
வரி எழுதுகிறான்
தலைகலைந்த நவீன கவி
--பக்-54

தான் வளர்த்த மிருகங்களின் செத்த தோல்களில் தன் கவிதைகளை எழுதிப்பார்த்த சமூகம் இது. பாறைகளில் ஓவியக் கவிதைகளாக எழுதிப்பார்த்த கண்களில் பாறைச்சிதிலங்கள் பட்டுத்தெறிக்க காவியங்கள் எழுதிய கூட்டம் இது என்பதை நாம் உணர்வோமாயின் நம்மால் நிராகரிக்கிறவர்களை உதறிச்செல்ல முடியும்.
அந்த வகையில்தான் கவிதைகளின் மீதும் கவிதை நூல்கள் வெளியிடுவதிலும்  முனைப்பு காட்டுகிற படைப்பாளிகள் தாங்களாவே வெளியிட முன் வருகிறார்கள். சிற்றிதழ் நடத்திய அனுபவம் கொண்டவர் களும் சிற்றிதழ்களுடன் இயங்கியவர்களின் நூல்களை வெளிக் கொண்டுவருவதில் ஒரு சிலர்தான் தங்கள் படைப்பு நண்பர்களின் நூல்களைக் கொண்டுவருகிறார்கள்.
அப்படித்தான் ஆழி.வீரமணியும். தன் கல்லூரிக்காலங்கள் முதற்தொட்டு இலக்கியப்பணியாற்றியிருக்கிறார். ஏழு இலக்கிய இதழ்களைக் கொண்டுவந்திருக்கிறார். சிறுபத்திரிக்கை நடத்துவதும் அதில் உள்ள வரும்படிச் செலவுகள் இலக்கிய இழப்புகள் அத்தனையும் தாங்குகிற மனம்தான் நல்ல படைப்புகளையும் தரமுடியும் என்பதை பாரதி காலத்திலிருந்து நாம் அறிந்திருக்கிறோம். இந்த தொகுப்பின் மூலமாகத் தானும் சொந்தக் கை ஊன்றிக் கரணம் போட்டிருக்கிறார்.
          தொகுப்பு முழுக்கவும் கடலூர் மாவட்டத்தின் நிலங்களைக் காணமுடிகிறது. அந்த நிலத்தின் வாசமும் மலர்களின் மணமும் வீசுகிறது. வழக்கம் போலவே முதல் தொகுப்பில் கவிஞன் வைக்க நினைக்கிற ஒட்டு மொத்த செய்திகளும் செய்திகளாகவே பதிவாகி யிருக்கிறது. கவிதையிடமிருந்தும் கவிஞனிடமிருந்தும் அப்பதிவுகளைத் தவிர்க்க முடியாது போலும். பெருநகரம் குறித்த கனவுகள் இளங்கவிகளுக்கு பிரமாண்டத்தைத் தருகிற அதே நேரம் தன் ஊரும் கண்மாய்களும் பறவைகளும் வாய்க்கால் வரப்புகளும் அப்பாவி மனிதர்களும் கனவுகளைப் பெருக்குகிறார்கள்.
       வீரமணியின் கவிதைகளில் காதலின் ஈரம் மழை ஈரம் போன்ற வீச்சம் தருகிறது. எதிர்காலத்தின் கவிதைகளுக்காக அவர் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். நமது வெகுசன கவிதைகளின் பால் அவருக்குள்ள மயக்கம் அடுத்த படிநிலைக்குத் திரும்ப அவையே தடையாக அமையலாம். இந்த நூலிலுள்ள அவருடைய இயல்பான கவிதைகளை அவர் கண்டு கொள்கிற சாத்தியத்தில் தனக்கான தனித்துவக் கவிதைகளைத் தன் மனிதர்கள் மூலமாக அவர் கண்ட டைவார் என்பது தெரிகிறது. தொகுப்பில் எல்லாவிதமான வண்ணக்கவிதைகள் உள்ளது.  இயல்பு வாழ்வின் கவிதைகளில் தர்க்கமனம் காணவில்லையென்பது சோகம்தான். கவிஞனுக்கான எதிர்வாதமும் தருக்க மனமும்தான் சமகாலத்திற்கு முக்கியம்.
நூல் முழுக்கவும் காகங்கள் கவிதைகளுடன் இணைந்து வருகிறது. அதுவே வாசக மனதிற்கு இடையுறாகவும் பலமும் சேர்க்கிறது. ஒரு படைப்பாளி தன்னை இந்தச் சமூகத்தின் கௌரவக் குறைவான சமூகத்தைச் சார்ந்தவன் என்பதை அறிவிக்க வைக்கிற எந்த நிலையையும் இந்த நவீன காலத்தில் படைப்பாளர்கள் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும். யாரும் எவருக்கும் எந்த நிலைக்கும் தாழந்தவர்கள் தாழப்பிறந்தவர்கள் இல்லை. எந்த வடிவம் எந்த சதிகளுடன் வந்தாலும் எதிர்க்கொள்கிற வலிமை இந்த மனித உடலுக்கு உண்டு. இதன் வரலாறு பதினாறாயிரம் ஆண்டுகள். சில நமுத்த வெங்காயங்கள் நாம் இந்த சமூகத்தைச் சார்ந்தவன்தான் என்பதை நினைவுட்டுவது பாராட்டுவதற்கு அல்ல.. நீ இன்னும் அதே பழைய நிலைக்குப் போய் சாணம் அள்ளு என்பதற்காகத்தான். இந்தப் பெருநகரத்தினைச் சுத்தம் செய்ய நாம் வரவில்லை இதே பெருநகரத்திற்கு இணையான துணை நகரத்தை நாம் வாழும் காலத்தில் உருவாக்கவே இந் நகரம் நுழைகிறோம்..
நல்ல மேய்ப்பர்கள் மட்டுமல்ல
நாமும் விரைவில் வீடு திரும்புவோம் நண்பர்களே..
மீண்டுமொரு ஆகச்சிறந்த  கவிதையுடன் இந்த அறிமுகத்தை முடிக்கிறேன். வாழ்த்துக்கள்.. நன்றி

பெரியார் நகரின் கண்ணீர்த்துளி

முந்திரிக்காட்டில்
தனித்திருக்கும் கண்ணகிக்கு
ஒரு முழம்
மல்லிகை வாங்கினான்
இருபதாண்டுக்கு முன்
விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட
குப்பநத்தம் முருகேசன்
பூக்காரப் பெண் மூலம்
இன்றைய இளவரசன் கதை கேட்க நேர்ந்த அவன்
பெரியார்நகர் புறவழிச்சாலை மதுக்கடையில்
அழுதபடி அமர்ந்திருக்கிறான்
--பக் -33

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை-கவிதைகள்
ஆசிரியர்- ஆழி.வீரமணி
ஆகஸ்ட்-14
வெளியீடு
செம்மண்
எண் 86 புதுமனைசாரி தெரு
முதனை அஞ்சல்.விருத்தாச்சலம் வட்டம்
கடலூர் மாவட்டம்-607804
அலைபேசி..
98841 95134
விலை ரு 60-




வியாழன், 20 நவம்பர், 2014

“கருட கம்பம்“ நாவலுக்கு கவிஞர் அனாமிகா எழுதிய முன்னுரை- நன்றி அனாமிகா..



பேரண்டப் பட்சியின் காலச்சடலம்
எனக்குள் இலக்கியத்தின் பால்யத்தின் பற்கள் முளைக்கத் தொடங்கியிருக்கிற சமயத்தில்தான் இளஞ்சேரலின் “கருடகம்பம்“ என்கிற அவரின் புதிய முதல் நாவலுக்கு எனை அறிமுகவுரை எழுதச் சொல்லி யிருக்கிறார்.
இலக்கியத்தின் விழுமியப் புகழிடங்களில் எங்கோ ஓரிடத்தில் எனக்கான அடையாளத்தைத்  தேடிக்கொண்டிருக்கிறேன்.எப்போதும் அநேக தருணங்களில் எனக்குள் பிரமாண்டமான வியப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இளஞ்சேரல் என்கிற ஒரு தனிமனிதனின் சந்திப்பு சில கணங்கள் அத்தனை சாதாரணமாய் இருந்ததில்லை. எனக்குள் ஏதோவொரு சாபத்தின் அத்யாயம் கிழிக்கப்படுகிறதை அப்போதெல்லாம் உணரமுடிந்திருக்கிறது. இம்மனிதனின் உலக இலக்கிய அறிவை பிரமித்து வானம் பார்க்கும் என்னிடம் எழுதச் சொல்வது பயங்கரத்தைத் தருகிறது. அல்லது ஏதோவென்றை எனக்குள் போதிக்கச் செய்கிறது. இப்பொழுது நான் என்ன செய்ய...
இனி இந்த நாவலுக்குள் பைத்தியமாகி தொலைந்து அவரின் பைத்திய நினைவுகளை சர்வ அலட்சியத்தோடு கடக்க முயற்சிக்கிறேன். அக்கறையோடும் அன்போடும் பகிருகிறேன்.
“இதுவொரு சாதாரணனின் பார்வையில் விளம்புகிற மொழியென்றே கருதிக் கொள்ளலாம்“ அம்மா மட்டும் எப்படி கண்ணீர் தீராமல் அழப்பழகி யிருக்கிறாள்.நிலாவெளிச்சத்தின் இருளும் இருள்தானே. தற்கொலை செய்து கொள்ள முடிவானதும் ரயில்வே பாலம் நொய்யலின் கிளை வாய்க்காலருகில் நின்று கவனிப்பவளை.. ராஜேந்திரா குதிடா வென்று..சொன்னவளை “பத்து நிமிடங்களுக்கும் மேல் ஒரு மனிதனின் மனநிலை மாறுமென்பதின் அறிவியலை“ இனி நிலாக்காலத்தை நாம் பார்க்கலாம் என்று சொன்ன வரிகளில் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசனின் படைகள் கடவுளின் குலத்தார் என்கிறார். ஒரு நதி உருவாக்கியிருந்த வாழ்வின் எளிய துல்லியத்தை அதன் பிரமாண்டத்தை  கிணறு தோண்ட ஒரு தொன்ம நகரின் நாகரீகக் கலாச்சாரத்தை கிணற்றின் அடிவயிற்றிலிருந்து பழங்காலம் புழங்கிய பொருட்களில் படிந்த புராதன வாழ்வின் மீதான பிரமிப்புகளை இன்னும் எஞ்சியிருக்கிற சிதைந்த தடயங்களைச் சேகரிக்கத் துவங்குகிறது ஆழ்மன சிருஷ்டி
பன்றிகளை அதிகம் தின்னறதால் பன்றிமுகம் போலுள்ள மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள் அனைத்தும் அதனதன் இனத்திலிருந்து வேறு ஒரு இனப்புணர்ச்சியில் உருவகித்த விடுமென்கிறத் தத்துவக் கோட்பாட்டை யாரும் அத்தனையெளிதில் வெகு சாதாரணமாய் உணர்ந்து கடந்து போய்விட முடியாதுதான். இவரின் நுண்ணிய புரிதல்களை எந்த வரையறைக்குள்ளும் புகுத்தி விடமுடியாது.
மாரானின் தந்தை உதிர்த்த அவரின் திருச்சிற்றம்பலம் இறுதிச் சொல்லின் போது வடகோடியில் ஒரு பிள்ளைத்தாய்ச்சி ஒர் ஆண்மகவு ஈன்றாள்..அப்படியொரு காட்சிப்படுத்தலில் பிரமித்துப் போய் நிற்கிறேன்.
“ஜீனியஸ்“என்கிற பெருஞ்சொல்லை சுஜாதாவைத்தவிர வேறுவொரு எழுத்தாளருக்கு என் நாவு சுண்டியதில்லை.
ராஜா தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொள்ளும் நேர்மை எந்த ஒப்பனையுமற்றிருந்தது. மிகப் பெரிய பேரரசின் உருவாக்கங்களின் போதிருந்த அதன் பயங்களை அதல பாதாள வீழ்ச்சிக்கு முன்பிருந்த பயங்கரங்களை காலச்சடலத்தின் மொய்க்கிறக் காட்சியாகியிருக்கிறது. நான் அங்குதான் இருக்கிறேன். அதைக் காணுகிறேன். அதன் ஆழ அழுத்தம் பிதுங்கிப் பிதுங்கி கசங்குகிற ஆன்மாவின் புலம்பலை ஜீரணித்து தான் முனை மடித்து பக்கத்தைத் திருப்புகிறேன். தர்மநூல்களை வெறும் தத்துவச்சரடு என்கிறவரை எப்படிப் புரிந்து கொள்வது
“மன்னா என்னையா நம்ப மறுக்கீறீர்கள்“..,அமைச்சர்...
“இப்பொழுது என்னையே நம்பவில்லை..“என்கிறார் அரசன்
இந்நிலைத் தகவலுக்குள் இருக்கிற புரிதல் அலட்சியப்படுத்திவிடமுடியாது. திருவிழாப் பேச்சுகளில் வட்டார வழக்குச் சொற்களை அந்த மண்வாசனை யோடு அப்படியே அடித்துப் போய்விடுகிறார் நாவலாசிரியர் எப்படிச் சித்தரிக்க முடிந்தது.
“காலால் செல்லமாக நெஞ்சை உதைக்க அவன் நெடுஞ்சாணாக கால்களை நீட்டி விரைத்து நெட்டி முறித்த போது ஆயிரமாண்டுகளின் போர்களில் பட்ட காயங்களின் தழும்புகளும் உடலில் ஒட்டியிருந்த ஆபரணங்களின் கருத்த தழும்புகளும் கரேலென்று தெரிந்த போது நூற்றாண்டுகளின் சிதைந்த நீட்சி..“ ஐயோ.. இந்த நாவலுக்குண்ட தகுதிகளை எந்த வர்ணனைகளிலும் சொல்லிவிடமுடியாது.
சைகை பேசும் நடுவணைப்பற்றி ஒரு முறை ஊஞ்சல் இலக்கிச் சந்திப்பில் இளஞ்சேரல் விளம்பியபோது அக்கணம் நடுவணாகவே மாறியிருந்தார். பின்னுக்கு நகரும் நினைவு நாடாவில் ஒளி மங்கி மங்கி விரிகிறது. நடுவணின் மொழியில் ம்ம்..உஉஉஉஏ ஏஏஏ அ..அ... சப்தத்தில் மிதக்கிறது. உடம்பு முழுக்க காயங்களுடன் வீங்கியிருக்கும் நடுவணுடன் ஒரு தேநீர் அருந்த ஆசைப்படுகிறேன்.
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாக நம்பப்படுகிற நாவல் என்கிற ஒழுங்கிலிருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. வேறு வகை சார்ந்தது. எந்தக் குறியீடுகளையும் முன்வைக்காமல் நேரடியாக மானுடவியலைத் தளும்பத் தளும்பச் சொல்கிறது. இங்குக் கற்பிக்கப்பட்ட அத்துனையிலும் அதிகாரத்தின் கூர்வாளின் நிழல் நம் சுயத்தைக் கிழிக்கிறது. உளவியலின் ஆதூரமான சிநேகம் நிரம்பிய பக்கங்களின் உயிர்ப்போடு இன்னும் இருப்பதும் அன்பின் வலி பெருவெளியெங்கும் நீட்சித்துக்கிடக்கச் செய்வதும் இந்நாவலின் மிகமுக்கிய ஆகச் சிறந்த தகுதியாகியிருக்கிறது.
மொழி நழுவி வழுவழுப்போடு சொல்லப்பட்ட அழகியலும் பெரியதாய் அங்கீகரிக்கப்படாத இக்கதை சொல்லி மானுடனை வாரியெடுத்திருக்கிறது இன்று இயங்கும் பேரிலக்கியம் அந்தார இருள் சூழ்ந்த அநாதை காலத்துத் தனிமை புகுத்தி வாசித்த துல்லிய சில கணங்கள் எனக்கு எத்தகைய ஆசீர்வதிக்கப்பட்டதெனச் சொல்லத்தெரியவில்லை.
வாழிடம் அற்றுப் போன ஆயிரமாண்டு தொன்மத்தை இந்நூற்றாண்டு மொழியில் திரையுக்தியில் சமண்படுத்தியிருக்கிறது கருடகம்பம். இளஞ்சேரல் என்கிற பைத்தியகாரனை பலவீனமான நிமிடங்களுக்குள் நிறுத்திக் காரணங்களைத்தேடுகிறேன்.இன்னும் வரையறுக்கப்படாத ஒழுக்கங்களுக்குள் ஒழுங்கின்மையின் நேர்த்தியை பிசிறற்ற புலணுணர்வை நுட்பமாய் உணர்த்துகிற இடம் உயிர்காலப் பட்சியின் மேலுறுப்பு கிழிந்து இக்கணம் நான் அருந்தும் ஒரு தேநீரோ அல்லது ஒரு கைப்பிடி அரியிலோ அதன் வற்றா முலைப்பாலைப் பீய்ச்சுகிறேன். அப்பாலின் வீச்சு நாசி நுகருகையில் உள் நாவின் மேலண்ணத் தீண்டலில் உயிர்வாங்கிய சுவையில் ஆன்மா உணரும் ரசனைகளை எந்த நிறச் சொல்லும் சொல்லிவிடமுடியாது. இந்நாவல் மூதாதைகளின் ஆழ்மனப் புரிதலுக்குட்பட்டு நகர்த்திக்கொண்ட இயல்பைக் குறித்தான பதிவிது.
எப்படி இவரால் இந்த மனிதத்தை இவ்வளவுக்கும் அதிகமாய் சிநேகிக்க முடிகிறது. இவரின் அத்தனை பைத்தியங்களின் மீதும் பைத்தியமாகிறேன் இவ்வளவு அக்கறையோடு எப்படி இருக்கமுடிகிறது இந்த மனிதனால். சமூகத்தில் முழுமையின் மனிதர்களைக் கொண்டாட இவரால் முடிந்த அளவிற்கு வேறொரு எழுத்தாளரைக் கைநீட்டிச் சொல்லிவிட முடியாதென்றே தோன்றுகிறது.
புத்தகத்தின் காதுகளை மடித்துக் கொண்டு உறங்கிய இரவுகளில் இந்த அம்மண மொழிபேசிய மனிதர்களுடன்தான் காடு கொண்டிருந்தேன் என் அறிவின் பெருந்திமிரில் மகா அலட்சியமாகவேதான் கடருகம்பத்தை வாசித்து முடித்தேன். இன்னும் விடுபடவில்லை. ஆதாம் ஏவாளின் நிர்வாணத்தை வெட்கப்படவைத்த ஆப்பிளை அதை உண்ணு எனச் சொன்ன சர்ப்பத்தை புழுதி தின்ன சபித்த கடவுளைப் புராதனத்தில் பலரதப் புரவி பூட்டி பிரபஞ்சம் சஞ்சரித்த என் பால்யகாலக் கதைகளில் இன்னுமோர் கதைசொல்லியின் உயிருலுக்கிய கதை “கருடகம்பம்“
அனாமிகா
99943 51148