வெள்ளி, 3 ஏப்ரல், 2015

நேசமித்ரன் கவிதை நூல் ”மண்புழுவின் நான்காவது இதயம்” குறித்து..



மன்புழுவின் நான்காவது இதயம்

நேசமித்ரன் கவிதை நூல் குறித்து
         
நவீனகவிதையை எப்படி உருவகப்படுத்துவது அதன் எந்த பாவனையை அடைதல் மொழியை உணர்ந்து களித்த வாசகத்தன்மையை எப்படி உணர்த்துவது அன்றில் மொழிவது என்பதான குழப்பம் இருக்கவே செய்யும். அதுவே நவீனத்தின் இருத்தலியல். நவீன காலத்தின் அரூபங்களும் காட்சிகளும் படிமங்களின் சிதறல் வெளியும் நமக்கு பல்வேறு உள்ள அதிர்வுகளை ஏற்படுத்துபவை. நவீன வாழ்வியலின் இறுக்கங்களை உணர்ந்து கொள்ளத்தவிக்கிற மனதிற்கு இப்படியான திரிபுநிலைப்படிமங்கள் அச்சமூட்டுப்படுபவையாகவே இருக்கும். இந்தக் கூறுமொழியில் தென்படுகிற மன அவசத்தின் நிழல்கள் இருண்ட பூடகமான உலகத்தின் நிகழ்ச்சி நிரல்களை வரிசைப்படுத்துகிறது என்று சொல்ல லாம். நேசமித்ரன் போன்ற மிகவும் அரிதான கவிஞர்களே இந்த உலகத்தை அடையாளம் காட்டுகிறார்கள். இந்த உலகத்தின் அரிதான காட்சிகளுக்கு அப்பால் மறைந்து வாழ்கிற உலகியல் இயக்கங்களின் புதிர்விதைகளை முளைகட்டவைக்கிற விவசாயத்தன்மை மிக்க கவிதைகள் என்றும் நாம் ஒரு வகைமைக்காக உணரலாம்.
இன்று நேசமித்ரன் எழுதுகிற முகநூலில் காணக் கிடைக்கிற பல்வகைக் கவிதை மொழிபுகள் கூட நமக்கு அப்படியான மனோதிடத்தை அளிக்கிறது. மிகத் துல்லியமான காட்சி அவதானிப்புகள் கொண்ட கவிதை களைக் காண முடிகிறது. நவீன காலத்தின் கண்களின் தரிசிப்பு. நவீன காலத்தின் காதுகள் அறிந்து கேட்கிற சங்கீதம். நவீன காலத்தின் நாசி உணர்ந்த நுட்பமான நாற்றங்கள், நறுமணம். நவீன காலத்தின் உடலின் வேட்கை. தொடர்வாழ் நிலையின் தேச நிலம் அகன்று அலைவுறுகிற மனதின் வெளிப்பாடுகள். உயிரினங்கள் அறிந்த நுட்பமான ஒலிகளின் சந்தேகமிக்க கூறுகள் இப்படியாக வாசிக்க வாசிக்க குறுக்கும் நெடுக்குமாக சிந்தைகள் பாய்கிற கவிதைவெளி நேசமித்ரனுடையது. இந்த இடத்தில் தெலூஸ்-கத்தாரியின் முக்கியமான கோட்பாடான குறுக்கு மறுக்கு (ரைசோம்) நினைவுக்கு வருகிறது. அவர்களின் புகழ்பெற்ற கூற்று- ஒரு புத்தகம் என்பது பல கருத்துகளின் தொகுதி என்ற வகைமைக்கு உரியது. இன்ன மாதிரியான தனிப்பட்ட ஒரு கருத்துக்கு மட்டுமே உரியது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதது. அது பெருகும் தன்மை உடையது“
நேசமித்ரன் கவிதை நூலில் பல உரைநடைக் கவிதைகள் மிகவும் நெடிய உரையடால்களுடன் தடித்த சிக்கலான காட்சிகளும் சம்பவங்களும் உள்ளது. சிறப்புக்குரிய இந்தக் கவிதைகளிலிருந்தும் காணக்கிடைக்கிறது. பற்பல முரண் சித்திரங்களின் கலைவைக் கூட்டு..
தொகுப்பிலிருந்து ஒரு உரைநடைக் கவிதை
கறுப்பு வெள்ளை
சர்கஸ் நாய்க்குட்டிகளைப் போல நெருப்பு வளையத்தைத் தாவிக்கடந்து மீண்டும் வரிசையில் நிற்கின்றன கனவுகள் சாட்டையை சர்ப்பம் போல் வளைத்து நிற்கும் காலத்தின் முன். வனத்தில் மிருகத்தின் தடம் பார்த்து நகரும் வனவாசியாய் நினைவு தடவி மீட்டெடுத்த முகங்களுடன் பேசிக்கழிக்கிறது பிறைகள். ஏந்தப்படும் சொற்களில் நிறையாமல் வலிந்து இழுத்துக் கட்டப்பெறும் கன்று நோக்கி படியில் கனத்த நரம்பு புடைக்க எழும் கறவையின் குரல் கல் நார் கூரையின் மழை வடிகால் குழாயில் கூடு கட்டும் பறவை அலைந்து கொண்டிருக்கிறது. ஒரு பருவம் தப்பிய மாரிப்பொழுதில். இசை பிறழ்ந்த இச்சப்தம் சுர உறக்கத்தில் காணாத் தகப்பனுக்கான பிஞ்சின் அழைப்பாய் இருக்கிறது. சாலைப்பள்ளத்து நீரில் பெட்ரோல் வானவில் ஊதிய புன்னகை
உன்னிடம்தான் ஊன் பிசைந்து ஊட்ட முடிகிறது. வாதையின் நஞ்சை பனிக்காலத்து உதட்டு வெடிப்பில்.
                             பக்-93
          மூன்றாம் உலகத்தின் கீழ்த்திசை நாடுகளின் இயற்கை வளங்களும் பறவைகளும் கடல் வாழ் உயிரிகளும் தாவர நிலவியலும் தற்காலத்தின் நவீன இயற்கையைப் பேசுகிற பல கவிதைகள் உள்ளது. இன்றைய வாழ்நிலையில் சர்கஸ் வாழ்வு போலத்தான் பல்டிகளும் கரணங்களும் அடிக்க வேண்டியிருக்கிறது. தகிக்கும் காணலுக்கிடையில் வியர்த்துக் கருக்கும் உடல்களின் சித்திரங்களும் தொகுப்பில் காணப்படுகிறது. ஏழ்மையின் கண்கள் கொண்ட ஒவியக்காரனின் பாட்டுருக்களாகவும் இசைக்குறிப்புகளாக ஒலிச் சந்தங்களாக சில கவிதைகள். பெருநகரின் அறைகளும் வரவேற்பு அறையின் மீன்தொட்டிகளும் அதன் கடலும் உடைந்து வெளியேறும் கணவாய்களும் நத்தைகளும் சங்குகளும் நுரைகள் பொங்க வாசகனின் அறைகளை நிரப்புகிறது.
   தெரிதாவின் மொத்த எழுத்துகளும் கட்டவிழ்ப்பு என்ற விஷயத்தை அடிப்படையாக கொண்டிருப்பது போல ஃபூக்கோவின் மொத்த எழுத்துகளும் “உரையாடல்“ என்னும் அடிப்படையான சிந்தனையை முன் நிறுத்துபவை. நம்முடைய சிந்தனை, அடையாளம், எல்லாமே அதிகாரத்தின் உரையாடல்களால் கட்டமைக்கப் பட்டவை என்கிறார் ஃபூக்கோ. எனவே நவீன பின் நவீன காலத்தின் இலக்கிய வகைமைகள் மாற்று என்கிற சிந்தனையை எல்லாப் படைப்பியக்கங் களிலும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. நவீன பின் நவீன கவிதைகளின் இயல்புகளாகவே கலைத்தல் என்பதும் மறுவாசிப்பு,மீட்டுருவாக்கம். புத்தாக்கம் செய்தல் என்பதாக ஆக்கங்கள் பெருமளவில் கொண்டாடப் படவேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பற்பல மனித அறிவியல்களும் அறவியல்களும் உற்பத்தியாகின. அறிவுலகத்தின் செயற்கைகோள்களாக இயந்திரங்களும் தொழிற்நுட்பங்களும் மனித மனத்தை கச்சாவாக கொண்டு எண்ணை கொட்டப்பட்ட கடலைப் போலவும் சீரழியப்பட்ட கடற்கரையைப் போலவும் மனிதனின் மூளையும் உடலும் துண்டாக்கப்படத் துவங்கிய காலம். பொருளாதாரம்,மானிடவியல், மொழியியல், உளவியல், மருத்துவம், வானஇயல் தோன்றியது. அறிவியல்களில் மருத்துவம்தான் கடினமான முக்கியமானதாக கருதப்பட்டது. ஏனெனில் அது ஒன்றுதான் தனி மனிதனை மையமாக வைத்திருந்தது. பிணங்களைத் திறந்து பார்த்ததன் மூலம்,மருத்துவம் மனித உடலை அறிவியல் பார்வை பார்த்தது “ என்ற ஃபூக்கோவின் கூற்று இங்கு நினைவுக்கு வருகிறது. தொன்மங்களின் கூறுகதைகளும் பாடல்களும் எதையெதை வலியுறுத்தி யதோ அப்படித்தான் நவீன வாழ்வின் நிலவியலின் ஒவ் வொரு சித்திரங்களையும் கவிஞன் தன் மொழியால் ஆவணப்படுத்துகிறான். தொகுப்பிலிருக்கிற கவிதைகளுக்காக அவர் தேர்நதெடுத்திருக்கிற தலைப்புகள் கூட சொற்கட்டுப்புதிர்களைப் போல பொருட் புதிர்கள் கொண்டவையாக வாசிக்கிற மனதிற்குள் அந்தந்த காட்சிகள் படர்கிறது. இந்தக் கவிதை தருகிற புகைச்சித்திரங்களை காணலாம்..
நிலா நடைக்காற்று

யாருமற்ற கடவுளின் சிற்றகல் நிழலால்
டால்பின் டெசிபலில்
அசையும் கரு

துருவக் கடலில் பென்குவின்களின்
நீர்க்குழியில் நிலா
பீலிக்கண்

ஸ்க்ரீன் சேவர் மௌனங்களில்
கடலுக்கு லட்சம் காம்புகள் முளைக்க
மழை

இசைத்தூணில் செதுக்கிய
நிமிர்ந்த வீணையில் குழல்
செலுத்தும் வண்ணத்துப் பூச்சி
தீவாய் இறகு படிய
ஆதித்துளை

கிளையூடே
திறந்த அலகிலிருந்து விடுபடும்
ஹைட்ரஜன் பலூன்
கனவுகளின் நோவா கப்பல்- பக்-25

       நேசமித்ரன் கவிதைகளில் உள்ள மிகப்பெரிய ஓவியக் கேன்வாஸ் இந்தக் கவிதையில் படிந்திருப்பதைக் காணமுடியும். நவீன கவிதை தனக்குள் எல்லா சுதந்திரமான, காத்திரமான, அதி தீவிரமான பலத்தை நீர்க்குமிழிகள் உடைவதற்கு முன்பாக நாம் காண்கிற உபயோகித்துக் கொள்ள கவிதையை அனுமதிப் பது என்பதுதான். அறிவியலும் தொழில்நுட்பமும் கம்பியி ல்லா தந்திமுறையும் கணணியும் அதன் திரைகளும் நுண்ணுயிர்களின் வாழ்வும் நிலமும் நிலாவும் கப்பல்கள் என உருவங்கள் வண்ண வண்ண மறுஉலகின் சித்திரச் சட்டகங்களை நம் முன்பாக காட்டுகிறார் கவிஞர்.
தொகுப்பில் பல கவிதைகள் கனவிலி நினைவிலி சித்திரங்களாக சில கவிதைகள் உள்ளது. நம் கனவில் மிகத்துல்லியமாக உதிக்கிற கனவுகள் நேரம் ஆக ஆக அது பாசி படிந்து மங்கலாகி ஒரு அதிர்ச்சியுடன் முடிவடையும் முன்பு நம்மை கிளர்த்தி எழச் செய்து விடுகிற கனவுலகின் அகச்சித்திரங்களாக பல கவிதைகள். 1990 களில் உளவியலின் தந்தை என்றழைக்கப்பட்ட சிக்மண்ட் ஃபிராய்ட் கனவுகளின் விளக்கம் என்னும் தலைப்பில் பிரசுரமான அந்த நூல் ஃபிராய்டை கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின் போன்றோர்க்கு இணையான உயரத்தில் கொண்டு போய் வைத்தது. உளவியல் பகுப்பாய்வு என்ற முறையை அறிமுகப்படுத்தி நவீன உளவியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ஃபிராய்ட் இந்தப் புத்தகத்தின் மூலம் ஒரு பாய்ச்சலையே நிகழ்த்தினார். அந்த நூலில் கனவுகள் பற்றிய எதிர்ச் சிந்தனைகளை அந்தக் கனவுகளை எதிர்கால வாழ்வின் குறியீடுகளாகப் பார்க்க முடியும் என்பதை நிருபித்தார்.
       நாம் காட்சியாக காணும் பொருள் வேறு. அர்த்தப்படுத்திப் புரிந்துகொள்ளுதல் என்பது வேறு. இது தெரிதா சொல்லும் “ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வேறு அர்த்தங்களும் பொருளும் இருக்கின்றன“ என்கிற கட்டுடைத்தல் கருத்தியலை ஒத்திருக்கிறது. கடந்த கால அனுபவங்களின் தடங்களை மனித மனம் தனது ஆழ்மனதில் சுவடுகளாகப் பதித்து வைத்திருக்கிறது அவை கனவுகளாக வெளிப்படுகின்றன. அவை எப்பொழுதுமே மாறுபடுகின்றன. என்கிறார் பிராய்ட். இதையே தெரிதாவும் எழுதுவதும் மாறுபடுதலும் என்கிற கருத்தையும் வெளிப்படுத்துகிறது. இப்படியாகவே நேசமித்ரனின் இனியொரு வேறு நவீன வகை கவிதையை வாசிக்கலாம். வேறுபடல் எப்படி நிகழ்கிறது என்பதையும் புரியலாம்.
வெயிலெனும் புனைவு

நாளடங்கும் வீட்டில்
ஒவ்வொன்றாய் அணைக்கப்பெறும்
விளக்குகளென திசைகளை
இழந்து கொண்டிருக்கின்றதென்
குருவிகள்

சவப்பெட்டியின்
கடைசி ஆணியைப் போல் இறங்குகிறது
இறுதிச் சொல்

மகரந்த சாம்பலூடே
மார்புக் காம்பகளுடன் நிரம்பி
கிடக்கிறது ஆஸ்ட்ரே

இனம் பெருக்க கண்டம் கடந்து
சரணாலயம் அழைத்து
வரப்படும் மிருகமென
செவியுட்டிக் கொண்டிருந்த குரல்
நின்று விட்டது


மின் கம்பிகளில் மரித்துத் தொங்கும்
காகத்தின் உடல் நினைவின் மிச்சம்

வாய்க்கூடு தொலைத்த கன்றாய்
மண்தின்னும் மா தவப்பிரியம்

கடவுளாக்கப்பட்ட மரத்தின் கிளையெங்கும்
பிரார்த்தனை தொட்டில்கள்
எச்சமிட்டு பறக்கின்றன ஆடி சலித்த பறவைகள்

தலைப்பிரட்டைகளின் செதில் மினுப்பில்
பெயரெழுதிய வாழ்த்தட்டைகளில்
ஒப்பமிட்டிருக்கும் குருதி
எறும்பென ஊறத்துவங்குகிறது
படலம் எனப் படிந்திருக்கம் புகையில்- பக்-48.

        இந்தக்கவிதையில் உள்ளடக்கப்பட்ட காட்சிகள் நாம் கண்டவை. இதன் நிழல்கள் நம் அடிமனதில் மண்டிப் போய்க்கிடந்தவையெல்லாம் இப்பொழுது உயிர் பெறுகிறது. கவனிக்கத்தவறிய கலாஅமைதியான காட்சி களை கவிஞன் நெசவு போல் கோர்க்கிறான். உடலின் எல்லா உறுப்புகளும் நெசவுக்குப் பயண்படுத்தப்படுவது போல கவிதையாக்கத்திற்குப் பயண்படுத்துகிறான். சங்கீத த்தில் ஒரு ராகத்தைப் பிரிக்கப் பிரிக்க பல நூறு ராகங்கள் நுரைபொங்கி சிந்தையினை நிரப்புவது போன்று கவிதையும் கவிஞனும் இறுகப் புணர்ந்து கொள்வது போன்று.ஒன்றை மிகச் சுலபமாக “தெரியவில்லை“ என்று சொல்வது போன்று எளிமையான பணி என்பது ஒன்றைப் புகழ்ந்து விடுவதும் கடவுளாக்கி விடுவதும் தான். மிக உத்தமிக்கவை யாதெனில் கடவுளாக்கி நிறுத்திவிடுவதுதான். அது நின்று விடச் சாத்தியமானது.
       இன்று காலையில் கூட பொரிமைனாக்கள் சிலவை வீட்டுக் காம்பவுண்ட் ஓரத்தில் ஐம்பது அருபது இருக்கலாம். ஓயாத கரைசல் அதன் குரலில் வழக்கமான இசையில்லை. அருகிலிருக்கிற மின் பெட்டியருகில் ஒரு மைனா இறந்து கிடக்கிறது. நமக்கு மின்மயானங்களில் எளிதாக இடம் கிடைப்பதில்லை. ஆனால் கருணைக் கொலைகள் வரை நம் சந்ததி வளர்ந்திருக்கிறது. சவக்கிடங்குகளில் ஏதேனும் ஒரு மக்கள் கூட்டம் காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். வெயில் மட்டும் புனைந்து புனைந்து கதைகளையும் காட்சிகளையும் வரைந்து கொண்டேயிருக்கிறது.
இந்த நூலில் சுமார் அருபது கவிதைகள் வரையில் உள்ளது. வகைமாதிரிக்கு சில கவிதைகளை நான் சுட்டியிருக்கிறேன். வாசகர்களுக்கு மேலும் சில நவீன வகை கவிதைகள் வாசிக்க அமையலாம். தொகுப்பில் எனக்குப் பிடித்த கவிதைகளும் பல உள்ளது. குறிப்பாக நேசமித்ரன் அதிகமாக கையாளும் வடிவங்கள் அதிகமாக நிறைந்திருப்பதைப் பார்த்தேன். நான் எதிர்பாராத ஆனால் ஆச்சர்யத்துடன் வாசித்து மகிழ்ந்த கவிதையாக சில்க் ஸ்மிதா என்ற விஜயலட்சுமிக்கு.. உரைநடை கவிதை.
சில்க் ஸ்மிதா என்ற விஜயலட்சுமிக்கு
(December 2-1960- September 23-1996)

குளிர்பதனகத்தின் சுவர்களில் தார்பூசிய தெர்மாக் கோல் கனிகளை காய் அளவு கனிந்த தோட்டா பழிக்கும். பறவைகளின் எச்சமாய் விதை நெளியும் துளிகளில் முலைகளுக்குப் பிரதியாய் கண்கள். விலா எலும்பு முளைத்த பாம்புகள் தின்ன வியலாத கனி மீதான பசலையில் சுரக்கும் விஷம். லாடமற்ற குளம்புகளின் பயணம் ஒளி ஆண்டுகள் பயணிக்கும் நட்சத்திரங்களுடையவை கடவுளர் மாறும் ஆகாயத்தில் தேவதைகள் இளமை மாறாமல் மரிக்க சபிக்கப் பெற்றிருக்கிறார்கள்.
காதலின் நிணம் வழியும் ரப்பர் நுனிகளில் குறிஞ்சிப்பு விதைக்கு ஈரம் இல்லை.ரகசியங்கள் அற்ற நிர்வாணம் உருவாக்கும் ரகசியங்கள் நெருப்பினைப் போல் ஒளியுடன் திரிகுவதில்லை உப்பு ஜாடியில் உறைந்திருக்கும் கடல். திரைகளை மாற்றிக் கொண்டே இருந்தது வெயில் பாரிஜாதப் பூவின் வர்ணங்களால். சிலுவையைப் போல்விரிந்த கரங்கள் சிறகாய் இருந்தது. இரவின் சாயல்களுடனே விடியும் பகல்கள் உடைய கிரகத்தின் மது கோப்பைகளில் நிரப்பப் பெருவதில்லை. மல்லிகையின் காம்பை பவழமல்லியினுடயதாய் மாற்றும் சொற்கள் தேடிக்களைத்த தூரிகை தன்னை ஒரு கண்ணாடியாக்கிக் கொண்டது. தனது அத்தனை முட்களையும் நிறத்தகடாய் இறகு செய்யத் தெரிந்த உயிரிக்கு நரை இல்லை.-  பக்-109
      இறுதி வரியாக குரல் கொடுத்த ஹேமாமாலினிக்கும் என்று ஒரு சொற்றொடர் வருகிறது அது துருத்தலாகவே இக்கவிதைக்கு அமைந்திருக்கிறது. நேரில் அவருடைய குரல் அவருடைய உருவத்தை விடவும் அதியச ரூபமான தொனியில் இருக்குமாம். டப்பிங்க்கில் ஏன் அவரையே பேச வைக்கலாமே என்று கேட்ட காலத்தில் ஏற்கெனவே அவருடைய உருவத்திற்கே சாகிறார்கள் இனி சொந்தக்குரலையும் கேட்டால் அவ்வளவுதான். என்று டப்பிங்க் குரல் வைத்திருக்கிறார்கள். அதுவுமில்லாமல் டப்பிங்க் பேசுவது நடிகைகளுக்குக் கூடுதல் நேரச்செலவுகள். அந்த நேரத்தில் பல படங்களில் நடித்துவிடலாம். நடிகைகள் சொந்தக்குரலில் பேசாமைக்கு இதுவும் ஒரு காரணம். சில நாட்களுக்கு முன்பாக நான் நீலிக்கோணாம்பாளை யம் வழியாக வரதராஜபுரம் போய் பீளமேடு செல்ல பைக்கில் போகிறேன். வழியில் பிளக்ஸ் போர்டு கம்பெனி ஒன்று உள்ளது. அன்று சில்க் நினைவு தினத்திற்காக அந்தக் கம்பெனிக்காரர் சில்க்கின் பால்ய கால கருப்பு வெள்ளை புகைப்படத்தை அச்சிட்டு வைத்திருக்கிறார். அந்த காலைப் பொழுதை சில்க் தன் உருவத்தால் ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த உலகத்தின் விளிம்பு அந்தப் புகைப்படத்தோடு முடிந்து விட்டது போல மக்கள் அங்கேயே நின்று ரசிக்கத்துவங்கிவிட் டார்கள். தந்தை மகன் தாய் மகள் கிழவன் கிழவிகள் உள்பட ரசிக்காதவர்கள் யாருமில்லை. வெட்கம் கொண்டு தலைதாழ்த்தி நிணம் தீர்ந்து கலைகிறார்கள். நானும் பட்டிக்காட்டானைப் போல அந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறேன். என் ஜென்ம புன்னியம் சில்க் நடித்த படங்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன். சில்க் வாழ்ந்த நாட்களில் இளமைப் பருவம் கொண்ட அனைவருமே ரட்சிக்கப்பட்டவர்கள் தாம். சமீபத்தில் சில்க் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்ட நதியா,ராதிகா, ரேவதி. (80 களின் தமிழ் சினிமா- சன்டிவி) மூவரும் கௌரவம் பார்க்காமல் சில்க்கின் புகழ் பற்றி பெருமையாக கூறிக்கொண்டார்கள். அவர்களின் உற்ற தோழியாக குழந்தையாகவே தன் வாழ்நாளைக் கழித்தார் என்றார்கள். தனக்கு என்ன வேண்டும் தான் எப்படி வாழவேண்டும். எந்த மாதிரி சமூகத்தில் நடந்து கொள்ளவேண்டும் என்று கூட அவருக்குத் தெரியவில்லையென்று கவலை கொண்டார்கள். அவரைப் போன்ற வெள்ளந்தியான பெண்ணைத் தங்கள் வாழ்நாளில் சந்தித்ததில்லை என்று அவருடைய புகழைப் போற்றினார்கள்.
சில்க் தற்கொலை செய்த பின்பு தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் உள்பட மற்ற துறை அதாவது பிரேதப் பரிசோதனை துறை அல்லாத மருத்துவர்கள் மற்றும் அனைத்துப்பணியாளர்களும் அவரைப் பார்ப்பதற்கு அதிகாலையில் பிரேத கிடங்குக் குள் குவிந்தார்கள் எனும் செய்தி மேலும் ரசிகர்களை அச்சமூட்ட வைத்த நாட்கள் அவை. சில்க் தான் இறந்த பிறகும் கூட தன்னால் இயன்றளவு ரசிக இன்பத்திற்கு ஆளான ஆவியாக ஆன்மாக வாழ்ந்தார்.
சில்க் கின் வாழ்வுதான் நவீன கவிதையின் ஆன்மா. நவீன கவிதையை உள்ளபடியே அறிந்து கொள்ள விருப்பம் கொள்பவர்களுக்கு உலக வாழ்வியக்கத்திற் காக பலி கொடுக்கப்படுகிற எண்ணற்ற ஆன்மாக்களின் அசரீரிகள்தாம் நவீன கவிதை. பொழுது மாறிக் கொண்டிருக்கிறது. பலவகை வெயில்கள். பலவகை மழை. பலவகை காற்று. எத்தனைவிதமான இலையுதிர்காலங்கள். எத்தனை நிலாக்காலங்கள். கவிஞனின் கவிதையின் ஆயுள் மிகமிக குறைவு. அது ஒரு பிரதியாகிவிடுகிற பட்சத்தில்தான் இருவரும் சாகாவரம் பெறுகிறார்கள். நேசமித்ரன் சாகாவரம் பெற்ற கவிஞனாக கவிதைகளாக இந்த தொகுப்பில் தந்திருக்கிறார். ஒவ்வொரு கவிதையிலும் வகை வகையான உலகத்தின் காயங்களைக் காட்டுகிறார். உயிரி உடல்களில் படிந்த ஓவியங்களை அடையாளம் காட்டுகிறார். வெகுமக்கள் ரசனையின் கவிதையிலி ருந்து நவீன கவிதை எப்படி மாறுபடுகிறது என்பதை மிகத் துல்லியமாக காட்டியிருக்கிறார். உரைநடை கவிதைகளில் உள்ள விஸ்தீரணமிக்க பெரும்பரப்பு கவிதையின் வாசகனுக்கான பெருநிழல்.
வாழ்த்துக்களுடன்..
மண்புழுவின் நான்காவது இதயம்
கவிதைகள்
ஆசிரியர் –நேசமித்ரன்
வெளீயீடு –வலசை
எச்-1 எச்-2-65-ஆம் எம் காலணி
திண்டுக்கல்-624 001


1 கருத்து: