ஞாயிறு, 4 ஜனவரி, 2015

கவிஞர் கனிமொழி.ஜி கவிதைகள் குறித்து...



கனிமொழி ஜி கவிதை உலகம்
நெருப்பில் தகிக்கும் ஒவியத்திரை
“மழை நடந்தோடிய நெகிழ்நிலம்”
கவிதை நூல் குறித்து

பனியில் நடுங்கிய சிறகுகளை
ஒன்றுக்கொன்று கோதலில்
இரவைத்திறப்பதும் பகலில் நுழைவதுமாய்
விருப்பம் போல் மாறுகின்றன பொழுதுகள்

பூத்தலற்ற பருவத்தில் எங்கும் மலர்ந்திருந்த
ஞாபகத்தின் மலர்கள்
பனியில் குளிர்ந்து குளிர்ந்து கொழுந்துவிட்டு எரிந்தன
அகம் அவிழ்ந்த மலர்ச்சியில் எங்கும் பூத்தலின் வாசம்
       -தொகுப்பின் கவிதையிலிருந்து சில வரிகள்.
        கவிஞர் கனிமொழி.ஜி கவிதைகளுடன் உரையாடுவதற்கு முன்பாக தற்காலத்தில் கவிதைகளின் இருப்பு குறித்தும் பேசலாம்.  நாம் முதலில் சிற்றிதழையோ வெகுசன இதழையோ கையில் எடுத்தவுடன் பக்கங்களைப் புரட்டுகிற பொழுதில் கவிதைகளுக்குரிய வரிகளையோ அல்லது அப்படியான சொற்றொடர் களையோ கண்டதும் வாசிக்கத்துவங்கிவிடுகிற இயல்பைப் பெற்றிருக்கிறோம். அல்லது கவிதை வாசிக்க வைத்துவிடுகிறது. கவித்துவமிக்க சொற்றொடர்கள் இன்றைய சூழலில் பரவலாகப் பயண்படுத்தப்படுகிறது. மொழியின் வளர்ச்சியடைந்த காலகட்டத்தைக் காணமுடிகிறது.
     கவிதைகள் ஒவ்வொரு யுகத்திலும் தன் வடிவத்தையும் சொற் செறிவையும் அழகையும் காட்சியையும் உணர்ச்சிகளையும் உணர்த்திக் கொண்டே வந்திருக்கிறது. கவிதையை நாம் வாசிக்கத் துவங்குவது நாம் உணராத ஒரு உணர்வையும் காணாத காட்சியையும் நாம் வாழாத வாழமுடியாத ஒரு வாழ்வின் விவரிப்பையும் அறியவே விரும்புகிறோம். உதாரணமாக நமக்கு முந்தைய ஐம்பதாண்டுகளின் வாழ்க்கை திராவிட இயக்கவியலின் அரசியல் கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம்.
         அன்று எழுதப்பட்ட, பேசப்பட்ட, மேடையில் வசனகவிதைகளாகவும் உரைவீச்சுகளாகவும், காவியப் பாராட்டுரைகளாகவும் கவியரங்க கைதட்டல் கவிதை களாகவும் அமைந்த கவிதைகளின் காலத்தை தற்கால இணைய வளர்ச்சி தடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். திராவிட இயக்க ஆட்சியாளர்களே திராவிட இயக்கவியலின் கவிதைகளை திராவிட இயக்க இலக்கியத்தை மேம்படுத்தவில்லை. மாறாக அவர்கள் நவீன பொருளியல் மாற்றங்களுக்குள்ளாகத் தங்கள் வம்சத்தையும் வளத்தையும் மேம்படுத்திக் கொள்ளத்துவங்கியதுதான் இந்த மாற்றத்திற்கான காரணம்.

          இதன் வடிவாகவே கவிதை தன் இலக்கிய இலக்கணங்களை மீறத்துவங்கியது. தமிழ் கணிப்பொறிகளிலும் உலகெங்கிலும் வாழ்கிற அயலகத் தமிழ் ஆர்வலர்கள் இலக்கிய விரும்பிகளால் மிகவேகமாக வளரத்துவங்கியது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு கவிதையின் வடிவம் தன்னை மாற்றியது. எந்த நிலையிலும் சோர்வு அடையாத சிற்றிதழ்கள் கவிதையை மென்மேலும் பிரசுரித்து வாழவைத்து வருகிறது. இடைநிலைஇதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் கவிதைகளை முதல் ஆக்கமாகப் பாவித்து வெளியிட்டு வருகிறது.
     அப்படித்தான் சமகாலத்தின் கவிதைகளின் கவிஞராகவும் மொழிவசப்பட்ட சொற்களின் ஆன்மாவாகவும் ஜி.கனிமொழி குரல் கேட்க முடிகிறது. ஒர் பல்கலைக்கழகத்திலிருந்து நூறு ஒரே துறைபயின்ற வல்லுநர்களின் ஆக்கங்கங்களும் மதிப்பெண்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவா உள்ளது. ஒருவருக்கொருவரின் தரமும் சிந்தனையும் செயலும் வித்தியாசப்படும். ஆனால் தமிழ்க் கவிதையின் வாசகனும் இலக்கிய மொழியியல் பட்டதாரியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சிந்தனையுடன் இருப்பதற்குக் காரணமே ஆயிரமாயிரமாண்டு பலம் கொண்ட மொழியின் வீரியம்தான். இனியொரு கவிதையை வாசிக்கலாம்..

என் தனிமை வீதியின்
ஒளி அளவைகள் வேறுபாடானவை
நெடியதொரு காத்திருப்பின் நேரம்
அசை போடுதலில் ஒழுகிப் போகிறது இருள்
சந்திப்பின் முதல் கணம் முன்
நெரிசலான வெளிச்சங்களால் சிதறடித்தது
எதிர்நின்று விழி மலர்த்தும் போது
பெருமரம் ஒன்று தீப்பிடித்துச் சடச்சடத்தது
தீயமர்த்தி ஆசுவாசமான இந்நேரம்
சலனமற்று மேலெழும்பி நிறைக்கிதோர் தீச்சுடர்-
 மேற்கண்ட கவிதையை வாசிக்கிற பொழுது எனக்கு பாரதி பாஞ்சாலி சபதம் காவியத்தில்  அந்திவான வருணனை ஞாபகத்தில் வந்துபோகிறது. ஒரு கவிதை நம் முந்தைய தலைமுறையின் காலத்தையும் மொழியையும் நினைவுகொள்வது முக்கியமானது. ஒரே உலகத்தின் வெவ்வேறு காலநிலைகள் இயற்கையின் காட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கிறது.
பார், சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்,
எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ!
என்னடி! இந்த வன்னத் தியல்புகள்
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! செம்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள் பாரடி!
நீலப் பொய்கைகள் அடடா நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! கரியப் பெரும் பெரும் பூதம்
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள்! சுடரொளிப் பொற்கரையிட்ட
கருஞ்சிக ரங்கள்! காணடி, ஆங்கு
தங்கத் திமிலங்கம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! ஆஹா எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்!  வன்னக் களஞ்சியம்!
         இன்று நாம் மின்சாரத்தின் உதவியால் பலவகையான வெளிச்சங்களை கண்களால் அறிகிறோம். நெருப்புப் பொறிகளின் வாயிலாக இருளுடன் வாழந்த நாட்களில் ஆகாயத்தின் காட்சிகள் யாவும் யானைகள் போலவும் திமிங்கலங்கள் போலவும் அவைகள் நிலத்திற்கு இறங்கி வருகிறதோவென்ற பிரமைகள் உருவாகிறது. இயற்கை ஒளியிடமிருந்து முற்றாக நம்மை மின்சார ஒளி விலகிப் போக வைத்திருப்பதை கவிஞர் ஞாபகப்படுத்துகிறார்.நெருப்பு கைக் கொண்ட பிறகு ஆதிக்க மக்கள் சாமானிய மக்களின் குடில்களுக்கு நெருப்பு வைத்துக் கொழுத்தி மகிழ்ந்தார்கள்.
       அந்தந்த காலத்தின் கலைஞர்கள் தங்கள் வசமான நெருப்பை வைத்து புதிய சமூக ஒழுங்கைச் செய்தார்கள். நெருப்பிலேயே வெந்து சாகும் தொழில்களைப் பிறருக்குச் செய்து மகிழ்ந்தார்கள். தாய்மார்கள். தங்கள் குடும்பத்திற் காக எப்பொழுதும் நெருப்புக்கனலுடனே வாழ்ந்தார்கள். தங்கள் அடுப்பில் கனலின் சூட்டைத் தங்கள் குழந்தைகள் போல பாதுகாத்தார்கள்.
        நம் சமூகத்தில் சில தமிழர்கள் வாழ்க்கைக்கு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்களாக இருந்தாலும் கூட தமிழின் கவிதையை அவர்கள் விடாமல் எழுதுகிறார்கள். அறிவியல் தொழில்நுட்பக் கல்விகள், ஏனைய பிற நுண்ணியல் துறைகள் பயில்பவர்கள் கூட தமிழிலும் இலக்கியப் படைப்புகள் எழுதுவதின் காரணம் மொழியின் சாத்தியங்கள். மொழியின் சாத்தியங்களை அறிந்தவர்கள் கவிதைகளை எழுதாமல் இருக்கவே வாய்ப்பில்லை. 
இயந்திரங்களையும் அசுரத்தனமாக உற்பத்தியாகிவருகிற வாகனங்களையும் பெட்ரோலையும் டீசலையும் நம்பித்தான் வாழ்கிறோம். இந்த நகரங்களை நம் கனவுலகத்தில் சில சாத்தான்கள் மொய்க்கிறார்கள். மனிதர்களின் இருப்பு என்பது காலாவதியாகிறது. சமகாலத்தில் தார்மீகக் கடமைகள் பெண்களுக்கு என்று குடும்பம், குழந்தைகள், வீடு, உறவுகள், சேமிப்பு,சிக்கனம் என்பதாக அவர்களுக்கு இந்த அமைப்பியல் வறையறுக்கிறது.
ஆண்களுக்கு வருமானம். அலைதல், வறியவையானாலும் திரைகடலோடியும் திரவியம் தேடவேண்டும். ஆண்கள் ஆண்களுடனும் தங்கள் சொற்களின் திறமையால் பிற ஆண்களை வெல்லவேண்டும்.
தினப்பொழுதுகளின் வெளிச்சப்படிமங்களுக்கு ஏற்ப நாம் முகங்களின் அழகுகளைத் திருத்தம் செய்கிறோம். பொலிவும் அகமும் மலர்ச்சியடைகிறது. உவகை பொங்குகிறோம். மொழி நவீன வாழிடத்தின் காலத்தின் அமைப்பியலுக்கு ஏற்ற மாதிரித் தன்னை ஒழுங்கு செய்து கொள்கிறது. கனிமொழி.ஜி. தன் கவிதைகளில் அகவய புறவய ஒழுங்கின் மனிதமுகங்களைத் திருத்திப் பார்க்கிறார். கவிதைகளால் மட்டுமே சாத்தியப்படுகிற இயற்கை மலர்ச்சியை அகவயமான குணாம்சங்களுக்கு இலக்கணம் எழுதுகிறார்.
       முயற்சிகளால் இடையறாத சேகரிப்பின் களஞ்சியத்திலிருந்து விடுபடுகிற தானியங்கள் போலவே ஒரு சில கவிதைகளை மட்டுமே வாசகனுடன் பகிர்ந்து கொள்கிறோம். சிதறிய தானியங்களின் பறவைகள் போல. மனித சமூகத்தைப் புத்தாக்கம் செய்கிற வலிமை கவிதைகளுக்குத்தான் உண்டு. அதற்கெனப் பெயரிட்டு அழைத்துக் கொள்வதுதான் கவிதை. தினத்தின் பருவங்கள் அனைத்திற்கும் பெயர்கள் உண்டு. இரவுகளுக்காக எழுதிய பெயர்கள் முழுமையான கவிதை. உறக்கதிற்குப் பிறகான அகமனதின் கனவுலகமும் நனவோடைகளும் கனிமொழி.ஜி. கவிதைகளுக்குள் ஆழப் பரந்து செல்கிறது.
        தொகுப்புகளில் மிகச்சிறந்த கவிதைகள் குறித்து இங்கு முழுமையாகப் பேச முடிந்தாலும் நீங்கள் வாசித்து உணர்வதற்காகவே சில கவிதைகள் இங்கு பதிவிட்டுள்ளேன். உப்பு நிலங்களின் வகைமைகளும் உப்புக் கரிக்கிற அளவு வருணனைகளும் இயல்பாகவே அவருக்குக் கைவந்துள்ளது. உப்பு அருஞ்சுவைகளில் ஒன்று. ஆனால் நமக்கு சமூகம் போதித்து இருப்பது என்னவோ அவை புறந்தள்ளக் கூடியதாக உள்ளது. உப்பு குறித்த சேதிகள் நிறைய உள்ளது இந்தக் கவிதைகளின் பலம் என்றே கருதுகிறேன். நம் உடலே உப்பின் முழுமைதான். கரித்த உப்பின் துவர்தான் உண்மையான சுவையோவெனத் தோன்றுகிறது.
தன்வய அகத்தின் கவிதைகளில் காட்சிகள் நீண்டும் முரண்களுக்குள்ளாக கவிஞர் எழுதிப் போவதை சிறப்பானது. தற்காலங்களில் வெகு ஆழங்களுடன் பெருங்குழிகள் தோண்டப்படுகிறது. நாம் கவனிக்கலாம். குழியின் ஒரு பகுதியில் நிலத்தின் அடுக்குகள் தேர்ந்த ஒவியனின் கைவண்ணத்தில் எழுதப்பட்டது போன்றே படிமங்கள் காணமுடிகிறது. சரளை மண், பாறைச்சல்லித் துண்டுகள், பெரும்பாறையின் தகடான ஓடுகள். உடைகிற ஓடைக்கற்கள், உடைக்கமுடியாத கற்கள், கணன்று மின்னுகிற பச்சை வண்ணத்திலான பாறைகள்.
          நிலத்தின் வண்ணங்களைப் பேசுகிற கவிதைகள் தொகுப்பின் பலம். ஓவியப்படிமங்கள், சித்திரங்களின் உரையாடல்களுக்கும் குறைவில்லை.
குளிரடைத்த வாகனத்துள்
நாற்சந்தியில் நிறுத்திய சாலை விதியை
சபித்தவாறிருக்கிறேன்
விழிகளில் வெய்யில் மிதக்க
கண்ணாடி ஜன்னலைச் சுரண்டுகிறாள்
அழுக்குச் சிறுமி
            வாசித்த கணத்தில் சில புகைப்படங்கள் மலர்ந்து முத்தங்களின் சத்தமிட்டு பொலபொலவென உதிர்வதைக் காணமுடிகிறது.
கவிதைகளில் ஆங்காங்கு கணன்று தகதகத்து எரிந்து கொண்டிருக்கிற அடுப்பின் வெம்மையின் தீற்றத்தைக் கொண்டுள்ளது எனலாம். நம் சமூகத்தில் பல்லாண்டுகளுக்கும் முன்பு உணவிற்கான அடுப்புகள் தங்கள் குடில்களில் எப்பொழுதுமே கணன்று கொண்டேயிருக்கப்பார்த்துக் கொள்வார்கள். பசியாற நெருப்பு தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்த காலம் அது. கணலின் இருப்பும் அதன் தகிப்பும்தான் உயிர். அவை சாம்பலாகிப் போகிற தருணங்களில் நெருப்புக்காக அவர்களின் பயணம் மலைகளையும் கடலையும் தாண்டிப் பயணித்திருக்கிறதை தன் கவிதைகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார் கனிமொழி.ஜி.
வாழ்த்துக்களுடன் முடிக்கிறேன் ஒரு கவிதையுடன்
நேற்று பின்னிரவு கனவில் பார்த்த ஊதா மலரை
இதுவரை எங்கும் பார்த்ததில்லை
முழுதும் அவிழாத இதழ்களோடு
என் உள்ளங்கையில் ஏந்திய அதன் மிருதுவை
இன்னுமென்னால் உணரமுடிகிறது
வாசம் குறித்து என்னிடம் குறிப்பேதுமில்லை
அதன் இளம் ஊதா நிறம் அத்தனை மலர்ச்சியாய் இருந்தது
கைவசமிருக்கும் கறுப்புப் பென்சிலால்
மலரின் விளிம்புகள் மட்டுமே வரைகிறேன்
விளிம்புகளுக்குள் இப்போது ஊதாவாக நிரம்புகிறேன்
நீங்களும் எவ்வண்ணமோ அவ்வண்ணமாய்..
ஆசிரியர் –கவிஞர் கனிமொழி.ஜி
96295 87313
வெளியீடு
அகத்துறவு
9-2- ஏ ஒண்டிப்புதூர் சாலை
என்.ஜி.ஆர் புரம்
இருகூர்-கோவை-641103













மூன்றாவது துளுக்கு- மயுரா ரத்தினசாமி சிறுதை நூல் அறிமுகம்



மூன்றாவது துளுக்கு
-மயுரா ரத்தினசாமி சிறுகதைகள்
          வெகுநீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிற தயாரிப்பு போல மயூரா ரத்தினசாமியின் சிறுகதைகள் நூலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த தொகுப்பில் பதினான்கு கதைகள். அவர் இன்னும் அதிகமாக எழுதியிருக்கிறார். ஆனால் தற்பொழுது இவை மட்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. நூல் கட்டமைப்பு, வடிவமைப்பு, அச்சாக்கம், எழுத்து,பதிப்பு,படைப்பியக்கம். வெளியீடுகள் என்று தன் பணிகளில் மூத்த ஆளுமையாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி தன் படைப்புக ளை முன்னிருத்துவதற்கு காலம் அவ்வளவு எளிதாக அனுமதிப்பதில்லையென்பதற்கு மயூரா ரத்தினசாமியின் இயக்கமே சாட்சி. அவர் பிறர் படைப்புகளை அச்சாக்கத் திற்கு முன்னுரிமை தருவதும் சிற்றிதழ்கள். ஆய்வு நூல்கள் மற்றும் தன் அச்சுக் கூடத்தில் பணிபுரிகிறவர் களுக்கான அச்சுப் பணிகள் ஏற்பு என்கிற பொறுப்புகளை உணர்ந்திருப்பவர்.
           தொண்ணூறுகளிலிருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களில் நான் அறிந்தவர்களில் ஒருவராக மயூரா ரத்தினசாமி இருக்கிறார். வெகுசனப் பரப்பிலும் அப்பொழுது ஒரு இதழுக்கு நான்கு கதைகள் வெளிவந்த காலம் அது. கல்கி,ஆனந்த விகடன், செம்மலர்.தாமரை, தீபம், கலைமகள். இந்த இதழ்களில் வெகுசன வாசிப்பிற் கான சுவராசியமும் இலக்கியத்தரமும் காணப்பட்டது. இந்த இதழ்களில் ஏறக்குறைய பல நூறு மிக்ச்சிறந்த படைப்பாளர்கள் எழுதினார்கள். அந்தக்கதைகள் தொடர்ச்சியாகப் பேசப்பட்டது. இலக்கியச்சிந்தனை, உள்பட பல மாநிலம் நழுவிய இலக்கிய அமைப்புகள் இலக்கிய மேம்பாட்டிற்கு உழைத்தன. அந்தக்காலம் பொற்காலம். நவீன இலக்கியத் தரத்திற்கு இணையான கதைகளும் சில சமயம் இந்த இதழ்களில் வெளியாகி உள்ளது. குறிப்பாக கல்கி, ஆனந்த விகடன், கணையாழி, கலைமகள் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகிற போட்டிகளக்கு எழுதாத படைப்பாளிகள் இல்லை. குறிப்பாக தீவிர இலக்கியவாதிகள் கூட புனைப்பெயர்களில் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
        கோவையிலும் அதன் பிரதிபலிப்புகளுடன் இலக்கியத்தரத்துடன் எழுதியவர்களில் முக்கியமானவர் களாக ரமணி, த.முரளி, கா.சு.வேலாயுதன், பிர்தவ்ஸ் ராஜகுமாரன், மயூரா ரத்தினசாமி போன்ற படைப்பாளர்கள் சிறுகதைகளை தீவிர இலக்கிய இதழ்களிலும் வெகுசன வாசிப்பு இதழ்களிலும் தொடர்ந்து எழுதியவர்கள்.
       நெடிய தொலைவு மிக்க படைப்புதளத்தில் இருந்தாலும் மயூரா ரத்தினசாமி தன் முதல் தொகுப்பை இப்பொழுதுதான் கொண்டுவந்திருக்கிறார். ஒரு வகையில் இதன் தலைப்பு இப்படியாக அமைந்திருக்கவும் பொருத்தம் உள்ளது. மயூரா ரத்தினசாமியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்றும் அழைக்கலாம். அவருக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
      தமிழ்ச்சிறுகதைகள் குறித்து இரண்டு வகை நிலைகள் இருப்பதைக் கண்டோம். தீவிர இலக்கிய இதழ்களில் அதிக பக்கங்களுடன் மிக நுட்பமாக வாசகன்  பற்றிய அக்கறையில்லாம் அதே சமயம் இலக்கியத்தரம் என்கிற கருதுகோளில் அமைகிற கதைகள்.
அடுத்து வெகுசன மக்கள் மற்றும் நடுத்தர வாசகர்கள் வார மாத பருவ இதழ்களில் வெளியாகிற நான்கு அல்லது ஆறுபக்க கதைகள். இதில் எழுதப்படுகிற கதைகளுக்கு அந்த படைப்பாளிகளுக்கு சன்மானங்கள் கிடைக்கும். தீவிர இலக்கிய இதழ்களில் வெளியாகிற கதைகளுக்குச் சன்மானங்களும் கிடைக்காது பரவலான வாசகர்களும் கிடைக்கமாட்டார்கள். இந்த திரிசங்கு சொர்க்கத்தில்தான் மயூரா ரத்தினசாமி போன்ற படைப்பாளர்கள் எழுதியும் பிரசுரித்தும் வருகிறார்கள்.
           மயூரா ரத்தினசாமியின் இந்த நூலில் பதிவு செய்திருக்கிற கதைகள் இருநிலைகளையும் கொண்டவை. வெகுசன இதழ்களில் எழுதி வெளியான இலக்கியத்தரமிக்க கதைகளும் ( அந்தக்கதைகள் பரிசும் விருதுகளும் பெற்றிருக்கிறது என்பது கூடுதலான செய்தி) நூலில் உள்ளது. இந்த நூல் ஒருவகையில் கடந்த பதினைந்து ஆண்டுகளின் சிறுகதையின் வளர்ச்சிப் போக்குகள் கொண்ட ஆவணமாக இருப்பதை நான் ஆச்சர்யத்துடன் வாசித்தேன்.
“மூன்றாவது துளுக்கு” தொகுப்பின் தமிழ்ச்சிறுகதையின் வழியாக தமிழ்க்குடும்பங்களின் இருபதாண்டு சித்திரங்கள் நமக்குக்கிடைக்கிறது. குறிப்பாக கொங்குநாடு என்ற அழைக்கப்படுகிற நிலத்தின் மக்களின் வாழ்க்கை. விவசாயம், நோய்கள். இயற்கையின் காலநிலை, உணவு, உறவுகள் என்று பதிநான்கு கதைகளில் பல்வேறு உலகங்கள்..
இந்தக்கதைகள் குறித்து நண்பர் ஒருவர் பேசுவதாக இருந்து அவர் தவிர்த்த நிலை வேறொரு நண்பர் வாயிலாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அந்த நண்பர் குறித்தும் நான் அறிந்திருக்கிறேன். அவர் தவிர்த்த பிறகு அவர் குறித்து நான் யோசிக்கற பொழுது அவர் ஆக்கங்கள் எல்லாம் வெறும் மனிதச் சாணம் என முடிவுக்கு வருவதற்கு அவர் உதவியிருக்கிறார். போகட்டும்.
சுழற்சி- சிறுகதை லஞ்சம் என்கிற ”மேல் வருமானம்” வாங்காத ஒரு போலீஸ்காரருடைய கதை. சுமார் பதினைந்து ஆணடுகளுக்கு முன்பு லஞ்சம் பற்றிய சொல்லாடல்கள் இருந்த காலம் லஞ்சத்தின் அளவுகள் ஆயிரங்கள் லட்சம் என்பதாக. இன்று லஞ்சம் லட்சம் கோடிகள் அளவு. ஆனால் அதே அளவு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்திருக்கிறதாவென யோசிக்கவைக்கிற கதை..நடுத்தரக் குடும்பத்திற்கு நடக்கிற பொருளாதர பிரச்சனைகளை வித்தியாசமான காட்சிகளுடன் கதையை நகர்த்தியிருக்கிறார். லஞ்சம் வாங்காவிட்டாலும் மனம் வாங்கினால் என்ன எனும் மறு சிந்தனையை வளர்த்துக் கொண்டேயிருக்கிறது என்பது கதையின் முடிவாக நமக்குள் வளர்கிறது.
         இந்த தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்றாக “ஒற்றைச் செருப்புகள்..“ காணாமல் போன அக்காவைச் சென்னையில் தேடுகிற கதை. ஒரு கணம் கடற்கரையில் கிடக்கிற பலவகையான ஒற்றைச் செருப்புகளின் குறியீடுகளில் கதை நகர்கிறது. உண்மையிலேயே இன்று மாற்றுத் திரைப்படங்களின் காட்சியமைப்புகளுக்குட்பட்டதாக அற்புதமான காட்சிள் செல்கிறது. ஒரு கட்டத்தில் தன் அக்காவைக் கண்டு அழைக்கிற போது அவளும் அவளருகில் இருக்கிறவரும் இவனைத்தவிர்க்கிறார்கள். அதிர்ச்சி அவனுக்குள் உறைகிறது. அப்பொழுது “கடலெ..“ என்கிற சொற்களுடன் கதை முடிகிறது. கடல். கடலை, ஒற்றைச் செருப்பு, ரத்த உறவு, வாழ்க்கை, பிரிவு, துரோகம், உள்பட எத்தனை யோ விதமாக மனம் நினைத்து அதிர்ச்சியடைகிறது. இந்தக் கதைக்கு அவர் மாநில அளவிலான விருது பெற்றிருப்பது தகுதியாக உள்ளது.
       தலைப்புக்கதை. தன் பிரியத்திற்குரிய வீட்டுச் செல்லப் பிராணிகளைச் சமயத்தில் மனிதன் கொல்ல வேண்டிய நிர்பந்தங்கள். அல்லது சமயச் சடங்குகளுக்கு ஆட்படுதல்களால் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நேருகிற மனவருத்தங்களை அழகாக நுட்பமாகப் பேசுகிற கதை. செல்லமாக வளர்த்த ஆடுதான் தங்கள் குலதெய்வ கோவிலில் வெட்டப்படப் போய் அது சாமியாகி சாமியிடம் போயிருக்கிறது என்று குழந்தைகளின் கேள்விகளுக்குச் சமாதானம் சொல்வது என்பது இந்த சமூகத்தின் துக்ககரமான மதச்சடங்குகளை நாமும் எதுவும் செய்யமால்தான் இருக்கிறோம் இந்தக்கதையை வாசிக்கும்போது எனக்கு சில வருடங்களுக்கும் முன்பாக ஆடு கோழிகள் வெட்டத்தடை வித்த அரசாங்கத்தை நினைத்து மனம் அன்றைய நிலையில் பாராட்டியது. இன்றும் கூட திருநெல்வேலி மாவட்டம் ஈரோடு மாவட்டம் போன்ற இடங்களில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் சரிமாரியாக வெட்டப்படுவதை பெருங்கொண்டாட்டமாக நடத்திவருகிறோம். ஆடுகள் மனிதனின் உணவுதான் என்றாலும் அதை கொலைகளாக நிகழ்த்தித்தின்பதில் என்ன லாபம்.
        கதையின் ஜீவனாக இந்த கருத்தோட்டம் வளர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்கள் புலி சிங்கம்,சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அச்சத்திற்காக த்தான் கடவுள் தம்மைப்பாதுகாக்கவேண்டுமென்று பலியிடுதலைக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
        இதில் அவர் மூன்றாவது துளுக்கு என்பதற்கான விளக்கம் இல்லை. முதல் துளுக்கு என்பது கடவுளுக்காக ஆடு தன் மகிழ்ச்சியை தன்னை நீங்கள் வெட்டிக் கொள்ளுங்கள் எனும் அனுமதியைத் தருவது. இரண்டாவது துளுக்கு என்பது அவர்களின் குலத்திற்கு. அந்த இனக்குழுவின் தலைமைக்கு. மூன்றாவது துளுக்கு என்பது அந்தக் குடும்பத்தின் நலவிருத்திக்கானது ஆகும். இந்த விளக்கத்தை எதிர்பார்த்திருந்தேன். வாசகர்களுக்காக இந்த விளக்கம். மறுபடி துளுக்கு துலுக்கு என்பதன் சர்ச்சை முகநூலில் நடந்தது.
        பொதுவாக குலவையிடுவதிலும் “ல“ வருகிறது. அதுபோலவே ஆடுகள் சிலிர்த்துக்கொள்கிறது. இதிலும் “ல“வருகிறது. சிலிர்க்கிற பொழுது கிலகிலகில்ல்ல் ல்ல்ல்ல்லுலுலுலு..என்பார்கள் மக்களும் பக்தர்களும். தமிழ் ஒலிப்பு மாத்திரைகளில் “ள“ விற்கு அதிமாக உச்சரிப்பு மாத்திரைகள் ஒலிக்கிறது “ல“ விற்கு குறைந்த அளவுதான். ள வில் துள்ளுதல் துள்ளல். துள்ளு என்பதில்தான் வரும். இருந்தாலும் மகுடேசுவரன் போன்ற நண்பர்கள் அண்ணன் அவைநாயகனும் ஒப்புக் கொண்டுவிட்டதாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். என் தமிழ்ப்பிழையறிவின் படி நான் துலுக்கு என்பதைத்தான் ஏற்றும் எழுதியும்வருகிறேன்.
அடுத்த கதை மறுவாசிப்பு. மின்மாயனங்கள் தோன்றிவருகிற வழக்கம் பற்றிய கதைகள். மனித நாகரீகம் ஆற்று ஓரங்களில் இறந்த மனிதர்களுக்காக இறுதிச் சடங்குகளைச் செய்வது ஆன்மாவிற்கான புன்னியமாக கருதப்படுகிற காலத்தை மின்மயானமும் நவீன வாழ்க்கையும் மாற்றிவிட்டதும் ஆறுகள் காணாமல் போனதையும் நினைவுட்டுகிற கதை. தாய் வழி உறவுகளும் தந்தை வழி உறவுகளும் தங்கள் கடமைகளையாற்றுகிற சடங்குகளைச் சொல்கிற சிறந்த கதை. பெரிய அளவிலான உரையாடல்கள் விவரணைகள் ஏதுமின்றி எளிய வார்த்தைகள்.
       நவீன சிறுகதை தளம் என்னும் பிரிவைத்தான் ஏற்றுக் கொள்வேன் என்று அடம்பிடிக்கிற டி.இரஜேந்தர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் டி. ஆரை விடவும் காமெடியாகவே இருக்கும். அவர்களுக்கு “பல்லி வேட்டை,பூஜ்யத்தின் கீழ் பத்தாயிரம் வாசனை அல்லது வடிவக்கொலை வழக்கு.. வனசஞ்சாரக் கதைகள் யெஸ் இராமகிருஷ்ணனும் நானும். முக்கியமான கதைகள். மயுரா ரத்தினசாமியின் நவீன வாசிப்பு எழுத்தின் பலம் அறியக்கூடிய கதைகளாகும். குறிப்பாக 2000-2005 வரையிலும் நவீனம் என்ன என்பதை அறியாமல் எழுத வந்த பல படைப்பாளர்களின் கொத்துபுரோட்டா நவீன எழுத்துகளை பகடிசெய்கிற கதைகளாகவும் இந்தக் கதைகள் அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்தக் காலத்திலு மேகூட தீவிர இலக்கிய இதழ்களில் வெளியாகிற பல கதைகள் அப்படித்தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனை கதைகளைக் கேட்டுப்பெறுகிற நிலை வருகிறபொழுது அந்தக்கதைகளை சம்பந்தப்பட்ட பதிப்பாளரும் சிறுபத்திரிக்கை ஆசிரியரும் வெளியிட்டு விடுகிறார்கள். இந்த நிலைக் கதைகளையும் அந்தக்கதாசிரியர்களின் அமைப்புகளையும் விமர்சனம் செய்கிற கதைகள். அதிலும் மயுரா சில சிறுகதைகளுக்கான கண்ணியத்தை காட்டி எழுதியிருக்கிறார்.
     பிறகு.இது நம்ம ஜாதி,(குமுதம்- இலக்கியச் சிந்தனை விருது) ஜோசப் என்பது வினைச்சொல் ( ஆனந்த விகடன்) பூட்டைத்தொலைத்துவிடு, பச்கைக்கண்ணாடி, சுமைதாங்கிகல், காதல் அல்ஜீப்ரா (ஆனந்த விகடன்) இந்தக்கதைகள் 1999-2000 வெளியான இலக்கியத்தரம் கொண்ட சிறுகதைகள். இக்கதைகள் அந்த நாட்களின் சிறுகதைகளின் தரத்தையும் காலத்தையும் நினைவுட்டுகிறது. சமகாலத்தில் ஆனந்த விகடன் சிறுகதை ஒன்றுக்கும் அதுவும் நான்கு பக்கங்களாக குறைத்துவிட்டதும் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது அழுத்தமான இலக்கியத்தரமிக்க கதைகள் இரண்டும் வெகுசன வாசிப்பிற்கான சுவராசியமிக்க கதைகள் இரண்டும் ஒருபக்கச் சிறுகதையும் பிரசுரமாகும்.
       எல்லாம் போயிற்று. ஒருவகையில் தீவிர இலக்கியம் பேசுகிறவர்கள் கூட விஜய் தொலைக்காட்சி மற்றும ஆனந்தவிகடன்.தினமலர்,தமிழ் இந்து நாளிதழ் போன்றவை சொல்கிறவைதான் மிகச்சிறந்த இலக்கியத்தரம் என்று உணர்த்த துவங்கியிருக்கிறார்கள். இலக்கிய இதழ்களாக வந்த கலைமகள்,அமுதசுரபி,கல்கி. போன்ற இதழ்கள் முழுக்க பக்தி சோதிடம் வாஸ்த்து என்று திரும்பிவிட்டது. மயுரா இந்தப் பதினைந்து ஆண்டு இலக்கியத் தரத்தின் அழித்தொழிப்பு நிகழ்வுகளைக் கூட நினைவுட்டுகிறார். இந்தச் சிறுகதைகளின் வாயிலாக.. எப்படி நல்ல அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டு அதன் சந்ததிகள் திரும்பித் தங்கள் குடும்ப வாழ்விற்கு விரட்ப்பட்டார்களோ அப்படித்தான் நல்ல இலக்கிய வாதிகள் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டதை நினைவுட்டுகிறார். மயுரா ரத்தினசாமி எழுந்து நின்றிருக்கிறார். அவர் எழுத்திற்கு அந்த வலிமையுண்டு.
          இந்த நூலுக்குள் நுழைவதற்கு முன்பாக சில விளக்கங்கள் தரவேண்டியிருக்கிறது. சமீபத்தில் ஒரு நண்பரின் படைப்பு பற்றியெழுதியிருந்தேன். அவர் அந்த அறிமுகத்தை நான் எழுதியது பற்றியெதுவும் வெளியில் காட்டிக் கொள்ளவேயில்லை. ஒரு வேளை அவர் மறந்திருப்பார் என்னவோ என்று மறுபடியும் அவர் அறியும் வகையில் சில காரியங்கள் செய்தேன். பிறகும் அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை.
      நான் இந்த வழக்கை மறந்துவிட்டேன். இதை ஒட்டிய வேறோரு இடத்தில் வேறொரு நண்பர் “நீங்கள் எழுதுகிற சில அறிமுக மற்றும் விமர்சனங்களை வாசித்தேன். நீங்கள் எல்லாவற்றையும் பாராட்டியே எழுதுகிறீர்கள்..அதனால் உங்கள் மதிப்புரைகள் அறிமுக உரைகள் மீது எனக்கு பெரியதாக எந்ந வசீகரமும் இல்லையென்றார்..“ வெளிப்படையாக..
       பிறகு வேறொரு தளத்தில் வேறொரு நண்பர் பிளாக்கில் உங்கள் விமர்சனங்கள் வந்தால் வாசிப்பதிலிருந்து தவிர்த்து விடுவேன் காரணம் நீங்கள் அந்த நூலிலிருந்து விலகி வெகுதூரம் போய் உங்கள் அனுபவங்களைச சொல்கிறீர்கள் படைப்புகள் குறித்து விரிவான ஆழமாக முழுமையாகச் சொல்வதில்லை அதனால் வாசிப்பதில்லை. நான் அவருக்கு மட்டும் பதில் சொன்னேன்.
“நண்பா..நீங்கள் குறிப்பிடுவது போல நூலைப்பற்றிய எல்லா விபரங்களையும் அந்த நூலின் பக்கங்களை விடவும் எழுதிட முடியும் பிறகு நீங்கள் அந்த நூல் பற்றியும் அறிய என்ன உள்ளது. அந்த நூலை நீங்கள் வாங்கவா போகிறீர்கள்..ஏற்கெனவே டுமீல்களும் டுபாக்கூர்களாகவே நீங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறீர்கள்...ஒரு இடத்தையும் பிடித்துவிட்டீர்கள்.. பிறகெப்படி நண்பா எழுதுவது என்றேன்..“ பதிலுக்கு அவர் “நண்பா உங்கள் விமர்சனத்தில் கடுமையான கறாரான அவதானிப்புகளும் கூறுகளும் இல்லை“ என்றார். அதுதான் விமர்சனமாம்.. அப்படியானால் இதுநாள் வரையிலும் பாராட்டுவது என்பது தமிழ் விமர்சன மரபில் இல்லவேயில்லையென்ற புதிய விளக்கத்தை அவர் அளித்தார். அந்த நண்பர்களின் அறிதல்கள் நம் வரும் நாட்களின்  உரையாடல்களில் அறியலாம்.
மயுரா ரத்தினசாமியிடம் இப்படியான கதைகளில் இன்னும் இருபது கதைகளாகவாவது நிச்சயம் இருக்க வாய்ப்புண்டு. அந்தக்கதைகளையும் விரைவில் தொகுக்க வேண்டும். ஏனெனில் கழிந்தகாலத்தின் மனசாட்சிகளில் நீங்களும் ஒருவர். எழுத தெரியாதவர்கள்தான் நம்மை நிராகரிக்கிறார்கள் என்பதை பொன் இளவேனில் அடிக்கடி ஞாபகப்படுத்துவார். அப்படியானவர்கள் இலக்கியத் தரத்தை மிகவும் உயர்த்திப்பிடிப்பார்கள். அப்படியான தரத்தில்தான் எழுதுவார்களாம் இல்லையென்றால் எழுத மாட்டார்களாம். அட அதுதான் என்ன இலக்கியத் தரமென்றால் அதையும் குறிப்பிடத்தெரியாது. படைப்பாளியையே மதிக்காத போது பிறகு அறிமுக உரைகளை அவர்கள் எங்கே மதிக்கப் போகிறார்கள்.
     மயுரா ரத்தினசாமி போன்ற நெடுங்கால மரபு கொண்ட தீவிர இலக்கியவாதிகள் மீண்டும் தங்கள் படைப்புகளைக் கொண்டுவருவதும் எழுதும் பொழுதுதான் உருவப்போலிகளையும் சமூகப் போலிகளையும் ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சங்களையும் களையெடுக்க முடியும்.
சமீபத்தில் ஒரு டிடர்ஜெண்ட் இலக்கியவாதியுடன் உரையாடினோம். என்னைப்பார்த்து அவர் என்ன இப்படிக் கசகசன்னு ஒரே பாராட்டுரைகளா பக்கம்பக்கமா எழுதறீங்க..இதைய புத்தாண்டுல கொறைச்சிக்கிங்க  என்றார்
“எங்கே நீங்கள் ஒரு நூல் குறித்து ஒரு பக்க அளவில் பாராட்டி எழுதுங்கள் பார்க்கலாம்..வாசிக்கலாம்..“என்றார் அருகிலிருந்த பொன்இளவேனில்.
அவர் “ஹிஹி ஹி...“என்றார்.
வெளியீடு
மூன்றாவது துளுக்கு—விலை-ரு-130-
மயுரா ரத்தினசாமி சிறுகதைகள்
எதிர் வெளியீடு
96 நியு ஸ்கிம் ரோடு
பொள்ளாச்சி-04259 226012-98650 05084

வெள்ளி, 2 ஜனவரி, 2015

vishnupuram ilakkia vattam vizha pathivugal


“ஏலேய் வீரண்ணா...அந்தக் கன்னுக்குட்டிய அவுத்து வுட்ரா..போய் சீர் செஞ்சிட்டு வரட்டும்....“

விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கு விழா..2014

கோவை-27.12.2014

 

விழாவிற்குக் குறித்த நேரத்தில் செல்லமுடியவில்லை. பேருந்துகள் ஓடாத நிலை. அவர்களுக்கு ஆதரவான பேராட்டங்கள் என போக்குவரத்து நெரிசல். சாலைச் சித்திரங்கள் முழுக்க ஒவ்வொரு பேருந்துகளாக, வாகனங்களாக மறைகிறது. பழையபடி அவிநாசி சாலை மரங்களடர்ந்த வெளியாகிறது. கட்டிடங்கள் இல்லை. குடில்கள். சோலைகள், பறவைகளின் மாலைக் கூச்சல்.

         பொன் இளவேனில் வண்டியை அவிநாசி சாலையைத் தொடுவதற்கு சிரமப்பட்டார். சாலை முழுக்க வானரங்கள். சாரட் வண்டிகளில் வந்தவர்கள் நடு பாதையில் குதித்து நடந்து ஓடத் துவங்குகிறார்கள். செந்நாய்கள். சிறு சிறு குரங்குகள் புற்றீசல்கள் போல மனிதர்கள் தலைமேல் தாவி அரை ஆகாசத்திற்குக் குதிக்கிறது. அலைபேசியில் குப்புசாமிநாயுடு மருத்துவமனை பழையுர் சித்தாப்புதூர் வரையிலுமே கழுதைகள் சாலைகளை மறித்தபடியிருக்கிறதாம். கழுதைகளின் கனைப்பு விண் அதிர்கிறது. ரவி, செந்தில், யாழி உள்பட நண்பர்களுக்கு அழைத்தால் அவர்களும் நெரிசலில் மாட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கழுதைகள் அணிந்திருக்கிற நேர்த்தியான உடையலங் காரங்கள் பார்க் அவென்யு,லீ, பாண்டலூன், க்ரோக்டைல் சீலாக் போன்ற உயர்தரமான உடைகளுடன் கழுதைகள் அணிவகுப்பு பொதுமக்களை வேடிக்கை பார்க்க வைத்திருக்கிறது.

       பாவம் ஜென்டை மேளக்காரர்கள் எங்குதான் நின்று வாசிப்பார்கள். திடுமங்கள் காய்ச்சிக் கொண்டிருந்த சங்க காலப்புலவர்கள் காய்ந்த நிலை போதும் என்று வாசிக்க ஆரம்பித்தார்கள். இளவேனில் என்னைக கண்டபடி ஏசினார். போச்சு டாக்குமெண்ட்ரிய மிஸ் பண்றோம் என்றார். அதற்குள் மணி பள்ளி வளாகத்தை அனுமன் தலைமையிலான வானரக்கூட்டம் பெயர்த்துக் கொள்ளத்துவங்க..அனுமன் இதெல்லாம் நான் செய்ய் வேண்டிய வேலை உன்ற வேலையென்னவோ அதைப் பார் என்கிறது. காவல்துறையினரிடம் எங்கள் அடையாள அட்டையைக் காண்பிக்க அவர்கள் பாதுகாப்பான வழியில் உள்ளே செல்ல அனுமதித்தார்கள். அரங்க கதவு திறந்த போதும் பிறகு நண்பர்கள் தென்படுகிறார்களா என்று கவனித்தபோது ஜென்டை மேளமும் வானரங்களும் கழுதைகளின் கணைப்பையும் கேட்க முடியவில்லை. யாதும் இயல்புக்குத் திரும்பியிருக்கிறது.

       முல்லையும் பவளமல்லியும் அணிந்த மங்கைகள் அரங்கிற்கு அப்பாலிருக்கிற கிணற்றடியில் நீர் மொள்ளுகிற சத்தம். குதிரைவீரர்கள் ஓய்வில் குறட்டை. கொம்பு வைத்துக்கட்டிய தலைப்பாகை சமையல்கார ர்கள் அக்காரவடிசலும் வெண்பொங்கலும் கிழவரம் சமைக்கிற மணம்.மிருதங்க வித்வான்கள் பட்டு அங்க வஸ்திரம் மணக்க ஜூனியர் பாலையாவின் பின்னால் வரிசையாக ஓடுகிறார்கள்.

கார் ஹார்ன் அடிக்கவும் அந்த வெளிச்சத்தில் அந்தச் சித்திரங்கள் காணாமலாகிறது. அரங்கில் இருக்கைகள் மேல்வரிசையில் மட்டும் காலியாக இருக்க அமர்ந்தோம். மின்சாரம் பளீரென்று மின்னியதான அழகு. இரண்டாவது முறையாக பெண்கள் இல்லாத மேடை. கோவை இலக்கியச் சந்திப்பிற்கு வராத பல நண்பர்கள் அங்கு வந்திருந்தார்கள். சரிதான் முழு ஞாயிற்றுக்கிழமையை இலக்கியத்திற்கு ஒதுக்க முடியுமா என்ன. கறியும் சோறுமா போடப்ப்போகிறார்கள். மணி பள்ளியில் தேநீர் கூட இல்லை. எனக்கு வெளியில் கண்ட சித்திரங்களின் மீது கவனமிருக்க இளவேனிலிடம் கொஞ்சம் வெளியில் சென்று வரலாமா என்றேன். அவர் என்னைத்திட்டினார்.

       நாங்கள் போனபோது நிகழ்வுகள் சில முடிந்து விட்டிருக்கிறது. சரியாக  டி.பி.ராஜீவன் பேச அழைக்கப்பட்டார். அவர் சாருவைப் போல இருக்கறார் என்று சாரு இல்லாத குறை நிவர்த்தியானது. சாருவை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது சிரமம்தான். அவருடைய செல்ல நாய்களை அவர் பிரிவதேயில்லையாம்.  நிகழ்ச்சி நடத்துபவர்களின் பாடு திண்டாட்டம்தான். நான் முதலில் சாருவோ என்று பயந்தேன். இரண்டு நாள் அரங்கு கூட்டங்களில் நகைச்சுவை ததும்பத் ததும்ப இலக்கிய உரைகளை நிகழ்த்தியதாக நண்பர் செல்வேந்திரன் அறிமுகம் செய்தார். அவர் மலையாளத்தில் பேசுவார் என்று நினைத்த மாத்திரம் ஆங்கிலத்தில் பேசினார். மலையாளத்திலேயே பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் ராஜீவ்காந்தி ஆங்கிலம் என்று ஒரு வகையை ராஜீவ் காந்திதான் அறிமுகம் செய்தார். 91ல் அவர் படுகொலை செய்வதற்கு முன்பு அவர் தமிழ் மண்ணில் பேசிய ஆங்கிலம் குழந்தைகளுக்குக் கூட புரிவதாக அமைந்தது. இன்று மார்க்கெட் துறைகளில் ராஜீவ் ஆங்கிலம்தான் கொடிகட்டிப்பறக்கிறது. ஆனால் அது யாருக்கும் தெரியாது. அப்படித்தான் பல தெரியாமைகளால் இந்த நாட்டின் மேன்மை மிகமிக பின் தங்கிக் கொண்டே போகிறது.

கோவைதான் கேரளா. கேராளதான் கோவை. அவருக்கு வயலினில் ஆர்வம் இருக்கும் போல. ஜெ அவ்வப்பொழுது நண்பர்களிடம் அரங்கத்தைக் கூட்டத்தைக் கட்டுபடுத்துகிற துண்டுச்சீட்டுகளை எழுதிக் கொண்டிருக்க அதை இளம் வாசகரும் விஷ்ணுபுர இலக்கியவட்ட நண்பர் செந்தில்குமார்தேவன் செல்வேந்திரனிடம் பரிமாறினார்.

        இலக்கியத்தின் அழகு பேச்சில் தெரியும் என்பது போல வயலின் கொஞ்ச நேரத்தில் தூர்தர்சனின் துக்க வயலின் ஆனது. துண்டுச்சீட்டு போனது. முடித்துக் கொண்டார். ஜெ அவர் முகம் பார்க்கவில்லை அவரும் பார்க்கவில்லை. வசந்தபாலன் வந்தபாலகன் போல பேசினார். அது ஒரு ஃபேசன் போல. நல்ல இயக்குநர் என்றால் அப்படித்தான் பேசவேண்டுமொ..ஜெ கண்களின் வழியாக இந்த உலகத்தைப்பார்க்கிறேன் என்றார். மிக விரைவில் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

     பிறகு புவிரயசு வந்தார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களை வெகுவாகப்பாராட்டினார். தனக்கும் தன் கவிதை கொள்கைகளுக்கும் நேரெதிரான களம் அது. ஆனால் கடந்த இருநாட்களாக நடந்த உரையாடல்கள் தனக்குப்புதிய இளைஞர்களின் வாசிப்பு முறைகள் ஆச்சர்யம் தருவதாகச் சொன்னார். கமல், ஞானக் கூத்தன் தங்கள் மூவருக்குமான நட்பு குறித்துப் பேசினார். அமரகாவியம் எனும் திரைப்படத்திற்கு வசன கவிதைகளாகவே இருவரும் எழுதியதை ஞாபகப்படுத் தினார். சாகித்ய அகாடமி குறித்த அவருடைய செய்திகள் ஆச்சர்ய்ப்படவைத்தது. அவருடைய குரலும் அவருடைய கவிதைகள் போலவே ஆண்மையும் கொள்கையும் கொண்டதாக அமைந்தது. சென்ற விழாவில் விழாவைக் கோவையில் நடத்திக் கொண்டு கோவையிலிருந்து யாரையும் விழாவிற்கு அழைக்கவில்லையென்பதை நான் சுட்டியிருந்தேன். இந்த முறை அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக புவியரசு அவர்களை அழைத்தது பாராட்டப்ப்படவேண்டியது.

        காலையில் கோவை இலக்கியச் சந்திப்பிறகு வந்திருந்த பலரிடம் மாலையில் உள்ள இந்தநிகழ்வை ஞாபகப்படுத்தியபோது அவர்களிடமிருந்த வந்த பதில்களை இங்கு பதிவிடுவது சரியல்ல. இதே நேரத்தில் ஓசை சூழல் சந்திப்பு நடந்து கொண்டிருந்தபடியால் அரங்கு கொஞ்சம் டல் அடித்தது. எதிர்பார்த்தளவு மலையாள சமூக மக்கள் விழாவிற்கு வரவில்லை. அவர்களுடைய கார்கள் எனக்குத் தெரியும். மணி பள்ளிக்கு வழக்கமாக வருகிற பிராமண வாசகர்கள் வருகையும் குறைந்து காணப்பட்டது. இடதுசாரி ஆதரவாளர்கள், தமிழ் இனஉணர்வாளர்கள், மார்க்சிய லெனினியத் தோழர்கள். தமிழ் இலக்கிய ஆதரவாளர்கள் பெரியார் திராவிடக் கழகத்தார்கள் என்பதாக வருகை குறைந்த காரணம் தெரியவில்லை.ஒரு வேளை ஜெ..வின் அதிரடிகள் சமீபத்தில் எதுவும் சோபிக்கவில்லையோ என்னவோ. வழக்கமாக கோவையில் இயங்குகிற மலையாள சமூக அமைப்புகளிலிருந்து நிறைய பேர் கலந்து கொள்வார்கள். தமிழ் மலையாள வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்கிறவர்கள் எழுபது சதவிகிதம் ஆப்சென்ட். அவர் அதிரடியாக ஆட நினைக்கும் போது பேருந்துகளின் ஸ்டிரைக் மாதிரி ஏதாவது வந்து கெடுத்துவிடுகிறது. இயல்விருதின் மரணம் என்றெழுது அந்த விருதும் கிடைத்துப் போக பொசுக் என ஆகிவிட்டது. சாகித்ய அகாடமிக்கு ஜெ..வின் நூல்கள் எதுவும் வரவேயில்லையென்று புவியரசு போட்டுடைக்க அரங்கம் ஒரு கணம் அதிர்ச்சியடைந்து போனது.

      கோவை இலக்கியச் சந்திப்பின் தொடர் பங்கேற்பாளர்கள் தவறாமல் கலந்து கொண்டிருந்தார்கள்.

          சா.கந்தசாமி தங்களின் பழம் காலத்தின் ஞாபகங்களைப் பேசினார். கூத்துப்பட்டறை முத்துசாமி உள்பட பல நண்பர்களை நினைவு கூர்ந்தார். காலம் என்பது ஒரு வகைதான். நாமாக உருவாக்கியது. குறிப்புணர்த்துவது பற்றியும் படிமங்கள் அடுக்கப்படுகிற கவிதைக் காட்சிகளையும் அழகாகச் சொன்னார்.

  பாவண்ணன் உரைதான் மிக முக்கியமானதாகவே அமைந்த நிகழ்வு என்று சொல்லாம். வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்த ஞானக்கூத்தனின் உவமைகளைச் சொன்னார் கர்ப்பிணியின் வயிறு. நாகரீகம் என்பதாகத் தொடங்கி அவர் உரை மனித உயிர்களின் பலிகள் பற்றியதாக தொடர்ந்தது. நா தழு தழுத்த குரலில் பல எண்ணற்ற மனித பலிகளை அவர் அடையாளம் காட்டினார். ஞானக்கூத்தனின் கவிதைகளில் உள்ள சமூக உணர்வுகளைச் சுட்டிக்காட்டினார். என் சிற்ற றிவிற்குட்பட்டவகையில் ஞானக்கூத்தனின் கவிதைகளில் சமூக உணர்வு இருக்கிற என்று பேசப்பட்ட உரை இதுவாகத்தான் இருக்கும். ஒரு மார்க்சீயர் பேசியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியாக அமைந்து போனது. அரங்கிற்கு அது ஒப்பாரியாகத் தெரிந்தது போல அறியமுடிந்தது.

         கவிஞர் இசை பேசவந்தபோது ஞானக் கூத்தனின் குசு கவிதையிலிருந்து தொடங்கி குசுவின் பரிணாமவளர்ச்சியையும் அதன் வளர்சிதை மாற்றங்கள் பற்றிய ஞானக்கூத்தன் மீதான கட்டுரை கம் கவிதையை வாசித்தார். பிறகு அது தனது கவிதையில் ஒன்று என்றார். ஜெவும் அரங்கமும் நெளிகிறது. இரண்டு நாள் நெருக்கமான அறைகளில் சரியாகச் செரிமானம் ஆகாத பங்கேற்பாளர்கள் தங்களை மறந்து குசுமலை பொழிந்து கொண்டனர். இதுதான் சமயம் என்று அரங்கம் குசுமாலை பொழிந்து மாலை சாற்றியது. சரஸ்வதி சபதம் படத்தில் ஊமையாக இருந்த சிவாஜிக்கு கடவுள் கலைவாணி தோன்றி பேசவும் பாடவும் கவிதைகள் புனையவும் வரமளித்து அவரை வித்யாபதியாக மாற்றிதை தந்தை வந்து ஆச்சர்யம் கொண்டு பெருமிதம் கொண்டழுத போது

“என் மகன் வித்யாபதியா..“

“ஆம் அப்பா உங்கள் மகன் வித்யாபதிதான்..இதுநாளும் கலைமகளுக்குப் பூமாலை சூட்டிக்கொண்டிருந்த நான் இன்று பாமாலை சூட்டினேன் அப்பா..“ என்றது போல அங்கத கவிஞர் பகடி வித்தைக்காரர் ஞானக் கூத்தனுக்கு குசுமாலை அணிவித்து வாழ்த்தினார் இசை. அங்கத குசுக்கள் சூழ ஞானக்கூத்தனின் மேகங்களாக நிறைகிறது. இசையைத் தொடர்ந்து பார்வையாளர்களும் தங்கள் குசுக்களின் மூலமாக வாழ்த்தினார்கள். கெட்டிமேளத்தின் பொழுது நிலவும் பரபரப்பும் உற்சாகம் நிகழ்வதானது. இசையின் இந்த தூஸ்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத ஜெ. மிகவும் பதற்றமடைந்தார். அவருடைய ஸ்டம்புகள் பறக்கிறது.

இந்தியன் படத்தில்தான்  முதலில் குசு பற்றிய அறிமுகம் வருகிறது. படத்தில் சுஜாதாவால் எழுதப்படாத வசனம். கவுண்டமணி டைம்மிங் சென்சில் ஸ்பார்ட்டில் பேசினாராம். செந்திலை பன்னி செல்வம் என்று அழைக்கவும் செந்தில் ர்ர் ஏன் விட்டே என்று கேட்க கவுண்டமணி சுஜாதா எழுதாத வசனமாக பின்புறம் காட்டிக்கொண்டு காட்சியில் நிற்கிறவர்களை பெண்ணைப் பார்த்து கவுண்டமணி ஏங்க நீங்க ர்ர் விட்டீங்களா என்று கேட்டுவிட்டு அவங்க ர்ர் விடலைங்களாமா என்பார். செந்தில் யோவ் நான் அந்த ர்ர் ர சொல்லலையா.. என்று மறுபடியும் சத்தமிடுவார்.

இந்தப் படம் வெற்றியடைந்த பிறகு தொடர்ச்சியாக தமிழ் சினிமா அன்றிலிருந்து குசுவைக் கடைப்பிடித்தது. தமிழ்சினிமா வெற்றியடைந்த படங்களில் வருகிற காட்சிகளை அப்படியே பயண்படுத்துவதை நாம் அறிந்துள்ளோம். தனுசும் செல்வராவகனும் அந்த வழியைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள். தங்கை கற்பழிப்பு, லாரியில் அடிபடுவது, தாய் கொல்லப்படுவது. நண்பன் சாவது. கண்ணாடிகள் உடைவது. பஸ்கள் வந்து நிற்பது. குழந்தைகளைத் தொங்கவிடுவது. மெயின் ஆப் செய்வது. கதாநாயகிகள் குளிப்பது. காமெடியன் ஒன்னுக்குப் போவது. வயிறு பேதியாகி கழிவறையில் அமர்வது. தேநீர் கண்ணாடி டம்பளரில் சாப்பிடுவது இப்படியாக எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்வது போல குசுவும் சேர்க்கப்படத் துவங்கியது. நவீன கவிஞர்கள் மறந்த சந்தமும் ஓசை நயமும் செப்பலோசையையும் காமெடியர்களுக்கு வசனம் எழுதுகிற காமெடி டிராக் எழுதுகிற டைமிங்க் ரைமிங் ஜோக்குகளில் காண்கிற கேவலத்தைக் கண்டித்து ஜெ தன் வாழ்நாளில் ஒரு கட்டுரையும் எழுதவில்லை. அல்லது கவிதை விமர்சகர்களும் எழுதவில்லை. ஞானக் சுத்தன், தேவதேவன், பிரபஞ்சன் உள்பட யாரும் எழுதவில்லை. கண்டிக்கவில்லை.

ஞானக் கூத்தன் கவிதைகளில் சிறப்பம்சம் நிறைந்த கவிதைகளை எடுத்தாளாமல் குசு கவிதையை எடுத்துக் கொண்ட காரணம் அங்கத பகடிக் கவிதைக்காரனுக்குள்ள பிரச்சனைகளைச் சபை முன் வைத்தார். ஒரு வகையில் ஞானக்கூத்தனும் அதேயளவு அறிந்து வைத்திருக்கிறார் என்று கருதினாரோ என்னவோ. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் மாட்ச் ஆடுகிற வாய்ப்பு அமைந்த மகிழ்ச்சியில் ஜெ வின் பந்துகளை நொறுக்கியதை அரங்கப் பார்வையாளர்கள் அம்பயரையும் காலரியையும் பேந்தப் பேந்தப் பார்க்கத் துவங்கினார்கள்.

ஞானக் கூத்தன் தர்மசங்கடத்துடன் தலையைக் கவிழந்து கொள்ள கார்த்திக் “இப்ப அவர் கவிதையப் பேசறாரே அது உங்களப்பாத்துதா..இப்ப அவர் குசுவப் பத்திச் சொல்றாரே..அது உங்க கவிதையைப் பத்திதான்..இப்ப நான் குசு விட்டனே..அது கூட உங்களுக்காகத்தான்..“ என்றார் பிறகு ஞானக் கூத்தன் கவனிக்க ஆரம்பித்தார்.

முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜய் சேதுபதி என்னாச்சி..என்றார். காந்திமதி எலே வீரண்ணா..என ஆரம்பிக்கிறார். தேவதேவன் எழுந்து மூனாவது துலுக்கு துலுக்கினார். நான்கைந்து காளைகள் அரங்கினுள் பாய்கிறது. நளினிகாந்த் உடனடியாக கதவுகள் திறந்துவிடுகிறார். ராகவேந்திரா லாரன்ஸ் தனக்கு  முன்னால் வைக்கப்பட்டிருந்த நீலம் பச்சை சிவப்பு கருப்பு பக்கெட்டுகளில் முறையே தேள்கள். சிறுபாம்புகள், பல்லிகள், தவளைகள் வைத்திருக்கிறார். ஒவ்வொருவர் பேசி முடித்த பிறகும் கொஞ்சம் ஜந்துகளை எடுத்துத் தன் பனியனில் விட்டுக் கொண்டு மேடையின் முன்னால் வடது புறமிருந்து தென் புறத்திற்கு வயிற்றுக் கடுப்பு ரயில் நடனமாடி வந்து நிற்பதும் சிவமணி டிரம்ஸ் குச்சிகளால் கதவுகள் நாற்காலிகள் கைப்பிடிக் கம்பிகளில் வாசித்து முடிக்கிறார். ஒரு சமயம் உணர்ச்சிவயப்பட்டு கன்ந்சாமியில் தலையில் வாசிக்க மேடைக்கு ஓடவும் தடுத்து நிறுத்தப்படுகிறார்.

         ஜெ..தன் உரைக்கு வந்தவர் மேடையில் அனைவரைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசும் போது பதற்றமடைந்தார். அவருடைய இரண்டு வகையான குரல்களான பெங்களுர் ரமணியம்மாள் மற்றும் பித்துக்குளி முருகதாஸ் குரல்கள் தழுதழுக்கப் பேசினார். நக்ஸ்லைட், ஜென், பஞ்சதந்திரம், சார்லிசாப்லின் என்று ஏற்கெனவே பத்து ருபாய் ரயிலடி புத்தகத் துணுக்குளை நினைவுட்டினார். நிகழ்ச்சி ஒன்பதரை மணி வரைபோகும் என்று இருந்த நேரத்தில் எட்டுமணிக்கு நிகழ்ச்சிகள் முடிந்து போனது. பதினாராம் நாள் காரியங்கள் நடப்பது போன்ற ஈனஸ்வரத்தில் குசுக்கள் நிரம்பிய அரங்கம் தன்னை விடுவித்துக் கொள்ள முனைகிறது. பார்வையாளர்கள் சிலர் தெறிந்து வெளியே வந்தார்கள். தன் பதற்றத்தில் புவியரசு பற்றிக்குறிப்பிட மறந்த போது செல்வேந்திரன் நினைவுட்டினார். புவியரசு மற்றும் ஞானக் கூத்தன் நட்பும் இருவேறு கவிதை தளங்களை அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு முன்பு வரையிலும் இடைவிடாது கவிதை ஒன்றே ஒன்றுதான் என்று நிறுவி வந்தார். கவிதை குறித்த ஆர்டிஓ நேம் பிளேட்கள் எவ்வளவு வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை.

            நானும் இளவேனிலும் நண்பர்களும் காற்றாட வெளியில் வந்தோம். மணி பள்ளி நார்மலாகியிருந்தது. அருகிலிருக்கிற இந்திய விமானப்படையைச் சார்ந்த குதிரைகளுக்கான நடைபயிற்சியும் பறக்கும் பயிற்சியும் நிகழ்கிறது. குளம்பொலிகள் அற்புதமாக கேட்கிறது.

எந்த சித்திரங்களும் இல்லை. வயதான பிராமணத்தம்பதிகள் அரங்கிற்கு அருகிலிருக்கிற பெருமாள் சன்னிதிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து மார்கழியின் ஒலி பெருக்கிகள் கேட்கிறது. அங்கதம் பேசுவதும் எழுதுவதும் பகடி செய்வதும் காலங்காலமாக மறுக்கப்பட்ட சூத்திரர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்கள். எப்சியும் பிசியும் எம் பி சி கொஞ்சமாகப் பேசலாம் பகடி..அங்கதம். மற்ற இடைசாதியர்கள் பேழவே கூடாது என்பதாகத்தானே மனு சொன்னது. சிறுபான்மையினர் பழங்குடிகள் பேசவே கூடாது. அந்தந்த சொற்களை அந்தந்த சாதிக்காரர்கள்தான்  பேச வேண்டும். பேசும் குரலின் பாவனையிலேயே சாதிகளைக் கண்டுபிடித்த சமூகமாயிற்றே..மற்றவர்கள் அவர்களுடைய பாணியில்தான் எழுதவேண்டும். கேட்வாசலில் பாட்ஜ்கள் டாலர்கள் விற்றுக் கொண்டிருந்த ராசாசி எங்களிடம் ஆதரவாகச் சொன்னார்.

         ஞானக்கூத்தன ஏற்புரையில் இவர்கள் பாராட்டியது எனக்கு குளுகுளுவென்று இருந்தது. அரங்கிலிருப்பவர்களுக்கு காதில் வேறுமாதிரி விழுக அவர்கள் அங்கதம் கருதி சிரித்துமகிழ்ந்தார்கள். ஒலிபெருக்கியின் அருகில் நின்று பேசியதால் சிவகுமார் பேசுவது போலிருந்தது. ஏற்புரையை நீளமாக எடுத்துக கொள்ள மக்கள் வெளியேறினார்கள்.தன் உரையை அறையிலெயே வைத்து விட்டு வந்துவிட்டதால் பேசுகிறேன் என்று பேசினார்.

        ஒரு இயல்பான பிராமணரின் வாழ்க்கைச் சித்திரங்களே தனது கவிதைகள் என்பதாக அவருடைய ஏற்புரை அமைந்தது. அவர் எப்பொழுதும் மறக்காமல் குறிப்பிடுகிற நண்பர்களைக் குறிப்பிட்டார் ஒரு கணம் வாணம்பாடிகள் குறித்து என்னிடமே ஏன் கேட்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்களைக் கடிந்து கொண்டதும் தன் பேட்டிகள் வாணம்பாடிகள் குறித்துத் தவறாகவே புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்று  அவர் பங்கிற்கு பெரிய பாம் ஒன்றைப் போட்டார்.

          சா. கந்தசாமி, வசந்தபாலன், புவியரசு உள்ளிட்ட பெரிய இலக்கியவாதிகள் இருந்தும் அரங்கு எட்டு மணிக்கு முடிவுக்கு வந்த காரணம் அங்கத நாற்றம் அதிகமாகவே நெடியடித்ததும் ஒன்று. மேடையின் ஓரத்தில் நண்பர் ஒருவர் முகச்சவரம் செய்த பெருமாள் முருகன் போலவே தெரிந்தார். அவர் மட்டும் பேசவில்லை. ஒரு வேளை நாங்கள் வராத போது வரவேற்புரை வாசித்திருப்பாரோ என்னமோ..

அரங்க வாயிலிலிருந்து பராமரிப்பாளர்களிடம் நானும் இளவேனிலும் பொங்கல் சீசன் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடக்கவிருப்பதால் அரங்கத்தை பத்து நாட்கள் சன்னல்கள் கதவுகள் ஆகியற்றை திறந்தே வையுங்கள் காற்று வெளியேறட்டும் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

             இரண்டு நாள் உள் அரங்கு கருந்தரங்குகள் . இலக்கிய உரையாடல்கள். சமகாலப் படைப்பியக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள்,தற்கால மலையாளக் கவிதைகள் கருத்தரங்கு என்பதாக இந்த ஆண்டும் ஏராளமான பொருட்செலவில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் உழைத்திருக்கிறார்கள்.

       ஜெ..வைப் பேச அழைத்தபோது எழுத்து அசுரன் என்று விளித்து அழைத்தார்கள். விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்றபோது தாமதிக்காமல் சங்கடப்படாமல் அதற்குள் ஒரு நாவல் எழுதிடுகிறேன் என்றாராம். அவருக்கு இணை யாருமில்லை என்று புவியரசும் பாராட்ட நானும் இளவேனிலும் யோசித்தோம் யார்தான் இருக்கிறார்கள். அப்படியானால் அவரையும் அவர் நிகழ்வையும் பாராட்டுவதற்குத் தகுதியானவர் ராஜேஷ் குமார்தானே. இனி ஒவ்வொரு நிகழ்விற்கும் அவரையே தலைமையேற்பதுதான் சரி. அவர் வீடும் ராஜதானிக்கு அருகில்தானே இருந்தது. கண்ணாடி, சில்க், மரம். கிராணைட், டைல்கள், செயற்கை கற்கள். என்று விற்க வந்தவர்கள் படிப்படியாக தேவாங்க நெசவு செட்டியார்களின் நிலங்களை அபகரித்த இடங்களல்லவா அந்த நிலங்கள் யாவும். ராஜதானி அரங்கிற்குள் நின்றபோது ஒரு நெசவாளியின் குரல்வளை மேலே நிற்பது போன்றேயிருந்தது.

தங்கள் நிலத்தை, தங்கள் வாழ்வை எல்லாவற்றையும் இழந்து விட்டு புட்டு தோசை மாவுகள் விற்று கொண்டிருந்த செட்டிமார்களை ரத்தக்கண்ணீர் கசிய கண்டோம். அவர்களின் வாழ்க்கை குறித்த கவிதையை உணர்வுப் புர்வமான கவிதைகளைப் பற்றிய உரையாடல்கள் எதுவும் சத்தியமாக இல்லை. அங்கு அந்த இடத்தில் இரண்டு நாட்கள் இருந்த ஜெ உள்ளிட்ட கவிதை புரமோட்டர்களுக்குத் தோன்றாத காரணம் என்ன என்று விவாதித்தபடியே ஊர்வந்தோம்.

       ஜெ..வின் எழுத்து தற்காலத்தில் சாண்டில்யனின் வந்து சேர்ந்து புஷ்பா தங்கத்துரை சாயலிலும் (அ) ஸ்ரீவேணுகோபாலனின் சாயலும் ஸ்டெல்லா புருஸ் வடிவத்தில் வந்து கடைசியாக ராஜேந்திரகுமார் பாணிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவர் அடுத்த கட்டமாகத் தொடக்கூடிய இடமாக ராஜேஷ்குமாரின் இடம்தான் போலிருக்கிறது. எல்லாருமே பாராட்டிக் கொண்டிருந்தால் யார்தான் அவர் எழுத்தின் தரத்தை உண்மையாகச் சொல்லுவது. அல்லது உண்மையான தரம் பற்றிச் சொல்கிற தைரியம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு எப்படியிருக்க வாய்ப்பு..

ஒரு முறை நடிகர்திலகம் திருவையாற்றில் போட்டியிட்டபோது அவர் வெற்றி உறுதி என்று சொன்னார்கள். ஆனாலும் சிவாஜிக்கு உள்ளுர உதறல். வந்த தகவல்கள் வேறுமாதிரி. சிவாஜி நேரடியாக களத்திற்குச் சென்றார் மாறுவேடத்தில் தேநீர்க்கடைக்கு. அங்கு நைசாக விசாரிக்கவும் நீங்கள் மூன்றாவது இடத்தில் இருக்கீறீர்கள் என்று சொன்னார்கள். அதிர்ச்சியடைந்த சிவாஜி தன் பிரச்சார மூட்டைகளைக் கட்டிக் கொண்டு உடனே சென்னை திரும்பினார். தேர்தல் முடிவில் சிவாஜி மூன்றாவது இடம் மற்றும் டெபாசிட் இழந்தார். கட்சி துடைத்து எறியப்பட்டு அரசியல் துறவறம் மேற்கொண்டார்.

       கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒரு நாற்பதாயிரம் வாக்குகளை ஒரு மகத்தான கலைஞன் பெறமுடியவில்லை.

        தன் அரசியல் வாழ்க்கையைச் சூறையாடிய மேஜர் சுந்தர்ராஜன்,தளபதி ராஜசேகர்,சி.வி. இராஜேந்திரன் ஆகியோரைக் கடிந்து கொண்டார். அப்பொழுது அவர் தன் சொந்தப் பணம் கோடிக்கணக்கில் இழந்திருந்தார். சிவாஜியின் கட்சியும வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தார்கள். ஜெ.. அந்த நிலையை முன்கூட்டியேத் தெரிந்து கொள்ள முன்வரவேண்டும். தன் வாழ்நாளிலேயே தன் சகாப்தத்தின் சரிவையும் தன் வாசகர்களைப் படியப் படிய இழந்தவர்களில் சிவாஜியைப் போல இன்னொருவர் ஜெயகாந்தன். மார்க்சிய தளத்திலும் நவீன வாசகர்கள் தளத்திலும்  வெகுசன வாசிப்பு நிலையிலும் முழுமையாகத் தான் இழந்து போனதை இப்பொழுது அவர் கண்டு களித்தபடியிருக்கிறார். மார்க்சியத்தைக் கழுவி ஊற்றியதற்காக முதலாளிகள் அவருக்கு விருதுகள் மேல் விருதுகள் அளித்து சாந்தப்படுத்தினார்கள். ஆனால் முதலாளிகளின் குழும வாசகர்களாவது வாசிக்க வைத்தார்களா இல்லை...

தமிழ் இந்து நாளிதழ், இந்து நாளிதழ்களில்தான் பெரும்பாலான விஷ்ணுபுரம் ந்ணபர்கள் பணியாற்று கிறார்கள். ராஜேஷ்குமாரை அழைத்து இந்து நாளிதழ் விழாவில் பேசவைத்தீர்கள்தானே நண்பர்களே..

இந்த விழாவிற்கும் அவரை அழைத்திருக்கலாமே. ஆயிரத்து ஐநூறு நாவல்கள், மூவாரயிரம் சிறுகதைகள். தமிழின் கடந்த இருபது ஆண்டுகளாக பெஸ்ட் செல்லர் ரைட்டர் ராஜேஷ்குமார். இந்த விழாவிற்கு அவரை அழைத்திருக்கலாம். நண்பர்கள் கவலை கொள்ளவேண்டாம். ராஜேஷ் அண்ணன் இருக்கிறார். அவருக்கும் வேண்டிய ஆட்கள் எல்லாத்துறைகளிலும் இருக்கிறார்கள். ஜேம்ஸ் ஹெட்லி சேஸ், அகதா கிருஷ்டி, ஸெர்லக் ஹொம்ஸ் பியோதர் பாதெலர் என்று அவரும் கலக்குகிறார் போதாதா. அவரையும் கௌரவப்படுத்தியது மாதிரியிருக்கும். உங்களுக்கும் பிரயோஜமாக இருக்கும்.

         வாழவைத்த கோவையை மறக்காதீர்கள். உங்கள் உழைப்பு நேசிக்கப்படுகிறது. நீங்கள் ஞானியைத் தவிர்க்கிற காரணம் இன்னும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. தன இறுதிகாலத்தை கொடுமையுடன் வாழ்ந்து வருகிறவர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக சாகித்ய அகாடமி விருதுகளுக்கு பலருக்குப் பரிந்துரை செய்தவர். பூமணியின் நாவலை அழகுற படித்து ஒழுங்கு செய்தவர். அவரை சாகித்ய அகாடமியும் கைவிட்டது. நீங்களும் கைவிட்டு விட்டீர்கள். அவருக்கு நீங்கள் வெளியில் தெரியாமல் உதவுகிற காலம் அல்ல இது. அறம் எழுதிய கைகளே..உண்மை பேசுகிற உள்ளங்களே.. உங்களிலும் ஈரநெஞ்சம் கொண்டவர்கள் இருப்பீர்கள்.

தமிழில் தீவிர இலக்கியம் பேசுகிறவர்கள் எப்படி குறிப்புணர்த்துவதுதான் இலக்கியக் கொள்கை என்று முடிவு செய்கிறீர்கள். நாங்கள் வீரர்கள். கலிங்கத்துப்பரணி எழுதியவர்கள். அங்கதமும் பகடியும் பசியேப்பக்காரனுக்கு வராது. களத்தில்தான் விளையாட முடியும். அதுதான் முறை. காலரியிலோ பால்கனியிலோ விளையாட முடியாது.

புவியரசு சொன்னது போல நாங்கள் தெருவில் சென்று மக்களுக்கு கவிதை சொல்பவர்கள். நீங்கள் பேசுகிற கவிதை இலக்கணங்கள் பத்து வருடங்களுக்கு முன்பு காலாவதியான குறிப்புகள் பேசுகிறீர்கள். சரியான, சௌகரியமான, தோதான, அடக்கமான, வசதியான, அல்லது பிறப்பிலேயே நிலவுடைமைச் சாதிக்காரர்களாக, சனாதனிகளாக, அல்லது அடிபணிந்து போய்க்கொள்கிற சிறுபாண்மை சாதியப் படைப்பாளர்களைத் தெரிவு செய்து கொண்டு அதன் கட்டமைப்பில் உங்களுக்கான இலக்கியத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறீர்கள். இது நீங்கள் முடிவு செய்கிற இலக்கியக் கொள்கை. அதில் யாரும் தலையிட முடியாது என்பது தெரியும்.

முயற்சியும் முடிவும் இயக்கமும் உங்களுடையது. உங்கள் சுதந்திரம் உங்கள் பணம் ஆனால் நண்பர்களே இலக்கியம் அரசியல் சினிமா இவை மூன்றும் பொதுவானவை. இந்த மூன்றிலும் ஆழமான பார்வையை நீங்கள் செலுத்தவேண்டும்.

         உங்களால் எளிதில் வெற்றி கொள்ளக்கூடியவர்களைத்தான் தெரிவு செய்கிறீர்கள். ஒரு திரைப்படத்தில் ஓமக்குச்சி நரசிம்மனை கவுண்டமணி அடித்துத் துவைப்பார். அப்படித்தான் உங்கள் தெரிவுகள் அமைகிறது.

          உங்கள் அடுத்தடுத்த தேர்வுகள் சரியாக அமைய வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு மேடையில் பெண் படைப்பாளர் ஒருவருக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும். அல்லது வருகிற சென்னை விழாவில் ஒரு வருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பாருங்கள். இதெல்லாம் வேண்டுமென்று தவிர்க்கிறீர்களா அல்லது இயல்பாகவே தவிர்க்கிறீர்களா.. போகட்டும்..

          விஷ்ணுபுரம் விழாக்குழுவினர் கச்சிதமாகச் செயல்பட்டார்கள்.  இதை விடவும் பிரமாண்டமான விழாவாக எழுத்தாளர் பூமணிக்கு சென்னையில் 11 ஆம் தேதி நடத்துவதாகத் தெரிவித்தார்கள்..

வாழ்த்துகளும் உங்கள் முயற்சிகள் தொடரட்டும்...உங்கள் தலைமைக்குச் சரியானத் தகவல்களை அளியுங்கள்.. அதுதான் உங்கள் உழைப்பைப் பறைசாற்றும்..நீங்கள் பெருமதிப்பு அடைவீர்கள். தமிழிலக்கியம் உங்கள் ஆசைப்படி வளரும். உங்கள் தலைமையாசிரியரின் நூல்கள் அதிகம் விற்கும். பண்டல்கள் திரும்பிப் போகாது. பதிப்பாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

நாங்கள் சத்தியமாக மகிழச்சியடைவோம்..

கோவையைப் பெருமைப்படுத்தும் நண்பர்களே.. உங்களுக்கு ஒரு ராயல் சல்யுட்.....