ஞாயிறு, 4 நவம்பர், 2012

காலத்தி்ன் முன்பின் சக்கரங்கள்..முன்னுரை


காலத்தின் முன்பின் சக்கரங்கள்

(வெளியாக உள்ள

கோவை இலக்கியச் சந்திப்பின் 23 பதிவுகள்- குறித்த நூலிலிருந்து சில பகுதிகள்)

 

இளஞ்சேரல்

 

 

 

தோரணவாயில்

 

       இலக்கிய விழாக்கள்,இலக்கிய நிகழ்வுகள் கருத்தரங்குகள் பக்தி இலக்கியம்,இயல் இசை நாட்டியம் நாடகம் உள்பட நவீன படைப்பிலக்கிய நிகழ்வுகள் பிரமாண்டமான விழாக்கள் நடக்கின்ற நிலமாக கோவை மாநகரம் திகழந்து வருவதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்..உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதற்குக் கூட தகுந்த நிலமாக கோவை நிலம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் பல சமய உறவுகளும் இந்திய மொழிகள் அனைத்தும் பேசுகின்ற கலாச்சார மக்கள் வசிப்பதும் கோவை மாநகரம்தான்.

       சென்னைக்கு அடுத்த மக்கள் தொகையில் அதிக மக்கள் வசிப்பதும் சென்னைக்கு அடுத்த வார்த்தையாக வருவதும்   அடுத்த சொற்றொடரே கோவை என்றுதான் மக்கள் வழக்கு மொழியில் வருகின்ற நிலமாக கோவை இருப்பதற்கான காரணங்கள் வேறான்றுமில்லை. ஏரளாம்..வாழத்தகுந்த நிலமும் தொழில்கள் வளரும் இடமும் இயற்கையின் பெருங் கொடையான மேற்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையும் இந்திய மக்கள் விரும்புவ தற்கான காரணங்கள்..மட்டுமின்றி கோவையில் விற்பனைக்காகக் கொட்டும் பொருட்கள் எப்படியும் விற்றுவிடும் என்பதும் ஒருகாரணம்.

 

        கோவையின் சுற்றளவில் அருபது மைல் சுற்றளவில் எங்கு தோண்டினாலும் கலைக்களஞ்சியங்களும அறிவுக்களஞசியங்களும். நவீனம் தோன்றி செழித்த செத்தழிந்த வரலாறுகளும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நொய்யலாற்றங்கரையின் வழிநெடுகே இருமருங்கிலும் மக்களின் செவ்வியல் தோய்ந்த கலைப் பொக்கிச ங்கள் புதைந்து போயிருக்கிறது..நாணயங்களும். நடுகற்களும் பாறை ஓவியங்களும் சித்திரக் கல்வெட்டுகளும் முதுமக்கள் தாழிகளும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. புராதன தொன்மத்தைப் பற்றியும் அழிந்த செவ்வியல் புதினங்களையும் படைப்பாளிகளையும் நினைவு கூர்ந்து பேசவோ எழுதுவதற்கோ யாரும் அவ்வளவு எளிதாக முன்வர விரும்புவதில்லை. கோவிலுக்கும் அரசியல் நன்கொடைகளையும் கொட்டிக் கொடுக்கின்ற ஊரில் இலக்கியவாதியின் ஐம்பது ரூபாய் நூலை வாங்குவதற்கு ஆயிரமாயிரம் முறை யோசிக்கிறார்கள்..

இது எல்லா மொழிகளிலும் மாநிலத்திலும் இந்த நிலைதான்..

இலக்கியவாதி என்பவன் உயிர் கொல்லி நோயுள்ள மனிதன் என்கிற சித்திரத்தை இந்த நூற்றாண்டு குறிப்பாக இந்திய சமூகம் படிமத்தை வரையறுத்து மக்களிடம் புழக்கத்தில் விட்டிருக்கிறது..

               எளிய மக்கள் யாவரும் கலைகள் யாவும் எமக்கே சொந்தம் எனக் கொண்டாடக் கூடிய விடுதலை உணர்வை கோவைதான் அளித்திருக்கிறது. அளவற்ற சுதந்திரம் கட்டுப்பாடுகளற்ற நவீன சிந்தனையும் முரணியக்க அரசியல் நிலைகளும் மக்களைக் கண்களைக் கட்டிக் கட்டி சுத்தி சுத்தி விட்டு பிறகு கைகொட்டி சிரிப்பதும் நடக்காமல் இல்லை.. இங்குள்ள வர்களும் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக் கிறார்கள் எனினும் கோவை கொட்டித்தரும் உள்ளுர்  லாபத்தையே நம்புகிறார்கள்..

      புத்தம்புதிய கலைகளை கலைஞர்களை அறிவியல் தொழில்நுட்பம் வேளாண்மை நவீன மரபுசார் கண்டுபிடிப்புகள் என்று தொடர்ந்து தமிழச் சமூகத்திற்கு பணியாற்றுகிற களமாகவே கோவை திகழ்வதன் காரணம் நவீனத்தையும் நவீன இயக்கத்தையும் நேசிக்கின்ற மக்களும் கலைஞர்களும் நிரம்பியிருப்பது மற்றும் சென்னைக்குப்பிறகு மற்ற மாவட்டத்து மக்களும் மாநில மக்களும் வாழ்ந்து கொள்ள படையெடுப்பதற்கும் காரணமாக இருப்பதும் பல்சமய உறவுகளும் இந்தியக் கலாச்சாரத்தின் கூறுகளாலும் நாட்டார் மரபும் தொன்மங்களும் நிறைந்த காரணமுமாகும்.

        இந்தக் கலைகளையும் கலைஞர்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் கொடையாளர்களையும் வளர்த்தெடுப்பதும்

புதிய நவீன வடிவங்களை ஊக்குவிப்பதற்கான மகத்தான மனிதர்களும் நிறைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது.

தொடர்ந்து பன்னெடுங்காலமாகவும் பல நூற்றாண்டாக நிகழும் மகத்தான இயக்கங்களுமே கோவை மாநகரை ஒரு நவீன கலைகளின் அரங்கமாகமாற்றியிருக்கிறது. அந்த மகத்தான மனிதர்கள் கலைஞர்களை நாமும் அறிந்திருக்கிறோம். ஆயினும் இந்த நூல் நவீன இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிதலையும்

அதற்கான இயக்கங்களி்ல் நிகழ்ந்த மாற்றங்களையும் பேசுகிறது.

              இயக்கம் சார்ந்த இலக்கியசெயல்பாடுகள் பற்றிய

பதிவுகள் தமிழ்ச் சூழலில் அரிதாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இலக்கிய அமைப்புகளில் பெரும் அமைப்பாக இருக்கின்ற தமுஎகச மற்றும் கலை இலக்கியப்பெருமன்றம் தங்களுடைய இலக்கிய மலர்களில் பதிவு செய்திருக்கிறது.

             மாதாந்திர இலக்கியச் சந்திப்புகளுக்கு அடிகோலியர்வர்கள்  என நாம் யோசிக்கும் போது திராவிட இயக்கமும் இடதுசாரி இலக்கியம் பற்றிய அமர்வுகளை நடத்தியது. தமிழியக்கங்கள். பெரியாரிய தொண்டர்கள் நடத்திய இலங்கைத் தமிழிலக்கிய அமர்வுகளையும் குறிப்பிடலாம். வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் மூத்த படைப்பாளர்கள் படைப்பிலக்கியமும் படைப்பியக்கத்தையும் சிறுபத்திரிக்கைகளையும் நடத்தி நவீன தமிழுக்கு உதவியிருக்கிறார்கள். தமுஎகசங்கம் மற்றும் க.இ.பெ.மன்றம் தொழிற்சங்கப் பிடிப்பினை இலக்கியமாக மாற்றிட முயன்றதைக் குறிப்பிடவேண்டும்.

        இலக்கியத்திற்கு ஒரு இயக்கம் தேவையில்லை என்பதும். கலை கலைக்காகவே என்கிற தொடரும் மக்களிடமிருந்து நவீன இலக்கியத்தைப் பிரி்த்து வைத்திருக்கிறது. அந்த மரபை மாற்றுவதற்கு தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருக்கும் முக்கியமான நவீன படைப்பாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு பெயரில் நவீன இலக்கியத்தை இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் கலைஇலக்கிய அமைப்புகளில் பணியாற்றியவர்கள் என்றும் கூட சொல்லலாம்.

           கோவை மாநகரில் பல்வேறு அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக பல சமுதாய மக்களால் தமிழிலக்கிய நிகழ்வுகள் நடந்து வந்திருக்கிறது. மத நிறுவன அமைப்புகளும் கூட இலக்கியப் பிரதிகளை முன்னிறுத்தியபடி கூட்டங்களை நடத்தியிருப்பது அறிய முடியும். பிரதிகளை முன்னிறுத்தி கலையின் தீவிரத்தை மக்கள் அறியவும் கலைகளின் மீது ஆர்வமுள்ள மனிதர்களைக் கண்டு பிடிக்கவும் மேம்படுத்தவும் மகத்தான மனிதர்கள் செயல்பட்டுள்ளனர். அதற்காக அவர்கள் இழந்தவைகள் ஏராளம் ஏராளம்..ஏதோ சுதந்திரப் போராட்டமோ, அல்லது அரசியல் இயக்கமோ குறுநில மன்னர்களை எதிர்த்து மட்டும் மக்கள் தம்மை இழக்க வில்லை. இலக்கியம் மொழி. படைப்பு நவீன மொழி வாழ்வியக்கம் பற்றியும் மகத்தான மனிதர்கள் தம் வாழ்வையும் பொருளையும் இழந்துள்ளார்கள். இவ்விடம் அரசியல் வாழ்வுதான் பேசப்படுகிறதே ஒழிய இலக்கிய வாழ்வு பேசப்படுவதேயில்லை. அதையும் ஒரு இலக்கியவாதிதான் தனக்குத் தானே மாரடித்து அழுதுகொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒரு அரசியல்வாதியின் முந்தானையின் வழியாக இலக்கியவாதியின் வாழ்வைப் பேசவேண்டிய நிலையை இந்த நூற்றாண்டில்தான் உருவாக்கியிருக்கிறோம் இதற்காக யாரை நொந்து கொள்வது எனத்தெரியவில்லை. அரசவைகளில் இலக்கியவாதிக்கு என்று தலைமைப்பீடம் இருந்தது. சுதந்திரம் பெற்ற பிறகும்கூட எந்த மாநிலத்திலும் மத்தியத்திலும் அரசசபைகளில் இலக்கியவாதிக்கு மரியாதையோ இடமோ இல்லை.

         ஏன் இல்லையெனில் அவனைக் கொண்டு வைத்துக் கொள்ளவில்லை என்றால்... அவன் உண்மை பேசுவான்.அறம் பாடுவான்.சத்தியம் சொல்வான் நம் அரசுகளுக்கு அவையெல்லாம் வேப்பங்காயைப் போல் கசப்பதாயிற்றே..

    போகட்டும்.. இதற்காக கோவையில் ஒரு கவுன்சிலர் சீட் கேட்பதாக அரசியல் கட்சிகள் நினைத்துவிடவும் வாய்ப்பு உள்ளது.

காலப்பிரதியின் சங்கமும் பிரதியின் காவலனும் ஆண்டு அரசு நடத்திய நிலம் இன்று அரசிலிருந்து தவிர்க்கப்பட்டதின் விளைவாகவே இத்தனை கோடானு கோடி ஊழல்கள்..இன்னும் அதே பிச்சைப் பாத்திரம் ஏந்தியபடியாக கோவில்களிலும் ரேசன் கடைகளிலும் இந்த நூற்றாண்டிலும் 70 சதவீகித மக்கள் காய்வது மொழியையும் கலைஞனையும் தவிர்த்த காரணத்தினால் தான்..      

         பொதுப் புத்தி மக்கள் வேறுவேறு காரணங்கள் சொல்லித் தேற்றிக்கொள்ளும் போது நமக்கு நகைப்புதான் வருகிறது. தற்கால எதிர் நவீனச்சூழல் இலக்கியத்தையும் படைப்பையும் பொழுது போக்கு காரணியாக மாற்றியிருக்கிறது. இலக்கியம் பொழுது போக்கிட உதவுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதை துயரத்துடன் பார்க்கிறோம்.

         தற்போது சிறுபத்திரிக்கை உலகம் மற்றும் தீவிர இலக்கிய வாதிகள் தம்மை இழந்து மொழிக்கும் படைப்புக்குமாகப் பணியாற்று கிறார்கள் என்பது கூட பல பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கோ மெத்தப் படித்தவர்களுக்கோ கூட அறியாமலே தான் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் போய் முக்கியமான இலக்கிய மேதைகள் பற்றிக் கேட்டால் அப்படியா வீடு எங்கே என்கிறார்கள்.

தமிழ்ச் சூழலில் ஒரு நவீன இலக்கியப் படைப்பு இயக்கம் இதழியக்கம் வெளியீடு, அரங்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது கூட அறியாத அறிவுலகமும் இயங்குகிறது. என்பதையும் அறிய வேண்டியும் உள்ளது.

               திருவள்ளுவர் பாரதி பாரதிதாசன் பெயர்களில் இயங்கியவர்களுக்குப்பிறகு புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கு.சின்னப்பபாரதி, கந்தர்வன்,பூமணி,தமிழவன், போன்ற வர்களின் பெயர்களில் ஏன் இலக்கிய அமைப்புகள் தோன்றிட வில்லை. அல்லது அந்தப் பெயரி்ல் இயங்கும் அமைப்புகள் நவீன இலக்கியத்தை ஏன் பேசவில்லை. என்ன அவர்களுக்கு நெருக்கடி என்றெல்லாம் கேட்கத்தோன்றுகிறது. நம்மிடம் கோடானு கோடி காரணங்கள் உண்டு. அரசியல் வாதியின் ஊழல்போல் சொத்தையான காரணங்கள்..

            எனினும் நவீன இலக்கியம் படைப்பு எழுத்து இயக்கம் பற்றிய பதிவுகள் இயங்காமல் இல்லை. ஒருபுறம் தேய்ந்து சுடுகாடாய்ப் போய்க்கொண்டிருந்தாலும் மறுபுறம் தொன்மத்திலும் நவீனப் படைப்புலகம் பற்றி இயங்கியவர்களும் வாழந்திருக்கிறார்கள்.

இயங்கவும் செய்கிறார்கள். கோவையில் இடையறாத இயக்கத்தை இலக்கியப்பதிவுகளைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக தற்போதும் மாதாந்திர சந்திப்புகளை நடத்துபவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

தமது வருவாயில் ஒரு பகுதியை இலக்கியப் படைப்புக்கு தருகிறார்கள்..

         அமைப்பு சார்ந்து தமுஎகச மற்றும் கஇபெ மன்றமும் முக்கியமானவைகள். பக்தி இலக்கியம், மத கோட்பாடுகள் கொண்டிருக்கும் அமைப்புகள் கூட அவ்வமைப்பு சேர்ந்த இலக்கிய வாதிகளை அழைத்து இலக்கிய நிகழ்வுகளை கோவையில் நடத்துகிறார்கள்.என்பது மகிழ்வான செய்தியே.

         நெருஞ்சி இலக்கிய முற்றம் சில கால்கோள்களை நட்டது என்றால் மிகையில்லை. நவீன படைப்பிலக்கிய வகைமைகளை சிறப்பாக தமது சந்திப்புகளின் வழியாக அறிமுகம் செய்தார்கள்.

யமுனா ராஜேந்திரன்.எஸ்.பொ.இந்திரன், போன்ற படைப்பாளிகளை அழைத்த சர்வதேச இலக்கியப் படைப்புகள் பற்றியும் விவாதிக்கப் பட்டது. காலத்தின் சூழலில் இயக்கமும் சந்திப்புகளும் நின்று போனதில் எங்களைப் போன்றவர்களுக்கு பெரும் இழப்பாகவே தோன்றியது. அவ்வப்போது இலக்கியச் சுழல்களுக்கேற்ப நடத்தப்படும் நிகழ்வில் பங்கு கொண்டு பசியாறிக்கொள்வோம்.எனினும் இட்டு நிரப்பமுடியாத துயரம் வெறுமையும் தீரவில்லை.பொள்ளாச்சி, திருப்புர் ஈரோடு என்றும் சேலம் மதுரை சென்னை திருவண் ணாமலை திருச்சி தஞ்சாவுர் என திசைகளெல்லாம் ஓடி ஓடி நிகழ்வுகளை கேட்டும் சிறுபத்திரிக்கை வாயிலாக அறிந்து நண்பர்களுடன் பரிமாறிக்கொள்வதகாவே இருந்தது. இதுவேமேலும் மேலும் கோவையில் இலக்கிய நிகழ்வுகளை நடத்த ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது.

          பொன் இளவேனிலின் மணல் சிற்பம் கவிதை நூல் வெளிவந்தது ஒரு திருப்பமாகப் பட்டது. அப்போது நாங்கள் சிதம்பரம் புங்காவி்ல் புத்தகபண்டலை வைத்துக் கொண்டு அநாதைகள் போல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். நமக்கென்று யாராவது இருந்திருந்தால் இந்தப் பொழுதை எப்படிக் கொண்டாடிருப்பார்கள்..

நாம் நம் வாழநாளில் எத்தனை நேரம் பொருளை இழந்து எத்தனை படைப்பாளிகளைக் கொண்டாடி இருக்கிறோம். ஏன் நாம் எழுதாமல் பிறரை ஊக்கப் படுத்தினோம். இலக்கியமும் படைப்பும் செழிப்பும் மொழி வளமும் வளரவேண்டும் என்பதற்காகத்தானே பாடுபட்டோம். அவர் நிலத்தை பிடிங்கினோமா. அவர்கள் பெண்டுபிள்ளைகளைக் கவர்ந்தோமா. எங்கு போனார்கள் எல்லாம். இருபது ஆண்டுகள் பட்ட பாடு எங்கே..என்னவெல்லாமோ தோன்றியது.

         இயக்கமோ அமைப்போ கூட வேண்டாம்.நான்கைந்து படைப்பாளிகள் கூடிப் பேசுவதற்குக் கூட இந்த மண்ணில் வாய்ப்பில்லையா. பாரிலோ புங்காவில் அமர்ந்துகொண்டு நம்மை வெறிக்கப்பார்ப்பவர்களைக் கண்டு பயந்து பயந்துதான் இலக்கியம் பேசவேண்டுமா. நாமென்ன பொரிகடலை யாவாரிகளா இலக்கியவாதிகளா..என்ன செய்யலாம் என்றேன் இளவேனிலிடம்

அவரோ..முயற்சி செய்வோம். வருகிறவர்கள் வரட்டும்..என்று தெம்பளித்தார். நாங்கள் பால்ய காலங்களில் இலக்கியம் பேசிய மனிதர்களிடம் எல்லாம் தொடர்பு கொண்டோம்.

         சில முக்கியமான இலக்கியவாதிகள் மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு ஊர்ல கிழிச்சது பத்தாதுன்னுட்டு கோயமுத்தூர்ல கிழிச்ச மாதிரிதான் என்றார்கள். டேய் அது கோயமுத்தூர்டா பள்ளபாளையமோ பீடம்பள்ளியோ இல்லை..என்றார்கள்

சிலர் மரக்கன்று நடலாமே. இலவச ரத்ததான முகாம், வேலை வாய்ப்பு பயிற்சி, முதியோர் இல்லம், கன்சியுமர் வாய்ஸ். பேன்சி மருந்துகள், நாட்டு மருந்துகள், அல்லது ஏஜென்சி குறைந்த பட்சம் ஆம்னி வேன் ஒன்று பிடித்து நீங்கள் இருவரும் பெங்களுர் போய் ஜீன்ஸ் டிசர்ட் ஃபாசன் சாரிகள் உள்பாவாடைகள் எடுத்து விற்றால் நல்ல வருமானம் வரும் என்றார்கள்..சிலர் ஐயாயிரம் போடுங்க..நீங்க மூன்று பேரைப் பிடிச்சுக்குடுத்துட்டு ஐயாயிரம் எடுத்துக்கங்க.. என்றார்கள்..தமிழ்நாடும் இந்தியாவும் இலக்கியவாதியை ஏன் கொண்டாட வில்லை என்பதற்கான காரணங்கள் புரிய ஆரம்பித்தது.          

 

        ஒரு படைப்பாளியை அழைத்து அவரின் நூல்களைப் பற்றிப் பேசுவது இழிவான செயலா என்ன..ஒருவர் நன்கொடைக்கு இப்படியொரு வடிவமா என்றார். போகட்டும் நாளைப் புத்தாண்டு..

நகரமும் தேவாலயங்களும் சீரியல் லைட்டுகளால் மின்னிக் கொண்டிருந்தது. மனமெல்லாம் இருளோ இருள்..புத்தக பண்டலிலிருந்து அப்படியே ஒவ்வொன்றாய் போகும் வழியில் எறிந்து விட்டுப் போகலாமா என்றார். இளவேனில்..பொறுமை...என்றேன்..

முதலில் மெழுகுவர்த்தி வாங்கிடலாம்....என்பதாக முடிவுடன்

இடம் மாற்றி சலவைக்கல் மேடையினருகில் காதலர்கள் அருகில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தோம்..என்ன செய்யலாம் ..

              

           புத்தாண்டு பிறக்கிறது.

      

      ஒரு வரிசைக் கிரமமாக இருக்கட்டும் 2011 ஜனவரி அன்று முதல் ஒரு அமர்வு நடத்தலாம் பிற்பாடு எப்படி வரவேற்பு இருக்கிறது எனப் பார்த்துவிட்டு மற்றதை யோசிக்கலாம். என முடிவானது..இன்று வரை படைப்பாளிகளைச் சந்தித்தும் அழைத்தும் உரையாடிவருகிறோம்..இலக்கியக் களமும் மனங்களும் விரிவடைந்துள்ளது. பங்கேற்பாளர்களும் படைப்பாளர்களும் அதிக பட்ச ஆதரவை அளித்து உற்சாகப் படுத்துகிறார்கள்..

 

      இலக்கியவாதியும் சுதந்திரப்போராட்ட தியாகியுமான வ உ சிதம்பரம் பிள்ளை பூங்காவின் ஆசீர்வாதம் வீண்போகவில்லை...இதை எழுதிட வாய்ப்பு அமையும் என்று தமிழின் மீது சத்தியமாக நினைக்கவில்லை..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக