திங்கள், 1 டிசம்பர், 2014

வெ.மாதவன் அதிகனின் “சக்கரைக்கடல்“ கவிதை நூல் குறித்து...



வெ.மாதவன் அதிகனின்
“சர்க்கரைக்கடல்கவிதை நூல் குறித்த அறிமுகம்
Poetry is not a turning loose of emotion, but an escape from emotion; it is not the expression of personality, but an escape from personality, but, of course, only those who have personality and emotions know what it means to want to escape from these things.”    T.S.Eliot
முன்னுரையில் பதிப்பட்டிருப்பது

ஆங்கிலத்தில் டிசம்பரும் தமிழில் மார்கழியும் தரிசனங்களுக்கு உகந்த காலங்கள். கோவை நல்லகாலத்திலேயே குளிரும். பாலக்காட்டுக் கணவாய் சேரநாட்டில் பொள்ளாச்சியிலும் ஆனைமலையிலும் வால்பாறையிலும் துவங்குகிற பொழிகிற குளிரும் ஈரமும் சடுதியில் கோவை நகர் முழுக்கவும் பெரிய வெண்கல அண்டாவிற்குள் நாம் நீநதிக் கொண்டிருக்கிற உணர்ச்சியைத் தந்துவிடும். பாராயணங்களும் தோத்திரப்பாடல்களும் மக்கள் பெருவாரியாகப் பாடுகிற காலம் இது. எப்படியும் காதுகளில் பாடல்களுடன் எழுகிற நாட்கள் இவை. அப்படித்தான் கவிதைகளும் வாசிக்கப் படவேண்டும். அல்லது வாசிக்கத் தூண்டவேண்டும்.
அன்றைய பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. பள்ளியின் வளாகத்தைப் பெருக்குகிற சமயத்திலே சென்று விட்டேன். இப்படித்தான் சமீபத்தில் நண்பர் ஒருவரின் குழந்தை பிறப்பைக் காண்பதற்காக அரசு மருத்துவமனை சென்றேன். கட்டிடங்களும் கட்டிடப் பொருட்களும் மலைகளைப் போல் உயர்ந்து கொண்டிருக்கிறது. இருநூறு பேர் கொள்கிற இடத்தில் ஆயிரம் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் உட்கார இடம் இல்லாமல் தங்கள் ஒரு நாள் இருநாள் பச்சிழங்குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒரிரு நாட்களான மனிதனின் குரல்களின் கேவல்களில் கவிதைகள் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. பாலூட்டிகள் காப்பியங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறைகளுக்குள்ளாக ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள்தான் காரணகர்த்தாக்கள். கவிஞனுக்கு எழுநிமிடத்தில் ஒரு கவிதை பிறப்பது போல அந்த மருத்துவமனையில் ஏழு நிமிடத்தில் குழந்தை பிறந்து கொண்டிருக்கிறது.
ஒரே கத்தியில் நூறு குழந்தைகள் வரை அறுத்து வெளியே எடுக்கிற சாசகம் நிகழ்கிற இடம்.
அப்படித்தான் கவிஞனும் அவன் நூலும் அதைப் பதிப்பித்தவனுடைய வாழ்க்கையும். இதுபற்றியெல்லாம் எழுத நமது விமர்சகர்களுக்கு நேரமிருக்காது. அறம் பற்றி யெழுதமாட்டார்கள். அறம் பாடியே கொல்வேன் என்ற புலவர்கள் வாழந்த நிலமிது. ஆனால் ஐரோப்பிய நாடுகளின் சிறைகள். கொட்டடிகள், சட்டங்கள், நீதிகள். வரலாற்றுப் பழமைகள். நிலவியல் கண்டுபிடிப்புகள் இலக்கிய அழகுணர்ச்சிகள் என்று எழுதி டாலர்களைக் கறப்பார்கள். இப்படியாக டாலர் மொழிகள் உலவும் நம் சமகாலத்தில் புது எழுத்து கவிதைகளைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.
அப்படியான வெளியீடுகளை நாம் வரவேற்பது அவசியம். என்னுடைய ஆதங்கம் கவிஞர்கள் நம் விமர்சகர்கள் தருகிற சோதனைகளைத் தாங்கமுடியாமல் சோசியம் பார்க்கப் போய்விட்ட பழைய கவிஞர்களின் நிலையை தற்காலத்திய கவிஞர்கள் அடைந்து விடக்கூடாது என்பதுதான். ஒரு தொகுப்பு இரண்டு தொகுப்பு என்று பெரிய பெரிய பதிப்பகங்கள் போட்ட கவிஞர்களே தலை தெரிக்க ஓடிவிட்ட பொழுது அதிகன் போன்ற கவிஞர்களை கட்டாயம் வரவேற்று எழுத வேண்டும்.
நீடித்த உழைப்பினைக் கண்டபிறகு வாங்குவதற்கும் விற்பதற்கும் கவிதை ஒன்றும் திடப் பொருள் அல்ல
அது உயிரின் சுகசீவனத் தீவனம்.
பல்லாயிரம் மக்கள் பரமஏழைகளும் தாங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழெதான் வசிக்கிறோம் என்று இன்றும் கூறிக்கொள்கிற கணவான்களும் நிறைந்த பகுதி. இந்த மருத்துவ வசதிக்காக  மட்டுமல்ல மனிதனின் சாயங்கால வாழக்கையும் அந்தி மழையும் காலமும் நிகழ்கிற நிழற்சாலை மருத்துவமனை. மருத்துவமனைகளுக்குச செல்வதை நான் தவிர்ப்பது இல்லை. குறிப்பாக அரசு மருத்துவமனைகளை நான் கோவிலாகத்தான் கருதுகிறேன். கோவை அரசு மருத்துவ மனையில்தான் மரத்தடியில் நடைபாதையில் ஓடுதளங்களில் சந்து பொந்துகளில் கழிவரைகளிலும் கூட நோயாளிகள் இருப்பார்கள். இந்த மருத்துவ மனைக்காட்சிகள் இருந்தால்தான் படங்கள் வெற்றி பெறுவதற்கு நல்ல சென்டிமெட் எனக் கருதுகிற சினிமா உலகத்தின் பாதிப்புகளை இவ்விடம் சொல்லியாக வேண்டும்.
கவிதைக்கும் மருத்துவமனைகளுக்கும் என்ன தொடர்பு. கவிதைகளில் தொகுப்புக்கு முந்தைய வாழ்நாளின் ரசனையனுபவம் படைப்பாளியின் படைப்புகளுக்குள் வைக்கப்படுவது போன்றே மருத்துமனைகளுக்குள் நாம் இருக்கிற சமயத்தில் நம் வாழ்நாளின் அனைத்து உணர்வுகளும் ட்ரெய்லர் போல ஓடிக் கொண்டிருக்கும் என உணர்கிறோம்
நம் வாழ்நாளின் ரசனையை மறுபரிசீலனை செய்து கொள்வதற்காகத்தான் கவிதைகளை அதிகமாக எழுதி முயற்சிக்கிறோம். எழுதப்பட்ட கவிதைகள் கவிஞனின் ரசனையனுபவம்தான் முதன்மையாக அறியப்படும். சமகாலத்தில் கவிதை விமர்சகர்கள் அகதிகளாக எந்த நாட்டிற்கு வைத்தியம் பார்க்கப் போனார்களோ தெரியவில்லை. விமர்சகர்களைத் தேடிக் கொள்வதற்கும் அல்லது அவர்கள் எழுதிய கவிதை விமர்சனங்களைக் கையில் வைத்துக கொண்டு அவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காகவும் “இதற்கு என்னடா பொருள் சொல்ல வருகிறாய்..சொல்...“என நேரடியாக கேட்டு அறிந்து கொள்வதற்குமாக சமகாலத்தின் கவிஞன் இந்த உலகத்தையே மருத்துவமனையாக்கி அதில் அவனையும் அவன் கவிதைகளை நோயாளியாக்கி அவன் கவிதையின் விமர்சகனை மருத்துவனாக்கி பல கட்ட விசாரணைகளைத் துவக்குகிறான். ஒருவகையில் மொழிக்கும் வாழிடத்திற்குமான பற்றுகளையும் வரவுகளையும் எழுதிப்பார்க்கிறவைதான் இலக்கியம்.
போர் வாழிடங்களில் கவிதை என்னவாக அறிய முடிகிறது. அமைதியும் சுவாசமும் அறிய முடிகிறது. உறைபனி நாடுகளில் கவிதை என்னவாக அறிய முடிகிறது. ஒரு சூடும் வெம்மையும் வேண்டுவனாக அறியமுடிகிறது. நம் வாழிடத்தில் கவிதை உணர்ச்சியின் பிடிகளில் தங்கிவிட எத்தனிக்கிறது. கவிதை உணர்ச்சியின் பிரசங்கம். அறம் பேசுதலும் தர்மத்தை நீதியை நிலைநாட்டுதலும் அதன் பணி.
இரவு
முழுக்க
நிழல் கூடத் தீண்டாமல்
தனியறையில் இருந்து
வெளியேறுகிறோம்
பக் 46
கவிதையின் சொற்களைப் பாடுதல் அல்லது குறுக்கம் மிகுந்த சொற்களுக்குள் அப்பால் தென்படுகிற வெற்றிடங்களில் வாசகன்,கவிஞன் இருவரின் வீடுபேறு அங்குதான் அமைந்திருக்கிறது. நீண்ட வெள்ளைக் காகிதம் எதற்கோ ஏதோ சில தீயிலிட்ட மௌனங்களை திரும்பத்திரும்ப கவனிக்கச் சொல்கிறது. அந்தக் கவிதை மேலும் நீளமாக பக்கம் முழுக்கவும் நிரம்பியிருக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது.கவிதை பற்றிய விசாரணை களும் வாக்குமூலங்களும் சுயமதிப்பீடுகளை அறிய முயற்சிக்கிறதாகவும் அமைகிறது. விளையாட்டு வீர ர்களை நிறுவனங்கள் வாடகைகளுக்கோ குத்தகைகளுக் கோ எடுத்துக் கொள்ளும். அந்த வீரன் தன் வாழ்நாளில் அந்த நிறுவனத்தின் குறிகளை தன்நெஞ்செங்கும் பொருத்திக் கொண்டு அலைவது போலத்தான் ஒரு படைப்பாளி தன்  சுயபடைப்புகளைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. நிலவுடைமையாக்குதல் என்பதில் இந்த நூற்றாண்டில் அதிக பிரியத்தை ஏற்படுத்திய தாக்கம். புதிய புதிய தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இனக்கலப்பு ஏற்பட்டது. பழங்குடிகள் விரட்டியடிக்கப் பட்டார்கள். காடுகள் நமக்கு வழிகளானாது. மலைகள் குடையப்படுகிறது. நாம் விரும்பிதை விடவும் பிரமாண்டமான உலகம் வந்து கொண்டிருக்கிறது. கவிஞனும் அவன் வாசகனும் வாழ்கிறார்கள்.
எப்படி சித்ரவதைக் கூடத்தில் தனக்கு என்ன நேர்ந்தது. என்பதைச் சொல்லக் கூசுகிறானோ ஒரு வீரன் அப்படித்தான் தன் சொற்களின் வழியாக சொல்ல நேராத கவிஞனின் சம்பவங்களை வாசகமனதுடன் அறிய வேண்டும். இங்கு ஊடகதர்மப்படியாக கவிதைகளுக்கு ஒதுக்கப்படுகிற பக்கங்கள் குறைவாகி அதில் பல கவிதைகள் பதிகிறது. கவிதைகள் வாசகன் தன் வாழ்நாளில் எளிதில் அறிந்த சம்பவங்களைத்தான் சொல்லவருகிறது. சில சமயம் நீச்சல் தெரியாதவன் நீச்சலின் அனுபவங்களை எழுதியிப்பதை மீனவ கவிஞன் வாசிக்கிற போது என்ன உணர்வான் அப்படித்தான் பல கவிதைகள் பல கவிஞர்களின் வாழ்வு எளிதில் புல்ப்படுகிறது. அனுபவமற்ற கவிஞன் புகழை விலை கொடுத்து வாங்கி விடக்கூடிய கவிஞனின் அனுபவம் பிதற்றலாகவும் பிரசங்கமாகவும் புதிய பைத்தியகாரன் அவனுடைய பைத்தியத்திய உலகத்தை எப்படி வசீகரிக்கி முனைகிறான் என்பதைப் போலத்தான் இருக்கும். புகழுக்காக சொற்களை உற்பத்தி செய்து விற்கிற கவிஞனும் அவனின் கவிதைகளும் அவன் வாழும் காலத்தில் அவனுக்கு முன்னால் சாம்பலாவதை நிச்சயமாகப் பார்ப்பான். தன் கவிதையின் சாம்பலைத் தூவுவதற்காக வசதியான இடங்கள்தான் நிறுவனங்கள்.
         சுற்றுலா வழிகாட்டியின் சொற்கள் இனிமையாக அமையும். ஏன் அந்த சுற்றுலாத் தளங்களின் ஞாபகங்களை விடவும் அவன் சொல்லிவிட்டுச் சென்ற சொற்களும் அவன் உருவாக்கிய பழஞ்சித்திரங்களும் ஞாபகத்திற்குள் நின்று விடுவதை விடவும் அவனுடைய மொழி நமக்கு ஞாபகத்தில் நிற்பதற்குக் காரணம் அவன் அனுபவம். “நல்லஎன்பதற்காக ஒரு வாசகன் அளிக்கி விலை மிகமிக அதிகம். துவக்க நிலைக் கவிஞர்களை அனுபவமிக்க வாசகர்கள் அனுகுவதும் தலைமுறை இடைவெளியை உருவாக்கிவருகிறது. கவிதை தீண்டப்படாதவையாக மாறுகிறது. கவிதையின் உலகத்தில் தீணடப்படாதவையின் உத்தரவுகளை பதிப்பக நிறுவனங்கள் உருவாக்குகிறது. ஒரு கடைவிதியில் ஒரேயொரு கடையில் மட்டும் கூட்டம் நிரம்பி வழியும் அதைவிடவும் ரகங்களும் தரமும் உள்ள கடைகளில் கடைக்காரச் சிப்பந்திகளும் முதலாளிகளும் ஈ விரட்டிக் கொண்டிருப்பார்கள். மக்கள் அந்த இடத்தை எளிதில் கடந்து போவார்கள். அந்த கடைக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்தான் மற்ற நூறு கடைகளிலிலும் இருக்கும்.
ஆனால் என்ன ஈர்ப்பு. என்ன கவனம் செய்தல், அந்தக் கடைக்காரன் அதிகமான நீளமான நிலப்பரப்புகளில் தன் நிறுவனத்தின் இலட்சினைகளைக் கொண்டு சென்றிருக்கிறான் என்று பொருள். அதற்காகத் தன் நாற்பது சதவிகித வருமானத்தை இழக்க முன்வருகிறான். இதுவே அவனுடைய கடையின் நிரம்புகிற கூட்டத்தின் பின்னணியாகிறது. கவிதை குறித்த உரையாடலுக்கும் அறிமுக உரைக்கும் எதற்காக இந்த வியாக்கியானம். இலக்கியப் பரப்பில் பண்டங்களும் விலையும் விற்பனையும் சமூகப் பண்பாட்டுச் செயல்பாடுகளே. கவிதை நூல்கள் விசிட்டிங்க் கார்டு அல்ல. அச்சான கவிதை நூல்கள் கவிதைகள் வாசிப்பவர்களுக்கு மட்டுமல்ல மொழியை வாசித்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் தற்காலத்தின் எல்லாவகையான கவிதைகளும் போய்ச்சேரவேண்டும். இங்கு நூலகங்களின் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறது. கவிஞன்- பதிப்பகம்- வெளியீடு- விற்பனை-ரசனை இந்தப்படிமங்களுக்குள்ளாக நிகழ்நது வருகிற பனிப்போர்களில் அரவை இயந்திரத்திற்குள் சிக்கிப் போகிறவனாக கவிதையின் வாழ்வும் கவிஞனின் வாழ்வும் அமைந்திருக்கிறது.
வெறும்
ஈரம் நிறைந்த
மழைச்சாரலென
அலட்சியத்தோடு கடக்கிறாய்
ஒருநாள்
பெருங்கடலென
நிமிர்ந்து நிற்கும்
என்ன செய்வாய்?
-பக்-24
கவிஞன் எதற்கும் தன்சொற்களைக் கொண்டுபோய் வாங்குகிறவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது குறைபிரசவப் பிண்டங்களாவிட்ட கவிதை விமர்சகர்களை அண்டி வாழவும் முடியாது. ஆனால் கவிஞனுக்காகவும் கவிதைகளுக்காகவும் யாராவது ஒருவர் கன்னிவெடிகளைக் கண்டறிவதற்கு கானகத்திற்குள்ளாக நடந்து ஆகவேண்டும். கன்னிவெடி நிலங்களில் நடப்பவனுக்கு ரோசம் வரும்.கோபம் வரும். களத்தில் நிற்பவனுக்கு எல்லா உணர்ச்சியும் ஏற்படும். அடிப்படைத் தேவைகள் முழுமையடைந்தவனால் எழுதப்படுகிற கவிதைகளுக்கும் சமூகத்தால் புறக்கணிக்கப்ப்படுகிற கவிதைகளும் வேறு வேறு. கவிதைகளை வாசிப்பு இன்பத்திற்காகவும் நுகர்வுப் பண்டமாகவும் சுவரொட்டிகளின் இனிய வாசகங்களாக வும் கருதுகிற சமூகத்திற்கு நல்ல கவிதைகள் இதோ இங்கே வசப்பட்டிருக்கிறது இந்த வாழ்வின் அசல் பிரதிகளை இந்தக்கவிஞன் எழுதியிருக்கிறான். இதோ கவனியுங்கள் என்று இறைச்சல் மிகுந்த சாலைகளில் கூவிக்கொண்டு திரியக் கூட நாம் தயாராக வேண்டும்.
அகராதிகளைத் தூக்கிக் கொண்டு தங்கள் ஓய்வு நேரத்தில் நகரெங்கும் திரிகிற மாணவர் மாணவிகளைப் போலவே. இங்கு அகராதிகளை உருவாக்குவதற்கு அத்தனை மெனக் கெடவேண்டுமா என்ன. ஒருவன் ஒரு பெருநகரத்திற்கு அந்த நகரின் மொழியறியாமல் வருகிறான் ஐந்து வருடத்தில் அந்த நகரில் வீடும் காரும் மனைவிகளும் வெப்பாட்டிகளும் சம்பாரித்து விடுகிறான். அவனுக்கு அகராதி பற்றி என்ன வெங்காயத்திற்கு அறிவு தெரியவேண்டும். அதற்குப் பதிலாக இலக்கிய நூல்களைச் சுமந்து திரியுங்கள் மாணவர்களே.
வெ.மாதவன் அதிகனின் கவிதை நூலுக்கு ஒரு ஓரத்தில் அமர்ந்து மோர்சிங் வாசிக்க விரும்பவில்லை. அந்த நூலை முன்னிருத்தி சில செய்திகள் பேச வேண்டும். அந்த நூலிலிருக்கிற சொற்களை விடவும் அதிகமான சொற்கள் ஒரு கவிதை நூலுக்கு எழுதப்படவேண்டும்.  இலக்கியப் பரப்பை விரிவு செய்யவேண்டும். அல்லது குறைந்த பட்சம் நம் கைக் கொண்டிருக்கிற நிலங்களை யாவது தக்கவைக்கவேண்டும். நாவலை வைத்து அதிகம் பேசமுடியாது. சிறுகதைகளை வைத்து அதிகம் பேச முடியாது. அந்தப் படைப்புகளே தன் நிலையை வலியுறுத்திவிடும். குறுநாவல்களின் கதையை நாம் முடித்துவிட்டோம். நாடகங்கள் கதை முடிந்தது. நேர்காணல்கள் நேர்காணல்களுக்கான பதில்களுக்குக் கேள்விகள் எழுதிக் கொள்கிறார்கள். சமீப காலங்களில் விருந்துகளில் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவுகிற இடங்களில் அந்த உணவுவகைகளை சமையல்காரர்கள் பட்டியல் போட்டு எழுதி வைப்பது போலத்தான் நேர்காணல்கள் அமைகிறது. நகைச்சுவை தோரணங்களாக அமைகிறது.
சீரியஸ் லிட்டரேச்சர் பேசுகிற சமயத்திற்கு அதுமாதிரியான டைமிங் ரைமிங்க் சென்ஸ் “விட்“ அவசியம்தான். நேர்காணல்கள் என்பது சுபமங்களாவோடு அஸ்தமனமாகிப் போனது. கவிதை எனும் போர்க்கருவியோடுதான் நம் ரசனையையும் மொழியைத் துருவிக் கொள்ள வேண்டும்.. நடனமாடிக் கொண்டிருப்பவன் நடனத்திற்குச் சம்பந்தமில்லாமல் திடீரென்று தலையில் நடப்பது போலவும் அங்குமிங்கும் ஸ்பிரிங் போலத் துள்ளுவதையும் ரசித்துக் கொள்வதைப் போல இந்த அறிமுக உரையையும் பெரிது படுத்தாமல் தமிழ் கூறும் நல்லுகம் என்னைத் தவிர்த்து இந்தக் கவிஞனின் கவிதைகளை வாசித்து ஆதரியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்..
சக்கரைக் கடல்

குளிர்ச்சி மிகுந்த நீர்
கொஞ்சம் கூழாங்கற்கள்
சில மீன் குஞ்சுகளைச் சுமந்து கொண்டு
இச்சூனியத்தை விட்டுக் கடக்கிறேன்
ஆம்
நானொரு நதியாகவேண்டும்
இவ்வூழி முடிவில்
நானொரு சர்க்கரைக் கடலாயிருப்பேன்
அப்போது
வாள்களென் கரையில்
துருப்பிடித்துக் கிடக்கும்.
--பக் -13

வாழ்த்துகள் வெ.மாதவன் அதிகன்...

வெளியீடு-புதுஎழுத்து
ஆசிரியர் வெ.மாதவன் அதிகன்
96004 65592

புதுஎழுத்து
2-205 அண்ணாநகர்
காவேரிப்பட்டினம்-635112
90421 58667
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக