ஞாயிறு, 4 நவம்பர், 2012

மலைகள் இணைய இதழில் வெளியான கவிதைகள்- நன்றி- ஆசிரியர்- சிபிச் செல்வன்


மழையும் அதே போல இன்னொரு மழையும்-- 

 

இளஞ்சேரல்

------------------------------------------

 

 

15.7.2010 அன்று இரவு 10 மணிக்கு புறவழிச்சாலை

சமிக்ஞைக்கு நின்றிருந்தபோது ஆத்மாநாமிடமிருந்து

வந்த குறுங்கவிதை

 

காகிதத்தில் சில ராக்கெட்டுகள்

செப்பமிட்டு வானில் ஏவினேன் உனக்காக..

சில்லென

ஐந்தாறு மழைத்துளிகள் விழுந்தன ராம்..

நீ நனைந்தாயோ என்னவோ...

 

 

 

அதே மழையில் நீங்களும் நனைந்திருப்பீர்கள்

நமக்காக யார் அனுப்பியிருப்பார்கள்

கண்கள் சுருக்கி யோசிக்கிறீர்கள்

நிச்சயமாக உங்கள் அன்பிற்குரியவர்கள்

பொழிந்து கொண்டிருக்கிறார்கள்..வாழ்த்துகிறீர்கள்..

 

மழையில் நனைபவர்களும்

மழையை நனைப்பவர்களும்

தேசிய நெடுஞ்சாலையில் அரசியல்

கொடிகளைப் போன்று

பரபரவென்று அடித்துப் பறக்கத் துவங்குகிறார்கள்..

இயற்கையின் செஞ்சாந்து நீர்வண்ண ஓவியம்

கரைவது போல வழிந்து போகிறது ஆத்மா..

 

குடை இருக்கும் நாளி்ல் மழை பொய்க்கும்

தாழ்வாரத்தில் துளிகள் மலரும்

கண்ணன் மழையின் காகிதத்தை

இப்படித்தான் சர முற வென கசக்குவான்

மழையில் இது சோம்பல் வகையோ..

நாம் விரைவாக நடக்க-

ஓட வேண்டியிருக்கிறது மழையால்..

சட்டை கால் சட்டை என எல்லா இடங்களிலும்

மழையை சேமிக்கிறீர்கள்..

வேறென்ன செய்ய முடியும்..

 

கொஞ்சம் மழையருந்திக் குளிர்க்கலாம்

தெப்பமாக நனைந்த உடலைப் பரிசளிக்கலாம்..

அணிலின் மடியில் அமர்ந்து

பரிகாசம் செய்யும்  வெயிலுக்கு...

 

அப்போதைய சிலிர்ப்பிற்கும்

கூதலுக்குமாக மழை எழுதிய கவிதைகள் நிறைந்த

கைக்குட்டையை எடுத்து முகம் பார்க்கிறீர்கள்..

பொலபொலவென சில சொற்களாலான துளிகள்

உமது கால்களில் விழுந்து மன்னிப்பை யாசிக்கிறது

நீங்களும் மழையை ஆசீர்வதித்து வழியனுப்பி வைக்கிறீர்கள்..

ஆகாயத்தில் வசிக்கும் உங்கள் பிரியத்திற்குரியவர்களுக்காக...

 

 

 

 

 

 

 

 

 

 

 

மலையடிவாரம்-------

 

இளஞ்சேரல்

 

14.2.2011 அன்று இரவு 11 மணிக்கு ஹோப் காலேஜ்

சமிகஞை முனையத்தில் ஆத்மாநாமிடமிருந்து வந்த குறுஞ்செய்தி..

 

எனது மலையடிவாரத்தின் குடிலருகே

ஒரு வயலின் கலைஞர் குடி வந்துள்ளார்..

அவர் அப்பியாசத்தின் போது

வீட்டருகே போய் நின்றால் நாய் குலைக்கிறது

அவரும் கீதத்தை நிறுத்தி விடுகிறார்..பிறகு

அவருக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டாமென்று

குடில் திரும்பி விடுகிறேன்..

வயலின் இசைக்கிறது ராம்...

 

 

என் செம்மறியாடுகளுடன் மலையடிவாரத்தினில்

இறங்கிக் கொண்டிருக்கிறேன்..

மலை மசங்கம் துரத்தி வருகிறது.

ஆட்டின் ரோமம் போல

அழுக்கேறிய எனது கேசத்தில்

சில பறவைகளின் முட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்..

 

வழக்கம் போல் தாறுமாறாக

மலைச்சரிவுகளில் ஓடும் ஆடுகள் ஏதும் வழிதவறிவிடவில்லை..

யாதும் சுருதி முயங்கும் பச்சய மௌனம்..

நிரம்பிப் பொங்கும் நுரையைத் தன்னுடலில்

அணிந்து கொண்ட கீழ்வானம் நோக்கி இறங்குகிறது

குளிர் அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு உயிரின் ஈரத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது..

 

எப்படி ஆத்மா உன்னுடலைப் பழக்கிக் கொண்டிருக்கிறாய்...

நாக்கு வறண்டு கண்கள் இருட்டி தலை சுற்றுகிறது

காய்ந்த வயிற்றின் உடைந்த இடுப்பிலிருந்து

பசி படம் எடுத்து கண்கள் முன்னே ஐந்தலையை விரிக்கிறது..

மலைகளைப் போல வளர்ந்து இருட்டுகிறது

 

ஹனிபீயை எடுத்து சில மிடறுகள் அருந்துகிறேன்..

எப்போதும் என் தீராப்பசியறியும்

குட்டி ஈன்ற எனது செம்மறியாடுகள்

எனது கால்களைக் கட்டிக் கொள்கின்றன..

அதன் பாலருந்தி பசி போக்கிடுகிறேன்..

 

சர்வம்.. சாந்தம் சாந்தம்..சதகம் சாத்வீகம் சரணம்

சங்கல்பம்..மபதமப கமபதநிஸ...

மகரிஸ ஸஸநிதபமகரிஸ மபதமப மகரி....

ஆதவன் ஹரிகாம்போதியை இசைத்தபடி ஆழப்போகிறான்..

 

குடில் திரும்ப சமாதானம் ஒப்புக் கொண்டது

செம்மறி ஆடுகள்

மலைச்சரிவுகளல் ஊடேயும்

முகடுகள் ஊடேயும்

வரத் தொடங்கியது ஆத்மா...

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக