சனி, 17 ஜனவரி, 2015

பா.ராஜாவின் “மாயபட்சி” கவிதை நூல் குறித்து



மாயப்பட்சி- பா.ராஜா கவிதைகள்
வாஞ்சி மனியாச்சி ரயில் நிலையத்தில் பா.ராஜாவும் அகச்சேரனும் நாகர்கோவில் எக்ஸ்பிரசில் ஏறினார்கள். அந்த இடத்தில் அவர்களை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நானும் பொன்இளவேனிலும் அந்த ஒரு மணிநேரம் தூத்துக்குடி வரையிலும் அவர்களுடன் இலக்கியம் பேசிக்கொண்டே சென்றோம். அங்கிருந்து அந்தப் அதிகாலைப் புகைத்தூவலுக்குள் தூத்துக்குடியின் பெருநகரத்தின் மேம்பாலங்களில் சாலைகளில் அந்த அதிகாலையில் கவிதைகளும் இலக்கியமுமாகப் பேசியபடியே நடந்தோம். தூத்துக்குடியில் கடற்கரைச சாலையில் வா. மணிகண்டன் காத்திருந்தார். அதுவும் ஒரு இன்ப அதிர்ச்சி. எங்களை அழைத்துப போக செல்மா பிரியதர்சன் காரை நிலாரசிகன் ஓட்டிவர நாங்கள் அனைவரும் தேரி இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றோம். அந்தக் கூடல் ஆச்சர்யம் மிகுந்தவை. அந்த நாள் ராஜாவை நினைக்கும் போது வருகிறது.
    ராஜாவின் கவிதைகள்,சிறுகதைகள், மதிப்புரைகள் வாசித்திருக்கிறேன். சென்னையில் மணல்வீடு நடத்திய இலக்கிய அமர்வில் மீண்டும் பார்த்தேன். நூல் அனுப்பி வைத்தமைக்கு நன்றி தெரிவித்தேன். அவர் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். எத்தனையோ சந்தர்ப்ப ங்களும் அசந்தர்ப்பங்களும் கவிதைகளை வாசிக்கும் போது வந்து போகிறது. சேலம் சென்றிருந்த நாளில் வே.பாபு, பூங்காற்று தனசேகர், சாகிப்கிரான்,பா.ராஜா ஆகியோருடன் சேலத்தில் கழிந்த இரவு மறக்க முடியாதவை. இலக்கியம், கவிதைகள் தந்த நண்பர்கள். வாழ்க்கையும் உரையாடல்களும் புதிய வெளிச்சம் தந்த காலம் அது. பழைய கருப்பு வெள்ளைப் படத்தின் முக்கியமாக எம்.ஜி.ஆர் படத்தின் டுயட் பாடல்களை பா.ராஜாவும் அகச்சேரனும் பாடப் பாட அந்த மொட்டை நிலவெளி அதிசயமாகவேபட்டது. பொன் இளவேனில் பழையபாடல்களின் தீவிர ரசிகனாக இருக்க பாட்டுக்குப் பாட்டு. எசப்பாட்டு என்று அந்த சபை அற்புதமாக அமைந்து போனது. பிறகு ஜெமினி,சிவாஜி,பி.பி.சீனிவாஸ். ஏ.எம்.ராஜா,ஜிக்கி என பாடல்களின் எல்லை விரிவடைகிறது.
வே.பாபு ஒரு மகத்தான கலைஞன். அவர் பள்ளியிலிருந்து ராஜா வந்திருக்கிறார் என்றார் ராஜா கோவித்துக் கொள்ளமாட்டார் என்று படுகிறது. மணல்வீடு இதழ் செயல்பாடுகளும் கூத்து நிகழ்வுப் பணிகளில் உதவி என்று அவருடைய இலக்கியப் பங்களிப்பு தொடர்கிறது.
பூங்காற்று தனசேகர் தான் சாப்பிடாமல் கொண்டு வந்திருந்த தயிர்சாதத்தை ராஜாதான் ஒவ்வொரு கவளமாக அனைவருக்கும் கொடுத்தார். விஎஸ்ஓபியும் தயிர்சாத காம்பினேசனில் வே.பாபு இலக்கியமும் கவிதையுமாக சபையைத் தொடர அந்த இரவுகள் வே. பாபுவிற்குச் சொந்தமான இரவுகள் அது. சாகிப் குறித்த கட்டுரைக்கு ஞானி சில விளக்கங்கள் கேட்டார் என்பதை நான் நினைவுப்படுத்த அவர் ஞானி கேட்டாரா அந்த 361டிகிரி இதழ் கட்டுரை பற்றி என்று ஆச்சர்யம் கொண்டார்.
மறுநாள் ஒரு நாள் பயணம் பற்றிய உரையாடலில் அகச்சேரன், பா.ராஜாவின் இலக்கிய அறிதல்கள் மிகவும் பிரமிப்பாக உள்ளது என்பதைப் பேசிக் கொண்டோம். இன்று தொகுப்பாகத் தனது கவிதைகளைக கொண்டு வந்திருக்கிற ராஜாவிற்கு முதலில் வாழ்த்துக்கள்.. இனி கவிதைகளுக்குள் செல்வோம்.
எனது சொற்கள்

இன்றிரவு
இதை எழுதுவதின் மூலம்
நான்
உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்
கடந்து போகும் இரவின் நிழல் படிந்த
எனது சொற்களை
நிகழ்காலத்துப்பகலின் ஒளியில்
எதிர்கொள்ளலாம் நீங்கள்
நாளையோ
மற்றொரு யுகத்திலோ... பக்-39..

       கவிஞன் தன்னைப்பிரகடனப்படுத்திக் கொள்ளுதல் என்பது முக்கியமானது. அகத்திற்குள் தன் கருத்துகளுடன் சம்வாதம் செய்து கொள்கிற பொழுது கவிஞனின் பொழுதுகள் புலப்படாதவை. முந்தைய யுகத்தின் தமிழாசிரியர்களுக்கு இந்த நிலமை இருந்தது. புறத்தில் நமக்கு என்ன மரியாதை,வாசிப்பு, தன்னை வாசகன் அறிந்திருத்தல் என்பதெல்லாம் குறித்த குழப்பமான யோசனைகள் இருக்கும். தன்னுடைய ஒவ்வொரு ஆக்கங்களிலும் படைப்பாளியோ கவிஞனோ தன் கொள்கை நிலையை அறிவித்து விடுகிறான். அந்தச் சொற்கள் மக்களுக்கானதாகவும் வாசகனுக்கானதாகவும் இருக்கும். கவிதையின் மரபும் பிறழாமல் நியாயமான எதிர் கொள்ளல் முறையை பா.ராஜா வைக்கிறார். கவிதையின் படிம நிலைகள் ஓராயிரத்திற்கும் மேலான நிலவியல் காட்சிகளை உயிர்களும் மரங்களும் செடிகளும் பறவைகளும் தந்து கொண்டேயிருக்கிது.
           நிலைத்த நிலையில் ஒரு கவிஞனால் ஒரு நாளிலேயே ஒரு காவியமோ காப்பியமோ எழுதிவிட முடிகிற ஞானத்தை கவிஞன் இயற்கையிலேயே பெற்றிருக்கிறான். நம் நூற்றாண்டில் ஒரு திரைப்படத்தில் தொண்ணூறு வகையான பாடல்களைக் கொண்ட திரைப்படங்களையும் விடியவிடிய வசனகவிதைகளாக ஓடுகிற அளவிலான திரைப்படங்களை நம் மூத்த தலைமுறையினர் எழுதவில்லையா. அதைவிடவும் பத்து மடங்கு மக்கள் தொகை அதிகரித்தபிறகு கவிதைகளின் பலம் குறைந்திருப்பது ஏன். பா.ராஜாவின் பல கவிதைகள் படிமங்களை அதிகமாக உபயோகப்படுத்தியிருக்கிறார். அதிகமான படிமங்கள் குறைந்த கவிதைகளுக்குள் பொதிந்திருப்பது சமீபத்திய தொகுப்புகளில் இந்த தொகுப்பாக அறிகிறேன். ஒரேயொரு படிமத்திலிருந்து நிறைய காட்சிகளை உருவாக்க முனையவேண்டும். படிமங்கள் கவிதையின் தளர்வற்ற நீரோட்டத்தை தடுக்கும்.
        சமகாலத்தில் வாழ்வியல் குறித்த நவீன கவிதைகளை அவ்வளவு தைரியமாக எழுத யாரும் முன்வருவதில்லை. அக்கவிதைகள் தன்னை முன்னிருத் திவிடுகிற தன்மை கொண்டது என்பதால். தன் தற்கால வாழ்விற்கு அடுத்த நிலையில் தன்னை நிறுத்தி தான் ஒரு முழுமை பெற்ற தொழிலதிபர் என்கிற பம்மாத்தில் கவிதைகளில் ஐரோப்பிய நிலம் படிந்திருக்கும். கிராமிய நிலம் காணாமல் போயிருக்கும். இந்த தமிழ்நிலம் எல்லாம் எல்லாம் நிறைவும் பெற்று பணமும் செல்வங்களும் தண்ணீராய் ஆறாய் ஓடிக் கொண்டிருப்பது போலவும் பெண்கள் உள்ளிட்ட ஏழை எளியமக்கள் எல்லாவளமும் பெற்றாய் விட்டது போலவும் ஜீரணம் ஆகாதளவு மக்களுக்கு உணவு வகைகள் கொட்டிக்கிடப்பது போலவும் சிலர் தங்கள் கவிதைகளில் எழுதுகிறார்கள்.  ஆனால் வாழ்க்கை அப்படியில்லை. 95 சதவிகிதம் மக்கள் பாராரிகள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எந்த கனவும் எந்தக் கவிதைகளிலும் இருப்பதில்லை.
        பசியைக் கலையம்சத்துடன் எழுதுகிற பொழுதில்தான் கலையும் பசியும் முழுமை பெறும். வகைவகையான நாய்கள் வளர்த்து விதவிதமான உணவுகள் சமைத்துத் தின்கிற நிலையில் நம் குலமக்கள் இல்லவேயில்லை. மனிதகுலம் உணர்விலிருக்கிற நேரம் முழுக்கவும் போராடிக் கொண்டுதானிருக்கிறது. இங்கு மொழிபெயர்ப்புக் கவிதைகளில் உள்ள போர்க்குணத்தை ஆதரிக்கிற விமர்சக மரமண்டைகள் தமிழக்கவிதையில் உள்ள போர்க்குணத்தை கூச்சல் கூப்பாடு கோஷங்கள் என்று விலக்குகிற விநோதங்கள் இந்த மொழியின் சாபம். இந்தக்கவிதையில் பா.ராஜா வைக்கிற செய்தி பெருஞ்சோகமும் அச்சுறுத்துகிற துக்கமும் சேர்கிறது.
விசைத்தறியின் பற்சக்கரங்கள்
காக்கி டிராயரின் புட்டத்துக் கிழிசலின் வழி
நிர்வாணத்தின் துளிகள் சில வெளிப்பட்டாலும்
பாக்கெட்டிலிருந்த கனவு
கசியாமல் வெகு பத்திரமாகத்தானிருந்தது
பிறகு
சூழ்ந்துவிட்டவொருப் பெரும்போரில்
புராதனப் பசியைப் போராடி வெல்லவியலா நிலையில்
புறமுதுகுகிட்டோயதில்
தெறித்த அது
விசைத்தறியின் பற்சக்கரங்களில் விழுந்து
நெடுங்காலமாய் நசித்துக் கொண்டிருக்கிறது.

மேற்கண்ட கவிதையை நீங்கள் தற்காலத்தின் தூய கவிதை சொல்லிகளிடம் கொண்டு கொடுங்கள். அல்லது கும்பல்சாரிகளிடம் கொடுத்துப்பாருங்கள் பா.ராஜா எனும் பெயரை எடுத்துவிட்டுத்தந்து பாருங்கள். செத்தீர்கள் நீங்கள். ஆனால் அவன் எழுதுவான். நன்றாகத் தின்று கொழுத்துவிட்டு வீட்டைவிட்டும் ஊரைவிட்டும் பொதுவிற்கு வெளியே வருவதற்கே காசு கேட்பான். அவன் எழுதுவான் முல்வேலிமுகாம்களைப் பற்றி. தனி ஈழம் பற்றி. அட வா வெளியே ஒரு அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம் என்றால் எனக்கு மலச்சிக்கல் என்பான். அந்தமாதிரியான நாய்கள் நம் தமிழ்ச்சூழலில் மகத்தான கவிஞர்கள்.  அந்தக் கவிதைகளைப் பேசுவதற்கு சில பதிப்பகங்கள் விமர்சக ஏஜென்ட்களை நியமித்து செயற்கை புரமோட்டர்களால் மேக்கப்களும செய்துவிடும். வறட்சியாக இருக்குமாம். கவித்துவம் இருக்காதாம். கவிதையின் ஆன்மா அதில் இருக்காதாம். அது சரி கவிதை என்பதே இதுவல்லவென்பான்.
     பா.ராஜா குறிப்பிட்ட விசைத்தறித் தொழில்களை நம்பி எட்டுமாவட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பனிரென்டு மணிநேர சிப்ட்கொண்ட தொழிலாளர்கள் அதுவாவது ஜிப்பா விமர்சக ஏஜெண்ட்களுக்குத் தெரியுமா அது கூடத் தெரியாது. மின்சாரம் இல்லாத நேரங்கள் அவர்களின் சம்பளங்களில கழித்துக் கொள்ளப்படும். மின்சாரம் வரும் வரையிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கவேண்டும். பொதுவாக வருடத்தில் மூன்று மாதம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுதான் அவர்களுக்கு வரவேண்டி சம்பளத்தைப் பெறுகிறார்கள்.
    ஒருவகையில் தமிழக அரசு இலவச மின்சாரம் விசைத்தறிகளுக்கு வழங்கி வருகிறது. இலவச வேட்டி சேலை நெய்வதால்தான் அவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த த்தொழிலை நம்பி மறைமுகமாக பல தொழில்கள் இயங்குகிறது. நாதாரி நன்னாரிப் பயல்கள் சொல்கிற தூய கவிதையால் ஒரு மசிரும் நடப்பதில்லை. வாழ்க்கையை எழுதுகிறவர்களைக் குறிப்பிடாத விமர்சக ஏஜெண்ட்கள் வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை விடவும் கொடுமைக்காரர்கள் என்றே சொல்லவேண்டும். இவர்களைப் போன்றவர்களால்தான் நம் நிலமும் நாடும் தேசமும் கயவர்களுக்கும் கள்வர்களுக்குமாக காட்டிக் கொடுக்கப்பட்டது.
      சமீபத்தில் ஒர் கவிதைசார் ஒரு நாள் அமர்வில் பங்கு கொண்ட சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் மொழிபெயர்ப்பாளருமான இந்திரன் கலந்து கொண்டு சமகாலக் கவிதை குறித்துப் பேசினார். வழக்கம் போல அவர் ஒரு பட்டியலை வாசித்தார். அந்தப் பட்டியலில் வழக்கம் போல இடம்பெறுகிற மூன்று கவிஞர்கள் பெயர் இடம் பெற்றிருந்தார்கள். நிகழ்ச்சி முடிவிற்குப் பிறகு அவருடன் உரையாடியபோது கேட்டேன். அவர்களுடன் சமகாலத்தில் அவர்களை விடவும் வேறு பல தளங்களில் கவிதைகளை ஆழமாகவும் ஆத்மார்த்தமாகவும் எழுதி வருகிற ஐந்து கவிஞர்களை நான் குறிப்பிட்டு இவர்களை தெரியுமா எனக் கேட்டபோது அவர்கள் யார் என்று கேட்டார். இவர்களுடன் அவர்களும் எழுதுகிறார்கள் உங்கள் பட்டியலில் அவர்களைச் சேர்க்காவிட்டால் கூட பரவாயில்லை ஆனால் தெரியவில்லையென்று சொல்கிறீர்களே என்று ஆச்சர்யம் மிகுந்த கோபத்துடன் கேட்டபோது அவர் சொன்னார் நான் மொழிபெயர்ப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் என் நண்பர்களிடம் கேட்டேன் தற்பொழுது எழுதிவருகிறவர்களில் யார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்றேன். அந்த நண்பர்தான் இவர்களின் பெயர்களைக்குறிப்பிட்டார் அதைத்தான் நான் குறிப்பிட்டேன் என்றார் அப்படியானால் நீங்களும் அந்த மூவரின் பெயர்களைத்தான் அறிந்திருக்கீறிர்கள் நீங்களும் அவர்களின் கவிதைகளை வாசிக்கவில்லையா எனறேன். அவர் முகம் வாட்டமானது.
        அவர் பரவாயில்லை சார். மூன்று பேரை அறிமுகம் செய்திருக்கிறார். நீங்கள் உங்கள் பங்கிற்கு சிலரின் கவிதைகளை வாசித்துவிட்டுப் பட்டியல் போட்டிருக்கலாமே..சாகித்ய அகாடமி விருது வாங்கிய நீங்களே இந்த லட்சணத்தில் இருந்தால் உங்களுக்கு அடுத்த தலைமுறை படைப்பாகளையும் சரியாக இலக்கியத்தைப் புரிந்து கொள்ளாத மற்ற பட்டியல்கார ஆசாமிகளை என்ன செய்வது. என்றேன்.
         பட்டியல் போடுகிற விமர்சன மேதாவிகளை முதலில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எழுதி வாங்க வேண்டும். பட்டியல் வருகிறது என்றாலே அவர் யாரிடமோ வாங்கியிருக்கிறார். ஏதோ பேச்சுவார்த்தைகள் மூலமாக சில உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது. இந்தப் பட்டியலில் மட்டுமல்ல எவருடைய பட்டியலிலும் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத தரமான கவிதைகளாக இந்த தொகுப்பு இடம் பெறுகிறது.
என்னுடைய நூல் மதிப்புரைகள் மற்றும் அறிமுக உரைகள் வெறும் பாராட்டுகளாகவே இருக்கிறது காத்திரமான விமர்சனங்களோ, மிக நுட்பமான கவிதை விமர்சனங்களாகவோ இருப்பதில்லை என்கிற கருத்து நிலவுகிறது. என் அறிமுக உரைகள் குறித்து நான் யாருக்கு எழுதியிருக்கிறேனோ அவர்களே கூட பொதுவெளியில் தெரிவித்துக் கொள்வதில்லை. அன்றி நேரில் சந்திக்கிற பொழுதில் கூட அது குறித்து எந்தக் கருத்தும் பரிமாறிக்க்கொள்வதில்லை. எதிர்பார்ப்புக்காக அல்ல. ஒரு படைப்பாளி வாசகனிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை அறிமுடியவில்லை. எதற்காக நூல்கள் வெளியிடுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவகையில் யோசிக்கும் போது விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வைத் தாங்களே அறிவித்துக் கொள்வதைப் போல அல்லது நாமே அவருக்கு விடுதலை அளித்து ஓய்வை அறிவித்து விடுவதைச் செய்தால் என்ன எனவும் தோன்றுகிறது. இலையுதிர்காலமற்ற படைப்புவெளி மிகவும் ஆபத்தானது. இளமையில் முதிர்வு பெற்றுவிடுவதாக அல்லது மகாமேதை யென்று அறிவித்துக் கொள்கிற படைப்பாளர்கள் இருக்கிற மாதிரி நாமும் அவர்களைப் போலவே சுதந்திரம் எடுத்துக் கொண்டுவிடலாம். அவர்களை காலம் விடுதலை செய்யும் என்று நாம் மல்லாந்து படுத்துக் கொண்டதின் விளைவாக காலத்தைக் கூட அவர்கள் விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். இப்படியாக தங்களின் இருப்புத் தீர்ந்த ஆளுமைகள், காலாவதியான கவிஞர்கள், படைப்பாளர்களுக்கு  ஓய்வுகளை அறிவித்துக கொள்ள வேண்டும் தங்களின் சொந்த வாழ்க்கைக்குத் திரும்பிக் கொள்ளலாம். இல்லாவிடில் நாம் அவர்களுக்கு விடுதலை தந்து விடலாம்..அந்த நாள் கனியும் காலம் வந்துள்ளது..ஏனென்றால் அப்பொழுதுதான் அந்த இடத்தில் பா.ராஜா உள்ளிட்ட கவிஞர்களை அமரவைக்க முடியும்.
மேலும் ஒரு கவிதை
நிறமற்றப்பூ

சிறு நிகழ்வில் ஊற்றெடுத்துத் திரண்ட
கசப்பின் ராட்சச ருசி
நடு
நாவில் குதியாட்டம் போடுகிறது

அதன் பேயாட்டத்தில் சுற்றிச்சுழலும்
பூமிக்கு
அந்நிகழ்வில் பூத்த நிறமற்றப்பூவை
ஒரு பைத்தியத்தைப் போல
பிய்த்துப் போடும் வரை அமைதியில்லை

பா.ராஜாவின் கவிதைகளில் உள்ள சில வரிகள் இவை. சாமானியனின் வாழ்வின் அதி உன்னதமான நவீன கவிதைகளாகத் தொகுத்திருக்கிறார். கச்சிதமும் தன் நிலத்திற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாத உவமைகள் இல்லை. ஆகப் பெரும் புனைவுகள் எதுவுமில்லை. கவிதை உலகம் நிராகரிக்கப்படுகிற அதிக பட்ச திறமைகள் உள்ள கவிஞராக அறியப்படுகிறார். இந்தக்கவிதைகளை ஜிப்பாக்கள் பேசாது. ஏ செண்டர் சினிமா ரசனையாளர்கள் பேசமாட்டார்கள். செண்ட் வாசம் பேசாது. சிகரெட்டுகள் பேசாது. தங்கமுலாம் திரவங்கள் பேசாது. நாம் தான் பேசவேண்டும்..பேசுவோம்.
பா.ராஜாவிற்கு வாழ்த்துக்கள். வெளியிட்ட மணல் வீடு இதழுக்கும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய திரு. மு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..உங்கள் முயற்சி மக்களுக்கானது. மக்கள் நம் உலகு..மக்கள் நம் உயிர். மக்கள் நம் உணர்வு..
        
மாயபட்சி-கவிதைகள்-பா.ராஜா
வெளியீடு
மணல்வீடு
ஏர்வாடி-குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டுர் வட்டம்
சேலம் மாவட்டம் 636 453

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக