ஆஸ்காரும் 100 சதமும்-
கட்டுரை அல்லது சிறுகதை....இளஞ்சேரல்
தன்னைச் சந்திக்க சச்சின்
வருவது குறித்து ரகுமானுக்கு ஒரு வகையில் ஆச்சர்யம்தான். வீட்டுத்தோட்டத்தில்
சம்பங்கி மணமும் கொத்து ஊதுபத்தி மணம் ஸ்டுடியோவை ரம்மியமாக்குகிறது. போர்ட்டிகோவில்
உள்ள ஸ்பீக்கரில் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்,உமையாள்புரம் சிவராமன்,ஆகியோரின்
மிருதங்க நாயனக் கூட்டசையில் ராகமும் பாவமும்.. சச்சின்...இந்தப் பெயர் மீது
கொணடுள்ள விளையாட்டு பக்தி எவ்வளவு...உலக்தில் அதிக விளையாட்டு ரசிகர்களைக் கொண்ட
மனிதர். எத்தனை களம். எத்தனை விதவிதமான ஆட்டம்..
அவர் என்ன கேட்பார்.. என்ன பதில் சொல்வது.. நமக்கு இசையைத் தவிர என்ன
தெரியும்.. கேள்விஞானத்தில் கிரிக்கெட் பற்றி அறிந்திருக்கிறொம்..நல்லவேளை சில ஆட்டங்கள்
பாரத்திருக்கிறோம்.. வராண்டாவில் பின் மாவும் அதிமதுரப்பழங்களின் தோட்டத்தில் இங்குமங்கும் நடந்து கொண்டே சமீபத்தில் கேட்ட
பஞ்சாபி பங்காரா மற்றும் அரபி இசையின் சாகசக்குறிப்புகளை அசை போட்டவாறு
இருக்கிறார் ரகுமான். பஞ்சாபி இசையில் உள்ள துள்ளலும் தமிழக நாட்டார்
இசைக்கருவிகளில் இருக்கிற உச்ச பட்ச தோல்கருவிகளின் சத்தமும் ரகுமானை இன்றளவும்
ஆச்சர்யத்தில ஆழ்த்திக் கொண்டிருப்பவை. அந்த நாட்களில் எத்தனை விதமான இசைக்
கொண்டாட்டங்களில் திளைத்திருக்கிறார்கள் மக்கள்..
இன்று ஒப்பந்தமாகியிருக்கிற படம்
கூட பெருநகரமும் குக்கிராமங்களும் இடம் பெறுகிற ஒரு தமிழ்ப்படம். அந்தப்
படத்திற்கு நகரம் மற்றும் கிராம சங்கதிகள் இடம் பெறுகிற இசைக்குறிப்புகள் அடங்கிய
இசையைத்தான் இயக்குநர் கேட்டிருக்கிறார் அதற்கான பாடல் அமைய வேண்டிய ராகங்கள்
தனக்கு அதிக ஆர்வத்தைத் தருகிற அளவில் இன்னும் வந்து மனதில் தங்கவில்லை.
இந்திய இசைக்குறிப்புகள் அடங்கிய
பல்வேறு காசெட்டுகளும் கீர்த்தனைகள் உள்பட பல கேட்டாயிற்று. ரகுமானுக்குப் பிடித்த
துளையுள்ள கருவிகளிலிருந்து வரும் நாதம் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது.
அதிலிருந்து சில குறிப்புகளை சங்கதிகளைப் பற்றிக் கொள்ளத்தான் இன்று முழுவதும்
தேடி அலைந்து கொண்டிருக்கையில் சச்சினிடமிருந்து அழைப்பு. துளைக்கருவிகளில்
தனக்குள்ள அடிமை மனம் மீள மறுப்பது பற்றித்தான் யோசனை.
நீங்கள் அல்லது தானே நேரில் வந்து
சந்திக்கிறேன் என்றார். அவருக்குச் சிரமம் தருவானேன் என்று தானே உங்களைச் சந்திக்க
வருகிறேனே..என்றபோது ரகுமான் முந்திக் கொண்டு நீங்கள் பாரதரத்னா விருது
வாங்கியிருக்கிறீர்கள்..நான் வந்து உங்களைச் சந்திப்பதுதான் சரியாக இருக்கும்
என்றார் ரகுமான்.
பதிலுக்கு சச்சின் நான்தான்
இப்பொழுது எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறேனே.. நீங்கள் பாவம் பிசியாக
இருக்கிறீர்கள் நானே வருகிறேன் என்று
சச்சின் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த சந்திப்பை
சில முக்கியமான சேனல்களும் சச்சின் மனங்கவர்ந்த ரிலையன்ஸ் கம்பெனியும் தங்கள்
விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டால் என்பதாகவும் முடிவு செய்த பின்னணியை
ரகுமான் அறியாமல் இல்லை. ரகுமானிடம் சச்சின் தூதுவராக உள்ள ரிலைன்ஸ் கம்பெனி
உங்களுக்கு வேண்டுமானால் கூட வெகுமதிகள் தந்து விடுகிறோம் என்றது. ஆனால் ரகுமான்
பரவாயில்லை. நான் உண்மையிலேயே மனதார சச்சினைச் சந்திக்க விரும்புகிறேன்.. என்றார்.
உண்மையில் இந்தச் சந்திப்பு
திடீரென நடந்தது அல்ல. பலநாள் திட்டமிடல்தான். இருவரையும் சந்திக்க வைத்தால்
எப்படியிருக்கும் என்று குறிப்பிட்ட சில நிறுவனங்கள் முயற்சி செய்து
கொண்டேயிருந்தது. ரகுமான் பிடி கொடுக்காமலே இருந்தார் என்பது வெளிப்படை. ஆனால்
சச்சினைத் தான் சென்று சந்திப்பதுதான் மரியாதை என நினைத்தார். அப்துல்கலாமின்
இறுதி நிகழ்வின் பொழுது அவர் பற்றிய பாடல்கள் மற்றும் இஸ்லாமிய அரபி இசை வழியாக
இசைக்க வேண்டுமென்று கருதினார். சச்சினும் இறுதி அஞ்சலி செலுத்த வருகிற பொழுது
சந்திக்கவும் வாய்ப்பு அமையும் என்று பார்த்தபோது அதுவும் தவறிப்போனது.
ஆனாலும் பல்வேறு
திட்டமிடல்களுக்கும் மத்தியில் இச்சந்திப்பு அவர்களின் தனிச்செயலாளர் மட்டத்தில்
பேசப்பட்டு இறுதி வடிவம் ஆனது. பிற்பாடு சச்சினும் ரகுமானும் செல்போனில் சில
நிமிடங்கள் உரையாடினார்கள். பிற்பாடு ரிலைன்ஸ் நிறுவனத்தின் சார்பிலும்
மற்றும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்த பயணத்திட்டம் சரிசெய்யப்பட்டு சென்னை
பயணம் சச்சினுக்குச் சாத்தியமாக ரகுமானை அவருடைய இசைப் பதிவுக்கூடமான பஞ்சதன்
இல்லத்திற்கே வந்தார். அந்த வேளை மிகவும் பலநூறு பேர் புல்லாங்குழல்களையும்
நாதஸ்வரமும் இசைப்பதுபோன்றிருக்கிறது. உதவியாளர்கள் மற்றும் மிக நெருங்கிய
நண்பர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் சிலர் இருந்தனர். வாயிலில் வந்து வரவேற்ற
ரகுமான் நெகிழ்வுடன் வரவேற்று உள்ளே அழைத்துப் போனார். நிருபர்கள்
அனுமதிக்கப்படவில்லை அவர்கள் காத்திருந்தார்கள். அறைக்குள் அந்தநேரம் தவிலிசை
மெல்லியதாக ஒலிக்கிறது..
“பாரதரத்னா நீங்கள் நான் தான் உங்களை வந்து சந்தித்திருக்க வேண்டும்.. நீங்கள்
என்னைச் சந்திக்க வந்தது எனக்கு மிக மகிழ்ச்சி..என்றார் முகமலர்ந்து..
“இந்தியாவிற்காக பல இசை விருதுகள் மற்றும் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கிக்
கொடுத்தவர் நீங்கள்.. நமது இந்திய இசையை உலகின் மூலைகளுக்கு கொணடு செல்கிறீர்கள்..
குறிப்பாக நான் ஒய்வு பெற்று விட்டேன்..நீங்கள் முடிவடையாத இசைப் பயணத்தின்
சொந்தக்காரர்...“
“நீங்களும்தான் நீங்கள் விரும்பினால் கூட இசையைக் கற்றுக் கொள்ளலாம்...“
அவர்கள் பேசிக்கொண்டே அரங்கினுள் நுழைந்தார்கள்.. தனிப்பட்ட முறையில் குடும்பம்
உள்ளிட்டவர் கள் குறித்து நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்.. சில நேரம் தன் னைப்
பாதித்த பல இந்திப் பாடல்களை சச்சின் நினைவுட்ட ரகுமானும் சச்சின் விளையாடிய சில
அபுர்வமான ஆட்டங்களை நினைவுட்டினார். உங்கள் ஆஸ்திரேலியன் சீசன் மறக்க முடியாது..“
“பார்த்தீர்களா ரகுமான் உங்களுக்கு கிரிக்கெட் பற்றி சிறப்பாக அறிந்து
வைத்திருக்கிறீர்கள் ஆனால் எனக்கு இசை குறித்து எதுவும் தெரியாது..பாடல்களைக்
காதில் கேட்டு ரசித்துக்கொள் வதோடு சரி..“
“நான் உங்களுக்கு இசை எப்படி உருவானது மற்றும் சில அமைப்புகளை விபரங்களையும்
சொல்ல விரும்புகிறேன்.. நிச்சயம் உங்களால் சில நாட்களிலேயே கருவிகள் வாசிக்கிற
அளவு திறமை கூடிவிடும்..“
“அப்படியா சங்கதி ஆச்சர்யம்தான்..நாங்கள் களத்தில் விளையாடுகிற முரட்டு
சுபாவம் கொண்டவர்கள்..எங்களால் முடியுமா..“
“மன்னிக்கவும்..விளையாட்டு வீரனுக்கும் கலைஞனுக்குமான இடைவெளி மிகச் சில
மைக்ரான் அளவுதான்..உங்களுக்கு களம் எங்களுக்கு கருவிகள் அவ்வளவே..“ இருவரும்
எழுந்து கொண்டனர். சச்சின் தன் பாக்கட்டிலிருந்து புத்தம் புதிய மௌத் ஆர்கன் ஒன்றை
எடுத்து சாக்லெட் தருவது போல ரகுமானிடம் பரிசாகத்தர அதை மிக அதிசயமாக ஆர்வத்துடன்
வாங்கி அதன் தரத்தை வடிவமைப்பு பற்றியெல்லாம் ஆர்வமாகப் பார்க்கிறார்...
“ உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ஆகவே நீங்கள் சொன்னபிறகு இசையைக்
கற்றுக் கொள்ள அடிப்படையான விசயங்கள் மற்றும் என் அறிவிற்கு ஏற்றள வில் சில
குறிப்புகளைச் சொல்லித்தருகிறீர்களா...நான் இன்று மட்டுமல்ல மேலும் சில கூடுதல்
நேரங்களை ஒதுக்குகிறேன்..“
“ நிச்சயமாக..முதலில் உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி...“ மிக எளிமையாக
இருந்த சோபாவில் அமர்ந்தார்கள். இருவருக்கும் எலுமிச்சை பாணங்களும் நெல்லிச்
சாறும் வருகிறது. கருப்பட்டி வெல்லமும் பொறித்த முந்திரியும் வருகிறது. சில
பழத்துண்டு கலவைகள் வருகிறது.
“ கொஞ்சம் சொற்பொழிவு மாதிரியிருக்கும் பரவாயில்லையா“ ரகுமான் கெஞ்சலுடன்
கேட்க சச்சின்..அதைத்தான் நான் விரும்புகிறேன்..“
“ஆதிகாலத்து மனிதன் மழையில்,இடிக்கிற வானத்தில், ஒடுகிற நீரில்
காட்டுமரங்களின் அசைவில் பறவைகளின் ஒலியில் மிருகங்களின் குரலில் எழுந்த ஓசையைக்
கண்டான். மூங்கிலின் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியாக கோடைக்காற்று புகும் போது
எழுந்த இயற்கையான இசை ஒலியே மனிதன் செவிமடுத்த முதல் இசையாகும்.. அந்தப்
புல்லாங்குழல்தான் முதல் இசைக்கருவி..நீங்கள் நம்பாவிட்டால் கூட பரவாயில்லை
உலகத்திலேயே முதன் முதலில் தோன்றியது தமிழிசைதான் பிற்பாடுதான் உலகெங்கும்
பரவியதற்கான ஆதராங்கள் இருக்கிறது...இது பற்றிய அகநானூறு பாடலில்
ஆடுஅமைக் குயின்ற அவர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக...(அகம் 82-1-2) என்ற பாடல் உறுதி செய்கிறது.
இசைத்தமிழில் உச்சம் தொட்டனர்
தமிழர்கள் உலக இசை வரலாற்றில் தமிழிசையின் பெருமை மேம்பட்டது உலகின் மூத்த இசையே
தமிழிசைதான் எனச் சொல்வது புகழ்ச்சிக்காக அல்ல வரலாறும் இலக்கியச் சான்றுகளும்
உணர்த்துகிறது. அனைத்துமே பிற்பாடு வந்தவைதான். தொல்காப்பியம்,
சிலப்பதிகாரம்.பத்துப்பாட்டு.எட்டுத்தொகை பரிபாடல் பஞ்ச மரபு பிங்கலநிகண்டு,
கல்லாடம் பெருங்காதை சீவக சிந்தாமணி திவ்விய பிரபந்தம் தேவாரம் திருவாசகம் உள்பட
பன்னிரு திருமுறைகள் கருணாமிர்தாசாகரம் யாழ் நூல் முக்கியமான இசை சம்பந்தமான
நூல்கள் தமிழின் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் வருகிற பாடலை நீங்கள்
கேட்கலாம்..
அளவு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் ( தொல்-எழுத்து-33)
தெய்வம்,உணாவே,மா.மரம்,புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை
பிறவும் கரு என மொழிப..(தொல்-பொருள்-அகத்தினை)
என்ற வரிகளில்
தெய்வம்,உணவு,விலங்குகள்,மரம் செடி கொடிகள்,பறவை,தோற்கருவிகள், தொழில்,யாழ் போன்ற
நரம்புக் கருவிகள் ஊர் நீர் மலர் போன்றனவும் இசைக்கு கருப்பொருள்கள்
ஆகின்றன..தோற்கருவிகளும் நரம்புக் கருவிகளும் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்கள்
தனித்து வமான இசை நுட்பம் அறிந்து இசைக்கருவிகள் மீட்டியிருக் கிறார்கள் என்பதை
அறியலாம்..“
சச்சின் பிரமிப்புடன் ரகுமான் பேசுவதையே மயங்கிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழிலும்
ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி பொருள் சொன்னபோது..பிளீஸ் ரீபீட் என்று தமிழிசையின்
ஓசையழகை ஆச்சர்யமாக கேட்கிறார் சச்சின்.. ஆர்வமிகுதியில்
“ அது சரி ரகுமான்...என்னால் உங்கள் பேச்சை பிரமிப்பாக பார்க்கிறேன் நீங்கள்
நவீன காலத்தின் இசை கோர்ப்பவர் என்று நினைத்தால் நீங்களும் பழங்கதைகளை அறிந்து
வைத்திருக் கிறீர்களே..பாடல்களுக்கு இசைப்பது எப்படி..பாடல்கள் பிறந்த கதைகளைச்
சொல்ல முடியுமா..விளக்க முடியுமா..“
“ஓ..தாரளமாக...நவீன இசை என்பது மட்டுமல்ல..நவீனம் என்பதே மரபிற்கு உண்மையான
மனதுடன் திரும்புவதுதான்.. ராகங்கள் என்று இன்று அழைக்கப்படுபவை அனைத்தும்
பண்கள்தான். மங்கலம், சூடாமணி,திவாகரம் போன்ற நிகண்டுகளில் பண்கள் குறித்து
விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பாடலுக்கு பண்ணோடும் தாளம்,நடை,காலம்
என்பனவும் முக்கியமாகின்றன. ஒரு பாடலில் நடை பிசகினாலே பாடல் பிசகிவிடும் எனவே
நடைகள் பற்றி தமிழர்கள் வகுத்துள்ளார்கள்..அவை ஒன்பது நடைகள்..
1.
தவளைத் தத்து- தவளை இடைவெளிவிட்டுத் தத்திச் செல்வதுபோல்
செல்வது..
2.
இடப நடை-இடபம் ஏரி நிமிர்ந்து இரு புறத்தும் தலையசைத்துக்
கம்பீரமாக நிமிர்ந்து செல்வது போல்
செல்வது
3.
மயில் நடை- மயில் அமைதியாக அடிக்கடி தலையும் கழுத்தையும்
அசைத்தும் உள் இழுத்தும் நீட்டியும் நடப்பதுபோல் செல்வது
4.
குக்குட நடை- சேவல் அடிக்கடி தலையைத் தாழ்த்தியும்
உயர்த்தியும் கழுத்தை அசைத்தும் நடப்பது போல் செல்வது
5.
அரவினோட்டம்- பாம்பு உடலை நெளித்தும் தலையை இருபுறத்தும்
வளைத்தும் ஓடுவதுபோல் செல்வது
6.
அன்னநடை- அன்னம் அமைதியாக அழகுடன் நடப்பது போல் செல்வது
7.
பிடிநடை- பென் யானை பின் காலிரண்டையும் மெதுவாக வைத்து முன்
காலிரண்டையும் சிறிது விரைந்து வைத்துக் குலுக்கி சொகுசாய் நடப்பது போல் செல்வது
8.
பாற்றியக்கம்-( பருந்தின் வீழ்வு)- பருந்து ஓரே இடத்தில்
கழன்று நின்றும் மேலுயர்ந்தும் திடீரெனக் கீழே தாழ்ந்தும் இயங்குவதுபோல் செல்வது
9.
ஆற்றொழுக்கம்-தாளம் பட்ட ஓசையுடன் இடையறாது ஒழுகும்
ஆற்றுநீர்போலச் செல்வது..
“இதெல்லாம் எங்கு கற்றுக்கொண்டீர்கள் ரகுமான்...“
“சிலப்பதிகாரத்தில் இசைக்குறிப்புகள் நிறைய இருக்கின்றன. பிற்காலத்தில்
கிடைத்த பஞ்சமரபு எனும் நூலிலும் உள்ளது. இது போக கி,மு.2 ஆம் நூற்றாண்டில்
கிடைத்த அரச்சலூர் கல்வெட்டிலும் உள்ளது. அது மட்டுமல்ல உலகத்திலேயே மிகப் பெரிய
இசைக் கல்வெட்டு அது குடுமியான்மலை கல் வெட்டுதான் 30 அடி நீளமும் 20 அடி அகலமும்
கொண்ட கல்வெட்டு அது இது ஆறாம் நூற்றாண்டு..
“உண்மையிலேயே எனக்கு முற்றிலும் புதிய செய்தியாக இருக்கிறது ரகுமான்.. கர்நாடக
இசை பற்றி சொல்ல முடியுமா“
“இன்றைய கர்நாடக இசை பண்டைய தமிழிசையின் முறையே என்பதை நீங்கள் அறியலாம். இராக
இலாபனை செய்யும் பாடகர்கள் ஆஆ என்று அகாரமாகவே நீட்டி உச்சரிப்பது பழைய முறை
உயிரெழுத்துக் குறியிட்டின் அடிப்படைதான். ஆலாபனத்திற்கு முற்காலத்தில் ”ஆளத்தி” என்று பெயர்
ஆளத்தி என்பது இசையின் சிறப்பு.ஆலம் என்றால் வட்டம் ஆளம்-தீ- ஆலத்தி- ஆளத்தி
என்றாகிறது. இன்றும் தமிழர் மரபில் ஆலத்தி எடுத்தல் நடைபெறுவதைநாம் பார்க்கிறோம்
இன்றைய ஆளத்தியே இன்று ஆலாபனை. அதுவே வடமொழியில் ”ஆலாப்” என்று
பாடப்படுகிறது...”
“பல்லாயிரம் ராகங்கள் எப்படித்தோன்றியது..எனக்கு ஆச்சர்மாக இருக்கிற விசயம்
அது...“ சச்சின் சோபாவின் முன் நகர்தலுக்கு வந்தார்.. ரகுமானின் கண்கள் மூடி யோசனைக்குப் போகிறார்
“பாலை என்பது யாழில் நரம்புகளை வைத்து இசைக்கிற முறையாகும்
முற்காலத்தமிழகத்தில் நான்கு வகையான இசை முறைகள் இருந்தன
1 ஆயப்பாலை- அரை அரையான பன்னிரு சுரங்களில் இசைக்கும் பண்கள்
2 வட்டப்பாலை- கால் சுரங்கள் சேர்நது வரும் பண்கள்
3திரிகோணப்பாலை- அரைக்கால் சுரங்கள் சேர்ந்து வரும் பண்கள்
4 சதுரப்பாலை-வீசம் ஒண்ணுக்கு பதினாரு வீசம் சுரங்கள் சேர்ந்து வரும் பண்கள்..
ஆக 12 உயிரெழுத்துக்கள்
இசைக்குறியீடுகளாக ஏற்படுத்தப்பட்டன இவை பழந்தமிழர் இசையில் 12 வீடு அல்லது நிலம்
எனப்பட்டன. அவைதான் இன்று கருநாடக இசையில் 12 நரம்புகளில் பண் அமைத்து இசைக்கும்
ஆயப்பாலையாகும். 12 வீடுகளிலிருந்து தமிழர் இசை வளர்த்து 22 அலகுகளை அமைத்துக்
கொண்டது இசை ஒலி நுட்பத்தினை அளந்து கூறுவதால் அதற்கு ”அலகு” என்று
பெயரிட்டனர் இதுதான் கர்நாடக இசையில் சுருதி என்று அழைக்கிறார்கள்..
கிரேக்க கணக்கியல்
மேதை பித்தாகரசு தமிழகத்திற்கு வந்து தமிழர் வகுத்த ஏழ்பெரும் இசைப்பாலைகளை
ஆராய்ந்து தம் கிரேக்க நாட்டு இசையைத் திருத்தி அமைத்தார் 22-7 எனும் எண்
குறியீட்டை இசையிலிருந்து தெரிந்து கொண்டு தம் கணக்கியல் கோட்பாடுகளுக்குப்
பயண்படுத்தினார். கிரேக்கர் என்ற யவனரோடு மிகத்தொன்மைக் காலத்திலேயே தமிழர்
வணிகத்தில் ஈடுபட்டனர். அலெக்ஸாண்டர் கிமு 356 திராவிட இசை மேதையை அழைத்துக்
கொண்டு சென்ற வரலாற்று குறிப்பு உள்ளது. கிரேக்க இசை தமிழரிடம் இருந்து பெற்றது
என்று கிரேக்க புவியியல் அறிஞர் வியலாளர் ஸ்டிராபோ என்பார். ஏழிசையின் தமிழ்ப்
பண்களான குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி. விளரி,தாரம் என்பதாகுமட் மேனாட்டில் இதை tonic. Supertonic, median,subdominant,
dominant,submediant, leading note என்றாகிறது.
ஐரோப்பிய இசையின் மூலமாக கிரேக்க இசையே உள்ளது. கிபி15
நூற்றாண்டு வரை பண்ணிசையாகவே வளர்ந்திரக்கிறது. கிரேக்கர்கள் தோரியன்,லித்தியன்,
ஐயோனியன்,பிரிட்டிசியன்,ஏயோலியன் என்று தமிழர்கள் போலவெ நிலப் பெயர்கள்
சூட்டியிருக்கிறார்கள் அதே போல DO,RE,MI,FA,SOL,LA,TI,DO இந்த சுர எழுத்துக்கள்
கெய்டோடி ஆர் ச்சூ என்பவரால் 11 ஆம் நூற்றாண்டில்தான் அறிமுகமானதாக இசை வரலாற்று
நூல்கள் கூறுகின்றன.
தமிழிசை நூல்களான சேந்தன் எனும் திவாகரம் எனும் நூலில்
சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை எனக்கூறுகிறது இப்படிப்
பேசினால் சச்சின் சார்..பலநூறு ஆண்டுகள் நாம் இசையின் வரலாற்றைப் பேசிக்
கொண்டிருக்கலாம்... வாருங்கள் இசையமைப்பு பற்றி விளக்குகிறேன்..
“போதும் ரகுமான்..எனக்கு இசைக்கருவிகளைத் தொடுவதற்கே
அச்சமாக உள்ளது..“
“அப்படியானால் நீங்கள் எங்கள் ஊரின் கிட்டில் புல் மற்றும்
கில்லி தாண்டு விளையாட்டுதானே கிரிக்கெட்..அதைதான் நீங்கள் முப்பது ஆண்டுகளாக
விளையாடி புகழ்பெற்றிருக்கிறீர் கள்..“
“கேள்விப்பட்டிருக்கிறேன்..சரி நீங்கள் இஸ்லாமிய மதத்தை
சேர்ந்தவராக இருக்கிறிர்கள்..உங்கள் கோட்பாடுகளில் இசை பற்றிய யாராவது
பேசியிருக்கிறார்கள்..நீங்கள் எப்படி நவீன இசையின் கருவிகளை இசைக்கிறீர்கள் பழம்
பெரும இசைக் கருவிகளை நீங்கள் ஏன் இசைக்கவில்லை...“
“நல்ல கேள்வி...
நான் முடிந்த வரையிலும் கருவிகளை உபயோகிக்கிறேன்..சில பகுதிகளுக்கு மட்டும்
இயந்திரத்தை உபயோகிக்கிறேன் என்பதை மறுக்க வில்லை..அதே போல நீங்கள் இஸ்லாமிய இசை
மற்றும் அதன் பின்னணி பற்றிக் கேட்கிறீர்கள்..அதுவும் ஒரு நீளமான சொற்பொழிவாக
மாறும்..குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதை மற்றும் சொல்லி விடுகிறேன்.சாதி சமய
மாச்சர்யங்கள் கடந்ததாக மருத்துவம் இருப்பது போன்று இசையும் இந்த மாச்சர்யங்களைக்
கடந்த தாகவே உள்ளது.சித்தர் மரபைச் சார்ந்த சூஃபிகளும் இசையைக் கைக்கொண்டு
வந்துள்ளனர். ஒவ்வொரு சூஃபியும் இசைக்காரனாகவே தன்னை அடையாளப்படுத்திக்
கொள்கிறார். இறைச் சேவையையும் இசைப் பங்களிப்பும் ஆற்றிய இசையாளர்களாக
அருபதுக்கும் மேற்பட்ட சூ.ஃபிகளைத் தமிழகம் கண்டுள்ளது. இவற்றில் தலைமையானவர்களை
சிலரைக் காணலாம்.கடையநல்லூர் செய்குனாசெய்கு உதுமானஅலி, கோட்டாறு
செய்குமுகைதீன்மலுக்கு முதலியார்என்ற ஞானியார் சாகிபு, குணங்குடி மஸ்தான் சாகிபு
இவர் தொண்டியில் பிறந்து சென்னையில் மறைந்தவர் மேலப்பாளையம் முகையதீன் பசீரொலி
தக்கலை பீர்முகமது என்கிற பீரப்பா காலங்குடி மச்சரேகைச் சித்தர் காயல் பட்டினம்
ஒலியுல்லா கல்லிடைக்குறிச்சி கலிபத்து சைகு சாகுல் ஹமீது ஆண்சூஃ.பியர் மட்டுமல்லாது பெண்சூ.ஃபி
ஞானியர்களையும் தமிழகம் கண்டுள்ளது. கீழக்கரை சையது அசியாஉம்மா தென்காசி ரசூல்பீவி
இளையாங்குடி கச்சியப்பிள்ளை அம்மாள் ஆகியொர்
முக்கியமானவர் தமிழக சூஃபியர் பல்வேறு இசைத்தளங்களில் தங்களை
அடையாளப்படுத்தியுள்ளனர். வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,கீதம்,கீர்த்தனை,புராணங்கள்,
அந்தாதி,உலா,பரணி, கலகம்பகம்,கோவை,பிள்ளைத்தமிழ், சதகம்,வண்ணம் என்பவை
மட்டுமல்லாது பாரமர் விரும்பும் கும்மி, சிந்து. ஆனந்தக்களிப்பு. பள்ளு,கண்ணி,
குறம் ஆகிய எளிய இசைவடிவங்களையும் கையாண்டுள்ளார்கள்.
சச்சின் ஒரு கணம் பனிக்கட்டிபோல் இறுகியதாகத் தெரிகிறது.
ரகுமானின்
சன்னமான அதே சமயம் அருள்வாக்கும் தேவ வாக்கும் அருள்வது போல பேசிக்
கொண்டிருக்கிறார். உதவியாளர்கள் கூட அதிர்ச்சியில் உறைந்தபடியிருக்கிறார்.
“1910 ல் கணவர் பெயரில் வெளியிட்ட பரிமளத்தார் என்ற நூலில்
சூஃபி ஞானி ரசூல்பீவி ஒப்பற்ற இறகுமான் கண்ணி பரமானந்தக் கண்ணி பாடியுள்ளார்.
இளையான்குடி கச்சியப் பிள்ளை அம்மாள் மெஞ்ஞானக்கும்மி, மெஞ்ஞானக குறவஞ்சி பாடி
சாமான்யமக்களின் பாடல்காரியாகவே தன்னை முன்னிலைப்படுத்துகிறார். திருப்பரங்குன்றம் மலைமீது பள்ளிகொண்ட
சிக்கந்தர் ஒலியுல்லா மீது இவர் பாடிய வழி நடைச்சிந்து சிந்து இலக்கியத்தின்
அளப்பரிய வடிவம். பாரம்பரிய இசை வடிவங்கள் மட்டுமல்லாது பல்வேறு புதிய
இசைவடிவங்களையும் இந்த சூஃபிஞானியரும் இஸ்லாமியப் புலவர்களும் தமிழிசைக்கு
அளித்துள்ளார்கள். சூஃபிகளின் மசலா-(மஸ்-அலா), “முனா ஜத்து“படைப்போர்,கிஸ்ஸாஅ நாமா
போன்றவை தமிழுக்கான புதிய இசை வரவுகள் இந்த சூஃ.பியர்களை இறைநேச செல்வர்கள்,
ஒலிமார்கள் வலிமார்கள்.அவுலியாக்கள்,வலியுல்லாக்கள், அன்பியாக்கள்( அம்பியாக்கள்0
என்றே தமிழக மக்கள் அழைத்து வருகிறார்கள். வேறு எதாவது உங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறதா...
“............“
சச்சின்
மூச்சு விட்டுக் கொண்டு அந்த அறையையே ஒரு கணம் பார்க்கிறார். பதிலுக்கு அவர்
மீண்டும் ஒரு முறை ரகுமானைப் பார்த்து விட்டு ...சோ..மிரக்கிள்...என்று
ஆச்சர்யத்தில் விரிந்த கண்களிலிருந்த ஈரத்தை லாவகமாக துடைத்துவிட்டு “நான் என்ன
சொல்வது ரகுமான்.. பதிலுக்குச் சொல்ல என்னிடம் பெருமூச்சைத்தவிர வேறொன்றுமில்லை..
நீங்கள்தான் நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுங்கள் என்றவாறு..அல்லாவின்
படத்தையும் சங்கீத மூம்மூரத்திகளையும் வணங்கிக் கொள்கிறார்..
“ ஓகே சச்சின் வாருங்கள் நாம் இசையமைக்கலாம்..“
“யெஸ் யெஸ் தேங்க்யு....தேங்க் காட்..“
தன்
இசைக்குழுவினர் தங்களின் வாத்தியங்களை எடுத்துக் கொண்டு வட்டமாக அமர்ந்து
கொள்கிறார்கள். பறை, நாயணம் ஒரு தவில் ஒரு புல்லாங்குழல் தபலா ஒரு ஷெனாய் சுருதிப்
பெட்டி ஒரு டபுள் பேங்கோஸ் என்று கலைஞர்கள் அமர்ந்து கொள்ள ரகுமான் தன் மடியளவு
உள்ள கீபோர்டில் சில சங்கதிகள் வாசிக்கிறார்.
“சச்சின்..எனக்கு ஒரு தாளலயமிக்க தனி நாயகன் தன் நாயகியின்
அழகை அவளுடனான நட்பை எதிர்காலத்தில் அவளுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு மகிழ்வது
போன்ற கற்பனையுடைய பாடல் ஒன்றை நாம் கம்போஸ் செய்யப் போகிறோம்..இது தமிழில் வரப்
போகிற படத்திற்கான கதை.. இது இயக்குநர் முழுக்க என் சாய்ஸில் விட்டுவிட்டார்..
இப்பொழுது நீங்கள் பல்லவியை அமைக்கிறீர்கள்..“
“ஐயோ நானா...முடியாது முடியாது.. கஷ்டம்...“
“இதோ இதுதான் பல்லவி சச்சின்..”
“ஐயோ நானாவை ரகுமான் பலவிதங்களில் கீபோர்டில் வாசிக்க வாசிக்க கலைஞர்கள்
தாளத்திற்கு வாசிக்க உதவியாளர் குறிப்பாக்குகிறார்.. ச ச்சின் சிச்சிவேசன்
சொன்னேனில்லையா நீங்களும் காதலித்தவர்தானே நீங்களே சில வரிகளை ஆங்கிலத்தில்
சொல்லுங்களே நான் தமிழ் படுத்திவிடுகிறேன்....“
” ஐயோ ரகுமான் என்ன இது என்னைச் சிக்கலில் மாட்டி
விடுகிறீர்கள் பார்த்தீர்களா...நானாவது பாட்டு எழுதுவதாவது..“
“சச்சின் தமிழ் படத்திற்குப் பாட்டு எழுதுவதை விட உலகத்தில்
ஈசியானது ஒன்றுமில்லை..பாருங்கள் இந்தக் குழுவினர்கள் கூட நிறைய பாடல்கள்
எழுதியிருக்கிறார்கள்..ஆனால் டைட்டில் கார்டு இல்லாமல்..நீங்கள் எழுதுகிறீர்களா
நான் எழுதட்டுமா...“
“சரி நீங்கள் எனக்காக இத்தனை சொல்லியிருக்கிறீர்கள் நானோ
சொல்கிறேன்..“
சிலவரிகளைச் சொல்லச் சொல்ல ரகுமான் தமிழாக்கம் செய்யச் செய்ய பாடல்
உருவானது..அதே வரிகளை இசையமைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ரகுமானும் அவர்
குழுவினரும் சேர்நதிசை பாட ஒலிப்பதிவு செய்து அதை ஆடியோவில் போட்டிக்காட்டினார்
அடுத்த இருபது நிமிடங்களில்..
சச்சின்
ரகுமானை இறுகத்தழுவிக் கொள்ளவும் அவரோ எல்லாப்புகழும் இறைவனுக்கே என்னும் சைகை
காட்டுகிறார்.. விடைபெற்றுக் கொள்ள முனையும் போது சச்சின் நீங்கள் எதையும்
என்னிடம் கேட்கவில்லையா..என்கிறார்..
“நிறைய இருக்கிறது சச்சின் ஆனால் உங்களால் இந்த மனநிலையில்
பதில் சொல்ல முடியுமா தெரியவில்லை..இருந்தாலும் நீங்கள் எனக்கு இமெயில்
செய்யுங்கள்..உங்கள் பதிலை நான் ரகசியமாக வைத்துக் கொள்கிறேன்...“
“ஈசிட்...கமான்...கேளுங்க...எனக்கும் ஆர்வமா இருக்கு..“
ரகுமான் தன் குரலைத்தாழ்த்திக் கொண்டு..
“நீங்கள் ஏன் கேப்டன் பதவியை வேண்டாம் என்று
மறுத்தீர்கள்..நான் துவக்க ஆட்டக்காரராகத்தான் ஆடுவேன் எனறு விடாப்பிடியாக கேட்டு
ஆடியது ஏன்..உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நீண்ட வருடங்களும் வாய்ப்புகளும் ஏன் மற்ற
வீரர்களுக்கு வழங்கப்படவில்லை.. சதமடிப்பதற்காக எதற்காக அத்தனை நேரங்களையும்
ஆண்டுகளையும் எடுத்துக் கொண்டீர்கள்..நீங்கள் சதமடித்த போட்டிகள் பெரும்பாலானவை
தோல்வியில் முடிந்த காரணம் என்ன... இது போதுமே...“
நீண்ட மௌனத்திற்குப் பிறகு வாடிய முகத்தை இயல்புக்குக்
கொண்டு வந்த சச்சின்.. ரகுமானின் உள்ளங்கைகளைப் பற்றிக் கொண்டு..
“நீங்கள் குறிப்பிட்ட கேள்விகள் என் விளையாட்டு வாழ்வின்
மறுபக்கம்..எப்படிப்பட்ட மனிதனுக்கும் மறுபக்கம் நேரெதிராக இருக்கும்.. அந்த
நேரெதிர் பக்கம் தான் மற்ற வெற்றிகரமான பக்கங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.. ஒன்றை நான் நிச்சயமாக புரிந்து
கொண்டிருக்கிறேன்...எந்த நிலையிலும் கடவுளுக்கு நிகரானவர்கள் நாமல்ல... கடவுளே தன்
வாழ்வில் ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பதாக அறிந்திருக்கிறோம்... எனிவே...இதற்கான
பதில் நிச்சயம் இமெயில் தான் செய்ய முடியும்... “
வாசல் வரை
வழியனுப்பிய போது சச்சின்..”ஐயோ நானா“ என்று
அந்தப் பாடலின் பல்லவியையும் ஆங்கிலத்தில அதன் பல்லவியான ஓ..ஏம் ஐ மீ..என்று
முணுமுணுத்தவரை ரகுமான் சிரித்தபடி டாட்டா காட்டி அனுப்புகிறார்..ரகுமான் அவர்
மறந்த சாக்லெட் அளவிலான மௌத் ஆர்கனை இந்தாருங்கள் உங்களுடையது.. என்றபோது அது
உங்களுக்குத்தான் என்றதும் ச ச்சினும அந்த ஐயோ நானா..பாட்டை மூன்று நிலைகளில்
வாசித்துப் பார்க்கிறார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக