பேரண்டப் பட்சியின்
காலச்சடலம்
எனக்குள் இலக்கியத்தின் பால்யத்தின் பற்கள்
முளைக்கத் தொடங்கியிருக்கிற சமயத்தில்தான் இளஞ்சேரலின் “கருடகம்பம்“ என்கிற அவரின்
புதிய முதல் நாவலுக்கு எனை அறிமுகவுரை எழுதச் சொல்லி யிருக்கிறார்.
இலக்கியத்தின் விழுமியப் புகழிடங்களில் எங்கோ ஓரிடத்தில் எனக்கான
அடையாளத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.எப்போதும் அநேக தருணங்களில் எனக்குள் பிரமாண்டமான
வியப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இளஞ்சேரல் என்கிற ஒரு தனிமனிதனின் சந்திப்பு
சில கணங்கள் அத்தனை சாதாரணமாய் இருந்ததில்லை. எனக்குள் ஏதோவொரு சாபத்தின் அத்யாயம்
கிழிக்கப்படுகிறதை அப்போதெல்லாம் உணரமுடிந்திருக்கிறது. இம்மனிதனின் உலக இலக்கிய
அறிவை பிரமித்து வானம் பார்க்கும் என்னிடம் எழுதச் சொல்வது பயங்கரத்தைத் தருகிறது.
அல்லது ஏதோவென்றை எனக்குள் போதிக்கச் செய்கிறது. இப்பொழுது நான் என்ன செய்ய...
இனி இந்த நாவலுக்குள் பைத்தியமாகி தொலைந்து அவரின் பைத்திய நினைவுகளை சர்வ
அலட்சியத்தோடு கடக்க முயற்சிக்கிறேன். அக்கறையோடும் அன்போடும் பகிருகிறேன்.
“இதுவொரு சாதாரணனின் பார்வையில் விளம்புகிற மொழியென்றே கருதிக் கொள்ளலாம்“
அம்மா மட்டும் எப்படி கண்ணீர் தீராமல் அழப்பழகி யிருக்கிறாள்.நிலாவெளிச்சத்தின்
இருளும் இருள்தானே. தற்கொலை செய்து கொள்ள முடிவானதும் ரயில்வே பாலம் நொய்யலின்
கிளை வாய்க்காலருகில் நின்று கவனிப்பவளை.. ராஜேந்திரா குதிடா வென்று..சொன்னவளை
“பத்து நிமிடங்களுக்கும் மேல் ஒரு மனிதனின் மனநிலை மாறுமென்பதின் அறிவியலை“ இனி
நிலாக்காலத்தை நாம் பார்க்கலாம் என்று சொன்ன வரிகளில் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசனின் படைகள் கடவுளின் குலத்தார் என்கிறார். ஒரு நதி உருவாக்கியிருந்த
வாழ்வின் எளிய துல்லியத்தை அதன் பிரமாண்டத்தை
கிணறு தோண்ட ஒரு தொன்ம நகரின் நாகரீகக் கலாச்சாரத்தை கிணற்றின் அடிவயிற்றிலிருந்து
பழங்காலம் புழங்கிய பொருட்களில் படிந்த புராதன வாழ்வின் மீதான பிரமிப்புகளை
இன்னும் எஞ்சியிருக்கிற சிதைந்த தடயங்களைச் சேகரிக்கத் துவங்குகிறது ஆழ்மன
சிருஷ்டி
பன்றிகளை அதிகம் தின்னறதால் பன்றிமுகம் போலுள்ள மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள்
அனைத்தும் அதனதன் இனத்திலிருந்து வேறு ஒரு இனப்புணர்ச்சியில் உருவகித்த
விடுமென்கிறத் தத்துவக் கோட்பாட்டை யாரும் அத்தனையெளிதில் வெகு சாதாரணமாய்
உணர்ந்து கடந்து போய்விட முடியாதுதான். இவரின் நுண்ணிய புரிதல்களை எந்த
வரையறைக்குள்ளும் புகுத்தி விடமுடியாது.
மாரானின் தந்தை உதிர்த்த அவரின் திருச்சிற்றம்பலம் இறுதிச் சொல்லின் போது
வடகோடியில் ஒரு பிள்ளைத்தாய்ச்சி ஒர் ஆண்மகவு ஈன்றாள்..அப்படியொரு
காட்சிப்படுத்தலில் பிரமித்துப் போய் நிற்கிறேன்.
“ஜீனியஸ்“என்கிற பெருஞ்சொல்லை சுஜாதாவைத்தவிர வேறுவொரு எழுத்தாளருக்கு என்
நாவு சுண்டியதில்லை.
ராஜா தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொள்ளும் நேர்மை எந்த
ஒப்பனையுமற்றிருந்தது. மிகப் பெரிய பேரரசின் உருவாக்கங்களின் போதிருந்த அதன்
பயங்களை அதல பாதாள வீழ்ச்சிக்கு முன்பிருந்த பயங்கரங்களை காலச்சடலத்தின்
மொய்க்கிறக் காட்சியாகியிருக்கிறது. நான் அங்குதான் இருக்கிறேன். அதைக்
காணுகிறேன். அதன் ஆழ அழுத்தம் பிதுங்கிப் பிதுங்கி கசங்குகிற ஆன்மாவின் புலம்பலை
ஜீரணித்து தான் முனை மடித்து பக்கத்தைத் திருப்புகிறேன். தர்மநூல்களை வெறும்
தத்துவச்சரடு என்கிறவரை எப்படிப் புரிந்து கொள்வது
“மன்னா என்னையா நம்ப மறுக்கீறீர்கள்“..,அமைச்சர்...
“இப்பொழுது என்னையே நம்பவில்லை..“என்கிறார் அரசன்
இந்நிலைத் தகவலுக்குள் இருக்கிற புரிதல் அலட்சியப்படுத்திவிடமுடியாது.
திருவிழாப் பேச்சுகளில் வட்டார வழக்குச் சொற்களை அந்த மண்வாசனை யோடு அப்படியே
அடித்துப் போய்விடுகிறார் நாவலாசிரியர் எப்படிச் சித்தரிக்க முடிந்தது.
“காலால் செல்லமாக நெஞ்சை உதைக்க அவன் நெடுஞ்சாணாக கால்களை நீட்டி விரைத்து
நெட்டி முறித்த போது ஆயிரமாண்டுகளின் போர்களில் பட்ட காயங்களின் தழும்புகளும்
உடலில் ஒட்டியிருந்த ஆபரணங்களின் கருத்த தழும்புகளும் கரேலென்று தெரிந்த போது
நூற்றாண்டுகளின் சிதைந்த நீட்சி..“ ஐயோ.. இந்த நாவலுக்குண்ட தகுதிகளை எந்த
வர்ணனைகளிலும் சொல்லிவிடமுடியாது.
சைகை பேசும் நடுவணைப்பற்றி ஒரு முறை ஊஞ்சல் இலக்கிச் சந்திப்பில் இளஞ்சேரல்
விளம்பியபோது அக்கணம் நடுவணாகவே மாறியிருந்தார். பின்னுக்கு நகரும் நினைவு
நாடாவில் ஒளி மங்கி மங்கி விரிகிறது. நடுவணின் மொழியில் ம்ம்..உஉஉஉஏ ஏஏஏ அ..அ...
சப்தத்தில் மிதக்கிறது. உடம்பு முழுக்க காயங்களுடன் வீங்கியிருக்கும் நடுவணுடன்
ஒரு தேநீர் அருந்த ஆசைப்படுகிறேன்.
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாக நம்பப்படுகிற நாவல் என்கிற ஒழுங்கிலிருந்து
கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. வேறு வகை சார்ந்தது. எந்தக் குறியீடுகளையும்
முன்வைக்காமல் நேரடியாக மானுடவியலைத் தளும்பத் தளும்பச் சொல்கிறது. இங்குக்
கற்பிக்கப்பட்ட அத்துனையிலும் அதிகாரத்தின் கூர்வாளின் நிழல் நம் சுயத்தைக்
கிழிக்கிறது. உளவியலின் ஆதூரமான சிநேகம் நிரம்பிய பக்கங்களின் உயிர்ப்போடு இன்னும்
இருப்பதும் அன்பின் வலி பெருவெளியெங்கும் நீட்சித்துக்கிடக்கச் செய்வதும்
இந்நாவலின் மிகமுக்கிய ஆகச் சிறந்த தகுதியாகியிருக்கிறது.
மொழி நழுவி வழுவழுப்போடு சொல்லப்பட்ட அழகியலும் பெரியதாய் அங்கீகரிக்கப்படாத
இக்கதை சொல்லி மானுடனை வாரியெடுத்திருக்கிறது இன்று இயங்கும் பேரிலக்கியம் அந்தார
இருள் சூழ்ந்த அநாதை காலத்துத் தனிமை புகுத்தி வாசித்த துல்லிய சில கணங்கள் எனக்கு
எத்தகைய ஆசீர்வதிக்கப்பட்டதெனச் சொல்லத்தெரியவில்லை.
வாழிடம் அற்றுப் போன ஆயிரமாண்டு தொன்மத்தை இந்நூற்றாண்டு மொழியில்
திரையுக்தியில் சமண்படுத்தியிருக்கிறது கருடகம்பம். இளஞ்சேரல் என்கிற
பைத்தியகாரனை பலவீனமான நிமிடங்களுக்குள் நிறுத்திக் காரணங்களைத்தேடுகிறேன்.இன்னும்
வரையறுக்கப்படாத ஒழுக்கங்களுக்குள் ஒழுங்கின்மையின் நேர்த்தியை பிசிறற்ற
புலணுணர்வை நுட்பமாய் உணர்த்துகிற இடம் உயிர்காலப் பட்சியின் மேலுறுப்பு கிழிந்து
இக்கணம் நான் அருந்தும் ஒரு தேநீரோ அல்லது ஒரு கைப்பிடி அரியிலோ அதன் வற்றா
முலைப்பாலைப் பீய்ச்சுகிறேன். அப்பாலின் வீச்சு நாசி நுகருகையில் உள் நாவின்
மேலண்ணத் தீண்டலில் உயிர்வாங்கிய சுவையில் ஆன்மா உணரும் ரசனைகளை எந்த நிறச்
சொல்லும் சொல்லிவிடமுடியாது. இந்நாவல் மூதாதைகளின் ஆழ்மனப் புரிதலுக்குட்பட்டு
நகர்த்திக்கொண்ட இயல்பைக் குறித்தான பதிவிது.
எப்படி இவரால் இந்த மனிதத்தை இவ்வளவுக்கும் அதிகமாய் சிநேகிக்க முடிகிறது.
இவரின் அத்தனை பைத்தியங்களின் மீதும் பைத்தியமாகிறேன் இவ்வளவு அக்கறையோடு எப்படி இருக்கமுடிகிறது
இந்த மனிதனால். சமூகத்தில் முழுமையின் மனிதர்களைக் கொண்டாட இவரால் முடிந்த
அளவிற்கு வேறொரு எழுத்தாளரைக் கைநீட்டிச் சொல்லிவிட முடியாதென்றே தோன்றுகிறது.
புத்தகத்தின் காதுகளை மடித்துக் கொண்டு உறங்கிய இரவுகளில் இந்த அம்மண
மொழிபேசிய மனிதர்களுடன்தான் காடு கொண்டிருந்தேன் என் அறிவின் பெருந்திமிரில் மகா
அலட்சியமாகவேதான் கடருகம்பத்தை வாசித்து முடித்தேன். இன்னும் விடுபடவில்லை. ஆதாம்
ஏவாளின் நிர்வாணத்தை வெட்கப்படவைத்த ஆப்பிளை அதை உண்ணு எனச் சொன்ன சர்ப்பத்தை
புழுதி தின்ன சபித்த கடவுளைப் புராதனத்தில் பலரதப் புரவி பூட்டி பிரபஞ்சம்
சஞ்சரித்த என் பால்யகாலக் கதைகளில் இன்னுமோர் கதைசொல்லியின் உயிருலுக்கிய கதை
“கருடகம்பம்“
அனாமிகா
99943 51148
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக