கனிமொழி ஜி கவிதை
உலகம்
நெருப்பில் தகிக்கும்
ஒவியத்திரை
“மழை நடந்தோடிய
நெகிழ்நிலம்”
கவிதை நூல் குறித்து
பனியில் நடுங்கிய சிறகுகளை
ஒன்றுக்கொன்று கோதலில்
இரவைத்திறப்பதும் பகலில் நுழைவதுமாய்
விருப்பம் போல் மாறுகின்றன பொழுதுகள்
பூத்தலற்ற பருவத்தில் எங்கும் மலர்ந்திருந்த
ஞாபகத்தின் மலர்கள்
பனியில் குளிர்ந்து குளிர்ந்து கொழுந்துவிட்டு எரிந்தன
அகம் அவிழ்ந்த மலர்ச்சியில் எங்கும் பூத்தலின் வாசம்
-தொகுப்பின் கவிதையிலிருந்து
சில வரிகள்.
கவிஞர் கனிமொழி.ஜி கவிதைகளுடன்
உரையாடுவதற்கு முன்பாக தற்காலத்தில் கவிதைகளின் இருப்பு குறித்தும் பேசலாம். நாம் முதலில் சிற்றிதழையோ வெகுசன இதழையோ கையில்
எடுத்தவுடன் பக்கங்களைப் புரட்டுகிற பொழுதில் கவிதைகளுக்குரிய வரிகளையோ அல்லது
அப்படியான சொற்றொடர் களையோ கண்டதும் வாசிக்கத்துவங்கிவிடுகிற இயல்பைப்
பெற்றிருக்கிறோம். அல்லது கவிதை வாசிக்க வைத்துவிடுகிறது. கவித்துவமிக்க
சொற்றொடர்கள் இன்றைய சூழலில் பரவலாகப் பயண்படுத்தப்படுகிறது. மொழியின்
வளர்ச்சியடைந்த காலகட்டத்தைக் காணமுடிகிறது.
கவிதைகள் ஒவ்வொரு யுகத்திலும் தன்
வடிவத்தையும் சொற் செறிவையும் அழகையும் காட்சியையும் உணர்ச்சிகளையும் உணர்த்திக்
கொண்டே வந்திருக்கிறது. கவிதையை நாம் வாசிக்கத் துவங்குவது நாம் உணராத ஒரு
உணர்வையும் காணாத காட்சியையும் நாம் வாழாத வாழமுடியாத ஒரு வாழ்வின் விவரிப்பையும்
அறியவே விரும்புகிறோம். உதாரணமாக நமக்கு முந்தைய ஐம்பதாண்டுகளின் வாழ்க்கை திராவிட
இயக்கவியலின் அரசியல் கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம்.
அன்று எழுதப்பட்ட, பேசப்பட்ட,
மேடையில் வசனகவிதைகளாகவும் உரைவீச்சுகளாகவும், காவியப் பாராட்டுரைகளாகவும்
கவியரங்க கைதட்டல் கவிதை களாகவும் அமைந்த கவிதைகளின் காலத்தை தற்கால இணைய வளர்ச்சி
தடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். திராவிட இயக்க ஆட்சியாளர்களே திராவிட
இயக்கவியலின் கவிதைகளை திராவிட இயக்க இலக்கியத்தை மேம்படுத்தவில்லை. மாறாக அவர்கள்
நவீன பொருளியல் மாற்றங்களுக்குள்ளாகத் தங்கள் வம்சத்தையும் வளத்தையும்
மேம்படுத்திக் கொள்ளத்துவங்கியதுதான் இந்த மாற்றத்திற்கான காரணம்.
இதன் வடிவாகவே கவிதை தன்
இலக்கிய இலக்கணங்களை மீறத்துவங்கியது. தமிழ் கணிப்பொறிகளிலும் உலகெங்கிலும்
வாழ்கிற அயலகத் தமிழ் ஆர்வலர்கள் இலக்கிய விரும்பிகளால் மிகவேகமாக
வளரத்துவங்கியது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு கவிதையின் வடிவம் தன்னை மாற்றியது.
எந்த நிலையிலும் சோர்வு அடையாத சிற்றிதழ்கள் கவிதையை மென்மேலும் பிரசுரித்து
வாழவைத்து வருகிறது. இடைநிலைஇதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் கவிதைகளை முதல்
ஆக்கமாகப் பாவித்து வெளியிட்டு வருகிறது.
அப்படித்தான் சமகாலத்தின்
கவிதைகளின் கவிஞராகவும் மொழிவசப்பட்ட சொற்களின் ஆன்மாவாகவும் ஜி.கனிமொழி குரல்
கேட்க முடிகிறது. ஒர் பல்கலைக்கழகத்திலிருந்து நூறு ஒரே துறைபயின்ற வல்லுநர்களின்
ஆக்கங்கங்களும் மதிப்பெண்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவா உள்ளது.
ஒருவருக்கொருவரின் தரமும் சிந்தனையும் செயலும் வித்தியாசப்படும். ஆனால் தமிழ்க்
கவிதையின் வாசகனும் இலக்கிய மொழியியல் பட்டதாரியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான
சிந்தனையுடன் இருப்பதற்குக் காரணமே ஆயிரமாயிரமாண்டு பலம் கொண்ட மொழியின்
வீரியம்தான். இனியொரு கவிதையை வாசிக்கலாம்..
என் தனிமை வீதியின்
ஒளி அளவைகள் வேறுபாடானவை
நெடியதொரு காத்திருப்பின் நேரம்
அசை போடுதலில் ஒழுகிப் போகிறது இருள்
சந்திப்பின் முதல் கணம் முன்
நெரிசலான வெளிச்சங்களால் சிதறடித்தது
எதிர்நின்று விழி மலர்த்தும் போது
பெருமரம் ஒன்று தீப்பிடித்துச் சடச்சடத்தது
தீயமர்த்தி ஆசுவாசமான இந்நேரம்
சலனமற்று மேலெழும்பி நிறைக்கிதோர் தீச்சுடர்-
மேற்கண்ட கவிதையை வாசிக்கிற பொழுது
எனக்கு பாரதி பாஞ்சாலி சபதம் காவியத்தில்
அந்திவான வருணனை ஞாபகத்தில் வந்துபோகிறது. ஒரு கவிதை நம் முந்தைய
தலைமுறையின் காலத்தையும் மொழியையும் நினைவுகொள்வது முக்கியமானது. ஒரே உலகத்தின்
வெவ்வேறு காலநிலைகள் இயற்கையின் காட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கிறது.
பார், சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்,
எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ!
என்னடி! இந்த வன்னத் தியல்புகள்
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! செம்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள் பாரடி!
நீலப் பொய்கைகள் அடடா நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! கரியப் பெரும் பெரும் பூதம்
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள்! சுடரொளிப் பொற்கரையிட்ட
கருஞ்சிக ரங்கள்! காணடி, ஆங்கு
தங்கத் திமிலங்கம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! ஆஹா எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக்
களஞ்சியம்!
இன்று நாம் மின்சாரத்தின்
உதவியால் பலவகையான வெளிச்சங்களை கண்களால் அறிகிறோம். நெருப்புப் பொறிகளின் வாயிலாக
இருளுடன் வாழந்த நாட்களில் ஆகாயத்தின் காட்சிகள் யாவும் யானைகள் போலவும்
திமிங்கலங்கள் போலவும் அவைகள் நிலத்திற்கு இறங்கி வருகிறதோவென்ற பிரமைகள்
உருவாகிறது. இயற்கை ஒளியிடமிருந்து முற்றாக நம்மை மின்சார ஒளி விலகிப் போக
வைத்திருப்பதை கவிஞர் ஞாபகப்படுத்துகிறார்.நெருப்பு கைக் கொண்ட பிறகு ஆதிக்க
மக்கள் சாமானிய மக்களின் குடில்களுக்கு நெருப்பு வைத்துக் கொழுத்தி
மகிழ்ந்தார்கள்.
அந்தந்த காலத்தின் கலைஞர்கள்
தங்கள் வசமான நெருப்பை வைத்து புதிய சமூக ஒழுங்கைச் செய்தார்கள். நெருப்பிலேயே
வெந்து சாகும் தொழில்களைப் பிறருக்குச் செய்து மகிழ்ந்தார்கள். தாய்மார்கள்.
தங்கள் குடும்பத்திற் காக எப்பொழுதும் நெருப்புக்கனலுடனே வாழ்ந்தார்கள். தங்கள்
அடுப்பில் கனலின் சூட்டைத் தங்கள் குழந்தைகள் போல பாதுகாத்தார்கள்.
நம் சமூகத்தில் சில தமிழர்கள்
வாழ்க்கைக்கு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்களாக இருந்தாலும் கூட தமிழின்
கவிதையை அவர்கள் விடாமல் எழுதுகிறார்கள். அறிவியல் தொழில்நுட்பக் கல்விகள், ஏனைய
பிற நுண்ணியல் துறைகள் பயில்பவர்கள் கூட தமிழிலும் இலக்கியப் படைப்புகள்
எழுதுவதின் காரணம் மொழியின் சாத்தியங்கள். மொழியின் சாத்தியங்களை அறிந்தவர்கள்
கவிதைகளை எழுதாமல் இருக்கவே வாய்ப்பில்லை.
இயந்திரங்களையும் அசுரத்தனமாக உற்பத்தியாகிவருகிற வாகனங்களையும் பெட்ரோலையும்
டீசலையும் நம்பித்தான் வாழ்கிறோம். இந்த நகரங்களை நம் கனவுலகத்தில் சில
சாத்தான்கள் மொய்க்கிறார்கள். மனிதர்களின் இருப்பு என்பது காலாவதியாகிறது.
சமகாலத்தில் தார்மீகக் கடமைகள் பெண்களுக்கு என்று குடும்பம், குழந்தைகள், வீடு, உறவுகள், சேமிப்பு,சிக்கனம் என்பதாக அவர்களுக்கு இந்த அமைப்பியல்
வறையறுக்கிறது.
ஆண்களுக்கு வருமானம். அலைதல், வறியவையானாலும் திரைகடலோடியும் திரவியம்
தேடவேண்டும். ஆண்கள் ஆண்களுடனும் தங்கள் சொற்களின் திறமையால் பிற ஆண்களை
வெல்லவேண்டும்.
தினப்பொழுதுகளின் வெளிச்சப்படிமங்களுக்கு ஏற்ப நாம் முகங்களின் அழகுகளைத்
திருத்தம் செய்கிறோம். பொலிவும் அகமும் மலர்ச்சியடைகிறது. உவகை பொங்குகிறோம். மொழி
நவீன வாழிடத்தின் காலத்தின் அமைப்பியலுக்கு ஏற்ற மாதிரித் தன்னை ஒழுங்கு செய்து
கொள்கிறது. கனிமொழி.ஜி. தன் கவிதைகளில் அகவய புறவய ஒழுங்கின் மனிதமுகங்களைத்
திருத்திப் பார்க்கிறார். கவிதைகளால் மட்டுமே சாத்தியப்படுகிற இயற்கை மலர்ச்சியை
அகவயமான குணாம்சங்களுக்கு இலக்கணம் எழுதுகிறார்.
முயற்சிகளால் இடையறாத
சேகரிப்பின் களஞ்சியத்திலிருந்து விடுபடுகிற தானியங்கள் போலவே ஒரு சில கவிதைகளை
மட்டுமே வாசகனுடன் பகிர்ந்து கொள்கிறோம். சிதறிய தானியங்களின் பறவைகள் போல. மனித
சமூகத்தைப் புத்தாக்கம் செய்கிற வலிமை கவிதைகளுக்குத்தான் உண்டு. அதற்கெனப்
பெயரிட்டு அழைத்துக் கொள்வதுதான் கவிதை. தினத்தின் பருவங்கள் அனைத்திற்கும்
பெயர்கள் உண்டு. இரவுகளுக்காக எழுதிய பெயர்கள் முழுமையான கவிதை. உறக்கதிற்குப்
பிறகான அகமனதின் கனவுலகமும் நனவோடைகளும் கனிமொழி.ஜி. கவிதைகளுக்குள் ஆழப் பரந்து
செல்கிறது.
தொகுப்புகளில் மிகச்சிறந்த
கவிதைகள் குறித்து இங்கு முழுமையாகப் பேச முடிந்தாலும் நீங்கள் வாசித்து
உணர்வதற்காகவே சில கவிதைகள் இங்கு பதிவிட்டுள்ளேன். உப்பு நிலங்களின் வகைமைகளும்
உப்புக் கரிக்கிற அளவு வருணனைகளும் இயல்பாகவே அவருக்குக் கைவந்துள்ளது. உப்பு
அருஞ்சுவைகளில் ஒன்று. ஆனால் நமக்கு சமூகம் போதித்து இருப்பது என்னவோ அவை
புறந்தள்ளக் கூடியதாக உள்ளது. உப்பு குறித்த சேதிகள் நிறைய உள்ளது இந்தக்
கவிதைகளின் பலம் என்றே கருதுகிறேன். நம் உடலே உப்பின் முழுமைதான். கரித்த உப்பின்
துவர்தான் உண்மையான சுவையோவெனத் தோன்றுகிறது.
தன்வய அகத்தின் கவிதைகளில் காட்சிகள் நீண்டும் முரண்களுக்குள்ளாக கவிஞர்
எழுதிப் போவதை சிறப்பானது. தற்காலங்களில் வெகு ஆழங்களுடன் பெருங்குழிகள்
தோண்டப்படுகிறது. நாம் கவனிக்கலாம். குழியின் ஒரு பகுதியில் நிலத்தின் அடுக்குகள்
தேர்ந்த ஒவியனின் கைவண்ணத்தில் எழுதப்பட்டது போன்றே படிமங்கள் காணமுடிகிறது. சரளை
மண், பாறைச்சல்லித் துண்டுகள், பெரும்பாறையின் தகடான ஓடுகள். உடைகிற ஓடைக்கற்கள்,
உடைக்கமுடியாத கற்கள், கணன்று மின்னுகிற பச்சை வண்ணத்திலான பாறைகள்.
நிலத்தின் வண்ணங்களைப்
பேசுகிற கவிதைகள் தொகுப்பின் பலம். ஓவியப்படிமங்கள், சித்திரங்களின்
உரையாடல்களுக்கும் குறைவில்லை.
குளிரடைத்த வாகனத்துள்
நாற்சந்தியில் நிறுத்திய சாலை விதியை
சபித்தவாறிருக்கிறேன்
விழிகளில் வெய்யில் மிதக்க
கண்ணாடி ஜன்னலைச் சுரண்டுகிறாள்
அழுக்குச் சிறுமி
வாசித்த கணத்தில் சில
புகைப்படங்கள் மலர்ந்து முத்தங்களின் சத்தமிட்டு பொலபொலவென உதிர்வதைக்
காணமுடிகிறது.
கவிதைகளில் ஆங்காங்கு கணன்று தகதகத்து எரிந்து கொண்டிருக்கிற அடுப்பின்
வெம்மையின் தீற்றத்தைக் கொண்டுள்ளது எனலாம். நம் சமூகத்தில் பல்லாண்டுகளுக்கும்
முன்பு உணவிற்கான அடுப்புகள் தங்கள் குடில்களில் எப்பொழுதுமே கணன்று
கொண்டேயிருக்கப்பார்த்துக் கொள்வார்கள். பசியாற நெருப்பு தான் அவர்களுக்கு
முக்கியமானதாக இருந்த காலம் அது. கணலின் இருப்பும் அதன் தகிப்பும்தான் உயிர். அவை
சாம்பலாகிப் போகிற தருணங்களில் நெருப்புக்காக அவர்களின் பயணம் மலைகளையும் கடலையும்
தாண்டிப் பயணித்திருக்கிறதை தன் கவிதைகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார்
கனிமொழி.ஜி.
வாழ்த்துக்களுடன் முடிக்கிறேன் ஒரு கவிதையுடன்
நேற்று பின்னிரவு கனவில் பார்த்த ஊதா மலரை
இதுவரை எங்கும் பார்த்ததில்லை
முழுதும் அவிழாத இதழ்களோடு
என் உள்ளங்கையில் ஏந்திய அதன் மிருதுவை
இன்னுமென்னால் உணரமுடிகிறது
வாசம் குறித்து என்னிடம் குறிப்பேதுமில்லை
அதன் இளம் ஊதா நிறம் அத்தனை மலர்ச்சியாய் இருந்தது
கைவசமிருக்கும் கறுப்புப் பென்சிலால்
மலரின் விளிம்புகள் மட்டுமே வரைகிறேன்
விளிம்புகளுக்குள் இப்போது ஊதாவாக நிரம்புகிறேன்
நீங்களும் எவ்வண்ணமோ அவ்வண்ணமாய்..
ஆசிரியர் –கவிஞர் கனிமொழி.ஜி
96295 87313
வெளியீடு
அகத்துறவு
9-2- ஏ ஒண்டிப்புதூர் சாலை
என்.ஜி.ஆர் புரம்
இருகூர்-கோவை-641103
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக