வியாழன், 2 ஏப்ரல், 2015

மு.ஹரிகிருஷ்ணனின் “அழிபசி” கவிதைகள் குறித்து.



“அழிபசி “
தவசிக்கருப்புசாமி ( மு.ஹரிகிருஷ்ணன்) கவிதை நூல் குறித்து-   ---    இளஞ்சேரல்
      

 தமிழ்க் கவிதை வடிவங்களில் எத்தனையோ விதமாக வடிவுகளில் எழுதிப்பார்த்திருக்கிறது காலம். ஒப்பாரிப்பாட்டுகள்,குறிப் பாட்டுகள், விடுகதைப் பாட்டுகள். சிலேடைப்பாட்டுகள். என்றாக தொடர்ந்து நீண்ட கதை ஒரு நிலைக்காலத்தில் அதாகப்பட்டது எல்லா ஒலகச் சொத்துக்களையும் தாராளம் பண்ணியதும் பொறகுக்கு வார எல்லா வரும்படிச் செலவாட்டங்களும் உலப் பொதுமையா ஆக்கினதுமான உலகமயமாக்கினது ஆக காலம் தொண்ணூறுக்கும்னு நாம கணக்கு வெச்சிக்கலாம். எழுத்தில். நடையில, ஆக்கத்தில, பேச்சு வழக்குலயெல்லாம் மொழி சுத்தமாயிட்டு. ஆம்மா. அப்பிடியொரு சுத்தவத்தம். எல்லாத்திலயும் சாணி வழிச்சிட்ட தீட்டு. பேசினா, கூடினா, அழுதா, பொறந்தா. பெத்தா முச்சுடும் சுத்தவத்தப் பேச்சுதான்.
மூத்தகுடி பிள்ளை செல்லப்பிள்ளை
இளையகுடி பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை
கூத்தியார் சினையானால் கலி தாங்குமா
மைக்கண்ணிக்கு மசக்கை மாப்பிள்ளைக்கு அவஸ்தை
மாத்திரைக்கு கரையவில்லை
வாரிக்கொடுத்தாலும் காரியமாகாது
மருத்துவர் ரொம்போ நல்லவர்
மேலே மொழுக்கு உள்ளே லொடக்கு
பாத்தியப்பட்டவன் தொடர்பெல்லைக்கு அப்பாலிருக்கிறான்
எருக்கங் குச்சியோ பொவிலைக்குச்சியோ
உசுர எடுக்காமலா போய்விடும்- பக் 25
  
இந்தக் கவிதைக்குள்ளாக பேசப்படுகிற செய்திகள் எத்தனையெத்தனை. எத்தனை காலத்தின் இழிவும் மரபும் சமகாலத்தின் தொடர்ச்சியும் வருகிறது. ஆனால் காலம் முழுவதும் பெண்ணுக்கு ஒரே மாதிரியான வலிதான். அவள் கூத்திச்சியாக இருந்தாலும் செரி..மகாராணியாக இருந்தாலும் சரி. போர்க்களத்திலிருந்தாலும் சரி. அல்லது கந்துவட்டி வரவு செலவுகளானாலும் சரி, நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டமானாலும் சரி.. தேசிய ஒலிம்பிக் வீராங்கனைகளானாலும் சரி..
கவிதையாக்கத்தில் இந்தக்கவிதைகள் முழுக்கவும் எகன மொகனை என்று சொல்லப்படுகிற சந்த வித்தைகள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அது தாள சங்கதிகளுடைய விருத்தங்கள். கட்டுகள். ஹரி இசைக்கருவிகள் வாசிக்கிற வகையறாவாகவும் இருப்பதால் அந்தச் சொற்கள் வார்த்தைகளாகவும் வந்து நம்மையறிமால் தாளக்கட்டு வகைளை எண்ணச் சொல்கிறது. கவி காளமேகமும் பலபட்டடைப் புலவர் களும் நினைவில் வாராமல் இல்லை. இவர்களுக்கு ஒரு மரபில்லாமல் போனால் நம்மை ஊர் மெச்சுமா என்ன.
இதே வாழ்வின் கதையை நம்ம ஆள் கவி காளமேகம் கூட கூத்தியாரையும் குரங்கையும் ஒப்பு நோக்கிய பாடல் ஒன்று கிடைத்துள்ளது.
ஓட்டம் கடியதால், உள்ளவரை மேவுதலால்,
சேட்டை எவரிடத்தும செய்தலால்- நாட்டமுடன்
காத்திரத்திற்குட்டியுறக் கட்டுதலால், தெட்டுதலால்
கூத்தியாருக்கு நேராம் குரங்கு

பெண்கல்வி  உள்பட பெரிய பெரிய மாத்தங்கள் வந்திட்டு. மேநாட்டுக்கலிவி, உள்நாட்டுக் கலிவி, இசங்கொள் இப்டியாட்டு நெற வெசனங்களும் வெணயங்களும் வந்திட்டாக பெறவு கம்ப்ளீட்டா மாறிட்டு. நம்ம ஆளுக நம்ம சொந்த தயாதிக கூட சுத்த வத்தப் பேச்சுதான். தெரியமி கூட ஊர் வழக்குப் பொழப்பு பேச்சு கெடையாது..போட்டும் நாசமா..
        ஹரிகிருஷ்ணன் கதைகள் எழுதறமாதிரியே “சேப்“ ல எழுதியிருக்காப்டி. கவிதைகள்ல நம்ப முடியல. ஆமா கவிதைகள்னா எப்படியிருக்கணும். சுத்தவத்தமா பேச்சுப் பதனமா. பொழங்கற பண்டமா இருக்கணும்லியா அதான இங்க வெனயம் அப்படியில்ல..கொஞ்ச நஞ்சம் நிதானம் தப்பியிருக்குதுதான் சொல்லணும். அதுலதான் இருக்குது நல்ல விசேசம்ங்கறன்..
    ஹரி எழுத்த வாசிச்சம்ணு வெய்ங்க..அப்படியொரு சொகம் இருக்கும். என்ன சொகம். நம்ம சொந்த சாதிக்காரப் பயலுக உள்பட மத்த பிறவெட்டு சாதிக்காரச் சனங்க அதாவது நம்ளுக்கு ஓடமாட ஒத்தாசிக்கற பயலுகளோட பத்திருபது வருசம் கேப் உட்டு மறுடியும் பேசிக்கறம்லியா அந்த சொகம்ங்கறன். நம்ம தமிழ்ல கொஞ்சம் வழக்காறுக நெறைய எழுதியிருக்காங்க..இல்ல ன்னு ஒரே முட்டா போட்டுத்தள்ளிற முடியாது.. கி.ரா. கழனியுரன், தோப்பில் முகமது மீரான், தங்கர் பச்சான், சோ.தருமன் இப்படிக்கா பல பெரியாளுங்க காபகத்திக்கு வராப்டி. வாசிக்கயில அப்படியே அந்த மண்ணும் காலமும் மனுசங்களும் கூடிக்கே வாரதுதான் இதனோட விசேசம். எல்லாப்படைப்பாளிங்களும் மண்ணுக்கார மனுசங்கதான் இருந்தாலும் ஏன் அவிங்கனால எழுத முடியாம ஆகுது. அதே மாதிரி ஏன் ஹரி மாதிரி எழுதறவங்களும் இருக்காங்கன்னு நாம கண்டுகிறதுதான் பொது நோக்கமுள்ள விமர்சனம்ங்கறன். நம்மாளுக கிட்ட இதச் சொல்ல முடியாது கேட்டா மோளம் பாங்க.. அவன் மொதல்ல கால்குலேட்டர் எடுத்துக் கணக்குப் போட ஆரம்பிச்சிருவான். 234-545 சட்டமன்ற பாரிலிமெண்ட் கணக்கு..டேய் இந்தக் கவிதைய கட்டுரைய கதைய நாவலப் படிச்சு என்ன்னு சொல்லாறான்னா.. செல்ல நோண்டுவானு கால்குலேட்டர நோண்டுவான்னு ஆனா எதையும் சொல்லமாட்டானு. குறிப்பா இந்த கெழட்டு கட்டைக போடற கணக்கு மாதர யாரும் போட முடியாது. பொஸ்தகமும் போட்டுட்டு மசாசும் பண்டியுட முடியுமா அதுவும் தமிழ் மசாசு..நம்மாள முடியாதுன்னு ஒதிங்கிட்டா வக்காலி நீ எலக்கிய உலகத்தில கெடையாது. மொதல்ல ஒரு குருப் ரெடி பண்ணி தாசா வாசிக்கவாவது செய்யணும்னு வெங்ய்க.. இதெல்லாம் தாண்டிதான் எதாவது படைப்புல செஞ்சாகணும். சீரும் செஞ்சாகணும்.பொழப்பும் நடக்கணும் பாடுவாசியும் கிளீன் பண்டணும். இது ஆகாதுன்னுட்டு பாய்ஞ்சர்றவங்களும் இருக்காக..போட்டும். நம்ம பொழப்ப..கதைய..அன்னாடம் தினத்தில நடக்கற கதைகளை..சின்ன சின்ன துடுப்பதி வண்டங்களாட்டம் எழுதறம்னு வெய்ங்க..நமக்கு ஒரு சந்தோசம். படிக்கறவங்களுக்கு..அடடா..பார்றா. நம்ம. வாழ்க்கையில்லயா இது.. நம்ம சனம் எப்படியெல்லாம் காலந்தள்ளிச்சி...எது நீச்ச போட்டிச்சி..குறிப்பா நம்ம ஆட்டக்காரங்க..வேசங்கட்டிக..பாட்டுக்காரனுக..பத்தியெல்லாம் யாரு கவிதையா எழுதறது. அவிங்களுக்குன்னு மொழியில்லயா. படைப்பில்லயா, அவிங்க இந்த சமூகத்திற்குள்ளாறயும் வாழலையா. அவிங்க கிட்ட ஆத்மாத்மான கதைக இல்லாமயா போச்சு..இப்டிதான்  யோசிக்கிறாரு நம்ம ஹரி. சரி நாம பொது வழக்குக்குப் போவம்..இரண்டு எழுத்து நடையும் எப்படி மாறுதுன்னு பாருங்க..இந்த வித்தியாசம்தான் வாழ்க்க..வருமானம். கலை, பண்பாடு. இன்ன பிற இத்யாதி தண்ணி மொண்டுக்க பிடிக்க நடக்க இருக்க பேழ..போய் வர மாட்டுவண்டித் தடம் சகிதம்..னு செக்குப்பந்தில எழுதற மாதிரி... மேல வாசிங்க..
பாட்டி சமைந்த ஜோருக்கு கூத்தின் பேரில்
நாட்டமானது கோமாளித்தாசனுக்கு
கட்டித்தொண்டை கிழடு கிண்டு ஆகாதென்றவன் பேய்க்கு
மொண்டி மொடத்தொடு செவிட்டுமையும்
சேர்ந்தாடுமென்று திரு நீறு கொழித்தோம்
பல்லால் முடி போட்டு தட்டுவாணி கல்யாணம்
வைத்தாடச் சொல்லி தாம்புலம் தந்தான்
ஆடாத ஆட்டம் பாடாத பாட்டென்று உபரி சம்பளமும்
ஒரு நோட்டு தரகுங் கேட்டு நாங்களதை நாவால் அவிழ்த்தோம்
மணியம் இன்னதென்று இல்லை வரும்பிடி கணக்கில்லை
குண்டையை விற்றுத் தருகிறேன் கூலியை
ஏற்றிக் கேளுங்கள் என்றான்
ஆயிரம் வேண்டாம் லட்சம் வேண்டாம்
ஒரு கோடி கொடுவெனக் கேட்டோம்
ஆறுஜதை துண்டு கிழித்தால் அரைச்சுற்று வாராதென
பகடி பேசி சிரிக்கிறந்த பகல்வேசம்----பக் 61

          தொகுப்பில் உள்ள பல கவிதைகள் கூத்து நிகழ்வைக் காண்பது போன்ற உணர்வினைத் தருவது புதுமையாக இருப்பினும் அதுவே சோர்வு தருகிறது. உள்ளார்ந்த கவிதைகளுக்குள் சொல்லப்படுகிற கதை மாந்தர்களின் வாழ்க்கையும் வாழ்க்கையே கூத்துதான்..கூத்துதான் வாழ்க்கை என்பதாக உணர முடிகிறது. எளிய மனிதர்கள் தங்கள் உரையாடலில் மிகச் சாதாரணமாகவே “ அந்தக் கூத்த ஏங்கேட்கற..“ என்பதை நாம் காணமுடியது. உலகமே நாடகமேடை..நாம் அனைவரும் நடிகர்கள் என்று சேக்ஸ்பியர் சொன்னதும் நினைவுக்கு வராமலில்லை.
     இந்தக் கூத்து பிறந்த கதை மிகவும் சுவராசியமானது. இயற்கையின் உந்துதலால் அசையும் மரங்களைப் பார்த்து ஆடும் பறவையைக் கண்டு கற்றுக் கொண்டவன் மனிதன். நாகரீகம் காணாத மனிதன் மெல்ல மெல்ல தன் உடலசைவுகளை தனக்கு நேரும் ஆபத்தான காலங்களில் உடல் வளைகிற தன்மையை அறிந்து ஆச்சர்யம் கொண்டான். அசைவுகளைத் தரம் பிரித்தான். அதுவே காலப் போக்கில் கூத்தாக விரியத் தொடங்கியது. பிற்பாடு நாட்டியமாகவும் நடனங் களாகவும் வளர்ச்சியடைந்தது.
ஆடற்கலையை கூத்துக்கலை என்றுதான் அழைத்தானர் பண்டைய தமிழ் அறிஞர்களும் மக்களும். கூத்துக்கலை மிகவும் பழமையான மரபு. சங்க காலத்தில் ஆடற் கலையும் கூத்துகளும் செம்மையாக நடத்தப்பட்டதை அறிவோம். பழந்தமிழ் நூற்பாக்களில் செய்திகள் உண்டு. பல அறிய கூத்துக்கலை வடிவங்கள் மறைந்து போய்விட்டன. அழிந்தவைகளில் முக்கியமானவை பதினோராடல் என்னும் வகைகள். மனிதர்கள் ஆடிய இந்த ஆடல்களும் கூத்திசையும் ஆதிகாலத்தில் தெய்வங்கள் ஆடியதாக அறியப்பட்டது. அந்தப் பதினோராடல்கள் என்னவென்றால்- அல்லியக்கூத்து, கொடுகொட்டியாடல்,குடையாடல், குடக்கூத்து, பாண்டரங்கம், மல்லாடல், துடிக்கூத்து, கடையக்கூத்து, பேடாடல்,மரக்காலாடல்,பாவைக்கூத்து என்பது.இவற்றில் முதல் ஆறு ஆடல்களும் நின்று ஆடுவது, பின் ஐந்தும் வீழ்ந்து ஆடுவது.
கடலுக்கடியில் மூழ்கிக்கிடந்த காவிரிப்பும்பட்டினத்தில் இந்திரவிழா நடந்தபோது அந்நகரத்தின் வீதிகளில் பலப்பலக் காட்சிகள் தெண்பட்டதாம். அப்பொழுது அவற்றில் ஆடிய ஆட்டங்களில் பேடிக்கூத்தும் இடம் பெற்றதாக
நீள்நிலம் அளந்தோன் மகன் முன்னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் ஆகும்
( மலர் வளம்புகாதை –மணிமேகலை)
என்றும் சங்க காலக் கூத்து வகைகளில் முக்கியமானவையாக நாம் அறியப் பெற்றதில்
மெய்க்கூத்து, அவிநயக்கூத்து,வென்றிக்கூத்து, வேத்தியல் கூத்து, பொதுவியல்கூத்து, சாந்திக்கூத்து, விநோதக் கூத்து, கழைக்கூத்து, குடக்கூத்து, குரவைக்கூத்து. வசைக் கூத்து, தோற்பாவைக் கூத்து. என்பதாக அறிந்துள்ளோம்.
மேலும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 12..15 ன் பாடலில்
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்கு அறிந்து ஆங்கு
       இந்திய மரபின் தொடர்ச்சியான வட்டார வழக்குப் புதினங்கள்,கவிதைகள் வந்து கொண்டேயிருக்கிறது. அசாம்.மிசோரம்,சண்டிகார் போன்ற மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் இலக்கியவகைகள் மரபான மொழியின் சிக்கல்களைக் கொண்டுதான் எழுதப்படுகிறது. இந்தி,மராட்டி,பெங்காலி மொழிகளிலிருந்து தங்களுக்கான வாழ்வியல் மொழியாக இந்த வடகிழக்கு மாநில மக்கள் குறிப்பாக மலையக தோட்டத்தொழில் சாந்த மக்கள் தங்கள் மொழிகளை மேலும் குறியீடுகளாக மாற்றிக் கொள்கிறார்கள். வழக்குப் பேச்சு மொழிகளை வேறுமாதிரி தங்கள் உயிர் உடைமைப் பாதுகாப்பிற்காக சில புதிய வகைச் சொலவடைகளை உருவாக்கியே வருகிறார்கள்.
                தமிழ் மொழியின் பேச்சு அடைவுகளும் வட்டார வழக்குச் சொலவடைகளும் இப்படித்தான் தங்கள் பொருள் பற்றிய மீறல்களை உழைப்பாளர்கள் உருவாக்கினார்கள். அரசு ஆட்சி அதிகார மையங்களுக்கு எதிரான குறியீடுகளை மக்கள் முதலில் தங்கள் மொழியிலிருந்து துவக்கினார்கள். சாதாரண வழக்குப் பேச்சிலிருந்து ஒரு வாக்கியத்தை தங்கள் பாதுகாப்பிற்கா கவும் வேறொரு நிலத்தவன் தங்கள் பாஷையை அத்தனை எளிதில் கற்றுக்கொள்ளக் கூடாது. என்பதில் கவனமாக சில சொற்றொடர்களை உருவாக்கினார்கள். அப்படித்தான் தமிழ் மொழியிலும் வழக்காறுகள் உதித்தது உழைப்பு மிகுதியான பக்கங்களிலிருந்தெல்லாம் மொழி உடைந்து சிதறி புதுப்புதுவகையான மொழியும் எழுத்தும் உருவானது. அது தமிழா அல்லது தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் கலந்து பேசப்படுகிற கொச்சைத் தமிழாகவும் அறியப்பட்டதை அறிகிறோம். அதற்கும் அகராதிச் சொல்லும் கலைச்சொற்கள் பிரிவும் உண்டு. இப்படியாகப் பிரித்து மக்களையும் பிரித்து மக்களை மண்ணை கலையைக் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான் உழைக்கும் மக்கள் தங்களை தங்கள் மொழியினைப் புதுமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
       மு.ஹரிகிருஷ்ணன் எழுத்துக்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன். வாசிக்கிறேன். தமிழ் மொழி உயிருள்ள மொழி என்பதாக அறியப்படுவதே இந்த வட்டார வழக்குச் சொலவடைகளால்தான். புரியவில்லை யென்கிற வர்களிடம் ஒன்று சொல்ல்லாம் உன் தந்தையிடம் கேள் நிச்சயம் பொருள் கிடைக்கும் எனலாம்..தமிழில் பள்ளு இலக்கியங்கள் உள்பட பல நாட்டுப்புறப்பாடல்களிலிருக்கிற விடுகதைப்புதிர்களில் உள்ள தொன்மக்கதைகளின் வடிவமாக ஹரியின் கவிதைகள் தொடர்கிறது. கவிதைகள் என்பதாக அறியப்பட்டுப் பதிக்கப்பட்டிருந்தாலும் பாட்டுச் சந்தங்களும் மோன வகைகளாகவும் உள்ளது. கவிதை என்பதே பாடலாகப் பாடப்படுவதுதான். பாட்டாகப் படிப்பதுதான் கவிதை. ஆனால் ஏற்கெனவே சொன்னது போல சுத்தவழக்கு வந்த காரணமும் வாசிப்புத் தன்மை மாறியதாலும் நாமும் மக்கள் மனநிலைக்கு மாறிக் கொண்டோம்.
            தொல்காப்பியமும் நன்னூலும் சொன்ன எல்லா இலக்கிய இலக்கண மரபுகளையும் மீறிடத் துவங்கியதின் அடையாளமாகத்தான் தற்கால நவீன இலக்கிய மரபு தொடர்கிறது. இந்தக் கவிதைகளில் ஆங்காங்கு கூத்திசை மரபு பாடல்களின் தாக்கம் உள்ளது. திருமூலர் சொன்ன கூத்து மரபிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் நாட்டிய மரபுகளும் இந்தக்கவிதைகளில் வருகிறது. இயல் இசை நாட்டிய மரபுகளுக்கு எல்லாம் ஒரே சந்த வகைகளும் தாள வகைகளும் ஒன்றுதான். அடிப்படையிலக்கணங்கள் அனைத்தும் ஒன்றுதான். கூத்திசை மரபுகளும் நாடோடிப்பாடல்கள், விடுகதை மரபுகள். ஒப்பாரி, தாலாட்டு, உள்பட தமிழிசை மரபில் பேசப்படுகிற எல்லா வகைகளும் ஒரே அடிப்படைதான். அப்படியாகவே இந்தக்கவிதைகளையும் நவீன இலக்கிய வகையின் கவிதைகள் என்றே அறிந்து கொள்கிறேன். நாட்டுப்புறங்களில் குறிப்பாக சிறுதெய்வ நாட்டார் தெய்வ அரங்குகளில் பாடப்படுகிற எல்லாப் புத்தாக்கப் பாடல்களும் இந்த வகைமை சார்ந்தவையே. கிருத்துவ தேவலாங்கள் உள்பட எழுதப்படுகிற வரிகள் யாவும் செரு சலத்திற்குரியவை மட்டுமல்ல நமது வளவுகளின் சரித்திரமும் சொல்பவைதான். இங்கு ஒவ்வொரு வரியும் மிகச்சாதாரணமான வரிகள் அல்ல. கூத்து வேசக்காரனின் வாழ்வு. அவனின் கலையின் பொருள். அவன் ஆன்மாவின் சங்கீதம். அவன் கட்டும் அடவுகளில்  அவனின் பரம்பரைக் கால்களின் ஆட்டங்களின் மிச்சம்.
மு.ஹரிகிருஷ்ணனின் இந்த “அழிபசி” கவிதைகள் வாசக மனதின் பல திசைகளைக் காட்டியிருக்கிறது. தொன்மையான காலத்தின் கிளைகளை காய்ந்து மிஞ்சிய சருகுகளை ஞாபகப்படுத்தியிருக்கிறது. இதிகாசப் படைப்புகளில் செவ்வியல் தன்மையைத் தருகிறவை இந்தக் குறுங்குறு கதைகள்தாம். அரக்கன் அரக்கி கடவுள் பக்தன், சாபம் வரம் அழிவு போன்ற செய்திகளுக்குள்ளாக சொல்லப்படுகிற நீதியும் அறமும் தர்ம சிந்தனைகளும் நமக்கு ஆச்சர்யமும் விகாசமும் தருபவையாகவே இருக்கிறது. மீண்டும் நமக்குத் தீண்டுவதற்கான உணர்ச்சி களைத் தரவல்ல பிரதிஉடலாகவே இந்த தொன்மங்கள் விளங்குகிறது என்பதை ஹரியின் கவிதைகள் சொல்லுகிறது. நமக்கு பஞ்ச காலத்தில் வள்ளல்கதைகள் கேட்டிருக்கிறோம். கோடைகாலத்தில் மழை பற்றிய செய்திகள் உவப்பு தரும். மழையில் தீயும் நிலச்சூட்டில் நிழலும் நமக்க உவப்பு.
அப்படித்தான் இந்த நெறியற்ற படைப்பு தார்மீக உணர்வுகளற்றுப் போன ஒத்துக்கு மத்தள  நவீனப் படைப்பு காலத்தில் எல்லாம் செத்து சுடுகாடாய் ஆய்ப் போன காலத்தின் வாய்க்கால்களில் மிதந்து வருகிறது ஹரியின் அழிபசி. இந்த நம்ப முடியாத மாந்தர்களின் கதையின் வருகை. இலக்கியப் பிரதிகளில் முக்கியமானதாகவே படுகிறது. கள்ள மௌனம் கொண்ட செவிடர்களின் காதுகளில் ரசனையெனும் கும்பி பொருத்தி ஈயம் காய்ச்சி ஊதுவதையாவது நிறுத்தாமல் ஊதிவைப்போம்.
அழிபசி
கவிதைகள்
தவசிக்கருப்புசாமி (மு.ஹரிகிருஷ்ணன்)
வெளியீடு-மணல்வீடு- ஏர்வாடி-குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டுர் வட்டம் சேலம் மாவட்டம்-636 453
98946 05371






















வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

"'kugai maravasigal"" nadagam pathivi




“‘குகைமரவாசிகள்’” –நவீன நாடகப் பதிவு

 

கோவை பூ.சா.கோ கலைஅறிவியல் கல்லூரியும் அதன் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மாணவர்-மாணவியர் அமைப்புகள்-நிலாமுற்றம் ஆகிய ஒருங்கிணைந்த பொறுப்பில் மணல்குடி நாடகநிலத்திலிருந்து வந்த கலைஞர்கள் நடத்திக் காண்பித்த நவீன நாடகமான குகைமரவாசிகள் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே தமிழின் மிக முக்கியமான ஆக்கங்கள் எல்லாம் முதல்முறையாக கலைவையான பெருநகரமான கோவையில் நடந்து வந்துள்ளது. சென்னைக்கு அடுத்த பெருநகரமாக கோவையிருப்ப தாலும் சென்னையில் ஒரு புதிய ஆக்கத்தற்கான வரவேற்பு எந்த லட்சணத்தில் கிடைத்து வருகிறது என்பதற்கான சாட்சிகள் அரங்கேறிக் கொண்டேயிருக் கிறது. ஒரு நிகழ்ச்சியாவது உருப்படியாக நடந்து முடியுமா என்பது சந்தேகமான நகரமாக சென்னையும் அங்கு வாழ்கிற பெருங்குடி இலக்கியக் குழாம் வகையறாக்கள் செய்கிற செப்படி வித்தைகள் நாடறியும்.

இதன் காரணங்களாக கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களுக்கு முழுமையாக நம்புவது இன்று நம்ப வேண்டியாகவேண்டிய கட்டாயத்தை கோவை ஏற்படுத் தியிருக்கிறது. கோவையை விட்டால் அடுத்த நிலையை கலையம்சத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு அடுத்த இடத்திற்கான நிலை வெற்றிடமாகவே உள்ளது. இதற்கு முன்பு நவீன நாடக கர்த்தாக்களான கோமல்சுவாமிநாதன் மு.இராமசாமி,பிரளயன், உள்பட பல கோக்கொக முனிவர்களான கிரேசிமோகன்,விசு,எஸ்வி சேகர்ஜி, மௌலி,பிரசன்னா, போன்றவர்களும் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்கள். கோவையிலுள்ள பிரபலமான கல்லூரிகளில் தினமும் ஒவ்வொரு ஆங்கிலப பெயர்களில் சதா கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் சினிமா தொலைக்காட்சி ஊடகங்கள் சேர்ந்த கேசவமூர்த்திகள் அழைக்கப்பட்டு பாடங்கள் பாடல்கள் நடனங்கள் காட்டப்படுகிறது. அந்தக் கலைஞர்களுக்கு லட்சக்கணக்கிலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட அறைகளும் சிங்கிள் லார்ஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொண்ட சரக்கு சப்ளை செய்யப்படுகிறது. அவர்களின் நிகழ்ச்சிகளின் கூட்டங்களுக்கு கூடும் ரசிகர்கள் கூட்டம் கடல் அலைகளைத்தாண்டும். இப்பொழுதும் சில கலை அறிவியல்  கல்லூரிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் கலை சார்ந்தவர்களுக்கு வெறும் உப்புமா காபி ரவையும் பொது கழிப்பிட வசதியும் ஒரு பழைய மெட்ட டார் டெம்போவில் திருமண கோஷ்டி மாதிரி மக்கள் கலைஞர்கள் அழைத்து வருகிற அவலம்.

ஆனால் அப்படியிருந்த நிலைகளை கோவையின் இலக்கிய அமைப்புகள் மாற்றிக்காட்டியிருக்கிறது. கலையம்சம்,நவீனம், நவீன புதினங்களின் எழுச்சி, புதிய வாசிப்பு இயக்கம். புதிய ஆக்கங்கள், புதிய ரசனைகள் பற்றிய விழிப்புணர்வுகளைத்தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பது கோவைதான். அந்தக் கோவையில் எதிர்பாராத வகையில் மகத்தான நிகழ்வுகளும் நடந்து விடும். சில தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உயரிய கலைநிகழ்வுகளை நடத்தியும் வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வாக ச.முருகபூபதி யின் குகைமரவாசிகள் நாடகத்தை இலவசமாக காண வாய்ப்பு அமைந்தது. இதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்ட பேராசிரியர்கள் ராமராஜ், கந்த சுப்பிரமணியம் மற்றும் அவர்களுடைய மாணவர் மாணவியர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ச.முருகபூபதியின் சமீபத்திய ஆக்கம் குகைமரவாசிகள். நாடகத்தின் பல்வேறு அரங்கேற்றங்கள் ஆங்காங்கு நிகழ்ந்த வண்ணமிருந்தாலும் சர்வதேச அளவில் தொடர்ந்து நான்காவது முறையாக இடம் பெறும் நவீன நாடக இயக்குநர் மற்றும் கலைஞராக ச.முருகபூபதிதான் இடம் பெற்றிருக்கிறார் என்பது பிரமிப்பாகவும் ஆச்சர்ய மிக்கதாகவும் இருக்கிறது.

கதையமைப்பு

வாழிடங்களை, இயற்கை வளங்களை, மரங்களை, பறவைகளை, நீர் நிலைகளை, குருவிகளை,தானியங் களை, சடங்குகளை, தொழில்களை, சந்ததிகளை, தங்கள் குழந்தைச் செல்வங்களின் எதிர்காலங்களை, தங்கள் நிலப்பகுதிகளை, தங்கள் சோலைவனங்களை இழந்த மக்களுக்கு ஆதரவுக்குரலாக, அவர்களுக்கான விடுதலையை, மதநிறுவனங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிற அச்சுறுத்தல்களும், அந்த அச்சுறுத்தல்களின் விளைவாக மக்கள் தங்கள் கட்டுகளுடன் மேலும் பல இறுக்கமான பின்னல்களுக்குள் வலைகளுக்குள் அகப்பட்டபடியே கதறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கான விடுதலைப் பாடல்களை அந்த மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்ட களங்களை உருவாக்குகிற படிமங்களாக இதன் கதை யமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. . ச.முருகபூபதியின் முந்தைய ஆக்கங்களிலிருக்கிற இந்த நாடக ஆக்கம் வேறுபட்டிருக் கிறது. ஒவ்வொரு நாடகப்பிரதியும் அதில் பொருத்தப்படு கிற உடல்கள் எனும் படிம இறுக்கம் இந்த நாடகத்தில் சற்று எளிமையாக்கப்பட்டிருக்கிறது எனலாம். பொது ரசனைகளுக்கு ஏற்ப கொஞ்சம் இளகியிருக்கிறது. கதையில் சொல்லப்படுகிற காட்சிகள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்கிற காட்சிகள் அப்படியே ரூபமாக நிழலாடுகிறது. இவை ச.முருகபூபதியின் முன்னேற்றம் அல்லது வெகுமக்கள் ரசனைக்குள் நுழைந்து கதை பேசுதல் எனும் பொருளைக் கொள்ளலாம்.

நாடக ஆக்கம்.

      ச.முருகபூபதியின் நாடக ஆக்கத்தில் பல நவீன நாடக ஆக்க கலைஞர்கள் உதவியிருப்பதை அவரே வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது ஓர் சக கலைஞனுக்கு அளித்த வெகுமதி மட்டுமல்ல கலைகளுக்கே அளிக்கிற காணிக்கை என்று சொல்ல லாம். கருணாபிரசாத் ஒலி ஒளி அமைப்புகளிலும் இயக்க கூறுகளுக்கும் உதவியிருப்பதை அறியமுடிகிறது. கோணங்கியின் பல கவிதைகள் உரையாடல்களாக மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி ஐந்து கலைஞர் கள் தங்களின் ஒருமித்த ஈடுபாட்டுடன் ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு ஏனெனில் ஒவ்வொரு முறையும் திரும்பத்திரும்ப நடிக்க ஏதுவாக காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. சரியான அளவில் அந்தக் கலைஞர்கள் ஓய்வு கொள்கிற அளவும் அதே சமயம் அவர்களின் வசன உச்சரிப்புக்கு ஏற்றவாறான காட்சிகளும் அதற்குரிய பின்பல கலைஞர்களின் பாவனைகளும் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது. உடல்கள் மட்டுமே படிமங்களாகவும் உடல்கள் மட்டுமே பேசுவதாகவும் அந்த உடல்கள் பேசுகிற வசனங்களும் கவிதைகளும் பாடல்களும் உரையாடல்களும் உடல்களே பேசுகிறது. கலைஞர்கள், படைப்பாளி, நாடகப்பிரதியைத்தாண்டி அந்த நிகழ்வில் நடிக்கிற உடல்களின் கூக்குரல்களாக ஒலிக்கிறது. நாடக ஆக்கத்தில் படைப்பாக்கத்தில் ஒரு புதுமையான வடிவம் என்று சொல்லாம். உலகளவில் நாடக ஆக்கப்படிமங்க ளிலிருந்து சற்றும் வேறுபட்டுக் கொள்கிற விதத்தில் இந்தக் குகைமரவாசிகள் அமைகிறது. நாடகத்தை நாம் காண்கிற பொழுது அந்த உடல்கள் என்ன சொல்கிறது என்ன பேசுகிறது. என்ன பேச முடியாமல் தவிக்கிறது. இந்த உடல் படிமங்கள் எதை வலியுறுத்த தன் உடல்களை வறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ரசிகர்கள் அனுமானிக்க முடிகிறது. ரசனை, மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா ரசிப்பார்களா. இந்தப் பிரதி வெற்றி கரமான பிரதியாக அமையுமா என்பதையெல்லாம் யோசிக்காமல் மிக தைரியமாக நாடக காட்சிகளை வைத்த ச.முருகபூபதியின் தைரியம் பாரட்டப்பட வேண்டும். கோவை போன்ற மேட்டுக்குடி ரசிகர்கள் இருந்த கலையரங்கில் கண்ணீர் வழிந்த காட்சிகளை அரங்கம் உணர்ந்ததை நான் கண்டேன். உயர் குடி மக்களிலிருந்து உழைப்பாளர்கள் வரையிலும் கண்ட ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் இனி என்றும் பார்க்க முடியாத ஒரு பிரதியை அதன் நாடகத்தைக் கண்ட பிரமிப்பு காண முடிந்தது. கலை என்பது இதுவா. இதன்  பெயர்தான் கலைஞர்களா, என நம்பமுடியாமல் அதிர்ந்து போன பெரும் படிப்பாளிகள், வாழ்க்கையில் நோகாமலே நோன்பு வைத்து உயர்ந்துவிட்ட மனிதர்கள் பேரதிர்ச்சியு டன் காட்சிகளைக்கண்டதைப் பார்த்தேன். வெறும் புத்தகங்களில், நுனிப்புல் வாசிப்புகளில், நோகுமிடத்தில் நிறுத்திக் கொண்டு உடல்களை ஒரு மெத்தை போல சௌகரியமான இடத்தில் பொருத்திக் கொண்டு சீரணமா வதற்காகவே வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிற சொகுசு ரசனையாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் பல அமைந்திருந்தது. கலைஞர்களின் வெற்று உடல்களும் அதன் எலும்புகளும் நடித்தது. ஒவ்வொரு உயிரினங்களும், பறவைகளும்,மீன்களும், நாய்களும், குருவிகளும், குகைகளுக்குள் வசிக்கிற உயிரனங்களின் பாவனைகளும் அந்த உடல்கள் பேசியது. அப்படியான உடல்களைத்தான் நாமும் கொண்டிருக்கிறோம் என்பதை அந்தக் கலைஞர்களும் நாடகப்பிரதியும் நமக்குச் சொல்கிறது.

கலை

நாடக ஆக்கத்தில் முழுமையாக ஆதிக்கம் பெற்றது கலையமைப்புதான். அரங்க அமைப்பு பற்றிக் குறிப்பிட வேணடும். பின்புலம் முழுக்க ஆகாய வெளியும் ஒரு குகைக்குள் வாழ்கிற மனிதர்கள் பற்றிய பிரமை தருகிறது. குகைகளுக்குள் மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களின் உடலசைவுகள் அவர்கள் தேர்ந்த மொழியை நமக்காகப் பேசிக்கொண்டு உடலசைவுகளில் குகைமர வாசிகளைப் போல படிமங்களும் பாவனைகளுமாக கலை அமைக்கப்பட்டிருக்கிறது பறவைகளின் மொழி, காட்டுயிர் களின் உடல்மொழி, குறிப்பாக பழங்குடி மக்களின் நடன அசைவுகள், குகைமனிதர்களின் பாய்ச்சல்கள், தாவுதல், போர்க்குணங்கள், உறுமல்கள்,பிளிறல்கள். அவர்களின் குரூரமான பார்வைகள், ஆவேசமிக்கவாறுஅவர்கள் ஆடுகிற தாண்டவங்கள். சிறப்பான கடுமையான பயிற்சி யால் கலைஞர்கள் தங்கள் உடல்களை பழக்கியிருக்கிறா ர்கள். அந்த உடல்கள் ஒரு கட்டுமஸ்தானுக்குரியவை யாகவும் அதே நேரம் தேர்ந்த ஆசனவாத்தியாருக்குரிய வளைப்புகளுக்குட்பட்டதாகவும் ஆக்கம் செயது வைத்திருக்கிறார்கள். ரஷ்ய பாலே நடன அசைவுகளும் உண்டு. ஸ்பானிய காளைச்சண்டைக்காரனுக்குரிய அசைவுகளும் உண்டு. நமது ஊர் ஜல்லிக்கட்டுக் காரனுக்குரிய உடலும், ஒரு சடங்கு சாமியாடிக்குரிய உடலாகவும் வறுத்தியிருக்கிறார்கள்.

பாடல்கள்

        பெரும்பாலான வசனங்கள் நவீன கவிதைகளாக வும் பாடிய பல பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களாகவும் அமைந்திருக்கிறது. தானியவகைகள் குறித்த பாடல்கள், இந்த மண் அழித்துவிட்டுப் போன மனித குலத்தின் உணவு வகைகளை நினைவு கொள்ள வைக்கிற பாடல்கள், கும்மி, அறுவடைப்பாட்டு, துவைக்கிறபோதும், அறுவடைப்பாடல்கள், ஒப்பாரிகள், ஆவேசங்கள், சடங்குப் பாடல்கள் என்று அத்தனை வகையான பாடல்களை அந்த நடிகர்களும் கலைஞர்களும் பாடியே நடித்து இருக்கிறார்கள் என்கிற பொழுது சின்னப்பா, தியாகராஜ பாகவதர் மகாலிங்கம் எல்லாம் என்ன பெரிய திறமை என்று வியக்கவைக்கிற மாதிரியான குரல்வளங்கள். எதிர்ப்பாட்டும், எசப்பாட்டும், தந்தனத்தொம், தகிந்தனத்தோம் எனும் ஜதிகளுக்குட்பட்பட்டும் நாட்டிய அசைவுகளுக்குமாக அவர்கள் பாடிய விதம் முற்றிலும் கிராமிய ராகங்கள் தவிர்த்த புதிய தாளவகைகளைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ச.முருகபூபதியின் வசனங்களாக பேசப்பட்டதாகவே பாடி நடித்தார்கள். கதாபாத்திரத்தின் உடலசைவுகளும் குரலும் அது பேசிய மொழியும் முழுக்க கவிதைகளின் சாயல் அமைந்திருந்த து. இயற்கையின் ஒலிகள் சுருதியாகப் பின்னணியில் ஒலிக்க அதன் அசைவுகளுக்கு ஏற்ப ஒளியின் வண்ணங்கள் பொழியவும் அந்த கவிதைகள் மறுபடியும் கேட்க முடியாதே என்னும் ஏக்கத்தை தருகிறது. பின்னணி இசையும் குரல்களும் நாடகத்தினை எங்கோ கொண்டு செல்கிறது. அந்த இடம் மாபெரும் பாறைக்குகையாகவே மாறிவிடுகிறது. ஒளியமைப்பில் வண்ணக்குழல் விளக்குகளின் ஒளிகளான பச்சை, நீலம் கருப்பு (இருள்) சிவப்பு, மஞ்சள், என்னும் வண்ணங்களின் திரிபு வண்ணங்கள் அதன் ஒளிப்பந்தின் விலாசம் அது கலைஞர்களின் மீது கவிழக் கவிழ அவர்களின் வெற்று உடல்கள்,எலும்புகள். விரல்கள், கண்கள் மேலும் மேலும் உயிர்பெற்று அதிர்வளிக்கிறது. ச.முருகபூபதியின், கருணா பிரசாத் இருவரின் பின்னணி குரல்கள், பறவைகளின் ஒலிகளை, ஏகார ஒலிகளை. துன்பியலின் பாடல்களை அவர்கள் இடையிடையே தங்களின் குகைகளின் அச்சத்தி னூடேயே வாழ்கிற காட்டுயிர்களின் சத்தங்களைக் கொடுத்தார்கள். காட்சிகளுக்கு ஏற்றவாறு காட்சி மாந்தர் களின் உடல்கள் பாம்புகளின் சரசரப்புகளும் மீன்களின் துள்ளல்களும்,மான்கள்,சிறுத்தைகள், நரிகளும் ஆந்தை களும் மனிதக்குரங்குகளின் அசரீரிகளாகப் பின்னணி இசையும் புதுமையாகவே இருக்கிறது. சில சமயம் நடுச் சாமங்களில் தேவநாகரி மனிதர்களின் கல்லறைக் கூட்டங்களின் ஒத்திகையோ எனவும் தோன்றுவதாகவே உணர்ந்தோம். ஒரு காட்சியில் உடல்களில் ஏறியுள்ள ஆணிகளால் உமக்கு வலியில்லை ஆனால் இந்த முள் ஏறியதற்காக வலியென்கிறாயே கிருத்துவே என் தேவனே..இந்த முள்ளை நீக்கி விடுவதால் மட்டும் உன் சமூகத்தின் வலி தீர்ந்து விடவா போகிறது என்கிற உடல் பாவங்கள் அற்புதமாக அமைந்த காட்சிகள் அது..

காட்சியமைப்புகளின் நவீனத்துவ ஆக்க நிலைகளில் கலைஞர்களின் உடையலங்காரங்களும் அவர்கள உபயோகப்படுத்திய பலவிதமான அரங்குக் கலைப் பொருட்கள் மிகவும் முக்கியமானவை. மூங்கில்குழல் நாயனங்கள், புல்லாங்குழல்கள், சிறுசிறு காட்டுக்குயில் களின் ஓசைகளுக்கு ஏற்றவாறு மூங்கில் குழல்கள், மரப்பட்டைகள். இலவப்பஞ்சுகளாலான சிறு சிறு குழந்தை விளையாட்டு பொம்மைகள், குழந்தை பொம்மைகள்,மரப்பாச்சி பொம்மைகள், மீன் பொம்மைகள், திமிங்கில பொம்மைகள், இப்படியான குழந்தைகள் வாழ்வு பறிபோய்க் கொண்டிருக்கிற தரைவாழ் மனிதர்கள் கனவுகளுக்காக அவர்களின் நம்பிக்கையளிக்கிற எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஏங்குகிறார்கள் குகைமரவாசிகள். குறிப்பாக ஆற்றோரங்களில் துணிவெளுக்கிற மக்களின் கொண்டாட்டமும் ஆட்டமும் பாட்டமுமாக அவர்கள் துணி வெளுத்து விளையாடுகிற காட்சிகளில் அரங்கத்தின் வெளிச்சமும் கலைஞர்களின் நடனமும் அந்தப்பாடல்களும் நவீன நாடகத்தின் தமிழ் நிலத்தின் அழகுப் பொதியின் உச்சம்.

சில காட்சிகளில் திடுமங்கள் பயண்படுத்தப்பட்டிருக்கி றது. ஆனால் அதன் வாசிப்பு முறைகளுக்கு ஏற்ப அமையவில்லை. அது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. பொதுவாக திடுமங்களின் ஒலியற்ற அரங்காக மாறிவிட்டது. அத்தனை திடுமங்களையும் ஒன்று சேர ஒவ்வொரு அடியாக அடித்துச சுற்றி ஆடியது நடனமும் அடவுகளும் சிறப்பாக இருந்தாலும் திடுமங்களின் பிரத்யேகமான ஒலிகளும் வாசிப்பும் இல்லை. திடுமங்களின் தாள வாசிப்புகள் நிகழ்த்துக் கலையில் சேர்த்துக் கொள்ளவேண்டுகிறேன்.. இன்னும் சில வாத்தியக் கருவிகள் இணைத்துக் கொள்ளவேண்டும். சமீபத்தில் ஒரு கழைக்கூத்தாடி பழைய அலுமினிய வட்டில் பல்வேறு வகையான கர்நாடக சங்கீத ராகங்களை வாசித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது. எத்தனை நாட்களுக்கு தங்கள் குரல்களையே இசைக் கருவிகளாகப் பயண்படுத்த முடியும்.. ச.முருகபூபதியின் யோசனைக்கு விட்டுவிடுகிறேன்.

    உலகளாவிய நாடகரசனைகளின் தன்மைகளுக்கு ஏற்ப நாடக ஆக்கத்தைத் தந்திருக்கிறது  ச.முருகபூபதி யின் குழுவும் கலைஞர்களும். தமிழ் நாடகத்தின் எழுச்சியென்று நிச்சயமாகச் சொல்லமுடியும். இந்த நாடகத்தைப் பற்றிய விமர்சனங்களாக நாம் எதுவும் காணமுடியாது. சமகாலத்தில் மருத்துவமனைகளில் ஒரு வாசகம் எழுதியிருக்கிறார்கள் “மருத்துவத்துறையில் பணியில் காலதாமதம் தவிர்க்க முடியாது..தங்கள் வரிசை வரும் வரையில் தயவு செய்து காத்திருக்கவும்.“ என்பதுதான் அது, அதைத்தான் இங்கு சொல்ல வேண்டும் கோடாணுகோடி ரூபாய்கள் கொட்டிக் கொழித்துக் கொண்டிருக்கிற தனியார் மருத்துவத்துறைகளே இந்த வாசகத்தைப் பயண்படுத்தும் போது கலைஞர்களும் கலைகளைக் கையாள்கிற கலைஞர்கள் சொல்வதில் தவறில்லை. நல்ல விசயங்களை நீங்கள் ரசிப்பதற்கும் ரசிக்கப் பழகுவதற்கும் சில காலம் ஆகலாம். அதுமட்டுமல்ல அது மாதிரியான ரசனைக்குரிய அறிவு உங்களுக்கு குறைச்சலாக இருக்க்கிறது. அதாவது ரசனை சம்பந்தமான நோய்கள் பீடித்திருக்கிறது என்பதையும் உணர்ந்தால் மட்டுமே நவீன ஆக்கங்களுக்குள் நுழைய முடியும்.

“புரியவில்லை..என்ன சொல்ல வருகிறீர்கள்..“

“அது என்ன சத்தம்..”

“என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..நாய்..பறவை, மீன்கள் கடல்கள்..நிலம்..குகை.. என்கிறார்களே..“ என்று தனக்குத்தானே தலைச்சவரம் செய்து கொள்கிற விஜய் டிவி. ஆனந்தவிகடன், தினத்தந்தி, தி இந்து தமிழ், உள்ளிட சொறிப்பெயர்ச்சி ரசனை சார்ந்த லட்சக்கணக்கில் மரமண்டை ரசனையாளர்களை இவர்கள் உருவாக்கு கிறார்கள். இந்த மேம்போக்கு சரும க்ரீம் ரசனைகளும், குருப்பெயர்ச்சி பலன்கள் வாசிப்பவர்களுக்கு குழப்பமாக இருக்கலாம். அதற்காக மகத்தான மக்கள் கலைஞர்கள் திரும்பவும் சவரப்பெட்டியைத்தூக்கிக் கொண்டு மரத்தடியில் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.. இப்பொழுதெல்லாம் ரசக்கரண்டியும் மட்டக்கோலும் டெம்ப்போ டிராவலரில் போகிற காலம் இது. ரசனை அறிவு சேகரிக்க சில மைல்கள் நடந்துதான் ஆகவேண்டும். சில பைசாக்கள் செலவு செய்துதான் ஆகவேண்டும். டாஸ்மாக் கவுண்டர்க்கு மட்டும் எப்படி ஆயிரம் ரூபாய் நோட்டு எளிதில் நுழைகிறது. அப்படியாக நல்ல நிகழ்வுகளுக்கும் சில தாள்களை நீங்கள் செலவு செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் நல்ல நிகழ்வுகள் நடத்துவதற்கு வெளி நாட்டு வாழ் தமிழர்கள் உதவியில்லாமல் நடத்த முடிவதேயில்லை. காரணம் உள்ளுர்ப் புரவலர்கள் கோவில்களுக்குக் கொண்டு போய்க் கொட்டி விடுகிறார்கள். கொடுங்கள்  வேண்டாமென்று சொல்ல வில்லை. தாளத்தையும் தப்பையும் நம்பி வாழ்கிற தொல் கலைகளுக்கும் அள்ளித்தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். அப்படியாக மணல்குடி நாடக நிலத்தின் ஆக்கமான குகைமரவாசிகளைக் கண்டுகழியுங்கள்.. நமது மூதாதையர்களின் குரல்களைக் கேளுங்கள் நமது கானகத்தின் ஒலிகளைக் கேளுங்கள்..

வாய்ப்பு வழங்கி மணல் குடி நாடக நிலத்தைக் கௌரவித்த  மனங்களுக்கு நன்றி...

 

 



சனி, 14 பிப்ரவரி, 2015

Yathumagi-2015 sivakasi- katturai


 

 

 

 

 

 

 

 


 


























 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


முன்னுரை

 

கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கிய மரபு செழுமைமிக்கதாக மாறியிருக்கிறது. மற்றும் மாறிக்கொண்டுமிருக்கிறது. தமிழில் கிடைக்கின்ற இலக்கிய வடிவங்களுக்கும் இலக்கண மரபுகளுக்குமாக தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பல்வேறு தரப்புக் கோட்பாடுகளை முன்வைத்துச் சென்றுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை, அதன் அரசியல் முறையை, பண்பாட்டுச் செறிவுகளை அது வரையறுத்துள்ளது.

அதன் ஒவ்வொரு செறிவு மிக்க அடர்த்தி மிக்க மொழியில் உட்கூறுவகைக் கோட்பாடுகளான உழைப்பு சார்ந்த நடவடிக்கைகள், மதிப்பீடுகள்,வழிவகைகள். ஒழுங்குமுறைகள் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள். சமயமுறைகள். ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்ள நமக்கு வரைவிலக்கணக் கோட்பாடுகளாக அமைந்துள்ளது. பாட்டும் தொகையுமாக,செய்யுள்களாக,வசன கவிதைகளாக, அகவல்களாக, எதுகை மோனை ஒலிநயச் சந்தங்களாகவும் நமக்குக் கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நமக்குத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிற பதினெட்டு நூற்களிலும் சங்க கால மக்களின் வாழ்வியல் தரவுகளும் அனைத்தும் ஒவ்வொரு ஆய்வின் பொழுதும் சமகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையிலும் அறிந்து கொள்கிறோம்.

இந்த தரவுகளைக் கொண்டும் கோட்பாடுகளையும் கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியத்தையும் அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. இந்தக்கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆய்வுகள் அறிஞர்களால் அவரவர் சூழல்களுக்கு ஏற்ப பார்வைக் கேற்ப மேற் கொள்ளப்பட்டுள்ளன. அம்மரபின் தொடர்ச்சியில் “இந்தக் கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியம்“ தலைப்பில் சில கூறுகளை நாம் விவாதிக்கலாம்.

 

 

ஆய்வுத் தலைப்பு

 

தற்கால அறிவுச் சூழல் நமக்குப் புதிய புதிய இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறது. உலக இலக்கியக் கோட்பாடுகள் மிக வேகமாக மாறிக் கொண்டேயிருக்கிறது. அதன் பாதிப்புகள் இன்றைய தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சி, இணையதளங்கள், தனிநபர் இணையதளங்கள், உலக ஆதிக்க மொழிகளான பிரஞ்ச். ஜெர்மன்,அமெரிக்க ஆங்கிலம்,பிரிட்டிஷ் ஆங்கிலம்,சீன மொழிகள் உள்பட தெற்காசிய பிராந்திய மொழிகளின் வழியாக கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கிய மரபு புத்தம் புதிய நவீன கோட்பாடுகளைப் பேசுகிறது. இந்த பாதிப்புகளின் எதிரொலியாகவும் அயல்நாடுகளில் வாழ்கிற இந்தியர்களையும் தமிழர்களையும் அந்த மொழிக் கோட்பாடுகளுக்கு ஏற்ப எழுத வைக்கிறது. இந்திய மொழிகளிலும் கோட்பாடுகளை புத்தாக்கம் செய்ய வைத்திருக்கிறது.

மார்க்சியம், சோசலிசம், கம்யுனிசம்.நவீனத்துவம்,பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், பின் காலனியம், பின் மார்க்சியம், மார்க்சிய-லெனியம், பெண்ணியக் கோட்பாடு களின் பேரெழுச்சி, தலித் படைப்பியலக்கியம். உலகளாவிய சிறுபான்மை மக்களின் எழுச்சிமிக்க இலக்கியக் கோட்பாடுகள், அடித்தட்டிலிருக்கிற மக்கள் சார்ந்த அணுகுமுறைகள், மானுடவியல் சார்ந்த அணுகு முறைகள், தேசிய இனங்கள் சார்ந்த அணுகுமுறைகள் என்பதாக கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியத்திற்கு வலிமையைச் சேர்த்துவருகிறது. இந்த மரபின் தேடலில் ஆய்வும்  கள ஆய்வுகளும் விரிவடைந்து கொண்டே வருகிறது. இந்த ஆய்வு என்பது  சமூகத்தின் இங்கு இடுக்குகளில் இன்னும் தொங்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிற சாதாரண எளிய மக்கள் சாரந்த அணுகுமுறை கொண்ட படைப்புகள். மாநாடுகள் ஆய்வரங்குகள், நாட்டாரியல் மரபுகள் கொண்டவையாகவே அமைகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்ணியம் சார்ந்த ஆய்வு முறையையும் அடித்தள மக்களின் பார்வையுடன் மானிடவியல் அணுகு முறையை மற்றொரு பகுதியாக கொண்டும் “கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியம்“ ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆய்வின் நோக்கம்

 

கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியம் குறித்த அறிமுகத்தில் அதன் வளர்ச்சி நிலை, தற்காலத்தில் ஏற்பட்டிருக்கிற படைப்பாக்கச் செயல்பாடுகளும் நூலாக்க முயற்சிகள், அதில் படைப்பாளி என்பவன் கோட்பாடுகளின் வழியாக உருவாகிறாரா, அல்லது அவர் தன் படைப்பின் வழியாக கோட்பாடுகளை மறுவாசிப்பு, மீள்வாசிப்பு செய்ய உதவுகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. நம் மரபு சங்க இலக்கியப் பிரதிகளை முன்வைத்துதான் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சியை ஒப்பு நோக்கிக் கொள்கிறோம். கலாச்சாரப் பண்பாட்டு எழுச்சிகள், அந்த மரபுகளைப் பின்பற்றிய சிறு குறு மக்கள் அரசுகள், இனக்குழுக்கள், அதன் படிப்படியான வளர்ச்சிகளில் ஏற்பட்ட போர்கள், போர்களுக்குப் பிறகு கல் வெட்டில் செதுக்கபட்டு வைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கு இணையான கோட்பாட்டுப் பதிவுகள் நமக்கு முன்னால் வந்து நிற்கிறது. இன்றும் உலகளாவிய அளவில் இயற்கை வளங்களைக் கொள்ளை கொள்கிற வல்லரசு நாடுகளின் ஆதிக்க மனோபாவங்களுக்கு எதிரான கருத்துகளும் கோட்பாடுளும் உருவாகியே வருகிறது. அதன் வீரியமிக்க இடையறாத படையெடுப்புகளை அத்துமீறல்களைத் தங்கள் இலக்கியப் படைப்புகள் வழியாக படைப்பாளர்கள் எழுதிக் கொண்டுதான் வருகிறார்கள். அப்படியான இலக்கியப் பிரதிகளின் கருத்தொற்றுமைகள் திரைப்படங்களாகவும் வருகிறது.

 

ஆய்வின் கருதுகோள்

 

தமிழ்நிலத்திற்கு நாம் வருகிற பொழுது சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற மக்கள் அதாவது உழைப்பை நம்பி வாழந்த மக்களின் கலைகளும் அதன் அம்சங்களும் உட்படுகிறார்கள். அரசர்கள்,வணிகர்கள்,நிலவுடைமையாளர்கள், வள்ளல்கள், வீரத்தாய்கள் பற்றிய பல்வகைப் பொது ஆய்வுகள் மேற்க் கொள்ளபட்டிருக்கிறது. சங்க நிலமக்களின் பாடல்களும் தொகுப்புகளும் ஒரே விதமான கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்தப் படைப்புகள் உழைப்பின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் இவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தியது. குறிப்பாக நீரைச் சேகரித்துப் பயண்படுத்தியதும் நெல் உற்பத்தி மற்றும் விவசாயத்தை விரிவாக்கியதும் உபரியான உற்பத்திப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கியதும் இந்தச் சேகரிப்பின் வழியாக ஏற்படுத்தப் பட்ட தனியுடைமை எனும் கோட்பாடு புதியவெளிச்சமாகத் தோன்றியதை நாம் மறுக்கமுடியாது. சங்க கால சமூகத்தில் அடித்தள மக்கள் என்ற பிரிவினர் உருவாவதற்கு அடிப்படையான காரணமாக இந்தக் கோட்பாடு உதவியது. ஐவகை நிலக் கூறுகளில் திணைநிலங்களில் வாழ்ந்த மக்கள் குழுக்களில் அடித்தள நிலையில் வாழ் வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்ட மக்களைக் குறித்தும் அவ்வாறு வாழ நேர்ந்த கோட்பாடுகளையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. உலக அளவிலும் இந்திய அளவிலும் சமூகநீதிப் போராட்டங்களானாலும் எழுத்தியக்கங்களி லும், மாநாடுகளிலும் அதிகம் பேசப்படுகிற நிலையாக இந்தக் கோட்பாடுகளுக்குப் பின்னால் எழுந்துள்ள இலக்கியவகைமைகள்தான். இன,மொழி,மத, தேசிய,சர்வதேசிய இனவெழுச்சிப் போராட்டங்கள் தற்கால த்திலும் ஓய்வதாகவே இல்லை. தன் சொந்த நிலப்பகுதிகளை இழந்தவர்களும் நாடுகளை இழந்து கொண்டிருப்பவர்களும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடிமைகளாக வாழந்து கொண்டிருக்கிற சூழ்நிலையை இந்தக் கோட்பாடுகள் பேசுகிறது. அல்லது இந்தக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிய முனைகிறது. அல்லது புதிய கோட்பாடுகளை முன்வைக்கிறது.

 

ஆய்வுப் பரப்பு

சங்க இலக்கிய வரையறைகளுக்குட்டபட்டதுடன் பல செவ்வியல் பிரதிகளும் சமண சைவ வைணவ பக்தி இலக்கியக் கோட்பாடுகளும் முக்கியமானது. கோட்பாடுகளுக்குப் பின்னால இந்த வகைமைகள் தற்காலத்திலும் தொடர்கிறது. வழிபாட்டுத்தலங்களிலும் சடங்குகளையும் பின்பற்றி வருகிறது. இதன் பாதிப்பிலும் சமகாலத்திலும் இதன் பின்னணி யிலான படைப்புகள் நவீன இலக்கியச் சூழலிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பத்துப்பாட்டு,எட்டுத்தொகை என்னும் இரு பெரும் பிரிவுகளில் உள்ள வேறுபாடுகள் உள்ளது. அதன் உள்ளடக்க முறைகள்,யாப்பிசைப்பு அடிகள் அமைப்பு.பொருள் முறைகள்,பாடுபொருள்கள் கோட்பாடுகளுக்கு அப்பாலும் சங்க காலத்திலும் மக்கள் தங்கள் படைப்புகளைப் படைத்துள்ளதை அறியலாம்.

இரண்டாயிரம் ஆண்டு மரபில் திராவிட இலக்கியத்தின் நெடிய பரப்பை நாம் தவிர்க்க முடியாது. திராவிட அழகியல்.திராவிட இலக்கியத்தின் மொழியமைப்பும் கட்டுரைகளும் வசன கவிதைகளும் சொல்லமைப்பும். மேடைப் பேச்சு வழக்குகளும்.பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்கள், தென்னிந்திய மொழிகளில் திராவிட இலக்கிய மரபை வளர்த்து மக்களைப் புத்தாக்க முயற்சியில் இறக்கியது. ஆகப் பெரும் கொண்டாட்ட வகைமை யைச்சாந்த திராவிடக் கோட்பாட்டுக்கூறுகள் சில அரசியல்வாதிகளுக்கு பதவிகளையும் ஆட்சி அதிகாரங்களையும் பெறுவதற்கு உதவியது என்பது கண்கூடு.

அது போலவே ரஷ்யப் புரட்சிக்கு மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் பெரிதும் உதவியது என்பதை வரலாறு அறியும். முதல் இரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் கோட்பாடுகளில் பெரிய மாற்றங்கள் வந்து குவிந்த காலத்தை அறிந்திருக்கிறோம். உலகெங்கும் ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. ரஷ்ய இலக்கியங்கள்தான் கோட்பாடுகளுக்குப்பின்னாலான ஆகச்சிறந்த வடிவங்க ளை உருவாக்கியது. ரஷ்யமக்கள், ரஷ்ய படைப்பாளர்கள் நாடுகள் கடத்தப்பட்டார்கள். தங்கள் நாடுகளை இழந்து அவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்தபடியும் தங்கள் படைப்புகளுக்கான கருப்பொருளையும உலக நாடுகளின் விடுதலைக்கான சோசலிக் கூட்டமைப்புக்காக உழைத்தார்கள். சோவியத்தின் வீழச்சி வரையிலும் அதன் கோட்பாடுகள் உச்சத்தில் அமைந்திருந்த வரலாற்றை அறிந்திருக்கிறோம்.

ஆய்வு ஆதாரங்கள்

கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியம் இதற்கான ஆதார வளங்களை நாம் அச்சுப்பொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகான காலத்தை வரையறை செய்து கொள்ளலாம். அதன் படிப்படியான வளர்ச்சிக்குத் தகுந்த காலத்தை அது ஏற்றுக் கொண்டு மொழியும் வளமும் படைப்பும் வளர்ந்தது. துணைபுரிந்த ஆதாரங்கள், முதன்மை ஆதாரங்கள், துணைமை ஆதாரங்கள் என நாம் நம் அறிதலுக்குட்படுத்திக் கொள்ளலாம். இன்று கணணியின் செயல்பாடுகள், தமிழ்மென்பொருள், விசைப்பலகைகள், இணையதளங்கள். வலைப்பூக்கள்,முகநூல்கள். செல்பி.வாட்ஸ்ஆப்,புளுடுத், டிவிட்டர்,கூகுள்,விக்கிப்பிடியா, உள்ளிட்ட வசதிகளில் தங்கள் கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கிய வகைகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. மலிவான இலக்கியப் படைப்புகளும் குவிந்து வருவதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். மலிவான படைப்புகளின் வளர்ச்சியை வெகுசன ஊடகங்கள் வளர்க்கிறது. கலாச்சாரச் சீரழிவுகளை ஒரு நாட்டிற்குள் அனுமதிக்க நினைக்கிற ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளின் பிடிக்குள் சில உள்ளுர் பத்திரிக்கை முதலாளிகள் தங்களின் பத்திரிக்கைகளில் வெகுசன இதழ்களில் மட்டரகமான படைப்புகளை வெளியிட்டு அந்தப்படைப்புகள் தான் மகத்தான படைப்புகள் அந்தப் படைப்பாளர்கள்தான் மகத்தான படைப்பாளர்கள் என்பதைத் தொடர்ந்து நிறுவுகிற ஆபத்தான சூழ்நலையிலும்தான் நாம் வாழ்ந்தும் வாசித்தும் வருகிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

படைப்பாளின் வாழ்வில் தேனாறும்பாலாறும் ஓடவில்லையென்பதையும் பல எழுத்தாளர்கள் வெகுவசதியுடன் வாழ்கிற ஏற்றத்தாழ்வுகளுடன்தான் தமிழ் இலக்கியக் கோட்பாட்டு வரையறைகள் அமைந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பல தலித் படைப்புகளுக்குத் தனியான பெருமைகள் கிட்டவில்லை. பெண்ணிய படைப்பியக்கத்திற்கான சிறப்பு வெகுமதிகள் இல்லை. குறிப்பாக பெண்ணிய உழைப்பும் சிறுமிகள் சிறார்கள் உழைப்பின் வழியாக வருகிற இந்திய நாட்டிற்கான வருவாயில் பதினைந்து சதவிகிதம் உள்ளது. பெண்ணிய எழுத்து இன்னும் ஊக்கப்படுத்தப்படவில்லை. சிறுபாண்மை எழுத்துக்களை சிறுபாண்மை இயக்கங்களே தடைசெய்கிற கேவலமான நிலையையை நாம் கவனம கொள்ளவேண்டும்.

உலக அளவில் சாலமன் ருஷ்டிக்கு கோமேனி அளித்த மரண தண்டனை நிலுவையில் உள்ளது. தமிழ்ச்சூழலில் பெருமாள் முருகன்.துரை.குணா. ஹெச்.ஜி.ரசூல். உள்பட பல படைப்பாளர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பாரதியார்,பாரதிதாசன்,ஜீவா, பெரியார்,அண்ணாதுரை, உள்பட பல மூத்த படைப்பாளர்கள் தடைசெய்யப்பட்டார்கள். கம்யுனிஸ்ட் இயக்கங்கள் தடைசெய்யப்பட்டது 1964ல் ரஷ்ய இலக்கியப்பிரதிகள் நாடெங்க்கும் தடைசெய்யப்பட்டது. இடது சாரி படைப்பாளர்கள் ரஷ்ய உளவாளிகள் என்றும் அண்ணா போன்றவர்களை அமெரிக்க ஏஜெண்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நிகழ்வுகள் நம் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது என்பதை கவலையுடன் நினைவில் கொள்ள வேண்டும்.

 

துணைமை ஆதாரங்கள்

நம் இந்திய தமிழ் நூலகங்களில் அறியதாய்க் கிடைக்கிற ஆனால் எவராலும் அதிகஅளவில் எடுத்தாளப்படாத அரிய வகை ஆய்வு நூற்கோவைகள், சிற்றிலக்கிய வகைகள், அவ்விலக்கியங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள், புதினங்கள். சொல்லகராதிகள்.வட்டாரச் சொல்லகராதிகள் திறனாய்வுக்கட்டுரைகள். மூத்த ஆளுமைகளின் நேர்காணல் பதிவுகள், வட்டுத்தகடுள், ஆவணப்படங்கள் வாயிலாக பெற்ற துணைமை ஆதாரங்கள் இந்தக்கட்டுரைக்குப் பயண்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக வரலாற்று அறிஞர்கள்,டி.டிகோசாம்பி,நா.வானமாமலை, தொ.பரமசிவன், பயண இலக்கியத்தந்தை சேலம் படகலா நரசிம்மலுநாயுடு, டி.என் ராமச்சந்திரன். கோவைஞானி, கா.சிவத்தம்பி, முத்துமோகன். ஆ.வேங்கடசுப்பிரமணியன்.ஆ.இரா.வேங்கடாசலபதி, அ.கா. பெருமாள்.டி.தர்மராஜன்,நாஞ்சில் நாடன்,கோவைக்கிழார்,புலவர் செ.ராசு உள்பட பல அறிஞர்களின் படைப்புகள் ஆய்வுகள் நம் காலத்தின் முன்பாக வீற்றிருக்கிறது.

 

சமகால இலக்கியக் கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியச் சூழல்.

     

சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற தமிழ்ப்படைப்பாளர்களின் மொழிபெயர்ப்புகள் பதினெட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. உலக அளவில் மிகச்சிறந்த பதிப்பியக்கமாக இந்திய சாகித்ய அகாதமியின் பணி சிறப்பாக அமைந்து வருகிறது. சமீபத்திய அகாடமியின் விருதுகளைப் பெற்ற படைப்புகள் தமிழின் மேன்மை மிக்க படைப்புகள் என்று சொல்லவேண்டும்.நாஞ்சில்நாடன்,டி.செல்வராஜ்,ஜோடி குருஸ். சு.வெங்கடேசன்.பூமணி. மற்றும் இந்திய மொழிகளிலிருநது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அதன் வழியாய அறியப்பட்டவர்களாகவும் சிற்பி, இந்திரன், புவியரசு, ம.இல,தங்கப்பா. நிர்மால்யா,பாவண்ணன். போன்ற ஆளுமைகள் இந்திய மொழிகளின் பல படைப்புகளை தந்துள்ளார்கள்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நம் கோட்பாடுகள் மாறியது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு வட்டார மொழிகளில் தேர்ச்சியும் கொண்ட படைப்பாளர்கள் தங்கள் மக்களின் இலக்கியங்களை வாய்மொழி வரலாறுகளை எழுதினார்கள். அச்சு வசதிகளைப் பயண்படுத்தி பழங்குடி மக்களிலிருந்து முதல் பட்டதாரிகளாக முதல் தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து வந்தார்கள். தங்கள் மக்களின் அடிமை வரலாறுகளை எழுதினார்கள். பல படைப்புகளை வழக்கம் போல ஒழுக்கவாதிகள் அவைகளில் கலையம்சம் இல்லையென்று ஒதுக்கியும் புறக்கணித்தும் வந்த கெடுதல்களும் நடந்துள்ளது. இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளது. “அது நாவல் இல்லை, அது சிறுகதை இல்லை. அது குப்பை., மொக்கை..” என்று மரமண்டை விமர்சகர்களாலும் அரைவேக்காடு மதிப்பீட்டாளர்களாலும் புறக்கணிப்புகளாலும் மகத்தான படைப்புகளை அறவே அழித்த பெருமையும் நம்மிடம் உண்டு. வெகுசன இதழ்கள் அளிக்கிற நிதியுவகை பெற்றுக்கொண்டு அந்த இதழ்களுக்காக, அந்தப் பதிப்பகங்களுக்காக உழைக்கிற வெகுமதி எழுத்தாளர்கள் பரம்பரையும் இந்தக் கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியச் சூழலில் நிலவுகிறது என்பதையும் மறுத்தோ,தவிர்த்தோ நகர்ந்து விடமுடியாது.

மொழிவாரி மாநிலங்கள் தோன்றியபிறகு மொழிப்போர்கள் உண்டாகியது. கட்டாய மொழித்திணிப்பும் இனியொரு மொழியைக கற்பதற்கு விரும்பாத மக்கள் மொழித்திணிப்பை எதிர்த்துப் போராட்ட்ஙகள் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற இந்தி மொழி எதிர்ப்பு வரலாறு நெடிய வரலாறு.

பிறகு இந்தியா ஐந்தாண்டுத்திட்டங்களின் வழியாகவும் உலக நாடுகள் கடன்களை இந்தியாவிற்கும் வழங்கத்துவங்கியதின் விளைவாகவும் அந்தக்கடன்களைப் பெற்றுக் கொண்டு சில மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி பெற்றது. இந்த நிதிகள் அதிகம் பெற முடியாத மாநில மக்களிடம் பல் வேறு கிளர்ச்சிகள் மற்றும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்தது. இதன் அடிப்படைகளைக் கொண்ட படைப்புகளை படைப்பாளார்கள் எழுதினார்கள்.

பயங்கரவாதம் தலைதூக்கியது. ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. நாடெங்கும் நெருக்கடி நிலை பிரகடனம் அறிவிக்கப் பட்டது. நாடெங்கும் கருத்துரிமைகள் எழுத்துகள் நசுக்கப்பட்டது. படைப்பாளர்கள் தாக்கப்பட்டார்கள்.சிறையிலடைக்கப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக பயங்கரவாதங்களுக்கு எதிரான கோட்பாடுகளும் அதற்குப் பிறகான எழுத்துகள் உருவாகியது. 1984ல் பயங்கரவாதம் மற்றும் இன பயங்கரவாத நிலையின் உச்சமாக பிரதமர் இந்திராவின் படுகொலை நாட்டையே உலுக்கியது. இதற்குக் காரணமான சீக்கியர்கள் பழிவாங்கப்பட்டார்கள். அந்தப்படைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். பிற்பாடு மதஅடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயல்கள் தலைதூக்கத்துவங்கியது. இன்றளவும் உலகெங்கும் நடைபெறுகிற பயங்கரவாத செயல்களுக்கு எதிராக படைப்பாளர்கள் ஊடகவியலாளர்கள் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விசயம்.

மூன்றாம் உலகப் போர்களுக்குரிய செயல்பாடுகளை வளர்ந்த நாடுகளும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளும் நாடு பிடி கொள்கைகள், இயற்கை வளங்களைக் கொண்டுள்ள நாடுகளை கைப்பற்றுதல், அணுசக்தி ஒப்பந்தங்கள், எல்லைப்பகுதிகளில் ராணுவ தளங்களை அமைத்தல், உள்நாட்டு சீர்குலைவுவாதிகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் உலக வல்லரசு நாடுகளால் மறைமுகமாகவே நடத்தப்பட்டு வருவதை படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளில் ஆய்வுகளில் கருத்தரங்குகளில் அறிவித்தபடியே உள்ளார்கள்.

கட்டுரை நிறைவுரை

       உலகின் பல்வேறு மூலைகளில் பல சம்பவங்கள் அச்சுறுத்தல்கள் கொடுத்தாலும் அந்தந்த காலகட்டங்களில் இலக்கியக் கோட்பாடுகளின் வழியாக நம்பிக்கை தருகின்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளது. இன்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவிகித இடஒதுக்கீடு முறைகள் அமுலில் இருப்பது போன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் முப்பத்திமூன்று சதவிகிதம் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால் நாடு இன்னும் மிகவேகமான அளவில் முன்னேற்றம் காணும். பெண்ணிய எழுத்துகள் மேம்படும். பெண்நிலை வாசிப்பிலும் இயக்கங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால் இந்த மசோதா இன்னும் முதல் நிலை ஆய்வுகளுக்குள்ளேயே செல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. பெண்ணியச் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் உள்பட பல சமூக சீர்திருத்தவாதிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் போரடி வருகிறார்கள்.

இலக்கியப்படைப்புகள் வாசிப்பதிலும் தன்மைகளுக்கேற்ப வேறுபட்ட பொருள்களைத் தருவதற்கான வாய்ப்புகள் வழங்க்கின்றன. பால்,சாதி, சமயம், இனம்,பண்பாடு,மொழிவளம், இனக்கலப்பு,கூட்டுறவு எனப் பல்வேறு கோட்பாடுகள் சார்ந்த கூறுகளும் வாசிப்பில் அடங்குகிறது. பெண்ணிற்கான அடிப்படைக் கல்வியையும் அறிவு சுதந்திரத்தையும் நீண்ட யுகங்களாக மறுத்து வந்த நிலையில் இலக்கியப்பிரதிகள் எழுதுதல் வாசித்தல் என்பது ஆணாதிக்க மரபுகளுக்குட்பட்டதாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் சீர்திருத்தவாதிகளின் பெண் படைப்பாளர்களின் இடையறாத முயற்சிகளால், வளர்ச்சியில் புதிய கோட்பாடு அலகும் தளங்களும் உருவானது. இந்தப் பெண்ணிய தளத்திலிருந்து இலக்கியத்தை அணுகுவது என்பது பெண்ணின் பார்வையிலிருந்து இலக்கியத்தையும் சமூக மேம்பாடுகளை அறிய முற்படுவதாகும்.

இந்தக் கோட்பாடுகள் தாய் வழிச் சமூகத்திற்கு உட்பட்ட பெண்நிலை,ஆண் தலைமைக்கு வாழத் தொடங்கியபெண்நிலை, உடல் உழைப்பு நடவடிக்கைகள், சங்க காலம் தொட்டுக் கிடைக்கிற கலைகளும் பெண்ணும்,பெண் வாழ்க்கை பற்றிய இதரப் பண்பாட்டுக் கூறுகள், சங்க காலக் கவிதைகளில் கண்டெடுக்கப்பட்ட பெண்கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சமகாலத்தில் எழுதுகிற பெண் கவிஞர்கள் வரையிலும் கோட்பாடுகளின தாக்கமும் கோட்பாடுகளுக்குப்பின்னால் இலக்கிய வகைமைகளில் பெண்களின் பங்கும் முக்கியமானதாகவே காலத்துடன் இணைந்து வந்து கொண்டிருக்கிறது.

மானுடவியல் கோட்பாடு அணுகுமுறை என்பது இருபதாம் நூற்றாண்டின் போர்களின் வழியாக நமக்குக்கிடைத்த இலக்கியக் கொள்கைகளாகும். 18 ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியாக பிரஞ்சுப்புரட்சிக்குக்பிறகு நடந்த ருஷ்யப் புரட்சியும் இரண்டு உலகப் போர்களும் பல நாடுகளுக்கிடையே போர்களும் நம் படைப்புலகத்தை பெருமளவில பாதித்தது. மானுடவியல் ஆய்வுகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்தது. புதிய புதிய அகழ்வாராய் ச்சிகளின் முடிவுகள் நமக்கு நம்பிக்கையளித்தது. மனித சமூகம் என்பது தன் வாழ்நாள் முழுக்கவும் போர்களுடனான,ஆக்ரமிப்புகளுடனான, ஆதிக்க சக்திகளுடனான முரண்களைப் பேணியே வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

மானுடவியல் வழியாக குறிப்பிட்ட மக்கள் குழுவின்,இனக்குழுவின். சாதியக் கட்டுமானத்தின், பால்நிலை சாரந்த பிரிவுகளின் மொத்த வாழ்வியல் கூறுகளையும் அவர்களின் பண்பாட்டுக் கலாச்சார விழாக்களின் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

மக்கள் தங்கள் இனக்குழுவின் மீது அன்பு பாராட்டுகிறார்கள். தங்கள் மேம்பாடுகளை தங்களின் போர்க்குணங்களை, நெடிய பாரம்பரியம் மிக்க தங்களின் மூதாதையர்களின் சடங்கு வழக்கங்களைப் பின்பற்ற நினைக்கிறார்கள். நமது சமூகத்தில் மதங்களின் ஆதிக்கம் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவருவதை அறிவோம். அதன் வழியாக ஒவ்வொரு இனக்குழுவையும் மதம் சார்ந்த கட்டமைப்புக்குள் கொண்டு வந்து விடமுடியும் என்று மதபீடங்கள் நினைக்கிறது. இனக்குழுக் கலாச்சாரங்களை அழித்துவிடுவதின் மூலம் கலைகளை, தொன்மையான பாரம்பரிய சின்னங்களை பண்பாட்டு நடவடிக்கைகளை முற்றாக அழித்துவிடவும் முயற்சிக்கிறது..

நாம் அனுமதிக்கப் போகிறோமா

அல்லது அனுசரித்துக கொண்டு வாழப்பழக்கப்படுத்திக் கொள்ளப் போகிறோமா என்பதை பொறுமையுடன் ஒர் பார்வையாளராக இருக்கப் போகிறோமா அன்றியும் களத்தில் நிற்கப் போகிறோமா என்பதை இந்த மாநாடு முடிவிற்கு விடுகிறோம்....

நன்றி...வாய்ப்பளித்த “யாதுமாகி“ மாநாடு அமைப்பாளர்களுக்கும் பங்கு கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கிற அறிஞர் பெருமக்களுக்கும்..மாணவ மாணவியர் செல்வங்களுக்கும் நம்பிக்கையுடன் நன்றிகளை உரித்தாக்குகிறேன்..

இப்படிக்கு

இளஞ்சேரல்-கோவை-641103-99427 88486