“‘குகைமரவாசிகள்’” –நவீன நாடகப் பதிவு
கோவை பூ.சா.கோ கலைஅறிவியல் கல்லூரியும் அதன்
தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மாணவர்-மாணவியர் அமைப்புகள்-நிலாமுற்றம் ஆகிய
ஒருங்கிணைந்த பொறுப்பில் மணல்குடி நாடகநிலத்திலிருந்து வந்த கலைஞர்கள் நடத்திக்
காண்பித்த நவீன நாடகமான குகைமரவாசிகள் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஏற்கெனவே தமிழின் மிக முக்கியமான ஆக்கங்கள் எல்லாம் முதல்முறையாக கலைவையான
பெருநகரமான கோவையில் நடந்து வந்துள்ளது. சென்னைக்கு அடுத்த பெருநகரமாக கோவையிருப்ப
தாலும் சென்னையில் ஒரு புதிய ஆக்கத்தற்கான வரவேற்பு எந்த லட்சணத்தில் கிடைத்து
வருகிறது என்பதற்கான சாட்சிகள் அரங்கேறிக் கொண்டேயிருக் கிறது. ஒரு நிகழ்ச்சியாவது
உருப்படியாக நடந்து முடியுமா என்பது சந்தேகமான நகரமாக சென்னையும் அங்கு வாழ்கிற
பெருங்குடி இலக்கியக் குழாம் வகையறாக்கள் செய்கிற செப்படி வித்தைகள் நாடறியும்.
இதன் காரணங்களாக கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களுக்கு
முழுமையாக நம்புவது இன்று நம்ப வேண்டியாகவேண்டிய கட்டாயத்தை கோவை ஏற்படுத்
தியிருக்கிறது. கோவையை விட்டால் அடுத்த நிலையை கலையம்சத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு
அடுத்த இடத்திற்கான நிலை வெற்றிடமாகவே உள்ளது. இதற்கு முன்பு நவீன நாடக
கர்த்தாக்களான கோமல்சுவாமிநாதன் மு.இராமசாமி,பிரளயன், உள்பட பல கோக்கொக
முனிவர்களான கிரேசிமோகன்,விசு,எஸ்வி சேகர்ஜி, மௌலி,பிரசன்னா, போன்றவர்களும்
நாடகங்கள் நடத்தியிருக்கிறார்கள். கோவையிலுள்ள பிரபலமான கல்லூரிகளில் தினமும்
ஒவ்வொரு ஆங்கிலப பெயர்களில் சதா கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் சினிமா
தொலைக்காட்சி ஊடகங்கள் சேர்ந்த கேசவமூர்த்திகள் அழைக்கப்பட்டு பாடங்கள் பாடல்கள்
நடனங்கள் காட்டப்படுகிறது. அந்தக் கலைஞர்களுக்கு லட்சக்கணக்கிலும் குளிர்சாதன
வசதிகள் கொண்ட அறைகளும் சிங்கிள் லார்ஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொண்ட சரக்கு சப்ளை
செய்யப்படுகிறது. அவர்களின் நிகழ்ச்சிகளின் கூட்டங்களுக்கு கூடும் ரசிகர்கள்
கூட்டம் கடல் அலைகளைத்தாண்டும். இப்பொழுதும் சில கலை அறிவியல் கல்லூரிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மக்கள் கலை சார்ந்தவர்களுக்கு வெறும் உப்புமா காபி ரவையும் பொது கழிப்பிட வசதியும்
ஒரு பழைய மெட்ட டார் டெம்போவில் திருமண கோஷ்டி மாதிரி மக்கள் கலைஞர்கள் அழைத்து
வருகிற அவலம்.
ஆனால் அப்படியிருந்த நிலைகளை கோவையின் இலக்கிய
அமைப்புகள் மாற்றிக்காட்டியிருக்கிறது. கலையம்சம்,நவீனம், நவீன புதினங்களின்
எழுச்சி, புதிய வாசிப்பு இயக்கம். புதிய ஆக்கங்கள், புதிய ரசனைகள் பற்றிய
விழிப்புணர்வுகளைத்தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பது கோவைதான். அந்தக்
கோவையில் எதிர்பாராத வகையில் மகத்தான நிகழ்வுகளும் நடந்து விடும். சில தொண்டு
நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உயரிய கலைநிகழ்வுகளை நடத்தியும் வருகிறார்கள்.
அப்படியான ஒரு நிகழ்வாக ச.முருகபூபதி யின் குகைமரவாசிகள் நாடகத்தை இலவசமாக காண
வாய்ப்பு அமைந்தது. இதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்ட பேராசிரியர்கள் ராமராஜ்,
கந்த சுப்பிரமணியம் மற்றும் அவர்களுடைய மாணவர் மாணவியர்களுக்குத்தான் நன்றி சொல்ல
வேண்டும்.
ச.முருகபூபதியின் சமீபத்திய ஆக்கம்
குகைமரவாசிகள். நாடகத்தின் பல்வேறு அரங்கேற்றங்கள் ஆங்காங்கு நிகழ்ந்த
வண்ணமிருந்தாலும் சர்வதேச அளவில் தொடர்ந்து நான்காவது முறையாக இடம் பெறும் நவீன
நாடக இயக்குநர் மற்றும் கலைஞராக ச.முருகபூபதிதான் இடம் பெற்றிருக்கிறார் என்பது
பிரமிப்பாகவும் ஆச்சர்ய மிக்கதாகவும் இருக்கிறது.
கதையமைப்பு
வாழிடங்களை, இயற்கை வளங்களை, மரங்களை, பறவைகளை,
நீர் நிலைகளை, குருவிகளை,தானியங் களை, சடங்குகளை, தொழில்களை, சந்ததிகளை, தங்கள்
குழந்தைச் செல்வங்களின் எதிர்காலங்களை, தங்கள் நிலப்பகுதிகளை, தங்கள் சோலைவனங்களை
இழந்த மக்களுக்கு ஆதரவுக்குரலாக, அவர்களுக்கான விடுதலையை, மதநிறுவனங்கள் தொடர்ந்து
உருவாக்கி வருகிற அச்சுறுத்தல்களும், அந்த அச்சுறுத்தல்களின் விளைவாக மக்கள்
தங்கள் கட்டுகளுடன் மேலும் பல இறுக்கமான பின்னல்களுக்குள் வலைகளுக்குள்
அகப்பட்டபடியே கதறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கான விடுதலைப் பாடல்களை அந்த
மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்ட களங்களை உருவாக்குகிற படிமங்களாக இதன்
கதை யமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. . ச.முருகபூபதியின் முந்தைய
ஆக்கங்களிலிருக்கிற இந்த நாடக ஆக்கம் வேறுபட்டிருக் கிறது. ஒவ்வொரு
நாடகப்பிரதியும் அதில் பொருத்தப்படு கிற உடல்கள் எனும் படிம இறுக்கம் இந்த
நாடகத்தில் சற்று எளிமையாக்கப்பட்டிருக்கிறது எனலாம். பொது ரசனைகளுக்கு ஏற்ப
கொஞ்சம் இளகியிருக்கிறது. கதையில் சொல்லப்படுகிற காட்சிகள் தெள்ளத் தெளிவாக
அறிந்து கொள்கிற காட்சிகள் அப்படியே ரூபமாக நிழலாடுகிறது. இவை ச.முருகபூபதியின்
முன்னேற்றம் அல்லது வெகுமக்கள் ரசனைக்குள் நுழைந்து கதை பேசுதல் எனும் பொருளைக்
கொள்ளலாம்.
நாடக ஆக்கம்.
ச.முருகபூபதியின் நாடக ஆக்கத்தில் பல நவீன நாடக ஆக்க கலைஞர்கள்
உதவியிருப்பதை அவரே வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது ஓர் சக கலைஞனுக்கு அளித்த
வெகுமதி மட்டுமல்ல கலைகளுக்கே அளிக்கிற காணிக்கை என்று சொல்ல லாம். கருணாபிரசாத்
ஒலி ஒளி அமைப்புகளிலும் இயக்க கூறுகளுக்கும் உதவியிருப்பதை அறியமுடிகிறது.
கோணங்கியின் பல கவிதைகள் உரையாடல்களாக மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி
ஐந்து கலைஞர் கள் தங்களின் ஒருமித்த ஈடுபாட்டுடன் ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு
ஏனெனில் ஒவ்வொரு முறையும் திரும்பத்திரும்ப நடிக்க ஏதுவாக காட்சிகள் அமைக்கப்
பட்டிருக்கிறது. சரியான அளவில் அந்தக் கலைஞர்கள் ஓய்வு கொள்கிற அளவும் அதே சமயம்
அவர்களின் வசன உச்சரிப்புக்கு ஏற்றவாறான காட்சிகளும் அதற்குரிய பின்பல கலைஞர்களின்
பாவனைகளும் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது. உடல்கள் மட்டுமே படிமங்களாகவும்
உடல்கள் மட்டுமே பேசுவதாகவும் அந்த உடல்கள் பேசுகிற வசனங்களும் கவிதைகளும்
பாடல்களும் உரையாடல்களும் உடல்களே பேசுகிறது. கலைஞர்கள், படைப்பாளி,
நாடகப்பிரதியைத்தாண்டி அந்த நிகழ்வில் நடிக்கிற உடல்களின் கூக்குரல்களாக
ஒலிக்கிறது. நாடக ஆக்கத்தில் படைப்பாக்கத்தில் ஒரு புதுமையான வடிவம் என்று
சொல்லாம். உலகளவில் நாடக ஆக்கப்படிமங்க ளிலிருந்து சற்றும் வேறுபட்டுக் கொள்கிற
விதத்தில் இந்தக் குகைமரவாசிகள் அமைகிறது. நாடகத்தை நாம் காண்கிற பொழுது அந்த
உடல்கள் என்ன சொல்கிறது என்ன பேசுகிறது. என்ன பேச முடியாமல் தவிக்கிறது. இந்த உடல்
படிமங்கள் எதை வலியுறுத்த தன் உடல்களை வறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ரசிகர்கள்
அனுமானிக்க முடிகிறது. ரசனை, மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா ரசிப்பார்களா. இந்தப்
பிரதி வெற்றி கரமான பிரதியாக அமையுமா என்பதையெல்லாம் யோசிக்காமல் மிக தைரியமாக
நாடக காட்சிகளை வைத்த ச.முருகபூபதியின் தைரியம் பாரட்டப்பட வேண்டும். கோவை போன்ற
மேட்டுக்குடி ரசிகர்கள் இருந்த கலையரங்கில் கண்ணீர் வழிந்த காட்சிகளை அரங்கம்
உணர்ந்ததை நான் கண்டேன். உயர் குடி மக்களிலிருந்து உழைப்பாளர்கள் வரையிலும் கண்ட
ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் இனி என்றும் பார்க்க முடியாத ஒரு பிரதியை அதன்
நாடகத்தைக் கண்ட பிரமிப்பு காண முடிந்தது. கலை என்பது இதுவா. இதன் பெயர்தான் கலைஞர்களா, என நம்பமுடியாமல்
அதிர்ந்து போன பெரும் படிப்பாளிகள், வாழ்க்கையில் நோகாமலே நோன்பு வைத்து
உயர்ந்துவிட்ட மனிதர்கள் பேரதிர்ச்சியு டன் காட்சிகளைக்கண்டதைப் பார்த்தேன்.
வெறும் புத்தகங்களில், நுனிப்புல் வாசிப்புகளில், நோகுமிடத்தில் நிறுத்திக் கொண்டு
உடல்களை ஒரு மெத்தை போல சௌகரியமான இடத்தில் பொருத்திக் கொண்டு சீரணமா வதற்காகவே
வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிற சொகுசு ரசனையாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுத
காட்சிகள் பல அமைந்திருந்தது. கலைஞர்களின் வெற்று உடல்களும் அதன் எலும்புகளும்
நடித்தது. ஒவ்வொரு உயிரினங்களும், பறவைகளும்,மீன்களும், நாய்களும், குருவிகளும், குகைகளுக்குள்
வசிக்கிற உயிரனங்களின் பாவனைகளும் அந்த உடல்கள் பேசியது. அப்படியான உடல்களைத்தான்
நாமும் கொண்டிருக்கிறோம் என்பதை அந்தக் கலைஞர்களும் நாடகப்பிரதியும் நமக்குச்
சொல்கிறது.
கலை
நாடக ஆக்கத்தில் முழுமையாக ஆதிக்கம் பெற்றது
கலையமைப்புதான். அரங்க அமைப்பு பற்றிக் குறிப்பிட வேணடும். பின்புலம் முழுக்க ஆகாய
வெளியும் ஒரு குகைக்குள் வாழ்கிற மனிதர்கள் பற்றிய பிரமை தருகிறது. குகைகளுக்குள்
மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களின் உடலசைவுகள் அவர்கள் தேர்ந்த மொழியை நமக்காகப்
பேசிக்கொண்டு உடலசைவுகளில் குகைமர வாசிகளைப் போல படிமங்களும் பாவனைகளுமாக கலை
அமைக்கப்பட்டிருக்கிறது பறவைகளின் மொழி, காட்டுயிர் களின் உடல்மொழி, குறிப்பாக
பழங்குடி மக்களின் நடன அசைவுகள், குகைமனிதர்களின் பாய்ச்சல்கள், தாவுதல்,
போர்க்குணங்கள், உறுமல்கள்,பிளிறல்கள். அவர்களின் குரூரமான பார்வைகள், ஆவேசமிக்கவாறுஅவர்கள்
ஆடுகிற தாண்டவங்கள். சிறப்பான கடுமையான பயிற்சி யால் கலைஞர்கள் தங்கள் உடல்களை
பழக்கியிருக்கிறா ர்கள். அந்த உடல்கள் ஒரு கட்டுமஸ்தானுக்குரியவை யாகவும் அதே
நேரம் தேர்ந்த ஆசனவாத்தியாருக்குரிய வளைப்புகளுக்குட்பட்டதாகவும் ஆக்கம் செயது
வைத்திருக்கிறார்கள். ரஷ்ய பாலே நடன அசைவுகளும் உண்டு. ஸ்பானிய
காளைச்சண்டைக்காரனுக்குரிய அசைவுகளும் உண்டு. நமது ஊர் ஜல்லிக்கட்டுக்
காரனுக்குரிய உடலும், ஒரு சடங்கு சாமியாடிக்குரிய உடலாகவும்
வறுத்தியிருக்கிறார்கள்.
பாடல்கள்
பெரும்பாலான வசனங்கள் நவீன கவிதைகளாக வும் பாடிய பல பாடல்கள் நாட்டுப்புறப்
பாடல்களாகவும் அமைந்திருக்கிறது. தானியவகைகள் குறித்த பாடல்கள், இந்த மண்
அழித்துவிட்டுப் போன மனித குலத்தின் உணவு வகைகளை நினைவு கொள்ள வைக்கிற பாடல்கள்,
கும்மி, அறுவடைப்பாட்டு, துவைக்கிறபோதும், அறுவடைப்பாடல்கள், ஒப்பாரிகள்,
ஆவேசங்கள், சடங்குப் பாடல்கள் என்று அத்தனை வகையான பாடல்களை அந்த நடிகர்களும்
கலைஞர்களும் பாடியே நடித்து இருக்கிறார்கள் என்கிற பொழுது சின்னப்பா, தியாகராஜ
பாகவதர் மகாலிங்கம் எல்லாம் என்ன பெரிய திறமை என்று வியக்கவைக்கிற மாதிரியான
குரல்வளங்கள். எதிர்ப்பாட்டும், எசப்பாட்டும், தந்தனத்தொம், தகிந்தனத்தோம் எனும்
ஜதிகளுக்குட்பட்பட்டும் நாட்டிய அசைவுகளுக்குமாக அவர்கள் பாடிய விதம் முற்றிலும்
கிராமிய ராகங்கள் தவிர்த்த புதிய தாளவகைகளைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும்
ச.முருகபூபதியின் வசனங்களாக பேசப்பட்டதாகவே பாடி நடித்தார்கள். கதாபாத்திரத்தின்
உடலசைவுகளும் குரலும் அது பேசிய மொழியும் முழுக்க கவிதைகளின் சாயல் அமைந்திருந்த
து. இயற்கையின் ஒலிகள் சுருதியாகப் பின்னணியில் ஒலிக்க அதன் அசைவுகளுக்கு ஏற்ப
ஒளியின் வண்ணங்கள் பொழியவும் அந்த கவிதைகள் மறுபடியும் கேட்க முடியாதே என்னும்
ஏக்கத்தை தருகிறது. பின்னணி இசையும் குரல்களும் நாடகத்தினை எங்கோ கொண்டு
செல்கிறது. அந்த இடம் மாபெரும் பாறைக்குகையாகவே மாறிவிடுகிறது. ஒளியமைப்பில்
வண்ணக்குழல் விளக்குகளின் ஒளிகளான பச்சை, நீலம் கருப்பு (இருள்) சிவப்பு, மஞ்சள்,
என்னும் வண்ணங்களின் திரிபு வண்ணங்கள் அதன் ஒளிப்பந்தின் விலாசம் அது கலைஞர்களின்
மீது கவிழக் கவிழ அவர்களின் வெற்று உடல்கள்,எலும்புகள். விரல்கள், கண்கள் மேலும்
மேலும் உயிர்பெற்று அதிர்வளிக்கிறது. ச.முருகபூபதியின், கருணா பிரசாத் இருவரின்
பின்னணி குரல்கள், பறவைகளின் ஒலிகளை, ஏகார ஒலிகளை. துன்பியலின் பாடல்களை அவர்கள்
இடையிடையே தங்களின் குகைகளின் அச்சத்தி னூடேயே வாழ்கிற காட்டுயிர்களின்
சத்தங்களைக் கொடுத்தார்கள். காட்சிகளுக்கு ஏற்றவாறு காட்சி மாந்தர் களின் உடல்கள்
பாம்புகளின் சரசரப்புகளும் மீன்களின் துள்ளல்களும்,மான்கள்,சிறுத்தைகள், நரிகளும்
ஆந்தை களும் மனிதக்குரங்குகளின் அசரீரிகளாகப் பின்னணி இசையும் புதுமையாகவே
இருக்கிறது. சில சமயம் நடுச் சாமங்களில் தேவநாகரி மனிதர்களின் கல்லறைக்
கூட்டங்களின் ஒத்திகையோ எனவும் தோன்றுவதாகவே உணர்ந்தோம். ஒரு காட்சியில் உடல்களில் ஏறியுள்ள ஆணிகளால்
உமக்கு வலியில்லை ஆனால் இந்த முள் ஏறியதற்காக வலியென்கிறாயே கிருத்துவே என்
தேவனே..இந்த முள்ளை நீக்கி விடுவதால் மட்டும் உன் சமூகத்தின் வலி தீர்ந்து விடவா
போகிறது என்கிற உடல் பாவங்கள் அற்புதமாக அமைந்த காட்சிகள் அது..
காட்சியமைப்புகளின் நவீனத்துவ ஆக்க நிலைகளில்
கலைஞர்களின் உடையலங்காரங்களும் அவர்கள உபயோகப்படுத்திய பலவிதமான அரங்குக் கலைப்
பொருட்கள் மிகவும் முக்கியமானவை. மூங்கில்குழல் நாயனங்கள், புல்லாங்குழல்கள்,
சிறுசிறு காட்டுக்குயில் களின் ஓசைகளுக்கு ஏற்றவாறு மூங்கில் குழல்கள்,
மரப்பட்டைகள். இலவப்பஞ்சுகளாலான சிறு சிறு குழந்தை விளையாட்டு பொம்மைகள், குழந்தை
பொம்மைகள்,மரப்பாச்சி பொம்மைகள், மீன் பொம்மைகள், திமிங்கில பொம்மைகள், இப்படியான
குழந்தைகள் வாழ்வு பறிபோய்க் கொண்டிருக்கிற தரைவாழ் மனிதர்கள் கனவுகளுக்காக
அவர்களின் நம்பிக்கையளிக்கிற எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஏங்குகிறார்கள்
குகைமரவாசிகள். குறிப்பாக ஆற்றோரங்களில் துணிவெளுக்கிற மக்களின் கொண்டாட்டமும்
ஆட்டமும் பாட்டமுமாக அவர்கள் துணி வெளுத்து விளையாடுகிற காட்சிகளில் அரங்கத்தின்
வெளிச்சமும் கலைஞர்களின் நடனமும் அந்தப்பாடல்களும் நவீன நாடகத்தின் தமிழ்
நிலத்தின் அழகுப் பொதியின் உச்சம்.
சில காட்சிகளில் திடுமங்கள்
பயண்படுத்தப்பட்டிருக்கி றது. ஆனால் அதன் வாசிப்பு முறைகளுக்கு ஏற்ப அமையவில்லை.
அது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. பொதுவாக திடுமங்களின் ஒலியற்ற அரங்காக
மாறிவிட்டது. அத்தனை திடுமங்களையும் ஒன்று சேர ஒவ்வொரு அடியாக அடித்துச சுற்றி
ஆடியது நடனமும் அடவுகளும் சிறப்பாக இருந்தாலும் திடுமங்களின் பிரத்யேகமான ஒலிகளும்
வாசிப்பும் இல்லை. திடுமங்களின் தாள வாசிப்புகள் நிகழ்த்துக் கலையில் சேர்த்துக்
கொள்ளவேண்டுகிறேன்.. இன்னும் சில வாத்தியக் கருவிகள் இணைத்துக் கொள்ளவேண்டும்.
சமீபத்தில் ஒரு கழைக்கூத்தாடி பழைய அலுமினிய வட்டில் பல்வேறு வகையான கர்நாடக
சங்கீத ராகங்களை வாசித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது. எத்தனை நாட்களுக்கு
தங்கள் குரல்களையே இசைக் கருவிகளாகப் பயண்படுத்த முடியும்.. ச.முருகபூபதியின்
யோசனைக்கு விட்டுவிடுகிறேன்.
உலகளாவிய நாடகரசனைகளின் தன்மைகளுக்கு ஏற்ப நாடக ஆக்கத்தைத் தந்திருக்கிறது ச.முருகபூபதி யின் குழுவும் கலைஞர்களும். தமிழ்
நாடகத்தின் எழுச்சியென்று நிச்சயமாகச் சொல்லமுடியும். இந்த நாடகத்தைப் பற்றிய
விமர்சனங்களாக நாம் எதுவும் காணமுடியாது. சமகாலத்தில் மருத்துவமனைகளில் ஒரு வாசகம்
எழுதியிருக்கிறார்கள் “மருத்துவத்துறையில் பணியில் காலதாமதம் தவிர்க்க
முடியாது..தங்கள் வரிசை வரும் வரையில் தயவு செய்து காத்திருக்கவும்.“ என்பதுதான்
அது, அதைத்தான் இங்கு சொல்ல வேண்டும் கோடாணுகோடி ரூபாய்கள் கொட்டிக் கொழித்துக்
கொண்டிருக்கிற தனியார் மருத்துவத்துறைகளே இந்த வாசகத்தைப் பயண்படுத்தும் போது
கலைஞர்களும் கலைகளைக் கையாள்கிற கலைஞர்கள் சொல்வதில் தவறில்லை. நல்ல விசயங்களை
நீங்கள் ரசிப்பதற்கும் ரசிக்கப் பழகுவதற்கும் சில காலம் ஆகலாம். அதுமட்டுமல்ல அது
மாதிரியான ரசனைக்குரிய அறிவு உங்களுக்கு குறைச்சலாக இருக்க்கிறது. அதாவது ரசனை
சம்பந்தமான நோய்கள் பீடித்திருக்கிறது என்பதையும் உணர்ந்தால் மட்டுமே நவீன
ஆக்கங்களுக்குள் நுழைய முடியும்.
“புரியவில்லை..என்ன சொல்ல வருகிறீர்கள்..“
“அது என்ன சத்தம்..”
“என்ன பேசிக் கொண்டு
இருக்கிறார்கள்..நாய்..பறவை, மீன்கள் கடல்கள்..நிலம்..குகை.. என்கிறார்களே..“
என்று தனக்குத்தானே தலைச்சவரம் செய்து கொள்கிற விஜய் டிவி. ஆனந்தவிகடன், தினத்தந்தி, தி இந்து தமிழ், உள்ளிட
சொறிப்பெயர்ச்சி ரசனை சார்ந்த லட்சக்கணக்கில் மரமண்டை ரசனையாளர்களை இவர்கள்
உருவாக்கு கிறார்கள். இந்த மேம்போக்கு சரும க்ரீம் ரசனைகளும், குருப்பெயர்ச்சி
பலன்கள் வாசிப்பவர்களுக்கு குழப்பமாக இருக்கலாம். அதற்காக மகத்தான மக்கள்
கலைஞர்கள் திரும்பவும் சவரப்பெட்டியைத்தூக்கிக் கொண்டு மரத்தடியில் உங்களுக்காக
காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.. இப்பொழுதெல்லாம் ரசக்கரண்டியும் மட்டக்கோலும்
டெம்ப்போ டிராவலரில் போகிற காலம் இது. ரசனை அறிவு சேகரிக்க சில மைல்கள் நடந்துதான்
ஆகவேண்டும். சில பைசாக்கள் செலவு செய்துதான் ஆகவேண்டும். டாஸ்மாக் கவுண்டர்க்கு
மட்டும் எப்படி ஆயிரம் ரூபாய் நோட்டு எளிதில் நுழைகிறது. அப்படியாக நல்ல
நிகழ்வுகளுக்கும் சில தாள்களை நீங்கள் செலவு செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில் நல்ல நிகழ்வுகள் நடத்துவதற்கு
வெளி நாட்டு வாழ் தமிழர்கள் உதவியில்லாமல் நடத்த முடிவதேயில்லை. காரணம் உள்ளுர்ப்
புரவலர்கள் கோவில்களுக்குக் கொண்டு போய்க் கொட்டி விடுகிறார்கள். கொடுங்கள் வேண்டாமென்று சொல்ல வில்லை. தாளத்தையும்
தப்பையும் நம்பி வாழ்கிற தொல் கலைகளுக்கும் அள்ளித்தாருங்கள் என்றுதான்
கேட்கிறோம். அப்படியாக மணல்குடி நாடக நிலத்தின் ஆக்கமான குகைமரவாசிகளைக்
கண்டுகழியுங்கள்.. நமது மூதாதையர்களின் குரல்களைக் கேளுங்கள் நமது கானகத்தின்
ஒலிகளைக் கேளுங்கள்..
வாய்ப்பு வழங்கி மணல் குடி நாடக நிலத்தைக்
கௌரவித்த மனங்களுக்கு நன்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக