சனி, 22 ஆகஸ்ட், 2015

கந்தர் கோலம்- சிறுகதை

கந்தர்கோலம்
சிறுகதை- இளஞ்சேரல்
       
அவ்வளவு வேகமாக வண்டி ஓட்டத்தெரியாது அவனுக்கு. ஏற்கெனவே காட்டுப் பொதிப் புதர்களுக்குள் ஓட்டுவது போலத்தான் இருக்கிறது. அந்தப் பொந்திலும் சில குழிகள். பின்னால் அமர்ந்திருக்கிற கமலி செகண்டுக் கொரு தரம் “பார்த்து..பார்த்து..“ என்கிறாள்.புது வண்டி புது மனைவி..ஒவ்வொரு நாளும் புத்தம் புதியதாக மாறிக் கொண்டிருக்கும் காலம்..
பொழுது சற்றேரக்குறைய சாயும் நேரம். இருமருங்கிலும் இருக்கும் சொற்ப மரங்களுக்குப் பறவைகள் வரத்துவங்கி விட்டது. போக்குவரத்து நெரிசலும் தேங்கிய மக்களையும் கண்ட காகங்கள் கா காவென அச்சத்துடன் கரைகிறது. காலையிலேயே நினைத்தான் இன்று மாலை அலுவலகம் முடிந்து வரும் போது இந்தப் பாதையில் வரக்கூடாது என்று. அப்பொழுதுதான் தோண்ட ஆரம்பித்திருந்தார்கள்.
      எதிரில் வரமுடியாத பொந்தில் எப்படியோ ஒரு டாங்கர் லாரி வந்து கொண்டிருக்கிறது. அவனுக்குப் பின்னால் எட்டிப்பார்த்தால் அந்த நீள் மண்பொந்தில் வாகனங்களின் நெடிய வால்  பக்கத்தில் காங்கிரிட் மிக்சிங் கலவைகளின் சத்தம் வேறு. எங்கும் சிமெண்ட் தூசி. சிமெண்ட் கலவைகளின் ஈரமிக்க  நெடியும் சகதியும் வண்டிச் சக்கரங்களை வழுக்கச் செய்கிறது.
       இந்தப்பாதையைத்தவிர வேறெதுவும் இல்லை. நல்ல சௌகரியமான பாதையாக இந்தச் சாலையை விடுத்து மற்ற வழியைத் தோண்டிக் கொண்டிருக் கிறார்கள் பல மாதங்களாக..சாலைகளைத் தோண்டாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா.. இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வாழ்வில் ஈடில்லா குழிகள் என்று தினமும் நான் பாட அன்பும் அறனும் சகதியில் விழ என்று டிஎம்எஸ் கதறிக் கொண்டிருக்கற  பாடல் லாரியில் ஒலிக்கிறது.
        அவனுக்கு முன்னால் பிளசர் ஒட்டிய மங்கை கோதுமை நிறத்தில் இன்ஞ் இன்ஞ்சாக அருகில் நெருங்கி நெருங்கி பிரிந்தாள். சில சமயம் அவன் கால்களில் உரச சாரி என்ற படியே காலம் போய்க் கொண்டிருக்கிறது.  சில இளைஞர்கள் ஆய் ஊய் என்றார்கள்.. அத்தனை நெருக்கத்துடன் வண்டியை நகர்த்துவது சர்க்கஸ்தான். அவன் அவளைப் பார்ப்பதைப் பார்த்துத் தொலைக்க கமலி வண்டியப் பார்த்து ஓட்டுங்க..என்றாள்.
        தற்சமயம் போக்குவரத்தைச் சரிசெய்ய வந்த சில வாலண்டியர்கள் அல்லது அந்தப் பகுதிக் காரர்கள் லாரியை அங்கிட்டே நிறுத்தச் சொன்னார்கள். ஸ்டாப் ஸ்டாப்.. என்றபடியே ஒரு தடுப்பு போட்டார்கள். நேர்கிற சிறுசிறுவழியையும் ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்று அடைத்துக் கொள்ள அவர்கள் “அடப் போங்கய்யா.. எவனய்யா கொஞ்சம் நில்லுங்கன்னா கேட்கறீங்க...“
அவனுக்கு அப்படா என்றிருக்கிறது. அவ்வப் பொழுது அந்த மங்கையின் டிசர்ட்டை கவனிக்காமல் இல்லை. கமலி மேலும் சௌகரியமாக அமர்ந்து கொண்டாள். அப்பொழுது பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் ஒய் ஒய்ய் என்று கதற ஆரம்பிக்கிறது. அதே போல ஆங்காங்கு சைரன் ஒலிகள்.
காலையிலிருந்து உருவிய கோழி கழிசடைகள் ஏற்றிய டிவிஎஸ் பிப்டிகாரர்கள் நறுமணம் பரப்புகிறார்கள். அந்த வண்டியைப் பாலோ செய்தபடியே காகங்கள் அவன் தலைக்கும் மேல் காகாகாகா எனக் கூவுகிறது
        பகுதி மக்களில் ஒரு சிலர் மேலும் வழியைச் சரிசெய்ய முயல்கிறார்கள். ஒரு சேர ஒலிப்பான்கள் கதறுகிறது வழிவிடவேண்டி. அவன் வயது ஒத்த இளைஞன் ஒருவன் வழி வழி என்று வந்தவன் அந்த மங்கையை கன்னம் தடவி எதிர்பாராத வண்ணம் வெளிரென்ற மார்பில் முத்தமிட்டுவிட்டு நகர்ந்து போனான். கூட்டம் அதிர்ச்சியில் உறைய அவன் மேலும் வழி வழியென்று நெரிசலில் கலந்து போனான்.
அந்த மங்கை..ஓ...ஓ... முகத்திலடித்தபடியே பாஸ்டார்ட் எனக் கூச்சலிட்டாள்.. அதற்குள் அம் மங்கைக்கு நேர்ந்த கதி நெரிசலில் இருந்த மக்களுக்கு துரித செய்தியானது.
ஹேய்ய் எனக் கூவிய இளைஞர்கள் அவனைப் பிடிக்கப் பாய்ந்தார்கள். வண்டிகள் நெருக்கடிக்குள் நெருக்கடியில் ஒன்றாக கவிழ்ந்து கிடக்கிறது. அவனைத் துரத்திக் கொண்டு போகிற சமயத்தில் வண்டிகளில் பாதைகளுக்கு காத்திருந்த மங்கைகள் சிலரை அவர்களும் முத்தமிடத் துவங்கினார்கள்.
கூச்சலும் குழப்பமும் ஆம்புலன்ஸ் சத்தமும் அந்த மணற் பொதிச் சந்தைப் பதற்றமடையச் செய்கிறது. அந்த டாங்கர் லாரி கொஞ்சம் கொஞ்சமாக முன்நகர்ந்து வருகிறது. போக்குவரத்து சரிசெய்தவர்கள் கலைந்து போனார்கள். காவல்துறையினர்கள் அந்த நெருக்கடிகளுக் குள்ளாக வந்த பிறகு மேலும் களேபரமானது. அவன் அருகில் சிவனேனென்று நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலருக்கு பளார் பளாரென்று அறைவிழுக.. இளைஞர்களாக இருப்பவர்களுக்கு சரிமாரியாக தடியடி விழுகிறது. காவலர்கள் இருளில் கண்மண் தெரியாமல் அடித்தபடியே முன்னகர்கிறார்கள்..
மருத்துவமனைகள் அதிகமான பிறகு நோய்கள் அதிகமானது. ஆம்புலன்ஸ்கள் அதிகமான பிறகு விபத்துகள் அதிகமானது. பொக்லைன்கள் அதிகமான பிறகு சாலைகள் சேதமடைந்து போனது. மங்கைகள் அதிகமான பிறகு குற்றங்கள் அதிகமானது. என்றான் ஒரு பழங்கிழவன் அம்மங்கைக்கு நேர்ந்த கதிகண்டு..
அவன் கன்னத்தைத் துடைத்துக் கொள்கிறான். மங்கை முகம் பொத்தி அழத்துவங்கியதை நிறுத்தி நடந்தவற்றை விளக்கினாள். அதிகாரி தன்னை மறந்து எங்கே என்று முகம் திருப்பிப் பார்த்தபோது அவன் தந்து விட்டுப் போன முத்தம் கீழே உதிர்கிறது.
         ஆம்புலன்ஸ்க்குள் யாருமில்லையெனினும் கத்துவதை நிறுத்தவில்லை. நெரிசலில் இருந்தவர் சொன்னார்..“ பாவம் பேசண்டைக் கூப்பிடப் போகுது போலிருக்கு.. என்றார்கள்..நெரிசலுக்குக் காரணம் குழி தோண்டிக் கொண்டிருந்த பொக்லைனின் பின் சக்கரங்கள் நல்ல சௌகரியமான ஈரமிக்க குழிகளில் சிக்கிக் கொண்டதும் அதன் பக்கவாட்டு மண்தோண்டி கடவாய்கள் திரும்பி வழியில்லாமையும் காரணம் என்று கண்டுபிடிக்க ஒரு மணிநேரம் ஆனது.

அந்த மங்கை இப்பொழுது இயல்பாகிவிட்டாள். எல்லாரும் விசித்திரமாகப் பார்க்கிறார்கள். நாமும் முத்தமிடலாமாவென யோசிப்பது போலவேத் தெரிகிறது அவனுக்கு உள்பட. கமலி.. நான் கொஞ்சம் இறங்கி நிக்கட்டா என்றாள் அவனோ..பேசாம இரு உனக்கு யாராவது முத்தம் கொடுத்திரப் போறானுக.. என்றான்.
      நெருக்கடி நீண்டு நீண்டு முக்கியமான நெடுஞ்சாலையின் வண்டிகள் தேங்குமளவிற்கு உறுமிக் கொண்டும் காத்துக் கொண்டிருக்கிறது. கூட்டத்தில் ஒரு வயதானவர் “என்னய்யா இத்தன டிராபிக் ஜாம் ஆயிட்டுருக்கு செரைச்சிட்டு இருக்காணுகளா...“ என்கிறார் பதிலுக்கு இளைஞர்கள் சிலர் முத்தங்கொடுத்துட்டு இருக்காங்கன்னு நெனைக்கறன் என்கிறார்கள். அந்த மங்கை இப்பொழுது பொசுக் கென சிரிக்கத் துவங்கியிருக்கிறாள்.
இரவின் பூச்சிகள் பறக்கத்துவங்கியது. அருகிலிருக்கிற மாபெரும் குப்பைக் குடோனிலிருந்து கிளம்பிய ராட்சத கொசுக்களும் ஈக்களும் தலைக்கும் மேல் பறக்கத்துவங் கியது. வாயைத்திறந்து பேசினால் வாய்க்குள் நுழைந்து விடும் போலிருக்கிறது.
பேருந்துகளிலிருந்து சிலர் வாந்தியெடுத்தார்கள். அது வண்டிகளில் காத்திருப்பவர்கள் மீது விழ அவர்கள் பச்சை பச்சையாக அவன் தலைமுறையைத் திட்டத் துவங்கினார்கள். குழந்தைகள் பாலுக்கும் தொழிலாளர்கள் சரக்கு ஞாபகத்திலும் பினாத்த துவங்கினார்கள். ஹாரன்கள் கூட அழத்துவங்கியது. சிலர் நின்ற பேருந்துகளிலிருந்து இறங்கி போக்குவரத்தின் நெரிசலைத் தீர்க்க முனைகிறார்கள்.
அன்னாசிப் பழத்துண்டுகள், மாம்பிஞ்சுகள் கடலை மிட்டாய்கள் விற்பனையாளர்கள் வந்து குவிந்தார்கள். இருள் கவிய ஆரம்பிக்கிறது. தேங்கிவிட்ட நெருக்கடியைத் தீர்க்க முயற்சித்ததின் பலனாக மேலும் படுபயங்கரமான நெருக்கடிகள் வந்து சேர்ந்து போனது. அருகிலிருக்கிற கிராம மக்கள் தங்கள் ஊர்களுக்குள் புகுந்து வந்த வாகனங்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறது. இதைச் சரிசெய்யச் சொல்லி மறியல் செய்கிறார்களாம்.
       வெறிகொண்ட மக்கள் காத்திருப்பின் எரிச்சலில் தாளமுடியாத வேதனையில் இயற்கை உபாதைகளைக் கழிக்கத் துவங்கினார்கள். சிலர் எரியத் துவங்கியிருந்த மின் விளக்குகளை உடைத்தெறியத்துவங்கினார்கள். சாலையில் கொட்டப்பட்டிருக்கிற கற்கள் கொண்டு சரிமாரியாக உடைக்கத்துவங்கியதும் சிலர் வாகனங்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளையும் உடைக்கத்துவங்கினார்கள். மங்கைகள் புணரப்பட்டார்கள் நகைகள் பறிக்கப்பட்டது. எங்கும் அபயக்குரல் அல்லது புணர்ச்சிக் கதறல்கள். வயதான பெண்கள் ஆண்கள் நடக்கிற கொடுமைகளுக்கு எதிராக ஆய் உய் எனக் கத்துகிறார்கள் சிலர் தங்களால் முடிந்த மட்டிலும் தாக்குகிறார்கள்.
         எந்த இடத்தில் எந்தப் பகுதியில் என ஓடிச் செல்ல முடியாதளவிலும் தடைகள். அவன் பதற்றமானான். கமலியை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு அந்த மங்கையைப் பற்றுவதற்கு மனம் உந்தித் தள்ளியது. அருகிலிருந்த அந்த  மங்கையை ஏற்கெனவே சில இளைஞர்கள் சூழந்திருந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே அறை வாங்கியிருந்தவர்கள். இருளில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் நடக்கத் துவங்கி யிருக்கிறது. அவன் உடல் பதறத்துவங்கிய சமயத்தில் கமலியை நான்கைந்து பேர் பற்றியிருந்தார்கள்.
போக்குவரத்து சரியானபோது நகரம் ஆட்டோமேடிக்காக சரியாகியிருக்கிறது. வாகனங்கள் இயல்பில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இருளில் வெளிச்சங்கள் பீய்ச்சியபடி வாகனங்கள் அந்தப் பொதிக்குள் மயங்கிய சில மயங்கி சரிந்து கிடந்த பெண்களின் உடல்கள் மீது ஏறிப் போய்க் கொண்டிருக்கிறது. அந்தப் பொக்லைன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. நெரிசலுக்குரிய வாகனங்கள் இழுத்து சாலை ஓரத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. அதற்கருகில் வாகனங்குரிய பெண் உடல்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அவன் வண்டியை மெல்லமாக ஒட்டி வந்தான். வழக்கமாக காய்கறிகள் வாங்குமிடத்தில் நிறுத்தவில்லை. திட்டுத்திட்டாய் காலனியில் விளக்குகள் எறிந்து கொண்டிருக்க அவன் வண்டியை நிறுத்தி வாயில் கேட்டைத்திறந்து உள்ளே நிறுத்தினான். கமலி நடக்க முடியாமல் நடந்து கழிவறையைத்திறந்து குழாயிலிருந்து தண்ணீர் வேகமாக விழும்படி வைத்தாள்.
அவன் வந்தான் இருவரும் ஒரு சேரக் குளித்தார்கள்.. தலை துவட்டினார்கள். எதுவும் பேசவில்லை. விளக்குகள் எறிய விட்டதும் பக்கத்துவீட்டிலிருந்து சில கடிதங்கள் சில பைகள் சில தகவல்கள் வந்தது. நெரிசலில் நிகழ்ந்த சம்பவங்களால் நீங்கள் ஏதாவது மாட்டிக் கொண்டீர்களா..நடந்த செய்திகள் தெரியுமா என்றெல்லாம் அந்த வயதான வீட்டின் உரிமையாளர் பாவம் கலந்த பயத்துடன் கேட்கிறார்.
அவனும் அவளும் நாங்கள் அந்தப் பாதையில் வரவில்லை வேறு வழியில் வந்தோம். அதுமட்டுமின்றி நெரிசலில் நாங்கள் சிக்கவில்லையென்றதும் அவர் அகமகிழந்தார்.
தொலைக்காட்சியில் செய்திகளில் நடந்த சம்பவம் நகர்ந்து கொண்டிருக்க அவன் டிவியை அணைத்தான்.
“சாப்பிடறதுக்கு இப்ப என்ன செய்ய..“ என்றாள்...கமலி












ஆப்பிள்- சிறுகதை

ஆப்பிள்
சிறுகதை- இளஞ்சேரல்

           ஆப்பிளை மீண்டும் ஒரு தடவை பார்த்தேன். பெரிய வாணலியில் வாழைக்காய் பஜ்ஜிகள் சொர்சொர் என்று வெந்து கொண்டும் மிதங்கிக் கொண்டுமிருக்க பஜ்ஜிக்கு காத்திருப்பவர்களின் கண்கள் அவைகளின் மீதே இருக்கிறது தேநீர்க்கடை கம்பக்கால்களில் பறந்து களைத்த கிராபாஜி புறாக்கள் இறகு கோதிக் கொண்டிருக்கிறது. பொழுது மசங்கிய நேரத்தில் சூடான பலகாரங்கள் தருகிற இன்பம் அந்த எண்ணைப் பொறிப்பு சுவை நாக்குக்கு அவசியம் என்று கருதுகிறது மனித மனம். நானும் இளவேனிலும் வண்டியை நிறுத்தினோம். சுங்கம் தன்னுடைய சாயங்காலப் பொழுது  நேரத்தை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறது. வெளிச்சம் பொழியும் புதிதாகப் போட்ட தார்ச்சாலையில் வீசும் கூதிற் காற்றை அனுபவிக்க விளையாட என சிறுவர் சிறுமிகள் வந்துவிட்டார்கள். இந்த மாலையின் நறுமணம் தவிர்க்க வியலாத ஒன்றாக இருக்கும். புகை வெளிச்சம் போய் மங்கிய ஆதவனின் ஒளிக்குப் பிறகு கருத்த மேகம் யானைக்கூட்டங்கள் நகர்வது போல நகர்ந்து கொண்டிருக்கும் சூழலை யார்தான் கவனிக்காமல் செல்வார்கள். அந்த நேரத்தின் வியாபாரத்தில் காய்கறி பெண்கள் குழுமியிருக்கிறார்கள். சில காய்கறி பெண்கள் அங்கேயே உறங்கி பின் எழுந்து அங்கேயே வாழந்து வருகிற பெண்களையும் நாங்கள் அறிவோம்.அப்படித்தான் ஆப்பிளும்...
     ஆப்பிள் என்று பெயர் வந்த காரணம் புதிதல்ல.. அவன் ஆப்பிள் மாதிரி அத்தனை அழகாக இருந்தான். அந்த சிவப்பும் செம்பட்டை மஞ்சளுமற்ற தலையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அந்தக் கண்களிலிருந்த கோலிகுண்டின் வசீகரம் யாருக்கும் வாய்க்காதவை. இன்றும் தேநீரகத்தின் டைல்ஸ் படிக்கட்டுகளில் மற்றும் பலருடன் அமர்ந்து கொண்டிருக்கிறான். தேநீர் சொல்பவர்களுடன் அமர்ந்து அவர்கள் தருகிற டபரா செட்டின் டமளரின் பாதி தேநீருக்காக..
இளவேனில் “அதோ ஆப்பிள்“
          ஆப்பிளை மறுபடியும் மறுபடியும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தேநீரகத்திற்கு வரும் வாடிக்கை யாளர்களைப் பார்த்தால் களைப்பின் மிகுதியில் ஆகாயத்தினை தன் அலகின் நுனியில் வைத்து மின் கம்பத்தில் வந்து அமர்கிற செங்குருவிகளைப் போலத்தான் தோன்றுகிறது. செங்கணலின் அடுப்புப் புகை கூட வாழைக்காய் பஜ்ஜியின் வாசனையைத் தருகிறது. ஒரு தட்டு எடுத்துக் கொட்டியதும் அவை உடனே தீர்ந்து போகிறது. உப்புக் கரிப்பு உடல்களுக்குத் தேவை மேலும் உப்பும் ஊறலும் தானே...
       மனிதர்களின்  வாசம் அதிகமாவது உணர்கிறோம். கையிலிருந்த காமிராவில் சில காட்சிகளைப் படமாக்கினோம். சாலையில் அதன் ஓரங்களில் எல்லாம் அருகிலிருக்கிற கடைகளுக்கு மக்கள் வரத் துவங்கினார்கள். தங்கள் பணியை முடித்துத் திரும்பியவர்கள் தங்களின் இரவு உணவிற்கான பொருட்கள் வாங்கவும் அல்லது நேரடியாக இரவின் அழகை வெளிச்சத்தில் தரிசிக்க வென்று வந்து போகிறார்கள். ஒரே சமயத்தில் இரண்டு பேருந்துகள்  எதிரெதிரில் நின்று கொள்ளவும் இரண்டு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பேசிக் கொள்கிறார்கள். சாலையில் போக்குவரத்து தடைபட அங்கே என்னவென கண்கள் பரபரக்க கவனிக்கிறார்கள்.
“இங்கே எடுக்க புகைப்படங்கள் என்னவிருக்கிறது என்றார்..இளவேனில்
“இந்தக்காட்சிகளில் தான் உயிர்ப்பு இருக்கிறது என்றேன் நான்..“
“போன முறை இதே போல அதிகாலைச் சந்தைப் பகுதிகளைப் புகைப்படங்கள் எடுத்தோம்.. அனுப்பினோம்..பதிவிட்டோம் என்ன ரெஸ்பான்சும் இல்லை...வேண்டாத வேலை.. இதற்கு பதிலாக பேரூர் சூலூர் போயிருக்கலாம்..“ சலிப்பும் குறையுமாக அங்கலாய்க்கிறார் இளவேனில்.
 அதற்குள் டீ பாய் என்ன சாப்பிடுகிறீர்கள் என்றான். அவன் பார்ப்பதற்கு சினிமா நாயகன் போலிருக்கிறான். உழைப்பின் வழியாக கையில் பணங்காசு பார்க்கிறவர்கள் எல்லாருமே அழகானவர்கள் என்பார் எங்களுக்கு காமிரா சொல்லிக் கொடுத்த சுபமங்களா சாமிநாதன் கடையிலிருக்கிற நாற்காலிகளுக்கு அதிகமாக வெளியில் காத்திருப்பவர்கள் நிற்கிறார்கள். வியாபார நேரத்தில் நாம் இங்கு அமர்ந்து கொண்டு கலை குறித்த பேச்சுகள் அவர்களுக்கு எரிச்சல் ஊட்டும்..எழுந்திரிக்கலாம்.. நாங்கள் சொந்த ஊர்க்காரச் சனங்கள் என்பதால் அந்தக் கடைக்கார நண்பர்கள் ஒன்றும் சொல்வதில்லை. எத்தனை மணிநேரமானாலும் பேசலாம்...
கடைக்குள் எல்லமே பார்த்த முகங்கள். பல்லாண்டுகள் பழகிய முகங்கள். அந்த முகங்கள் எல்லாம் பல்லாண்டு அனுபவங்களின் தொகுப்பாகவே தெரிகிறது. புகைப்படங்கள் பொய் சொல்வதில்லை. அவையின் உயிர்ப்பு என்பது அனுபவத்தை அறிவிப்பது. முகங்கள் அனுபவங்கள் வயதுகளுக்கு ஏற்ப சுருக்கங்களும் சின்ன சின்ன குழிகளும் வெடிப்புகளும் தழும்புகளும் உடையதாக இருக்கிறது. சிலர் மிக லேசாக புன்னகைக்கிறார்கள். சிலர் சில வார்த்தைகள் பேசுகிறார்கள். சிலர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள்.
     ஆப்பிளின் இடம் அதே இடம்.  மற்றும் அதைச் சுற்றியிருக்கிற தினசரிச் சந்தையும் அந்தக் காய்கறி கடைக்கார மனிதர்கள்..“அவனுக்கு என்ன சோறு கண்ட இடம் சொர்க்கம்..“என்பார் டீ மாஸ்டர். ஆப்பிளின் சுபாவம் பார்த்தால் நன்கு பழகி நாய்க்குட்டியின் லாவகம் இருக்கும். நடுத்தர உயரம். பழைய மாதிரியான அழகியல் தோற்றம் மாறியிருக்கிறது. உடல் விறைப்பும் கட்டுமானமும் சீராகியிருக்கிறது. எப்பொழுதும் தள்ளாடுகிற சரீரத்தை வைத்துக் கொண்டு இந்த அனாதியான இளமையை அவன் போக்கிக் கொண்டிருப்பது அதிசயம். ஆப்பிளுக்குத் தேநீர் தராமல் அருந்துகிறவர்கள் உண்டோ. கடவுளுக்குக் கூட நைவேத்தியம் படைக்காமல் போயிருக்கலாம். அவனே உரிமையுடன் தேநீரும் டீயும் பீடிக் கட்டும் கேட்டுப் பெறுவான்.. சிலர் அவனிடம் எரிச்சலுடன் கோபித்துக் கொள்வார்கள்..“ அவனவன் காய்ஞ்சு கிடக்கறான்.. உனக்கொரு எழவு வரமாட்டங்குதே...“
அவனின் நாற்பதாண்டுகள் ஒரு புகை கிளம்பி ஆகாயம் போய் மேகத்துடன் கலந்து போனது மாதிரிதான் ஆகியிருக்கிறது அவன் வாழ்க்கை. அவன் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. ஆனால் ஒரு புகழ்பெற்ற கலைஞனின் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவன் தான் அவன். ஆப்பிளின் சிகையே ஒரு கிரேக்கப் போர்வீரனைப் போன்று ஒளிவீசும். ஆட்டின் தோல் சிகையைப் போன்றவை அது.
காலையில் தினசரிக் காய்கறிக் கடைகளுக்கு வரும் கூடைகளை இறக்குவதும் மற்றும் ஏற்றுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்வதின் மூலம் அவன் பொழுது கழிகிறது. உணவும் உறைவிடமும் அதே தினசரிச் சந்தை தான். நகரியக்கத்தின் பசிக்காக அலையும் தினசரி மனிதனின் தொகுப்பாக அவர்களின் ஒட்டு மொத்தப் புகைப்படத்தொகுப்பாக ஆப்பிள்தான் தெரிகிறான்.
இளவேனில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்தார். ஆப்பிளிடம் சிகரெட் குடிக்கிறாயா என்றபோது எனக்கு பீடி மட்டும் ஒரு கட் வாங்கிக் கொடு என்ற போது வாங்கிக் கொடுத்தபோது மகிழ்ந்தான். இருட்டில் கலந்தான்.
நான் அன்று எடுத்த பலவித புகைப்படங்களின் தொகுப்பை ஸ்லைட் ஷோவில் போட்டு ஒவ் வொன்றாகப் பார்த்து வருகிறேன். ஆப்பிளை விதவித மாக எடுத்த படங்களும் இருக்கிறது. அவனுக்கே  தெரியாமல் ஒரு நாள் விளையாட்டாக கேட்டேன்..“ஏன் நீ திருமணம் செய்து கொள்ளலாமே..“
அதிர்ச்சியுடன் அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு யாரையக் கேட்ட...என்றான்..
“உன்னயத்தான்..“
“அது நம்முளுக்குனு அத்தை புள்ள இருந்துச்சு...அதையக் கட்டிக்குடுத்துட்டாங்க...அப்பறம் நாம புள்ளக்கி எங்க போறது..“
“அது இல்லைன்னா வேற புள்ளயா இல்ல...வேற ஒண்ணப் பாத்துக் கட்டிக்க வேண்டியது தான..“
“அப்பறம் அவளோட அத்தை பையன் என்ன பண்ணுவான்...“என்றான் ஆப்பிள்..
“அவன் என்னமோ பண்ணிட்டுப் போறான்... உனக்குப் புள்ளயாச்சல்ல..“ இளவேனில் எரிச்சலுடன் சொல்கிறார்
“அது தப்பு..என்னிருந்தாலும் இன்னொருத்தனுக்குன்னு இருக்கறது மேல நாம ஆசப்படறது தப்பல்ல...“
“அப்ப நீ..இப்படியே தினசரி சுங்கத்துக் கடைகளுக்கு காய் மூட்டை சுமந்தே சாகப்போறயா...“
“இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்கற.. கடைசி வெறைக்கும் போட்டா எடுத்தே சாகப் போறயா...“ பதிலுக்கு பீடிப்புகைக்குள் தன் முகத்தை வைத்துக் கொண்டு ஆப்பிள் கேட்டான்..
“நல்லாத்தான் பேசற ஆப்பிள்....சீக்கரம் கண்ணாலத்துக்கு சொல்லியனுப்பு...சரியா...“
“சரி சரி.....டீ மட்டும் ஒண்ணு சொல்லிட்டுப் போ...குட்டி.ணா...“
         சிகரெட் புகை இங்கும் மங்கும் சுற்றியது. வாணலியிலிருந்து பஜ்ஜிகளும் பிறகு உருளைக் கிழங்கு மசாலாபோண்டாவும் பிறகு மெது பக்கடாவும் மாறி மாறி வருகிறது. மக்கள்  திட்டுத்திட்டாக வந்து போய் கரைந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அந்த நேரத்திற்காக காத்திருந்தோம். பேச்சினூடாக அந்த டைல்ஸ் படிக்கட்டுகளிலிருந்தவர்கள் சொற்பத்தில் கரைந்து வீடுகள் போய்ச் சேர்ந்தார்கள். கடைகளின் ஷட்டர்கள் அடைக்கப்பட்டு படிக்கட்டுகளில் உழைப்பாளர்கள் தேங்க ஆரம்பிக்கிறார்கள். தேநீரகத்தின் பாத்திரங்கள் கழுவப்பட்டது. சாலைகளில் எப்பொழுதாவது டாங்கர் லாரிகளும் மணல் லாரிகளும் கடந்து போனது. சில முதிர் பெண்களின் நடமாட்டம் துவங்கியது. கிழவிகளுக்குக் கண்கள் தெரியத்துவங்கியது. கிழவர்கள் மண்டபத்தில் மகாபாரதக் கதைகளை உரக்கப்படிக்கத் துவங்கினார்கள். ராஜகோபுர கட்டுமானப் பணியிலிருந்த இறுகிய சிமென்ட் இடுக்குகளிலிருந்து சங்குணிக் குருவிகளின் தாம்பத்ய உரையாடல்கள் தெளிவாக கேட்கிறது.. கடைசி பஸ்சுக்குக் காத்திருந்தவர்கள் இன்னும் நம்பிக்கையுடன் நின்று கொண்டிருப்பது தெரிகிறது..
     இரவின் பிடியிலிருந்து ஆப்பிளை விடுவித்தோம். மெல்ல அவனிடம் சென்று அவனை சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும் ஒத்துழைக்கிறாயா என்றோம். சில நாட்கள் முன்பு அவனுக்குத் தெரியமால் எடுத்த படங்கள் அத்தனை உயிர்ப்புடன் இல்லை. பீடிக்கு மட்டும் ஏற்பாடு பண்ணு என்றான் மறுபடியும்...
     அவனுக்கு என்று எடுத்து வந்த பிரத்யேகமான உடைகள் அணிவித்து எடுக்கத் துவங்கினோம். சோடியம் வேப்பர், சோலார் வெளிச்சம் மிகச்சாதாரண குழல் விளக்கு வெளிச்சம் என்று பல இடங்களில் நிற்க வைத்து எடுத்தோம். எடுத்த புகைப்படங்களை அவனுக்குக் காட்டிய போது அவனிடம் எந்த ஆச்சர்யங்களும் முகத்தில் காட்டவில்லை..அப்படித்தான் இன்னும் திருப்தி வராத வகையில் படங்கள் இருந்தபடியாகவே தோன்றுகிறது. சில படங்கள் சிறப்பாக வந்திருந்தது.
“ நான் உங்களை எடுக்கிறேன்...எப்படின்னு சொல்லுங்க..“ என்றான் ஆப்பிள் ஆச்சர்யத்துடன்
முதலில் காமிராவை அவன் கைகளில் தருவதற்குப் பயம். முதலில் சரிசெய்துவிட்டு எடுத்த படங்களை பாதுகாப்பு செய்து விட்டு வேறு மெமரி கார்ட் போட்டு கையாள்வது பற்றி விளக்கிவிட்டு அவனிடம் கொடுத்தோம். அதற்குள் மேலும் சிகரெட் பிடித்தோம். ஆப்பிளை ஒரு சிகரெட் குடி என்றபோது வேண்டாமென்றான்.
முதலில் சில புகைப் படங்கள் எங்களை எடுத்தான். எடுத்தவற்றை ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஆச்சர்மாக இருக்கிறது. ஆப்பிள் ஆச்சர்யத்துடன் “ஏன் குட்டிணா  நல்லா எடுத்திருக்கறனா..“ என்றான். அதே காமிரா அதே இடம். நானும் இளவேனிலும் ஆச்சர்யத்தின் விளிம் பிற்கே போனோம். பிறகு ஆப்பிளிடம் நீயே உனக்குப் புடிச்ச இடங்களை எடுத்துக் கொடு என்றதும் அவன் வரிசையாக இருக்கிற காலியான கடைகள் அதில் உறங்கும் கடைக்கார வயோதிகர்கள், குறைந்த ஒளியில்  மின்னும் பழைய கோவில் கோபுரங்கள் சாலையில் உறங்கும் நாய்கள் என்று ஓடி ஓடி படங்கள் எடுத்தான். இளவேனிலும் நானும் சிகரெட்டுகளைத் தொடர்ச்சியாக பற்றவைத்து ஆச்சர்யம் மேலிட அந்த இரவின் வாலுடன் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது ஆப்பிள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் முகமும் உடலும் களைத்திருக்கிறது. ஒரு இளகிய மனித உடலின் அசைவுகள் தெரிகிறது. உணர்ச்சி வயப்பட்டவனாக அமைதியாக பீடியை உருஞ்சிக் கொண்டிருந்தான்.
“ஏன் ஆப்பிள் அமைதியாயிட்ட...“
“இத்தன வருசமா இந்த இடத்தில இருக்கறன்..போட்டோ எடுக்கறதுக்கு பார்க்கபோது மனசுக்கு என்னவோ பண்ணுது..நீங்க தினமும் ராத்திரி நேரங்கள்ல போட்டோ எடுக்கறது ஏன்ன இப்பதா தெரியுது...“
          புகைப்படங்களை பத்திரிக்கைகளுக்கும் போட்டிகளுக்கும் அனுப்பும் பொழுது அதில் ஆப்பிள் எடுத்த புகைப்படங்களையும் அவனுடைய பெயரையும் அவன் தொழிலையும் குறிப்பிட்டு அனுப்பி வைத்தோம். ஆப்பிளின் புகைப்படங்கள் சில பிரசுரத்திற்கும் சில புகைப்படங்களுக்கு தலா ஆயிரம் ஐநூறு என்று பரிசும் கிடைத்தது.
       மகிழ்வின் உச்சத்தில் அன்றைய இரவில அவனைத் தேடிப் போனோம். காய்கறிக் கடைகளில் உறங்கியவர்களின் அவன் அடையாளம் வைத்து தேடினோம். தேநீர்க் கடை பையன்களும் உதவினார்கள். இரவு பதினொரு மணி..அரைத்தூக்கத்திலிருந்தான். சில நாட்களாக அவனுக்கு குடிப்பழக்கம் வந்திருப்பதாக பையன்கள் சொன்னார்கள். எங்கள் பையில் சரக்கு பாட்டில்கள் இருந்தது.
“ஆப்பிள்..ஆப்பிள்“ என்று உலுக்கிய போது எழுந்தான் சாக்குக் கோணியை விலக்கிய வாறு எங்களைக் கண்டதும் மிகவும் பிரகாசமாகி வாங்கணா...குட்டியண்ணா என்றவாறு பீடியை எடுத்துக் கொண்டு சௌகரியமாக நாங்கள் உட்கார காய்கறி மூடையை விலக்கிட முயன்றான்.. பிரசுரமான புகைப்படங்களையும் பரிசு தொகையையும் விபரம் சொன்னதும் ஆச்சர்யம் ஏதுமில்லை.
ஆப்பிளின் கண்கள் இளகிக் கொண்டிருக்கிறதை உணர்ந்தோம்.. நீண்ட மௌனம் அந்த இதழ்களிலிருக்கிற மற்ற புகைப்படங்கள் காமிராக்களின் படங்கள் அழகிகளின் படங்கள் காகிதங்களின் வழவழப்பு இப்படியாக பக்கம் பக்கமாகப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான். நாங்க்ள ஆயிரத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்த போது என்ன இது என்பதாகப் பார்த்தான்
“நீங்களே வெயிங்க... நம்ம கணக்குல இருக்கட்டும்..நானு எங்க கொண்டு போய் வைக்க...குட்டியண்ணா பீடி மட்டும் ஒரு கட்டு வாங்கிக் குடுத்துட்டுப் போங்க....இந்தப் புஸ்தகத்தை மட்டும் நான் வெச்சிக்கட்டுமா...“
“இப்ப உன் மனசுக்கு என்ன தோணுது ஆப்பிள்..“
“இருவது வருசத்துக்கு முன்னால கண்ணாலம் பண்ணிப் போன அத்த புள்ள ஙாபகம் வருது...அப்பல்லாம் ஒரு போட்டா கூட எடுக்கல..ஒரு வேள ஒரு போட்டா இருந்துருச்சின்னு சொன்னா.. அதப்பாத்துட்டு நானும் என்ற சோலியப்பாத்திருப்பன்னு நெனைக்கறன்..“ என்றவாறு தாவரத்திலிருந்த அரைகுறையான அளவில் கவர்ச்சியாக இருக்கிற பாட்டிலை எடுத்தவனைத் தடுத்து எங்களிடமிருந்த பாட்டில்களைத் திறந்தோம். அவன் தடுத்து விட்டு அதைக்குடித்தான்...
“ குட்டியண்ணா எங்காவது டவுன்ல ஒரு வேலையிருந்தாச் சொல்லுங்க..என்னால இங்க இனி இருக்க முடியாது..“ என்றான் ஆப்பிள்...



புதன், 15 ஏப்ரல், 2015

"min pura kavithaigal"' seeralan kavithaigal-


மின்புறா கவிதைகள்

சீராளன் ஜெயந்தன் கவிதைகள்

தொகுப்பு குறித்து

 

கவிதைகளில் நமக்குச் சௌகரியமான உலகத்தின் கவிதைகள் மற்றும் நமக்கு சௌகரியப்படாத உலகத்தின் கவிதைகள் என்பதாக புதுக்கவிதை உலகம் தனது காலத்தின் அளவளவுகளை தீர்மானித்து இயங்கி வருகிறது. தனிப்பட்ட கவிஞனின் வாழ்வின் நெருக்கடிகள் பணி, பதவி, வீடு பேறு சுகம் உறவு களில் அளப்பரிய வெற்றிகளை ஈடு கொண்டு விடுகிற கவிஞனின் சொற்களுக்கும் வறுமை, போதை, பிரச்சனை, உறவுச்சிக்கல் கொண்ட கவிஞனின் சொற்களும் நம் இலக்கிய வகைகளில் காணக்கிடைக்கிறது. கவிதைகளில் வீசும் நறுமணங்களில் ஓசைமிக்க சந்தங்களிலேயே கவிஞன் சௌகரியமான உலகத்தில் சஞ்சரிக்கிறானா வறுமையில் உழல்கிறானா என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். கவிதை கவிஞன் உறவு சௌகரிமிக்க உலகத்தினாலானது. அதற்கு எதிரானதுமானது.

கவிதை வடிவங்களில் ஒவ்வொரு பதின்பருவங்களிலும் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. புதுக்கவிதை வடிவங்களிலிருந்து உரைநடையுடனும் வசன சந்த எதுகைகளுடன் எண்பதுகளின் காலத்தில் எழுதியவர்கள் உண்டு. எண்பதுகளின் காலம் சீர் சிறப்புத் தமிழின் பொற்காலம் எனலாம். எண்பதுகளில்தான் மிக அதிகமான இலக்கியப்படைப்புகள் வணிக இதழ்கள் இலக்கியப் பிரிவுகளுக்கான தனித்த இதழ்கள் வந்து பெரிய வாசகர்களின் பரப்பை உருவாக்கியது.

புதுக்கவிதை வடிவங்கள் மெல்ல தனது பார்வையை அகம் புறம் என்று பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது முதல் அதன் வடிவ நீட்சி அங்கதமும் சமூக விமர்சனமும் கொண்டதாக மாறியது. இசைப்பாடல்களுக் காக எழுதப்படுகிற கவிதை வடிவ சந்தங்களும் சமூகத் தினைப் பற்றியும் மனிதர்களின் அறியாமையைக் குறித்து ம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. கவிஞர்கள் எல்லாச் சமூக தளங்களிலிருந்தும் தோன்றி வெளியே தெரிய ஆரம்பித்தார்கள். சமூக அடித்தளத்தட்டிலிருந்து எதிர்பார்த் தளவு ஆக்ரோசத்துடன் வரவேண்டிய கவிஞர்களின் கவிதைகளும் கவிதைகளின் கவிஞர்களும் இடஒதுக்கீடு நோக்கியும் மதமாற்றம் இவ்விருநிலைகளின் சார்பு நிலையுடன் கழைக்கூத்தாடியின் கயிற்றுப் பாதைபோல தள்ளாட்டம் காணப்பட்டார்கள். சீராளன் ஜெயந்தன் கவிதைகள் சற்று மாறுபட்டவை. அவருடைய கவிதையின் வடிவங்கள் பல மூத்த ஆளுமைகள் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அபி. ரிஷி எஸ்.வைத்தீஸ்வரன்,அழகிய சிங்கர், அசோகமித்திரன்  எழுதியிருக்கிறார்கள். மிக சாதாரணமாக,மிக எளிமையாக படு சாதாரணமாக எழுதப்படுகிற வரிகள் கவிதைகளின் தரத்தை உயர்த்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம். கரடு முரடு மிக்க வாழ்க்கை நெருக்கடிகளை நாடோடிகள் தங்கள் பரதேசிப் பாடல்களின் வழியாக போகிற போக்கில் அற்புதமான தத்துவங்களை தெளித்துப் போகிற சித்தர்களின் பாடல்களும் இதே வகைதான்.

நாளை

நாளை வந்தது பிரளயம்

எனப் பயந்தார்

கோயில்களில் ஆறுகால பூஜை

 

கடைக் கோடி மனிதனுக்கோ

வேலையிருக்கு வெட்டி முடிக்க

மின்சார பில் கட்ட...

தொலைபேசி கட்டணம்,

குடும்ப அட்டை மாற்றம்

வாக்காளர் பட்டியல் திருத்தம்

பள்ளியில் பணம் கட்ட

அல்லது ஆசிரியரிடம்

வாங்கிக்கட்ட

வண்டிக்கு முடிந்த காப்பீடு

புதுப்பிக்க

 

படுத்திருக்கும் அப்பனுக்கு

மருந்து வாங்க

பாரியாளுக்கு வாங்கி சேலை மாற்ற

ஆயிரம் வேலையிருக்கு செய்ய

இந்த பூஜைமுடிந்தால் தேவலாம்

நாளை......                        ---பக்-33

 

       வாழ்நாளின் மிக எளிய சம்பவங்களைக் கவிதைகளாக்குவது என்பது தைரிமிக்க விசயம்தான். குடும்ப அமைப்பு முறைகளுக்குள்ளாக சடஙகுகளுக்குள்ளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட கவிஞர்கள் உள்பட நடுத்தர சமூகத்தின் குரல்களாக பல கவிதைகள் அடங்கியிருக்கிறது. பெரும்பாலான கவிஞர்கள் பேச அச்சப்படுகிற ஆபாசமான சொற்களாகவே இந்த குடும்ப அமைப்பு முறைச் சொற்றொடர்கள். சீராளன் பல கவிதைகளிலும் நறுக்குகளிலும் இந்த அங்கத விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

சமூகம் என்பது இலக்கியம் போன்ற குழப்பம்  மிக்க ஒன்றுதான். சமூகம் வேறு. இலக்கியம் வேறு. இரண்டும் ஒன்றையொன்று என்றும் சாராது இருந்தவை. இரண்டுக்குமிடையே நிலவும் குழப்பங்கள்தான் சமூக வேறுபாடுகளை உருவாக்குகிறது. அதனால்தான் எந்த இனமக்களும் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் காண்ப்படுகிறார்கள். இனவரையில் இலக்கியம் அல்லது இனவரைவியல் கவிதை என்பது ஒவ்வொரு பதின் பருவ காலங்களிலும் உருவாகியே வந்து கொண்டிருக்கிறது. தன் சமூக இன மக்களுக்காகப் போராடுகிறோம் வாழ்கிறோம் என்று இன்று நம்மிடையே காணப்படுபவர் கள் கூட பெரும் நிலவுடைமையாளர்களாக செல்வந்தர் களாக மதபீட நிறுவனர்களாக நூறு இருநூறு கார்களில் நீதிமன்றங்களுக்கு அலைகிறவர்களாக, மருத்துவ மனைகளில் தஞ்சம் புகுந்து கொள்கிறவர்களாகவே காணப்படுகிறார்கள்.

சமூகம் சார்ந்து அகம் புறம் சுகம் ஒழுக்கம் மதிப்பீடுகளை காலந்தோறும் கவிதையும் இலக்கியமும் விமர்சித்து வந்து கொண்டிருக்கிறது. கவிதையால் எதையும் விமர்சனம் செய்து விடமுடியும். கவிதை செத்து சமூக விமர்சனம் மேலோங்குகிறது. பெரும் பாலும் புதுக்கவிதை வடிவத்திற்குப் பிறகு வளர்ந்த கவிதை இயக்கம் இந்த சமூகத்தின் மீதான வெளிப்படை யான விமர்சனத்தை வைத்துக் கொண்டே வருகிறது. நம் சமூகத்தின் படித்தவர்கள்,படிக்காதவர்கள்,வறிய நிலையி லிருப்பவர்கள்,ஏழ்மையர்,நடுத்தரவர்க்கம், தொழிலாளி வர்க்கம், உள்பட எல்லா நிலைக் கவிதைகளும் சமூகத் தை விமர்ச்சிக்கிறது. அது சமூக விமர்சனம்தான் என்ப தை அந்தக் கவிஞரையே ஒப்புக்கொள்ளவைக்கத்தான் இலக்கிய விமர்சனம் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் அப்படிஎழுதவில்லை என்பதும் அதுவல்ல பொருள் என்று பல்டி அடிக்கிறவர்களை ஆமாம் அதுவே பொருள் என்றுணர்த்தப் போராடுற பணியையும் கவிதையின் வாசகனும் விமர்சகனும் காலந்தோறும் செய்து கொண்டேயிருக்கிறான்.

புத்தாண்டு

ஏய் மனிதா

நீ போட்ட கோட்டில்

உன் கட்டத்தில்

போதவில்லை என்று

புதிது மாற்றினாய்

நாட்காட்டியை

 

நான் சுற்றிய படி

சுற்றித் தானிருக்கிறேன்

எங்கு தொடங்கினேன்

எங்கு முடிவேன்

தெரியாது

 

இருளும் ஒளியுமே

மாற்றம்

 

நேற்று கழிந்தது

மகிழ்வென்றால்

இன்று பிறந்தது

கவலையாயின்

ஏனிந்த ஆர்ப்பரிப்பு

 

உன் நாட்காட்டி மாறுவதில்

மாற்றம் ஏதுமில்லை

வாழ்வில் வேறு புள்ளிகள் வை

கொண்டாட..

 

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் முக்கியமான கவிதை தொகுப்பாக சீராளன் ஜெயந்தனின் “மின்புறா கவிதைகள்“ நூலில் கண்டேன். கவிதைகளின் பலவகைகளைக் காண முடிந்தது. பல வடிவங்கள், காலத்தின் அளவீடுகளை நுணுகி ஆராய்ந்து விமர்சிக்கிற கவிதைகளாக பல இருக்கிறது. புதுக்கவிதையின் ஆக்கங்களாக சிலதும் குறும்பாக்களாக,நறுக்குகளாக என்று எல்லாவகையான சிந்தனைத்துளிகளாக அமைந்திருக்கிறது. பெரும்பாலும் நடுத்தவர்க்கத்து மனதில் இயலாமைகள் போதாக்குறை கள் சாமாத்தியமற்ற பொழுது சடங்குகள் பற்றிய மனக்கு றைகள் என்பதாக பல கவிதைகள். இந்தக்கவிதைகள் எதுவுமற்ற இயலாத நிலை கொண்ட மனித மனதின் அகப்பாடல்களாகவே உள்ளது. வெளிப்படுத்துகிற தன்மை யதார்த்தமாக உள்ளது. கவிஞனால் வேறென்ன செய்ய முடியும். அறிந்த மொழியை வைத்து வெளி உலகத்திற்கு சமூகச் சூழல்களை “ரிர்போர்ட்செய்யத்தான் முடியும். அவனிடம் என்ன அதிகாரங்கள் உள்ளது. அவன் சொன்னால் யார் கேட்பார்கள். சமூக அடுக்குகளில் உள்ள அதிகாரத்தின் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் கேட்டு உடனே பின்பற்றி நடந்து கொள்ளவா போகிறார்கள்.. நீயென்ன எனக்கு வந்து அறிவுரை சொல்வதற்கு நான் சொல்கிறேன் உனக்கான அறிவுரை என்றுதானே நகரமும் நாடும் நாட்டுமக்களும் ஊர்ந்து போய்க் கொண்டேயிருக்கி றார்கள். சீராளன் கவிதையொன்று

நகரம்

எல்லாம் இருந்தது

நகரத்தில்

நகருக்கு மத்தியில் வீடென்ற

பெருமையும்

 

இறங்கினால் கடைத்தெரு

திரும்பினால் காய்கறிச் சந்தை

சாலையில் பேருந்து

எட்டிப் போட்டால்

ரயில் நிலையம்

சுற்றிச் சுற்றி மருத்துவர்

மாபெரும் மருந்துக்கடைகள்

ஊதிப் பெருத்துவிட்ட

பலசரக்குக் கடைகள்

ஜவுளிக் கடல்கள்

கைதட்டினால் ஆட்டோ

 

என்னைக் கிடத்தியிருந்த

அவசர ஊர்தி அலறியதே தவிர

நகரவில்லை

 

         தொகுப்பிலுள்ள பல எளிமைமிக்க சாதாரணமான வாக்கியங்களில் உள்ள “கருத்து“ கள் ஆச்சர்யம் தருகிறது. கவிதைகள் என்று இவைகளும் அறியப்படுகிற காலமும் தெரிகிறது. நறுக்குகளாக ஐகூ கவிதைகளாக சில பக்கங்களில் உள்ளது. சமூகத்தின் மீது வைக்கிற நடுத்தரவர்க்கத்தின் சத்தமற்ற மிருதங்க குரல். அளவான சத்தம் கொண்ட நாத இசைக்கருவிகளின் பாடல்கள் போன்றும் சில கவிதைகள். பிரமிப்பு கொள்ள வைக்கிற நம் சிந்தனையை கிளறி விடுகிற சுற்றிச் சுற்றி மூளையைக் கசக்க வைக்கிற நுட்பமான வரிகளோ எதுவுமில்லை. இந்தக் கவிதைகளே சீராளன் கவிமொழியின் பலம். இறுதியில் குறுங்காவியம் எனும் நீண்ட கவிதையின் நடை ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தக் கவிதைகளுடன் இந்தக் காவியம் வேறொரு தளத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பகுதியில் பயண்படுத்திய கவிதைமொழியும் நடையும் வேறு.

அதில் ஒரு காட்சி

வெப்பம் தணிந்து

கதிரவன்

மேல் மறைகையில்

சிற்பம் சிற்பமாய் சிறக்க

விழி திறக்க

காத்திருக்க

மனம் வெடித்து

வாய் திறந்தான்

சித்திரன்

 

 மரபு, நறுக்கு, ஐகூ, புதுக்கவிதை இப்படியாக வாழ்வின் சித்திரங்களை பல்வேறு எதார்த்தாமான எளிமையான சொல்லாடல்கள் மூலம் சீராளன் தன் அனுபவங்களை விமர்சனங்களை, தன் புரிதல்களை, வியாக்கியானங் களை முன்வைத்துள்ளார். வாழ்நாட்களை நாம் எந்தளவு விமர்சனப் பார்வையுடன் அறிந்து கொள்ள முயற்சிக்கிறோமோ அதே அளவு இலக்கியப் பிரதிகளின் தன்மையையும் அறிந்து கொள்ளலாம். இலக்கியப் பிரதிகள் காலத்தின் ஒவ்வொரு படிமங்களையும் காட்சிகளையும் அறிந்து கொள்ளலாம். கவிதையை மிக சுதந்திரமாக பயண்படுத்தியிருக்கிறார் அவர் தனது கவிதைகளக்கான மொழியென்பது தன் மனதின் இயல்பான கூறல் என முடிவு செய்திருக்கிறார் என்று சொல்லலாம். எந்தப் பின் விமர்சனங்களையும் கண்டு யோசித்து காலம் தாழ்த்தாமல் தனது தொகுப்பை நூலாக்கியிருக்கிறார்.. வாழ்த்துகளுடன்.

வெளியீடு

 

மெய்ப்பொருள்

கவிதைகள்

சீராளன் ஜெயந்தன் ஆசிரியர்

38-22-4 வது பிரதான சாலை

கஸ்தூரிபாய் நகர்

அடையார்-சென்னை 600 020

விலை-ரூ.180

 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பாம்பாட்டி சித்தன் கவிதை நூல் அறிமுகம்..



இறந்தவர்களை அலங்கரிப்பவன்

கவிதை நூல் குறித்து

பாம்பாட்டி சித்தனின் மூன்றாவது கவிதை நூல் அறிமுகம்

பாம்பாட்டி சித்தனின் கவிதைகள், ஒரு குழந்தையின் ஆர்வமும் அவதானிப்பும் நிரம்பிய ஒரு விதமான பரிசோதனைகள். தொடர்ச்சியான பல்வேறு பரிசோதனை களின் வாயிலாகத் தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்பவை இதனாலேயே இக்கவிதைகள் எதிர்காலத்திலிருந்து நிகழ் கணத்தில் இயங்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. முரண்பாடுகளை அடித்தளமாகக் கொண்டிருக்கும் நவீன உலகம்-மனித வாழ்வு குறித்த வலி மற்றும் பகடியைப் பகிர்ந்துகொண்டவை. மாற்றுத்திறனாளி குழந்தைகளும் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளும் வலிப்பு நோயுற்ற குழந்தைகளும் இவரது கவிதை உலகினுள் ஊடாடுகின்றனர்.   – பதிப்பாசிரிர் அறிமுகக் குறிப்புகள்   
இலக்கியப் பிரதிகளின் தலையாய பணியே பெற்ற அனுபவங்களிலிருந்து வரப்போகிற அழிவைத் தடுப்பதுதான். உலகத்தில் நெருக்கடிகளும் நெரிசல்களும் அதிகரிக்க அதிரிக்க பிறக்கும் குழந்தைகள் முழுமையடைந்த வளர்ச்சியடைந்த குழந்தைகளாக பிறப்பதில்லை. கருத்துக்கு எதிர்கருத்து என்பது பிறக்கும் என்பது போல மிகச்சரியானதுக்கு எதிராக மிகவும் பிற்போக்குத்தனமான கருத்து உருவாகியே தீரும் என்பது போல விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது மறுபக்கம் இயற்கை வனப்பு மிக்க உலகத்தை மனதை விஞ்ஞானம் அழித்து வரவே செய்கிறது என்பதை நவீன இலக்கியப் பிரதிகளும் கவிதைகளும் உணர்த்துகிறது.பாம்பாட்டி சித்தனின் மூன்றாவது கவிதை தொகுப்பில் இந்த நேரெதிர் வளர்சிதை மாற்றங்களை அதன் பிரச்சனை களை எதிர்கொள்கிறது. இன்றைய காலச்சூழலில் பெருமளவில் மக்களைத்திரட்டிக் கொண்டு போய் ஒரு அநீதியைத்தட்டிக் கேட்பதற்கான வாய்ப்புகள் அற்றுப் போய்விட்டது. இங்கு மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக அவர்களுடைய சிந்தனையை, ரசனையைத்திரட்டும் பணிதான் தற்போது மிகவும் அவசியமாகத் தேவைப் படுகிறது. இலக்கியப் பிரதிகளின் முக்கியமான பணியும் அதுதான். கவிதைகள் மிகவும் அதிகப்படியான பணியைச் செய்கிறது. மக்கள் தங்கள் பிரச்சனைகளின் வழியாகவே காலத்திற்குள் தங்களை தொலைத்துக் கொள்கிறார்கள். அவர்களற்ற சமூகம் பற்றிய அக்கறைக்கு வேலையே இல்லை. இருப்பினும் ஒரு சதா நினைவுட்டல் போன்ற காரியங்களைப் படைப்பிலக்கியவாதிகள் தொடர்ந்து ஈடு படவும் வேண்டியிருக்கிறது.

பதிலீட்டு வினை
ஓர் உயிர் இன்னோர் உயிரை
ஒரு துயரம் வேறொன்றை
ஒரு வலி மற்றொன்றை
ஒரு கண்ணீர்த்துளி
வேறொரு கண்ணீர்த்துளியை
ஒரு தனிமம் இன்னொன்றை
பதிலீடு செய்வதைக் குறித்து
நாம்
இன்னம்கூட அதிகமாகப்
பேசித் தொலைக்கலாம்---பக் 12

       நாம் பேச வேண்டியவைகள் என்னென்ன பாக்கியிருக்கிறது என்பதை நினைவுட்டுகிற கவிதை. நிச்சயமாகப் பேச வேண்டிய இடங்களில் பேசுகிறார்களா என்பதை நாம் யோசிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லது பேசுவதற்கான பிரதிநிதித்துவம் இருக்கிற இடங்களில் பேசுவது நடக்கிறதா. சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள் உள்பட மக்களின் பிரதிநிதிகள் தங்கள் மையங்களில் பேசுகிறார்களா. என்றால் அந்த வாய்ப்புகள் மிகமிக குறைவுதான். நம்மில் உரையாடலுக்கு மீறிய உரையாடல்களை நோக்கியே சபைகள் செல்கிறது. ஒரு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் தேவை யென்று ஒருவர் பேசினால்தானே உரிய செவிகளுக்குப் போய்ச் சேர்ந்து மருந்துகள் வந்து சேர்ந்து அந்த நோயாளிகளுக்குப் பயண் விளையும். சமூக உய்வு குறித்துப பேசுதோ, மனித உய்வு குறித்துப் பேசுவதோ கூட தீண்டாமையில் ஒரு வகையென்பதாக அறிவு றுத்தப்படுவதை எதிர்கொண்டிருக்கிறோம். கவிஞனும் கவிதையும் பேசுவதை நாம் குறிப்பிட்டாகவேண்டும்.
புறவகை அழிவுகள் காலத்திற்கு ஏற்றது மாதிரி நிகழ்ந்த படியேதான் இருக்கிறது. புதியன புகுதல் பழைய அழிதல் என்பதல்ல.புதியன புகுதல் மரபுகளை அழித்தல் என்பதுதான் சரி. செல்போன் டவர்கள் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டது முதல் பறவைகள் இருப்பும் சிறு சிறு பறவைக் குஞ்சுகளின் இனப் பெருக்கம் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய சிட்டுக்குருவி களற்ற மருதம் குறிஞ்சி நிலங்கள் மாறிவிட்டது. கனரக காற்றாடிகள் வறண்ட பாலைகளில் வெள்ளரக்கர்கள் போன்று நிறுவப்பட்டு காற்றுகளுக்காகத் தன் இறக்கை களை விரித்தபடி விவசாய நிலங்களைத் தின்று செரிக்கிறது. மனித மரணம் மட்டுமன்றி பொருள் வள ஈட்டல் என்னும் பராகாசூர ஆசைகளால் மண்ணும் மரங்களும் பறவைகளும் ஆறுகளும் வாய்க்கால்களும் கரணைகளும் அழிக்கபட்டாயிற்று. மனிதர்கள் வேலை வாய்ப்புகளற்று பெருநகரத்தின் கட்டிட எலும்புக் கூடுகளுக்குள் வாழப் பழகிக் கொண்டார்கள். கிராமங்களில் குவியும் விவசாயக் கழிவுகளைளயும் இறைச்சிக்கழிவுகளையும் தின்று வாழ முடியுமா என்ன. தற்காலத்தில் பெருநகரங்களைத் தோண்டும் பணிகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். எதற்காகவோ தோண்டுகிறோம் அநேகமாக எல்லா யுகங்களிலும தோண்டிக் கொண்டே தான் இருந்திருக்கிறோம் என நினைக்கிறேன். எதாவது புதிய வாழ்க்கை அகப்பட்டதாவெனத் தெரியவில்லை. ஆனாலும் தேடிக் கொண்டும் தோண்டிக் கொண்டு குழிகளைப் பறிக்கிறோம். மூடுகிறோம். மறுபடியும் பள்ளம் வெட்டுகிறோம் மூடுகிறோம். நிலத்திற்குள் சில ஒயர்களை பிளாஸ்டிக் இரும்புக்குழாய்களைப் பதிக்கிறோம். உள்ளே இருக்கிற ஓராயிரம் பழையதைத் தூக்கி எறிகிறோம். தூசி, புகை, சாம்பல் பறக்காமல் அல்லது பறப்பதைக் காணாமல் நம்மால் வாழவே முடியாது என்பதாக நாம் இம்மூன்றையும் காதலாகி விரும்பி ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். யாரும் எதற்குத் தோண்டுகிறீர்கள். என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்னதான் வேண்டுமென்று யாரும் கேட்பதில்லை. வழக்கமாக நீங்கள் கேட்பதைத் தருவதற்கு யாரும் பிரியப்படவில்லை. உங்களுக்கு இருபது வருடம் கழித்துப் பயண்தரப் போகிற வஸ்துகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது உலகம். அப்படியானால் உங்களுக்கான உலகத்தில் இருந்து கொண்டு எதையும் உணராமல் வேறு எதற்காகவோ குழிகள் வெட்டுகிறீர்கள். பாம்பாட்டி சித்தனின் கவிதைகள் இந்த முரண் சிதைவுகளைத் தொடர்ந்து பேசுகிறது. நவீன கவிதைகளின் கூறுகள் இவை. இனியொரு கவிதை
புற(ம்) 400
பல்வகை மரங்கள் சூழ்ந்த
கிராமப் புறத்தின்
பள்ளி மைதானத்தில்
தகப்பனும் சிறுவனும் ஒரு
மரநிழலில் புதைந்திருக்கின்றனர்
தங்களின் சூழலை
வெற்றாய் பார்த்தபடி

இலைகள் காற்றின் சலசலப்பை
மரத்துள் தேக்கியவாறுள்ளன
வேம்பின் பழங்களாக
உதிரும் அமைதியில்
மரம்
தன்னைக் கண்டு கொள்கிறது

உதிரும் இலைகள்
காற்றில் சுழலை
சுழலில் தமது நடனத்தை
அடையாளம் காண்கின்றன
மரம் தனது சமிக்ஞைகளால்
அவர்களுக்குள் எதையோ
விடுவித்துக் கொண்டிருக்கிறது

பன்னீர் மரங்கள்
அவ்வப்போது பூச்சாரலை
பெருங்காதலுடன்
அதன் கீழிருப்பவர்களின்
மேல் சொரிகின்றன

சற்று தொலைவில்
வாய்க்கால் பள்ளத்து நீர்
தண்ணீரில் குளிக்கும்
பறவையாகத் தன்னை
இனம் காண்கின்றது

சாம்பல் அணில்கள் மரங்களினின்று
குதித்தோடி குதித்தோடி
மென்னொலிகளால்
பள்ளியை நிரப்புகின்றன

அப்
புறம்
சூழ வருகின்றன
தொழிற்சாலையின் கழிவுகள்
மண் நகர்த்திகள் (எர்த் மூவர்கள்)
மற்றும் அதன் 400 காற்றாலைகள்-   பக்-19

        ஒருபுறம் நம்முடைய தொழிற்நுட்பம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இயந்திர உற்பத்திகள் பெருக்க வேண்டும். ஆமாம் வேலைவாய்ப்பை நீங்கள் உறுதிப்படுத்தினால் இயந்திரங்கள் பெருகும். இயந்திரங்கள் பெருகினால் சூழல்கள் கெடும். நோய்கள் அதிகமாகும். நீர் மாசுபடும். அதற்காகப் படிக்கிறவர்களை, தொழிற்நுட்பம் படிப்பவர் களை, இயந்திரவியல் படிப்பவர்களைத் தடுக்க முடியாது. சட்டம் படித்தவர்களுக்கு வேலை வேண்டுமென்றால் குற்றங்கள் பெருகவேண்டும். சாதிய குற்றங்கள் உள்பட மத இனக் குற்றங்கள் பெருகினால் மட்டுமே உலக நீதிக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும். சட்டங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். சமீபத்தில் ஒரு உரையாடலைக் கேட்டேன். ஒரு ஒப்பந்தக்காரர் தன்னுடைய எர்த் மூவர்கள் பொக்லைன் இயந்திரங்கள் வேலையில்லாமல் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு பணியை ஒதுக்க வேண்டும் அல்லது புதியதாக ஒரு பணியை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றார். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி இன்னும் ஒப்பந்தப் புள்ளிகள் (டென்டர்கள்) திறக்க வில்லை எந்த ஆர்டர் யாருக்கு வரும் போகும் எனத்தெரியாது அதுவரையிலும் காத்திருக்கவும் என்கிறார். அதற்கு அந்த இயந்திரவாசி உடனே. அப்படியானால் இயந்திரங்கள் ஓடாமல் இருந்தால் மெய்ட்டன்ஸ் செலவு அதிகமாகும் அதனால் நான் தற்பொழுது நிலுவையில் உள்ள இடங்களில் உள்ள மரங்களை, புதர்களை சுத்தம் செய்கிறேன். நீங்கள் பார்த்து டீசல் செலவுக்குக் கொடுத்தால் போதும் வெற்றி பெறுகிற டென்டர்காரர்களிடம் சொல்லி எனக்குப் பணம் பெற்றுக் கொடுங்கள் என்கிறார். அந்த இயந்திரங்கள் எந்த உத்தரவும் இல்லாமல் மரங்களையும் புதர்களையும் வெட்டப் போகிறது. இப்படித்தான் நாட்டில் நடக்கிற பல இயற்கை அழித்தொழிப்புகள் நிகழ்கிறது. யார் கேட்பது. கனரக இயந்திரங்களை வைத்திருப்பவர்கள் இயந்திரங்க ளின் மீது பெரும் அக்கறை செலுத்துவதில் கவனம் கொள்கிறார்கள் இயந்திரங்கள் மீது செய்த முதலீடுகளை விரைவில் எடுத்தாகவேண்டும். சமீபத்தில் கட்டுமானத் தொழில் சம்பந்தமான கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கு வைக்கப்பட்டிருக்கிற இயந்திரங்கள் நிச்சயமாக இநத உலகத்தை கொத்திக் குதறி இயற்கையை நாசம் செய்யாமல் விடாது. நிச்சயமாக அந்த இயந்திரங்களின் உரிமையாளர்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. அல்லது அமைதியாக இருக்கவும் இயந்திரங்கள் விடாது. அதன் ஆக்ரோசமான இருப்பு நிச்சயம் முதலாளிகளை உறங்கவிடாது.
இந்தக் கவிதை ஆக்கத்திலும் மிகச் சிறப்பாக வந்திருக்கி றது. நவீன காலத்தைப் பேசுகிறது. மரங்கள், பறவைகள் கனிகள் மலர்கள் என்பதாக கவிதை முழுக்கவும் வாசக மனம் மூழ்குவதற்கான தரிசன இயல்பும் உள்ளது. தொகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளில் மனுசக் கோட்பாடுகளும் மனிதாபிமானத்தின் கோட்பாடு களும் இரண்டும் உரையாடிக் கொள்கிறதோவென ஐயம் வருகிறளவில் நியதிகள் பேசப்படுகிறது. அவர் கற்ற உளவியல்,ரசாயனம். மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான பயிற்சிகள் கற்றிருப்பதால் என்னவோ கவிதைகளில் ஒரு வித ஸ்பரிசமிக்க பரிவுணர்ச்சிகள் மேலோங்கிய கவிதைகளாக அறியப்படுகிறது. ஒரு வகையில் மொழிமருத்துவமும் அவசியப்படுகிற காலம் இது. ஆட்டிசம் பாதித்தவர்களின் மனநலம் பற்றியும் அவர்களின் தனித்த உலகம் பற்றிய விவரணைகள் சிறப்பாக உள்ளது.
“இறந்தவர்களை அலங்கரிப்பவன்“ கவிதை பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சமூகத்தில் பேசப்படாத வர்களாக இந்த இறந்தவர்களை அலங்கரிப்பவர்கள் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் செய்யப்படும் மனித உருவத்திற்கான அதிகபட்ச மரியாதையுடன் ஒரு மனித னுக்கு செய்யப்படுகிற அலங்காரமாக இந்தச செயல்பாடு அமைந்திருக்கிறது. முதலில் கவிதை
“இறந்தவர்களை அலங்கரிப்பவன்“
சாவைக் குறித்த கனவுகள் பொய்த்துவிட்டன அவருக்கு மரணம் என்ற நித்தியத்தில் ஆழ்ந்திருக்கிறார்
அவரை இடையுறு செய்வதற்கு
எப்போதும் வருத்தப்படுபவனாயிருக்கிறான் இறந்தவர்களை அலங்கரிப்பவன்

சாவிற்கோ சடங்களுக்கோ அவன்
எப்போதும் முகத்தைக் காட்டுவதில்லை
கைகளில் அணிந்த உறைகளோடு
கண்கள்வரை மூடிய முகத்தோடு
அறுவை சிசிச்சை நிபுணனைப் போல்
சவத்தைக் கழுவுகிறான்
............ பக்-22
                        
கவிதைகளுக்குள் உறைந்து கிடக்கிற அவர்களின் கலை நயமிக்க வாழ்க்கை பற்றிய பல உதாரணங்களைக் கூற முடியும் ஆனால் இந்த இடத்தில் கிக்கிட்டி என்கிற எங்கள இருகூர் பகுதியில் வாழ்கிற சவரக்கலைஞன் பற்றிச் சொல்லவேண்டும். சுமார் முப்பது வருடங்களாக மிகவும் ஆத்மார்த்தமாக அந்தப்பணியை அவர் செய்கிறார். ஒரு மனிதன் மரணம் நிகழ்ந்த பிறகு உடனடியாக தேடப்படுபவராக கிக்கிட்டி இருப்பார். அவருக்கும் அவர் கத்திக்கும் வேலை வந்த மகிழ்ச்சி அவருக்கும் கிட்டும். ஏற்கெனவே பல ஆபர்கள் அவருக்கு இருக்கும். அதற்கு ஏற்றது போல அலங்காரங்கள் செய்வார். முதலில் மயானம் போகிற உடலுக்கு முன் உரிமை தருவார். அவருடைய பணியும் உழைப்பும் இலக்கியப் பிரதிகளில் பேசப்பட்டிருக்கிறதாவென தெரியவில்லை. பாம்பாட்டி சித்தன் கவிதை நூலுக்குத் தலைப்பையே வைத்துள்ளதை வரவேற்கிறோம். உறவினர்கள் பல இளந்தாரிகள் குடித்திருக்கிற இடமாக அந்த அலங்கரிப்பு நிகழ்வு நடக்கும். கடவுளுக்குச செய்யப்படுகிற எல்லாச் சடங்குகளும் கடவுளாக அல்லது கடவுளுக்கு அருகில் சென்று விட்ட அந்த மனிதனுக்கு செய்யப்படுகிற பொழுது அலங்கப்பதற்கு கிக்கிட்டி தன் கத்தியை எடுப்பார். குளிப்பாட்டுவார். மலர்களால் அலங்கரிப்பார்.சவரம் செய்துவிடுவார். மஞ்சளும் திருமஞ்சணமும் எண்ணை, அரப்பு. இளநீர் உள்பட அணைத்து இயற்கை வஸ்துகளும் பயண்படுத்துவார். அலங்காரம் நடக்கும் பொழுதே கண்டு குடித்த இளந்தாரிகள் சொல்லுவார்கள் “ உன்ற கைப்பக்குவத் திக்கு வேண்டியாவது சாகலாம்ணு இருக்குதுடா கிக்கிட்டி..“ கிக்கிட்டியின் பணி பதினாரு நாட்களுக்கு அந்த மனிதனின் குடும்பத்தாருடன் நட்பும் உறவும் தொடரும்.மனித வாழ்க்கையின் இருப்பும் கழிவும் இதுபோன்ற கலைசம்பந்தமான சடங்குகளில் வைத்துப் போற்றப்படுகிறது என்பதை பாம்பாட்டி சித்தன் தன கவிதைகளில் தெரியப்படுத்துகிறார். இந்த நேரத்தில் ஒன்றைத் தெரியப்படுத்தவேண்டும் இறந்தவர்களை அலங்கரிப்பவர்கள் கையுறைகளைப் பயண்படுத்து வதில்லை. கிராமப்புறங்களில் சடங்களுக்கு மிகுந்த மரியாதை தருவார்கள். நடுவீட்டில் வைத்து அதாவது கடவுள் படங்கள் அகற்றப்பட்டு கடவுளாக கருதிதான் சில குடும்ப சடங்குகள் செய்யப்படுகிறது. சாதிகளுக்குரிய சடங்குகளை அவசியம் செய்வார்கள். குறிப்பாக இடைச் சாதி உழைப்பு சாதிகள் அனைத்தும் அந்த சடங்குகளில் ஈடுபடுகிறளவில் பங்கேற்க பலசாதிமக்கள் உதவுவதை நாம் காணமுடியும்.
தொகுப்பின் கவிதைகளில் உள்ள கெட்டித்தன்மை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. ஆய்வுக்கூடத்தின் எலிகளாக குரங்குகளாக பல்லாயிரம் உயிரிகளாக அவற்றின் ஒன்றாகத்தான் இந்த மனிதவாழ்வும் பொருந்தி யிருக்கிறது. உலகமே ஒரு பரிசோதனைக் கூடம்தான். நம் மொழியை, நம் கவிதையைத் திரும்பத் திரும்ப சோதித்துக் கொள்வதில் படைப்பிலக்கியம் வளர்கிறது. மறுபரிசீலனையும் மறுஉருவாக்கமும், மாற்று நிலையும் அவசியம் என்று உணர்த்திய தொகுப்பு அளித்த கவிஞர் பாம்பாட்டி சித்தனுக்கு வாழ்த்துக்கள்..
“இறந்தவர்களை அலங்கரிப்பவன்
கவிதைகள்
ஆசிரியர்-பாம்பாட்டி சித்தன்

வெளியீடு
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட்
669 கே.பி சாலை
நாகர்கோவில் 629001