‘மின்புறா கவிதைகள் ”
சீராளன் ஜெயந்தன் கவிதைகள்
தொகுப்பு குறித்து
கவிதைகளில் நமக்குச் சௌகரியமான உலகத்தின்
கவிதைகள் மற்றும் நமக்கு சௌகரியப்படாத உலகத்தின் கவிதைகள் என்பதாக புதுக்கவிதை
உலகம் தனது காலத்தின் அளவளவுகளை தீர்மானித்து இயங்கி வருகிறது. தனிப்பட்ட கவிஞனின்
வாழ்வின் நெருக்கடிகள் பணி, பதவி, வீடு பேறு சுகம் உறவு களில் அளப்பரிய வெற்றிகளை
ஈடு கொண்டு விடுகிற கவிஞனின் சொற்களுக்கும் வறுமை, போதை, பிரச்சனை, உறவுச்சிக்கல்
கொண்ட கவிஞனின் சொற்களும் நம் இலக்கிய வகைகளில் காணக்கிடைக்கிறது. கவிதைகளில்
வீசும் நறுமணங்களில் ஓசைமிக்க சந்தங்களிலேயே கவிஞன் சௌகரியமான உலகத்தில்
சஞ்சரிக்கிறானா வறுமையில் உழல்கிறானா என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். கவிதை கவிஞன்
உறவு சௌகரிமிக்க உலகத்தினாலானது. அதற்கு எதிரானதுமானது.
கவிதை வடிவங்களில் ஒவ்வொரு பதின்பருவங்களிலும்
மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. புதுக்கவிதை வடிவங்களிலிருந்து உரைநடையுடனும்
வசன சந்த எதுகைகளுடன் எண்பதுகளின் காலத்தில் எழுதியவர்கள் உண்டு. எண்பதுகளின்
காலம் சீர் சிறப்புத் தமிழின் பொற்காலம் எனலாம். எண்பதுகளில்தான் மிக அதிகமான
இலக்கியப்படைப்புகள் வணிக இதழ்கள் இலக்கியப் பிரிவுகளுக்கான தனித்த இதழ்கள் வந்து
பெரிய வாசகர்களின் பரப்பை உருவாக்கியது.
புதுக்கவிதை வடிவங்கள் மெல்ல தனது பார்வையை அகம்
புறம் என்று பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது முதல் அதன் வடிவ நீட்சி அங்கதமும்
சமூக விமர்சனமும் கொண்டதாக மாறியது. இசைப்பாடல்களுக் காக எழுதப்படுகிற கவிதை வடிவ
சந்தங்களும் சமூகத் தினைப் பற்றியும் மனிதர்களின் அறியாமையைக் குறித்து ம்
விழிப்புணர்வு ஏற்படுத்தியது. கவிஞர்கள் எல்லாச் சமூக தளங்களிலிருந்தும் தோன்றி
வெளியே தெரிய ஆரம்பித்தார்கள். சமூக அடித்தளத்தட்டிலிருந்து எதிர்பார்த் தளவு
ஆக்ரோசத்துடன் வரவேண்டிய கவிஞர்களின் கவிதைகளும் கவிதைகளின் கவிஞர்களும்
இடஒதுக்கீடு நோக்கியும் மதமாற்றம் இவ்விருநிலைகளின் சார்பு நிலையுடன்
கழைக்கூத்தாடியின் கயிற்றுப் பாதைபோல தள்ளாட்டம் காணப்பட்டார்கள். சீராளன்
ஜெயந்தன் கவிதைகள் சற்று மாறுபட்டவை. அவருடைய கவிதையின் வடிவங்கள் பல மூத்த
ஆளுமைகள் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அபி. ரிஷி எஸ்.வைத்தீஸ்வரன்,அழகிய
சிங்கர், அசோகமித்திரன்
எழுதியிருக்கிறார்கள். மிக சாதாரணமாக,மிக எளிமையாக படு சாதாரணமாக
எழுதப்படுகிற வரிகள் கவிதைகளின் தரத்தை உயர்த்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.
கரடு முரடு மிக்க வாழ்க்கை நெருக்கடிகளை நாடோடிகள் தங்கள் பரதேசிப் பாடல்களின் வழியாக
போகிற போக்கில் அற்புதமான தத்துவங்களை தெளித்துப் போகிற சித்தர்களின் பாடல்களும்
இதே வகைதான்.
நாளை
நாளை வந்தது பிரளயம்
எனப் பயந்தார்
கோயில்களில் ஆறுகால பூஜை
கடைக் கோடி மனிதனுக்கோ
வேலையிருக்கு வெட்டி முடிக்க
மின்சார பில் கட்ட...
தொலைபேசி கட்டணம்,
குடும்ப அட்டை மாற்றம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்
பள்ளியில் பணம் கட்ட
அல்லது ஆசிரியரிடம்
வாங்கிக்கட்ட
வண்டிக்கு முடிந்த காப்பீடு
புதுப்பிக்க
படுத்திருக்கும் அப்பனுக்கு
மருந்து வாங்க
பாரியாளுக்கு வாங்கி சேலை மாற்ற
ஆயிரம் வேலையிருக்கு செய்ய
இந்த பூஜைமுடிந்தால் தேவலாம்
நாளை...... ---பக்-33
வாழ்நாளின் மிக எளிய சம்பவங்களைக் கவிதைகளாக்குவது என்பது தைரிமிக்க
விசயம்தான். குடும்ப அமைப்பு முறைகளுக்குள்ளாக சடஙகுகளுக்குள்ளாக வாழ
நிர்ப்பந்திக்கப்பட்ட கவிஞர்கள் உள்பட நடுத்தர சமூகத்தின் குரல்களாக பல கவிதைகள்
அடங்கியிருக்கிறது. பெரும்பாலான கவிஞர்கள் பேச அச்சப்படுகிற ஆபாசமான சொற்களாகவே
இந்த குடும்ப அமைப்பு முறைச் சொற்றொடர்கள். சீராளன் பல கவிதைகளிலும்
நறுக்குகளிலும் இந்த அங்கத விமர்சனத்தை வைத்திருக்கிறார்.
சமூகம் என்பது இலக்கியம் போன்ற குழப்பம் மிக்க ஒன்றுதான். சமூகம் வேறு. இலக்கியம் வேறு.
இரண்டும் ஒன்றையொன்று என்றும் சாராது இருந்தவை. இரண்டுக்குமிடையே நிலவும்
குழப்பங்கள்தான் சமூக வேறுபாடுகளை உருவாக்குகிறது. அதனால்தான் எந்த இனமக்களும்
தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் காண்ப்படுகிறார்கள். இனவரையில் இலக்கியம் அல்லது
இனவரைவியல் கவிதை என்பது ஒவ்வொரு பதின் பருவ காலங்களிலும் உருவாகியே வந்து
கொண்டிருக்கிறது. தன் சமூக இன மக்களுக்காகப் போராடுகிறோம் வாழ்கிறோம் என்று இன்று
நம்மிடையே காணப்படுபவர் கள் கூட பெரும் நிலவுடைமையாளர்களாக செல்வந்தர் களாக மதபீட
நிறுவனர்களாக நூறு இருநூறு கார்களில் நீதிமன்றங்களுக்கு அலைகிறவர்களாக, மருத்துவ
மனைகளில் தஞ்சம் புகுந்து கொள்கிறவர்களாகவே காணப்படுகிறார்கள்.
சமூகம் சார்ந்து அகம் புறம் சுகம் ஒழுக்கம்
மதிப்பீடுகளை காலந்தோறும் கவிதையும் இலக்கியமும் விமர்சித்து வந்து கொண்டிருக்கிறது.
கவிதையால் எதையும் விமர்சனம் செய்து விடமுடியும். கவிதை செத்து சமூக விமர்சனம்
மேலோங்குகிறது. பெரும் பாலும் புதுக்கவிதை வடிவத்திற்குப் பிறகு வளர்ந்த கவிதை
இயக்கம் இந்த சமூகத்தின் மீதான வெளிப்படை யான விமர்சனத்தை வைத்துக் கொண்டே
வருகிறது. நம் சமூகத்தின் படித்தவர்கள்,படிக்காதவர்கள்,வறிய நிலையி
லிருப்பவர்கள்,ஏழ்மையர்,நடுத்தரவர்க்கம், தொழிலாளி வர்க்கம், உள்பட எல்லா நிலைக்
கவிதைகளும் சமூகத் தை விமர்ச்சிக்கிறது. அது சமூக விமர்சனம்தான் என்ப தை அந்தக்
கவிஞரையே ஒப்புக்கொள்ளவைக்கத்தான் இலக்கிய விமர்சனம் என்பது நிகழ்ந்து
கொண்டிருக்கிறது. நான் அப்படிஎழுதவில்லை என்பதும் அதுவல்ல பொருள் என்று பல்டி
அடிக்கிறவர்களை ஆமாம் அதுவே பொருள் என்றுணர்த்தப் போராடுற பணியையும் கவிதையின்
வாசகனும் விமர்சகனும் காலந்தோறும் செய்து கொண்டேயிருக்கிறான்.
புத்தாண்டு
ஏய் மனிதா
நீ போட்ட கோட்டில்
உன் கட்டத்தில்
போதவில்லை என்று
புதிது மாற்றினாய்
நாட்காட்டியை
நான் சுற்றிய படி
சுற்றித் தானிருக்கிறேன்
எங்கு தொடங்கினேன்
எங்கு முடிவேன்
தெரியாது
இருளும் ஒளியுமே
மாற்றம்
நேற்று கழிந்தது
மகிழ்வென்றால்
இன்று பிறந்தது
கவலையாயின்
ஏனிந்த ஆர்ப்பரிப்பு
உன் நாட்காட்டி மாறுவதில்
மாற்றம் ஏதுமில்லை
வாழ்வில் வேறு புள்ளிகள் வை
கொண்டாட..
சமீபத்தில் வாசித்த கவிதைகளில் முக்கியமான கவிதை
தொகுப்பாக சீராளன் ஜெயந்தனின் “மின்புறா கவிதைகள்“ நூலில் கண்டேன். கவிதைகளின்
பலவகைகளைக் காண முடிந்தது. பல வடிவங்கள், காலத்தின் அளவீடுகளை நுணுகி ஆராய்ந்து
விமர்சிக்கிற கவிதைகளாக பல இருக்கிறது. புதுக்கவிதையின் ஆக்கங்களாக சிலதும்
குறும்பாக்களாக,நறுக்குகளாக என்று எல்லாவகையான சிந்தனைத்துளிகளாக
அமைந்திருக்கிறது. பெரும்பாலும் நடுத்தவர்க்கத்து மனதில் இயலாமைகள் போதாக்குறை கள்
சாமாத்தியமற்ற பொழுது சடங்குகள் பற்றிய மனக்கு றைகள் என்பதாக பல கவிதைகள்.
இந்தக்கவிதைகள் எதுவுமற்ற இயலாத நிலை கொண்ட மனித மனதின் அகப்பாடல்களாகவே உள்ளது.
வெளிப்படுத்துகிற தன்மை யதார்த்தமாக உள்ளது. கவிஞனால் வேறென்ன செய்ய முடியும்.
அறிந்த மொழியை வைத்து வெளி உலகத்திற்கு சமூகச் சூழல்களை “ரிர்போர்ட்” செய்யத்தான் முடியும். அவனிடம் என்ன
அதிகாரங்கள் உள்ளது. அவன் சொன்னால் யார் கேட்பார்கள். சமூக அடுக்குகளில் உள்ள
அதிகாரத்தின் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் கேட்டு உடனே பின்பற்றி நடந்து கொள்ளவா
போகிறார்கள்.. நீயென்ன எனக்கு வந்து அறிவுரை சொல்வதற்கு நான் சொல்கிறேன் உனக்கான
அறிவுரை என்றுதானே நகரமும் நாடும் நாட்டுமக்களும் ஊர்ந்து போய்க் கொண்டேயிருக்கி
றார்கள். சீராளன் கவிதையொன்று
நகரம்
எல்லாம் இருந்தது
நகரத்தில்
நகருக்கு மத்தியில் வீடென்ற
பெருமையும்
இறங்கினால் கடைத்தெரு
திரும்பினால் காய்கறிச் சந்தை
சாலையில் பேருந்து
எட்டிப் போட்டால்
ரயில் நிலையம்
சுற்றிச் சுற்றி மருத்துவர்
மாபெரும் மருந்துக்கடைகள்
ஊதிப் பெருத்துவிட்ட
பலசரக்குக் கடைகள்
ஜவுளிக் கடல்கள்
கைதட்டினால் ஆட்டோ
என்னைக் கிடத்தியிருந்த
அவசர ஊர்தி அலறியதே தவிர
நகரவில்லை
தொகுப்பிலுள்ள பல எளிமைமிக்க சாதாரணமான
வாக்கியங்களில் உள்ள “கருத்து“ கள் ஆச்சர்யம் தருகிறது. கவிதைகள் என்று இவைகளும்
அறியப்படுகிற காலமும் தெரிகிறது. நறுக்குகளாக ஐகூ கவிதைகளாக சில பக்கங்களில்
உள்ளது. சமூகத்தின் மீது வைக்கிற நடுத்தரவர்க்கத்தின் சத்தமற்ற மிருதங்க குரல்.
அளவான சத்தம் கொண்ட நாத இசைக்கருவிகளின் பாடல்கள் போன்றும் சில கவிதைகள்.
பிரமிப்பு கொள்ள வைக்கிற நம் சிந்தனையை கிளறி விடுகிற சுற்றிச் சுற்றி மூளையைக்
கசக்க வைக்கிற நுட்பமான வரிகளோ எதுவுமில்லை. இந்தக் கவிதைகளே சீராளன் கவிமொழியின்
பலம். இறுதியில் குறுங்காவியம் எனும் நீண்ட கவிதையின் நடை ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்தக் கவிதைகளுடன் இந்தக் காவியம் வேறொரு தளத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தப்
பகுதியில் பயண்படுத்திய கவிதைமொழியும் நடையும் வேறு.
அதில் ஒரு காட்சி
வெப்பம் தணிந்து
கதிரவன்
மேல் மறைகையில்
சிற்பம் சிற்பமாய் சிறக்க
விழி திறக்க
காத்திருக்க
மனம் வெடித்து
வாய் திறந்தான்
சித்திரன்
மரபு, நறுக்கு, ஐகூ, புதுக்கவிதை இப்படியாக வாழ்வின்
சித்திரங்களை பல்வேறு எதார்த்தாமான எளிமையான சொல்லாடல்கள் மூலம் சீராளன் தன்
அனுபவங்களை விமர்சனங்களை, தன் புரிதல்களை, வியாக்கியானங் களை முன்வைத்துள்ளார்.
வாழ்நாட்களை நாம் எந்தளவு விமர்சனப் பார்வையுடன் அறிந்து கொள்ள முயற்சிக்கிறோமோ
அதே அளவு இலக்கியப் பிரதிகளின் தன்மையையும் அறிந்து கொள்ளலாம். இலக்கியப் பிரதிகள்
காலத்தின் ஒவ்வொரு படிமங்களையும் காட்சிகளையும் அறிந்து கொள்ளலாம். கவிதையை மிக
சுதந்திரமாக பயண்படுத்தியிருக்கிறார் அவர் தனது கவிதைகளக்கான மொழியென்பது தன்
மனதின் இயல்பான கூறல் என முடிவு செய்திருக்கிறார் என்று சொல்லலாம். எந்தப் பின்
விமர்சனங்களையும் கண்டு யோசித்து காலம் தாழ்த்தாமல் தனது தொகுப்பை
நூலாக்கியிருக்கிறார்.. வாழ்த்துகளுடன்.
வெளியீடு
மெய்ப்பொருள்
கவிதைகள்
சீராளன் ஜெயந்தன் ஆசிரியர்
38-22-4 வது பிரதான சாலை
கஸ்தூரிபாய் நகர்
அடையார்-சென்னை 600 020
விலை-ரூ.180
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக