ஆப்பிள்
சிறுகதை- இளஞ்சேரல்
ஆப்பிளை மீண்டும் ஒரு தடவை
பார்த்தேன். பெரிய வாணலியில் வாழைக்காய் பஜ்ஜிகள் சொர்சொர் என்று வெந்து கொண்டும்
மிதங்கிக் கொண்டுமிருக்க பஜ்ஜிக்கு காத்திருப்பவர்களின் கண்கள் அவைகளின் மீதே
இருக்கிறது தேநீர்க்கடை கம்பக்கால்களில் பறந்து களைத்த கிராபாஜி புறாக்கள் இறகு
கோதிக் கொண்டிருக்கிறது. பொழுது மசங்கிய நேரத்தில் சூடான
பலகாரங்கள் தருகிற இன்பம் அந்த எண்ணைப் பொறிப்பு சுவை நாக்குக்கு அவசியம் என்று
கருதுகிறது மனித மனம். நானும் இளவேனிலும் வண்டியை நிறுத்தினோம். சுங்கம் தன்னுடைய
சாயங்காலப் பொழுது நேரத்தை அனுபவிக்கத்
துவங்கியிருக்கிறது. வெளிச்சம் பொழியும் புதிதாகப் போட்ட தார்ச்சாலையில் வீசும்
கூதிற் காற்றை அனுபவிக்க விளையாட என சிறுவர் சிறுமிகள் வந்துவிட்டார்கள். இந்த
மாலையின் நறுமணம் தவிர்க்க வியலாத ஒன்றாக இருக்கும். புகை வெளிச்சம் போய் மங்கிய
ஆதவனின் ஒளிக்குப் பிறகு கருத்த மேகம் யானைக்கூட்டங்கள் நகர்வது போல நகர்ந்து
கொண்டிருக்கும் சூழலை யார்தான் கவனிக்காமல் செல்வார்கள். அந்த நேரத்தின்
வியாபாரத்தில் காய்கறி பெண்கள் குழுமியிருக்கிறார்கள். சில காய்கறி பெண்கள்
அங்கேயே உறங்கி பின் எழுந்து அங்கேயே வாழந்து வருகிற பெண்களையும் நாங்கள்
அறிவோம்.அப்படித்தான் ஆப்பிளும்...
ஆப்பிள் என்று பெயர் வந்த காரணம் புதிதல்ல..
அவன் ஆப்பிள் மாதிரி அத்தனை அழகாக இருந்தான். அந்த சிவப்பும் செம்பட்டை மஞ்சளுமற்ற
தலையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அந்தக் கண்களிலிருந்த கோலிகுண்டின் வசீகரம்
யாருக்கும் வாய்க்காதவை. இன்றும் தேநீரகத்தின் டைல்ஸ் படிக்கட்டுகளில் மற்றும்
பலருடன் அமர்ந்து கொண்டிருக்கிறான். தேநீர் சொல்பவர்களுடன் அமர்ந்து அவர்கள்
தருகிற டபரா செட்டின் டமளரின் பாதி தேநீருக்காக..
இளவேனில் “அதோ ஆப்பிள்“
ஆப்பிளை மறுபடியும் மறுபடியும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். தேநீரகத்திற்கு வரும் வாடிக்கை யாளர்களைப்
பார்த்தால் களைப்பின் மிகுதியில் ஆகாயத்தினை தன் அலகின் நுனியில் வைத்து மின்
கம்பத்தில் வந்து அமர்கிற செங்குருவிகளைப் போலத்தான் தோன்றுகிறது. செங்கணலின்
அடுப்புப் புகை கூட வாழைக்காய் பஜ்ஜியின் வாசனையைத் தருகிறது. ஒரு தட்டு எடுத்துக்
கொட்டியதும் அவை உடனே தீர்ந்து போகிறது. உப்புக் கரிப்பு உடல்களுக்குத் தேவை
மேலும் உப்பும் ஊறலும் தானே...
மனிதர்களின் வாசம் அதிகமாவது உணர்கிறோம். கையிலிருந்த
காமிராவில் சில காட்சிகளைப் படமாக்கினோம். சாலையில் அதன் ஓரங்களில் எல்லாம்
அருகிலிருக்கிற கடைகளுக்கு மக்கள் வரத் துவங்கினார்கள். தங்கள் பணியை முடித்துத்
திரும்பியவர்கள் தங்களின் இரவு உணவிற்கான பொருட்கள் வாங்கவும் அல்லது நேரடியாக
இரவின் அழகை வெளிச்சத்தில் தரிசிக்க வென்று வந்து போகிறார்கள். ஒரே சமயத்தில்
இரண்டு பேருந்துகள் எதிரெதிரில் நின்று
கொள்ளவும் இரண்டு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பேசிக் கொள்கிறார்கள். சாலையில் போக்குவரத்து
தடைபட அங்கே என்னவென கண்கள் பரபரக்க கவனிக்கிறார்கள்.
“இங்கே எடுக்க
புகைப்படங்கள் என்னவிருக்கிறது என்றார்..இளவேனில்
“இந்தக்காட்சிகளில்
தான் உயிர்ப்பு இருக்கிறது என்றேன் நான்..“
“போன முறை இதே போல
அதிகாலைச் சந்தைப் பகுதிகளைப் புகைப்படங்கள் எடுத்தோம்.. அனுப்பினோம்..பதிவிட்டோம் என்ன ரெஸ்பான்சும் இல்லை...வேண்டாத வேலை.. இதற்கு
பதிலாக பேரூர் சூலூர் போயிருக்கலாம்..“ சலிப்பும் குறையுமாக அங்கலாய்க்கிறார்
இளவேனில்.
அதற்குள் டீ பாய் என்ன சாப்பிடுகிறீர்கள்
என்றான். அவன் பார்ப்பதற்கு சினிமா நாயகன் போலிருக்கிறான். உழைப்பின் வழியாக
கையில் பணங்காசு பார்க்கிறவர்கள் எல்லாருமே அழகானவர்கள் என்பார் எங்களுக்கு காமிரா
சொல்லிக் கொடுத்த சுபமங்களா சாமிநாதன் கடையிலிருக்கிற நாற்காலிகளுக்கு அதிகமாக
வெளியில் காத்திருப்பவர்கள் நிற்கிறார்கள். வியாபார நேரத்தில் நாம் இங்கு அமர்ந்து
கொண்டு கலை குறித்த பேச்சுகள் அவர்களுக்கு எரிச்சல் ஊட்டும்..எழுந்திரிக்கலாம்..
நாங்கள் சொந்த ஊர்க்காரச் சனங்கள் என்பதால் அந்தக் கடைக்கார நண்பர்கள் ஒன்றும்
சொல்வதில்லை. எத்தனை மணிநேரமானாலும் பேசலாம்...
கடைக்குள் எல்லமே
பார்த்த முகங்கள். பல்லாண்டுகள் பழகிய முகங்கள். அந்த முகங்கள் எல்லாம் பல்லாண்டு
அனுபவங்களின் தொகுப்பாகவே தெரிகிறது. புகைப்படங்கள் பொய் சொல்வதில்லை. அவையின்
உயிர்ப்பு என்பது அனுபவத்தை அறிவிப்பது. முகங்கள் அனுபவங்கள் வயதுகளுக்கு ஏற்ப
சுருக்கங்களும் சின்ன சின்ன குழிகளும் வெடிப்புகளும் தழும்புகளும் உடையதாக
இருக்கிறது. சிலர் மிக லேசாக புன்னகைக்கிறார்கள். சிலர் சில வார்த்தைகள் பேசுகிறார்கள்.
சிலர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள்.
ஆப்பிளின் இடம் அதே இடம். மற்றும் அதைச் சுற்றியிருக்கிற தினசரிச்
சந்தையும் அந்தக் காய்கறி கடைக்கார மனிதர்கள்..“அவனுக்கு என்ன சோறு கண்ட இடம்
சொர்க்கம்..“என்பார் டீ மாஸ்டர். ஆப்பிளின் சுபாவம் பார்த்தால் நன்கு பழகி
நாய்க்குட்டியின் லாவகம் இருக்கும். நடுத்தர உயரம். பழைய மாதிரியான அழகியல்
தோற்றம் மாறியிருக்கிறது. உடல் விறைப்பும் கட்டுமானமும் சீராகியிருக்கிறது.
எப்பொழுதும் தள்ளாடுகிற சரீரத்தை வைத்துக் கொண்டு இந்த அனாதியான இளமையை அவன்
போக்கிக் கொண்டிருப்பது அதிசயம். ஆப்பிளுக்குத் தேநீர் தராமல் அருந்துகிறவர்கள்
உண்டோ. கடவுளுக்குக் கூட நைவேத்தியம் படைக்காமல் போயிருக்கலாம். அவனே உரிமையுடன்
தேநீரும் டீயும் பீடிக் கட்டும் கேட்டுப் பெறுவான்.. சிலர் அவனிடம் எரிச்சலுடன்
கோபித்துக் கொள்வார்கள்..“ அவனவன் காய்ஞ்சு கிடக்கறான்.. உனக்கொரு எழவு
வரமாட்டங்குதே...“
அவனின்
நாற்பதாண்டுகள் ஒரு புகை கிளம்பி ஆகாயம் போய் மேகத்துடன் கலந்து போனது மாதிரிதான்
ஆகியிருக்கிறது அவன் வாழ்க்கை. அவன் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று யாரும்
உரிமை கொண்டாடுவதில்லை. ஆனால் ஒரு புகழ்பெற்ற கலைஞனின் குடும்பத்தின் வாரிசுகளில்
ஒருவன் தான் அவன். ஆப்பிளின் சிகையே ஒரு கிரேக்கப் போர்வீரனைப் போன்று ஒளிவீசும்.
ஆட்டின் தோல் சிகையைப் போன்றவை அது.
காலையில் தினசரிக்
காய்கறிக் கடைகளுக்கு வரும் கூடைகளை இறக்குவதும் மற்றும் ஏற்றுவது உள்ளிட்ட
வேலைகளைச் செய்வதின் மூலம் அவன் பொழுது கழிகிறது. உணவும் உறைவிடமும் அதே தினசரிச்
சந்தை தான். நகரியக்கத்தின் பசிக்காக அலையும் தினசரி மனிதனின் தொகுப்பாக அவர்களின்
ஒட்டு மொத்தப் புகைப்படத்தொகுப்பாக ஆப்பிள்தான் தெரிகிறான்.
இளவேனில் சிகரெட்
வாங்கிப் பற்றவைத்தார். ஆப்பிளிடம் சிகரெட் குடிக்கிறாயா என்றபோது எனக்கு பீடி
மட்டும் ஒரு கட் வாங்கிக் கொடு என்ற போது வாங்கிக் கொடுத்தபோது மகிழ்ந்தான்.
இருட்டில் கலந்தான்.
நான் அன்று எடுத்த
பலவித புகைப்படங்களின் தொகுப்பை ஸ்லைட் ஷோவில் போட்டு ஒவ் வொன்றாகப் பார்த்து
வருகிறேன். ஆப்பிளை விதவித மாக எடுத்த படங்களும் இருக்கிறது. அவனுக்கே தெரியாமல் ஒரு நாள் விளையாட்டாக கேட்டேன்..“ஏன்
நீ திருமணம் செய்து கொள்ளலாமே..“
அதிர்ச்சியுடன்
அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு யாரையக் கேட்ட...என்றான்..
“உன்னயத்தான்..“
“அது நம்முளுக்குனு
அத்தை புள்ள இருந்துச்சு...அதையக் கட்டிக்குடுத்துட்டாங்க...அப்பறம் நாம புள்ளக்கி
எங்க போறது..“
“அது இல்லைன்னா வேற
புள்ளயா இல்ல...வேற ஒண்ணப் பாத்துக் கட்டிக்க வேண்டியது தான..“
“அப்பறம் அவளோட அத்தை
பையன் என்ன பண்ணுவான்...“என்றான் ஆப்பிள்..
“அவன் என்னமோ
பண்ணிட்டுப் போறான்... உனக்குப் புள்ளயாச்சல்ல..“ இளவேனில் எரிச்சலுடன் சொல்கிறார்
“அது
தப்பு..என்னிருந்தாலும் இன்னொருத்தனுக்குன்னு இருக்கறது மேல நாம ஆசப்படறது
தப்பல்ல...“
“அப்ப நீ..இப்படியே
தினசரி சுங்கத்துக் கடைகளுக்கு காய் மூட்டை சுமந்தே சாகப்போறயா...“
“இப்ப நீ என்ன
பண்ணிட்டு இருக்கற.. கடைசி வெறைக்கும் போட்டா எடுத்தே சாகப் போறயா...“ பதிலுக்கு
பீடிப்புகைக்குள் தன் முகத்தை வைத்துக் கொண்டு ஆப்பிள் கேட்டான்..
“நல்லாத்தான் பேசற
ஆப்பிள்....சீக்கரம் கண்ணாலத்துக்கு சொல்லியனுப்பு...சரியா...“
“சரி சரி.....டீ
மட்டும் ஒண்ணு சொல்லிட்டுப் போ...குட்டி.ணா...“
சிகரெட் புகை இங்கும் மங்கும் சுற்றியது.
வாணலியிலிருந்து பஜ்ஜிகளும் பிறகு உருளைக் கிழங்கு மசாலாபோண்டாவும் பிறகு மெது
பக்கடாவும் மாறி மாறி வருகிறது. மக்கள்
திட்டுத்திட்டாக வந்து போய் கரைந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அந்த
நேரத்திற்காக காத்திருந்தோம். பேச்சினூடாக அந்த டைல்ஸ் படிக்கட்டுகளிலிருந்தவர்கள்
சொற்பத்தில் கரைந்து வீடுகள் போய்ச் சேர்ந்தார்கள். கடைகளின் ஷட்டர்கள்
அடைக்கப்பட்டு படிக்கட்டுகளில் உழைப்பாளர்கள் தேங்க ஆரம்பிக்கிறார்கள். தேநீரகத்தின்
பாத்திரங்கள் கழுவப்பட்டது. சாலைகளில் எப்பொழுதாவது டாங்கர் லாரிகளும் மணல்
லாரிகளும் கடந்து போனது. சில முதிர் பெண்களின் நடமாட்டம் துவங்கியது.
கிழவிகளுக்குக் கண்கள் தெரியத்துவங்கியது. கிழவர்கள் மண்டபத்தில் மகாபாரதக் கதைகளை
உரக்கப்படிக்கத் துவங்கினார்கள். ராஜகோபுர கட்டுமானப் பணியிலிருந்த இறுகிய
சிமென்ட் இடுக்குகளிலிருந்து சங்குணிக் குருவிகளின் தாம்பத்ய உரையாடல்கள் தெளிவாக
கேட்கிறது.. கடைசி பஸ்சுக்குக் காத்திருந்தவர்கள் இன்னும் நம்பிக்கையுடன் நின்று
கொண்டிருப்பது தெரிகிறது..
இரவின் பிடியிலிருந்து ஆப்பிளை விடுவித்தோம்.
மெல்ல அவனிடம் சென்று அவனை சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும் ஒத்துழைக்கிறாயா
என்றோம். சில நாட்கள் முன்பு அவனுக்குத் தெரியமால் எடுத்த படங்கள் அத்தனை
உயிர்ப்புடன் இல்லை. பீடிக்கு மட்டும் ஏற்பாடு பண்ணு என்றான் மறுபடியும்...
அவனுக்கு என்று எடுத்து வந்த பிரத்யேகமான
உடைகள் அணிவித்து எடுக்கத் துவங்கினோம். சோடியம் வேப்பர், சோலார் வெளிச்சம்
மிகச்சாதாரண குழல் விளக்கு வெளிச்சம் என்று பல இடங்களில் நிற்க வைத்து எடுத்தோம்.
எடுத்த புகைப்படங்களை அவனுக்குக் காட்டிய போது அவனிடம் எந்த ஆச்சர்யங்களும்
முகத்தில் காட்டவில்லை..அப்படித்தான் இன்னும் திருப்தி வராத வகையில் படங்கள்
இருந்தபடியாகவே தோன்றுகிறது. சில படங்கள் சிறப்பாக வந்திருந்தது.
“ நான் உங்களை எடுக்கிறேன்...எப்படின்னு சொல்லுங்க..“ என்றான் ஆப்பிள்
ஆச்சர்யத்துடன்
முதலில் காமிராவை
அவன் கைகளில் தருவதற்குப் பயம். முதலில் சரிசெய்துவிட்டு எடுத்த படங்களை
பாதுகாப்பு செய்து விட்டு வேறு மெமரி கார்ட் போட்டு கையாள்வது பற்றி விளக்கிவிட்டு
அவனிடம் கொடுத்தோம். அதற்குள் மேலும் சிகரெட் பிடித்தோம். ஆப்பிளை ஒரு சிகரெட்
குடி என்றபோது வேண்டாமென்றான்.
முதலில் சில புகைப்
படங்கள் எங்களை எடுத்தான். எடுத்தவற்றை ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஆச்சர்மாக
இருக்கிறது. ஆப்பிள் ஆச்சர்யத்துடன் “ஏன் குட்டிணா நல்லா எடுத்திருக்கறனா..“ என்றான். அதே காமிரா
அதே இடம். நானும் இளவேனிலும் ஆச்சர்யத்தின் விளிம் பிற்கே போனோம்.
பிறகு ஆப்பிளிடம் நீயே உனக்குப் புடிச்ச இடங்களை எடுத்துக் கொடு என்றதும் அவன்
வரிசையாக இருக்கிற காலியான கடைகள் அதில் உறங்கும் கடைக்கார வயோதிகர்கள், குறைந்த
ஒளியில் மின்னும் பழைய கோவில் கோபுரங்கள்
சாலையில் உறங்கும் நாய்கள் என்று ஓடி ஓடி படங்கள் எடுத்தான். இளவேனிலும் நானும்
சிகரெட்டுகளைத் தொடர்ச்சியாக பற்றவைத்து ஆச்சர்யம் மேலிட அந்த இரவின் வாலுடன்
தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது ஆப்பிள்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் முகமும் உடலும் களைத்திருக்கிறது. ஒரு இளகிய
மனித உடலின் அசைவுகள் தெரிகிறது. உணர்ச்சி வயப்பட்டவனாக அமைதியாக பீடியை உருஞ்சிக்
கொண்டிருந்தான்.
“ஏன் ஆப்பிள்
அமைதியாயிட்ட...“
“இத்தன வருசமா இந்த
இடத்தில இருக்கறன்..போட்டோ எடுக்கறதுக்கு பார்க்கபோது மனசுக்கு என்னவோ
பண்ணுது..நீங்க தினமும் ராத்திரி நேரங்கள்ல போட்டோ எடுக்கறது ஏன்ன இப்பதா
தெரியுது...“
புகைப்படங்களை பத்திரிக்கைகளுக்கும் போட்டிகளுக்கும்
அனுப்பும் பொழுது அதில் ஆப்பிள் எடுத்த புகைப்படங்களையும் அவனுடைய பெயரையும் அவன்
தொழிலையும் குறிப்பிட்டு அனுப்பி வைத்தோம். ஆப்பிளின் புகைப்படங்கள் சில
பிரசுரத்திற்கும் சில புகைப்படங்களுக்கு தலா ஆயிரம் ஐநூறு என்று பரிசும்
கிடைத்தது.
மகிழ்வின் உச்சத்தில் அன்றைய இரவில அவனைத்
தேடிப் போனோம். காய்கறிக் கடைகளில் உறங்கியவர்களின் அவன் அடையாளம் வைத்து
தேடினோம். தேநீர்க் கடை பையன்களும் உதவினார்கள். இரவு பதினொரு
மணி..அரைத்தூக்கத்திலிருந்தான். சில நாட்களாக அவனுக்கு குடிப்பழக்கம்
வந்திருப்பதாக பையன்கள் சொன்னார்கள். எங்கள் பையில் சரக்கு பாட்டில்கள் இருந்தது.
“ஆப்பிள்..ஆப்பிள்“
என்று உலுக்கிய போது எழுந்தான் சாக்குக் கோணியை விலக்கிய வாறு எங்களைக் கண்டதும்
மிகவும் பிரகாசமாகி வாங்கணா...குட்டியண்ணா என்றவாறு பீடியை எடுத்துக் கொண்டு
சௌகரியமாக நாங்கள் உட்கார காய்கறி மூடையை விலக்கிட முயன்றான்.. பிரசுரமான
புகைப்படங்களையும் பரிசு தொகையையும் விபரம் சொன்னதும் ஆச்சர்யம் ஏதுமில்லை.
ஆப்பிளின் கண்கள்
இளகிக் கொண்டிருக்கிறதை உணர்ந்தோம்.. நீண்ட மௌனம் அந்த இதழ்களிலிருக்கிற மற்ற
புகைப்படங்கள் காமிராக்களின் படங்கள் அழகிகளின் படங்கள் காகிதங்களின் வழவழப்பு
இப்படியாக பக்கம் பக்கமாகப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான். நாங்க்ள
ஆயிரத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்த போது என்ன இது என்பதாகப் பார்த்தான்
“நீங்களே வெயிங்க...
நம்ம கணக்குல இருக்கட்டும்..நானு எங்க கொண்டு போய் வைக்க...குட்டியண்ணா பீடி
மட்டும் ஒரு கட்டு வாங்கிக் குடுத்துட்டுப் போங்க....இந்தப் புஸ்தகத்தை மட்டும்
நான் வெச்சிக்கட்டுமா...“
“இப்ப உன் மனசுக்கு
என்ன தோணுது ஆப்பிள்..“
“இருவது வருசத்துக்கு
முன்னால கண்ணாலம் பண்ணிப் போன அத்த புள்ள ஙாபகம் வருது...அப்பல்லாம் ஒரு போட்டா
கூட எடுக்கல..ஒரு வேள ஒரு போட்டா இருந்துருச்சின்னு சொன்னா.. அதப்பாத்துட்டு
நானும் என்ற சோலியப்பாத்திருப்பன்னு நெனைக்கறன்..“ என்றவாறு தாவரத்திலிருந்த
அரைகுறையான அளவில் கவர்ச்சியாக இருக்கிற பாட்டிலை எடுத்தவனைத் தடுத்து
எங்களிடமிருந்த பாட்டில்களைத் திறந்தோம். அவன் தடுத்து விட்டு அதைக்குடித்தான்...
“ குட்டியண்ணா
எங்காவது டவுன்ல ஒரு வேலையிருந்தாச் சொல்லுங்க..என்னால இங்க இனி இருக்க
முடியாது..“ என்றான் ஆப்பிள்...
நட்புகள் எங்கேயும் வளரலாம்.
பதிலளிநீக்கு