|
முன்னுரை
கோட்பாடுகளுக்குப்
பின்னாலான இலக்கிய மரபு செழுமைமிக்கதாக மாறியிருக்கிறது. மற்றும்
மாறிக்கொண்டுமிருக்கிறது. தமிழில் கிடைக்கின்ற இலக்கிய வடிவங்களுக்கும் இலக்கண
மரபுகளுக்குமாக தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பல்வேறு தரப்புக் கோட்பாடுகளை
முன்வைத்துச் சென்றுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்ச்
சமூகத்தின் வாழ்க்கையை, அதன் அரசியல் முறையை, பண்பாட்டுச் செறிவுகளை அது
வரையறுத்துள்ளது.
அதன் ஒவ்வொரு
செறிவு மிக்க அடர்த்தி மிக்க மொழியில் உட்கூறுவகைக் கோட்பாடுகளான உழைப்பு சார்ந்த
நடவடிக்கைகள், மதிப்பீடுகள்,வழிவகைகள். ஒழுங்குமுறைகள் நம்பிக்கைகள், வழிபாட்டு
முறைகள், சடங்குகள், விழாக்கள். சமயமுறைகள். ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்ள
நமக்கு வரைவிலக்கணக் கோட்பாடுகளாக அமைந்துள்ளது. பாட்டும் தொகையுமாக,செய்யுள்களாக,வசன
கவிதைகளாக, அகவல்களாக, எதுகை மோனை ஒலிநயச் சந்தங்களாகவும் நமக்குக் கோட்பாடுகள்
அறிவிக்கப்பட்டிருக்கிறது. நமக்குத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிற பதினெட்டு
நூற்களிலும் சங்க கால மக்களின் வாழ்வியல் தரவுகளும் அனைத்தும் ஒவ்வொரு ஆய்வின்
பொழுதும் சமகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையிலும் அறிந்து
கொள்கிறோம்.
இந்த தரவுகளைக்
கொண்டும் கோட்பாடுகளையும் கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியத்தையும் அறிந்து
கொள்ள ஏதுவாக உள்ளது. இந்தக்கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியங்களை ஒவ்வொரு
காலகட்டத்திலும் ஆய்வுகள் அறிஞர்களால் அவரவர் சூழல்களுக்கு ஏற்ப பார்வைக் கேற்ப
மேற் கொள்ளப்பட்டுள்ளன. அம்மரபின் தொடர்ச்சியில் “இந்தக்
கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியம்“ தலைப்பில் சில கூறுகளை நாம் விவாதிக்கலாம்.
ஆய்வுத் தலைப்பு
தற்கால அறிவுச்
சூழல் நமக்குப் புதிய புதிய இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகமாகிக்
கொண்டேயிருக்கிறது. உலக இலக்கியக் கோட்பாடுகள் மிக வேகமாக மாறிக்
கொண்டேயிருக்கிறது. அதன் பாதிப்புகள் இன்றைய தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சி,
இணையதளங்கள், தனிநபர் இணையதளங்கள், உலக ஆதிக்க மொழிகளான பிரஞ்ச். ஜெர்மன்,அமெரிக்க
ஆங்கிலம்,பிரிட்டிஷ் ஆங்கிலம்,சீன மொழிகள் உள்பட தெற்காசிய பிராந்திய மொழிகளின்
வழியாக கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கிய மரபு புத்தம் புதிய நவீன கோட்பாடுகளைப்
பேசுகிறது. இந்த பாதிப்புகளின் எதிரொலியாகவும் அயல்நாடுகளில் வாழ்கிற
இந்தியர்களையும் தமிழர்களையும் அந்த மொழிக் கோட்பாடுகளுக்கு ஏற்ப எழுத வைக்கிறது.
இந்திய மொழிகளிலும் கோட்பாடுகளை புத்தாக்கம் செய்ய வைத்திருக்கிறது.
மார்க்சியம்,
சோசலிசம், கம்யுனிசம்.நவீனத்துவம்,பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், பின்
காலனியம், பின் மார்க்சியம், மார்க்சிய-லெனியம், பெண்ணியக் கோட்பாடு களின் பேரெழுச்சி,
தலித் படைப்பியலக்கியம். உலகளாவிய சிறுபான்மை மக்களின் எழுச்சிமிக்க இலக்கியக்
கோட்பாடுகள், அடித்தட்டிலிருக்கிற மக்கள் சார்ந்த அணுகுமுறைகள், மானுடவியல்
சார்ந்த அணுகு முறைகள், தேசிய இனங்கள் சார்ந்த அணுகுமுறைகள் என்பதாக
கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியத்திற்கு வலிமையைச் சேர்த்துவருகிறது. இந்த
மரபின் தேடலில் ஆய்வும் கள ஆய்வுகளும்
விரிவடைந்து கொண்டே வருகிறது. இந்த ஆய்வு என்பது
சமூகத்தின் இங்கு இடுக்குகளில் இன்னும் தொங்கிக் கொண்டு தங்கள்
வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிற சாதாரண எளிய மக்கள் சாரந்த அணுகுமுறை கொண்ட
படைப்புகள். மாநாடுகள் ஆய்வரங்குகள், நாட்டாரியல் மரபுகள் கொண்டவையாகவே அமைகிறது.
அதன் ஒரு பகுதியாக பெண்ணியம் சார்ந்த ஆய்வு முறையையும் அடித்தள மக்களின்
பார்வையுடன் மானிடவியல் அணுகு முறையை மற்றொரு பகுதியாக கொண்டும்
“கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியம்“ ஆய்வுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆய்வின் நோக்கம்
கோட்பாடுகளுக்குப்
பின்னாலான இலக்கியம் குறித்த அறிமுகத்தில் அதன் வளர்ச்சி நிலை, தற்காலத்தில்
ஏற்பட்டிருக்கிற படைப்பாக்கச் செயல்பாடுகளும் நூலாக்க முயற்சிகள், அதில் படைப்பாளி
என்பவன் கோட்பாடுகளின் வழியாக உருவாகிறாரா, அல்லது அவர் தன் படைப்பின் வழியாக
கோட்பாடுகளை மறுவாசிப்பு, மீள்வாசிப்பு செய்ய உதவுகிறாரா என்பதையும் கவனிக்க
வேண்டியிருக்கிறது. நம் மரபு சங்க இலக்கியப் பிரதிகளை முன்வைத்துதான்
தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சியை ஒப்பு நோக்கிக் கொள்கிறோம். கலாச்சாரப் பண்பாட்டு
எழுச்சிகள், அந்த மரபுகளைப் பின்பற்றிய சிறு குறு மக்கள் அரசுகள், இனக்குழுக்கள்,
அதன் படிப்படியான வளர்ச்சிகளில் ஏற்பட்ட போர்கள், போர்களுக்குப் பிறகு கல்
வெட்டில் செதுக்கபட்டு வைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கு இணையான கோட்பாட்டுப்
பதிவுகள் நமக்கு முன்னால் வந்து நிற்கிறது. இன்றும் உலகளாவிய அளவில் இயற்கை
வளங்களைக் கொள்ளை கொள்கிற வல்லரசு நாடுகளின் ஆதிக்க மனோபாவங்களுக்கு எதிரான
கருத்துகளும் கோட்பாடுளும் உருவாகியே வருகிறது. அதன் வீரியமிக்க இடையறாத
படையெடுப்புகளை அத்துமீறல்களைத் தங்கள் இலக்கியப் படைப்புகள் வழியாக படைப்பாளர்கள்
எழுதிக் கொண்டுதான் வருகிறார்கள். அப்படியான இலக்கியப் பிரதிகளின்
கருத்தொற்றுமைகள் திரைப்படங்களாகவும் வருகிறது.
ஆய்வின் கருதுகோள்
தமிழ்நிலத்திற்கு
நாம் வருகிற பொழுது சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற மக்கள் அதாவது உழைப்பை
நம்பி வாழந்த மக்களின் கலைகளும் அதன் அம்சங்களும் உட்படுகிறார்கள்.
அரசர்கள்,வணிகர்கள்,நிலவுடைமையாளர்கள், வள்ளல்கள், வீரத்தாய்கள் பற்றிய பல்வகைப்
பொது ஆய்வுகள் மேற்க் கொள்ளபட்டிருக்கிறது. சங்க நிலமக்களின் பாடல்களும்
தொகுப்புகளும் ஒரே விதமான கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்தப் படைப்புகள்
உழைப்பின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் இவர்களின் வாழ்க்கையிலும்
ஏற்படுத்தியது. குறிப்பாக நீரைச் சேகரித்துப் பயண்படுத்தியதும் நெல் உற்பத்தி
மற்றும் விவசாயத்தை விரிவாக்கியதும் உபரியான உற்பத்திப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கியதும்
இந்தச் சேகரிப்பின் வழியாக ஏற்படுத்தப் பட்ட தனியுடைமை எனும் கோட்பாடு
புதியவெளிச்சமாகத் தோன்றியதை நாம் மறுக்கமுடியாது. சங்க கால சமூகத்தில் அடித்தள
மக்கள் என்ற பிரிவினர் உருவாவதற்கு அடிப்படையான காரணமாக இந்தக் கோட்பாடு உதவியது.
ஐவகை நிலக் கூறுகளில் திணைநிலங்களில் வாழ்ந்த மக்கள் குழுக்களில் அடித்தள நிலையில்
வாழ் வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்ட மக்களைக் குறித்தும் அவ்வாறு வாழ நேர்ந்த
கோட்பாடுகளையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. உலக அளவிலும் இந்திய அளவிலும்
சமூகநீதிப் போராட்டங்களானாலும் எழுத்தியக்கங்களி லும், மாநாடுகளிலும் அதிகம்
பேசப்படுகிற நிலையாக இந்தக் கோட்பாடுகளுக்குப் பின்னால் எழுந்துள்ள
இலக்கியவகைமைகள்தான். இன,மொழி,மத, தேசிய,சர்வதேசிய இனவெழுச்சிப் போராட்டங்கள்
தற்கால த்திலும் ஓய்வதாகவே இல்லை. தன் சொந்த நிலப்பகுதிகளை இழந்தவர்களும் நாடுகளை
இழந்து கொண்டிருப்பவர்களும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடிமைகளாக வாழந்து
கொண்டிருக்கிற சூழ்நிலையை இந்தக் கோட்பாடுகள் பேசுகிறது. அல்லது இந்தக்
கோட்பாடுகளைத் தகர்த்தெறிய முனைகிறது. அல்லது புதிய கோட்பாடுகளை முன்வைக்கிறது.
ஆய்வுப் பரப்பு
சங்க இலக்கிய
வரையறைகளுக்குட்டபட்டதுடன் பல செவ்வியல் பிரதிகளும் சமண சைவ வைணவ பக்தி இலக்கியக்
கோட்பாடுகளும் முக்கியமானது. கோட்பாடுகளுக்குப் பின்னால இந்த வகைமைகள்
தற்காலத்திலும் தொடர்கிறது. வழிபாட்டுத்தலங்களிலும் சடங்குகளையும் பின்பற்றி
வருகிறது. இதன் பாதிப்பிலும் சமகாலத்திலும் இதன் பின்னணி யிலான படைப்புகள் நவீன
இலக்கியச் சூழலிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் குறிப்பிட்டுத்தான்
ஆகவேண்டும். பத்துப்பாட்டு,எட்டுத்தொகை என்னும் இரு பெரும் பிரிவுகளில் உள்ள
வேறுபாடுகள் உள்ளது. அதன் உள்ளடக்க முறைகள்,யாப்பிசைப்பு அடிகள் அமைப்பு.பொருள் முறைகள்,பாடுபொருள்கள்
கோட்பாடுகளுக்கு அப்பாலும் சங்க காலத்திலும் மக்கள் தங்கள் படைப்புகளைப்
படைத்துள்ளதை அறியலாம்.
இரண்டாயிரம்
ஆண்டு மரபில் திராவிட இலக்கியத்தின் நெடிய பரப்பை நாம் தவிர்க்க முடியாது. திராவிட
அழகியல்.திராவிட இலக்கியத்தின் மொழியமைப்பும் கட்டுரைகளும் வசன கவிதைகளும்
சொல்லமைப்பும். மேடைப் பேச்சு வழக்குகளும்.பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்கள்,
தென்னிந்திய மொழிகளில் திராவிட இலக்கிய மரபை வளர்த்து மக்களைப் புத்தாக்க
முயற்சியில் இறக்கியது. ஆகப் பெரும் கொண்டாட்ட வகைமை யைச்சாந்த திராவிடக்
கோட்பாட்டுக்கூறுகள் சில அரசியல்வாதிகளுக்கு பதவிகளையும் ஆட்சி அதிகாரங்களையும்
பெறுவதற்கு உதவியது என்பது கண்கூடு.
அது போலவே ரஷ்யப்
புரட்சிக்கு மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் பெரிதும் உதவியது என்பதை வரலாறு
அறியும். முதல் இரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் கோட்பாடுகளில் பெரிய மாற்றங்கள்
வந்து குவிந்த காலத்தை அறிந்திருக்கிறோம். உலகெங்கும் ரஷ்ய இலக்கியங்களின்
மொழிபெயர்ப்புகள் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. ரஷ்ய இலக்கியங்கள்தான்
கோட்பாடுகளுக்குப்பின்னாலான ஆகச்சிறந்த வடிவங்க ளை உருவாக்கியது. ரஷ்யமக்கள், ரஷ்ய
படைப்பாளர்கள் நாடுகள் கடத்தப்பட்டார்கள். தங்கள் நாடுகளை இழந்து அவர்கள்
வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்தபடியும் தங்கள் படைப்புகளுக்கான கருப்பொருளையும
உலக நாடுகளின் விடுதலைக்கான சோசலிக் கூட்டமைப்புக்காக உழைத்தார்கள். சோவியத்தின்
வீழச்சி வரையிலும் அதன் கோட்பாடுகள் உச்சத்தில் அமைந்திருந்த வரலாற்றை
அறிந்திருக்கிறோம்.
ஆய்வு ஆதாரங்கள்
கோட்பாடுகளுக்குப்
பின்னாலான இலக்கியம் இதற்கான ஆதார வளங்களை நாம் அச்சுப்பொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட
காலத்திற்குப் பிறகான காலத்தை வரையறை செய்து கொள்ளலாம். அதன் படிப்படியான
வளர்ச்சிக்குத் தகுந்த காலத்தை அது ஏற்றுக் கொண்டு மொழியும் வளமும் படைப்பும்
வளர்ந்தது. துணைபுரிந்த ஆதாரங்கள், முதன்மை ஆதாரங்கள், துணைமை ஆதாரங்கள் என நாம்
நம் அறிதலுக்குட்படுத்திக் கொள்ளலாம். இன்று கணணியின் செயல்பாடுகள்,
தமிழ்மென்பொருள், விசைப்பலகைகள், இணையதளங்கள். வலைப்பூக்கள்,முகநூல்கள். செல்பி.வாட்ஸ்ஆப்,புளுடுத்,
டிவிட்டர்,கூகுள்,விக்கிப்பிடியா, உள்ளிட்ட வசதிகளில் தங்கள்
கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கிய வகைகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. மலிவான
இலக்கியப் படைப்புகளும் குவிந்து வருவதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.
மலிவான படைப்புகளின் வளர்ச்சியை வெகுசன ஊடகங்கள் வளர்க்கிறது. கலாச்சாரச்
சீரழிவுகளை ஒரு நாட்டிற்குள் அனுமதிக்க நினைக்கிற ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளின்
பிடிக்குள் சில உள்ளுர் பத்திரிக்கை முதலாளிகள் தங்களின் பத்திரிக்கைகளில் வெகுசன
இதழ்களில் மட்டரகமான படைப்புகளை வெளியிட்டு அந்தப்படைப்புகள் தான் மகத்தான
படைப்புகள் அந்தப் படைப்பாளர்கள்தான் மகத்தான படைப்பாளர்கள் என்பதைத் தொடர்ந்து
நிறுவுகிற ஆபத்தான சூழ்நலையிலும்தான் நாம் வாழ்ந்தும் வாசித்தும் வருகிறோம் என்பதை
நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
படைப்பாளின்
வாழ்வில் தேனாறும்பாலாறும் ஓடவில்லையென்பதையும் பல எழுத்தாளர்கள் வெகுவசதியுடன்
வாழ்கிற ஏற்றத்தாழ்வுகளுடன்தான் தமிழ் இலக்கியக் கோட்பாட்டு வரையறைகள்
அமைந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பல தலித் படைப்புகளுக்குத்
தனியான பெருமைகள் கிட்டவில்லை. பெண்ணிய படைப்பியக்கத்திற்கான சிறப்பு வெகுமதிகள்
இல்லை. குறிப்பாக பெண்ணிய உழைப்பும் சிறுமிகள் சிறார்கள் உழைப்பின் வழியாக வருகிற
இந்திய நாட்டிற்கான வருவாயில் பதினைந்து சதவிகிதம் உள்ளது. பெண்ணிய எழுத்து
இன்னும் ஊக்கப்படுத்தப்படவில்லை. சிறுபாண்மை எழுத்துக்களை சிறுபாண்மை இயக்கங்களே
தடைசெய்கிற கேவலமான நிலையையை நாம் கவனம கொள்ளவேண்டும்.
உலக அளவில்
சாலமன் ருஷ்டிக்கு கோமேனி அளித்த மரண தண்டனை நிலுவையில் உள்ளது. தமிழ்ச்சூழலில்
பெருமாள் முருகன்.துரை.குணா. ஹெச்.ஜி.ரசூல். உள்பட பல படைப்பாளர்கள்
மிரட்டப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பாரதியார்,பாரதிதாசன்,ஜீவா,
பெரியார்,அண்ணாதுரை, உள்பட பல மூத்த படைப்பாளர்கள் தடைசெய்யப்பட்டார்கள்.
கம்யுனிஸ்ட் இயக்கங்கள் தடைசெய்யப்பட்டது 1964ல் ரஷ்ய இலக்கியப்பிரதிகள்
நாடெங்க்கும் தடைசெய்யப்பட்டது. இடது சாரி படைப்பாளர்கள் ரஷ்ய உளவாளிகள் என்றும்
அண்ணா போன்றவர்களை அமெரிக்க ஏஜெண்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நிகழ்வுகள் நம்
வரலாற்றில் பதிவாகியிருக்கிறது என்பதை கவலையுடன் நினைவில் கொள்ள வேண்டும்.
துணைமை ஆதாரங்கள்
நம் இந்திய தமிழ்
நூலகங்களில் அறியதாய்க் கிடைக்கிற ஆனால் எவராலும் அதிகஅளவில் எடுத்தாளப்படாத அரிய
வகை ஆய்வு நூற்கோவைகள், சிற்றிலக்கிய வகைகள், அவ்விலக்கியங்கள் குறித்த செய்திகள்,
கட்டுரைகள், புதினங்கள். சொல்லகராதிகள்.வட்டாரச் சொல்லகராதிகள்
திறனாய்வுக்கட்டுரைகள். மூத்த ஆளுமைகளின் நேர்காணல் பதிவுகள், வட்டுத்தகடுள்,
ஆவணப்படங்கள் வாயிலாக பெற்ற துணைமை ஆதாரங்கள் இந்தக்கட்டுரைக்குப்
பயண்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக வரலாற்று
அறிஞர்கள்,டி.டிகோசாம்பி,நா.வானமாமலை, தொ.பரமசிவன், பயண இலக்கியத்தந்தை சேலம்
படகலா நரசிம்மலுநாயுடு, டி.என் ராமச்சந்திரன். கோவைஞானி, கா.சிவத்தம்பி,
முத்துமோகன். ஆ.வேங்கடசுப்பிரமணியன்.ஆ.இரா.வேங்கடாசலபதி, அ.கா.
பெருமாள்.டி.தர்மராஜன்,நாஞ்சில் நாடன்,கோவைக்கிழார்,புலவர் செ.ராசு உள்பட பல
அறிஞர்களின் படைப்புகள் ஆய்வுகள் நம் காலத்தின் முன்பாக வீற்றிருக்கிறது.
சமகால இலக்கியக் கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியச்
சூழல்.
சாகித்ய அகாடமி
விருதுகள் பெற்ற தமிழ்ப்படைப்பாளர்களின் மொழிபெயர்ப்புகள் பதினெட்டு மொழிகளில்
மொழிபெயர்க்கப்படுகிறது. உலக அளவில் மிகச்சிறந்த பதிப்பியக்கமாக இந்திய சாகித்ய
அகாதமியின் பணி சிறப்பாக அமைந்து வருகிறது. சமீபத்திய அகாடமியின் விருதுகளைப்
பெற்ற படைப்புகள் தமிழின் மேன்மை மிக்க படைப்புகள் என்று
சொல்லவேண்டும்.நாஞ்சில்நாடன்,டி.செல்வராஜ்,ஜோடி குருஸ். சு.வெங்கடேசன்.பூமணி.
மற்றும் இந்திய மொழிகளிலிருநது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அதன் வழியாய
அறியப்பட்டவர்களாகவும் சிற்பி, இந்திரன், புவியரசு, ம.இல,தங்கப்பா.
நிர்மால்யா,பாவண்ணன். போன்ற ஆளுமைகள் இந்திய மொழிகளின் பல படைப்புகளை
தந்துள்ளார்கள்.
இந்திய
சுதந்திரத்திற்குப் பிறகு நம் கோட்பாடுகள் மாறியது. மொழிவாரி மாநிலங்கள்
அமைக்கப்பட்ட பிறகு வட்டார மொழிகளில் தேர்ச்சியும் கொண்ட படைப்பாளர்கள் தங்கள்
மக்களின் இலக்கியங்களை வாய்மொழி வரலாறுகளை எழுதினார்கள். அச்சு வசதிகளைப்
பயண்படுத்தி பழங்குடி மக்களிலிருந்து முதல் பட்டதாரிகளாக முதல் தலைமுறை
எழுத்தாளர்கள் எழுந்து வந்தார்கள். தங்கள் மக்களின் அடிமை வரலாறுகளை எழுதினார்கள்.
பல படைப்புகளை வழக்கம் போல ஒழுக்கவாதிகள் அவைகளில் கலையம்சம் இல்லையென்று
ஒதுக்கியும் புறக்கணித்தும் வந்த கெடுதல்களும் நடந்துள்ளது. இன்னும் நடந்து
கொண்டுதான் உள்ளது. “அது நாவல் இல்லை, அது சிறுகதை இல்லை. அது குப்பை., மொக்கை..” என்று மரமண்டை விமர்சகர்களாலும் அரைவேக்காடு
மதிப்பீட்டாளர்களாலும் புறக்கணிப்புகளாலும் மகத்தான படைப்புகளை அறவே அழித்த
பெருமையும் நம்மிடம் உண்டு. வெகுசன இதழ்கள் அளிக்கிற நிதியுவகை பெற்றுக்கொண்டு
அந்த இதழ்களுக்காக, அந்தப் பதிப்பகங்களுக்காக உழைக்கிற வெகுமதி எழுத்தாளர்கள்
பரம்பரையும் இந்தக் கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியச் சூழலில் நிலவுகிறது
என்பதையும் மறுத்தோ,தவிர்த்தோ நகர்ந்து விடமுடியாது.
மொழிவாரி
மாநிலங்கள் தோன்றியபிறகு மொழிப்போர்கள் உண்டாகியது. கட்டாய மொழித்திணிப்பும்
இனியொரு மொழியைக கற்பதற்கு விரும்பாத மக்கள் மொழித்திணிப்பை எதிர்த்துப்
போராட்ட்ஙகள் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற இந்தி மொழி எதிர்ப்பு வரலாறு நெடிய
வரலாறு.
பிறகு இந்தியா
ஐந்தாண்டுத்திட்டங்களின் வழியாகவும் உலக நாடுகள் கடன்களை இந்தியாவிற்கும்
வழங்கத்துவங்கியதின் விளைவாகவும் அந்தக்கடன்களைப் பெற்றுக் கொண்டு சில மாநிலங்கள்
வேகமாக வளர்ச்சி பெற்றது. இந்த நிதிகள் அதிகம் பெற முடியாத மாநில மக்களிடம் பல்
வேறு கிளர்ச்சிகள் மற்றும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்தது. இதன் அடிப்படைகளைக்
கொண்ட படைப்புகளை படைப்பாளார்கள் எழுதினார்கள்.
பயங்கரவாதம்
தலைதூக்கியது. ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. நாடெங்கும் நெருக்கடி நிலை
பிரகடனம் அறிவிக்கப் பட்டது. நாடெங்கும்
கருத்துரிமைகள் எழுத்துகள் நசுக்கப்பட்டது. படைப்பாளர்கள்
தாக்கப்பட்டார்கள்.சிறையிலடைக்கப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக
பயங்கரவாதங்களுக்கு எதிரான கோட்பாடுகளும் அதற்குப் பிறகான எழுத்துகள் உருவாகியது.
1984ல் பயங்கரவாதம் மற்றும் இன பயங்கரவாத நிலையின் உச்சமாக பிரதமர் இந்திராவின் படுகொலை
நாட்டையே உலுக்கியது. இதற்குக் காரணமான சீக்கியர்கள் பழிவாங்கப்பட்டார்கள்.
அந்தப்படைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். பிற்பாடு மதஅடிப்படைவாதிகளின் பயங்கரவாத
செயல்கள் தலைதூக்கத்துவங்கியது. இன்றளவும் உலகெங்கும் நடைபெறுகிற பயங்கரவாத
செயல்களுக்கு எதிராக படைப்பாளர்கள் ஊடகவியலாளர்கள் பத்திரிக்கையாளர்கள்
கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய
விசயம்.
மூன்றாம் உலகப்
போர்களுக்குரிய செயல்பாடுகளை வளர்ந்த நாடுகளும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளும் நாடு
பிடி கொள்கைகள், இயற்கை வளங்களைக் கொண்டுள்ள நாடுகளை கைப்பற்றுதல், அணுசக்தி
ஒப்பந்தங்கள், எல்லைப்பகுதிகளில் ராணுவ தளங்களை அமைத்தல், உள்நாட்டு
சீர்குலைவுவாதிகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் உலக வல்லரசு நாடுகளால்
மறைமுகமாகவே நடத்தப்பட்டு வருவதை படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளில் ஆய்வுகளில் கருத்தரங்குகளில்
அறிவித்தபடியே உள்ளார்கள்.
கட்டுரை நிறைவுரை
உலகின் பல்வேறு மூலைகளில் பல சம்பவங்கள்
அச்சுறுத்தல்கள் கொடுத்தாலும் அந்தந்த காலகட்டங்களில் இலக்கியக் கோட்பாடுகளின்
வழியாக நம்பிக்கை தருகின்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளது. இன்றும் உள்ளாட்சி
அமைப்புகளில் பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவிகித இடஒதுக்கீடு முறைகள் அமுலில்
இருப்பது போன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் முப்பத்திமூன்று
சதவிகிதம் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால் நாடு இன்னும் மிகவேகமான அளவில் முன்னேற்றம்
காணும். பெண்ணிய எழுத்துகள் மேம்படும். பெண்நிலை வாசிப்பிலும் இயக்கங்களிலும்
மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால் இந்த மசோதா இன்னும் முதல் நிலை ஆய்வுகளுக்குள்ளேயே
செல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. பெண்ணியச் சிந்தனையாளர்கள்
எழுத்தாளர்கள் உள்பட பல சமூக சீர்திருத்தவாதிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் போரடி
வருகிறார்கள்.
இலக்கியப்படைப்புகள்
வாசிப்பதிலும் தன்மைகளுக்கேற்ப வேறுபட்ட பொருள்களைத் தருவதற்கான வாய்ப்புகள்
வழங்க்கின்றன. பால்,சாதி, சமயம், இனம்,பண்பாடு,மொழிவளம், இனக்கலப்பு,கூட்டுறவு
எனப் பல்வேறு கோட்பாடுகள் சார்ந்த கூறுகளும் வாசிப்பில் அடங்குகிறது. பெண்ணிற்கான
அடிப்படைக் கல்வியையும் அறிவு சுதந்திரத்தையும் நீண்ட யுகங்களாக மறுத்து வந்த
நிலையில் இலக்கியப்பிரதிகள் எழுதுதல் வாசித்தல் என்பது ஆணாதிக்க
மரபுகளுக்குட்பட்டதாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் பெண்கள்
சீர்திருத்தவாதிகளின் பெண் படைப்பாளர்களின் இடையறாத முயற்சிகளால், வளர்ச்சியில்
புதிய கோட்பாடு அலகும் தளங்களும் உருவானது. இந்தப் பெண்ணிய தளத்திலிருந்து
இலக்கியத்தை அணுகுவது என்பது பெண்ணின் பார்வையிலிருந்து இலக்கியத்தையும் சமூக
மேம்பாடுகளை அறிய முற்படுவதாகும்.
இந்தக்
கோட்பாடுகள் தாய் வழிச் சமூகத்திற்கு உட்பட்ட பெண்நிலை,ஆண் தலைமைக்கு வாழத்
தொடங்கியபெண்நிலை, உடல் உழைப்பு நடவடிக்கைகள், சங்க காலம் தொட்டுக் கிடைக்கிற
கலைகளும் பெண்ணும்,பெண் வாழ்க்கை பற்றிய இதரப் பண்பாட்டுக் கூறுகள், சங்க காலக்
கவிதைகளில் கண்டெடுக்கப்பட்ட பெண்கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சமகாலத்தில்
எழுதுகிற பெண் கவிஞர்கள் வரையிலும் கோட்பாடுகளின தாக்கமும்
கோட்பாடுகளுக்குப்பின்னால் இலக்கிய வகைமைகளில் பெண்களின் பங்கும் முக்கியமானதாகவே
காலத்துடன் இணைந்து வந்து கொண்டிருக்கிறது.
மானுடவியல்
கோட்பாடு அணுகுமுறை என்பது இருபதாம் நூற்றாண்டின் போர்களின் வழியாக
நமக்குக்கிடைத்த இலக்கியக் கொள்கைகளாகும். 18 ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியாக
பிரஞ்சுப்புரட்சிக்குக்பிறகு நடந்த ருஷ்யப் புரட்சியும் இரண்டு உலகப் போர்களும் பல
நாடுகளுக்கிடையே போர்களும் நம் படைப்புலகத்தை பெருமளவில பாதித்தது. மானுடவியல்
ஆய்வுகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்தது. புதிய புதிய அகழ்வாராய் ச்சிகளின்
முடிவுகள் நமக்கு நம்பிக்கையளித்தது. மனித சமூகம் என்பது தன் வாழ்நாள் முழுக்கவும்
போர்களுடனான,ஆக்ரமிப்புகளுடனான, ஆதிக்க சக்திகளுடனான முரண்களைப் பேணியே வந்துள்ளது
என்பதை அறிய முடிகிறது.
மானுடவியல்
வழியாக குறிப்பிட்ட மக்கள் குழுவின்,இனக்குழுவின். சாதியக் கட்டுமானத்தின்,
பால்நிலை சாரந்த பிரிவுகளின் மொத்த வாழ்வியல் கூறுகளையும் அவர்களின் பண்பாட்டுக்
கலாச்சார விழாக்களின் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
மக்கள் தங்கள்
இனக்குழுவின் மீது அன்பு பாராட்டுகிறார்கள். தங்கள் மேம்பாடுகளை தங்களின்
போர்க்குணங்களை, நெடிய பாரம்பரியம் மிக்க தங்களின் மூதாதையர்களின் சடங்கு
வழக்கங்களைப் பின்பற்ற நினைக்கிறார்கள். நமது சமூகத்தில் மதங்களின் ஆதிக்கம்
பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவருவதை அறிவோம். அதன் வழியாக ஒவ்வொரு இனக்குழுவையும்
மதம் சார்ந்த கட்டமைப்புக்குள் கொண்டு வந்து விடமுடியும் என்று மதபீடங்கள்
நினைக்கிறது. இனக்குழுக் கலாச்சாரங்களை அழித்துவிடுவதின் மூலம் கலைகளை, தொன்மையான
பாரம்பரிய சின்னங்களை பண்பாட்டு நடவடிக்கைகளை முற்றாக அழித்துவிடவும்
முயற்சிக்கிறது..
நாம் அனுமதிக்கப்
போகிறோமா
அல்லது
அனுசரித்துக கொண்டு வாழப்பழக்கப்படுத்திக் கொள்ளப் போகிறோமா என்பதை பொறுமையுடன்
ஒர் பார்வையாளராக இருக்கப் போகிறோமா அன்றியும் களத்தில் நிற்கப் போகிறோமா என்பதை
இந்த மாநாடு முடிவிற்கு விடுகிறோம்....
நன்றி...வாய்ப்பளித்த
“யாதுமாகி“ மாநாடு அமைப்பாளர்களுக்கும் பங்கு கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கிற
அறிஞர் பெருமக்களுக்கும்..மாணவ மாணவியர் செல்வங்களுக்கும் நம்பிக்கையுடன் நன்றிகளை
உரித்தாக்குகிறேன்..
இப்படிக்கு
இளஞ்சேரல்-கோவை-641103-99427
88486
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக