வெள்ளி, 4 அக்டோபர், 2013


கோவை இலக்கியச் சந்திப்பு- ஞாயிறு-29.9.2013

     முப்பத்தி நான்காம் நிகழ்வின் பதிவுகள்

        அது போன்ற பரகாசூர ஆடுகளை நான் பார்த்ததே இல்லை. தமிழிலக்கியத்திலும் வாசித்த மாதிரி தெரியவில்லை. எருமைக் கிடாவை அது போலப் பார்த்திருக்கிறேன். ஆநிரை கவர்தல் குறித்த சிந்தைகளிலும் இல்லை. ஆட்டுக்கார அலமேலு படத்தில் வந்த பிறகு அந்த ஆடுகள் புகழ்பெறத்துவங்கியது. சாண்டோ சின்னப்பாத்தேவரும் ராம நாராயணனும் மேனகா காந்தியும் புண்ணியமிக்க காரியங்கள் செய்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறேன். பிறகு ஈரோடு அந்தியுர் பகுதியில் மலைவரையாடுகளைப் பார்த்திருக்கிறேன். நவீன இலக்கியத்தில் ஆடுகள் பற்றிய பதிவுகளிலும் அந்த ஆடுகளை நான் பார்த்ததில்லை.

       நிகழ்வு துவங்கும் போதிலிருந்து வரிசையாக அந்த மைதானத்தில் கட்டிவைக்கப்பட்டு தீவனமிடப்பட்டது. அவ்வப்பொழுது முப்பது நாற்பது ஆடுகள் கொண்டு வந்து மைதானத்தில் கட்டிவைத்து மேய வைத்தார்கள். ஒவ்வொரு ஆட்டையும அழைத்துப் போகிற இளைஞர்களும் ஆடுகளுக்குத்தகுந்த பயிற்சி வீரர்கள் போலிருக்கிறார்கள் ஆட்டின்   நீண்டு விரிந்து வளைந்த கொம்புகளை முகமும் உருண்டு திரண்ட கண்களுமாக விட்டால் அவை ஒன்றையொன்று போரிட ஏதுவாகவும் இருக்கிறது. வலிமையான துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத வண்ணம் அதன் தோல். இது போன்ற ராட்சத எருமைக் கொம்புகளை நான் காங்கயம் காளைகளில் கண்டிருக்கிறேன். வளைந்த கொம்புகளில் துளையிட்டு அதன்வழயாக இரும்பு வளையம் போட்டு அதில் இரு கொம்புகளிலும் கயிறுகள் கட்டி அதைவிடவும் கட்டுமஸ்தான இசுலாமிய இளைஞர்கள் பிடித்து அழைத்துப் போனார்கள் நிகழ்வு முடிந்த பிறகு பள்ளி அலுவலரைக் கேட்டோம். பக்ரீத் அன்று இந்த ஆடுகள் ஏலம் விடப்பட்டு எடுக்கப்பட்டு அனைவருக்கும் உணவு படைக்கப்படுவதற்காக வளர்க்கிறார்கள். என்றார் பிறகு இது போன்ற ஆடுகள் எப்படிக் கிடைக்கிறது என்றபோது சாதாரண வெள்ளாடுகளும் வரையாடுகளின் கலப்பு. வெள்ளாடுவகைகளைச்சாராது என்றார். அது முட்டினால் சீனப் பெருஞ்சுவரும்பெர்லின் சுவரும் சாய்ந்து விடும்போலிருந்தது. நாங்கள் முதலில் அந்த மைதானத்தின் ஒருபுறத்தில் வெட்டுவதற்காகத்தான் கொண்டு போகிறார்கள் என்று பேசிக்கொண்டோம். இளங்கோ கிருஷ்ணன் வெட்டுவதற் காகவே கொண்டு போகிறார்கள் என்றார். அதுபோன்றுதான் இருந்தது சூழல். ஆடுகள் குளிப்பாட்டி நுரை மணக்க வலம் போனது.  அனைவரும் ஆமோதித்தார்கள்.  அந்த மைதானத்தின் மறைவாக இடத்தைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அந்த ஆடுகள் நிச்சயமாக முப்பதிலிருந்து நாற்பது கிலோ தேறும். அப்படிப்பட்ட ஆடுகளின் வதைக் கூடம் எப்படியிருக்கும். இருந்தால் நிகழ்வு முழுக்க ஆடுகள் மீதே இருந்தது. நிகழ்வுகள்  துவங்கும் வரையிலும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இளைஞர்கள் காலைப்பயிற்சி கைப்பந்து ஆட்டத்திலிருந்த வீர ர்களின் ஆரவாரக்கூச்சல்களை இலக்கியச் சந்திப்பிற்காக குறைத்துக் கொள்கிறார்கள் சில இளைஞர்கள் கிளம்புகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை விளையாட்டுமைதானத்தில் பல நூறு விளையாட்டுப்பயிற்சியாளர்களுடன் இலக்கிய நிகழ்வுகளையும் நடத்துகிற வாய்ப்பும் கோவை இலக்கியச் சந்திப்பு பெற்றிருக்கிறது.

          நிகழ்வு முடிந்து ஆடுகள் வெட்டப்படாமல் போனது மகிழ்ச்சியாகவே இருந்தது. கோவை மாநகரில் அது போன்ற ஆடுகள் வளர்க்கப்படுகிறது என்பது வாழ்நாள் சாதனை விருது நிகழ்வு. அதற்கான மைதானமும் இடமும் எங்கிருக்கிறது. அது சாப்பிடுகிற அளவு தாவரங்கள் செடிகொடிகள் அருகிப் போயிருக்கிறது. ஒரு வேளை அந்த ஆடுகள் மாட்டுக் கறி சாப்பிடுகிறதோ என்னவோ.  அதன் மிரட்சியுட்டும் கொம்புகளை நாம் பொக்லைன் இயந்திரத் திற்னான பற்களாக உபயோகப்படுத்தலாம். அதிலுள்ள வரிகள் யாவும் வெடித்து வளவளப்பு ஆன் பாறைக் குளம்புபோன்று உள்ளது. ஆடுகள் வீட்டு விலங்குகள் என்கிற வகைமை மாறிவிட்டது. கொல்லப்படும் விலங்குகள் என்கிற வகைமையைச் சார்ந்து விட்டது. கடல் மீன்கள் போல. இலங்கையால் கொல்லப்படும் மீனவர்கள்போல. அல்லது இலங்கைத் தமிழ் அரசியல் போலவே.

      இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் அமர்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும் முதல்வர் வேட்பாளருமான சி.வி விக்னேஸ்வரன் கூறியதாவது. ஜனநாயகம் தழைக்க மக்கள் வாக்களித்துள்ளனர். அதை இலங்கை அரசு எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும். தமிழர்களின் தன்னாட்சிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர் வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத்தை அகற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் இலங்கையைப் பிரிக்காமல் கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் தமிழர்களுக்கென தன்னாட்சி கோரப்படும் என்கிறார். தமிழகத்தில் உள்ள இலங்கை ஆதரவு எதிர்ப்பு கருத்தாளர்கள் உடனடியாக எதற்கும் இருக்கட்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலைக்கவனிப்பார்களா இந்தத்தேர்தலைக் கவனிப்பார்களா மோடி வித்தையில் லயித்துப் போய்க்கிறங்குகிறார்கள் புரட்சி அடைமொழி கொண்டவர்கள். மஸ்தான் வித்தைக்கு ஆடலாமா பாடலாமா அள்ளையில் பம்மலாமா என்று யோசிக்கிறார்கள்.

ஆனாலும் வெளிப்படையாக சி.கே. வாசன் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று பேசியதை தமிழருவி மணியன் வரவேற்று இருக்கிறார். இலங்கையில் கலவரம் நடந்த பொழுது ஒரு வார்டு உறுப்பினர் கூட இலங்கைக்கு எதிராகப் பதவி விலகாத போது தனது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை விட்டு விலகியவரான அவர் சொல்வதற்கு உரிமை உள்ளது. இது பற்றி நாராயணசாமியைக் கேட்டால் தெளிவான பதில் தர வாய்ப்பிருக்கிறது.

          திருவாளர் மத்தியஸ்தன் திருவாளர் நடுநிலையும் என் வீட்டின் தொலைக்காட்சிப்பெட்டியின் சேனலைத்திருப்பினார்கள். அவர்கள் எப்பொழுதும் என்னுடன் வாதாடுவதற்காக வந்துவிடுவார்கள். குறிப்பாக இலக்கியச் சந்திப்பின் நிகழ்வுகளுக்குச் செல்லும்போதுதான் ஞானோதயம் தோன்றும். தென்னிந்திய சினிமாவின் நூறாண்டு நிகழ்ச்சியைப் பார்த்தான். திராவிடம் தழைத் தோங்கியிருக்கிறது. அடடா என்னவொரு ஒற்றுமை. அண்ணா இப்பொழுது இருந்து தரிசித்திருக்கவேண்டும். திராவிட நாடு திராவிடருக்கே என்று மறுபடியும் துவக்கியிருப்பார். ரஜினியும் கமலும் பின்வரிசையிலும் பகவதியம்மா கோயில் புசாரிகள் முன்வரிசையிலும் அமர்ந்திருந்த காட்சி மெய்சிலிர்க்கிறது. சினிமா நூற்றாண்டையொட்டி மக்கள் முன்னிலையில் திரைப்படங்கள் திரையிடுகிற முயற்சியை தமுஎகசங்கம் ஏற்பாடு செய்வதையும் இந்தக் கோலாகலத்தையும் நினைத்துப் பார்த்தேன்.

         இது மோடி சீசன் என்பதால் அவர் செய்தியில்லாமல் கட்டுரை அமைந்தால் தேச துரோகச் செயல். டாம்பா (அமெரிக்கா)வில் வெளிநாடு வாழ் அமெரிக்க பாஜக வின் நண்பர்கள் அமைப்பு புளோரிடாவில் நடத்திய இரண்டு நாள் மாநாட்டில் நிறைவில் காணொளி மூலமாகப் பேசிய மோடி“ செயலற்ற மத்திய அரசைக் காப்பாற்றத் துடிக்கும் சுயநல கும்பல்கள் என்று. பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ் எப்படியும் சில நூறு எம்பிக்களைப் பெறப் போகிறது. அப்படியானால் வாக்களித்தவர்கள் எல்லாரும் சுயநலகும்பல்களா எனத்தெரியவில்லை. இந்த செய்திக்குப் பிறகு வந்த செய்தியை மத்தியஸ்தன் கவனிக்கச் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் வகுப்புக் கலவரங்களில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் மரணமடைந்ததாகச் சொன்னார்கள்.

         ஜெர்மனியில் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு போன வாரம் நடந்தது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஆளும் கிறிஸ்டியன் டெமாக்டிக் யுனியன் கட்சியில் தலைவரும் தற்போதையை பிரதமருமான எஞ்சலா மெர்கலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருத்துகள் தெரிவிக்கிறது. ஐரோப்பாக் கண்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதும் ஜெர்மனியில் அதன் பாதிப்பு இல்லாமல் மெர்கல் திறமையாக ஆட்சி நடத்தியது அந்நாட்டுமக்களிடையே பெரும் மதிப்பை பெற்றுத்தந்துள்ளது. மெலும் ஜெர்மனியை வலிமையான பொருளாதார நாடாக உருவாக்கியத மற்றும் வேலையின்மையை குறித்த நடவடிக்கைகளால் அவர் மூன்றாவது முறையாகப் பிரதமராக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

         அமெரிக்காவில் பட்ஜெட் நிறைவேற்றப்படாமல் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி. எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒபாமாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார்கள். அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிக்கிறது. அமெரிக்க வீதிகளைக் காட்டுகிறார்கள்.மக்கள் சோகத்துடன் அலைகிறார்கள். வெள்ளை மாளிகையில் பேசிய ஒபாமா நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற எதிர்க்கட்சிகள் உதவ்வேண்டும் என்கிறார். ஒரு நிலையில் வீட்டோ பவரைப் பயண்படுத்தி அவர் நெருக்கடியிலிருந்து மீட்பார் என்கிறார் ஒருவர். ஒவ்வொரு முறையும் அமெரிக்கா நெருக்கடி என்று நாடகமாடி கிழக்காசிய நாடுகளின் நாணயமதிப்பை இறக்குவதற்கும் சுரண்டுவதற்கும் முயற்சிக்கிறது. இதுபற்றி ஒருவரும் எழுதுவதில்லை. அமெரிக்கா திவால் ஆனால் கவலைப்பட ஒரு உள்ளம் உள்ளது அது சிதம்பரம். அவருக்கு மன்மோகனும் ஒபாமாதான் ஒபாமாவும் மன்மோகன்தான்.

மத்தியஸ்தன் இது ஜெர்மனியில் என்றான். மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியை பொருத்திப் பார்க்க கூடாது என்றார். நான் இலக்கியச் சந்திப்புக்கு நேரமாச்சு என்று புறப்பட்டேன். என்னைக் கடுப்பேற்று வதறக்காகவே இனியொரு செய்தியை வாசித்துவிட்டுப்போ என்றான். ஊழல் வழக்கில் சீன கம்யுனிஸ்ட் தலைவர் போ ஜிலாஜிக்கு ஆயுள் தண்டனை எனும் செய்தி. ஊழல் தொகையைக் கேள்விப்பட்டபோது வெறும் இருபத்தி இரண்டு கோடிதான். சிறிய தொகைக்கு ஆயுள்தண்டனையா. சரிதான். ஊழல்கள் லட்சம் கோடிகளைத்தாண்டும் போது இந்த அளவில் சிறியதாகச் செய்ததற்கு தண்டனை சரிதான். கவுண்டமணி செந்திலைப்பார்த்துக் கேட்பார் “என்ன பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்த..“ செந்தில் “சில்லறைத் தட்டுபாடுண்ணே.. எட்டணா நாணயம் அடிச்சென்“ எந்த ஊர்ரா என்பார் “கோயமுத்தூர்” என்றதும் அறைவார். “கோயமுத்தூர் பேரையெ கெடுத்துட்டு வந்திருக்கே.“என்பார். அந்த மாதிரி அவர் ஊழலின் மரியாதையை கெடுத்திருக்கிறார்.

          நெடுநாளாக இழுத்துக் கொண்டிருந்த நீலாம்புர்-அன்னூர்- மேட்டுப்பாளையம் புறவழிச்சாலைத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டது. பல்லாயிரக்கணக்கில் விவசாய நிலமும் நீர்வளமும் பாதிக்கப்படும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடியது வீண்போகவில்லை. கோவை எம்பி தோழர் பி.ஆர்.நடராஜன் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றிருக்கிறது அவருக்குப் பாராட்டுவிழா நடந்தது. அவர் பேசுகையில் மக்களின் ஒட்டுமொத்தப் போராட்டம் இந்தத்திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டிய நிலைக்குச் சென்றது என்றார். தனது பதவிக்காலத்தில் எளிமையாகவும் எளிதில் மக்கள் சந்திக்கும் எம்பியாக அவர் இருந்துள்ளார். அவர் மக்களின் போராட்ட களத்திற்குச் செல்கிற வாதாடுகிற மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். வரும் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு அமையுமா தெரியவில்லை. இந்த நிலம் பற்றிய கவிதை ஒன்று நான் எழுதியிருந்தேன். அவ்விடத்தில் மகாகவி பாரதியின் நிலம் இருப்பதாகவும் பாரதியிடம் நிலம் பறிபோகும் மக்கள் மன்றாடுவதாகவும் பொருள் கொண்ட கவிதை. அந்தக் கவிதையை பாரதியின் பிறந்த நாளில் வாசித்தோம். . இப்பொழுது நிலத்தை மீட்ட பாரதியின் முகமாக பி.ஆர் நடராஜன் இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்..

            நிகழ்வுக்கு நேரமானது. வண்டியைக் கிளப்பினேன். நடுநிலை, மத்தியஸ்தன் இருவரையும் ரயில் நிலையத்திலும் ஆம்னி பஸ் ஸ்டெண்டிலும் இறக்கிவிட்டேன். நிகழ்வுக்கு வருகிறேன் என்றவர்களை இன்று உலக இருதய தினம் தயவு செய்து எங்கும் நீங்கள் சுற்றாமல் வீடு போங்கள்

இன்றைய நிகழ்விற்கு இனிப்பும் காபியும் அளிக்கலாம் பங்கேற்பாளர்களுக்கு என்று யோசித்தபோது பாதுஷா சரியான இனிப்பு. மற்ற இனிப்பு வகைபோன்ற தித்திப்பு இருக்காது. சரியான அளவிலும் இருக்கும். கைகளில் சர்க்கரைப் பாகு ஒட்டவும் செய்யாது. பாதுஷாக்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் நம்மை சாப்பிட்டார்கள். நாம் சமகாலத்தில் பாதுஷாவை சாப்பிடலாம் என்று வாங்கினீர்களா என்றார்கள் சில நண்பர்கள்

           பேராசிரியர் சி.மா.இரவிச்சந்திரன் பேசும் பொழுது விருது பெற்றவர்கள் நாம் வாழும் காலத்திலேயேப் பாராட்டப்படுவதும் விருதுகள் பெறுவதும் மகிழ்ச்சி தருகிறது. இயல் விருது பெற்ற ஞானி அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்தன்மையுடன் இயங்குபவர். அவருடைய தமிழ் இதழியல் பணியென்பது மகத்தானது. அது போலவே மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா அவர்கள். தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் அசடன் போன்ற நாவல்கள் மட்டுமல்ல ஏராளமான மொழிபெயப்புகளைச் செய்திட்டவர். அரிய பல நூல்களை கட்டுரைகளை மொழிபெயர்த்தவர். இளம் ஆய்வாளர் விருது பெற்ற சவகர் திணைவியல் கோட்பாடுகளை நன்கு ஆய்ந்து திணையியல் சார்ந்த ஆய்வுகள் தமிழுக்கு அவசியம் என்பதை கவனப்படுத் தியிருக்கிறார். இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அவருடைய பணி சிறப்பு பெற்றிருக்கிறது. நம்முடைய நாஞ்சில் நாடன் அவர்கள் பல விருதுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறார். அவருடைய எழுத்தில் கோபமும் சீற்றமும் இருக்கும். படைப்பிலக்கியத்தில் கடந்த நாற்பதாண்டுகளாக நாவல் சிறுகதை கட்டுரை கவிதை என்று பயணம் தொடர்கிறது. அவர் பெறும் இயல் விருது நமக்கும் பெருமையளிப்பதாகிறது. மற்றும் இங்கு வந்திருக்கிற பல ஆளுமைகள் அனைவரும் தமிழுக்கும் படைப்பிலக்கியத்திற்கும் பங்காற்றி வருபவர்கள் இந்த முயற்சி வரவேற்கப் படவேண்டியதாக உள்ளது. அதே நேரத்தில் வெறும் பாராட்டுவிழாவாக அல்லாமல் இன்றைய சூழலில் படைப்பாளர்கள் திறனாய்வாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கட்டுரைகள் வாசிக்க இருக்கிறவர்களுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார்.

           விருது பெற்ற ஆளுமைகள் பற்றிய அறிமுகத்தை முனைவர் கு.முத்துக்குமார் செய்தார். தமிழ்ப் பேராய நடுவர்கள் குழுவால் எழுதப்பட்டு விருதுப் பட்டயத்தில் பொதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் சாதனைக்குறிப்புகளை வாசித்தார். ஞானி.,சவகர், எம்.ஏ.சுசீலா. நாஞ்சில் நாடன் ஆளுமைகளின் வாழ்நாள் குறிப்புகளை வாசித்தார். நான்கு ஆளுமைகளும் செய்த தமிழ்ப்பணிகள், செய்து கொண்டிருக்கும் பணிகள். தமிழ்ச் சூழலுக்குத் தேவையான மாற்றங்கள் குறித்த அக்கறையையும் குறிப்பிட்டிருந்தது அவருடைய குறிப்புகள். பங்கேற்பாளர்களுக்கு பல புதிய செய்திகள் கிடைத்தது

          சவகர் ஏற்புரையாற்றும் பொழுது தன்னுடைய ஆய்வுக்கான பின்புலத்தை விவரித்தார். சங்க காலத்தின் வாழ்க்கை முறைகள் எல்லாம் திணையியல் கோட்பாடு சார்ந்து இயங்கி வந்த காலத்தைத் தொகுக்க முனைந்தேன். தற்காலத்தின் இலக்கியக் கோட்பாடுகளையும் நாம் திணையியல் கோட்பாடுகளாகத் தொகுப்பது அவசியம் என்று கருதினேன். பழந்தமிழ் இலக்கியங்கள் வாழ்ந்த காலத்தின் இயற்கை, உணவு, வாழ்வு, பாசனம், உள்ளிட்ட ஆதாரங்களைப் பின்புலமாக கொண்டு கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளதை அறிவோம். அந்த முயற்சிக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே.நான் மதித்து வணங்கும் எனது ஆசான் ஞானி அவர்களுடன் விருது பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். வாழ்த்திய உங்களுக்கு என் நன்றிகள்..

             மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற எம்.ஏ.சுசீலா ஏற்புரையில் தனக்கு வாழ்நாள் சாதனைக்காக கௌவரவித்திருக்கிறார்கள்.மிகச்சிறந்த நூல்களை மொழிபெயர்ப்பிற்கு உதவியவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானி அவர்களுடன் விருது பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. உலகப் பெற்ற படைப்புகளை நம் தமிழிலும் மக்கள் வாசிக்க வேண்டுமென்று மொழியாக்கம் செய்கிறோம். வாசகர்களும் தொகையைப் பொருட்படுத்தாமல் வாங்கிப் பயண்பெறவேண்டும். மொழிபெயர்ப்பில் உள்ள பிரச்சனைகளைத் தன் வாசிப்பின் அனுபவம் மூலமாக கடந்து வருவதாகக் கூறினார். வெகு இயல்பாகவும் எளிமையாகவும் உரையாற்றியார்.

           தன் ஏற்புரையில் ஐயா ஞானி தன்னால் அதிக நேரம் பேச முடியாது. பாராட்டுவிழா வேண்டாம் என்று சொன்னேன் இருந்தாலும் என்னை அதிகமாகவே புகழ்ந்துவிட்டார்கள். நான் ஏற்புரைக்கு ஒரு கட்டுரை வாசிக்க நினைத்தேன். நேரத்தின் அருமை கருதி அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரை அடுத்த சந்திப்பில் வாசித்துக் கொள்ளலாம். என்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியது நண்பர்களுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.

         இயல் விருது பெற்ற நாஞ்சில் நாடன் பேசும் போது விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது நிலவும் பரபரப்பு பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார். அமைப்பு சார்ந்தவர்களுக்கு விருதுகள் செல்வதும் அமைப்பு சாராத எழுத்தாளர்களுக்கு அவமதிப்பும் தொடரவே செய்கிறது. இயல் விருது எனக்கும் ஞானி அவர்களுக்குத் தருவதை விடவும் கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளர்களுக்குத் தந்தமைதான் மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. தான் இப்பொழுது சிற்றிலக்கியங்கள் குறித்த நூல் ஒன்று வெளிவருகிறது. நாஞ்சில் நாட்டு உணவு குறித்து ஒரு நூல் வருகிறது. தான் இன்னும் பத்து ஆண்டுகளில் படைப்பிலக்கியத்தில் மேலும் சில நூல்கள் எழுதவேண்டி யிருக்கிறது. தமிழ் மொழியில் பண்பாட்டில் எழுதப்படவேண்டிய வை ஏராளமாக இருக்கிறது. ஒரு படைப்பிலக்கியவாதியாக என்னுடைய எழுத்து தொடரும். விருதுகள் ஒரு நம்பிக்கைதான். அதையே நாம் பிடித்துக் கொண்டு இருக்கமுடியாது. நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டே செல்லவேண்டியதுதான். சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதுக்கு லஷ்மி சரவணக்குமார், சந்திரா ஆகியோரை நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால் வேறொருவருக்கு தந்தார்கள். நிராகரிக்கப்படுகிற எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி தரும் பதில் என்ன என்றார். கோபத்துடன்தான் நாம் இதோ என் படைப்பு என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்க வேண்டியிருக்கிறது என்றார்.

             சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்பாளர் கி.நாச்சிமுத்து பேசும் போது விருதுகளுக்கு மிகச்சிறந்த இளைஞர்களின் படைப்பும் பலவீனமான எழுத்துடன் மூத்த ஆளுமைகளின் படைப்பும் வருகிறது தேர்வில் மிகவும் சிக்கல் ஏற்படுகிறது. இருப்பினும் முடிந்தவரை நல்ல படைப்புகளுக்கு விருது தருவதற்கு முயற்சி செய்கிறோம். எம்.ஏ.சுசீலா அவர்கள் நல்ல சிறுகதையாளரும் கூட. படைப்பிலக்கியத்திலும் நன்கு செயல்படுபவர். அவருடைய நூல்கள் கல்லூரிப்பாடத்திட்டத்திலும் உள்ளது. நாஞ்சில் நாடன் காவிய நடையில் தனது படைப்புகளை எழுதுபவர். சவகர் போன்ற இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவது நல்ல முன்னேற்றம். அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

         பாவலர் இரணியன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். இன்று தமிழ் எழுத்துகள் ஐந்து எழுதக் கூடத் தெரியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பள்ளி இறுதி வகுப்பு வரை தேர்வு என்கிற அடைப்படையில் தமிழ் மொழி சிதைவுக்குள்ளாகிறது என்றார். சு,வேணுகோபால் பேசும் போது ஒரு வகையில் நாஞ்சில் நாடன் அவர்களுடன் போட்டியாகத்தானும் கம்பன் பற்றிய நூல் ஒன்று எழுதுவேன் என்றார். கர்நாடகாவில் ஒரு இலக்கிய விழாவில் சிவராம கரந்த, கிரிஷ்கர்ணாட். யு.ஆர் அனந்த மூர்த்தி போன்றவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதே தமிழகத்தில் விழா நடந்தால் இருக்கக்கூடியப் புகைப்படங்கள் அண்ணா. கலைஞர்.எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரின் புகைப்படங்கள்தான் இருக்கும். இங்கு படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்றார் தன்னுடைய நூல்களும் நான்கு வெளிவருகிறது.

        எம்.கோபால கிருஷ்ணன் பேசுகையில் நாஞ்சில் நாடன் தன்னுரையில் தாம் பேச நினைத்தவற்றை அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது அத்தனையும் உண்மை. அமைப்பு சாராத மகத்தான படைப்பாளர்களுக்கு ஏற்படும் நிராகரிப்பு தவிர்க்கப் படவேண்டும். அவர்களும் தங்கள் உன்னதமான படைப்புகளால் தமிழுக்கு வளம் சேர்த்து வருகிறார்கள். திறனாய்வுகளும் விமர்சனங்களும் சரியாக முன்வைக்கப்படுமானால் படைப்புகளில் மேலும் வளம் ஏற்படும் என்றார்

         கவிஞர் சக்திசெல்வி தன்னுடைய கட்டுரையில் சமகாலத்தில் படைப்பாளர்கள் திறனாய்வாளர்களின் பங்கு குறித்து விரிவாக எழுதியிருந்தார். வெகு சன எழுத்துகளில் கவரப்படுகிற வாசகர்களை இலக்கியப் படைப்புகளை வாசிக்கவைக்க முயற்சி செய்யவேண்டியிருக்கிறது. தமிழ்ச் சூழலில் வகை வகையான எழுத்துகள் தொடர்கிறது. துறைசாந்த எழுத்துகள் மலினமாக உருவாகியிருக்கிறது. நவீனப் படைப்புகளும் தொடர்ந்து சிறப்பாக வெளிவருகிறது. இன்றும் வெகுமக்கள் சாதாரணமான படைப்புகளை வாசிக்கிறவர்களாவே இருக்கிறார்கள். நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளர்கள் சிறப்பாக கவனம் பெற்றுவருகிறார்கள். தனக்கு மிகவும் பாதித்த எழுத்தாளராக கண்மணி குணசேகரன் ஆவார். சமீபத்தில் அவரைச் சந்தித்து உரையாடியது மறக்கமுடியாத நிகழ்வு. அவருடைய எல்லா நூல்களையும் வாசித்து இருக்கிறேன். எளிமையான மனிதர். அவருடைய படைப்புகளிலும் அவரைப் போன்ற எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறவராக உள்ளார். திறனாய்வாளர்கள் நல்ல படைப்புகள் வெளியானதும் அவர்களுடைய எழுத்தை வாசித்து வரவேற்கவேண்டும் என்றார். ஊக்கப்படுத்த வும் வேண்டியிருக்கிறது. என்றார் அவருடைய மிகவிரிவான கட்டுரை சமகாலத்தின் இலக்கியப் படைப்புகள்,படைப்பாளர்கள் விமர்சன முறைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்தது. அனைவரின் பாராட்டுதலையும் பெற்றதாகவே இருந்தது கட்டுரை.

       அடுத்து கவிஞர் அகிலா கட்டுரை வாசித்தார். மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்ட கட்டுரை. இந்த சந்திப்பில் முக்கியமானதாக அறியப்பட்ட கட்டுரை வடிவங்களாக சக்திசெல்வியும் அகிலா அவர்களும் எழுதி அனைவரையும் ஆச்சர்யத்திலாழ்த்தினார்கள். ஆய்வு மனோபாவம் அன்றி படைப்பு மனோபாவத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகளாக இருந்தது. ஞானி அக்கட்டுரைகளைப் பெற்று வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அகிலா கட்டுரையில் தமிழ்ப் படைப்புகளின் ஆரம்பம் முதல் இன்று வரை நிகழ்ந்த பரிணாம முயற்சிகளைக் கவனப்படுத்தியிருந்தார். சரித்திரப்படைப்புகள் முதல் விஞ்ஞானப் புனைகதைகள் சிறுவர் கதைகள். வெகுசன எழுத்துகள் மாத நாவல்கள் என்ற அளவு கொண்டிருக்கும் படைப்புலகம் நவீனத் தமிழ்ப் படைப்புகளில் மேன்மையுடன் திகழ்கிறது. கடல் சார்ந்த மக்கள் படைப்புகள் தலித் படைப்புகள், பெண்ணிய எழுத்துகள் சிறப்பாக வெளிப்படுகிறது. திறனாய்வுகளிலும் பல ஆளுமைகள் தங்கள் கட்டுரைகளின் வாயிலாக தமிழுக்கு அணி செய்கிறார்கள் என்றார். திறனாய்வுகள் சரியான முறையில் நடக்கும் பொழுது அடுத்தடுத்த படைப்புகளில் படைப்பாளர் தன் எழுத்தில் மாற்றம் செய்வார். அவருடைய கட்டுரையில் மார்க்சீயத் திறனாய்வு, கோட்பாடுகளின் திறனாய்வு, தத்துவ நோக்கிலான திறனாய்வுகளை அதன் அவசியம் குறித்து எழுதியிருந்தார். நீண்ட முக்கியமான கட்டுரையாக அமைந்தது. இறுதியாக உரையாற்றிய எச்.பீர் முகமது பேசுகையில் ஞானி அவர்களின் எழுத்தியக்கம் திறனாய்வு அவர் நடத்திய இதழ்கள் வெளியிட்ட படைப்புகள் குறித்துப் பேசினார்.

       மார்க்சிய திறனாய்வில் கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ்,எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராசன் போன்றவருக்கும் இணையாக சில சமயங்களில் அவர்களுடைய சிந்தனைகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறார்.வானம்பாடிகளில் துவங்கிய அவருடைய இலக்கியப்பணி தொய்வின்றி வளர்ந்து வந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டில் ஒரு கருத்தரங்கில் ஞானியைச் சந்தித்துப் பேசிய போது என் சிந்தனைகளைப் பாராட்டி என் வயதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார். பிறகு நான் அவருடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. ஏற்கெனவே என்னுடைய  நூல்களா குர்திஷ் இலக்கியம் மற்றும் கீழைச் சிந்தனையாளர்கள் வரிசை குறித்து ஞானி அவர்கள் உரையாற்றியது மறக்க முடியாத ஒன்று. அவருக்கு அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. நம் சமூகத்தில் அறிவுலகம் அதுவரையிலும் மேற்கத்திய சிந்தனையாளர்களையே ஐரோப்பிய இலக்கியங்களையே போற்றிக்கொண்டிருந்தது. இந்த நூல்தான் கீழைத்தேய சிந்தனையாளர்கள் அளித்த கொடையை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. எட்வர் சயீத் போன்றவர்களின் பங்கு அளப்பரியது. தற்காலச் சூழலில் எழுத்தாளர்கள் கீழைத்தேய மரபையும் பின்பற்ற வேண்டும். மீண்டும் நாம அடிமைச் சமூக சிந்தனை மரபுகளைப் பின்பற்றுவது போன்ற எழுத்துகள் வருகிறது. இது பற்றிய உரையாடல்களை தற்பொழுது எழுதுகிற படைப்பாளர்களிடம் விவாதத்தை வைத்தபோது அவர்களிடம் பதிலில்லை. ஞானி அவர்கள் தத்துவம் சார்நத கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். எஸ். என்.நாகராசன் போன்றவரகளுடன் இணைந்து பல முயற்சிகளைச் செய்திருக்கிறார். அவருடைய நிகழ்,பரிமாணம்,தமிழ்நேயம், புதிய தலைமுறை போன்ற இதழ்களின் வாயிலாக அவர் செய்த பணிகள் பதிப்புகள் மிகவும் முக்கியமானவை. நவீன சிந்தனை மரபு சாராமல் அதே சமயம் அடிமைச் சமூகமாகவே மாறிக் கொண்டிருக்கிற நம் சமூகத்திற்கு விரிவான திறனாய்வு முறைகளும் கோட்பாடுகளும் அவசியம். இப்பொழுது அது போன்ற விமர்சகர்களும் இல்லை. விமர்சனமும் செய்வதுமில்லை. அவையாவும் ஒரு மாதிரியாகவே சென்றுகொண்டிருக்கிறது. ஞானி தன்வாழ்நாளில் தான் வாசித்த படைப்புகள் குறித்த பதிவுகளையும் விமர்சனங்களையும் எழுதிவிடுகிறவராக இருந்திருக்கிறார். அவர் கொடுத்த உழைப்பு என்றென்றும் தமிழ்ச்சூழலில் போற்றப்படுவதாக உள்ளது.

         சுப்ரபாரதி மணியன் தனது கட்டுரை வாசித்தார். சூழலியல் சார்ந்த கட்டுரையாகவும் இருந்தது. மாறிவருகிற உலகத்தின் தேவைகளுக்கு ஏற்ப படைப்பாளர்களும் படைப்புகளும் இருக்க வேண்டும். அவை போதாமையுடன்தான் உள்ளது என்றார். எழுத வேண்டிய விவாதிக்க வேண்டிய விசயங்கள் படைப்புகள் நிறைய உள்ளது. திறனாய்வுகளும் அதுபோன்றே விரிவாக்கப்படவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு படைப்புகளும் சார்புத்தன்மையுடன் பார்க்கப்படுகிறவையாகவும் உள்ளது. தொடர்ச்சியான படைப்பியக்கம் இந்தச் சூழலை மாற்றுவதற்கு தூண்டுகோலாக அமையும். நாம் அதில் தொடர்ந்து பயணிக்கவேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம் என்றார்.

தமிழ்ப் பேராயம் சார்பில் ஐயா கோவை ஞானி அவர்களுக்கு “பரிதிமாற்கலைஞர் விருது” வழங்கப்பட்டிருக்கிறது என்றும் செய்தியை நண்பர் கவிஞர் பா.தியாகு அலைபேசியில் தெரிவித்தபோது மகிழ்வை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டோம். சில நிமிடங்களுக்குள்ளாக வாணியம் பாடியிலிருந்து எச்.பீர் முகமதும் தொடர்பில் வந்து பேசினார். செய்திகளும் வாழ்த்துகளுமாக ஐயா ஞானி அவர்களுக்கு குவியத்துவங்குகிறது. அவர் மிகப்பெரிய ஆலமரம். சொல்வதும் பேசுவதும் இயங்குவதுமாக சிந்தை முழுக்கவும் தமிழ்ச்சமூகம் குறித்தும் படைப்பியலக்கியம் திறனாய்வு இதழியல் குறித்தும் யோசித்துக் கொண்டேயிருப்பவர். எழுதுகிறவர். தினசரிவாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிப்பவர். அரசியல் பொருளாதாரம், புதிய புதிய படைப்புகள் இதழ்கள், தற்கால சமூகம் பற்றியும் தொடர்ந்து தனது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பவராகவும் இருக்கிறார்.

            அவருக்கு அளிக்கப்பட்ட விருதுக்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக நானும் இளவேனிலும் சந்தித்த போது மிகவும் மகிழ்வாக இருந்தார். தனக்கு விருதுகள் பாராட்டுகள் எதிலும் நம்பிக்கையில்லாவிடினும் பரிதிமாற்கலைஞர் பெயரில் தனக்கு விருது வழங்கப்படுவதில் மகிழ்ச்சிதான் என்றார். பிற்பாடு தன் உடல் நலக்குறைவை பொருட்படுத்தாமல் வா.செ.குழந்தைசாமியின் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டார். விழாவின் இறுதிவரையிருந்து நிகழ்வுகளைக் கவனித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஞானியின் வருகையை அறிந்து அவரிடம் நலம் விசாரித்தபடியே இலக்கியம் வரலாறு சமூகம் குறித்த தனது மதிப்பீடுகளை முன்வைத்தார். அவருக்குப் பாராட்டுவிழாவை நண்பர்கள் ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்ற பொழுது அவர் மறுத்தார். எனினும் நாங்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்ட பொழுது பாராட்டுவிழாவிற்குப் பதிலாக சிறப்புக் கருத்தரங்காக நடத்தலாம். தற்காலப் படைப்பிலக்கியம், திறனாய்வாளர்களின் பணிகள் குறித்த அரங்காக இருக்கட்டும் என்றார்.

         நண்பர்களிடமிருந்து கட்டுரைகள் பெற்று வாசித்து அதன் மீதாக விருது பெற்ற எங்கள் உரையும் இடம்பெறட்டும். புதிய ஆர்வமுள்ள பலருக்கும் குறிப்பாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவியர் பேராசிரியர் மட்டத்திலிருந்து கட்டுரைகள் பெறுங்கள் என்றார். நிகழ்வுகள் ஏற்பாடாகியது.

                நிகழ்விற்கான அழைப்பிதழ்களை  சிறப்பாக அச்சிட்டுத்தந்தார் மயுரா ரத்தினசாமி. பணிகள் தொய்வின்றி நடந்தது. சென்ற வாரம் இதே பள்ளியில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழிபெயர்ப்பு நூலான “கரமசோவ் சகோதரர்கள்“ குறித்த அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றிருந்த நேரம்.

                மறுவாரமான இன்றும் விழா. இப்படியாக கோவை மாநகரில் தொடர்ச்சியாகவும் இடைவிடாலும் இலக்கிய நிகழ்வுகள் நடநது கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும் உத்வேகமாகவும்இருக்கிறது. இலக்கிய அமைப்புகளையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் பெருமளவிற்கு முடுக்கி விட்ட காரியத்தைச் செய்ததில் இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் நிலத்தின் பல்வேறு திசைகளிலிருந்து பெறப்படும் செய்திகளிலிருந்து ஒரு மாதம் கூட இடைவெளி விடாமல் சற்றும் தரம் குறையாமல் மென்மேலும் இலக்கிய நிகழ்வுகளுக்கு பங்கேற்பாளர்களை அதிகப்படுத்தியும் நூல்கள் அறிமுகப்படுத்தியதிலும் கோவை இலக்கியச் சந்திப்பு முந்தைய எல்லாப்பதிவுகளையும் விடவும் நேர்த்தியாக நடத்தி வந்திருக்கிறது. இந்தச் சந்திப்புகளின் தாக்கமாகவே பல் வேறு நகர்களில் பல்வேறு கல்லூரிகளில் நிகழ்வுகளை இலக்கிய செயல்பாட்டாளர்கள் முடுக்கிவிட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டும். இலக்கிய வளர்ச்சிக்குத்தேவையாகவும் இருக்கிறது. குழுசார்பு, தன் முனைப்பு, பதிப்பகக்குழு விரோதம் புறக்கணிப்பு. இது போன்ற மறைமுக மிரட்டல்களைத் தாண்டி சுயேட்சையான இலக்கியச் சந்திப்புகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவை மாநகரில் நடைபெறுகிற மிக பிரமாண்டமான ஏராளமான பொருட்செலவில் நடத்தப்படுகிற கலை இலக்கிய நிகழ்வுகளின் தரத்திற்கும் மேலாகவே நிகழ்வுகளைத் தந்து நடத்தித் தந்து கொண்டிருக்கிறார்கள் பங்கேற்பவர்களும் பங்கேற்பாளர்களும்.

               ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கிற படைப்பாளர்கள் எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் பாரம்பரியம் மிக்க இலக்கிய அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளையும் ஆதரவுகளையும் நல்கியதால் ஏற்பட்ட மாறுதல் என்று சொல்வதில் தயக்கம் இல்லை. ஊர் கூடித் தேர் இழுத்தல் போன்றதுதான். சமூக வளர்ச்சிக்கும் தேச வளர்ச்சிக்கும் சாதி மத இனவேறுபாடுகளின்றி உழைப்பது போன்றுதான் தமிழ்ப் பண்பாடும் கலாச்சாரமும் படைப்பிலக்கியம் நவீன பின் நவீனப் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு எந்தப் பிரதிபலனுமின்றி பாடுபடுகிறப் படைப்பாளர்களை கோவை கொண்டிருக்கிறது. சக படைப்பாளர்களையும் வரவேற்கிறது என்றும் சொல்லவேண்டும்.

           நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தவர்கள் ஆட்டணத்தி, மருத்துவர் கோவி, மு.திருக்குமரன், கிருஷ்ணமூர்த்தி,ஜே.மஞ்சுளாதேவி, சி.ஆர். இரவிந்திரன்,க.வை.பழனிச்சாமி, நாசிர் அலி,வேனில் கிருஷ்ணமூர்த்தி, பொ.செந்திலரசு,கனகராஜன். இரா.புபாலன், க.சீ சௌந்தரராஜன், ஜெ.வீர நாதன், சு.இராஜகோபாலன்,பழமன் சு.பழனிச்சாமி, பொன் சந்திரன், ச.க..சோம சுந்தரம். சோ.இரவீந்திரன். கே.பெருமாள், பா.சிவக்குமார்,செந்தமிழ்த் தேனீ, வே.சுகுமாரன், நறுமுகை தேவி,இளங்கோ கிருஷ்ணன், என்.கார்த்திகேயன், பொ. பிரகாஷ் இரா நளினி, அன்புசிவா கா. ஜெயராமன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தலைமையேற்று நடத்திய பாவலர் இரணியன் நனறி கூறினார். நிகழ்விற்கான ஒருங்கிணப்பை முனைவர் கு.முத்துக்குமார் பொன் இளவேனில் சோ.இரவீந்திரன். அக்னி சிவகுமார், மேற்கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கவிஞர் அவைநாயகன் மொழிபெயர்ப்பு நூல் “ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்“எனும் ஞானப்பறவை


ரிச்சர்ட் பாக் எழுதிய

ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்

எனும் ஞானப்பறவை-

 

தமிழில் கவிஞர் அவைநாயகன்

 

வெளியீடு –விஜயா பதிப்பகம்- விலை ரூபாய் 35-

 

          

      

         நம்பிக்கைகளை விதைப்பது, நம்பிக்கைகளை எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுவது. நம்பிக்கைகளை ஞானமாகக் கருதி ஆழ்மனதில் துளிர்த்துவிடுவது என்பதாக இந்த உலகில் உருக்கொள்ளும் படிமங்கள் எத்தனை யெத்தனை. இந்த நம்பிக்கை விதைகள் தூவுகிற ஆன்மாக்கள் உலகெங்கிலும் எல்லாப் புத்தாயிரங்களிலும் தோன்றியபடிதான் இருக்கிறார்கள். விஞ்ஞான நம்பிக்கை அஞ்ஞான நம்பிக்கையிலிருந்து நாம் எடுத்து வழங்கும் உத்திகள் விளைந்து கொண்டேயிருக்கும். நிராகரிப்பும் ஊதாசீனமும் புறக்கணிப்பும் சமகாலத்தில் சரியான விகிதத்தில் உற்சாகபாணத்தில் கலந்து தருகிற நம்பிக்கைகளையும் கலந்து தருகிற ஊடகங்களும் நம்பிக்கை உற்பத்தியில் சிறந்து விளங்குவதை நாம் அறிவோம். விமர்சனங்கள் ஆதிசேஷனாக படம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடும் போது நாம் நம்பிக்கைகளை வைத்துத்தான் சரி செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ஆன்மா ஒன்றை அலைக்கழிக்க வைக்கிற பாடு அதைவிடவும் அதிகம்.

              நமது அறிவுலகம் எப்பொழுது உலக இயக்கம் மீது அன்பு கொள்ளும். எப்பொழுது இயற்கை மீது கரிசனத்துடன் நடந்து கொள்ளும் என்பது யாராலும் கணிக்க முடியாது. இந்த நூலில் ரிச்சர்ட்பாக் மற்றும் கவிஞர் அவைநாயகன் சீகல் பறவையை அதன் பறத்தல் சாகசத்தை வைத்து அசுரவேக உலகியல் லொகீக ஆசை கொண்ட மனிதனுக்கு ஆன்மா குறித்த அறிவுறுத்தலைக் கற்றுத்தருகிறார்கள் என்று சொல்லவேண்டும். பறக்கிற சிறகுகளின் கூர்மையை விடவும் எண்ணங்கள் குறித்து கவலையடைய வேண்டியதில்லை. என்கிற படிமம் வாசித்த மனதில் அலைகிறது.

 

           சனி இரவு அவைநாயகன் அண்ணனுடன்  அலைபேசியில் பேசினேன். மறுநாள் நடக்கவிருக்கும் கவிஞர் புவியரசுவின் “கரமசோவ் சகோதரர்கள்“ மொழி பெயர்ப்பு விழா குறித்துக் கேட்டார். சென்னையிலிருந்து இந்த நிகழ்விற்காகவே நூலை மிக வேகமாக வாசித்து விட்டு வந்திருக்கிறேன். உரையாடலாம் நீ வருகிறாய்தானே என்றார். வருகிறேன் என்றேன்.  அவர் கூடுதலாய் தந்த தகவல் தான் மொழிபெயர்த்து வந்த நூல் வெளியாகி யிருக்கிறது என்பது தான். மகிழ்வாய் இருந்த்து. எப்படியோ சில காலத்தை ஒரு படைப்பு அதிகமாகவே எடுத்துக்கொள்கிறது. மொழிபெயர்க்கும் அவர் நூலின் ஞாபகம் வெகு காலமாகவே இருந்து வந்தது. ஒரு வகையில் கரமசோவ் சகோதரர்கள் போலவே. நீண்ட காலத்தை அவருடைய நூலும் எடுத்துக் கொண்டதை அறிந்தேன்.

             களம் சார்பில் நடைபெற்ற விழாவில் அவரைச் சந்தித்தபோது நூலை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். முகப்பு தலைப்பு எழுத்தும் சீகல் பறவையும் வெள்ளி முலாம் அணிந்து பறப்பது போலவே இருக்கிறது. ஆச்சர்யத்துடன் பக்கங்களைப் புரட்டினேன். விழாவின் சூழல் மேற்கொண்டு வாசிக்க முடியவில்லை. நான் பதிலுக்கு அவருக்கு ஒரு புதிய நூலை அளித்தேன்.

           சில பக்கங்களைப் புரட்டியதும் அதிலிருந்த ஒரு வரி ”விலங்குகள் போன்று கொடியதாக“ என இருப்பதைக் கவனித்து கொடிய விலங்கு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது யுவர் ஆனர் என்றார். சிறிய கோபத்துடன். எனக்கு சுளீர் என்றது. கொடிய விலங்கு என்றும் சொல்லுக்காக அவர் காட்டிய எதிர்ப்பும் நான் காலங்காலமாக அறிந்த செய்திகளும் சொற்றொடர்களும் மனதளவில் மோதிக்கொள்ள ஆரம்பித்தது. ஜெயமோகனின் கவிதை ஞாபகம் வருகிறது. பூனை என்பது எத்தனை நல்ல பெயர் விலங்கு என்னும் போது மனம் கூசுகிறது என்பதான பொருள் தருகிற கவிதை.

        இது நாள் வரையிலும் எத்தனை விதமான மேற்கண்ட சொற்களை வாக்கியங்களை நாம் எழுதியிருக்கிறோமா என யோசித்தேன். எனக்குத் தெரிந்த வகையில் இல்லை. இருக்கவும் செய்யலாம். வாசிப்பதற்குத் துவங்கியபோது நூலைக் கண்ட இளவேனில் நான் வாசித்துவிட்டுத் தருகிறேன் என்று பெற்றுக் கொண்டார். ஆர்வம் தாங்காமல் அன்று மாலையே அவரிடம் வாங்கிக்கொண்டு வாசிக்கத் துவங்கினேன். இளையமகன் வாங்கி தன்னுடைய நூல்களுக்குள் வைத்துக்கொண்டு தர மறுத்தான். அலைக்களிப்பாக இருந்த நேரம் அது.

        இந்த நிலையில்தான் இந்திய அரசாங்கம் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்க நாள் குறித்து இருந்தது. வித்யாசமான உணர்வும் அனுபவம் என்று சொல்லவேண்டும். பொது மக்கள் குடும்பத்துடன் நாட்கணக்கில் ஒரே இடத்தில் பள்ளிகளில் அடைந்து கிடந்தார்கள். பள்ளி மைதானத்தில் ஆளுக்கு ஆள் கவிதைகள் போன்று பேசுகிறார்கள். ஒருவர் யதேச்சையாக திருப்பதி தேவஸ்தானத்தில் அடைப்பட்டுக் கிடப்பது போலவே இருக்கிறது. என்றார். ஒருவர் போர் முகாமில் இருப்பது போன்று இருக்கிறது என்றார். ஒருவர் முள் வேலி முகாமில் இருப்பது போன்று இருக்கிறது என்றார். ஒருவர் அரசாங்கம் நம்மால் முடியாத, நம்பமுடியாதளவு குடும்பத்துடன் மூன்று நாட்கள் ஒரே இடத்தில் வாழவைத்திருக்கிறது. நினைத்துப் பாருங்கள். நீங்கள் கடைசியாக எப்பொழுது குடும்பத்துடன் எத்தனைநாள் ஒற்றுமையாக இருந்திருக்கிறீர்கள். இப்படியாக நாம் காத்துக்கிடப்பதிலும் சுகமாகத்தான் இருக்கிறது. நாம் போர்க்காலங்களில் வாழ்வதற்குப் பழகிக்கொள்வது மாதிரியுமாயிற்று என்றார் ஒருவர். பிறகு பொழுது போகவேண்டுமே. சமூகப் பிரச்சனையைப் பேசுவதற்கு ஒரு மைதானம் போதும். பறவைகளும் தங்கள் புகலிடங்களில் அரசியல் பேசுமா எனத்தெரியவில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்திருக்குமா..எண்ணற்ற அளவில் நாம் எடுத்து வைத்திருக்கும் பறவைகளின் புகைப்படங்களைக் கண்டு அவைகள் என்ன நினைத்துக் கொள்ளும். நான் சில சமயம்  முகம் பார்க்கும கண்ணாடியை, சில்வர் தட்டுகளை வாயிலில் வைத்து பறவைகள் தங்கள் முகத்தை எப்படிப் பார்க்கும் என சோதித்து இருக்கிறேன். எத்தனை ஆச்சர்யத்துடன் தனது அழகை ரசித்திருக்கிறது தெரியுமா. அதுபோலத்தானே கடற்கரையில் நீரில் அழகில் தன் உருவத்தை சீகல் பறவைகள் ரசித்துக் கொண்டிருக்கும்.

       

      ஆமாம். எத்தனை குடும்பங்கள். ஒன்று சேர நம்முடன் வசிக்கும மக்களைக் காண்பது கூட சீகல் பறவைகளின் கூட்டத்தைக் காண்பது போன்றுதான் இருக்கிறது என்றார் ஒருவர். எனக்கு நானே சூடு வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக இவர்கள் எழுதாததால் நம் பிழைப்பு நடக்கிறது. இந்த ஊரில் வசிக்கிறது இத்தனை மக்களா.. எத்தனைவிதமான குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் வயதானவர்கள் பலவேறுபட்ட இளைஞர்களின் முகங்கள். பார்க்கப்பார்க்க மக்கள் கூட்டம் என்பதும் மக்கள் என்பதும் இப்படித்தான் இருப்பார்களா என்று பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

             வரிசையில் நிற்கிற பொழுது கிடைக்கும் நேரத்தில் வாசித்து விடலாம் என்று முடிவுடன் புத்தகத்துடன் கிளம்பினேன். வாசிக்க வாசிக்க அந்தப் பள்ளி அரங்கம் கடலாகத் தெரிகிறது. அங்கிருந்த மனிதர்கள் எல்லாரும் சீகல் பறவைகளாகத் தெரிகிறார்கள். அந்த மக்கள் குடும்பங்கள் எல்லாம் சீகல் குடும்பங்களாகத் தெரிகிறது.

               

                   மனிதர்களின் பெற்றோர்களை விடவும் பறவைகளின் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் போலிருக்கிறது. தனது குஞ்சுகளை குட்டிகளை மிகவும் கண்ணும் கருத்துமாகவும் அறிவுட்டி வளர்க்கிறது. ஆபத்துகளை முன்கூட்டி எச்சரிக்கிறது. தாய் எட்டடி குட்டி பதினாறு அடி என்பதையும இளங்கன்று பயமறியாது என்பதையும் உயிரினங்கள் அறியும். நம்மைவிடவும அறியும்.

       

      எனது வீட்டிற்குப்பக்கத்தில் ஆட்டுப்பட்டி ஒன்று இருக்கிறது. முப்பது நாற்பது ஆடுகளின் மேய்ச்சல் ஊர்வலம் பார்ப்பதற்கு மனம் நிம்மதி தருவதாக இருக்கும். மாலைநேரத்தில் அந்த ஆடுகள் அவிழ்த்துவிடப்படும். அவைகள் காலியாக இருக்கிற மனைகளில் விளைந்த பயிர்களை செடிகொடிகளை மேயும். தங்களை அனுமதிக்காத வீடுகளுக்கு அது போவதேயில்லை. படுரோசக்கார ஆடுகள். தன் குடும்பக் கூட்டத்தை அது அழைத்துச் செல்கிற அழகும் பாங்கும் பொறுப்பும் அதிசயிக்கவைப்பவை. சாலைகளில் பறக்கும் வாகனங்களை அறிந்து கடந்து செல்வதும் தனது குட்டிகளுக்கு ஆபத்தினைக் கண்டு கற்பிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

   

       முறையற்றுத் தவ்வி விளையாடும் குட்டிகளை அது கண்டிக்கும் அழகே தனி. ஒரு சமயம் அந்தக் குட்டிகளில் ஒன்றை அவ்வழியாக வந்த  டெம்போக்காரன் ஆட்டுக்குட்டியை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய்விட்டான். ஆடுகள் கத்தியிருக்கிறது. தனது பட்டிக்குத் திரும்பும் போது தன் கண்மணியைக் காணவில்லையென்று காடு முழுக்க வீடுகள் ஒவ்வொன்றின் முன்னால் அது நின்று கொண்டு கத்தியது இன்றும் காதில் ஒலிக்கிறது. திரும்ப அந்தப் பட்டிக்காரரும் இரவெல்லாம் லே அவுட் முழுக்கத் தேடினார். மக்களுக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த ஆட்டின் குட்டி களவாடப்பட்டிருக்கிறது என்பதை அன்றிரவுதான் மக்கள் உணர்ந்திருப்பார்கள். கசாப்பிற்கு விற்கப்படும் ஆடுகளின் பிரிவினைத்தாங்குவது குறித்து. பிற்பாடு அந்த தாய் ஆடு இரண்டொரு முறை அந்த டெம்போவை அடையாளம் பார்த்து துரத்திக் கொண்டு அரற்றிக்கொண்டு ஓடியிருக்கிறது. ஆட்டின் நுண்ணுணர்வைப் புரிந்து கொண்ட லேஅவுட்கார இளைஞர்கள் சிலர் அந்த இளைஞனைப்பிடித்து விசாரித்தபோது அவன் மிரள்வதையும் முன்னுக்கு பின்னாக அளித்த பதிலை வைத்து அவன்தான் களவாடியிருக்கிறான் என்பதை அறிய முடிந்தது. இதைச் சொல்வதன் காரணம் சீகல் பறவைகளின் தலைவன் சீகல் ஜோனாதனைக் கண்டிக்கிறது. நமது பறத்தல் என்பது உணவுத்தேவைக்கு தானே தவிர அதிக தூரம் அதிகவேகமாகப்பறப்பதற்கு அல்ல என்கிறது.

       

      மறுகணம் மனிதர்களின் அடிமைத்தனத்தைக் குறித்த குறியீடாகவும் இருக்கிறது சீகல் பறவை. வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்று முடிவில் இலக்கும் வாழ்வின் அற்புதம் பற்றிய அறிவின்றி உழல்கிற மனிதர்களும்  அடையவேண்டிய தூரத்தை உணர்த்துகிறது. சியாங்  பறவை போன்ற அறிவுறுத்தல் எனும் அச்சுறுத்தல்கள் இருக்கவே செய்யும். நான்கு கோடி பிரதிகளை விற்ற நூலின் அம்சம் என்னவாக இருக்கிறது. பாருங்கள் இலக்கும் அதை அடைவதற்கு இடையறாத முயற்சியும் அவசியமாகிறது.

         

       சீகல் பறவை பத்துவினாடிகளில் தொண்ணூறு மைல்வேகம் என்பது உலக சாதனை. சீகல் பறவை தன் அசுர சாதனை பறத்தல் பயிற்சியை எப்படி மேற்கொள்கிறது. தன்னுடன் பறக்கும் ஆயிரக்கணக்கான சீகல்களுக்கு மத்தியில் இடையறாத பயிற்சியாகப் பறத்தலின் வடிவங்கள். அதற்காக அப்பறவை மெனக்கெட்டு செய்யும் முயற்சி செய்வதுமாக காட்சிகளின் பிரமாண்டம் விரிகிறது. சில குறிப்பிட்ட அடிகள் வானத்தில் பறக்கிற போது நிலவும் காற்றழுத்தம் பற்றிய புரிதல்களையும் கற்றுக் கொள்கிறது. காற்றில் இருக்கும் ஈரப்பதம் சிறகுகளை விரைவில் உலர்த்திவிடுகிற போது பறத்தலுக்கு தன் இறகுகளைக் குறுக்கிக் கொண்டு பாய்வதும் பின் சாய்வாக தளர்வாக நெற்றுக்குத்தலாகப் பறத்தலின் முயற்சியில் கடலின் செங்கல் போன்ற படிமத்தில் விழுவதும் சிறகுகளும் தோள்களும் வலிப்பது பற்றியும் விவரிக்கிறது நூல். தன் தலைமைக்குக் கட்டுப்பட்டவாறு செய்யும பயிற்சிகள் வான் சாகசம் சரியான ஓய்விற்குப்பிறகு பறக்க எடுத்துக்கொள்கிற காலம். தங்களின் கட்டளைப்படி நடக்காத சீகல் ஜோனதனுக்கு தண்டனையாக தனித்த மலையில் தான் வாழ வேண்டும் என்கிற நிலையிலு தன் பறத்தல் பயிற்சியைத் தனது நண்பகளுக்குக் கற்றுத் தருவது கவித்துவத்தின் உச்சம். பொருளும் உணர்வின் ஆழமும் சிதையாமல் சிதையாமல் மொழியாக்கம் நடந்துள்ளது.

         

        சொர்க்கத்தைப் போல வேறு ஒர் இடம் இருக்கிறதா எனும் கேள்விக்கு “இல்லை ஜோனதன் அப்படி ஒன்றும் இல்லை. சொர்க்கம் என்பது ஒர் இடம் கிடையாது. அது ஒரு நேரமும் கிடையாது சொர்க்கம் என்பது குறைவில்லாதது. அது ஒரு முழுமை“ அதே நேரம் நமக்கு நரகம் குறித்து அந்தப் பறவைகள் என்ன நினைக்கும் என்பதையும் யோசிக்க வைக்கிறது. வாழ்தலில் பறத்தலில் இலக்கு கொள்ளுதல். உட்சபட்ச வேகத்தைப் பறந்து சாதித்தல் ஒலியின் வேகத்தைப் பறந்து சாதிக்க முடியுமா என முயற்சி செய்வதாக அதன் வாழ்வு நிலைபெற்ற ஒன்று என்கிறார் ரிச்சர்ட்பாக். சிறு நோகாணலில் அவர் பேசும் குறியீடுகள் முக்கியமானவை. இலக்கு நோக்கி முன்னேறுகிற கல்வி பயில்கிற மாணவ மாணவிகளுக்கும் சாதிக்க முனையும் ஒவ்வொருவருக்கும் இந்த சீகல் பறவையின் பறத்தல் அனுபவம் நல்ல உத்வேகத்தைத் தரும். கடல் புறாவின வகைகள் என அறியமுடிகிறது சீகல் பறவைகளை. கடலுக்குள்ளும் கடற்கரைப் பகுதிகளிலும் ஒரே ஜாடையில் இருக்கிற பறவைகளும் பறத்தலில் இன்பம் கொள்பவை. இன்றும் கூட நமது நாகர் கோவில் பகுதியில் வருடந்தோறும் புறாப்பந்தயங்கள் நடைபெறுகிறது.மேலும் இந்தியாவில் புராதன நிலங்களிலெல்லாம் புறாப் பந்தயங்கள் நடக்கிறது. நாகர்கோவிலில் நடக்கும் புறாப்பந்தயங்களின் தூரம் ஐநூற்று ஐம்பது கிலோமீட்டர். கேரளக்கடற்கரை முழுக்கவும் பறந்து சென்று விட்டு திரும்பவும் வருகிற புறாக்கள் அதி திறமைவாய்ந்த புறாக்கள் வளர்க்கப் படுகறது. புறாக்களின் வாழ்வு அல்லது புறாக்களுடனான நமது மனித வாழ்வும் பின்னிப்பிணைந்த ஒன்று. கடலோரங்களைத் தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆங்கிலேயர்களில் ஒரு சில விமான சாகசங்களிலும் உலகம் சுற்றுவதிலும் ஆர்வம் கொண்டவர்கள் புதியபுதிய தீவுகளையும் நிலப்பகுதிகளையும கண்ட டைந்தனர். காண்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சிக்குப் பிறகு உலகின் பல மூலைகளுக்கு குறிப்பாக கடல் பயணங்களின் வழியாக அனுப்ப பட்டனர். அவர்கள் அனைவரும் பறவைகளின் வாழிடங்கள் அதன் வசீகரம் இருப்பு குறித்த அனுமானத்தின் படியாக அவர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்

 

               மனிதன் ஒரிடத்தில் இருந்து வாழும் வாழ்க்கையை அறிந்த பிறகும் அதன் சொகுசு கண்டபிறகு நிலங்களின் மீது தனது ஆதிக்கத்தைத் தொடங்கியபிறகு பல போர்களும் நில விஸ்தரிப்புகளும் நடந்தது. பறவைகளின் வாழ்க்கையைத் தத்துவங்களில் புராணங்களில் இதிகாசங்களில் செவ்வியல் பாடல்களில் வழியாக நமக்குப் போதிக்க ஆரம்பித்தனர். அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும். என்பதும் அப்படித்தான். பறவைகளின் வாழ்வுக் குறியீடு எந்தநாளும் மனிதனுக்குப் பொருந்தப் போவதில்லை. வேட்டையாடி சமூகத்தைச் சார்ந்தவனான அவனுக்கும் அறிவிற்குப் பஞ்சம் தான் எந்த நாளும். தற்காலத்தில் நகைச்சுவை நடிகர்களின் கோமாளித்தனங்க ளுடைய தத்துவார்த்தங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான். ஒரு துறைசார்ந்தவன் அந்த துறை குறித்துதான் அறிவான். ஆனாலும் நமக்கு பறவை குறித்த வாழ்வின் குறியீடுகள் அவசியமாகிறது. நாம் மனிதனை உதாரணம் காட்ட முடியாத நிலையிலிருப்பதாலேயே நாம் பறவையை சீகல் போன்ற பறத்தலை விரும்பி வாழ்கிற இலக்கை நாம் நிர்ணயம் செய்கிறோம்.

           இந்த நூல்வெளிவந்த காலத்திற்கும் தற்காலத்திற்குமான இயற்கையின் நிலையை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்த நாட்களில் நாங்கள் மாலை வரை ஆற்றில் குளிப்போம். மாலைப்பொழுது மண்டியதை அறிந்து வண்டி மாடு கழுவ  வருகிறவர்கள் யேய் சீக்கரம் போங்கடா அங்க பாருங்க என்பார். வானத்தில் மேற்கு நோக்கி வரிசையாக பறவைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குப்பயணம் செய்வதைக் கண்டிருக்கிறோம். அவைகள் காலையில் நொய்யலாற்றுப்படுகைகளில் இருபுறமும் இருக்கிற குளங்களில் ஏரிகளில் இனப்பெருக்கத்திற்காக உணவிற்காக வந்து திரும்பிக் கொண்டிருக்கும். குறிப்பாக கொக்குகள் இனம் புரியாத அற்புதமான பறவைகள் வரிசையாகப் பறந்து போகும். அதன் படியாக நாங்களும் ஆற்றிலிருந்து வீட்டை நோக்கி வந்திருக்கிறோம்.

        இன்றும் கடலோர மாவட்ட மக்களின் ஆதாரமே மீன்கள். வகைவகையான மீன்கள் போன்ற பறவைகளும் வாழத்தான் செய்கிறது.

பிளெட்சர் பறவை கூறுகிறது ”ஒரு சீகல் பறவை என்பது எல்லையில்லாத விடுதலையை வேண்டுவது.உங்கள் உடலின் உள்ள ஒவ்வோர் இறகின் நுனியும் உங்கள் எண்ணங்களை விதத்திலும் உயர்ந்தவை அல்ல.“ கவிஞரின் மொழிபெயர்ப்பு வாசகங்கள். சாதாரண மொழிபெயர்ப்புக்கும் கவிஞராக இருக்கிறவரின் மொழிபெயர்ப்புக்கும் எத்தனை வேறுபாடு.

        

           தற்கால நம் சமூகத்தில் “பறவை காணுதல்“ என்னும் வழக்கம் நடைமுறை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இயற்கையியல் நேசிக்கிற சுற்றுப்புறங்களில் ஆர்வமிருக்கிற மாணவ மாணவிகள் பறவைகளைக் கண்டு அதன் வாழ்வினை அன்றாடம் அதனின் இயல்புகளை குறிப்பெடுக்கிறார்கள். புகைப்படக் கலையின் ஒரு வெளிப்பாடாகத் துவங்கிய இந்தப்பழக்கம் நமது இளையோர்களின் மீது நம்பிக்கை கொள்ளவைக்கிறது. தாவரவியல் சூழலியல் சமூகவில் ஊடகவியல் மரபு சார்ந்த இயற்கை விவசாயம் பற்றிய படிப்புகள் படிக்கிற மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பலர் இது போன்ற பறவை காணுதல் வழக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பாரட்டப் படவேண்டிது. குறிப்பிடப்பட வேண்டியது. அதுபோன்ற இயற்கையியல் குறித்த விழிப்புணர்வை அளிக்கிறது இந்த நூல். ஞானம் என்பது பறவைகளின் வாழ்விலிருந்துதான் பிறக்கும் என்பது இந்த நூலும் அல்லது சீகல் பறத்தலின் வழியாகவும் அமையும் என்கிறார் அவைநாயகன்.

 

            இயற்கை குறித்தும் காணுயிர்கள் குறித்தும் பறவைகள் பற்றியும் நாம் தொடர்ந்து படைப்புகளும் அரங்குகளும் கண்காட்சிகளும் நடத்தவேண்டிய இலக்கை கொண்டிருக்கிறோம். தலைமுறை தலைமுறையாய் பறவைகளின் வாழ்வுடன் நம் வாழ்வும் கல்வியும் அறிவும் கூடவே வளர்நது வந்துள்ளது. நம் பெற்றோர்களை விடவும் பறவைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளப்பரிய அன்பும் எச்சரிக்கையுணர்வும் கொண்டிருக்கிறது என்பதை அறிய நேர்ந்துள்ளது. காக்கைக்கும் தன் குஞ்சு என்பது போன்று. தமிழ் மொழியில் பழமொழிகளில் கூறப்பட்டிருக்கிற பறவைகளின் வாழ்வும் மேன்மை பற்றிய பழமொழிகள் எல்லாம் சீகல் பறவையால் ஞாபகம் வருகிறது. சொர்க்கம் ஞானம் விடுதலை இலக்கு வேகம்  பறத்தல் என்பது எல்லாம் சக உயிர்களுக்கு முடிந்த வரை தீங்கிழைக்காமல் சீகல் வாழ்ந்திருந்து பறந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மூத்த ஆளுமை புவியரசு மிகச்சிறந்த ஆன்ம முன்னுரையை வழங்கியிருப்பது சிறப்பு. தன் படைப்பிலக்கியத்தில் மேலும் ஒரு துறையில் முத்திரை பதித்த கவிஞர் அவை நாயகன் அண்ணனுக்கும் இனிய வாழ்த்துகள். வெளியிட்டு பரவலாக்கிய நூலின் முயற்சியை வரவேற்ற விஜயா பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

            

செவ்வாய், 30 ஜூலை, 2013

நிஜந்தன்- நாவல் -நான்-நிழல் குறித்த கட்டுரை


நான்-நிழல் –நிஜந்தன் நாவல் குறித்து.

 

புகையின் நிழலும்- நெருப்பின் அச்சமும்..- இளஞ்சேரல்

         

 

               புதிய புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளும் கடல் வழி வாணிபங்களும் மனித நாகரீகத்தை வளர்க்க உதவியது. நாகரீகங்கள் வளரத் துவங்கியதும் அவன் தனக்கான மொழிகளையும் குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தான். அவன் முதலில் வரைபடங்களை வரையத் துவங்கும் போது மொழிக்கான குறிகளையும் தன் எதிர்மனிதனுக்குப் புரியவைக்கவும் சில குறிப்புகளால் எழுதிப் புரிய வைக்கத் துவங்கினான். அவன் இழப்புகள் உறுதியென அறிந்தபிறகு அவன் வாழ்ந்த காலத்தையும் தனது இருப்பு குறித்த பதிவுகளையும் தன் முன்னோர்களின் இருப்பையும் அவன் பதிவு செய்யத்துவங்கியதே இலக்கியப் பிரதிகளின் மூலம் எனலாம். பத்தாம் நூற்றாண்டில் மொழி ஒருவாராக வடிவத்தை அடைந்தது.

நமக்கு நாவல் வடிவம் மேற்கத்திய உலகிலிருந்து கொடையாகப் பெற்றது. ஆங்கிலேய ஆட்சிக்குப்பிறகு இந்திய சமஸ்தானங்களும் அதன் மொழிகளும் கலாச்சாரச்சின்னங்களின் அழிவுக்குப் பிறகு மனிதன் தனது அடையாளங்களை நிலை நிறுத்தக் கல்வெட்டுகளில் தனது முக்கியக் குறிப்புகளை எழுதினான். அவன் வெற்றிகளை அவன் இழப்புகளை கொஞ்சமாகவும் உற்சாகத்தை சிலைகளாகவும் இழந்த நிலங்களில் அவன் கண்டெடுக்கப்பட்டதை வைத்து நாம் அவனின் இழப்பையும் வெற்றிகளையும் அறிந்து வருகிறோம். இந்த நாவலில் நிஜந்தன் மனித உடற்கூறுகளில் உள்ள நோய்மையால் அல்லல் அடையும் வாழ்வை எழுதிச் செல்கிறார்.

        இவ்வுலகின் இயக்கமும் மனித வாழக்கையின் தன்மையும் பிற உயிர்களின் வாழ்க்கை முறையும் காலத்தின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவை. மனித மனதின் உள்ளுணர்வுகளில் காலமும் அதன் செயல்பாடுகளும் உறைந்து கிடக்கின்றன. காலம் குறித்த சிந்தனை இந்திய மரபில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. “கால“ என்கிற சொல் ரிக்வேத்த்தில் மதச்சடங்குகளுடன் (தன்னுடையது என்று இருக்கும் அனைத்தையும் விட்டுவிடும் காலம்) இணைக்கப்பெற்றுள்ளது. அதனால் அது பொருத்தமான காலம் என்ற பொருளாக அறியப்பட்டது. பிறகு சமஸ்கிருதப் படைப்புகளில் “காலம்“ என்பது பரந்து பட்ட ஒரு பொதுப்பொருளிலேயே அழைக்கப்பட்டது.. ஜி.ஜே.விட்ரோவின் ஆய்வின்படி வேதகாலத்தில் காலம் என்பது செறிவானதாகவும் சுருக்கமானதாகவும் அதே நேரத்தில் இந்த அண்டத்தின் அடிப்படையான கொள்கையாகவும் உருவாகியது. மேலும் அது தெய்வங்களுடன் இணைக்கப்பட்டும் நிலையாமையை விளக்குவதற்கும் அடைப்படையானதாய் அமைந்திருக்கிறது என்கிறார். அதுமட்டுமின்றி அனித்திதா பல்சுலவ் எனும் திறனாய்வாளர் தமது ஆய்வின் முடிவில் பக்தமீமாம்சப் பள்ளியைச்  சேர்ந்தவர்களுக்கும் நியாய வைசேடிகா பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் நடந்த காலம் பற்றிய விவாதங்களை அவர் மிக நுணுக்கமாக ஆராய்ந்து கூறுகிறார். பக்த-மீமாம்சகர்கள் காலம் என்பது புலன்களால் உணரக்கூடியது  ஆனல் நியாய வைசோடிகர்களோ காலத்தை மனத்தால் உய்த்துணர்ந்துதான் அறிய முடியும் புலன்களால் அறியக் கூடிய நிறமோ,வடிவமோ அதற்கு இல்லை என்று கூறுகிறார்கள். அதற்கு பக்த மீமாம்சகர்கள் காலத்தைச் சோதனைக் கருவிகளின மூலம் அளந்து காண்பத என்பது முடியாத ஒன்றுதான் ஆனால் சில நிகழ்ச்சிகள் வேகமாகவோ மெதுவாக்வோ நடப்பதாக நாம் உணருகிறோம். இது காலத்தின் மீதான நம் நேரடியான அனுபவம்தான். அதனால் நாம் அதை உணரமுடியும் என்கிறார்கள். நியாய வைசோடிகர்களொ காலம் பற்றிய மெய்ப்பொருள் த்த்துவ விளக்க ஆராய்ச்சிகளின் மூலம் அதனை விளக்கி காலத்தை நேரடி உணர்வினால அறிய முடியாது மனதால் மட்டுமே உணர முடியும் என்கிறார்கள். நிஜந்தனின் நான்-நிழல் நாவலை வாசிக்கும் போது இந்த படிநிலைகள் ஞாபகம் வருவதைத்தவிர்க்க முடியவில்லை. நாவலின் காலங்கள் கருப்பு வெள்ளை ஈஸ்மெண்ட் கலரில், காலம் வந்து போகிறது. புகைப்படங்களில் இப்போது எல்லாம் சிதிலமடைந்த புகைப்படங்களைக் கொண்டு தந்தால் அழகாக வண்ணப்படங்களாக மாற்றித்தருகிறார்கள். அதுபோல நம்முடைய கருப்பு வெள்ளை வாழ்க்கைச சம்பவங்களை நாம் வண்ணச்சித்திரங்களாக மாற்றி நம் மனதுள்ளே கற்பனை செய்து பார்க்கிற உணர்வுகளை நிஜந்தன் தருகிறார். விவேகானந்தரின் காலம் பற்றிய கருத்துக்களை ப்ரதோவ் எனும் ஆய்வாளர் ஒரு வரைபடத்தின் மூலமாகக் காட்டுகிறார்.

அ. முழுமை (தி.அப்சொல்யுட்)

ஆ. காலம் (டைம்- இடம்- (ஸ்பெஸ்) காரண காரியம் (காசேசன்) ஆ.அண்டம் ( த யுனிவர்ஸ்) விவேகானந்தர் காலம்,இடம்,காரணகாரியம் என்கிற மூன்றும் அண்டத்தைக் காட்டும் கண்ணாடி என்பார். பகவத்கீதையில் ஒரு சுலோகம். இந்த நாவலில் பகவத்கீதையின் சுலோகங்கள் நிறையப் பயண்படுத்தப் பட்டிருக்கிறது. நாவலுக்கு அவசியமான தகுதியான இடங்களில் ராமானுஜனின் தந்தையின் வாயிலாகப் பெறப்படும் சுலோகங்கள் அற்புதமானவை. கீதை பேசுகிறது. “எந்தப பொருளிலிருந்து எல்லாப் பொருளும் தோன்றினவோ எந்த் பொருளால் அவையாவும் நிலைநிறுத்தப்படுகின்றனவோ அதுவே இறுதிப் பரம்பொருள்“ என்பதை நமக்கு நிஜந்தன் நாவல் மூலம் விளக்குகிறார். அதாவது நாம் மாற்றி நினைக்கலாம். எந்த சம்பவத்திலிருந்து எல்லா சம்பவங்களும் தோன்றினவோ எந்த சம்பவங்களா அவையாவும் நிலைநிறுத்தப் படுகின்றனவோ அதுவே இறுதி சம்பவங்கள் எனலாம். மனித நாகரீகங்களும்,தத்துவங்களும் முதலில் தோன்றி வளர்ந்த்து கிரேக்க த்தில் தான்.கிரேக்கர்களின் த்த்துவக் கோட்பாடுகள் இதர மேலை நாட்டுத்த்த்துவக் கோட்பாடுகளுக்கு ஊற்றாக இருந்திருக்கிறது. அவர்கள் வெளியை(ஸ்பேஸ்) பற்றி அதிகமாகசிந்தித்தனர். புகழ்பெற்ற ஒர கூற்று “ஓடுகிற ஆற்று நிரின் ஒரே பகுதியில் இரு முறை கால் வைக்க முடியாது” என்றார் எராக்லிடசுவின். காலத்தின் முன்னோக்கி செல்லும் தன்மையையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்து முடிந்த ஒன்றை மீண்டும் நிகழ்த்தவே முடியாது என்பதையும் விளக்குகிறது.

அவனுடைய புகைப்பட அரங்கில் உள்ள நாயகனின் உருவப்படங்களின் வாயிலாக ஒவ்வொரு புகைப் படங்களுக்குப் பின்னணியில் உள்ள கதைகள் கதைமாந்தர்களின் பின்னணி அவர்களுடைய உறவுப் பெண்கள்,ஆண்கள்,மாமா,அத்தை சித்தப்பா, அத்தை என்ற உறவுகளின் வாழும் சாதரண ராமானுஜனின் தினசரி நடவடிக்கைகளும் நோய்மையால் அவன் அடைந்த இழப்புகளை வாசகனுடன் அல்லது வெளியுலகத்திற்கு வாய்மொழிப் பிரமாணமாக சொல்வது மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளது. மனைவி தன்னைப்பிரிந்தது. காதலி வீணா தன்னைப் பிரிந்தது. ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் மறுபடியும் காதல் சமயம் அவளும் இடுப்புக்கட்டியை அகற்றப்பட்டுவிட்டதாக எனக் கேட்பது

 அனைத்து இலக்கியங்களுக்கும் காலப்பின்னணி அமைய வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தியவர் தொல்காப்பியர் “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்  இயல்பு என மொழிய இயல்புணர்ந்தோரே..“ என்கிறார். மேற்கத்திய நாவல்களில் தங்கள் சமூக சூழல்களுக்கேற்ப காலத்தை இணைத்து பல்வேறு நாவல்களைப படைத்துள்ளனர். இத்தகைய நாவல்கள் உத்தி முறையில் வெற்றி பெற்றனவாக எண்ணப் படுகின்றன. காலம் பற்றிய உணர்வுநிலை (கான்சியஸ்னெஸ் ஆப் டைம்) மேலை நாட்டினரிடம் மிகப் பரவலாக்க் காணப்படுவதால் காலத்தின் ஆளுமையை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். டேவிட் லியான் ஹிக்டன் எழுதிய காலமும் ஆங்கிலப்புனைகதைகளும்“ முக்கியமான நாவல் ஆய்வு நூல். நாவல்களில் காலப்பின்னணியை பல ஆய்வு முறைகளில் நான்கு வகைகளாகப் பகுத்துள்ளார். அ.வளர்நிலை காலம்(பிராசஸ் டைம்)- பின்னோக்கி நிலைக்காலம் (ரெஸ்ட்ரோபெக்டிவ் டைம்)- தடையற்ற காலம் (பாரியர் டைம்)-கலவை நிலைக்காலம் (பாலிடெம்ப் ரோரல் டைம்) அந்தக் காலங்களின் வழியாக நிஜந்தன் தன் நாவலை நகர்த்தியிருக்கிறார். அது போலவே. சுலோமித் ரிம்மான் கேன்னின் முக்கியமான நூல் எடுத்துரை புனைகதைகள்-சமகால கவிதையியல் (நேரெடிவ் பிக்சன்-காண்டம்பர்ரி பொயடிக்ஸ்) என்ற நூலில் நாவலில் வரும் கால ஆய்வு பற்றி பற்றி சில விளக்கங்களைத் தருவதை கவனிக்கலாம். அ. கால நிரல் (ஆர்டர்) ஆ. காலவரையறை (டியுரேசன்) இ. கால அடுக்கு (பிரிக்கிவன்சி) இந்த அளவிலும் நாவல் பயணிக்கிறது.

கதையின் நாயகன் ராமானுஜனுக்கு இடுப்பில் கட்டி இருக்கிறது. அந்தக் கட்டி அவனுக்கு கட்டி உடைகிறபோதெல்லாம் மகிழ்ச்சியாகிறான். கட்டி உடையாமல் இருக்கிறபோதெல்லாம் அவனுக்குப் பிரச்சனைகள் வருகிறது. நாவலின் மையம் முழுக்கவும் சிதைவுகளைப் பேசுகிறது. உறவுகளின் மனப்பிறழ்வுகளின் காரணங்களை அலசுகிறது. வக்கிரம் நிறைந்த மனிதனுக்கு இயல்பாகப் பிறந்து விட்ட நோய்மையை பலவிகித்ததில் ஆராய்கிறது. அவர் கலை நோய் தமிழ்ச் சமூகத்தின் பெருநகரவாழ்வியலில் பரவலாகிப் போன நடைமுறையைப் பேசுகிறது.

நாவலில் ஒரு இடத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி-ஜி.என்.பாலசுப்பிரமணியம் இருவருக்குமான உறவு குறித்துப் பேசுகிறது. அது போலவே நாயகனின் அம்மாவிற்கும் சித்தப்பாவிற்குமுள்ள உறவுகள். இதை அறிந்தே வாழ்கிற பிராமணத் தந்தையின் மனபோராட்டம். அவர் அதை வழிமொழிந்தவாறு கிருஷ்ணா உபதேசம் கேட்பது. பகவத்கிதையின் சுலோகங்களில் பக்தி இயக்கங்களில் ஆர்வம் காட்டுவது. விவரிக்கப் படுகிறது. ஏறக்குறைய இந்திய முஸ்லீம் குடும்பங்களின் வாழ்வும் பிராமணக் குடும்பங்களின் வாழ்வும் சரிசமவிகிதத்தில் தான் இருப்பதாக அவர் நாவலில் வடித்திருப்பதை இந்த நாவலின் அசாத்தியமான கட்டம். துணிவு என்று சொல்லலாம். சமீபத்தில் ஷரியத் நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அனுமதித்திருப்தை நாம் நினைவு கொள்ளலாம். இந்திய மரபில் மட்டுமல்ல தமிழ்க் குடும்ப முறைகளின் பால் அவநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்கள் இணைகளுக்கு வெளியே பழக்கத்தி லிருக்கும் ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதாக நாவல் பேசுகிறது.

          தமிழ் நாவல்கள் தம் தொடக்க்கால அமைப்பு முறையின்ன்று எவ்வளவோ மாறி புதிய அமைப்பு முறையை அடைந்திருக்கிறது. நமது மரபுவழி நாவல்களில் தமிழ்க்காப்பியங்களும் புராணங்களும் ஒரு மரபை உருவாக்கியிருந்தன இலக்கிய அறத்தைத் தோற்றத்திலிருந்து ஆரம்பித்து அடுத்து வளர்ச்சி, அதன் பின் உச்சநிலை, இறுதியாக முடிவு என்ற அமைப்பைத்தான் பெரும்பாலும் பின்பற்றின.சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், மகாபாரதம், புராணங்கள் யாவும் இந்த மரபைப்பின் பற்றின.  இந்திய சமூக அமைப்பில் குடும்ப அமைப்பில் முற்பட்ட வகுப்பு அல்லது அல்லது வேத வைதீக மரபுகளில் பின்பற்றப் படும் அமைப்பியலை மிகவும் விமர்சனம் செய்கிறது நாவல். மனச்சிதைவுகளை ஒரு புகைப்பட ஸ்டுடியோ வழியாக எல்லாவற்றையும் காண்கிற வடிவத்தில் நாவல் நகருவதைப் புதுமையான உத்தி என்று சொல்லலாம். நாம் நம் வாழ்வில் அறிமுகமான ஸ்டுடியோக்களை ஞாபகம் ஊட்டுகிறது. ஸ்டுடியோக்களுக்கு வருகிற முகங்களை அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அவர்கள் பெண்களை எதிர்கொள்கிற விதம். குறிப்பாக பெண்களின் அந்தரங்கம் சிலாகிக்கப் படுகிறது. அந்தப்புகைப்படங்களில் படிந்திருக்கிற முகபாவத்தின் பின்னணியின் சம்பவங்களை சுவராசியமாகப் பேசுகிறது. நாவலை வாசிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.  நமது வாழ்வின் நிகழ்வுகளுக்கு நாமே முதன்மையான பார்வையாளனாக உள்ளோம். தமிழ் நாவல்களின் வளர்ச்சியை நாம் ஒரு முறை நினைவுட்டிப்பார்த்தால் நீண்ட நெடிய பரிமாணத்தை அடைந்திருக்கிறோம். போதாமைகள் நம்மிடம் இருந்தாலும் கலைவடிவம் சார்ந்த நாவல்களில் நாம் குறித்த இடத்தை அடைந்திருக்கிறோம். விவசாயம்,நெசவு,அதிகார விரிவாக்கம்,புதிய தொழில்களின் வரவு,பாரம்பரிய கலைகளின் வீழ்ச்சி பற்றியும் பேசியிருக்கிறோம். சைவ-வைதீக வேளாளர் மரபை மீறாமல் மரபுக்களம் அமைத்து எழுதிய பண்புகளும் வந்தது. மேற்கண்ட வழிகளில் தங்கள் உறவுகளை கட்டமைப்புகளைக் கொண்ட வாழ்வை எழுதினார்கள். பல நாவலாசிரியர்களுக்கு சினிமா எனும் வடிவம் அச்சுறுத்திக் கொண்டிருந்த்து. சினிமா பாணியில் சித்தாந்த மரபுகளை அடிமைத்தனத்தை எதிர்த்த படைப்புகளையும் எழுதினார்கள். பொதுவாக பொதுவுடைமை சித்தாந்தத்தை எல்லாப்படைப்புகளையும் எழுதினார்கள். அப்படியாக எழுதப்பட்ட படைப்புகளுக்குத்தான் மரியாதை கிடைதது. தொ.மு.சி, கு.சின்ப்ப பாரதி, கே.முத்தையா, டி.செல்வராஜ் பிரபஞ்சன்,ராஜம் கிருஷ்ணன், சுந்தர்ராமசாமி, அசோக மித்ரன், ஜெயகாந்தன்.நாஞ்சில் நாடன். சுப்ரபாரதிமணியன், அகிலன்.நா.பார்த்தசாரதி ஆகியோருக்கு நிறைய வாசகர்கள் கிடைத்தனர். இருந்தார்கள் என்பது பெருமைப் படவேண்டியவை.

           தற்காலத்தில் நாவல்களுக்குக் குறைந்த அளவிலேயே வாசகர்கள் இருக்கிறார்கள். பழைய வாசகர்களுக்கு வயதாகியிருக்கிறது. அந்த வாசகர்கள் ஓரு வேளை இப்போது ஓய்வுபெறும் வயதை அடைந்திருப்பார்கள் என நினைக்கிறோம்.எஸ்.ராமகிருஷ்ணன்,இமையம், சிவகாமி, ஜோ.டி.குருஸ்,ஜெயமோகன், சு.வெங்கடேசன்,பூமணியின் நாவல்களை 60-70-80 களின் வாசகர்களின் தரம் இன்றைய இளையதலை முறையினர் வாசிக்கிறார்களா எனநாம் யோசிக்கிறோம். நிஜந்தன் நாவலில் நாம பயணம் செய்யும் போது நமக்கு பிரமிப்பாகவே இருக்கிறது.

இந்த நாவல் வடிவத்தில் ஒருவகை நனவோடை நாவலாகவும் இந்த நாவல் இருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த உத்தியை சிறப்பாகப் பயண்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் டோரதி ரிச்சர்ட்சன், ஜேம்ஸ்ஜாய்ஸ், வெர்ஜினியா வுஃபுல்ப், வில்லியம் பக்னர், குஸ்டவ் ஃப்ளொபோட், முக்கியமானவர்கள். இதில் ஆங்கிலத்தில் ஜேம்ஸ்ஜாய்ஸ், மார்ஷல்ஃபிரஸ்ட் (பிரஞ்ச்) ஃபிரான்ஸ் காப்கா(ஜெர்மனி) ஆகிய மூவரும் நனவோடை உத்தியை நவீன முறையில் அமைத்து உலக நாவல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர். ரெக்ஸ் ஸ்டவுட்டி எழுதிய ஹவ் லைக் எ காட் என்கிற நாவல் முக்கியமானது படிக்கட்டுகளில் ஏறும்வரையிலான கால அளவில் தனது வாழ்வை நினைத்துப் பார்க்கி மாதிரியான உத்தியைப பயண்படுத்தியிருப்பார். ஷேக்ஸ்பியர் தனது “திடெம்பஸ்ட்” நாடகத்தில் பிராஸ்பெரோ என்ற பாத்திரம் கடந்த கால நிகழ்ச்சிகளையெல்லாம் கூறுவது போல அமைந்திருக்கிறது. எட்வர்டு டுஜார்டின் “தி லாரல்ஸ் ஹேவ் கீன் கட்” அளவில சிறியதாக இருந்தாலும் முக்கியமான நனவோடை நாவல்.

        தமிழில் நனவோடை உத்தி பற்றி மூத்த ஆளுமை சி.சு செல்லப்பா சொல்வதை கவனிப்போம், “அநேகமா மணிக்கொடிக் கதைக்கார்ர்கள் எல்லோருமே ரிப்ளக்டிவ் என்கிறோமே, சிந்திக்கிற,  முன்னும பின்னுமாக மனதை ஓடவிடுகிற மாடு அசைபோடுவது போல மனதின் சிக்கலான, கலப்பான, ஆழமான உணர்வுகளை ஆழத்திலிருந்து மேல் தளத்திற்குக கொணர்ந்து திரும்பத்திரும்ப உரைத்துப் பார்க்கிற விதமான எழுத்துப் போக்கு.” என்கிறார். நனவோடை எழுத்து பற்றி.

      உதாரணமாக சில நாவல்கள். சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம், நீல.பத்மநாபனின் பள்ளி கொண்டபுரம், லா.ச.ராமாமிருத்த்தின் அபிதா காவேரியின் ”ஆத்துக்குப் போகணும்” என் ஆர் தாசனின் “இங்கிருப்பதும் அதுதான் “ நாவல்களின் பயண்படுத்தப் பட்ட உத்தி வரவேற்கப்பட்டது. வீணா .மகேஸ்வரி கதாபாத்திரங்களின் வழியாக நிகழ்த்தப் படும் உரையாடல்கள்

பாலசந்தர்,மகேந்திரன்,ஸ்ரீதர் காலத்தின் படங்களை நாம் பார்ப்பதைப் போன்ற நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நாவல் வாசித்த பிறகு நாமும் நம் புகைப்படங்களைப் பார்க்கிறோம். நமது பள்ளிப்பருவப் புகைப்படங்கள்,வேலை வாய்ப்பிற்காக எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.திருமணப்புகைப்படம், நண்பர்களுடன். கூடபணிபுரியும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படம். இந்தப்புகைப்படங்களின் பின்புலத்தில் நமக்கு காட்சிகளாக விரியும். இவை அனைத்தும் ஒரு வகையில் யோசிக்கும் போது சம்பவங்கள் யாவும நிரலின்றி (நான் லீனியர்) வடிவிலும் சில அத்தியாயங்கள் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திலிருந்து அவை சந்திக்கும் இணை கதாபாத்திரத்தின் வாழ்வின் சில சம்பவங்கள் என விரிந்து சென்று நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி பிறகு முந்தைய சம்பவங்களை நினைவுட்ட வைக்கிறது.ரிச்சர்ட் ஆடம்ஸின் நாவலான “வார்டர்சிப்  டவுன்” ஜான் பௌலசின் ”தி பிரெஞ்ச் லிட்டினன்ட் விமன்”  சாமுவேல் பக்கெட்டின்“வாட்“ ஜோசஃப் ஹெல்லர்ஸ் என்பவரின் ”கேட்ச்-22“ நாவல்கள் நான் லினியரில் முக்கியமானவை. நிஜந்தன் நாவல் போலவே பாக்னரின் “அப்சலாம்..அப்சலாம்“நாவலும் முக்கியமானவை. வங்கமொழியில் இரவீந்திரநாத் தாகூரின் க்ரே பாயிரே (1916) என்ற நாவலில் வங்க் பிரிவினையை விவரிக்கும வித்த்தில் பல பாத்திரங்கள்  தங்கள் எண்ணங்களை வெளியிடுகிறார்கள். ஸதிதாத்தின் பாதுரியின் ஜாகரி என்ற வங்க நாவல் ஒரு பயங்கர இரவின் முடிவை நோக்கி இருக்கிற நான்கு கதாபாத்திரங்களின் நான்கு விநோதமான குரல்களாக நாவல் இருக்கிறது. தமிழ் நாவல்களில் நீல பத்மநாபனின் “யாத்திரை“யில் ஒருவனின் இறப்பு குறித்து நான்கு பேர் நான்கு விதங்களில் ஒரு கால கட்டத்தில் இறப்புக்கு முன் நடந்த  நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார்கள்.அசோகமித்திரனின் “கரைந்த நிழல்கள்” ஆதவனின் ”காகிதமலர்கள்“ காசியபனின் “அசடு” நகுலனின் “நவினன் டைரி” சுந்தர்ராமசாமியின் “ஜே ஜே.சில குறிப்புகள் தமிழவனின் “ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்” போன்ற நாவல்கள் முக்கியமானவை. நிஜந்தனின் நாவலான நான்-நிழல்- படைப்பில் மையம் கொண்டிருக்கும் மனித இயல்புகளின் குற்றங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அவ நம்பிக்கையையும் பேசுகிறது. தவறுகளை யார் புரிந்தாலும் உறவுகளுக்குள்ளாக தவறுகளை இழைத்துக் கொள்கிறபோது மன்னிப்பை வழங்குகிற நீதிமானாக யார் இருக்கப் போகிறார்கள். நாவலின் முதன்மையான மனிதனான ராமானுஜனுக்குத் தனது தாய் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பைக் கோருகிற சம்பவங்கள் எளிய உறவுச்சிக்கல்கள் கொண்ட குடும்பங்களில் அன்றாடம் நடக்கிறவைதான் என்றாலும் அதன் மூலமாக தனது கவச குண்டலம் போன்றிருந்த கட்டி இருந்த சுவடே அல்லது அதுபோன்ற ஒரு கட்டி தனது இடுப்பில் இருக்கவேயில்லை என்கிற உணர்வு வருவதை நிஜந்தன் புரியவைக்கும் போது மகத்தான படைப்பாக மாறுகிறது. அவருடைய பிற நாவல்களும்,நாடகங்கள்,சிறுகதைகள் கூட இந்த ஆன்மாவையே பேசுவதாக அறிகிறேன். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான எழுத்தியக்கத்தை நிகழ்த்தும் நிஜந்தனின் படைப்புலகம் முன்செல்லட்டும். அவருடைய சிந்தனையில் உறங்கிக் கொண்டிருக்கும் மேலும் பல அப்பழுக்கற்ற ஆன்மாக்களின் கதைகள் வரட்டும் என வாழ்த்துகிறோம்..