ஞாயிறு, 23 டிசம்பர், 2012

விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கு விழா பதிவுகள் முதல்பாகம்


தங்கமயில் தேவ தேவனின் மயில் வாகனம்

 

-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்-விருது வழங்கும் விழா

பதிவுகள்-22-12-2012. கோவை மாலை-6.00 மணி

-------இளஞ்சேரல்

 

         மார்கழி அல்லாத மாதங்களி்ல் மசூதிகளில் இருந்து ஒலிக்கும் து ஆ தொழுகை ராகம் துல்லியமாக ஐந்து மணிக்கு துல்லியமாக காலையைத் துலக்கித்தருவார்கள். கும்பகோணத்திற்குப் பிறகு அதிக கோவில் கொண்ட இருகூரில் அதிகாலையில் பக்தி பாடல்களுக்குக் குறைவில்லை. மசூதி ராகத்தினால் உறக்கம் கலைந்தவர்கள் பதிலுக்கு இந்த மார்கழியில் 4.30 மணிக்கு விநாயகனேஎன்று சீர்காழியின் தொடர்ச்சியாக ஆறு பாடல்களும் மற்ற கோவில்களில் கீர்த்தனைகளைத் துவக்கி வைக்கிறது. பிற்பாடு தங்கமயில் முருகனின் மயில்வாகனம் பாட்டைக் கேட்டுவிட்டுதான் சிந்தனை கலையும். எல்லாப் பாடல்களும் கடவுளை எங்கிருக்கிறாய் நான் கேட்பது உன் காதில் விழுகிறதா..இல்லையா,.என்பதாக இருக்கும்.இந்தப்பாடல் மட்டும் குழந்தையை அழைத்துக் கொண்டு ஓவியக்காரன் தெருக்குள் நுழைவது போன்ற அழகியல் இருக்கும்.

           முகநூலில் இந்த விழா பற்றி தேவதேவனும் மார்கழியும் முன்கூட்டி எழுதப்பட்ட கட்டுரை குறித்து விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டும் தெரிவித்தமைக்கு நன்றி. விழாவின் முக்கிய விருந்தினர் இசைஞானி இளையராஜா வந்த பிறகு அவரைப்பார்த்ததும் என் நெருங்கிய நண்பர்கள் அரங்கை விட்டுக் கிளம்பினார்கள். இருங்கள் ஒன்றாகப் போகலாம் என்றேன் அவர்களோ நீ்ங்க வந்திருக்கீங்க எப்படியும் விரிவா எழுதியிருவீங்க..நிறைய எழுத்து வேலையிருக்கு நான் எழுத வாய்ப்பில்ல..என்றேன் மறுபடியும் நீங்க அப்படித்தான் சொல்வீங்க. 20 பக்கம் எழுதுவீங்க..வர்றோம்.ஐந்தாறு பேர் கிளம்பினார்கள். கடைசி அஸ்திரமாக இருங்க உஜாலா பார்த்திட்டுப் போலாம் என்று கூட சொல்லிப்பார்த்தேன். அசைய வில்லை ஏற்கனவே ரெண்டு சொட்டு கலந்திருந்தார்கள். அவர்களின் நம்பிக்கையை வீணாக்காமல் எழுத முனைந்தேன்.

             முதலில் மாநகராட்சிக் கலையரங்கம் என்றதும் வெறுக்கென்றது.என்ன இசைஞானிக்கு வந்த சோதனை. ஆர்.எஸ்.புரம் ஆடியன்ஸ் கொஞ்சம் வித்யாசமானவர்கள். போதாதற்கு அரங்கம் கொஞ்சம் பழமை வாடை யடிக்கும் உயர்ரக ரசனையாளர்கள் மாநகராட்சிக் கலையரங்கமா என்று சேரி பாவ மனோபாவத்துடன் அணுகுவார்கள். சுத்தக்குறைச்சல் வேறு என்கிற சிந்தனை. ஆனாலும் கலையரங்கம் போய்ப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அற்புதமான பராமரிப்பில் அழகாக நேர்த்தியாக இருந்தது. அந்தப்பணியாளர்கள் நிர்வகிக்கும் அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன். இந்தத் தூய்மைப் பணியைத் துவக்கிய அசத்திய ஆணையர் மற்றும் முன்னாள் மேயர் தா.மலரவன் மற்றும் நிரஞ்சன் மார்டி. அன்சுல் மிஸ்ரா ஆகியோரின் தொடக்கம் தான் கோவையின் மையத்தின் அழகுக்குக் காரணம். குறிப்பாக இருக்கைகளின் அமைப்பினைப் பாராட்டிட வேண்டும்.ஒருவருக்கொருவர் உரசியே ஆக வேண்டும்.அப்படியான நெருக்கம். மனதோடும் உடலோடும் ஸ்பரிசமின்மையே மனித மனங்களின் அழுத்தங்களுக்கான காரணம் என்று பேசிய ஜெயமோகனுக்கு மாநகராட்சி கலையரங்க இருக்கைகளே பதில் சொன்னது அதிசயம் தான்.(யாராவது அம்மா காதில் போட்டு விடாதீர்கள்..அப்படியே இருக்கட்டும் அந்த இருக்கைகள்). ஒரு புறம் சிவாஜி கணேசன் திறந்து வைத்ததாகக் கூறப்படும் கல்வெட்டு இன்னொரு புறம் தத்ருபமான புலி. நல்ல ஒற்றுமை.ஒருவேளை சிவாஜியும் வேட்டைகாரன் புதூர் ஜமீன்தாரும் வேட்டியாடிய புலியோ என்னவோ. அவ்வளவு உறுமல் தோற்றம். இளவேனிலிடம் சொன்னேன். பார்த்தாயா நாட்டில் புலிகளின் இருப்பு அளவுதான் நவீன இலக்கிய வாதிகளின் அளவும். நாடு புலிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பாடுபடுவது போலத்தான் நாமும் நவீன இலக்கிய வாதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குப் போராடுகிறோம்.என்றேன். ஒரு புறம் புலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறேன் என்று சொல்லி்க்கொண்டு ஒரு புறம் புலிகளைத் தீர்த்துக்கட்டியதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும். பிற்பாடு நான் இந்த முரணைத் தான் நவீன இலக்கியம் பேசுகிறது பிறகு ஏன் புரியவில்லை என்கிறார்கள் என்றேன்.

அட போய்யா நவீன இலக்கியவாதிகள் பலருக்கே புரிவில்லை. நவீன இலக்கியத்தில் ஓரளவு சாதித்தவர்களுக்கே கூட ஐயா நீங்கள் வலியுறுத்துவது எழுதுவதுதான் நவீன இலக்கியம் என்றால். அப்படிங்களா..என்று

       சொல்லிவிட்டு மேடையிலிருந்த இளையராஜாவை யாருங்க அது என்றார் ஒருவர். அதாவது அந்த ஆள். பக்கத்திலிருந்தவர் நானோ அவர்தான் இளையராஜா என்றேன். ஆமா உங்ளை நம்ப முடியாது. குற்றப்பத்திரிக்கைப் படம் என்னாச்சு ராஜீவ் இருக்காருங்கறீங்க.. பிரபாகரன் இருக்காருங்கீறீங்க எம்ஜி ஆர் இருக்காருங்கறீங்க.. எதை நம்பச் சொல்றீங்க.. அப்படித்தான் நாம் நம்பரதா இல்லை. நானும் இப்படிச் சொல்வீங்கணுதான் ரெண்டு இளையராஜா பாருங்க.. என்றேன். அவரோ பார்த்தீங்களா அது தேவதேவன் இல்லைன்னு ஒத்துக்கறீங்க என்றார். பொன் இளவேனிலைப் பார்த்தேன் அவரோ காதோடு காதாக இங்க வெச்சு ஒதைக்கலாமா வெளியில வெச்சு ஒதைக்கலாமா என்றார். நான் பேசாமல் விழா எப்போது முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். வேறு இருக்கை பார்க்கலாமா என்றால் அரங்கம் வேறு நிரம்பி விட்டது. அந்த ஆளின் வினோதமான பேச்சை மடக்க நாங்கள் இருவரும் ஐடி கார்டைக் காட்டினோம். அவர் சீமான் பாருங்க கண்ணாடி போட்டிருக்காரு..என்றார்.

       

        அவருக்குப் பதில் சொல்வதற்கு கடலூர் சீனுதான் சரியானவர் என்று அவரை அவர் இருக்கும் இடம் காட்டி அவரிடம் கேளுங்கள் என்றேன்.

        இறைவணக்கமும் தமிழ்த்தாய் வாழ்த்துமாக இரண்டு பாடகிகள் மாசறு பொன்னே வருகஎன மது சந்தக வசீகர ஆலாபனையிலேயே மயக்கி அரங்கத்தை நூறடி உயரம் தூக்கி அப்படியே ஊஞ்சலை மெள்ள ஆட்டுவது போலாக்கினார்கள். நாங்கள் சீட்டோடு தூக்கி நின்று பெல்ட் போட்டிருக்கலாமோ என்றான உணர்வு.

            அப்பொழுது உயர்ந்த அரங்கம் இளையராஜாவின் டியுனுக்கு ஒத்துழைப்பது போல அசைந்து கொண்டிருந்நது.

பிறகு அரங்கத்தை மோகனரங்கன் கட்டுரை வாசித்துதான் கீழிரக்கி வைத்தார். அவர் இல்லையெனில் திண்டாட்டம் தான்.                     

      வரவேற்புரை வாசித்த அரங்கசாமி இரண்டு முக்கியமான ஆளுமைகள் வலைப்பூவில் 18 ஆயிரம் கட்டுரைகளை எழுதியவரையும் அது போலவே கிட்டதட்ட 1000 நூல்கள் எழுதிய துளசி நாராயணசாமி சில நாட்கள் முன்பு மறைந்த அன்று ஒரிரு வரிகள் கூட அஞ்சலி தெரிவித்து யாரும் எழுதவில்லை எனும் ஆதங்கத்தைத் தெரிவித்தார். அனைவரையும் வரவேற்றார். ரசிகர் மன்றம் என்று கேலி பேசியவர்கள் கூட இந்த விழாவையும் விருது வழங்கும் நிகழ்வையும் வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

                 விருதுகள் வெல்லும் காலத்தில் இருக்கும் தலைமையேற்ற நாஞ்சில் நாடன் தன்னுடைய உரையாற்றியவர்

                தேவதேவனுக்கும் தனக்குமான இலக்கிய உறவைப் போற்றியவர் இந்த விருது தேர்ந்தெடுக்கப்படும் வரை இவருக்கு விருது என்பது தெரியாது. எனினும் நான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுடன் நெருங்கிப் பழகுகிறவன் இருந்தாலும் விருது  அவருக்கு வழங்கப்பட்டதில் மகிழச்சியே. என் காலத்தின் மகத்தான கவிஞர்களில் தேவவேனும் ஒருவர். தருமுசிவராமு, ம.இலெ.தங்கப்பா, சி.மணி,பசுவய்யா, போன்ற ஆளுமைகளைச சொல்லலாம் சிலர் விடுபட்டிருக்கலாம்.

       சமீபத்தில் கவிதை அமர்வு ஊட்டி நாராயண குருகுலத்தில் நடந்த போது நானும் தேவதேவனும் கலந்து கொண்டு நிறையப் பேசினோம்.அவர் ஒரு பக்கம் போனால் நான் ஒரு பக்கம் போனேன்.அவருடைய சிந்தனை ஒரு மாதிரியாக இல்லாமல் இப்பொழுதும் புதிதாக எழுதுபவர் மாதிரி யோசிப்பவர் எழுதுபவராக இருக்கிறார். ஊட்டியில் ஐந்தாறு காட்டெருமைகள் சூழ்ந்து விட்டது. அவர் பயப்படவில்லை.பிறகு அவை தனித்து வேறு பாதையில் போய்விட்டது. இவர்கள் பாவம் கவிஞர்கள் இவர்களைத்தாக்கி என்ன பயன் என்று வி்ட்டு விட்டதோ என்னவோ. இசைஞானி யைப்பற்றிச் சொல்ல வேண்டும். அவர் படத்தில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் முறையாக அவருடைய பிரசாத் ஸ்டுடியோவிற்கு நுழைகிறேன். அவ்விடம் கோவிலுக்குள் நுழைவது போன்ற உணர்வு நான் உடனே அவரிடம் கோவில் மாதிரியே இருக்குஎன்றேன்..அவரோ மாதிரின்னா பிறகு நான் கோவில்தான் என்றார். நான் எழுதிய பாடல் வரிகளைப் பார்த்துத் தேர்வு செய்தவரிகள் நான்கைந்து சொற்கள்தான் பாடலானது. நீங்கள் மெட்டுக்கு எழுதியதுபோல எழுதியிருக்கிறிர்கள் என்றார்.

            மகிழ்ச்சியாக இருந்தது. என் பாடலுக்கு அவர் ஆர்மோனியம் வாசித்தது பெறும் பேறு என்று தான் சொல்லவேண்டும். தேவதேவன் கவிதைகள் வாசிக்கும் போது நகுலன் நினைவும் வரும் அவருடைய கவிதையின் தலைப்பை நாவலுக்கு வைக்க விரும்பி அவரிடம் சம்மதம் கேட்டு எழுதிய கடிதத்திற்கு அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.. தேவதேவன் ஒரு கவிதையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குத் துணையாக மரத்தையும் மரத்தின் நிழலை பாதுகாப்பாக ஒப்படைப்பது மாதிரி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார்

         அற்புதமான கவிதை அது. தற்போது என்மகள் பிரசவத்திற்காக வீடு வந்திருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணை அவள் தாய் எப்படி யெல்லாம் பாதுகாக்கிறாள் என்பதை இப்போது கூடவே இருந்து பார்க்கும் போதுதான் சிரமம் புரிகிறது தேவதேவனின் கவிதை பல்லாண்டுகளுக்கு முன்பு அந்த உணர்வுகளை அவர் எழுதியவையின் ஆத்மாவை உணர்கிறேன். தமிழ் எழுத்தாளர்களின் அதிமான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர்தான் ஜெயமோகன்.அவரளவிற்கு எதிர்ப்பு இருப்பவர்கள் யாருமில்லை என்றார்.

           எனக்கு என்னவோ எதிர்ப்பு நவீன இலக்கியப் படைப்பாளர்கள் அவரைவிடவும் பயங்கரவாத எதிர்ப்பு மனோபாவத்துடன்தான் கையாளப்படுகிறார்கள் என்பதை அவருக்கு சிரம் தாழ்ந்து கூறிக்கொள்ள விழைகிறேன்.

        சுகா ஒரு அற்புதமான எழுத்தாளர்.அவருடைய தாயார் சன்னதி நூல் வெளிவந்து கொஞ்ச காலத்திலேயே மூன்று பதிப்புகள் கண்டவர். அவருடைய ஆனந்த விகடன் தொடர் மிகவும் பிரசித்த பெற்றது. இசைக்குடும் பத்திலிருந்து சினிமாவிற்குள் வந்த அவர் பல இலக்கிய வாதிகளின் படைப்பு களையும் படைப்பாளர் களையும் சினிமாவுடன் இணைத்துக் கொள்பவர். கல்பற்றா நாராயணன் நெருங்கிய நண்பர். என்று மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு உரையாற்றியவர் கடைசியாக விருது தொகை அடுத்த ஆண்டு ஒரு லட்ச ருபாயாக அளிக்கப் படவேண்டும் என கோரிக்கையை வைத்து விடைபெற்றார்.

         அடுத்து உரையாற்றிய ராஜகோபாலன் முதலில் கொஞ்சம் தடுமாற்றம் அச்சம் காரணமாக குரல் தழுதழுத்தது.பிறகு கவிதைகளுக்குள் நுழைந்ததும் இயல்பாகப் பேச ஆரம்பித்தவர் தேவதேவன் கவிதைகள் பற்றிய விரிவாக ஆழமாக விவரித்துப் பேசினார்.அவருடை கவிதைகளுக்கு இருக்கும் விமரிசன போக்குகளுக்குப் பதி்ல் அளிக்கும் விதமாகவும் தேவதேவனின் கவியாழத்திற்கு அணுசரணையாக வும் பேசினார். சமூக அவலங்களைப் பாடுவதில்லை. வெறும் அழகியல் கூறுகளை மட்டுமே எழுதுவதும் இயற்கையான சொல்லாடல்கள் மட்டுமே கவிதையாகாது என்பதற்கான விமர்சனங்களுக்குப்பதில் அளித்தார்.

             உரையின் ஆக்கத்தில் ராஜகோபாலனின் உள்ளார்ந்த விமர்சனமாக இது உள்ளதா அல்லது ஜெயமோகன் அறிவுறுத்தலில் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

         அவருடைய உரையின் பெரும்பகுதியை ஏற்கெனவே அறிந்த ஒன்றாகவும் எழுதப்பட்டு திரும்பத்திரும்ப வாசிக்கப்பட்டதாகவும் இருந்ததையே ஒப்பிப்பதாக இருந்ததை நிலையை அவர் அரங்கின் அமைதியை உணர்ந்ததும் கொஞ்சம் மாற்றுவதை நான் உணர்ந்தேன். தன்னுடைய தாழ்வு மனப்பாண்மை கொண்ட நண்பன் மன அழுத்தம் காரணமாக தன்னைச் சந்திக்க வந்ததாகவும் பிற்பாடு தன் பிரச்சனைகளைச் சொல்லி அழுததாகவும் அப்பொழுது சூரியன் அஸ்தமனமாகி பிறகு மறையும் வரைப் பார்த்த அவர் அதற்கு முன்பு எதுவும் நிகழாத வண்ணம் எழுந்து இயல்பாக தன்னுடன் வந்ததும் ஆச்சர்யமாக இருந்தது. அதற்கும் அவர் எந்த இலக்கியப் பிரதியும் வாசிக்காதவர்.அவரை இயற்கை மாற்றியிருக்கிறது. பிற்பாடு அவர் நல்ல தொழிலதிபராக நல்ல குடும்பஸ்தராக மாறி இப்பொழுதும் சிறப்பாக வாழ்கிறார். இதை நான் சொல்வதற்குக் காரணம் எந்தத் தத்துவமும் இசங்களும் போராட்டங்களால் மாறுவதை விடவும் மனித மனம் இயற்கையின் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு விடுதலை யுணர்வை அடைகிறான்.

                 தேவதேவன் முன்வைக்கும் கவிதைக் கோட்பாடுகளும் அதைத்தான் போதிக்கின்றன. மனிதனின் ஆரம்ப கால முயற்சிகளில் முதலில் மொழி பிறந்த பிறகுதான் இலக்கியம் பிறந்தது.அந்த கவிதை மொழியை நன்கு பயண்படுத்தியவர் தேவதேவன். பிறகுதான் எல்லா கட்டமைப்புகளும் தோன்றியன.மொழியின் அழகியல் செயல்பாடாக கவிதையாக முதல் முதலில் மலர்ந்தது. அவரும் முற்போக்குக் கவிதைகள் ஆரம்பத்தில் எழுதியிக்கிறார். ஆனால் அவர் அறியப்படுவது அந்தக் கவிதைகளால் அல்ல.நாம் அறியும் தேவதேவன் அழகியல் கூறுகளுடன் இயற்கையின் தரிசனங் களுடன் எழுதிய தேவதேவன் இன்றும் நிற்கிறார். அவர் தொடர்ந்து ஓசையும் சந்த நயமுமிக்க முற்போக்கு மட்டும் உணர்ச்சிமயமான கவிதைகளை அவர் எழுதியிருந்தால் காலத்தால் கரைந்திருப்பார். சூழலியல் அழகியல் கூறுகளுடன் ஒருவர் தொடர்ந்து எழுதுவதே ஒரு மகத்தான கவிஅனுப வங்கள்தான் என்றார். அவருடைய கவிதைகள் சிலவற்றை வாசித்துக் காட்டியவைகள் ஏற்கெனவே அறிந்த கவிதைகளாகவே இருந்தது ஏமாற்றம்தான் அல்லது ரசனை மனோபாவத்திற்காக எடுத்தாண்டு இருந்தால் பரவாயில்லை.

         அவருடைய புகழ்பெற்ற கவிதைகளைத் தவிர்த்து மேலும் ஆழமான கவிதைகளை எடுத்துப் பேசியிருக்கலாம். ஆனாலும் ராஜகோபாலனின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் விவரித்த அழகான உவமைகள் இளையராஜாவிற்காக வந்த ரசிகர்களுக்கு விருந்தாகவே இருந்திருக்கும். பிரான்சிஸ்கிருபாவின் கன்னி நாவலில் தேவதேவன் ஒரு கதாபாத்திரமாகவே வருவார். அவரைப் பார்ப்பதற்கு வீட்டிற்குப போயிருந்த போது வாசலில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தவரிடம் தேவதேவனைப் பார்க்க வேண்டும் என்றபோது நான் தான் தேவதேவன் என்றது நினைவிருக்கிறது என்றார்.

               

         எனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டது.கொஞ்சம் வெளிக்காற்று சுவாசித்து விட்டு வரலாம் என்று இறங்கி வெளியே வந்தேன். அந்த இருக்கை ஆள் என்னை நோக்கி வந்தார்.நான் கடலூர் சீனியைத் தேடினேன்.அவரோ மேடையினருகே பத்திரமாக இருப்பதைப் பார்த்ததும் கலவரமானது. என்னை நோக்கி அவர் வருகிறார். என்னிடம் பாத்ரும் எங்கே என்க..நானோ இடம் காட்டினேன். சீமான் வந்திருக்காராட்டருக்கு. என்றார் நானோ மேடையைப் பார்க்க சுகாவைத்தான் சொல்கிறாரோ என நினைத்து அவர் இல்லங்க. அவரு பெரிய டைரக்டரு..என்றேன். பிற்பாடு இளையராஜாவின் கட்வுட் பார்த்து விட்டு அங்கு 85 களின் கால ராஜாவின் படம் பார்த்து ஏன் சீமான் போட்டோவை புலி போடாம அடிச்சிருங்கீங்க. என்றார்.நான் பேசாமல் இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். பிறகு பொன் இளவேனில் காற்று வாங்கப் போனார்.

கல்பற்றா நாராயணன் பேச வந்தார். அழகான மலையாளம், ஒரு சாஸ்திரிய சங்கீதக்குரல். ராஜாவின் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு என்று தன் பேச்சைத்துவங்கி தேவதேவன் கவிதைகள் மற்றும் கேளர நவீன கவிஞர்கள் கடம்னிட்ட ராமகிருஷ்ணன்.ராஜீவன். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்பட பல கவிஞர்களுடன் நமது தேவதேவன் கவிதைகளையும் இணைத்து உரையாற்றினார்.அவருடைய உரையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர் மொழிபெயர்த்தது ஒரு தத்ருமான வெளிப்பாடு எனலாம்.நிகழ்விலேயே செவ்வியல் தன்மையான நிகழ்வு அதுதான். கோவை மக்களுக்கு மலையாளத்தை மொழிபெயர்க்க முற்பட்டது அபத்தம் தான் .அப்படியே அவரைப் பேசச் சொல்லியிருந்தால் சங்கத்தமிழின் அழகை முழுமையாக உள்வாங்கியிருக்கலாம். வாய்ப்புக் கிடைக்கவில்லை. மொழிபெயர்த்தவரோ பாறையைப் பெயர்த்து எடுப்பது மாதிரியும் கல்குவாரியில் வெடிவைத்து தகர்ப்பதைப் போன்றும் இருந்தது. ஆயினும் அவர் சமாளித்த விதமும் கல்பற்றாவின் தெளிவு படுத்தியதும் சிறப்பாக இருந்தது.

          ஒரு எளிமையான மனிதர்களின் எந்த ஒத்திகையும் அற்ற நேர்மையான நிகழ்வாக இருந்தது. இதே ஆர் எஸ் புரம் கலையரங்கில் 80 களில் நாடகங்கள் கொடிகட்டிப்பறந்த காலங்களில் நாடகங்கள் பார்த்து பழகிய நிகழ்வுகள் இந்தச் சூழலில் வந்துபோனது. இதே அரங்கில் எத்தனை சமூக நவீன- ஓரங்க-காமெடி-சரித்திர நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த நாட்கள் நினைவில் ஓடியது. ஒரு கணத்தில் நிகழ்வு முழுக்கவும் அவர்கள் இருவரும் பேசியிருந்தாலே போதும் என்றிருந்தது. ஆனால் மொழிபெயர்த்த நண்பரை எல்லோரும் சூழ்ந்து சங்கடம் கொண்டதுதான் சினிமாத்தனம். அவரோ தமக்கு அவர் பேசியது கேட்க வி்ல்லை அவருடைய உதட்டு அசைவை வைத்துதான் பேசினேன் என்றதும் மார்வெலஸ் கிளாசிக் பிரண்ட் என்றேன் அவரிடம். எனினும் ஜெயன் கூட நெளிந்தது அதிர்ச்சியாக இருந்தது. அவர் ரசித்திருக்க வேண்டுமே. தேவதேவனின் கவிதைகளின் ஆத்மார்த் தமான இடமே இவர்களின் உரையாடல்கள் தானே..சரி..பிறகு நிகழ்வை ஒருங்கிணைக்கும் நண்பர் வந்து அவரை மலையாளத் திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கச் சொன்னால் மலையாளத்தி லிருந்து இன்னொரு மலையாளத்திற்கு மொழிபெயர்த்து விட்டார். என்று அரங்கத்தை மேலும் கலகலப்பாக்கினார்.

         பக்கத்து இருக்கையைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன் அதே ஆள். எனக்கும் இளவேனிலுக்கும் மத்தியில். அவர் சுவராசியமாக கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார். நான் அவர் பக்கமே திரும்ப வில்லை. இளவேனிலிடம் பக்கவாட்டாக சாய்ந்து என்னய்யா இப்படிப் பண்ணிட்டே..என்ன காரியம் பண்ணியிருக்க தெரியுமா..

நீ சும்மா இரு இந்தாள விட்டா ஒவ்வொருத்தரையும் டென்சன் பண்ணிட்டு இருப்பார்.நாமளே வெச்சுக்கலாம்.என்கிறார். மறுபடியும் என்னிடம் அவர் படம் எப்ப விடுவாங்க..இங்கிலிஸ் படம் தான் சரிங்க..ஒரு மணிநேரத்தில விட்ருவாங்க..ரெண்டரை மணிநேரமா ஓடிட்டு இருக்கு..சீமான் எப்ப பேசுவார் என்றார் கொஞ்ச நேரத்துல“ மேடையைப் பார்த்தேன்.

                க.மோகனரங்கன் பேச வந்தார். அவருடைய கட்டுரையிலேயே கொஞ்சம் பலமற்ற கட்டுரை இதுதான்.கட்டுரையின் துவக்கத்தில் முதல் இரண்டு உலகப் போர்கள் மற்றும் தத்துவங்களின் மீதான பிடிப்புகள் தோல்வி.நம்பியிருந்த கற்பனைகளும் சித்தாந்தங்களின் தோல்வி அவை கவிதைகளை பாதித்தது. பிறகு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மணிக்கொடி கால கவிதை வானம்பாடி நவீன காலம் மற்றும் தொழில் நுட்பப்புரட்சி காலச் சூழல்கள் பற்றிய தவறான அவதானிப்புகள் பற்றியே இருந்தது கட்டுரை.அவர் நவீன கவிதை இயக்கம் பற்றி எப்பொழுது தொடப்போகிறார்.என்று ஆவலாக இருந்து ஏமாந்தேன்.சிந்தாந்தங்களின் தோல்வி என்பது அதிர்ச்சியாக இருந்தது.சித்தாந்தங்கள் என்றும் தோற்காது. அது போலவே தத்துவங்களின் வீழ்ச்சி அதுவும் வீழாது.நடைமுறைப் படுத்துவதில் கையாள்பவர்களின் பலவீனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். பிறகு தேவதேவன் கவிதைகளில் இருக்கும் கவித்துவம் மற்றும் கவிதையியக்கம் பாடுபொருள் உணர்த்தும் கலை பற்றி சிறப்பாக எழுதியிருந்தார். அரங்கம் கொஞசம் உரக்க நிலைக்குப் போனது. மக்கள் அரங்கில் ஒரு சாதாரண அரங்கில் வாசிக்கப் பயண்படுத்தும் வடிவத்தையும் அவர் சற்று தளர்வாகவும் வாசித்தது முழு தயாரிப்பில் அவர் வரவில்லையோ என்று நினைக்க வைத்தது. தேவ தேவன் கவிதையும் வாழ்வும் அவர் நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள் இப்போதும் எப்போதும் இருந்ததில்லை.அவர் மக்கள் எப்போதும மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கான மருந்து உணவு இருப்பிடம் எல்லாம் கிடைத்து சுகமாகவும் அற்புதமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். என்கிற யோகி சிந்தனையில் எழுதுபவரை காலக்கிரமப்படி வரிசைப்படுத்தியது அதிர்ச்சியாக இருந்தது.கட்டுரையில் ஏற்கெனவே தேவதேவன் பற்றி பயண்படுத்தப்பட்ட சொற்றொடர்கள்,அவதானிப்புகளே இருந்தது. ராஜகோபாலன் வாசிப்பின் அடுத்த தொடர்ச்சியாகவே இருந்ததே ஒழிய அதில் மோகனரங்கன் பார்வை உணர்வு இல்லாமல் இருந்ததால் கவிதை ஆர்வலர்கள் வெளியே சிடி வாங்க யுரின் போக செல் பேச போனார்கள். அவருடைய வடிவம் ஒரு அரங்க ஆய்வு பரிமாற்றத்திற்கான தயாரிப்பு.மக்கள் அரங்கிற்கான மொழியில் தெரிவு செய்யப்படவில்லை. கோவை போன்ற திராவிடம், கம்யுனிசம், ஆன்மிக மரபு, வெறிபிடித்த வாசிப்பா ளர்கள் குழுமிய அரங்கில் 2000க்கு முன்பே வழக்கொழிந்து போன கவிதையியல் கட்டுரை வடிவத்தை கையாண்டது அதிர்ச்சியாக இருந்தது. நான் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்மையை சொல்வதின் மூலம் சங்கடத்தை நான் எதிர்கொள்ளலாம் ஆனாலும் அவர் இன்னும் நவீன கவிதையியலுக்கும் மொழியின் ஆழத்தின் பணியாற்றப் போகிற முக்கியமான ஆளுமை மோகன ரங்கன்.

        பிற்பாடு பலத்த கரகோசம் மற்றும் பிளாஷ் மின்ன ராகதேவன் அழைக்கப்பட்டார்.அவருடைய பேச்சைக் கேட்கக் கூடியிருந்த ரசிகர்கள் முன்வாயில்களை அடைத்து நின்று கொண்டு கூர்மையானார்கள். நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விசயத்தைப் பேசிய பிறகு தேவதேவன் கவிதைகளை சற்று முன்பு சிலவற்றை வாசித்தேன் உண்மையிலேயே அற்புதமான கவிதைகளாகவும் விருது அளிக்கும் விழாவில் கலந்து கொள்வதிலும் மகிழச்சியடைவதாகத் தெரிவித்தவர் ராஜகோபாலன் பேசியபோது உண்ணிப்பாகக் கவனித்த விதத்தை அரங்கம் அறிந்து அதிரத்தான் செய்தது.

          அதாவது மனிதனுக்கு முதலில் மொழி பிறகு சொல் பிறகு எழுத்து கவிதை அப்புறம் தான் மற்ற இலக்கிய வடிவங்கள் என்று சொன்னார். அதில் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி காரணம் முதலில் தோன்றியது இசைதான் என்றார் பலத்த கைதட்டல். அவர் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தது புரியவந்தது. ஆமாம் ஐயா முதலில் இசைதான் வந்தது.ஆ ஓ ஏ, ஓ என்று கத்தியிருப்பான் அல்லவா அதுவும் இசைதான்,உலக பிரபஞ்சத்தின் ஒலிகள் இசைதான்.நான் நீங்கள் பேசுவது இந்த ஓசை எல்லாமே இசைதான்.அதனால் தான் சொல்கிறேன்.இசைதான் முதலில் தேன்றிது.அப்புறம் இசைதான் தோன்றியது. பிறகு அப்புறமும் இசைதான் தோன்றியது என்று சொல்லவும் அரங்கம் மறுபடியும் அந்தரத்தி ற்குப் போனது. கோவிலுக்குப் போகிறீர்கள் வேண்டாம் நீ்ங்கள் வெறுமனே நீங்கள் ஜனம் நீ ஜனனி யைப் பாடுங்கள். நீங்கள் பாடவும் வேண்டாம் அதை நினையுங்கள் உங்களுக்கு ஒரு விடுதலை உணர்வு வருகிறது அல்லவா அதுதான் இசை. தேவ தேவன் கவிதைகளில் உள்ள ஆன்மீகம் அவருடைய எளிமையான தோற்றம் என்னைக் கவர்ந்ததால் நிகழ்விற்கு வரு வதற்கு விரும்பினேன்.என்னை சந்திக்கிறவர்கள் கேட்பார்கள்.. அந்தப்பாடலை, வேறொருவரின் பாடலைப் பற்றியும் நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல்களையும் கேட்பார்கள். உங்களுக்கு நான் கொடுத்துக் கொண்டேதானே இருக்கிறேன் மற்ற விசயங்களைப் பற்றிக் கேட்காதீர்கள். நீங்கள் யாரிடம் கேட்க நினைக்கிறீர்களோ அவரிடம் கேளுங்கள் என்றார்.மிகச்சுருக்கமாக கம்போசிங்க் முடிக்கும் நேரத்தில் அழகான உரையாக இருந்தது.

        

        சுகா பேசவந்த போது தாம் இப்போதுதான்  தேவதேவனைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனாலும் தனது நண்பர் ஜெயமோகன் அவருடைய கவிதைகளைப் பற்றி நாள் முழுக்கப் பேசியதை நினைவு கூர்ந்தார்.ஜெயமோகன் ஆரம்பத்தில் கவிதைகள் எழுதியதை நினைவு கூர்ந்து சில கவிதைகளை அவர் சொன்னார். தாம் ஜெயகாந்தனின் தீவிரமான ரசிகன். பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக கண்ணதாசன், கல்யாண்ஜி நகுலன் என்று துவங்கிய இலக்கியப் பயணம் பிறகு சினிமாவில் நின்றது.என்றார். தாம் எல்லாமே பாரதியிடம் தேடுவதாகவும் தன்னால் தீவிரமான நவீன இலக்கியத்திடம் வந்து சேரமுடியாமைக்கு இங்குள்ள ஈகோவும் குழு மனப்பான்மையும் காரணம் என்றார். யாரை எடுத்தாலும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்காமல் விமர்சனம் செய்து கொள்வதும் பிரச்சனை செய்து கொள்வதும் விமர்சனம் செய்வதும் நிகழ்ந்து வருவதை வெளிப்படையாகப் பேசியது அட்டகாசம். வெடிகுண்டாக ஒன்றைத் தூக்கிப்போட்டார்.அதாவது இலக்கியவாதிகள் சினிமாக் காரர்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையே அற்றவர்கள் என்றார். அரங்கில் ஞானி இருந்ததும் அவர் போலவே பல இலக்கிய வாதிகள் இருந்த போதும் அமைதியே காத்தது நெளிய வைத்தது. சுகாவின் பட்டவர்த்தனமான ஸ்டேட் மெண்ட் அபாரமானது. அப்படியாக பொது விமர்சனம் வந்தால் தான் கொஞ்சமாச்சும் யோசிப்பார்கள்.தான் மட்டுமல்லாது மற்ற இயக்குநர்களான பாலாஜி சக்திவேல் பாலா,சீனுராமசாமி, வசந்தபாலன் போன்றவர்கள் இலக்கிய வாதிகளின் படைப்புகளை மற்றும் அவர்களை சினிமாவில் இணைத்துக்கொள்கிறோம். தேவதேவன் பற்றிப் பேசும் போது எல்லோரும் சொன்னது போலவே இசைஞானிக்கும் அவருக்கும் ஒற்றுமை அதிகம். பாருங்கள் இப்போது கூட இந்த விழா யாருக்கோ நடப்பதுமாதிரிதான் உட்காந்து இருக்கிறார். அநேகமாக நான் போகும் போது தேவதேவனுடன் சென்றாலும் சென்று விட வாய்ப்புள்ளது. எங்கள் பக்கத்து ஊர்க்காரர் அவருக்கான விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன் என்றார்.

     சுகாவை சீமானாக வரித்துக் கொண்டிருந்த அந்த ஆள் கைதட்டிக் கொண்டே ரசித்தார். விக்கெட் எடுத்த வீரனைப் போல கைகளை உயர்த்தி காற்றில் கைதட்டி வெளிப்படுத்தினார். அமர்ந்ததும் அவர் என்னிடம் சார் நான் கௌம்பறேன்..டெம்போ பிடிச்சிட்டு வந்திருக்கொம்.. எழுந்து கொண்டார். நானும் அப்பாடா என்று சமாதானமானேன்.. அந்த இருக்கையைக் காலியாகவே வைத்துக் கொண்டோம் மீண்டும் அவர் வருவதற்கு சான்ஸ் இருக்கிறது. ஆட்டத்தின் போக்கே வேறுவிதமாக மாறி இலக்கிய வாதிகளின் விக்கெட்டுகளை சுகாவும் வீழ்த்தியதால் ஒரு கட்டத்தில் எட்டு விக்கெட் இழந்து தள்ளாடிக்கொண்டிருந்ததால் கேப்டனைக் களமிறக்க ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்தார். அரங்கம் கடைசி ஓவர்களை ஜெயமோகன் எப்படி ஆடப் போகிறார் அல்லது தோனியைப் போல தோற்றுவிட்டு பிட்ச் செரியில்லை என்று சொல்லப் போகிறாரா என்று ஆவலுடன் கவனித்தது. அரங்கம் சுகாவின் பவுன்சர்களை எதிர்பார்க்காத இலக்கியவாதிகளின்  விக்கெட்டுகள் சரிந்த நிலையி்ல் ஜெ தான் பதில் சொல்லியாக வேண்டும்.

           அந்த ஆள் மறுபடியும் வந்து அமர்ந்தார். கையில் சில புத்தகங்கள். சொல் புதிது வெளியிட்ட நூல்கள் சில வைத்திருந்தார். இன்னக்கி இருக்காங்களா நைட்டே கிளம்ப றாங்களா என்றார்... நான் யாரு என்றேன்..தேவதேவன் என்றார். நான் இளவேனிலைப் பார்த்தேன் அவர் மூச் விடாதே சைகை காட்டினார். திருவனந்தபுரத்திற்கு நைட் ட்ரெய்ன் இருக்கா என்றார். அந்த ஆள். நான் தெரியலை என்றேன். ஒ..ராஜா சார் கிளம்பரார் போலிருக்கே நைட் கம்போசிங்க் இருக்கு..எழுந்து கொண்டார். பார்த்தீங்களா ராஜா சாரோடு பெருந்தன்மை நாடகத்திற்குக் கூட இசையமைக்கிறார்.. நாம நம்மள எளிமையா எந்தளவிற்கு சுருக்கிக்கறமோ அந்த அளவு நாம உயரத்திற்குப் போகிறோம் அர்த்தம். பாவம் நீங்கள் ஏதோ சாப்பிட்டுருக்கீங்க எனக்கும் கொஞ்சம் தரமுடியுமா என்றார். வறுகடலை,முள் முறுக்கு மீதியிருநதது. ஐயோ எனக்குப் பல் இல்லையே..என்று தன் தோள் பையிலிருந்து சில நான்கு வாழைப்பழங்கள் தந்தார்.

          நாங்கள் தந்ததை இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டார். எனக்கு ஜெயமோகன் பேசுவதைக் கவனிக்க வேண்டும் என்பதில் நாட்டம். சரி கிளம்புங்கள் ஐயா.தொடரும்..

 

திங்கள், 17 டிசம்பர், 2012

மார்கழியும் தேவதேவனும்


தேவதேவனும் மார்கழியும்- இளஞ்சேரல்

 

               விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் மூத்த படைப்பாளுமை கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்..தேவதேவன் கவிதைகள் பற்றியும் அவருடைய கவிதையின் ஆழமான தரிசனங்களை தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிற ஜெயமோகன் தன்னுடைய எழுத்துகளிலும் தேவதேவனின் கவியாழத்தைப் பயண்படுத்தி வருவது அவருடைய கவிதைகளுக்கு அவர் தரும் அதிகபட்சமான மரியாதை எனலாம்.

           

          தேவதேவன் கவிதைகளை பரவலான இலக்கிய உலகிற்குக் கொண்டு வந்தவர் அவர் தான்.கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட நவீனத்துவத்திற்கு ப்பின் கவிதைதேவதேவனை முன் வைத்து என்கிற நூல் வழியாக தமிழ் நவீன கவிதையின் வளர்ச்சிப் போக்குகள் மற்றும் அவை இன்னும் உலகத்தரத்திற்கு எட்ட வேண்டிய தூரம் பற்றியெல்லாம் விவாதித்திருப்பார். அந்த நூலும் தேவதேவனின் கவிதைகளும் என்னை வெகுவாக பாதிக்க பிற்பாடு முற்போக்கு மற்றும் இடது சாரி மற்றும் புரட்சிகர கவிதை வடிவங்களிலிருந்து மருவி இயற்கையான அழகியல் வடிவங்களுக்கு மாறினேன்.கண்ணதாசன்.பாரதி தாசன் சுப்புரத்தின தாசன் எனும் சுரதா போலவே நானும் இரண்டாம் தேவவேன் எனும் புனைப் பெயரில் எழுத ஆரம்பித்தேன்.

                காலப்போக்கில் அந்த வடிவம் அவருக்கானது.அவருக்குரியது ரசனையின் அடிப்படையில் அனுபவித்துக் கொள்ளலாமே தவிர உரிமையுடன் கொட்டகை போட்டு கொடி நட்டி வேலிபோடுவது சரியாகாது என்று மறுபடியும் இளஞ்சேரலுக்கே மாறினேன். அந்த மயக்கம் தந்த தேவதேவனின் கவிதை காலம் மறக்கமுடியாதது இன்றும் அதே மயக்கம்.இளையதலைமுறையினர் தன் காரியத்திற்காக ஒரு படைப்பாளியை அவர் படைப்பினை விரும்புவதாக நடித்துக் கொண்டு காரியம் ஆனதும் அந்தப் படைப்பாளியின் படைப்பை பலவீனத்தை வைத்துத் தகர்த்து பிற்பாடு தாம் பெரும்புகழை அடைவதாக எண்ணி காலரைத் தூக்கிக் கொண்டு (காலரைத் தூக்கினால் பட்டன் கழண்டுடும்-உபயம் சிவாஜி கணேசன்-ரஜினி வாயிலாக) பிறகு அந்த ஆளுமையே உனக்கென்ன மயிரா தெரியும் என்று கேட்கும் இளையதலைமுறை நவீன இலக்கியத்தின் ஒரு பிரிவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.என்றும் தனது இயற்கை பற்றிய மனித ஆழ்மனம் பற்றிய அவதானிப்பு கொண்டிருப்பவர் தேவதேவன்.

            

          ஆரம்ப காலத்தில் தன் சொந்தக் கை ஊன்றி கரணம் போட்டு நவீன கவிதைக்கு வளம் சேர்த்த மகான். நமது தேசத்தில் வெறும் ஆன்மீகம் பேசிய மகான்களை நடு வீட்டின் விட்டத்தில் தொங்க விட்டு வணங்கிப் போற்றும் நாம் தேவதேவன் கூடவே கவிதையும் செய்திருப்பதால் நாம் அவரை கேளரத்தில் கே.ஜே யேசுதாசைக் கொண்டாடுவது போலக் கொண்டாடியிருக்க வேண்டும். அநேகமாக அவர் சாதி கொஞ்சம் வலுவாக இல்லாமல் இருப்பாரோ என்னவோ..

            தேவதேவனுக்கும் அவருடைய கவிதைகளுக்குமாக எதாவது பரிபாலனம் செய்து நம் கவியால் வேகும் மனதை ஆற்றலாம் என்று அவருடன் பேசினோம்.நொய்யல் இலக்கிய வட்டம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கவிதை விருது அவருக்கு வழங்க முடிவு செய்து அவரிடம் பேசிய போது கடுமையாக மறுத்தார். தற்போது எழுதிவரும் சிறந்த கவிஞர்களுக்குத்தான் தரவேண்டும் என்று மறுத்துக் கொண்டே இருந்தார். அப்போது அவருடைய மார்கழிதொகுப்பு வந்திருந்தது. ஐயா மூத்த ஆளுமை என்கிற வகையில் விருது ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினோம். சம்மதம் வாங்குவதற்குள் போதும் என்றாகி விட்டது. அவர் இருகூர் வருவதற்கு ஏற்பாடுகளும் நடந்தது. சில எதிர்பாரத பணிகளால் அவரால் வரமுடியாமல் போனது.பிற்பாடு நாங்கள் விருது படத்தை அவருக்கு அனுப்பிவைத்தோம். பல ஆண்டுகளில் வெம்மை கொஞ்சம் தளர்ந்ததாக உணர்ந்தோம்.பிற்பாடு அவையே நல்ல தொடக்கமாக பல விருதுகளும் அவருக்கு வந்து சேர்ந்தது. தேவதேவன் கவிதைகளில் ஒரு சதவிகிதமும் இணை பெறாத பல கவிஞர்களுக்கு தமிழும் தமிழ்க்கவிதையும் அள்ளித்தந்திருக்கிறது. புகழும் கோடானுகோடி செல்வங்களையும் தமிழ் அள்ளித் தந்துகொண்டிருக்கிறது. அவர்களை விடவும் தமிழ் நவீன கவிதைக்கும் தமிழ் மொழிக்கும் பாங்கு செய்து கொண்டிருப்பவர் தேவதேவன். அவருடைய பிறந்த நாளின் பொழுது தமிழ் நவீன கவிஞர்கள் ஒன்று கூடி கவிதைகளை அவருக்கு அளிக்க வேண்டும். திருவையாற்றில் தியாக பிரம்மம் தியாராஜருக்கு சங்கீத பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை உலகின் பல திசைகளிலிருந்து வந்து பாடி அஞ்சலி செலுத்துவது போல நாம் தேவதேவனுக்கு கவிதைகளை வாசித்து அன்பு செலுத்தவேண்டும்.

               இந்த மார்கழி அவருக்கு உகந்த மாதம் அவருக்கு மட்டுமல்ல. உலகமே சங்கீத மயக்கத்தில் திளைக்கும் ஒருவேளை கடவுளர்கள் நன்கு உறங்கும் மாதமோ.அவர்களை துயில் நீக்க வைக்கத்தான் இந்த உற்சவங்கள் நடக்கிறதோ. இசையின் தாளத்தின் சுருதியின் ஓங்காரம் போலவே வாகனங்களும் வந்து போகிறது. மார்கழி மாதத்தின் பனி வெல்வெட் துணிபோன்ற மிருதுவான இரவில் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்குவது அது அவருக்கு வழங்கப்படுவது அல்ல தமிழ் நவீன் கவிதையின் வளர்ச்சிக்கு நாம் எடுக்கும் விழா.

                 

                  இசை ஞானி இளையராஜா வழங்குவதை விடவும் அழகான செய்தி வேறெதுவுமில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களை நான் அறிவேன். நட்பும் உறவும் இருக்கிறது. கவிஞர் ஒருவரின் இல்லத்திருமண விழாவில் சந்தித்த நண்பர்கள் முன்னமோ விருது ஒரு மூத்த கவிஞருக்கு என்று மட்டும் கோடிட்டு சொன்னார்கள்.முறையான அறிவிப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்தார்கள்..கடவுளே அவர் தேவதேவனாக இருக்க வேண்டும் என்று தியாக பிரம்மம் தியாராஜசுவாமிகளையே வேண்டிக் கொண்டதின் பலன் கிட்டியது.

               மார்கழி மாதம் கோவை மாநகரமே சங்கீத உற்சவங்களை உலகின் தலைசிறந்த பாடகர்களை இசைக்கலைஞர்கள் வந்து கோவையை கிறங்கவைத்துக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் நவீன கவிதையின் மகத்தான கவிஞனைக் கொண்டாட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் தேர்வுக்குழுவினர்கள். விழாக்குழுவினர்கள் ஆகியோரையும் விழா மிகபிரமாண்டமான முறையில் நடத்த உதவுவதின் வாயிலாக நவீன தமிழ் கவிதைக்கு கொஞ்சம் தேர் தந்து பொருள் ஈந்த வள்ளல்கள் ஆகியோருக்கும் கவிதையே வராத ஒரு பரதேசி கவிஞனின் எளிய சிரம் தாழந்த வணக்கங்கள்...இன்று முதல் அவரை நான் மார்கழி தேவதேவன் என்று அழைக்கப் போகிறேன்..

              இலக்கியமும் சினிமாவும் இணைந்து கொண்டிருக்கும் சூழலை உருவாக்கும் ஜெயமோகன். நாஞ்சில்நாடன்,க.மோகனரங்கன்,எஸ்.ராமகிருஷ்ணன். பிரான்சிஸ்கிருபா, மரபின் மைந்தன் முத்தையா. மகேந்திரன், பாலுமகேந்திரா,பாலா எம்.கோபாலகிருஷ்ணன். மணிரத்னம். ஓவியர் ஜீவா. போன்ற உள்ளங்கள் இசையையும் செவ்வியல் இசையான தமிழிசை மற்றும் கர்நாடக இசையையும் உடன் இணைக்கவும் முற்படுங்கள் என்று ஒரு வேண்டு கோளை இலக்கியக் களப்பணியாளனாக உங்கள் முன்வைக்கிறேன்..

 

 

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அருவி நிகழ்வின் பதிவுகள்


அருவி நிகழ்வு-16-12-2012 ஞாயிறு

சு.தியடோர் பாஸ்கரன்-பங்கேற்பு-உரை

எது நல்ல சினிமா- பதிவுகள்-

            இளஞ்சேரல்

 

          சினிமா பற்றி அவதானிப்பும் அவை பற்றி அறிந்நு கொள்ள விழையும் மனங்கள் அதிகம். சினிமா பற்றி நாள் கிழமை பொழுது என்றின்றி பேசிக்கொண்டே இருக்கலாம். ஒரு பொழுதும் சுவராசியம் குறையாதது. அருவியின் சினிமா பற்றிய நிகழ்வு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை இந்தியத் தொழில் வர்த்தக சபையின் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒரு கட்டமைப்புடன் நேர்த்தியாக நடைபெற்ற நிகழ்வு என்று சொல்லலாம். நல்ல செய்திகளை,தரமான படைப்புகளைக் கொண்டு சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் குறைந்த பட்சம் ஒரு அறிதல் அளவாகவாவது வேண்டும். ஒரு கொலையையோ ஊழலையோ, கள்ளக் காதலையோ, போலீஸ் செய்திகளையோ  கிரைம் செய்திகளையோ மிகக் கோர்வையாக தெள்ளத்தெளிவாக உள்வாங்கிக் கொள்கிற வாசிப்பு மனம் தரமான செய்திகளை மனதில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தரமானவை மிக இலவசமாகக கிடைக்கும் பட்சத்தில் கூட ஊதாசீன மனோபாவமே எல்லா மொழிகளிலும் ஏற்படுகிறது.

           இந்த வகையில் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் தரக்கொள்கைகள் ஏன் படைப்பு மனம் சார்ந்த நிலைகளுக்கு நாம் உபயோகப் படுத்தக் கூடாது எனத்தோன்றியது. தியடோர் தொகுத்தளித்த நேர்த்தியான உரை கச்சிதமானது. மிகையில்லாதது. தன் வாழ்நாளை இயற்கை உயிர்களுக்காகவும் கலைகளுக்காகவும் பயண்படுத்தி வருகிறார். வெளிப்படையாகவே அவர் கருத்துப் போராட்டம் நடத்துகிறார். அவர் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதும் பத்திகள் உலகத்தரம் வாய்ந்த எழுத்து. தமிழில் சலனமின்றி நேர்த்தியான உரைநடையில் எழுதும் ஒருசிலரில் தியடோர் பாஸ்கரனும் ஒருவர். அவருடைய இந்திய உலக சுற்றுப்பயணங்களை தனது ஆய்வுக்குட்படுத்திக்கொள்கிறார். உலக சினிமா,காட்டுயிர்கள், அரியவகை நிலங்கள். பறவைகள் ஆய்வுகளும் முக்கியம். அதுமட்டுமின்றி சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அழிக்கப்படும் அற்புதமான இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் அவர் குரல் கொடுத்து வருகிறார். அருவிகள் சுனைகள், காட்டுயிர்களின் வாழிடங்கள் மீதான அவருடய ஆழமான அக்கறை பிரமிக்க வைக்கிற ஒன்று. அருவி அவருக்கான ஒரு மகத்தான விழாவை நடத்தியதற்காகப் பாராட்டவும் வேண்டும். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கருத்தரங்கிற்கும் கடுமையாக உழைத்து பேசுவதற்கும் மக்களுக்காக அவர் தெரிவு செய்யும் குறிப்புகள் முக்கியமானவை.

 

அவர் உரையிலிருந்து சில முக்கியமானவை..

      

         50 களில் எடிட்டிங் பற்றிய எந்த அனுமானமும் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோர் தங்களுடைய நேரங்களை அதிகமாக எடிட்டிங் அறையில் செலவு செய்திருக்கின்றனர். ஒரு படத்தில் ஜெமினி சாவித்திரி பங்கு கொள்ளும் காட்சியில் அவர் காருக்கு சக்கரம் மாட்டுவார் ஒரு கணம் டை கட்டியிருப்பார் பிறகு டை இல்லாமல் இருப்பார் இது போன்ற பல படங்களில் என்னற்ற சம்பவங்களைக் குறிப்படலாம். நல்ல சொல் பதங்களை கலைக்களஞ்சியங்களை உருவாக்க வேண்டும். சினிமா,காஸ்டிங், ஸ்டாரிங் போன்ற சொற்களுக்குக் கூட பதங்கள் இல்லை அதுபோலவே மற்ற தொழில் நுட்பப்பிரிவுகளுக்குமாக கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். ஆங்கிலப் படங்களுக்குப் பிரச்சனையில்லை. ஜெர்மனி பிரஞ்ச் பதங்களை அப்படியே மாற்றி தங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

         ஹிட்ச்காக் படங்கள் தான் முன்னோடி என்று சொல்லலாம் அவர் தன்படத்தின் முன்பே சொல்லிவிடுவார் யார் கொலை செய்யப்படவிருக்கிறார்கள் எப்படி என்பதை காட்டிவிட்டு அதற்கான ஸ்டோரி லைனை டெவலப்செய்து படம் நகரும். இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் எதிரொளித்தது. சத்யஜித் ரே கூட தன்னுடைய படங்களில் அதிகமாக எடிட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

         படங்களில் பிம்பங்கள் தான் பேசப்படவேண்டும். அதற்காக வசனம் பேசும் படங்களை தவிர்க்கவேண்டும் என்பதல்ல பொருள். திரைமொழி என்பது காட்சிகளும் கதாபாத்திரங்களும் அதன் பிம்பங்களும் தான் கதையை நகர்த்த வேண்டுமே தவிர வசனங்களால் படத்தை நகர்த்தக் கூடாது. தற்பொழுது வந்த படங்களில் சுப்பிரமணியபுரம், வழக்கு எண். 18-9 படங்கள் முக்கியமானவை. படங்களில் எடிட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய முக்கியமான ஆளுமை பீ.லெனின். அவர் தன்னுடைய சிறப்பான படங்களையும் தந்தவர். றெக்கை ஒரு அற்புதமான படம்.

              

                காதல் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் அற்புதமாக பிம்பங்களால் கட்டமைக்கப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டியருக்கும் பாலாஜி சக்திவேல் திரைமொழியை சிறப்பாகக் கையாண்டிருப்பார். பாலு மகேந்திரா ஒரு அற்புதமான இயக்குநர் மட்டுமின்றி பிம்பங்களின் ஒலி ஒளியை மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அழியாத கோலங்கள் படத்தில் நான்கைந்து சிறுவர்கள் ஆற்றில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு சிறுவன் திடிரெனக் காணாமல் போவான். எல்லோரும் ஊருக்குள் ஓடிப்போய் மக்களை அழைத்துவருவார்கள்.பிறகு அந்த சிறுவனின் சடலம் மீட்கப் படும். இந்த இறுதி சம்பவங்கள் வரையிலும் உரையாடலே இருக்காது.

         பிம்பங்களும் ஒலி ஓளியும் சரியான அளவில் சேர்க்கப்பட்டு மனதில் அப்படியே ஆழமாகப்பதிந்து போகின்ற விதத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.இதுதான் நல்ல சினிமாவிற்கும் கலைக்கும். உதாரணம்.அதுபோலவே சுப்பிரமணிய புரம் படத்தில் வரும் கோர்ட்,காவல் நிலையம், சிறை,போலீஸ்வாகனம்,பேருந்து இப்படியாக நகரும் காட்சிகள் மனதில் அறைந்து இரவெல்லாம் தூக்கம் வராமல் செய்யும் அற்புதமான காட்சிகள்.வீடு படத்தில் ஒரு நடுத்தரக் குடும்பம் படும் துன்பங்களை அற்புதமாக வடித்திருப்பார் பாலுமகேந்திரா. திரைமொழியும் பிம்பங்களும் முழுமையாகப் பதிவாகியிருப்பதை நாம் உணரமுடியும். அதுபோலவே கருத்தம்மா படத்தில் பாரதிராஜா சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு டுயட் காட்சியை இணைத் து படத்தையே ரசிக்க முடியாதவாறு செய்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

         

         ஒரு முறை நான் சிவாஜி கணேசன் பற்றி ஆங்கிலப் புத்தகம் எழுதியிருந்தேன். அது பற்றி விசாரித்த நண்பர் ஒருவர் என்ன சிவாஜி பற்றியா எழுதியிருக்கிறீர்கள்என இளக்காரமாகக் கேட்டார். நம் நாட்டில் சினிமா பற்றி பேசுவதும் எழுதுவதையும் இளக்காரமாகப் பார்ப்பது சகஜமாகிவிட்டது. மேல் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு விழித்துக் கொண்டார்கள் சினிமா பற்றிய அறிவு அவசியம் என்று சினிமா பற்றி இளைய சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். அதன் விளைவாகவெ அவர்களின் முயற்சியில் கலை நேர்த்தி மிக்க படைப்புகளை கொண்டு வர முடிந்தது.

          எத்தனை பேர் சினிமா பார்ப்பதையும் சினிமா பற்றி பேசுவதையும் ஊக்கு விக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கல்லூரிகளில் நான் தேர்வுக்குழுவில் இது பற்றி பேசும் போது அதெல்லாம் எதுக்குங்க..என்றார்கள். ஒரு சினிமாவைத் திரையிடுவதற்கும் அது பற்றி பேசுவதற்கும் யாரும் விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது நல்ல சினிமா எப்படி வரும். தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ருத்ரையாவும் ஒருவர். தற்போதைய சிறந்த இயக்குநர்களில் பாலாஜி சக்தி வேல் சசிகுமார் என்றார். அவருடைய உரையில் கதைக்குத் தகுந்தமாதிரியான கதாபாத்திர தேர்வு. குறைந்த உரையாடல்கள் கொண்ட முகங்கள் தத்தம் உணர்வுகளுடன் பேசும் காட்சிகள் ஒலிகளுக்கான முக்கியத்துவம், ஒளியின் தன்மையைக் கொண்டு ஒளிப்பதிவு செய்யவேண்டிய அவசியம்.இசைக்கோர்வைகளின் அளவு காட்சிகளுக்குத் தகுந்த அளவிற்கு சரியான பின்னணி இசை.

பார்வையாளனே கதையை உணர்ந்து கொள்கிறவாறு காட்சிகளின் இயல்பு. அழுத்தம் தரவேண்டிய காட்சிகளில் அழுத்தம் உள்ளிட்ட பல முக்கியமான திரைமொழியின் நுட்பங்களை அழகாக எடுத்துரைத்தார்.

                      

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அதிசயக்க வைத்த உயர்ந்த நடுத்தர மக்கள் பலர் சினிமா பற்றி வெளிப்படையாக தியடோர் பாஸ்கரனுடன் உரையாடி அளவளாவிய ஆச்சர்யமாக இருந்தது. வங்கி அதிகாரி ஒருவர் தன்னுடைய சினிமா ஆர்வமும் சினிமா பார்ப்பது சம்பந்த மான நிகழ்வுகளால் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படுகிறேன் என்பதைப் பற்றிப் பேசினார். தற்கால ஆங்கிலப் படங்கள் ஒரு மணி நேரத்தில் பார்வையாளனைக் கிளப்பி விடுவதும் ஆனால் தியாகராஜ பாகவதர் படங்களை இன்றும் நான்கு மணி நேரம் உட்காந்து நம்மால் பார்க்க முடிகிறது என்றார். உரையாடல்களின் பொழுது சினிமா பற்றியதாக இருந்ததால் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை. அதுபோலவே எதிர்பாராத அது போலவே மக்குத் தனமான கேள்விகளுக்கும் பஞ்சமில்லை. வழக்கொழிந்து போன கேள்விகளைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருடைய உரையையும் அவர் முன்வைத்த விசயங்களை உள்வாங்கவே இல்லை என்று தெரியவந்தது. பொறுமையுடனும் பதில்களைத் தந்தவர்

      நிகழ்வு முடிந்து தியடோர் பாஸ்கரன் அவர்களை சந்தித்து கைகுலுக்கி விட்டு சிறுகதை நூலைத் தந்தேன். அற்றைத் திங்கள் நிகழ்வுகளை மாதந்தோறும் காலச்சுவடில் எழுதியதை நினைவு கூர்ந்த அவர் நலம் விசாரித்தார்.நானும் பிறகு அவர் எழுதுகிற பத்திகள் பற்றி பேசினோம்.

  

             அரங்கில் ஒரு பிரகஸ்பதியுடன் பேசினேன். அவர் கோவையில் பல்லாண்டுகளாகக் குடியிருந்து வருகிறார். அவர் ஒரு இலக்கிய அமைப்பும் வைத்து வார இதழ் கடைசி பக்கக் கவிதைகள் போன்றவைகளை ஆதரிப்பவர் போலிருந்தது. அவரிடம் 25 ஆம் நிகழ்வின் அழைப்பிதழைத் தந்தேன். அவரோ அப்படியா எங்கு நடக்கிறதுஎஸ்பிஎன் நரசிம்மலு நாயுடு பள்ளி என்றேன். அது எங்கிருக்கிறது என்றார் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொல்லி விட்டு வந்தேன்.

                         கோவையில் பல்லாண்டுகளாக அவர் கோவையின் மைய வாசி. அவருக்கு இலக்கியச் சந்திப்பின் எந்த நிகழ்வு பற்றியும் தெரியவில்லை. இடையே தியடோர் பாஸ்கரன் அவர்களை யார் அவர் என்றார். என்ன மீட்டிங் என்றார். பிறகு அவர் நடத்தும் இலக்கிய அமைப்பு மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொண்டேன். அதற்காக அந்த மனிதனின் பரம்பரையே மன்னித்து விட்டு நொறுங்கி நெஞ்சைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

                 

       

             வரும் வழியில் வெயில் நதி இதழைத் தந்தார். ப.தியாகு. அவருக்குப் பக்கதி்லிருந்த ஒரு பெரிய பேராசிரியர் தனக்கும் ஒரு இதழ் வாங்கிக் கொண்டார்.அந்த ஆள் அது வரை சிறுபத்திரிக்கையே பார்த்ததில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இது எந்த மாதிரிப் பத்திரிக்கை என்ன இருக்கிறது என்று கேட்டார். அண்ணன் அவைநாயகன் பொறுமையாக பதில் சொன்னார். அவர் மரமண்டைக்கு எதுவும் ஏறவில்லை. மறுபடியும் அந்த மரமண்டை இல்ல இது மாதிரியான புத்தகங்கள் எல்லாம் கம்யுனிசமா இருக்கும் அதுக்காகத்தான் கேட்டேன். என்றதும் எனக்குக் கோபம் தாளவில்லை. ஏற்கெனவே தியடோர் பாஸ்கரனை யார் என்று கேட்ட கேள்விக்கு பொங்கிக் கொண்டிருந்த கோபம் எரிந்து கொண்டிருந்தது. பிறகு அவரிடம் தைரியமாப் படிக்கலாம் பயப்படாதீங்க..ஒண்ணும் பண்ணாதுஎன்று இரண்டு முறைக்கும் மேலாக வலியுறுத்தினேன். இரண்டு கைகளிலும் பிரேஸ்லெட் தங்க முலாம் வேய்ந்த உடல் சபாரி சகிதம். அந்த ஆள் தினத்தந்தியையே படித்ததில்லை போலிருக்கிறது. எண்பதாயிரம் சம்பளம் தந்தால் யாருக்குத் தான் படிக்கும் ஆசை வரும்

          இதழை ஏதோ பீயை ஏந்திக் கொண்டிருப்பதான அசூசை அவரிடம் இருந்தது. கம்யுனிச எதிர்ப்பை மட்டும் அழகாக பால் வார்த்திருக்கிறார்கள் அதற்கு மட்டும் ஒனத்தி வந்திருக்கிறது. அப்படியான ரசனை ஒனத்திக்கு மட்டும் ஒன்றும் குறைச்சலில்லை. அருவி போன்ற அமைப்புகள் என்னதான் மாய்ந்து மாய்ந்து ரத்தக்கண்ணீர் வடித்து கலைப் படைப்புகளைக் கொண்டு சேர்த்தாலும் இது போன்ற ஒரு அரைவேக்காடு போதும் எல்லாவற்றையும் பாழுஞ்சுவர் செய்வதற்கு..வெளியில் வந்து அந்த ஆளைத் தேடினேன்..

 

         காணோம்..தப்பித்தான்..எது நல்ல சினிமா என்ற தலைப்பைப் பார்த்து குட்டைப்பாவாடையுடன் ஆடுவார்கள் என்று நம்பி வந்து ஏமாந்த வேதனை அந்த ஆள் முகத்தில் தெரிந்தது.

         

        தியடோர் பாஸ்கரன் மனம் இரும்புத்திடம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். கேள்விகளில் இளைய தலைமுறையினர் கேட்டவை கொஞ்சம் நம்பிக்கை வந்தது. கல்லூரி மாணவ மாணவிகள் பலருக்கு இந்த நிகழ்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

        

        பிறகு ஒன்பது நிமிட குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் ஒலியைக் கையாண்ட விதமும் கதாபாத்திரங்கள் மற்றும் பிம்பங்களின் மையக் கருத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சியமைப்புகளாலும் இருந்தது. பார்வையாளர்களை பிரமிக்க வைத்த வசனமற்ற உணர்வுகளும் காட்சிகளும் வெகுவாக பாதித்தது. எனக்கு முன்கூட்டியே அதன் காட்சி நகர்த்தல்கள் தெரிந்து விட்டாலும் படமாக்கிய விதம் அற்புதமாக இருந்தது. முதலில் ஒரு வயதான ஒல்லியான தேகம் கொண்டவர் வருகிறார் பிறகு அவர் தன்னுடைய மெஸ் யுனிபார்ம் அணிந்து கொண்டு நெடுஞ்சாலை பைபாஸ் சாலை அது. வாகனங்கள் உச்ச வேகத்திலும் ஒலி் எழுப்பியும் பறக்கும் காட்சிகள் ஒலியின் துல்லியமும் டிஜிட்டல் கேமிரா விளையாடியிருக்கிறது. அந்த பெரியவர் தன்னுடைய கையில்

Meals ready எனும் அட்டையைத் தாங்கியபடி வாடிக்கையாளர்களை அழைக்கிறார். வாடிக்கையாளர்கள் வந்து உணவருந்திப் போகிறார்கள்.

               

         தண்ணீர் குடிக்க வழியின்றி (உரிமையாளர் தண்ணீர் கூட குடிப்பதைத் தடுக்கிறார்) மற்ற வாடிக்கையாளர்கள் தண்ணீரை தங்கள் வேக்காட்டிற்கு முகத்தில் தெளித்து வெப்பம் போக்குகிறார்கள். இவருக்கோ தண்ணீர் இல்லை. தொண்டை தண்ணீருக்கு ஏங்குகிறது. அவர்கள் வீசிய பெட் பாட்டிலிலிருந்து சில சொட்டுகளைக் குடித்து தாகம் போக்கிடுகிறார். காணாத கொடும் வெயிலில் தன் வாடிக்கை யாளர்களை பறக்கும் வாகன ஓட்டிகளுக்கு தனது அட்டையைக் காட்டுகிறார்.

            பிறகு அங்கு வரும் குடும்பம் தாங்கள் உணவருந்தும் போது அவர்கள் அழைத்து வந்த குழந்தை இவருடைய உடையில் லயித்துப் போய் அவருடன் சிரித்து கண்களால் தொலைவிலிருந்தே உரையாடுகிறது. இவருக்கு அக்குழந்தை யுடன் மிகமகிழ்வுடன் தன் வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறார். குழந்தை தனது குடும்பத்தாருடன் கிளம்பிப் போகும் முன்பாக ஒரு சாக்லெட்டை அவருக்குத் தந்துவிட்டுப் போகிறது.

                        பிறகு உடைமாற்றி தனது வீட்டுக்குப் புறப்படும் முன்பு முதலாளி ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் தருகிறார். அந்தப் பொட்டலத்துடன் வரும் அவர் தன் மனைவியுடன் அதைப்பிரித்து சாப்பிடுகிறார்கள். அவர்கள் குழந்தையில்லா வயதான தம்பதிகள் என்று அறிய முடிகிறது.

                       உணவருந்தும் சில பிம்பங்கள். ஒரு சாதாரண ஆஸ்பெஸ்டாஸ் செட்டில் அவருடைய வீடு. கடைசியில் அந்தக் குழந்தை அளித்த சாக்லெட் பிரித்து இருவரும் பாதிபாதியை ஊட்டிக்கொண்டு மகிழ்கிறார்கள். படம் முடிவடைகிறது. பலத்த கைதட்டல். இந்தப்படத்தில் ஒலியும் பிம்பங்களும் காட்சிகளும் உணர்வுகளும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கிறது. வசனங்களோ திடிர் திருப்பங்களோ மிகையோ செயற்கையோ ஏதுமின்றி கச்சிதமான எடிட்டிங் மூலமாக படமாக்கியிருக்கிறார்கள்.

                படத்தின் தன்மையைப் பார்க்கும் போது அப்படம் கேரள பாணி பிம்பங்களின் போக்கும் மலையாளக் குறும்படம் போலிருந்தது. காவலர் வேடத்தில் நடித்த பெரியவரின் தேர்வு அவருடைய முகபாவம் சரியாகப் பொருந்தியிருக்கிறது. அவர் வெயிலில் நின்று கொண்டிருப்பதும் சுடும் வெம்மையில் அவர் தன் கால்களை மாற்றி மாற்றி நிற்பதும் காட்சிப் படுத்தலில் செயற்கையாக இருந்தது. ஒரு செருப்பணிந்து கொள்வதற்கோ கொஞ்சம் தண்ணீர் இடையில் குடித்துக் கொள்வதற்குக்கூட தடை என்று இயக்குநர் சொல்கிறார். அப்படியான கொடுமையான முதலாளி என்று பிம்பப்படுத்துவது படு செயற்கை. ஒரு வேளை அவை கேரளத்தில் சாத்தியமாக இருக்கலாம். தியடோர் அவதானித்த விசயம் என்ன எனத்தெரியவில்லை. குறிப்பாக அந்த வயதான பெண்மணி ஒரு உணர்வே இல்லாமல் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

                  சில குளோசப் ஷாட்களில் பெரியவர் நன்றாக நடிக்கிறார் என்று பேசும் படியாக இருந்ததும் செயற்கைதான். அநேகமாக இந்தப்படம் எடுத்து பத்துவருடம் ஆகியிருக்கலாம். இதற்குப் பதிலாக சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தைக் காட்டியிருக்கலாம். ஒரு வகையில் பிம்பம் சார்ந்த குறியீடுகளுக்கு வேண்டுமானால் சிறப்பு என ஏற்றுக் கொள்ளலாம். ஒலியும் படமாக்கப்பட்ட இடம் செய்தி காட்சி நடிப்பு எடிட்டிங் கதாபாத்திரத்தேர்வு சரியாக இருந்திருக்கிறது.

        

                 பிற்பாடு நடந்த உரையாடலில்,பிரச்சாரப் படம் சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்த தியடோர் பாஸ்கரன் பிரச்சாரப் படங்கள் வருவதில் தவறில்லை. அவை காலங்காலமாக வந்துகொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக

நாட்டில் மிகக் கொடுமையான சூழல் என்று வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் மிகுந்த துன்பத்தில் இருக்கிறார்கள். ஒரு கலைஞர்களாக ஒரு படைப்பாளியாக திரைப்பட இயக்குநராக இருக்கும் பட்சத்தில் இந்தப்பிரச்சனை தீர ஒரு படம் எடுப்பார்கள் அந்தப்படம் மக்கள் அபிமானத்தைப் பெறும் பிறகு அந்தப் படம் பிற்காலத்தில் பிரச்சாரப்படம் என்று பேசப்படும். இதற்காகவும் தான் சினிமா. பொதுமக்கள் பயண்படுத்தும் அவர்களுக்கு இருக்கும் ஒரு ஒரு வலிமையான பகிர்தல் சினிமா மட்டுமே..

        

           சினிமாவால் மட்டுமே தங்கள் பிரச்சனைகளை மறக்கிறார்கள் அதுமட்டுமின்றி ஒரு பொதுவான இடத்தில் சகமனிதனாக கொஞ்சம் மக்களுடன் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்கி றார்கள். அவர்கள் மேலும் நல்ல சினிமாவைக் காண வேண்டும். அல்லது நல்ல சினிமா இருக்கிறது என்பதை உணர்த்துவதும் தான் நம் கடமை.

              50 களில் 16 எம் எம் புரொஜக்டர் சிஸ்டம் வந்தது அவை இந்திய கிராமங்கள் தோறும் சென்று படங்களைக் காண்பித்தது. ஒரு வரலாற்று நிகழ்வு அது. அந்த அரிய வகை முயற்சியை வளர விடாமல் தடுத்தவர்கள் பாம்பே ஸ்டுடியோ முதலாளிகள். பிறகு அரசும் சில காலம் டாக்கு மெண்ட்ரிகளை எடுத்தது. இப்போது அதுவும் நின்று போய்விட்டது..

            நான் டெல்லியில் இருந்த போது குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்வோம் அங்கு உலகப் பிரசித்த பெற்ற சினிமாக்களை ஒரு காட்சி இரு காட்சி என்று திரையிடுவார்கள். நாங்கள் பார்க்கிற வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அதுபோலத்தான் நீங்களும் சினிமாவைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.

             வெறுமனே எனக்கு நேரம் இல்லை என்பதும் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இப்பொழுது டிவிடிகள் மற்றும் ஹொம் தியேட்டர்கள் வசதி இருக்கிறது நல்ல படங்களை நீங்கள் வாங்கிப் பார்க்கலாம். நான் சில கல்லூரிகளில் திரைப்படங்களின் சிடிகளுக்கான லைப்ரரி வையுங்கள் என்றேன். அவர்கள் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நமது சமூகத்தில் சினிமா பார்ப்பதும் அது பற்றிப் பேசுவதும் ஒழுக்க க்கேடாக விமர்சிக்கப் படுகிறது. நம் சமூகத்திலும் நாம் நல்ல சினிமா பார்ப்பதற்கும் பேசுவதற்கும் கற்றுத்தரவில்லை. நான் எந்த சினிமாவும் பார்க்காமலேயே என் கல்லூரிபருவத்தை முடித்திருந்தேன் என்பது எவ்வளவு இழப்பு.

            அது போலவே தற்காலத்திலும் தாமே தனக்கு ரசனைகேற்ப சினிமாவைத் தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொள்கிறன்றனர். பாடத்திட்டங்களில் சினிமாவை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்று நான் உள்பட பலர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். தற்காலத்தில் சிறந்த படங்களை உருவாக்குகிற வாய்ப்பும் தொழில்நுட்பங்களும் சாத்தியமாகியிருப்பதால் நல்ல சினிமா வரும்..

         கலந்துரையாடல் நிகழ்வில் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சினிமா ஆர்வலர்கள்,பத்திரிக்கையாளர்

கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஊடகவியலாளர்கள் என சுமார் 150 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டது அதிசயமாக இருந்தது. சினிமா என்கிற தலைப்பிற்காக வந்திருந்தாலும் அருவியின் நிகழ்வுகள் தனித்துவம் மிக்கதாகவும் அமைவதும் ஒரு காரணம். முதலில் சால்வடார் டாலியின் ஓவியங்கள் பற்றிய டாக்கு மெண்ட்ரி திரையிடப்பட்ட போது அரங்கிற்கு நான் போயிருக்க வில்லை. என்பது வருத்தமான விசயம்.

நிகழ்வுகளை திரு சீனிவாசன், திரு.சூரிய நாராயணன், நை.ச.சுரேஷ்குமார் ஒருங்கிணைத்திருந்தனர். கோணங்கள் ஆனந்த்.பொன்.சந்திரன் உள்ளிட்ட முக்கியமான திரைமொழி ஊடகவியலாளர்கள் குறும்பட,திரைப்படக் கல்வி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டது நிச்சயமாக அவர்களுக்கு உதவிகரமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கும்.  

          முந்தைய பதிவான சமணப் படுகைகள் சொல்லும் கதைகள் பற்றி குறிப்புகள் ஏட்டளவில் இருந்ததை இப்போதும் எழுத முடியாமல் இருக்கிற குற்றவுணர்வால் விரைவாக இந்தப் பதிவை எழுத வேண்டும். விரைவில சமணப் படுகைகள் பதிவையும் எழுதுவேன். அதுபோலவே மகத்தான நிகழ்வுகள் நடைபெறும் போது கோவை மாநகர் ஒட்டியிருக்கும் கல்லூரி நிர்வாகங்கள் தத்தம் ஆய்வு மாணவர்களை அனுப்பி ஊக்குவிக்க வேண்டும். முகநூல் நண்பர்கள் கூட வந்து கலந்து கொள்ளலாம். இங்கே எந்தப் பொருளும் கட்டாயமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்க மாட்டார்கள்..சத்தியமாக நுழைவுக்கட்டணம், ஆய்வுக்கட்டணம் சேவை வரி, வாட்,எசுகேசன் செஸ் எதுவும் இல்லை.

 

 நிறைகள் அருவியின் உழைப்பில் உள்ளது. பதிவில் ஏதேனும் குறைகள் பிழைகள் தவறுகள் இருந்தால் அவை என் கேள்விஞானம் சார்ந்தவை. அதற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்.. மகத்தான பல துறையின் ஆளுமை மதிப்பிற்குரிய தியடோர் பாஸ்கரன் நிகழ்வு மறக்க முடியாதது. நன்றி..