மூன்றாவது துளுக்கு
-மயுரா ரத்தினசாமி
சிறுகதைகள்
வெகுநீண்ட காலத்தை எடுத்துக்
கொள்கிற தயாரிப்பு போல மயூரா ரத்தினசாமியின் சிறுகதைகள் நூலாக்கத்திற்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது. இந்த தொகுப்பில் பதினான்கு கதைகள். அவர் இன்னும் அதிகமாக
எழுதியிருக்கிறார். ஆனால் தற்பொழுது இவை மட்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. நூல்
கட்டமைப்பு, வடிவமைப்பு, அச்சாக்கம், எழுத்து,பதிப்பு,படைப்பியக்கம். வெளியீடுகள்
என்று தன் பணிகளில் மூத்த ஆளுமையாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி தன்
படைப்புக ளை முன்னிருத்துவதற்கு காலம் அவ்வளவு எளிதாக அனுமதிப்பதில்லையென்பதற்கு
மயூரா ரத்தினசாமியின் இயக்கமே சாட்சி. அவர் பிறர் படைப்புகளை அச்சாக்கத் திற்கு
முன்னுரிமை தருவதும் சிற்றிதழ்கள். ஆய்வு நூல்கள் மற்றும் தன் அச்சுக் கூடத்தில்
பணிபுரிகிறவர் களுக்கான அச்சுப் பணிகள் ஏற்பு என்கிற பொறுப்புகளை
உணர்ந்திருப்பவர்.
தொண்ணூறுகளிலிருந்து இயங்கிக்
கொண்டிருப்பவர்களில் நான் அறிந்தவர்களில் ஒருவராக மயூரா ரத்தினசாமி இருக்கிறார்.
வெகுசனப் பரப்பிலும் அப்பொழுது ஒரு இதழுக்கு நான்கு கதைகள் வெளிவந்த காலம் அது.
கல்கி,ஆனந்த விகடன், செம்மலர்.தாமரை, தீபம், கலைமகள். இந்த இதழ்களில் வெகுசன
வாசிப்பிற் கான சுவராசியமும் இலக்கியத்தரமும் காணப்பட்டது. இந்த இதழ்களில்
ஏறக்குறைய பல நூறு மிக்ச்சிறந்த படைப்பாளர்கள் எழுதினார்கள். அந்தக்கதைகள்
தொடர்ச்சியாகப் பேசப்பட்டது. இலக்கியச்சிந்தனை, உள்பட பல மாநிலம் நழுவிய இலக்கிய
அமைப்புகள் இலக்கிய மேம்பாட்டிற்கு உழைத்தன. அந்தக்காலம் பொற்காலம். நவீன
இலக்கியத் தரத்திற்கு இணையான கதைகளும் சில சமயம் இந்த இதழ்களில் வெளியாகி உள்ளது.
குறிப்பாக கல்கி, ஆனந்த விகடன், கணையாழி, கலைமகள் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகிற
போட்டிகளக்கு எழுதாத படைப்பாளிகள் இல்லை. குறிப்பாக தீவிர இலக்கியவாதிகள் கூட
புனைப்பெயர்களில் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
கோவையிலும் அதன்
பிரதிபலிப்புகளுடன் இலக்கியத்தரத்துடன் எழுதியவர்களில் முக்கியமானவர் களாக ரமணி,
த.முரளி, கா.சு.வேலாயுதன், பிர்தவ்ஸ் ராஜகுமாரன், மயூரா ரத்தினசாமி போன்ற
படைப்பாளர்கள் சிறுகதைகளை தீவிர இலக்கிய இதழ்களிலும் வெகுசன வாசிப்பு இதழ்களிலும்
தொடர்ந்து எழுதியவர்கள்.
நெடிய தொலைவு மிக்க
படைப்புதளத்தில் இருந்தாலும் மயூரா ரத்தினசாமி தன் முதல் தொகுப்பை இப்பொழுதுதான்
கொண்டுவந்திருக்கிறார். ஒரு வகையில் இதன் தலைப்பு இப்படியாக அமைந்திருக்கவும்
பொருத்தம் உள்ளது. மயூரா ரத்தினசாமியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்றும்
அழைக்கலாம். அவருக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ச்சிறுகதைகள் குறித்து
இரண்டு வகை நிலைகள் இருப்பதைக் கண்டோம். தீவிர இலக்கிய இதழ்களில் அதிக
பக்கங்களுடன் மிக நுட்பமாக வாசகன் பற்றிய
அக்கறையில்லாம் அதே சமயம் இலக்கியத்தரம் என்கிற கருதுகோளில் அமைகிற கதைகள்.
அடுத்து வெகுசன மக்கள் மற்றும் நடுத்தர வாசகர்கள் வார மாத பருவ இதழ்களில்
வெளியாகிற நான்கு அல்லது ஆறுபக்க கதைகள். இதில் எழுதப்படுகிற கதைகளுக்கு அந்த
படைப்பாளிகளுக்கு சன்மானங்கள் கிடைக்கும். தீவிர இலக்கிய இதழ்களில் வெளியாகிற
கதைகளுக்குச் சன்மானங்களும் கிடைக்காது பரவலான வாசகர்களும் கிடைக்கமாட்டார்கள்.
இந்த திரிசங்கு சொர்க்கத்தில்தான் மயூரா ரத்தினசாமி போன்ற படைப்பாளர்கள் எழுதியும்
பிரசுரித்தும் வருகிறார்கள்.
மயூரா ரத்தினசாமியின் இந்த
நூலில் பதிவு செய்திருக்கிற கதைகள் இருநிலைகளையும் கொண்டவை. வெகுசன இதழ்களில்
எழுதி வெளியான இலக்கியத்தரமிக்க கதைகளும் ( அந்தக்கதைகள் பரிசும் விருதுகளும்
பெற்றிருக்கிறது என்பது கூடுதலான செய்தி) நூலில் உள்ளது. இந்த நூல் ஒருவகையில் கடந்த
பதினைந்து ஆண்டுகளின் சிறுகதையின் வளர்ச்சிப் போக்குகள் கொண்ட ஆவணமாக இருப்பதை
நான் ஆச்சர்யத்துடன் வாசித்தேன்.
“மூன்றாவது துளுக்கு” தொகுப்பின்
தமிழ்ச்சிறுகதையின் வழியாக தமிழ்க்குடும்பங்களின் இருபதாண்டு சித்திரங்கள்
நமக்குக்கிடைக்கிறது. குறிப்பாக கொங்குநாடு என்ற அழைக்கப்படுகிற நிலத்தின்
மக்களின் வாழ்க்கை. விவசாயம், நோய்கள். இயற்கையின் காலநிலை, உணவு, உறவுகள் என்று
பதிநான்கு கதைகளில் பல்வேறு உலகங்கள்..
இந்தக்கதைகள் குறித்து நண்பர் ஒருவர் பேசுவதாக
இருந்து அவர் தவிர்த்த நிலை வேறொரு நண்பர் வாயிலாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அந்த நண்பர் குறித்தும் நான் அறிந்திருக்கிறேன். அவர் தவிர்த்த பிறகு அவர்
குறித்து நான் யோசிக்கற பொழுது அவர் ஆக்கங்கள் எல்லாம் வெறும் மனிதச் சாணம் என
முடிவுக்கு வருவதற்கு அவர் உதவியிருக்கிறார். போகட்டும்.
சுழற்சி- சிறுகதை லஞ்சம் என்கிற ”மேல் வருமானம்” வாங்காத ஒரு போலீஸ்காரருடைய கதை.
சுமார் பதினைந்து ஆணடுகளுக்கு முன்பு லஞ்சம் பற்றிய சொல்லாடல்கள் இருந்த காலம்
லஞ்சத்தின் அளவுகள் ஆயிரங்கள் லட்சம் என்பதாக. இன்று லஞ்சம் லட்சம் கோடிகள் அளவு.
ஆனால் அதே அளவு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்திருக்கிறதாவென யோசிக்கவைக்கிற
கதை..நடுத்தரக் குடும்பத்திற்கு நடக்கிற பொருளாதர பிரச்சனைகளை வித்தியாசமான
காட்சிகளுடன் கதையை நகர்த்தியிருக்கிறார். லஞ்சம் வாங்காவிட்டாலும் மனம்
வாங்கினால் என்ன எனும் மறு சிந்தனையை வளர்த்துக் கொண்டேயிருக்கிறது என்பது கதையின்
முடிவாக நமக்குள் வளர்கிறது.
இந்த
தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்றாக “ஒற்றைச் செருப்புகள்..“ காணாமல் போன
அக்காவைச் சென்னையில் தேடுகிற கதை. ஒரு கணம் கடற்கரையில் கிடக்கிற பலவகையான
ஒற்றைச் செருப்புகளின் குறியீடுகளில் கதை நகர்கிறது. உண்மையிலேயே இன்று மாற்றுத்
திரைப்படங்களின் காட்சியமைப்புகளுக்குட்பட்டதாக அற்புதமான காட்சிள் செல்கிறது. ஒரு
கட்டத்தில் தன் அக்காவைக் கண்டு அழைக்கிற போது அவளும் அவளருகில் இருக்கிறவரும்
இவனைத்தவிர்க்கிறார்கள். அதிர்ச்சி அவனுக்குள் உறைகிறது. அப்பொழுது “கடலெ..“
என்கிற சொற்களுடன் கதை முடிகிறது. கடல். கடலை, ஒற்றைச் செருப்பு, ரத்த உறவு,
வாழ்க்கை, பிரிவு, துரோகம், உள்பட எத்தனை யோ விதமாக மனம் நினைத்து
அதிர்ச்சியடைகிறது. இந்தக் கதைக்கு அவர் மாநில அளவிலான விருது பெற்றிருப்பது
தகுதியாக உள்ளது.
தலைப்புக்கதை. தன் பிரியத்திற்குரிய வீட்டுச் செல்லப் பிராணிகளைச்
சமயத்தில் மனிதன் கொல்ல வேண்டிய நிர்பந்தங்கள். அல்லது சமயச் சடங்குகளுக்கு
ஆட்படுதல்களால் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நேருகிற மனவருத்தங்களை அழகாக
நுட்பமாகப் பேசுகிற கதை. செல்லமாக வளர்த்த ஆடுதான் தங்கள் குலதெய்வ கோவிலில்
வெட்டப்படப் போய் அது சாமியாகி சாமியிடம் போயிருக்கிறது என்று குழந்தைகளின்
கேள்விகளுக்குச் சமாதானம் சொல்வது என்பது இந்த சமூகத்தின் துக்ககரமான
மதச்சடங்குகளை நாமும் எதுவும் செய்யமால்தான் இருக்கிறோம் இந்தக்கதையை
வாசிக்கும்போது எனக்கு சில வருடங்களுக்கும் முன்பாக ஆடு கோழிகள் வெட்டத்தடை வித்த
அரசாங்கத்தை நினைத்து மனம் அன்றைய நிலையில் பாராட்டியது. இன்றும் கூட திருநெல்வேலி
மாவட்டம் ஈரோடு மாவட்டம் போன்ற இடங்களில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள்
சரிமாரியாக வெட்டப்படுவதை பெருங்கொண்டாட்டமாக நடத்திவருகிறோம். ஆடுகள் மனிதனின்
உணவுதான் என்றாலும் அதை கொலைகளாக நிகழ்த்தித்தின்பதில் என்ன லாபம்.
கதையின் ஜீவனாக இந்த கருத்தோட்டம் வளர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைவாழ்
மக்கள் புலி சிங்கம்,சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அச்சத்திற்காக த்தான் கடவுள்
தம்மைப்பாதுகாக்கவேண்டுமென்று பலியிடுதலைக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
இதில்
அவர் மூன்றாவது துளுக்கு என்பதற்கான விளக்கம் இல்லை. முதல் துளுக்கு என்பது
கடவுளுக்காக ஆடு தன் மகிழ்ச்சியை தன்னை நீங்கள் வெட்டிக் கொள்ளுங்கள் எனும்
அனுமதியைத் தருவது. இரண்டாவது துளுக்கு என்பது அவர்களின் குலத்திற்கு. அந்த இனக்குழுவின்
தலைமைக்கு. மூன்றாவது துளுக்கு என்பது அந்தக் குடும்பத்தின் நலவிருத்திக்கானது
ஆகும். இந்த விளக்கத்தை எதிர்பார்த்திருந்தேன். வாசகர்களுக்காக இந்த விளக்கம்.
மறுபடி துளுக்கு துலுக்கு என்பதன் சர்ச்சை முகநூலில் நடந்தது.
பொதுவாக குலவையிடுவதிலும் “ல“ வருகிறது. அதுபோலவே ஆடுகள்
சிலிர்த்துக்கொள்கிறது. இதிலும் “ல“வருகிறது. சிலிர்க்கிற பொழுது கிலகிலகில்ல்ல்
ல்ல்ல்ல்லுலுலுலு..என்பார்கள் மக்களும் பக்தர்களும். தமிழ் ஒலிப்பு மாத்திரைகளில்
“ள“ விற்கு அதிமாக உச்சரிப்பு மாத்திரைகள் ஒலிக்கிறது “ல“ விற்கு குறைந்த
அளவுதான். ள வில் துள்ளுதல் துள்ளல். துள்ளு என்பதில்தான் வரும். இருந்தாலும்
மகுடேசுவரன் போன்ற நண்பர்கள் அண்ணன் அவைநாயகனும் ஒப்புக் கொண்டுவிட்டதாலும் நான்
ஏற்றுக் கொள்கிறேன். என் தமிழ்ப்பிழையறிவின் படி நான் துலுக்கு என்பதைத்தான்
ஏற்றும் எழுதியும்வருகிறேன்.
அடுத்த கதை மறுவாசிப்பு. மின்மாயனங்கள் தோன்றிவருகிற
வழக்கம் பற்றிய கதைகள். மனித நாகரீகம் ஆற்று ஓரங்களில் இறந்த மனிதர்களுக்காக
இறுதிச் சடங்குகளைச் செய்வது ஆன்மாவிற்கான புன்னியமாக கருதப்படுகிற காலத்தை
மின்மயானமும் நவீன வாழ்க்கையும் மாற்றிவிட்டதும் ஆறுகள் காணாமல் போனதையும்
நினைவுட்டுகிற கதை. தாய் வழி உறவுகளும் தந்தை வழி உறவுகளும் தங்கள்
கடமைகளையாற்றுகிற சடங்குகளைச் சொல்கிற சிறந்த கதை. பெரிய அளவிலான உரையாடல்கள்
விவரணைகள் ஏதுமின்றி எளிய வார்த்தைகள்.
நவீன
சிறுகதை தளம் என்னும் பிரிவைத்தான் ஏற்றுக் கொள்வேன் என்று அடம்பிடிக்கிற
டி.இரஜேந்தர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் டி. ஆரை
விடவும் காமெடியாகவே இருக்கும். அவர்களுக்கு “பல்லி வேட்டை,பூஜ்யத்தின் கீழ்
பத்தாயிரம் வாசனை அல்லது வடிவக்கொலை வழக்கு.. வனசஞ்சாரக் கதைகள் யெஸ்
இராமகிருஷ்ணனும் நானும். முக்கியமான கதைகள். மயுரா ரத்தினசாமியின் நவீன வாசிப்பு
எழுத்தின் பலம் அறியக்கூடிய கதைகளாகும். குறிப்பாக 2000-2005 வரையிலும் நவீனம்
என்ன என்பதை அறியாமல் எழுத வந்த பல படைப்பாளர்களின் கொத்துபுரோட்டா நவீன
எழுத்துகளை பகடிசெய்கிற கதைகளாகவும் இந்தக் கதைகள் அமைந்திருக்கிறது. குறிப்பாக
இந்தக் காலத்திலு மேகூட தீவிர இலக்கிய இதழ்களில் வெளியாகிற பல கதைகள் அப்படித்தான்
இருக்கிறது. இந்தப் பிரச்சனை கதைகளைக் கேட்டுப்பெறுகிற நிலை வருகிறபொழுது
அந்தக்கதைகளை சம்பந்தப்பட்ட பதிப்பாளரும் சிறுபத்திரிக்கை ஆசிரியரும் வெளியிட்டு
விடுகிறார்கள். இந்த நிலைக் கதைகளையும் அந்தக்கதாசிரியர்களின் அமைப்புகளையும்
விமர்சனம் செய்கிற கதைகள். அதிலும் மயுரா சில சிறுகதைகளுக்கான கண்ணியத்தை காட்டி
எழுதியிருக்கிறார்.
பிறகு.இது நம்ம ஜாதி,(குமுதம்- இலக்கியச் சிந்தனை விருது) ஜோசப் என்பது
வினைச்சொல் ( ஆனந்த விகடன்) பூட்டைத்தொலைத்துவிடு, பச்கைக்கண்ணாடி, சுமைதாங்கிகல்,
காதல் அல்ஜீப்ரா (ஆனந்த விகடன்) இந்தக்கதைகள் 1999-2000 வெளியான இலக்கியத்தரம்
கொண்ட சிறுகதைகள். இக்கதைகள் அந்த நாட்களின் சிறுகதைகளின் தரத்தையும் காலத்தையும்
நினைவுட்டுகிறது. சமகாலத்தில் ஆனந்த விகடன் சிறுகதை ஒன்றுக்கும் அதுவும் நான்கு
பக்கங்களாக குறைத்துவிட்டதும் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது அழுத்தமான
இலக்கியத்தரமிக்க கதைகள் இரண்டும் வெகுசன வாசிப்பிற்கான சுவராசியமிக்க கதைகள்
இரண்டும் ஒருபக்கச் சிறுகதையும் பிரசுரமாகும்.
எல்லாம் போயிற்று. ஒருவகையில் தீவிர இலக்கியம் பேசுகிறவர்கள் கூட விஜய்
தொலைக்காட்சி மற்றும ஆனந்தவிகடன்.தினமலர்,தமிழ் இந்து நாளிதழ் போன்றவை
சொல்கிறவைதான் மிகச்சிறந்த இலக்கியத்தரம் என்று உணர்த்த துவங்கியிருக்கிறார்கள்.
இலக்கிய இதழ்களாக வந்த கலைமகள்,அமுதசுரபி,கல்கி. போன்ற இதழ்கள் முழுக்க பக்தி
சோதிடம் வாஸ்த்து என்று திரும்பிவிட்டது. மயுரா இந்தப் பதினைந்து ஆண்டு இலக்கியத்
தரத்தின் அழித்தொழிப்பு நிகழ்வுகளைக் கூட நினைவுட்டுகிறார். இந்தச் சிறுகதைகளின்
வாயிலாக.. எப்படி நல்ல அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டு அதன் சந்ததிகள்
திரும்பித் தங்கள் குடும்ப வாழ்விற்கு விரட்ப்பட்டார்களோ அப்படித்தான் நல்ல
இலக்கிய வாதிகள் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டதை நினைவுட்டுகிறார். மயுரா
ரத்தினசாமி எழுந்து நின்றிருக்கிறார். அவர் எழுத்திற்கு அந்த வலிமையுண்டு.
இந்த நூலுக்குள் நுழைவதற்கு
முன்பாக சில விளக்கங்கள் தரவேண்டியிருக்கிறது. சமீபத்தில் ஒரு நண்பரின் படைப்பு பற்றியெழுதியிருந்தேன். அவர் அந்த அறிமுகத்தை
நான் எழுதியது பற்றியெதுவும் வெளியில் காட்டிக் கொள்ளவேயில்லை. ஒரு வேளை அவர்
மறந்திருப்பார் என்னவோ என்று மறுபடியும் அவர் அறியும் வகையில் சில காரியங்கள்
செய்தேன். பிறகும் அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை.
நான் இந்த வழக்கை
மறந்துவிட்டேன். இதை ஒட்டிய வேறோரு இடத்தில் வேறொரு நண்பர் “நீங்கள் எழுதுகிற சில
அறிமுக மற்றும் விமர்சனங்களை வாசித்தேன். நீங்கள் எல்லாவற்றையும் பாராட்டியே
எழுதுகிறீர்கள்..அதனால் உங்கள் மதிப்புரைகள் அறிமுக உரைகள் மீது எனக்கு பெரியதாக
எந்ந வசீகரமும் இல்லையென்றார்..“ வெளிப்படையாக..
பிறகு வேறொரு தளத்தில் வேறொரு
நண்பர் பிளாக்கில் உங்கள் விமர்சனங்கள் வந்தால் வாசிப்பதிலிருந்து தவிர்த்து
விடுவேன் காரணம் நீங்கள் அந்த நூலிலிருந்து விலகி வெகுதூரம் போய் உங்கள்
அனுபவங்களைச சொல்கிறீர்கள் படைப்புகள் குறித்து விரிவான ஆழமாக முழுமையாகச்
சொல்வதில்லை அதனால் வாசிப்பதில்லை. நான் அவருக்கு மட்டும் பதில் சொன்னேன்.
“நண்பா..நீங்கள் குறிப்பிடுவது போல நூலைப்பற்றிய எல்லா விபரங்களையும் அந்த
நூலின் பக்கங்களை விடவும் எழுதிட முடியும் பிறகு நீங்கள் அந்த நூல் பற்றியும் அறிய
என்ன உள்ளது. அந்த நூலை நீங்கள் வாங்கவா போகிறீர்கள்..ஏற்கெனவே டுமீல்களும்
டுபாக்கூர்களாகவே நீங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறீர்கள்...ஒரு இடத்தையும்
பிடித்துவிட்டீர்கள்.. பிறகெப்படி நண்பா எழுதுவது என்றேன்..“ பதிலுக்கு அவர்
“நண்பா உங்கள் விமர்சனத்தில் கடுமையான கறாரான அவதானிப்புகளும் கூறுகளும் இல்லை“
என்றார். அதுதான் விமர்சனமாம்.. அப்படியானால் இதுநாள் வரையிலும் பாராட்டுவது
என்பது தமிழ் விமர்சன மரபில் இல்லவேயில்லையென்ற புதிய விளக்கத்தை அவர் அளித்தார்.
அந்த நண்பர்களின் அறிதல்கள் நம் வரும் நாட்களின்
உரையாடல்களில் அறியலாம்.
மயுரா ரத்தினசாமியிடம் இப்படியான கதைகளில் இன்னும் இருபது கதைகளாகவாவது
நிச்சயம் இருக்க வாய்ப்புண்டு. அந்தக்கதைகளையும் விரைவில் தொகுக்க வேண்டும்.
ஏனெனில் கழிந்தகாலத்தின் மனசாட்சிகளில் நீங்களும் ஒருவர். எழுத தெரியாதவர்கள்தான்
நம்மை நிராகரிக்கிறார்கள் என்பதை பொன் இளவேனில் அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.
அப்படியானவர்கள் இலக்கியத் தரத்தை மிகவும் உயர்த்திப்பிடிப்பார்கள். அப்படியான
தரத்தில்தான் எழுதுவார்களாம் இல்லையென்றால் எழுத மாட்டார்களாம். அட அதுதான் என்ன
இலக்கியத் தரமென்றால் அதையும் குறிப்பிடத்தெரியாது. படைப்பாளியையே மதிக்காத போது
பிறகு அறிமுக உரைகளை அவர்கள் எங்கே மதிக்கப் போகிறார்கள்.
மயுரா ரத்தினசாமி போன்ற நெடுங்கால
மரபு கொண்ட தீவிர இலக்கியவாதிகள் மீண்டும் தங்கள் படைப்புகளைக் கொண்டுவருவதும்
எழுதும் பொழுதுதான் உருவப்போலிகளையும் சமூகப் போலிகளையும்
ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சங்களையும் களையெடுக்க முடியும்.
சமீபத்தில் ஒரு டிடர்ஜெண்ட் இலக்கியவாதியுடன் உரையாடினோம். என்னைப்பார்த்து
அவர் என்ன இப்படிக் கசகசன்னு ஒரே பாராட்டுரைகளா பக்கம்பக்கமா எழுதறீங்க..இதைய
புத்தாண்டுல கொறைச்சிக்கிங்க என்றார்
“எங்கே நீங்கள் ஒரு நூல் குறித்து ஒரு பக்க அளவில் பாராட்டி எழுதுங்கள்
பார்க்கலாம்..வாசிக்கலாம்..“என்றார் அருகிலிருந்த பொன்இளவேனில்.
அவர் “ஹிஹி ஹி...“என்றார்.
வெளியீடு
மூன்றாவது துளுக்கு—விலை-ரு-130-
மயுரா ரத்தினசாமி சிறுகதைகள்
எதிர் வெளியீடு
96 நியு ஸ்கிம் ரோடு
பொள்ளாச்சி-04259 226012-98650 05084
உண்மையில் நீண்ட விமர்சனம்தான். ஆனால் சுவையாக இருந்தது..
பதிலளிநீக்கு