மனசாட்சியின்
உண்மைபிரதியும்
நகல் பிரதியும்
உரையாடும் வைபவம்
உபதலைப்புகள்-1. அந்தரங்கம்
யாவுமே சொல்வதென்றால் பாவம் அல்ல-
2. அந்தரங்கம் ஊமையானது அல்ல-உண்மையானது கலைமயமானது கவித்துவமானது
கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்
ஷங்கர்ராமசுப்ரமணியனின்
முதல் உரைநடைப்புத்தகம்..
நூல் பற்றி.. இளஞ்சேரல்..
லஷ்மி மணிவண்ணனுக்கு சமர்ப்பணம்
செய்யப்பட்டிருக்கும் இந்த நூலில் மொத்தம் 27 கட்டுரைகளாக அல்லது அனுபவப்
பத்திகளாகவும் இடம்பெற்றிருக்கிறது.
நினைவின்
குற்றவாளி நகுலன் கட்டுரை தீராநதியில் வெளியான நகுலன் பற்றிய அவதானிப்பும் விரிவான
மனஉலகத்தையும் விவரிக்கிறார்.
நகுலன் நாவல்களான ”நினைவுப்பாதை” ”நாய்கள்”, ”சில அத்தியாயங்கள்” ,”நவீனன் டைரி”,”அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி” ”வாக்குமூலம் நாவல்களிலும் நிகழும் உரையாடல் மற்றும் விசாரத்தில் கிடைக்கும்
அபத்த அனுபவத்தை எப்படியோ அவர் தன் மொழியின் இசைமை வழியாக உருவாக்குகிறார்.
(பக்-17) நாவல்களின் பால் நகுலன் உருவாக்கிய பதற்றமான தனிமையின் வெம்மையைப்
பேசுகிறார். நகுலன் எழுத்துகளில் இருக்கும் வசீகரமே அவருடைய தனித்தமைந்த
மனஉரையாடல்தான். அது போலவே நகுலன் சிறப்பிதழாக உயிர்மையில் வெளியான பத்தியும்
முக்கியமானது. நகுலன் பற்றி எழுதப்பட்ட பத்திகளில் உளப்புர்வமான பதிவுகளாக உள்ளதை
வாசிப்பவர்களும் அறியலாம்.
(தலைப்பு-நன்மையும்
சாசுவதம்-ஆனால் தீமையும் சாசுவதம்)
நகுலன் எனும் புனைப்பெயரின் பின்புலம்
பற்றி எழுதும் போது (பக்35) மகாபாரதத்தில் நகுலன் என்னும் கதாபாத்திரத்தின்
இருப்பு ஒரு விளிம்புநிலை. சதா எதிர்நிலைகளிலேயே பழகிவி்ட்ட பொது மன,பௌதீகப்
பரப்பை (ராமன்,ராமணன், அர்ச்சுனன், துரியோதனன்) அதன் தர்க்கங்களின் கொலைக்கூர்மையை
முனை மழுங்கச செய்யும் எழுத்தாள கதாபாத்திரம் நகுலன். அவர் புனையும் ராமாயணத்தில்
(நகுல ராமாயணம் என்றே மூன்று,ஐந்து, தொகுதிகளைக் குறிப்பிடுவார் கோணங்கி)
கும்பகர்ணன் ராமனுடன் உரையாடும் பகுதியில் அரக்கர்,நாகரீக மனிதர் என்ற எதிர்
நிலையில் உரையாடல் இடம்பெறுகிறது. தத்துவம்,மதம், அமைப்புகள் எல்லாவற்றின்
தோல்வியையும கும்பகர்ணன் போட்டுடைக்கிறான். ராமனின் அம்பில் வீழ்ந்து மரணமுறும்
போது ”ராமா என்னிலும் அசுரன் நீ என்றுரைத்து மரணிக்கிறான். இந்தக் கும்பகர்ணக்
கூற்றில் ராமன், ராவணன் இருவருமே ஒரே நிலைமையின் இரு அபாயங்களாக மாறுகின்றனர்.. -ஷங்கர்ராம சுப்பிரமணியன் நாவலைச் சுருக்கித்தருகிறார்.
நகுலன் படைப்புலகம் பற்றிய முக்கியமான அம்சங்களை பதிவு செய்திருப்பது நகுலன்
படைப்பின் ஆழமான வாசிப்பிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கலாப்ரியாவின் நூலான நினைவின் தாழ்வாரங்கள்
நூலுக்கு ஷங்கர் எழுதியுள்ள முன்னுரை அற்புதமானது. நினைவி்ல் அடுக்குகளில்
தங்கிவிட்ட பழைய இழப்புகள் கொஞ்சம் கொஞ்மாக துளிர் விடும் சமயங்களில்
இழப்பிற்குண்டான மனம் உளறும் மொழியாக அறியமுடிகிறது. பக்-26 கலாப்ரியா பற்றிப்
பேசும் போது, மாறும் காலத்தின் கோலத்தில் சகலமும் எனக்கு ஊறு விளைவிக்கலாம்” என்று பசியற்ற காகங்களை தன் மூளையைக் கொத்த அனுமதித்தவர் கலாப்ரியா என்கிறார்.
நூற்றாண்டு காலத்தனிமை நாவலின் மக்காந்தோ
ஊரைப்ற்றி வரும் சித்தரிப்பை கவனப் படுத்துகிறார். ”அந்த உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியது அங்குள்ள பல பொருட்களுக்குப்
பெயரில்லை. அவற்றைக் குறிப்பதற்கு
சுட்டிக் காட்டுவதுதான் அவசியமாக இருந்தது” என்கிறார். பக்-22. உரைநடை வழியாக எழுதிச் செல்லும் உரைகவி என்பதாகவே
அமைந்திருக்கிறது. சில சமயம் உக்கிரமான மொழியும் சில சமயம் அறத்தின்
தரிசனமாகவும் மொழி அமைந்துள்ளது. கவிதைகளை
எழுதுகிறவர்கள் உரைநடை எழுத்திற்கும் கட்டுரை மற்றும் பத்திகள் எழுதுபவர்களின்
உரைநடைக்கும் எத்தனையெத்தனை வித்தியாசம்.
விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் என்கிற தலைப்பே திடுக்கிட
வைக்கிற சமாச்சாரம். கவிதை சமயத்திற்கு பொருத்தப்படுவதை கொதி நிலையுடன்
வாசிக்கவேண்டியிருக்கிறது. விளக்கு விருது அளிப்புக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட
பத்தி
ஐந்து பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கிறது. விக்ரமாதித்யனின் உலகை குப்பியில் ஊற்றியோ அடைத்து வைத்து
எடுத்துப் பேச முடியாது. தனது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் புதிர்களைக் கூட
கவிதையாகப் பார்ப்பது உடனடிக் கவிதைகளாக எழுதியும் விடுவதை ஒரு யோகியாக வாழ்வதைச்
சொல்கிறார். 18 ஆம் வயதில் படித்த ஒரு கவிதையை பதிந்து காதலின் தவிப்பை உணர்ந்த
விதத்தைச் சொல்கிறார்.
---கவிதை என்ற வடிவத்திலேயே தன்
முழுவாழ்வையும் வெளிப்படுத்தும் மூர்க்கத்தில் கொள்ளும் தோல்விகளும் அப்பட்டமாக
வாசகன் முன் நிற்கின்றன.---
இல்லாமையும்
கீழ்மையும் தோய்ந்த அவற்றை பஷீர் போல உயிர்த்துவத்துடன் எழுதத்தொடங்குவதற்கு இந்த
விருது அவருக்குத் தூண்டுதல் அளிக்க வேண்டும் என்று நான் பிராத்திக்கிறேன்..பக்-33
---என முடிக்கிறார். பஷீர் எழுத்தும் வாழ்வும் கடைக்கோடி உதிரிமனிதர்களின்
வலிகளையும் உணர்வுகளையும் எழுதியவர். ஆனால் விக்ரமாதித்யன் எழுத்தும் கவிதையும்
நடுத்தர பொருத்து மனோபாவம் தள்ளாடும் மனித மனதின் புதிர்களை மட்டுமே
விடுவித்திருக்கிறது. தன்னை வெளிப்படையாகவே ஆம் நான் ஆணாதிக்கம் கொண்டவன் தான் என
தைரியமாகவோ அல்லது கலைஞனின் பிரகடனமாகவே அறிவித்துக்கொண்டதையும் நாம் ஞாபகம்
கொள்ளலாம். பத்தியில் நீளும் வாக்கியங்கள் சிலாகிக்கக் கூடியவை..
”கடல் நீர் சில நேரங்களில் இனிப்பாவதைப் போல கூட்டுணர்வும் இனிப்பானது”-எரியும் நகரத்திலிருந்து மண்டோ கட்டுரை புதிய காற்று இதழில் வெளியானது.
ஷங்கரின் பத்திரிக்கையாளர் குறிப்பேடு போலவும் காலத்தின் பதிவாகவும்
அறியப்படுகிறது.-சில வரிகள் பக்49-
மும்பையில் கடல் இனிப்பான பிறகு
இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் உள்ள கடல்களும் இனிப்பானது. குஜராத்திலும் கடல்
இனிப்பானதில் நமக்கு ஒன்றும் ஆச்சர்யம் இருக்காது. ரத்தமே அவ்வப்போது தித்திக்கும்
நிலம் தானே அது.—ஷங்கரின் எனும்
கவிஞன் எழுதிய வரிகள்.
மண்டோவின்
படைப்புகள் பற்றிய விரிவான கட்டுரை. அது போலவே அ.மார்க்ஸ் மற்றும் ராமானுஜம் கட்டுரைகள் முக்கியமானவை. முரண்பாடு
என்னவெனில் தமிழ் எழுத்தாளனை மண்டோவோடு ஒப்பி்ட்டு விசனமடைந்திருந்தனர்.—தமிழ் எழுத்தாளனின்
மேன்மையான
படைப்புகளுக்காக தமிழகம் கலவரச் சூழல்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும். என்பதே
நமது பிரார்த்தனையாக இருக்கவேண்டும் பக்-57 என்கிறார். எழுத்தை உற்று நோக்கும்
காரணங்கள் மாறியிருப்பதை நான் தற்காலத்தில் வேறு விதமாகக் காண்கிறோம்..
இரண்டாம் பருவத்தின் காதலின் காதை
என்கிறார் தேவதேவனின் கவிதைகளை.
விளக்கு விருது
வழங்குவிழாவில் வாசிக்கபட்ட கட்டுரை. மூன்று பக்கங்களே கொண்ட பத்தியில் சொல்லப்பட
வேண்டிய ஆழத்தை அற்புதமாக எழுதியிருக்கிறார். தேவதேவனின் கவிதைகள் குறிப்பாக சிறிய
கவிதைகள் தனியாகத் தொகுக்கப்பட வேண்டும் என்கிறார். அவை நவீன கவிதை மரபின்
உட்சபட்ச கவித்துவ அறிதல்கள் என்கிறார்.
அதற்கு அவர் சமீபத்தில் வாசித்த புத்தகமான மார்கெர்த் யுர்ஸனார் எழுதிய
கீழைநாட்டு
கதாபாத்திரம் பேசும் கூற்று ஒன்று ”கடவுள் எனும் ஓவியர் இந்த உலகில் அழகானதை மட்டும் படைப்பதோடு
நிறுத்தியிருக்கிலாம்..” மேலும் தேவதேவன் கவிதைகள் பற்றிக் கூறும் போது ”—இந்தளவு மகிழ்ச்சியை ஊற்றாக இயல்பைக் கொண்டுள்ளவனின் துன்பம் தான் என்ன? அவன்
மகிழ்ச்சியை சுமையாக்கும் தருணம் எது? தேவதேவனின் கவித்துவ விசாரணையின் முக்கிய
கூறுகளில் ஒன்றாய் இந்த அம்சம் இருக்கிறது. பக்-42 . தேவதேவனின் ஒருமைப்பாணி
கவிதைகள் சில சமயம் அலுப்புட்டுகிறதையும் கவனிக்கலாம்..
நான் எனும் நிழல் உருக்களுடனான சமர்
எனும் தலைப்பிலான கட்டுரையில் சி.மோகன் கவிதை மற்றும் படைப்புகளைப் பேசுகிறது.
சி.மோகன் குறித்து நான் வாசிக்கும் கட்டுரை நெடுங்காலத்திற்குப் பிறகு இதுதான்.
பேரா.ஆல்பர்ட்
குறித்த
கட்டுரைகளும் குறைவாகவே பதிவாகியிருக்கிறது. நவீன் தமிழிலக்கியச் சூழலில் சி.மோகன்
சலனமின்றி இயங்குகிற ஆளுமை. அவர் எந்த நிலையிலும் வெளிப்படுத்திக் கொள்ளாத ஆயினும்
தனது வசீகரமான படைப்புகளால் அழுத்தமான தடத்தை பதிந்திருப்பவர். தன் வாழ்நாளி்ல்
அதிகமான படைப்புகளை வாசிப்பதிலும் தேர்வு செய்வதிலும் பணிக்கப்பட்டவர்.
---மோகனின் படைப்புவெளியை,உடலின் இரவுப்
பிராந்தியத்தைப் பேச்சின் ஒளியால் பேச்சற்றதன் இருட்டால் துலக்க முயல்கின்றன
எனத்தற்காலிகமாக இட்டுப் பார்க்கலாம். ஒரு தூண்டிலை அல்லது நங்கூரத்தை.ஆடும்
தூண்டிலைத் தொடரும் சிந்தனை அழுத்தி நிலைக்க வைக்கவேண்டும் நங்கூரமாக்கிவிட்டால்
கவிதை சுமையாகிவிடும். சிந்தனையை ஏற்று நங்கூரத்தையும் தூண்டில் போல் ஆடச்
செய்யும் அழகு மோகனின் கவிதைகளில் சாத்தியமாகியுள்ளது. பக்-47----என்பது
சரியானதே..
கீழைநாட்டுக் கதைகள் என்னும் பண்பாட்டு
யாத்திரை –பத்தியில்
மார்க்கெரித் யுர்ஸ்னார். அவருடைய புராணிகத்தையொட்டிய கதைகள் ஆச்சர்யத்தைத்
தருகிறது. வரைபடங்களிலிருந்து நிலப் பரப்புகளைக் கொண்டு அவர் உருவாக்கிய
கதைகள்தான் கீழைநாட்டுக் கதைகள்.கிரீஸ் பால்கன் நாடுகள், இந்தியா,சீனா,ஜப்பான்,
போன்ற தேசங்களில் நிகழும் புராணிக தொல்கதைகளிலிருந்து தன்னுடைய புனைவை இணைத்து
இக்கதைகளை உருவாக்கியுள்ளார். அதீதமான சொல்புனைவின் வழியாக அவர் இந்திய மரபு
இதிகாசங்களைக் கட்டுடைத்திருக்கிறார் எனக் காண முடிகிறது.
பிரஞ்சிலிருந்து கிரியா பதிப்பகம்
நேரடியாக மொழிபெயர்த்து அளித்திருக்கிறது.
மணல்புத்தகம் நூலில் வெளியான
கட்டுரையில் அந்தக கதைகள் பற்றிய பல அதிபுனைவுகளை ஷங்கர் சுருக்கித்
தந்திருக்கிறார்.
சிரிக்கும் சூஃபி முல்லா கட்டுரையில்
முல்லா பற்றி ஓஷோவின் மேற்கோள்களுடன் அற்புதமாகப் பொருத்தியிருக்கிறார். அவர்
முல்லாவைப் பற்றிப் பேசும் போது ”மதத்தையும் சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர்
முல்லா நஸ்ருதீன் அதுவரை மதமும் நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன.
அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும் நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்க ளாக்கியவர்
சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும் போது தியானம் போன்ற
அற்புதம் நிகழ்கிறது. இந்தியர்கள் கடவுள் மற்றும் பிற விசயங்களில் மிகத் தீவிரமாக
இருப்பவர்கள் அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது
சங்கராச்சாரியார் சிரிப்பதோ மகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம் என்கிறார்
ஓஷோ. எனும் மேற்கோளை ஷங்கர் எடுத்தாள்கிறார். கச்சிதமாகப் பொருந்துகிறது.
நகைச்சுவை உணர்வை சமூகம் வளர்த்துக் கொள்ளமால் இருந்திருந்தால் மட்டும் போதும்
மக்கள் தொகை 600 கோடிக்குப் பதிலாக ஆறு
கோடிதான் இருந்திருக்கும். அப்படியேவும் இருந்திருக்கலாம் தப்பில்லை
எனத்தோன்றுகிறது.
மறதிக்குள் தொலைந்தவள்- பத்தியில் ஒரு
பத்திரிக்கை செய்தியாளன் அடையும் காட்சித்துன்பத்தைப் பேசுகிறார். பொது
மருத்துவமனை, கமிஷ்னர் அலுவலகங்களில் செய்திகளைச் சேகரிப்பவர்களின் செய்திகள்
எப்படி பத்திரிக்கை செய்தியாக மாற்றப்படுகிறது. கொலை, தற்கொலை செய்திகள் எப்படி
அழகான வசீகரமும் மிக்கதான வாக்கியங்கள் செய்யப்டுகிறது என்பதை பகடியும் துயரத்துடனும்
பேசுகிற பத்தி. அதை நீங்கள் நூலில் வாசிக்கும் போதுதான் துயரை முழுமையாக அரிய
முடியும்.
அம்மாவும் நிலவும் –பத்தியை ஒரு உரைநடைக் கவிதை என்று சொல்லலாம். தேவதச்சனின் ”எனக்கு ஞாபகம் உள்ள பௌர்ணமிகள்” கவிதைகளினூடே தனது அம்மா மற்றும
பௌர்ணமிகள் பற்றிய காட்சிகள். அதில் முருகன் பற்றி தனது அம்மா சொன்னதாக ஒரு
வாக்கியம் உண்மையும் சத்தியமுமான
”கந்த சஷ்டி கவசம்
படிக்கிற பெண்கள் எல்லாருக்குமே இவன் கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் கொடுப்பதில்லை” என்பதை ஞாபகப்படுத்துகிறார். மட்டுமின்றி ஷங்கரின் கவிதைகளின் முதல் வாசகியாக
தனது அம்மா இப்போதும் இருக்கிறார் என்பது பிரமிப்பான விசயமே..
போரன் சோப் என்னும் புபேன் கக்கரின் கதை உயிர் பற்றிய பத்தி காமம்
பற்றிய விரவணையும் அதன் உடற் பின்னணியைப் பேசுகிறது. ஷங்கரின் நுட்பமான வாக்கியப்
பிரயோகம் அதீதமானது. கதையின் உள்சரடாகவும் மைய இழையையும் ஒரு பாராவில்
அடக்குகிறார்.
போரன் சோப், எல்லோரும் உபயோகப் படுத்தும்
மறு உற்பத்தியே செய்ய முடியாது மறைந்து போகும் கடவுளைப் போன்ற காமத்தின்
ஆன்மீகத்தைப் பேசுவதுதான்.-ஷங்கர் இவ்விடத்து கடவுளைப் போன்ற காமத்தின் ஆன்மீகம்
என்பது
அசாத்தியமான படிமமும்
சமய வார்த்தையுமாகிறது..
தனது முதல் ஆசிரியனாக வரித்துக் கொண்ட
சுந்தரராமசாமி பற்றிய குறிப்புகள் நூலின் ரசவாதமாக இருப்பது. அவர் மறைவையொட்டி
வெளியிட்ட தனது துண்டுபிரசுரம் என்கிறார்.அநேகமாக துண்டுபிரசுரம் என்கிற சொற்றொடரே
அதீதமான புனைவு. நம்மிடமிருக்கும் பிரசுரங்கள் எல்லாமே தீவிரத்தைப் பேசுகிறவை.
புரட்சிக்கு அழைப்பவை. அதாகவே நவீன இலக்கியப் புரட்சியை விதைத்த சுந்தரராமசாமி
பற்றிய குறிப்பை துண்டுபிரசுரம் என்பது பொருத்தமே.. தனக்கும் தன் வாழ்விற்கும்
குடும்பத்திற்கும் உறவின் தொடுப்பாக அவர் இருந்ததை நினைவு கூர்கிறார். தனது மணல்
புத்தகம் நூலுக்குக் கவிதைகள் கேட்டு எழுதிய ஷங்கருக்கு பதில் எழுதியும் தனது
குடும்பம் பற்றி விசாரித்த பண்பை நட்பை எடுத்துரைக்கிறார். அது போலவே ”குழந்தைகள், ஆண்கள். பெண்கள்” நாவல் குறித்து அவருக்கு உள்ளுர
நம்பிக்கையும் வாசகர்களின் எதிர்வினை குறித்து எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால்
அந்த நாவல் எங்களிடம் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. அதை அவரிடம் பகிர்ந்து கொள்ளும்
சுதந்திரத்தையும் அவர் உருவாக்கித்தந்திருந்தார்.” பக்89. சு.ரா.வின் எளிய நேர்மை கொண்ட ஆளுமையையின் கம்பீரத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
எண்ணற்ற சம்பவங்கள். ”மன எழுச்சியில் அவர் முன் நான் சில வேளைகளில்
சிகரெட்டுகளைப் புகைத்தபடி குதித்திருக்கக்கூட
செய்திருக்கிறேன்..” என்கிறார் ஷங்கர். அதுமட்டுமின்றி
”ஓர் எழுத்தாளனாக
என் உரைநடையிலும் லஷ்மி மணிவண்ணன் உரைநடையிலும் சு.ரா.வின் செல்வாக்கைப் பார்க்க
இயலும்....” ஷங்கர் நேர்மையாக ஒப்புக் கொள்வதற்காக அவர் மீதும் சு.ரா.வின் உரைநடைமீதும்
பிரியம் ஏற்படுகிறது..
வர்கீஸின் கண்கள் பத்தி ஒரு என்கௌண்டர் செய்த
காண்ஸ்டபிளின் பின்னணி.
30 வருடங்களுக்கு
முன்பாக செய்த கொலையை ஒப்புக் கொள்கிறவரைத் தேடி அலைந்த கட்டுரை. அதில்
போலீஸாருடன் மோதல் சாவில் கொல்லப்பட்ட வர்கீஸின் உடல்களிலிருந்து பிடுங்கப்பட்ட
கண்கள் திருநெல்லிக் காடுகளின் மீது இரண்டு நட்சத்திரங்களாக முளைக்கும் என்பதும்
அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.. (பக்93) அந்த சந்திப்பும் பிரச்சனைகளும்
கவிஞனுக்கு வாய்ப்பது எத்தனை கசப்பானது..
இடிபாடுகளுக்கிடையி்ல்- கட்டுரையும்
கூட அனுபவம் சார்ந்தது. எஸ்.ராமகிருஷண்னின் ”தாவரங்களின் உரையாடல்” அறிமுகக்கூட்டத்தைப் பற்றி துவங்கி அதற்கு வந்திருந்த
வெளி.ரங்கராஜனின் இருகட்டுரைகள் பற்றியது. வெளி ரங்கராஜன் தமிழ் நவீனச் சூழலில்
முக்கியமான ஆளுமை. அவருடைய இயக்கம் தாம்
இயங்கும் நவீன
நாடகம் மட்டுமில்லாமல் இலக்கியப் பதிவுகளிலும் ஈடுபடுகிறவர்.
அவர்
சர்ச்சைகளுக்குள்ளே,பரபரப்பிற்குள்ளோ அவர் நிற்பதுமில்லை. அதைப் பற்றித்
தொடர்வதுமில்லை.
---எழுத்து, கலை
இலக்கிய வெளியில் தீவிர நம்பிக்கை கொண்டு இருப்பின் சிக்கல் களுடனும் அதிரும்
நட்பு முரண்களுடன் இன்று இயங்கும் மூத்த படைப்பாளிகளே புறக்கணிக்கும் இளம்
எழுத்தாளனின் மனநிலைகளை ரங்கராஜனால் இயல்பாக உணரமுடிகிறது --பக்-99
ஒரு பிரபல நாளிதழில் பணிக்குச் சேர்ந்து
பிறகு நீக்கப்பட்டதும் தற்கொலை செய்து கொண்டதை ரங்கராஜன் எழுதியதை நினைவு
கூர்கிறார். அப்போது அமைதி காத்த தமிழ் எழுத்தாளர்களின் நிலையையும்
குறிப்பிடுகிறார். பத்திரிக்கையாளர் ஞாநி கூட இது பற்றிப் பேசாதது ஏன் என்பதையும்
நினைவுட்டுகிறார்..
அடுத்த பத்தியில் நாடகவெளி
கூட்டத்தில் வாசிக்கப்பட்டதும் பதிவாகியுள்ளது. முகமூடிகளின் காலம்- தலைப்புப்
பத்தியில் தற்காப்பு சூழலுக்கேற்ப முகமூடிகள் அணிந்து கொள்பவர்களைப் பற்றியது.
அதில் தனக்குப்பிடித்த ஆளுமைகளின் செயல்கள் பற்றிய விமர்சனத்தை வைக்கிறார். அதில்
நாடகவெளி இதழ் நின்றது ஒரு உயிரியல் தருணம் தான் ஏனெனில் நவீனத்துவ காலகட்ட
கனவுகளும் இழப்புணர்ச்சியும் இலக்கற்ற ஏக்கமும் பிரதிபலித்த தருணம் அது என்கிறார்.
கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்-
தலைப்புக் கட்டுரை முழுக்கவும் நவீன இலக்கிய வெளியை விமர்சனத்திற்குள்ளாக்குகிற
பத்தி. எனது இந்தியா கட்டுரை கள் எழுதிய ஜெயமோகன் தரப்பு பற்றிய நீண்ட விவாதமிக்க
கட்டுரை. ஜெயமோகன் எழுத்துகளின் பின்னணியிலிருக்கும் அறம் ஆன்மீகம் பற்றிய
குறுக்கு விசாரணை யாகவும் தடுத்துப் பேசமுடியாத அளவிற்கு அவர் அடுக்கும்
ஆதாரங்களும் முக்கியமானதாக இருக்கிறது. இக்கட்டுரை எந்த இதழில் வந்திருக்க வில்லை.
நேரடியாக புத்தகத்தில் பதிகிறது போலும். கலை தனித்த ஆழமான நிரந்தரத்தை காலத்தால்
மீட்டுருவாக்கமும் செப்பமும் செய்யத் தக்க வல்லது. ஒரு எப்போதும் தற்காலிகமான பொது
வழியாகவும் இருக்கவே செய்யும்.
இந்நிலையில் ஜெயமோகன் போன்றோர் ஆன்மீகம்
குறித்தும் ஆன்மீகத்தின் தொடக்கப்படிநிலையான நகைச்சுவையையும் பற்றித் தொடர்ந்து
கதைப்பதுதான் நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆன்மீக வறுமை-பக்115
என்கிறார்.
இதன் தொடர்ச்சியான -பிரதி உயிர் அல்லது
புரட்சி நிச்சயம் அதனால் கலகம் வேண்டாம்.எல்லாமே மெய்நிகர் தோற்றம் தான் --எனும்
கவிதைத் தலைப்புடன் வந்த கட்டுரையும் ஜெயமோகன் இந்தியப்பயணம் மற்றும் அவருடைய
திரைப்படப் பணிகள் பற்றிய விமர்சனமாகவும் இருக்கிறது. இலக்கியமும் சினிமாவும்
இணைவதற்கான முயற்சியில் தன்னாலான பங்களிப்பு என்று கேரளச்சூழலுடன் ஒப்பிடுவதை
விமர்சிக்கிறார்..
நூலின் முக்கியமான கட்டுரையாக
ம..க.இக.வின் நடவடிக்கை தொடர்பாக கீற்றுக்கு ஒரு விளக்கம்- அதிர்ச்சியளிப்பது.
லீனா மணிமேகலை மற்றும் ஷங்கர்ராம
சுப்ரமணியன் இருவரும் சந்தித்த நெருக்கடிகளைப் பேசுகிறார்.
விக்ரமாதித்யன், லஷ்மி மணிவண்ணன்,
இவரும் சேர்ந்து எழுதிய சாம்பல் இதழில் வெளியான கூட்டுக்கவிதைகள் பற்றிய பரபரப்பான
காலம் அது. பிறகு தாம் மின்பிம்பங்கள் நிறுவனத்திற்காக மொழிபெயர்த்த காகங்கள்
பற்றிய விவரத்தை அறிவதற்காக விவாதிக்கலாமா என்று ஒரு தொலைபேசி அழைப்பு. முகவரியை
மனைவியும் தந்துவிட அதிகாலையில் ஷங்கரின் வீட்டிற்குள் நான்கைந்து பேர்
நுழைகிறார்கள். புதுமணத்தம்பதிகள் வேறு.
பத்திரிக்கையில்
வெளிவந்த கவிதையைக் காட்டி யோனி என்ன அர்த்தம் எனப் கேட்கிறார்கள். ஷங்கர்
மனைவியைப பாதுகாப்பாக அறைக்குள் அனுப்பிவிட்டு
அவர்களுடன்
பேசுகிறார். பிறகு பொதுவில் வைத்து விசாரிக்க வேண்டும் என மேலும் நான்கைந்து பேர்
சேர்கிறார்கள். மன்னிப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு விடுவிக்கிறார்கள். ,
மறுநாள் புதிய கலாச்சாரம் இதழ்
அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது. ஈராக் பிரச்சனையைக் கேவலமாக ஏன் எழுதுகிறீர்கள்?
கேள்விகள் துளைக்கிறது. பாக்தாத் எரிகிறது என்று துயரத்தில் தானே தொடங்குகிறது என
விளக்குகிறார். இலக்கிய நண்பர்கள் பதிப்பக நண்பர்களின் உதவியால் மாலை வீடு வந்து
சேர்கிறார்கள். தான் அலைக்கழிக்கப்பட்டதை இப்போதும் வலியுடன் உணர்வதாகவும் தாம்
வீடு திரும்பியதும் மனைவியும் விசாரிக்கிறார். திருமணத்திற்குப் பின்பு என் மேல்
எழுந்த முதல் நம்பிக்கையின்மை அது. என்கிறார். பொது மனிதன் அல்லது கவிதைகளுக்கும்
படைப்புகளுக்குமான எதிர்வினைகளை அர்த்தப்படுத்திச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா.
நூலில் தன்னிலை விளக்கமாக
–நான் என்னும் ஒரு சமூக உயிர் மதச்சார்பின்மையை அனுசரிக்கக் கூடிய கடவுள் என்று
சொல்லக் கூடிய எந்த உருவத்தையும் கும்பிடக்கூடியது. ஆண், பெண்,
சமத்துவத்திலும்,சமநீதி நிலை வேண்டும் என்பதிலும் நம்பிக்கையுள்ளவன்.
மற்றதைப்புரிந்து கொள்வதற்காக அறிதல் என்றே நான் இலக்கியத்தை
நினைக்கிறேன்..(பக்128)
மகத்தான படைப்பாளி ஆர்.சூடாமணியின்
நினைவை கௌரவிக்கும் வகையில் திலீப்குமார் தொகுத்த தேர்ந்தெடுத்த சிறுகதைத்
தொகுப்பான நாகலிங்க மரம் வெளியீட்டு விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை முக்கியமானது. சுமார் ஆறுபக்கத்தில் அவருடைய கதைகளின் ஆன்மாவை
விவரிக்கிறார். –ஒடுக்குதலை
நிகழ்த்தும் ஆண்கள் அவர் கதைகளில் தனியே குற்றவாளிகளாக்கப் படுவதில்லை.
குடும்பம்,மரபு, சம்பிரதாயங்களின் பொறிகளில்மாட்டிக் கொண்ட இரங்கத்தக்க
தன்னிலைகளாகவே அவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். சூடாமணி என்ற ஆளுமையின்
வி்காசம் அது. பக்-131 அவர் மரணத்திற்குப்பிறகு எழுதப்பட்ட பத்திகளில் முக்கியமான
அஞ்சலிக்குறிப்பு..
சாதாரணர் சதுக்கங்கள்-மாற்றங்களின்
ஒற்றன்-அழிவற்றது- எனும் மூன்று தலைப்புகளில் அசோகமித்திரன் பற்றிய பத்திகள்
அசோகமித்திரன் எனும் ஆளுமையின் சிறப்பியல்புகளைப் பேசுகிறது. விடுதலைக்குப்
பின்பாக இந்தியாவில் நடந்த பல சமய உறவு கலாச்சாரப் பண்புகளை குறிப்பாக சென்னை
செகாந்திராபாத் ஹைதராபாத் போன்ற
காஸ்மாபாலிட்டன் தமிழ் எழுத்தாளர் என்கிறார். அவரைப்பொருத்தவரை அவர் இந்திய
எழுத்தாளர் என்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்திய எழுத்து என்கிற
நவீன இலக்கிய வடிவத்தை கட்டமைத்தவர்களில் அவரும் ஒருவர். சமீபத்தில் அவருக்கு
ஆந்திர மாநிலத்தின் உயரிய இலக்கிய விருது அளிக்கப்பட்டதை நினைத்துக்
கொள்ளலாம். அசோமித்திரனின் சிறந்த பத்துக்
கதைகள் தொகுத்தால் அதில் அழிவற்றது சிறுகதையும் இடம் பிடிக்கும் என்கிறார்.
அவருடைய கதைகளி்ல் எளிமையும் வலிமையற்ற மனிதர்களின் இயல்பான உரையாடல்களையும் நாம்
நினைத்துக் கொள்ளலாம்.
திலீப் குமார் கதைகள் பத்தி அவருக்கு
விளக்கு விருது வழங்கு விழாவில் வாசிக்கப்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாக்கு ”சாதுவின் சுரைக்குடுக்கை எல்லா புண்ணிய தலங்களுக்கும் சென்று வரத்தான்
செய்கிறது. ஆயினும் அதன் இயல்பான கசப்பு நீங்குவதில்லை” என்பது தான் அது .ந.பிச்சமூர்த்தி,புதுமைப்பித்தன்,கு.அழகிரிசாமி,
தி.ஜானகிராமன்,அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, ஜி.நாகராஜன், கி.ராஜ
நாராயணன் வண்ண நிலவன், ராஜேந்திரசோழன் வழியில் தமிழின் வளமான சிறுகதை மரபின்
தொடர்ச்சியாக திலீப்குமார் கதைகளைக் குறிப்பிடுகிறார். பட்டியலில் பூமணியையும்
சோ.தர்மன். உள்ளிட்டவர்களை நாம் சேர்க்கலாம் தீலீப் குமார் கதைகளின் மாந்தர்கள் பெரும்பாலானவார்கள்
முதியவர்கள். வாழ்க்கையின் பெருநதிச்சுழிப்பில் அடித்துச் செல்லப்பட்டு நசிந்து
கரையொதுங்கியவர்கள். மானுடத்தின் இறுதிகால துயரத்தை அனுபவிக்கும் மனங்களை
எழுதியவர்.
பறக்கும் ரயில் தடங்களும் அதி
யதார்த்தத்தின் வேலைத்தொகுதியாகி வரும் என் நகரமும் –தலைப்பிலான கட்டுரை மாறி வரும் சென்னையின் வளர்ச்சியையும் அதன் காரணமாக நகரம்
கட்டிடங்களாக மாறியும் எந்திரக்குப்பைக் கிடங்காக மாறுவதையும் இலக்கியவாதியாக
கவனித்ததைப் பேசுகிறார். மூத்த முந்தைய நவீன படைப்பாளிகள் கண்ட சென்னைக்கும்
தற்போதைய சென்னைக்குமான மாற்றத்தை டைடல்பார்க்-பறக்கும் ரயில்கள் வழியாக
பார்க்கிறார். உட்ச இடமாய் டைடல்பார்க் என்னும் மென் பொருள் பூங்காவும்
டைடல்பார்க் சாலையும் உருவாகியிருக்கிறது. மத்திய கைலாஷ் ஆலயம் அதிநவீன கழிப்பறை
போலத்தெரிகிறது என்கிறார். நெடுகிலும் கடுமையான விமர்சனத்துடன் எழுதும் அவர்
கடையிசில்
ஐன்ஸ்டீன்
சிறுவயது முதலே தனது இடுப்புக்குக் கீழ் வளர்ந்த வாலொன்றைப் பராமரித்தார்.
பெண்களுடன் அவர் பேணிய காதல் சரசங்களில் அந்த வால் பல அனுகூலங்களையும்
சோகங்களையும் நிகழ்த்தியுள்ளது. ஆனால் ஐன்ஸ்டீனின் வாலை வரலாறு உதிர்த்துவிட்டது.
என்கிறார். சென்னையின் பிற்காலத்தை இருப்பை நினைவுட்டும் வாக்கியம் அது.
திமுக தோல்வியின் பாடல்-பத்தியில்
தோல்வியைத் தழுவிய நாளில் அக்கட்சியின் அலுவலகம் இருந்த சூழல்
காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு பத்திரிக்கையாளனாகவும் கவிஞனாக உரையாசிரியாக
இருப்பவனின் முன்னால் ஒருபெரும் சரிவு எப்படி கவனிக்கப்படுகிறது என்பதை
உணர்த்துகிறது பத்தி. கடலை விற்கும் ஒருவர் தன்னுடைய கரைவேட்டியை மாற்றிக் கொண்டு
வேறிடத்திற்கு மாறுவதை ஒரு பிரழ் காட்சியாக விவரித்துள்ளார். சாதனைகள் பல செய்தும்
தோற்றதை நினைத்துப் புலம்பும் விசுவாசமான தொண்டர்களையும் காட்டுகிறார்.
இறுதி பத்தி முருகன் சிரிக்கிறான்
காலண்டர் முருகன் சிரிப்பதையும் தன் வாழ்வினை நினைப்பதும் அற்புதமான பதிவு.. தான்
செய்யும் சிறு திருட்டுகளைப் பட்டியலிடுகிறார். ஒரு முந்திரிப்பருப்பு
பாக்கெட்,பெண்கள் விடுதியில் சிரிக்கும் புத்தர்.முகம் பார்க்கும் கண்ணாடி ஜான்சன்
பேசி பவுடர் டப்பா,ஓவிய நண்பனுக்குப் பிறந்த நாள் பரிசாகத் தர க்ரேயான்ஸ் பென்சில்
பாக்கெட், யுவதி ஒருத்தியின் ஒற்றைச் செருப்பு.மற்றும் பல பொருட்கள் ஞாபகத்தில் இல்லாதது.
அந்த ஒற்றைச் செருப்பைப் பறிகொடுத்த
யுவதி ஒரு நாள் மறு செருப்பை ஷங்கரின் வீட்டின் வாயிலில் இட்டுச்
சென்றிருக்கிறாள். அந்த சம்பவத்தை இப்படி விவரிக்கிறார்.
அவள் வாசலில் விட்டுச் சென்ற வெள்ளைக்
காலணி எனக்கு விடப்பட்ட அவமதிப்பைப் போலத்தான். அந்த அவமதிப்பு மிக வசீகரமானது
இப்போது அந்த சம்பவம் குறித்த குற்றவுணர்வு ஏதும் எனக்கு இல்லை. அது அவள்
உலகத்தின் மீது என்னுடைய தன்மையிலான ஒரு குறுக்கீடு. அவ்வளவுதான்..பக்-160
இறுதியாக....நூலின் வாசிப்பு அனுபவத்தை
அப்படியே நகல் செய்வதிலோ அந்த நூலின் பிரதான அம்சத்திற்குள்ளாக அத்துமீறுதல்
என்பதாக இல்லாமல் சாமானிய வாசக மனோபாவத்துடன் எழுதியிருக்கிறேன்..ஆனாலும்
ஏற்படுத்தியுள்ள பாதிப்பை முழுமை செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்..
அது போலவே எளிய சம்பிரதாயமாக எழுதவும் மனமில்லை. ஒரு சதவிகித சாரத்தையே
குறிப்பிடுகிறேன்.
சுமார் 160 பக்கங்களில் நீண்ட
தனது இருபது வருட இலக்கியம்- வாசிப்பு- அனுபவம்-இழப்பு-அனுகூலம் பற்றிய சுயத்தை
உரைநடையாக ஒரு நவீன கவிஞன் எழுதியிருப்பது முக்கியமானது. நூலின் விசாலமான
தன்மைகளையும் சிறப்பியல் புகளையும் மேலும் கோணிக்குள் திணிப்பதைப் போல திணிக்கமுடியாது.
160 பக்கத்தை வெறும் 10 பக்கங்களில் ஆங்காங்கு அவருடைய வாக்கியங்களையே இனைத்
திருக்கிறேன். அது திருப்பி ஒப்பிக்கும் தந்திரம் அல்ல மாறாக நூலின் பிரகாசம்
பற்றிய வர்ணணையே ஆகும். ஷங்கருக்கு தன் இளமைப்பருவத்திலேயே மகா வித்வான்களுடன்
இணைந்து கச்சேரிகள் வாசிக்கும் பாக்கியம்
கிட்டியிருக்கிறது.
கொஞ்சம்
பொறாமையாகவும் இருக்கிறது. அவருடைய கால முரண் அல்லது தீராத அலைச்சல், புதிர்கள்
விடுவித்து புதிர் வளர்க்கும் தற்காலமும்
அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கலாம்.
மூத்த ஆளுமைகளுடன் இரண்டறக் கலந்து
பழகியிருக்கிறார். அந்த வாய்ப்பு அரியப் பெற்ற நவீன இளைய தலைமுறையினரின் பழுத்த
அனுபவம் வாய்த்திருக்கிறார். அவருடைய பத்திரிக்கை அனுபவத்தை மக்களின்
நுகர்ச்சிக்கான செய்திக் கதைகள் சம்பவங்கள் பற்றிய விவரணைகளை அது வெறும் நாளின்
ஒரு பிசிறான காட்சியே. எல்லா பிரதி
பலிப்புகளையும்ட நவீன படைப்பிலக்கிய பாதிப்பிலேயே பார்ப்பது முரணாக இருக்கிறது.
எளிய வாக்கியப் பிரயோகம் அவர்
குறிப்பிட்டது போலவே ஷங்கர்ராமசுப்ரமணியன் உரைநடையில் சு.ராவின் செல்வாக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
நூல் வெளியீடு-
நற்றிணைப் பதிப்பகம்
எண் 123 ஏ.
திருவல்லிக் கேணி
நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி
சென்னை-600 005
விலை-110-
பக்கங்கள் 160
முதல் பதிப்பு
டிசம்பர்-2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக