களையெடுப்பின் இசைக்குறிப்பு
செங்கவின் கவிதைகள்.. -- இளஞ்சேரல்
விடுதலை
அதன் மீது அவர்கள்
காதல் கொண்டிருந்தார்கள்
அது உண்மைதான் என்று
அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்
மேலும் அது மறுக்க முடியாத
உண்மையென்றும் உறுதிப்படுத்தினார்கள்
அது அவர்களின் இதயத்தின்
ஆழ ஆழங்களில் உறைந்திருக்கும்
பெருநதியென்றார்கள்
அவர்கள் காணவிரும்பும் கனவும்
அதுதான் என்றார்கள்
அவர்கள் உலவித் திரிய விரும்பும்
பொன்னுலகம் அதுதானென்றார்கள்
அவர்கள் அதை
விரும்புவதாகத்தான் சொன்னார்கள்
அதிலிருந்து ஒரு சிறு கீற்றை
நானவர்களுக்குக் கையளித்தேன்
பதறி விலகிவிட்டார்கள்
அவர்கள் அதனிடமிருந்தும்
பிறகு என்னிடமிருந்தும். – பக் 45
அடுத்த கவிதை
பரிசு
மகளுக்குப் பரிசளிப்பதற்காய்
ஓர் ஓவியம் வரைந்தேன்
குஞ்சுப் பறவைக்கு ஊட்ட
உணவினைப் பற்றியிருக்கும்
தாய்ப்பறவையின் அலகினை
வரையவே விரும்பினேன்……. பக் 34
விடுதலை என்பதான நம் மக்களின் புரிதல் என்னவென்ன அறிந்துகொண்ட கவிதையாக இந்தக் கவிதை முக்கியமானது. சமீப காலத்தில் நம் சமூகமும் நாடும் நாட்டு மக்களும் எப்படிப்பட்ட விடுதலையை எதிர்பார்க்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ் வொரு செயல்பாட்டாளனும் தனக்குள்ளே கேட்டுக் கொண்டே இருக்கிறான். இந்திய நாட்டின் விடுதலையை எடுத்துக் கொள்வோம். அது பெயரளவான விடுதலைதான் என்பதை இந்தக் கவிதை பேசுகிறது. வெள்ளையர்களிடமிருந்து மீட்டு கொள்ளையர்களிடம் கொடுத்துவிட்டோம். இரவில் வாங்கினோம் விடியவே இல்லை. என்னும் மேற்கோள் கவிதையல்ல இக் கவிதை. மாறாக விடுதலை என்பதின் பொருள் உணர்ந்து உள்ளோமா என யோசிக்க வைக்கிற கவிதை. விடுதலையில் இரண்டு நிலைகள் உண்டு ஒன்று விடுதலை எனும் சுதந்திரச் செயல்பாடு அடுத்து கட்டற்ற சுதந்திரம். நம் சமூகம் இன்றும் சுதந்திரம் எனும் கருத்தியலுக்குள் வரவேயில்லை.
முன்னூறு ஆண்டுகள் மட்டுமல்ல..ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே அடிமைச் சிறுமதியுடன்தான் வாழந்தோம். அச்சமே அவனுடைய விடுதலைக்குத் தடையாக இருந்தபடியால் பாரதி முதலில் அச்சம் தவிர் என்றார். மகாகவி பாரதிதான் தமிழுக்குரிய இரண்டு முக்கியமான சொற்களை அறிமுகம் செய்தான். விடுதலைää சுதந்திரம். இந்த சொர்க்கத்தை அடையத் தடையாக இருப்பது அச்சம். அவருக்குப் பிறகு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அச்சத்தைப் போக்குவதற்கு செயல்பாட்டார்கள் போராடுகிறோம். பல்லாயிரம் போராட்டக் குழுக்களாகப் போராடுவதன் பொருளே அச்சத்தை விலக்குவதற்காகத்தான். செங்கவின் கவிதையில் உணர்த்தும் அச்சம் அதுதான்
நானவர்களுக்குக் கையளித்தேன்
பதறி விலகிவிட்டார்கள்---
இந்த வரிகளில் உணர்த்தப்படுகிற அச்சநிலை அதுவே. இந்த நவயுகத்திலும் அச்சத்தின் பிடியிலிருந்து அவர்களை மீட்கும் போராட்டத்தில் நாம் இணைந்து உழைக்கிறோம். அந்தக் கொடிய ஆவிகளிடமிருந்தும் அரக்கர்களிடமிருந்தும் பிசாசுகளிடமிருந்தும் மீட்கப் போராடுகிறோம்.
குஞ்சுப் பறவைகளுக்கு தாய்ப்பறவை உணவு கொடுக்கும் போது அதன் பெரிய அலகுகளால் பசியில் வேகத்தில் உணவு கிடைத்த மகிழ்வில் கர் கர்கர் எனக் கூவியபடியே அலகுகளை வானம் பார்த்தபடி திறக்கும் அத்துனை குஞ்சுகளுக்கும் சரிசமமாக உணவைப் பங்கிடுகிற பொதுமைப் பண்பையும் பொதுவுடமைக் கலையின் தத்துவத்தையும் இந்தக்கவிதையில் செயல்படுத்தியிருக்கிறார்;. ‘உண்டி கொடுத்தோர்” எனும் மணிமேகலை காப்பியம் நினைவுக்கு வருகிறது.
கலை இலக்கியச் செயல்பாடுகளே புரட்சிகரமான செயல்பாடுகள்தான். கலையின் வலிமையை உணர்ந்து விடுகிற கலைஞர்கள் புகழின் உச்சிக்குச் சென்றுவிடுவார். ஏளிய சாமானிய மக்கள் புகழ் கொண்ட மனிதர்களை விரும்புகிற வழக்கு சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்றவர்கள்தான் மனிதர்கள் மற்றவர்கள் மனிதர்கள் அல்ல எனும் புரிதல் நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணமாவை ஊடகவியல் துறையாகும். பெரும் செல்வந்தர்களுக்கு தாங்கள் இன்னாரென்று அறியப்படவேண்டும் என்பதில் அக்கறை. அதன் காரணமாக ஊடக வெளிச்சம் தங்களின் மீது விழுந்து கொண்டேயிருக்கவேண்டும் எனும் வெறியைக் கொண்டிருக்கிறார்கள். பெருமுதலாளித்துவ அமைப்பில் ஊடகங்களின் வழியாக எளிய மக்களின் மகத்தான உழைப்பைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும் என்பது அவர்களின் கருத்தாகும். இந்த இடத்தில்தான் புரட்சிகரமான மாற்றங்கள் நோக்கி நகர்கிற கலைஞர்கள் தங்களின் ஊடகச் செயல்பாட்டை அதிகமாக்கிக் கொண்டு அதே எதிர் திசையில் எளிய மக்களைத் திரட்டும் பணியினை மேற் கொள்கிறார்கள். மக்களைத் திரட்டுவது என்பதே கலையைக் கைக்கொள்வது என்பதாகும். உலகின் மகத்தான மாற்றங்களுக்கான கலையின் செயல்பாடுகள் தான ; முதன்மையானது. அந்த வகையில் கவிதை கலையின் உயித்துவமான அங்கம். இன்று கவிதையியக்கம் பல்கிப் பலவாறாகி புத்தம் புதிய ஊற்றுக்கண் களின் வெளிச்சம் மின்ன மின்ன வந்து கொண்டிருக்கிறது.
ஊடக வெளியின் பரந்து பட்ட சுதந்திரத்தின் காத்திரம் கவிதையை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. செங்கவினின் ‘களையெடுப்பின் இசைக்குறிப்பு” கவிதைத் தொகுப்பின் வரவு என்பது அவசியமானதாகும். நவீன கவிதையில் பால் பேதமில்லை. நவீன காலத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு அதிகமாகப் பயண்படுத்தப் படுகிறவர்கள் பெண்கள். புராண காலத்தில் கூட சரிபாதி பெண்மைக்குத் தந்த மரபு நம்முடையது. தற்காலத்தில் இன்றும் மூன்றில் ஒரு பங்குக்காக பெண்மை போராடிக் கொண்டிருக்கிறது. செங்கவின் கவிதைகளில் உள்ள சமூக வெளிப்பாடும் தர்க்கமனோபாவமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு களச் செயல்பாட்டாளருக்கு தர்க்க மனோபாவம் அவசியம். மிகச் சிறுபான்மையினர் அவர்கள்தான். தமிழிலக்கியத்தில் இலக்கியம் படிப்பவர்கள் குறைவு அதிலும் நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பி வருபவர்கள் அதினும் குறைவு. இவர்கள்தான் அத்துனை விதமான கலாச்சாரத் தாக்குதல்களையும் எதிர்க் கொள்கிறார்கள்.
மக்கள் கலைஇலக்கியங்களின் பங்களிப்பு என்பது சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேகம் தருவதாகும். மக்களின் பிரச்சனைகளை பாடல்களின் வழியாக மக்களின் சிந்தனைக்குள் கொண்டு செல்வது என்பதும் புரட்சிகரமான நடவடிக்கைகள்தான். பாடல்களில் இருக்கிற மக்களின் வலி சுமந்த வரிகளை அவர்கள் ஏற்றுக் கொண்டு அந்தப் பாடகனக் கொண்டாடுகிறார்கள். அந்தப்பாடல்களில் மூலம் பெற்ற சிந்தனைகளை தங்கள் போராட்டத்திற்கு உரமாக்கிக் கொள்கிறார்கள். பாடல்களில் இசைத்தன்மை இருப்பதால் மக்களால் மனதில் பதிந்து பாடலைப் பாடிக் கொள்ள ஏதுவாகிறது. ஆனால் கவிதைகளில் இசைத்தன்மை குறைந்து உணர்ச்சி மேலோங்குவதால் வாசிப்புக்கும் கருத்தியலுக்கும் உடன்படுகிறது. கவிதையில் உள்ள கலைத்தன்மையே வாசகனை எளிதில் கவிதைக்கு வசப்பட வைத்துவிடுகிறது. கவிதை ரசனை அனுபவம் உள்ள வாசகன் உடனடியாக கவிஞனாகிவிடுகிறான். கலையின் விதி வலியது.
தித்திக்கிறது சர்க்கரைக் கிண்ணம்- தலைப்புக் கவிதையில் செங்கவினின் சர்வதேச அரசியல் களம் பற்றிய புரிதல் தெரிகிறது. ஃபிடல் காஸ்ட்ரோவுடன் அவர் தேநீர் அருந்த விரும்பி அழைக்கிற உணர்ச்சிகரமான கவிதை. பொதுவாக மனத்தான மனிதர்களின் உடல்களைத்தான் இழந்து விடுகிறொமே தவிர அவர்கள் நம்முடன் தான் இருப்பார்கள்.சிந்தனைகளில் செயலாக்கங்களில் கூடவே இருக்கிறவர்கள் அவர்கள்.ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவிற்கு மட்டுமா சொந்தமானவர். புரட்சிகர செயல்பாடுகள் எங்கனில்லாம் நடைமுறைப்பாட்டுக்கு உள்ளதோ அங்கெல்லாம் இருப்பவர். தோழர்களுக்கு உண்வூட்டுகிறவராக என்றும் இருப்பவர். அவருடன் தேநீர் அருந்துகிற பொழுதுகள் நிச்சயம் வாய்க்கத்தானே செய்யும். அப்படியான சம்பவத்தை நினைவு கூர்கிற கவிதை..அந்த வரிகளில் சில..
வஞ்சகத்தின் வாசலிலும்
அறத்திற்காய் வெஞ்சினம் கொள்வது
பற்றிக் கூறுங்கள்…..
…………….
நேர்மையற்ற எதிரிகளை
நேர்மையான நம் லட்சியங்களால்
வெல்லும் கலையைச் சொல்லுங்கள் ஃபிடல்-----பக்.44
செங்கவின் கவிதைகளில் மேற்சொன்ன இரண்டு நிலைக் கவிதைகளும் பாடல்களும் இசைத்தன்மை கொண்ட பாக்களும் உள்ளது. மக்கள் கள அரசியல் போராட்டக் களத்தில் மிகத் தீவிரமாக இயங்குகிற படைப்பாளியின் படைப்பு எப்படிப்பட்ட காத்திரம் கொண்டிருக்கும் என்பதை செங்கவின் கவிதைகளில் அறியலாம். சமகாலத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளிலிருந்தும் சமூக வாழ்வியலிலிருந்தும் எப்படி வேறுபடுகிறது இவரது கவிதைகள் என்பதை உரையாடலாம்.
கவிதையின் அரசியலுக்குள் நாம் நுழைந்தால் நமக்கு மிஞ்சுவது சுயத்தைக் கொலை செய்து தற்கொலை செய்து கொள்வதுதான். புனிதப் படுத்தப் படுகிற எந்தவொரு கலையும் இறுதியில் அது மதபீடங்களுக்குத் தான் போய்ச் சேரும். கலையைப் புனிதப்படுத்தி எந்த ஒரு சாமானியனும் நெருங்க முடியாத மாயவலையை வீசிக்n காண்டே இருக்கிற கவிதையின் அரசியலைத் தாண்டி மக்கள் கலை இலக்கியப் போராளிகள் படைப்புத் தளத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதற்கு செங்கவினின் முதல் நூல் களையெடுப்பின் இசைக்குறிப்பு ஆகும்.
கோவை பொள்ளாச்சி சாலையின் விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டி வீழ்த்திக் குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற கொடுரக் காட்சியைக் காண நேர்கிறது. நாற்பது கிலோமீட்டர் இருபுறமும் உள்ள பல நூறாண்டு வயதுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகிறது. நாம் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்கள் அச்சத்தின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் அமைதிகாத்தார்கள். சாலைகளை விரிவாக்கம் செய்து நவீனப்படுத்துகிற புத்தி நம் மக்களின் அறிவை விசாலப்படுத்தி வாழ்வை நவீனப்படுத்துவதற்கு புத்தி வேலை செய்வதில்லை என்னும் கருத்தியலை செங்கவின் கவிதைகள் முன்வைக்கிறது.
அடிப்படைக் கட்டமைப்பு. சாலை மேம்பாடு நகர வளர்ச்சி என்பதைக் காரணம் காட்டி வனங்களை மரங்களை அழிக்கிற வேலையை அரசுகளே செய்கிறது. மக்களை இப்படித்தான் இதைச் சொல்லித்தான் காலங்காலமாக ஏமாற்றி வருகிறார்கள். இதோ சொர்க்கம் பாருங்கள் அனைத்தும் கிட்டிவிட்டது. 2020 ல் உலகின் வல்லரசாவோம். என்ற பைத்தியகாரத்தனமான வெற்று கோஷத்தை பரப்பியவர்கள் யார். அவர்கள் எங்கே. கோவையின் பல மைல்கள் விரிவாக்கத்திற்கு பல்;லாயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. மூன்றாவது உலகப் போர் நடந்து முடிந்த களம் போல அந்த நிலங்கள் கிடந்தது. பறவைகளின் ஓலம். சிறுவர் சிறுமிகளின் குழந்தைகளின் ஏக்கமிக்க பரிதாபமான பார்வை. பள்ளிக்காலங்களில் வெயிலுக்குத் தங்கிய மரங்கள். பெருநகரத்திற்கு சாபத்தீட்டாக இந்த மரங்கள் வாய்த்து விட்டதை செங்கவின் ஒரு கவிதையில் காட்டுகிறார். இது நரபலி சமூகத்தின் வெளிப்பாடு. நாம் எதாவது ஒன்றை நரபலி கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது விதிபோலும்.
வளர்ச்சியின் பெயரால்
நிறைமாத பிள்ளைத்தாய்ச்சியை
காவு கொடுப்பார்கள்
எனும் பழங்கதையை
நான் நம்பவேயில்லை.
சூல் கொண்ட பெருமரத்தை
அவர்கள் வெட்டிச்சாய்க்கும்
வரையிலும்….
தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் பறவைகளும் மரங்களும் திரும்பத்திரும்ப வருகிறது. விடுதலையின் குறியீடு பறவை. மரம் வாழ்வின் குறியீடு. விடுதலை பெற்று வாழ்தல் என்பதாகவே செங்கவின் கவிதைகள் உணர்த்துகிறது. மேலும் களையெடுப்பின் இசைக்குறிப்பு நூலின் சிறப்பியல்புகளாக நான் கருதியது அறம் பற்றியும் கலை பற்றியும் சில கவிதைகள் அமைந்திருப்பது ஆச்சர்யம் கொடுத்தவையாகும். ஏனெனில் புரட்சிகரமான செயல்பாட்டாளர்கள் இவ்விரு கருத்துகளையும் புறந்தள்ளி வந்த காலம் கடந்தகாலம். பற்பல விதமான புரட்சிகர குழுக்கள் உடைந்து உடைந்து சிதறிச் சிதறிப் போய் போராட்ட குணங்கள் மறத்துப் போனது இதனாலே ஆகும். செங்கவின் மிகக் கச்சிதமாகத் தன் கவிதைகளின் வழியாக இன்ன பிற சகோதரப் போரட்டத் தோழர்களுக்கு தோழமை மிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த ஒற்றுமை காலத்தின் அவசியம் என்பதை செங்கவின் உள்ளிட்ட தோழர்களுக்கு ஆழந்த பொருள் அறிவர்.
கலையும் கவிதையும் நிச்சயம் மனித குலத்தை மேம்படுத்தும்.
மனித குலத்தை மேம்படுத்த கலைகளிலும் கவிதைகளிலும் ஆழந்திடுவோமாக.. தொடந்து இயங்குவோம் ..முன்னேறுவோம்..
வாழ்த்துக்களுடன்
‘களையெடுப்பின் இசைக்குறிப்பு’
ஆசிரியர்- செங்கவின்-99421 46605-
வெளியீடு-பொதுமைப் பதிப்பகம்
எண்-5 நான்காம் தளம்
சுங்குராமன் தெரு
பாரிமுனை- சென்னை 600001
விலை ரூ 60-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக