ஆழ்கடலுள் இறங்கும்
மண்குதிரை
ஆழி. வீரமணியின்
கவிதை நூல் குறித்து.
கனல்
எதிரே
வரும்போதெல்லாம்
ஒதுங்கிப்போகச் சொன்ன
ஊர்வெட்டியானிடம்
செமத்த அடி
வாங்குகிறார்
கட்டையில் எரியும்
பெரிய குடும்பத்து
ஆண்டை
-பக்-16
ஆழி.வீரமணியின்
கவிதைகள் வாசிக்க நேர்ந்த அனுபவத்தில் கிடைத்த முக்கியமான கவிதையாக மேற்கண்ட கவிதை
அமைந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ மின்கல எரிவாயு மயானத்தை வளம் பெற்றவர்கள்
ஆண்டவர்கள் உருவாக்கிக் கொண்டார்களோ எனத்தோன்றுகிறது.
கவிதைகளில் தனிச்சாதிகள் குறித்த புழக்கங்கள் மறைகிற காலம்
தற்காலம். உணர்ச்சிகளுக்கு அடிகோலுகிற கவிதைகள் மிக விரைவில் பொது தளத்தில்
நீர்மையாகிவிடுவதையும் உணர்கிறோம். சாதிய இயக்கங்கள் சிதறிப்போவதும் இதன்
அடிப்படையே. சாதிகளுக்குள் சுழல்கிற குலமேம்பாடுகள் சாதிய இனவரையைத் துண்டித்து
விடுகிறது. நவீன காலத்தின் கவிதையில் சாதிகளின் ஆதிக்கம் குறையவில்லை மென் மேலும்
இந்த நவீன தொழிற்நுட்பம் இணைய காலத்திலும் எந்தளவிலும் இம்மியளவும் அதன் கூர்
நகங்களை மழுங்கடிக்க முடியவில்லையென்பதைத் தோல்வியுடன் தலை தொங்கப் போட்டு ஒப்புக்
கொள்ளத் தான் வேண்டும்.
தொகுப்பிலுள்ள குறுங்கவிதைகள் முழுக்கவும்
உணர்ச்சிகள் கொப்பளிக்கிற தொனியில் அமைந்திருக்கிறது. கணத்தில் வாசிக்கிற நமக்கு
தழும்பு களை நீவிப்பார்க்கச் சொல்கிறது. கவிதைகளில் உணர்ச்சி வகையறாக்களை
குறைத்துக் கொள்ளக் கொள்ளத்தான் கவிதையின் அடுத்த நிலையை நாம அடைய முடியும்
ஆவேசம் குறையாத அடைமழை
கம்மஞ்செடிகள்
பூவைத்திருப்பதையும்
மணலாவில் சங்கு
பிடித்திருப்பதையும்
வருத்தம் தோய்ந்த
குரலில் பேசிக் கொண்டிருப்பார்கள்
அப்பாவும்
சித்தப்பாவும்
பரணில் விறகு
காலியானதையும்
பழையசோறு
நொசநொசத்துவிட்டதையும்
பகர்ந்து
கொண்டிருப்பார்கள்
அம்மாவும்
சின்னம்மாவும்
மூலைவாய்க்காலில்
முந்திரித்தோப்பில்
கார்காலக்
காய்ப்புகள் களவு போவதால்
நனைந்து கொண்டே
காவலுக்கிருப்பார்
கைப்புள்ள தாத்தா
எந்தக் கவலையுமின்றி
ஏரியின் கரைகளை
உடைக்கும் முயற்சியில்
இடைவிடாது இயங்கிக்
கொண்டிருக்கும்
ஐப்பசிமாத அடைமழை
-பக்-40
இந்தக் கவிதை மனம்தான் அவரை சிறுபத்திரிக்கை நடத்தச்
சொல்லியிருக்கிறது. இந்த மனம்தான் தனியாக நூல் போடச் சொல்லியிருக்கிறது. நகரம்
பெயர்கிற ஒவ்வொரு படைப்பாளியின் ரத்த அனுக்களில் சொற்கள் இருக்கிறதோ இல்லையோ
நிச்சயம் அவர்களின் ரத்த உறவுகள் இருப்பார்கள். துடிக்கிற இருதய ஒலியை அவர்கள்தான்
இசைக்கிறார்கள். தன் ஊரை வெட்டெனத் துண்டித்து விட்ட வீசிவிட்டு வரச் சொல்கிற
வாழ்க்கை யை கவி நண்பர்கள் வாயிலாக நான் அறிவேன்.
கவிதை நூல்களின் வருகை நிகழ்வது என்பது உணர்ச்சிகளை
மென்மேலும் பட்டை தீட்டிக் கொள்வதாகவே அமையும். கவிதைகளை மிக எளிதில் எழுதிவிட
முடிகிற தற்காலம் மிகப்பரந்து பட்டிருக்கிறது. நூலாக்கப் பணிகளுக்கான சிரமங்கள்
ஏதுமிருப்பதில்லை. நவீன தொழிற்நுட்பம், தகவல் தொடர்பு வசதிகள். பதிப்பிலும்
அச்சிலும் முகநூல் பதிவுகளிலும் நம் கவிதையை எளிதில் கண்டுணர்ந்து கொள்ள ஏதுவான காலமாகத்
தற்காலம் அமைந்திருக்கிறது. ஆங்கிலம் உள்பட அனைத்து சர்வதேசப் பயண்பாட்டு
மொழிகளில் கவிதைகளை இன்றைய கவிதை என்னும் தலைப்பில் கவிதைகளை பதிகிற இணையங்கள்
அதிகமாகி வருகிறது. இலக்கியத்தின் அனைத்துத் துறை சார் வல்லுநர்கள் கவிதைகளை
எழுதுகிறார்கள். அல்லது அவர்களுக்குள் இயங்குகிற கவிமனம் கவிதைகளை எழுத
வைத்துவிடுகிறது.
தமிழ்மொழி தொழில் படுகிற அளவிற்குக் கவிஞர்களும் கவிதைகளும்
குறைவு என்று நான் ஏற்கெனவே பல பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். கவிதைகளை
வாசிக்கத்துவங்குகிற மனதின் இருப்பும் செயலும் வேறு வேறான காலங்களைத் தருகிறது.
புதிய பொழுதின் அன்றைய தினத்தில் மலர்கிற மலர்களைக் காண்பதைப் போன்ற உணர்வுகளைத்
தருகிறது. கவிதை நூல்களைக் கொண்டு வரவேணடாம் என்று ஒரு முன்னணி புத்தக கடை
உரிமையாளர் ஒரு கவிஞரிடம் சொல்லிவிட்டு அவரிடமிருந்து இரு பிரதிகள் மட்டும்
கொடுத்துவிட்டுப் போங்கள் என்று அவருடைய மற்ற எட்டுப்பிரதிகளை அவரிடம் திருப்பித்
தந்த செய்தியின் துயரக் கேவலோடுதான் இந்த நூலுக்கான அறிமுகத்தை எழுதுகிறேன்.
கவிதை நூலை முதலில் பதிப்பகத்தார்கள் துவங்கி இப்பொழுது
கடைக்காரர்கள் நிராகரிக்கிற காலம் இது. ஆயினும் கவிதைகளும் கவிஞர்களும் சோர்வடையப்
போவதில்லை. விமர்சகத்தொண்டைமான்கள் பல கவிஞர்களைக் காட்டிக் கொடுத்து தமிழ்
வளர்த்துத் வளர்தமிழ். வயிற்றுத் தமிழ் வளர்க்கிறார்கள். நாம் யார் வாயிலும்
வயிற்றிலும் மண்போட நமக்கு உரிமையில்லை. கவிதைகளுக்கு வாய்க்கரிசி போட முயல்கிற
சமயத்தில்தான் நம் சொரணையைக் காட்ட வேணடியிருக்கிறது. கஞ்சிக்கூலிகளும்
கைக்கூலிகளும் கூலிப்படைகளும் கவிதைப் பயண்பாட்டில் செழிக்கிற காலம். கவிஞனை ஒரு
டாஸ்மார்க் சப்ளையர் பையனாகவும் அவன் எழுதுகிற சிகரெட் அட்டைக்குத் தருகிற
மரியாதையைக் கூட அந்தக் கவிஞனுக்குத் தருவதற்கு முன்வருவதில்லை. நான் அறிந்தளவு
பதிப்பக முதலாளி முன்பாக அந்தப் பதிப்பகத்தில் புத்தகம் போட்ட படைப்பாளிகள்
உட்காருவதற்குக் கூட தடை நீடிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் என்ன மாதிரியான
சமூகத்தில் வாழ்கிறோம் என்கிற கீறல் விழுந்த ரிக்கார்டாக மறுபடியும் கீறுகிறோம்.
பூங்கா கவிஞனும்..டாஸ்மாக்
கவிஞனும்...
பூங்காவில் நுழைந்த
ஜிப்பாக் கவி
மஞ்சள் பூக்கள்
உதிரும்
மரத்தடியில்
வார்த்தை பிடிபடாமல்
நெடுநேரமாய்
பேனாவால்
தலைசொறிகிறான்
பூங்காவை ஒட்டிய
மதுக்கடையில்
மிடறுக்கொரு
வரி எழுதுகிறான்
தலைகலைந்த நவீன கவி
--பக்-54
தான் வளர்த்த மிருகங்களின்
செத்த தோல்களில் தன் கவிதைகளை எழுதிப்பார்த்த சமூகம் இது. பாறைகளில் ஓவியக்
கவிதைகளாக எழுதிப்பார்த்த கண்களில் பாறைச்சிதிலங்கள் பட்டுத்தெறிக்க காவியங்கள்
எழுதிய கூட்டம் இது என்பதை நாம் உணர்வோமாயின் நம்மால் நிராகரிக்கிறவர்களை
உதறிச்செல்ல முடியும்.
அந்த வகையில்தான் கவிதைகளின் மீதும் கவிதை நூல்கள்
வெளியிடுவதிலும் முனைப்பு காட்டுகிற
படைப்பாளிகள் தாங்களாவே வெளியிட முன் வருகிறார்கள். சிற்றிதழ் நடத்திய அனுபவம்
கொண்டவர் களும் சிற்றிதழ்களுடன் இயங்கியவர்களின் நூல்களை வெளிக் கொண்டுவருவதில்
ஒரு சிலர்தான் தங்கள் படைப்பு நண்பர்களின் நூல்களைக் கொண்டுவருகிறார்கள்.
அப்படித்தான் ஆழி.வீரமணியும். தன் கல்லூரிக்காலங்கள்
முதற்தொட்டு இலக்கியப்பணியாற்றியிருக்கிறார். ஏழு இலக்கிய இதழ்களைக்
கொண்டுவந்திருக்கிறார். சிறுபத்திரிக்கை நடத்துவதும் அதில் உள்ள வரும்படிச்
செலவுகள் இலக்கிய இழப்புகள் அத்தனையும் தாங்குகிற மனம்தான் நல்ல படைப்புகளையும்
தரமுடியும் என்பதை பாரதி காலத்திலிருந்து நாம் அறிந்திருக்கிறோம். இந்த தொகுப்பின்
மூலமாகத் தானும் சொந்தக் கை ஊன்றிக் கரணம் போட்டிருக்கிறார்.
தொகுப்பு
முழுக்கவும் கடலூர் மாவட்டத்தின் நிலங்களைக் காணமுடிகிறது. அந்த நிலத்தின் வாசமும்
மலர்களின் மணமும் வீசுகிறது. வழக்கம் போலவே முதல் தொகுப்பில் கவிஞன் வைக்க
நினைக்கிற ஒட்டு மொத்த செய்திகளும் செய்திகளாகவே பதிவாகி யிருக்கிறது.
கவிதையிடமிருந்தும் கவிஞனிடமிருந்தும் அப்பதிவுகளைத் தவிர்க்க முடியாது போலும்.
பெருநகரம் குறித்த கனவுகள் இளங்கவிகளுக்கு பிரமாண்டத்தைத் தருகிற அதே நேரம் தன்
ஊரும் கண்மாய்களும் பறவைகளும் வாய்க்கால் வரப்புகளும் அப்பாவி மனிதர்களும்
கனவுகளைப் பெருக்குகிறார்கள்.
வீரமணியின்
கவிதைகளில் காதலின் ஈரம் மழை ஈரம் போன்ற வீச்சம் தருகிறது. எதிர்காலத்தின்
கவிதைகளுக்காக அவர் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். நமது வெகுசன கவிதைகளின் பால்
அவருக்குள்ள மயக்கம் அடுத்த படிநிலைக்குத் திரும்ப அவையே தடையாக அமையலாம். இந்த
நூலிலுள்ள அவருடைய இயல்பான கவிதைகளை அவர் கண்டு கொள்கிற சாத்தியத்தில் தனக்கான தனித்துவக்
கவிதைகளைத் தன் மனிதர்கள் மூலமாக அவர் கண்ட டைவார் என்பது தெரிகிறது. தொகுப்பில்
எல்லாவிதமான வண்ணக்கவிதைகள் உள்ளது.
இயல்பு வாழ்வின் கவிதைகளில் தர்க்கமனம் காணவில்லையென்பது சோகம்தான்.
கவிஞனுக்கான எதிர்வாதமும் தருக்க மனமும்தான் சமகாலத்திற்கு முக்கியம்.
நூல் முழுக்கவும் காகங்கள் கவிதைகளுடன் இணைந்து வருகிறது.
அதுவே வாசக மனதிற்கு இடையுறாகவும் பலமும் சேர்க்கிறது. ஒரு படைப்பாளி தன்னை இந்தச்
சமூகத்தின் கௌரவக் குறைவான சமூகத்தைச் சார்ந்தவன் என்பதை அறிவிக்க வைக்கிற எந்த
நிலையையும் இந்த நவீன காலத்தில் படைப்பாளர்கள் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும்.
யாரும் எவருக்கும் எந்த நிலைக்கும் தாழந்தவர்கள் தாழப்பிறந்தவர்கள் இல்லை. எந்த
வடிவம் எந்த சதிகளுடன் வந்தாலும் எதிர்க்கொள்கிற வலிமை இந்த மனித உடலுக்கு உண்டு.
இதன் வரலாறு பதினாறாயிரம் ஆண்டுகள். சில நமுத்த வெங்காயங்கள் நாம் இந்த சமூகத்தைச்
சார்ந்தவன்தான் என்பதை நினைவுட்டுவது பாராட்டுவதற்கு அல்ல.. நீ இன்னும் அதே பழைய
நிலைக்குப் போய் சாணம் அள்ளு என்பதற்காகத்தான். இந்தப் பெருநகரத்தினைச் சுத்தம்
செய்ய நாம் வரவில்லை இதே பெருநகரத்திற்கு இணையான துணை நகரத்தை நாம் வாழும்
காலத்தில் உருவாக்கவே இந் நகரம் நுழைகிறோம்..
நல்ல மேய்ப்பர்கள் மட்டுமல்ல
நாமும் விரைவில் வீடு திரும்புவோம் நண்பர்களே..
மீண்டுமொரு ஆகச்சிறந்த
கவிதையுடன் இந்த அறிமுகத்தை முடிக்கிறேன். வாழ்த்துக்கள்.. நன்றி
பெரியார் நகரின் கண்ணீர்த்துளி
முந்திரிக்காட்டில்
தனித்திருக்கும் கண்ணகிக்கு
ஒரு முழம்
மல்லிகை வாங்கினான்
இருபதாண்டுக்கு முன்
விஷம் கொடுத்துக்
கொல்லப்பட்ட
குப்பநத்தம்
முருகேசன்
பூக்காரப் பெண் மூலம்
இன்றைய இளவரசன் கதை
கேட்க நேர்ந்த அவன்
பெரியார்நகர்
புறவழிச்சாலை மதுக்கடையில்
அழுதபடி
அமர்ந்திருக்கிறான்
--பக் -33
ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை-கவிதைகள்
ஆசிரியர்- ஆழி.வீரமணி
ஆகஸ்ட்-14
வெளியீடு
செம்மண்
எண் 86 புதுமனைசாரி தெரு
முதனை அஞ்சல்.விருத்தாச்சலம் வட்டம்
கடலூர் மாவட்டம்-607804
அலைபேசி..
98841 95134
விலை ரு 60-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக